(5)
அன்று சனிக்கிழமை. அரக்கப் பரக்க வரோதயனைத் தயாராக்கி, தானும் தயாராகி அவளுடைய குடியிருப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிற குழந்தை காப்பகம் ஒன்றில் விட்டு விட்டு, வேலை செய்யும் உணவகம் நோக்கி ஓடினாள், மதிமை.
அவள் உள்ளே நுழைந்து நட்சத்திரங்களைத் தெறித்தாற் போல அச்சிடப்பட்டிருந்த இளஞ்சிவப்பு ஹுடியைக் கழற்றி பத்திரமாகக் கொழுவ வேண்டிய இடத்தில் மாட்டி விட்டு, கைப்பையையும் அந்த இடத்தில் பத்திரப்படுத்தும் போது அவளுடைய கைப்பேசி அடித்தது. இந்த நேரத்தில் யார்? பரபரப்புக் குறையாமலே பான்ட் பாக்கட்டிற்குள் கை விட்டுக் கைப்பேசியை வெளியே எடுத்து, உயிர்ப்பித்துப் பார்த்தாள். கடந்த ஒரு கிழமையாக, அவளை அழைத்துத் தொல்லை செய்யும் அதே இலக்கம்.
யார் என்று தெரியாத இலக்கம் என்பதால், அவள் அந்த அழைப்பை ஏற்கவேயில்லை.
‘எப்படி ஏற்பது? கொஞ்ச காலமாகக் கைப்பேசிகளில் அதற்குப் பணம் கட்டவில்லை, இதற்குப் பணம் கட்டவில்லை, அரசாங்க வரியைக் கட்டவில்லை, சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டதால், காவல்துறை கைது செய்யப் போகிறது. அதிலிருந்து வெளியேறப் பணம் கட்ட வேண்டும் இப்படியான, பணம் பறிக்கும் கும்பல்கள், மோசடி அழைப்புகளை ஏற்படுத்தி, மக்களை ஏமாற்றுவது நடந்து கொண்டு தானே இருக்கிறது. அது தெரிந்தும் புதிய இலக்கங்களை ஏற்றுக்கொள்ள அவளுக்குப் பைத்தியமா என்ன?’ அப்படியிருந்தும் ஒரே இலக்கத்தில் தொடர்ந்து அழைப்பு வரவும், பொறுமை இழந்தவளாக ஒரு நாள் அந்த அழைப்பை ஏற்றாள், மதிமை.
உடனே மறுபக்கம், “உன் கூட முக்கியமான விடையம் பேச வேண்டும், எப்போது நேரம் கிடைக்கும்?” என்று ஆங்கிலத்தில் கேட்டதும் இவளுக்குத் தாள முடியாத கோபம் வந்தது.
“என்னது… உங்கள் கூட பேச வேண்டுமா…? யார் சார் நீங்கள்…?” என்று ஆங்கிலத்திலேயே இவள் இழுத்து வைத்த பொறுமையோடு கேட்க,
“அதை நேரில் தான் சொல்ல முடியும். எப்போது உங்களுக்கு நேரம் கிடைக்கும்?” மரியாதையாகத் தான் அந்தக் குரல் பேசியது. ஆனாலும் அதில் ஒரு வித திமிர் இருப்பது போலத் தோன்ற,
“சாரி சார்…! நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. தயவு செய்து இனிமேல் என்னை அழையாதீர்கள். வேண்டுமானால் வேறு யாரிடமாவது முயன்று பாருங்கள்.” என்றவள் கைப்பேசியை அணைத்ததோடு அந்த இலக்கத்தை முடக்கியும் விட்டாள். ஆனாலும் வேறு இலக்கத்திலிருந்து அவளை அழைக்க, முதலில் புதிய இலக்கமாக இருக்கிறதே என்று எடுத்துப் பார்த்தால், அதே ஆள்தான் அவளோடு பேசவேண்டும் என்று கேட்டது.
உடனே கைப்பேசியை அணைத்து வைத்ததோடு யார் புதிதாக அழைத்தாலும் அந்த அழைப்பைச் சுத்தமாகத் தவிர்த்தாள். இப்போதும் அதே இலக்கத்தில் தான் அவளுக்கு அழைப்பு வந்தது.
எரிச்சலுடன் கைப்பேசியை அணைத்து விட்டு, அதைப் பான்ட் பாக்கட்டிற்குள் செருகியவாறு, உள்ளே நுழைய, வரிசையாக வேலைகள் காத்திருந்தன.
அன்றைக்கென்று மூச்சு எடுக்க முடியாத அளவு வாடிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு மேசையாக ஓடிச்சென்று அவர்களுக்கு வேண்டிய உணவுப் பட்டியலைக் குறிப்பெடுத்துச் சென்று, அதைக் கணினியில் பதிந்து விட்டு, அடுத்துக் காத்திருந்த வாடிக்கையாளர்களை நோக்கி ஓடினாள்.
அப்போது தான், அவனைக் கண்டாள் மதிமை. வரிசையாக நின்றிருந்த வாடிக்கையாளர்களில் மூன்றாவதாக நின்றிருந்தான், அவன். நிச்சயமாக அவனுடைய தலையைத் தொடுவதாக இருந்தால், இவளுக்கு இருக்கையாவது வேண்டும். அதில் ஏறித்தான் அவன் தலையைத் தொட முடியும். அந்தளவு உயரமாக இருந்தான், அவன். அந்த உயரத்திற்கேற்ற உருண்டு திரண்ட உடற்கட்டு.
பிடிவாதமாய் சுருண்டு கிடந்த அடர்ந்த குழல்… பார்க்கும் போது சட்டென்று மனதில் பதிந்து போகும் அளவுக்குக் கம்பீரமாக இருந்தான், அவன்.
அவன் சும்மா நின்று இருந்தால் கருத்தில் பதிந்ததோடு முடிந்திருக்கும். ஆனால் அவன் அவளைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுடைய கூரிய விழிகள் தயங்காமல் அவள் செல்லும் இடங்களெல்லாம் படர்வதைக் கண்டவளுக்கு, ஏனோ உள்ளே குளிர் எடுத்தது.
இது ஒன்றும் அவளுக்குப் புதிதில்லைதான். அங்கே வரும் ஒரு சில வாடிக்கையாளர்கள் இப்படிப் பெண்களைக் காணாததைக் காண்பது போலப் பார்ப்பதும் உண்டுதான். ஆரம்பத்தில் அது பெரும் கூச்சமாகவும், அவஸ்தையாகவும் இருந்தாலும், போகப் போக அது பழகிப் போன ஒரு விடையமாக மாறிவிட்டிருந்தது.
ஆனால் இந்தப் பார்வை வேறு. என்ன என்று பிரித்தறிய முடியாத வகையில் மிக வித்தியாசமாக இருந்தது. நெஞ்சுக்குள்ளே என்னவோ ஒரு வித தடுமாற்றம். அதுவும் அந்தக் கூரிய விழிகள் முதுகைத் துளைப்பது போலத் தோன்ற, தடுமாறிப் போனாள் மதிமை.
அடுத்த வாடிக்கையாளரை, அவளோடு வேலை செய்யும் இன்னொரு பெண் கவனித்துக் கொள்ள, அவளுக்கும் பின்னாலிருந்த அந்த நெடியவனைக் கையாளும் பொறுப்பு இவளுக்கு வந்து சேர்ந்தது.
என்ன காரணம் என்று தெரியவில்லை, அவளையும் மீறி உடல் குளிர்ந்து போனது. கரங்கள் சில்லிட்டன. ஆனாலும், தொழில் ரீதியான புன்னகையை முகத்தில் தேக்கிக் கொண்டவள், விரைந்து நடந்து சென்று உணவுப் பட்டியலை இழுத்தெடுத்து,
“ஹாய்…” என்றாள் வரிசைப் பற்களை அழகாகக் காட்டி. அதுவரை இமைக்காமல் அவளையே பார்த்திருந்த அந்த நெடியவன், இன்னும் தன் பார்வையை விலக்கினானில்லை.
அந்தப் பார்வை கொடுத்த தகிப்பில், தடுமாறினாலும், “எத்தனை பேர்…?” என்றாள் ஆங்கிலத்தில். அவனோ,
“ஒன்று…” என்றான். இவளும் புன்னகை வாடாமல் அவனைப் பார்த்து,
“என்னோடு வாருங்கள்…” என்றவாறு நடக்கத் தொடங்க, அவனுடைய பார்வை தன் முதுகைத் துளைப்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டாள் மதிமை.
‘யார் இவன்? ஏன் இப்படி அவளைப் பார்க்கிறான்? அவனுடைய விழிகளில் ஏன் இத்தனை வீரியம்? அவன் சும்மா பார்க்க நாம்தான் அதீதமாக எதையாவது எண்ணித் தொலைக்கிறோமோ?’ மனதிற்குள் தடுமாறியவளாக அங்கிருந்த ஒரு மேசையை நோக்கி அழைத்துச் சென்றவள்,
“அமருங்கள்…” என்றாள் புன்னகை வாடாமல்.
ஆனாலும் அந்த நெடியவனைப் பார்த்தபோது, உதட்டில் அமர்ந்திருந்த நாகரிக புன்னகை மறையத்தான் பார்த்தது. ஆனாலும் சிரமப்பட்டு உதடுகளை இழுத்துப் பிடித்தவள், அவனுக்கு முன்னால், உணவுப் பட்டியலை நீட்ட,
“நன்றி…” என்று வாங்கிக்கொண்டவனின் பார்வை, இன்னும் அவளை விட்டு விலகவில்லை. அது வேறு இவளுடைய பதட்டத்தை ஏகத்திற்கும் அதிகரிக்கச் செய்தது.
உடனே அங்கிருந்து சென்றுவிடு என, உள்ளுணர்வு எச்சரிக்க,
“நீங்கள் மெனுவைப் பாருங்கள், கொஞ்சம் பொறுத்து வருகிறேன்…” என்று விட்டு அந்த இடத்தை விட்டு விலகியவளுக்கு, அவளையும் மீறி வியர்த்துக் கொட்டியது.
‘இது என்ன புதுவித உணர்வு? இது வரை, இப்படி அவள் உணர்ந்ததே கிடையாதே…! அந்தப் பார்வையின் வீரியம், என்னுடைய சுயத்தை இழக்கச் செய்கிறதே…! ஏன்? யார் இவன்…?’ பல கேள்விகள் மனதில்.
ஆனாலும் அதில் உழன்று கொண்டிருக்க முடியாமல், அடுத்த மேசையை நோக்கிப் போகவேண்டிய அவசரம் அவளுக்கு.
புதிதாய் வந்தவர்களைக் கவனிக்கிறேன் என்கிற பெயரில், அந்த நெடியாவனைத் தவிர்க்க முயற்சிக்க, அது முடியாமல் போனது தான் பரிதாபமே. யார் ஒரு வாடிக்கையாளரை வரவேற்கிறாரோ, அவர்தான் அந்த வாடிக்கையாளரைக் கவனிக்கவேண்டும் என்பது விதி முறை. இவள் அதைத் தவிர்க்க முயல,
“மதிமை… கஸ்டமர் வெய்ட்டிங்…!” என்று அவளோடு வேலை செய்யும் ஒருத்தி வந்து சொல்ல, வேறு வழியில்லாமல் அந்த நெடியவன் அமர்ந்திருந்த மேசையை நோக்கி ஒரு வித பதட்டத்தோடு சென்றாள், அவள்.
அவன் உணவுப் பட்டியல் அடங்கிய அட்டையை மேசையில் போட்டு விட்டு, இருக்கையில் காலுக்கு மேல் காலைப் போட்டவாறு அமர்ந்திருந்தான்.
இவளைக் கண்டதும், “இப்படித்தான் இங்கே வரும் வாடிக்கையாளர்களைக் காத்திருக்க வைப்பீர்களா…?” என்றான் சற்று அழுத்தமாக. இவளுக்குத்தான் அந்தக் குரலைக் கேட்டு வயிற்றைக் கலக்கியது.
“இ… இல்லை சார்… சா…ரி சார்…!” என்று உமிழ்நீர் கூட்டி விழுங்க, என்ன நினைத்தானோ, அதற்கு மேல் எதுவும் பேசாமல் தனக்கு வேண்டிய உணவுப் பதார்த்தத்தைக் கூற, அதைக் கடகடவென்று குறிப்பெடுத்துக் கொண்டவள், விட்டால் போதும் என்று உள்ளே ஓடி, அவன் சொன்னதைக் கணினியில் பதிவிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் அவன் கேட்ட உணவுகள் தயாராகின.
அதை கரங்களில் அடுக்கியவாறு அவன் மேசையை நோக்கிச் சென்றவள், அவனுக்கு முன்பாக உணவுத் தட்டுகளை அடுக்கிவிட்டு,
“சாப்பிடுங்கள் சார்…” என்று விட்டு விலக முயல,
“நான் உன் கூட கொஞ்சம் பேசவேண்டும்…” என்றான் தமிழில். ஒரு கணம் அதிர்ந்துதான் போனாள், மதிமை.
இவள் தமிழ் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? பொதுவாக இவளைப் பார்ப்பவர்கள் அத்தனை சுலபத்தில் தமிழ் என்று கண்டுபிடித்து விட மாட்டார்கள். அதற்குக் காரணம், தந்தை வழித் தாத்தா வெள்ளையினத்தவர் என்பதால், அவருடைய, வெண்ணிறம் இவளிடமும் ஒட்டிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு இத்தாலிய நாட்டுப் பெண் போல இருந்தாலும், வீட்டில் அவள் பேசுவது சுத்தத் தமிழே. ஆனால்.. இது வெளியே இருப்பவர்களுக்குத் தெரியாதே. இவனுக்கு எப்படித் தெரியும்? அதிர்ந்து போய் ஏறிட, அவனோ அவளுடைய பதிலுக்காக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த விழிகள் மீண்டும் இவளுக்குள் ஒருவித கலவரத்தை ஏற்படுத்த,
“என்ஜாய் யுவர் ஃபூட் சேர்…” என்றவள் அங்கிருக்காமல் கடகடவென்று உள்ளே சென்று விட்டாள்.
சற்று நேரம் சென்றதும் அவனுக்கு சற்று தள்ளி, இன்னொரு வாடிக்கையாளருக்கு உணவு எடுத்து வைக்கும் பொறுப்பு மதிமைக்கு வந்தது.
அவரைச் சென்று கவனிக்கும்போது, அவளை நோக்கிக் கரத்தை நீட்டி அழைக்க, இவளோ தெரியாத மாதிரி எங்கோ பார்த்துத் தப்பிக் கொண்டாள்.
படுபாவி, அவளை எங்கே கண்டாலும் உடனே கரம் நீட்டி அழைக்க முயன்றான். வேறு வழியில்லாமல் அவனை நோக்கி ஒற்றை விரலைக் காட்டி, ஒரு நிமிடம் என்று அனுமதி வாங்கியவள், அவசரமாக அந்த மேசையில் உணவுகளை அடுக்கிவிட்டுக் கடகடவென்று உள்ளே சென்றவள், அங்கே அவளோடு வேலை செய்யும் கிம்மை அணுகி, அவளுடைய காதில் எதையோ குசுகுசுக்க, விழிகளை விரித்த கிம், ஆச்சரியத்துடன் திரும்பி அந்த நெடிய கொக்கைப் பார்க்க முயன்றாள்.
“ப்ளீஸ்… நீ போய் என்னவென்று கேட்கிறாயா?” என்றாள் தயக்கமாக.
“சரி நான் போகிறேன்… நீ என் வாடிக்கையாளரைப் பார், மேசை இலக்கம் பத்து…” என்று விட்டு அந்த நெட்டையனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
புதிதாய் வந்து நின்ற பெண்ணைக் கண்டதும், அந்த நெட்டைக் கொக்கின் புருவங்கள் சுருங்கின.
“முதலில் வந்த பெண் எங்கே…?” என்றபோதே அவனுடைய குரல் சற்று கறாராகத்தான் ஒலித்தது. ஆனாலும் பல வருடம் வேலை செய்த அனுபவம் கொடுத்த தைரியத்தில்,
“அவர்கள் வேறு வாடிக்கையாளரைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். சொல்லுங்கள்… என்ன வேண்டும்?” இப்போது கிம்முடைய குரலும் கறாராய் வந்தது.
“பில் ப்ளீஸ்…” என்றதும் பளிச்சென்று சிரித்த கிம்,
“ஒரு நிமிடம்… இதோ வருகிறேன்…!” என்றுவிட்டு ஐந்து நிமிடத்தில் அவன் சாப்பிட்ட உணவுக்கான ரசீதை நீட்ட, அதைப் பார்க்காமலே தன் கைப்பையை எடுத்தவன், இரண்டு நூறு டாலர்களை தட்டில் வைத்துவிட்டு,
“கீப்த சேஞ்ச்…” என்று விட்டு வெளியேற, கிம்மின் இரண்டு விழிகளும் விரிந்தன.
‘அவன் சாப்பிட்ட உணவு கிட்டத்தட்ட அறுபது டாலர்கள் வரை தான் வந்திருந்தன. ஆனால் அவன் இருநூறு கொடுத்து விட்டுப் போகிறானே… பசையுள்ள ஆள் போல…!’ வியந்தவளாக அவன் பணம் போட்ட தட்டை எடுத்துச் சென்று மதிமையிடம் கொடுக்க, அவளும் வியந்துதான் போனாள்.
“இவ்வளவு பணமா கொடுத்திருக்கிறான்…?” வியந்தாலும், அது தவறு என்று சொன்னது உள் மனம்.
ஏனோ அன்றைய நாள் முழுக்க உள் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது மதிமைக்கு. மனமோ அந்த நெட்டையன் யார் என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டே இருந்தது.
(6)
அன்று அவளுடைய வேலை முடிந்ததும், வீட்டிற்குப் போய், குளித்து சுத்தமாக வரோதயனை அழைக்கலாம் என்கிற எண்ணத்தில், ஹுடியை அணிந்த வாறு, கைப்பையையும் இழுத்து எடுத்துக்கொண்டு வெளியே வர, அவளுடைய இடத்தை நிரப்ப, இன்னொரு பணிப்பெண் உள்ளே வந்தாள். இவளைக் கண்டதும் புன்னகைத்து விட்டு, “கிளம்பிவிட்டாயா…?” என்றாள் புன்னகையோடு. இவள் ஆம் என்று விட்டு வெளியேற, அந்தப் பணிப் பெண் அவசரமாக இவள் பக்கமாகத் திரும்பி,
“மதிமை… நீ நல்ல இடத்தில் வாடகைக்கு இடம் தேடித் திரிந்தாய் இல்லையா…” என்று கேட்க, ஆம் என்று தலையை ஆட்டியவள்,
“ஆமாம் சஞ்சனா… நான் இருக்கும் குடியிருப்பு அத்தனை நல்லதாக இல்லை. அடிக்கடி திருட்டு, கொலை, கஞ்சா, துப்பாக்கிச் சூடு என்று, பயங்கரமாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் காவல்துறை வந்து கொண்டிருக்கிறது. இதை விட மோசம், ஆத்திர அவசரத்திற்கு ஏழு மணிக்குப் பிறகு வெளியே போகவே முடிவதில்லை. அந்தப் புறம்போக்குகள் எதையாவது ஒன்றைக் குடித்துவிட்டு, சுற்றித் திரியுங்கள்…! இந்த சூழ்நிலையில் எப்படி என் மகனை வளர்ப்பது. தவிர, அவன் பள்ளியும் அத்தனை நல்லதில்லை… அதுதான், எங்காவது வாடகை குறைவாக நல்ல இடத்தில் இருப்பிடம் கிடைத்தால் நன்றாக இருக்கும். சுதந்திரமாக எந்த நேரமாக இருந்தாலும் வெளியே போய் வரக்கூடியதாக இருக்கவேண்டும்.” என்று சொன்னவளைப் பரிதாபமாகப் பார்த்த சஞ்சனா,
“புரிகிறது மதிமை… ஆரம்பத்தில் வாடகை குறைவென்று அங்கேதான் வசித்தோம். ஆறு மாதத்தில் அதிக வாடகை கொடுத்தாலும் பரவாயில்லை என்று வேறு இடத்திற்குப் போய் விட்டோம்… அதனால்தான் உன்னிடம் இதைச் சொல்ல வந்தேன்.”
“என் அத்தை வீட்டின் நிலக்கீழ் குடியிருப்பில் வசித்தவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் புதிய வீட்டிற்குப் போகிறார்களாம். ஒரு படுக்கையறை, குளியலறை, சமையலறை என்று சின்ன இடம் தான். உனக்குப் போதுமாக இருக்கும் என்று நினைக்கிறேன்… வாடகை பற்றி நீதான் பேசவேண்டும். உனக்கு விருப்பமிருந்தால் சொல், அத்தையோடு பேசிப் பார்க்கிறேன்…” என்றதும் இவளுடைய முகம் பளிச்சென்று மலர்ந்து போனது.
“நிஜமாகவா சொல்கிறாய்..? கடவுளுக்கு நன்றி…! ஒரு படுக்கையறை எனக்கும் வரோதயனுக்கும் தாராளமாகப் போதும் சஞ்சனா… அவர்கள் இருக்கும் இடம் எது?” பெரும் ஆவலாகக் கேட்க, சஞ்சனா, இடத்தைப் பற்றிச் சொன்னாள்.
அவள் சொன்ன இடம் அவள் தற்போது வசிக்கும் இடத்தை விட, பல மடங்கு மேலாகத் தெரிய, உடனே அவளிடமிருந்து அவளுடைய அத்தையின் இலக்கத்தை வாங்கிக்கொண்டு, பெரும் பாரம் குறைந்த மகிழ்ச்சியோடு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றாள்.
மனமோ அந்த வீடு அமைந்துவிட வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தது. அந்த நேரம் அவளுக்கு ஒரு வித ஒவ்வாமை உணர்வு வர, சிந்தனை கலைந்தவளாகப் புருவம் சுருங்க சுத்தவரப் பார்த்தாள். என்னவோ தெரியவில்லை, யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல ஒரு வித உணர்வு தோன்ற, நெஞ்சம் படபடத்தது.
ஒரு வித அச்சத்தோடு திரும்பிப் பார்த்தாள், மதிமை. சந்தேகப்படும் படி எதுவும் தெரியவில்லை. ஆனாலும், யாரோ பின்தொடர்வது போன்ற அந்த உணர்வை அவளால் அழிக்க முடியவில்லை.
எப்படியோ, இன்னொரு பேருந்தில் ஏறி, வசிக்கும் குடியிருப்பை வந்தடைந்தாள், மதிமை.
வந்த போதே, கட்டடத்தைச் சுற்றிக் காவல்துறையின் வாகனங்கள் நின்றிருந்தன.
சுத்தம், இன்று என்ன சிக்கல், அந்தக் கட்டடத்தில் நடந்ததோ? சலிப்போடு பின் பாதை யூடாக நடந்து கதவை அடையும் போதே, பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் அவள் மூக்கைப் பலமாகத் தாக்கியது.
எதையும் தாங்கலாம் போல, இந்தக் குப்பைத் தொட்டியின் மணத்தைத்தான் தாங்க முடிவது இல்லை. குமட்டிக்கொண்டு வர, அவசரமாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைய, பலகலாச்சார சமையல் மணம் ஒன்றிணைந்து மூக்கைப் பலமாகத் தாக்கியது.
அந்த மணத்திலிருந்து தப்புவதற்காகவேனும் வேறு இடம் தேடிப் போகவேண்டும். மனதில் எண்ணியவளாக மின்தூக்கியை நோக்கி வந்தவள், கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள்.
இன்னும் அரை மணியில் வரோதயனை அழைத்து வந்துவிடவேண்டும். இல்லையென்றால் அவன் தங்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்பாக பணம் கொடுக்க வேண்டி வரும்.
சலிப்போடு மின்தூக்கியைப் பார்க்க, அது பன்னிரண்டாவது மடியிலிருந்து கீழே இறங்கவே மாட்டேன் என்று அடம் பிடித்து நின்றிருந்தது.
மூன்று மின்தூக்கிகளும் ஏதோ ஒரு தளத்தில் பசை வைத்து ஒட்டியது போல நின்றிருந்தது. பொறுமை இழந்தவள் போலப் பொத்தானை கடகடவென்று பல முறை அழுத்திவிட்டு, மின்தூக்கி இறங்கி வருகிறதா என்று பார்த்தாள். ஒரு மின்தூக்கி மட்டும் கடகடவென்று கீழே இறங்கி ஒன்பதாவது மாடியில் தங்கி நின்றிருந்தது.
மீண்டும் பொத்தானை கடகடவென்று அழுத்திக் கொண்டிருந்த நேரம், அவள் பின்னால் யாரோ வந்து நிற்பது போன்ற உணர்வு தோன்ற, அழுத்துவதை நிறுத்திவிட்டுத் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்தாள்.
அவள் பின்னால் அன்று உணவகத்தில் உணவருந்த வந்தவன். அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவன் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் இதயம் படு பயங்கரமாகத் துடிக்கத் தொடங்கியது.
‘அவன் எதற்காக இங்கே வந்திருக்கிறான். எதேச்சையாக வந்தானா, இல்லை பின்தொடர்ந்து வந்தானா? அன்று முழுக்க அவளை நிம்மதியாக வேலை செய்ய விடாமல் செய்தவன் இவன்தானே. இவன் எதற்காக இங்கே வந்து நிற்கிறான்?’ அதிர்வுடன் அவனைப் பார்த்திருக்க, அவனோ அழகாய் சிரித்து,
“ஹாய்…!” என்றான். அது தனக்கு இல்லாதது போலச் சட்டென்று தன் தலையைத் திருப்பிக் கொண்டவளுக்கு ஏனோ பயப்பந்து தொண்டையில் சிக்கிக் கொண்டது. பேசாமல் படிகளில் ஏறிச் செல்வோமா என்கிற சிந்தனை சட்டென்று பிறந்தது. கூடவே மறுப்பும் பிறந்தது. அவளுடைய மாடி, பதினெட்டாவது மாடி. அத்தனை நடக்க முடியாது தவிர, அங்கேதான் எதிர்பாராத விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம் பெறும். கூடவே மின்தூக்கியிலாவது ஒளிப்பதிவுகள் உண்டு. படிகளில் அதுவுமில்லை.
உடனேயே அந்த எண்ணத்தை மறந்துவிட்டு, நடுக்கத்தை லாவகமாகவே மறைத்தவாறு மின் தூக்கியின் வரவுக்காகக் காத்திருக்க, ஆடி அசைந்து வந்து இறங்கியது மின்தூக்கி. கதவு திறந்து கொள்ள… பெரிய கூட்டமே அந்த மின்தூக்கியிலிருந்து வெளியேறியது. வெளியேறியதோடு, இவளையும் தள்ளி விட்டுச் செல்ல, பின்னால் தள்ளப்பட்டவள், கச்சிதமாக அந்த உயர்ந்த மனிதனோடு மோதுப்பட, பதறிப் போனாள், மதிமை.
ஒரு விநாடி ஆனாலும் கூட, அவனுடைய தேகம் பட்ட நொடி, உடலில் ஒரு வித இரசாயன மாற்றம் படர, ஏதோ தொடக் கூடாததைத் தொட்டு விட்டவள் போலத் துள்ளித் தள்ளி நிற்க, அவனோ கீழ்க்கண்ணால் அவளைத்தான் பார்த்து நின்றான்.
அவளுடைய இதயத்தின் துடிப்புக் காதுவரை கேட்க, உடலோ வியர்த்துக் கொட்டியது.
அவர்கள் வெளியேறும் வரைக்கும் காத்திருந்தவள், தப்பித்தோம், பிழைத்தோம், என்பது போல மின்தூக்கியில் ஏறிப் பதினெட்டாவது இலக்கத்தை அழுத்த, பாழாய் போன கதவு அவசரமாக மூட மறத்தது. அச்சத்துடன் வெளியே நின்றிருந்தவனை வெறிக்க, அவனோ நிதானமாக அந்த மின்தூக்கிக்குள் ஏறி மேலும் இவள் அச்சத்தை எகிற வைத்தான். படு பாவி நுழைந்ததோடு விட்டானா. ஏதோ காணாததைக் கண்டது போல அவளைத்தான் பார்த்து நின்றான்.
‘இவர்கள் யார்? நிஜமாகவே யாரையோ சந்திக்கச் செல்கிறார்களா, இல்லை.. இவளைத் தப்பான நோக்கத்தோடு பின் தொடர்கிறார்களா.?’ அச்சத்தில் பிடரி மயிர் கூட வியர்த்துக் கொட்ட, அதற்கு மேலும் அந்த மின்தூக்கியில் அவர்களோடு சேர்ந்து பயணிக்க முடியாது என்பது புரிய, கீழே இறங்கப் போனவளை, அந்த நெட்டைக் கொக்கு பாதையை மறைத்தாற்போல வந்து நின்றது.
கிலியில் இதயமே நின்றுவிடும் போலத் தோன்றியது அவளுக்கு.
காதுகள் அடைத்தன. உடல் நடுங்கியது. பதற்றத்தோடு முன்னால் நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்க்க, மின்தூக்கியின் கதவுகள் மூடிக் கொண்டன. நடுக்கத்தோடு பின்னேறியவள் மின்தூக்கியின் சுவரோடு மோதி நிற்க, விழிகளோ தெறித்து விழுந்துவிடுவோம் என்பது போல விரிந்து நின்றன. தன்னையும் மறந்து, அவசரத்துக்குப் பேச வாய் வர மறுத்தது. அதையும் மீறி
“ஐ ஹாவ் டு கோ…” என்று திக்கித் திணறிக் கூற, அவள் சொன்னது அவனுடைய காதிலும் விழுந்தது போலவே தெரியவில்லை. நின்ற நிலை மாறாமல் சிலையென நின்றிருக்க, இவளுக்கு மேலும் வயிற்றைக் கலக்கியது.
‘ஏன் இந்த மின்தூக்கி மேலே செல்ல இத்தனை நேரம் எடுக்கிறது…?’ பதட்டத்தோடு காத்திருக்க பதினெட்டாவது மாடியில் மின்தூக்கி வந்து நின்றதும் கதவு திறந்து கொண்டது. ஆனாலும் அதன் பாதையை மறைத்து நின்றவன் விலகுவதாயில்லை. அவளையே முறைத்தவாறு இருக்க, இவளுக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை.
அவனைத் தள்ளிவிட்டுப் போகும் சக்தி நிச்சயமாக அவளிடமில்லை. வெளிப்படையாகவே கரங்கள் நடுங்க,
“நான்… போக வேண்டும்…” என்று அவள் சொன்னபோது வெறும் காற்றுத்தான் வந்தது. ஆனால்.. நல்லவேளை அவன் எந்தச் சண்டித்தனமும் செய்யவில்லை.
அவள் கேட்டதும் சட்டென்று வழி விட்டு நிற்க, இவளோ விட்டால் போதும் என்பது போலப் பாய்ந்து வெளியேறித் தன் இருப்பிடம் நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அதே நேரம் அவனும் வெளியேறி அவளைப் பின்தொடரத் தொடங்க, அதை உணர்ந்துகொண்டவளின் இதயம் வாய்க்குள் வந்து துடித்தது.
‘என்ன இவன், மோப்பம் பிடிக்கும் நாய் போல பின்னேயே வருகிறான்.’ என்றெண்ணியவள், கிட்டத்தட்ட ஓடி, வீட்டின் கதவை அடைந்ததும் கைப்பையில் கரங்களைத் துலாவி திறப்பை எடுக்க முனைந்தவாறே அவன் தென்படுகிறானா என்று எட்டிப் பார்த்தாள்.
நல்லவேளை அவனைக் காணவில்லை. அழுத்தம் குறைந்திருந்தாலும் அச்சம் போகவில்லை. நடுங்கும் கரங்கள் கொண்டே திறப்பை எடுத்துக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்ல முயன்ற வினாடி மின்னல் விரைவுடன் அவளை நெருங்கிய அவன், அவள் சுதாரிக்க முதலே, கதவைத் தள்ளி, அவளையும் உள்ளே தள்ளிவிட்டுத் தானும் நுழைந்தது கதவையும் அழுந்த சாத்திக் கொள்ள, மதிமைக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு, அச்சத்தில் மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது.

