Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-19

19

எத்தனை நேரம் சமர்த்தி அழுதுகொண்டிருந்தாளோ அது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். அன்று மாலை அவளுடைய அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்க, அவசரமாகத் தன் விழிகளைத் துடைத்துவிட்டு,

“கம் இன்…” என்றாள். கதவைத் திறந்து வந்துகொண்டிருந்த உருவத்தைக் கண்டு பேய் அறைந்ததுபோல அதிர்ந்து போய்ப் பார்த்தாள் சமர்த்தி. அவள் கனவு காண்கிறாளா என்ன? விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டிப் பார்த்தாள். சந்தேகமேயில்லை. ஜூலியட்தான்.

“ஹாய்… ஹவ் ஆர் யு…” என்று கேட்க, வெறுப்புடன் தலையைத் திருப்பிய சமர்த்திக்கு கடும் ஆத்திரம் வந்தது. அவளுடைய வாழ்க்கை சிதைவதற்குக் காரணமே இவள் அல்லவா. வெறுப்புடன் நிற்க, ஜூலியட்டோ நிதானமாகச் சமர்த்தியின் அருகேயிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

சமர்த்திக்கு அவளைப் பார்க்கவே பிடிக்க வில்லை. அதை உணர்ந்தவளாய் புன்னகைத்த ஜூலியட்,

“நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று உன்னால் ஊகிக்க முடிகிறதா…” என்றதும் ஆத்திரத்துடன் ஜூலியட்டை முறைத்த சமர்த்தி,

“எதற்காக இருக்கும்… என் உத்தி உனக்கானவனாக மாற வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்து விட்டுச் செல்ல வந்திருப்பாய்…” என்று எகிற, இப்போதும் ஜூலியட் நாகரிகமாகச் சிரித்தாளே அன்றிக் கோபப்படவில்லை. சற்றுநேரம் சமர்த்தியை உற்றுப் பார்த்தவள்,

“சில நேரத்தில் தெரியாத கேள்விகளுக்குப் பதில் கூறுவதுதான் பல பிரச்சனைகளுக்கான தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்…” என்று பொறுமையாகக் கூற, இவளோ ஆத்திரத்துடன் ஜூலியட்டை முறைத்து,

“எனக்கு யாருடைய விளக்கமும் தேவை இல்லை. மரியாதையாக வெளியே போ…” என்றாள் கடுமையாக. அப்போதும் அந்த ஜூலியட் அசைந்தாளில்லை. அழுத்தமாகச் சமர்த்தியைப் பார்த்தவள்,

“விளக்கமின்றி உத்தியுக்தனோடு சேர முடியாது என்று எனக்குப் புரிகிறது. அதற்கான விளக்கத்தைக் கூற வந்திருக்கிறேன். ஆனால் அதையும் நீ கேட்க மறுக்கிறாய். அப்படியானால் எப்போது நீ தெளிவு பெறப்போகிறாய். பேயாய் அரிக்கும் சந்தேகத்திலிருந்து வெளியேறி எப்போது உத் கூட மகிழ்ச்சியாக வாழப் போகிறாய்? ஒரு வேளை, உத்தியுக்தனோடு வாழ விருப்பமில்லாமல்தான், இப்படி நடந்துகொள்கிறாயோ?” என்று மெல்லிய ஏளனத்துடன் கேட்கச் சமர்த்தியோ எரிப்பதுபோல ஜூலியட்டைப் பார்த்தாள்.

“விளக்கம் எவர் வாயிலிருந்து கேட்கிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது மிஸ் ஜுலியட். அதுவும் திருமணம் முடித்த ஆண்களாகப் பார்த்து, அவர்களோடு ஒட்டுண்ணியாகத் திரியும் ஒருத்தியிடமிருந்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை…” என்று சுள்ளென்ற விழ, ஜூலியட்டோ முகம் கறுக்க ஒரு விநாடி அமைதி காத்தாள்.

விழிகளை அழுந்த மூடித் திறந்தவள்,

“லிசின் சமர்த்தி… தெரிந்தோ தெரியாமலோ, உத்தியுக்தனின் வாழ்க்கை என்னால் புரட்டிப்போடப் பட்டிருக்கிறது. ஒரு முறையல்ல, இரு முறை. அதைச் சரிப்படுத்தும் கடமையும் எனக்கிருக்கிறது…” என்றவள் ஏளனத்துடன் சமர்த்தியைப் பார்த்து,

“உன் வாழ்க்கையில் நடந்த சிக்கலுக்குத் தீர்வாக நான் வந்திருக்கிறேன். அந்தத் தீர்வு வேண்டாம் என்று அடம்பிடித்தால் நான் என்ன செய்யட்டும்… என்னை விட உத் பற்றி உனக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வேடிக்கையைப் பார்த்தாயா? நான் தெரிந்து வைத்திருந்த அளவுக்கு நீ தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதுதான் என் வருத்தமே…” என்று கூற, சமர்த்தியோ ஜூலியட்டைப் பார்க்கப் பிடிக்காமல் எங்கோ வெறித்தாள். அதைக் கண்டு ஒரு பெருமூச்சு விட்ட ஜூலியட்,

“இதோ பார் சமர்த்தி, நீ நினைப்பதுபோல எனக்கும், உன் கணவருக்கும் இடையில் எதுவும்… எதுவுமே இல்லை… எனக்கும் அவனுக்குமான உறவு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை அதுதான்…” என்று அழுத்தமாகக் கூற, இவளோ ஏளனத்துடன் சடார் என்று ஜூலியட்டைத் திரும்பிப் பார்த்து,

“ரியலி, பின்பு எதற்கு உன்னை அணைத்துக் கொண்டு நின்றான் என் கணவன்… அதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறாய்? அப்படியே விளக்கம் கொடுத்தாலும் அதை நம்புவேன் என்று நினைத்தாயா” என்று சீற, அதற்குப் பதில் கூறத் தயங்கியவளாகச் சற்று நேரம் அமைதி காத்தாள் ஜூலியட். அவளுடைய விழிகளிலும் கண்ணீர் உற்பத்தியாகியிருக்க, அதை மறைக்கும் முகமாக எங்கோ வெறித்தாள்.

பின் அழகாய் உதடுகளைக் கடித்து விடுவித்தாள். இதைக் கண்டதும் இவளுக்குக் காந்தியது. இந்த அழகு… இந்த நளினம் இதுதானே அவளுடைய உத்தியை மயக்கி வைத்திருக்கிறது. வெறுப்பாய் எண்ணும்போதே,

“உனக்கு… உனக்கு வில்லியம் நேக்கரைப் பற்றித் தெரியுமா?” என்றாள் ஜூலியட் மென்மையாய். இவளோ அலட்சியமாகப் பார்த்து,

“இந்தக் கனடாவிற்கே அவரைத் தெரியும்…” என்று அலட்சியமாகக் கூற,

“அவருக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு விபத்து நடந்தது…”

அந்தச் செய்தி அறிந்த அன்றுதானே இவள் வாழ்க்கையும் அதளபாதாளத்திற்குள் விழுந்தது. மீண்டும் அந்த நிகழ்வு மனதில் தோன்ற, கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது. நெஞ்சம் வேதனையில் கசங்கியது.

“இதை… இதையேன் என்னிடம் சொல்கிறாய்…” என்று சமர்த்திக் கேட்க,

“வில்லியம் நேக்கர் பற்றி உனக்கு ஒரு பக்கம் தான் தெரியும்…? அவருக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது அது… நான்தான்…?” என்றதும்

“வட்…” என்று அலறியவாறு ஜூலியடடைப் பார்த்தாள் சமர்த்தி. ஜூலியட்டோ, தன் வயிற்றைத் தொட்டு முகம் மின்ன,

“இந்தக் குழந்தை அவருடையது…” என்றதும் சமர்த்தியால் அந்த உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை. மறுப்பாகத் தலையை அசைத்தவள்,

“நோ… நோ… இதை நம்ப மாட்டேன்… நேக்கர் அரசியலில் எப்படியாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கையில் மிக மிக உன்னத மனிதர். தன் மனைவியோடு மிக மகிழ்வான வாழ்க்கையை வாழும் ஒருவர்… அவரைப் பற்றி இப்படி அபாண்டமாகப் பேசாதே…” என்று சீற, இப்போது மென்மையாகச் சிரித்தாள் ஜூலியட்.

“நேக்கரின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் ஒரு வீதத்தைக் கூட உத் மீது வைக்க மறுக்கிறாயே சமர்த்தி… நேக்கரின் அந்த நல்ல முகம், வெளியுலகிற்கு அவர் காட்டும் பொய்யான முகமூடி. நிஜம் வேறானது சமர்த்தி…” என்றாள் ஜூலியட். அப்போதும் மறுப்பாகத் தலையை அசைத்த சமர்த்தி, அவருக்கு இப்போது அறுபது… அறுபது வயது… அவர் எப்படி… நோ… இதை நம்பமாட்டேன்…” என்று மறுக்க,

“யு ஆர் இனசன்ட் சமர்த்தி… வெரி வெரி இனசன்ட்… உலகில் பல மனிதர்கள் பலவகையான பொய் வாழ்க்கை வாழ்கிறார்கள். அதுவும் பணம் பதவி இருப்பவர்களின் நிஜ முகத்தை இலகுவில் யாரும் பார்த்துவிட முடியாது. பொதுவாக நாம் எல்லோரும் முகத்திற்குப் பூசும் அரிதாரத்தைக் கண்டுதான் மயங்கிப்போகிறோமே தவிர, அந்த அரிதாரத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் நிஜ முகத்தைத் தெரிந்துகொள்வதில்லை. தவிர நாம் அந்தப் பொய்யான முகத்திற்குத்தான் மதிப்பு போடுகிறோமே தவிர, எந்த வகை அரிதாரமும் போடாத நிஜ முகத்தை காட்டும் யாரையும் நாம் மதிப்பதில்லை. நேர்மையாக, உண்மையாக, யாருக்கும் பயப்படாமல், முகத்திற்கு நேராக நடப்பவர்களை கெட்டவர்கள், பொல்லாதவர்கள் என்று ஒரு முத்திரையை குத்தி விலக்கிவிடுகிறோம். எத்தனை விசித்திரமான மனிதர்கள் நாம்…” என்ற ஜூலியட், அதிர்ந்து நின்ற சமர்த்தியைப் பார்த்துவிட்டு,

“அப்போது நான் மாடலிங்கிற்குள் நுழைந்த ஆரம்பக் காலத்தில் நேக்கர் என்னைக் கண்டார். அவருக்கு என்னைப் பிடித்திருந்தது… அப்போது தான் உத்தியோடு நான் பழகத் தொடங்கிய காலம். உத்தி இளமையாக, அழகாக, கம்பீரமாக இருந்தபோது, நேக்கரின் விருப்புக்கு நான் இடம் கொடுக்கவில்லை. தவிர நேக்கர் ஏற்கெனவே மணமானவர் வேறு. ஒரு பக்கம் பார்த்தால் அவர் மகள் வயது எனக்கு. அதனால் அவரை விட்டு ஒதுங்கித்தான் இருந்தேன்.” என்று கூற, சமர்த்தியோ நம்ப மாட்டாமல் ஜூலியட்டைப் பார்த்தாள்.

அவளால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. நேக்கர் எப்போதும் தன் மனைவியை உயர்த்திப் பேசுவார். அவருடைய அருகாமையில் தான் எப்போதும் இருப்பார். அப்படிப் பட்ட ஒருவருக்கு இன்னொரு பெண் மீது ஆசையா? அதிர்ந்து நிற்க, மேலும் சொல்லத் தொடங்கினாள் ஜூலியட்.

“தன்னை விட்டு நான் உத்தைத் தேர்வு செய்தது நேக்கருக்கு மிகுந்த ஆத்திரம். அதனால் உத்திற்குப் பல வழிகளிலும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கினார். உத் அரசியலுக்குள் நுழைய நேக்கரும் ஒரு காரணம். நேக்கர், உத்திற்கு வியாபார ரீதியாகச் சிரமங்கள் கொடுக்க முயல, நேக்கரின் அரசியல் வாழ்க்கையை வீழ்த்துவதற்காகவே உத் அரசியலில் குதித்தான். உத் அரசியலில் இறங்கியதும் மக்களின் ஆதரவு அவனுக்கு அதிகமாகத் தொடங்க நேக்கருக்கு அது மிகுந்த சீற்றத்தைக் கொடுத்தது. எப்படியாவது உத்தை வீழ்த்துவதற்காக அவன் சார்ந்த புகார்களை அடுக்கத் தொடங்கினார்.

இந்த இடத்தில்தான் நீ வந்தாய். உன்னுடைய கட்டுரை, நிகழ் பதிவு எல்லாம் நேக்கருக்கு மிகுந்த வசதியாகப் போயிற்று. உத்துடைய அரசியல் வாழ்க்கை ஒரேயடியாகத் தவிடு பொடியானது. போதாததற்கு வியாபாரமும் வீழத் தொடங்கியது… அந்த நேரத்தில் உத் என்னை விட்டு மெல்ல மெல்ல விலகத் தொடங்கினான். சொல்லப்போனால் நமக்கிடையில் எதுவுமே இல்லை என்பது போல அவன் தள்ளிப் போகத் தொடங்கினான். இரவுகளில் அவன் அருகாமை எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனுடைய பராமுகம் எனக்கு வெறுப்பைக் கொடுத்தது. சற்றுப் பொறுத்துப் பார்த்த என்னால் அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை. விலகிவிட்டேன். விலகிச் செல்லும் என்னைத் தடுப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவன் தடுக்கவில்லை.

இந்த நேரத்தில், நான் விலகிய செய்தி கேட்டு நேக்கர் மீண்டும் என்னிடம் வந்தார். ஆரம்பத்தில் மறுத்தேன். ஆனால் அவரால் என் மாடலிங் தொழிலில் மிகப் பெரும் வீழ்ச்சி. நேக்கரின் தூண்டுதலின் பெயரில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் தட்டிப் பறிக்கப்பட்டன. இதை அறிந்து உத் எனக்கு உதவ வந்தான். அவன் வியாபாரத்தில் என்னை ஒரு பகுதி பங்குதாரராகச் சேர்த்தான். அது நேக்கருக்கு மிகுந்த கோபத்தைக் கொடுத்தது. மேலும் உத்திற்குப் பலவகையில் சிக்கல்களை ஏற்படுத்தினார். அப்போதுதான், என் மாடலிங்கை நம்பி நிறைய முதலீடு செய்திருந்தேன். அவையெல்லாம் பெரும் சிக்கலாகிப் போனது.

சற்றுப் பொறுத்துப் பார்த்த என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியவில்லை. நேக்கரின் விருப்புக்கு இணங்கினேன். உத் தடுக்கப் பார்த்தான். அந்த நிலையில், அரசியல் செல்வாக்கில்லாமல் பாதிப்பு எனக்குத்தான் என்ற நிலையில் உத்தின் அறிவுரையை நான் கேட்கவில்லை. அவரும் நானும் ஒன்றாக யாருக்கும் தெரியாமல் வாழத் தொடங்கினோம். உத் பல முறை, நேக்கரிடமிருந்து என்னை விலகச் செல்லி சொன்னான். அவருடைய மனைவிக்குத் தெரிந்தாலோ, இல்லை, வெளி உலகிற்குத் தெரிந்தாலோ, நேக்கருடைய வாழ்க்கை மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கையும் கேள்விக் குறியாகும் என்று எச்சரித்தான். ஆனால் அந்தச் சூழ்நிலையில் என்னால் அவரை விட்டு விலக முடியவில்லை. நேக்கரோடு வாழத் தொடங்கிய பின்பு எனக்கு நிறைய மாடலிங்கிற்காக அழைப்பு வந்தது. உத்தோடு இருந்தபோது உழைத்ததை விட, நேக்கரோடு வாழும்போது அதிகம் பணம் உழைத்தேன்.

நேக்கர் என்னதான் தப்பான பாதையில் நடந்து கொண்டாலும், என்னை நன்றாகத்தான் வைத்து இருந்தார். உத்திடம் கிடைக்காத அன்னியோண்யம், அன்பு கருணை, கவனிப்பு எல்லாம் எனக்கு அவரிடம் கிடைத்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் என் மனதைச் சாய வைத்தது.

“அந்த வேளையில்தான் நான் கர்ப்பம் என்று தெரிய வந்தது. நேக்கருக்குக் குழந்தைகள் இல்லை. நான் குழந்தையைச் சுமக்கிறேன் என்றதும் அவருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. ஆனால் வேடிக்கையைப் பார்.. வெளியே யார் குழந்தை என்று சொல்ல முடியாது. தெரிந்த வட்டாரத்தில், செயற்கை முறையில் கருத்தரித்தேன் என்று பொய் சொன்னேன். யாரும் இதைத் தவறாக எடுக்கவும் இல்லை… நேக்கரையும் என்னையும் வைத்துச் சந்தேகப் படவுமில்லை…” என்று கூற, சமர்த்திக்கோ வாயடைத்துப் போனது.

உத்தியுக்தன் எதற்காக அரசியலுக்குப் புகுந்தான் என்கிற உண்மையையும் மீறி, அவனுக்குக் குடைச்சல் கொடுத்த அந்த நல்லமனிதன் என்கிற போர்வையிலிருந்த நேக்கரின் மீது கடும் ஆத்திரம் வந்தது. உத்தியுக்தனின் மதிப்பை வீழ்த்த எதைக் கீழ்த்தரமாகச் சித்தரித்தாரோ, அதே வாழ்க்கையை வாழ்ந்த நேக்கரின் மீது கொலை வெறியே வந்தது. எப்படி உத்தியுக்தன் அவனைச் சும்மா விட்டு வைத்தான்… ஆத்திரத்துடன் ஜூலியட்டைப் பார்த்தவள்,

“உத்தி… இத்தனை குடைச்சல் கொடுத்தவரை எப்படி விட்டு வைத்தான்?” என்று எரிச்சலுடன் கேட்க,

“அதற்குக் காரணமும் நான்தான்… சமர்த்தி… ஆரம்பத்தில் அழிய இருந்த வியாபாரத்தை மீண்டும் நிமிர்த்த முயன்ற காலத்தில் நேக்கரோடு மோத இவனுக்கு நேரம் கிடைக்கவில்லை, கிடைத்தபோது நான் தடையாக இருந்தேன்… என் மகிழ்ச்சிக்காக, என் வாழ்க்கைக்காக நேக்கரை கண்டுகொள்ளாது விட்டான்… இல்லையென்றால், அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருப்பான்…” என்ற ஜீலியட் மெல்லிய வலியோடு சமர்த்தியைப் பார்த்து,

“ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நேக்கருக்கு… நேக்கருக்கு விபத்தாகி..” என்று கூறிக்கொண்டு வந்தவள், அதற்கு மேல் முடியாமல் உதடுகள் நடுங்க, தன் வாயைப் பொத்தியவாறு எங்கோ பார்த்து அழத் தொடங்கியவள், பின் எப்படியோ சமாளித்து,

“நான் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை. வாய் திறந்து நேக்கர் எப்படி இருக்கிறார் என்று கூட என்னால் அறிய முடியாத அவலம். அப்போதுதான் உத்தை அழைத்தேன். அவனில்லாது இருந்திருந்தால் நேக்கரைப் பற்றிய எந்தச் செய்தியும் எனக்குத் தெரிந்திருக்காது. யாரிடமும் சொல்ல முடியாமல், கதற முடியாமல், அழ முடியாமல் நான் தவித்தபோது, அழாதே நான் இருக்கிறேன் என்று வந்தான். அவன்தான் நேக்கரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் எனக்கு அறிவித்துக்கொண்டிருந்தான். எப்படியோ என்னைத் தேற்றி வீட்டிற்கு அழைத்து வந்தபோது தான் நீ எங்களைக் கண்டாய்…” என்றவள், விழிகளைத் துடைத்து விட்டு, சமர்த்தியைப் பார்த்து,

“உத் மீது எந்தத் தவறுமில்லை… நாம் வாழ்ந்த காலத்தில் கூட, உத்துதம் நானும் உடலளவில்தான் மகிழ்ச்சியாக இருந்தோமே தவிர, மனதளவில் ஒன்றாக இருக்கவில்லை… உத் நிஜமாக விரும்புவது உன்னைத்தான் சமர்த்தி… உன்னைப் பார்க்கும்போது, உன்னைப் பற்றிப் பேசும்போதே அவன் முகத்தில் கனவு தோன்றும். நீ மருத்துவமனையிலிருந்தபோது துடித்தது போல ஒரு பொழுது கூட எனக்காகத் துடித்ததில்லை. உனக்குத் தாயாக மாறியது போல எனக்கு எக்காலத்திலும் அவன் இருந்ததில்லை…” என்று கூற, தொண்டை அடைக்க ஜூலியட்டைப் பார்த்த சமர்த்தி,

“ஆனால்… அவர் நெஞ்சில் உன் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்ததே…” என்றாள் திக்கித் திணறி. அதைக் கேட்டுச் சிரித்த ஜூலியட்,

“அது குழந்தைத்தனமான செயல்… நானும் உத்தும் ஒன்றாக வாழ்ந்த காலத்தில், நம்மைப் பற்றித் தெரியாத ஊருக்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அப்படித்தான் ஒரு நாள் பாரிஸ் சென்றிருந்தோம். அங்கே ஒரு மதுக் கூடத்தில், எனக்கும் உத்திற்கும் ஒரு போட்டி. யார் அதிகம் மது அருந்துகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். வென்றவர் சொல்வதைத் தோற்றவர் செய்யவேண்டும். அன்று ஒரு குவளை மது நான் அதிகம் அருந்தி வெற்றி பெற்றேன். இருவருக்குமே போதை தலைக்கேறி இருந்தது. நான் என்ன சொன்னாலும் செய்வதாக உறுதி சொன்னான். நான்தான் என் உருவத்தை அவன் மார்பில் பச்சையாகக் குத்தச் சொன்னேன். அந்த இடத்திலேயே சட்டையைக் கழற்றித் தயாராகி விட்டான் உத்… அப்போது குத்திய பச்சைதான் அது. மற்றும்படி முழு அறிவோடு முழு நிதானத்தோடு குத்தப்பட்டதில்லை அது. மறு நாள் அதைக் கண்டு உத் அதிர்ந்தது இன்றும் நினைவுக்கு வருகிறது… ஆனால் நாம் இருவரும் இணைந்து வாழப்போகிறோம் என்கிற நம்பிக்கையில் அதை அழிக்காமல் வைத்திருந்தான்…” என்ற ஜூலியட், ஒரு பெருமூச்சுடன்,

“உத் உன்னை விரும்புவது போல என்னை விரும்பியிருந்தால், அவனை விட்டு விலகியே இருந்திருக்கமாட்டேன். அவன் கூடவே வாழ்ந்து இருப்பேன். அவனோடு வாழ்ந்த அந்த மூன்று வருடங்களும் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டு தான் இருந்தது. என்னோடு ஒரு போதும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டதில்லை தெரியுமா. உறவு முடிந்ததும் விலகிச் சென்றுவிடுவான். அது எனக்குப் பெரும் அவஸ்தையைக் கொடுக்கும். உறவு முடிந்ததும் அவன் முத்தமிட்டு என் அருகே தூங்கமாட்டானா, அவனை அணைத்துக்கொண்டு கைவளைவில் உறங்கமாட்டோமா என்று ஏக்கம் தோன்றும். ஆனால் ஒரு நாள் கூட, சொல்லப் போனால் நிறை போதையில் கூட என் கூட அவன் உறங்கியதில்லை…. அவனுடைய அந்த ஒட்டும் ஒட்டாமையும்தான், சுலபத்தில் அவனிடமிருந்து பிரிந்து செல்ல வழி வகுத்தது…”

“ஆனால் உத்தி உன்னை நடத்தும் விதம்… அவனுடைய ஒவ்வொரு செயலிலும் உன் மீதான காதல் இருக்கும் தெரியுமா? அதை யோசித்துப் பார்த்திருந்தால் உனக்குப் புரிந்திருக்கும். அவனை விட்டு நான் விலகியபோது, என்னோடு சேர அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் உன்னை அனுப்பிவிட்டு அவன் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்?

நான் மாடலிங்கிற்காக உலகம் எல்லாம் சுற்றி வருவேன். அப்படியிருக்கும்போது என்னை வாழ்த்தி அனுப்புவான். சிலவேளைகளில் நேரம் கிடைக்கும் போது என்னை வந்து சந்தித்துவிட்டுச் செல்வான். ஆனால்… உன்னை மட்டும் தன் அருகாமையை விட்டு விலகிச் செல்ல அனுமதித்ததில்ல… ஏன் தெரியுமா? எங்கே தன்னை விட்டுப் போய்விடுவாயோ என்கிற அச்சம்தானே அதற்குக் காரணம். உத்தி ஒரு போதும் பொய் சொல்ல மாட்டான். தவிரத் தவறும் செய்யமாட்டான்.” என்றவள் எழுந்து,

“சொல்வதைச் சொல்லிவிட்டேன்… இனி நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம் சமர்த்தி… உத் என் சார்ந்த விடயங்களை உனக்குச் சொல்ல மாட்டான் என்று தெரியும். அதுதான் நானாகவே உண்மையைச் சொல்ல வந்தேன்… இனி அவனைப் புரிந்து கொள்வதும், புரிந்து கொள்ள மறுப்பதும் உன் இஷ்டம்… பாய்…” என்று விட்டு வெளியேற முயல, அவசரமாய் நமிர்ந்து பார்த்தவள்,

“ஜூலியட்…” என்றாள். வாசல் கதவைத் திறந்துகொண்டிருந்தவள் என்ன என்பதுபோலத் திரும்பிப் பார்க்க,

“வந்து… உதியோடு வாழ்ந்தபின்னும், அனோடு நண்பனாக இருக்க உன்னால் எப்படி முடிந்தது? மனம் உறுத்தவில்லையா? ஒரு பொழுதேனும் நீ தடுமாறவில்லையா…? என்று கேட்க, ஜூலியட் ஒரு விநாடி அமைதி காத்தாள். ஒரு கணம் தலையைக் குனிந்து நின்றவள், நிமிர்ந்து சமர்த்தியைப் பார்த்தாள்.

“இல்லை… முன்பு எப்படியோ… இப்போது உத் எனக்குப் பிடித்தமான நண்பன்தான். அதை மீறி எதுவுமில்லை… ஏன் என்றால், எனக்கும் சரி உத்திற்கும் சரி உடல் காதல் இருந்த அளவுக்கு உளமார்ந்த காதல் சிறிதும் இருக்கவில்லை. ஒரு வேளை மனதிற்கும் உடலுக்கும் சம்பந்தம் இருந்திருந்தால் நீ சொல்வது போல மனம் தடுமாறி இருக்குமோ என்னவோ… எப்போது நமக்கு இந்த வாழ்க்கை சரிவராது என்று முடிவு செய்தோமோ, அந்த விநாடியே பழையதைத் தூக்கி எறிந்து விட்டோம். இப்போது உத் வேறு நான் வேறு. அவன் வாழ்க்கை வேறு என் வாழ்க்கை வேறு… அதற்காக நமது பழக்கம் மாறிவிட வேண்டுமா என்ன? அவனுக்கு நல்ல தோழியாக நான் இருப்பேன். எனக்கு நல்ல தோழனாக அவன் இருக்கிறான். அவ்வளவுதான்…” என்றவள் சமர்த்தியை நெருங்கி அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்து,

“லிசின்… ஒரு வேளை நான் தடுமாறினால் கூட அதற்கான வாய்ப்பை உத் எனக்குக் கொடுக்க மாட்டான்… ஏன் என்றால இப்போது அவன் மனதில் இருப்பது நீ… நீ மட்டும்தான். அவனை விட்டு நீ சென்ற போது, அந்த ஏழு மாதங்களும் வேறு நினைவில்லாமல் அவன் உழன்றது எனக்கு மட்டும்தான் தெரியும்… நம்பு… எப்போதும் எங்கள் இருவரின் மனங்களும் தடுமாறாது…” என்ற உறுதி கூறிவிட்டு வெளியேற, சமர்த்திப் பேச்சற்றுப்போய் அப்படியே சற்று நேரம் கிடந்தாள்.

மெல்ல மெல்லக் கண்ணாடியில் பட்ட அழுக்கு அகன்றது போல, அவள் மனமும் இப்போது தெளிவானது.

எத்தனையோ ஆண்கள் மனைவி இருக்கும் போதே இன்னொரு பெண்ணைத் தேடும் காலத்தில், கையில் இருப்பவளுக்குத் துரோகம் செய்யாமல் உண்மையாக இருந்த உத்தியுக்தன் மிக மிக உயர்ந்தவனாகவே தெரிந்தான் சமர்த்திக்கு.

அந்த நேக்கர் எத்தனை நல்லவன் போல இந்த உலகுக்கு நடித்து வேடம் போட்டான். தன் மீது தவறை வைத்துக்கொண்டு, உதியையே பழிவாங்கிவிட்டானே பாதகன். அவனை எப்படி சும்மா விடுவது. நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. அதே நேரம் உத்தியுக்தனின் மீது காதலும் பொங்கி வழிந்தது.

அதுவும் அவனுக்கு அவள் செய்த பெரிய துரோகத்தைக் கூட மறந்து எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டான். அதுவும் அவளை உள்ளங்கையில் வைத்தல்லவா தாங்கினான். அவளுக்குப் பசிக்கிறதே என்று அன்னபூரணியாக மாறினானே. உறங்கி விழும் அவளைத் தோள் தாங்கினானே, முதல் உறவில் இவள் உடல் நோகும் என்று எண்ணி இதமாய்த் தொட்டியில் நீர் நிரப்பி இவளைக் குளிக்க வைத்தானே. வளைகாப்பின் போது அவளை எப்படித் தாங்கினான். அவளை அணைத்துக்கொண்டு உறங்கினானே… இவ்வளவு ஏன், அவள் எத்தனை பெரிய தவறு செய்தாள்… ஒரு முறையல்ல… இரு முறை அவனுடைய மானத்தைக் கப்பலில் ஏற்றி போது கூட, அவளை வலிக்கச் செய்ய அவன் முயலவில்லையே… இதற்கெல்லாம் காரணம் அவள் மீது அவன் வைத்த காதல்தானே… அவள் ஏன் இதையெல்லாம் யோசிக்கவில்லை.

சந்தேகம் என்கிற அசிங்கப்பிடித்த உணர்வு எத்தனை ஆபத்தானது. இத்தனை நல்லவனைக் கூட அவளுக்குக் கெட்டவனாக அல்லவா காட்டி இருந்தது. ஆனாலும் அவளுக்கு உத்தியுக்தன் மீது கோபம் வரத்தான் செய்தது.

ஒரு முறையாவது இதை அவளிடம் சொல்லி நிரூபித்திருக்கலாமே. அப்படிச் சொல்லியிருந்தால் இத்தனை சிக்கல் வந்திருக்காதே. இத்தனை தவிப்பு வேதனை அவலம் எதுவும் அவர்களை நெருங்கியிருக்காதே… ஆனால் தன் வாழ்க்கை அழியும் நிலையில் கூடத் தன் தம்பியைக் காட்டிக் கொடுக்காதவன்… எப்படி ஒன்றாக வாழ்ந்த ஜூலியட்டின் வாழ்க்கையை வெளிப்படுத்துவான்.

தன் வாழ்வில் நடந்த அத்தனை வலிகளையும் ஏமாற்றங்களையும் தயங்காது அவளுக்குக் கூறியவன் ஜூலியட்டின் வாழ்வில் நடந்ததை மட்டும் அவளுக்குக் கூறவில்லை என்றால், அதற்குக் காரணம், ஜூலியட்டை மூன்றாம் நபராக நினைப்பதால் தானே.

இதையேன் அவள் புரிந்துகொள்ளாமல் விட்டாள். எத்தனை பெரிய முட்டாளாக இருந்திருக்கிறாள்… சமர்த்திக்கு நினைக்க நினைக்கத் தாளவில்லை.

அந்தக் கணமே, அப்போதே உத்தியுக்தனிடம் செல்ல வேண்டும் என்று பெரும் ஆவல் கிளர்ந்து விட்டெரிந்தது. உள்ளமோ அவனுடைய அருகாமைக்காக ஏங்கிப் பலமாகத் துடித்தது. சுவாசமோ, அவன் சுவாசித்த காற்றைச் சுவாசிக்கப் பரிதவித்தது. இப்போதே இந்த விநாடியே ஓடிச் சென்று அவனை இறுக அணைத்து மன்னிப்பு வேண்டிக் கதறவேண்டும் என்று ஆவி துடித்தது.

விழிகளோ அவனைக் காணாத பொருட்கள் யாவும் உயிரற்றவை போன்று வறண்டு போனதாய், அவனுடைய வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கின.

வருவானா அவள் காதல் மன்னவன்?

What’s your Reaction?
+1
9
+1
3
+1
2
+1
1
+1
1
+1
0
Vijayamalar

Recent Posts

வெந்தும் தணியுமோ காதல் – 23

23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…

15 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-இறுதி அதிகாரம்

23 அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற…

2 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 21/22

21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…

3 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-21/22

21 ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு…

4 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 20

20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…

5 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-20

20 ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும்…

7 days ago