ஒரு வாரம் கடந்திருந்தது.
இதில் நேயநறுமை நன்றாகவே தேறிவிட்டாள். ஆனாலும் இவளுக்குத்தான் விட்டிலிருக்க முடியாமல்,
எரிச்சலாக இருந்தது. ஏதோ நாட்கள் உப்புச் சப்பில்லாமல் கழிவது போலத் தோன்றியது அவளுக்கு. அதற்குக் காரணம் பரீட்சைக்கு நன்றாகப் படிக்கவேண்டும் என்கிற காரணத்திற்காக, தன் தோழிகளோடு சேர்ந்து குழுவாகப் படிக்கப் போகிறேன் என்று வேளைக்கே பல்கலைக் கழகம்
சென்று விடுவாள் நேரிழை. இதில் தாயும் தந்தையும் வேலைக்குப் போய்விடுவார்கள். இதெல்லாம் பரவாயில்லை. கடந்த மூன்று நாட்களாக அவளால் ஆதியதுலனைப் பார்க்கக் கூட முடியவில்லை. அவனும் ஏதோ வியாபார விஷயமாக வெளியே போவதாகச் சொல்லி அதிகாலையே சென்று விடுவான். அதுவும் காலையில் போனால் இரவு ஒன்பது பத்து மணியளவில்தான் வீட்டிற்கே வந்தான். அதனால் அவனுடைய பிரசன்னமும் வீட்டில் சுத்தமாக இல்லை.
அவனில்லாத வீடும் உப்புச்சப்பில்லாத உணவும் ஒன்றுதான் என்பது போல, வெறுத்துப் போனாள் நேயநறுமை.
அவன் வரப்போகிறேன் என்று சொன்னபோது எத்தனை சத்தம் போட்டாள். தன் அறையைக் கொடுக்க மாட்டேன் என்றெல்லாம் சண்டை பிடித்தாளே. இப்போது அவன் வீட்டில் இல்லை என்றதும், எதையோ பறி கொடுத்தது போல உணர்கிறாள். இது என்ன விந்தை?
இவள் கொஞ்சம் முயன்றிருந்தால், விட்டுக் கொடுத்திருந்தால், அவனுடைய நட்பு கிடைத்திருக்குமோ என்னவோ. ஆனால் இவள் கொஞ்சமும் இளகாமல் இறுக்கமாக இருந்ததால், இருவருக்குள்ளும் ஏற்படவேண்டிய அந்த அழகிய நட்பு மலர மறுத்தது. ஆனாலும் அந்த அழகிய நட்பை உருவாக்க அவர்கள் இருவருக்கும் காலம் ஏதோ ஒருவகையில் வழியமைத்துக் கொடுக்கவே செய்தது.
அன்றைய கிழமை முழுக்க வேலை, ஓட்டம் என்று இருந்ததால் தேவசகாயத்திற்கும், அம்பிகாவுக்கும் ஆதியதுலனோடு நேரத்தைச் செலவிட முடியாத நிலை. அதைச் சமப்படுத்தும் நோக்கில், அவனையும் அழைத்துக் கொண்டு நயகரா அருவிக்குச் சென்றுவர முடிவு செய்தார்கள்.
அதை அறிந்த நேயநறுமை, துள்ளிக்கொண்டு தானும் வருவதாகக் கிளம்பிவிட்டாள். ஆனால் அம்பிகாவோ மறுத்துவிட்டார்.
“இப்போதுதான் உடல்நிலை ஓரளவு சரியாகி இருக்கிறது. இதில் திரும்பவும் படுக்கையில் விழப் போகிறாயா. பேசாமல் வீட்டிலிரு. நாங்கள் ஆதியை அழைத்துப் போகிறோம்…” சொல்ல உலகமே இடிந்து போனது போல அன்னையைப் பார்த்தாள் நேயநறுமை.
“என்னது.. நானில்லாமல் நயகரா போகப் போகிறீர்களா? நெவர்….” அவள் கத்திய கத்தில் அம்பிகாவும் தேகசகாயமும் காதுகளைப் பொத்திக் கொண்டார்கள்.
“பைத்தியம்… எதற்கு இப்படிக் கத்துகிறாய்…?” தாய் சீற, அன்னையைப் பார்த்து முறைத்தவள்,
“நானும் வருவேன்… என்னை அழைத்துப் போக முடியாது என்றால், நீங்கள் யாரும் போக முடியாது” மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டிக் கோபத்துடன் சொல்ல, மகளை அடிப்பது போலப் பார்த்தார் அம்பிகா.
“உன் நன்மைக்காகத்தானே…” தாய் சொல்லி முடிக்கவில்லை பாய்ந்து அன்னையை இறுகக் கட்டிக் கொண்டவள்,
“அம்மா… அம்மா… அம்மா.. பிளீஸ்.. பிளீஸ்… பிளீஸ்… அம்மா அம்மா அம்மா… பிளீஸ் பிளீஸ் பிளீஸ்…” எதற்கும் கெஞ்சாத மகள், இப்படிக் கெஞ்சவும், எப்படி மறுப்பார் அம்பிகா.
“ஏய்… விடுடி… ப்ச்… உனக்கு எத்தனை வயசு? இன்னும் ஐந்து வயதுக் குழந்தைகள் போல… ஐயோ… விடுடி என்னை…” என்று மகளிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்று போராடியவருக்கு ஒரு கட்டத்தில் மகளின் அடாவடியில் சிரிப்புக் கூட வந்து விட்டது. சிரமப்பட்டுத் தன் சிரிப்பை அடக்கியவர்,
“சரி… சரி… வந்து தொலை. ஆனால் அங்கே போகிறேன், இங்கே போகிறேன் என்று கரைச்சல் கொடுக்கக் கூடாது… வந்து நல்ல பிள்ளையாக எங்களோடு சேர்ந்து நிற்கவேண்டும்…” தாய் சுட்டு விரல் காட்டி கண்டிப்புடன் கூறப் பாய்ந்து தாயின் கன்னத்தைப் பல் படக் கடித்து வலிக்கச் செய்து விலக, அம்பிகாவோ வலியில்,
“ஆ… எருமை…” திட்டியவாறே பல் தடம் பட்ட கன்னத்தை அழுத்திக் கொடுத்து மகளை முறைத்துப் பார்த்து,
“நான் சொன்னது நினைவிருக்கிறதுதானே. அங்கே வந்து எந்தச் சேட்டையும் பண்ணக் கூடாது” என்றார் உறுதியாக. உடனே அதற்கு, பூம் பூம் மாடு போலத் தலையை ஆட்டி சரி என்றாள் இவள்.
நிச்சயமாக அங்கே சென்றதும், தாயின் கட்டுப் பாட்டில் அவள் இருக்க மாட்டாள் என்பது வேறு கதை. ஆனாலும் கண்டிப்பது தாயின் கடமை. அதற்குச் சரி சொல்வது இவளுடைய கடமை.
சனிக் கிழமைக்கு முந்தைய இரவு நேய நறுமைக்குத் தூங்கா இரவாகிப் போனது. இதயம் வேறு அவனோடு ஒன்றாகப் பயணிக்கும் அந்த அழகிய தருணத்தை எண்ணி மகிழ்ந்தது. அதன் விளைவு அவளால் கண்ணொடு கண் மூட முடிய வில்லை. நினைவலைகள் முழுவதும் அவன்தான் நிறைந்திருந்தான்.
அன்று அவளுக்கு மூச்சுத் திணறல் வந்த போது அவனுடைய கையணைப்பிலிருந்தது மந்தமாக நினைவுக்கு வர முகம் சிவந்தாள் அவள்.
அன்று அவனுடைய இறுகிய வயிற்றோடு சாய்ந்தாளே.. அப்பா எத்தனை கடினமாக இருந்தது அவனுடைய வயிறு. அந்த நிலையிலும் அவளுடைய பெண்மை விழித்துக்கொண்டு அவன் அணைப்புக்காக ஏங்கியதை என்னவென்று சொல்வது. அது மட்டுமா, அவள் இருமிய போது நெஞ்சைத் தடவி…’ நினைத்தவளுக்கு முகம் குப்பென்று சிவந்தது.
அந்த நினைவோடு அரை குறையாக உறங்கியவள், ஐந்து முப்பதைக் கடந்ததும் துள்ளிக் கொண்டு எழுந்து குளியலறை நோக்கி ஓடினாள். அடுத்த அரைமணி நேரத்தில் புத்தம் புதுப் பூவாகவே வெளியேறி அறைக்குள் வர, நேரிழை இன்னும் விழித்திருக்கவில்லை.
உடனே அவளுக்கு மீசை தாடி வரையக் கரங்கள் குறுகுறுத்தன. ஆனாலும் தன்னை அடக்கிக் கொண்டாள். இப்போது இவளோடு விளையாட நேரமில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்… முடிவு செய்தவளுக்கு உறங்கும் தங்கை மீது கோபம் வந்தது.
தூங்கு மூஞ்சி. எப்போது எழுந்து எப்போது கிளம்பப் போகிறாள்? எரிச்சலுடன் நினைத்தவாறு தங்கையை எழுப்பப் போனாள். போனவள் சட்டென்று நின்றாள். எப்போதும் இவள்தானே விரைவாக எழுந்து அத்தனை பேருக்கும் தேநீர் வார்த்துக் கொடுத்து நல்ல பெயர் எடுப்பாள். இன்று அந்த நல்ல பெயரை நான் தட்டிச் செல்கிறேன். குறிப்பாக ஆதியதுலனுக்கு என் கையால் தேநீர் வார்த்துக் கொடுக்கிறேன். முடிவு செய்தவள் சத்தம் இல்லாமல், அலமாரியை நோக்கி வந்தாள்.
அதைத் திறந்து என்ன ஆடை அணிவது என்று ஆராய்ந்தாள். முதலில் எடுத்த ஆடை, படு கவர்ச்சியாக இருக்க, அதை தன் மீது வைத்து அழகு பார்த்தாள். ஏனோ திருப்தியாக இல்லை. அதை ஓரமாகப் போட்டுவிட்டு வேறு தேடினாள். இருந்ததெல்லாம் கொஞ்சம் கவர்ச்சியான ஆடைகள். முன்பு பிடித்த ஆடைகள், இப்போது பிடிக்காமல் போக, அவற்றை எல்லாம் விலக்கிவிட்டு இன்னொன்றை இழுத்து எடுத்தாள். கையில்லாத இளஞ்சிவப்பு மேலாடைக்குத் தெறித்தாற் போல வெள்ளையும் சிவப்புமாகக் குட்டிக் குட்டிப் பூக்கள் போட்ட சற்றுத் தொளதொள ஆடைதான். அது அதிக கவர்ச்சியில்லை என்று இதுவரை காலமும் அணியாமல் வைத்திருந்தாள். அது கண்களைக் கவர, அதை எடுத்தவள், தன்மீது வைத்துப் பார்த்தாள்.
ஆதியதுலனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிவது போல ஒரு கற்பனை விரிய இவள் முகம் மலர்ந்தது. அதற்கேற்ப, வெள்ளை நிறத்தில் செய்லர் பான்டையும் இழுத்தெடுத்து அணிந்து கொண்டவள் கண்ணாடியில் அப்படியும் இப்படியும் பார்த்தாள்.
அவளுடைய உடலுக்கு மிக எடுப்பாக இருந்தது அந்த ஆடை. ஆனாலும் உடல் முழுவதையும் மறைத்திருக்க, அது கொஞ்சம் அதிருப்திதான். முன் பக்கமாக இழுத்து விட்டுப் பார்த்தாள். அது கழுத்து வரை முட்டி நிற்க, யாரோ கழுத்தை நெரிப்பது போலத் தோன்றியது அவளுக்கு. அதிலிருந்து இரண்டு பொத்தான்களைக் கழற்றிவிட்டு அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தாள். பரவாயில்லாமல் தான் இருந்தது. மேலாடை அதிக நீளமோ? தொடையளவு நீண்டிருந்த அந்த மேலாடையை இழுத்து நடுவில் ஒரு முடிச்சுப் போட்டு எப்படி இருக்கிறது என்று பார்த்தாள். நன்றாகத்தான் இருந்தது. அதுவும் மேலாடைக்கும், பான்டுக்கும் இடையே ஒரு அங்குல இடைவெளியில் வெண்ணிற சதைப்பற்றுக் கொண்ட இடை அழகாய் மிளிரக் கவர்ந்திழுத்தது.
இதோ அழகாய் கண்ணுக்கு விருந்தாகத் தெரியும் இந்த இடையில் ஏதாவது பச்சை குத்த ஆசைதான். ஆனால் அம்பிகா கொலை செய்து விடுவார் என்கிற பயத்திலும், வலிக்குமே என்கிற அச்சத்திலும் இதுவரை அந்த ஆசையை நிறைவேற்றவில்லை. அப்படிப் பச்சை குத்தியிருந்தால் இன்னும் எடுப்பாக இருந்திருக்கும். பெருமூச்சு விட்டவள், திரும்பித் திரும்பிப் பார்த்துத் தன் பெண்மையின் எழிலை இரசித்துப் பார்த்தாள்.
சட்டென்று ஆதியதலன் கண்முன்னால் தோன்றி அவள் இடையைப் பார்த்து முகம் சுழிப்பது போன்ற காட்சி வர, தன்னையும் மறந்து வயிற்றில் கட்டிய முடிச்சை அவிழ்த்து விட்டாள்.
‘ம்… இது கூட அழகாகத்தான் இருக்கிறது’ தன்னை மறந்து முனங்கியவள், அடுத்து முகத்திற்கு முகப்பூச்சுப் போடத் தொடங்கினாள். சுண்டினால் சிவக்கும் வெண்ணிறத் தோலுக்கு ஏற்ற நிறத்தில் முகப் பூச்சுப் பூசி, கண்களுக்கு அழகாக மையிட்டு, உதடுகளுக்கு, அதன் நிறத்தில் உதட்டுச் சாயம் பூசிவிட்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
நிச்சயமாக அவளைப் பார்த்தால் ஆண்மை சுரக்காத ஆணுக்கும் ஆண்மை பிறக்கும். அப்படி இருக்கையில் ஆதியதுலன் பார்த்தால்? கற்பனையில் அவனுடைய விழிகளில் இரசனையைக் கண்டவளின் சுழித்த உதடுகளில் வெட்கப் புன்னகை ஒன்று மலர்ந்தது.
கூடவே அவனுடைய நெருங்கிய முகமும், முத்தமிடும் நினைவும் ஒரு கணம் அவளைத் தடுமாறச் செய்ய, தன் கீழ் உதட்டைக் கடித்தவாறு நின்றாள் நேயநறுமை. ஏனோ அந்த நினைவே மீண்டும் மூச்சுத் திணறலைக் கொண்டுவந்து விடும் போல அவளை நடுங்க வைத்தது.
மேலும் வெட்கத்தில் முகம் சிவக்க, உதடுகளைக் கடித்தவள், தன்னை அலங்கரித்து முடித்ததும், மனத்தைக் கவரும் வாசனைத் திரவியத்தை ஆடையில் பூசிவிட்டுத் திரும்பி தங்கையைப் பார்க்க அவளிடம் அசைவில்லை.
“நன்றாகத் தூங்குடி என் நேரு மாமா…” சத்தமில்லாமல் சொன்னவள், வெளியே வந்தாள்.
வீடு அமைதியாக இருந்தது. யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லையா என்ன? எத்தனை மணிக்கு எழுந்து எத்தனை மணிக்குப் போவது? வேளைக்குப் போனால்தானே வாகனத்தரிப்பிடத்தில் இடம் பிடிக்க முடியும். எண்ணியவளாகச் சமையலறைக்கு வந்தாள்.
எல்லோருக்குமாகத் தேநீரை வார்த்து வைத்து
விட்டுத் தனக்கானதை ஒரு குவளையில் ஊற்றி எடுத்துக் கொண்டு வெளியே வந்து, நீள் இருக்கையில் அமர்ந்து காலுக்கு மேல் காலைப் போட்டுத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவாறு தேநீரைக் குடிக்கத் தொடங்க, தொளதொள ஷேர்ட்டும், பைஜாமாவோடும் வெளியே வந்தாள் நேரிழை.
அங்கே தயாராகி நின்றிருந்த சகோதரியைக் கண்டதும் அவளுடைய விழிகள் வியப்பில் மலர்ந்தன. அவள் சகோதரியாவது இத்தனை வேளைக்கு எழுந்து தயாராகி இருப்பதாவது. உலகம் அழிந்து விட்டதா என்ன? இல்லை அவள் ஏதாவது கனவு காண்கிறாளா? நம்ப முடியாத அதிசயத்தைக் கண்டு விட்டது போல,
“அக்கா… என்ன சீக்கிரம் எழுந்து விட்டீர்?” என்றாள் வாய் பிளக்க.
“சீக்கிரமாகவா…? இன்று நயகரா நீர்வீழ்ச்சி பார்க்கப் போகிறோம் மறந்துவிட்டாயா?” சகோதரி கேட்க அவளை ஒரு மாதிரி பார்த்தாள் நேரிழை.
“அக்கா அதற்காக இத்தனை வேளைக்கே தயாராகி விட்டீரா? இங்கிருந்து ஒன்பது மணிக்குத் தானே புறப்படுவதாக அம்மா சொன்னார்கள்…” என்றவள் கடிகாரத்தைப் பார்க்க அது ஏழு மணியாக இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதாகச் சொன்னது.
திரும்பிக் குறுகுறு என்று தன் சகோதரியைப் பார்த்தாள்.
பின்னே இருக்காதா? எப்போதும் ஒரு காரியத்திற்குப் புறப்படுவதென்றால் அவளைத் தெல்லோட்டித்தான் எழுப்ப வேண்டும். எட்டு மணிக்குப் போகவேண்டிய இடத்திற்கு இவள் புண்ணியத்தில் பத்து மணிக்குத்தான் போய்ச் சேர்வார்கள். அப்படிப்பட்டவள் இன்று தானாக எழுந்து தயாராகி இருக்கிறாள் என்றால், ஆச்சரியப் படாமல் என்ன செய்வது?
“என்ன அப்படிப் பார்க்கிறீர்?” சகோதரியின் குறுகுறு பார்வையில் சங்கடம் எழ, அதை எரிச்சலாக மாற்றிக் கேட்டாள் நேயநறுமை.
“இல்லை… எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இத்தனை வேளைக்கு நீர் எழுந்து பார்த்தது இல்லை. பரீட்சைக்குக் கூடப் போர்த்து மூடிப் படுக்கும் ஆள் நீர். இன்று என்ன அதிசயமாக இருக்கிறது? இத்தனை வேளைக்குத் தயாராகி நிற்கிறீரே…?” தங்கை கிண்டலும் வியப்புமாகச் சொல்ல, உதடுகளைக் கடித்தாள் நேயநறுமை.
“அது வந்து.. எனக்கு அருவி பார்ப்பதென்றால் பிடிக்கும் என்று உமக்குத் தெரியும்தானே. அது தான்… ஆர்வத்தில் வேளைக்கே தயாராகிவிட்டேன். எப்படியோ சமாளித்தவள்,
“தேநீர் குடிக்கவில்லையா? இரும் எடுத்து வருகிறேன்…” சொன்னவள் சமையலறைக்குள் சென்று தங்கைக்குரிய குவளையில் தேநீரை வார்த்து எடுத்துக்கொண்ட வெளியே வந்தவளுக்கு அந்த யோசனை தோன்றியது.
பேசாமல் தன் மனதில் நடக்கும் மாற்றத்தையும், குழப்பத்தையும், ஆதியதுலன் மீதிருக்கும் அபிப்பிராயத்தையும் உணர்வலைகளையும் தங்கையிடம் சொல்லி நான் ஏன் இப்படி உணர்கிறேன் என்று அவளிடமே கேட்கலாமா? எண்ணியவள் உடனே மறுப்பாகத் தலையசைத்தாள்.
வேண்டாம் சொன்னால் கிண்டலடிப்பாள். சிரிப்பாள். என்ன அவரை இந்தளவு வெறுத்துவிட்டு இப்போது அவரையே நினைக்கிறீரே என்று கேலி செய்வாள். ம்கூம் அதைத் தாங்க மனதில் திடமில்லை. முடிவு செய்தவள், சமையலறையை விட்டு வெளியே வரும்போதே ஆதியதுலனின் காலடிச் சத்தம் இவள் செவிகளில் விழுந்தது.
எத்தனை ஆயிரம் ஆண்கள் இருந்தாலும் அந்த இடத்தில் அவனுடைய காலடிச் சத்தத்தை மட்டும் தனியாக இனம் பிரிந்து அறிந்து கொள்வாள் போல.
அவனுடைய காலடி ஓசையை உணர்ந்ததும் இவளுடைய இதயம், அவளையும் மீறிப் படபடக்கத் தொடங்கியது. அடிவயிறு சுருங்கிக் கொண்டது. மார்பகங்கள் விம்மித் தணிந்தது. நயகரா நீர் வீழ்ச்சியின் குளிர்ச்சி உடல் எங்கும் பரவி அவளைத் தடுமாற வைக்க உதடுகளோ உதட்டுச் சாயத்தையும் மீறி வறண்டு போனது. தேநீர் வார்த்த கரங்கள் நடுங்கின.
‘ஐயோ… எனக்கு என்னதான் ஆயிற்று?’ அவள் உள்ளுக்குள் தடுமாற,
“ஹே… நேரிழை…” என்கிற அவனுடைய குரல் இவளுடைய செவியில் வந்து விழுந்ததும், இவளையும் மீறி மயிர்க்கால்கள் கிளர்ச்சியுடன் எம்பி நின்றன. இளம் வயதுக்குரிய உட்சுரப்பி வேறு நேரம் காலம் இல்லாமல் உச்சந்தலையில் சென்று அடிக்க அந்தக் குரலில் மதிமயங்கியவளாக விழிகளை மூடி நின்றாள் நேயநறுமை.
“ஹாய் ஆதி…” மெல்லியதாய் நேரிழை அழைப்பது இவள் காதுகளில் விழ, சுயம் பெற்றவளாக விழித்தாள் நேயநறுமை. அவளுக்குத் தன்னை நினைத்தே குழப்பம் வந்தது.
நான் ஏன் இப்படி இருக்கிறேன். ஏன் அவனுடைய குரலைக் கேட்டாலே நிலை இழந்த தவிக்கிறேன்? பதட்டம் அடைகிறேன். உடல் குழைந்து போகிறேன். உள்ளே என் பெண்மை மலர்கிறது. அவன் தொடுகைக்காக ஏங்குகிறது. என்றுமில்லாத திருநாளாக வெட்கமடைகிறேன். அவன் அருகே இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். அவளைப் பார்த்து அவன் இரசிக்க வேண்டும்
என்று ஆடைகளைப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்கிறேன். அவனுக்குப் பிடிக்காது என்பதற்காகவே எனக்குப் பிடித்த ஆடைகளைத் துறக்கிறேன். அவனைக் கண்ட நாளிலிருந்து இந்த நொடிவரை நான் நானாகவே இல்லை. என் சுயம் எங்கே போனது? இதோ இதுவரை யாருக்காகவும் எதுவும் செய்யப் பழக்கப்படாத நான், அவனுக்குத் தேநீர் வார்த்துக் கொடுக்க ஆசைப்படுகிறேன்? இப்போது கூட நயகரா அருவிக்குப் போகும் மகிழ்ச்சியை விட, அவனோடு சேர்ந்து போவதால் ஏற்படும் குதுகலம் தானே அதிகமாக இருக்கிறது. இது என்ன விந்தை. வாழ்க்கையில் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று முற்று முழுதாக வெறுத்து ஒதுக்கிய ஒருத்தனின் பார்வைக்காக நிமிடத்துக்கு நிமிடம் தவிக்கிறேனே. இது என்னவிதமான மனநிலை?
குழம்பியவாறே தன்நிலை பெற்றவள், ஆதியதுலனுக்கும் ஒரு குவளையில் தேநீர் வார்த்து முன்னறைக்கு வர, அதுவரை இலகுவாக நேரிழையோடு மென் குரலில் பேசிக்கொண்டிருந்தவன், அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் விழிகள் ஒரு விநாடி ஆச்சரியத்தில் மலர்ந்தன.எப்போதும் அரைகுறை ஆடைகளை அணிந்து இவன் முகம் சுளிக்கச் செய்தவள், இன்று தரமான ஆடைகளை அணிந்து அவனை வியக்கச் செய்து இருந்தாள். முன்பு அவளை நேருக்கு நேராகப் பார்க்க ஒரு வித சங்கடம் எழும். பார்த்தாலும் உள்ளே குற்ற உணர்ச்சி தோன்றும். ஆனால் இப்போது அவளைத் தயக்கமின்றிப் பார்க்க முடிந்தது. களங்கம் இன்றி இரசிக்க முடிந்தது. அந்த இரசனையை மறைக்காமல் விழிகளில் காட்டியவன், கூடவே தன் மகிழ்ச்சியையும் விழிகளால் சொல்ல, அதை அறிந்து கொண்டவளுக்கு உள்ளே குதூகலம் கடலலையாகப் பொங்கி எழுந்தது.
கடந்த ஒரு வாரமாக இருவருக்குள்ளும் இருந்த ஒதுக்கம் கொஞ்சம் காணாமல் போனது. மெல்லிய புன்னகையுடன், அவர்களை நெருங்கியவள், முதலில்
நேரிழையிடம் குவளையை நீட்டிவிட்டு, அடுத்து அவனிடம் நீட்ட, மறுக்காமல் அவள் நீட்டிய குவளையை அவள் கரம் தொட்டு வாங்கிக் கொண்டவன் கீற்றாய் சிறு புன்னகையை உதிக்க, அதில் கிறங்கிப் போனாள் நேயநறுமை. அந்தப் புன்னகையில் அவளுடைய உலகம் ஒரு கணம் சுழல்வதை நிறுத்திக்கொண்டது. அவளையே இரசனையுடன் பார்க்கும் அந்த விழிகளுக்குள் விழுந்து நீச்சலடித்து, அவனுக்குள் இரண்டறக் கலக்க முயன்ற நேரம்,
“பிறகு என்னாச்சு…” என்கிற நேரிழையின் அழைப்பில், இருவருமே சுயம் பெற்றனர்.
அந்த நிலையிலும், புன்னகை மாறாமல் அவளிடம் “நன்றி…” சொன்னவன், திரும்பி நேரிழையைப் பார்க்க, இவள்தான் முடக்கப்பட்ட இயந்திர மனிதன் போல, அங்கிருந்த நீளிருக்கையில் அமர்ந்து அவனையே பார்த்தவாறு தேநீர் அருந்தத் தொடங்கினாள் நேயநறுமை. அவர்களைப் பார்க்கும் போது இவளுக்குள் மெல்லிய பொறாமையுடன் சேர்ந்த ஏக்கம் எழுந்தது.
எத்தனை இலகுவாக நேரிழையோடு கதை பேசிச் சிரிக்கிறான். ஆனால் என்னிடம் மட்டும் அவனுக்கு ஏன் ஒருவித விலகல்? இதோ நேரிழை அவனோடு உறவாடுவது போல என்னால் முடிய வில்லையே. அது ஏன்? அத்தனை தயக்கத்தையும் தகர்த்தெறிந்து விட்டு அவனோடு சிரித்துப் பேசிட ஏக்கம் கொள்ளும் என் மனதிற்கு எப்படி தீனி போடுவேன். குழம்பிப் போனாள் நேயநறுமை.
இதோ இப்போது கூட அவர்களின் பேச்சில் குறுக்கே புகுந்து எதையாவது பேசலாம்தான். ஆனாலும் எதுவோ அவளைத் தடுத்து நிறுத்தியது.
தேநீரைக் குடித்தவாறு விழிகளால் ஆதிய துலனையே பருகிக்கொண்டிருக்க, சற்று நேரத்தில் குடித்து முடித்த தேநீர் குவளையோடு எழுந்தாள் நேரிழை.
“சரி… நீங்கள் இருவரும் பேசுங்கள். நான் படிக்கப் போகிறேன்…” என்று விட்டுத் திரும்பக் குழம்பிப்போனாள் நேயநறுமை.
“என்னது.. படிக்கப் போகிறீரா? ஏன் என்னாச்சு? நயகரா பார்க்க வரவில்லையா?” என்றாள் கேள்வியாக.
“இல்லை அக்கா… திங்கள்தான் கடைசிப் பரீட்சை. நான் படிக்கவேண்டும். நீங்கள் மூவரும் போய் வாருங்கள்…” என்றவள், தன் அறைக்குச் செல்ல மீண்டும் இருவருக்குள்ளும் ஒவ்வாத அமைதி.
ஆனாலும் இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவி அணைப்பதும், பின் விலகுவதுமாக இருக்க, இவளுக்குத்தான் படபடத்தது.
அவனுக்காகப் பார்த்துப் பார்த்துத் தயாரானேன். அவன் விருப்பத்திற்கு ஏற்றது போல ஆடைகள் அணிந்திருக்கிறேன். இதை புரிந்துகொண்டிருபானா? கேள்வி எழ, அவனை நிமிர்ந்து பார்த்தாள் நேய நறுமை. அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். அதுவும் இரசனையோடு. முகம் சட்டென்று சிவக்க,
“நீ… நீங்கள் புறப்படவில்லை?” என்றாள் பேச்சைத் தொடக்க வேண்டுமே என்பதற்காக. அவனும் சிவந்த அவள் முகத்தை விழிகள் மின்னப் பார்த்து விட்டு,
“ம்… கிளம்ப வேண்டும்…” என்றவனின் விழிகள் கொஞ்சம் கூட அவளை விட்டு நீங்கவில்லை.
அவன் பார்வையில் அடிவயிறு சில்லிட, உதடுகளைக் கடித்தவள், என்ன பேசுவது என்று தெரியாமல், தடுமாற, அவனோ நிதானமாக அவளைப் பார்த்தவாறே தன் தேநீரைக் குடித்து முடித்து, எழுந்தான்.
சுயம் பெற்றவளாகத் தானும் எழுந்தவள்,
“குவளையைக் கொடுங்கள், நான் கழுவி வைக்கிறேன்…” என்றாள் அவன் முகம் பார்க்காமல். விழிகள் தரை சாய, முகம் சிவந்திருக்க, நின்றிருந்த நேயநறுமையைக் கண்டவனுக்கு ஆச்சரியம் பேரலையாக எழுந்தது.
இவளுக்கெல்லாம் வெட்கப்படத் தெரியுமா என்ன? இரசனை விழிகளால் அவளை அழுத்தமாகப் பார்த்துவிட்டு, மறுக்காமல் அவளுடைய தேநீர் குவளையின் உள்ளே தன் குவளையைச் செருகியவன்,
“சரி… கழுவி வை…” என்று விட்டு விலகிச் செல்ல, அவனுடைய அந்த உரிமைப் பேச்சில் உள்ளம் உவகையில் துள்ளிக் குதித்தது.
‘காதல்… அது வந்தால் எப்படியெல்லாம் ஒருத்தரை மாற்றிவிடுகிறது. அப்பப்பா. இதுவே பழைய நேயநறுமையாக இருந்தால், அவளுடைய குவளையையும் அவனல்லவா கழுவி வைக்கும் நிலையாக இருந்திருக்கும். விதி ஒருத்தரின் தலை எழுத்தை மாற்றுதோ இல்லையோ, காதல் நிச்சயமாக மாற்றும் என்பதற்கு இதை விட எதை உதாரணமாகச் சொல்வது??’ ஆனால் பாவம், இவள்தான் அது புரியாமல் குழம்பித் தவிக்கிறாள்.
23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…
23 அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற…
21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…
21 ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு…
20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…
20 ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும்…