Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-21/22

21

ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு வந்தது. வியர்வையில் முகம் நனைந்து போக அவசரமாகத் தன் குழந்தையிடம் கவனம் செலுத்துவது போலத் தலையைக் குனிந்து கொள்ள, குழந்தையோ, பசியாறிய களைப்பில் உறங்கியிருந்தது.

சற்று நேர அமைதியின் பின்,

“சோ… வட் இஸ் யுவர் ப்ளான்…” என்று அந்த மௌனத்தைக் கலைத்தவாறு கேட்டவனை, நிமிர்ந்து பார்த்தவளுக்கு என்ன பதில் கொடுப்பதென்று தெரியவில்லை.

விறைத்து நின்ற அவனுடைய தோற்றம் இவளுடைய வயிற்றைக் கலக்க, மேலும் உடலில் உள்ள இரத்தம் வடிந்து சென்ற உணர்வில், ஒரு கணம் விழிகளை மூடி நின்றாள். உடலோ நடுங்கியது. தவிப்புடன் உறங்கிய குழந்தையை மார்பில் போட்டுத் தட்டிக் கொடுத்தவாறு,

“என்னுடைய திட்டம்.. குழந்தையை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு…”

“ஒப்படைத்து விட்டு…” என்றபோது உத்தியுக்தனின் உடல் ஏனோ இறுகிப் போனது. குழந்தையை அவனிடம் ஒப்படைத்து விட்டு விலகப் போகிறாளோ… நோ… நோ.. அதற்கு அவன் எப்படிச் சம்மதிப்பான்… இத்தனை தூரம் அவனைத் தேடி வந்தவளை இனி ஒரு போதும் போக விடமாட்டான். நிச்சயம் போக விடமாட்டான். ஆனால் அதற்கு முதல் அவள் எவ்வளவு தூரம் போகிறாள் என்று பார்க்கலாம்…” என்று எண்ணியவனாய் சமர்த்தியை வெறிக்க,

“உங்களிடம் ஒப்படைத்து விட்டுக் குறைந்தது நான்கு மணி நேரம் தூங்கப் போகிறேன் உதி…” என்று பெரிதாகக் கொட்டாவியை விட, இவனோ தன்னை மறந்து அவளை வாய் பிளக்கப் பார்த்தான்.

“வட்.. தூங்கப் போகிறாயா?” என்றான் நம்பாத குழப்பத்துடன்.

“எதற்கு இந்த அதிர்ச்சி… தொங்கப் போகிறேன் என்றா சொன்னேன்… தூங்கப்போகிறேன் என்று தானே சொன்னேன்… நீங்கள் பாட்டிற்கு இங்கே வந்துவிட்டீர்கள்… இரவில் அழும் உங்கள் குழந்தையோடு என்னால் சமாளிக்க முடியாதுப்பா… அதுதான் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலை உங்களது… தூங்கி உடலைத் தேற்றும் வேலை என்னது” என்று நாட்டாமைத் தீர்ப்பைக் கூற, உத்தியுக்தனுக்கு ஒரு பக்கம் பெரும் நிம்மதியும், மறு பக்கம் சிரிப்பும், கூடவே கோபமும் வந்தது.

நிம்மதி அவள் எங்கும் போகப்போவதில்லை என்பதால். சிரிப்பு இத்தனை களேபரத்திலும் பொறுப்பை அவன் தலையில் கட்டிவிட்டு உறங்கப் போவதால். கோபம், இத்தனை சோர்வாக இருப்பவள் எதற்கு அவசரப்பட்டு வைத்திய சாலையை விட்டு வெளியேறினாள். இன்னும் ஓரிரு கிழமை தங்கிவிட்டு வந்தால்தான் என்ன? எரிச்சலுடன் நினைத்தவனாய், சமர்த்தியை நெருங்கி, அவளிடமிருந்து குழந்தையை வாங்கித் தன் மார்பில் போட்டவனாய்,

“சற்றுப் பொறுத்துக் கொள், குழந்தையை அறையில் கிடத்திவிட்டு வருகிறேன். அதன் பின் உன்னை அழைத்துச் செல்கிறேன்…” என்றவன், குழந்தையையும், அதனோடு இணைந்திருந்த சிலின்டரையும் ஏந்தியவாறு அறைக்குள் சென்று குழந்தையைப் படுக்கையில் கிடத்திவிட்டு, அதற்குப் பக்கத்தில் சிலின்டரை வைத்தவன் சமர்த்தியை நோக்கி வந்து வலிக்காமல், தன் கரங்களில் ஏந்திப் படியேறத் தொடங்கினான்.

இப்போது அவளும் பெரும் நிம்மதியுடன் அவன் கழுத்தைச் சுற்றிக் கரத்தைப் போட்டு, அவனுடைய முகத்தைத் தாபத்துடன் ஏறிட்டுப் பார்க்க உத்தியுக்தனின் விழிகளும் அவளுடைய முகத்தைவிட்டு அகலவே இல்லை.

ஒவ்வொரு படியாக ஏற ஏற அவனுடைய பார்வை இம்மியும் அவள் முகத்தை விட்டு விலகவேயில்லை. குழந்தையென அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு அவளை விட்டு விலக மனமில்லாதவன் போலப் அவளுக்கு இரு பக்கமும் கரங்களைப் போட்டவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்னும் அவள் தன் கைவளைவில் இருக்கிறாள் என்று இவனால் நம்பவே முடியவில்லை. சமர்த்தியும் தன்னவனை விட்டு விலக முடியாதவள் போல அவன் கழுத்தில் மாலையாக விழுந்த கரங்களை விலக்காமல் அவனையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள்.

பரவசத்துடன் அவனுடைய விழிகளில் எதையோ தேடினாள். அந்த விழிகளில் தெரிந்த காதலின் ஆழத்தைக் கண்டு, உருகியவளாய்,

“ஒரு வேளை என்னால் எழுந்து நடக்க முடியாது போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்…?” என்றாள்.

“உனக்காய் நான் நடந்திருப்பேன்…” என்றான் கிசுகிசுப்பாய்.

“என் கரங்கள் வளங்காது போயிருந்தால்…”

“உன் கரங்களாய் நான் இருப்பேன்…”

“ஒரு வேளை உங்களுக்கு உடலால் சுகம் கொடுக்க முடியாது போயிருந்தால்…” என்றபோது அவளுடைய குரல் கம்மித்தான் ஒலித்தது. அதைக் கேட்டு நகைத்தவன்,

“காதல் சுகத்தை விட, உடல் சுகம் ஒன்றும் அந்தளவு தித்திப்பில்லை பம்கின்… உன் உயிருக்கு முன்னால், உன் பேச்சுக்கு முன்னால், எனக்கு எதுவுமே முக்கியமில்லை…” என்று அவள் முகம் நோக்கிக் குனிந்தவாறு கூற, சமர்த்தியின் கண்களில் குளம் கட்டியிருந்தது. அது கன்னத்தின் வழியாக வழிந்து செல்ல, இவனோ அந்தக் கண்ணீரைத் தன் உதடுகள் கொண்டு துடைத்தவனாய்,

“எனக்கு வேண்டியது என் தேவதை மட்டும் தான் சதி… அதைத் தவிர நான் எதையுமே வேண்டுவதில்லை. நீ சுவாசித்து விட்ட காற்றை நான் சுவாசிக்கவேண்டும், நீ நடந்த பாதையில் நான் நடக்க வேண்டும், நீ சிரிக்கும் போது நான் சிரிக்க வேண்டும்… நீ அழுதால், உன் வலியை என்னதாய் நான் உள் வாங்க வேண்டும்… இது… இது மட்டும்தான் எனக்கு வேண்டியது…” என்று கூற, முள்ளந்தண்டு கொடுத்த வலியையும் மறந்து மேலும் முடிந்த வரை உத்தியுக்தனை இறுக அணைத்துக் கொண்டவள், அழுகையினூடே அவன் உதடுகளைக் கவ்வி… விடுவித்து,

“சாரி… சாரி உதி… ரியலி ரியலி சாரி…” என்று கதறத் தன்னவளை மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் உத்தியுக்தன்.

“ஓ… பம்கின்… டோன்ட் க்ரை…” என்று இவனும் சேர்ந்து அவளுடன் அழத் தயாராக, உத்தியுக்தனின் கைப்பேசி அழைத்தது. அவசரமாகத் தன் மனைவியை விட்டு விலகியவன், தன் விழிகளை அவசரமாகத் துடைத்துவிட்டுக் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.

தயாளன்தான் எடுத்திருந்தார். உடனே சமர்த்தியை விட்டு விலகியவன்,

“இதோ வருகிறேன் சதி…” என்றுவிட்டு, கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தவாறு வெளியேறி,

“ஹலோ…” என்றான்.

“தம்பி இது நான்தான்.. வந்து.. சதி.. உங்களைத் தேடி வந்தாள்… அவள் கைப்பேசிக்கு முயன்றேன்… அது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவள் நலமாகத்தானே…” என்று முடிக்க முடியாது திணற, இவனோ,

“இங்கே அறையில்தான் படுத்திருக்கிறாள்… எதற்கு மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்… இன்னும் முழுவதுமாகச் சரியாகவில்லையே… இந்த நிலையில் எப்படித் தன்னையும் குழந்தையையும் அவள் சமாளிப்பாள். நீங்களாவது சொல்லியிருக்கக் கூடாதா?” என்று மெல்லிய கோபத்துடன் கேட்க,

 

“என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள். நானும் கேட்டுப் பார்த்தேன் தம்பி. மறுத்து விட்டாள். உங்களைப் பார்க்க வரவேண்டும் என்று ஒரே பிடிவாதம். உங்கள் மனைவியின் பிடிவாதம் உங்களுக்குத் தெரியாதா தம்பி. அதுதான் வேறு வழியில்லாமல் அழைத்து வந்தேன்… அங்கே எதுவும் பிரச்சனையில்லையே…?” என்று அவர் பெரும் அவஸ்தையுடன் கேட்க,

“இங்கே என்ன பிரச்சனை இருந்துவிடப் போகிறது தயாளன்… மறுத்தாலும் வெறுத்தாலும் அவள் என் மனைவி… அவளை வலிகள் அண்ட நான் எப்படி அனுமதிப்பேன்…” என்று கேட்டவன், பின் முகம் இளக,

“உங்களுக்கு ஒரு சத்தியமும் செய்கிறேன். உங்கள் தங்கையை இதுவரை காலமும் நீங்கள் எப்படிப் பாதுகாத்தீர்களோ, எப்படி அன்பு செலுத்தி வந்தீர்களோ, அதை விட ஒரு படி மேலாக உங்கள் தங்கையை நான் பார்த்துக் கொள்வேன். அவளைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்… நீங்கள் என்னை நம்புகிறீர்கள்தானே…” என்றான் நெஞ்சம் உருக. அதைப் புரிந்துகொண்டவராய் தயாளன் கைப்பேசியை அணைக்க இவன் மீண்டும் அறைக்கு வந்த போது, குழந்தைக்குப் போட்டியாகச் சமர்த்தி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

அதைக் காணும்போதே இவனுடைய இதயம் உருகிக் குழைந்து போயிற்று. அவனுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிவிட்டாள். காதல் என்று ஒன்றில்லை அது வெறும் மாயை என்று எண்ணியவனையே அவளுக்காய் காதலில் மருகி உருக வைத்துவிட்டாளே… என்று எண்ணிப் பாகாய் உருகும் வேளையில், அவனுடைய சின்ன உலகம் அழத் தொடங்கியது.

உடனே தன் மனைவியை விடுத்துக் குழந்தையிடம் சென்றவன், அதை வாரி அணைத்துத் தட்டிக் கொடுத்தவாறு, திரும்பி சமர்த்தியைப் பார்த்தான். நல்லவேளை உறக்கம் கலையவில்லை. உடனே தன் மகளின் பக்கமாகக் குனிந்து மார்போடு ஏந்தியவன்,

“ஷ்… ஷ்… மமா… ஸ்லீப்பிங் ஏஞ்சல்… கீப் குவைட்…” என்று அதன் காதுகளில் முணுமுணுக்க, வயிற்றிலிருந்தபோதே தந்தை பேச்சைக் கேட்ட குழந்தை இப்போது கேட்காதா என்ன? தன் சிறிய கண்களைத் திறந்து திறந்து எதையோ பார்த்தது உடலை நெளித்து, வாயை அங்கும் இங்கும் சுழித்துக் கோண, அடுத்து அதன் டயப்பர் சூடாவதை உணர்ந்தான் உத்தியுக்தன்.

‘ஓ… அதற்குத்தான் இத்தனை போராட்டமா?’ என்று எண்ணித் தன்னை மறந்து சற்றுப் பலமாகத்தான் சிரித்துவிட்டான்.

உடனே “ஊப்ஸ்…” என்றவன் நிமிர்ந்து சமர்த்தியைப் பார்க்க, எப்படிக் கிடந்தாளோ அப்படியே படுத்திருந்தாள்.

நிம்மதியுற்றவனாகத் தன் குழந்தையைப் பார்க்க மகளோ எதையோ சாதித்தது போல அவன் கரங்களில் கர்வமாய் உடலை அசைத்துக் கொண்டிருந்தாள்.

டயப்பர் மாற்றவேண்டுமே… அதற்கு எங்கே போவது. அப்போதுதான் சமர்த்தியின் தள்ளு வண்டியில் ஒரு பை இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே குழந்தையைக் கட்டிலில் கிடத்தியவன்,

“மை ப்ரின்சஸ்… ஐந்து நிமிடங்களில் வந்து விடுகிறேன்… அது வரை அழாமல் இருக்க வேண்டும் சரியா…” என்றவன் பாய்ந்து கீழே இறங்கினான். அவளுடைய தள்ளுவண்டியில் கிடந்த பையை எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்கு வரக் குழந்தை கால் கையை அசைத்தவாறு ஒரு கரத்தைத் தன் வாய்க்குள் திணித்துச் சப்புக் கொட்டிக்கொண்டிருந்தது.

அதைக் கண்ட உத்தியுக்தன் அதன் அழகில் மொத்தமாகத் தொலைந்து போனான்.

தன்னை மறந்து சிரித்தவன், தன் கைப்பேசியை எடுத்து அது சப்புக் கொட்டும் அழகைப் படம் பிடித்து அதைத் தன் கைப்பேசித் திரையில் நிரந்தரமாகப் பதிந்தவன், தொடர்ந்து டயப்பர் எப்படி மாற்றுவது என்பதை யு டியூபில் தேடி எடுத்து அதன் படி குழந்தையைத் துடைத்து டயப்பர் மாற்றிவிட்டு நிமிர, அதன் மூக்கிலிருந்த வயர் கழன்று வெளியே நின்றது. பதறியவனாக மீண்டும் அதன் மூக்கில் செருகிவிட்டுக் குழந்தையைத் தூக்கித் தன்னோடு அணைக்க, அடுத்த அரை மணி நேரம் குழந்தை தந்தையின் மார்பில் சுகமாய்த் துஞ்சியது.

இப்போது குழந்தைக்குப் பசி நேரம் போலும், அது எழுந்து சிணுங்கத் தொடங்கத் திரும்பிப் பார்த்தான். இன்னும் சமர்த்தி ஆழ்ந்து உறங்கிக் கொண்டுதான் இருந்தாள்.

சற்று நேரம் குழந்தையைத் தாக்காட்டியவன், அதற்கு மேல் முடியாமல், மனைவியை நெருங்கி,

“சதி…” என்றான் மென்மையாய். அவனுடைய அந்த ஒற்றை அழைப்பு அவள் உயிர் வரை தீண்ட, மெதுவாக விழிகளைத் திறந்தவள், முகத்திற்கு முன்பாகத் தெரிந்த தன் கணவனின் முகத்தைக் கண்டு,

“உதி…” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

“குழந்தைக்குப் பசிக்கிறது” என்றதும், முற்றாகத் தூக்கம் தொலைய, விழித்தவள்,

“உதி… வோஷ்ரூம் போக வேண்டும்.” என்றதும் குழந்தையை அருகே கிடத்திவிட்டு அவளைத் தயங்காது தன் கரங்களில் ஏந்தி அழைத்துச் சென்றவன், அவளுக்கு வலிக்காத வகையில் ஒரு அன்னையாய் தாதியாய் வேண்டிய உதவிகளைச் செய்து, மீண்டும் தன் கரங்களில் ஏந்திப் படுக்கைக்கு அழைத்துவந்து அமரவைத்துக் குழந்தையை அவள் கரங்களில் தூக்கிக் கொடுக்க, மகளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவளாய் அதன் தேவையைக் கவனிக்கத் தொடங்கினாள்.

இவனோ விரைந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளுக்குப் புகட்டத் தொடங்க, கண்கள் கலங்க அவன் உதவியை ஏற்றுக்கொண்டாள் சமர்த்தி.

22

சற்று நேரம் குழந்தையிடம் தன் கவனத்தைப் பதித்திருந்தவள், நிமிர்ந்து அவர்களையே ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த உத்தியுக்தனை ஏறிட்டாள் சமர்த்தி.

“ஏன்… என்னைத் தனியாக விட்டுவிட்டு வந்தீர்கள்… நீங்கள் இல்லாமல் நான் எத்தனை சிரமப்பட்டேன் தெரியுமா…” என்றாள் கோபமும் அழுகையும் ஒன்று சேர. இவனோ அவளுக்கு அருகாமையில் அமர்ந்தவாறே, அவளுடைய தலை முடியைக் கோதிவிட்டவாறு,

“அதற்கான காரணம் உனக்குத் தெரியாதா என்ன?” என்றான். இவளோ

“சரி புத்தி மழுங்கிப்போய்ச் சந்தேகப்பட்டேன். கோபப்பட்டேன்… தவறுதான்.. நான் சந்தேகப்பட்டால் அதைத் தெளியவைப்பது உங்கள் கடன்தானே…” என்றதும் கோதுவதை நிறுத்திவிட்டு அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“என் நிலைப்பாட்டை உன்னிடம் கூறினேன் சமர்த்தி… நீதான் கேட்க மறுத்தாய். என் பேச்சுக்கு மதிப்பில்லை என்றால், உனக்கு விளங்கப்படுத்தி என்ன பயன் இருக்கப்போகிறது. நான் இது வரை யாரிடமும் பொய் சொன்னதில்லை. அதுவும் உன்னிடம் சொல்லவும் மாட்டேன். அப்படி இருக்கையில் நீயாக ஒன்றை நினைத்து இத்தனை பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கி, நீயும் வருந்தி… என்னையும் வருத்தி… சமர்த்தி… காதலுக்கு முக்கியமாக வேண்டியது நம்பிக்கை… அது இல்லாத போது அந்தக் காதலுக்கே மதிப்பில்லை… நீ என்னை மட்டுமல்ல… என் காதலையும் சேர்த்து அவமானப்படுத்தியிருக்கிறாய்…” என்று அவன் முடிக்க, ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தவள், அந்த நிலையிலும் தன் தலையை வருடாது விலகிய அவனுடைய கரத்தைப் பற்றி மீண்டும் தன் தலையில் வைத்தவாறு,

“நான் என்ன மாயக் கண்ணாடியா வைத்து இருக்கிறேன் நீங்கள் என்னைக் காதலிப்பதை அறிந்து கொள்ள…? எப்போதாவது உங்கள் காதலை என்னிடம் சொல்லியிருக்கிறீர்களா? எதுவுமில்லை… அப்படியிருக்கும் போது நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று எப்படி நம்புவதாம்?” என்று சினத்துடன் கூறியவள் அப்போதும் நம்பாதவளாக, அவனை ஏறிட்டுப் பார்த்து, இத்தனை அநியாயம் செய்திருக்கிறேன்… அப்படியிருந்தும் நிஜமாகவே என்னை விரும்புகிறீர்களா?” என்றாள் சந்தேகம் முற்றும் மாறாதவளாக. அவனோ, ஆத்திரத்துடன் அவளைப் பார்த்து முறைத்து,

“யெஸ்… ஐ லவ் யு டாமிட்…” என்றவன் அவளை விட்டு விலகி எழுந்தவன் விரைந்து தன் அறைக்குச் சென்று கரிய நீல வெல்வெட் பெட்டியொன்றை எடுத்து வந்து அவள் முன்னால் திறந்து காட்டி, ஒற்றைக் கால் மடித்து அவளுக்கு முன்பாக அமர்ந்து,

எட்டு மாதங்களுக்கு முன்பே இதை உன்னிடம் கொடுத்து என் காதலைச் சொல்ல முயன்றேன்… ஆனால் நீ… அன்றுதான்… பெரிய அணுக்குண்டை என் தலையில் போட்டுவிட்டு விலகிச் சென்றாய்.” என்று கூற இவளுடைய முகம் வாடிப்போயிற்று.

“ஆமாம் என்னை ஜடப்பொருளாக ஒப்பிட்டு விட்டு, அந்த ஜூலியட்டை அணைத்தாற்போல நின்றால், அடடே எத்தனை நல்ல காரியம் செய்து விட்டாய் என்று அணைத்து முத்தமிடுவார்களா என்ன? அப்போது வந்த ஆத்திரத்தில் என்ன செய்கிறேன் என்று தெரியாமல், வாயை விட்டு விட்டேன். தவறுதான். நான் ஒத்துக்கொள்கிறேன்.. ஆனாலும் அப்போது நான் பட்ட அவஸ்தை வலி… எங்கே நீங்கள் எனக்கு கிடைக்காமல் போய் விடுவீர்களோ என்கிற அச்சம்… அப்படி நடக்க வைத்துவிட்டுது… அதை இப்போது நினைத்தாலும் பெரும் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது உத்தி… அன்று செருப்பால் கூட அடிவாங்க வைத்துவிட்டேன் அல்லவா… அதுதான் என்னை மிகவும் படுத்துகிறது.. அதற்காகவும் என்னை மன்னிப்பீர்களா?” என்று கலங்கிய குரலில் கேட்டவளை இறுக அணைத்துக் கொண்டவன்,

“இட்ஸ் ஓக்கேடா… உனக்காக நான் எந்த அவமானத்தையும் தாங்குவேன். ஆனால் நீ இல்லையென்றால்… என் அருகில் இல்லை என்றால்… என்னால்… ஜீரணிக்கவே முடியாது சதி… என்னால் சுவாசிக்க முடியாது… இனி ஒரு போதும்… எக்காலத்திலும் என்னை விட்டு விலகிப்போகும் எண்ணத்தை வைத்துக் கொள்ளாதே. புரிந்ததா? ப்ராமிஸ் மீ…” என்றவாறு தன் கரங்களை நீட்ட, அவன் கரத்தைப் பற்றி மார்போடு அழுத்தியவள்,

“இல்லை… சத்தியமாக இல்லை… இனி எக்காலத்திலும் உங்களை விட்டுப் போக மாட்டேன். சத்தியமாகப் போக மாட்டேன்… என்றவன், அவளுக்கு முன்பாக அந்தப் பெட்டியைத் திறந்து,

“அன்றை நாளுக்குப் பிறகு என் காதலைச் சொல்லும் தைரியம் எனக்கு வரவில்லை சதி… உன் வளைகாப்பு அன்றும் சொல்ல வந்தேன்… அன்றும் தட்டிப்போயிற்று… கடைசியில் எந்த நிலைமையில் வைத்து என் காதலைச் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா…?” என்று ஆத்திரமும் வேதனையும் போட்டி போடக் கேட்க, அவளோ மினுங்கிய வைரத்தைப் பார்த்து வாய் பிளந்து,

“ஐ… வைரம்… எனக்கே எனக்கா உதி… ஐயோ…! மிகவும் அழகாக இருக்கிறதே… இந்த வைரத்துக்காகவே உங்களை மன்னிக்கத் தோன்றுகிறதே…” என்றவள் பரபரப்புடன் தன் கரத்தை நீட்டி,

“போட்டுவிடுங்கள் போட்டுவிடுங்கள்” என்றாள். அந்த நிலையையும் மீறி உதடுகளில் புன்னகைத்தவாறு மோதிரத்தை அணிவித்தவன், அத் தளிர் கரத்தைத் தூக்கித் தன் உதடுகளில் பொருத்தி எடுத்து,

“ஐ லவ் யு சதி… ரியலி ரியலி லவ் யு… இதை எத்தகைய நிலையில் சொல்ல வைத்தாய் தெரியுமா?” என்றவனுக்குக் கண்கள் கலங்கிப் போயின. அவள் விரல்களைப் பாசத்துடன் வருடிக் கொடுத்தவாறு,

“எங்கே உன்னைத் தொலைத்துவிடப் போகிறேனோ என்கிற அச்சத்தில்… நீ சுயநினைவு இல்லாத நிலையில் என் காதலைச் சொன்னேன்… கடைசி வரை நீ என்னை நம்பவில்லை அல்லவா… எப்படி வலிக்கிறது தெரியுமா சதி… ஒவ்வொரு முறையும் என்னை நீ வீழ்த்தி மிதிக்கும்போது, உயிரே நசிந்து போகிறது தெரியுமா…” என்று வலியும் சீற்றமும் ஒன்று சேர அவன் கூறியபோது, சமர்த்திதான் உடைந்து போனாள்.

“ஐ… ஐ ஆம் சாரி உதி… எக்ஸ்ட்ரீம்லி சாரி… சத்தியமாக ஜூலியட்டிற்கும் அந்த வில்லியம் நேக்கருக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்று நான் கற்பனையில் கூட நினைக்கவில்லை உதி. ஜூலியட்டின் வாழ்க்கைக்குப் பின்னால் இத்தனை ரகசியம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவே தெரியாது…” என்று கெஞ்சியவளாகக் கூற, உத்தியுக்தனின் உடல் இறுகிப் போனது.

“இது… இது எப்படி உனக்குத் தெரியும்?” என்று இவன் ஆத்திரத்துடன் கேட்கத் தன் கண்ணீரைத் துடைத்தவள்,

“ஜூலியட்டே என்னிடம் வந்து சொன்னாள் உதி…” என்றாள் நெஞ்சம் அடைக்க. உத்தியுக்தனோ, ஆத்திரத்துடன் சமர்த்தியைப் பார்த்து?

“ஓ… அதனால்தான் என்னைத் தேடி வந்தாயா? ஜூலியட் வந்திருக்கா விட்டால், நீ என்னைத் தேடி வந்திருக்க மாட்டாய் அல்லவா… இன்னும் அதே சந்தேகக் கண்ணோட்டத்தில்தான் என்னைப் பார்த்திருப்பாய்?” என்று பெரும் ஏமாற்றத்துடன் கேட்க, உடனே மறுப்பாகத் தலையசைத்தவள்,

“இல்லை… சந்தேகம் இருந்திருந்தாலும் உங்களிடம்தான் வந்திருப்பேன்…” என்றபோது நம்பாமல் அதைப் பார்த்தான் உத்தியுக்தன்.

“நிஜம்… நான் வேறு எங்கே போவேன்… என்னதான் உங்கள் மீது கோபம் இருந்தாலும், நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாதே… அல்பேட்டாவில் நீங்களில்லாமல் எப்படிச் சிரமப் பட்டேன் என்று எனக்குத் தான் தெரியும். அத்தகைய வலியை மீண்டும் சந்திக்க நான் தயாராக இல்லை தெரியுமா? அதனால் எப்படியும் உங்களிடம் தான் வந்திருப்பேன்… ஆனால் இப்படி எல்லாம் உங்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டேன்… தினம் தினம் உங்களை வார்த்தைகளால் நோகடித்து நசுக்கியிருப்பேன்…” என்று உண்மையைக் கூற, ஒரு பக்கம் உத்தியுக்தனுக்குக் கோபம் வந்தாலும் மறு பக்கம் சிரிப்பும் வந்தது.

அதைக் கண்டு, இளகியவளாய்,

“சாரி உதி… உங்களை மிகவும் சிரமப்படுத்தி விட்டேன் அல்லவா… ஜூலியட் உண்மையை வந்து சொன்னபோது, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என்னையே எனக்குப் பிடிக்கவில்லை…” என்றவாறு உதடுகளைப் பிதுக்கி அழத் தொடங்க,

“ஹே… இட்ஸ் ஓக்கே டார்லிங்… தயவு செய்து அழாதே. இதோ பார்… கோபம் வந்தால் திட்டு, என்னை அடி.. என்ன வேண்டுமானாலும் செய்… ஆனால் அழாதே… அதை மட்டும் என்னால் தாங்க முடியாது.” என்று தன்னவளை நெருங்கி அவள் தலையைத் தன் மார்பில் பதித்தவாறு அவளைத் தேற்ற முயல, தன் அன்புக் கணவனின் மார்பில் சற்று நேரம் அழுது கரைந்தவள்,

“ஜூலியட் உண்மை சொல்லாதிருந்திருந்தால் நீங்களும் சொல்லி இருக்கமாட்டர்கள்தானே…” என்றாள் பெரும் குறையுடன்.

இவனோ அணைத்தவாறு,

“நிச்சயமாக சொல்லி இருக்க மாட்டேன்… ஆனால் காத்திருந்திருப்பேன். உன் வரவுக்காக, மனமாற்றத்துக்காக காத்திருந்திருப்பேன். அது எதனை வருடங்கள் ஆனாலும் உனக்காய் காத்தி இருந்திருப்பேன்…” என்றபோது அவனுடைய அந்த அன்பில் மொத்தமாய் உருகிப்போனாள் சமர்த்தி. இவனைப் புரிந்துகொள்ளாமல் காயப்படுத்தி விட்டோமே… துடித்தவளாய்,

“நன்றி உதி… என் வாழ்வில் அண்ணன் அண்ணி இருந்தாலும், என் வாழ்க்கையில் ஒளியைக் கொடுத்தவர் நீங்கள்… நீங்கள்… மட்டும்தான் உதி. ஆனால் உங்களுக்கு நான் செய்தவை அனைத்தும் மன்னிக்க முடியாத குற்றங்கள் தான்… அதையெல்லாம் மறந்து என்னை உயிராய் நினைத்து வாழ்ந்த உங்களுக்கு நான் என்ன செய்திருக்கிறேன்.” என்று அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மியவளைத் தட்டிக்கொடுத்தவன்,

“ஹே… ஸ்டாப் இட்… ஜெஸ்ட் ஸ்டாப் இட்… இந்த மன்னிப்பு, நன்றி இதெல்லாம் நமக்குள் வரக் கூடாது சதி… எப்போதுமே வரக் கூடாது… இதோ பார்…” என்றவன் அவளுடைய முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தி,

“என் உலகம் நீ… என் உயிர் நீ… நான் சுவாசிக்கும் காற்று கூட நீதான் சதி… நீ இல்லை என்றால் நானில்லை கண்ணம்மா… இதோ பார்… இனிமேல் இந்தக் கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் கூட வரக் கூடாது சரியா…” என்று கடிந்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகியவன், “எனக்கொரு சத்தியம் செய்வாயா?” என்றான். இவளோ குழப்பத்துடன் இவனைப் பார்த்து,

“சத்தியமா…? உதி… என்னால் எதையும் காப்பாற்ற முடியாதே…” என்று உதடுகளைக் கடித்து விடுவிக்க,

“இல்லைமா… இதை நீ செய்துதான் ஆக வேண்டும். ஜூலியட்டின் தனிப்பட்ட வாழ்க்கையை உன்னோடு வைத்துக்கொள்… எக்காரணம் கொண்டும் யாருக்கும் சொல்லாதே. அது அவளுடைய வாழ்க்கையைத்தான் பாதிக்கும்…” என்றான் மென்மையாக. இவளோ உதடுகளை இளித்துவைத்து,

“ஹீ… ஹீ… டூ லேட் உதி…” என்றாள் அசடு வழிந்தவாறு. இவனோ அதிர்வுடன் பார்க்க, இவளோ, நெளிந்தவாறு,

“அது வந்து… ஜூலியட் உண்மையைச் சொன்னாளா… எனக்கு அழுகை அழுகையா வந்ததா… அண்ணியிடமும், விதுவிடமும் சொல்லி அழுதேன் உதி. அப்புறம் என்னை அடிக்கடி பார்க்க வருவாளே தாதி… அவளிடமும் சொல்லி அழுதேன் தெரியுமா… அதைத் தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை…” என்று கூற அதிர்ந்துபோனான் உத்தியுக்தன்.

“சதி… ஏன் அப்படிச் சொன்னாய்… காட்… இது வெளியே போனால் என்னாகும்…? இது… இதனால்தான் உன்னிடம் சொல்ல மறுத்தேன்… இந்தக் காரணத்திற்காகத்தான் என் வாழ்க்கை அழிந்தாலும் பரவாயில்லை என்று ஒதுங்கினேன்… ஆனால் நீ…” என்று கோபத்துடன் சீற, இவளோ தன் தோள்களைக் குலுக்கிவிட்டுப் பசியாறிவிட்ட குழந்தையை மார்பில் போட்டுத் தட்டிக் கொடுத்தவாறு,

“என்னாகும்… அந்த நேக்கருடைய பொய் முகமூடி கிழியும்… இவனெல்லாம் முதல்வராக இருந்து என்ன கிழிக்கப்போகிறான். மனைவிக்கும் உண்மையாக இல்லை, நாட்டிற்கும் உண்மையாக இல்லை.

உங்களுக்கு எப்படியெல்லாம் குடைச்சல் கொடுத்தான். செய்தது முழுக்க அநியாயம், நல்லவன் போல என்னை வைத்தே உங்கள் வாழ்க்கையைச் சிதைத்தானே… நீங்கள் ஜூலியட்டிற்காக அவனை மன்னிக்கலாம்… எனக்கென்ன வந்தது? இவனை எல்லாம்… சும்மா விடக் கூடாது…” என்று சீறியவளுக்கு இந்தச் செய்தி வெளியே போக வேண்டும் என்பதற்காகவே தன்னைப் பார்க்க வந்த தாதியிடம் கூறியது நினைவுக்கு வர உதடுகள் மெல்லியதாய் வில்லச் சிரிப்பொன்றைச் சிந்தின. இவனோ வருந்தியவனாய்,

“சதி… நாம் நம் வாழ்வில் சரியாக இருந்தாலே போதுமானது. மற்றவர்களைத் திருத்தவோ, சரி பிழை சொல்லவோ நமக்கு எந்த உரிமையுமில்லை… அதிகாரமும் இல்லை… அதற்கு முதல் நாம் சரியாக இருக்க வேண்டும்…” என்று சொல்லிச் சினக்க, இவளோ அதை அலட்சியம் செய்தவளாய்,

“நான் ஒன்றும் இயேசுவோ, புத்தனோ இல்லை சுத்தமாக இருப்பதற்கு. நானும் சாதாரண மனுசி.

தவறு விடுன்கிற சாதாரண பெண். நேக்கர் தப்பவனாவான். தவறு செய்யாத நீங்கள் தண்டிக்கப் படும்போது, தவறு செய்த நேக்கர் எப்படி தப்பிப்பது. ம்ஹூம்… அதுதான் அவனுடைய முகமூடியைக் கிழிக்க, அவன் வைத்த முற்றுத்தரிப்பை காமாவாக போட்டுவிட்டு வந்தேன்… ஆனாலும் எப்படி உதி… ஜுலியால் வில்லியம் நேக்கரைக் காதலிக்க முடிந்தது… அவருடைய வயதுக்கும்…. இவளுடைய வயதுக்கும்… நினைக்கும் போதே குமட்டுகிறதே… போதாததற்கு அந்தாளுக்கு மனைவி வேறு… மனைவி இருக்கும்போதே இன்னொருத்திக்குக் குழந்தை கொடுப்பது எத்தனை பெரிய அசிங்கம்… சீ… சீ…” என்று அருவெறுத்தவாறு கூறியவளின் கன்னத்தைப் பற்றி அதில் உதடுகளைப் பொருத்தி எடுத்தவன்,

“அது அவர் அவர் பார்க்கும் பார்வையில் இருக்கிறது சதி… அவள் நிலையிலிருந்து பார்த்தால் அவள் செய்வது அவளுக்குச் சரியாகத்தான் இருக்கும். அதைப் பற்றி விமர்சிக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை… ஏன் என்றால்… அவர்கள் மூன்றாம் மனிதர்கள்… சோ… அவர்களைப் பற்றிய பேச்சு நமக்கெதற்கு… விட்டுவிடலாமே…” என்று மெதுவாக அந்தப் பேச்சைக் கைகழுவ நினைக்க, அதுவரை, தாயின் அரவணைப்பிலிருந்த குழந்தை சிணுங்கத் தொடங்கியது.

அழும் குழந்தையைப் புரியாமல் குனிந்து பார்த்தாள் சமர்த்தி.

குழந்தையோ உதடுகளைப் பிழிந்து உடலை நெழித்து அழத் தயாராக,

“வட் ஹப்பன்ட்?” என்றாள் குழந்தையிடம்.

உத்தியுக்தன், உடனே அவள் கரத்திலிருந்த குழந்தையைத் தன் கரத்திற்கு மாற்றி மார்பில் போட்டுத் தட்டிக் கொடுக்கப் பெரும் எவரையோடு வாந்தி எடுத்தது குழந்தை.

“ஓ காட்… குழந்தை வாந்தி எடுத்து விட்டதே…” என்று இவள் வருந்த,

உடனே குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டுத் தன் ஷேர்ட் பொத்தானைக் கழற்றியவாறு குளியலறை சென்றவன், திரும்பி வந்தபோது வெற்று மேலோடு வந்தான்.

வந்தவனைக் கண்டு திகைத்துப் போனாள் சமர்த்தி. நம்ப முடியாமல் அவனையே இமைக்காது பார்த்தாள்.

தோளிலிருந்து கரங்கள் வரை எரிந்து சிவந்த காயங்களையும் மீறி, மார்பில் குத்தி இருந்த ஜூலியட்டின் உருவத்தைக் காணவில்லை. சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியுடன், உத்தியுக்தனைப் பார்த்து,

“உங்கள் மார்பிலிருந்த பச்சைக்கு என்ன ஆயிற்று…?” என்று கேட்கக் குனிந்து பார்த்தவன்,

“ஓ… இது வா… எடுத்து விட்டேன். அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று தெரிந்த பிறகு அங்கிருந்து என்ன பயன்…? எட்டு மாதங்களுக்கு முன், நீ என்னை விட்டுப் போன பின்பு அந்தப் பச்சை என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அதைப் பார்க்கும் போது கசங்கிய உன் முகம்தான் நினைவுக்கு வரும். சோ… எடுத்து விட்டேன்…” என்று அலட்சியமாகக் கூற, அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவளாகத் தன் குழந்தையை விலக்கிப் படுக்க வைத்தவள் தன் கரங்களை விரித்து,

“இங்கே வாருங்கள்…” என்றாள் கன்னத்தில் கண்ணீர் வழிய. மறுக்காது அவளை நெருங்க, அந்தப் பெரிய உருவத்தைத் தன் பலம் முழுவதையும் திரட்டி இழுத்து அணைத்தவள், தன்னையும் மறந்து, முன்பு பச்சை குத்தியிருந்த மார்பில் தன் உதடுகளைப் பொருத்தி அங்கேயே தன் கன்னத்தைப் பதித்து,

“ஓ… உதி… ஐ லவ் யு… லவ் யு… லவ் யு… உங்களைப் புரிந்து கொள்ளாமல் இந்த நிலைக்குத் தள்ளியதை எண்ணி நான் மிக மிக வருந்துகிறேன்… ஐ ஆம் சாரி…” என்று அழுதவள், வெற்று மார்பிலேயே தன் கண்ணீரைத் துடைத்து, மூக்கை உறிஞ்சியவாறு,

“ஆனால் அன்று உங்களைப் பற்றிக் கட்டுரை எழுதினேன் அல்லவா… அதற்கு மட்டும் மன்னிப்புக் கேட்க மாட்டேன்… அது எழுதாமல் இருந்து இருந்தால் நீங்கள் எனக்குக் கிடைத்திருக்க மாட்டீர்கள் அல்லவா…” என்றவள் அவனை மேலும் அணைத்து,

“உதி… ஜூலியட் போகும் போது ஏதோ ஒப்பந்த ரத்தைப் பற்றி ஒருமுறை யோசிக்கச் சொன்னாளே… என்ன அது?” என்று கேட்டவளுடைய கரத்தைப் பற்றித் தன் உதட்டில் பொருத்தி விடுவித்தவன்,

“ப்ச்… அது ஒன்றுமில்லை… அவளும் நானும் போட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யச் சொன்னேன். அதில் கொஞ்சம் நஷ்டம் ஏற்படும்தான்… அதைப் பார்த்தால் என் உயிரானவளைப் பகைக்க வேண்டியதாகிவிடுமே… அதோடு ஒப்பிடுகையில் நஷ்டம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை சமர்த்தி…” என்றவனைத் தவிப்போடு பார்த்தவள்,

“இல்லை உதி… அதை இரத்துச் செய்ய வேண்டாம்…” என்று இவள் மறுக்க, அவளுடைய நெற்றியோடு தன் நெற்றியை முட்டியவன்,

“இல்லைடா… அது சரிப்பட்டு வராது… ஜூலியட்டோடு போட்ட வியாபார ஒப்பந்தம் இருக்கும் வரைக்கும் அவளை நான் அடிக்கடி பார்க்கவேண்டி வரும். பேச வேண்டி வரும்… அது உன்னை வதைக்கும்… நஷ்டத்தைப் பார்த்தால் என் மனைவி என்னை விட்டுத் தொலைவுக்குச் சென்று விடுவாளே.. அவளைப் பிரிந்து இருப்பது மிகவும் சிரமமாயிற்றே…” என்றவனின் மார்பில் பலமாக அடித்தவள்,

“இத்தனை பர்ப்பவர்தான் என்னை இரண்டு கிழமைகளாக வந்து பார்க்கவில்லையாக்கும்…” என்று சிலிர்த்துக்கொள்ள மெல்லியதாகச் சிரித்தவன், அவளை இழுத்துத் தன்னோடு அணைத்தவாறு,

“இல்லைம்மா… அடிக்கடி வந்தால் உனக்கு என்மீதியிருந்த சந்தேகம் மறையாது. கோபம்தான் வரும். அதை விட உனக்கு யோசிக்கவும் சற்று அவகாசம் வேண்டும் என்று நினைத்தேன். நீயாக உணர்ந்து என்னிடம் வரும் வரைக்கும் உன்னிடம் வருவதில்லை என்று முடிவு செய்திருந்தேன்… ஆனால் அதிகம் காக்க வைக்காமல் நீயாகவே வந்துவிட்டாயே.” என்றவாறு அவளுடைய மூக்கில் தன் உதடுகளைப் பொருத்தி முத்தமிட, அவன் மார்பில் சாய்ந்தவன்,

“இந்த நாள் வருமோ என்று அஞ்சியிருந்தேன் உதி… இப்போது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?” என்றவளை

“சதி…” என்றவாறு இறுக அணைத்தான். அதன் பின் அவனுடைய உதடுகள் அவசர ஆவேசத்தோடு அவள் முகம் எங்கும் பயணிக்க, அவனுடைய உதடுகளுக்கு இடம் விட்டு இணைந்து குழைந்து வழிவிட, இறுதியாக உதடுகளை நெருங்கிய நேரத்தில் நிமிர்ந்து தன்னவனைப் பார்த்தவள்,

“உதி…”

“ம்…”

“சத்தியமாக இனி உங்களைத் தவறாக நினைக்கமாட்டேன்…”

“ஐ நோ…”

“நீங்களும் ஜூலியட்டும் தனியறையில்… ஏன் படுக்கை அறையிலிருந்தால் கூடச் சந்தேகப் பட மாட்டேன்…”

“சரி… அதற்கென்ன…” என்றவாறு அவளுடைய உதடுகளை முற்றுகையிட முயல, இரு உதடுகளுக்கும் சுட்டுவிரலை வைத்துத் தடை போட்டவள்,

“அந்த ஒப்பந்தத்தை நீங்கள் இரத்துச் செய்யக் கூடாது. அப்படி ரத்து செய்தால், எனக்கு அது பெரும் குற்ற உணர்ச்சியைக் கொடுக்கும் உதி… ப்ளீஸ்…” என்று கெஞ்ச, அந்தச் சுட்டுவிரலை விலக்கியவாறு,

“இப்போது இந்தப் பேச்சு தேவையா?” என்று கடிந்தவாறு மேலும் முன்னேற,

“ம்கூம்.. இதுதான் சந்தர்ப்பம்… சொல்லுங்கள்.. அதை ரத்துச் செய்ய மாட்டேன் என்று சொல்லுங்கள்…”

“சரி… யோசிக்கிறேன்… இப்போது வழி விடு…” என்றவாறு அவசரமாய் உதடுகளைப் பற்றும் வேகத்துடன் நெருங்க,

“ம்கூம்… சரி சொல்லுங்கள்… அப்போதுதான் என்னை முத்தமிடலாம்… இல்லையென்றால் நோ… நோ… நோ…” என்று தலையாட்டி மறுக்க,

“அதிகம் படுத்துகிறாய் என்னை… சரி… அந்த ரத்தை ரத்து பண்ணித் தொலைக்கிறேன்… முதலில் உதடுகளைக் கடன் கொடு…” என்றவாறு அவளுடைய உதடுகளை நோக்கிப் போக, இப்போதும் அதைத் தடுத்தவளாய்,

“இன்னொன்றும் நீங்கள் செய்யவேண்டும்…” என்றாள் கராராய்.

“ஐயோ… நீ என்ன கேட்டாலும் சரி சொல்கிறேன். முதலில்… கரங்களை எடு…” என்று உதடுகளை மறைத்த அவள் கரங்களை விலக்க முயல, மறுப்பாகத் தலையை ஆட்டி,

“சம்மதம் சொன்னால்தான் முத்தம்… இல்லை என்றால் ம்கூம்…” என்றதும் எரிச்சலுடன் அவளைப் பார்த்தவன்,

“சொல்லித் தொலை…” என்றான் கடுப்புடன்.

“ம்…” என்று முனங்கியவள் பின் அவனைப் பார்த்து, முன்பு ஜூலியடைப் பச்சையாகக் குத்தப் பட்டிருந்த மார்பில் சுட்டுவிரலை வைத்து வட்டமாகக் கீறியவாறு,

“முன்பு ஜூலியட் இங்கே இருந்தபோது… பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது உதி… உங்கள் கம்பீரமே அழிந்து போனது போல இருந்தது தெரியுமா அதனால்…” என்றவள், அவனை நிமிர்ந்து பார்த்து உதடுகளை மென்மையாகக் கடித்து விடுவித்து,

“இங்கே… இங்கே…” என்று தடுமாற,

“சொல்ல வந்ததைச் சொல்லித் தொலையேன்..” என்றான் உத்தியுக்தன் பொறுமையற்றவனாக.

“இல்லை… அது வந்து… இங்கே என் உருவத்தை பச்சை குத்தினீர்கள் என்றால்… செம கம்பீரமாக இருப்பீர்கள் தெரியுமா… உங்கள் அழகு இன்னும் எகிறும் தெரியுமா” என்று விழிகள் மலர்த்திக் குதுகலத்துடன் கூற, உத்தியுக்தனோ நம்ப முடியாமல் தன் மனைவியைப் பார்த்தான்.

அவளோ ஆர்வமும், ஆசையுமாய் இவனைப் பார்க்க பக்கென்று சிரித்துவிட்டான் உத்தியுக்தன்.

“ஜூலியட்டின் பச்சை குத்தியிருந்தபோது என் கம்பீரம் குறைந்திருந்தது…” என்று கேட்க இவளோ அவசரமாக ஆம் என்று தலையைப் பலவாட்டி ஆட்ட,

“உன்னுடையதைக் குத்தினால் மட்டும் அந்தக் கம்பீரம் திரும்ப வந்துவிடும்…” என்று கேட்க அப்போதும் ஆம் என்பது போலத் தலையைப் பலமாக ஆட்ட, அதைக் கண்டு மேலும் நகைத்தவன், வேகமாக அவளை நோக்கிக் குனிந்து

“உனக்காக உடல் முழுவதும் உன் உருவத்தைப் பச்சையாகக் குத்துகிறேன்… போதுமா…” என்றவாறு ஆவேசத்தோடு, அவளுடைய உதடுகளை நோக்கி முற்றுகை இட்டவனுக்கு அது பூலோகம் என்பதே மறந்து போனது.

தன் மனைவிக்கு வலிக்காது ஒரு எல்லைக் கோட்டின் கட்டுப்பாட்டோடு தன் காதலின் அளவை அவளுக்கு உணர்த்தத் தொடங்கியவனை வரவேற்று, உள்ளம் உருக, உயிர் கரைய அவன் ஆலிங்கனத்தை இதமாகவே வரவேற்று அவனுடைய அரவணைப்பில் எல்லையில்லா மகிழ்வோடு தன்னைப் புதைத்துக்கொண்டாள் சமர்த்தி.

 

அந்த அணைப்பில் அவனைச் சுற்றியிருந்த முள் வேலி மெல்ல மெல்லத் தளர்ந்து இரும்புக் கவசங்கள் பிளந்து அவன் மட்டும் உயிர் கொண்டு பிறந்தான். அந்த முள்ளில் கூடத் தேன் துளி கசிய, அதைச் சுவைத்துப் பருகத் தொடங்கியவளின் அன்பில் மொத்தமாய்த் தொலைந்து போனான் அந்த அன்புக் காதலன்.

What’s your Reaction?
+1
10
+1
5
+1
4
+1
2
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

வெந்தும் தணியுமோ காதல் – 23

23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…

14 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-இறுதி அதிகாரம்

23 அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற…

2 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 21/22

21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…

3 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 20

20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…

5 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-20

20 ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும்…

7 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 19

19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம…

1 week ago