(14)
பேச்சும் சிரிப்புமாக நேரம் அதன் போக்கிற்குச் சென்று மறைந்திருக்க, விதரணையைத் தேடி வந்தான் விதுரன்.
“அக்கா… எத்தனை நேரமாக இப்படியே பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்? வீட்டிற்குப் போக வேண்டாமா?” எனக் கேட்ட தம்பியின் முகத்தில் களைப்பு நிறைந்திருந்தது. அவனுக்குப் பத்து மணியளவில் தூங்கிவிட வேண்டும்; அதுவும் தாயின் கையால் ஒரு குவளை பால் வாங்கிக் குடித்தால்தான் தூக்கமே வரும்.
விதுரன் வந்து கேட்டதும்தான் விதரணைக்கு நேரத்தின் கணக்கே புரிந்தது. அதிர்ந்தவளாய்க் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்க்க, நேரம் ஒன்பது மணியைக் கடந்திருந்தது.
“அம்மாடி… இத்தனை நேரமாகிவிட்டதா?” எனத் தன்னை மறந்து முனகியவள், உடனே கைப்பேசியை எடுத்துத் தந்தையை அழைத்தாள். அவள் நேரம், அறிவழகன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார் போல ‘எங்கேஜ்’ ஒலி வர, எரிச்சலானாள் விதரணை.
“என்னடா… அப்பா யாருடனோ பேசிக்கொண்டு இருக்கிறார் போலவே…” – இவள் முனக, பொறுமை இழந்து தன் சகோதரியைப் பார்த்த விதுரன்,
“ஒன்பது மணியிலிருந்து அவரை அழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். கைப்பேசியில் ‘எங்கேஜ்’ ஒலிதான் வருகிறது” என்றான்.
“சரி… புறப்படலாம்… நீ சாப்பிட்டுவிட்டாயா?” என்று அக்கறையாய் தம்பியிடம் கேட்க, அவனோ முறைத்தான்.
“உமக்கு இப்போதுதான் என் நினைப்பு வந்ததா?” என அவன் முகத்தைச் சுளிக்க, சிரித்தாள் இவள்.
“நீ என்ன சின்னப் பிள்ளையா, என்ன செய்கிறாய், ஏது செய்கிறாய் என்று அடிக்கடி கவனிக்க…?” என்று தன் தம்பியின் மண்டையில் செல்லமாகக் கொட்டிவிட்டு, நண்பர்களைப் பார்த்து, “நேரமாகிறது… அப்பா எந்த நேரமும் வந்து விடுவார்… நாங்கள் கிளம்புகிறோம்” என்று சொல்ல, மற்றவர்களும் நேரத்தைக் கணக்கிட்டு உடனே கிளம்ப ஆயத்தமாயினர்.
அபிநயாவிடமும் அமலனிடமும் விடைபெற்று, அப்படியே ஆனந்தகுமார், யாதவியிடமும் சொல்லி விட்டுத் திரும்பியவளின் பார்வை ஏற்றமாதிபனைத் தேடியது. அவன் சற்றுத் தள்ளி ஓர் இருக்கையில் அமர்ந்தவாறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்; ஆனால் அவனது பார்வை இவளிடமிருக்க, ஒரு கணம் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள, அவசரமாகத் தன் பார்வையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.
வெளியே மழை அடித்துப் பெய்து கொண்டு இருந்தது.
“ஐயோ… மழை…!” என விதுரன் முனக, இவளும் யோசனையுடன் மழையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். மழை பெய்வதால்தான் தந்தையால் நேரத்திற்கு வர முடியவில்லையோ? எண்ணும் போதே மயூரதி விதரணையிடம் வந்தாள்.
“ஹே… என்ன, அங்கிள் வரவில்லையா? வேண்டுமானால் நான் காரில் அழைத்துச் செல்லவா?” என அக்கறையாகக் கேட்க, அதை மறுத்தாள் விதரணை.
“இல்லை மயூ.. அப்பா இங்கேதான் வந்து கொண்டிருப்பார். நீங்கள் கிளம்புங்கள், பத்திரமாகப் போங்கள்” என்று கூற, மயூரதியும் இதர நண்பர்களை அழைத்துக் கொண்டு, மழைக்குள் நனைந்தவாறு தன் காரை நோக்கி ஓடினாள்.
தொலைவில் இடி முழக்கமும் மின்னல் சத்தமும் பயங்கரமாகக் கேட்டன. வெளிச்சம் சுத்தமாகக் காணவில்லை.
“என்னக்கா… இப்படி மழை அடித்துப் பெய்கிறது?” என மழையைப் பார்த்தவாறே இளையவன் கேட்க, தம்பியைக் கிண்டலாகப் பார்த்தவள்,
“ம்… கொஞ்சம் நேரம் கொடு… வருண பகவானிடம் கேட்டுச் சொல்கிறேன்…” என்றாள் இவள். அவனோ தமக்கையை முறைத்த முறைப்பில், மெல்லிய புன்னகை சிந்தியவள், மீண்டும் கைப் பேசியை எடுத்துத் தந்தையை அழைத்துப் பார்த்தாள்.
இப்போது கைப்பேசி அணைக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் சொன்னது. “சுத்தம்… அப்பாவின் கைப்பேசியில் மின்னூட்டம் இல்லை போல தம்பி…” என்றவள், உடனே வீட்டிற்கும் அழைத்துப் பார்த்தாள். வீட்டுத் தொலைபேசியும் வேலை செய்ய வில்லை; அதிலும் ‘எங்கேஜ்’ ஒலிதான் வந்தது. தாயின் கைப்பேசிக்கும் அழைத்துப் பார்த்தாள்; அதுவும் அமைதியாக இருந்தது.
‘இது என்ன? யாருடைய தொலைபேசியும் வேலை செய்யவில்லை?’ – குழம்பியவள், திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்துவிட்டுத் தம்பியைப் பார்த்தாள்.
“என்னடா… யாரும் கைப்பேசி எடுக்க மாட்டேன் என்கிறார்கள்…?” என யோசனையுடன் இளையவனைக் கேட்க, அவனோ தோள்களைக் குலுக்கிவிட்டு,
“ஆங்… இரும், தொலைபேசி இணைப் பகத்திடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்…” என்று சகோதரி போலவே கூற, ஓங்கித் தம்பியின் மண்டையில் ஒரு கொட்டு வைத்தாள் பெரியவள்.
“அவுச்…” – சகோதரி கொட்டியதில் வலிக்க, தலையை அழுந்தத் தேய்த்துவிட்டவன், பின் மூத்தவளைப் பார்த்து முறைத்து, “பின்னே… மழை கொட்டுகிறதே என்றதற்கு வருண பகவானிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றீரே… நான் சொன்னதும் கோபம் வருதாக்கும்…!” எனத் தம்பி சண்டைக்கு வர, ‘அடப் போடா…’ என்பது போலத் தம்பியை முறைத்துவிட்டு மீண்டும் கைப்பேசியில் தந்தையை அழைக்க முயன்றாள் விதரணை. அவளுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது.
“பேசாமல் நாம் பேருந்திலேயே வீட்டிற்குப் போகலாமா விதுரன்…?” என்றாள் விதரணை. அவளுக்கு ஏனோ மனது படபடப்பாக இருந்தது. இதுவரை தந்தையின் கைப்பேசியில் இணைப்பு கிடைக்காமல் இருந்ததில்லை. தாய் வீட்டிலேயே அதிகம் இருப்பதால் கைப்பேசியை அதிகம் பயன் படுத்துவதில்லை; அது பயன்படுத்தப்படாமலே செயலிழந்து போயிருக்கும். ஆனால், வீட்டுத் தொலைபேசியும் வேலை செய்யவில்லை என்றால் அதை என்னவென்று சொல்வது?
“அக்கா, எதற்கும் கொஞ்சம் காத்திருக்கலாம்… ஒருவேளை இருவரும் ஒன்றாக வருகிறார்களோ என்னவோ…” என்று விதுரன் சொல்ல, வேறு வழியில்லாமல் கொட்டும் மழையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் விதரணை. ஆனால், மனதில் ஒருவித படபடப்பு, தவிப்பு! ஏதோ தவறாக நடப்பது போல உள்ளுணர்வு அவளை எச்சரிக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றாள்.
“விதரணை, என்னாச்சு? அங்கிள் இன்னும் வரவில்லையா?” என அவள் பின்னால் அபிநயாவின் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள் விதரணை. அவளுக்குப் பின்னால் அமலனும் நின்றிருந்தான்.
“ஒன்றுமில்லை அபி… அப்பாவை இன்னும் காணோம்…” என்றவாறு எட்டி, அவர்களின் வாகனம் வருகிறதா என்று பார்த்தாள்.
“அங்கிள் இன்னுமா வரவில்லை? அவரை அழைத்துப் பார்த்தாயா?” என அபிநயா கேட்க,
“ம்… ஆழைத்துப் பார்த்தேன். கைப்பேசிக்கு சார்ஜ் போய்விட்டது போல. அப்பா எடுக்கிறாரில்லை. வீட்டிற்கம் அழைத்தேன். அம்மா எடுக்கவில்லை. நான் நினைக்கிறேன், அம்மாவும் அப்பாவோடு வந்துகொண்டிருக்கிறார்கள் போல…” என்று சொன்னவள், எட்டி மண்டபத்தின் வாசலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரம் ஒரு வண்டி உள்ளே வர, முகம் மலர்ந்தவள், தந்தை வந்துவிட்டார் என்று சொல்வதற்காக வாய் எடுக்க, அது வேறு யாருடையதோ ஒரு வாகணம். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தது.
இத்தனைக்கும் நேரம் வேறு பத்து மணியைத் தொடப் போகிறேன் என்று பயமுறுத்த, “ம்கூம்… இது வேலைக்கு ஆகாது… விதுரா, நாம் பேருந்தில் போய்விடலாம்… எனக்கு என்னவோ தவறாகப் படுகிறது. இதுவரை அப்பா இத்தனை அலட்சியமாக இருந்ததில்லை…” என ஒருவித தவிப்போடு சொன்னவள், திரும்பி அபிநயாவைப் பார்த்தாள்.
“ஏய்… நீ போய் உன் வேலையைப் பார்… உள்ளே உறவினர்கள் உங்களுக்காகக் காத்து இருப்பார்கள்… நாங்கள் போய்க்கொள்வோம்…” என்று அவள் அபிநயாவை அனுப்பிவைக்க முயல, மறுத்தாள் அபிநயா.
“இந்த மழையில், அதுவும் இரவில் தனியாகப் போகப் போகிறீர்களா? ம்கூம்… வேண்டாம்… கொஞ்சம் பொறு… உன்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறேன்…” என்றவள், யாரை அழைக்கலாம் என்று உள்ளே பார்க்க, உடனே மறுத்தாள் விதரணை.
“அதெல்லாம் வேண்டாம் அபி… யாரையும் தொல்லை செய்யாதே, நாங்கள் சமாளித்துக் கொள்வோம்…” என்றதும், அவளைக் கோபமாகப் பார்த்தாள் அபிநயா.
“உனக்கு பைத்தியமா? நேரம் பத்து மணி… இதன் பிறகும் நீ இந்த நகைகளுடன் தனியாக… ம்கூம், அது சரிப்பட்டு வராது! நான் உன்னைத் தனியாக அனுப்ப முடியாது. பொறு… அண்ணாவிடம் கேட்கிறேன்” என்றவாறு அவள் உள்ளே போக எத்தனிக்க, சட்டென்று அவள் கரத்தைப் பிடித்துத் தடுத்தாள் விதரணை.
“ஐயோ… ஆளை விடு! நீ யாருடைய உதவியையும் கேட்க வேண்டாம். நானும் விதுவும் எங்கள் பாட்டில் போய்க்கொள்வோம்…” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் படிகளில் கால் வைக்க,
“ஹே… இந்த மழையில் எங்கே போகிறீர்கள்?” என்றவாறு அங்கே வந்தான் வருண்.
“வருண் அண்ணா… இவளுடைய அப்பா இன்னும் வரவில்லை. அவரை அழைத்துப் பார்த்தால் அவர் கைப்பேசியை எடுக்கவில்லையாம். அதுதான் இவர்களாகவே கிளம்புகிறார்கள்…” என்று அபிநயா சொல்ல,
“ஓ…” என்ற வருண், “வேண்டுமென்றால் நான் காரில் அழைத்துச் சென்று விடுகிறேனே…” என்று முன்வர விதரணைதான் தயங்கினாள்.
சற்று முன் பேசும் சாக்கில் அவள் கைகளையும் தோள்களையும் அவன் தொட்டது நினைவுக்கு வந்தது.
பதட்டமானவளாக, “ஐயோ… அதெல்லாம் வேண்டாம் அண்ணா… நாங்கள் என்ன குழந்தைகளா, வழி தெரியாமல் விழிக்க? எங்கள் பாட்டில் போய்க் கொள்வோம்…” என்று விது மறுக்க, வருண் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டான்.
‘அண்ணாவா… ஒரே நொடியில் அவளுக்கு நான் அண்ணனாகிவிட்டேனா? அது எப்படி… அதெல்லாம் முடியாது! அழகிகள் எல்லாம் தங்கையானால் எனக்கு மணப்பெண்ணே கிடைக்காது…’ என மனதிற்குள் நொந்துபோனவன், “அதெல்லாம் ஒரு பிரச்சினையுமில்லை… நானே அழைத்துச் சென்று விடுகிறேன்…” என்று முன்வந்து விதுரனின் கரத்தைப் பற்றிய நேரம்…
“இங்கே என்ன நடக்கிறது?” என்று அழுத்தமான, ஆழமான குரல் இவர்களின் கவனத்தைக் கவர, நால்வரும் சட்டென்று திரும்பிப் பார்த்தார்கள்.
நிதானமாக நடையுடன் வந்துகொண்டிருந்தான் ஏற்றமாதிபன். அவனைக் கண்டதும் அவளையும் மீறி இதயம் படபடக்க, விதுரனை ஏறிட்டவள், சட்டென்று அவன் கரத்தைப் பற்றி,
“வாடா… நாம் கிளம்பலாம்…” என்றவாறு முன்னேறத் தொடங்க, பாய்ந்து தன் தோழியின் கரத்தைப் பற்றிக்கொண்டாள் அபிநயா. இவளோ கோபமும் கெஞ்சலுமாகத் தன் தோழியைப் பார்த்தவாறு தன் கரத்தை விடுவிக்க முயன்று தோற்றவள்,
“ஏய்… அபி.. என்னடி இது, சின்னப்பிள்ளைகள் போல… கையை விடு…” எனத் தயக்கமும் தவிப்புமாகச் சொன்னாள்.
அபிநயா தன் தோழியை முறைத்துவிட்டுத் திரும்பி ஏற்றமாதிபனைப் பார்த்து, “பாருங்கள் அண்ணா… நேரம் பத்து மணி ஆகிவிட்டது. இன்னும் இவளுடைய அப்பா வரவில்லை. இவள் என்னவென்றால் தனியாகப் பேருந்தில் வீட்டிற்குப் போகிறேன் என்கிறாள். இந்த மழையில், இரவு நேரத்தில் எப்படிப் போவது? அதுதான்…” என்று கூற, நிமிர்ந்து விதரணையை ஏறிட்டான் ஏற்றமாதிபன்.
பின் அபிநயாவைப் பார்த்தவன், “அவள்தான் தனியாகப் போகிறேன் என்கிறாளே, பிறகு எதற்கு மறிக்கிறாய்? உன் தோழி என்ன பத்து வயதுக் குழந்தையா, தனியே போகிறேன் என்றதும் பயப்பட…?” என அவன் அழுத்தமாகக் கேட்க, விதரணையின் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது.
நிமிர்ந்து ஆத்திரத்தோடு அவனை முறைத்து விட்டுத் திரும்பி அபிநயாவைப் பார்த்தவள், “எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை அபி… உன் அண்ணா சொன்னது போல நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. நாங்களே போய்க் கொள்கிறோம்…” என அழுத்தமாகச் சொன்னாள். ஏற்றமாதிபனைப் பார்வையால் ஒரு வெட்டு வெட்டி விட்டு நகர முற்பட, அந்த நேரம்,
“விதரணை… உன்னை நான் அழைத்துச் சென்று…” – வருண் முடிக்கவில்லை. ஏற்றமாதிபனின் பலம் பொருந்திய கரம் சட்டென்று அவனுடைய தோளைச் சுற்றி இறுக்கமாய் விழுந்தது.
அவன்தான் தானும் அனுபவிக்காமல் மற்றவர்களையும் அனுபவிக்க விடமாட்டானே. அதுவும் ஏற்றமாதிபனின் கரம் அழுத்தமாக அவன் தோளைப் பிடிக்க, அதில் உடல் தூக்கிப்போட, சொல்ல வந்ததை இடையில் நிறுத்திவிட்டு வாயை இறுக மூடிக்கொண்டான் வருண்.
தன் பின்னால் வர முயன்ற வருணை அவன் தடுத்திருப்பது அவளுக்குப் புரிந்தது. ‘அந்த அளவுக்குக்கூட என்னை அவனுக்குப் பிடிக்க வில்லையா?’ – நெஞ்சம் பிளந்து எழுந்த வலியை எப்படி வார்த்தைகளால் சொல்வது! ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவள், மீண்டும் அபிநயாவைப் பார்த்தாள். இப்போது அவளது பார்வை அழுத்தமாக இருந்தது.
“என்னைப் பற்றி யோசிக்காதே அபி… நாங்கள் புறப்படுகிறோம்…” என்றவள், அபியின் கரத்தை அழுத்திக் கொடுத்துவிட்டு, ஏற்றமாதிபனை முறைத்தவாறு விதுரனோடு படிகளில் இறங்கத் தொடங்கினாள்.
“இரு விது.. நானாவது உன்னை அழைத்துச் சென்று விடுகிறேனே.. பிளீஸ்…” என்று அபிநயா கெஞ்சலாகக் கேட்க, தன் தோழியை முறைத்தாள் விதரணை.
“லூசா நீ? அங்கே உன்னுடைய உறவினர்கள் காத்திருக்கிறார்கள்; இதில் நீ என்னோடு வரப் போகிறாயா…?” எனக் கோபமாகக் கேட்க,
“இல்லை அபி.. நீ தனியாக…” எனத் தோழி தயங்கினாள்.
சட்டென்று தன் தம்பியின் தோள் மீது கரத்தைப் போட்டுத் தன்னோடு அணைத்து, “உன் அண்ணாதான் சொன்னாரே, நாங்கள் என்ன குழந்தையா என்று? இதோ, எனக்குத்தான் பக்கத்தில் இரும்பு மாதிரி என் தம்பி இருக்கிறானே! எதுவாக இருந்தாலும் இவனைத் தாண்டி… தாண்டித்தான் வர வேண்டும்…” என்று கிண்டலும் சிரிப்புமாகச் சொன்னவள், “தயவுசெய்து என்னைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்காதே அபி… நாங்கள் எங்கள் பாட்டில் போகிறோம்… பிளீஸ்…” எனத் தவிப்போடு முடிக்க, அதற்கு மேல் அபியால் எப்படி மறுக்க முடியும்?
“அப்படியென்றால் கொஞ்சம் பொறு…” என்ற அபிநயா, அவசரமாக உள்ளே சென்று ஒரு குடையை எடுத்து வந்து விதரணையிடம் நீட்ட, அதை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.
விதுரன் அந்தக் குடையின் பொத்தானை அழுத்தி, அதை உயிர்ப்பிக்க முயன்றான். நீண்ட நாட்களாக விரிக்காத குடை போல அந்தப் பொத்தான் இறுக்கமாக இருந்தது. உடனே தன் கரத்திலிருந்த கைப்பேசியை, அழகுக்காக வடிவமைக்கப்பட்டு இருந்த தூண்களுக்கு மத்தியில் செருகிவிட்டு, அவனிடமிருந்து குடையைத் தன் கையில் வாங்கிய விதரணை, இரு கரங்களாலும் பொத்தானை அழுத்த, சில பல முயற்சிகளுக்குப் பின், சிரமப்பட்டுத் தலை விரித்தது குடை.
திரும்பித் தன் தோழியை நன்றியுடன் பார்த்த விதரணை, “நன்றி அபி… நாளைக்கே இந்தக் குடையைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்…” என்றவள், தம்பியை அணைத்துக் குடைக்குள் இழுது்தவாறு மழைக்குள் சென்று மறைந்தாள்.
தன் தோழி மறைந்து செல்லும் வரை பார்த்து இருந்த அபிநயா, பின் திரும்பிக் கோபமாகத் தன் அண்ணனைப் பார்த்தாள். “ஏன் அண்ணா அப்படிச் சொன்னீர்கள்? பாவம், இதுவரை இரவு நேரத்தில் தனியாகப் போய்வர அங்கிள் அவளை விட்டதேயில்லை தெரியுமா?” என்றாள் தன் தோழியை எண்ணி வருந்தியவளாக.
அதைக் கேட்டு நிதானமாகத் தன் தங்கையைப் பார்த்தவன், தன் கரத்தின் இறுகிய பிடியிலிருந்து வருணைக் கைவிட்டு,
“எத்தனை நாளைக்கு உன் தோழி குழந்தைத் தனமாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்? அவரவர் அவர்களின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டாமா?” என அழுத்தமாகக் கேட்டுவிட்டுத் திரும்பி வருணைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, சட்டென்று படிகளில் இறங்கிக் கீழே சென்றான்.
“அண்ணா… இந்த நேரம் எங்கே போகிறீர்கள்?” என அபி அதிர்ச்சியுடன் கேட்க, “பக்கத்தில்தான் அபி… இதோ வந்துவிடுகிறேன்… நீ உள்ளே போ…” என்றுவிட்டு, மழையில் நனைந்தவாறு வண்டியில் ஏறியவன், கண்ணிமைக்கும் நொடியில் அதை உயிர்ப்பித்துத் தெருவில் விட்டான் ஏற்றமாதிபன்.
அதேநேரம், பேருந்து நிறுத்தத்தில் தம்பியோடு நின்றிருந்த விதரணையின் மனது ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அவளால் ஏற்றமாதிபனின் அலட்சியத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ‘கொஞ்சமாவது இவளது நிலையை யோசித்தானா? கொடுங்கோலன்!’ – மனதிற்குள் அவனைத் திட்டியவள், பேருந்து வரவும் தம்பியையும் கூட்டிக்கொண்டு அதில் ஏறினாள்.
பேருந்து புறப்பட்ட அந்த நொடி, அதன் பின்னால் கரிய நிற ‘கேடிலாக்’ ஒன்று பேருந்தின் வேகத்திற்கு ஏற்ப, ஈடுகொடுத்துப் பின்தொடர்ந்து வரத் தொடங்கியது.
பேருந்து அவர்களின் நிறுத்தம் வந்து நிற்கும் வரைக்கும் விதரணையின் சிந்தனை முழுவதும் ஏற்றமாதிபனிடம்தான் இருந்தது. பேருந்து நின்றதும் விதுரன்தான் அவளைத் தட்டினான். “அக்கா… நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது…” அவன் சொல்ல, விழிதட்டி இமைத்தவள் தம்பியோடு கீழே இறங்கினாள்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டிற்குச் செல்லப் பத்து நிமிடங்களாவது நடந்து செல்ல வேண்டும். அந்த இருட்டும் மழையும் அவளையும் மீறி ஒருவித பயத்தைக் கொடுக்க, தம்பியின் கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டாள் விதரணை. என்னதான் திடமாக இருந்தாலும், இயற்கையாகப் பெண்களுக்கு உண்டான அந்த மென்குணம் அவளுக்கும் இருக்கத் தானே செய்யும்! அந்த இருட்டிலும் மழையிலும் இதயம் படபடவென்று அடிக்கவே செய்தது. தம்பியை இழுத்துக் குடைக்குள் விட்டவள், பிடிக்க முடியாத அவன் இடையைப் பிடித்து இழுத்தவாறே நடக்கத் தொடங்கினாள்.
அந்த நேரம், அவர்களின் கவனத்தைக் கவராத வகையில், அந்த ‘கேடிலாக்’ வாகனம் அவர்களின் நடைக்கேற்ப மிக மெதுவாக ஊர்ந்து வந்துகொண்டு இருந்தது. அவர்கள் வீட்டை நெருங்கியதும் ஒரு ஓரமாக அந்த வண்டி நின்றது. அடுத்து, அந்த வாகனத்தின் ஜன்னல் கண்ணாடி கீழே இறங்க, அதில் அழுத்தமான முகத்தோடு அமர்ந்து இருந்தான் ஏற்றமாதிபன். விதரணையும் விதுரனும் வீட்டிற்குள் நுழைவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவர்கள் கதவைத் திறந்து உள்ளே நுழைவதைக் கண்ட பிறகே அங்கிருந்து கிளம்பினான் அவன்.
தங்கள் பின்னால் ஏற்றமாதிபன் பாதுகாப்பாக வந்ததையோ, இவர்கள் வீட்டிற்குள் நுழையும் வரை அவனது விழிகள் தங்களைக் காவல் காத்து நின்றதையோ அறியாத விதரணை, மனதாரத் தந்தையைத் திட்டிக்கொண்டிருந்தாள். ‘இன்று அவருக்கும் எனக்கும் இருக்கிறது சண்டை…’ என்று கோபத்துடன் முணுமுணுத்தவாறே வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.
ஆனால், வீடோ இருட்டடித்துக் கிடந்தது! இது என்ன… இத்தனை இருட்டாக இருக்கிறதே? யோசனையோடு மின்விளக்கைப் போடுவதற்காக விசையில் கை வைத்ததுதான் தெரியும் மறுகணம் கும்மிருட்டு அவளை அப்பிக்கொள்ள, ‘சுளீர்’ என்று பிடறியில் ஏற்பட்ட கடுமையான வலியில் சுயநினைவை இழந்து அப்படியே குப்புற விழுந்தாள் விதரணை.

