Mon. Jul 6th, 2026

உயிர் நீ மெய் நான்…! – 13

(13)

தன் வாகனத்தைக் கன வேகத்தில் முக்கிய பாதையில் ஏற்றிய ஆதிபன், சற்று தூரம் சென்ற பிறகு தான் ஒழுங்காக மூச்சே எடுத்தான்.

“காட்… ஜெஸ்ட் மிஸ் இட்..” என்றவன் திரும்பி மதிமையைப் பார்க்க, அவளும் தப்பிவிட்டதை நம்ப முடியாத அதிசயத்துடன், விழிகள் விரியத் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய நிலையை உணர்ந்தது போல, நடுங்கிக் கொண்டிருந்த மென் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுக்க, நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் இப்போது முட்டி நின்றிருந்தது.

இவன் மட்டும் வராமல் இருந்திருந்தால் என்னாகியிருக்கும். அதற்கு மேல் தன்னை அடக்க முடியாமல், தன் கரத்தைப் பற்றியிருந்த அவனுடைய கரத்தை உதறிவிட்டுச் சட்டென்று அவன் கரத்தை அணைத்துப் பிடித்துத் தன் நெற்றியைத் திண்ணிய அவன் தோள்களின் மீது பதித்து, விசும்பத் தொடங்க,

ஆதிபன் பதட்டத்தோடு வாகனத்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு, அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“ஹே… எதற்கு இப்போது அழுகிறாய்…? அதுதான், எந்த சிக்கலும் இல்லாமல் தப்பி விட்டாயே…?” மென்மையாகக் கூற, அவளோ மேலும் விசும்பியவாறு,

“நீங்கள் வராமல் இருந்திருந்தால் என் நிலை… நினை… நினைக்கும்போதே…” என்றவளின் தோளின் மீது அவள் கரங்களில் சிக்காத கரம் கொண்டு அழுத்திக் கொடுத்தவன்,

“ஷ்… இட்ஸ் ஓக்கே…! நான் வரவில்லை என்றால், வேறு யாராவது வந்திருப்பார்கள். என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், நல்லவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிடாதென்று… இது வரை அதை நம்பியதில்லை. இப்போது நம்பத் தோன்றுகிறது. சரி அழாதே…!” என்று சமாதானப் படுத்த, விசித்தவாறு அவனை விட்டு விலகினாலும், கன்னத்தில் வழிந்த கண்ணீர் மட்டும் குறையவில்லை.

இப்போது அவளை நோக்கிக் குனிந்தவன், உள்ளங்கைகளால், அவளுடைய முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்த, மதிமையோ விக்கியவாறு அவனை ஏறிட்டாள்.

இரத்தத்தால் பூசிய முகம், அழுததால் சிவந்த விழிகள். சிவந்து விடைத்த கூரிய நாசி. அழுததால் நடுங்கிக் கொண்டிருந்த செழித்த உதடுகள்… அதைக் கண்டதும், சற்று முன், அந்த உதடுகளை முத்தமிட்டது நினைவுக்கு வந்தது ஆதிபனுக்கு.

அப்போது அவளைக் காக்கத்தான் முத்தம் இட்டான் என்றாலும், அப்போது தவறாகத் தெரியாதது இப்போது மிகப் பெரும் பாதகமாகத் தோன்றியது. கூடவே அவளுடைய முகத்தைத் தான் பற்றியிருக்கும் விதமும் உறுத்த, உடனே கரங்களை இழுத்தெடுத்தவன்,

“சா… சாரி மதிமை…” என்றான் மெல்லிய குற்ற உணர்ச்சியோடு. இவளோ புரியாமல் அவனை ஏறிட,

“அது வந்து நான் உன்னை வேண்டும் என்று முத்தமிடவில்லை…! அப்போது அந்த நிலையில், உன்னைக் காப்பதற்கு அதை விட வேறு வழி தெரியவில்லை…” என்று மென்மையாகக் கூற, அவளுக்குமே அப்போதுதான் அவன் முத்தமிட்டது நினைவுக்கு வந்தது.

அதுவரையிருந்த இலகுத் தன்மை, சட்டென்று  வடிந்து போக, ஒரு வித அவஸ்தையோடு அவனைப் பார்த்தவள், அவசரமாக நிமிர்ந்து சரியாக அமர்ந்து  வெளியே வெறிக்க, ஆதிபனும், அவளை விட்டு விலகி நேராக அமர்ந்து கொண்டான்.

ஆனாலும் அவள் இன்னும் பதில் சொல்லாதது உறுத்த,

“மதிமை… நான்…” என்று அவன் எதையோ சொல்ல வர, திரும்பி அவனைப் பார்த்தவள்,

“இந்தக் கணம், இந்த விநாடி, நான் உயிரோடு இருக்கிறேன் என்றால், அதற்கு முழுக் காரணமும் நீங்கள்தான்…! என்னைக் காப்பதற்காக நீங்கள் செய்ய விளைந்தது ஒரு போதும் தவறாகாது… அதனால் மன்னிப்பும் கேட்க வேண்டிய அவசியமில்லை…” என்று மென்மையாகக் கூற, நிம்மதி மூச்சொன்றை விட்டவன், அடுத்து வண்டியைக் கிளப்பினான்.

அடுத்து ஆதிபனின் வாகனம் நேராகக் காவல்நிலையம் நோக்கிச் சென்றது.

அங்கே நெற்றியில் காயத்தோடு களைத்து விழுந்து வந்தவளைக் கண்ட காவல்துறையினர், உடனே பரபரப்பாயினர்.

இவர்களும் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூற, அவள் சொன்னவை அனைத்தையும் பதிவு செய்த காவல்துறை, உடனேயே அதற்கான நடவடிக்க எடுப்பதாகக் கூறி,  அவளை மருத்துவமனை செல்லப் பணித்தது.

அங்கேயே நின்றவாறு, காவல்துறையின் அனுமதியோடு, சபேசனை அழைத்தவன் நடந்ததை சுருக்கமாகக் கூறி விட்டு, சற்று நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டுக் கைப்பேசியை வைக்க, அதுவரை ஆதிபனிடமிருந்து எந்த சத்தமும் இல்லையே என்கிற பதட்டத்தோடு, வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த சபேசனுக்கு ஓரளவு நிம்மதியானது.

ஆதிபனும் உடனே அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று, காயத்திற்குக் கட்டுப்போட்டு, அவள் உடல் சுடுவதைக் கண்டு அதற்கும் மருந்து ஏற்றி, வலிக்காமல் இருப்பதற்காக மருந்துகளைக் கொடுத்து, விடுவிக்க, நடக்கத் தள்ளாடியவளைத் தாங்கிக் கொண்டான் ஆதிபன்.

மதிமைக்கு உடலில் அத்தனை சக்தியும் வடிந்து போன உணர்வு. தன்னைப் பற்றியவனின் பலத்தில் நடந்தவளை  வாகனத்தில் ஏற்றிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தவன், திரும்பி மதிமையைப் பார்த்தான்.

“உனக்குக் காய்ச்சல் இருக்கும் போது, ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தாய்?” என்று சற்று கோபத்துடன் கேட்க, சிரமப்பட்டு விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தவள்,

“என் அழைப்பை நீங்கள் ஏற்றிருந்தால், நான் ஏன் வெளியே வரப் போகிறேன். வரோதயனுக்கு என்ன ஆச்சோ.. என்கிற கலக்கத்தில்…” என்றவளுக்கு அப்போதுதான் வரோதயனின் நினைவே வந்தது. பரபரப்போடு அவனைப் பார்த்தவள்,

“வரோதயனுக்கு இப்போது எப்படி இருக்கிறது…? அவன் நலம்தானே…” என்று குரல் கம்மக் கேட்க, நிஜமாகவே ஆதிபனுக்கு அவளை நினைத்துப் பெரும் வியப்பு ஏற்பட்டது.

‘அங்கே அவளைக் காணாமல் மகன் காய்ச்சலில் இருக்க, இவளோ அவனைப் பிரிந்த வேதனையில் காய்ச்சலை வாங்கி வைத்திருக்கிறாளே. பெற்ற தாய் கூட இந்தளவு நெருக்கமாக இருக்கவில்லையே…!’ வியந்தாலும் காட்டிக் கொள்ளாமல்,

“யா… ஹீ இஸ் ஓக்கே… கொஞ்சம் உடல்…” என்று சொல்லிக்கொண்டு வந்தவன், சட்டென்று தன் வாயை மூடிக்கொண்டான்.

‘வேண்டாம், இப்போது வரோதயனுக்கு காய்ச்சல் என்று சொன்னால் பதறிப் போவாள். ஏற்கெனவே இவளுடைய உடல் நிலை அந்தளவு சரியாக இல்லை. இதில் மேலும் பாரத்தைக் கொடுக்க வேண்டாம்.’ முடிவு செய்தவனாக,

“அவன்… நன்றாக… மிக நன்றாக இருக்கிறான்…” என்று கூற,

“என்னைத் தே…டினானா…?” என்றாள் ஏக்கமாக. சட்டென்று பொய் சொல்ல முடியவில்லை அவனால். அதே வேளை உண்மை சொல்லவும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

“சம் டைம்ஸ்…” என்று சமாளிக்க, ஏனோ இவள் முகம் வாடிப் போனது. ‘அவளைப் பெரிதாக வரோதயன் தேடவில்லையா?’ மீண்டும் கண்களில் கண்ணீர் பொங்கியது. கூடவே அடுத்து என்ன என்கிற கேள்வியும் எழுந்தது.

‘நிச்சயமாக அந்தக் கட்டடத்திற்கு அவளால் போக முடியாது. தவிர, சொந்தம் என்று சொல்ல யாருமில்லை. அப்படியிருக்கையில், யாரிடம் சென்று அடைக்கலம் கேட்பது? குறைந்தது விடியும் வரையாவது எங்காவது தங்க வேண்டுமே.’  கலங்கி நிற்கையில்…

“வட்ஸ் நெக்ஸ்ட்?” என்று கேட்டான் ஆதிபன். இவளோ கலக்கம் மாறாமல் அவனை ஏறிட்டு,

“ஆ…?” என்று புரியாமல் கேட்க

“அடுத்தது என்ன என்று கேட்டேன்…”

“தெரியவில்லையே…! அடுத்து எங்கே போவதென்று புரியவில்லை… என்னை எங்காவது ஒரு விடுதியில் விட்டு விடுவீர்களா?” என்று பரிதாபமாகக் கேட்க, ஆதிபன் ஒரு கணம் பதில் சொல்லாது அவளையே பார்த்தான்.

ஏனோ அவளுடைய நிலை இவன் மனதைக் கசக்கிப் பிழிய,

“உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நீ என்னோடு வரலாம். உனக்குப் பாதுகாப்பான இருப்பிடம் கிடைக்கும் வரை, என் கூடத் தங்கலாம். வரோதயனை அழைத்துச் செல்ல எப்படியும் ஒரு மாதத்திற்கு மேலாவது ஆகும். அந்த ஒரு மாதத்திற்குள் நீ தங்குவதற்கான இடத்தை ஏற்பாடு செய்து தருகிறேன்… என்ன சொல்கிறாய்?” என்று கேட்க, அந்த நேரத்திற்கு அதை விடச் சிறந்த யோசனை எதுவும் மதிமைக்குப் புலப்படவில்லை.

இத்தனை அக்கறையாகக் காப்பாற்றி வந்தவன், நிச்சயமாக அவளோடு தப்பாக நடக்க மாட்டான் என்பது உறுதியே. அதுவும் ஒரு மாதம் வரைக்கும் வரோதயனோடு பொழுதைக் கழிப்பதை நினைக்க மனம் அத்தனை வலியையும் மறந்தது மகிழ்ச்சியைத் தத்தெடுத்தது. அத்தனை நாட்களுக்கும் திகட்டத் திகட்ட அவனுடைய அன்பைப் பெறலாம்…’ மறுக்காது தலையை அசைத்தவள்,

“உங்கள் கூடவே வருகிறேன்…” என்றாள் பெரும் நிம்மதியோடு.

அடுத்து அவளை அழைத்துக்கொண்டு சபேசனின் வீட்டை வந்தடைந்த போது, நேரம் இரவு இரண்டு மணியையும் கடந்துவிட்டிருந்தது.

வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு, மதிமையைத் திரும்பிப் பார்த்தான். வலிக்குப் போட்ட மருந்து அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டிருந்தது.

பாவம் அன்றைய நாள் இத்தனை பெரிய ஆபத்தைச் சந்திப்போம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டாள். பரிதாபத்தோடு, அவளை அழைத்துப் பார்த்தான். ம்கூம் அசைவில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தாள் மதிமை.

இப்போது அவளுடைய தோள்களைத் தொட்டு மெதுவாக அசைத்தவன், “மதிமை…” என்றான். சற்றும் அசைந்தாளில்லை. உறங்கிய விழிகள் விழிக்கவில்லை. மீண்டும் அவளை எழுப்பிப் பார்த்தான்.   கன்னத்தையும் தட்டிப் பார்த்தான். அவள் எழும்புவதாக இல்லை.

சலிப்புடன் தலையைப் பின்னால் சரித்து நிமிர்த்தியவன், “யா… குட்…” என்று முணுமுணுத்தவாறே தன் பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்தவன், கதவை அடித்துச் சாற்றிவிட்டு, மதிமையின் பக்கமாக வந்து கதவைத் திறந்தான்.

கதவில் தலைசாய்த்து உறங்கியிருந்ததால், அவன் வேகமாகக் கதவைத் திறந்ததால், அவளுடைய தலை அவன் பக்கமாகச் சரிய, சட்டென்று வலது உள்ளங்கையால் அவள் முகத்தைத் தாங்கிக்கொண்டான், ஆதிபன்.

உள்ளங்கரத்தில் முளைத்த செந்தாமரையாக அவளுடைய தலை விழுந்து கிடந்தவளைப் பக்குவமாகப் பற்றிச் சரியாக அமர வைத்தவன், அவளுடைய உறக்கத்தைக் கலைக்காதவாறு அவள் பக்கமாகக் குனிந்து அவள் அணிந்திருந்த  இருக்கைப் பட்டியைக் கழற்றிவிட்டு, மிகக் கவனமாக அவளுடைய கால்களுக்கும் தலைக்கிடையேயும் கரங்களை எடுத்துச் சென்று கைகளில் ஏந்த, அவனுடைய கரங்களில் அவிழ்ந்த கொடியாய் வீழ்ந்து கிடந்தாள் மதிமை.

பஞ்சுப் பொதியெனக் கிடந்தவளை ஏந்தியவாறு காலாலேயே கதவை சாத்திவிட்டு, சபேசனின் வீட்டை நோக்கிச் செல்ல, கதவு வேகமாகத் திறந்தது.

அதுவரை தூக்கம் வராமல் மொட்டு மொட்டென்று அமர்ந்திருந்த சபேசன் வண்டிச் சத்தம் கேட்டதும், நிம்மதி மூச்சொன்றை விட்டவனாக, வேகமாகச் சென்று கதவைத் திறக்க, அங்கே ஆதிபன் மதிமையைக் கரங்களில் ஏந்தியவாறு நின்றிருந்தான்.

“டேய், என்னடா அச்சு…? இஸ் ஷி ஓக்கே…?” என்றான் மெல்லிய பயத்தோடு.

“ஐ ஹோப் சோ… இவளுக்கும் காய்ச்சல்டா… அதற்காக மருந்து ஏற்றியிருக்கிறார்கள். கூடவே வலிக்காமலிருக்க மருந்து கொடுத்திருந்தார்கள். ஒரு வேளை அது உறக்கத்திற்குத் தள்ளி இருக்கலாம். சரி வழியை விடு.  முதலில் இவளைக் கட்டிலில் கிடத்த வேண்டும்.” என்றவாறு கிடு கிடு என படிகளில் ஏறி, விருந்தினர் அறையிலிருந்த கட்டிலில் மெதுவாகக் கிடத்தினான், ஆதிபன். கூடவே.. அவளை விட்டு விலகிய அவனுடைய தடித்த மேல்சட்டையை இழுத்து… எடுக்க இரத்தம் படிந்த கையில்லா பெனியன் அவனை யோசிக்க வைத்தது. கூடவே சபேசன் வரும் அரவம் கேட்க, சட்டென்று போர்வையை இழுத்து அவள் மீது போர்த்திவிட்டு நிமிர, அவன் பின்னால் வந்த சபேசன், வாடிய கொடிபோலிருந்த மதிமையை மெல்லிய வருத்தத்தோடு பார்த்துவிட்டு,

“ஏன்டா காயம் பலமோ?” என்றான். அதுவரை மதிமையையே வெறித்துக்கொண்டிருந்த ஆதிபன், திரும்பி நண்பனைப் பார்த்து,

“இல்லை நெற்றியில்தான் அடிபட்டிருக்கிறது. இரண்டு தையல் போட்டார்கள்…” என்றவன், நண்பனின் தோளில் தட்டி,

“வா சபேசா…. அவள் உறங்கட்டும். வெளியே போய் பேசலாம்.” என்றுவிட்டு மீண்டும் ஒரு முறை மதிமையை ஏறிட்டு விட்டுக் கதவை மெதுவாகச் சாற்றியவாறு வெளியேறும் போதே மெல்லிய குரலில் விடுபட்ட செய்திகளைப் பரிமாறினான் ஆதிபன்.

அதைக் கேட்ட சபேசன், “பாவமடா இந்தப் பெண். இந்த நான்கு நாட்களுக்குள் எதிர்பார்க்க முடியாத அதிர்ச்சிகள். சரி அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?”

“தெரியவில்லை. வரோதயன் முதலில் நலமாக வேண்டும். அவனுக்குக் கடவுச்சீட்டு வந்து சேரவேண்டும். அது வரைக்கும் இந்தப் பெண்ணின் உதவி எனக்குத் தேவை. அதற்குப் பிறகு, நல்ல ஒரு இடமாகப் பார்த்துத் தங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம். நல்ல வேலை கிடைக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். என்ன சொன்னாலும், வரோதயனைக் கடந்த நான்கு வருடங்களாக வளர்த்தவள் அவள். அந்த நன்றிக்கடன் எனக்கு இருக்கிறது….” என்றவன் சோர்வோடு விழிகளை அழுந்தத் துடைத்துவிட்டுக் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் நேரத்தைப்  பார்தத்தான்.

இரண்டு முப்பது. உள்ளங்கைகளால் முகத்தைப் பரபரவென்று தேய்த்து விட்டவன்,

“நேரமாகிவிட்டது சபேசா. எனக்காக இத்தனை நேரம் நீயும் விழித்திருக்கிறாய். சரி போ…! போய்த் தூங்கு. நானும் கொஞ்சம் கண்ணயர பார்க்கிறேன்.” என்று அனுப்பிவிட்டு,  சோர்வுடன் தன் மகன் படுத்திருந்த அறையை நோக்கிச் சென்றான். அவனும் நல்ல உறக்கத்திலிருக்க, உதட்டில் சோர்வு மறைந்து இளம் புன்னகை ஒன்று மலர்ந்தது.

தன் மகனை  நெருங்கியவன்,  கலைந்த  முடியை உள்ளங்கையால் மேவி மேலே தள்ளியவாறு, தன் மகனின் அழகை முழு நிமிடம் பார்த்து ரசித்தான்.

அவன் நல்ல தந்தையாக இருப்பானா இல்லையா தெரியாது. ஆனால் நிச்சமாக மகன் விரும்பும் தந்தையாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

குனிந்து மகனின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர,

“அம்மா…!” என்றது குழந்தை. மகனின் முதுகை வருடிக் கொடுத்தவன், பின் நிமிர்ந்து அந்த அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்தவாறு வெளியே வந்து, தன் மகனின் அருகே விழுந்து படுத்தவன் அடுத்த விநாடி கண்ணயர, உலகம் சட்டென்று இருண்டு போனது.

 

 

What’s your Reaction?
+1
3
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!