Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-20

20

ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும் மன்னித்து மீண்டும் அவளிடமே வந்து விடும் உத்தியுக்தன், இந்த முறை அவளைத் தேடி வரவேயில்லை. நெஞ்சம் நசுங்கிப் போயிற்று சமர்த்திக்கு.

ஏனோ அவனைக் காணாமல் இவளால் ஒழுங்காக உணவை உட்கொள்ளக் கூட முடியவில்லை.

அன்று குழந்தைக்குப் பால் கொடுக்கவேண்டி அதன் அறைக்குப் போவதற்காக விதற்பரை அவளைத் தள்ளு வண்டியில் தள்ளிச் செல்ல, குழந்தையின் அறையை அண்மித்த வேளையில், யாரோ வேக நடையுடன் அந்த அறையை விட்டு வெளியேறுவதைக் கண்டாள்.

அந்த வேக நடையிலும், அவனுடைய உயரத்திலும், அது உத்தியுக்தன் என்று கண்டு கொண்டவளாகப் பரபரப்புடன், விதற்பரையைப் பார்த்து,

“விது… அது… அது… உதி தானே…?” என்று கேட்டவள், அவளுடைய பதிலையும் கேட்காமல், அவசரமாக வண்டியின் சில்லை கரங்களால் உருட்டியவாறு அந்த உருவம் சென்ற திசை நோக்கிச் செல்ல, அந்த உருவத்தைக் காணவே இல்லை.

இரண்டு கிளைகளாகச் செல்லும் பாதை வந்ததும், கண்களில் கண்ணீர் பொங்க எந்தப் பக்கமாகச் சென்றான் என்று தெரியாமல் தவித்துப் போனாள் சமர்த்தி.

கண்களில் உடைப்பெடுத்தது. எத்தனை நாட்களாயிற்று அவனைப் பார்த்து. ஏழு மாதங்களாக அவன் மீது கோபம் கொண்டு பராமுகமாக இருந்தவள்தான். இப்போது அவன் மீது எந்தத் தவறும் இல்லையென்று தெரிந்தபின், அவனைப் பார்க்காது துடித்துப்போனாள் சமர்த்தி.

தன்னை மறந்து விம்மியவளின் தோள்களில் கரத்தைப் பதித்த விதற்பரை,

“ஷ்… அத்தை… எதற்கு இப்போது அழுகிறாய். அது மாமா இல்லை. வேறு யாரோ…” என்று சமாதானப் படுத்த முயல,

“இல்லை விது… அது அவர்தான்… நிச்சயமாக அவர்தான்… அவர் கடந்து சென்ற காற்று என்னிடம் கூறுகிறது அது உதிதான் என்று…” என்று மேலும் விம்மியவளை, எப்படிச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் விழித்தாள் விதற்பரை.

எப்படியோ அழுகையை நிறுத்திக் குழந்தையின் அறைக்கு அழைத்துச் சென்று குழந்தையை அவளுடைய கரங்களுக்குக் கொடுத்தபோதும் சமர்த்தியின் விம்மல் நிற்கவில்லை.

இப்போதே அந்தக் கணமே அவனைச் சென்று பார்க்கவேண்டும் என்கிற வெறி வந்தது. அவள் அவசரத்தை வைத்தியர்கள் புரிந்துகொண்டால் அல்லவோ. மேலும் ஒரு கிழமை தங்கியபின்தான் போகமுடியும் என்றார்கள். வேறு வழியில்லாமல் பற்களைக் கடித்து ஒரு கிழமையைக் கடந்தாள்.

தயாளனும் புஷ்பாவும் எதுவும் பேச முடியாமல் வாய் திறக்கவும் வழியின்றிச் சமர்த்திப் படும் வேதனையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் அவர்களாலும்தான் என்ன செய்ய முடியும்? இது அவளுடைய வாழ்க்கை. அவள்தான் சரிப்படுத்த வேண்டும்.

என்னதான் தங்கை மீது பாசமிருந்தாலும், உத்தியுக்தனைத் தவறாக நினைக்கவும் தயாளனால் முடியவில்லை. கடந்த இரண்டு கிழமைகளாக அவளுக்கும் உத்தியுக்தனுக்கும் இடையில் உள்ள நாடகத்தைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். உத்தியுக்தன் நாள் தவறாது குழந்தையைப் பார்க்க வருவதும், அவள் கூட மணி நேரமாக அமர்ந்திருந்து குழந்தையோடு பேசிச் சிரிப்பதும், குழந்தைக்குப் பாலூட்டும் நேரம் வர, அங்கிருந்து வெளியேறுவதுமாகக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தான். இவளோ அவன் வருவான் வருவான் என்று வழிமேல் விழிவைத்துக் காத்தி இருக்கிறாள்.

அவர்கள் இருவருக்கும் மத்தியில் இவர்கள் சிக்கித் திண்டாடிக்கொண்டிருந்தனர்.

இறுதியாக அவளை விடுவித்த அன்று, அவளுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கிச் சமர்த்தியை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க, குதுகலத்துடன் புறப்பட்டு விட்டாள் சமர்த்தி.

அவளை அழைத்துச் செல்ல வந்த தயாளனுக்கு எங்கே போவதென்ற குழப்பம். அவளை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குச் செல்வதா இல்லை உத்தியுக்தனின் வீட்டிற்குச் செல்வதா? தடுமாறி நிற்க, புஷ்பாவோ குழந்தையின் பையை ஏந்தி வந்தார். மெதுவாகத் தன் மனைவியை நெருங்கிய தயாளன்,

“புஷ்… இப்போது எந்த வீட்டிற்குப் போவது… நம் வீட்டிற்கா, இல்லை உத்தியுக்தனின் வீட்டிற்கா?” என்று திணற,

“எனக்கும் அதுதான் தெரியவில்லை தயா… எதற்கும் நாம் நம் வீட்டிற்குப் போகலாம்… அங்கே போன பிறகு என்ன செய்வது என்று யோசிக்கலாம்…” என்று கூற, தயாளனும் வண்டியை எடுத்துவரக் கிளம்பினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அனைவரும் தயாளனின் வண்டியில் ஏறி அமர்ந்திருந்தனர்.

சமர்த்தியை அலுங்காமல் குலுங்காமல் தூக்கி இருக்கையில் இருத்திவிட்டு, சக்கர வண்டியை மடித்து டரங்கில் போட்டுவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்த தயாளன், வண்டியை உசுப்பியவாறு, வேகமெடுத்தவர், இவர்களின் வீட்டுப் பக்கம் போவதற்காகச் சமிஞ்சையைப் போட, அதைக் கண்ட சமர்த்தி,

“அண்ணா… எங்கள் வீட்டிற்குப் போங்கள் அண்ணா…” என்றாள்.

“அங்கேதான் போகிறேன் கண்ணம்மா…” என்றார் தயாளன்.

“இ.. இல்லை அண்ணா… நான்… நான் சொல்வது என் வீட்டிற்கு… உதியின் வீட்டிற்கு…” என்றதும் தயாளனுடைய முகமும் புஷ்பாவின் முகமும் பளிச்சென்று மலர்ந்தன.

உடனே வாகனத்தின் சமிக்ஞையை மாற்றிச் சரியான பாதையில் வாகனத்தை விட, அடுத்த அரைமணி நேரத்தில் உத்தியுக்தனின் மாளிகையை வந்தடைந்தது வாகனம்.

வாகனம் நின்றதும், தயாளன் சமர்த்தியின் தள்ளுவண்டியைப் பின் ட்ரங்கிலிருந்து இறக்கி எடுத்து வந்து, சமர்த்தியைக் கவனமாகத் தூக்கி வண்டியில் அமர்த்த, புஷ்பா குழந்தையைத் தூக்க முயன்றார்.

இவளோ, புஷ்பாவை நோக்கித் தன் கரத்தை நீட்ட, புஷ்பாவோ,

“இல்லைடா… வீடு வரைக்கும் குழந்தையை நான் கொண்டு வருகிறேன்…” என்று கூற,

“இல்லை அண்ணி… நானும் இவளும் மட்டும் உள்ளே போகிறோம். இப்போது நீங்களும் என்னோடு வந்தால், உதியால் எதார்த்தமாக நடக்க முடியாது. ப்ளீஸ் அண்ணி…” என்று கூற, கண் கலங்கிவிட்டார் புஷ்பா. தங்களுக்குள் நடக்கும் சச்சரவை நாம் பார்க்கக் கூடாது என்று சமர்த்தி விரும்புகிறாள் என்பதைப் புரிந்துகொண்ட புஷ்பா,

“சரிடா.. வீட்டு வாசல் வரையாவது குழந்தையை எடுத்து வருகிறேன். உன்னால் அத்தனை தூரம் தனியாகப் போக முடியாதே…” என்று கூற, மறுக்காது சக்கர வண்டியின் சில்லை தள்ள முயல, உடனே தயாளன் உதவிக்கு வந்தார்.

புஷ்பா குழந்தையை ஏந்தியிருக்க, தயாளன் சமர்த்தியைத் தள்ளிச் செல்ல, குழந்தையின் அத்தியாவசியப் பொருட்கள் சமர்த்தியின் வண்டியில் தொங்கிக்கொண்டன.

வீட்டு வாசலில் விட்டுவிட்டுக் குழந்தையைச் சமர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டுச் சற்றுப் பயத்தோடு நின்றார் புஷ்பா.

குழந்தையைச் சரியாப் பற்றியிருக்கிறாளா? கவனமாக உள்ளே எடுத்துச் செல்வாளா? ஒரு வேளை விழுத்திவிட்டால்? பயத்துடன் தடுமாற, மெல்லியதாகச் சிரித்த சமர்த்தி,

“பயப்படாதீர்கள் அண்ணி… உங்கள் மருமகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். நான் பார்த்துக்கொள்ளா விட்டாலும், உங்கள் தம்பி பார்த்துக் கொள்வார்…” என்று உறுதியாகக் கூற,

“அது சரிடா… ஆனால் உத்தியுக்தனுக்கு உன் மீதிருக்கும் கோபத்தில் என்ன செய்வாரோ… அதுதான் பயமாக இருக்கிறதுமா…” என்று கூறிய அண்ணணின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்த சமர்த்தி,

“எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னைக் காயப் படுத்த மாட்டார் அண்ணா… அது எனக்குத் தெரியும்… பயப்படாமல் போய் வாருங்கள்.. எல்லாம் சரியானதும் உங்களை அழைத்துச் சொல்கிறேன்…” என்று கூற, தயக்கத்தோடு, மனமில்லாமலே விடைபெற்றுச் சென்றார்கள் தயாளனும் புஷ்பாவும்.

அவர்கள் சென்றதும் ஒரு பெருமூச்சுடன் அழைப்பு மணியை அண்ணாந்து பார்த்தாள். சக்கர நாற்காலியில் குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி மணியை அழுத்துவது.

ஒற்றைக் கையை நீட்டி, அழைப்பு மணியை அழுத்த முயன்றாள் அது எட்டாத் தொலைவில் இருக்க, எரிச்சலுடன் இன்னும் சற்று எக்கி மணியை அழுத்த முயன்றாள். ம்கூம் எட்டவில்லை. வேறு வழியில்லாமல் கதவைத் தட்டினாள். அவள் தட்டியது இவளுக்கே கேட்கவில்லை உள்ளே இருப்பவர்களுக்கு எப்படிக் கேட்கும்? மீண்டும் சற்றுப் பலமாகத் தட்டினாள். இப்போது உள்ளே யாரோ நடந்த வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் இவளுடைய இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

நடந்து வரும் வேகத்திலேயே அது உத்தியுக்தன் என்று தெரிந்து போக, பெரும் படபடப்பும் அச்சமும் போட்டிப்போடத் திறக்க இருக்கும் கதவையே வெறித்துப் பார்த்தாள்.

அடுத்த ஒரு சில விநாடிகளில் கதவு திறக்க. பயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். உத்தியுக்தன் தான் கதவைத் திறந்திருந்தான். இவளை அவன் எதிர்பார்க்கவில்லைபோலும். ஒரு கணம் திகைத்தவன், மறு கணம் முகம் இறுக அவளை அமைதியாகப் பார்த்தான்.

இவளும் தன் முன்னால் நின்றிருந்தவனைத் தான் ஒரு வித தவிப்போடு பார்த்தாள்.

மிக மிக மெலிந்திருந்தான். அதைத் தவிர வேறு எந்த மாற்றமும் அவனிடமில்லை. அவளை விட்டுப் பிரிந்த தவிப்பு எங்காவது அவன் முகத்தில் ஒட்டி இருக்கிறதா என்று பார்த்தாள். ம்கூம் மருந்துக்கும் இல்லை. உதடுகளைக் கடித்துத் தலை குனிந்தவள்,

“நா… நான் உள்ளே வரலாமா…?” என்றாள் மெல்லிய நடுக்கத்துடன். அதற்கும் அவன் மறுக்க வில்லை. ஆம் என்றும் சொல்லவில்லை. விலகி வழி விட்டு நிற்க, இப்போது இவளுக்கு மெல்லிய கோபம் எழுந்தது.

சக்கர வண்டியை எப்படி வீட்டிற்குள் எடுத்துச் செல்வது. அவளிருக்கும் இடத்தை விட, அரையடி உயரத்திலிருந்தது அவனுடைய வாசல். கையில் குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி உள்ளே செல்வதாம். கோபத்துடன், அசையாமல் அங்கேயே சிலையென நின்றுவிட்டவனைப் பார்த்து,

“நான் எப்படி உள்ளே வருவதாம்…” என்றாள் பற்களைக் கடித்தவாறு. இரங்கினானா அவன்,

“எப்படி வெளியே போனாயோ அப்படியே உள்ளே வா…” என்று அழுத்தமாகக் கூற,

“வெளியே போகும்போது கால் முள்ளந்தண்டு இவற்றை உடைத்துக்கொண்டா போனேன். போகும் போது காலோடு போனேன். வரும் போது சக்கர நாற்காலியில் வந்திருக்கிறேன்… உங்கள்… ஐ மீன் நம் வீடு மலையில் கட்டியது போல இத்தனை உயரத்திலிருக்கிறது. எப்படி உள்ளே வருவது…” என்று கேட்க,

“உன்னையார் இங்கே வரச் சொன்னது… உனக்குத்தான் உன் சொந்த வீடு இருக்கிறதே.. அங்கே போக வேண்டியதுதானே…” என்று அப்போதும் இரங்காதவனாகக் கேட்க, இவளோ எரிச்சலுடன் அவனைப் பார்த்து,

“சொந்தவீடா… என் சொந்த வீடு இதுதான்… இங்கிருந்து நான் எங்கு போவது… தவிர என் வீட்டிலிருந்து என்னைத் துரத்தும் அதிகாரம் என்னைக் கட்டிய கணவனுக்குக் கூட இல்லை…” என்று நெஞ்சை நிமிர்த்திக் கூற, இவனோ புருவங்களை மேலே தூக்கி,

“ரியலி… இந்த வீடு என்னது… என் சொந்த உழைப்பால் கட்டியது… இதில் யாரும் உரிமை கோர முடியாது…” என்றான் அழுத்தமாக. இவளோ கிண்டலாகச் சிரித்து,

“ரியலி… ஹலோ மிஸ்டர் உத்தியுக்தன்… நான் மிஸஸ் உத்தியுக்தன். சட்டப்படி உங்கள் மனைவி… இப்போது விவாகரத்துப் பெற்றாலும் உங்கள் சொத்தில் பாதி எனக்குத்தான். அதுவும் உங்கள் குழந்தைக்கு அம்மா நான்… அதைக் காட்டியே உங்களை உள்ளாடையோடு தெருவில் நிற்க வைத்துவிடுவேன். போனால் போகிறது… என் கணவர் என்பதால் மன்னித்து விட்டுவிடுகிறேன்…” என்று கூற, அதுவரை இறுகியிருந்த உத்தியுக்தனின் உதடுகளில் சட்டென்று ஒரு புன்னகை மலர்ந்து அடங்கியது. அதைக் கண்டு மலர்ந்தவள்,

“இப்போது நான் சொன்னதைக் கேட்டுச் சிரித்தீர்கள் தானே… அப்படியானால் என்மீதான கோபம் போய்விட்டதுதானே..” என்று குதுகலத்துடன் கேட்க, சற்று இளகியிருந்த அவனுடைய முகம் மீண்டும் இறுகிப்போனது.

மன்னிக்கும் வகையாகவா வார்த்தைகளை விட்டாள். தீப் பந்துகளை அல்லவா கக்கினாள். ஆத்திரத்துடன் எதையோ கூற வர,

“உத்… யார் அது…” என்றவாறு வந்தவளைக் கண்டு சமர்த்தி ஒரு கணம் அதிர்ந்துதான் போனாள்.

ஜூலியட். அவள் எங்கே இங்கே. நம்ப மாட்டாமல் நிமிர்ந்து உத்தியுக்தனைப் பார்க்க. அவனோ முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த விழிகளில் கள்ளமில்லை. கபடமில்லை. தவறு செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி இல்லை. தவிப்பில்லை. நேராக இவளைப் பார்த்துக் கொண்டே இருக்க, இவனைப் போய்ச் சந்தேகப் பட்டோமே என்று நெஞ்சம் அவளையே சுட்டது.

அவன் நேர் விழிகளைப் பார்க்க முடியாமல் விழிகளைத் தளைத்தவள், பின் ஜூலியட்டைப் பார்த்து, மெல்லியதாகப் புன்னகைத்து,

“ஹாய்… ஹெள ஆர் யு…” என்றாள் இனிமையாய். அதைக் கேட்டதும் ஜூலியட்டின் முகம் பளிச்சிட்டது.

“ஐ ஆம் பேர்ஃபெக்ட்… தங்க் யூ சமர்த்தி” என்றவள் நிமிர்ந்து உத்தியுக்தனைப் பார்த்தாள். அவனோ சமர்த்தியைத்தான் வெறித்துக் கொண்டு இருந்தான். மீண்டும் சமர்த்தியைப் பார்த்த ஜூலியட்,

“நான்… இங்கே… எதற்கு வந்தேன் என்றால்…” என்று விளக்கம் கொடுக்க முயல, இப்போது தெளிவாய் புன்னகைத்தவள்,

“உங்களுக்கும் என் கணவருக்கும் இடையில் ஆயிரம் இருக்கும்… நான் மூக்கை நுழைக்க முடியாதே… அப்படியே நுழைத்தாலும் என் கணவருக்குப் பிடிக்காது” என்று மெல்லிய நகைப்புடன் கூற உத்தியுக்தனின் விழிகள் ஒரு கணம் சுருங்கி விரிந்தன.

இவளோ நிமிர்ந்து உத்தியுக்தனைப் பார்த்து,

“உள்ளே வர உதவி செய்ய முடியுமா… முடியாதா” என்றாள். இன்னும் அவன் அசையாது இருக்கத் தன் தோள்களைக் குலுக்கியவள், சிரமப்பட்டு எழ முயல, மறு கணம் அவளருகே வந்தான் உத்தியுக்தன்.

அவளிடமிருந்து குழந்தையை வாங்க முயல, அதுவரை குழந்தையை மூடியிருந்த கம்பளித் துனி சற்று விலகியது. அப்போதுதான் கவனித்தான், குழந்தையின் மூக்கில் இன்னும் குழாய் செருகப்பட்டிருப்பதை.

“இன்னுமா பிராணவாயுக் குழாயைக் கழற்றவில்லை?” என்று மெல்லிய அச்சத்துடன் கேட்டவனைப், புன்னகையுடன் பார்த்தவள், குழந்தையை வருடிக் கொடுத்தவாறே,

“இல்லை…. உதி… குழந்தைக்கு ஒழுங்காகப் பிராணவாயு போகும் வரைக்கும் இதை அணிந்து இருக்க வேண்டுமாம்…” என்று கூறியதும், மெல்லிய கலக்கத்துடன், எங்கே குழந்தைக்கு வலித்துவிடுமோ என்று அஞ்சியவன் போல, மிக மிக மெதுவாகக் குழந்தையைத் தூக்கினான் உத்தியுக்தன்.

கையோடு தொங்கிக்கொண்டிருந்த பிராணவாயு சிலின்டர் அடங்கிய பையையும் எடுத்துக்கொண்டு ஜூலியட்டைப் பார்த்து,

“என் குழந்தையைப் பிடி…” என்றான்.

முகம் மலர உத்தியுக்தனை நெருங்கிய ஜூலியட், அவன் குழந்தையைப் பக்குவமாக வாங்கித் தன்னோடு அணைத்துக் கொண்டு,

“இவள் உன்னைப் போலவே இருக்கிறாள் உத்…” என்றாள் மலர்ச்சியுடன்.

அதைக் கேட்டதும் இவன் முகத்தில் மெல்லிய கர்வம் வந்து போனது. மறு கணம் சமர்த்தியின் அருகே வந்தவன், அவளைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான்.

இவளோ வியப்புடன் அவனை ஏறிட,

“இந்த வீட்டை விட்டுப் போகும் போது சக்கர வண்டியோடா சென்றாய்?” என்றவன் அவளை ஏந்திவந்து அங்கிருந்த நீளிருக்கையில் அமர்த்தி விட்டு ஜூலியட்டை நெருங்கி அவளுடைய கரத்திலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டவன் எல்லையில்லா அன்போடு அதைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.

தந்தையை அது உணர்ந்து கொண்டது போலும் தன் பொக்கைவாய் திறந்து அது சிரிக்க, அதைக் கண்டு சிலிர்த்துப் போனான் அந்தத் தந்தை.

“சதி… நம் குழந்தை என்னைப் பார்த்துச் சிரிக்கிறது…” என்று தன்னை மறந்து வாய்விட்டுக் குதுகலத்துடன் கூறியவன், குழந்தையை மெதுவாகத் தூக்கி அதன் நெற்றியில் உதடுகளைப் பொருத்த மீண்டும் உதடுகளை நெளித்துச் சிரித்தது குழந்தை.

கூடவே தந்தையின் கரங்களில் சொகுசாகப் படுத்துக் கொள்ள, இவனுடைய மார்பு அவனையும் மீறி விம்மியது. இது என் குழந்தை. என் உதிரத்தில் தோன்றியது. என்னை என் குடும்பத்தை வாழ வைக்கப் பிறந்த குழந்தை. இதற்குத் தந்தையாக மட்டுமல்ல, எல்லாமாகவும் நானிருப்பேன்… என் தந்தை போல் அல்லாது, சதியின் அண்ணனைப் போல நல்ல தந்தையாய், தோழனாய், எல்லாமாய் இருப்பேன்…” என்று மனதிற்குள் உறுதி கொள்ள, இப்போது குழந்தைக்குப் பசித்தது போலும். உதடுகளைப் பிதுக்கி அழத் தொடங்க, ஒரு தந்தையாய்ப் பதறிப்போனான் உத்தியுக்தன்.

ஏனோ அவனுடைய திடகாத்திரமான முகமூடி, அழுத்தம் நிறைந்த முகமூடி குழந்தைக்கு முன்பாகக் காணாமல் போவதை ஒரு வித வியப்போடு உணர்ந்தவனாய்,

“குழந்தைக்குப் பசியாறும் நேரமல்லவா இது?” என்றான் நேரத்தைப் பார்த்தவாறு.

உடனே இவள் கை நீட்ட, பக்குவமாய்த் தன் குழந்தையைச் சமர்த்தியிடம் கொடுத்துவிட்டு, அவசரமாகச் சமையலறைக்குள் சென்றவன், வெளியே வந்தபோது அவன் கரத்தில் பெரிய குவளை நிறையப் பால் இருந்தது.

அவன் வெளியே வந்தபோது சமர்த்தி ஜூலியட்டோடு பேசியவாறு குழந்தையின் பசியை ஆற்றத் தொடங்கியிருந்தாள்.

தன் மனைவியை நெருங்கியவன், அவளிடம் பால் குவளையை நீட்டி,

“பால் கொடுக்கும்போது தொண்டை வறண்டு போகும் அதுதான் பால் எடுத்து வந்தேன்…” என்று கூறியவாறு நீட்ட, நிஜமாகவே சமர்த்திக்குத் தொண்டை வறண்டுபோகத் தொடங்கியிருந்தது.

இரத்தத்தைப் பாலாகக் கொடுப்பவள் அல்லவா அன்னை. அதன் வறட்சி தொண்டையில் தெரியத் தொடங்கிய வேளையில் அதை உணர்ந்து செயலாற்றிய தன் கணவன் மீது எல்லையில்லா காதல் பிறந்தது சமர்த்திக்கு.

வாங்குவதற்காகக் காயம்பட்ட கரத்தை நீட்ட, அதைக் கண்டவன், தானே அவளுக்குப் புகட்ட, அவனுடைய கரிசனையில் மீண்டும் கண்கள் கலங்கத் தொடங்கினாள் சமர்த்தி.

சொட்டு விடாது குடிக்க வைத்தவன், “போதுமா… இன்னும் கொஞ்சம் எடுத்து வரவா?” என்றான் அக்கறையாக.

மறுத்தவள், “இல்லை போதும்…” என்று விட்டு ஜூலியட்டைப் பார்த்து,

“சாரி… நீங்கள் முக்கியமாக இவர் கூடப் பேசிக் கொண்டிருப்பீர்கள்… நான் இடையில் வந்து…” என்று தயங்க,

“யாரும் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமில்லை… சதி” என்று அழுத்தமாகச் சொன்னவன், திரும்பி ஜூலியட்டைப் பார்த்து,

“நம்முடைய ஒப்பந்த ரத்துக்கான அத்தனை பேப்பர்ஸையும் நாளை கொடுத்துவிடுகிறேன் ஜூலியட். இப்போது எனக்கும் என் மனைவிக்குமான நேரம்… சோ…” என்று முன்னால் நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்க்க, தன்னை வெளியேறச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட ஜூலியட்,

“ஸூர்… உத்… இப்போது புறப்படுகிறேன்… ஆனால் இன்னொரு வாட்டி யோசி… இதனால் நஷ்டம் உனக்குத்தான்…” என்றாள் ஜூலியட் மெல்லிய வருத்தத்துடன்.

“எத்தனையோ நஷ்டங்களைச் சந்தித்தவன் நான்… இதைப்பற்றியெல்லாம் நான் வருந்துவேனா என்ன?” என்று அவளை வழியனுப்பி வைக்க முயல,

“என்ன ஒப்பந்தம், என்ன நஷ்டம்…” என்றாள் சமர்த்தி குறுக்கே புகுந்து. அவளை நிதானமாகப் பார்த்த உத்தியுக்தன்,

“நத்திங் சதி…” என்றவன் ஜூலியட்டைக் குறிப்பாகப் பார்க்க, உடனே ஜூலியட் சமர்த்தியிடம் விடைபெற்று வெளியேற முயன்றாள். இவளோ,

“ஜுலியட்…” என்று அழைத்தாள். நின்று திரும்பிப் பார்க்க,

“நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த வீட்டிற்கு வரலாம்… என் தோழியாக…” என்றதும், முகம் மலர்ந்த ஜூலியட், “நிச்சயமாக சமர்த்தி…” என்று விட்டு வெளியேறினாள்.

What’s your Reaction?
+1
12
+1
5
+1
7
+1
2
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

வெந்தும் தணியுமோ காதல் – 23

23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…

14 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-இறுதி அதிகாரம்

23 அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற…

2 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 21/22

21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…

3 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-21/22

21 ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு…

4 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 20

20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…

5 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 19

19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம…

1 week ago