(13)
“வருண்… விதரணையின் வீட்டில் இறந்தவர்களின் அறிக்கைகள் அனைத்தும் எனக்கு வேண்டும். பிணக்கூறாய்வு அறிக்கை (Post-Mortem Report), பல் வரிசை விளக்கப்படம் (Dental Chart), நச்சுயியல் அறிக்கை (Toxicology Report) எல்லாமே வேண்டும்… சீக்கிரம்!” அவன் அவசரமாகக் கட்டளையிட, தன் நண்பனுக்கு இன்னொரு முக்கியத் தடயம் கிடைத்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட வருண்,
“என்னடா ஆச்சு…?” என்றான் குழப்பமாக.
“விதரணையின் வீட்டிற்கு வந்தவர்களில் ஒருத்தன் லக்கியாக இருக்கலாமோ என்று சந்தேகமாக இருக்கிறது” என்றான் ஏற்றமாதிபன் நெற்றியை வருடியவாறு. அதைக் கேட்டு அதிர்ந்துதான் போனான் வருண். காவல்துறையிலிருப்பவனுக்கு லக்கியின் பின்னணி பற்றித் தெரியாதா என்ன?
“என்னடா சொல்கிறாய்? லக்கி என்பது…” அவன் தயங்க,
“ஆமாம்… அமெரிக்காவின் மிகப்பயங்கரமான பாதாளக் குழுவின் தலைவன் கிகான்டியின் வலது கை!”
“அவனா…? ஆனால்… அவன் எப்படி இங்கே…?” என வருண் குழம்ப,
“வருண்… யோசிக்க எல்லாம் நேரமில்லை… சொல்வதைச் செய்…!” என்று கூற,
“சரி ஆதிபன்… இப்போதே மரண விசாரணை அதிகாரி அலுவலகத்திற்குப் பேசி, எல்லாவற்றையும் மின்-நகலாக உனக்கு அனுப்பி வைக்கிறேன்,” என்றான் வருண்.
“மறந்துவிடாதே வருண்… இன்னொரு முக்கியமான விஷயம். அவனது உடமைகளிலிருந்து கிடைத்த பொருட்களின் விபரப் பட்டியல் (Inventory List) வேண்டும்.”
“சரி, இன்னும் அரை மணி நேரத்தில் எல்லாத் தகவல்களையும் அனுப்பிவைக்கிறேன்!” என்று வருண் அழைப்பைத் துண்டிக்க, ஏற்றமாதிபன் விரைந்து சென்று தன் மடிக்கணினியை எடுத்தான்.
அவன் தங்கள் காவல்துறை இணையத்திற்குச் சென்று தன் கணக்கில் உள் நுழைய முயல, ‘தற்காலிகமாக இந்த இணையத்திற்குள் நுழைய முடியாது’ என்கிற எச்சரிக்கை திரையில் விழுந்தது. பற்களைக் கடித்தவன் ஓங்கிக் கணினியை மூடிவிட்டு அதை மேசையில் எறிந்தான். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
மீண்டும் ஏதோ யோசித்தவன், திரும்பக் கணினியை எடுத்து வருணின் உள்நுழைவு விபரங்களைப் போட்டு லாகின் செய்ய முயன்றான். திரையில் ‘டூ-ஃபேக்டர் ஆதண்டிகேஷன்’ குறியீட்டைக் கேட்டது. அந்த நேரம் வருணின் மொபைலுக்கு எச்சரிக்கை செல்ல, அவனே இவனை அழைத்து,
“டேய்… என் கணக்கில் நீ நுழைந்தாயா?” என்றான் வருண் எரிச்சலாக.
“ம்… ஆதண்டிகேஷன் நம்பர் என்ன?” இவன் கறாராகக் கேட்க, வருண் சலிப்புடன் அதைச் சொல்லச் சொல்ல, அதைத் தட்டச்சு செய்து வருணின் கணக்கில் உள் நுழைந்தான்.
“டேய் பார்த்துடா! சிறு தவறு நடந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக நெட்வொர்க் என் கணக்கை தற்காலிகமாக ‘லாக்’ செய்துவிடும். பிறகு நான்தான் தலைமையகத்தில் பதில் சொல்ல வேண்டும்!” என்றான் வருண் எரிச்சலோடு. இவனோ சலிப்போடு உச்சுக்கொட்டி, விசைப்பலகையில் விரல்களைப் பறக்கவிட்டவாறே,
“லாக் ஆனால் அதைச் சரிசெய்து கொள்ளலாம்… முதலில் தகவல்களை எடுத்துவிட்டாயா? எனக்கு அனுப்பிவிட்டாயா?” என்று கணினியில் மிகக் கவனமாக எதையோ தேடியவாறு, கேட்க,
“டேய்… நீ என்னை அதிகமாகத்தான் படுத்தி எடுக்கிறாய். இப்போதுதான் போய்க்கொண்டிருக்கிறேன். இன்னும் பத்து நிமிடங்களில் தடயவியல் பிரிவுக்குள் (Forensic Dept) போய்விடுவேன். கொஞ்சம் நேரம் கொடு. எடுத்து அனுப்பியதும் சொல்கிறேன்…” என்றுவிட்டுக் கைப்பேசியை அணைத்தான் வருண்.
ஆதிபன் சர்வதேசக் குற்றவாளிகளின் தரவுத்தளத்தை (International Crime Database) ஆராய்ந்து, தனக்கு வேண்டிய சில விபரங்களை நகலெடுத்துக் கொண்டிருக்க… ஒரு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் வருணிடமிருந்து அழைப்பு வரவில்லை. பொறுமையிழந்த நேரத்தில், சரியாக வருணிடமிருந்து அழைப்பு வந்தது.
“ஏன்டா இவ்வளவு நேரம்…?” என்றான் இவன் எரிச்சலோடு.
“டேய்… நாங்கள் என்ன AI-ஆ, தட்டியதும் தகவல்களைத் தர? உயிருள்ள மனுஷங்கள்… ஃபாரன்சிக் டாக்டர் வர சற்று நேரமாகிவிட்டது. எல்லா தகவல்களையும் உன் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டேன்… பார்த்துக்கொள்…” என்று தன் எரிச்சலை வெளிக்காட்டிச் சொல்ல,
“டேய்… நான் தற்காலிக ஓய்வில்தான் இருக்கிறேன், வேலையை விட்டுப் போகவில்லை. இன்னும் ஒன்றிரண்டு வாரத்தில் மீண்டும் பணிக்கு வந்துவிடுவேன். அதன் பிறகு எனக்குக் கொடுக்க வேண்டிய மேலதிகாரி என்கிற மரியாதையை நீ கொடுக்க வேண்டும், நினைவில் வைத்துக் கொள்…” ஏற்றமாதிபன் அழுத்தமாகச் சொல்ல,
“ம்கும்… அது வரைக்கும் நீ என் நண்பனே தவிர உயர் பதவியிலிருக்கும் காவலரல்ல… அதுவரை உனக்கு நண்பன் என்கிற மரியாதைதான் கிடைக்கும். வேலைக்கு வந்து சேர், அதற்குப் பிறகு கொடுக்கிற மரியாதையைக் கொடுக்கிறேன்…” என்றுவிட்டு வருண் கைப்பேசியை வைக்க, தன்னை மறந்து மென்புன்னகை ஒன்றைச் சிந்திய ஏற்றமாதிபன், கைப்பேசியை ஓரமாகத் தூக்கிப்போட்டுவிட்டு, மடிக்கணினியில் தன் மின்னஞ்சலுக்குப் போனான். வருண் அனுப்பியிருந்த அனைத்தையும் தரவிறக்கம் செய்தான். மூன்று தனித்தனிப் பிரிவுகளாக அறிக்கைகள் வந்திருந்தன.
- அடையாளம் தெரியாத சடல அறிக்கை (Unidentified Body Report) – 01-6/20/26 (வயது: 30-35)
- அடையாளம் தெரியாத சடல அறிக்கை (Unidentified Body Report) – 02-6/20/26 (வயது: 25-30)
- அடையாளம் தெரியாத சடல அறிக்கை (Unidentified Body Report) – 03-6/20/26 (வயது: 40-45)
அதில் அறிக்கை இரண்டைத் தூக்கி ஓரமாகப் போட்டான். லக்கிக்கு வயது முப்பதிலிருந்து நாற்பதிற்குள்தான் இருக்கும் என்பதால், அறிக்கை ஒன்றையும் மூன்றையும் மிகக் கவனமாக ஆராயத் தொடங்கினான். சில சந்தேகங்கள் தீர்ந்தபின், அறிக்கை மூன்றை கையில் எடுத்து, ஆழமாகப் பரிசீலிக்கத் தொடங்கினான்.
அந்த நேரம் ஏற்றமாதிபனின் வீட்டிற்கு முன்னால் தன் வாகனத்தை நிறுத்திய வருண், நேராக ஆதிபனைத் தேடி அவனுடைய அலுவலக அறைக்கு வந்தான். ஏற்றமாதிபனோ சோர்வோடு நீளிருக்கையில் தலைசாய்த்து அமர்ந்திருந்தான்.
அவனை நோக்கி வந்த வருண்,
“என்ன ஆச்சு? ஏதாவது கண்டுபிடித்தாயா ஆதிபன்?” என்றவாறு அவன் முன்னால் வந்து இருக்கையில் அமர… சட்டென்று எழுந்தமர்ந்த ஏற்றமாதிபன் தன் முகத்தைத் தேய்த்துவிட்டு, எதுவும் பேசாமல் மேசையின் மேல் இருந்த சில புகைப்படங்களையும், தான் அச்சிட்டு வைத்திருந்த அறிக்கையின் நகல்களையும், சடலப் பரிசோதனை அறிக்கையையும் அவனை நோக்கி நகர்த்தினான்.
வருண் அவற்றைக் கையில் எடுத்து ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்க மெல்ல மெல்ல அவன் முகம் மாறத் தொடங்கியது.
அந்த அறிக்கையின் படி, ஏற்றமாதிபனால் கொல்லப்பட்டவன் லக்கிதான் என்று நிரூபணமாக… வருணின் முகத்தில் பதற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஆதிபன்… இது… இது என்னால் நம்பவே முடியவில்லை! இவன் எப்படி இங்கே…?” என்றான் விழிகள் பிதுங்க. ஏனெனில், கிகான்டியின் ஆட்கள் இதில் இறங்கியிருக்கிறார்கள் என்றால், கண்களை மூடிக்கொண்டே இது மிகப்பாரதூரமான சர்வதேசக் குற்றம் என்பதைச் சொல்லிவிடலாம்.
“நிச்சயமாக என் கையால் இறந்தவன் லக்கியும் அவனுடைய ஆட்களும்தான்,” என்றான் ஏற்றமாதிபன் உறுதியாக.
“அப்படியென்றால் இதை ஏன் நமது இன்டெலிஜென்ஸ் இன்னும் கண்டுபிடிக்கவில்லை?” – வருண் எரிச்சலுடன் கேட்க… உதடுகளைப் பிதுக்கிய ஏற்றமாதிபன்,
“அவர்களுக்கு கிகான்டி மீது சந்தேகம் வர வாய்ப்பேயில்லை. அவன் அமெரிக்காவின் மிகப்பெரிய குற்றவாளி… உலகம் முழுக்க பாதாளக் குற்றவாளிகளிடம் செல்வாக்கு பெற்றவன். அப்படிப்பட்டவன் கனடாவில் உள்ள சாதாரண ஒரு குடும்பத்தைக் கொல்வதற்காக நுழைய வேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால், கனடிய காவல்துறையின் சிந்தனைக்குக் கூட அவன் வந்திருக்க மாட்டான். அடுத்து, நமக்குக் கிடைத்த அளவுக்குத் துப்பு அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இவர்கள் அமெரிக்கர்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே இன்னும் சில நாட்கள் எடுக்கும், அதுவரை இவர்கள் அநாதைச் சடலங்கள்தான்,” என்றான் ஏற்றமாதிபன்.
வருண் குழப்பத்தோடு மீண்டும் அந்த அறிக்கையில் தன் கவனத்தைச் செலுத்தியவாறு, “அமெரிக்காவின் பாதாள உலகக் கேங்ஸ்டருக்கும் அறிவழகனுக்கும் என்ன சம்பந்தம்? சீனாவிலிருந்து இங்கே வந்து நம்மிடம் பிடிபட்ட லக்கியின் கூட்டாளியைக் கொல்ல வந்த அந்த டிரையாட் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? இவர்களை ஒன்றாக இணைக்கும் அந்தப் புள்ளி யார்?” என்று குழப்பமாகக் கேட்க…
“அதுதான் மில்லியன் டாலர் கொஸ்டின்…!” என்றவன் வருணப் பார்த்து, “கிகான்டியின் சட்டவிரோதத் தொழில்கள் பற்றிய தகவல்களைக் கேட்டு அமெரிக்கக் காவல்துறையில் உள்ள என் நண்பரிடம் பேசியிருக்கிறேன். அவர் முயன்றவரை விவரங்களை அனுப்புவதாகச் சொன்னார்… ஒருவேளை, நாம் தேடும் அந்த ‘X’ கிகான்டியாகக் கூட இருக்கலாம்,” என்றான் ஏற்றமாதிபன்.
தலையை ஆட்டிய வருண், “இருக்கலாம்… அவன் செய்யாத குற்றங்களே இல்லை… அவன் ஒரு சர்வதேசக் குற்றவாளி. தன் கீழ் வேலை செய்பவன் பிடிபட்டதும், அவனைக் கொல்வதற்குத் தன் ஆட்களை நேரடியாக இறக்காமல் டிரையாட்சை இறக்கியிருக்கலாம்… அப்போதுதானே அவனுடைய பெயர் வெளிவராது,” என்றான் வருண்.
“ம்… இருக்கலாம்… ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது வருண்… ஒருவேளை பிடிபட்ட கிகான்டியின் ஆள் எதையாவது உளறிவைத்தால், அதிலிருந்து கிகான்டிதான் இதற்கு மூலகாரணமாக இருக்கிறான் என்பதை காவல்துறை அறிந்து கொள்ளும் பட்சத்தில்… கிகான்டியைக் கைதிசெய்ய அமரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும். ஒரு வேளை கிகான்டி பிடிபட்டால் என்னாகும்?” என்று ஏற்றமாதிபன் வருணைப் பார்த்துக் கேட்க,
“என்னாகும்…! இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட மற்றைய நாட்டுக் குற்றவாளிகளும் பிடிபட வாய்ப்பிருக்கு. மேபி பெரிய அரசியல் வாதிகள், இல்லை என்றால் மிகப்பெரும் பிரமுகர்களும் இதில் ஈடுபட்டிருக்கலாம்…. அது வெளியே தெரியவரும்…” என்று வருண் சொல்ல, புன்னகைத்தவன்,
“அதேதான்…அந்தக் குற்றத்தில் ஈடுபடும் வேறு நாட்டுப் புள்ளிகளும், கிகான்டி பிடிபட்டால் தாங்களும் பிடிபட்டுவிடுவோமோ என்கிற அச்சத்தில் அந்தக் குற்றவாளிகளைக் கொன்றிருக்கலாம்… எது எப்படியாக இருந்தாலும், இப்போது இந்தக் குற்றத்தில் கிகான்டி சம்பந்தப்பட்டிருக்கிறான் என்பது தெரிந்துவிட்டது. இனி அந்தப் பாதையில் பயணித்தால் எதற்காக அறிவழகனைச் சுற்றிவளைத்தார்கள் என்பது தெரியவரும். முதலில் கிகான்டிக்கும் ‘ஜெனரிஸ் பயோ பார்மா’வுக்கும் இடையில் என்ன தொடர்பு என்பதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். கிகான்டி ஏற்கனவே போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறப்பவன். அதனால், அவனுக்காக இந்த ஜெனரிஸ் பார்மா ரகசியமாக ஏதோ புதிய வகை செயற்கைப் போதைப்பொருட்களைச் சட்டத்திற்குப் புறம்பாகத் தயாரிக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.. நான் நினைக்கிறேன்… சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் தயாரிக்கும் போதைப்பொருள் பற்றிய விவரங்களை, அறிவழகன் அங்கிள் தன் ஆய்வகப் பரிசோதனையில் கண்டுபிடித்திருக்கலாம்! அவர் கண்டுபிடித்த விவரம் ஜெனரிஸ் பார்மாவின் மேலிடத்திற்குத் தெரியவர, அவர்கள் அதை உடனடியாகக் கிகான்டிக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அதனால்தான், அந்த ஆதாரங்களை அழிக்கக் கிகான்டி தன் அடியாட்களோடு லக்கியை அனுப்பியிருக்கிறான்… இதில் கிகான்டியோடு வேறு நாட்டவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்… ஏற்கனவே கிகான்டி மிகப் பெரும் நெட்வொர்க் வைத்திருப்பவன். அவர்களுக்குள் நடக்கும் சிறிய சம்பவம் கூட அத்தனை பேருக்கும் உடனுக்குடன் தெரிந்துவிடும்..” என்று ஏற்றமாதிபன் சொல்ல, அதைக் கேட்டுத் தலையை ஆட்டிய வருண்,
“நீ சொல்வதைப் பார்த்தால் லாஜிக்கலாக சரியாகத்தான் இருக்கிறது… இப்படி உலகளாவிய குற்றவாளிகளே களத்தில் இறங்கும் அளவுக்கு அப்படி என்ன போதைப்பொருளை ஜெனரிஸ் தயாரித்திருக்கும்…?” என்று வருண் குழப்பமாகக் கேட்க…
“அதைத்தான் நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நாம் கனடாவில் உள்ள அத்தனை மருந்தாலைகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். எங்காவது சந்தேகத்திற்கு இடமாக மருந்துகள் தயாரிக்கப்படுகிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும்…” அவன் சொல்ல, பெருமூச்சொன்றை விட்டான் வருண்.
“டேய்… இதெல்லாம் மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் விஷயமில்லையே… நாட்கணக்காக, ஏன் மாதக்கணக்காகக் கூட எடுக்கலாம்…” என்று அவன் சலித்துக் கொள்ள… தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கரங்களை நுழைத்தவாறு தலையை ஆட்டியவன்,
“சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது வருண்…” என்றான் ஏற்றமாதிபன்.
பரபரப்பான வருண், “என்னடா அது?” என்று ஆவலுடன் கேட்க… தன் நண்பனை அழுத்தமாகப் பார்த்தவன்,
“அறிவழகன் அங்கிளிடமிருக்கும் ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்தால் அனைத்தும் தெளிவாகிவிடும்…” என்றான் ஏற்றமாதிபன் தன் நெற்றியை நீவிவிட்டவாறு.
“ம்கும்… எதிரிகள் அத்தனை இடத்திலும் சல்லடை போட்டுத் தேடிவிட்டார்கள். அது கிடைத்திருந்தால் விதரணையைக் கடத்த அவர்கள் முயன்றிருக்க மாட்டார்கள்… அப்படியிருக்கும்போது நமக்கு மட்டும் கிடைத்துவிடுமாக்கும்? இத்தனை பேர் தேடும் அந்த ஆவணத்தை அறிவழகன் அங்கிள் எங்கேதான் வைத்திருப்பார்? வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலா? யாராவது நண்பர்களின் வீட்டிலா? அல்லது அவருடைய அலுவலகத்திலா…?” என அடுக்கிக்கொண்டு வர, மறுப்பாகத் தலையசைத்தான் ஏற்றமாதிபன்.
“அவருக்கு இரண்டு வங்கிகளில் கணக்கு இருக்கிறது. அதில் ஒரே ஒரு வங்கியில்தான் பாதுகாப்புப் பெட்டகம் இருக்கிறது. விதுரன் தந்தையிடம் எதிரிகள் எதையோ கேட்டார்கள் என்று சொன்னதும், முதல் வேலையாக வங்கிக்குச் சென்று அந்தப் பெட்டகத்தைப் பார்த்துவிட்டு வந்தேன். அங்கே சந்தேகப்படும்படி எதுவுமில்லை. இது ஜெனரிஸ் பார்மா சார்ந்தது என்பதால் அலுவலகத்தில் அவர் வைத்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படியிருந்தும் நான் அங்கும் சென்று பார்த்துவிட்டேன். அங்கும் சந்தேகப்படும்படி எதுவும் சிக்கவில்லை…” என்று ஆதிபன் சொல்ல, அவனை அதிர்ந்துபோய் பார்த்தான் வருண்.
“இது எப்போது நடந்தது?” – வருண் குழம்பியவாறு கேட்க…
“இரண்டு நாட்களுக்கு முன்பு, உன்னிடம் வருவதற்கு முன்னால் அவர் வேலைத்தளத்திற்குச் சென்று பார்த்துவிட்டுத்தான் வந்தேன்…” சொன்னவனை நம்பாமல் பார்த்தான் வருண்.
“ஆனால் எப்படிடா? அங்கேதான் பயோ-மெட்ரிக் (Bio-metric) பாதுகாப்பு மிக பலமாக இருக்குமே!?” வருண் வியந்து சொல்ல, சிரித்தான் ஏற்றமாதிபன்.
“நல்ல காவலனுக்குத் தேவைப்பட்டால் திருடவும் தெரியவேண்டும் வருண்…” ஆதிபன் சொல்ல, வருண் வாய் பிளந்து நின்றான். யாருடையதோ ஒருவரின் அடையாள அட்டையைக் களவாடி, ரகசியமாக உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறான் ஏற்றமாதிபன்.
“டேய்… நீ பயங்கரமானவன்டா! உன்னோடு மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்…” வருண் சொல்ல, மெலிதாகச் சிரித்தான் ஏற்றமாதிபன்.
“அப்படியென்றால் அந்த ஆவணங்களை அவர் எங்கேதான் வைத்திருப்பார்??” – வருண் குழப்பத்தோடு கேட்க, சற்று நேரம் யோசித்தான் ஏற்றமாதிபன்.
“இதுவரை நான் செய்த விசாரணையில், அறிவழகன் அங்கிள் கடந்த ஆறு மாதங்களாக வேலை, வீடு என்றுதான் இருந்திருக்கிறார். அவர் எந்த நண்பர்களோடும் பெரிதாகப் பேசியது போலத் தெரியவில்லை. ஒருவேளை தன் நண்பர்களுக்கு இதனால் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். அப்படிப்பட்டவர் யாரிடமும் எதையும் கொடுத்திருக்க வாய்ப்பில்லை… என் கணிப்பு சரி என்றால், எங்கோ அவர் வீட்டில்தான் அந்த ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்…” ஏற்றமாதிபன் சொல்ல…
“ம்… ஆனால் வீடு முழுவதும் சல்லடையாகத் தேடப்பட்டிருக்கிறதே? அதன் பிறகுதான் அவர்கள் விதரணையின் குடும்பத்தையே வதைத்திருக்கிறார்கள்…”
“ஆமாம்… ஆனால் அவர் வீட்டைத் தவிர வேறு எங்கும் அதை வைத்திருப்பதாகத் தெரியவில்லை… எனக்கு மீண்டும் அவர் வீட்டிற்குச் சென்று பார்க்க வேண்டும்…” அவன் சொல்ல, ஏற்றமாதிபனை அழுத்தமாகப் பார்த்தான் வருண்.
“அது எப்படி முடியும்? இப்போது அந்த வீட்டிற்குள் யாரும் தன்னிச்சையாக நுழைய முடியாது. அது சீல் வைக்கப்பட்ட ‘க்ரைம் சீன்’ இடம் என்பதால், மேல் அதிகாரிகளின் முறையான அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாது. இவ்வளவு ஏன், காவலனாக இருந்தும் நான் கூடப் போக முடியாது,” என்றான் வருண்.
“அது எனக்குத் தெரியாதா? ஆனால் ஒரு வழி இருக்கிறது வருண்…” என்றவன் வருணைக் கூர்மையாகப் பார்க்க… அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவன் சட்டெனப் பதறினான்.
“நோ…. நோ… முட்டாள்தனமாக யோசிக்காதே ஆதிபன்… அது உன் வேலைக்கே உலை வைத்துவிடும்…” என்றான் அழுத்தமாக.
“வேறு வழியில்லை வருண்… அந்த வீட்டில் கொலைகள் நடந்து இப்போது மாதமாகிவிட்டது. அதனால், நள்ளிரவில் அங்கே காவலர்களின் நடமாட்டம் எப்படியும் குறைவாகத்தான் இருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்துவிடலாம்…” என்று ஏற்றமாதிபன் சொல்ல, மறுப்பாகத் தலையசைத்தான் வருண்.
“பைத்தியக்காரத்தனமாகப் பேசாதே ஆதிபா… இரவு நேரத்தில் காவலர்கள் ரோந்து வரவில்லை என்றாலும், அங்கே ‘சிசிடிவி’ கேமராக்கள் கண்காணிப்பில் இருக்கும். சிக்கினால், நீ உயிராய் நேசிக்கும் உன் காவல்துறை உத்தியோகம் அவ்வளவுதான்…” வருண் உறுதியாகச் சொல்ல, தன் நண்பனைக் கோபமாகப் பார்த்தான் ஏற்றமாதிபன்.
அவனை நெருங்கி மேசையில் இரு கரங்களையும் ஊன்றி, “சரி… வேறு என்னதான் வழி இருக்கிறது என்று நீயே சொல்லேன்…” என்று ஏற்றமாதிபன் அழுத்தமாகச் சொல்ல, வருணோ திருதிருவென்று விழித்தான்.
அவனுக்கு வேறு எந்த வழியும் புலப்படவில்லை. அவன் தடுமாற…
“எக்சாக்ட்லி… இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை. நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்… அங்கே ரோந்து வரும் காவலர்களின் நடமாட்டம், எப்போது அவர்கள் காவலுக்கு நிற்கிறார்கள், எப்போது விலகிச் செல்கிறார்கள் என்கிற நேர விவரத்தை மட்டும் எனக்கு எடுத்துக் கொடு… அது போதும், மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றதும் தன் நண்பனை முறைத்தான் வருண்.
“உன்னை நண்பனாகப் பெற்றதற்கு…” என்றவன் அதைச் சொல்லி முடிக்காமல், “போய்த் தொலைகிறேன்… பத்திரமாக இரு… தேவையின்றி வெளியே போகாதே… எங்கே போவதாக இருந்தாலும் துப்பாக்கியை எடுத்துச் செல்… நீ கொன்றது லக்கியை! கிகான்டி உன்னைச் சும்மா விடமாட்டான்… இந்த ஒரு மாதமும் எப்படி உன்னை உயிரோடு விட்டு வைத்திருக்கிறான் என்றே தெரியவில்லை… எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்…” என்றவன் எழுந்து தன் முன்னால் நின்றிருந்த நண்பனை நெருங்கினான்.
“ஏன்டா… நீ ஒன்றும் இதில் சம்பந்தப்படவில்லையே…” என்றான் தன் நண்பனை மேலும் கீழும் பார்த்தவாறு.
அதைக் கேட்டதும் இவன் முறைக்க, உதடுகளைச் சுழித்த வருண்,
“ம்கூம்… வாய்ப்பில்லை… அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாய்… ஆனால்… எப்படிடா…? லக்கி கிகான்டியின் வலது கை. அதையும் தாண்டி இருவரும் சிறுவயது முதலே நல்ல நண்பர்கள் என்றும் சொல்கிறார்கள்… இதில் நீதான் லக்கியைக் கொன்றவன் என்று அந்த கிகான்டிக்கு இத்தனைக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் உன்னை நெருங்காமல் இருக்கிறானே… ஆச்சரியமாக இல்லை…” என்று சந்தேகம் கேட்க… தன் நண்பனின் முகம் போன போக்கைக் கண்டதும்,
“சரி… சரி முறைக்காதே… கிளம்புகிறேன்… எதுவாக இருந்தாலும் என்னை அழை… உடனே வந்து நிற்பேன்… எப்போதும் துப்பாக்கியைக் கொண்டு திரி… உன் வீரபிரதாபத்தை மூட்டைகட்டி வைத்துப் புத்திசாளியாக நடந்து கொள்… என்ன நான் சொல்வது புரிகிறதா?” கறாராகச் சொல்லி நண்பனின் முறைப்பைப் பதிலாக வாங்கிக்கொண்டு விடைபெற்றுச் செல்ல…, தன் நண்பனின் அக்கறையில் கொஞ்சமாய் கரைந்தவனாக மென்புன்னகையுடன் வழியனுப்பி வைத்தான் ஏற்றமாதிபன்.

