(9)
புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க,
தன் விழிகளாலேயே நண்பனிடம் மன்னிப்பு வேண்டிய வாறு,
“கொஞ்சம் அவஸ்தை பட்டான்டா…! அழத் தயார் என்பது போல உதடுகள் வேறு பிதுங்கத் தொடங்கி விட்டன. அம்மாவிடம் போக வேண்டும் என்று ஆரம்பித்தானா…? அதற்கு மேல் அவனை வைத்து சமாளிக்க முடியாமல் அழைத்து வந்தேன்.” என்று நண்பனிடம் மெதுவாகக் கூற,
எதுவோ உந்தித் தள்ளியது போல மதிமை வேகமாக வந்து வெளியே பார்த்தாள். அங்கே புதியவன் கரத்தில் வரோதயன் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டவளுக்கு, மூச்சே அடைத்துக் கொண்டது.
அவளால் தன் விழிகளையே நம்ப முடிய வில்லை. ‘அவளுடைய வரோதயனை யாரோ ஒருவன் அழைத்து வந்திருக்கிறானா? இங்கே என்ன நடக்கிறது. குழந்தைக் காப்பகத்திலிருந்த குழந்தை எப்படி இங்கே வந்தது? அவளைத் தவிர குழந்தையை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது என்றுதானே சொன்னாள். அப்படியிருக்கையில், இவர்களிடம் எப்படிக் குழந்தையைக் கொடுத்தார்கள்?’
கரத்திலிருந்த காசோலை தரையில் விழ, அந்தப் புதியவனின் கரங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த மகனை வெறித்தவள், அடுத்த கணம், பேய் பாய்ச்சலாக சபேசனை நோக்கிப் பாய்ந்தவள், அவனுடைய கரத்திலிருந்த வரோதயனை இழுத்துத் தன் கையணைப்பில் வைத்தவாறு, இரு ஆண்களையும் பார்த்து முறைத்தாள்.
“ஹௌ டெர் யு…? என்னுடைய அனுமதி இல்லாமல் என் குழந்தையை காப்பகத்திலிருந்து எப்படி அழைத்து வரலாம்? உங்களுக்கு யார் அந்த அனுமதியைக் கொடுத்தது?” ஆத்திரத்துடன் சீற, அதைக் கண்டு ஏளனமாகச் சிரித்த ஆதிபன்,
“நீ அழைத்துவரச் சொன்னதாகச் சொன்னேன். மறுக்காமல் குழந்தையைக் கொடுத்து விட்டார்கள்…!” என்றான்.
அதைக் கேட்டதும், மறுப்பாகத் தலையை அசைத்தவள்,
“இல்லை…! அணுரேகா இறந்த பின், என்னைத் தவிர யாரிடமும் குழந்தையை ஒப்படைக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறேன்.” என்றவளைக் கிண்டலுடன் பார்த்த ஆதிபன்,
“ஆரம்பத்தில் தயங்கினார்கள் தான்… ஆனால் அந்தக் குழந்தைகள் காப்பகமே சட்டத்தின் விதிமீறலுக்கு அமைய நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் போல. அதைச் சுட்டிக் காட்டினேனா… மறுக்காமல் குழந்தையை ஒப்படைத்து விட்டார்கள்.” என்றவன், இப்போது நிமிர்ந்து நின்று, கைக்கடிகாரத்தை ஒரு முறை சரி பார்த்தான். பின் அவளை நிமிர்ந்து பார்த்து,
“நேரம் போகிறது மதிமை. கிளம்பவேண்டும். அதனால், வரோதயனின் பொருட்கள், முக்கியமாக அவனுடைய மருத்துவ அறிக்கைகள் இருந்தால் கொடுக்கிறாயா?” என்றவனை அச்சத்தோடு பார்த்தாள், மதிமை.
கரங்களோ, வரோதயனை மார்போடு இறுக அணைத்துக் கொண்டன. தேகமோ நடுங்கியது. வார்த்தைகளோ வரமாட்டேன் என்று தடுமாறின.
“ஏன்…? எதற்கு…?” திக்கித் திணற, இப்போது நிஜமான எரிச்சலோடு அவளைப் பார்த்தான் ஆதிபன்.
“இது என்ன கேள்வி? என் குழந்தையின் உடல் நலம் பற்றி எனக்குத் தெரிய வேண்டாமா…?” என்றான் பொறுமை இழந்தவனாக. தொடர்ந்து,
“நாளையிலிருந்து நிறைய வேலைகள் இருக்கின்றன. குழந்தையின் பெயரோடு என் பெயரைச் சேர்க்கவேண்டும். இவன் என் பிள்ளை என்று நிரூபிக்கவேண்டும். அதன் பிறகுதான் கடவுச்சீட்டு எடுக்க முடியும். அதன் பின்பு தான் குழந்தையையும் என் கூட அழைத்துப் போக முடியும்…!” என்றதும் தான் அவன் கையோடு வரோதயனை அழைத்துப் போகப்போகிறான் என்று புரிந்தது. துடித்துப்போனாள், மதிமை.
“இவனை இப்போதே அழைத்துப் போகப் போகிறீர்களா?” கேட்டபோதே குரலுக்கு பதில் காற்றுதான் வந்தது. அவனோ பொறுமை இழந்தவனாக அவளை ஒரு விநாடி உற்றுப் பார்த்தவன்,
“நீ நிஜமாகவே புரியாமல்தான் கேட்கிறாயா? இல்லை.. நடிக்கிறாயா…? இத்தனை விளக்கம் எல்லாம் எதற்காகச் சொன்னேன் என்று நினைக்கிறாய்? எனக்குப் பொழுது போகவில்லை என்றா? யெஸ்…! வரோதயன் இப்போதே இந்தக் கணமே என்கூட வரப் போகிறான். அதுவும் என் மகனை இத்தகைய ஒரு ஒவ்வாத சூழ்நிலையில் இருப்பதற்கு, நான் சம்மதிக்கவே மாட்டேன்.” என்றவனிடம் அழுகையும் கெஞ்சலுமாகப் பார்த்தவள்,
“ப்ளீஸ்… இன்னும் இரண்டு நாட்கள் அவன் என் கூட இருக்கட்டும். திடீர் என்று அவனை என்னிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றால், சத்தியமாக என்னால் தாங்க முடியாது! இரண்டே இரண்டு நாட்கள். அதற்குப் பிறகு இவனைக் கொடுத்து விடுகிறேன்… ப்ளீஸ்…” என்று கெஞ்சலாகக் கேட்க, அவனுடைய இதழ் ஓரம் கிண்டல் புன்னகை ஒன்று மலர்ந்தது.
“ரியலி…? எதற்கு? என் குழந்தையை எடுத்துக்கொண்டு கண்காணாத தேசம் போகவா…? என்னைப் பார்த்தால் உனக்கு முட்டாள் போலவா தெரிகிறது…?” என்றதும் மதிமையின் முகம் கூம்பித்தான் போனது.
‘ஒரு கணம் அப்படி சிந்தித்தது நிஜம்தான். ஆனால் ஓடுவதாக இருந்தாலும் எங்கே ஓடுவாள். எதற்கும் உதவாத இந்த சூழ்நிலையில் அவள் பல்லைக் கடித்துக்கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன? போக்கிடம் இல்லாததால்தானே. அப்படியிருக்கையில் எங்கே என்று ஓடி ஒளிய முடியும்?’ இயலாமையில் தன் உதடுகளைக் கடித்து விடுவித்தவள், மறுப்பாகத் தலையசைத்து,
“இல்லை…. நிஜ… நிஜமாகவே அவன் கூட இரண்டு நாட்கள்…! திடீர் என்று என்னிடமிருந்து பிரிக்கப்படுவான் என்று நான் கனவிலும் நினைக்க வில்லையே…! ப்ளீஸ் சார்…! குறைந்தது ஒரே ஒரு நாளாவது, அவனை என்னோடு விட்டு விடுங்களேன்.” கெஞ்சியவளிடம் பரிதாபம் வந்தாலும், மறுப்பாகத் தலையசைத்தான், ஆதிபன்.
“இதோ பார் மதிமை. எனக்கு உன்னைப் பற்றி எதுவும் தெரியாது. பிள்ளையை நன்றாக வளர்த்திருக்கிறாய் தான். அதற்காக உன்னை நம்பி என்னால் இவனை விட்டுவிட்டுப் போக முடியாது, மதிமை. கூடவே.. நீ தப்பி ஓடிவிடுவாயோ என்று பயந்து கொண்டு, ஒரு இரவைக் கூட என்னால் கடக்க முடியாது. ஐ ஆம் சாரி…” என்று உறுதியாகக் கூறியவனை, கையறு நிலையில் பார்த்தாள், மதிமை.
‘அவ்வளவு தானா…? அவளுக்கும் வரோதயனுக்குமான உரிமை, தொடர்பு, எல்லாம் அவ்வளவு தானா…? கடவுளே! இவனில்லாமல் எப்படி வாழப் போகிறாள்? நினைக்கும் போதே தேகம் நடுங்கியது. இதயம் கசங்கி இரத்தமே சிந்தியது. விளைவு அவனைத் தன்னோடு அணைத்தவாறு அப்படியே நின்றிருக்க, சற்று நேரம் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான், ஆதிபன்.
‘அவள் வருந்துகிறாளே என்பதற்காகக் குழந்தையை ஒப்படைத்து விட்டுப் போய்விட முடியாதே. முதலாவது அது அவனுடைய குழந்தை. அவனை வளர்க்கும் தார்மீக பொறுப்பு அவனுடையதே. இரண்டாவது, அவன் குழந்தை இப்படி ஒரு அருவெறுப்பான சூழ்நிலையில் வாழ்கிறான் என்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அழுக்கேறிய கட்டடம், எங்கு பார்த்தாலும் கஞ்சா மணம், இத்தனை நாட்களும் அவன் மகன் இத்தகைய ஒரு சூழலில் வாழ்ந்திருக்கிறான் என்பதை நினைக்கும்போதே மனம் பதறித் துடித்தது. அது புரியாமல் விட்டுவிட்டுப் போ என்றால்…!’ வேகமாக மறுப்பாகத் தலையை அசைத்தவன்,
“நோ… நாட் எனி மோர்…! லிசின்…! உன் கூட விவாதம் செய்ய எனக்கு நேரமுமில்லை, விருப்பமுமில்லை. நீ மறுத்தாலும் தடுத்தாலும் வரோதயன் என் கூடத்தான் வருவான். அதையும் மீறி நீ தடுத்தால், நான் காவல்துறையை நாட வேண்டி வரும். அதுவும் நீ என் மகனைக் கடத்தி வந்தாய் என்கிற புகாரோடு. அதை மறுப்பதற்கும் உன்னிடம் ஆதாரங்களில்லை. தயவு செய்து என்னை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதே. செய்ய மாட்டேன் என்று நினைக்காதே…! என் மகனை என் கூட அழைத்துச் செல்ல.. எந்த எல்லை வரைக்கும் போவேன். இதுவரை அமைதி காக்கிறேன் என்றால், அது நீ அவனுக்குச் செய்த உதவிக்கு நன்றிக் கடனாகத்தான்.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன்,
“சரி, இனியாவது அவனுடைய பொருட்களைக் கொடுக்கிறாயா? இல்ல நாங்களே சென்று…” என்றவாறு ஓரடி எடுத்து வைக்க முயல,
“இல்லை… இல்லை…! நானே எடுத்து வருகிறேன்.” என்று விம்மலோடு சொன்ன அவளுக்குக் கால்கள் நகர மறுத்தன.
அவளுக்கு நன்றாகத் தெரியும் தான். அவர்களோடு விவாதித்து எதையும் சாதிக்க முடியாதென்று. என்னதான் முயன்றாலும், சட்டம் அவன் பக்கம்தான் நிற்கும். தவிர அவளுக்கு ஆதரவாகப் பேச யாருமே வரப்போவதில்லை. முடிவு செய்தவளாக, தொடர்ந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தெடுத்தவள், மீண்டும் ஒரு முறை அணைத்திருந்த மகனை, மீண்டும் இறுக அணைத்து விடுவித்து,
“ஒரு நிமிடம்…!” என்று விட்டு, ஆழ மூச்செடுத்து தன்னைத் திடப்படுத்தியவளாக, விறு விறு என்று அங்கிருந்த அறைக்குள் நுழைந்தாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் வெளியே வந்தவளின் ஒர கரத்தில் உடுப்புப் பெட்டியும், மறு கரத்தில் கோப்பும் இருந்தது.
பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, மறு கரத்திலிருந்த கோப்பை அவனிடம் நீட்ட, மறுக்காமல் வாங்கிக் கொண்ட ஆதிபன், அதை சபேசனிடம் நீட்ட, சபேசனும் அதை வாங்கிக்கொண்ட நேரம், மீண்டும் மதிமை, சட்டென்று வரோதயனை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
கண்ணீரோ.. நிற்கமாட்டேன் என்று தொடர்ந்து வழிந்துகொண்டே இருந்தது. மெதுவாக அவனை விட்டு விலகியவள், உடல் இறுக,
“இ… இனிக் கிளம்புங்கள்…” என்றபோது அவள் உயிரே மடிந்து செல்வது போலத் தோன்றியது, மதிமைக்கு.
அடுத்து வரோதயனின் கரம் பற்றிய ஆதிபன், அவன் முன்னால் மண்டியிட்டமர்ந்து குழந்தையின் நெற்றியில் மெல்லிய முத்தம் ஒன்றைக் கொடுத்து விட்டு,
“கிளம்பலாமா வரோ…” என்றான் மென்மையாக. ஏதோ நீண்ட நாள் பழக்கப்பட்டவன் போல,
“சரிப்பா…” என்ற குழந்தையை அதிர்ச்சியோடு பார்த்தாள், மதிமை.
“அப்பாவா…? அப்படியானால், ஆரம்பத்திலேயே குழந்தையை அழைத்துச் சென்று விட்டானா?” நம்ப முடியாதவளாக அவனை ஏறிட,
“இன்று காலையே அவனை என்னோடு தான் வைத்திருந்தேன். சட்டென்று என்னோடு ஒட்டிக் கொண்டான்…” என்று விட்டு, சரி கிளம்புகிறோம்…” என்றுவிட்டுத் திரும்பியவனுக்கு,
‘ஏனோ மதிமையை ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை. அவனையும் மீறிக் குற்றம் செய்தது போல மனம் குறுகுறுத்தது. ஆனாலும் அவனுக்கு வேறு வழியில்லையே. எப்படி குழந்தையை அவளிடம் ஒப்படைக்க முடியும்? அதைக் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லையே…! அதே வேளை அந்தப் பெண்ணின் தவிப்பும், துடிப்பும் இவனை சற்றுக் கலங்கத்தான் செய்தது.’ பற்களைக் கடித்து, எதையோ முணுமுணுத்துவிட்டுக் கடகடவென்று வெளியேறத் தொடங்க,
“ஒரு நிமிஷம்…” என்றாள், மதிமை. அதைக் கேட்டதும், அதுவரையிருந்த பரிதாபம் கலைந்து போக,
“நாட் எகெய்ன்” என்றவாறு திரும்பினான், ஆதிபன். அவளோ அவனுடைய எரிச்சலைக் கவனிக்கவில்லை.
சுட்டுவிரல் காட்டி, “தயவு செய்த ஒரு நிமிடம் காத்திருங்கள்…” என்றவள் உடனே அறைக்குள் நுழைந்து,
அடுத்த இரண்டாம் நிமிடம் வெளி வந்த போது, அவளுடைய கரத்தில் வங்கிப் புத்தகம் வீற்றிருந்தது. அதை அவனிடம் நீட்டி,
“இது வரோதயனுக்காக வங்கியில் போட்ட பணம். அவனுக்காகச் சேமித்தது.” என்றபோது நெஞ்சில் பெரும் அழுத்தம் ஏறிக்கொண்டது.
அவனோ அவளையும் அந்த வங்கிப் புத்தகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.
“இது வரோதயனுக்குத் தேவைப்படாது, மதிமை. உனக்குத்தான் தேவை. நீயே வைத்துக்கொள்…!”
“இல்லை… இல்லை…! இது அவனுக்காக சேர்த்தது. இது இங்கே இருந்தால் அவன் நினைப்பு என்னைப் படுத்தும்… வாங்கிக்கொள்ளுங்களேன்…” என்றதும் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை ஆதிபனால், வாங்கிப் பான்ட் பாக்கெட்டில் போட்டவாறு திரும்ப, மீண்டும் அவனைத் தடுத்தாள் மதிமை.
இப்போது பொறுமை இழந்தவனாக, மீண்டும் என்ன என்பது போலப் பார்க்க, முன்னறையை நோக்கிச் சென்றவள், அங்கும் இங்கும் தேடினாள். தரையில் விழுந்து கிடந்த காசோலையைக் கண்டதும் பாய்ந்து அதை எடுத்தவள், அவனை நோக்கி விரைந்து வந்து,
“உங்கள் இந்தக் காசோலை எனக்கு உபயோகப் படாது. தயவு செய்த உங்கள் கூடவே எடுத்துச் செல்லுங்கள்…!” என்றவளிடம் மறுப்பாகத் தலையை அசைத்தவன்,
“இல்லை… இது உனக்கான காசோலை. நீ செய்த சேவைக்கு நான் கொடுக்கும் சன்மானம்.” என்றவனை முறைத்தவள்,
“உங்களை வளர்த்ததற்காக உங்கள் அம்மாவிடம் இந்தக் காசோலையைக் கொடுப்பீர்களா?” என்றாள் சுள் என்று. ஒரு கணம் ஆழமாக அவனைப் பார்த்தவன்,
“முதலாவதாக அவர்கள் என்னைப் பெற்றவர்கள்…! நீ பெற்றவளில்லை… வளர்த்தவள்…!” என்று ஒரு கொட்டு வைத்தவன், தொடர்ந்து,
“இதைக் கொடுத்தால் வாங்குவதற்கு என் தாய் உயிரோடு இல்லை. என் பதினெட்டாவது வயதில் இறந்து விட்டார்கள். அதனால் இதைக் கொடுக்க வாய்ப்பில்லை… அதனால் நீயே வைத்துக் கொள்..!” என்று கூற, இப்போது நிதானமாக அவனை நெருங்கியவள். அவனுடைய பெரிய பலம் பொருந்திய கரத்தைப் பற்றி, அதில் அந்தக் காசோலையை வைத்து,
“xxxxx xxxxx இதை உங்கள் கூடவே வைத்துக் கொள்ளுங்கள்…” என்றதும், உதடுகளைப் பிதுக்கியவன், அவள் திணித்த காசோலையைக் கரங்களில் கசக்கியவாறே பான்டிற்குள் திணித்தவாறு,
“உனக்கே உனக்கான வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள். அதுதான் உனக்கும் நல்லது” என்றுவிட்டு, வீட்டை விட்டு வெளியேற, அடுத்த கணம், அந்த வீட்டின் வாசற்கதவு மிகப் பலமாக அடித்துச் சாத்தப்பட்டது.
(10)
கதவை அடித்துச் சாத்திய மதிமைக்கு அதற்கு மேல் முடிந்து இருக்கவில்லை. கதவில் சாய்ந்த வாறு தரையில் விழுந்தவள், அடுத்து விம்மி வெடிக்கத் தொடங்கினாள்.
வேகமாகப் பயணித்த வண்டியின் பின் இருக்கையில் குழந்தை வரோதயன் அமர்ந்திருக்க, பக்கத்தில் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான், ஆதிபன்.
குழந்தையோ தயக்கத்தோடு தன்னருகே அமர்ந்திருந்த தந்தையைப் பார்ப்பதும், பின் தயக்கத்தோடு பின்னால் திரும்பி எதையோ தேடுவதும், பின் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவனை ஏறிடுவதும், பின் தந்தையைப் பார்ப்பதும், பரிதாபமாக எதையோ தேடுவதுமாக அமர்ந்திருக்க, நீண்ட நேரம் தன் மகனையே ஆசையுடன் பார்த்திருந்த ஆதிபன், தன் கரத்தைத் தூக்கி மகனின் தலையில் பதித்து ஆசையோடு வருடியவாறு,
“ஹே… படி…! ஏதாவது வேண்டுமா?” என்றான் கனிவாய்.
என்னதான் தந்தைப் பாசம் பொங்கி எழுந்தாலும், அதை நேரடியாகக் குழந்தையிடம் காட்ட முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது.
இப்போதே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து உச்சியில் முகம் புதைத்து, கண்ணா என்று சொல்ல வேண்டும் என்று ஒவ்வொரு அணுவும் ஏங்கத்தான் செய்தது. ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை.
குழந்தைக்கும் திடீர் என்று முளைத்த தந்தை. இவனுக்கும் திடீர் என்று வந்த குழந்தை. இருவருக்குமே தயக்கம் இருக்கவே செய்தது. ஒரு வேளை, கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவனைத் தூக்கிக் கொஞ்சியிருந்தால் இந்தத் தயக்கம் வந்திருக்காதோ?
நினைக்கும் போதே அணுரேகாவின் மீது ஆத்திரம் வந்தது. ‘யாரோ ஒருத்தி மீது வைத்த நம்பிக்கையை, அவன் மீது வைக்கவில்லையே. அப்படி வைத்திருந்தால், இப்படி பெற்ற குழந்தைக்கு அந்நியப்பட்டிருக்க மாட்டானே..!’
சற்று நேரம் அங்கும் இங்கும் தேடிப் பார்த்த குழந்தை, பின் திரும்பி தந்தையாகப்பட்ட அவனிடம்,
“அ… அம்மா… எங்கே?” என்று கேட்டது. குழந்தையின் இதழோரம் அழத் தயார் என்பதைக் காட்டுவது போலத் துடித்து, பின் பிதுங்கத் தொடங்க, பதறிப் போனான், ஆதிபன்.
சட்டென்று குழந்தையின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவன், பின் அக் கரத்தை உதட்டில் பொருத்தி எடுத்து,
“உன் அம்மா… வருவார்கள்…” என்றான் இதமாய். மகனைச் சமாளிக்க வேண்டுமே. கொஞ்சம் சமாதானம் கொண்டவனாக,
“எ… எப்போது?” என்றது குழந்தை.
“சீ… சீக்கிரம்…” என்றான். கலக்கத்துடன் பார்த்த குழந்தை,
“அம்மா, ஏன் நம் கூட வரவில்லை…?” என்றான் அடுத்து. ‘அதற்கு என்ன பதிலை சொல்வது?’ ஒரு கணம் தயங்கியவன்,
“அது… வந்து… உன் அம்மாவுக்கு ஒரு முக்கிய வேலையாம்… அதுதான் உடனே நம் கூட வர முடியவில்லை… ஆனால் விரைவாகவே வந்து விடுவார்கள்…” என்றவனை ஆவலுடன் பார்த்த குழந்தை,
“அம்மா இல்லாமல் நான் எங்கும் இது வரை போனதில்லை…” என்ற குழந்தையின் விழிகளில் கண்ணீர் எட்டிப் பார்த்திருந்தது.
‘இவனுக்கும் வலித்ததுதான். அதற்காக அவன் அம்மாவை அழைத்து வர முடியாதே.’ அதனால் குனிந்து தன் மகனை ஏறிட்டவன்,
“நீ நல்ல பிள்ளையாக இருந்தால், அம்மா உன்னிடம் வருவார்கள்…” என்று அவன் முடிக்கவில்லை,
“நான் நல்ல பிள்ளை…! அம்மா எப்போது வருவார்கள்?” என்று பட் என்று கேட்க, மெல்லியதாகச் சிரித்தான் ஆதிபன்.
“சூன்…” என்றான் மென் நகையுடன்.
தந்தை சொன்னதை நம்பியவனாக இப்போது வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் வரோதயன். ஆனால் ஆதிபனின் நெஞ்சில்தான் பெரும் பாரம் அழுத்திக் கொண்டது.
தற்போதைக்கு சமாதானப் படுத்துவதற்காக ஒரு பொய்யைச் சொல்லியாயிற்று. ஆனால் எத்தனை நாளைக்கு இப்படியே சமாளிப்பது? என்கிற கேள்வியும் எழுந்தது.
‘அதற்காக, அந்தப் பெண்ணை அவன் கூடவே வைத்திருக்க முடியுமா என்ன? அவளுக்கென்றொரு வாழ்க்கை வேண்டாமா…? தவிர, எத்தனை நாளைக்குத்தான் அந்தப் பெண்ணைப் பாரம் எடுக்க முடியும்…? ம்கூம்… நிச்சயமாக அதற்கு வாய்ப்பில்லை! அதை விட, வரோதயனின் மனதிலிருந்து அந்தப் பெண்ணை முற்றாக மறக்கடிக்கச் செய்துவிட வேண்டும்.. ! அதுதான் எப்படி? அது முடியுமா? அந்த வீட்டிலிருந்து கிளம்பி பதினைந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. அதற்கிடையிலேயே தாய் வேண்டும் என்கிறானே. இவனை எப்படிச் சமாளிப்பது?’ என்று குழம்பியவன், பலமாகத் தலையை அசைத்து,
‘ஏன் சமாளிக்க முடியாது? நிச்சயமாக முடியும். குழந்தையின் மனது களிமண் போல. பதமாக நடந்து கொண்டால், விருப்பத்திற்கமைய குழந்தையின் மனத்தை மாற்ற முடியும். நிச்சயமாக முடியும்…! அதுவும் ஒரு தந்தையாய், குழந்தையின் மனதில் இடம் பிடிக்க முடியும். எந்த வகையிலும் உறவில்லாத அந்தப் பெண்ணை அம்மா என்று ஏற்றுக்கொண்ட குழந்தை, சொந்தத் தந்தையை ஏற்காதா என்ன? அவனுடைய அப்பழுக்கற்ற அன்பு சர்வ நிச்சயமாக மகனின் மனதை மாற்றும்… தந்தைதான் தன் உலகம் என்று எண்ணச் செய்யும்.’ அந்த நம்பிக்கையோடு திரும்பி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த சபேசனிடம்,
“சபேசா… ‘டாய்ஸ் ஆர் அஸ்’ இல் வண்டியை நிறுத்து. வரோவிற்குச் சில விளையாட்டுப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம்.” என்று தன் மகனைக் கடைக்கண்ணால் பார்த்தவாறு உத்தரவிட, அதைக் கேட்ட வரோதயன் கண்களில் மகிழ்ச்சியும் உதட்டில் புன்னகையும் தோன்றியன.
வென்று விட்ட மகிழ்ச்சியோடு மகனைப் பார்த்துச் சிரிக்க, குதுகலத்துடன் தந்தையை ஏறிட்டு,
“எனக்கா அப்பா…” என்றது குழந்தை பெரும் ஆர்வமாய்.
“பின்னே எனக்கா?” என்று கிண்டலுடன் கேட்க, அந்தக் கிண்டல் புரியாமல் தன் அத்தனை பல்லையும் காட்டிச் சிரித்தது, குழந்தை. அதைக் கண்டவனுக்கு, அதுவரை இருந்த அழுத்தம் சட்டென்று விலகிப்போனது.
அதே நேரம், மதிமைக்கு வாழ்க்கையே சூனியமாகி விட்டது போல, உலகமே வெறுத்துப் போயிற்று. தன் மகனில்லாத உலகம் சூனியமாகத் தெரிந்தது. குழந்தையின் சிரிப்பொலி இல்லாமல், அத்தனையும் மந்தமாகிப் போன உணர்வு அவளுக்கு.
‘அவளுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. அவளுக்கென்று சொந்தமாய் உறவுகள் இருக்கக் கூடாது என்று கடவுள் எழுதியிருக்கிறானா என்ன? மொத்தமாக அவளிடமிருந்து பறித்துக் கொண்டதே. இனி என்ன செய்யப் போகிறாள்? எப்படி வாழப் போகிறாள்? இத்தனை நாள் ஓட்டமும் வரோதயன் என்கிற ஒருவனுக்காக இருந்தது. இனி யாருக்காக அவள் ஓட வேண்டும்? ஏன் ஓடவேண்டும்? எதற்காக ஓடவேண்டும்?’
அவளுக்காய் ஒரு உயிர் இருந்த போது, அந்த உயிருக்காக ஆலாய் பறந்த தேகமும், புத்தியும் இப்போது சோர்ந்து போய் முடங்கிக் கொண்டது.
எழுந்து தண்ணீர் குடிப்பதற்கோ, பசித்த வயிற்றை அடக்க உணவு உண்பதற்கோ, சுத்தமாகப் பிடிக்காமல், மென் இருக்கையில் முடங்கிக் கொண்டாள் மதிமை.
யாருடைய முகத்தையும் ஏறிட்டு ஒரு வார்த்தை பேசக் கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆங்காங்கே சிதறிக் கிடந்த வரோதயனின் பொருட்களைத் தன்னோடு அணைத்தவாறு அழுது கரைந்தாள் மதிமை.
காலம் மனக் காயத்தை ஆற்றும் என்பார்களே…! இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என்று நாட்கள் கடந்தனவே தவிர, மதிமையால் வரோதயனின் பிரிவிலிருந்து சுத்தமாக மீண்டெழ முடியவில்லை.
‘குழந்தை அவளைக் காணாமல் தேடுவானே என்று மனம் அடித்துக் கொண்டது. அவனை எப்படி சமாதானப் படுத்துவார்கள். நிச்சயமாக அழுவான். நான் வேண்டும் என்று கேட்பான். பாவிகள், ஒரு முறையாவது அவனை அழைத்து வந்து காட்டலாமே. கொஞ்சமாவது சாந்தி கொள்வாளே…!
ஐயோ…..! இப்படி இடையிலேயே அவனைப் பிரிந்து விடுவோம் என்று தெரிந்திருந்தால், ஒவ்வொரு நொடியும் அவனைப் பிரியாமல், அவனுடனேயே இருந்திருப்பேனே…’ என்று எண்ணி எண்ணி நெஞ்சம் விம்மி வெடித்தது.
கலங்கித் தவித்து அழுது கடைசியில் காய்ச்சலை வாங்கிக் கொண்டது தான் மிச்சம். ஆனாலும், எழுந்து சென்று மருந்து வாங்கவேண்டும் என்று மதிமைக்குத் தோன்றவேயில்லை.
எப்படியாவது ஒரு முறையாவது குழந்தையைப் பார்த்துவிடவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் பூதாகரமாக அவளை உலுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி? என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. சென்றவர்கள், எங்கே தங்கியிருக்கிறோம் என்கிற விபரத்தைக் கூட அவளிடம் கூறவில்லையே. அவர்களை எங்கே என்று தேடுவது. அப்படியே தேடிக் கண்டு பிடித்தாலும், குழந்தையை சந்திக்க விடுவார்களா?
இந்த நிலையில் ஆதிபன் முன்பு அழைத்திருந்த கைப்பேசி இலக்கத்திற்கு மதிமை பல முறை அழைத்துப் பார்த்தாள். ஆனால் அவன் இவளுடைய அழைப்பை ஏற்றானில்லை. அவள்தான் அழைக்கிறாள் என்று தெரிந்ததும், அழைப்பை ஏற்க மறுக்கிறான்.
அவனை அழைத்து, அழைத்து விரல் வலித்ததுதான் மிச்சம். கொஞ்சம் கூட அவன் இரக்கம் காட்டவில்லை. இவளுக்குக் கோபம்தான் வந்தது. கூடவே பயத்தையும் கொடுத்தது. வரோதயனை எண்ணி நெஞ்சம் பதறியது.
‘வரோதயன் நன்றாக இருக்கிறானா? இல்லையா? என்று கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லையே. படுபாவி, ஒரு முறை அழைத்து வரோதயன் பற்றிய தகவல்களைச் சொன்னால்தான் என்ன? இத்தனை காலம் வளர்த்தவள், நன்றிக்கடன் என்றெல்லாம் பீற்றினானே. அந்த நன்றிக்கடனைக் காட்டும் விதம் இதுதானா?’ விம்மித் துடித்தாள் மதிமை.
இப்போது அவளுக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான்…! வரோதயனைக் கூடக் கண்ணில் காட்ட வேண்டாம். குறைந்தது வரோதயன் நன்றாக இருக்கிறான் என்கிற செய்தியை மட்டும் சொன்னால் போதும். இதுவரை கை கூப்பிக் கும்பிடாத தெய்வத்திடம், முதன் முறையாக வரம் கேட்டாள். வரோதயனைக் கண்ணில் காட்டுமாறு.
இதோ நான்கு நாட்கள் கடந்து விட்டன. இந்த நான்கு நாட்களில் பாதியாகி நின்றாள், மதிமை. சரியான உணவு உட்கொள்ளாதது உடலை பலவீனமாக்கியிருந்தது. ஆனாலும் பிடிவாதமாக எழுந்தவள், வெளியே போகத் தயாராகி, அங்கும் இங்கும் என்று தேடிக் கிடைத்த இருபத்தைந்து சத நாணயங்களைப் பொறுக்கி எடுத்துக் கைப்பையில் போட்டவாறு முன் பக்கம் வந்தவள், சிரமப்பட்டு, இழுப்பறையைத் திறந்தாள்.
நட்சத்திரம் போட்ட அந்த ஹுடியை இழுத்து அணிந்தவாறு வெளியேறியவள், வீட்டைப் பூட்டிவிட்டுச் சாவியை பான்ட் பாக்கட்டிற்குள் செருகியவாறு நடக்கத் தொடங்கினாள். ஜன்னலுக்கு வெளியே இருந்த இருட்டு பயமுறுத்தியது.
‘இப்போது எத்தனை மணி?’ குழப்பத்தோடு கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள்.
எட்டு முப்பது என்றது கடிகாரம். எட்டு முப்பதா? மெல்லிய அச்சம் எட்டிப் பார்த்தது. அதையும் மீறி வரோதயனின் தந்தையிடம் பேசவேண்டும் என்கிற வேகம் எழுந்தது. அதனால் வீட்டிற்குள் போக மனம் ஒப்பவில்லை. ஹுடியைத் தலையில் மாட்டி விட்டு, இழுப்பை மேலே இழுத்து விட்டுக் குடுகுடு என்று நடக்கத் தொடங்கினாள்.
அப்போது அந்தக் கட்டடத்தின் ஒரு மறைவுப் பகுதியிலிருந்த நான்கைந்து போதை மருந்துப் பிரியர்களைக் கண்டதும், திக்கென்றானது மதிமைக்கு.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தது. இப்போது அவர்களை விடுதலை செய்து விட்டதா…? சும்மாவே அந்தக் குடியிருப்பு அப்படி இப்படி. இதில் இவர்களும் வந்து சேர்ந்து விட்டால் சொல்ல வேண்டியதில்லை. பேசாமல் வீட்டிற்கே போய் விடுவோமா? என்று கேட்டது மனது. உடனே மறுப்பாகத் தலை அசைத்தவள், பற்களைக் கடித்தவாறு வெளியேறினாள், மதிமை.
அதே நேரம், தம்மைக் கடந்து சென்ற அந்தப் பெண்ணைக் கண்டதும், அந்தக் குழுவில் பேசிக்கொண்டிருந்த ஓரிருவரின் பார்வை ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டது. அதில் ஒருவன் தலையை மெதுவாக அசைத்து, ஒரு வித புன்னகையைச் சிந்த, அது மற்றவனிடமும் தொத்திக் கொண்டது. அதில் இன்னொருவனின் உதடுகள் சுவாரசியமாகச் சிரிப்புடன் மலர்ந்தன.
இது எதுவும் தெரியாமல், முயன்ற வரை வேகத்தை நடையில் கூட்டி முக்கிய பாதையில் ஏறினாள், மதிமை. மருந்திற்கும் ஆட்கள் அந்தப் பாதையோரத்தில் இல்லை. தெரு விளக்கின் வெளிச்சத்தில் இருட்டு மட்டும் சற்றுக் குறைந்திருந்தது. குளிர் வேறு சற்று அழுத்தமாக இருந்தது.
சற்றுத் தூரம் போக, பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் பொதுத் தொலைப்பேசி சாவடி ஒன்று தெரிந்தது. நிம்மதியோடு அதை நெருங்கியவள், கரங்கள் நடுங்க, கரத்திலிருந்த இருபத்தைந்து சத நாணயங்களை அதற்குள் போட்டு விட்டு, மனதில் பதிந்து போன அந்த இலக்கங்களை அழுத்த, இப்போதும் அழைப்பு போனது. ஆனால்.. யாரும் அவளுடைய அழைப்பை எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனோ, மனது நேர்மறையாக எண்ண மறுத்தது. ஏதோ தவறு நடப்பது போல மனம் அடித்துக் கொண்டது.

