(7)
சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை.
அவளுடைய வீட்டில் அன்னிய ஆண் ஒருத்தன் தகாத முறையில் நுழைந்து இருக்கிறான் என்றால் அதை எப்படித் தாங்குவது? எப்படி ஜீரணிப்பது?
‘ஐயோ! பல முறை எங்கோ நடந்த ஏற்க முடியா சம்பவங்கள், இன்று அவளுடைய வீட்டிலேயே அரங்கேறப் போகிறதா? இதிலிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறாள்? அவளால் தப்பிக்கத்தான் முடியுமா? தெய்வமே! இனி என்ன செய்யப் போகிறாள்? இனி அடுத்து என்ன நடக்கப் போகிறது? அவளுக்கு ஏதாவது நடந்தால், வரோதயனின் நிலை என்ன? அவனை யார்தான் பார்த்துக் கொள்வார்கள்…?” இதயம் வெடித்து விடும் போலப் பயங்கரமாகத் துடிக்க,
“யா… யார் நீங்கள்? வெ… வெளியே போங்கள்…! இல்லை… இல்லை என்றால் இப்போதே கா… காவல் துறையைக் கூப்பிடுவேன்…!” என்றவாறு கைப்பையில் கரத்தை நுழைத்து உள்ளே இருக்கிற பெப்பர் ஸ்ப்ரேயை எடுக்க முயல, ஓரெட்டில் மதிமையை நெருங்கிய அந்த நெட்டையன், ஒரு இழுவையில் அவளுடைய கைப்பையை இழுக்க, அது வார் அறுந்து அவன் கையோடு வந்து சேர்ந்தது.
மேலும் அதிர்ந்து போனாள், மதிமை. அவளையும் மீறிக் கண்களில் கண்ணீர் முட்ட,
“இ… இதோ பாருங்கள்…! மரி… மரியாதையாக வெ… வெளியே போய் விடுங்கள்…! இல்லை…” என்று எவ்வளவோ முயன்றும் குரல் பயங்கரமாக நடுங்கத்தான் செய்தது. ஆனால் அவளுடைய நடுக்கமோ, பயமோ, கலக்கமோ முன்னால் நின்று இருந்தவனைப் பாதித்ததாகவே தெரியவில்லை. மாறாக, அவளை நோக்கி முன்னேற, பதறிப் போனாள் அவள்.
வேகமாக அங்கிருந்து தப்பும் நோக்கில் அவனைத் தள்ளிவிட்டு வாசற்கதவை நோக்கிப் பாய முயல, மறு கணம் சுவரோடு பலமாக மோதி நின்றாள், மதிமை.
அவனுடைய கரமோ அவளுடைய இரண்டு பக்கத் தோள்களையும் பலமாக அழுத்திப் பற்றியிருந்தன. கூடவே அந்த அந்நியனின் முகம் அவளுடைய முகத்திற்கு நேராக நின்றிருக்க, ஆவி பிரிந்துவிடும் போன்ற உணர்வில் தன் விழிகளை இறுக மூடிக்கொண்டாள், மதிமை.
இதோ அவள் அஞ்சியது போலத்தான் நடக்கப் போகிறது. அவன் அவளை என்னவோ செய்யப் போகிறான். காரியம் முடிந்ததும் அவளைக் கொன்று எங்கோ குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போய்விடுவான் என நிச்சயமாக நம்பியவள் மயங்கும் நிலைக்குச் சென்றிருக்க, அவனோ அவளையே ஒரு கணம் இமைக்காது வெறித்துப் பார்த்தான்.
தன்னைக் கண்டு அவள் அஞ்சுவது நன்றாக புரிய, அவளை நோக்கிக் குனிந்து,
“லிசின்…! நீ பயப்படவேண்டிய அவசியம் இல்லை. நான் இங்கே வந்ததே உன் கூட சற்று பேசத்தான்…” என்று கூற, சட்டென்று விழிகளைத் திறந்தவள், தன்னை மறந்து..
“வட்?” என்றாள். ஆனாலும் அவளுடைய முகத்தை நெருங்கியிருந்த அவன் முகம் கொடுத்த பயத்தில் சுவரோடு பல்லிபோல ஒட்டி நின்றவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்தான், அவன்.
அந்தப் புன்னகை அவளுடைய அச்சத்தை கொஞ்சமே கொஞ்சமாய் குறைத்திருந்தாலும், அவளுடைய நடுக்கத்தை அவன் உணரவே செய்தான்.
“நீ நினைப்பது போல, எந்தத் தப்பான நோக்கத்திலும் உன்னிடம் வரவில்லை… நம்பு…!” என்றவனை ஏறிட்டவள்,
“யார்…? யார் நீ…? என்னிடம் பேச என்ன இருக்கிறது?” கிலியுடன் கேட்க,
“சொல்கிறேன். அதற்கு முன்பு நீ உன்னை அமைதிப் படுத்திக்கொள் மதிமை… இந்த நாடகம் வேண்டாமே…!” என்றதும் மேலும் அதிர்ந்தவளாக அவனைப் பார்த்தாள், அவள்.
‘மதிமையா? அவளுடைய பெயர் இவனுக்கு எப்படித் தெரியும்? அன்று உணவகத்தில் கூட சரியாக அவள் தமிழச்சி என்று கண்டுபிடித்தான். இப்போது அவளுடைய பெயரைச் சரியாகச் சொல்கிறானே…!’ குழப்பத்துடன் அவனை ஏறிட்டு,
“என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் தன்னை மறந்து. இப்போது அவனாகவே அவளை விட்டு விலகி இரண்டடி தள்ளி நின்றவாறு தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை விட்டவாறு அவளை ஏறிட்டு,
“என் பெயர் ஆதிபன்…” என்றதும் அவனை எரிச்சலுடன் ஏறிட்டவள்,
“நீங்கள் யாராக இருந்தால் எனக்கென்ன? என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்…?” என்றாள் கடுப்புடன்.
“உனக்கும் பொறுமைக்கும் தூரம் கொஞ்சம் அதிகமோ?” என்றவனை எரிப்பது போலப் பார்த்தவள்,
“லிசின்…! நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ…! இப்போது எனக்கு உன் கூடப் பேசப் பொறுமையுமில்லை, விருப்பமும் இல்லை… மரியாதையாக வெளியே போ…! இல்லை என்றால்…”
“இல்லை என்றால்….?”
“இல்லை என்றால் கீழே இருக்கும் காவல் துறையை இங்கே அழைக்க வேண்டியிருக்கும்…” என்றவளைக் கிண்டலுடன் பார்த்தான் ஆதிபன்.
“ரியலி…! சரி… போ…! போய் கூப்பிடு…!” என்று இவன் அலட்சியமாகக் கூற, ஒரு கணம் குழம்பினாள், மதிமை.
“என்ன பார்க்கிறாய்…? போ…! போய்க் கூப்பிடு. எப்படியாக இருந்தாலும் பாதிக்கப்படுவது நீதான்…!” என்றவனைப் புரியாமல் பார்த்தவள்.
“என்ன சொல்கிறாய்…?” என்றாள் குழப்பத்துடன்.
“சொல்கிறேன்…” என்றவன் ஆழ மூச்செடுத்து அவளை ஏறிட்டு, “உன்னோடு கைப்பேசியில் பேச முயன்றது நான்தான்…” என்றதும் மேலும் அதிர்ந்தாள், மதிமை.
“கை… கைப்பேசியில் என்னோடு பேச முயன்றது நீயா…?” என்ற போது, அவளுக்கு வார்த்தைகளுக்கு பதில் காற்றுதான் வந்தது.
“நான்தான்…! நான் பேசுவதை கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டிருந்தாலும், இன்று இந்த சிக்கல் உனக்கு வந்திருக்காது…” என்றவன் அவளை அழுத்தமாக ஏறிட்டு,
“நம்பு…! நீ நினைப்பது போல இங்கே எதுவும் நடக்காது… தனியாக இருக்கும் பெண்ணிடம் வம்பு பண்ணும் அளவுக்கு, நான் ஒன்றும் வில்லன் கிடையாது…! நீ நம்பலாம்.” என்று அவன் அழுத்தம் திருத்தமாகக் கூற, இப்போது மதிமையின் பயம் பெருமளவு குறைந்தது.
ஆனாலும் எச்சரிக்கை உணர்வு தலைதூக்க,
“நீ சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும்…?”
“ஏன் என்றால்? நான் பேசப் போகும் விடயத்தில் நீயும் இருக்கிறாய் என்பதால்…! நான் உன்னிடம் கேட்பதெல்லாம் பத்தே பத்து நிமிடங்கள் மட்டும் தான். உன்னோடு பேசிவிட்டுப் போய்விடுவேன்.” என்று அவளுடைய விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தவாறு கூற, ஏனோ இவளுக்குப் பயத்தை மீறி இதயம் படபடக்கத் தொடங்கியது.
‘அவன் விழிகள் பட்டதும், ஏன் உள்ளே ஒரு மாதிரி ஆகிறது? அவளை விட்டு அவன் ஓரடி தள்ளித்தான் நிற்கிறான். ஆனாலும் அவனுடைய உடல் சூட்டை இவள் தேகம் உணர்ந்து கொள்வது போல வெம்மையாகிறதே? ஏன்? இதுவரை எந்த ஆணையும் இத்தனை நெருக்கத்தில் பார்த்திராததால் வந்த குழப்பமோ?’ அவசரமாகத் தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டவள், அவனிடம் மறுப்பாக எதையோ சொல்ல வரை, உடனே குறுக்கிட்டவனாக,
“இல்லை… காது கொடுத்தும் கேட்கமாட்டேன் என்று நீ பிடிவாதம் பிடித்தால், சாரி உன் மீது பரிதாபப்படும் நிலையில் நான் இல்லை. உன்னை ஒரு இடத்தில் கட்டி வைத்தாவது, நான் சொல்ல வேண்டியதை சொல்லவேண்டி வரும். இனி உன் விருப்பம்…!” என்று அவன் அழுத்தம் திருத்தமாகக் கூற, அதைக் கேட்டு இவளுடைய கைகால்கள் சில்லிட்டன.
“சரி.. சொல்லுங்கள்..! என்னிடம் பேச என்ன இருக்கிறது…? என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” கேட்டவளை, இப்போது இறுக்கம் தளர்ந்து புன்னகையுடன் பார்த்தவன்,
“உன் பெயர் மட்டுமில்லை, உன்னைப் பற்றிய முழு சரித்திரமும் எனக்கும் தெரியும்…!”
“அதுதான் எப்படி…”
“சொல்கிறேன்… முன்னறையில் அமர்ந்து பேசலாமா?” என்று இவன் கேட்க,
“ஏன் இங்கிருந்து பேசினால், சொல்ல வந்ததை மறந்து விடுவீர்களோ…?” எரிச்சலுடன் கேட்க, அதைக் கேட்டு மேலும் சிரித்தவன்,
“இல்லை…! உன் மீது உள்ள அக்கறையால்தான் சொன்னேன். இப்போது நான் சொல்ல வருவது, உனக்குப் பேரதிர்ச்சியை கொடுக்கும். அதைக் கேட்டு மயக்கம் அடைந்து விழுந்தாயானால், தேவையற்ற நேர விரயம்… அதனால்தான் சொன்னேன்.. உள்ளே போய் பேசலாமா என்று.”
“நீங்கள் சொல்ல வந்த அதிர்ச்சியை கேட்டு மயங்கி விழும் அளவுக்கு ஒன்றும் நான் நோஞ்சானில்லை…! என்ன சொல்ல வந்தீர்களோ அதை இங்கேயே சொல்லுங்கள்…” என்று பட்டென்று சொல்ல, தன் தோள்களை குலுக்கியவன்,
“உன் விருப்பம்… என் பெயர் ஆதிபன்.”
“இருந்து விட்டுப் போங்கள்… அதைத்தான் கொஞ்சத்திற்கு முன்பு சொன்னீர்களே…!” என்றவளைக் கூர்மையாக ஏறிட்டவன்,
“நான்… வரோதயனின் தந்தை…!”
“இருந்து விட்டு…” என்றவளுக்கு அப்போதுதான் அவன் என்ன சொன்னான் என்பதே உறைத்தது.
உலகம் இடிந்து நொறுங்கும் அதிர்ச்சியோடு முன்னால் நின்றிருந்தவனை வெறித்தவள், அடுத்த கணம் உடலிலிருந்த இரத்தம் வடிந்து சென்ற உணர்வில், அவனை மலங்க மலங்கப் பார்த்தாள் மதிமை.
(8)
சத்தியமாக இத்தனை பெரிய அதிர்ச்சியை, சத்தியமாக மதிமை எதிர்பார்க்கவேயில்லை.
‘நான் வரோதயனின் தந்தை…!’ என்று அவன் சொன்னதைக் கேட்டதும் காதுகள் அடைத்துக்கொண்டு வர,
“எ… என்ன சொன்னீர்கள்?” என்றாள் திக்கித் திணறி. இன்னும் அவன் சொன்னதை மதிமையால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒரு வேளை அவன் வேறு ஏதோ சொல்லப் போய், அவளுக்குத் தவறாகக் கேட்டிருக்குமோ என்கிற சந்தேகம் வேறு. ஆனால் அது பொய் என்று மெய்ப்பித்தான் ஆதிபன்.
“நான் வரோதயனின் தந்தை என்றேன்.” என்று மீண்டும் தெளிவாகச் சொல்ல,
மதிமை தன் காதுகளை அழுந்தப் பொத்தியவாறு,
“நோ… நோ… இருக்காது… நிச்சயமாக இருக்காது. நீ பொய் சொல்கிறாய்.!. வரோதயனுக்கு் தந்தை கிடையாது. தாய் மட்டும்தான்… அந்தத் தாய் நான்தான்.” என்று தன்னை மறந்து கத்த, அவனோ அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“தந்தையில்லாமல் எந்தக் குழந்தையும் பிறப்பதில்லை, மதிமை. தவிர, வரோதயனின் தாய் நீயில்லை… அணுரேகா…!” என்றதும் அவளுக்கு அதிர்ச்சியில், வாயே திறக்க முடியவில்லை.
‘அப்படியானால் அவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறதா? யார் சொன்னார்கள்? எப்படித் தெரிந்திருக்கும்?’ அத்தனை நேரமாகப் பிடித்து வைத்திருந்த, தைரியமும், நம்பிக்கையும், உறுதியும் கை நழுவிப்போக,
‘ஐயோ அவ்வளவுதானா? இனி வரோதயன் அவளுக்கில்லையா?’ என்கிற எண்ணம் வலு விழக்கச் செய்ய, அதற்கு மேல் எந்த அதிர்ச்சியான செய்தியையும் கேட்கும் தைரியம் இல்லாதவளாக மடங்கிச் சரிய, சட்டென்று ஓரெட்டில் அவளை நெருங்கித் தாங்கிப் பிடித்தான், ஆதிபன்.
தாங்கியவனின் பரந்த மார்பில் நெற்றி முட்ட நின்றவளின் தேகத்தின் நடுக்கத்தை ஆதிபனும் உணர்ந்தான் போல. மேலும் அவளைத் தன் உடலோடு அழுத்திப் பிடித்தவன்,
“இதற்காகத்தான் சொன்னேன், முன்னறையில் அமர்ந்து பேசலாமா என்று.” எரிச்சலுடன் சொன்னவன், அவளைக் கைதாங்கலாக நடத்திச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து விட்டுச் சமையலறைக்குள் நுழைந்து ஒரு குவளையில் தண்ணீர் நிரப்பி, அவளிடம் வந்து நீட்ட, மறுக்கும் சக்தி அவளுக்கேது.
கரங்கள் நடுங்க, அந்தக் குவளையை வாங்கித் தண்ணீரைக் குடித்தாள், மதிமை. குடிக்கும் போது கரங்கள் நடுங்கிய நடுக்கத்தில், சட்டை ஈரமாவதைக் கூட அவள் உணரவில்லை. தண்ணீரைக் குடித்து முடித்ததும், அதே நடுக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“எ… எப்படித் தெரியும்?” என்ற போதே அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று உதிரத் தொடங்கியிருந்தது.
‘ஏனோ அவளுடைய கண்ணீரைப் பார்த்த ஆதிபனுக்கு, நெஞ்சின் ஓரத்தில் வலிக்கத்தான் செய்தது. அவள் அழுதால் இவனுக்கேன் வலிக்கிறது?’ குழம்பியவன்,
“அணுரேகாதான் தெரிவித்து இருந்தாள்..” என்றான். அதைக் கேட்டதும் குழப்பத்துடன் அவனை ஏறிட்டவள்,
“அணு… அணுரேகாவா… நோ… இருக்காது… அவளுக்கு இந்தக் குழந்தை பற்றி ஒரு போதும் அக்கறை இருந்ததில்லை. பிறந்த உடனேயே தத்துக் கொடுக்க முயன்றவள், அணுரேகா. குழந்தையை என்னிடம் கொடுக்கிறாயா என்று கேட்டபோது தான், தன்னோடு வந்து தங்கிக் குழந்தையைப் பார்த்துக் கொள் என்றாள். பெற்றது அவளாக இருந்தாலும், வரோதயனை நான் பெற்ற குழந்தையாகத்தான் இதுவரை பார்த்து வருகிறேன்… அது அணு ரேகாவிற்கு நன்றாகவே தெரியும்…! நிச்சயமாக அவள் இதைப் பற்றி உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டாள்.. நிச்சயமாக மாட்டாள். தவிர…” என்றவள், ஆத்திரத்துடன் அவனை முறைத்து,
“ஆரம்பத்தில் குழந்தை வேண்டாம் என்று மறுத்து விலகியவர்தானே நீங்கள். இப்போது மட்டும் குழந்தையைத் தேடி வரக் காரணம் என்ன?” எரிச்சலும் ஆத்திரமுமாகக் கேட்க, அவனோ,
“குழந்தை வேண்டாம் என்று நான் மறுத்தேனா? யார் சொன்னது இதை?” என்றபோது அவனுடைய குரலில் சீற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.
மதிமையோ குழப்பத்தோடு அவனை ஏறிட்டு,
“பின்னே… நீங்கள் மறுக்கவில்லை என்றால், அணுரேகா ஏன் வரோதயனைத் தத்துக் கொடுக்க முயலவேண்டும்? இதுநாள் வரை ஏன் குழந்தையை வந்து பார்க்கவில்லை. சரி பார்க்கத்தான் வர வில்லை, குழந்தை எப்படியிருக்கிறது என்று கூடவா நீங்கள் கேட்கக் கூடாது?” என்றவளை வலி நிறைந்த பெருமூச்சுடன் பார்த்தவன்,
அவளுக்கு முன்பாக இருந்த இருக்கையில் அமர்ந்து சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
அவனுக்கே தன்னை சமப்படுத்த, சற்று நேரம் தேவைப்பட்டது. இன்னும் அவனுக்கு அணு ரேகாவின் மீது இருந்த ஆத்திரம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. எப்படியான வார்த்தைகளை எல்லாம் கேட்க வைத்துவிட்டாள், பாதகி.
நிமிர்ந்து மதிமையைப் பார்த்தவன், “எனக்கு இப்படி ஒரு குழந்தை இருக்கிறது என்பதே ஒரு சில கிழமைகளுக்கு முன்பு தான் தெரிய வந்தது. அதுவும் அணுரேகாதான், தன் கைப்பட கடிதம் எழுதியிருந்தாள். அதில் எனக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே ஒரு மகன் பிறந்தான் என்று மட்டும்தான் குறிப்பிட்டிருந்தாளே தவிர, அந்தக் குழந்தை யாரிடமிருக்கிறது, எங்கிருக்கிறது எப்படி இருக்கிறது…? இது பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. இங்கே வந்து அதை எல்லாம் விசாரித்துத் தேடி வருவதற்குள் இத்தனை நாட்களாகி விட்டன….” என்றவன் அவளை உற்றுப் பார்த்து,
“எனக்கு முன்பே குழந்தை இருப்பது தெரிந்திருந்தால், அப்போதே அவனை என் கூட அழைத்துச் சென்றிருப்பேன். இத்தனை நாட்கள் காத்திருந்திருக்க மாட்டேன். நான் இங்கே வரும் வரைக்கும் அணுரேகா உயிரோடு இருந்திருப்பாள் என்றுதான் நினைத்தேன். ஆனால்… காலம் கடந்து விட்டிருந்தது.” என்றபோது அவன் குரலில் நிறைய வலி தெரிந்தது.
இப்போது அவனைக் கலக்கத்துடன் பார்த்த மதிமை, “அப்படியானால், என் வரோதயனை என்னிடமிருந்து பிரித்து விடுவீர்களா…? எனக்கு இருக்கும் ஒரே துணை அவன்தான். அவனைப் பிரித்துவிட்டால் என் ஓட்டமே நின்று விடும்…” என்று கலங்கியவாறு கூற,
அவனும்தான் என்ன செய்வான். சற்று நேரம் அமைதி காத்தவன், பின் எழுந்து அவளுக்கு முன்பாக வந்து ஒற்றைக்கால் மடித்து அமர்ந்து,
“ஹே… எனக்குப் புரிகிறது… இது நாள் வரைக்கும் வரோதயனை வளர்த்திருக்கிறாய்… ஆனால் எல்லாக் காலமும் அவனுக்கு நிழலாக உன்னால் இருக்க முடியாதில்லையா…? உனக்கு இப்போது எத்தனை வயது? இருபத்தொன்று? இருபத்திரண்டு? உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா…? உனக்கென்று ஒரு புது வாழ்க்கை அமையும் போது, வரோதயன் பாரமாகிப் போய்விட மாட்டானா…? இதோ பார்…! வரோதயன் என்னோடு வருவதுதான் சரியாக இருக்கும். உனக்கு மட்டுமில்லை… அவனுக்கும்தான்…!” என்ற போது மதிமையின் நெஞ்சம் அடைத்தது.
‘என்னதான் முடியாது என்று மறுத்தாலும், வரோதயன் அவனிடம் போய்விடுவது உறுதிதானே. சட்டம் கூட அவளுக்கு ஆதரவாக இருக்காதே. என்ன சொன்னாலும் வரோதயனின் தந்தை அவன். இவள் வளர்த்தவள்தானே..! இரத்த சம்பந்தம் கூடக் கிடையாது. நிச்சயமாக சட்டம் என்பது எந்த வகையிலும் அவளுக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை…!’ நினைக்கும் போதே இதயத்தை யாரோ கத்தியால் கிழித்தது போல வலித்தது மதிமைக்கு.
அந்த அணுரேகா கடைசி நேரத்தில் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டுப் போவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஏன் அப்படிச் செய்தாள்… இவள் நன்றாகத்தானே குழந்தையைப் பார்த்துக்கொண்டாள். அதுவும் பெற்றவள் சும்மா இருக்க, இவள் தானே தான் பெற்ற குழந்தை போலக் காத்துக்கொண்டாள். அது அணுரேகாவிற்குக் கூடத் தெரியுமே. அப்படியிருக்கையில் எதற்காக வரோதயனின் தந்தையிடம் போட்டுடைத்தாள்? இப்போது அவள் மகனைப் பிரித்துக் கொண்டு சென்று விடுவார்களே. ஐயோ…! அப்படிக் குழந்தையைப் பிரித்துவிட்டால் இவள் என்ன செய்வாள்? எப்படித் தாங்கிக் கொள்வாள். அவளுடைய உலகமே அந்தப் பிஞ்சுக் குழந்தைதானே. அதைத் தொலைத்து விட்டு எப்படி வாழ்வாள்? மகிழ்ச்சி மட்டுமா, இவளுடைய உயிரோட்டமே நின்றுவிடுமே. இழந்த உறவுகளை வரோதயனின் நிழலில்தானே கொஞ்சமாவது மறந்தாள். இதோ இந்த நான்கு வருடங்களில், வலியை ஓரளவு ஆற்றிக்கொண்டாள் என்றால், அதற்கு முழுக் காரணமும் வரோதயன்தானே. இப்போது மொத்தமாக அவனை இவளிடமிருந்து பறித்துவிட்டால் என்ன செய்வாள்? இவள் மூச்சே நின்று விடாதா? கடவுளே…! ஏன் இப்படி ஒரு சோதனை…? உனக்கெதற்கு இத்தனை வஞ்சகம். நான் உயிராக நினைக்கும் அத்தனை உறவுகளையும், ஒரேயடியாகப் பிரிக்கிறாயே? நான் அப்படி என்ன மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்து விட்டேன்?’ வெம்மி வெடிக்க, கண்ணீர் தாரை தாரையாகப் பொழிந்தது.
ஒரு அன்னியன் முன்பு இப்படி தன்னிலை கெட்டு அழுகிறோமே, என்ற கழிவிரக்கம் தோன்ற, வேகமாகத் தன் கண்களைப் புறங்கையால் துடைத்து விட்டு,
“குழந்தையை இத்தனை காலமாக பொத்திப் பொத்தி வளர்த்தவள் நான். திடீர் என்று வந்து என் குழந்தை கொடுத்து விடு என்று என்னிடமிருந்து பிரிக்க முயன்றால் நான் எப்படிக் கொடுப்பேன்? முடியாது…! நிச்சயமாக வரோதயனை யாருக்கும் கொடுக்க மாட்டேன்… அவன் என் மகன்…. அவன் என் குழந்தை. எனக்கு மட்டும் சொந்தமானவன்… யாருக்கும் அவனைப் பங்குபோட உரிமையில்லை…!” என்று அழுகையும் ஆத்திரத்துடனும் கூற,
இப்போது ஆதிபனின் பொறுமையும் சற்று குறைந்துதான் போனது. சற்று எரிச்சலுடன் அவளைப் பார்த்துவிட்டு,
“மதிமை, குழந்தையை என் கட்டுப்பாட்டிற்குள் எடுக்க ஆயிரம் வழிகள் உண்டு. காவல் துறையிடம், நீ என் குழந்தையைக் கடத்திச் சென்றாய் என்று சின்னதாக ஒரு புகார் கொடுத்தால் போதும். அடுத்த விநாடி நீ சிறையில் இருப்பாய். இவ்வளவு ஏன்…? சட்டத்தின் உதவி கேட்டாலே போதும், வரோதயன் எந்தச் சிக்கலும் இல்லாமல் என் கரங்களுக்கு வந்து விடுவான். ஆனால், நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. ஏன் தெரியுமா…? உன்னை மதிக்கிறேன். யாரோ பெற்ற குழந்தையை உன் குழந்தையாகப் பார்த்துக் கொண்ட உன் தாய்மையை மதித்துத்தான், இப்போது இங்கே அமர்ந்து உன் கூடப் பேசிக் கொண்டிருக்கிறேன்… இதையும் மீறி நீ பிடிவாதம் பிடித்தால், எனக்கு வேறு வழியும் இருக்கப் போவதில்லை…!” என்றவன் அவளை நோக்கிக் குனிந்து,
“இதோ பார்…! வரோதயன் என் மகன்…! அவனை நீ நன்றாக வளர்த்த தாய்தான்…! அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் பெற்றவன் நானிருக்கும் போது, யாரோ ஒருத்தியின் நிழலில் அவன் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு நான் எப்படி சம்மதிப்பேன்? தவிர…!” என்றவன் சுத்தவர அந்த வீட்டைப் பார்த்துவிட்டு,
“என் குழந்தை இப்படி ஒரு வீட்டில், இத்தகைய ஒரு தகாத இடத்தில், சூழ்நிலையில் வாழ்வதை ஒரு தந்தையாக எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? இதோ பார் மதிமை, அணுரேகா ஏதற்காக குழந்தை பெற்றதை என்னிடமிருந்து மறைத்தாள் என்றும் எனக்கும் தெரியாது. எதற்காக கடைசி நிமிடத்தில் என்னிடம் அறிவித்தாள் என்றும் எனக்குத் தெரியாது.
ஆனால் தனியாக உன்னால் இந்தக் குழந்தையை வளர்க்க முடியாது என்று அவள் உணர்ந்திருக்க வேண்டும். இல்லை, இந்தக் குழந்தையால் உன் எதிர்காலம் அழிந்து போய் விடுமோ என்று அவள் யோசித்திருக்கலாம். காரணம் தெரியவில்லை. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், என் மகனை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. கடந்த நான்கு வருடங்களாக இப்படி ஒரு குழந்தை இருப்பது தெரியாமலே இருந்துவிட்டேன். தெரிந்த பின்னும் ஒதுங்கிப் போக சத்தியமாக என்னால் முடியாது. இதோ பார்…! குழந்தையை நான் அழைத்துப் போவதுதான் சரியாக இருக்கும்.” என்றவன் கலங்கித் துடித்துக் கொண்டிருந்த அவளுடைய முகத்தை வருத்தத்தோடு ஏறிட்டு,
“குழந்தையை உன்னிடம் கூடக் கூறாமல் என்னால் அழைத்துப் போக முடியும். யாரும் எதுவும் என்னிடம் கேட்க முடியாது. ஆனால், நான் அப்படி செய்ய விரும்பவில்லை. காரணம் அத்தகைய வலியை உனக்குக் கொடுக்கக் கூடாது என்று பார்க்கிறேன். என் மகனுக்கு நல்ல தாயாக இருந்திருக்கிறாய். அந்த மரியாதைக்காகவும், மதிப்புக்காகவும்தான் உன் கூடப் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் எந்த நேரத்திலும் இப்படிப் பேசிக்கொண்டிருப்பேன் என்று நினைக்காதே. நீ என்னதான் முயற்சி செய்தாலும், வரோதயனை உனக்குச் சொந்தமாக வாய்ப்பேயில்லை…! உன் நேரத்தையும், சக்தியையும் வீணாக்காமல், வரோதயனை என்னிடம் கொடுத்து விடு மதிமை. அதுதான் உனக்கு நல்லது…”
என்றவனைத் தவிப்போடு பார்த்தவள், “இதோ பாருங்கள். உங்களுக்கு வரோதயன்தான் வேண்டும் என்று என்ன அவசியம்…? உங்களுக்கு வேறு குழந்தைகள் இல்லையா… வரோதயன் மட்டும் தான் வேண்டுமா?” என்று கேட்க, அவளை ஆழமாகப் பார்த்தவன்,
“நான் திருமணம் முடிக்கவில்லை… அதனால் வேறு குழந்தையும் எனக்கில்லை…”
“அணுரேகாவை நீங்கள் மணந்தீர்களா, வரோதயனைப் பெற்றுக் கொள்ள?” சுள் என்று விழுந்தவள், குரல் கம்ம,
“அப்படியே ஒரு குழந்தை வேண்டும் என்றால், யாராவது ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து அவள் மூலம் பிள்ளை பெற்றுக் கொள்ளலாமே. எதற்கு என் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்கள்?” என்றாள் விம்மலுடன்.
அதைக் கேட்டு மெல்லிய புன்னகையைச் சிந்திய ஆதிபன், “இதே கேள்வியை உன்னிடம் நான் திருப்பிக் கேட்கலாம் இல்லையா?” என்றான் நிதானமாக. அதைக் கேட்டுத் திகைத்துப் போனாள் மதிமை.
அவன் சொல்வதிலும் உண்மை இருக்கத் தானே செய்கிறது. கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைக்க அவனோ,
“உன்னைப் பார்த்தால் ஒன்றும் நோஞ்சான் போலத் தெரியவில்லையே. நல்ல ஆரோக்கியமாகத்தானே இருக்கிறாய்? நீ ஏன் திருமணம் முடித்து வரோதயன் போல் உனக்கே உனக்காக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கக் கூடாது. ஓ… ஒரு வேளை உனக்கு திருமணத்தில் நம்பிக்கையில்லையா? ஆனாலும் பாதகமில்லையே…! குழந்தை பெற திருமணம் அவசியமில்லையே. இன்னொருத்தருடைய குழந்தையைச் சொந்தக் குழந்தையாகக் கொஞ்சாமல், உனக்கே உனக்கென்று ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கென்ன? உன்னுடைய சொந்த இரத்தத்தை, இன்னும் பாசமாக உரிமை கொண்டாடலாமே!” என்று கேட்க மதிமை ஒருகணம் வாயடைத்துத்தான் போனாள்.
இதற்கு என்ன பதிலைச் சொல்வாள். பெற்ற குழந்தையை விட வளர்த்த குழந்தையின் மீது அதீத பாசம் இருக்கும் என்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லையா? மீண்டும் கண்களில் கண்ணீர் பொங்க, இரண்டு கரங்களையும் ஏந்துவது போல அவன் முன்னால் தூக்கிக் காட்டி,
“பிறந்து இரண்டு நாட்கள்… இரண்டு நாட்களில் என் கரங்களில் வந்து சேர்ந்தான் தெரியுமா? இத்தனை வருடங்களாக அவனைக் கண்ணின் மணியாகக் காத்து வருகிறேன். அவன் என் குழந்தையில்லை என்பதே எனக்கு மறந்து விட்டது. அவனில்லை என்றால் நானில்லை…! அவனையே என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறீர்களே சார்…” என்று விக்கலுடன் கூற,
இவனுக்கும் அவளுடைய அழுகை பெரும் அழுத்தத்தைக் கொடுத்ததோ, பற்களைக் கடித்தவாறு அப்படியே நின்றவன், பின் ஒரு பெருமூச்சுடன்,
“மதிமை… இந்த சிக்கலை சுமுகமாக்கத்தான் முயல்கிறேன். தயவு செய்து என் முயற்சியைக் கடினப்படுத்தாதே…! உன்னை வலிக்கச் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமில்லை. ஆனால் நிதர்சனம் வேறு மதிமை… எனக்குப் புரிகிறது! பாசமாக வளர்த்த குழந்தையை விட்டுக் கொடுப்பது சுலபமில்லைதான். ஆனால் எக்காலத்திலும் அவனுக்குப் பாதுகாப்பாக உன்னால் இருக்க முடியாது, மதிமை. உனக்கொரு வாழ்க்கை அமையும் போது…”
“இல்லை… இல்லை… சத்தியமாக வரோதயனை விட இன்னொரு வாழ்க்கை எனக்கு அமைந்து விடப் போவதில்லை. வரோதயனா, என் எதிர்காலமா என்கிற ஒரு கேள்வி வந்தால், சத்தியமாக நான் வரோதயனைத்தான் தேர்ந்தெடுப்பேன். நம்புங்கள்…!” என்று அழுகையும் பதட்டமுமாகக் கூற, அவளைப் பாரிதாபமாகப் பார்த்தான், ஆதிபன்.
“இப்போது உனக்கு எத்தனை வயது?” என்று அவளைப் பார்த்தவாறு கேட்டான் ஆதிபன்.
“இ… இருபத்தொன்று…”
“இந்த இருபத்தொரு வயதில், ஒரு குழந்தையை வளர்ப்பதற்காக வேலைக்குப் போகிறாய். உன் படிப்பு பாதியிலேயே நிற்கிறது… இதை எல்லாம் நீ யோசிக்கவில்லையா…?”
“இல்லை… வரோதயனை வளர்ப்பது மட்டும் தான் என் தலையாய கடமை…!”
“மண்ணாங்கட்டி…! பேசுவதற்கு இது நன்றாகத் தான் இருக்கும். ஆனால் எதார்த்தத்திற்குச் சரிவருமா என்று யோசிக்க மாட்டாயா? வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்ளக் கூடிய வயது கூட உனக்கில்லை. நீ போய் ஒரு குழந்தைக்காக தியாகம் செய்கிறேன் என்கிறாயே! இதோ பார்…! உனக்கான வாழ்க்கை இதுவல்ல. நீ போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. அதை என் குழந்தைக்காக நாசமாக்கப் போகிறாயா…?” என்றவன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்து,
“விழலுக்கு இறைத்த நீர்… கேள்விப் பட்டிருக்கிறாயா… அது போலத்தான் இதுவும். இவனை வளர்ப்பதால் உனக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை… நிதர்சனம் வேறு, எதார்த்தம் வேறு. உன் வயதானவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று வெளியே வந்து பார்…! அப்போது உனக்குப் புரியும்.” என்றவன், ஒரு முடிவெடுத்தவனாக எழுந்து,
“மதிமை… இத்தனை காலம் என் மகனை நன்றாக வளர்த்தற்கு நான் நன்றி சொல்கிறேன். அது மட்டுமில்லை, இத்தனை காலம் அவனை நீ வளர்த்ததற்கான செலவையும் தந்து விடுகிறேன். அதற்கு மேலாகவே கொடுக்கிறேன். படி. நிறைய படி. நல்ல வேலைக்குப் போ. உனக்கென்று புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள். நல்ல கணவன் குழந்தைகள் என்று..” என்று அவன் முடிக்கவில்லை ஆத்திரம் கொப்பளிக்க சடார் என்று இருக்கையை விட்டு எழுந்தாள் மதிமை.
வேகமாக அவனை நெருங்கியவள், அவனுடைய சட்டையைப் பற்றி இழுத்து,
“என்ன சொன்னீர்கள்? பணம் கொடுக்கப் போகிறீர்களா…? எனக்கு நீங்கள் பணம் கொடுக்கப் போகிறீர்களா…” அதுவும் என் வரோதயனை வளர்த்ததற்காக… எத்தனை தைரியம் உங்களுக்கு…?” என்று சீறியவள், ஆத்திரத்துடன் அவனைத் தள்ளிவிட்டு,
“என் குழந்தையை வளர்த்ததற்கு பணம் கொடுக்க நீங்கள் யார்…? நோ…! என் குழந்தையை யாருக்கும் கொடுக்க மாட்டேன். கொடுக்கவே மாட்டேன்…! முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள்… நான்கு வருடங்களாகத் தனக்கொரு குழந்தை இருப்பதே தெரியாது இருந்தவர்தானே நீங்கள். இப்போது தெரிந்ததும் பாசம் பொத்துக்கொண்டு வருகிறதோ… முடியாது..! வரோதயனை உங்களிடம் கொடுக்க மாட்டேன் மாட்டேன் மாட்டேன்…!” எனச் சீற்றத்தோடு தன்னிலை இழந்து கத்த,
“ஷ்… எதற்கு இத்தனை சத்தம். இதோ பார் மதிமை…! நீ இப்போது அதிர்ச்சியில் இருக்கிறாய். உன்னால் இப்போது எதையும் தெளிவாக சிந்திக்க முடியாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதையும் நீ கிரகிக்க மறுக்கிறாய். வரோதயன் என் குழந்தை. என் இரத்தம். அவன் என்னோடு இருப்பதுதான் முறை. நீ சம்மதித்தாலும் சம்மதிக்க வில்லை என்றாலும், மறுத்தாலும் வெறுத்தாலும் வரோதயனை நான் என் கூட அழைத்துப் போவது உறுதி…! தயவு செய்து அடம்பிடித்து என் பொறுமையைச் சோதிக்காதே…!” என்றவன்,
தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரத்தை விட்டு அதிலிருந்த காசோலைப் புத்தகத்தை வெளியே எடுத்தான் ஆதிபன்.
சட்டைப் பையில் சொருகியிருந்த பேனாவை இழுத்தெடுத்து, அதில் ஒரு ஓலையில் கடகடவென்று எழுதிவிட்டுப் பேனாவை மூடி அதே இடத்தில் சொருகியவன், எழுதிய காசோலையைத் தனியாக்கி அவளிடம் நீட்ட, மதிமையோ சீற்றத்துடன் அவனைப் பார்த்தாள்.
இப்போது அவளை நெருங்கியவன், அவளுடைய தளிர் கரத்தைப் பற்றி அந்தக் கரத்தில் காசோலையை வைக்க, மதிமை குழப்பத்துடன் அவனையும் காசோலையையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அவனோ காசோலையை அவள் கரத்தோடு அழுத்தியவாறே,
“என் மகனை வளர்க்க நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீ கடந்து வந்த சிரமங்களை என்னால் திருப்பிக் கொடுக்க முடியாதுதான்… குறைந்தது அதற்கு ஈடாகப் பணத்தை மட்டும்தான் என்னால் கொடுக்க முடியும்…! எல்லாவற்றிற்கும் சேர்த்து இரண்டு லட்சம் அமரிக்க டாலருக்கான காசோலை இது. இனியாவது என் மகனை என்னிடம் கொடுக்கலாமில்லையா…?” என்றவனை நம்ப முடியாமல் வெறித்தாள், மதிமை.
வரோதயனை வளர்த்ததற்குப் பணம் கொடுக்கிறானா…? அவளுடைய உயிரைக் காத்தவன், அவளை அவளாகவே மாற வைத்தவன், கொடிய வலியிலிருந்து மீட்டெடுத்தவன், அவனை வளர்த்ததற்காகப் பணம் கொடுக்கிறானா? ஆத்திரமும், அழுகையும், ஆவேசமும் பொங்கிக் கொண்டு வர, அவனை வார்த்தைகளால் விளாசி எடுக்க வாயைத் திறந்த நேரம், வாசல் கதவு மணி அடித்தது.
இவளுக்கோ அசையக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு இரத்தம் கொதித்துக் கொண்டு இருந்தது.
ஆதிபன்தான், நடந்து சென்று கதவைத் திறக்க, அங்கே சபேசன் வரோதயனை ஏந்தியவாறு நின்றிருந்தான்.

