இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள்.
என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம திருப்தி. இல்லை என்றால், தேவையற்று அவருக்கும் அவளுக்குமிடையில் ஒரு சண்டை நிகழும். பிறகு மூஞ்சையை எட்டு முழத்திற்கு நீட்டிக்கொண்டு இருப்பாள். நான் வரவில்லை என்ற அறைக்குள் ஒடுங்கிக் கிடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தன்னை மறந்து மகளின் கன்னத்தைக் கிள்ளி உதட்டில் பொருத்தியவர்,
“இந்த உடையில் எத்தனை அழகாக இருக்கிறாய் தெரியுமா?” கேட்டவர், தோள்வரை வெட்டப்பட்ட மகளின் கூந்தலை ஒதுக்கிவிட்டு,
“அருவிக்கரை என்பதால் குளிரும்… ஏதாவது தடித்த ஆடை எடுத்து வா நேயா…” என்றார் அக்கறையாக. இப்போதுதான் தேறி வந்திருக்கிறாள். திரும்ப படுத்துவிட்டால் என்ன செய்வது?
தாய் சொன்னதும் மறுக்காமல் தன் அறைக்குள் நுழைந்தவள், திரும்பி வந்த போது கழுத்தைச் சுற்றி கைக்கு அடக்கமான ஒரு ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டு வந்தாள்.
“என்னடி… ஸ்கார்ஃப் மட்டும் அணிந்து கொண்டு வருகிறாய். ஜக்கட் போடவில்லை? அம்பிகா கேட்டவாறு, அவளுடைய கழுத்தின் ஓரமாக இருந்த ஸ்கார்ஃபின் முடிச்சைக் கீழிறக்கி தொண்டையின் நடுவில் விட, இவளோ திரும்ப அந்த முடிச்சைப பழைய இடத்தில் விட்டவாறு,
“ப்ச்… எனக்கு குளிர்தான் பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா? இந்த ஸ்கார்ஃபே போதும்” என்றாள் உதடுகளைச் சுளித்து.
“ப்ச்… இத்துனூண்டு ஸ்கார்ஃப் எப்படிப் போதும்? போமா… போய் கம்பளி ஆடை ஏதாவது எடுத்து வா…”
“இது ஓகே மா…” சிணுங்கிய மகளைக் கோபமாகப் பார்த்து, எப்போதுதான் எங்கள் பேச்சைக் கேட்டிருக்கிறாய்… திரும்ப மூச்சிரைப்பு என்று வந்து நின்று பார்…” சிடு சிடுத்தவர், தேவ சகாயத்தோடு வெளியேற, அதுவரை தன்னுடைய தடித்த மேலாடையை அணிந்து கொண்டிருந்த ஆதியதுலன், அதன் ஜிப்பை இழுத்து விட்டு, கிளோசட் கதவைத் திறந்து அதிலிருந்து வெண்ணிற ஹூடி ஒன்றை இழுத்தெடுத்து நேயநறுமையிடம் நீட்ட, இவளோ என்ன என்பது போல அவனைப் பார்த்தாள்.
“இது உன்னுடையதுதானே. நாம் போவது அருவிக்கு. காலநிலை ஏதுவாக இருந்தாலும், அங்கே குளிரும்… பிடிவாதம் பிடிக்காமல் அணிந்து கொண்டு வா…” அவன் சற்றுக் கண்டிப்புடன் சொல்ல, வருத்தத்தோடு குனிந்து தன் ஆடையைப் பார்த்தாள். அந்த ஹூடியை அணிந்தால் அவள் அணிந்திருக்கும் அழகான ஆடை மறைந்து போகுமே. ஆனாலும் அவன் நீட்டுகிறான். மறுக்க முடியாமல் வாங்கி உடனே அணிந்து கொண்டவள் இப்போது நிமிர்ந்து அவனை ஆவலுடன் பார்த்தாள். அவனோ அவளைப் பார்த்துத் திருப்தியாகப் புன்னகைத்து,
“சரி… புறப்படலாமா?” அவன் மென்மையாகக் கேட்க, அழகாய் சிரித்தவள், சரி என்றாள் மகுடிக்கு மயங்கிய பாம்பாக.
இருவரும் வெளியே வந்த போது, தேவசகாயம் ஏற்கெனவே வண்டி ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்திருந்தார். அம்பிகா பின்னால் அமர்ந்திருக்க, நேயநறுமை தாயினருகே அமர்ந்து கொள்ள, ஆதியதுலன் தேவசகாயத்தின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
பேச்சுச் சுவாரசியமாகப் போனதால், தூரமும் அதிகம் தெரியவில்லை பயணமும் கசக்கவில்லை. அதுவும் நேயநறுமைக்கு ஆதியதுலன் பேசும் போதெல்லாம் கண்ணனின் புல்லாங்குழலுக்கு மயங்கிய ஆவினங்களாக மயங்கிப்போய் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு பேசவேண்டும் என்றே தோன்றவில்லை. நயகரா அருவியை நெருங்கியதும், வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஓரளவுக்கு நன்றாக இருந்த காலநிலை, நயகராவை நெருங்கியதும் மேலும் குளிரத் தொடங்க உடல் சில்லென்று ஆனது.
இதில் நயகரா அன்னையின் கடல் அலையெனப் பொங்கி எழுந்த ஒசையும், அது பூமித் தாயை முத்தமிடும் போதுத் தெறித்துச் சிதறிய துகள்களும், அதில் நனையும் தேகமும்… அப்பப்பா… கம்பன் இல்லாமல் போனான் அவளைப் போற்றிக் கவிபாட.
ஆதியதுலனோ தன்னை மறந்து “வாவ்…” என்று வியக்க, கனடாவின் நித்திலமாய் கொழிக்கும் நயகரா அருவியைப் பெருமையாகப் பார்த்த அம்பிகா,
“ம்… அழகாகத்தான் இருக்கிறது… ஆனால் குளிர்கிறது..” என்றார் குளிரில் சிலிர்த்தவாறு.
அதே நேரம் முகத்தில் தெறிக்கும் அன்னையவளின் நீர்த் துளிகளை விழிகள் மூடி இரசித்தவாறு, அவளை அணைக்க எழுந்த முயற்சி போல இரு கரங்களையும் விரித்து, அந்த இன்பப் பொழுதை இரசித்த நேயநறுமை,
“குளிர் கூட அழகு தான்மா…” என்றாள் தன்னை மறந்து.
அந்தக் குளிருக்கு இதமாக, ஆதியதுலனின் அணைப்பிலிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும். மனம் நினைத்துப் பார்த்து ஆனந்தம் கொள்ள, அந்தக் கற்பனையை நிஜமென எண்ணி மகிழ்ந்த மனது அதை உதடுகளில் அழகிய புன்னகையாய் வெளிப்பதடுத்த, இவளுடைய உதடுகள் அழகாய் நெளிந்து மலர்ந்தன. அந்த நேரம் அம்பிகாவிடம் எதையோ பேசிக்கொண்டு திரும்பிய ஆதியதுலன், நேயநறுமையின் அந்த மலர்ந்த நிலை கண்டு இமைக்க மறந்து போனான். அவனால் அவளுடைய அழகிய வதனத்திலிருந்து தன் விழிகளை விலக்கவே முடிய வில்லை.
இயற்கையோடு இயற்கையாகத் தன்னைக் கலக்க முயன்ற பெண்ணவளின் அந்த ஏகாந்த நிலை கண்டு தன்னையும் மறந்து நின்றான் ஆதியதுலன். செழித்த அழகிய சிவந்த உதடுகளுக்கு இடையாக கீற்றாய் எட்டிப் பார்த்த வெண் முத்துப் பற்களும், குளிரில் சிவந்த குண்டுக் கன்னங்களும், மூடிய விழிகளும், அதன் மேலே வில்போன்ற தடித்த கரிய நீண்ட இமைகளும், திறந்திருந்த ஜாக்கட்டின் ஊடாகத் தெரிந்த சிலிர்த்த உடலும் அவனை ஒரு கணம் நிலைகுலையத்தான் செய்தது. அருகே பேசிக்கொண்டிருந்த தேவசகாயமும், அம்பிகாகும் மொத்தமாக மறைந்து போக, அவன் விழிகளுக்கு நேயநறுமை மட்டும் காட்சிநெறியாய் நின்றிருந்தாள்.
எத்தனை நேரம் தன்னை மறந்து நின்று இருந்தானோ, திடீர் என்று அவனுடைய தோளில் ஒரு கரம் விழுந்தது. திடுக்கிட்டுத் தன் நிலைக்கு வந்தவன், திரும்பிப் பார்த்தான். தேவசகாயம்தான் கேள்வியுடன் நின்றிருந்தார்.
அப்போதுதான் தன்னை மறந்து அவளைப் பார்த்து நிற்பதே அவனுக்கு உறுத்தியது. அவசரமாகத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டவன்,
“சா… சாரி மாமா… அங்கே… யாரோ… தெரிந்தவர்கள் போல…” தடுமாறியவன், “நீங்கள் சொல்லுங்கள் மாமா… ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்னாச்சு?” அவன் சமாளிக்க,
“மார்ச் 29, 1948 இல் முதலும் கடைசியுமாக 30 மணி நேரத்திற்கு நயகரா குளிரின் வீரியம் தாங்க முடியாமல் உறைந்துபோனாள். அப்போது நிறையப் பேர் இந்த நாயகராவின் மீது நடந்து அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். இதில் குளிர் தாள முடியாமல் சிலர் இறந்தும் போனார்கள்…” என்றார் தேவசகாயம்.
“ஓ… அப்படியானால் குளிர் மைனஸ் ஐம்பதுக்கும் மேல் போயிருக்கவேண்டும்” என்றான் ஆதியதுலன்.
“ம்… ஒரு காலத்தில் இந்த அருவியையே உறையச் செய்யும் அளவுக்கு குளிர் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் மைனஸ் இருபத்தைந்து பாகைக்கு மேல் குளிர் போவதில்லை…” என்றார் கவலையுடன்.
அதுவரை நயாகரா அன்னையின் அழகில் இலயித்திருந்தவள், தந்தை சொன்னதைக் கேட்டதும், உதடுகளைச் திரும்பிப் பார்த்தாள்.
“ஓ காட்… அப்பா… உங்களுக்கு விறைத்துச் சாக ஆசையா என்ன? பதினெட்டு பாகையளவில் இருந்தாலே சில் என்று ஆகிறது. இதில்… மைனஸ் ஐம்பதுக்கும் போனால்…?” நினைப்பே சிலிர்ப்பைக் கொடுக்க, நடுங்கியள், ‘நல்லவேளை கனடாவில் இப்போது முன்னையது போலக் குளிர் இல்லை…” என்றாள் கரங்களைத் தேய்த்து விட்டவாறு.
“அப்படி இருப்பது நல்லதற்கில்லை நேயா…” என்றார் தேவசகாயம் வருத்தமாக. உடனே தலையசைத்த ஆதியதுலன்,
“நீங்கள் சொல்வது சரிதான் மாமா… உலகம் வெப்பமயமாகிறது… இது யாருக்கும் நல்லதில்லை..” என்றான் ஆதியதுலன் தேவசகாயத்தின் கூற்று சரி என்பது போல.
“கமான்.. இன்று இதைப் பற்றி யோசிக்கவோ கவலைப் படவோ யாருக்கு நேரம் இருக்கிறது? நம்முடைய சிக்கலைத் தீர்க்கவே நமக்கு நேரம் இல்லை. இதில் உலகம் வெப்பமயமாகுவதைப் பற்றி யோசித்து என்ன ஆகப் போகிறது? நிச்சயமாக நாங்கள் உயிரோடிருக்கும் போது உலகம் அழியாது. அது மட்டும்தான் நிஜம்… அதற்குப் பிறகு என்ன ஆனால் நமக்கு என்ன?” என்றாள் இவள் சுவாரசியமற்று.
“உன்னைப் போலச் சுய நலமாக எல்லோராலும் நினைக்க முடியாது நேயா. இது நம்முடைய பிரச்சனை மட்டுமல்ல. நம்முடைய சந்ததிகளின் பிரச்சனை. நாம் எதை விட்டுவிட்டு போகிறோமோ அதைத்தானே அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். நாம் நல்ல உலகத்தைக் கொடுத்தால்தானே அவர்களும் தரமான வாழ்க்கையை வாழ முடியும்.” என்று சிறு கோபத்துடன் சொன்னவனை எரிச்சலுடன் பார்த்தாள் நேயநறுமை.
“இதையே நமக்கு முன்னர் இருந்தவர்கள் யோசித்திருக்கவேண்டும். அல்லது இப்போது இருக்கிறவர்களாவது அதைப் பற்றி யோசித்து நடக்க வேண்டும். எங்கே? நமக்குத்தான் அதற்கு நேரம் இல்லையே? எந்த நடிகர் விவாகரத்துப் பெற்றார், எந்த நடிகர் அரசியலில் சேர்ந்தார், எந்த நடிகன் நேற்று என்ன சொன்னார், இன்று என்ன செய்கிறார், பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது…? அவன் என்ன ஜாதி, இவன் என்ன ஜாதி, அவன் சாமி கும்பிடத் தகுதியானவனா? இவன் சாமியைத் தொடலாமா? ஹிந்து மதம்தான் உலகின் சிறந்த மதம், இஸ்லாம்தான் தகுந்த மதம், இல்லை கிறிஸ்தவம்தான் உண்மையான மதம் என்று போர்க்கொடி தூக்கவும், அதை பதிவுகளாக சமூக வலைத் தளங்களில் போடவும், கண்ட கண்ட ரீல்ஸ் போட்டு கடுப்பேத்தவும்தான் நமக்கு நேரம் இருக்கிறது. இதில் உலகம் வெப்பமயமாவதைப் பற்றியும், அதனால் உலகம் அழிவதைப் பற்றியும், பின்னாடி நம் சந்ததிகள் சிரமப்படப் போகின்றனவே என்று கவலைப் படவும் நேரம் எங்கே இருக்கிறது? அப்படியே நேரமிருந்தாலும் நம்மால் என்னதான் செய்ய முடியும்? ஒலிவாங்கியில் நான்கு பேர் காது கேட்கக் கத்த முடியும். தன்னார்வலர், இயற்கையைப் போற்றும் நல்லவர் என்று பெருமையாகப் பீற்றிக் கொள்ள முடியும். அதற்கு மேல் என்னதான் செய்ய முடியும்? போங்கள் அதுலன்… இதை எல்லாம் ஓரமாகப் போட்டுவிட்டு இருக்கிற காலங்களில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டுப் போய்விடுவது நல்லது. நாளைக்கு நம் சந்ததிகள் சிரமப்பட்டால், அதைப் பார்க்க நாங்கள் இருக்கவா போகிறோம்?” கிண்டலும் எரிச்சலுமாகக் கேட்டாள் இவள்.
“அப்படி சட்டென்று ஒதுங்கிவிட முடியாது நறுமை… யாருமே இதைப் பற்றி நினைக்கவில்லையே என்பதற்காக நாம் நினைக்காமலிருக்க முடியுமா? அது தவறில்லையா? நமக்கு இடம் கொடுத்த பூமிக்கு நாம் நன்றி சொல்லாவிட்டாலும், அதற்கு உண்மையாகவாவது இருக்க வேண்டுமில்லையா?” என்றான் இவன் உண்மையான வருத்தத்தோடு.
“சரி… அப்படியே இருந்து என்னத்தைச் சாதிக்க முடியும் என்கிறீர்கள்? நம்மைத்தான் முட்டாள் என்று நினைப்பார்கள். கனடாவில் கிரீன் பார்ட்டி என்று ஒன்று இருக்கிறது. அது இயற்கையை மட்டும் நம்பும் கட்சி. எத்தனை ஓட்டு அதற்கு விழும் என்று நினைக்கிறீர்கள்? கட்டிய பணம் கூட அவர்களுக்கு கிடைக்காது… இது வியாபார உலகம். சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து, உண்ணும் மருந்து மாத்திரை வரை அனைத்தும் வியாபாரம். அத்தனையிலும் சுற்றுப்புறச் சூழலுக்கு எதிரான இரசாயணப் பொருட்கள் இருக்கிறது. சுற்றுப்புறச் சூழலுக்காக வருத்தப்பட்டால் புவ்வாவுக்கு என்ன செய்வது? அப்படியே புரிந்து எதிர்த்தாலும் இந்த வியாபார உலகத்திற்கு எதிராக நம்மால் ஒற்றை விரல் கூட அசைக்க முடியாது.” என்றவள் குளிரில் சிலிர்த்தவளாக மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு,
“சரி… உங்களுடைய பேச்சுக்கே வருகிறேன்… இன்று உலகம் வெப்பமயமாவதற்கும், அது மாசடைவதற்கும் முழுமுதற் காரணம் தொழிற் சாலைகள்தான். அது எல்லாவற்றையும் உங்களால் மூட வைக்க முடியுமா? இன்று உலகை ஆள்வதே மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள்தான். அவர்களால் உருவாக்கப்படும் மருந்துகள் மாத்திரைகள் கோடிக்கணக்காகப் பூமிக்க அடியில்தான் கொட்டப் படுகின்றன. அதை உங்களால் நிறுத்த முடியுமா…? அழிந்துகொண்டு போகிற காடுகளைத் தடுத்து நிறுத்த முடியுமா? இல்லைதானே. நம்மால் பேச மட்டும்தான் முடியும் அதுலன். அதை மீறி எதுவும் செய்ய முடியாது… இதைப் பற்றிப் புரட்சியாகப் பேசும் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு இரசிக்க முடியும். இரசித்து முடித்த கையோடு இதோ…” என்றவள் சற்றுத் தள்ளி தரையில் எறியப்பட்டிருந்த சாக்லேட் கவர் ஒன்றைக் குனிந்து எடுத்து அவனிடம் காட்டி, அதை விசிறி அடித்து, “இதோ இப்படி எறிந்துவிட்டுப் போய் விடுவோம்… இதுதான் உலகம்” என்றாள் அலட்சியமாக.
அவள் சொன்னதைக் கேட்டவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. பெருமூச்சோடு நடந்து சென்றவன், நேயநறுமை விசிறி அடித்த சாக்லேட் கவரைக் குனிந்து எடுத்து பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டான். நேயநறுமை சொன்னதன் நிதர்சனமும் புரிந்தது.
அவர்களால் பேசமட்டும்தான் முடியும். இதோ கீழே இருக்கிற பிளாஸ்டிக் துண்டை எடுத்துக் குப்பையில் போட மட்டும்தான் இவனால் முடியும். இதுவே தொழிற்சாலைகளால் வெளிவரும் கழிவுகளை எப்படி நிறுத்த முடியும்? பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் செயல்படுத்துவது அத்தனை சுலபமில்லையே. அதுவும் தனி மனிதன் ஒருவன் தானாகத் திருந்தாமல் இதையெல்லாம் மாற்றுவது இயலாத காரியம். பெருமூச்சோடு ஆமோதிப்பது போலத் தலையை அசைத்தவன்,
“உண்மைதான். ஆனால்… நாம் நம்மைத் தடுக்கலாம் தானே. நாம் கவனமாக இருந்தால் நம்மைப் பார்த்து நாலு பேர் திருந்த மாட்டார்களா? செய்யும் தவறுக்கு மாற்றாக எதையாவது செய்ய வேண்டும். காடுகளை அழித்தாலும், ஒவ்வொருவரும் உணர்ந்து அதற் கேற்ற மரங்களை நடலாம்,?” அவன் சொல்லக் கிண்டலாகச் சிரித்தாள் நேயநறுமை.
“கமான்… எந்த உலகத்திலிருக்கிறீர்கள். இது சுயநலம் நிறைந்த உலகம். பணத்துக்காக என்னவும் செய்யும். அது தன்னுடைய வசதி வாய்ப்புக்காகத் தான் இயங்குகிறதே தவிர, மற்றவனைப் பற்றி யோசித்து வாழ அதற்குத் தெரியாது. நேரமும் இல்லை… நாம் யோசித்து நடந்தாலும் உலகம் நம்மைப் பைத்தியமாகத்தான் பார்க்கும்..” என்றவள் அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“அதுலன், நாம் வாழ்வது கொஞ்ச காலங்கள் தான். வாழும் வரைக்கும் நிம்மதியாக இருந்து விட்டுப் போகலாம். குறைந்தது சாகும் போது குறையில்லாமல் சாகலாம்…” என்று தோளைக் குலுக்கியவளை கீழ்கண்ணால் பார்த்தான் ஆதிய துலன்.
நேயநறுமை ஒருத்தி அல்லவே புரிய வைக்க. அவளைப் போலக் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். பிளாஸ்திக் குப்பையை நிலத்தில் போடாதே என்றால், அங்கேதான் போடுவார்கள். மனிதன் சாப்பிடும் கரண்டியிலிருந்து தூக்கி எறியும் தட்டுவரை இன்று பிளாஸ்டிக் தான். கடல்வாழ் உயிரினங்கள் இந்த பிளாஸ்டிக்கால் செத்துப் போகின்றன என்று சொன்னாலும் அதைக் கேட்க யாருக்கும் நேரமில்லை. இதில் உலகத்தை எப்படிக் காப்பாற்றுவது? பதில் சொல்ல முடியாதவனாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள,
“என்ன என் கேள்விக்குப் பதில் இல்லையோ?” என்றாள் இவள் கிண்டலாக. திரும்பி அவளைப் பார்த்தவன்,
“பதில் இல்லை என்றில்லை. அந்தப் பதிலைச் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை… நீ ஒருத்தி என்றால் சொல்லித் திருத்தலாம், பெரும்பான்மையானவர்கள் உன்னைப் போலத்தானே யோசிக்கிறார்கள்…” அவன் சொல்ல உதடுகளைப் பிதுக்கினாள் நேயநறுமை.
ஏனோ அவனுடைய பார்வை அந்தப் பிதுங்கிய உதடுகளில் நிலைத்துக் கொண்டது.
“அதைத்தான் சொல்கிறேன், நீங்கள் படுவது எல்லாம் தேவையில்லாத கவலைகள். நடை முறைக்கு சாத்தியமில்லாதவை. நாங்கள் அந்த கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டோம். யோசித்தோ, வருந்தியோ எந்தப் பயனும் இல்லை. இங்கே பணம் படைத்தவனுக்கு மட்டும்தான் வாழ அதிகாரமிருக்கிறது. நம்புங்கள்.” என்றவளிடம் பதில் சொல்லாமல் பொங்கி விழும் அருவியை வேடிக்கை பார்த்தான் ஆதியதுலன்.
உண்மைதான். பணம் படைத்தவன் தன் இலாபத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். கெட்டதையும் நல்லது என்பான். நல்லதையும் கெட்டது என்பான். இந்த நியாயம் அநியாயம் என்பதெல்லாம் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்குத் தான். என்னதான் போராடினாலும், மேல்மட்டத்தில் இருப்பவர்களின் பணம், கீழ்மட்டத்தில் இருப்பவரின் வாயை அடைத்து விடும். போராட்டம் வெறும் போராட்டமாகத்தான் இருக்கும்…’ அவன் பெரு மூச்சுடன் நினைக்கும் போதே,
“என்ன பதிலைக் காணோம். அப்படி என்றால் என்னிடம் தோற்றுவிட்டீர்களா..?” என்றாள் நேய நறுமை அவனைக் குறும்பாகப் பார்த்தவாறு.
“நாங்கள் இங்கே என்ன போட்டியா வைத்தோம்? வெற்றி தோல்வி கணிக்க?”
“இல்லையா பின்னே, விவாதம் கூட ஒரு வித போட்டிதானே…”
“ப்ச்… இது விவாதம் என்பதை விடக் கருத்துப் பரிமாற்றம் என்று எடுத்துக்கொள்ளலாம்.. என்னுடைய கருத்தை உனக்குச் சொன்னேன், உன் கருத்தை எனக்குச் சொன்னாய்… இதில் விவாதம் எங்கிருந்து வந்தது?” அவன் கேட்க, அதற்கு என்ன பதிலை சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் நேயநறுமை.
“என்ன இப்போது உன்னிடம் பதில் இல்லையாக்கும்…?” அவன் கேட்ட போது அவனுடைய உதடுகளில் புன்னகை மலர்ந்திருந்தது. அதைக் கண்டவளுக்குச் சில்லென்று இதயத்தில் சிலிர்ப்பு பிறக்க, அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள் நேயநறுமை. மீண்டும் அவளுடைய அந்தப் புன்னகையில் தடம் புரண்டான் ஆதியதுலன்.
என்னதான் அவளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவளுடைய ஒரு சில செயல்கள் அவனைக் கவர்ந்திழுத்து விடுகின்றன. அதுவும் பளிச் என்று சிரிக்கும் போது மலர்ந்து விரியும் உதடுகளும், அதற்குள் மின்னலாய் மின்னி மறையும் முத்துப் பற்களும், கூடவே விரிந்து சிரிக்கும் அந்த விழிகளும், அவனையும் சேர்த்து அவளோடு சிரிக்கத் தூண்டுவதை அவனால் தடுக்க முடிவதில்லை.
இதைத்தான், எதிர்த்துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்று சொல்வார்களோ?
அவள் பக்கமாகத் தடுமாற முயன்ற தன் மனதை இழுத்துப் பிடித்தவன், கீழே பேரலையாக விழும் அருவியை நோக்கிப் பயணித்த படகுகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
“படகில் சென்று அருவியைக் கிட்டே பார்க்கலாமா?” ஆசையும் ஆவலுமாகக் கேட்டாள் நேயநறுமை. இவனுக்கும் ஆசை இருந்தது போல,
“வை நாட்…” என்றான் தோள்களைக் குலுக்கி.
மலர்ந்து சிரித்தவள் சட்டென்று அவனுடைய கரத்தைப் பற்ற, திகைத்துப் போய்த் தன் கரத்தைப் பற்றிய அவளுடைய தளிர் கரத்தைப் பார்த்தான். இவளோ அது சற்றும் உறுத்தாமல்,
“வாருங்கள் என்னோடு…” சொன்னவள் சற்றுத் தள்ளி நின்றிருந்த தாய் தந்தையை நோக்கிச் செல்ல, இவனோ மந்திரிக்கப்பட்ட ஆடு போல அவள் பின்னால் நடக்கத் தொடங்கினான்.
“மா… நான் அதுலனை படகில் அழைத்துச் செல்லப் போகிறேன். நீங்களும் வரப் போகிறீர்களா?” ஆவலாகக் கேட்டாள்.
“ஐயோ நாங்கள் வரவில்லை. இங்கே இருக்கும் போதே இப்படித் தூவானம் அடிக்கிறது. அங்கே இன்னும் அடிக்கும்.” என்றவர் தன் மகளைக் கோபமாகப் பார்த்து,
“ஏய்… ஏற்கெனவே நீ எங்கும் போக்கூடாது என்று சொல்லித்தானே அழைத்து வந்தேன். இப்போது அங்கே போகிறேன் இங்கே போகிறேன் என்றால் என்ன அர்த்தம்…?” கோபமாக் கேட்க, ஈ என்றாள் மகள்.
“அம்மா அம்மா பிளீஸ்மா… மா மா மா பிளீஸ்மா.. அம்மா…” எப்போதும் கைக்கொள்ளும் அந்த தந்திரத்தை இப்போதும் பயன்படுத்த, பற்களைக் கடித்தார் அம்பிகா.
“சரி… கவனமாக போய்வா. தலையை மூடு..” ஆயிரத்தெட்டு அறிவுரையோடு அவளை அனுப்பி வைக்க, ஆதியதுலன் தயங்கினான்.
“நறுமை… இன்னொரு நாளைக்கு வந்து பார்க்கலாமே… இப்போது உனக்கு முடியுமா தெரிய வில்லை…” தயங்க, அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,
“எனக்கு ஒன்றுமில்லை. அம்மா சும்மா பயப் படுகிறார்கள். நீங்கள் வாருங்கள்…” என்றவாறு அவனை இழுத்துக்கொண்டு நடக்க, அவனும் வேறு வழியில்லாமல் அவள் பின்னே நடக்கத் தொடங்கினான். இதை தேவசகாயமும், அம்பிகாவும் பார்த்துவிட்டு திரும்பி ஒருவரை ஒருவர் பார்க்க, இருவரின் உதடுகளிலம் திருப்திகரமான புன்னகை மலர்ந்திருந்தது.
23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…
23 அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற…
21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…
21 ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு…
20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…
20 ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும்…