September 23, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 18

(18)

சத்தம் ஏதும் எழுப்பாமல், ஊர்ந்து வரும் பாம்பைப் போல ஏற்றமாதிபனின் வாகனம் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு மத்தியில், விதரணையின் வீடிருக்கும் தெருவுக்கு முன்பாக வந்து நின்றது. வண்டியின் ஜன்னலைக் கீழிறக்கியவனின் முகத்தில் மழைச் சாரல் தாராளமாகத் தெறிக்க, அவனுடைய விழிகள், நாலாபக்கமும் மிக அவதானமாக அலசி ஆராய்ந்தன.

அங்குள்ள அத்தனை பேரின் வீட்டிற்கு முன்னாலும், அடுத்த நாள் எடுத்துச் செல்வதற்காகக் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருக்க, விதரணை யின் வீட்டிற்கு முன்பாக மட்டும் எதுவும் வைக்கப்படவில்லை. சற்றுத் தூரம் வரை வெளிச்சமாக இருந்த தெருவிளக்குகள், விதரணையின் வீட்டிற்கு அருகாமையில் மட்டும் தங்கள் வெளிச்சத்தைத் தொலைத்திருந்தன. ஆனால், விதரணையின் வீட்டு ஜன்னலில் விளக்கு எரிவது திரைச்சீலையை மீறித் தெரிந்தது. அதையும் தாண்டி, ஏதோ ஒன்று சரியில்லை என்பது மட்டும் அவனுக்கு உறுதியாகவே தெரிந்தது.

உடனே, தன் வண்டியின் டேஷ்போர்டைத் திறந்தவன், அதிலிருந்த துப்பாக்கியையும் சைலன்சரையும் கரத்தில் எடுத்துக்கொண்டு வண்டியை விட்டு வெளியே வந்தான். தன்னுடைய கூர்மையான விழிகளால் மிக அவதானமாக அந்த இடத்தை அலசி ஆராய்ந்தவாறு, துப்பாக்கியில் தனியாகக் கவனம் செலுத்தாமலே அதன் சைலன்சரைப் பூட்டியபடி, சத்தம் எழுப்பாமல் விதரணையின் வீட்டை நோக்கிப் பாய்ந்தான்.

பாயும்போதே உள்ளே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று உன்னிப்பாக அவதானித்தவாறு, துப்பாக்கியின் டிரிகரைச் சரிபார்த்தான். கொட்டும் மழைக்கிடையில் அந்த டிரிகரின் சத்தம் காணாமல் போக, இப்போது துப்பாக்கியை இரண்டு கரங்களாலும் அழுந்தப் பற்றியவாறு விதரணையின் வீட்டு வாசலை நோக்கி நகர்ந்தவன் அப்போதுதான் அதைக் கண்டான். ஒரு பக்கமாக ரோஜாச் செடிகள் வளர்த்திருந்த இடத்தில் உள்ள டியூலிப் மரங்கள் உடைந்து நசிந்திருக்க, அதில் பெரிய பூட்ஸ் கால்களின் அடையாளம் ஈரமண்ணில் ஆழமாகப் பதிந்திருந்தது. அந்த இடம் சற்று மேடாக இருந்ததால், அந்தக் காலடையாலம் அந்த மழையிலும் அழியாமல் இருக்கவே, ஏற்றமாதிபனின் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது. அதற்கு மேல் தாமதிக்காமல், வீட்டு வாசலில் போய் நின்று உள்ளே ஏதாவது ஓசை வருகிறதா என்று உண்ணிப்பாக அவதானித்தான்.

கனடிய வீடுகள் குளிர்காலத்திற்கு ஏற்ப உள்ளே இன்சுலேஷன் வைத்து, குளிர் வீட்டிற்குள் நுழையாதவாறு கட்டப்பட்டிருக்கும். அது உள்ளிருக்கும் சத்தத்தையும் வெளியே வரவிடாது; வெளியிலிருக்கும் சத்தத்தையும் உள்ளே வரவிடாது. அதனால், உள்ளே எந்தச் சத்தம் எழுப்பினாலும் பெரிதாக வெளியே எதுவும் கேட்காது. இதில், இடி மின்னல் வேறு சேர்ந்துகொள்ள, வெளியே நின்றிருந்தவனுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று சுத்தமாக எதுவும் கேட்கவில்லை.

பழக்கதோஷத்தில் வீட்டு அழைப்பு மணியை அழுத்துவதற்குக் கரத்தை எடுத்துச் சென்றவன், அடுத்த கணமே அதைத் தாழ்த்திக்கொண்டான். ‘உள்ளே என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாத நிலையில், அழைப்பு மணியை அழுத்துவது புத்திசாலித்தனமில்லை’ என்று முடிவு செய்தவனாக, வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தான். உள்ளே பூட்டப்பட்டிருந்தது.

அடுத்து, பூட்டை நோக்கித் துப்பாக்கியை நீட்டியவன், இடி முழக்கத்தின் சத்தத்திற்காகக் காத்திருந்தான். அடுத்த ஐந்தாவது விநாடியில் பெரிய மின்னல் வெட்ட, அதற்கு அடுத்த நொடி இடிமுழக்கம் கேட்கும் அந்தத் துல்லியமான கணத்தில், சரியாக கதவின் பூட்டில் ஒரு குண்டைத் துப்பினான் ஏற்றமாதிபன். சைலன்சரால் சத்தம் இல்லாது புறப்பட்ட குண்டு சரியாக கதவுப் பூட்டை உடைத்துக்கொண்டு செல்ல, அடுத்த விநாடி அவன் கொடுத்த ஒரே உதையில்… ‘படார்’ என்ற பெரும் சத்தத்தோடு உள்நோக்கித் திறந்துகொண்டது கதவு!

இங்கே நிலவறையில், ஆழமான இருள் நிறைந்த உறக்கத்திற்குச் சென்றுகொண்டிருந்த விதரணையின் உதடுகள் மெல்லியதாய், மிக மிக மெல்லியதாய் ஒரு புன்னகையைச் சிந்தின.

“ஏ… ஏற்றன்…”

உயிரைக் கொல்ல முயலும் அந்தப் பலவீனத்திலும் அவன் பெயரை உதிர்த்தவள், அதன்பின் முழுதாகக் கரிய பெரும் துளைக்குள் நுழைந்து மறைந்தாள்.

அதே நேரம், நிலவறைப் படிகளின் ஏறிக் கொண்டு வந்தவர்கள், திடீர் என்று கதவு இடி முழக்கமாகத் திறந்து கொள்வதைக் கண்டதும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பாரத்துவிட்டு நிமிர்ந்து வாசலைப் பார்க்க, அங்கே இராவண அவதாரம் எடுத்தவன் கணக்காக, மின்னலின் மத்தியில் பிளந்திருந்த வாசல் கதவைத் தாண்டி, பான்டின் பின்பக்கமாகத் துப்பாக்கியைச் செருகியவாறு உள்ளே வந்துகொண்டிருந்தான் ஏற்றமாதிபன்.

உள்ளே நுழைந்ததுமே அவன் நாசியைத் துளைத்தது என்னவோ அடர்ந்த இரத்த வாடைதான்! அதை உணர்ந்தவன் பதறிப்போனான். எங்கிருந்து வருகிறது இந்த வாடை…? பதற்றத்தோடு மேலும் முன்னேற, அவன் எதிர்பாராத வகையில் திடீர் என்று அவனை நோக்கி இருவர் பாய்ந்தனர்.

விதரணையின் வீடு மூன்று அடுக்குகளைக் கொண்டது. கதவைத் தாண்டி உள்ளே வந்ததும் காலணிகள் அணிவதற்கான இடம். நேரே மேல்மாடி செல்லப் படிக்கட்டுகள்; வலது பக்கம் விருந்தினர்கள் அறை, அதற்கு முன்னால் அலுவலக அறை. அதைத் தாண்டி நகர்ந்தால் நிலவறை செல்வதற்கான படிக்கட்டுகள், அதனருகே ஒரு சிறிய கழிவறை. இடது பக்கம் சாப்பாட்டறை. இன்னும் உள்ளே போனால் சமையலறை, அதன் எதிர்ப்புறம் குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் அறை. மேல்மாடியில் நான்கு படுக்கையறைகள்; கீழே இன்னும் முழுமையாக நிறைவு செய்யப் படாத நிலவறை. இதுதான் அவர்களின் வீட்டின் அமைப்பு. ஏற்றமாதிபன் உள்ளே நுழைந்ததும், அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டிருப்பதைக் கண்டு மேலும் முன்னேற, நிலவறைக்குப் போகும் படியிலிருந்து இருவர் பாய்ந்ததும் ஒரே ஒரு விநாடி அவன் தடுமாறித்தான் போனான். இப்படி திடீர் என்று இருவர் பாய்வார்கள் என்று அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருப்பினும், இத்தகைய பயிற்சிகளை நன்கு கற்றுத் தேர்ந்தவனுக்கு எதிரிகளிடமிருந்து விலகுவது ஒன்றும் பெரிய சிரமமான காரியமில்லையே.

இருவரும் ஒரே நேரத்தில் அவனை நோக்கிப் பாய, அந்தக் குறுகிய பாதையில் சுதந்திரமாகச் செயலாற்ற முடியாத நிலையில் கத்தியை வீசியவாறு பாய்ந்தவனின் கரத்தைப் பற்றி ஒரு மடக்கு மடக்கிக் கத்தியைக் கீழே விழுத்திவிட்டு அவனை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு, பின்னால் வந்தவனின் மார்பில் ஓங்கி எட்டி உதைக்க… அவனோ பின்னால் சரிந்து, படிகளில் உருண்டு, நிலவறையின் சிமெந்துத் தரையில் மண்டை அடிபடப் ‘பொத்’தென்று விழுந்தான்.

இங்கே தள்ளிவிடப்பட்டவனோ ஏற்றமாதிபனை நோக்கி மீண்டும் பாய, பாய்ந்தவனின் நெஞ்சிலும், அடி வயிற்றிலும் கை வைத்துத் துக்கித் தரையில் ஒரு போடு போட, துடித்துப்போனான் அவன்.

ஏற்றமாதிபன் ஒரு காவல்துறை அதிகாரி என்பதால் அவர்களைக் கொல்லும் எண்ணம் அவனுக்கு சுத்தமாக இருக்கவில்லை. இவர்களைக் கைது செய்து ஒண்டாரியோ காவல்துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தான். அதே எண்தண்தில் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்தவனைத் தாக்க முயன்றபோதுதான், அவனுக்க அந்த உண்மை புரிந்தது.

அவனைத் தாக்க வந்தவனின் வேகமும், அவன் யுத்தகலையைக் கையாண்ட விதமும் நிச்சயமாக இவர்கள் சாதாரணத் திருடர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது. அதை உணர்ந்துகொண்டவனாக, நிலவறை நோக்கி நகர முயல, தரையில் கிடந்தவன் மீண்டும் ஏற்றமாதிபனின் முதுகின் மீது பாய்ந்து அவனைக் கிடுக்குப் பிடி போட, தன் வலது முழுங்கையால் ஓங்கி அவன் இடையில் ஒரு குத்துக் கொடுத்தவன், அவன் வலியில் தன் பிடியைத் தளர்த்த, அந்தக் கணமே திரும்பி, அவன் தலையைத் தன் கரங்களால் அழுந்தப் பற்றிச் சுவரில் பலமாக மோத, அவன் மோதிய வேகத்தில், டிரைவாலால் ஆன அந்த உள்சுவர் சுலபமாகவே உடைந்து அவனது தலையை உள்வாங்கிக் கொண்டது.

அடுத்த கணமே, தன் கையை மடித்து, நவீன அதிரடிப்படைத் தற்காப்புக் கலையில் பயின்ற முறைப்படி, அவனது கழுத்தின் இடது பக்கவாட்டு நரம்பு மண்டலத்தைக் குறிவைத்து அசுர வேகத்தில் ஒரு தட்டுத் தட்டினான்!

அந்த விஞ்ஞான ரீதியான பலத்த தாக்குதலில் அவனது நரம்பு மண்டலம் நொடியில் முடங்கிப் போக, ஏற்கனவே உடைந்த சுவருக்குள் தலை மாட்டிக்கொண்ட நிலையிலும் அலறக்கூட முடியாமல் அங்கேயே மயங்கிச் சரிந்தான் அவன். நிச்சயமாக அவனால் அடுத்த சில மணி நேரத்திற்கு மயக்கம் தெளிந்து எழ முடியாது என்பதை உறுதி செய்துகொண்டவன், வேகமாக நிலவறையை நோக்கிப் பாய்ந்து சென்றான்.

தங்கள் நண்பன் படிகளில் உருண்டு தரையில் விழுந்ததைக் கண்ட லக்கியும் அந்தப் பிலிப்பினோவும் அதிர்வோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அடுத்து, அந்தப் பிலிப்பினோ படிக்கட்டை நோக்கி ஓட முயன்ற நேரம்… ஏற்றமாதிபன் படிகளிலிருந்து மின்னல் வேகத்தில் கீழே இறங்கிவிட்டிருந்தான்!

இங்கே ஏற்றமாதிபனைக் கண்டதும் அவனை நோக்கிப் பாய்ந்த பிலிப்பினோவைக் கண்டு, இரண்டு கரங்களாலும் படிகளின் தடுப்பைப் பலமாகப் பற்றி இரண்டு கால்களையும் தூக்கி அந்தப் பிலிப்பினோவின் மார்பில் ஒரு உதை கொடுத்து விட்டு அப்படியே படியின் மறுபக்கமாகக் கால்களைப் போட்டு நிலத்தில் குதித்தவன், எதிரிகளை நோக்கி அவன் திரும்பிய வேளையில்தான் அந்தக் காட்சி அவன் கண்களில் விழுந்தது. ஆடிப்போனான் ஏற்றமாதிபன். சத்தியமாக இப்படி ஒரு கோரத்தை அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

அங்கே நாற்காலியில் இரத்தம் வழிய உயிரை விட்டிருந்தனர் அறிவழகனும் அமுதாவும்! பக்கத்தில் வெறித்த பார்வையோடு விதுரன்.

‘அப்படியென்றால் விதரணை எங்கே…?’ – இதயம் வாய்க்குள் வந்து துடிப்பது போல் இருக்க, அவளைப் பார்வையால் தேடிய நேரம்… முன்பு படிகளில் உருண்டு விழுந்திருந்தவன், சற்றுத் தெளிந்து, தள்ளி விழுந்திருந்த கத்தியை இழுத்து எடுத்தவாறு ஏற்றமாதிபனை நோக்கிப் பாய்ந்தான்.

அதிர்ந்த அந்த நிலையிலும் சட்டென்று விலகியவனின் கண்ணில் பட்டாள் விதரணை! தரையில் சுயநினைவின்றி, இரத்தக் குளத்திற்கு மத்தியில் எந்தவித அசைவமுமின்றி… அதைக் கண்டவனுக்கு அனைத்தும் மரத்துப் போன உணர்வு! உடலில் இருந்த ஆவி மொத்தமாய் அவனை விட்டுப் பிரிந்தது போன்ற நிலை.

அவனை நோக்கிப் பாய்ந்து வந்த அந்தப் புதியவனின் கத்தி, அவனது மார்பை நோக்கி இறங்க முயன்ற நேரம்… தன்னிச்சையாக விலகி அந்தத் தாக்குதலிலிருந்து தப்பியவனின் பார்வை மட்டும் விதரணையை விட்டு விலகவேயில்லை. அவனால் எதையுமே தெளிவாகச் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அதே நேரம் அவன் ஏற்றமாதிபனின் கழுத்தை நோக்கிக் கத்தியை இறக்கப் பின்னால் சரிந்து அந்தக் கத்திவீச்சிலிருந்து தப்பியவனின் விழிகள் இப்போது தன்னை நோக்கிப் பாய்ந்தவன் மீது வெறியோடு நிலைத்தது.

அவளுடைய அந்த நிலை அவனைத் திரிபுரம் எரித்த சிவனாய் மாற்றிவிட… அந்தக் கணம், தான் ஒரு காவல்துறை அதிகாரி, அதுவும் ஒரு தனிப்படையை வழிநடத்தும் முக்கியப் பதவியில் இருப்பவன் என்கிற எண்ணம் மொத்தமாய் காணாமல் போயிருந்தது.

“ஆஆஆஆஆ…!” என்கிற மிருகத்தனமான அலறலுடன், திரும்பியவன் மீண்டும் தன்னை நோக்கிப் பாய்ந்தவனின் கத்தியைத் தாங்கியிருந்த கரத்தை ஒரு கரத்தால் அழுந்தப் பற்றி, மறுகரத்தை அவன் மார்பில் வைத்து வேகமாகத் தள்ளிச் சென்று சுவரில் மோத வைத்தவன், கத்தியை வைத்திருந்த எதிரியின் கரத்தையே அசுரத்தனமாக மடக்கி, அவனது இடது மார்பில், இதயத்தை நோக்கிப் பலமாக இறக்க, எதிரியோ வலியில் அலற, கொஞ்சம் கூட அடங்கவில்லை ஏற்றமாதிபன். ‘சதக்… சதக்… சதக்…!’ என்று பலமுறை அவன் இதயத்திற்குள் கத்தியை இறக்கிய பின்னும் அவன் வெறி அடங்கவில்லை.

முகத்தில் சீறித் தெளித்த எதிரியின் இரத்தத்தோடு திரும்பியவனின் அனல் கக்கும் பார்வை, இப்போது லக்கியிடம் சென்றது! சுட்டுவிரலை நீட்டி விதரணையை நோக்கிக் காட்டியவன்,

“யார் அவளைத் தொட்டது…?” – சீறலாகக் கேட்டவன், கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.

பின்னால் செருகியிருந்த துப்பாக்கியைக் கண்ணிமைக்கும் நொடியில் வெளியே எடுத்து, விழிகளில் வலியும், கூடவே கொல்லும் வெறியுமாக அவனைப் பார்த்து, “யு காய்ஸ் டிட் எ வெரி பிக் மிஸ்டேக்…!” என்று ஆத்திரத்தோடு துப்பாக்கியின் டிரிகரை அழுத்த, லக்கியோ எதுவோ சொல்லவந்தான். ஆனால் அது என்ன என்று கேட்க முதலே, ‘பட்… பட்… பட்…!’ என மூன்று குண்டுகள் லக்கியின் நெற்றியிலும், மார்பில் இரண்டுமாகப் பாய… அதிகம் சிரமப்படாமல் செத்துத் தொலைத்தான் அந்த லக்கி.

ஆனால், அந்த ஆத்திரம் அவனுக்குக் கொஞ்சம் கூட அடங்கவில்லை. ஏற்கனவே விலா எலும்பு உடைந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த அந்தப் பிலிப்பினோவின் இதயத்திலும் ஒரு குண்டைச் செலுத்தி அவன் உயிரையும் எடுத்தான். அப்போதும் அவனுக்குள் எரிந்த ஆத்திர நெருப்பு கொஞ்சமும் அடங்கவில்லை!

‘இது என்ன… கன்னத்தில் ஏதோ வழிகிறது?’

அதிர்ந்தவனாக, இரத்தம் தோய்ந்த தன் கரத்தால் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தான். கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது! ஆத்திரத்தோடு அதைத் தன் மேல் கையால் துடைத்தவன், விதரணையை நோக்கிப் பாய்ந்தான். பாய்ந்த வேகத்திலேயே முட்டிக்கால் போட்டு அமர்ந்தவன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மரத்துப் போன புத்தியோடு மலங்க மலங்க விழித்தான். அவள் வாழ்நாளில் அவன் அறியாத ஒரு அவலம் அங்கே நடந்தேறிக்கொண்டிருந்தது. அவனுக்குத் தேகமே நடுங்கியது! அவளுடைய அந்த நிலையைக் கண்டதும், இத்தனை நேரம் அசுரனாய் மாறியிருந்த அவனது விழிகள் உயிர் துடித்துக் கலங்கின. அவள் உயிரோடு இருக்கிறாளா, இல்லையா என்பதைப் பரிசோதிக்கக் கூட அவனுக்கு அச்சமாக இருந்தது. ஒருவேளை அவள்…

‘நோ… நோ… அவள் உயிரோடுதான் இருக்கிறாள்; இருந்தே ஆக வேண்டும்…! விதரணை… மை பேபி கேர்ள்… டோன்ட் டூ திஸ் டூ மீ…’ பதறியவனுக்கு அவளைத் தொட்டுப் பார்க்கவே அச்சமாக இருந்தது.

அவள் ஆபத்திலிருக்கிறாள்; தாமதிக்க முடியாது, உடனே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று புத்திக்குத் தெரிந்தது. ஆனால் மனதிற்கு…?

நாட்டுக்காகப் பல ஆபத்தான நடவடிக்கைகளில் எந்தவித அச்சமும் இன்றி, மிகச் சாதாரணமாகக் களமிறங்கி வெற்றிகளைக் கண்டவன்தான் அவன். அப்போதெல்லாம் உடலில் துப்பாக்கிக் குண்டுகளையும் கத்திக்கீறல்களையும் தாங்கி, பலத்த காயங்களுக்கும் உட்படுத்தப்பட்டவன். அந்தக் காயங்களோடு கூடக் கொஞ்சமும் அஞ்சாமல் எதிரிகளைப் பந்தாடியவன்; மரணத்தைக் கூட ஒரு விளையாட்டாய் நினைத்து வாழ்ந்தவன்!

இன்று முதன்முறையாக, கண்முன்னே ஒருத்தி உயிரோடு இருக்கிறாளா, இல்லையா என்கிற நிலையைக் கண்டறியப் பயந்து நடுங்கி நின்றிருந்த அவனது நிலையை என்னவென்று சொல்வது? இது அவன் வாழ்வில் கண்டேயறியாத நிலையாயிற்றே…!

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது கூடப் புரியாமல் மலங்க மலங்க விழித்திருந்தவனை, அவனது புத்தி உசுப்ப முயன்றது. ‘இப்படி நின்றால் எப்படி…? போ ஆதிபா… போய் இதயம் துடிக்கிறதா என்று பார்…!’

அவனை உசுப்ப, இல்லாததையும் பொல்லாததையும் நினைத்துக் காதுகள் அடைத்துக் கொண்டு வந்தன. எதையும் தாங்கலாம், ஆனால் அவளுக்கு ஒன்றென்றால்…? நினைக்கும்போதே உடல் தூக்கிப் போட்டது. அவனுடைய தைரியத்திற்கும் திடத்திற்கும் என்னானது. ஏன் இப்படி நடுங்கித் தொலைகிறான். ஏன் இதயம் இப்படி விட்டு விட்டுத் துடைக்கிறது.

‘டேய்… முட்டாள்… ஒருவேளை அவள் உயிரோடு இருந்தால், நீ தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் அவள் தப்பிப் பிழைக்கும் வாய்ப்பைக் குறைத்துக் கொண்டே செல்லும்… விழித்துக் கொள் ஆதிபா…!’ – அவனது உள்ளுணர்வு அவனை உசுப்பியது.

அதுவரை உள்ளே இழுத்துப் பிடித்திருந்த மூச்சை ஒருவித அலறலும் சீற்றமுமாக வெளியிட்டவன், மறுகணம் அவளை நோக்கிக் குனிந்தான். கரத்திலிருந்த துப்பாக்கியை அவளுக்கு அருகே போட்டவன், நடுங்கும் கரங்களால், குப்பிறக் கிடந்தவளை மெதுவாக புரட்டிப் போட அவள் நிலை கண்டு மொத்தமாய் உடைந்து போனான் அந்த ஆண்மகன்.

‘என்னடி ஆச்சு உனக்கு… ஐயோ… உன்னை இந்த நிலையில் பார்க்கவா கல்காரியிலிருந்து வந்தேன்…’ மனதிற்குள் அலறியவன், அவள் மார்பில் வடியும் இரத்தம் கண்டு துடித்தவனாக, கண்ணிமைக்கும் நொடியில் தான் அணிந்திருந்த கோட்டைக் கழட்டித் தூர எறிந்துவிட்டுத் தன் ஷேர்ட்டைக் கழற்றி, இரத்தத்தை வடியச் செய்த காயத்தின் மீது வைத்து அழுத்தினான். மறு கரத்தின் சுட்டுவிரலையும் நடுவிரலையும் சேர்த்து அவளுடைய கழுத்தில் வைத்து, இதயத்துடிப்பை உணர முயன்றான். கண்களோ கண்ணீரில் நிறைந்தன.

“பிளீஸ் பேபி… ஐ பெக் யூ… டோன்ட் கோ…”  – அவன் முனகும்போதே, அவனது விரல்கள் அவள் கழுத்தின் ஓரத்தில் தெரிந்த அந்த மிக மெல்லிய இதயத்துடிப்பை உணர்ந்துகொண்டன.

ஆனால், அதற்காக மகிழ்வதா இல்லை இன்னும் அஞ்சுவதா என்று தெரியாத நிலை. அந்த மென்மையான இதயத்துடிப்பு எதுவரை அவளுடைய உயிரை இழுத்துப் பிடிக்கும் என்று தெரியாமல், அவனது இதயம் வாய்க்குள் வந்து துடித்தது.

அடுத்து, கழுத்தை விட்டுத் தன் கரத்தை விலக்கியவன், பேண்ட் பாக்கெட்டிற்குள் இருந்த கைப்பேசியை எடுத்து 911-ஐ அழைத்தான். அவசரச்

செய்தியைக் கூறிவிட்டு, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு வேண்டிய பதில்களைத் தகுந்த முறையில் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, கைப் பேசியை மீண்டும் பேண்ட் பாக்கெட்டில் செருகினான்.

அவள் மார்பிலிருந்து தன் கரத்தை எடுக்காமலே அவளை இமைக்காமல் கண்ணிர் பொங்கிய விழிகளினூடாகப் பார்த்தான்.

நெற்றியின் ஓரம் பிளந்து அதிலிருந்து வடிந்த இரத்தம் அவள் முகம் முழுவதும் பரவியிருக்க, பார்ப்பதற்கே அச்சமூட்டுவதாக இருந்தது. வாயின் ஓரத்தில் இன்னும் காயாமல் இரத்தம் வழிந்து இருந்தது. அந்தக் காயங்களே சொன்னன, சற்று முன் அவள் எத்தகைய கொடூர நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறாள் என்று!

அதுவும் பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்திருக்க வேண்டும் என்பதைப் பறைசாற்றும் வகையில் திறந்த நிலையிலிருந்த இரத்தத்தில் ஊரிப்போன ஜாக்கெட்டும், பாவாடையும்… அதைக் கண்டதுமே இவனுடைய இரத்தம் கொதித்தது! சற்றுமுன் சுட்டுக் கொன்றவர்களை மீண்டும் உயிர்ப் பித்து, நரக வலி கொடுக்க அவனது ஆன்மாவின் அடிவரை துடித்தது.

‘யார் இவர்கள்? எதற்காக இப்படி ஒரு வேலையைச் செய்தார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது யார்…?’ என்கிற எண்ணம் அவனைப் படுத்தி எடுத்தது. அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அவர்கள் திருடர்கள் அல்ல என்பது. அதற்கு மேல் எதையும் தெளிவாக யோசிக் முடியாமல் விதரணையின் அந்த நிலை அவனைக் கதிகலங்கச் செய்தது.

முதலில் அவளை விழிப்படையச் செய்ய வேண்டும். அவள் நினைவுகள் விழிப்பாக இருந்தால் தான் அவளுடைய உயிரை இழுத்துப் பிடிக்க முடியும். அதனால் தன் வலி, வேதனை, தவிப்பு என்று அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு, மறுகரத்தால் அவள் கன்னத்தைத் தட்டி அவளை விழிப்படையச் செய்ய முயன்றான் ஏற்றமாதிபன்.

“விதரணை… இங்கே பார்… விழித்துக்கொள்… விதரணை… கண்களைத் திற… உனக்கு ஒன்றுமில்லை… புரிகிறதா? உனக்கு ஒன்றுமேயில்லை…!” என்று தன் ஆழமான, அழுத்தமான குரலால் மரணப் புதைகுழிக்குள் போக முயலும் அவளுடைய நினைவுகளை விழிப்படையச் செய்யப் போராடினான்.

சுயமிழக்கும் அவளுடைய புத்திக்கு நம்பிக்கையூட்ட முயன்றாலும், மூடிய அவளது அசைவற்ற விழிகளோ அவனுடைய அழைப்புக்கு இம்மியும் பதில் சொல்லவில்லை. எத்தனையோ கொலைகளைக் கடமை கருதி மிகச் சுலபமாகவே செய்திருக்கிறான் என்றாலும், அப்போதெல்லாம் நடுங்காத அவனது கரங்கள் முதன்முறையாக இப்போது செயலற்றுப் போவதை உணர்ந்தவனுக்குத் தொண்டை வறண்டு போனது!

இப்போது அவளுடைய முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் கொண்டு வந்தான் ஏற்றமாதிபன். அவனுடைய சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டுத் தெறிக்க, “வி… விதரணை…” என்றான் பட்டுப் போன்ற மென்குரலில்.

“பேபி கேர்ள்… நான்… உன்… ஏற்றன் வந்திருக்கிறேன்.. உன்னால் உணர முடிகிறதா…?” என்றவன், சோர்ந்து உயிரற்றுத் தரையில் கிடந்தவளின் மென்மையான கரத்தைத் தன் கைகளில் ஏந்தினான். அவளது குளிர்ந்திருந்த அந்தக் கரத்தைத் தன் மார்போடு அழுத்தி, அங்கும் இங்கும் தொட்டுக் காட்டி, “என்னைப் புரிகிறதா உனக்கு…? உன் ஏற்றன் வந்திருக்கிறேன்.. விழித்துக்கொள் கண்ணம்மா…” என்றான்.

கூடவே, அவள் கரத்தைத் தன் இடது மார்பில் அழுத்தி, தன் இதயத்துடிப்பை அவளுக்கு உணர வைத்தவாறு,

“என் இதயம் துடிப்பது உனக்குப் புரிகிறதா பேபி கேர்ள்…?” என்றான். அவனுடைய கண்களில் இருந்து இரு பொட்டுக் கண்ணீர் வழிந்து அவள் கரத்தில் விழ… அதுவரை தன்நிலை இழந்து இருந்தவளின் கரத்தில் மெல்லிய அசைவு ஏற்பட்டது! ஆழமான கரிய இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்த அவளது ஆன்மா, தன் ஏற்றனின் இதயத்துடிப்பை அடையாளம் கண்டுகொண்டது போலும்!

மறுகணம், அவளது விரல்கள் தன்னிச்சையாகக் குவிந்து, ஏற்றமாதிபனின் கையில்லாத பனியனை மிகப் பலவீனமாக, அதே சமயம் ‘என்னை விட்டு விட்டுப் போய்விடாதே’ என்று கெஞ்சுவது போல இறுக்கமாகப் பற்றிக் கொள்ள. அந்த மெல்லிய இறுக்கத்தை உணர்ந்த ஏற்றமாதிபனின் இதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. அவளது அந்தச் சிறிய அசைவு அவனுடைய வலியைத் துடைக்கப் போதுமானதாக இருக்க, அவனையும் மீறி உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

அவன் பேசுவது அவளுக்குக் கேட்கிறது! அவனை அவள் உணர்கிறாள்… அதைப் புரிந்து கொண்டவனின் கண்கள் கண்ணீரால் மேலும் நநைந்தன.

“தட்ஸ் இட் பேபி… ஐ நோ… யு ஆர் ஸ்ட்ராங்…” என்றவன், தன் மூக்கை உறிஞ்சிய வாறே, “இதோ பார்… உனக்கு ஒன்றுமில்லை… நீ நன்றாக இருக்கிறாய்… நான் சொல்வது உனக்குக் கேட்கிறதுதானே…” என்று அவன் சொல்லும் போதே அவனுடைய குரல் மீண்டும் தடுமாறத் தொடங்கியது; தொண்டை அடைத்தது.

எதற்கும் கலங்காது கல்லாக நிற்பவன், முதன்முறையாக உடைந்து போனவனாக, “இதே பிடிவாதத்தோடு உயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்.. உன் நம்பிக்கையைக் கைவிடாதே…” என்றான் திரும்பத் திரும்ப. எங்கே தன் குரல் அவள் செவிக்குக் கேட்காது போய்விட்டால், அவள் ஒரேயடியாக அடங்கிப்போவாளோ என்கிற பயம் அவனுக்கு!

ஆனால், கட்டுப்பாடற்று நடுங்கும் குரலை என்ன செய்வது…?

‘கடவுளே… இப்போது எதற்கு என் குரல் இப்படி நடுங்குகிறது? என் இதயம் ஏன் இப்படி நிதானமின்றித் துடிக்கிறது…? நான் ஏன் இந்தளவு தடுமாறுகிறேன்? அவள்தான் என்னைப் புரிந்து கொண்டாளே… இது போதாதா?’ என்று தனக்குள் முணுமுணுத்தவன், அவள் நினைவு மங்காத வகையில் மீண்டும் அவள் கன்னத்தைத் தட்டி, “ஸ்வீட்ஹார்ட்… டார்லிங்…” என்று அழைத்தான்.

அதுவரை எந்த உணர்வும் இல்லாமல் இருந்தவளின் கண்களிலிருந்து மெதுவாகக் கண்ணீர் வடியத் தொடங்க… துடித்தான் அவன். அவசரமாக அவள் கண்ணீரைத் துடைத்தவன்,

“அழாதே கண்ணம்மா.. இனி எல்லாம் சரியாகி விடும். ஆம்புலன்ஸை அழைத்துவிட்டேன், எந்த நேரமும் வந்துவிடும். வந்ததும் மருத்துவமனைக்குப் போகலாம்… போனதும் உடனே அவர்கள் சிகிச்சை செய்யத் தொடங்கிவிடுவார்கள். உன் வலி எல்லாம் போய்விடும், சரியா…? என் செல்லம்ல… அழக் கூடாது…” என்று துடித்துக் கலங்கிய குரலில் சொன்னவன், இன்னும் அவளருகே குனிந்து, அவளது தலையை மென்மையாக வருடிக் கொடுத்தவாறு, “இன்னும் கொஞ்ச நேரம் தாங்கிக்கொள்… எல்லாம் சரியாகிவிடும்… நான்தான் உன் பக்கத்தில் இருக்கிறேனே… இதோ பார் பேபி… எனக்கு நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்… உன் உயிரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்… மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், சரியா…?” என்று குழந்தைக்கு சொல்வது போல கெஞ்சிக் கொஞ்சிச் சொல்ல, மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

பதறியவனாகக் குனிந்து, அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் தன் உதடுகளால் துடைத்தெடுத்தவனுக்கு, அவளது உள்ளுணர்வு என்ன சொன்னது என்று புரிந்தது போலிருந்தது.

“உன்னையும் உனுடைய குடும்பத்தையும் இந்த நிலைக்குத் தள்ளியவர்களைப் பற்றி நினைக்கிறாயா? கொன்றுவிட்டேன்… அவர்கள் அத்தனை பேரையும் கொன்றுவிட்டேன்… ஒருத்தனை மட்டும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன்… அவனை விசாரிக்க வேண்டும் அல்லவா… அப்போதுதானே இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும்…!” என்று அவன் சொல்ல, மீண்டும் அவளது பிடியில் ஒரு இறுக்கம்; கூடவே கண்களில் கண்ணீர்!

“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரிகிறது பேபி… உங்கள் அத்தனை பேரையும் இந்த நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும், அதுதானே…? ஐ பிராமிஸ் யூ… அது யாராக இருந்தாலும், இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்… நான் அவர்களை வேட்டையாடிக் கொல்வேன்… நீ என்னை நம்புகிறாய் தானே…? ஆனால், அதற்கு விலையாக நீ உன் உயிரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். உன்னுடைய புத்திக்குக் கட்டளையிடு, நீ திரும்பி எழ வேண்டும் என்று சொல்… விழித்திருக்கச் சொல்… டோன்ட் கிவ் அப்… டூ யூ ஹியர் மீ… பிளீஸ்… டோன்ட் கிவ் அப்… உன்னை இந்த நிலைக்குத் தள்ளியவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பேன். அவர்களை வேரோடு அழிப்பேன்… அதற்கு நீ என் பக்கத்தில் இருக்க வேண்டும்… தயவுசெய்து விழித்துக்கொள். எனக்காக… எனக்காக விழித்துக்கொள்…” என்று அவன் ஏதேதோ அவளுக்குக் கூறி, அவளுக்குள் இருக்கும் வாழும் ஆசையைத் தூண்ட முயன்று கொண்டிருந்த வேளையில்…

வெளியே அவசர ஊர்தியின் சத்தமும், காவல் துறையின் சைரன் ஓசையும் அந்த இடத்தையே அலற வைத்தன!

What’s your Reaction?
+1
11
+1
2
+1
2
+1
1
+1
6
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!