November 25, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-12

(12)

விதரணையின் அந்த ஆக்ரோஷத்தைக் கண்ட அங்கிருந்த அத்தனை பேரின் முகத்திலும் ஈயாடவில்லை.

“இத்தனை நேரம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது, திடீரென்று என்னாயிற்று?” – குழப்பத்தோடு அனைவரும் ஏற்றமாதிபனைப் பார்க்க… அவனோ தரையில் சிதறிக்கிடந்த உணவைத்தான் பார்த்தவாறு நின்றிருந்தான்.

“என்னடா… திடீரென்று என்னாச்சு?” பதறிய மதிவதனி விதரணையை நோக்கிச் செல்ல முயல, சட்டென்று அவர் கரத்தைப் பற்றித் தடுத்தான் ஏற்றமாதிபன்.

“அம்மா வேண்டாம்… திடீரென்று பெற்றவர்கள் நினைவு வந்துவிட்டது போல… இந்த நிலையில் அவளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அவளுக்கே இந்தச் சம்பிரதாயங்கள் கொஞ்சம் அதிகம்தான். அங்கே பாருங்கள் விதுரனை… அவனும் அழுவதற்குத் தயாராகிவிட்டான். கொஞ்சம் அவனைக் கவனியுங்கள்…” என்றவன் மற்றவர்களைப் பார்த்து, “மன்னிக்கவும்… அவள் மனதில் உள்ள அழுத்தம் இப்படிச் செய்ய வைத்துவிட்டது,” என்றான் சங்கடமும் தயக்கமுமாக.

அதைக் கண்டு வருத்தமாக அவனைப் பார்த்த வசந்தகுமார், “ஆதிபா… இதற்கெல்லாமா மன்னிப்புக் கேட்பாய்? அவளுடைய நிலையில் இதுவரை தாக்குப் பிடித்ததே பெரிய காரியம். நீ எங்களைப் பற்றிக் கவலைப்படாதே… நீ இந்தளவுக்குச் சங்கடப்பட வேண்டாம். நாங்கள் யாரும் வேற்று மனிதர்கள் அல்ல…” என்று அவன் தோளைத் தட்டிக்கொடுத்துச் சமாதானம் செய்ய, தன் மகனை வருத்தத்தோடு பார்த்தார் வித்யாதரன்.

“ஆதிபா… இவர்கள் எல்லோருக்கும் நிலைமை மிக நன்றாகவே தெரியும்… இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்… நீ போய் அவளைச் சமாதானப்படுத்தி, அவளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு வா…” என்று வித்யாதரன் சொல்ல… தந்தையை நன்றியோடு பார்த்தவன், எழுந்து தட்டில் உணவை வைத்துவிட்டு அங்கிருந்தவர்களிடம் மீண்டும் மன்னிப்பாய் தலையை அசைத்துவிட்டுத்  தன் அறைக்குச் சென்றான்.

அங்கே அவளில்லாத அந்த அறை வெறுமையாக இருக்க, பற்களைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கியவன், அங்கிருந்த மேசையில் உணவுத் தட்டை வைத்துவிட்டு, அவள் முன்தினம் தங்கியிருந்த அறைக்குச் சென்று கதவை மெதுவாகத் திறந்தான்.

அவளோ படுக்கையில் குப்புற விழுந்து, சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள். தலை சுவர்ப்பக்கம் திரும்பியிருந்தது. யாராவது பார்த்தால் அவள் அப்படியே உறங்கிக்கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அடிக்கடி தன் விரல்களால் அவள் கண்ணீரைத் துடைப்பது மட்டும்தான் அவள் அழுதுகொண்டிருப்பதற்கான சாட்சியாக இருந்தது.

இதைக் கண்ட ஆதிபனுக்கு ஒரு பக்கம் இரக்கம் வந்தாலும், மறுபக்கம் கோபமும் எழுந்தது. ‘எத்தனை நாள்தான் இப்படியே சோகத்தில் மூழ்கிக் கிடக்கப் போகிறாள்? ஏதோ ஒரு கட்டத்தில் இதையெல்லாம் கடந்துதானே ஆக வேண்டும்?’

“இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படியே அழுதுகொண்டிருக்கப் போகிறாய் விதரணை?” அவன் கேட்க, ஒரு கணம் அவள் உடல் விறைத்தது. ஆனால் அவள் அசையாமல் அப்படியே இருக்க…

“உன்னைத்தான் கேட்கிறேன் விதரணை… இப்படியே அழுதால் இறந்துபோன உன் தாய் தந்தை மீண்டும் வந்துவிடுவார்களா என்ன?” அவன் கேட்க, விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள் விதரணை.

அவனுடைய வார்த்தைகள் அவளைக் கொன்று குவித்தன. அவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் ஏற்படுத்திவிட்டுப் போன அந்த ஆழமான மனவடு இன்னும் ஆறாத ரணமாகக் கிடந்து அவளை வதைக்கிறதே, அதற்கு என்ன செய்வது? எத்தனை வலியோடு இறந்திருப்பார்கள். ஆனால் இவள் மகிழ்ச்சியாக அல்லவா இருக்கிறாள். அவன் அணைப்பில் குழைந்து, முத்தத்தில் கரைந்து, அவன் சில்மிஷங்களில் உருகி… சே… அத்தனை நன்றிகெட்டவளா நான்?

மன அழுத்தத்தால் ஏற்பட்ட சிந்தனை தாறுமாறாக யோசித்தது.

“விதரணை… உன்னிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்!” அவன் சத்தமாகச் சொல்ல, இப்போது ஆத்திரத்தோடு எழுந்தமர்ந்து அவனை முறைத்துப் பார்த்தாள் விதரணை.

அவள் குப்புறப் படுத்திருந்ததாலும், ஆக்ரோஷமாக எழுந்ததாலும் கசங்கியிருந்த அவளது சேலை இடம் மாறித் தாறுமாறாக ஒதுங்கிக் கிடக்க, பிரம்மன் அவளுக்கென்றே வடித்திருந்த அந்த அழகிய மேனியின் எழில், இரவிவர்மனின் ஓவியமாய் அவன் கண்முன்னே விரிய… ஒரு கணவனாக, காதல் கொண்ட ஆண்மகனாகச் சற்றுத் தடுமாறித்தான் போனான் அவன். அவளுடைய மனநிலையையும் தாண்டி, அவளது அந்த எழிலழகு அவனைத் திணறடிக்க, அவசரமாகத் தன் பார்வையைத் திருப்ப முயன்றான். ஆனால் நாசமாய்ப் போன குரங்கு புத்தி அதற்குச் சம்மதித்தால்தானே! எந்தப் பெண்ணையும் இந்தக் கோணத்தில் பார்த்தறியாதவன், முதன்முதலாகத் தன் மனைவி என்கிற உரிமை கிடைத்த பின், பார்வையால் அவளை வேறு கோணத்தில் பார்க்க முயன்றான்.

ஆனால் அவளோ அவன் நிலை எதுவும் புரியாமல், விரக்தியோடு அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல், “இறந்தது உங்கள் தாய் தந்தையல்ல ஏற்றன், என் பெற்றோர்! அவர்களை இழந்துவிட்ட அந்த வலி…” அதற்கு மேல் பேச முடியாமல் உதடுகள் நடுங்க அவள் தலைகுனிய… அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தன் நெற்றியை விரல்களால் வருடிக்கொடுத்தான் ஏற்றமாதிபன்.

“வலி… வலி…! யாருடைய வாழ்க்கையில்தான் வலியில்லை? இதே வார்த்தையைச் சொல்லிக்கொண்டு நீ உன்னை ஓர் அறைக்குள் முடக்கிக்கொள்வதால் உன் அப்பா அம்மா திரும்பி வந்துவிடுவார்களா? அல்லது நீ வருந்தித் துடிப்பதைப் பார்த்து உன் அப்பா அம்மாதான் மகிழ்வார்களா? இப்படியே ஒடுங்கிப்போவதால் இழப்பு உனக்குத்தான் விதரணை… புரிந்துகொள்!” – எரிச்சலோடு சொன்னவன், இப்போது ஆழமாக மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்திக்கொண்டான்.

“விதரணை… உன்னுடைய வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பார், உன்னையும் விடப் படுபயங்கரமாக ஈழத்தில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடியவில்லையா? குழந்தைகளை இழந்து, முழு குடும்பங்களையும் இழந்து… ‘ஐயோ எல்லாம் போச்சே’ என்று அவர்கள் ஒரு மூலையில் அமர்ந்திருந்தால், இன்று அந்த இனமே அழிந்திருக்கும்… உன் வாழ்க்கையிலும் இப்படி நடந்திருக்கக் கூடாதுதான். நடந்துவிட்டது, இனி என்னதான் செய்ய முடியும்… நீயே சொல்லேன்… நடந்ததை மாற்றுவதற்கு நம்மிடம் ஏதாவது சக்தி இருக்கிறதா? இல்லையே…” என்றவன், அவளை மேலும் நெருங்கி அவளருகே அமர்ந்துகொண்டு அவளைப் பார்த்தான்.

“உன்னுடைய வலிக்கு மருந்து நீ மட்டும்தான் விதரணை. நீதான் உன்னைத் தேற்றிக்கொள்ள வேண்டும். எதார்த்தத்தைப் புரிந்து அடுத்து என்ன செய்வதென்று தீர்மானிக்க வேண்டும்” சொன்னவன், அவளது ஒரு கரத்தைத் தன் கரத்தில் எடுத்து அழுத்தமாகப் பற்றிக்கொண்டான். அவளோ தலைதிருப்பித் தன் கரத்தைப் பற்றிய அவனது கரத்தை வெறுமையோடு பார்த்திருக்க…

“புரிந்துகொள் விதரணை… உனக்கு வேறு வழியேயில்லை… நீ இதிலிருந்து கடந்து வந்தேதான் ஆகவேண்டும். ஒரே இடத்தில் நீர் தேங்கியிருந்தால் அது சகதி; ஓடினால்தான் அது சுத்தமான ஆறு!”

அவன் சொல்லி முடிக்கும் முன், விரக்தியாகச் சிரித்தாள் விதரணை.

“அறிவுரை சொல்லலாம் ஏற்றன்… ஆனால் அதை அனுபவிக்கும்போதுதான் அதன் ஆழமான வலி புரியும்… காவலதிகாரியாக இருந்து எத்தனையோ பேரை அசால்ட்டாகக் கொன்று குவிக்கும் உங்களுக்கு மரணத்தின் வலி புரியாது… நான் சகதியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்! தயவுசெய்து என்னை விட்டுப் போங்கள்…” என்றாள் எரிச்சலும் கோபமுமாக.

“நாறிப்போகும்டி உன் வாழ்க்கை…” என்று எரிச்சலோடு சொன்னவனுக்கு இப்போது முகம் கோபத்தில் கடுமையாகிப் போனது. ஆனாலும் தன்னைச் சமாளித்தவனாக, “முட்டாள்தனமாகப் பேசாதே பம்கின்! நான் ஒன்றும் நல்லவர்களைக் கொல்வதில்லை… நம் நாட்டுக்கு அநீதி செய்பவர்களைத்தான்…” என்று கொண்டு வந்தவன், பேசும் திசை மாறுவது புரிய பற்களைக் கடித்து வாய்க்குள் எதையோ முணுமுணுத்தான். பின் ஆழ மூச்செடுத்துவிட்டு, “நீ வாழ வேண்டாமா? இப்படியே உனக்குள் உடைந்து நொறுங்கிக்கொண்டே இருக்கப் போகிறாயா?” அவன் பொறுமையிழந்து கேட்க… அவன் கரத்தை உதறிவிட்டு எழுந்து நின்றாள் விதரணை.

“வேண்டாம்… எனக்கு வாழ வேண்டாம்…” என்றாள் கீச்சிடுதலாக. “எனக்கு… எனக்கு வாழத் தகுதியில்லை! எனக்குச் சாக வேண்டும்! என் அம்மா அப்பாவிடமே போக வேண்டும். தயவுசெய்து என்னை அவர்களிடம் அனுப்பிவிடுங்கள்!” என்றவள் இரண்டு கரங்களாலும் தலையைப் பற்றியவளாக, “ஐயோ… என்னால் முடியவில்லையே… நான் என்ன செய்யட்டும்?” என்றவாறு தன் தொண்டையையும் நெஞ்சையும் அழுத்திக் கொடுத்து, “தொண்டையெல்லாம் இறுக்குவது போல, நெஞ்செல்லாம் வலிப்பது போல… இந்த நரக வலியைத் தாங்குவதை விட நான்… நான் சாவது…” அவள் முடிப்பதற்குள் எழுந்தவன், அடுத்த கணம் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்துவிட்டிருந்தான் ஏற்றமாதிபன்!

அவனுடைய அந்தச் செயலில் அழுகை மறந்து அதிர்ந்துபோனாள் விதரணை. இதுவரை அவளை எவரும் இப்படி அறைந்ததில்லை. முதன்முறையாக ஒருவன் அறைந்ததில் பொறிகலங்கிப் போனவளாய், கன்னத்தைப் பற்றியவாறு அதிர்வுடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க… அவனோ அவளைக் கொன்றுவிடுவது போலத் தீர்க்கமாகப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

“நானும் போனால் போகிறதென்று கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லிக்கொண்டிருக்கிறேன், திரும்பத் திரும்ப அதையே உளறிக்கொண்டிருக்கிறாய். நீ செத்துவிட்டால் எல்லாம் மாறிடுமா? விதுரனின் நிலை என்ன? யோசிக்க மாட்டாயா? இதற்காகவா நான் இத்தனை கஷ்டப்படுகிறேன்? இதற்காகவா இரவு பகல் பாராமல் எதிரிகளைத் தேட இத்தனை முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறேன்? ஒரு மாசமாயிற்று நான் ஒழுங்காக உறங்கி… உனக்கு அது தெரியுமா?!” என்று சீறியவன்…

“இனிமேல் பட்டு இப்படிச் சாகிறேன், கீகிறேன் என்று ஏதாவது உளறினாய்…” என்றவன் மீண்டும் அவளை அறைவது போலப் புறங்கையை உயர்த்த… அவளோ, எங்கே திரும்பத் தன்னை அறைந்துவிடுவானோ என்கிற அச்சத்தில் முகத்தை இழுத்துக்கொள்வதைக் கண்டதும், தூக்கிய கரம் அப்படியே அந்தரத்தில் நின்றது!

ஆழ மூச்செடுத்துத் தன் கோபத்தை அடக்கியவன், பின் விரல்களைச் சுருட்டிப் பற்களை நெருமியவாறு அவளை முறைத்துப் பார்த்தவாறே தன் கரத்தைக் கீழிறக்கி, அவளை வெறித்துப் பார்த்தான். இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை அவனுக்கு. திரும்பத் திரும்ப அவள் சாவைப் பற்றிப் பேசியது அவனது பொறுமையைக் காற்றில் பறக்கவிட்டிருந்தது.

அதற்கு மேல் அவளோடு பேசிப் பயனில்லை என்று அவன் உணர்ந்தானோ என்னவோ, மறுகணம் நெருங்கி, அவளை நோக்கிக் குனிந்து சட்டென்று அவளைத் தோளில் ஏந்திக்கொண்டு, தன் அறைக்கு வந்து தரையில் விட… அவளோ அவன் செயலில் அதிர்ந்தவளாக, அவனையே ஒருவித அச்சத்தோடு பார்த்தாள்.

“இனி நீ என் மனைவி… உன் இருப்பிடம் இந்த அறைதான்… புரிந்ததா?” அவன் சீற்றமாகக் கேட்க, இன்னும் அதிர்விலிருந்து தெளியாதவள், ‘ஆம்’ என்றாள் தலையை மேலும் கீழும் ஆட்டி.

ஆனபோதும் அவன் கோபம் இன்னும் அடங்கவில்லை. சற்று முன் அபிநயா எடுத்து வந்து வைத்த அவளுடைய பெட்டியைத் தூக்கிப் படுக்கையில் வைத்தவன், அதைத் திறந்து கையில் கிடைத்த பாஃகி-பேண்ட் (Baggy pant), டீஷர்ட்டை எடுத்துப் படுக்கையில் போட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.

“போ… போய் இந்தச் சேலையை மாற்றிவிட்டு இதை அணிந்துகொண்டு வா!” என்றான் அழுத்தமாக.

அவள் அசையாமல் நிற்கவும், “காட்… ஹெல்ப் மீ (God… help me)” என்று முனங்கியவன் அவளை எரிச்சலுடன் பார்த்து, “சில நாவல்களில் வரும் முட்டாள் நாயகிகள் போல நடந்துகொள்ளாதே விதரணை… கொஞ்சம் முதிர்ச்சியோடு நடந்துகொள்…” என்று சொன்னவன், மறுகணம் அவளை நெருங்கி, கண்ணிமைக்கும் நொடியில், அரைகுறையாக ஒதுங்கியிருந்த முந்தானையை ஒரே இழுவையாக இழுத்துச் சேலையைக் களைந்து தூர எறிந்திருந்தான்.

அவன் அறைந்த அதிர்ச்சியில் நின்றிருந்தவள், ஏற்றமாதிபனின் அந்தச் செயலில் உயிர் உறைந்து போனாள்! அன்று அந்த மிருகம் அவளது சேலையைக் களைந்து எறிந்த அந்த நொடி அவள் மனக்கண்ணில் நிழலாட… அவள் தேகம் நடுங்கியது; உயிர் ஊசலாடியது; ஐம்புலன்களும் தன்னிலை கெட்டன. அதையும் தாண்டி ஒருவித வெறி உள்ளங்கால்களிலிருந்து உச்சந்தலை நோக்கிப் பாய, மறுகணம் வெறி கொண்டவளாக ஆதிபனைத் தள்ளிவிட்டவளின் தேகம் நடுங்கத் தொடங்கியது.

கண்கள் நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. தந்தையை அவர்கள் வதைத்ததும், அவளைத் துகிலுரித்ததும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன. அந்தப் பழைய மனவடுவின் காட்சிகள் தங்கு தடையின்றி அவள் புத்தியில் ஓட, விதரணையின் உடல் நடுங்க ஆரம்பித்தது; மூச்சுக்காற்று சீரற்றுத் திணறியது.

உடலின் இரத்தம் முற்றாக உறைந்து போவது போன்ற உணர்வில் தன்னிலை இழந்து தள்ளாடியவளைக் கண்டு ஏற்றமாதிபன் ஒரு கணம் பதறித்தான் போனான்.

சத்தியமாக அவன் வேண்டுமென்று எதுவும் செய்யவில்லை. அவள் பிடிவாதம் பிடித்ததும் இவன் பொறுமை காற்றில் பறக்க, ஏற்கனவே மருத்துவமனையில் அவள் உடைகளை மாற்றிய பழக்கத்தில், அப்போதும் அவளுடைய உடைகளை மாற்றத்தான் அவள் சேலையைக் களைந்து எறிந்தான். ஆனால், அந்தச் செயலே அவளது வலியை அதிகரிக்கச் செய்யும் என்று அவன் சத்தியமாக நினைத்திருக்கவில்லை.

அவள் நிலையைக் கண்டதும்தான், தான் செய்த செயலின் தீவிரமே அவனுக்குப் புரிந்தது. அவளுடைய தற்போதைய நிலை, சுலபமாக உடைந்துவிடும் முட்டை போல என்பதை ஏன் யோசிக்காமல் விட்டான்? இத்தனைக்கும் ஒரு காவலதிகாரியான அவன், யோசித்திருக்க வேண்டாமா? அவளுடைய நிலை எத்தகையது என்று அவனுக்கு மற்றவர்களை விட மிக நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும் எப்படி இத்தகைய ஒரு காரியத்தைச் செய்தான்? இதை நிதானமாகக் கையாண்டிருக்க வேண்டாமா?

“அவளை வதைத்துவிட்டோமே!” என்று பதறியவனாக அவளை நெருங்கி, “விதரணை… விதரணை… ஐ ஆம் சாரி… நான்… வேண்டுமென்று அப்படிச் செய்யவில்லை…!” என்று அவளை நினைவுலகிற்குக் கொண்டுவர முயன்றவனாக, அவளுடைய தோள்களைப் பற்றப் போக… அவள் முகமோ வெளுறிப் போனது. வெளிப்படையாகவே அவள் தேகம் நடுங்கியது; விழிகள் குத்திட்டன.

அந்த நேரம் அவளுக்கு அவன் ஏற்றமாதிபனாகத் தெரியவில்லை. அன்று அந்தப் பழைய கொடியவன் அவளை இழுத்து அணைத்து, அவள் மேனியில் செய்த அசிங்கங்கள் நினைவுக்கு வர… பதறியபடி பின்னால் சென்றவள், “வேண்டாம்… தொடாதே! என்னை விட்டுவிடு… என்னை விட்டுவிடு!” என்று ஆங்கிலத்தில் சீறியவாறு அங்கிருந்த சுவரோடு மோதுண்டாள்.

மறுகணம் அவனை வெறித்துப் பார்த்தவாறே அங்கிருந்த மூலையில் மோதித் தரை சரிந்து, உடல் கூனிக் குறுக, முழங்கால்களைக் கட்டியவாறு பதறித் துடிக்க… அவள் நிலை கண்டு ஆடிப்போனான் ஏற்றமாதிபன்.

பருந்துக்குப் பயந்து தாயின் சிறகுக்குள் ஒளிய முயன்ற கோழிக்குஞ்சு ஒன்றுக்கு, அந்தத் தாயின் பாதுகாப்பு அரண் கிடைக்காமல் போனால் அது எப்படி ஒரு மூலையில் நடுங்கிக் கிடக்குமோ, அப்படி அவள் கிடந்த விதம் அவன் ஆத்மாவையே கீறிக் கூறு போட… சொல்லொணா வலியோடு அவளை நெருங்கியவன், மெதுவாக அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தான். அவளோ இன்னும் உடல் நடுங்க,

“அம்மா… அப்பாவை விட்டுவிடு… அவர்களை… ஒன்றும் செய்யாதே…” என முனங்கியவாறு நடுங்க… உடைந்து போனான் ஏற்றமாதிபன்.

“க… கண்ணம்மா… இங்கே பார்…” என்றவன் தன் நெஞ்சில் கை வைத்து, “நான்… உன் ஏற்றன்… ஏற்றமாதிபன்… நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். ஐ பிராமிஸ் யூ… இங்கே பார்மா… டார்லிங், லுக் அட் மீ… பம்கின்… ப்ளீஸ்… விதரணை, என்னை மன்னித்துவிடு!” என்று மென்குரலில் சொன்னவாறு அவளைத் தொடப் போக… அவளோ தீயைத் தொடுவது போல அவளைத் தொட முயன்ற கரங்களை அடித்துத் தள்ளிவிட்டு, மேலும் மூலையின் ஓரம் தன் உடலைச் சுருக்கிக் கொள்ள… இவன் இதயமே வெடித்துவிடும் போல வலித்தது.

“ஓ… பேபி கேர்ள்… வாட் டிட் ஐ டூ டு யூ…?” கலங்கியவன், “கண்ணம்மா… இங்கே பார்…” என்றான் பட்டு போன்ற மென் குரலில்.

அவன் மென்மையாகச் சொல்லியும், அந்தக் கெஞ்சும் குரலில் அவள் தெளியவில்லை. பழைய நினைவுகளிலிருந்து வெளிவர முடியாமல் விக்கித்து நின்றவளுக்கு, தன் தந்தையை அவர்கள் சித்திரவதை செய்த காட்சிகளும், அவளது சேலை உருவப்பட்ட கணமும் மீண்டும் மீண்டும் வந்து அவளைக் கொன்று குவித்தன.

அதை உணர்ந்தவனாக, மென்மையாக அவளது வலது கரத்தைப் பற்ற… அதை உதறிவிட்டு மேலும் ஒடுங்கியவளாக நடுங்கிப் போக, ஒரு கணம் எப்படி அவளை நெருங்குவது என்று தெரியாமல் குழம்பிப் போனான் ஏற்றமாதிபன்.

“பேபி… இங்கே பார்… என்னைப் பார்மா… இது ஏற்றன்… உன்னுடைய ஏற்றன்… உனக்கு நான் தீங்கு செய்வேனா… இங்கே பார்மா… கண்ணம்மா… ஏஞ்சல்…” என்று அவளைச் சமாதானம் செய்யும் முகமாக அழைத்தவன், மீண்டும் மெதுவாக அவளுடைய கரத்தைப் பற்ற… திரும்பவும் அவன் கரத்தை உதறிவிட்டு, “என்னை விடு… என்னை விடு…” என்று துடித்தவாறு அச்சம் நிறைந்த விழிகளோடு அவனைப் பார்த்தாள்.

இப்போது இன்னும் அவளை நெருங்கி அவளுக்கு அருகே சப்பணமிட்டு அமர்ந்தவன், “இதோ பார் விதரணை… அன்று உன்னைத் தொட்டவர்கள் யாரும் உயிரோடு இல்லை… அத்தனை பேரையும் கொன்றுவிட்டேன்…! புரிகிறதா உனக்கு…? இங்கே பார்… யாரும்.. யாருமே உயிரோடு இல்லை… என்னைப் பார்மா…” என்றவன் இப்போது மீண்டும் அவள் கரத்தைப் பற்ற… இப்போது அவள் தன் கரத்தை இழுக்கவில்லை. ஆனால் அவளுடைய உயிரையே சிதைக்குள் தள்ளும் பார்வை பார்க்க… உமிழ்நீர் கூட்டித் தன் வலியையும் சேர்த்து விழுங்கியவன், “இட்ஸ் ஓகே பேபி… இட்ஸ் ஓகே…” என்றான்.

பனிக்கட்டியாகக் குளிர்ந்து போயிருந்த அவள் கரங்களை உணர்ந்து, அந்தக் கரத்தை அழுத்திப் பற்றியவாறு, “விழித்துக்கொள் கண்ணம்மா… இனிமேல் இப்படி எதுவும் நடக்காது. ஐ பிராமிஸ் யூ… இங்கே பாரடா… என்னை பார்… மை ஏஞ்சல்… பேபி கேர்ள்… இங்கே பார்மா,” என்றவாறு மெதுவாக அவளைத் தன்னை நோக்கி இழுக்க… அவனது அந்த உருக்கமான பேச்சும், கைகளின் கதகதப்பும் மெல்ல மெல்ல அவளைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தன.

நிகழ்காலத்திற்குத் திரும்பிய விதரணை, மெதுவாகத் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது பார்வையில் தெரிந்த ஆதரவு தேடும் ஏக்கத்தைக் கண்டு முற்றாக உடைந்து போனான் ஏற்றமாதிபன்.

“ஓ மை பேபி கேர்ள்… என்ன காரியம் செய்துவிட்டேன்!” என்று துடித்தவனாக அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்தியவன், மறுகணம் அவளைக் காற்றுக் கூட உள்ளே புகமுடியாத அளவுக்கு, இறுகத் தன்னுள் புதைக்கும் வகையில் அணைத்துக்கொண்டான் ஏற்றமாதிபன்.

அவளோ அந்த உணர்வே இல்லாமல் அவன் அணைப்பில் இன்னும் நடுங்கிக்கொண்டிருக்க, அவளது கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்து,

“சாரி… சாரிடா… சாரிமா… என்னை மன்னித்துவிடு…” என்று முணுமுங்கியவனுக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை. அவளைத் தனக்குள் புதைத்துக்கொள்வது போல அணைத்தவனின் உதடுகள், நிறுத்தாமல் அவளிடம் மன்னிப்பு வேண்டிக்கொண்டே இருந்தன.

அதுவரை மரக்கட்டையாய் இறுகிக்கிடந்த அவளுடைய உடல், அவனது ஸ்பரிசத்தில் மெல்ல மெல்லத் தளரத் தொடங்கியது. அதிர்ச்சியும் மன அழுத்தமும், சோர்வும் விதரணையின் நரம்பு மண்டலத்தை அதீத சோர்வுக்குத் தள்ளியிருக்க, மூளை தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வழியாக உடலைச் சட்டென்று உறக்க நிலைக்குத் தள்ளத் தொடங்கியது. அவள் மெல்லக் கண்கள் சொருக அவனது மடியிலேயே சாய, அவளை ஒற்றைக் கரத்தால் தாங்கிக்கொண்டான் ஏற்றமாதிபன்.

அவள் உறங்கும் தருவாயில், “அவன்… அவன் பெயர் லக்கி…” என்றாள் மிக மென்மையாக.

அவனோ புரியாமல் பார்க்க… “அன்று… அன்று வீட்டிற்கு வந்தவனில் ஒருவன்… ஒருவன் பெயர்… லக்கி… அ… அவன்தான் என்னை…. கத்தியால்…. கு… குத்தினான்…. தப்பாக…. தொட்டான்…. அப்பா… அப்பாவிடம் ஏதோ… ஆவணம் இருக்கிறது என்று… அது வேண்டும் என்று… அப்பா… கொடுக்க… மறுத்தார்… நான்… நான் கூடக் கேட்டேன்… ஆனால் ஆவணத்தை… கொடுக்க முடியாது என்று…” என்றவள் அப்படியே அவனது கரங்களிலேயே முழுமையான ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்.

அவள் சொன்னதை எல்லாம் உள்வாங்கிக்கொண்ட ஏற்றமாதிபனின் உடலில் ஓர் அதிர்வு!

“லக்கி!” அந்தப் பெயர்… மூளையைக் கசக்கி யோசிக்க, பளிச்சென்று அந்தப் பெயர் அவனுடைய நினைவுக்கு வந்தது. லக்கி… அவன் அமெரிக்காவில் உள்ள பாதாள உலகத்தின் கேங்ஸ்டரான கிகான்டியின் வலது கை! அந்த கிகான்டி எப்படியிருப்பான் என்று யாருக்கும் தெரியாது; அவனுடைய சகாக்கள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் அவன் போதைவஸ்து கடத்துவதிலிருந்து சட்டத்திற்குப் புறம்பான அனைத்து வேலைகளையும் பாதாள உலகத்திலிருந்து செய்பவன். அவனைப் பிடிக்க அமெரிக்க அரசாங்கம் எத்தனையோ வழிகளைக் கையாண்டும், அந்த முயற்சி தோல்வியாகிப் போனது பற்றி உலகத்திற்கே தெரியும். அவனுக்கு வலது கையாக அனைத்தையும் முன்னின்று செயல்படுத்துபவன் லக்கி.

அந்த லக்கிதான் விதரணை வீட்டிற்கு வந்ததா? அவனைத்தான் இவன் கொன்றானா? நம்ப முடியவில்லை அவனால். கிகான்டியின் அடியாள் லக்கி மிகப் பெரிய இடம். அவன் எதற்கு வரப்போகிறான்? வாய்ப்பேயில்லை. ஒருவேளை அவன்தான் என்றால்? நினைக்கும்போதே, கையில் கனம் தெரிய குனிந்து பார்த்தான். முற்றாகத் தன் நினைவிழந்து அவன் கரங்களில் விழுந்திருந்தாள் விதரணை.

அவளுடைய அந்த நிலையைக் கண்டு அவன் பதறவில்லை. அது பயப்படும்  நிலையுமல்ல; அதீத அதிர்ச்சியில் செயல்பட்ட மூளை தன் ஓய்வுக்காக அவளை உறங்கச் செய்திருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தின் பின்புஅவள் புத்தி பழைய நிலையில் வேலை செய்யும். இப்போது அவளைக் கவனிக்க வேண்டிய தேவை புரிய, தற்காலிகமாக லக்கியை ஓரமாகப் போட்டுவிட்டு அவளை ஏந்தியவாறு எழுந்தவன், அவளை மெதுவாகப் படுக்கையில் கிடத்தினான்.

அவள் உடலைக் கவ்விப்பிடித்த ஜாக்கெட்டைக் கண்டு அப்படியே அவளை விட்டுச் செல்ல மனமில்லாமல், அவளது உறக்கம் கலையாதபடி மிக மென்மையாக அவளது கனமான ஆடைகளை நீக்கிவிட்டு, கட்டிலின் ஓரமாகக் கிடந்த எளிமையான உடையை அவளுக்கு அணிவித்தான்.

அணிவிக்கும் போதே அவளது மேனியில் ஆறாத வடுவாக மாறிப்போன காயங்களின் மீது அவன் விழிகள் நிலைத்தபோது, அன்று அவள் துடித்தது அனைத்தும் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட அவள் மரணத்தைத் தொட்டல்லவா மீண்டு வந்தாள்! இதை எப்படி மறந்தான்? அவளுடைய மனநிலை சரியாக எப்படியும் சில மாதங்களாவது எடுக்கும், அதற்காக மருந்து வேறு எடுக்கிறாள். அப்படியிருக்கும்போது அவளுக்கு அழுத்தம் கொடுப்பது நியாயமில்லையே…

தன்னையே வெறுத்தவனாக, அவளது காயத்தினை வருடியவனின் கண்களிலிருந்து துளித்த இரு துளிக் கண்ணீர் அவளின் காயத்தின் மீது விழுந்தன.

“இதற்கு  மூல காரணமானவர்கள் யாராக இருந்தாலும், பதில் சொல்லியே ஆகவேண்டும் விதரணை. அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எந்த மூலையில் கிடந்தாலும் சரி… தேடிக் கண்டுபிடிப்பேன். உன்னை வலிக்கச் செய்தவர்களைக் கொன்று குவிப்பேன். இது உன் மீது சத்தியம்… நான் உன் மீது வைத்த காதலின் மீது சத்தியம்…” – ஆழமாக, அதே நேரம் அழுத்தமாகச் சொன்னவன், குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

இது எதுவும் புரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் அவளிருக்க, அவளை விட்டு விலகி வெளியே வந்து வருணை அழைத்தான் ஏற்றமாதிபன்.

What’s your Reaction?
+1
26
+1
0
+1
2
+1
0
+1
7
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!