எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே. வாழ்வில் முதன் முறையாகக் காதல் என்றால் என்ன என்பதை உணர்ந்த நாளாயிற்றே. முதன்முறையாகத் தன் இணையை அடையாளம் கண்ட நாளாயிற்றே. இந்த நாள் அவள் வாழ்க்கையில் பொன்னேட்டில் பொறிக்கவேண்டிய இனிய நாளல்லவா?
அருவியைப் பார்த்து முடித்துத் திரும்பி வரும் வரைக்கும் நேயநறுமை வேறு புது உலகத்தில் தான் சஞ்சரித்திருந்தாள்.
அதற்குப் பிறகு நால்வரும் உணவு உண்ண விடுதிக்குச் சென்றார்கள். உள்ளே சற்று வெக்கையாக இருக்க, அணிந்திருந்த ஹூடியைக் கழற்றி ஓரமாக வைத்தவள், கழுத்தில் கட்டியிருந்த ஸ்கார்ஃபையும் கழற்றி மேசையின் ஓரத்தில் வைத்து விட்டு, எப்போதும் போலக் காற்றோட்டத்திற்காக மேல்சட்டையின் மூன்று பொத்தான்களை அவிழ்த்து விடத் தொடங்க, ஆதியதுலன் அவளை ஒரு மாதிரிப் பார்த்தான்.
உடனே அவளுடைய கரங்கள் அப்படியே நின்றுவிட்டன. அவன் பார்வையில் தெரிந்த மறுப்பைக் கண்டதும், அவசரமாகத் திரும்பவும் பொத்தான்களை மாட்டியவள், தாய்க்கு இடம் விட்டு அமர்ந்து கொள்ள, நால்வரும் இருக்கையில் அமைதியாக அமர்ந்தனர்.
அவர்கள் கேட்ட உணவு வந்ததும், ஏதேதோ பேசியவாறு உண்டார்கள். ஆனால் இது எதுவும் அவளுடைய கருத்தில் படவில்லை. அவள் கருத்தில் பட்டதெல்லாம், ஆதியதுலும் அவனுடைய அக்கறையான செயல்களும் மட்டுமே.
உணவில் உப்பு போதாது போலத் தோன்ற, அவள் உப்பைத் தேடிய நேரம், அதை அவளுடைய விழிகளைக் கொண்டு கண்டுகொண்டவனாக, அம்பிகாவிடம் பேசியவாறே உப்புப் போத்தலை எடுத்து அவள் பக்கமாக வைத்தான். உதட்டோரம் சாப்பிட்ட உணவின் துகள் ஒட்டிக்கிடக்கத் தன்னிடம் இருந்த மென்தாளை எடுத்து அவளிடம் நீட்டித் தன் விழிகளாலே, அவள் உதட்டோரத்தைச் சுட்டிக் காட்டிக் கூற, உடனே அதை வாங்கி உதடுகளைத் துடைத்தாள். அவள் குவளையில் தண்ணீர் தீர்ந்து போயிருக்க, தேவசகாயத்தின் பக்கமாக இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவள் குவளையில் நிரப்பி வைத்தான். சாப்பிடும்போது அவளுடைய முள்ளுக்கரண்டி தரையில் விழுந்து விட, இவள் அதைக் குனிந்து எடுப்பதற்குள், தன்னுடைய முள்ளுக்கரண்டியை அவளது தட்டில் வைத்தான். இப்படி சின்னச் சின்னதாக அவள் தேவையைப் பார்த்துப் பார்த்து அவன் கவனித்துக்கொள்ள, இவளுடைய இதயமோ காதல் பாரம் தாங்காமல் வெடித்துவிடும் நிலைக்குப் போய் விட்டிருந்தது.
அவனுடைய ஒவ்வொரு செயலும், அவள் மீதான அக்கறையை வெளிப்படுத்த, நிச்சயமாக அவனுக்கும் அவள் மீது அன்பிருக்கிறது என்று நம்பினாள் நேயநறுமை. அந்த நம்பிக்கை அவளை வானளவாகப் பறக்க வைக்க மதிமயங்கிப் போனாள் அந்தப் பேதையவள்.
அனைவரும் உண்டு முடித்ததும், நேயநறுமை தன் கம்பளியாடையை அணிந்து கொண்டு அதற்குள் சிக்கிய கூந்தலை இழுத்துச் சரியாக்கியவாறு, முன்னேற, அதைத் தொடர்ந்து அம்பிகா தேவசகாயமும் நடக்கத் தொடங்க, கடைசியாக ஆதியதுலன் அவர்களின் பின்னால் நடக்கத் தொடங்கினான்.
வண்டியை வந்து அடைந்ததும், ஆதியதுலன் முன்னது போலவே முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ளத் தேவசகாயம் வண்டியை ஓட்டுவதற்காக ஓட்டினர் இருக்கைக்கு வந்தார். அதைக் கண்டவளுக்குப் பளிச் என்று அது தோன்ற,
“அப்பா… நான் வண்டியை ஓட்டுகிறேன்… நீங்கள் அம்மாவோடு பின்னால் அமருங்கள்…” என்றதும் ஏற்கெனவே களைத்துப் போயிருந்த தேவ சகாயமும் சரிதான் என்று மறுக்காமல் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.
இவளோ வெற்றிக் களிப்போடு ஓட்டினர் இருக்கையில் அமர்ந்து திரும்பி ஆதியதுலனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள். அந்தச் சிடுமூஞ்சியோ மருந்துக்கும் அவளைப் பார்த்துச் சிரித்தானில்லை. அவளை ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவுதான்.
அதைக் கண்டு உதடுகளைச் சுளித்தவள், வண்டியை உயிர்ப்பித்துவிட்டு, அண்புலனி (ஙிறீuமீ tஷீஷீtலீ) மூலம் தன் கைப்பேசியை இணைத்தவள், தனக்குப் பிடித்தமான மேற்கத்தியப் பாடல்களை உயிர்ப்பிக்க, அது துள்ளல் இசையாக அனைவரின் காதிலும் பாய்ந்தது.
அவளுக்கு அது சுகமான இசையாகத்தான் இருந்தது. மற்றவர்களுக்குத்தான் அது ஈயத்தைக் காய்ச்சிக் காதில் ஊற்றியது போல இருந்தது. இதில் நேயநறுமையும் சேர்ந்து பாடியவாறு வண்டியை ஓட்டத் தொடங்கினாள்.
“நேயா என்னடி பாட்டு இது… சே… காதுக்குள் ஙொய் என்கிறது. இதை நிறுத்திவிட்டு ஏதாவது தமிழ்ப்பாட்டு போடேன்…” என்றாள் அன்னை.
அந்தப் பாட்டு கறுப்பினத்தவர்களின் பாடல்கள் என்பதால், அடை மொழிகளுக்குக் குறைவிருக்க வில்லை.
“கமோன் அம்மா… மூன்று மணி நேரப் பயணம்… தூக்கம் வராமலிருக்கத்தான் இந்தப் பாட்டைப் போடுகிறேன்… பாட்டின் இசையை ரசியுங்கள்… பாடலின் கருத்தை ஏன் கேட்கிறீர்கள்?” என்று சிணுங்கினாள் இளையவள்.
“பாட்டின் இசையும், கருத்தும் இணைந்தது தான் இனிமையான பாடல் நேயா. இப்படிக் கண்ட கண்ட குப்பைகள் எல்லாம் பாடல் என்றால் சகிக்க முடியவில்லை…” என்றாள் அன்னை கோபமாக.
“ஆமாம்… ஏதோ தமிழில் மட்டும் அர்த்தமான பாட்டு இருப்பதுபோல… எல்லாமே ஒரே குப்பை தானே. எல்லாமே இரட்டை அர்த்தப் பாடல்கள்தான். அதை மட்டும் ரசிப்பீர்களாக்கும்…” என்றாள் மகள் கிண்டலும் கேலியுமாக.
“நல்லது கூறினால் அதைக் கேட்காமல் உங்கள் மகள் என்ன சொல்கிறாள் என்று பாருங்கள்…” அம்பிகா கணவரைப் பார்த்துக் குற்றப்பத்திரிகை வாசிக்க, தேவசகாயமோ அசடு வழிந்தார்.
“உங்களுக்குத்தான் அவளைப் பற்றித் தெரியுமே. எதற்கு வாயைக் கொடுக்கிறீர்கள்…? நீங்கள் வேண்டாம் என்றால், இன்னும் அதிலேயே நிற்பாள். பேசாமல் கண்டும் காணாததுமாக இருங்கள் அம்பி” என்றார் தந்தை மகளுக்குச் சார்பாக.
“உங்களால்தான் இவள் இப்படிக் கெட்டுப் போய் இருக்கிறாள்… உங்களிடம் கூற வந்தேன் பாருங்கள்… என்னை..” முடிக்கவில்லை தேவ சகாயம் கீழே எதையோ தேடினார்.
“என்ன தேடுகிறீர்கள்?” மனைவி கேட்க,
“இல்லை… குளிர் என்று நாங்கள் எல்லோரும் சப்பாத்து அணிந்து வந்துவிட்டோம். உங்கள் தலையில் அடிக்கச் செருப்பு ஏதாவது இருக்கிறதா என்று தேடுகிறேன்.” என்று சொல்ல அவருடைய தொடையில் நறுக் என்று ஒரு நுள்ளு விழுந்தது. துள்ளி அமர்ந்தார் தேவசகாயம். பின் பரிதாபமாகத் தன் மனைவியைப் பார்க்க, அவர் விழிகளில் தெரிந்த கோபத்தைக் கண்டு, கப் என்று வாயை மூடிக்கொண்டார் அவர்.
அதே கோபத்தோடு தன் மகளைப் பார்த்த அம்பிகா,
“நேயா… இந்த தரித்திரம் பிடித்த பாட்டை நிறுத்தப்போகிறாயா இல்லையா?” என்றார் கடுமையாக.
நேயா எதிர்த்து வாய் திறந்து ஏதோ சொல்ல வர, ஆதியதுலனின் கரம் நீண்டு அந்தப் பாட்டை நிறுத்த இவளுக்குக் கோபம் வந்தது.
அந்தக் கோபத்துடன் அவனை முறைத்துப்
பார்க்க முயல, அவன் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையில், சட்டென்று தன் எதிர்ப்பை இழந்து உதடுகள் கடித்தவள் தன் கவனத்தை வண்டி ஓட்டுவதில் காட்ட, அவனோ ஒரு கணம் கடித்த அந்த உதடுகளைப் பார்த்துவிட்டு தெருவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
சற்று நேரம் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவள்,
“பா…” என்று தந்தையை அழைத்தாள். மறு பக்கம் அமைதியாக இருக்க,
“அப்பா…” என்றாள் மீண்டும் அழுத்தமாக.
பதில் இல்லாமல் போகத் திரும்பிப் பார்த்தாள் நேயநறுமை. தாயும் தந்தையும் நல்ல உறக்கத்தில் இருக்க அந்த நேரம் அவளுடைய கவனம் சிதறியதால் வண்டித் தடம் மாறிச் செல்ல முயன்ற நேரம் சட்டென்று ஸ்டியரிங் வீலில் இருந்த அவளுடைய கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்த ஆதியதுலன், வண்டியை நேராக்க முயல, பதறிப்போய்த் திரும்பிப் பார்த்தாள் நேயநறுமை. அவளைக் கோபமாகப் பார்த்த ஆதியதுலன்,
“வண்டி ஓட்டும் போது கவனம் தெருவிலிருக்க வேண்டும். இது வேகப்பாதை வேறு. சின்னதாகத் திசை மாறினாலும் நாங்கள் நால்வரும் பரலோகம் போக வேண்டியதுதான்…” என்றான் சற்றுக் கடுமையாக.
“சா… சாரி… அப்பாவை அழைத்தேன். பதில் இல்லை என்றதும் என்னை மறந்து திரும்பிப் பார்த்துவிட்டேன்…” என்று சங்கடமாக விளக்கம் கொடுத்தவளின் பார்வை தன் கரத்தின் மீது அழுத்தமாக விழுந்துகிடந்த அவன் கரத்தில்தான் நிலைத்திருந்தது.
அப்போதுதான் அவனும் உணர்ந்தான் போல, அவசரமாகத் தன் கரத்தை இழுத்து எடுத்தவன்.
“வண்டியைப் பார்த்து ஓட்டு நறுமை…” என்கிற கண்டிப்போடு விலகிக்கொள்ள, உதட்டைச் சுளித்தாள் அவள்.
கொஞ்ச நேரம் பற்றியிருந்தால்தான் என்னவாம். சொத்து குறைந்து விடுமா என்ன? எரிச்சலோடு நினைத்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவனோ வெளியே வெறித்துக் கொண்டிருந்தான்.
“அதுலன்…” அழைக்கத் திரும்பிப் பார்த்தான்.
“அம்மாவும் அப்பாவும் உறங்கிவிட்டார்கள். நீங்களும் பேசாமல் உர் என்று வந்தால் நான் என்ன செய்யட்டும். பாட்டும் கேட்க விடமாட்டேன் என்கிறீர்கள். இப்படியே நீண்ட தூரத்திற்கு வண்டியை ஓட்ட முடியாது. தூக்கம் வரும்…” சிணுங்கலாகச் சொன்னவளைத் திரும்பிப் பார்த்தவன் என்ன நினைத்தானோ வண்டியின் அலைவரிசையை உயிர்ப்பிக்க, அதில் ஆங்கிலத்தில் நகைச்சுவை பட்டிமன்றம் போய்க் கொண்டிருந்தது.
“இதைக் கேட்டுக்கொண்டு ஓட்டு. தூக்கம் வராது.” சொன்னவன் சாய்வாக அமர்ந்து விழிகளை மூட, இவளுக்கோ ஆத்திரம் மூக்கு நுனியில் வந்து நின்றது.
‘பாதகன், கொஞ்சமாவது மனமிரங்கி வருகிறானா பார்.’ எரிச்சலுடன் நினைத்தவளுக்கு மனம் சோர்ந்து போனது. ‘இப்படி உர் என்று வருகிறானே. என்மீது ஏதாவது அபிப்பிராயம் இருக்கிறதா இல்லையா? அதை எப்படிக் கண்டுகொள்வது? இப்படிப் பேசாமல் ஒதுங்கிக் கிடந்தால் எப்பத்தான் கண்டுகொள்வது? முணுமுணுத்தவள் பின் மென்புன்னகை ஒன்றையும் சிந்தினாள்.
நிச்சயமாக அவனுக்கும் அவள் மீது ஏதோ ஒரு உணர்வு இருக்கத்தான் செய்கிறது. இல்லை என்றால், இன்று அந்தப் படகில் இவளை அடைகாப்பது போலக் காத்திருக்க மாட்டான். உணவகத்தில் அவளுக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்க மாட்டான். இவ்வளவு ஏன், அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது வரை அவனுக்குத் தெரிந்திருக்கிறதே. வின்சன் நெருங்கி நின்றிருந்த போது அப்படிப் பார்த்தான். அப்படியென்றால், அவனுக்கும் அவள் மீது ஈர்ப்பு இருக்கிறது என்றுதானே அர்த்தம். அந்த ஈர்ப்பு காதலா இல்லை வெறும் அக்கறையா? எப்படிக் கண்டு கொள்வது?
யோசனையோடு கழுத்தை, அழுத்திக் கொடுப்பதற்காகக் கையை அங்கே வைத்தவள் அதிர்ந்து போனாள்.
“ஐயோ…” இவள் பதற, ஒருபக்கமாகச் சரிந்து படுத்திருந்தவன், அவளுடைய சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
“என்னாச்சு…”
“என்னுடைய ஸ்கார்ஃப்… அதைக் காணோம்…” அவள் சொல்ல, அவளை எரிச்சலுடன் பார்த்தவன்,
“ஸ்கார்ஃப் தானே… அதற்கு ஏன் இந்தளவு பதறுகிறாய்…” அவன் கேட்க,
அவனைப் பார்த்து முறைத்தவள்,
“அதனுடைய அருமை உங்களுக்கு எப்படித் தெரியும்? அது என்னுடைய முதல் சம்பளத்தில் முதன் முறையாக ஆசைப்பட்டு வாங்கியது. அது எனக்கு மிக முக்கியமானது…” சொன்னவளின் முகம் வாடிப்போனது.
“கடைசியாகச் சாப்பிடும் இடத்தில் கழட்டி வைத்த நினைவு. சாப்பிட்டு முடித்து திரும்பும் போது அதை எடுக்க மறந்துவிட்டேன் போல…” அவள் வருத்தமாகக் கூற, அவனோ பதில் சொல்லாது வெளியே ஏறிட்டான். தொலைந்த ஸ்கார்ஃபைத் தேடித் திரும்பவும் ஒரு மணி நேரம் பயணம் செய்யவா முடியும்?
கொஞ்ச நேரம் புலம்பிக்கொண்டு வந்தவள், வண்டியின் எரிவாயு குறைவதைக் கண்டு உடனே தன் ஸ்கார்ஃபை மறந்து, பாதையை விட்டு வெளியேற,
“ஏன்… என்னாச்சு?” என்றான் ஆதியதுலன்.
“எரிவாயு போடவேண்டும்…” சொன்னவள் அங்கிருந்த எரிவாயு நிலையத்தில் நிறுத்த, இவனும் வெளியேறி உடலை முறுக்கி நெட்டி முறித்தான். நெட்டி முறித்தவனின் கண்களில் சற்றுத் தள்ளி ஒரு கடை தெரிய,
“இதோ வருகிறேன்…” என்றவன் தன் நீண்ட கால்களை எடுத்து வைத்து நடந்து செல்ல, வண்டிக்குத் தீனி போட்டவாறே நடந்து செல்லும் ஆதியதுலனை இரசித்தாள் நேயநறுமை.
இவள் வண்டிக்கு எரிவாயு நிறைத்து விட்டு அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டு வெளியே வரும்போது ஆதியதுலன் வண்டிக்கு மேல் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.
“எங்கே போனீர்கள்?” மனதில் ஆசை வந்தால் உரிமையும் சேர்த்து வந்துவிடுகிறது போல. அதற்குள் ஏன் அத்தனை அவசரமாகச் சென்றான் என்கிற கேள்வி குடையக் கேட்டும் விட்டாள்.
அவள் வண்டியைத் திறந்ததும் உள்ளே ஏறி அமர்ந்தவன், கீழே வைத்திருந்த சிறிய பை ஒன்றை எடுத்து அவளிடம் நீட்ட, அவளோ அதைக் குழப்பத்துடன் பார்த்து,
“என்ன இது?” என்றாள் வியந்துபோய்.
“ப்ச்… என்னவென்று பார்…” அவன் சொல்ல மறுக்காமல் வாங்கியவள், அந்தப் பையை மெதுவாகத் திறந்து பார்த்தாள். பார்த்தவளின் விழிகள் வியந்தன. உடனே கரத்தை உள்ளே நுழைத்து அதை வெளியே எடுத்துப் பார்க்க, கிட்டத்தட்ட அவளுடைய ஸ்கார்ஃ போலவே அதே நிறத்தில் ஒன்றை வாங்கியிருந்தான் ஆதியதுலன்.
அதைக் கண்டவளின் உள்ளம் நிறைந்து போனது. அவள் தொலைத்துவிட்டாள் என்பதற்காக அவன் வாங்கிக் கொடுத்திருக்கிறான் என்றால், அவள் மீது ஈர்ப்பு இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
“அதுலன்…” அவள் தடுமாற,
“எனக்காகத்தானே நயகரா வந்தீர்கள். சொல்லப்
போனால் என்னால்தானே உன்னுடைய ஸ்கார்ஃபைத்
தொலைத்தாய். என்னால் நீ ஏன் நஷ்டப்பட வேண்டும்? அதுதான், இதை வாங்கிக் கொடுத்தேன்” அவன் வெளியே பார்த்தவாறு சொல்ல, அதுவரை மலர்ந்திருந்த முகம் சட்டென்று வாடிப்போனது. அவனைப் பார்த்து முறைத்தவள்
“நீங்கள் இதை வாங்கிக் கொடுத்தாலும், நான் இழந்தது இல்லை என்றாகிவிடுமா. அது என்னுடைய முதல் சம்பளத்தில் வாங்கியது. அதுவும் இதுவும் ஒன்றாகுமா?” எரிச்சலோடு கேட்டாலும் கரத்தில் இருந்த அந்த ஸ்கார்பை பெருவிரலால் வருடிக் கொடுப்பதை மட்டும் அவள் விடவில்லை.
அவனோ தன் தோள்களைக் குலுக்கி,
“ஒன்றாக முடியாதுதான். ஆனால், என் குற்ற உணர்ச்சி குறையுமே… பிடித்தால் எடுத்துக்கொள். பிடிக்கவில்லை என்றால் குப்பையில் போடு… உன் விருப்பம். என்னைப் பொறுத்தவரை, உன் இழப்பிற்கு ஈடு செய்திருக்கிறேன். அவ்வளவுதான்…” சொன்னவன் அவளைப் பார்க்காமல் வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்க, நேயநறுமையோ அத்தனை கோபத்தையும் மொத்தமாகச் சேர்த்து அந்த ஸ்கார்ஃபை விரித்துக் கழுத்தில் கட்டிவிட்டு, வண்டியைக் கிளப்பினாள்.
அன்று வீட்டுக்கு வந்த பிறகும் நேயநறுமை தன்நிலையில் இல்லை. அன்றைய நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகளை இரைமீட்டுக்கொண்டே இருந்தவளுடைய முகம் என்றுமில்லாத திருநாளாக மலர்ந்து பூரித்திருந்தது.
அன்றைய இரவு அவன் வாங்கிக் கொடுத்த ஸ்கார்பை எடுத்து மார்போடு அணைத்தவாறு அதை வருடிக்கொடுத்தவளுக்குத் திரும்பத் திரும்ப தன் முகம் நோக்கி வந்த அவன் திரு உருவம்தான் நினைவில் வந்துகொண்டே இருந்தது.
கொஞ்சம் விட்டிருந்தாலும் அவன் முத்தமிட்டு இருப்பான். அந்த நினைப்பே அவளுடைய முகத்தைச் சிவக்க வைக்க, சூடேறிய முகத்தை உணர்ந்து ஆச்சரியத்தோடு கன்னத்தில் கைவைத்துப் பார்த்தாள் நேயநறுமை.
இது என்ன முகம் சட்டென்று சுடுகிறது? குழம்பியவளுக்கு அதுதான் வெட்கத்திற்கான ஆதாரம் என்பது கூடத் தெரியவில்லை.
ஆனாலும் திரும்பத் திரும்ப அவனுடைய நெருக்கமும், அவனுடைய அக்கறையும் அவளை இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்திற்கு எடுத்துச் சேன்றுவிட்டிருந்தது.
அவள் தன்னை மறந்திருந்த நேரம், நேரிழை உள்ளே வந்தாள். தன் தங்கை வருவதைக் கண்டவள், அவசரமாக அந்த ஸ்கார்ஃபை தலையணைக்குள் செருகிவிட்டு, சாதாரணமாக இருக்க முயன்றாள்.
“அக்கா… நீர் இன்னும் தூங்கவில்லையா?” என்றாள் வியப்பாக.
என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல், செருமியவள்,
“ம்கும்.. அது… தூக்கம் வரவில்லை… என்னைக் கேட்கிறீர்.. நீர் தூங்கவில்லை…?” கேட்க,
“ம்… தூங்க வேண்டும்..” சொன்ன தங்கையின் முகத்திலிருந்த சோர்வைக் கண்டு, விழிகள் உயர்த்தினாள் நேயநறுமை.
“நேருமாமா… என்னாச்சு.. ஏன் முகம் சோர்ந்து இருக்கிறது… ஏதாவது காய்ச்சலா?” சகோதரியாக அக்கறையுடன் கேட்க,
“இல்லை அக்கா… பரீட்சைக்குத் தொடர்ந்து தூங்காமல் படிக்கிறேன் அல்லவா… அதுதான் கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. பரீட்சை முடிந்ததும் சரியாகிவிடுவேன்…” சொன்ன தங்கை மறுபக்கம் படுத்து போர்வையால் தன்னை மூடி உறங்கிப்போக, தங்கையைத் திரும்பிப் பார்த்த நேயநறுமை மீண்டும் அந்த ஸ்கார்ஃபை எடுத்து மார்போடு அணைத்தவாறு விழிகளை மூட முயன்றாள்.
எங்கே உறக்கம் வந்தால்தானே?
சரிந்து படுத்தாள். மீண்டும் திரும்பிப் படுத்தாள். நிமிர்ந்து படுத்தாள், குப்புறப் படுத்தாள். ம்கூம்… உறக்கம் வர மறுத்தது. புத்தி முழுக்க அவன்தான் நிறைந்திருந்தான். அந்த நேரம் சட்டென்று வைர முத்துவின் அந்தக் கவிதைதான் நினைவுக்கு வந்தது.
காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம் விளங்கும்
உனக்கும் கவிதை வரும்!
கையெழுத்து அழகாகும்
தபால்காரன் தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்
தலையணையை நனைப்பாய்
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டை ஒன்று
உருளக் காண்பாய்!
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி,
இந்த பூக்கள் -எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்
நிசப்த அலைவரிசைகளில் உனது
குரல் மட்டும் ஒலி பரப்பாகும்
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சஹாராவாகும்!
தாகங்கள் சமுத்திரமாகும் -பிறகு
கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே!
அதற்காக வேணும்..
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே
அதற்காக வேணும்…
அன்று தந்தை ரசித்துக் கவிதையைச் சொன்ன போது, அதைக் கேட்டு கெக்கே பிக்கே என்று சிரித்தவள், இன்று அந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும் அவளுக்காக எழுதப்பட்டதாகத் தோன்ற, அவளுடைய உதடுகளில் அழகாய் ஒரு புன்னகை.
மல்லாக்காக நிமிர்ந்து படுத்து அவனை நினைத்து ரசித்தாள். பின் சரிந்து தாயின் கருவறையில் உறங்கும் குழந்தையாக உடலைச் சுருட்டிக் கொண்டவளுக்கு, அன்று படகில் அவளை அரவணைத்தாற்போல அவன் நின்றிருந்த நிலையும், அவன் உடல் கற்றுக்கொடுத்த சூடும் நினைவுக்கு வந்து அவளைக் காமத்தின் வாசலில் தள்ளியது. அன்று கூட அவள் ஓடிவந்து அவன் மார்பில் விழுந்தாளே. பிறகு கூட அவன் கால் பட்டுச் சரிந்தவளை அவன் அணைத்துத் தாங்கினானே. அப்போதுகூட இப்படித்தானே செயலிழந்து கிடந்தாள். அந்த நேரம் கூட இதுக் காதலின் அறிகுறியென்று புத்தி எச்சரிக்கத் தவறிவிட்டது. அதன் பின்னும் அவனைத் தேடி அலையும் விழிகள், அவனைக் கண்டால் குதுகலிக்கும் மனம் எல்லாமே அவள் காதலை அறிவுறுத்திக்கொண்டுதான் இருந்தன. இவள்தான் கவனிக்கத் தவறிவிட்டாள்.
மீண்டும் அவனுடைய கரத்தின் தீண்டல் நினைவுக்கு வர, தேகத்தின் ஏக்கம் பேரலையாக எழுந்தது. அவனுடைய பரந்த கைவளைவில் சிக்கி, தன்னையே அவனுக்குப் பரிசாக்கி மெய்யியல் காண ஏக்கம் பிறந்தது. இன்னும் ஏதேதோ தாபம் நிறைந்த ஏக்கங்கள். ஒரு கட்டத்திற்கு மேல் உறங்க முடியாமல் எழுந்துவிட்டாள் நேயநறுமை. தேகம் புதுவிதமாகத் தவித்தது. காதலும் காமமும் ஒன்றாய் கலந்த உணர்வுக்கு அவன் மட்டும் தேவையாக இருந்தான். விரகதாபம் என்பார்களே. அது இதுதானோ? தவித்தாள் அவள்.
எழுதிய வைரமுத்து, உறங்கும் போது படுக்கை கூட முள்ளாய் குத்தும் என்று எழுதியிருக்க வேண்டும். முனங்கியவளுக்கு இளமை எத்தனை ஆபத்தானது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டாள். காதல் வந்துவிட்டால் கூடவே காமத்தையும் சேர்த்து அழைத்து வந்துவிடுகிறது. அதற்காக வெட்கத்தைத் தொலைத்து ஆணிடம் சேர காதல் கொண்ட மனது துடிக்கிறது. எத்தனை பொல்லாத காதல்.
அப்போதே, அந்தக் கணமே அவனைப் பார்த்து விடவேண்டும் என்கிற வெறி அவளுக்குள் பூதாகரமாகத் தாக்க, அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவளாக எழுந்துவிட்டாள் நேயநறுமை.
இல்லை இப்படியே காதலை மனதில் வைத்து இருந்தால் அது பொங்கி வெடித்துவிடும். அதன் பிறகு இவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும். அவளுடைய மனநிலையை அவனிடம் சொல்லி விட்டால் பெரும் பாரம் இறங்கியது போல மனது நிம்மதியடையும்.
நினைத்தவளுக்கு அப்போதுதான் தங்கையின் நினைவு வந்தது. திரும்பிப் பார்த்தாள். அவள் இடம் வெறுமையாக இருந்தது. இந்த நேரத்தில் எங்கே பேனாள். கழிவறை போயிருப்பாளோ? அவள் எழுந்து சென்றது கூடத் தெரியாமல், அவன் நினைவிலிருந்திருக்கிறோமே? நினைக்கும் போதே வெட்கம் பிடுங்கித் தின்றது.
மெல்லிய புன்னகையுடன் அறையை விட்டு வெளியே வந்தவள், நடந்து ஆதியதுலனின் அறையை நெருங்கித் தயங்கி நின்றாள்.
உள்ளே விளக்கு எரிவதற்கான அடையாளம் எதுவும் இல்லை. உறங்கி இருப்பானோ. அவனுடைய உறக்கத்தைக் கலைத்துத் தன் மனதிலிருப்பதை எப்படிச் சொல்வது? நினைத்தவள் உடனே தன் எண்ணத்தை மாற்றியும் கொண்டாள்.
இப்போதே காதலைச் சொன்னால் அவன் அதிர்ந்து போவான். எதிர்மறையான பதில் அவனிடம் இருந்து வர வாய்ப்பிருக்கிறது. வேண்டாம், முதலில் அவள் மீதிருக்கும் தவறான அபிப்பிராயம் போக வேண்டும். அதற்குப் பிறகுதான் காதலைச் சொல்ல வேண்டும். அவளை அவன் புரிந்து கொண்டால் நிச்சயமாக இவளுடைய காதலின் ஆழத்தையும் புரிந்து கொள்வான்… உறுதியாக நம்பியவள், அவன் அறையை விட்டு விலகி சமையலறை நோக்கி நடக்கத் தொடங்கிய நேரம் முன்னறையில் மெல்லிய சத்தம் கேட்டது.
என்ன சத்தம் இது? குழம்பியவள், மேலும் நடக்கத் தொடங்க, இப்போது செவிகளில் இருவர் தாழ்ந்த குரலில் பேசுவது கேட்டது. நடை தடைப்பட நின்றாள் நேயநறுமை.
அந்த மென் குரல் நேருவுடைய குரல் போல இருக்கிறதே? யாரோடு இரகசியமாகப் பேசுகிறாள்? அதுவும் விளக்கு எதுவும் போடாமல்? குழப்பத்துடன் நடந்து சென்றவள், சட்டென்று முன்னறை விளக்கைப் போட, சட்டென்று பிறந்த வெளிச்சம் காட்டிய காட்சியில் அதிர்ந்து போய் மலங்க மலங்க விழித்தாள்.
23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…
23 அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற…
21 ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு…
20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…
20 ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும்…
19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம…