நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற எண்ணம் சிறிதும் இல்லாதவனாக, தன் கரத்தில் படிந்திருந்த அவளுடைய தளிர் கரத்தைப் பார்த்த வாறே அவளோடு நடந்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
படகிற்கான அனுமதிச் சீட்டு வாங்கும் இடத்தை நெருங்கிய போது,
“ஹேய்.. நேயா…” என்கிற ஒரு இளைஞனின் குரல் சற்றுத் தள்ளிக் கேட்க, கவனம் சிதைந்து திரும்பிப் பார்த்தாள்.
அங்கே வெள்ளை இனத்தைச் சேர்ந்த அழகான வாலிபன், இவளை விட ஒன்றிரண்டு வயது அதிகமாக இருக்கலாம். மலர்ந்த புன்னகையுடன் வர, அதைக் கண்டவள் அதுவரை பற்றியிருந்த ஆதியதுலனின் கரத்தை உதறிவிட்டு,
“ஹே… வின்சன்.. ஹவ் ஆர் யு…” என்றவள் பெரும் ஆர்ப்பாட்டமாக அவனை நெருங்கிய நேரம், அதுவரை தன் கரத்தைப் பற்றியிருந்தவளின், கை விலகியதும் அங்கே வெறுமையாகத் தெரிந்த மணிக் கட்டை ஒரு மாதிரிப் பார்த்தான் ஆதியதுலன்.
பின் அதே பார்வையோடு நிமிர்ந்து விரைந்து சென்ற நேயநறுமையை ஏறிட்டான். கூடவே அவளை நோக்கி வந்த அந்த இளைஞனையும் பார்த்தான். சட்டென்று இவனுடைய புருவங்கள், சுருங்கி விரிந்தன.
அதே நேரம், தன்னை நோக்கி வந்த இளைஞனைக் குதுகலமாக நெருங்கிய நேயநறுமை ஒற்றைக் கரத்தால் அந்தப் புதியவனை நட்போடு அணைத்து விடுவிக்க, அதைக் கண்ட ஆதிய துலனின் முகம் சட்டென்று இறுகிப் போனது. அதுவும் அந்த இளைஞனோடு பேசத் தொடங்கிய நேயநறுமைக்கு, இங்கே இவன் ஒருத்தன் இருப்பது சுத்தமாக மறந்து போனதுதான் பரிதாபமே.
இருவரும் மாறி மாறித் தங்கள் உடல் நலத்தைப் பற்றியும் படிப்பு பற்றியும் பல்கலைக் கழகம் பற்றியும் பேசிச் சிரிக்க இவனுக்கோ உள்ளே திகுதிகு என்று எதுவோ எரியத் தொடங்கியது. அதுவும் அந்த வின்சன்டின் பார்வையும், அவனுடைய பாவனையும், இவனுக்குள் ஒரு வித ஒவ்வாமையைக் கொடுக்க, அவனையும் மீறிக் கைமுஷ்டிகள் இறுகிக் கொண்டன.
இது வெளிநாடு. இங்கத்தைய பழக்க வழக்கங்கள் ஈழத்திற்கு முற்று முழுதாக வேறு பட்டது என்பது புரியத்தான் செய்கிறது. ஆனாலும் வேறு தேசம் என்பதற்காக, ஒரு இனத்திற்கே உரிய வாழ்க்கை முறையை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை மாற்றவேண்டுமா என்ன? எண்ணாம லிருக்க முடியவில்லை அவனால்.
அதுவும் அந்த இளைஞனின் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று இவனை அசைத்துப் பார்த்தது. அந்தப் பார்வையிலிருந்தது நிச்சயமாக நட்பில்லை. அதையும் தாண்டி ஏதோ ஒன்று. அதை உணர்ந்து கொண்டவனுக்கு, முள்ளின் மீது நிற்பது போன்ற உணர்வைக் கொடுக்க, அதற்கு மேல் இணைந்து இருக்கும் அவர்களின் கரங்களையும், அவர்கள் பேசும் விதத்தையும் காணப் பிடிக்காமல், சட்டென்று அங்கிருந்து விலகிச் செல்ல முயல்கையில், அவனுடைய அசைவு உணர்ந்து திரும்பிப் பார்த்தாள் நேயநறுமை.
அப்போதுதான் அவளுக்கும் ஆதியதுலனின் நினைப்பே வந்தது. நண்பனைக் கண்டதும், மனதிற்குப் பிடித்தவனை மறந்து விட்டாளே. நெற்றியில் அடித்துக் கொண்டவள்,
“அதுலன்.. ஒரு நிமிஷம்..” அவசரமாக அவனை நிறுத்தியவள், திரும்பி வின்சனைப் பார்த்தாள்.
“வின்சன்… இவர் ஆதியதுலன்… எங்கள் குடும்ப நண்பர்… அதுலன்… இவர் வின்சன்… வின்சன்டாட். நாங்கள் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம்…” என்று அறிமுகப் படுத்த, ஆதியதுலன் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான். அதே நேரம்,
“ஹாய்…” என்றவாறு வின்சன் தன் கரத்தை நீட்டினான். ஒரு கணம் தயங்கியவன், பின், மறுக்க முடியாமல் தயக்கத்துடன் அவனுடைய கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டுக் கையை இழுத்துக் கொள்ள, வின்சன் ஆதியதுலனை ஒருவித குறுகுறுப்போடு பார்த்தான். அந்த விழிகளில் நிச்சயமாக மகிழ்ச்சி தெரியவில்லை. மாறாக ஒருவித பொறாமை தெரிய, குழப்பத்தோடு நேயநறுமையைப் பார்த்தான். அவளும் ஆதியதலனைத்தான் இரசனையுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
பார்த்ததுமே வின்சனுக்கு நேயநறுமையின் மனநிலை ஓரளவு புரிந்து போனது. எத்தனை முறை தன் காதலை அவளிடம் சொல்லியிருப்பான். ஆனால் அவளோ ஒரு போதும், அந்தக் காதலை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.
“சாரி வின்சன், நாம் வெறும் நண்பர்கள்தான். நட்பாகப் பழகுவதாக இருந்தால் என்னோடு பேசு. இல்லையென்றால் பேசாதே…” என்று முகத்தில் அடித்தது போலச் சொல்லிவிட்டாள். அதற்குப் பிறகு இவனும் தொந்தரவு செய்ததில்லை. பிறகு பல்கலைக்கழகம், படிப்பு என்று இருவருமே வேறு வேறு திசைக்குச் சென்றுவிட்டார்கள். ஆனாலும் அவள் மீதிருந்த ஈர்ப்பு இப்போதும் அப்படியேதான் இருந்தது. ஆனால் இவள் அவனை மறுத்துவிட்டு, இதோ இவனிடம் மனத்தைப் பறிகொடுத்து விட்டாள் போலவே. நினைத்தவனுக்கு உள்ளே ஒரு வித வலி.
அப்படி என்னிடம் என்ன இல்லையென்று அவனிடம் மனம் சாய்ந்தாள்? ஏக்கம் எழ,
“உன்னைக் கண்டதில் மகிழ்ச்சி நேயா… பிறகு பார்க்கலாம்…” என்று நேயநறுமையின் முகம் பார்க்காமல் கூறிய வின்சன், திரும்ப எத்தனிக்க,
“ஹே… நீ தனியாகவா வந்தாய்….?” என்றாள் நேயநறுமை அக்கறையாக.
“இல்லை… என் நண்பர்களோடுதான்.” என்றான் அவன்.
“இன்னும் நண்பர்களோடுதான் சுற்றித் திரிகிறாயா?” கிண்டலாகக் கேட்டவள்,
“சரி.. நீ போ…” என்று அவனை அனுப்ப முயன்றவள், சட்டென்று அவனை நிறுத்தி, தன் கைப்பேசியை அவனிடம் நீட்டி,
“என்னையும் இவரையும் ஒரு படம் எடுத்துக் கொடேன் வின்சன்…” என்றாள்.
எனக்கு ஆள் கிடைத்துவிட்டது. தேவையில்லாமல் உன் மனத்தில் ஆசையை வைத்திருக்காதே என்று பூடகமாக அவனுக்குச் சொல்ல முயல்கிறாளோ? ஒரு கணம் முகம் வாடியவன், மறு கணம் புன்னகைத்தவாறு, அவளுடைய கைப்பேசியை வாங்கிப் படமெடுக்கத் தயாராக, இவளோ உரிமையானவள் போல, ஆதியதுலனின் கரங்களைத் தன் கரங்களில் அள்ளி எடுத்து அணைத்தவாறு அழகான புன்னகையைச் செலுத்த, அவளுடைய அந்த செயலில் அதிர்ந்து போன ஆதியதுலன், அவளைக் குனிந்து பார்க்க, அந்தத் தருணம், அந்தக் காட்சியை, நேயநறுமையின் கைப்பேசி பல முறை தனக்குள் சேகரித்துக் கொண்டது.
அதன் பிறகு வின்சனுக்கு நன்றி சொல்லி, அவன் கரத்திலிருந்த கைப்பேசியை வாங்கிக் கொண்ட நேயநறுமை, கடைசியாக அவனை அணைத்து விடுவித்துத் திரும்ப, இங்கே ஆதிய துலனின் முகம் இறுகியிருந்தது.
எதற்கு இப்படி இஞ்சி தின்ற குரங்காக முகத்தை வைத்திருக்கிறான்? குழம்பியவள்,
“சரி நீங்கள் வாருங்கள்…” என்றவாறு முன்னே செல்லத் தொடங்க, இவனோ அசையாமல் அந்த இடத்திலேயே நின்றவாறு அவளைத் திரும்பிப் பார்த்தான்.
என்ன இவன் பிடித்து வைத்த பிள்ளையார் போல ஒரே இடத்தில் நிற்கிறான்? வியந்தவாறு திரும்பிப் பார்த்தவள்,
“நேரம் போகிறது. வாருங்கள் அதுலன்…” இவள் அழைக்க, நேயநறுமையை அழுத்தமாகப் பார்த்தவன்,
“வின்சன்… வெறும் நண்பனா, இல்லை…” என்றான் ஒரு மாதிரிக் குரலில். அதைக் கேட்டதும் வியந்தவாறு அவனை ஏறிட்டு,
“புரியவில்லை…” என்றாள் அழுத்தமாக.
“ஐ மீன்… பள்ளியில் படித்த நண்பனா, இல்லை அதையும் தாண்டி…” என்றவன் எதையோ மென்று முழுங்குவது போல “மனதிற்குப் பிடித்தவனா என்று கேட்டேன்…?” குரலை இலகுவாக்கியவாறுதான் கேட்டான். ஆனாலும், அதையும் தாண்டி அவனுடைய குரல் இறுகிப்போயிருக்க, ஒரு கணம் அவனை இமைக்காமல் பார்த்தாள் நேயநறுமை. இறுகிய முகமும், அழுத்தமான உதடுகளும் அவளுக்கு எதையோ புரிய வைக்க முயன்றது.
“ஆர் யு ஜெலஸ்…?” அவள் கேட்க, அதிர்ந்தான் ஆதியதுலன்.
“என்னது? பொறாமையா? எனக்கா? எதற்காகப் பொறாமைப்படவேண்டும்?” அவசரமாக அவன் மறுத்தாலும், ஏனோ அவளுடைய விழிகளை அவனால் பார்க்க முடியவில்லை. அவனுடைய முகத்தையே பார்த்திருந்த நேயநறுமையின் உலகம் சட்டென்று மலர்ந்தது.
ஆமாம், அவன் நிச்சயமாகப் பொறாமைப் படுகிறான். அவன் முகம் கறுத்து, இறுகி, ஒரு மாதிரித் தெரிகிறது. நிச்சயமாக அது பொறாமையால் வந்த கோபம்தான். அப்படியென்றால் அவள் மீது அவனுக்கு ஆர்வம் இருக்கிறது என்றுதானே பொருள்.
தன்னையும் மீறி முகம் மலர்ந்து சிரிக்க, அவனை நோக்கிச் சென்றவள்,
“நீங்கள் நினைப்பது போல எதுவுமில்லை. படிக்கிற காலத்தில் வின்சனுக்கு என் மீது ஆர்வம் இருந்தது. என்னை விரும்புவதாகச் சொன்னான்…” அவள் முடிக்கவில்லை, கொலைவெறியோடு நிமிர்ந்தவன் திரும்பி வின்சனைத் தேட, அவனோ நண்பர்களோடு அடுத்த பக்கமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். ஆத்திரத்தோடு நிமிர்ந்து இவளைப் பார்க்க,
“ப்ச்… எனக்குத்தான் அவன் மீது ஆர்வம் வரவில்லை. முடியாது என்று சொல்லிவிட்டேன்…” என்றாள் புன்னகையோடு. அதுவரை எகிறியிருந்த இரத்த அழுத்தம் கொஞ்சமாகத் தணிந்தது அவனுக்கு. அத்தனை நேரம் இறுகியிருந்த முகம் இளகிப்போகத் தன்னையும் மறந்து ஒரு மூச்சை வெளிவிட்டவன்,
“நினைத்தேன்…” என்றான் முணுமுணுப்பாக. அவளோ முன்னால் போகும் வரிசையோடு நடந்தவாறே,
“ப்ச்.. ஆனால் என் மறுப்பை வின்சன் கேட்கத் தயாராக இல்லை. திரும்பவும் தன் விருப்பத்தைச் சொல்லிக்கொண்டேயிருந்தான்…” மீண்டும் அவன் இரத்த அழுத்தத்தை எகிற வைக்க, இப்போது இவள் அனுமதிச்சீட்டு வாங்கும் இடத்தில் வந்து நின்றிருந்தாள். பணத்தைக் கொடுத்து இருவருக்குமான சீட்டை வாங்கி உள்ளே நுழைய, இவனோ கடுப்போடு அவள் பின்னே நடந்தவாறு,
“பிறகு என்ன நடந்தது?” என்றான் எரிச்சலாக. இவளோ புரியாமல் அவனைப் பார்த்து,
“எது என்ன நடந்தது?” என்றாள்.
“அதுதான், அந்த வின்சன்… உன்னைத் தொல்லை செய்தான் என்றாயே…” இவன் முனங்க, சிரித்தவள்,
“தொல்லையெல்லாம் செய்யவில்லை. தன் ஆசையை வலியுறுத்தினான். ஆனால் உங்களுக்குத் தான் என்னைப் பற்றித் தெரியுமே. முடியாது என்றால் எப்போதும் முடியாதுதான். அவனுக்கு வருத்தம் தான். ஆனாலும் இப்போது அவன் என் நண்பன்.” என்றவள், சட்டென்று நின்று, கைப்பேசியைத் தூக்கித் தன்னையும், தன் பின்னால் நின்றிருந்த ஆதியதுலனையும் சேர்த்து செல்ஃபி எடுத்தாள்.
“ஏன் உனக்கு அவனைப் பிடிக்காமல் போச்சு? அழகாக, கம்பீரமாக வேறு இருக்கிறான்…” அலட்சியமாகக் கேட்பது போல இருந்தாலும், அந்தக் கேள்வியில் அறியும் ஆவல் நிறையவே இருந்தது. அவளோ தோள்களைக் குலுக்கிவிட்டு,
“தெரியவில்லை. ஏனோ அவனைக் காதலனாக ஏற்றக்கொள்ள முடியவில்லை…” சொன்னவள், “இப்போது கூட அவனுடைய விழிகளில் ஆர்வம் தெரிந்தது. அதுதான் அவனை வைத்தே நம் இருவரையும் படம் எடுக்க வைத்தேன். இப்போது என் மறுப்பு தெளிவாக அவனுக்குப் புரிந்திருக்கும்…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே படகு நெருங்கி விட்டிருந்தது.
ஆக வின்சனுக்கு காட்டத்தான் அவனுடைய கரங்களை அணைத்துப் பிடித்தவாறு போஸ் கொடுத்திருக்கிறாள். மற்றும்படி எந்த எண்ணமும் அவளுக்கில்லை… நினைத்தவனுக்கு உள்ளே தீயின் வெப்பம். என்ன என்று சொல்ல முடியாத தவிப்பு. பற்களைக் கடித்து எதையோ சொல்ல வாய் எடுத்த நேரம், இருவருக்கும் மஞ்சள் நிறத்தில் ரெய்ன்கோட் வழங்கப் பட்டது.
அதற்கு மேல் எதையும் பேச முடியாமல், அதை வாங்கி அணிந்துகொண்டு அவளோடு நடக்கத் தொடங்க, அவளும் அவனுடைய தோளோடு தோள் உரச நடக்கத் தொடங்கினாள்.
அங்கிருந்த உதவியாளர், தன் கரங்களை நீட்டி நேயநறுமையைப் படகில் ஏற்ற முயல, சட்டென்று தோன்றிய அந்தக் குறும்புத் தனத்தில் தடுமாறுவது போல அவன் பக்கம் சாய, அவள் பின்னால் நின்றிருந்த ஆதியதுலன், சட்டென்று அவளது இடையைப் பற்றி ஏற உதவி செய்துவிட்டுத் தானும் பாய்ந்து படகில் ஏறிக்கொள்ள, அவன் பற்றித் தூக்கியதில் ஏற்பட்ட கிளுகிளுப்பிலும் மகிழ்ச்சியிலும், தன்னை மறந்து புன்னகைத்தவாறு திரும்பி ஏறி வந்தவனைப் பார்த்து இரசித்தாள்.
அவளுடைய சிரிப்புக்கு அர்த்தம் புரியாதவனாக,
“ஏன் சிரிக்கிறாய்?” அவன் வியந்து கேட்க, சிரமப்பட்டு தன் சிரிப்பை அடக்கியவளாக,
“ஒ.. ஒன்றுமில்லை…” என்றவள் அவசரமாகத் தன் பார்வையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள்.
‘நீ பற்றித் தூக்கவேண்டும் என்றுதான் விழுவது போல நடித்தேன் என்று சொன்னால் என்ன சொல்வான்? எதுவும் சொல்ல மாட்டான். ஆனால் நத்தை தன் ஓட்டுக்குள் பதுங்குவது போல இவனும் பதுங்கிக் கொள்வான். நினைத்து மேலும் சிரித்தவள், திரும்பி ஆதியதுலனைப் பார்த்தாள்.
“சீக்கிரம் வாருங்கள் அதுலன்… இன்று சனிக் கிழமை என்பதால் நிறையக் கூட்டமாக இருக்கிறது. அத்தனை பேரும் ஏறி வருவதற்குள் முன்பக்கமாகப் போய் நிற்கலாம்…” சொன்னவள், வேகமாக முன் பக்கம் விரைய, அவளுடைய போதாத நேரம் ஏற்கெனவே பயணிகள் நல்ல இடங்களை எல்லாம் பிடித்திருந்தார்கள்.
ஒரு கணம் முகம் வாடிப் போனாள் நேயநறுமை. எப்போதும் முன்பக்கமாக நின்றால் காட்சிகள் மிக அற்புதமாக விரியும். யோசனையோடு திரும்பிப் பார்க்க, சற்றுத் தள்ளி வின்சன் தன் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதைக் கண்டவளின் விழிகளில் மின்னல் வெட்டியது.
பளிச் என்று சிரித்தவள்.
“என் கூட வாருங்கள்…” என்று விட்டுத் துள்ளிக் கொண்டு விரைந்தவள், குறுக்காக வந்த மானிடர்களை மோதிக்கொண்டு வின்சன் நின்ற இடத்திற்கு வந்து நின்றாள்.
“ஹே… வின்சன்..” என்றதும் திரும்பிப் பார்த்தான் வின்சன். இவளைக் கண்டதும்,
“ஹே… நீயும் இந்தப் படகிலேயா வருகிறாய்…?” என்றான் மகிழ்ச்சியாக.
“இல்லை என்றால் என்ன செய்வாய்…” என்று கேட்டுச் சிரித்தவள், அவனுடைய மற்ற நண்பர்களையும் பார்த்து நட்பாகச் சிரிக்க, வின்சன் இவளை அவர்களுக்கு அறிமுகப் படுத்தினான்.
சற்று நேரம் இளையவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த நேரம், ஆதியதுலன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு, சற்றுத் தள்ளி நின்றவாறு இவர்களையே பார்த்து நின்றிருந்தான்.
அவனால் அந்த இளைஞர் பட்டாளத்தோடு இணைந்திருக்க முடியவில்லை. அவனுக்கெல்லாம் இப்படி அணைத்தல், வாய்விட்டு சிரித்துப் பேசுதல் அதெல்லாம் புதிது. சொல்லப் போனால் தெரியாததும் கூட. அதனால் தயங்கி நின்றிருக்க இப்போது திரும்பி ஆதியதுலனைப் பார்த்தவள்,
“ஏன் தள்ளி நிற்கிறீர்கள். வாருங்கள். இந்த இடத்திலிருந்து அருவியைப் பார்க்க மிக அழகாக இருக்கும் …” என்று கூற, இவனோ தயக்கத்தோடு,
“இல்லை. நான் இங்கேயே நின்று பார்க்கிறேன்” என்றான்.
எரிச்சல் கொண்டவளாக, சட்டென்று அவனை நெருங்கி இழுத்து வந்து தன் அருகே விடுவித்து, அருவியைப் பார்க்கத் தயாராகிய நேரம், வின்சன்டின் இடத்தை இவள் முழுதாக முற்றுகையிட்டுத் தனதாக்கியிருந்தாள்.
கடைசியாகத் தாம் ஒதுக்கப்பட்டதைக் கூட உணராமலே தள்ளி நின்று அருவியை வேடிக்கை பார்க்கத் தொடங்கியது வின்சன்ட் குழு.
இவளோ வெற்றிக் களிப்போடு திரும்பி ஆதிய துலனைப் பார்க்க, அவனோ இது எதைப்பற்றியும் உணராமல், இவளை விட்டு ஓரடி பின்னால் தள்ளி நின்றவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய அந்த விலகலைக் கண்டவளுக்கு எரிச்சல்தான் வந்தது.
இருக்கிற இடைவெளியில் யாராவது புகுந்து விட்டால் என்ன செய்வது? தள்ளி நின்றிருந்த ஆதியதுலனைப் பார்த்து, கண்களாலேயே கிட்டே வாருங்கள்…’ என்று அழைக்க, அந்த சங்கேத மொழி புரியாமல் இவன் திருத் திரு என்று விழித்தான்.
தான் சொன்னதை அவன் புரிந்துகொள்ள வில்லை என்றதும், எரிச்சல் பிறக்க, அவன் பக்கமாகச் சரிந்தவள் அவனுடைய கரத்தைப் பற்றி ஒரு இழுவை இழுக்க, அந்த நேரம் பார்த்துப் படகு புறப்படுவதற்குத் தயார் என்பது போல ஒரு குலுக்குக் குலுக்க, அதை எதிர்பாராத ஆதியதுலன் சமநிலை தவறிப் போனான்.
என்னதான் முயன்றும் தன்னைச் சமநிலைப் படுத்த முடியாமல் மொத்தமாக அவள் மீது விழப் போக, இருவருமாக விழப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்ட நேயநறுமை, அவனுடைய மேலாடையை ரெயின்கோட்டோடு சேர்த்துக் கசக்கிப் பற்றி அவனை நிலை நிறுத்த முயன்று தோற்று அவனோடு தள்ளுப்பட்டுச் சென்று தடுப்புக் கம்பியின் மீது மோதி நிற்க, ஆதியதுலனும் விழுந்த வேகத்தில் அவளை நசித்தவாறு அவளுக்கு இரு பக்கமும் கரங்களைப் போட்டு, கம்பித் தடுப்பை அழுந்தப் பற்றி அவளைச் சிறைபிடித்து நின்றிருந்தான்.
வெளியே பொங்கும் நயகரா அன்னை அள்ளித் தெளித்த ஊசிக் குளிரில் உடல் விறைத்திருந்த நேரத்தில், அவனுடைய ஆண்மை நிறைந்த கடியத்
தேகம் அவள் மென்னுடலோடு முட்டிய அந்த முகூர்த்த தருணத்தில், நான்கு விழிகளும் சங்கமித்து ஒன்றை ஒன்று கவ்விக் கலந்திட்ட அந்த அற்புதத் தருணத்தில், சரியாகக் காமன் வீசிய பாணம், இருவரையும் தாக்கிய அந்த நொடியில், உலகம் தன் செயற்பாட்டை நிறுத்திக் கொண்டது அவர்களுக்கு.
அந்த அழகிய பெண்மையின் மென்மை சொல்லிக் கொடுத்த பாடத்தை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து கொண்டவனுக்கு வாயில் உமிழ்நீர் சுரந்தது. அதுவும் மிக நெருக்கத்தில் தெரிந்த அந்த செழித்த முகமும், கிள்ளத் தூண்டும் கன்னங்களும், நீர்த் துளி பட்டு மினுமினுத்த அழகிய உதடுகளும் என்று அவனை மதிமயக்கச் செய்திருக்கும் அந்தப் பேரழகியைத் தன் கூரிய விழிகள் கொண்டு சிறை பிடித்தான் அந்த ஆட்டநாயகன்.
அந்தக் காந்த விழிகள் அவளிடம் என்னதான் சொல்ல முயல்கிறது. அது ஏன் அவளை இப்படிக் கவர்ந்த இழுக்கிறது. ஐயோ அந்த விழிகளுக்குள் விழுந்து கரைந்து அவன் இதயத்திற்குள் நுழைவது போலத் தோன்றுகிறதே..! இந்த நெருக்கம் கூடப் போதாது என்று மனது சொல்கிறதே. இன்னும் இறுக்கமாக என்னை உன்னுள் புதைத்துக் கொள் கண்ணாளா. உன் மூச்சை நானும், என் மூச்சை நீயும் சுவாசிக்கும் நெருக்கத்தில் என்னை எடுத்துக் கொள். நம் உடல் சூடு இரண்டறக் கலந்து ஒன்றாக மாறும் வகையில் இறுக அணைத்துக் கொள்…! அன்பே வா…! என்னை எடுத்துக்கொள்…! மொத்தமாய் கரைவோம்…! என்னுள் நீயும், உன்னில் நானுமாய் சுகிப்போம்…! இதயம் உருகத் தித்திப்போம்…’ அவன் மீது பைத்தியம் கொண்ட மனது பிதற்றிக் கொண்டது.
அதே நேரம் ஆதியதுலனும் தன்நிலை கெட்டவனாகத் தன் உடலால் அந்த மென்தேகத்தை உணர முயன்றான். ஆண்மைக்கே உரிய உறுதியான உடல், அந்தமென் தேகம் சொல்லிக் கொடுத்த பாடத்தில் சிலிர்த்துப் போக, இடம் பொருள் ஏவல் அனைத்தையும் மறந்தவனாக அவளை மேலும் நெருங்கி நிற்க முயன்றான். அந்த அழகிய செழித்த முகம், அவனை வா.. நெருங்கி வா… என்று அழைப்பது போலத் தோன்ற, அந்த நீண்ட பெரிய விழிகளைப் பார்த்தவாறே அவள் முகம் நோக்கிக் குனியத் தொடங்கினான்.
உள் மனதோ, இது தவறு விழித்துக்கொள் என்று அவனுக்குக் கட்டளையிடவே செய்தது. ஆனால் போதை உட்கொண்டவன் போல, உணர்ச்சிகளைத் தொலைத்தவனாக அவளை முழுதாக எடுத்துக் கொள்ளும் வேகத்தில் அவளுடைய முகம் நோக்கிக் குனிந்தான் ஆதியதுலன்.
இதோ அவனுடைய உதடுகள் மெல்ல மெல்ல அவளை நெருங்கி வர முயன்ற நேரம், இரண்டு இதழ்களும் ஒன்றை ஒன்று முட்டி, மொட்டவிழ்ந்து மணம் பரப்பும் நேரம், மீண்டும் ஒரு குலுக்கலில் பின்னால் இழுக்கப்பட்டான் ஆதியதுலன். நல்ல வேளை அவன் இரும்புக் கம்பிகளைப் பற்றி இருந்ததால், பின்னால் சென்று விழாமல் தப்பித்தான். அதே போல அவன் கரங்களில் சிறைப்பட்டிருந்த நேயநறுமையும், அவன் உடலோடு சேர்ந்து இழுபட்டு அவன் மீது சாய்ந்தவாறே நின்றிருந்தாள்.
ஐயோ…! இது என்ன கொடுமை. முதன் முறையாக இரும்பும் காந்தமும் ஈர்க்கப்பட்ட நேரம், காரமும் இனிப்பும் கலக்க முயன்ற தருணம், நெருப்பும் நீரும் இணைய முயன்ற நொடி, காமனின் அம்பு தூது வந்த வேளை இப்படி, காலம் காலை வாரிவிட்டதே.
இருவருமே அந்தப் படகின் குலுக்கலில் சுயம் பெற்றவர்களாகத் திடுக்கிட்டுப் போய் ஒருவரை ஒருவர் பார்க்க, இப்போது அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருவரின் விழிகளும் பெரிதாய் விரிந்தன.
அப்போதுதான் அவனுக்கும் தான் இருக்கும் நிலையே தெரிந்தது. சங்கடத்தோடு அவளைப் பார்த்தவன், அவசரமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்து விலகத் தொடங்க, இவளோ, சற்று முன் நடக்க இருந்த சம்பவத்தை நினைத்து அதிர்ந்து போனவளாகச் சட்டென்று திரும்பி நின்று பொங்கும் அருவியை வெறித்துப் பார்த்தாள்.
அதே நேரம் அவளை விட்டு விலக முயன்ற ஆதியதுலன், பின்னால் நின்றிருந்த வின்சன்டைக் கண்டதும் சட்டென்று நின்றான். வின்சன்ட் இன்னும் அவளைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
இவன் விலகிச் செல்ல, அந்த இடத்தை வின்சன்ட் நிரப்பிக் கொண்டால்? உள்ளே பொறாமைத் தீ பொங்கி எழ, சட்டென்று திரும்பி மீண்டும் அவளை அணைத்தாற் போல அவளுக்கு இரு பக்கமும் கரத்தைப் போட்ட ஆதியதுலன் திரும்பி வின்சட்டை அழுத்தமாகப் பார்த்தான்.
அவனுடைய பார்வையில் என்ன கண்டு கொண்டானோ, உடனே தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மறு பக்கம் செல்ல, நேய நறுமையோ இவனுடைய அந்த செயலில் மீண்டும் கிளர்ந்தெழுந்தாள்.
என்னதான் தன் உடல் இவள் மீது படக் கூடாது என்று அவன் நாகரிகமாகத் தள்ளி நின்றிருந்தாலும் பட்டும் படாமலும் உரசும் அவன் தேகமும் அவனுடைய உடல் சூடும், அவனுக்கே உரித்தான ஆண்மை வாசமும் அவளைத் தன்னிலை இழக்கவே செய்தது. அந்த ஒரு நொடியில் நயாகராவும் காணாமல் போக, உலகம் தன் சுழற்சியை நிறுத்திக்கொள்ள, அங்கே அவளும் அவனும் மட்டும் தனித்திருக்க, அண்ட சராசரம் அழகாய் மலர்ந்தது.
அந்தச் சுகத்தில் தன் விழிகளை மூடியவள், அவனை முழுவதுமாகத் தனக்குள் உள்வாங்க முயன்றாள். இதம்… இதம்… இதம்.. அவன் உடல் இதம், அவன் உடல் சூடு இதம், அவன் அருகே நிற்பது கூட இதம். இதோ அவளைத் தொட மறுத்து விலகி இருந்தாலும் அந்தக் கரங்கள் கொடுக்கும் பாதுகாப்பு இதம்.
ஆ… உலகில் எங்குச் சென்றாலும் இந்த இனிமை கிடைக்குமா? முன்னால் நுரை பொங்கப் பாய்ந்து விழும் நயகரா அருவிபோல அவள் உள்ளத்திலும் காதல் பொங்கி… வழி… என்னது… காதலா? திடுக்கிட்டு விழிகளைத் திறந்தாள் நேயநறுமை.
காதலா? அவளுக்குள் காதல் பூத்து விட்டதா? அதுவும் அவன் மீது? நம்ப முடியாமல் நயாகரா அருவியை வெறித்தவளுக்கு இதயத்தின் படபடப்புக் காதுகளுக்குக் கேட்டது.
இப்போதுதான் மெல்ல மெல்ல அவளுக்குத் தன் நிலை புரியத் தொடங்கியது. எப்போதும் அவனைப் பார்த்திருப்பதில் சுகம். அவனைத் தொட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்கிற ஏக்கம். அவன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற வெறி. அவன் விட்டுச் சென்ற காற்றை மட்டும் சுவாசிக்க எழும் ஆர்வம். அவன் அருகே இருந்தால் மட்டும் தோன்றும் பாதுகாப்பு. இவ்வளவு ஏன், இரவின் தனிமையில் எழும் வயது உணர்ச்சிக்குத் தீனியாக அவன் அருகாமையை மட்டும் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் தேகம்… இது எல்லாம் காதலின் அறிகுறிதானே… இதை எப்படி உணராமல் புரியாமல் கிடந்தாள்? அழகன், ஆடம்பரமானவன் என்பதால் ஈர்க்கப்படுகிறோம் என்றுதானே நினைத்தாள். இல்லை… நிச்சயமாக இது வெறும் ஈர்ப்பு அல்ல. அதையும் தாண்டிய ஒன்று… அது இப்போதுதானே புரிகிறது…’ நினைத்த மாத்திரத்தில் அவளுடைய தேகம் சிலிர்த்துப் போனது. அந்த அழகிய உணர்வைத் தாள முடியாமல் மூச்சே அடைத்தது. இதயம் காதல் பெருக்கால் கனத்தது. காதல் இத்தனை சுமையா. இதமான சுமை…
கடவுளே நான் காதலிக்கிறேன். அதுவும் இரண்டு வாரம் கூடச் சரியாகப் பழகாத ஒரு ஆண்மகனைக் காதலிக்கிறேன். இது என்ன விந்தை? பல வருடங்கள் ஒன்றாகப் படித்த வின்சன் கேட்ட போது வெறுத்து ஒதுக்கிய மனம், வெறுத்து ஒதுக்கிய இவனைக் காதலிக்கிறது என்றால், இதை என்னவென்று சொல்வது? இத்தனைக்கும், மொழி, நடை உடை பாவனை, பழக்க வழக்கம், சிந்தனை, இப்படி எதிலுமே அவளுக்குப் பொருத்தமில்லாதவன். ஆனால்… அவனை இந்த மனது விரும்புகிறது. அவனை மட்டும்தான் விரும்புகிறது. இதற்கு என்ன அர்த்தம்? நினைத்தவளுக்கு, இன்னும் தான் அவன் மீது காதலில் விழுந்ததை நம்பவே முடியவில்லை. படபடத்த இதயத்தின் மீது கரத்தைப் பதித்தவளுக்கு உடல் நடுங்கியது. தொண்டை வறண்டது.
‘எப்போது அவன் மீது காதலில் விழுந்தேன்? அவனைக் கண்ட அந்த நொடியிலா? அப்போது மனது படபடத்ததே…’ தன்னையே கேட்டவளுக்கு இல்லை என்றுதான் பதில் வந்தது.
நிச்சயமாக அவனைப் பார்த்த அந்த நொடியில் காதல் வரவில்லை. அப்படி என்றால் எப்போது வந்தது? பிறகா? அவன் மீது மோதினேனே அப்போதா? அன்று அவன் மடியில் விழுந்த போது காதல் வந்ததா? எப்போது மயங்கினேன்?’ தன்னையே அலசியவளுக்கு பளிச் என்று அது நினைவுக்கு வந்தது.
‘இல்லை, இது இப்போது நேற்றுப் பிறந்த காதலில்லை. அவனைப் பார்ப்பதற்கு முன்பே தோன்றிய காதல்… ஆமாம்… சிறுவயதிலிருந்தே அவன் பெயரைச் சொன்னாலே எனக்குள் புதுவித மாற்றம் நிகழ்வது நடக்கத்தானே செய்தது. அவன் பெயரைக் கேட்பதில் எத்தனை ஆனந்தம் எனக்கு. அவனைப் பற்றித் தாய் புகழும்போது என்னையே புகழ்வது போல உணர்வேனே. அன்றே இந்தக் குட்டி இதயத்தில் அவன் புகுந்துவிட்டான். பின்னால், என்னை விட, அம்மா அவனை அதிகம் இரசிக்கிறாள் என்பதில் ஏற்பட்ட பொறாமையில்தானே அவனை வெறுக்க ஆரம்பித்தேன். அம்மாவுக்கு என்னை விட அவன் மீதுதான் அன்பு அதிகம் என்பதால் பிடிக்காமல் போயிற்று என்று நினைத்தேன்… ஆனால் தான் நேசிப்பதைவிட, தாய் அவனை அதிகம் நேசிப்பது பிடிக்காமல்தான் அவன் மீது வெறுப்பை வளர்த்திருக்கிறேன் என்று இப்போதுதான் தெரிகிறது. நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, விதிர் விதிர்த்துப் போனாள் நேயநறுமை.
‘காட்… ஐ ஆம் இன் லவ் வித் ஹிம்… அதுவும் இன்று நேற்றுப் பிறந்த காதலில்லை. எப்போது நினைவு தெரிந்ததோ, எப்போது அவனைப் பற்றி அறிந்து கொண்டாளோ, அந்தக் கணமே பிறந்த காதல். அது தெரியாமல், அவனை வெறுப்பதாக நினைத்து…” கண்களில் கண்ணீர் கோர்க்க, முகம் மலர, உதடுகள் நடுங்க, அவன் மீது தான் கொண்ட காதலை உணர்ந்த தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாத அழகிய தருணமாக மாறிப் போக விழிகளை மூடினாள் நேயநறுமை. சட்டென்று இரு துளிக் கண்ணீர் அவள் கன்னத்தில் வடிந்து செல்ல அதிர்ந்து போனாள் கோதையவள்.
தன்னையே நம்பாதவளாகக் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தாள். நயகரா அன்னை தூவிய நீர்த் துளியோடு அவளுடைய ஒரு துளிக் கண்ணீரும் கலந்து அவள் கரங்களில் ஒட்டிக்கொள்ள விழிகள் ஆச்சரியத்தில் மலர்ந்தன.
‘அழுகிறேனா? நான் அழுகிறேனா… அது எப்படிச் சாத்தியம்?’ நம்ப முடியாத அதிர்வுடன் அந்தக் கண்ணீரையே வெறித்தாள் நேயநறுமை.
அவளுக்கு நினைவு தெரிந்து சொரியும் முதல் கண்ணீர்த் துளி அது. அந்தக் கண்ணீர் துளி பிறக்கும் போது அவளுக்கு வலிக்கவில்லை, கசக்கவில்லை, வெறுப்பைக் கொடுக்கவில்லை. பதிலுக்குத் தித்திக்கச் செய்கிறது. சிலிர்க்க வைக்கிறது. புதிதாய் பிறந்தது போலத் தோன்றச் செய்கிறது.
காதல் இத்தனை அழகானதா என்ன? ஐயோ… தேகம் முழுவதும் இதம் பரவிச் செல்கிறதே. அடிவயிற்றில் சிலிர்த்துப் பூக்கிறதே. அங்கிருந்து புறப்பட்ட பட்டாம்பூச்சிகள் இதயத்தில் கூடாரமிட்டுச் சிறகைப் படபவென்று அடிக்கிறதே. புத்தி வேறு அதற்குத் தீனி போட்டு வளர்க்கச் செய்கிறதே… அதீத காதல் பெருக்கின் வேகத்தில், தேகம் நடுங்கத் தொடங்க, கால்கள் துவள, சட்டென்று கம்பியை இறுகப் பற்றித் தன்னை நிலை நிறுத்த முயன்ற நேரம் அவளுடைய கரம் ஆதியதுலனின் கரத்தைத் தொட்டுக்கொண்டது.
கம்பீரத்தை அள்ளி எடுத்த மாநிறக் கரங்கள். அந்தக் கரங்கள் காதலோடு அவள் தேகத்தைத் தொட்டால் என்ன செய்யும்? அவளை ஆரத் தழுவி வருடினால் எப்படி இருக்கும்? நினைப்பே போதை கொள்ளச் செய்ய, அவன் கரத்திற்குப் பக்கமாக இருந்த தன் கரத்தைத் தூக்கி அந்தக் கம்பீரக் கரத்தின் மீது வைத்தாள் நேயநறுமை.
சட்டென்று மின்சாரம் அவளுக்குள் பாய, அதுவரை குளிர்ந்த தேகம் சூடேறித் தகித்தது.
அதே நேரம் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தவனும் ஒரு வித தவிப்போடுதான் நின்றிருந்தான்.
இதுவரை இத்தனை நெருக்கத்தில் எந்தப் பெண்ணோடும் இருந்ததில்லை. முதன் முறையாக நேயநறுமையின் நெருக்கம் அவனுக்குள் பல மாற்றத்தை ஏற்படுத்தவே செய்தது..
பஞ்சும் நெருப்பும் அருகேயிருந்தால் பற்றிக் கொள்ளும் என்பார்களோ. அவள் தேகத்தை உணரும் என் தேகம் இப்படித் தறிகெட்டுப் போகிறதே. இதயம் படபடத்துத் தன் இருப்பைக் காட்டுகிறது. அலைபாயும் அவள் கூந்தலில் முகத்தைப் புதைத்து, ஆழ மூச்செடுத்து அவள் வாசனையை நுகர்ந்து அவளுக்குள் இரண்டறக் கலக்கும் வெறி வருகிறது. ஆனால் அது இயலாது. அவனுக்குத் தோன்றுவது போல அவளுக்கும் தோன்றவேண்டும். இவள் நேயநறுமை போல அல்ல. இவள் இரும்பு. முயன்றாலும் வளைக்க முடியாது. நெருங்க முயன்றாலும் தீயாய் பொசுக்கிவிடுவாள். நினைத்தவன், அவள் நெருக்கம் கொடுத்த தகிப்பைத் தாள முடியாதவனாகச் சட்டென்று விலக முயன்ற விநாடி, அவனுடைய கரத்தின் மீது அவளுடைய கரம் வந்து விழுந்தது.
உள்ளே இழுத்த மூச்சை வெளியிட மறந்தவனாக அதிர்ச்சியுடன் குனிந்து பார்த்தான். அங்கே அந்தக் குண்டுத் தளிர் கரம் பாறையின் மீது பூத்த மலராக அவன் கரத்தில் பாந்தமாகப் பதிந்து போயிருந்தது.
சட்டென்று வியர்த்தது அவனுக்கு. அதுவும் அவள் கரம் பட்ட நொடி உள்ளே ஏற்பட்ட இனம்புரியாத பேரலையைத் தாங்க முடியாதவனாக, தன் கரத்தை சட்டென்று இழுத்து எடுத்துக்கொண்டவன், அவளை விட்டு விலகி நின்று கொள்ள, அவனுடைய அந்த ஒதுக்கத்தில் இவள் முகம்தான் தன் உணர்ச்சியைத் தொலைத்து வாடிப்போனது.
அவளுக்குள் ஏற்படும் அந்த உணர்ச்சி அவனுக்குள் ஏற்படவில்லையா என்ன? ஏக்கத்துடன் திரும்பி அவனைப் பார்க்க அவன் முகமோ வெறுமையாக இருந்தது.
அப்போதுதான் அவளுக்கும் தன் தவறு புரிந்தது.
அவள் மட்டும் காதலில் விழுந்தால் சரியா? அவன் விழவேண்டாமா? இருவருக்குமே இன்னும் சுமுகமான உறவு ஏற்படவில்லை. இதில் அவளை அவன் காதலிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகத் தவறு. அவளே அவன் மீதிருக்கும் காதலை இப்போதுதானே உணர்ந்து கொண்டாள். அப்படி அவனும் உணரவேண்டாமா? எப்போதும் சுடுசுடு முகத்தோடு அவனுடன் மல்லுக்கு நிற்கும் அவளை அவன் காதலிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமல்லவா. முதலில் அவள்மீது அவனுக்கு நல்ல அபிப்பிராயம் வரவேண்டும். அவள் மீது நல்ல எண்ணம் வந்தால், காதலிப்பது சிரமமில்லை… முடிவு செய்தவள், மெதுவாக அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் நேயநறுமை.
ஆனால் அவனோ அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவனாக அண்ட சராசரங்களும் நடுங்கும் வகையில், பேர் இரைச்சலோடு நிலத்தை முத்தம் இட்டுக் கொண்டிருக்கும் அருவியைத்தான் வெறித்துக் கொண்டிருந்தான்.
அதைக் கண்டவளின் முகம் வாடிப் போனது. இத்தனை உணர்ச்சித் தளும்பலோடு இவள் இருக்கையில், அவனோ அருவியை வேடிக்கை பார்த்து நிற்கிறானே. கொஞ்சம் கூட சலனம் ஏற்படவில்லையா? மீண்டும் அவனைப் பார்க்க முயல, அவனோ கொஞ்சம் கூட அவளைக் கருத்தில் எடுக்காது தொலைவைத்தான் வெறித்துக் கொண்டிருந்தான்.
ஏமாற்றத்தோடு திரும்பி நயகராவை ஏறிட, இப்போது அவனுடைய விழிகள் அவளை நோக்கித் தாழ்ந்தது.
அதில்தான் எத்தனை விதமான உணர்ச்சிகள்.
23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…
23 அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற…
21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…
21 ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு…
20 ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும்…
19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம…