September 23, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 13

(13)

மனது உலைக்களமாகக் கொதிக்க, ஒருவித ஆத்திரத்தோடு மண்டபத்திற்குள் நுழைந்தாள் விதரணை. அங்கே எழுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்து, ஆளாளுக்கு மணமக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி, அவளுடைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து கிண்டலும் நகைப்புமாகப் பேசிக்கொண்டிருக்க, இவளைக் கண்ட எலிசபத் முகம் மலரக் கையசைத்து அவளை வருமாறு அழைத்தாள்.

அவள் இருக்கும் மனநிலையில் எதனுடனும் ஒன்றிப் பேசிச் சிரிக்க முடியுமா என்று தெரிய வில்லை; ஆனாலும், தோழி கூப்பிடும்போது எப்படி மறுப்பது? ஏனோதானோ என்று அவர்களை நோக்கிச் சென்றாள் விதரணை. அவளுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அப்போதே வீட்டிற்குச் சென்றுவிட்டால் மனது கொஞ்சம் அமைதியடையும் போலத் தோன்றியது. ஆனால், தோழிகள் விட மாட்டார்களே!

ஒரு பெருமூச்சுடன் சென்றவளின் விழிகள் தம்பியைத் தேட, அவன் இன்னும் நண்பர்களுடன் சுவாரசியமாக எதையோ பேசிக்கொண்டிருந்தான். எப்போதும் கைப்பேசியோடும், ஐபேடோடும் மாரடிப்பவன்; இன்றாவது அது இல்லாமல் நண்பர்களோடு பேசட்டும் என்று முடிவு செய்தவள், தன் வேதனையையும் வலியையும் ஓரங்கட்டிவிட்டு அழைத்த தோழிகளை நோக்கிச் சென்றாள் விதரணை.

வட்ட மேசை மாநாடு போல ஒரு பத்து இருக்கைகள் கொண்ட அந்த பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்களில், வந்தவளுக்கு முன்பாக ஓர் இருக்கையை இழுத்துப் போட்ட எலிசபத், அதைத் தட்டிக் கொடுத்து அமருமாறு பணிந்து விட்டு,

“இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?” என்றாள் ஆங்கிலத்தில்.

“ப்ச்… சும்மாதான்… காற்று வாங்க…” முனங்கியவாறு தன் தோழி கொடுத்த இருக்கையில் அமர்ந்து, திரும்பி அபிநயாவைப் பார்த்தாள். எழுத்துத் திருமணம் முடிந்த உரிமையில் அமலனின் கரத்தைப் பற்றியவாறு, புன்னகையுடன் வாழ்த்த வந்த உறவினர்களோடு பேசிக்கொண்டிருந்தாள். அவளுடைய முகம்தான் எத்தனை மலர்ச்சியோடு இருக்கிறது! மனம் நிறைந்தவன் வாழ்க்கைத் துணையாக வருகிறான் என்றால், அதைவிடப் பேரின்பம் வேறு என்ன இருக்கப்போகிறது?

ஆனால் அவளுக்கு…? நினைத்தவளின் முகம் வேதனையில் வாடிப்போனது. அவளால் ஏற்றமாதிபனை விடுத்து இன்னொருவனை இதே மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள முடியுமா? அவனை விடுத்து இன்னொரு ஆணின் உரிமையான தொடுகையை அப்பழுக்கற்ற உணர்வோடு ஏற்றுக்கொள்ள முடியுமா? நினைத்தவளுக்கு, ‘இல்லை’ என்றுதான் இதயம் ஓங்காரமாய்ச் சொன்னது.

‘அப்படியென்றால் அவளுடைய வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமா? அவள் திருமணம், குழந்தைகுட்டி என்று வாழவே முடியாதா? ஏன்

முடியாது? எல்லோருக்குமே ஆசைப்பட்ட வாழ்க்கையா கிடைத்துவிடுகிறது? ஆசைப்பட்ட வாழ்க்கைதான் கிடைக்க வேண்டும் என்றால், வாழ்க்கையில் 90 விழுக்காடு தனியாகத்தான் இருக்க வேண்டும். வருவான்… நிச்சயமாக உன் மனதுக்குப் பிடித்த ஒருவன் வருவான்!’ என்று மனது உறுதியாகச் சொல்ல, இவளுக்குப் பெருமூச்சுத்தான் வந்தது. கடந்த ஐந்து வருடங்களாக அவனை மறக்காமல் தடுமாறும் அவள் மனது, இன்னொருவனை ஏற்குமா என்பது சந்தேகம்தான்.

தனக்குள் எதை எதையோ எண்ணி உழன்று கொண்டிருக்க, “ஏய்… காலில் என்னடி… கட்டுப் போட்டிருக்கிறாய்?” – எலிசபத் கேட்டாள்.

குனிந்து பார்த்தவள் சலிப்புடன் உச்சுக்கொட்டி விட்டு, “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி மேடையில் தடுமாறி விழுந்தேனே… அப்போது காலில் அடிபட்டு விட்டது…” என்றாள் முனங்கலாக.

“நல்லவேளை… அபியின் அண்ணா பக்கத்தில் நின்றிருந்தார். இல்லையென்றால் என்னாகியிருக்கும்!” – மயூரதி சொல்ல,

“ம்கும்… இவள் வேண்டுமென்றேதான் அவர் கையில் விழுந்தாள் தெரியுமா…?” என்றாள் ஜெயா.

அதைக் கேட்டு அனைத்துத் தோழிகளும் அவளை முறைக்க, அதில் எலிசபத், “நீதானே அவளைத் தள்ளிவிட்டாய்? நீ வேண்டுமென்றே விதுவைத் தள்ளிச் சென்றதை நான் பார்த்தேன்…” என்றாள் முறைப்பாக. அதைக் கேட்டு ஜெயாவின் முகம் கறுத்துவிட்டது.

“அது… நான் ஒன்றும் வேண்டும் என்று செய்யவில்லை… அவசரமாக இறங்க முயன்றேன்… அப்போது…”  – ஜெயா தடுமாற,

“போதும் நிறுத்து ஜெயா! உனக்கு எப்போதும் அவளோடு ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்து பழகிவிட்டது. அவள் கீழே விழுந்து பலமாக அடி பட்டிருந்தால் என்னாகியிருக்கும்?” எனக் கோபமாக மயூரதி கேட்க, உடனே அவளை அடக்கினாள் விதரணை.

“ஹே… இட்ஸ் ஓகே… அதுதான் அவள் தெரியாமல் செய்ததாகச் சொல்கிறாளே… விடுங்கள்…” – என்று சமாதானம் சொல்லிவிட்டுத் திரும்பியவளின் பார்வையில் வருண் விழுந்தான். அவன் சற்றுத் தள்ளித் தன் நண்பர்களோடுதான் பேசிக்கொண்டி ருந்தான். விதரணையைக் கண்டதும் கையாட்டியவன், அங்கே வரட்டுமா என்று சைகையால் கேட்க, இவளோ தடுமாறினாள்.

அதற்கு என்ன பதிலைச் சொல்வது, அவள் தயங்க அவனோ, சட்டென்று எழுந்து பெண்களை நோக்கி வந்தான். வந்தவன், பெண்களைப் பார்த்து,

“ஹாய்.. கேர்ள்ஸ்… உங்கள் உரையாடலில் எங்களையும் சேர்த்துக்கொள்ள மாட்டீர்களா?” என்று கேட்க, பெண்களோ புன்னகைத்தார்கள். அந்தத் திருமணத்திற்கு வந்ததிலிருந்து நிறைய நட்புகளைக் கண்டு பேசிவிட்டார்கள்; அதில் வருணும் ஒருவன்.

“வை நாட் வருண்… தாராளமாகக் கலந்து கொள்ளலாம்…” என்று எலிசபத் சொல்ல, உடனே விதரணைக்குப் பக்கத்திலிருந்த இருக்கை காலியாக இருக்க அதில் அமர்ந்துவிட்டான் வருண்.

அமர்ந்தவன் சும்மா இருந்திருந்தால் பரவாயில்லை; அவன் பாட்டிற்கு விதரணையை வெறிப்பதும், பின் பேச்சில் கவனம் செலுத்துவதுமாக இருக்க, இவளுக்குத்தான் கடுப்பேறியது. வருணைப் பார்ப்பதைத் தவிர்த்தாலும், அவனது துளைக்கும் பார்வை அவளைச் சங்கடப்படுத்தவே செய்தது.

“அவன் உனக்கு ஏற்றவன் அல்ல விதரணை…”  – சற்று முன் ஏற்றமாதிபன் சொன்னது நினைவுக்கு வந்தது. அதற்காகவேனும் அந்த வருணுடன் சிரித்துப் பேசத்தான் நினைத்தாள்; ஆனால், அவளால் அது இம்மியும் முடியவில்லை. பேசுவதற்கு வாய் எடுத்தாலும் ஏதோ ஒன்று அவளைத் தடுத்து அடக்கி ஒடுக்கியது. இதில் அவர்களின் பேச்சோடு ஒன்ற முடியாமல் தவித்தவள், சிரமப்பட்டு நண்பர்களின் பேச்சில் கவனம் செலுத்த முயன்றாள்.

கொஞ்ச நேரத்தில் உணவும் பரிமாறப்பட, அனைவரும் பேசியவாறே எழுந்து சென்று வரிசையில் நின்று ஆளாளுக்குப் பிடித்த உணவைத் தட்டில் எடுத்துப் போட்டு, தங்கள் மேசையில் வந்து அமர்ந்து சாப்பிடத் தொடங்க, சற்று நேரம் சிரிப்பும் கலகலப்புமாக நேரம் நகர்ந்தது. இதில் அபிநயாவும் அமலனோடு சேர்ந்து சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு அங்கே வந்து சேர்ந்து விட்டாள். பிறகு சொல்லவும் வேண்டுமா? கொஞ்ச நேரம் மணமக்களைக் கிண்டலடிப்பதும், அபிநயாவின் காலை வாருவதுமாக நேரம் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஏற்றமாதிபனின் காதில் உள்ளே இருந்து சிரிப்புச் சத்தம் கேட்கத் தன் பேச்சை நிறைவு செய்துகொண்டு வந்து பார்த்தான். அங்கே ஒத்த வயதுடையவர்கள் கிண்டலும் கேலியுமாகச் சாப்பிட்டவாறு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு, தான் அதிகப்படி என்று நினைத்தவனாக விலக எத்தனித்தவனின் கவனத்தில் வருண் விழுந்தான்.

சட்டென்று திரும்பிப் பார்க்க, விதரணை அமர்ந்திருந்த இருக்கையின் மேல் தன் கரத்தைப் போட்டு, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவளைத் தொட்டுப் பேசுவதும், தட்டிக் கொடுப்பதும், நெருங்கி எதையோ சொல்லிச் சிரிப்பதுமாக இருப்பதைக் கண்டதும் அவனுடைய கைமுஷ்டிகள் சட்டென்று இறுகின. பற்கள் ஒன்றை ஒன்று அழுந்தக் கடித்ததால் தாடைகள் புடைத்தன; மூக்கு நுனி சிவந்தது.

அதைக் கண்டவன் முதலில் அங்கிருந்து சென்றுவிடத்தான் நினைத்தான். ஆனால், அந்தக் காட்சி அவனது இரத்த அழுத்தத்தை எகிற வைக்க, அதற்கு மேல் பொறுமையை இழந்தவனாக அவர்களை நோக்கி வேகமாக வந்தான்

அந்த நேரம், விதரணை உண்டு முடித்த தட்டை மேசையில் வைத்துவிட்டு, பின்னூண் (ஞிமீssமீக்ஷீt) எடுத்துவருகிறேன் என்று எழ, எழுந்த வேகத்தில் அவளுடைய பெருவிரல் மேசைக்காலில் மோதுப்பட சுளீர் என்று எழுந்த வலியில், தடுமாறிப் பக்கத்திலிருந்த வருணை நோக்கி விழப் போக, பதறிய வருண், அவளைப் பற்ற முயன்ற நொடிப் பொழுதில் அவளுடைய மேல் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்திருந்தான் ஏற்றமாதிபன்.

தான் மோதுப்பட்டது ஏற்றமாதிபன் என்பது புரிய, சட்டென்று அவன் கரத்தை உதறிவிட்டு, விலகியவள், தன் நிலைநிறுத்துவதற்காக ஒரு இருக்கையைப் பற்றியவாறு நிமிர்ந்து பார்த்தாள். எந்த உணர்வுமற்ற முகத்தோடு அவளையும், அவளருகே எழுந்து நின்றிருந்த வருணையுமே எரிப்பது போலப் பார்த்திருந்தான் ஏற்றமாதிபன்.

திரும்பவுமா? மானசீகமாகத் தன் தலையில் அடித்தவள், முகம் சிவக்க ஏற்றமாதிபனை வெட்டுவது

போலப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்று

விட, அவள் சென்றதும், தன் தலையைச் சற்று சரித்து வருணைப் பார்த்தான் ஏற்றமாதிபன். அவனோ மீண்டும் இருக்கையில் அமர்ந்து, உணவுத் தட்டைத் தூக்கி நண்பனிடம் காட்டிவிட்டு,

“நீ சாப்பிட வில்லையா?” என்றான் எதுவுமே நடக்காதது போல.

ஏற்றமாதிபனுக்கு வருண் மீது கொலைவெறியே வந்தது. அதை வருணும் கண்டுகொண்டான் போல. கிண்டலாகச் சிரித்துவிட்டு உணவுத்தட்டிலிருந்து உணவை முள்ளுக்கரண்டியால் அள்ளி வாய்க்குள் திணித்துவிட்டு, இன்னொரு கரண்டி உணவை அள்ள முயல, அதைக் கீழ்க்கண்ணால் பார்த்த ஏற்றமாதிபன், மெதுவாக அவனை நெருங்கி, யாருடைய கவனத்தையும் கவராத வகையில், அங்கிருந்த பழச்சாற்றுக் குவளையை சுட்டுவிரலால் ஒரு தட்டுத் தட்டிவிட, அது குறிதவறாமல் அப்படியே வருணின் மீது சரிந்து விழுந்தது…

விலை உயர்ந்த பான்டில் பழச்சாறு கொட்டியதும் பதறி எழுந்துவிட்டான் வருண். ஏற்றமாதிபன் வேண்டுமென்றே செய்திருக்கிறான் என்று புரிய நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தவன், பின் பான்டைத் தட்டிவிட, இவனோ அதில் எந்தப் பாதிப்பும் அடையாதவன் போல, அப்படியே நின்று இருந்தான்.

வருணும் பான்டைத் தட்டிவிட்டுப் பின் அங்கிருந்த பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுக் கழிவறை நோக்கிச் செல்ல, அதைக் கண்டு மெல்லிய ஏளனப் புன்னகை ஒன்றைச் சிந்திய ஏற்றமாதிபன், அவனைப் பின்தொடர முயன்றான்.

அதைக் கண்ட அபிநயா,

“அண்ணா… நீங்கள் இன்னும் சாப்பிட வில்லையா…?” என்று கேட்க, புன்னகைத்தவன்,

“இனித்தான்மா…. வந்து சாப்பிடுகிறேன்… நீ சாப்பிடு” என்றுவிட்டு வருணின் பின்னால் சென்றான்.

அதுவரை முகத்தில் கனிவையும் புன்னகையையும் தேக்கி வைத்திருந்த ஏற்மாதிபனின் முகம் இப்போது முற்றாக மாறி அங்கே ஆத்திரமும் இறுக்கமும் குடிபெயர்ந்திருந்தது. கரங்களில் நரம்போடின; உடல் இறுகியது. அதே இறுக்கத்தோடு பேண்ட் பாக்கெட்டிற்குள் கரங்களை நுழைத்தவாறு வருணின் பின்னால் சென்றவன், ஆண்களின் கழிவறைக்குள் நுழைந்தான்.

வருணோ பான்டை ஈரம் தோய்ந்த மென் தாளால் துடைத்துக் கொண்டிருக்க, வேகமாக உள்ளே வந்தவன், கர்ஜிக்கும் சிங்கம்போல மின்னல் வேகத்தில் தன் நண்பனின் ஷேர்ட்டைப் பற்றிச் சுழற்றி அங்கிருந்த சுவரில் மோதி ஓரடிக்கும் மேலாகத் தூக்கிவிட்டிருந்தான்.

சத்தியமாக இதை வருண் எதிர்பார்க்கவே யில்லை.

“டேய்… என்னடா செய்கிறாய்… விடு என்னை…” என்றவாறு திமிறியவனுக்கு இம்மிகூட அசைய முடியவில்லை. ஏற்றமாதிபனின் அசாத்தியமான அந்தப் பலத்திற்கு முன்னால் அவனால் கொஞ்சம் கூட விடுபட முடிந்திருக்கவில்லை. “ஆதிபா…  விடு என்னை…” என்று அவன் திமிற, சட்டென்று அவனைக் கீழே இறக்கிய ஏற்றமாதிபன், கண்ணிமைக்கும் நொடியில் வருணின் அடிவயிற்றில் ஓங்கிப் பலமாக ஒரு குத்து விட்டான். ‘ஹக்’ என்கிற ஒரு சத்தத்தோடு வாயில் தண்ணீர் கொட்ட, வலியில் முனகினான் வருண்.

மீண்டும் அதே இடத்தில் ஒரு குத்து! மொத்தமாகச் சுருண்டுபோனான் வருண். இப்போது ஏற்றமாதிபன் வருணைப் பற்றியிருந்த கரத்தை விட, தொப்பென்று தரையில் விழுந்தவன், கருவறையில் அமர்ந்திருக்கும் குழந்தையைப் போலச் சுருண்டு, வலியில் முகம் கசங்க இருமியவாறு துடிக்க இப்போது நிதானமாக அவன் முன்னால் ஒற்றைக் கால் மடித்து அமர்ந்தான் ஏற்றமாதிபன்.

சுருண்டு கிடந்தவனின் நெஞ்சுப்புறத்துச் சட்டையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து எழுப்பி, அவன் முகத்தைத் தன் முகத்திற்கு நேராக இழுத்து வந்தவன்,

“டோன்ட்… பிளே…. வித்… மை… ஜ்ஜ்ஜ்ஜ்ஜ் எமோஷன்…” என்றான் கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்பி.

வருணோ இன்னும் வலியிலிருந்து விடுபடாதவனாக, முகம் கசங்கியிருந்தாலும், அந்த நிலையிலும் தன் நண்பனைக் கிண்டலாகப் பார்த்து,

“ஏன்…? எதற்கு இத்தனை கோபம்… அவளைத் தொட்டால் உனக்கு என்ன செய்கிறது? நீ… நீ தானே அவளை வேண்டாம் என்றாய்? பிறகு எதற்கு அவள் விஷயத்தில் தலையிடுகிறாய்…” என்றவாறு, தன் சட்டையைப் பற்றியிருந்தவனின் கரத்தைப் பலம் முழுவதையும் திரட்டித் தள்ளி விட்டுத் தள்ளாட்டத்தோடு எழுந்தான். வயிறு வலிக்க அழுந்தப் பற்றியவன்,

“இட்ஸ் ஹேர்ட்ஸ் மான்…” என்றான் வலியும் வேதனையுமாக.

அதைக் கேட்டு நிதானமாக எழுந்து நின்ற ஏற்றமாதிபன், கொஞ்சமாய் கசங்கிய தன் சூட்டை சரியாக்கியவாறு,

“அவளை நெருங்காதே என்று சொன்னேன்… நீ கேட்கவில்லை… அதுதான்… உனக்கப் புரியும் மொழியில் சொன்னேன்…” என்று அலட்சியமாகச் சொல்லத் திரும்பித் தன் நண்பனைப் பார்த்து முறைத்தான் வருண்.

“நீதானே அவளை வேண்டாம் என்று ஒதுக்கினாய்… இப்போது மட்டும் அவளைத் தொட்டால் உனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதோ?” – அவன் சீற, பான்ட் பாக்கட்டிற்குள் கைகளை வைத்தவாறே, நடந்து சென்று தன் நண்பனை நெருங்கினான் ஏற்றமாதிபன்.

சற்று முன் வாங்கிய குத்திலிருந்தே இன்னும் தெளியாமல் தடுமாறி நின்றிருந்த வருணுக்கு அவன் நெருக்கம் ஒருவிதப் பீதியைக் கொடுக்கத் தன்னையும் மீறிப் பின்னால் சென்று அங்கிருந்த சுவரோடு மோதி நிற்க, ஏற்றமாதிபன், அவன் முன்னுடலோடு தன் முன்னுடல் மோதும் அளவுக்கு நெருங்கி நின்று நிதானமாகத் தன் நண்பனைப் பார்த்தான்.

அவனுடைய அந்தச் செயலில் வருணுக்கு வெளிப்படையாகவே உடல் நடுங்கியது. ஆனால் ஏற்றமாதிபனோ, இமைக்காமல் தன் நண்பனைப் பார்த்தான். அந்த விழிகளில் ஒரு விதமான வெறி இருக்க,

“ஏற்கெனவே உன்னை எச்சரித்திருந்தேன் வருண்… இப்போதும் எச்சரிக்கிறேன்; அதுவும் கடைசித் தடவையாக எச்சரிக்கிறேன்! அவள் அனுமதியில்லாமல் உன் கரம் அவள் மேனியில் பட்டால்… ம்கூம்… அவளுடைய ஒற்றை மயிர் முனையில் கூடப் பட்டால்… அதற்குப் பிறகு வேறு ஒரு ஏற்றமாதிபனை நீ பார்ப்பாய்!” என்று அவன் சொன்ன விதத்தில் கொஞ்சம் ஆடித்தான் போனான் வருண். இதற்கு மேல் மறுத்தால் என்ன நடக்கும் என்பது அவனுக்குத் தெரியும் என்பதால், பயம் அப்பிய முகத்தோடு தலையை சரியென்று ஆட்டியவன்,

“ஆனால்… நீ அதிகம்தான் அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறாய். எல்லாக் காலத்திலும் அவளுக்கு உன்னால் பாதுகாப்பு கொடுக்க முடியாது ஏற்றமாதிபன்…” என்று வருண் சொல்ல, மெல்லிய கிண்டல் புன்னகை ஒன்றைச் சிந்தினான் ஏற்றமாதிபன்.

பின் விலகி, ஆண்கள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தன் இயற்கைத் தேவையை நிறைவு செய்தவன், ஆடையைச் சரியாக்கியவாறு நடந்து சென்று கரங்களைக் கழுவியவாறே கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். பின் திரும்பி நண்பனைப் பார்த்து,

“யார் சொன்னது? அவளை வேண்டாம் என்று ஒதுக்கித்தான் வைத்திருக்கிறேன் வருண்… அதற்காக அவளை விட்டு மொத்தமாக விலகிவிட்டேன் என்று அர்த்தமில்லை!” என்று சொல்ல, தன் நண்பனை முறைத்தான் வருண்.

“நீயும் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டாய், இன்னொருத்தனையும் நெருங்க விடமாட்டேன் என்றால் என்ன அர்த்தம். அப்படி என்றால், அந்தப் பெண் காலம் முழுக்க இப்படியே இருக்க வேண்டுமா?” இவன் சீற்கமாகக் கேட்க ஏற்றமாதிபனின் செயல் ஒரு கணம் நின்றது. பின் மறுப்பாகத் தலையை அசைத்து,

“அவளுக்கு தகுந்த நல்லவன் கிடைக்கும் வரை நான் இப்படித்தான் இருப்பேன்…” என்று ஏற்றமாதிபன் உறுதியாகச் சொல்ல தன் நண்பனைப் புரியாமல் பார்த்தான் வருண்.

“உனக்கு என்னதான்டா பிரச்சனை… அந்தப் பெண்ணுக்கு நான் பொருத்தமானவன் இல்லையா?” இவன் கேட்கத் தண்ணீர் குழாயை நிறுத்திய ஏற்றமாதிபன் கரங்களை உதறியவாறே, திரும்பித் தன் நண்பனைப் பார்த்து,

“இல்லை…” என்றான் உறுதியாக. அதைக் கேட்டு எரிச்சலோடு ஏற்றமாதிபனைப் பார்த்து,

“எதை வைத்து இல்லை என்கிறாய்?” அடக்கி வைத்த ஆத்திரத்தோடு கேட்டான் வருண். கையில் ஈரத்தோடு நிமிர்ந்து தன் நண்பனைப் பார்த்தவன், எட்டி சுவரில் தொங்கியிருந்த மென்தாள்களை தாங்கி இருக்கும் பெட்டியிலிருந்து மென்தாள்கள் சிலதை இழுத்தெடுத்துக் கரங்களைத் துடைத்தவாறே.

“விதரணை பிறந்து வளர்ந்தது எல்லாம் கனடாவாக இருக்கலாம். ஆனால், அவள் வளர்ந்த முறை ஈழத்துப் பண்பாட்டில்; தமிழ்ப் பண்பாட்டில். அவளை நெருங்குவதற்கென்று ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி நிச்சயமாக உன்னிடமில்லை…” என்றான் ஏற்றமாதிபன் தெளிவாக.

“எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?” கோமாய் கேட்க, கரத்திலிருந்த தாளை குப்பைத் தொட்டியில் வீசிய ஏற்றமாதிபன் திரும்பித் தன் நண்பனை அழுத்தமாகப் பார்த்தான்.

“உன்னால் பெண்களைக் கண்டால் வழியாமல் இருக்க முடியாது… இன்றைய தேதிக்கு நீ ஆறு பெண்களோடு நட்புப்பாராட்டியிருக்கிறாய். ஏதாவது ஒரு குறையைச் சொல்லி அவர்களை நட்பிலிருந்து முறித்துவிட்டாய். உன்னால் நிதானமாக ஒன்றின் மீது நிலைத்திருக்க முடியாது. உனக்கு ஏற்றவள் விதரணையல்ல…” என்றவன் தன் நண்பனை அழுத்தமாகப் பார்த்தான்.

“நீ எதற்காக இப்படியெல்லாம் செய்கிறாய் என்று எனக்குத் தெரியும் வருண். இதற்குக் காரணம் அபிடநயா என்றும் எனக்குத் தெரியும். உன் முயற்சியை இத்தோடு விட்டுவிடு… நீ என்னதான் முயற்சி செய்தாலும் நீ நினைப்பது நடக்காது… விதரணை நன்றாக இருக்கவேண்டும்… எதிர்காலம் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். புரிந்துகொள்…” அழுத்தமாகச் சொன்னவன் அங்கிருந்து வெளியேறிவிட, வருண் நெற்றியை வருடியவாறு சுவரில் சாய்ந்து நின்றான்.

இந்த ஏற்றமாதிபன் இத்தனை அறிவாளியாக இருந்திருக்க வேண்டாம். நொடிப்பொழுதில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொண்டானே. வருணுக்குத் தன்னையும் மீறி உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று எழவே செய்தது.

“பார்க்கலாம்டா… எவ்வளவு தூரத்திற்கு நீ போகிறாய் என்று நானும் பார்க்கிறேன்…” வாய்விட்டுச் சொன்னவன், மீண்டும் தன் பான்டை சுத்தமாக்கத் தொடங்க வெளியே வந்த ஏற்றமாதிபனின் பார்வை உடனே விதரணையைத்தான் தேடியது.

அவள் பின்னூணை (Dessert) அளைந்தவாறு நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தாள். அதைக் கலைக்க மனமில்லாமல் ஓரமான ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டவனின் விழிகள் என்னவோ விதரணை மீதுதான் நிலைத்திருந்தன. அவளும் சூழலோடு ஒன்ற முடியாமல், வேறு வழியில்லாமல் அமர்ந்து பேசுகிறாள் என்பது அவனுக்குப் புரியவே செய்தது. ஆனால், அவனும்தான் என்ன செய்வான்? அவனால் ஒரு எல்லையைத் தாண்டி செல்ல முடியாதே.

அந்த நேரம், இவளது பார்வையும், மலரைக் கண்ட வண்டாக அவனையே மொய்க்கத் தொடங்கி விட்டது. அவனைப் பார்க்க் கூடாது என்று புத்திக்குத் தெரிகிறது. ஆனால் பாழாய் போன மனசுக்குத் தெரியவேண்டுமே. உள்ளே வந்த அவன் கம்பீரமும், அவன் அமர்ந்து அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பதையும் தன்னை மறந்து இரசித்துப் பார்த்தாலும் உள்ளம் குறுகுறுக்கவே செய்தது.

ஏய் அவன் உனக்கு சொந்தமானவனில்லை… அவனுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருக்கும். ஏன் குழந்தை கூட இருக்கும். இந்த நிலையில் அவனை இரசிப்பதே மாபெரும் குற்றம்… உன் கவனத்தைத் திசை திருப்பிக் கொள்…” மனசாட்சி இடித்துரைத்தாலும் புத்தி கேட்டால்தானே.

பார்த்து இரசிப்பதும் ஒரு குற்றமா? இப்படித் தான் நினைத்தாள் விதரணை. அந்த நேரம் அவளுக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த மயூரதி, “ஏய்… விதரணை… உன்னைத்தான்… விது…” எனச் சத்தமாக அழைத்து அவள் தொடையில் ஓர் அடி போட்டாள்.

‘சுளீர்’ என்று எழுந்த வலியில் “அவுச்…” என்று முனகியவள் கோபத்தோடு நிமிர்ந்து பார்க்க, மயூரதிதான் பல்லைக் காட்டிக்கொண்டு நின்று இருந்தாள்.

முறைத்தவள், “ஷ்… ஏன்டி அடித்தாய்?” எனச் சிணுங்கியவாறு தொடையை வருடிக் கொண்டாள்.

“பின்னே… எத்தனை தரம் உன்னை அழைப்பது? எங்கோ நினைவில் இருந்தால் என்ன அர்த்தம்? அப்படி எந்தக் கோட்டையைப் பிடிப்பதாக உத்தேசம்?” என்று கிண்டலும் கேலியுமாகக் கேட்க, அப்போதுதான் அவள் வேறு உலகத்திற்குச் சென்றதே அவளுக்குப் புரிந்தது. அசடு வழிந்தவள், “அது… ஒன்றுமில்லை… நேரம் போகிறதே… கிளம்ப வேண்டும்… அப்பாவைக் காணவில்லையே என்று யோசித்தேன்” என்றாள் சமாளிப்பாக.

“என்னது… நேரம் போகிறதா? ஏய்.. இன்னும் எட்டு மணி கூட ஆகவில்லை… அதற்குள் நேரம் போகிறது என்கிறாய்? எத்தனை நாட்களுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் ஒன்றுகூடியிருக்கிறோம்! அதை அனுபவித்து மகிழ்வதை விட்டுவிட்டுக் கிளம்பத் தயாராகிறாய்…!” எனக் கோபமாக அபிநயா சொல்ல, அதைத் தொடர்ந்து பேச்சு சுவாரசியமாகச் சென்றது.

எது எப்படியாக இருந்தாலும், ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்பது போல, விதரணையின் பார்வை அவனை நோக்கிச் செல்வதை ஏனோ தடுக்கவே முடியவில்லை.

What’s your Reaction?
+1
16
+1
5
+1
4
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!