குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும் மறந்து மலங்க மலங்க விழித்திருந்தாள் நேயநறுமை.
தான் கண்ட காட்சி சரியா தவறா? புரியாமல் மேலும் அழுத்தமாகப் பார்த்தாள். அவள் கண்ட காட்சியில் பிழையில்லை. அங்கே ஜன்னலுக்கு அருகாமையில் நேரிழையை இறுக அணைத்தவாறு ஆதியதுலன் நின்றிருந்தான். அவனுடைய கன்னமோ நேரிழையின் தலையில் பதிந்திருக்க, நேரிழையின் கரங்களோ ஆதியதலனை இறுக்கமாக அணைத்து இருந்தன.
அந்தக் காட்சியைக் கண்டவளின் உடல் கிடுகிடு என்று நடுங்கத் தொடங்கியது. அடிவயிற்றிலிருந்து பெரும் வலி ஒன்று தீயேன எழுந்து அவள் உள்ளுறுப்புகளை எரித்துச் சாம்பலாக்கியவாறு இதயத்தின் மத்தியில் குண்டாய் இறங்கியது. விழிகளோ தெறித்து விழுவது போல விரிந்து கொள்ள, அந்தக் காட்சி கொடுத்த தாக்கத்தில் உடல் வியர்த்துக் கொட்ட, தலை சுற்றிக்கொண்டு வந்தது. அவளுடைய பாரத்தையே தாங்க மறுத்த கால்கள் தள்ளாட, சட்டென்று அங்கிருந்த நீள் இருக்கையை அழுந்த பற்றியவாறு தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.
சத்தியமாக இப்படி ஒரு காட்சியை அவள் கற்பனையில் கூட நினைத்திருக்கவில்லை. அவள் நினைத்தது என்ன நடப்பது என்ன? நொறுங்கிப் போனாள் அப்பேதை. இன்னும் தன் கண்ணை நம்ப முடியாதவளாக, அவர்கள் இருவரையுமே இமைக்காமல் பார்த்திருக்க, அங்கே அணைத்த வாக்கில் நின்றிருந்தவர்களுக்கும், இவளைக் கண்டதும் பெரும் அதிர்ச்சிதான்.
அவளைக் கண்ட நொடியே பதறிப்போய் இருவரும் விலகி நிற்க, அதுவரை தன்னிலை கெட்டிருந்தவளுக்கு, சட்டென்று கோபம் வீறுகொண்டு எழுந்தது. எனக்கு உடைமையானவன், சொந்தமானவன் என்று நினைத்திருந்த ஒருவன், உயிருக்கும் மேலான அவளுடைய தங்கையை அணைத்திருந்தால், எப்படியிருக்கும். பற்களைக் கடித்தவள், நிமிர்ந்து நின்று,
“இ… இங்கே என்ன நடக்கிறது…?” என்றாள் சீற்றமாக.
“அக்கா… பிளீஸ்… சத்தம் போடாதீர்… அப்பா அம்மா எழுந்து விடப் போகிறார்கள்…” பதறிய தங்கையை எரிப்பது போலப் பார்த்தாள் நேயநறுமை.
“பார்க்கட்டும்.. நன்றாகப் பார்க்கட்டும். இத்தனை நம்பிக்கை வைத்த இளையமகள் செய்யும் காரியத்தை அவர்கள் வந்து பார்க்கட்டும்…” ஆத்திரத்தில் இவள் கிறீச்சிட, இவளின் சத்தம் கேட்டு தேவசகாயமும், அம்பிகாவும் தூக்கம் கலைந்து எழுந்து விட்டிருந்தார்கள்.
ஓடி வந்து சகோதரியின் வாயைப் பொத்திய நேரிழை,
“அக்கா…! கெஞ்சிக் கேட்கிறேன்…! சத்தம் போடாதீர்… பிளீஸ்…! என்ன நடந்தது என்று சொல்கிறேன்…” அவள் சொல்ல, தன் தங்கையைத் தன்னிடமிருந்து பிரித்துத் தள்ள, அவள் தள்ளிய வேகத்தில் பின்னால் சரிந்தவளை ஓடிவந்து தாங்கிக் கொண்டான் ஆதியதுலன். அவனுடைய விழிகளோ நேயநறுமையை அழுத்தமாகவும், கோபமாகவும் ஏறிட்டன. இவளோ அவனைத் தளராமல் பார்த்தாள்.
முன்பு நாயகனாக, உயர்ந்த இடத்திலிருந்தவன், இப்போது தர தரவென்று சரிந்து தரைமட்டமாகிப் போக, அவனை வெறுப்போடு பார்த்துவிட்டுப் பின் நேரிழையை எரிப்பது போலப் பார்த்தாள்.
“என்னிடம் என்ன சொல்லப்போகிறாய்…? என்ன கதை விடப்போகிறாய்…? ஆஹ்…? எத்தனை நாட்களாக இந்த நாடகம் நடக்கிறது?” மீண்டும் கோபம் குறையாமல் ஆங்காரமாகக் கத்த, எழுந்து விட்ட தேவசகாயமும் அம்பிகாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தனர்.
“என்ன சத்தம் கண்ணா இது…? நேயாவின் கோபக் குரல் போல இருக்கிறதே…” அம்பிகா குழப்பத்துடன் கேட்க,
“ம்… அப்படித்தான் தெரிகிறது. யாரோடு இத்தனை சத்தமாகப் பேசுகிறாள்? அதுவும் இந்த நேரத்தில்?” என்றவர் படுக்கையை விட்டு எழ, அம்பிகாவும் அவிழ்ந்த கூந்தலை முடிச்சிட்டவாறு வெளியே வர, இங்கே, சகோதரியின் அந்த சத்தத்தில், பதறிப்போனாள் நேயநறுமை.
“அக்கா பிளீஸ்… நான் சொல்வதைக் கொஞ்சம் கேளும்… நீர் நினைப்பது போல…”
“பேசாதே… ஒரு வார்த்தை பேசாதே… உனக்கும் அவருக்கும் இடையில் ஏதாவது இருந்திருந்தால் என்னிடம் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே… நான் வேறு…” என்று தன் காதலைச் சொல்ல வந்தவள், உடனே தன் வாயை மூடிக் கொண்டாள்.
அவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலத் தோன்றியது.
அப்படி என்ன பெரிதாக ஆசைப்பட்டேன்? வாழ்வில் முதன் முறையாக ஒருத்தன் மீது காதல் கொண்டேன். அது பெரிய தவறா? கடைசியில் அந்தக் காதல் வெறும் கானல் நீராகிப் போகும் என்று கனவிலும் நினைக்கவில்லையே. அவனுடைய ஆண்மை நிரம்பிய கரங்களில் நான் அல்லவா இருக்கவேண்டும். ஆனால் எனக்குப் பதிலாக என்னுடைய தங்கை விழுந்து கிடக்கிறாள்… ஐயோ இந்த வேதனையை என்னால் தாங்கமுடிய வில்லையே…’ அவளுடைய இதயம் கதற, அதற்கு மாறாகச் சீற்ற முகத்துடன் இருவரையும் பார்த்திருந்த வேளை,
“நேயா..? என்னடா ஆச்சு…? ஏன் இத்தனை சத்தமாகப் பேசுகிறாய்? யாரோடு பேசுகிறாய்?” என்றவாறு வந்து நின்ற தேவசகாயம் அங்கே அழுது வீங்கிய முகத்தோடு ஆதியதுலனின் கைப்பிடியில் நின்றிருந்த இளைய மகளைக் கண்டதும் புருவங்கள் சுருங்கப் பார்த்தார். பின் திரும்பி அவளுக்குப் பக்கத்தில் இறுகிய முகத்தோடு நின்றிருந்த ஆதிய துலனையும் கண்டு முதலில் குழம்பியவர், பின் புரிந்தும் புரியாமலுமாக,
“இ… இங்கே என்ன நடக்கிறது…? நேரு.. நீ தூங்காமல் என்ன செய்கிறாய்? ஆதி…? நீயும் தூங்கவில்லையா…?” என்றார் அந்த நேரச் சூழ்நிலையைச் சுமுகமாக்க முயன்றவாறு.
“தூங்குவதா? எப்படித் தூக்கம் வரும்…? அதுதான்…” என்று எதையோ பேச வர, அவள் சொல்லப் போகும் வார்த்தையின் வீரியத்தை அம்பிகா முதலே உணர்ந்து கொண்டார் போல,
“நேயா… போதும்… நிறுத்திவிடு… அதற்கு மேல் எதுவும் பேசாதே. அதுதான் நாங்கள் விசாரிக்கிறோமே…” என்றார் சட்டென்று. தாயை ஆத்திரத்தோடு முறைத்தவள், இளக்காரமாக நேரிழையையும், ஆதியதுலனையும் பார்த்து,
“இதில் விசாரிக்க என்ன இருக்கிறது? அதுதான் என் கண்களால் பார்த்தேனே. இருவரும் ஒருத்தரை ஒருத்தர் அணைத்துக்கொண்டு இருந்தார்கள். அதுவும் விளக்கு எதுவும் போடாமல் இருட்டில்…” என்றாள் சீற்றமாக.
நேரிழையோ, பதில் சொல்ல முடியாமல், கண்களில் கண்ணீர் கோர்க்க, பெரியவளைப் பார்த்துவிட்டு,
“அப்பா.. அம்மா.. அது வந்து…” அவள் எதையோ சொல்ல வர, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றிக்கொண்டான் ஆதியதுலன். பின் திரும்பி அவளைப் பார்த்து,
“நேரிழை… இனி மறைத்துப் பயனில்லை…. உண்மையைச் சொல்லிவிடலாம்…” என்றவனை அதிர்ந்து போய்ப் பார்த்தாள் நேரிழை. முகத்தில் இரத்தப்பசை தொலைய, அச்சத்தோடு,
“ஆதி… நோ…” அவள் எதையோ சொல்லவர, சட்டென்று அவளுடைய உதட்டின் மீது தன் விரலை வைத்து அவள் பேச்சைத் தடுத்தவன்,
“எத்தனை நாட்களுக்கு மறைப்பதாக உத்தேசம்? எப்படியோ ஒரு வழியில் தெரியத்தானே போகிறது? நான் பார்த்துக் கொள்கிறேன்… பயப்படாதே…” சொன்னவன், நிமிர்ந்து தேவசகாயத்தையும், அம்பிகாவையும் பார்த்தான்.
“அத்தை… எனக்கு நேரிழையைப் பிடித்து இருக்கிறது. அவளைத் திருமணம் முடிக்க ஆசைப் படுகிறேன். அதுவும் விரைவாக…” அவன் சொல்லி முடிக்கவில்லை, அதைக் கேட்ட அதிர்ச்சியில் பொத்தென்று நீளிருக்கையில் விழுந்தாள் நேயநறுமை.
அவளுக்குத் தன் காதுகளையே நம்பமுடிய வில்லை. ‘ஆதியதுலன் அவளுடைய தங்கையைக் காதலிக்கிறானா? அது எப்படி சாத்தியம்? அதுவும் இன்று அவன் நடந்து கொண்ட முறை… இல்லை… இல்லை… இது பொய்… அவள் உறக்கத்தில் இருக்கிறாள்… அதுதான் இப்படிக் கெட்ட கெட்ட கனவாக வந்து தொலைக்கிறது.’ திடமாக நம்பியவள் விழிகளைத் திறக்க முயன்றாள்.
இல்லையே விழிகள் விரிந்துதானே இருக்கிறது. இதோ கண் முன்னால், அவளுடைய தங்கையின் கரத்தைப் பற்றிக்கொண்டு நிற்கிறானே. நம்ப மாட்டா தவிப்போடு திரும்பி தாய் தந்தையைப் பார்த்தாள். அவர்களும் குழப்பத்தோடு அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை நேரிழையின் கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டு நின்றவன், இப்போது அவளது கரத்தை விடுவித்து விட்டுத் தேவசகாயத்தை நெருங்கினான்.
“சாரி மாமா.. இப்படி என் விருப்பத்தை நடுச்சாமத்தில் எதிர்பாராத நேரத்தில் உங்களிடம் சொல்லும்படி ஆயிற்று. என்னை மன்னித்து விடுங்கள்…” என்றவனைக் குழப்பம் மாறாமல் பார்த்தார் தெவசகாயம்.
“நீ.. நீ சொல்வது நிஜமா…? நீ நேரிழையை… காதலிக்கிறாயா…?” அவருக்குக் குரல் எழும்பவே இல்லை. அவர்கள் நினைத்தது என்னவோ நடப்பது ஏதோவாக இருக்கிறதே. அவர்கள் நேயநறுமைக்குத் தான் அவன் தகுந்த கணவனாக இருப்பான் என்று நினைத்திருக்கையில், விதி வேறு விதமாக யோசிக்கிறதே.
“ஆமாம் மாமா. என்று அவளை முதன் முறையாகப் பார்த்தேனோ, அப்போதே அவளை எனக்குப் பிடித்து விட்டது. உங்களிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தேன். எப்படியோ, நறுமையின் உதவியால் இப்படி நடுச்சாமத்தில் என் விருப்பத்தைச் சொல்ல வேண்டியதாயிற்று… ஐ ஆம் சாரி… உங்களுக்கு நேரிழையை நான் திருமணம் செய்வதில் எந்த வருத்தமும் இல்லையே…?” கேட்டவனுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் திணறினார் தேவசகாயம்.
“அது.. அப்படி அல்ல ஆதி. நேயாக்கு மண முடிக்காமல்… எப்படி நேரிழைக்கு செய்வது? அது சரிவருமா? அதுவும் அவளுக்கு பத்தொன்பது கூட ஆகவில்லை… அது மட்டுமில்லை பா… நேரிழைக்கு… சில பிரச்சனைகள் இருக்கிறது… அதை எப்படி உன்னிடம் சொல்வேன்” என்று சொல்ல முடியாமல் அம்பிகா தயங்க, அவரை நெருங்கியவன், அவருடைய கரங்களைப் பற்றி,
“அத்தை… நேரிழையின் பிரச்சனை எனக்கும் தெரியும்… அவள் சொல்லியிருக்கிறாள். நான் விரும்புவது அவளைத்தானே தவிர, அவள் உடல் பிரச்சனையை அல்ல. நம்புங்கள்… உங்கள் மகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன் அத்தை. பிராமிஸ்… அவளை எனக்குக் கொடுத்து விடுங்கள்…” அவன் கேட்க, அதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் திணறினார் அம்பிகா.
“எனக்கு நீ சொல்வது புரிகிறதுபா. சொல்லப் போனால், நீ அவளை மணந்து கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால்… உடனே என்றால் எப்படி? அவள் சின்னப் பெண்.. நேயாவுக்குத் திருமணம் ஆகாமல்.. ம்கூம்… இப்போது வேண்டாம் ஆதி… கொஞ்சக் காலம் காத்திரு… நிச்சயமாக அவளை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன்…” சொல்ல, சற்றுநேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான் ஆதியதுலன்.
“அத்தை… இன்னும் ஒரு கிழமையில் நான் கடனா போய்விடுவேன். அதற்குப் பிறகு நேரிழையை தள்ளி நின்றுதான் பார்க்கவேண்டும். புரிந்து கொள்ளுங்கள். காதலின் வலி எத்தனை ஆழமானது என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. நீங்களும் அதை அனுபவித்தவர்கள்தானே…? பிளீஸ் அத்தை… அவளை எனக்கே கொடுத்து விடுங்கள். அவளுக்கு அங்கே சிகிச்சை பார்க்கிறேன். நேரிழையின் பிரச்சனைக்கு அங்கே தீர்வும் காண முடியும். இதற்கென்றே நிறைய ஆயுள்வேத வைத்தியர்கள் இருக்கிறார்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன்… பிளீஸ்… மாட்டேன் என்று மட்டும் சொல்லாதீர்கள்…” அவன் கெஞ்ச, அப்படிச் கெஞ்சும் அவனிடம் எப்படி மறுப்பது என்று தெரியாமல் தடுமாறினார் அம்பிகா. திரும்பி, தன் கணவனைப் பார்க்க அவரும் யோசனையோடு தான், தன் மனைவியை ஏறிட்டார்.
“அதில்லைபா.. குறைந்தது நேயநறுமைக்காவது திருமணம் முடியட்டுமே… அதுவரைக்கும் காத்திரு ஆதி…” அவர் புரிய வைக்க முயல, அந்தக் காட்சியைக் கண்டவளுக்கு கசந்து வழிந்தது. தங்கையின் உடல்நிலை தெரிந்தும் அவளை ஏற்க முன்வந்திருக்கிறான் என்றால், அவனுடைய காதலின் அளவு எத்தனை ஆழமானது என்று புரிந்து போகக் கசந்து வழிந்தது நேயநறுமைக்கு. வெடிக்கத் துடிக்கும் இதயத்தைச் சிரமப்பட்டு அடக்க முயன்று தோற்றவாறு தந்தையைப் பார்த்தாள் நேயநறுமை.
தலைக்கு மேலே வெள்ளம் போயிற்று. இனி சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? விரக்தியாகச் சிரித்தவள், முடிந்தவரைத் தன்னைத் திடப்படுத்தியவளாக நிமிர்ந்து தந்தையைப் பார்த்தாள்.
அடி வயிற்றிலிருந்து அமிலமாகச் சுரந்த விரக்தியையும், வெறுப்பையும், வலியையும் முடிந்த வரை யாரும் கவனிக்காத வகையில் ஒதுக்கியவள், எல்லையில்லாத அந்த வேதனை குரலில் தெரியா வண்ணம், தன்னுடைய தொண்டையைச் செருமியவளாக,
“அ… அப்பா…! எனக்கு இந்தத் திருமணத்தில் எல்லாம் நம்… நம்பிக்கை இல்லை என்று உங்களுக்குத் தெ.. தெரியும் தானே…? இந்தத் திருமணம், அதனால் வருகிற கட்டுப்பாடுகள், கடமைகள், இது எதுவுமே எனக்குப் பிடிக்காது… ஆ… ஆதி வேறு நேருவை… விரும்புகிறார்… இருவருக்குமே மணமுடித்து வையுங்கள்…” என்றவள் புன்னகையுடன் எழுந்தாள்.
“நீ… நீங்கள் பேசுங்கள்… எனக்குப் பஞ்சியாக இருக்கிறது… நான்… தூங்கப் போகிறேன்…” சொன்னவள், எழுந்து அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
முதலில் அலட்சியம் காட்டித்தான் நடந்தாள். ஆனால் நான்கு அடி வைப்பதற்குள் இதயம் பிளந்து விடுவது போன்ற வலியை அவளுக்குக் கொடுக்க அடுத்த கணம் ஓட்டமாகக் குளியல் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிக் கொண்டவளுக்கு ஓவென்று வந்தது.
அவளால் ஆதியதுலன் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. எத்தனை சுலபமாக நேரிழையைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டான். அந்தக் காதல் அவளிடம் என் வரவில்லை. அப்படி அவள் என்ன பெரிய குற்றம் செய்தாள்? தவறு செய்தாள்? ஐயோ, இதுதான் காதல் என்று உணர்ந்து முழுதாக நான்கு நேரம் கூட ஆகவில்லையே. அதற்குள் அந்தக் காதல் கருகிப்போனதே. இந்த வலியை யாரிடம் போய்ச் சொல்வாள்?
இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே விட்டால் அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பிவிடும் என்று அஞ்சியவளாகப் பாய்ந்து குளியல் தொட்டிக்குள் நுழைந்தவள் கடும் குளிர் நீரைத் திறந்து விட்டு அதன் கீழ் நின்றாள்.
யாரோ கத்தியால் இதயத்தைக் கிழித்தது போல ஏற்பட்ட வலிக்கு முன்னால் அந்தக் குளிர் நீர் எம்மாத்திரம்? உள்ளே எழும் மனக் கொதிப்பை அந்தக் குளிர் நீர் அடக்கி விடுமா என்ன? திரும்பத் திரும்ப நயகரா அருவியில் நடந்த சம்பவங்களும், அவர்களின் நெருக்கமும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவில் வந்து கடையில், நேரிழையும் அவனுமாக அணைத்து நின்ற கோலத்தில் வந்து நின்றது. கூடவே அவன் வாயால், அவன் நேரிழையை விரும்புவதாகச் சொன்னதும் அவளைக் கொன்று போட்டது. அந்த வலியைத் தாள முடியாதவளாக, ஆத்திரமும் கோபமுமாகக் கத்துவதற்காக வாயைத் திறந்தாள். பின் தான் செய்ய விளைவது புத்திக்கு உறைக்க, சட்டென்று சத்தம் வெளியே வராதவாறு, வாயைப் பொத்தியவாறு தொட்டிலில் கால் மடித்து அமர்ந்தாள் நேயநறுமை.
ஏமாற்றம்… தாள முடியாத ஏமாற்றம்.
எவ்வளவு நேரம் அந்தக் குளிர் நீரின் கீழ் நின்றாளோ தெரியாது. உடல் எல்லாம் விறைத்துப் போகத் தேகம் நடுங்கத் தொடங்கியது. ஆனாலும் தண்ணீர் குழாயை நிறுத்துவதாக இல்லை. கண்ணீரோ எனக்கு வழிவிடு நான் வெளியே வருகிறேன் என்று கெஞ்சியது. இறுகிப்போன இதயமோ, அழாதே… அழாதே… எதற்காக அழவேண்டும்? என்றது. அன்று மதியம்தான், காதலை உணர்ந்து ஒரு துளி கண்ணீரைச் சிந்தினாள். அதற்கே பெரிய அடியாக வாங்கிவிட்டாள். இப்போது வெள்ளமாய் கரை உடைத்துப் பாயும் அழுகையை வெளியே விட்டால், அதற்குப் பிறகு வரும் வலியை யார் தாங்குவார்கள். ம்கூம்… அழக்கூடாது… அழவே கூடாது. உதடுகளை அழுந்த மூடியவாறு இறுகிப் போய் நின்றவளால் ஒரு கட்டத்திற்குமேல் முடிந்திருக்கவில்லை.
தன்னையும் மீறிக் கொஞ்சம் கொஞ்சமாக விசும்பத் தொடங்கியவள் அப்படியே தலையைக் கரங்களால் பற்றியவாறு வெடித்துச் சிதறிவிட்டாள் நேயநறுமை. அவளுக்கு நினைவு தெரிந்து விம்மி வெடித்து அழுவது இதுதான் முதன் முறை. எந்த இறுக்கமான சூழ்நிலையையும் அலட்சியமாகக் கையாளத் தெரிந்தவளுக்கு இந்தக் காதல் வலியையும், அது கொடுத்த ஏமாற்றத்தையும் சுத்தமாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படித் தாங்குவது என்றும் தெரியவில்லை.
இனி ஆதியதுலனுக்குத் தன் வாழ்க்கையில் இடமில்லை என்பதை நினைக்கவே அவள் தேகம் சிதையில் ஏறியது போல எரிந்தது. உயிரே சிதைந்து போன உணர்வில் விம்மி வெடித்து எத்தனை நேரம் அழுதாளோ தெரியாது. திடீர் என்று குளியலறைக் கதவு தட்டப்பட, அதுவரை உணர்ச்சியைத் தொலைத்தவளாக நின்றிருந்தவள், அழுகையை நிறுத்தாமல், சத்தம் வெளியே வராமல் வாயை அழுந்த மூடியவாறு திரும்பி கதவை வெறித்தாள்.
“நேயா… இந்த நடுச்சாமத்தில் குளியலறையில் என்ன செய்கிறாய்? வெளியே வா…” அன்னையின் குரலில், உடலின் அத்தனை சக்தியையும் சேர்த்து அழுகையை நிறுத்த முயன்றாள். விசும்பல் மட்டும் குறையவில்லை.
“நேயா… என்னடி செய்கிறாய்…? வெளியே வா…”
“இ… இதோ… வ.. வருகிறேன்…” சொன்னவள் எழுந்து நின்று தண்ணீரை நிறுத்தினாள். உடலோ உதறியது. மனமோ கதறியது. புத்தியோ மரத்துப் போனது. எப்படியோ, வெளியே வந்தவள் ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தினாள் நேய நறுமை. கடைசியாக ஈர ஆடைகளைக் களைந்தவள், அங்கிருந்த வாளியில் போட்டுவிட்டு, வேர்ரோபை எடுத்து அணிந்துகொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். அழுததற்கான அடையாளம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவளுக்குமே தன்னால் இப்படியெல்லாம் அழ முடியும் என்று அன்றுதான் கண்டுகொண்டாள். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, கதவைத் திறந்தாள் நேயநறுமை. அங்கே கோபமாக நின்றிருந்த அம்பிகா சிவந்து வீங்கியிருந்த மகளின் முகத்தைக் கண்டு அதிர்ந்தவராக,
“நேயா… அழுதாயா?” அன்னைக்கே உரித்தான அக்கறையும் பதட்டத்துடனும் கேட்க, மீண்டும் கண்ணீர் வரலாமா என்று அவசரமாக அவளிடம் அனுமதி கேட்டது.
“அழுதேனா…? நானா…? நான் எப்போது அழுது இருக்கிறேன்?” அலட்சியமாகக் கேட்டாலும், குரலில் தெரிந்த தளர்வைக் கண்ட அம்பிகா பதறித்தான் போனார். என்ன நினைத்தாரோ, வேகமாகத் தன் மகளின் கரத்தை இழுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றவர், கதவைப் பூட்டிவிட்டு மகளை அழுத்தமாகப் பார்த்தார்.
நேயநறுமையோ, தாயைப் பார்க்கும் சக்தி இல்லாமல் எங்கோ பார்க்க,
“நீ… நீ ஆதியதுலனைக் காதலிக்கிறாயா…” எந்த வித ஆலாபனையும் இன்றிச் சட்டென்று கேட்க, தன் தாயை ஒரு விநாடி பெரும் வலியோடு பார்த்தாள்.
“ஆமாம் காதலிக்கிறேன். அவனைத்தான் திருமணம் செய்வேன். அவன் இல்லையென்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை… ஆதியதுலனை எனக்குக் கொடுத்துவிடுங்கள்…” என்று கேட்டுவிட மனம் துடித்தது. புத்தி கதறியது. ஆனால், ‘எனக்கு நேரிழையைப் பிடித்திருக்கிறது. அவளைத் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறேன்’ என்று ஆதியதுலன் சொன்னது அட்சரம் பிசகாமல் காதில் ஓலமிட, நெஞ்சம் வெந்து போனது.
“கேட்கிறேனே… சொல்லு நேயா… நீயும் ஆதியைக் காதலிக்கிறாயா?” அவர் கேட்க அந்த நீயும் என்பதில் அவளுடைய உதடுகள் சுளித்தன. அவசரமாக உள்ளே பொங்கி எழுந்த வலியை விழுங்கி நெஞ்சாங்கூட்டில் பதுக்கியவள், தாயை முறைத்துப் பார்த்தாள்.
“என்னது? அதுலனைக் காதலிக்கிறேனா…? என்னைப் பார்த்தால் அவரைக் காதலிப்பது போலவா இருக்கிறது… ஐ ஹேட் தட் காய்… ஐ ஹேட் ஹிம்… அது உங்களுக்கும் தெரியும்…” சொன்னவளின் குரலிலிருந்த உறுதி அம்பிகாவைக் குழம்பச் செய்தது.
ஆதியதுலனுக்கும் அவளுக்கும் ஒத்துப் போகாது என்பது அவர் அறிந்ததுதான். ஆரம்பத்திலிருந்து ஆதியதுலனின் பேச்சை எடுத்தாலே பல மைல் தொலைவுக்கு ஓடிவிடுவாள். அவனோடு பேசுகிறார் என்பதற்காகவே அந்தப் பக்கம் வருவதை முற்றாகத் தவிர்ப்பவள். அப்படிப்பட்டவள் அவனைக் காதலிக்க வாய்ப்பில்லைதான். ஆனால் அவளுடைய முகம் சிவந்து அழுதது போலக் காட்சி கொடுக்கிறதே? அதற்கான காரணம் என்ன?
“அப்படி என்றால் ஏன் கண்கள் எல்லாம் சிவந்திருக்கிறது. குரல் கரகரக்கிறது.
“ப்ச்… எப்போதும் போலத் தூவானம் ஒத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் மூச்சு அடைப்பது போல இருந்தது. அதுதான் குளித்தேன்… இனி பஃப் எடுத்தால் சரியாகிவிடும்… அது மட்டும்
இல்லை, நேரு திருமணம் முடித்துச் சென்று விட்டால், முன்னது போல அவளோடு விளையாட முடியாதில்லையா. அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது…” சொன்ன பொய் நம்பும்படி இருக்க விரைந்து சென்று தன் மகளை இழுத்து அணைத்துக் கொண்டார் அம்பிகா.
எப்போதும் நேயநறுமை, நேரிழையோடு குறும்புத்தனமாக விளையாடினாலும் கூட, தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்பதை அம்பிகா அறிவார். தனக்கு என்ன வந்தாலும் தாங்கும் நேயநறுமை, நேரிழைக்குச் சின்னதாக ஏது நடந்தாலும் துடித்துப் போவாள். நிச்சயமாக நேரிழையின் பிரிவு அவளைத் தாக்கும் என்று அம்பிகாவுக்குத் தெரியும். ஆனால், நேரிழைக்குக் கிடைத்த அந்த வாழ்க்கையை உதறித் தள்ளி விட முடியாது. கூடவே இருவரும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் காதலை எப்படிப் பிரிப்பார்?
மெதுவாகத் தன் மகளை விடுவித்த அம்பிகா, “எப்போதுமே நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்க முடியாதுமா. ஏதோ ஒரு கட்டத்தில் குடும்பம் குட்டி என்று பிரிந்து செல்லத்தானே வேண்டும். ஆனால் என் வருத்தம் எல்லாம், உனக்கு முதல் அவளுக்குத் திருமணம் நடக்கப் போகிறதே என்று தான். இந்த அம்மா மீது எந்தக் கோபமும் இல்லை தானே..” வருத்தத்தோடு கேட்ட தாயைக் கோபமாகப் பார்த்தாள் நேயநறுமை.
“கமான் அம்மா…! என்ன பேச்சு பேசுகிறீர்கள். எனக்கு இப்போதைக்குத் திருமணம் செய்வதில் நாட்டமில்லை என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்கிற போது இப்படிப் பேசலாமா…” கோபமாகச் சொன்னவள், தாயை விட்டு விலகி வெளியேற முயன்றபோது, அதுவரை அடக்கி இருந்த கண்ணீர் விழிகளில் மீண்டும் தேங்கத் தொடங்கி இருந்தது.
23 அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற…
21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…
21 ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு…
20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…
20 ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும்…
19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம…