(20)
எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த முத்தத்தில் தன்னை மறந்து கிடந்தவளின் மூளையில், சட்டென்று முன்தினம் கண்ட கனவின் ஒரு பகுதி மின்னலாய் வந்து போனது. அதுவரை வேகமாக அவன் இதழ்களின் சுவையை உணர்ந்தவளிடம் ஒரு தடுமாற்றம். மென்மையாக மூடியிருந்த விழிகளில் சிறு அசைவு.
மீண்டும் அதே காட்சி அவள் மூளையில் வந்து போக, சட்டென்று விழிகள் இறுகின. முத்தத்தின் வேகம் தடைப்பட, திரும்பவும் அந்தக் கனவின் ஒரு பகுதி அவள் மூளையின் ஒரு பக்கத்தில் மின்னலாய் எழ, சட்டென்று அவன் இதழ்களிலிருந்து தன் இதழ்களைப் பிரித்தெடுத்தாள் விதரணை.
அவனோ, மீண்டும் அவள் இதழ்களைத் தேடிப் பயணப்பட்டு நகர, அவன் மார்பில் கரம் பதித்து அவனைத் தடுத்தவள்,
“அந்த ஆவணங்களை… அப்பா… அப்பா எங்கே வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியும்!” என்றாள் ஒருவித வேக மூச்சுடன்.
அதுவரை முத்தம் கொடுத்த மயக்கத்தில் மொத்தமாகத் தன்னை இழந்திருந்தவன், அவள் சொன்னதில் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.
“என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்டபோது, அவனிடமிருந்த ஆசை மொத்தமாகத் துடைத்தெடுக்கப்பட்டிருந்தது.
“அப்பா… அந்த முக்கியமான ஆவணங்களை எங்கே வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும்!” அவள் சொல்ல, அவளை ஏறிட்டுப் பார்த்தவன் அவள் தோள்களைப் பற்றி, “எங்கே… எங்கே வைத்திருக்கிறார்?” என்றான் பரபரப்பாக. அது தெரியாமல் தானே இத்தனை சிக்கல்களும்!
“அது… அது பேஸ்மென்டில்…” சொன்னவள், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “நேற்று இரவு… நான் ஒரு கனவு கண்டேன். அதில்… அப்பா தலையில் தூசியோடு வந்து நின்றார். அந்தத் தூசி பேஸ்மென்டிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்…” அவள் குழப்பமும் தயக்கமுமாகச் சொல்ல, இப்போது அவளைப் பொறுமையிழந்து பார்த்தான் ஏற்றமாதிபன்.
“கனவா? கனவில் வருவதை வைத்து அவர் ஆவணங்களைப் பேஸ்மென்டில்தான் வைத்திருப்பார் என்று என்ன நிச்சயம்? யாராவது இதைக் கேட்டால் சிரிப்பார்கள்!” எரிச்சலுடன் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து எழ, அவளும் அவன் கூடவே எழுந்து நின்றாள்.
“இல்லை… இல்லை… அப்படியல்ல! ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, அப்பா பேஸ்மென்டிலிருந்து மேலே வந்திருந்தார். அவர் தலையெல்லாம் தூசி படிந்திருந்தது. அப்போதே நான், ‘பேஸ்மென்டில் என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டேன்… ஒரு கணம் அவர் முகத்தில் தடுமாற்றத்தைக் கண்டேன். நிச்சயமாக அப்பா பேஸ்மென்டில்தான் அந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்!” அவள் உறுதியாகச் சொல்ல, குழம்பினான் ஏற்றமாதிபன்.
“ஆர் யு ஷ்யூர்? ஆனால்… உன் அப்பாவின் வீட்டைச் சல்லடையாகத் தேடியவர்கள் பேஸ்மென்டை மட்டும் சும்மா விட்டிருப்பார்களா? இதுவரை அவர்களுக்கு எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லையே…” அவன் தன் நெற்றியை வருடியவாறு சொல்ல, அவளும் குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.
“அதற்குப் பதில் என்னிடமில்லை. ஆனால் நிச்சயம் அப்பா அதை பேஸ்மென்டில், அதுவும் ‘பர்னஸ்’ இருக்கும் இடத்தில்தான் எங்கோ மறைத்து வைத்திருக்க வேண்டும். யோசித்துப் பாருங்கள், என்னை ஒருவன் தவறாகத் தொட்டு அவரைப் பயமுறுத்த முயன்றபோதே உண்மையைச் சொல்லாதவர், அந்த ஆவணங்களை அத்தனை சுலபமாக இன்னொருவன் கண்டுபிடிக்கும்படியா மறைத்து வைத்திருப்பார்?”
அவள் கேட்க, ஏற்றமாதிபனும் சற்று யோசித்தான். அவள் சொல்வதும் சரிதான். ஆனால், எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத எந்த ரகசிய இடத்தில் அதை அவர் ஒளித்திருப்பார்? யோசித்தவன், அடுத்த கணம் விரைந்து சென்று கரிய நிறச் சட்டை ஒன்றை எடுத்து அணியும்போது, அவனுடைய கைப்பேசி அழைத்தது.
உடனே எடுத்துப் பார்க்க, வருண்தான் அழைத்திருந்தான். அதை ஆன் செய்து காதில் வைத்தவன்,
“சொல்லு வருண்…” என்றான் பரபரப்பாக.
“ஏற்றன்… நேற்று உன்னைச் சுட வந்தவனைப் பற்றி விசாரித்துவிட்டேன்…” வருண் சொல்ல, ஏற்றமாதிபனின் அசைவு தடைப்பட்டது.
“ம்…” இவன் சொல்ல, மறுபக்கம் ஒரு பெருமூச்சு வெளிவந்ததன் அடையாளமாகச் சத்தம் கேட்டது.
“என்னாச்சு வருண்…?” என்றான் ஏற்றமாதிபன் கூர்மையாக.
“அவன்… வேலை செய்வது ‘ஆரிஸ் பயோ பார்மா’ என்கிற நிறுவனத்தில்…” வருண் சொல்ல, ஒரு வினாடி அமைதி காத்த ஆதிபன்,
“இது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு உருவான மருந்தாலை தானே… இதற்கும், ஜெனரிஸ் பார்மாவுக்கும் இடையில் ஏதாச்சும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்தாயா?” பரபரப்போடு கேட்டான்.
“விசாரித்தேன் ஆதிபா… நிஜத்தைச் சொல்ல வேண்டும் என்றால், வெளிப்படையாகப் பார்க்கும்போது இரண்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற முறையில் மறைமுகமாக ஆரிஸ் பயோ பார்மா, ஜெனரிஸ் பார்மாவின் நிழல் நிறுவனமாகச் (Shell Company) செயல்படுகிறதோ என்று பலத்த சந்தேகம் எழுந்திருக்கிறது…” என்றதும் ஏற்றமாதிபனின் முகத்தில் ஒரு பளபளப்பு.
“எதை வைத்துச் சொல்கிறாய்?”
“ஆரிஸ் பயோ பார்மா பற்றி இணையதளத்தில் தேடினேன்… அப்போது அவர்களின் தளம் சார்ந்த ஒரு புகைப்படம் என் கண்ணில் சிக்கியது. உனக்கு அனுப்புகிறேன் பார்…” என்று சொல்லிவிட்டு, அவன் கைப்பேசிக்கு அந்தப் புகைப்படத்தை அனுப்ப, உடனே அந்தப் புகைப்படத்தைத் திறந்து பார்த்தான் ஏற்றமாதிபன். அங்கே இரவு நேர மின்விளக்கின் வெளிச்சத்தில், ஆரிஸ் பயோ பார்மாவின் வாகனத் தரிப்பிடத்தின் மறைமுகமான ஓர் ஒதுக்குப்புறத்தில், ‘ஜெனரிஸ் பயோ பார்மா’வின் பெரிய சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
அதைக் கண்டவனின் விழிகள் பளபளத்தன. அப்போ, அவன் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது போலவே, ஜெனரிஸ் பயோ பார்மா தன் சட்டவிரோதச் செயல்பாடுகளை, புதிய நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலமே செய்து வருகிறது!
“அப்போ, ஜெனரிஸ் பார்மா தன் சட்டவிரோதமான செயல்பாடுகளை இந்த ஆரிஸ் பயோ பார்மா மூலமாகத்தான் செய்கிறது… இதை உறுதிப்படுத்தினாயா?” என்றான் ஏற்றமாதிபன் பரபரப்போடு.
“ம்… இப்போது அதைத்தான் ஆழமாக விசாரித்துக்கொண்டிருக்கிறேன் ஆதிபன்… சீக்கிரம் அதற்கான தகுந்த ஆதாரத்தைக் கண்டுபிடித்துவிடுவேன்…” அவன் சொல்ல,
“குட்…. நீ இதைப் பார்த்துக்கொள் வருண்… எனக்கு இங்கே ஒரு அவசர வேலை இருக்கிறது. முடித்துவிட்டுத் திரும்ப அழைக்கிறேன்…” இவன் சொல்ல,
“ஏன் என்னாச்சு? எங்கே கிளம்புகிறாய்?” என்றான் வருண் அறியும் ஆவலில்.
“பிறகு சொல்கிறேன். நீ அந்த விசாரணையைக் கவனி…” என்றவன் கைப்பேசியைத் துண்டித்துவிட்டு, விதரணையைப் பார்த்தான்.
“சரி விதரணை… நீ எங்கும் போகாதே. இங்கேயே பத்திரமாக இரு… நான் போய் அந்தப் பேஸ்மென்டைப் பார்த்துவிட்டு வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு வெளியேற முயல, சட்டென்று அவன் கரத்தைப் பற்றியவள்,
“நானும் வருகிறேன்!” என்றாள் பரபரப்பாக.
“நோ!” அவன் சொன்ன விதத்தில் அந்த அறையே ஒரு கணம் நடுங்கித்தான் போனது.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, “நோ… நீ இங்கேயே இரு. நான் போய் வருகிறேன்…” என்றவன், மின்னல் வேகத்தில் அறையை விட்டு வெளியேறித் தன் அலுவலக அறையின் பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்தான். அதிலிருந்த துப்பாக்கியைப் பேண்ட்டின் பின்புறத்தில் செருகிவிட்டு வேக நடையுடன் சென்று தன் காரின் கதவைத் திறந்து உள்ளே அமர, அடுத்த கணம் மறுபக்கக் கதவு திறந்து உள்ளே ஏறி அமர்ந்திருந்தாள் விதரணை.
அதைக் கண்டு அதிர்ந்தவன்,
“நீ இங்கே என்ன செய்கிறாய்? உன்னை வீட்டில் இருக்கச் சொன்னேனே!” என்று அவன் சீற, அவளோ தன் இருக்கை வாரை இழுத்துப் போட்டவாறு, நேராகப் பார்த்து,
“நான் உங்களுடன்தான் வரப்போகிறேன்,” என்றாள் உறுதியாக.
“பைத்தியம் போலப் பேசாதே விதரணை! நான் போவது உன் வீட்டிற்கு. அதுவும் ரவீன் லாட்டிற்குள் நுழைந்து போகப் போகிறேன்… அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தவிர, ஏற்கனவே நடந்த சம்பவத்திலிருந்து நீ இன்னும் மீண்டு வரவில்லை. திரும்பவும் அந்த வீட்டைப் பார்த்தால் அந்த அதிர்ச்சி உன்னைத் தாக்கும்; உன்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. சொல்வதைக் கேள்… இறங்கு,” அவன் சொல்ல, அவளோ காது கேளாதவள் போல வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள்.
“விதரணை, உன்னிடம்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்… இறங்கு!” என்று அவன் அழுத்தமாகச் சொல்ல, திரும்பி ஏற்றமாதிபனைத் தீர்க்கமாகப் பார்த்தாள் விதரணை.
“இல்லை ஆதிபன். நானும் உங்களுடன் வருவேன். நானும் என் வீட்டைப் பார்க்க வேண்டும்,” என்றாள் உறுதியாக.
அவளது பிடிவாதத்தைக் கண்டு ஏற்றமாதிபனுக்கு ஆயாசமாக இருந்தது. அவளை எப்படி அங்கிருந்து விரட்டுவது என்றும் அவனுக்கும் புரியவில்லை.
“சரி… குறைந்தது போய் குளித்து ஆடையை மாற்றிவிட்டாவது வா. இப்படியா வெளியே வருவாய்?” என்று அவன் கேட்க, தன் ஆடையைக் குனிந்து பார்த்தாள் விதரணை.
இரவு அணிந்த ஆடையோடுதான் இருந்தாள். டீஷேர்ட்டும் பாகி பான்டும். அதைக் கண்டுவிட்டு அவனை ஏறிட்டவள்,
“நான் என்ன ஃபேஷன் ஷோவுக்கா தயாராகிறேன்? என் வீட்டிற்குத்தானே போகிறோம்? அங்கே போய் நான் குளித்துவிட்டு ஆடைகளை மாற்றிக் கொள்கிறேன். வண்டியை எடுங்கள்…” என்றாள்.
அவனோ வண்டியை எடுக்காமல் அவளையே முறைத்துப் பார்த்துவிட்டு,
“சரி… ஆடையையாவது மாற்றிவிட்டு வா,” என்று அவன் சொல்ல, நிதானமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள் விதரணை.
“எதற்கு? நான் உள்ளே போனதும் என்னை விட்டுவிட்டுச் செல்லவா? நீங்கள் என்னை விட்டுச் சென்றாலும் நான் ஊபரை அழைத்து வீட்டிற்கு வருவேன். அதனால் நீங்களே என்னை அழைத்துச் செல்லுங்கள்!” அவள் உறுதியோடு சொல்ல, ஏற்றமாதிபன் பற்களைக் கடித்தான்.
கொஞ்சம்கூடப் பேச்சைக் கேட்காதவளிடம் இதற்கு மேல் என்னத்தைப் பேசுவது?
“யு ஆர் சோ ஸ்டபார்ன்!” என்று அவன் கோபமாகச் சொல்ல, அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல், “தேங்க்யூ… வண்டியை எடுங்கள்,” என்றாள் விதரணை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.
அதற்கு மேல் அவளுடன் விவாதம் செய்ய விரும்பாதவன், வண்டியை ஸ்டார்ட் செய்து அடுத்த கணமே சாலையில் செலுத்தினான். சுமார் முப்பது நிமிடப் பயணத்திற்குப் பின் விதரணையின் வீடு வந்து சேர்ந்திருந்தது.
அந்தத் தெருவின் ‘ரவீன் லாட்’ பகுதியை ஒட்டியிருந்த ஒரு மறைவிடத்தில் வாகனத்தை நிறுத்தியவன், அங்கிருந்த ரவீன் நடைபாதையில் (Trail) நடந்து, சமதரையில் ஏறி, அப்படியே அங்கிருந்த சிறிய ஆற்றைக் கடந்து, மேலேறி, சரியாக விதரணையின் வீட்டின் பின்பக்கமாக வந்து நின்றான்.
விதரணையின் வீட்டிற்குள் பின்பக்கமாக யாரும் எளிதில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, அங்கே ஆறடி உயரத்தில் சங்கிலி வேலி (Chain-link fence) அமைக்கப்பட்டிருந்தது. இப்போது திரும்பி விதரணையைப் பார்க்க, அவளும் அவனுக்கு ஈடுகொடுத்து அவன் பின்னால் வந்துவிட்டிருந்தாள்.
வந்தவளை நோக்கித் திரும்பியவன், அவள் முன்பாகத் தன் விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து, சற்றுக் குனிந்து அவள் ஏறுவதற்கு ஏதுவாக நின்றுகொள்ள, உடனே அவனது தோள்களில் கரங்களை வைத்தவள், அவன் விரல்கள் கோர்த்திருந்த உள்ளங்கைகளில் ஒற்றைக் காலை வைத்து ஏறி, வேலியில் கையை ஊன்றி எழ முயன்றாள். உடனே ஏற்றமாதிபன் அவளது தொடைகளைப் பற்றி மேலே உயர்த்த, ஒரு காலை மறுபக்கம் போட்டு லாவகமாகக் கீழே குதித்திருந்தாள் விதரணை. கூடவே இவனும் ஒரே எம்பலில் மேலேறி மறுபக்கம் குதித்திருந்தான்.
திரும்பி விதரணையைப் பார்த்தவன்,
“யு ஓகே…?” என்று அக்கறையாகக் கேட்க, உள்ளே நெஞ்சுப் பக்கம் வலித்தாலும், அதை அவனுக்குக் காட்டாமல் “ஆம்” என்றாள் விதரணை.
இருவரும் இப்போது வீட்டை நோக்கி நகர, தன் சொந்த வீட்டைக் கண்டதுமே அவளுக்குக் கண்கள் கலங்கிக்கொண்டு வந்தன. இதயம் வேகமாகத் துடித்தது; உடல் பலவீனமாவது போல உணர, சற்றுத் தள்ளாடினாள்.
அவள் நிலையைக் கண்டு பற்களைக் கடித்தவன், “இதற்காகத்தான் நீ வரவேண்டாம் என்று சொன்னேன்… கேட்டால்தானே! பேசாமல் நீ வண்டியிலேயே உட்கார்ந்திருக்கலாம்…” என்று அவன் சொல்ல, அவளோ தன் கலக்கம் மாறாமல் அவனைப் பார்த்து, “இ… இல்லை… நான்… நான் நன்றாகத்தான் இருக்கிறேன்,” என்றாள் தழுதழுத்த குரலில்.
அவனோ அவளை முறைக்க, அவசரமாகத் தன் முகபாவனையை மாற்றிக்கொண்டாள் விதரணை. இத்தனை கொடூரங்களுக்கும் காரணமான அந்த மூலக் காரணியைக் கண்டுபிடிக்க இதோ அவர்கள் வந்துவிட்டார்கள். இந்த நேரத்தில் சொதப்பினால் அவ்வளவுதான்! ஆழமாக மூச்சை இழுத்துத் தன்னைத் திடப்படுத்திக்கொண்டவள், மெதுவாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்க, அவள் பின்னால் சுற்றிலும் பார்த்தவாறு ஜாக்கிரதையாக நடக்கத் தொடங்கினான் ஏற்றமாதிபன்.
அவர்களின் அதிர்ஷ்டம், ஏற்கனவே பின்பக்கக் கண்ணாடிக் கதவு உடைத்து நொறுக்கப்பட்டிருக்க, காவல்துறையின் மஞ்சள் நிற எச்சரிக்கை நாடா ‘X’ குறியீடாக ஒட்டப்பட்டிருந்தது. அதைப் பிளந்துகொண்டு ஏற்றமாதிபன் உள்ளே நுழைய, அவளைத் தொடர்ந்து விதரணையும் உள்ளே வர முயன்றாள்.
ஆனால், சட்டென்று அவள் மார்பில் உள்ளங்கை வைத்து அவளைத் தடுத்தவன், பின் குனிந்து அவளது கால்களைப் பார்த்தான். ரப்பர் செருப்புதான் அணிந்திருந்தாள். தரையிலோ கூரிய கண்ணாடிகள் சிதறிக் கிடந்தன. அவளை நெருங்கித் தன் கரங்களில் ஏந்தியவன், உள்ளே வந்து கண்ணாடிகள் சிதறாத இடத்தில் அவளைப் பக்குவமாக இறக்கிவிட, விதரணை அவனை நன்றியோடு பார்த்துவிட்டு முன்னோக்கி நடந்தாள்.
முதலில் சமையலறை, அதனைத் தொடர்ந்து விருந்தினர் அறை, அதற்குப் பின் முன்னறை அதைத் தாண்டினால் நிலவறைக்குப் போகும் படி. அதைக் கண்டதும் அவளுக்குத் தாய் தந்தையின் இறுதி நிமிடங்கள்தான் நினைவுக்கு வந்தது. நடுங்கிப் போனாள் அவள்.
மீண்டும் அங்கே நடந்த கோரக் காட்சி அவள் கண்முன்னே படமாய் விரிய, வெறித்த பார்வையுடன் நிலவறைக்குப் போகும் பக்கத்தையோ பார்த்திருந்தாள்
அவள் சிலையாக நின்றுவிட்டதை உணர்ந்து, அவளை நெருங்கியவன், அவளுடைய தோளில் கரம்வைத்த அழுத்த, அவளோ அதுகூடப் புரியாமல் நிலைத்த பார்வையுடன் நின்றிருக்கவே, அவளை உலுக்கினான் ஏற்றமாதிபன்.
“விதரணை… இங்கே பார்!” அவன் அதட்ட, திடுக்கிட்டு விழித்தாள் விதரணை.
தவிப்பும் வலியுமாக நிமிர்ந்து ஏற்றமாதிபனைப் பார்த்தவள், “ஐ… ஐ ஆம் ஓகே…” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.
அது இப்போது அவளுக்கு வீடாகவே தெரியவில்லை; பல வருடங்களாகக் கவனிக்காமல் கைவிடப்பட்ட பாழடைந்த வீடாகத் தெரிந்தது. ஒரு மாத காலத்தில் பெய்த மழையானது உடைந்த ஜன்னல்களின் வழியாகத் தெறித்து, தரை எல்லாம் பாசி படரத் தொடங்கியிருந்தது. சுவரெல்லாம் உப்பிப் போயிருந்தது.
‘இந்த வீட்டை என் தாய் எப்படியெல்லாம் சுத்தமாக வைத்திருந்தார்!’ ஏக்கமாக நினைக்க, மீண்டும் அவள் தோளைத் தொட்டு அவள் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பிய ஏற்றமாதிபன்,
நாம் அதிக நேரம் இங்கே நிற்க முடியாது விதரணை. விரைவாக தேவையானதைக் கண்டுபிடித்து எடுத்துச் சென்றுவிடவேண்டும்..” ஏற்றமாதிபன் எச்சரிக்க உடனே நிலவறை நோக்கி நடக்கத் தொடங்கினாள் விதரணை.
நிலவறைக்குச் செல்லும் கதவைத் திறந்து கீழிறங்கி விளக்கை உயிர்ப்பிக்க பளிச்சிட்டது நிலவறை. அங்கேதானே அந்த அகோரச் சம்பவம் நடந்தன. இன்னும் தாய் தந்தையைக் கட்டிவைத்த இடம் அப்படியே இருக்க, நடுங்கிப்போனாள் அவள்.
ஆனாலும் ஆழ மூச்செடுத்துத் தன் புத்தியை வேறு திசைக்குக் கொண்டு செல்ல முயன்றவள், சிரமப்பட்டு அந்தப் பக்கம் தன் கவனத்தைக் கொண்டு செல்லாமல், நேராக அவனை அழைத்துக் கொண்டு ஃபேர்னர்ஸ் இருக்கும் இடம் நோக்கி வந்தாள் விதரணை.
“இதுதான் ஃபேர்னர்ஸ் அறை. இங்குதான் எங்கோ.. வைத்திருக்க வேண்டும்…” சொன்னவள் விழிகளால் அந்த அறையை அலசிப்பார்த்தாள்.
“அப்பாவின் தலையில் தூசி படிந்திருந்தது. அந்தத் தூசி இங்கிருந்துதான் அவர் தலையில் விழுந்திருக்க வேண்டும்…” என்று அவள் உறுதியாகச் சொல்ல, அண்ணாந்து பார்த்தான் ஏற்றமாதிபன்.
அவனுடைய கூரிய விழிகள் அந்தச் சிறிய இடத்தையே மிகக் கூர்மையாக அளவிடத் தொடங்கின. அந்த நேரம், சட்டென்று அவனது பார்வை பர்னஸின் மேல் பகுதியில் உள்ள பிளீனம் பாக்ஸ் (Plenum Box) மீது அழுத்தமாகப் பதிந்தது. பிளீனம் பாக்ஸ் என்பது பர்னஸின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் இரும்பாலான ஒரு பெட்டி. அங்கிருந்துதான் வீட்டின் மற்ற இடங்களுக்குச் சூடான காற்று செல்லும்.
உடனே விதரணையை ஏறிட்டவன், “உங்களிடம் ஏணி இருக்கிறதா?” என்று கேட்டான்.
“ம்… கராஜில் இருக்கும்…” என்று அவள் சொல்ல, அடுத்த கணமே கராஜை நோக்கிச் சென்றான் ஏற்றமாதிபன். உட்புறக் கதவைத் திறந்து கராஜிற்குள் நுழைந்து, அங்கிருந்த ஏணியை எடுத்துக்கொண்டு கீழே வந்தான்.
அதைச் சரியாகப் பொருத்திவிட்டு கடகடவென்று அதன் மேலே ஏறியவன், அந்த பிளீனம் பாக்ஸை மிகக் கவனமாகக் கண்காணித்தான். அதன் இணைப்புகளில் லேசாகக் கீறப்பட்டிருந்த அடையாளங்களைக் கண்டதும் அவனது முகம் சட்டென்று மலர்ந்தது.
மறு கணம் அந்தத் தகட்டு மூடியை ஒரு இழுப்பு இழுக்க, அது அவனுடைய கையோடு கழன்று வந்தது. தன் கரத்தை உயர்த்தி உள்ளே விட்டுத் தொட்டுப் பார்த்தான். முதலில் எதுவும் சிக்கவில்லை. கையை இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைத்துத் தடவிப் பார்க்க, ஒன்றும் தெரியவில்லை.
குனிந்து அவளைப் பார்த்து உதடுகளைப் பிதுக்கியவன், மனம் கேட்காமல் இன்னொரு படி மேல் ஏறி முடிந்த வரைத் தன் கரத்தை நீட்டி அங்கும் இங்கும் தடவிப் பார்க்க ஒரு பாலிதின் போல ஒன்று அவன் கரத்தில் தட்டுப்பட, அதைப் பற்றி ஒரு இழுப்பு இழுக்க, பெரிய காந்தத்தோடு ஒட்டப்பட்டிருந்த அந்த பாலிதின் பை ஒன்று அவன் கையோடு வந்து சேர்ந்தது.

