(15)
‘யாரோ தலைக்குள் ஏறி மேளம் அடிக்கிறார்களா என்ன?’ – ஷ்… என முனகியவாறு விழிகளைத் திறக்க முயன்றாள் விதரணை. விழிகளைத் திறக்க முடியாத அளவுக்குத் தலை பயங்கரமாக வலித்தது.
‘எனக்கு என்னவாகிவிட்டது?’ – குழம்பியவள் கைகால்களை அசைக்க முயன்றாள்; முடியவில்லை. கைகால்களை இறுகக் கட்டிப்போட்டது போன்ற ஒரு உணர்வு. அந்த உணர்வோடு, திறக்க மறுத்த விழிகளைப் பிடிவாதமாகத் திறந்தாள் விதரணை. தலை வலித்ததால் விழிகளைச் சுருக்கியவாறு நிமிர்ந்து பார்த்தாள்.
நிலவறையில் இருக்கிறோம் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. இங்கே எப்படி வந்தோம்… தடுமாறியவளாக மேலும் விழிகளைத் திறந்தவ்ள அதிர்ந்தாள்.
அங்கே இனம் தெரியாத நான்கு பேர், அங்கும் இங்கும் நாற்காலிகளை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்தனர். இருவர் கறுப்பினத்தவர்கள், ஒருவன் வெள்ளையினத்தவன், அடுத்தவன் சீன தேசத்தவனா அல்லது பிலிப்பினோ இனத்தவனா என்று தெரியவில்லை; இரண்டும் கலந்த கலவையில் இருந்தான். ஆனால், மூவரும் அரக்கர்களைப் போல உருண்டு திரண்டு இருந்தார்கள். அந்தப் பிலிப்பினோ இனத்தவனைத் தவிர, மற்ற மூவரும் ஆறடிக்கும் குறையாமல் இருக்க, அவர்களைப் பார்க்கும்போதே விதரணைக்கு வயிற்றைக் கலக்கியது. மூவரின் முகத்திலும் இம்மியளவும் இரக்கம் தெரியவில்லை. ஆனால், அத்தனை பேரின் கவனமும் இன்னொரு இடத்தில் இருக்க, அந்தத் திசைக்கு அசைய மறுத்த தலையை அசைத்துத் திரும்பிப் பார்த்தாள் விதரணை.
அங்கே அவளது தந்தை, தாய், தம்பி என்று மூவரும் அவளைப் போலவே நாற்காலிகளில் கட்டப்பட்டிருக்க, அதைக் கண்டவளின் ஆவி அந்தக் கணமே அவளை விட்டுப் போவது போலத் துடித்துப் போனாள்.
தன்னை மறந்து, “அப்பா… அம்மா… தம்பி…” என்று முனக, அதுவரை அறிவழகனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்த அரக்கர்களின் கவனமும் மெதுவாக விதரணையிடம் திரும்பியது. அதைக் கண்ட விதரணைக்கு, பயப்பந்து உச்சந் தலையில் சென்று அடிக்க, முன்னால் அமர்ந்து இருந்தவர்களை வெறித்துப் பார்த்தாள்.
அப்போதுதான் நடந்தது கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு நினைவுக்கு வந்தது. வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே வந்ததும், திடீரென்று பின்மண்டையில் யாரோ ஏதோ ஒரு கடினமான பொருளால் தாக்கியதும், அதன் பிறகு இருட்டு உலகத்திற்குள் வீழ்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, தேகம் பயத்தில் கிடுகிடுவென்று நடுங்கத் தொடங்கியது.
‘யார் இவர்கள்…? எதற்காக எங்களைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்? ஏதாவது திருட வந்திருக்கிறார்களா? அப்படியே வந்திருந்தாலும் அதைத் திருடிக்கொண்டு போக வேண்டியதுதானே? எதற்குக் கட்டிப்போட்டிருக்கிறார்கள்? ஐயோ… அம்மா, அப்பா தம்பி… அவர்கள் இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்கொண்டிருப்பார்கள்…?’ என்று பதறியவளுக்கு, அப்போதுதான் தந்தையின் நெற்றியிலிருந்து இரத்தம் வந்துகொண்டிருந்தது புத்தியில் உறைத்தது. நெஞ்சம் துடிக்கத் திரும்பிப் பார்த்தாள்.
அவள் நினைத்தது சரிதான். தந்தையின் நெற்றியிலிருந்து மட்டுமல்ல, உதட்டிலிருந்தும் இரத்தம் வந்துகொண்டிருக்க, அதைக் கண்டதும் அதுவரை இருந்த துடிப்பும் கலக்கமும் மாயமாகிப் போக, தன் முன்னால் நின்றிருந்த அந்த அரக்கர்களை எரிப்பது போலப் பார்த்தாள் விதரணை.
“யார்டா நீங்கள் எல்லோரும்? உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காக எங்களைக் கட்டிப் போட்டிருக்கிறீர்கள்?” என்று விதரணை ஆங்கிலத்தில் சீற, அதில் ஒருவன் அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அலட்சியமாகச் சிரித்தான். சிரித்து விட்டு மீண்டும் தங்கள் கவனத்தை அறிவழகனிடம் காட்ட, “டேய்… உங்களிடம்தான்டா கேட்கிறேன்! எதுக்குடா எங்களைக் கட்டிப்போட்டிருக்கிறீர்கள்? மரியாதையாக எங்களை விட்டுவிடுங்கள்… இல்லை” – அவள் முடிக்கவில்லை.
அதிலிருந்த ஒருவன் ஆவேசமாக எழுந்து அவளை நோக்கி வர, பதறிப்போனாள் விதரணை. அவன் வந்த வேகத்தில் தன்னை அடிக்கப் போகிறானோ என்று அஞ்சியவளாக உடலை இறுக்கிக்கொள்ள, அவனோ தன் சுட்டுவிரலை உதட்டில் வைத்து,
“ஷ்… பேபி… சத்தம் வராமல் பேசு…” என்றான் அழுத்தமாக.
வந்தவன் வெள்ளையினத்தைச் சேர்ந்தவன். அவனுடைய விரல்கள் முழுவதும் பச்சை குத்தப் பட்டிருந்தது. கழுத்திலும் குத்திய பச்சை வெளிப் படையாகத் தெரிய, அவனுடைய வெறி கொண்ட அந்த முகத்தைக் கண்டவளுக்குச் சர்வமும் நடுங்கிப் போனது. அச்சத்தில் வாய் மூடிக்கொள்ள, கலக்கத்தோடு அவர்களைப் பார்த்தவளின் விழிகள் அவளையும் மீறிக் கண்ணீரால் நிறைந்து போயின.
அதைக் கண்டு அவன் இரக்கம் கொண்டானா என்று தெரியவில்லை; ஆனால், மின்னிய விழிகளோடு அவளுடைய கன்னத்தைக் கரடுமுரடான தன் விரல்களால் வருடினான். விதரணை அருவருப்போடு தன் முகத்தைத் திருப்பிக்கொள்ள எத்தனிக்க, சட்டென்று அவளுடைய தாடையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினான் அந்தக் கொடூரன்.
“லிசன் பேபி… உன் அப்பாவிடம் எங்களுக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அது முடிந்ததும் நாங்கள் போய்விடுவோம். அதுவரை கொஞ்சம் அமைதியாக நீ இருக்க வேண்டும்… இருப்பாயா?” – மென்மையாக அவன் கேட்பது போல இருந்தாலும், அவனுடைய அந்தப் பேச்சில் தெரிந்த அழுத்தமும் கட்டளையும் விதரணையை அதற்கு மேல் பேச முடியாமல் தடுத்தன.
“வில் யூ…?” – அவன் மீண்டும் கேட்க, அதற்கு மேல் எப்படி எதிர்ப்பது? எதிர்ப்பதை விட அப்போதைக்கு அமைதியாகப் போவதுதான் புத்திசாலித்தனம் என்பது அவளுக்குப் புரிய, பீதியோடு ‘ஆம்’ என்று தலையை மேலும் கீழும் அசைத்தாள். இப்போது அவளுடைய தாடையை விடுவித்தவன், “குட் கேர்ள்…” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு, மீண்டும் அறிவழகனிடம் தன் கவனத்தைக் கொண்டு சென்றான்.
“இதோ பார்… நீ தாமதிக்கிற ஒவ்வொரு விநாடியும் உனக்கும் உன் குடும்பத்திற்கும்தான் ஆபத்து. அதனால் சொல்லிவிடு… எங்கே வைத்திருக்கிறாய்…?” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
அந்த அசுரன் கேட்க, அறிவழகனோ கண்ணீர் வடிய அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தார். பொறுமையிழந்த அந்த அரக்கன் திரும்பித் தன்
சகாக்களைப் பார்க்க, அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட அவர்கள், விதரணையின் கட்டை அவிழ்த்துவிட்டனர். மறுகணம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக அவள் எழுந்து அங்கிருந்து ஓட முயன்ற விநாடி, அந்த வெள்ளையனால் இழுபட்டு அவன் மார்பின் மீது வந்து விழ, அவள் இடைபற்றித் தன்னோடு அணைத்துக் கொண்டான் அந்தக் கயவன். பதறிப்போனாள் விதரணை!
உடல் முழுக்கத் தோன்றிய அருவருப்போடு அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயல, அவனோ தன் வலது கரத்தை அவளுடைய நெஞ்சினூடாக எடுத்துச் சென்று அவளுடைய தாடையை அழுந்தப் பற்றி, சட்டென்று திருப்பி அறிவழகனைப் பார்க்குமாறு செய்து அவள் வயிற்றோடு தன் கரத்தைப் பதித்து அழுத்தியவாறு, மறு கரத்தால் தன் இடையில் தொங்கிய கத்தியை எடுத்து அவளுடைய கழுத்தில் வைத்தவாறு அறிவழகனைப் பார்த்தான்.
“உன் மகள்… பிஞ்சாக… கொழுக் மொழிக் என்று இருக்கிறாள்…” என்றவன் அவள் காதுக்கும் கழுத்துக்கும் மத்தியில் நாசியால் அவள் வாசனையை நுகர்ந்து, “ம்… ஸ்வீட்…” என்றான் இரக்கமற்ற புன்னகையோடு. பின் திரும்பி அறிவழகனைப் பார்த்து,
“எங்களுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டால், அப்படியே அதை வாங்கிக்கொண்டு போய்விடுவோம். உன் குடும்பத்தை ஒன்றும் செய்ய மாட்டோம்… இல்லாவிட்டால்…” என்றவன், அவளுடைய தாடையை அழுத்திப் பிடித்து, அவளின் கன்னத்தோடு தன் கன்னத்தை உரசியவாறு, “உன் மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்… இப்பவே, இங்கேயே உன் முன்னாடி இவளை அனுபவிக்க ஆசை வருகிறது… செய்யட்டுமா? உன் மகளால் எங்கள் நால்வரையும்…” என்றவன் திரும்பி அங்கே நின்றிருந்த கறுப்பனைப் பார்க்க, அவனோ ஒரு மாதிரி வெட்டு வெட்டி முகத்தை அருவெறுப்பாகத் திருப்ப, அதைப் பார்த்து இளக்காரமாகப் புன்னகைத்தவன், “சாரி… அவனால் பெண்களோடு மகிழ்ச்சியாக இருக்க முடியாது…” என்று போகிற போக்கில் சொல்லி விட்டு, “எங்கள் மூவரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியுமா?” என்று கேட்டான். அதைக் கேட்டு அறிவழகனின் முகத்தில் என்றுமில்லாத கோபம் ஓர் உறுமலாய் வெளிவந்தது.
“ஏய்.. நீ எதிர்பார்ப்பது எதுவும் என்னிடமில்லை. தயவுசெய்து என் மகளை விடு…” என்று அவர் கர்ஜிக்க, அதைக் கேட்டுச், சிரித்தான் அந்த வஞ்சகன். அந்தச் சிரிப்பில் அடிவயிறு கலங்க, “தயவுசெய்து என் மகளை விட்டுவிடு… அவளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…” என்று கதறினார் அவர்.
இபோது அந்த அரக்கனின் நாக்கு நீண்டு, விதரணையின் கன்னத்தை நக்கியது. விதரணையோ அருவருப்பில் அவனிடமிருந்து தன்னை விடுவிக்கப் போராடினாள்; ஒரு கட்டத்தில் அந்த அருவெறுப்பின் உச்சத்தில், எதைப் பற்றியும் யோசிக்காமல், தன் தலையால் பலமாகக் குனிந்திருந்தவனின் முகத்தில் மோத, சரியாக அவள் தலை அந்த அரக்கனின் மூக்கில் பட, பொறிகலங்கிப் போனான் அவன்.
வலியில் தன்னை மறந்து மூக்கைப் பற்றியவன் சுதாரிப்பதற்குள், அவன் பிடியிலிருந்து தன்னை உதறி விடுவித்தவள் அங்கிருந்து ஓட முயன்றாள். கண்ணிமைக்கும் தருவாயில் விதரணையின் முந்தானையை அந்த வஞ்சகன் பற்றிக்கொள்ள, பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தாள் விதரணை. அங்கே அவன் மூக்கில் இரத்தம் கொட்ட, கண்களில் கொலைவெறியோடு அவளையே பார்த்திருந்தான் அவன்.
கொஞ்சம் கூட யோசிக்கவில்லை விதரணை. கண்ணிமைக்கும் நொடியில் தன் சேலையை உருவி எறிந்தவள், வாசலை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
ஆனால், அடுத்த விநாடிக்குள் “ஹக்…” என்கிற முனகலோடு தரையில் குப்புற விழுந்தாள் விதரணை. முதுகின் வலதுபக்கம் பயங்கர வலி எழுந்தது. அந்த வலியை உணர இடது கரத்தால் வலித்த இடத்தைத் தொடுவதற்காக முயன்ற நேரம், அந்த அரக்கன் விகாரச் சிரிப்போடு அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
அதைக் கண்டவளுக்கப் பீதியில் உடலே நடுங்கியது. அதுவும் அவன் கரத்திலிருந்த கத்தியைக் காணோம். அப்படியென்றால், அவன் எறிந்த கத்திதான் அவள் தோளைக் குத்திக்கொண்டு இருக்கிறதா? அதுவும் கீழே விழாமல் அப்படியே குத்திண்டிருக்க, அதை உணர்ந்தவளுக்கு முகம் வெளுத்தது; உடல் சோர்ந்தது. ஆனாலும், அடுத்த நொடியில் தன்னைச் சமாளித்துக்கொண்டாள் விதரணை. ‘இது சோரும் நேரமில்லை; தப்பிக்க வேண்டும். யாரையாவது உதவிக்கு அழைக்க வேண்டும். அப்போதுதான் பெற்றவர்களைக் காப்பாற்ற முடியும்… இது அவளால் மட்டும்தான் முடியும்…’
முடிவு செய்தவள் எழ முயன்றாள். முடிய வில்லை. உடல் முழக்க வலித்தது. ஆனாலும் சிரமப்பட்டு அவள் எழ முயன்ற நேரம், அந்த அரக்கன் அவளை நெருங்கிவிட்டிருந்தான். அவள் விலகுவதற்குள் தன் காலை அவள் முதுகில் பதித்து அழுத்தியவாறு, தோள்பட்டையோரம் ஏறியிருந்த கத்தியை ஒரே இழுப்பாக இழுத்து எடுத்தான் அந்தக் கொடூரன்.
“ஆஆஆஆ” தன்னை மறந்து அலறிவிட்டாள் விதரணை. வலி பொறுக்க முடியாமல் தரையைத் தன் மெல்லிய உள்ளங்கையால் படார் படார் என்று அடிக்க, அவனோ அவளுடைய அலறலை இரசித்துப் பார்த்தான். அதை உணர்ந்தவளாகத் தன் அலறலை நிறுத்தி, பற்களைக் கடித்து சீற்ற மூச்சாக எடுத்து எடுத்து விட்டுத் தன்னை நிலை நிறுத்த முயன்றவளுக்கு எழக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு இன்னும் அவன் ஒன்றைக் கால் அவள் முதுகைத் தரையோடு அழுத்திக்கொண்டிருந்தது.
இன்னும் கொஞ்சம் அழுத்தினால் திரும்பவும் மயங்கிவிடும் நிலை அவளுக்கு. ஆனால் அந்தக் கொடியவன், குனிந்து நீண்டு விரிந்த அவளது கார் குழலைத் தன் கரத்தால் சுருட்டிப் பிடித்து இழுக்க, வேறு வழியில்லாமல் எழுந்து நின்றாள் விதரணை. வலியிலும் இயலாமையிலும் துடித்தவள், அவனுடைய இழுப்புக்கு வேறு வழியில்லாமல் நகரத் தொடங்க, மீண்டும் விதரணையை முன்னறைக்கு இழுத்து வந்தான் அவன்.
அதைக் கண்ட அறிவழகனுக்கும் அமுதாவுக்கும் பாதி உயிர் போய்விட்டிருந்தது. “டேய்… அவளை விடுடா…” என்று அறிவழகனும், அமுதாவும், விதுரனும் ஒன்றாக அலற, அவர்களைப் பார்த்து இழித்தானே அன்றி, கிட்டத்தட்ட மயங்கும் நிலைக்குச் சென்றிருந்த விதரணையை அவன் விடுவதாக இல்லை. அந்தக் கொடூர முகத்தோடு விதரணையை ஏறிட்டு,
“இனி இப்படி ஏதாவது நீ முயற்சி செய்தால், அடுத்த விநாடியே இவர்களில் ஒருவரை நீ இழப்பாய்… என்ன சொல்கிறாய்…?” என்று அவன் கேட்க, துடித்துப்போனாள் விதரணை.
“அ.. அவர்களை ஒன்றும் செய்துவிடாதே…” – தன்னை மறந்த பலவீனத்துடன் அவள் கூற, இழித்த அந்தப் பாவி திரும்பி அறிவழகனைப் பார்த்தான்.
அறிவழகனோ தன் மகளுக்கு நடக்கும் அநீதியைக் கண்டு துடித்தவராக,
“உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்… அவளை விட்டுவிடு… இதோ பார், என்னை என்ன வேண்டுமானாலும் செய்… கொல்லப்போகிறாயா, கொல்லு! ஆனால், அவர்களை விட்டுவிடு…” எனக் கெஞ்ச, இளக்காரமாகச் சிரித்தான் அந்தக் கயவன்.
“உன் மகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு வேண்டியது உன்னிடம் இருக்கும் அந்த அறிக்கைளும் ஆதாரங்களும்! எங்கே வைத்திருக்கிறாய்…? அதை மட்டும் கொடுத்து விடு… உன்னையும் உன் குடும்பத்தையும் உயிரோடு விட்டுவிட்டு நான் போய்விடுகிறேன்… இல்லை…” என்றவனின் கரங்கள் விதரணையை இறுக்கி அணைக்க, அவளோ துடித்தாள்.
‘யார் இவர்கள்? எதற்காகத் தந்தையை இப்படி மிரட்டுகிறார்கள்? ஐயோ… இவர்களிடமிருந்து அப்பா, அம்மாவை எப்படிக் காப்பாற்றப் போகிறேன்…?’ – துடிக்க, தந்தையோ அவளைத்தான் செய்வதறியாது பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“சத்தியமாக இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது… நம்பு…” என்று தன் இயலாமையை வெறுத்தவராக அவர் கதற,
“அப்படியா?” என்றான் அவன் இளக்காரமாக.
மறுகணம், அவளுடைய கன்னத்தோடு தன் கன்னத்தை உரசியவனின் கரம், சட்டென்று அவளுடைய ஆடையின் ஊடே சென்று மற்றவர்கள் பார்க்கக் கூசும் செய்கையைச் செய்தது. விதரணை துடித்தாளோ இல்லையோ, அமுதா கதறிவிட்டார்.
விதரணைக்கு அவன் செய்ததில் அவமானத்தை விட, வலிதான் அதிகமாகத் தெரிந்தது. உடல் முழுவதும் யாரோ தீக்கங்குகளைக் கொட்டியது போல எரிய, அவனிடமிருந்து விடுபட எவ்வளவோ போராடினாள் அந்தப் பேதை. ஆனால், மல்லனாக இருந்தவனின் அந்த இறுகிய பிடியில் கோழிக்குஞ்சாகச் சிக்கிக்கொண்டவளால் எப்படித்தான் தன்னை விடுவிக்க முடியும்?
“டேய்… விடுடா என்னை… ஆஆஆ…” – வலியில் அவள் அலற, அறிவழகனோ அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியம் இல்லாமல்,
“டேய்… என் மகளை விடுடா… பிளீஸ் விடு… ஐயோ… நான் என்ன செய்வேன்…” என்று அழுது கதறினார்.
அந்த மிருகமோ அறிவழகனைக் கொடூரமாகப் பார்த்தது. “இதோ பார்… உனக்கு உன் மகள் முழுசாக வேண்டும் என்றால் நான் கேட்பதைக் கொடுத்துவிடு… இல்லை…” என்றவன், தன் கரத்தில் இருந்தவளைக் குனிந்து பார்த்துவிட்டு, தள்ளி நின்றிருந்த அந்த இரண்டு கறுப்பர்களையும் ஒரு மாதிரிப் பார்த்தான். அதில் பொதிந்திருந்த வக்கிரமான அர்த்தத்தைக் கண்ட மற்ற இருவரின் உதடுகளும் விகாரமாக இழித்தன.
(16)
அதே நேரம், ஏற்றமாதிபனின் வாகனம் அந்தத் திருமண மண்டபத்திற்குள் வேகமாக நுழைந்தது. வண்டியைத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு, இன்னும் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்தவாறே மண்டபத்திற்குள் நுழைந்தான். இப்போது மண்டபம் பெரும்பாலும் வெறுமையாக இருந்தது.
உறவினர்கள் அனைவரும் விடைபெற்றுச் சென்றிருந்தனர். அதை விழிகளால் துளாவியவாறு தன் தாய், தந்தையைத் தேட… அவர்கள் ஆனந்த குமாரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அப்பா, அம்மா… நேரமாகிவிட்டது, கிளம்பலாமா? நாளைக்கு நான் திரும்பவும் கால்கரிக்குக் போக வேண்டும்…” என்றவாறு வந்த மகனைத் திரும்பிப் பார்த்து முறைத்தார் மதிவதனி.
“டேய்… அதற்குள் எங்கே போனாய்? உறவினர்கள்
எல்லோரும் உன்னைத்தான் கேட்டார்கள்…” என்றவர், திரும்பி வசந்தாவைப் பார்த்து, “பாருங்கள் வசந்தா இவன் செய்யும் வேலையை! முதலில் திருமணத்திற்கு வரமாட்டேன் என்றான்; பிறகு பார்த்தால் திடீரென்று வந்து நிற்கிறான். இப்போது என்னவென்றால் நாளைக்கே போகிறேன் என்கிறான்… பெற்றது ஒன்றே ஒன்று! அதுவும் பக்கத்தில் இல்லாமல் தொலைவில் இருக்கிறது என்றால் எப்படி? கேட்டால், ‘என் வேலை அப்படி, என்ன செய்வது?’ என்கிறான்… நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இவனுக்கு என்னதான் குறை? இப்படிப்
காவல்துறையில் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று என்ன தேவை? வித்யாதர் ஏழு தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்குப் பணம் ஈட்டி வைத்திருக்கிறார். ஆனால் இவன், அப்பாவின் உழைப்பு வேண்டாம், காவல் துறையில்தான் வேலை செய்யப்போகிறேன் என்று ஒற்றைக்காலில் நின்று அதில் சேர்ந்திருக்கிறான். இவனை என்ன செய்யட்டும்…?” எனத் தாயாய் வருந்தி விழிகளில் கண்ணீரைத் தேக்க, உடனே அவரைச் சமாதானம் செய்ய முயன்றார் வசந்தா.
“ப்ச்… கொஞ்ச நாட்களுக்கு அவன் ஆசைப்படி வேலை செய்யட்டுமே மதி… விடேன்… இனி குடும்பம், குழந்தை குட்டி என்று வருகிறபோது எல்லாம் மாறிப்போகும்…” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கையில் பரிசுப் பொதிகளை ஏந்தியவாறு அங்கே வந்தாள் அபிநயா.
“என்னம்மா… புதுப்பெண்ணே… கிளம்பியாச்சா?” என்று அவன் கனிவுடன் கேட்க, சிரித்த அபிநயா,
“இதோ புறப்பட்டுவிட்டோம் அண்ணா… எல்லாவற்றையும் எடுத்து வைக்கத் தாமதமாகிவிட்டது…” என்றவாறு கையிலிருந்த பொதிகளோட முன்வாசல் வரை சென்றவள், அங்கே அமலன் வாசலில் வண்டியில் தயாராக அமர்ந்திருக்க, ஈரமான படிகளிலில் கவனமாக இறங்கி, வண்டியின் பின்னிருக்கையில் பரிசுப்பொதிகளைப் பத்திரமாக வைத்துவிட்டு மீண்டும் படிகளில் ஏறி வந்த நேரம் விழிகளில் தட்டுப்பட்டது அது! புருவங்கள் சுருங்க, இரண்டு தூண்களுக்கு மத்தியில் செருகியிருந்ததை எடுத்துப் பார்த்தாள். அது ஒரு கைப்பேசி.
“இது யாருடைய கைப்பேசி?” எனத் தனக்குள் பேசியவள், அதை உயிர்ப்பித்துப் பார்த்தாள். அதன் திரையில் விதரணை, விதுரன், அமுதா, அறிவழகன் என்று குடும்பமாகக் குதூகலத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரம், அவர்களுக்கு உதவியாக இன்னும் சில பொதிகளைத் தூக்கிக்கொண்டு வந்த ஏற்றமாதிபன், அவற்றையும் வண்டியில் ஏற்றிவிட்டு அபிநயாவை நோக்கி வந்து “என்னாச்சு அபி? ஏன் இங்கேயே நிற்கிறாய்…?” என்று கேட்டான்.
அந்தக் கைப்பேசியைக் கையில் ஏந்தியவாறு திரும்பி ஏற்றமாதிபனைப் பார்த்தவள்,
“பாருங்களேன் அண்ணா இந்த முட்டாள் பெண்ணை! கைப்பேசியை இங்கேயே வைத்து விட்டுப் போய்விட்டாள்… பாவம், இதைக் காண வில்லை என்று இப்போது தேடிக்கொண்டிருப்பாள்.” என்று சொல்ல, அவனோ,
“யார் அந்த முட்டாள் பெண்?” என்றான் இவன் கேள்வியாக.
வேறு யார்… உங்கள் விதரணைதான்…” சொன்னவள், அதிகப்பிரசங்கித்தனமாகச் சொன்னதை உணர்ந்து நாக்கைக் கடித்துவிட்டு மன்னிப்பாக அவனைப் பார்த்து அசடுவழியச் சிரிக்க. அவனோ தன் தங்கையை முறைத்துவிட்டு, அவள் கையில் இருந்த கைப்பேசியைக் கிட்டத்தட்டப் பறித்து, அதை உயிர்ப்பித்துப் பார்த்தவனுக்கு, அவளது குடும்பப் படம் பளிச்சிட, அதை இமைக்காமல் பார்த்தான். ஏனோ அவனுக்கு விதரணையிடமிருந்து தன் பார்வையை விலக்கவே முடிந்திருக்கவில்லை.
அதே நேரம், கைப்பேசியைக் காணாமல் விதரணை தேடுவாளே என்கிற கவலையில் அவளுடைய வீட்டிற்கு அபிநயா அழைக்க, இப்போதும் அது ‘எங்கேஜ்’ சத்தத்தைத்தான் ஒலித்தது.
“இன்னுமா அவள் வீட்டிற்குப் போய்ச் சேரவில்லை?” குழம்பியவளாக நெற்றியைத் தேய்க்க, ஏற்றமாதிபன் அவளை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு,
“இல்லையே… வீட்டிற்கு அவள் போய் விட்டாளே…” என்றான் உறுதியாக.
“அவள் போய்விட்டாளா? உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்ட தங்கையிடம் பதில் சொல்ல முடியாமல் ஒரு கணம் தடுமாறியவன்,
“ப்ச்… எனக்கு எப்படித் தெரியும்? எல்லாம் ஒரு யூகம்தான்! இங்கிருந்து அவளுடைய வீட்டிற்குப் பேருந்தில் போக நாற்பது நிமிடங்களாவது எடுக்குமா? அவள் இங்கிருந்து சென்று கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகப்போகிறது. இவ்வளவு நேரம் வீட்டிற்குப் போகாமலா இருப்பாள்?” என்றான்.
அவன் சொல்ல, சற்று நேரம் அமைதியாக இருந்தவள், என்ன நினைத்தாளோ அடுத்து விதுரனை அழைத்துப் பார்த்தாள். அவனுடைய கைப்பேசியும் வேலை செய்யவில்லை. முகம் முழுவதும் குழப்பம் பரவ,
“என்னதான் ஆயிற்று இவர்களுக்கு…? இன்று முழுக்க அவர்களின் வீட்டுத் தொலைபேசி வேலை செய்யவில்லை. அறிவழகன் அங்கிளின் கைப்பேசியும் வேலை செய்யவில்லை. இப்போது என்னவென்றால், விதுரனின் கைப்பேசியும் வேலை செய்யவில்லை… சம்திங் ஃபிஷி…” என்றாள் குழப்பமாக. ஏதோ சரியில்லை என்று அவளுக்கும் எதுவோ எச்சரிக்க, ஒருமுறையாவது விதரணையைப் பார்த்தால்தான் நிம்மதியாகும் என்கிற நிலையில் திரும்பி அமலனைப் பார்த்து,
“அமலன், எதற்கும் ஒரு தரம் விதரணை வீட்டிற்குப் போய்விட்டு, அதன் பிறகு என்ன எங்கள் வீட்டில் விட்டுவிடுகிறீர்களா?” என்றாள் கலக்கமாக.
அதைக் கேட்ட அமலனும் ‘சரி’ என்று சொல்லி விட்டு வண்டியை உசுப்பித் தயாராக,
“ஹே… அதெல்லாம் வேண்டாம்… இதை நான் பார்த்துக்கொள்கிறேன்… நீ முதலில் வீட்டிற்குப் போ…” என்றான் ஏற்றமாதிபன் அழுத்தமாக. அதைக் கேட்டுத் தயங்கிய அபிநயா,
“ஆர் யு ஷூவர்… வேண்டும் என்றால் நானே…”
“ப்ச்… நான்தான் சொல்கிறேனே… நான் போய் பார்க்கிறேன் என்று பிறகு என்ன…? வேண்டும் என்றால் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துச் சென்று விட்டில் விட்டுவிட்டுப் போ…” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுக் கையிலிருந்த விதரணையின் கைப்பேசியைத் தன் பாக்கெட்டில் வைத்தவாறே படிகளில் இறங்கத் தொடங்க,
“சரி அண்ணா… உனக்குத்தான், அவளுடைய விலாசம் தெரியாதே? இருங்கள்… குறுஞ்செய்தியில் அனுப்பிவிடுகிறேன்…” என்றவாறு தன் கைப் பேசியை எடுத்து அவனுக்குக் குறுஞ்செய்தியில் விதரணையின் விலாசத்தை அனுப்ப ஆரம்பிக்க, வண்டியிலிருந்து பெய்த மழையில் நனைந்தவாறு வெளியே வந்த அமலன், அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தான்.
இவள் ‘என்ன?’ என்று நிமிர்ந்து பார்க்க, அமலனோ விழிகளால் வெளியே காட்ட, திரும்பிப் பார்த்த அபிநயா வியந்துதான் போனாள். ஏற்றமாதிபன் மண்டபம் விட்டு வெளியேறி, வேக நடையோடு தன் வண்டியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்!
அதைக் கண்டு திகைத்தவள், “இப்போது என் பக்கத்தில்தானே நின்றார்? அதற்குள் எப்படி அங்கே போனான்?” என வாய் பிளக்க, அவள் நிலை கண்டு தன்னை மறந்து சிரித்த அமலன்,
“உனக்கு உன் அண்ணாவைப் பற்றித் தெரியாதா? அவனுக்குப் போய் உன்னுடைய தோழியின் விலாசத்தை அனுப்புகிறாயே…!” எனக் கிண்டலுடன் கேட்க அபிநயாவோ மென்புன்னகை ஒன்றைச் சிந்தியவாறு “ஆமாம்ல…” என்றாள். அதே நேரம், ஏற்றமாதிபனின் வாகனம் ஒருவிதச் சீற்றத்தோடும் உறுமலோடும் வாகனத் தரிப்பிடத்திலிருந்து கிளம்பித் தெருவை நோக்கிப் பாய்ந்திருந்தது.
வண்டியை வேகமாகத் தெருவில் விட்ட ஏற்றமாதிபனின் மனதில் பெரும் யோசனை. ஒருவருடைய கைப்பேசி வேலை செய்யவில்லை என்பது எதார்த்தம்; இரண்டாம் நபரின் கைப்பேசி வேலை செய்யவில்லை என்பது எதேச்சை… ஆனால், அனைத்துக் கைப்பேசிகளும் ஒரே நேரத்தில் வேலை செய்யவில்லை என்பது??? அதை பத்தோடு பதினொன்றாக அவனால் அலட்சியப் படுத்த முடியவில்லை.
ஏதோ அவனுக்குத் தவறாகப் பட்டது. நிறையக் கேள்விகள் மனதில் எழுந்த வண்ணமே இரு்நதன. எதற்காக அவளுடைய வீட்டுத் தொலைபேசி வேலை செய்யவில்லை? ஏன் அவளுடைய தந்தை அவள் அழைத்தபோதும் அழைப்பை ஏற்கவில்லை? வீட்டுத் தொலைபேசியையும் யாரும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் விதுரனின் கைப்பேசியில்கூடத் தொடர்புகொள்ள முடியவில்லை… நிச்சயமாக அங்கே ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது! என்ன அது? குழப்பத்துடன் தன் வண்டியின் வேகத்தைக் கூட்டியவனின் காவல்துறை மூளை பலவாறு யோசிக்கத் தொடங்கியது.
அவள் வீட்டிற்குச் சென்றபோது ஏதாவது சந்தேகப்படும்படி இருந்ததா? கவனம் தெருவில் இருந்தாலும், புத்தி தாறுமாறாக யோசித்தது. அவளைத் தொடர்ந்து சென்றதும், அவள் பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்ததும், கொஞ்சத் தூரம் இருட்டில் நடந்ததும்… நினைவலைகளில் ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்கின. திரும்பத் திரும்ப அதையே நினைத்துக் கொண்டு வந்தவனின் விழிகளில் ஒரு துடிப்பு! சட்டென்று அவற்றுள் கூர்மை வந்து உட்கார்ந்துகொண்டது.
யெஸ்… அவள் நடந்து சற்றுத் தூரம் போனதும் அவளுடைய வீட்டிற்கு அருகாமையில் தெருவிளக்குகள் ஒளிரவில்லை! தெருவிளக்குகள் மட்டுமல்ல, அவளுடைய வீட்டிலும் வெளிச்சம் எதுவும் இருக்கவில்லை. இது எதேச்சையா, இல்லை திட்டமிட்டு ஏதேனும் நடக்கிறதா? அவர்களின் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை, இருட்டடித்த வீடு, தெருவின் விளக்குகள் எரியவில்லை… இது அனைத்தும் எதையோ குறிப்பிட்டுச் சொல்கிறதா? நினைத்தவனின் இதயம் ஒருமுறை தன் துடிப்பை அதிகரித்துப் பின் அமைதியானது.
இல்லை.. அப்படியெதுவும் நடக்க வாய்ப்பில்லை. அறிவழகன் எந்த வம்பு தும்புக்கும் போகாத மனுஷன். அதேபோலத்தான் அவர் மனைவி அமுதாவும்; தான், தன் குடும்பம், குழந்தைகள் என்று வாழும் பெண்மணி. விதுரன் இப்போதுதான் உயர்தரப் பாடசாலைக்கே (போகிறான், அவனாலும் பிரச்சினை வர வாய்ப்பில்லை.
விதரணை…? யோசித்தவனின் புருவங்கள் சுருங்கின. வண்டியின் ஜன்னலோரம் மடிந்திருந்த கரம் எழுந்து அவனுடைய நெற்றியின் கரையோரத்தையும், நெற்றிப்பொட்டையும் அழுந்த வருடிக் கொடுத்தது. ஸ்டியரிங் வீலை இலாவகமாகப் பற்றி, பாதைக்கேற்ப வலம் இடம் என்று அசையும் வலது கரத்தின் சுட்டுவிரல் யோசனையுடன் தாளம் போட்டது.
“அவள் கொஞ்சம் துடுக்குத்தனமாகப் பேசுவாள்; பயமில்லாமல் சட்டென்று எதையாவது செய்து விடுவாள். அதைத் தவிர, நிச்சயமாக அவளாலும் பிரச்சினை வர வாய்ப்பில்லை…”
நினைத்தாலும் ஏனோ மனது சமாதானமாக மறுத்தது. எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், ஏன் அவர்களின் கைப்பேசிகளோ, வீட்டுத் தொலை பேசியோ வேலை செய்யவில்லை? அதுவும் விதுரனின் கைப்பேசிகூட வேலை செய்யவில்லையே! இதை எப்படி எதேட்சையாக எடுத்துக் கொள்வது?
யோசித்தவன், நெற்றியை வருடிக் கொடுத்த இடது கரத்தைக் கொண்டு, பேண்ட் பாக்கெட்டிற்குள் செருகியிருந்த கைப்பேசியை இழுத்து எடுத்தான். மீண்டும் விதுரனை அழைத்துப் பார்த்தான்; எந்த மாற்றமும் இல்லை, அணைக்கப்பட்டிருந்தது. பொறுமையிழந்தவனாக அவர்களின் வீட்டுத் தொலைபேசிக்கு எடுத்தான். இப்போதும் ‘எங்கேஜ்’ ஒலிதான் வந்தது.
ஆத்திரத்தோடு தன் கரத்திலிருந்த கைப் பேசியை மறு இருக்கையில் எறிந்தவனுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. கொஞ்சமாவது
பொறுப்பு வேண்டாமா? வீட்டுத் தொலை பேசி வேலை செய்யவில்லை என்று விதரணைக்குத் தெரியும்தானே. அதையேன் சரி செய்யாமல் வைத்து இருக்கிறாள்? ஒருவேளை, அவனது உள்ளுணர்வு எச்சரிப்பது போல…” நினைத்தவனுக்குச் சட்டென்று வியர்த்தது.
பற்களைக் கடித்துத் தன் உணர்வுகளை அடக்கியவனின் வேகத்தைத் தடை செய்வது போல, தொலைவில் ஏதோ விபத்து ஏற்பட்டது போலத் தெரிந்தது. அத்தனை வாகனங்களும் நகராமல் இடையில் நின்றிருந்தன.
இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிற, கொஞ்சம் கூட யோசிக்காமல் தலைக்கு மேல் இருந்த ரியர்வியூ கண்ணாடியினூடாகப் பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். தொலைவில்தான் ஒரு வண்டி வந்துகொண்டிருந்தது. உடனே தன் வண்டியை மின்னல் வேகத்தில் பின்னால் எடுத்தவன், வலது பக்கமாக இருந்த தெருவிற்குள் நுழைப்பதற்குள், பின்னால் வந்திருந்த வண்டி அவன் வண்டியை மோதுவது போல வந்துவிட்டிருந்தது.
இப்படித் திடீரென்று வண்டி பின்னால் வரும் என்று அந்த வாகன ஓட்டியும் நினைத்திருக்க வில்லை. மயிரிழையில் வேகத் தடையை அழுத்திச் சட்டென்று வண்டியை அடுத்த பாதைக்கு மாற்றி விட்டு, ஆத்திரத்தோடு ஏற்றமாதிபனைக் கண்டிப்பது போல வண்டியின் ஒலிப்பானைக் கத்தவிட்டார். ஏற்றமாதிபனோ அதை எதையும் கருத்தில் எடுக்கும் நிலையில் இருக்கவில்லை.
மின்னலாய் வண்டியைத் திருப்பி, மறு பாதைக்குள் விட்டவன், மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் மட்டுமே செல்ல வேண்டிய தெருவில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டினான். அந்த நேரத்தில் அவன் ஒரு காவல்துறை அதிகாரி என்பதோ, அவன் பொறுப்பான பதவியில் இருக்கிறான் என்பதோ, அவன் சட்டத்தைப் பின் பற்ற வேண்டும் என்கிற எண்ணமோ துளிகூட அவனிடம் இருக்கவில்லை.
‘முதலில் விதரணைக்கு என்னாயிற்று?’ – அது மட்டும்தான் அவன் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

