அது அக்டோபர் மாதம் இருபத்தி நான்காம் திகதி. அப்போது அவளுக்கு வயது வெறும் பதினாறுதான்; இல்லை இல்லை… இன்னும் இரு மாதங்களில் பதினாறு வயது நிறையவிருந்தது. அவளுடைய வகுப்புத் தோழிகள் ஒவ்வொருவராக அந்தப் பதினாறு வயதைக் குதூகலமாகவும் விமரிசையாகவும் கொண்டாடிய காலம் அது. அப்போதுதான், இதே அபிநயாவின் பதினாறாவது பிறந்த நாளைப் பிரசித்தி பெற்ற பூங்காவொன்றில் வைத்து விமரிசையாகக் கொண்டாடியிருந்தார்கள்.
அந்தப் பிறந்தநாள் விழாவிற்கு விதரணையும் போயிருந்தாள். ‘இளங்கன்று பயமறியாது’ என்று சும்மாவா சொன்னார்கள்? எந்த அச்சமும் இன்றி, ஆண்-பெண் என்கிற பேதமின்றி அத்தனை தோழர்களும் ஒன்றாக அமர்ந்து குதூகலமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, அந்த இடமே இளையவர்களின் ஆட்டத்தில் அதிர்ந்துகொண்டு தானிருந்தது. இதில் பிறந்தநாள் நாயகி அபிநயாவும் உள்ளடக்கம்.
ஒரு வட்டமான குடுவையில் எழுதிப் போட்டிருந்த துண்டுச் சீட்டை எடுத்து, அதில் எழுதியிருப்பதைச் செய்ய வேண்டும்; இதுதான் விளையாட்டு. இதில் பிறந்தநாள் கண்ட அபிநயாவிற்கு வந்தது ஒரு பாடல் சீட்டு. அது ஓர் ஆங்கிலப் பாடல். சுத்தமாகப் பாட வராத அபிநயா, பெருங்குரல் எடுத்துப் பாடத் தொடங்கினாள். அவள் பாடலைக் கேட்டு நண்பர்கள் விழுந்து விழுந்து சிரிக்க, அது மேலும் அபிநயாவை உற்சாகப்படுத்தியது. இன்னும் சத்தமாகப் பாடிய அபிநயாவின் குரல் தாளாமல் காதுகளைப் பொத்திக்கொண்ட விதரணை, சிரித்த சிரிப்பில் கண்களில் நீர் கசிய, வயிறு நோகத் தொடங்கியது. வலித்த வயிற்றைப் பிடித்தவாறே சிரித்தவளின் காதுகளில் ஒரு குரல் மட்டும் தனித்து ஒலிக்க, அந்த ஒலி நோக்கித் தன்னையும் அறியாமல் திரும்பியவளின் விழிகளில் விழுந்தான் அவன்.
முதலில் ஏனோதானோ என்றுதான் பார்த்தாள். அதன் பின் விழிகளில் வியப்பும், ஒருவித ஆர்வமும், கூடவே குறுகுறுப்பும் சேர மீண்டும் அவனைப் பார்த்தாள்.
ஓர் அழகன்… ஆடம்பரமானவன்… அற்புதத் தோற்றத்தோடு அங்கிருந்த படிக்கட்டுகளில் தன் நண்பர்களோடு எதையோ பேசியவாறு ஏறி வந்து கொண்டிருந்தான்.
முதலில் அந்தப் பதினாறு வயதுப் பருவத்தைத்
தீண்டியது அவனுடைய உயரம்தான். நெடுநெடுவென்ற உயரத் தோற்றத்தில் அத்தனை பேரையும் குள்ளமாக்கியவாறு, ஒற்றைக் கையில் ஒரு பியர் பொத்தலை ஏந்தி, மறுகரத்தைப் பான்ட் பாக்கட்டிற்குள் நுழைத்து, எதையோ பேசிக் கொண்டே படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தான். வயது இருபத்து நான்கு அல்லது இருபத்தைந்து இருக்கலாம். செதுக்கி வைத்த கிரேக்கச் சிலைக்கு கோட் சூட் உடை அணிவித்தது போன்ற கம்பீரத்தோடு அவன் வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த கணத்திலேயே அவளுடைய இளமைப் பருவம் சிலிர்த்துப் போக, விழிகள் விரித்துப் பார்த்தவளுக்கு ஏனோ அவனிடமிருந்து தன் பார்வையை விலக்கவே முடிந்திருக்கவில்லை. அப்படிக் கம்பீரத்தோடு அந்த ஆணழகனைப் பார்க்கும் அந்தப் பதினாறு வயதுப் பருவத்திற்குப் படபடப்பு ஏற்பட்டதில் வியப்பில்லைதானே?
அதே நேரம் அவளுக்கு அருகாமையில் அமர்ந்து இருந்த தோழி ஒருத்தி, இவளுடைய தோளைத் தொட்டு ‘என்ன?’ என்று சைகையாலும் விழிகளாலும் கேட்க, திடுக்கிட்டு விழித்தவளுக்கு அப்போதுதான் உலகம் பழைய நிலைக்கு வந்த உணர்வு. கொஞ்ச நேரம் அவளுக்கு எதுவுமே புரியவில்லை. யாரோ புதிதாக ஓர் ஆணைக் கண்டதும், தன் நிலை கெட்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிய, அவளுக்குத் தன்னையே நம்ப முடியவில்லை.
இதுவரைக் காலமும் எந்த ஆணையும் அவள் இப்படி இரசித்துப் பார்த்ததில்லை. ஒருவேளை தாய் தந்தை கற்றுக்கொடுத்த ஒழுக்கமாக இருக்கலாம்; அல்லது அவளுடைய உணர்வுகளைத் தூண்டும் வகையில் இதுவரை எந்த ஆணும் அமைய வில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனால், பத்தோடு பதினொன்றாக ஆண்களைப் பார்த்து விட்டுச் செல்லும் அவளுடைய இதயத்தில், முதன் முறையாக ஓர் ஆண் சாமரம் வீசுகிறான். அவளைக் கவர்ந்திழுக்கிறான். இதுவரை அதிராத இதயத்தை அதிர வைக்கிறான். இது என்ன மாயம்? வியந்தவளாக, திரும்பவும் அந்த இளைஞனின் பக்கம் தன் கவனத்தைக் கொண்டு போனாள் விதரணை.
அவன் இன்னும் தன் நண்பர்களுடன்தான் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனுடைய பின்புறம்தான் இவள் பார்வைக்குத் தெரிந்தது. இன்னும் பான்ட் பாக்கட்டிற்குள் நுழைத்து இருந்த கரத்தை அவன் விலக்கவில்லை. சற்றுக் கால்களை அகட்டி இலகுவாக நின்றவாறு, நண்பன் சொன்னதைக் கேட்டு தலையைப் பின்னால் சரித்துச் சிரித்தவனின் அந்தக் கம்பீரத்தை என்னவென்று சொல்வது? அம்மாடி! எத்தனை அகன்ற தோள்கள் அவனுக்கு! அதுவும் அவன் நின்றிருந்த விதமும் அவனது உடல் அசைவும், அவளுடைய பெண்மையில் ‘சலனம்’ என்கிற வித்தை முதன் முதலாக விதைக்க, ‘உணர்ச்சி’ என்கிற கரு மெதுவாகத் துளிர்விடத் தொடங்கியது.
விளைவு, அவன் செல்லும் இடமெல்லாம் இவளுடைய கவனம் செல்லத் தொடங்கியது. அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் இதயம் இரசிக்கத் தொடங்கியது. அதைத் தவிர வேறு எதுவுமே அவள் கருத்தில் பதியவில்லை. இவ்வளவு ஏன் சற்றுத் தள்ளி நின்று தொண்டை கிழியக் கத்திய அபிநயா கூட அவள் கருத்தில் பதியவில்லை. இனிப்புப் பண்டத்தைக் கண்டதும் மொய்க்கும் தேனியாக, அவன் பின்னே தன் கருவிழிகளைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.
அதுவரை மாரித் தவளை போலக் கத்திக் கொண்டிருந்த அபிநயா, போனால் போகிறது என்று உலக நன்மைக்காகத் தன் பாடலை நிறைவு செய்து விட்டுப் பெருமையோடு தன் தோழர்களைப் பார்த்துக் குனிந்து வணக்கம் சொல்ல, அவளுடைய பாடலை வேறு வழியில்லாமல் கேட்டுக்கொண்டிருந்த நட்பு வட்டம், கூச்சலிட்டுக் கத்திக் கைதட்டி வாழ்த்த திடுக்கிட்டு சுய நினைவுக்க வந்தாள் விதரணை.
கைதட்டி ஆரவாரம் செய்த சத்தத்தில், திரும்பிப் பார்த்தாள். அபிநயா பாடலை நிறைவு செய்தது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. இதுகூடத் தெரியாமலா அவனைப் பார்த்துக்கொண்டிருந்தோம்? வியந்துதான் போனாள் அந்தப் பருவப் பாவை.
அந்தப் பெரிய சத்தத்திலும் பலத்த கைதட்டல் ஓசையிலும் அங்கிருந்த விருந்தினர்களின் கவனம் இவர்களின் பக்கம் திரும்ப, அந்த உயர்ந்த இளைஞனும் இவர்களின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் திரும்பிப் பார்த்ததைக் கண்டு கொண்ட விதரணையின் இதயத் துடிப்பின் வேகம் பலமடங்காகிப் போனதை என்னவென்று சொல்ல? அதே நேரம் அவனையே அவள் இமைக்காமல் பார்த்திருந்ததில், அவனுக்குள் ஒருவித குறுகுறுப்பு வந்திருக்கவேண்டும், சரியாக இவள் திசைக்குத் தன் விழிகளைத் திருப்பப் பதறிப்போனாள் விதரணை.
ஐயோ.. நம் பக்கம் பார்க்கிறானே… எங்கே தன்னைக் கண்டுகொள்வானோ என்கிற அச்சத்தில் தன் பார்வையை அவள் அவசரமாக விலக்கிக் கொண்டாலும், தன் புதிய உணர்வுக்கு அர்த்தம் புரியாமல் குழம்பித்தான் போனாள் அவள். கவனம் ஒரு நிலையில் இல்லாமல் சிதறியது. மீண்டும் மீண்டும் ‘அவனைப் பாரேன்’ என்று மனது நச்சரித்தது. இது என்ன விந்தை! ஓர் ஆண்மகனை அவள் மனம் தேடுகிறதே! அதுவும் இந்த வயதில்.
விதரணை குழம்பிக்கொண்டிருக்கும் போதே, இவர்களின் இந்தக் களியாட்டத்தைத் தொலைவி இருந்து பார்த்து இரசித்துக் கொண்டிருந்த அபிநயாவின் தந்தை ஆனந்தகுமாரும், தாய் வசந்தாவும் கேக் வெட்டுவதற்கான நேரம் நெருங்குவதை உணர்ந்தனர். இனி இவர்களின் விளையாட்டுப் போதும் என்று எண்ணியவர்களாக இளையவர்களை நோக்கி வந்தார்கள்.
“காய்ஸ்… கேக் வெட்டும் நேரம் வந்துவிட்டது! இனி உங்கள் விளையாட்டைப் பிறகு தொடருங்கள்” என்று கூறித் தன் மகளை அழைக்க, அபிநயா துள்ளிக்கொண்டு தந்தையின் கரங்களில் வந்து விழுந்தாள். அதை அத்தனை பேரும் இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க, விதரணை மட்டும் மெல்லத் தலையைத் திருப்பி அந்த உயர்ந்த மனிதனைத் தேடினாள். அது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை; வந்தவர்களில் அவன் மட்டும்தான் தனித்துத் தெரிந்தான்.
இப்போதும் அவன் தன் வயதை ஒத்தவர்களோடு நின்று பேசியவாறு, இங்கே நடக்கும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். பேசியவனின் விழிகள் எதேச்சையாக இவள் பக்கம் திரும்ப, பதறியவளாகத் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டவளுக்கு நெஞ்சம் ஏகத்திற்கும் அதிர்ந்தது.
‘ஐயோ…! எனக்கு என்னதான் ஆகிவிட்டது? நான் ஏன் இப்படி உணர்கிறேன்? எதற்கு இப்படிக் வியர்த்துக்கொட்டுகிறது?’ – தவித்தவளின் கரத்தை மயூரதி ஓடிவந்து பற்றிக்கொண்டாள். திடுக்கிட்டுச் சுயம் பெற்றவள் ‘என்ன?’ என்பது போலப் பார்க்க,
“ஏய்… அங்கே கேக் வெட்டப் போகிறார்கள்! நீ இங்கே தனியே இருந்து என்ன செய்கிறாய்?” என்று கோபமாகக் கேட்க, அப்போதுதான் சூழ்நிலை முழுதாக உறைத்தது அவளுக்கு.
மானசீகமாகத் தன் தலையைத் தட்டியவள், தன் தோழிக்குப் பின்னால் விடுவிடுவென்று நடந்தாள். நடக்கும்போது அந்த உயர்ந்த மனிதனைக் கடந்து செல்ல வேண்டியிருக்க, ஏனோ இவளுக்குள் இன்னது என்று பிரித்தறிய முடியாத புதுவித மாற்றம் ஏற்பட்டது. அடிவயிற்றில் தோன்றிய உருவமில்லாப் பந்தொன்று மேலெழுந்து, அடிநெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது போன்ற உணர்வு! அது வலிக்கவில்லை; மாறாக அந்த உணர்வு ஒருவித சுகமாக, சொல்லப்போனால் ஒருவித போதையாக அவளை ஆக்கிரமிக்க, காரணமின்றியே தேகம் சிலிர்த்தது. இதமான சிலிர்ப்பு அது.
அந்த நேரம் பார்த்து, இவளைக் கடந்து சென்ற ஒரு பெண்மணி அவசரத்தில் மோதிவிட, அந்தப் படபடப்பில் தடுமாறி நின்றிருந்தவள் சமநிலை தவறிச் சுழன்று அவன் மீதே விழுந்தாள். தன் மீது பூங்கொத்தாய் விழுந்தவளைக் கண்டு பதறி, மதுபானம் ஏந்தாத மறுகரத்தால் அவள் மெல்லிடையைப் பற்றி அணைத்துப் பிடித்துக் கொண்டான் அந்த ஆண்மகன்.
விதரணையால் அதை நம்பவே முடியவில்லை. இரசித்துப் பார்த்த ஆண்மகனின் அணைப்பில் அவள்! அதுவும் அவளது செழுமையான தேகம், அவனது கடிய தேகத்தோடு மோதி நிற்க, அவனது பலமிக்க கரங்கள் இவள் இடையை அழுந்திப் பிடித்திருந்தன. அவள் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்றவாறு முழங்கால் வரை நீண்ட, வலைத் துணியாலான ‘ஃபிரில்’ வைத்த இளஞ்சிவப்பு ஆடையைத் தான் அணிந்திருந்தாள். அந்த ஆடையையும் மீறி அவனுடைய ஆண்கரத்தின் சூடு இடையைத் தழுவ, அந்தத் தருணம் மொத்தமாக அவனிடம் தொலைந்துதான் போனாள் அந்தப் பருவ மங்கை.
அவனிடம் தன்னைத் தொலைத்தவளாக, அந்தக் கம்பீர ஆண்மகனைத் தன் விழிகளால் தரிசித்த விதரணைக்கு மூச்சே நின்றுவிட்ட உணர்வு! சற்றுத் தூரத்தில் நின்று அவனைப் பார்த்து மயங்கியவள், இப்போது தேகம் உரச நிற்கிறாள். இதை என்னவென்று சொல்வது? ஒருவித படபடப்போடு அண்ணாந்து பார்த்தாள். ஆம், அண்ணாந்துதான் பார்க்கிறாள்! அணிந்திருந்த ஆடைக்குப் பொருத்தமாக மூன்று அங்குல உயரமுள்ள வெண்ணிறப் பாதணி அணிந்திருந்தாள்; ஆனாலும் அவள் தலை அவன் மேல்மார்பைத் தாண்டி உயரவேயில்லை.
அந்த ஆண்மகனின் திடகாத்திரத்தையும், இறுக்கத்தையும், ஆளுமையையும், அவன் இறுகிய பிடியையும் உணர்ந்துகொண்டவளுக்கு, வாழ்வில் முதன்முறையாக ஒரு பாதுகாப்பு அரணுக்குள் அடைக்கலமான உணர்வு ஏற்பட்டது. இதுவரை உணராத புதுவித உணர்ச்சிகளை அவள் தேகம் அவளுக்குப் புரியவைக்க முயன்றது. அதுவரை மலாத பெண்மை முதன் முறையாக மலர்ந்து மணம் வீசியது. அந்த உணர்ச்சி கொடுத்த தித்திப்பில் விழிகள் மின்ன, அவனையே குறுகுறுவென்று பார்த்தாள் விதரணை. அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
ஒட்ட வெட்டிய அடர்குழலும், கூர்மையான – அதே நேரம் எதிராளியை ஊடுருவும் விழிகளும், அதற்குப் பொருத்தமாக அடர்ந்த இமைகளும், செதுக்கி வைத்த நாசியும், சற்றுக் கடினப்பட்ட உதடுகளும், மெல்லியதாக இருந்தாலும் இறுகியிருந்த உடலும் என்று ஆணுக்கு இலக்கணமாக நின்றிருந்தவனைக் கண்டவளுக்கு, எப்படித்தான் சுயமாக மூச்செடுக்க முடியும்?
விழுந்த வேகத்தில் அவனுடைய ‘சூட்’டின் கழுத்துப் பட்டியைப் பற்றியிருந்த அவளது கரம், அந்த ஆண் தேகத்தின் சூட்டை உணர்ந்து அவளுக்குக் கடத்தியவாறு தளர்ந்து போனது. தன்னை மறந்து அந்த ஆண்மகனின் முகத்தையே இமைக்காமல் அவள் பார்த்திருக்க, அவனோ அவள் முகத்தை ஒரு நிமிடத்திற்கும் மேலாகப் பார்த்துவிட்டு,
“ஆர் யூ ஓகே… பேபி?” என்றவன் மறு கணம் தயங்கி, “கேர்ள்…?” என்றான்.
அவன் அவளை முதலில் ஒரு சிறுமியாகத்தான் நினைத்திருந்தான் போல. மறு கணம், அவளது அண்மையில் தெரிந்த செழித்த தேகத்தையும் புரிந்து கொண்டவனாகத் தயங்கியவாறே, “…கேர்ள்!” என்றான் கிசுகிசுப்பாக.
அது வரை அவளை ஒரு குழந்தையாகப் பார்த்தவனின் விழிகளில், இப்போது ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கான அந்த மெல்லிய மாற்றம் மின்னி மறைந்தது. அவனது அந்தத் தயக்கமும், திருத்தப் பட்ட அந்த விளிப்பும் விதரணையைக் கிறங்கடிக்க, அதுவே அவளுக்குப் போதையேற்றப் போதுமாக இருந்தது.
அவளோ அவனுடைய குரல் கேட்டு மலைத்துப் போய் நின்றிருந்தாள். ‘அம்மாடி… அந்தக் குரலில் தான் எத்தனை ஆண்மை நிரம்பி வழிகிறது! வெறும் மூன்று சொற்கள்தான்; ஆனால் அதில் பொதிந்திருந்த கம்பீரத்தில் அவள் உள்ளம் சிலிர்த்துப் போக, பதில் சொல்லவும் மறந்தவளாக அவனையே பார்த்திருந்தாள் அந்தப் பேதை.
இப்போது அவள் பெண்மையின் செழிப்புகள் அவனைச் சற்றத் தடுமாறச் செய்ததோ? இல்லை சங்கடத்தைக் கொடுத்ததோ? மெதுவாக அவளைத் தன்னிடம் அவன் பிரிக்க முயல்கையில், அவளோ அந்த எண்ணமேயில்லாமல் அவனைத்தான் வெட்கம் கெட்டுப் பார்த்து நின்றிருந்தாள்.
“ஹே… யு ஓகே…” இன்னும் விலகாது தன்னிடம் ஒட்டியிருந்தவளைக் கண்டு புருவங்கள் சுருக்கி சற்று அழுத்தமாக அவன் கேட்க, அதுவரை ஒருவித மாயையில் மயங்கிக் கிடந்தவளுக்கு அப்போதுதான் நிதர்சனமே புரிந்தது. பதறிவிட்டாள் விதரணை.
‘ஐயோ! அவளுக்கு என்னதான் ஆயிற்று? இவனைப் பார்த்த நொடியிலிருந்து அவளால் எதையும் தெளிவாகச் சிந்திக்கக் கூட முடிய வில்லையே! ஏதோ போதை உட்கொண்டவள் போல மயங்கிக் கிடக்கிறாளே…’ – தடுமாறியவள், மறுகணம் பதறி அவனிடமிருந்து விலகி நின்றாள்.
“சா… சாரி… அது… யாரோ… தள்ளி… தள்ளி விட்டது போல…” – என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் பிதற்ற, தன்னையும் மறந்து கொஞ்சம் கொஞ்சமாய் உதடுகள் பிளந்து சிரித்தான் அவன். “ஹே… இட்ஸ் ஓகே கேர்ள்…” என்றான் இதமாக.
மீண்டும் தலைகுப்புற அவன் காலில் விழுந்து விட்டாள் விதரணை. அந்தச் சிரிப்பு… அது அவளது இதயத்தின் அடிநுனி வரை எதையோ சுண்டி இழுத்தது. மீண்டும் அந்தச் சிரிப்பைப் பார்க்கும் ஆசை அவளுக்குள் பிறந்தது. அதையே அவனிடம் சொல்ல முயன்ற விநாடி, அவளை மீட்க வந்து நின்றாள் மயூரதி.
“ஏய்… இங்கே என்ன செய்கிறாய்? நீ என் பின்னால் வருகிறாய் என்று நினைத்து என் பாட்டில் போய்விட்டேன். வாடி… அங்கே அபி கேக் வெட்டத் தயாராகிவிட்டாள்!” – மயூரதி அழைக்க, அதுகூட உணராமல் ஒரு மாய வலைக்குள் விழுந்த உணர்வில் அந்த மனிதனை மீண்டும் தன்னை மறந்து பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் தான் அவன் மீது விழுந்ததும், அவன் தன்னை அணைத்துப் பிடித்ததும் அந்த மரமண்டைக்குப் புரிந்தது. அவசரமாக இமை தட்டி விழித்தவள், “சா… சாரி…” என்றாள் மீண்டும் பிதற்றலாக. இப்போது அவன் பற்கள் தெரியவே சிரித்தான்.
“எத்தனை முறை சாரி சொல்லப் போகிறாய்? ம்…” – அவன் கேட்க, மீண்டும் அந்தச் சிரிப்பில் தன்னை மறந்துதான் போனாள். அதற்கு மேல் முட்டாள்தனமாக அவள் எதையும் செய்வதற்குள், அவளை நெருங்கி வந்த மயூரதி,
“ஏய்… வந்து தொலை!” என்றவாறு தோழியை இழுத்துக்கொண்டு சென்றாள். இவளோ தோழி இழுத்த இழுப்புக்குச் சென்றவாறே, அவனைத்தான் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்றாள். அவனும் சற்று நேரம் அவளைத்தான் பார்த்து விட்டு, மீண்டும் தன் நண்பர்களிடம் கவனத்தைச் செலுத்தினான்.
அதன்பின் பிறந்தநாள் கேக் வெட்டி, ஆளாளுக்கு ஊட்டி, அத்தனை பேரும் ஒன்றாக நின்று விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுத்து என நேரம் கலகலவென்று பறந்தது. பிறகு பரிசுகள் என ஆளாளுக்கு எதையெதையோ கொடுக்க, கடைசியாக ஒரு தம்பதி அபிநயாவை நோக்கி வந்தார்கள். வந்தவர்கள் சற்றுத் தள்ளி நின்றிருந்த அந்த உயர்ந்த மனிதனைப் பார்த்து,
“தம்பி… ஆதிபன்!” என்று அழைக்க, அதுவரை நண்பர்களோடு சுவாரசியமாகப் பேசிக்கொண்டு இருந்தவன் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண்மணி அவனை ‘வா’ என்று சைகை செய்ய, நண்பர்களிடம் விடைபெற்றுச் சீரான நடையோடு வந்தான் அவன்.
வந்தவன் அங்கே அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த விதரணையைக் கடந்து செல்ல, அவன் கடந்தபோது வீசிய வாசனைத் திரவியத்தையும் மீறி, அவனுக்கே உரித்தான ஆண்மையின் வாசனை அவளைத் தாக்க, அவளையும் மீறி உடல் சிலிர்த்துப் போனது. ‘இது என்ன புதிதாய் ஏதேதோ உணர்கிறோமே!’ – குழம்பியவளின் பார்வை அவனை விட்டு விலகுவதாக இல்லை.
“ஓ மை காட்! என்ன இவன் இத்தனை உயரமாக இருக்கிறான்? உடலைப் பாரேன்… செம கம்பீரமாக இருக்கிறான்!” – பின்னால் நின்றிருந்த தோழி ஒருத்தி வாய் பிளக்க, ஏனோ விதரணையின் இதயத்திற்குள் சுள் என்ற முள்ளுக் குத்திய உணர்வு. புதிதாய் எழுந்த கோபத்தில், திரும்பிப் பார்க்க, அவளுடைய அத்தனை பெண் தோழிகளும் அவனைத்தான் ஒருவித ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருத்தி,
“ஆமாம்பா… நான் அப்போதிலிருந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். செமையாக இருக்கிறான் அல்லவா!” என்று சொல்ல, இன்னொரு தோழியோ லிட்டர் கணக்கில் அசடு வழிய அவனைத்தனர் பார்த்திருந்தாள்.
அதிர்ந்தாள் விதரணை. ஆக, அவள் மட்டும் அவனை இரசிக்கவில்லை; அத்தனை பெண்களும் இரசித்திருக்கிறார்கள். ஏனோ அது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. உதடுகளைச் சுழித்தவள்,
“ஏய்… அவனை ஏன் காணாததைக் கண்டது போலப் பார்க்கிறீர்கள்? அவர்… அந்த… அந்த அளவுக்கெல்லாம் பெரிதாக அழகாக இல்லை! பேசாமல் என்ன நடக்கிறது என்று பாருங்கள்…” எரிச்சலுடன் சொல்லிவிட்டு, பின்னால் நின்ற தோழிகளின் பார்வையை மறைத்தவாறு நிற்க முயன்றாள் விதரணை.
“ப்ச்.. எதுக்கடி பாதையை மறைக்கிறாய்? தள்ளி நில்லேன்…” என ஒருத்தி அவளைத் தள்ளினாள். அவளுக்கு அருகே இருந்தவளோ, இப்போது தன் பார்வைக்கு அவன் மறைந்து போக, அவளும் விதரணையைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். இப்படியே ஆளாளுக்கு அவளைத் தள்ளிவிட, கடைசியாக அவள் பின்னால் போய் நின்றாள். அவளின் பார்வையை மற்றவர்கள் முழுதாக மறைத்துவிட, அந்த நெடியவனை அவளால் பார்க்கவே முடியவில்லை.
‘இது என்ன தலையெழுத்து!’ – கோபமும் எரிச்சலும் வர, கிடைத்த இடைவெளிக்கூடாக அவனைப் பார்க்க முயன்று தோற்றுப்போனாள். அவர்கள் அபிநயாவுக்குக் கேக் ஊட்டிப் பரிசு கொடுத்து விலகிச் சென்ற பின்னர்தான், விதரணையின் விழிக்குத் தெளிவான காட்சி உதயமானது.
அதற்குள் அவனைக் காணவில்லை! ‘எங்கே போனான்?’ என அங்கும் இங்கும் தேடிய நேரம், நட்புப் பட்டாளம் இவளையும் இழுத்துச் சென்று அபிநயாவின் அருகே வந்து நின்றது. இவள் விழிகளோ அவனைத்தான் தேடின. சற்றுத் தொலைவில் மீண்டும் தன் நண்பர்களோடு நின்று, விட்டுப்போன கதையைத் தொடங்கியிருந்தான் அவன்.
“ஏய்… யார் அந்த நெடுநெடு உயரமான பையன்? அத்தனை கம்பீரமாக இருக்கிறானே! அப்படியே ஹாலிவுட் நடிகர்கள் போல இருக்கிறான்” என்று ஜெயந்தி ஜொள்ளு விட, அவளைப் பார்த்து முறைத்தாள் அபிநயா.
“ஏய்… என் அண்ணா மீது கண் வைக்காதீர்கள்… பிய்த்து விடுவேன்!” என்று கோபமாகச் சொல்ல, அத்தனை பேரின் விழிகளிலும் சுவாரசியம் மலர்ந்தது.
“அண்ணாவா?!” – எல்லோரும் வாயைப் பிளந்தனர்.
“அண்ணா என்றால் சொந்த அண்ணா இல்லை. அவருடைய அப்பா வித்யாதர், என் அப்பாவுடைய நெருங்கிய நண்பர். அவருடைய அம்மா மதிவதனி, என் அம்மாவுக்கு நல்ல தோழி. என்னைவிட எட்டு வயது பெரியவர்…” என்று அபிநயா சொல்ல, ஆசுவாச மூச்சுவிட்டாள் மயூரதி.
“நல்ல வேளை நீ அவரை அண்ணா என்கிறாய்” என்றாள் மயூரதி தன்னை மறந்து.
அபிநயாவோ புரியாமல் தன் தோழியைப் பார்க்க, “ஹி… ஹி… அப்படி இல்லை அபிமா… உனக்கு அண்ணா என்றால், எனக்கு மாமனோ மச்சானோ என்கிற முறை வரும்…” என்று மயூரதி இழுக்க, தன் தோழியைத் திகைப்போடு பார்த்தாள் அபிநயா.
“என்னடி உளறுகிறாய்? எனக்கு அண்ணா என்றால் உனக்கு எப்படி மாமன், மச்சான் உறவாக இருக்கும்? இத்தனைக்கும் நீ எனக்கு உறவு கூட இல்லை…” என்று அபிநயா சொல்ல, அசடு வழிந்த மயூரதி,
“அதனால என்ன… இனி உறவாகிவிட்டால் போச்சு!” என்றாள் அப்படியும் இப்படியும் நெளிந்தவாறு.
இப்போதுதான் அபிநயாவுக்குத் தோழியின் எண்ணம் புரிந்தது. அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தவள்,
“ஏய்… லூசாடி நீ? இது மட்டும் ஆதிபன் அண்ணாவின் காதில் விழுந்தது… நீ அவ்வளவு தான்!” என்றாள் புன்னகை மாறாமல்.
“ஏன்? தெரிந்தால் என்ன… உன் அண்ணன் தலையைப் பிடுங்கிவிடுவாரா?” – இன்னொரு தோழி கேட்க, மேலும் சிரித்தவள், “ம்… அப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!” என்றாள் மெல்லிய நகைப்புடன்.
பின் அத்தனை பேரையும் பார்த்து, “இதோ பாருங்கள் பெண்களா… லூசுத்தனமாக எதையாவது என் அண்ணாவிடம் போய் முயற்சி செய்து பார்த்து விடாதீர்கள். அவர் ஒரு மாதிரி…” என்றாள் விழிகளை உருட்டி.
“ஒரு மாதிரி என்றால்? தலையில் ஏதாவது நட் கழன்றுவிட்டதா?” – எப்போதும் போலக் குறும்புத் தனத்தோடு மயூரதி கேட்க, ஓங்கி அவளுடைய நடுமண்டையில் ஒரு கொட்டு வைத்தாள் அபிநயா.
“ஏய்… ஒரு மாதிரி என்றால் அதுவா அர்த்தம்? அவர் பெரியம்மா, பெரியப்பாவுக்கு ஒரே பையன். கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை என்பதால் அதிகம் யாருடனும் பேச மாட்டார். அதுமட்டுமில்லை, முன்கோபம் அதிகம் உள்ளவர்; சட்டென்று கோபப் படுவார். அத்தோடு, பிடிவாதத்திற்கு இலக்கணம் என்னவென்று அவரிடம்தான் தெரிந்துகொள்ள முடியும். இல்லையென்றால், பெரியப்பாவுக்குப் பிடித்த வணிகம் சார்ந்த பாடத்தைப் படிக்காமல், தனக்குப் பிடித்த சட்டமும் குற்றவியலும் சார்ந்த பாடத்தை எடுத்துப் படிப்பாரா?” எனக் கேட்க, அத்தனை பெண்களும் வாயைப் பிளந்தார்கள்.
“சட்டமும் குற்றவியல் சார்ந்த பாடமா? அப்போ அவருக்குச் சட்ட வல்லுநராகப் பிடிக்குமா?” – வியந்து கேட்டாள் விதரணை.
“இல்லை… அண்ணாவுக்குச் சின்ன வயதில் இருந்தே காவல்துறையில் சேர வேண்டும் என்று பயங்கர ஆசை. அதில்தான் நிறைய சாகசம் செய்ய முடியும் என்பது அவர் நம்பிக்கை. பெரியப்பாவோ அந்த ஆசையைத் தூக்கி குப்பையில் போட்டு விட்டுத் தன் வியாபாரத்தில் பங்கெடுக்கச் சொல்லி எவ்வளவோ கேட்டும் அண்ணா சம்மதிக்கவில்லை. பிடிவாதமாக விரும்பியதைத்தான் படிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்று படித்தார். அதுவும் பல்கலைக்கழகத்தில் முதற்தர மாணவனாகத் தேர்வு செய்யப்பட்டுத் தங்கப் பதக்கத்தோடு வெளியே வந்திருக்கிறார். இனி அதில் ‘மாஸ்டர்ஸ்’ செய்யப் போகிறாராம். கூடவே காவல்துறையிலும் பகுதிநேரமாக வேலை செய்யத் தொடங்கிவிட்டார்…” என்று அபிநயா கூறினாள்.
கனடிய காவல்துறையின் கருநீலச் சீருடைக்கும், நெஞ்சை நிமிர்த்திய அவன் கம்பீரத்திற்கும் உள்ள பொருத்தத்தை நினைத்துச் சிலிர்த்துப் போனாள் விதரணை. அவளுக்கு எப்போதும் கனடிய காவல் துறையினர் மீது அலாதி பிரியம் உண்டு. அவர்களின் சீருடையும், தொப்பையில்லாத இறுகிய உடலும், நிமிர்ந்து நிற்கும் பாங்கும் அவளை வியப்படையச் செய்யும் விஷயங்கள். இப்போது அவள் வியந்து பார்த்தவனும் காவல்துறையில் வேலை செய்யப் போகிறான் என்றால், அதை என்னவென்று சொல்வது? கற்பனையில் அவனைக் கருநீல உடையில் பார்த்து இரசித்தவளின் மொத்தக் கவனமும் இப்போது அவனிடம்தான் நிலைத்திருந்தது.
“ஏன் அபி… உன் அண்ணாவின் பெயர் ஆதிபனா?” தன்னை மறந்து கேட்க,
“ம்… அவருடைய முழுப்பெயர் ஏற்றமாதிபன்…” என்றாள் அபிநயா. அந்தப் பெயரில் கூட எத்தனை கம்பீரம்? வியக்காமல் இருக்க முடியவில்லை அவளால். ‘ஏற்றன்’ என்றால் உயர்ச்சி, புகழ், துணிவு, மேன்மை என்று பொருள். ‘ஆதிபன்’ என்றால் இறைவன். உயர்ச்சியும் புகழும் துணிவும் மேன்மையும் உறைவிடமாகக் கொண்ட இறைவன் என்று பொருள். விவேகமும் திறமையும் உள்ளவள் என்கிற பொருளில் வந்த அவளுடைய பெயருக்கு, அவனுடைய பெயர் எத்தனை பொருத்தமாக இருக்கிறது என அந்தப் பிஞ்சு மனது தாறுமாறாக யோசித்தது.
திரும்பத் திரும்ப அவளுடைய கவனம் அவனிடமே செல்ல, எப்படியாவது அவனோடு ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்று முயன்றவளால் ஏனோ அவனை நெருங்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு ஆளாளுக்கு அவனைச் சூழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பொறுமை இழந்தாலும் தன் முயற்சியைக் கை விடாமல் அவன் செல்லுமிடமெல்லாம் பார்த்திருந்தாள். ஒரு கட்டத்தில் ஏற்றமாதிபன் தோட்டத்தின் பக்கம் செல்வதைக் கண்டதும் இவளுடைய முகம் பளிச்சிட்டது.
அவசரமாகத் தோழிகளிடம் ‘இதோ வருகிறேன்’ என்று எதையோ உளறிவிட்டு அவனைத் தேடிச் செல்ல, அவன் யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
“ம்…”, “ம்கூம்…”, “ஓகே…”, “சூர்…”, “வை நாட்…” – இப்படியான ஒற்றைச் சொற்கள்தான் அவனுடைய அடி ஆழத்திலிருந்த குரலாய் வந்து விழுந்தன. அந்தக் குரலில் மொத்தமாய்ச் சிலிர்த்துப் போனாள் விதரணை.
அவன் சிந்தும் ஒவ்வொரு துளிச் சொற்களையும் தன்னை மறந்து கேட்டிருக்க, அவனோ கைப் பேசியில் பேசி முடித்துவிட்டுத் திரும்பினான். அங்கே விழிகளில் கனவு மின்ன அவனையே பார்த்திருந்தவளைக் கண்டதும், அவனுடைய உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று தவழ்ந்தது. இவள்தானே சற்று முன்பு தன் கைகளில் விழுந்து கிடந்தவள் என்கிற நினைவு எழ,
“ஹே… பேபிகேர்ள்… இங்கே என்ன செய்கிறாய்?” என்றான் அழகிய புன்னகையோடு.
அதுவரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த விதரணை, திடுக்கிட்டு விழித்துச் சுயம் பெற்றவளாகக் கொஞ்சம் அசடு வழிந்து,
“ஹாய்.. ஏற்றன்…” என்றாள் மென்மையாக. அவளுடைய அந்த மென்குரலும், தன் பெயரை அவள் சரியாகச் சொல்வதையும் கண்டு வியந்தவனுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது; அவள் சும்மா ஒன்றும் அங்கே நிற்கவில்லை, அவனிடம் பேசத்தான் வந்திருக்கிறாள் என்று.
தலையைச் சற்றுச் சரித்துப் பார்த்தவன், “உனக்கு என்னைத் தெரியுமா?” என்று கேட்டான் அழுத்தமாக.
“ம்… அபிநயா சொன்னாள்…” என்றவள் இப்போது அவனை நோக்கி வந்தாள்.
“ஓ…” என்றவன் சற்று நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கினான். ஆனால் அவளோ அவனையே இமைக்காமல் பார்க்க, கொஞ்சம் சங்கடம் கொண்டான் போல.
“உனக்கு என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்றான் அவளையே பார்த்தவாறு.
அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு விழித்தவள், தன்னை அவன் சரியாகக் கண்டுகொண்டானே என்பது புரியச் சற்றுத் தயங்கினாள். ஏதோ ஒரு தைரியத்தில் வந்துவிட்டாள்; வந்த பிறகு சொற்கள் வர மறுக்கின்றன. தயக்கத்தோடு தன் சட்டையின் ஓரத்தைக் கரங்களால் கசக்க, அதையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான் ஏற்றமாதிபன்.
அவளுடைய ஒவ்வொரு உடல் மொழியையும் அவன் புரிந்துகொண்டான் போல; இப்போது அவனுடைய புன்னகை மேலும் விரிந்தது. அந்தப் புன்னகையுடன் அவளை நெருங்கியவனின் மூச்சுக் காற்று இவளது முகத்தில் பட்டுத் தெறிக்க, விதரணை தவிப்போடும் படபடப்போடும் அவனைப் பார்த்தாள்.
என்னவென்றே தெரியவில்லை, அவன் நெருங்குகையில் இவளது பெண்மை தன் நிலை கெட்டுப் போகிறது. அனுபவமில்லாத அந்தப் புதுவித உணர்ச்சியிலிருந்து எப்படி வெளிவருவது என்று சத்தியமாக அவளுக்குத் தெரியவில்லை. இப்போது அவளை நோக்கிக் குனிந்தவன், தவித்துக் கிடந்த அவள் விழிகளை மாறி மாறிப் பார்த்தான். அந்த விழிகளில் கசியும் பொருளற்ற உணர்வுகளைக் கண்டுகொண்டவனாக,
“உன்னுடைய பெயர் என்ன?” என்றான் ஒருவித ஆராய்ச்சிப் பார்வையோடு.
அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு விழிகளைத் தாழ்த்தியவள்,
“வி… விதரணை….” என்றாள் சத்தம் வெளி வராத குரலில்.
“விதரணை… ம்…” என்று தனக்குள் சொல்லிப் பார்த்தான் போல. பின் அவளை அழுத்தமாகப் பார்த்து,
“என்ன… என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?” எனக் கேட்டான் அடுத்து. அவன் அப்படிக் கேட்டதும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் விதரணை. இப்படி நேரடியாகக் கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை? தன் அதிர்ச்சியை விழிகளில் தேக்கி அவனைப் பார்த்தாலும், அதை அவள் மறுக்கவில்லை.
நிச்சயமாக அவனைப் பிடித்துத்தான் இருக்கிறது; அவனோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அந்த ஆசையை ஏன் மூடி மறைக்க வேண்டும்? அவளுடைய ஒவ்வொரு உணர்வையும் அவன் தெளிவாகப் படித்தான் போல; இப்போது பற்கள் தெரியச் சிரித்தான் அந்த ஏற்றமாதிபன். ஏனோ அவனுக்கு அவள் மீது கோபம் வர மறுத்தது. கண் முன்னே சிறுமியாய் தெரியும் அவளுடைய பொருளற்ற ஆசைக்கு அவன் கொபப்பட்டு என்னதான் செய்யமுடியும்?
அவள் உயர்த்துக்கு ஏற்பக் குனிந்தவன், குறும்போடு அவளுடைய நாசியைத் தன் சுட்டு விரலால் தட்ட, அவன் விரல் பட்டதுதான் தாமதம்; அவளுடைய மொத்த உடலும் பரவசத்திற்கு ஆட்பட்டது. அந்தப் பரவசத்தோடு அவனை ஏறிட,
“உனக்கு இப்போது எத்தனை வயது?” என்றான்.
இவளோ தட்டுத்தடுமாறி, “ப… பதினா..” என்று சொல்ல வந்தவள், உடனே தொண்டையைச் செருமிக்கொண்டு, “பதினெட்டு…” என்றாள் அழுத்தமாக. பதினாறு என்றால் அவளைக் குழந்தையாகப் பார்ப்பான்; ‘இந்த வயதில் உனக்குக் காதல் கேட்கிறதா?’ என்று எள்ளி நகையாடுவான். எதற்கு வம்பு? அதனால் பொய்யாகப் பதினெட்டு என்று அவள் சொல்ல, அதைக் கேட்டவனின் புருவங்கள் சற்றுச் சுருங்கின.
“பதினெட்டா?… ம்.. ஆனால் உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே..” வியந்தவன், இப்போது நிமிர்ந்து நின்று தன் பான்ட் பையிற்குள் கரங்களை விட்டு, அவளுடைய உயரத்தை அளவிடுவது போலக் கீழும் மேலும் பார்த்தான்.
அவனுடைய பார்வை அவளைத் தலை முதல் கால் வரை அணு அணுவாகத் தரிசிக்க, அவனுடைய விழிகள் தன்னை வருடிச் செல்வதைக் கண்டு ஒருவித சங்கடத்துடன் நெளிந்தாள் அந்தப் பேதை. அந்தப் பதினாறு வயதுக்கே உண்டான நளினமும் எழிலும் அவன் பார்வையிலிருந்து இம்மியும் தப்ப வில்லை. பெண்மையின் இலக்கணங்களை ஒரு விநாடி ஏறிட்டவன், பின் அவளது விழிகளோடு தன் விழிகளைக் கலந்தான். இவளோ அவனுடைய பார்வையில் பெரும் படபடப்பு கொண்டவளாகத் தன் உதடுகளைக் கடித்தவாறு, தன் வலைத் துணியால் ஆன ஆடையின் ஓரத்தைக் கரங்களால் கசக்கிக் கொண்டு தலைகுனிய, அவளுடைய நிலையை முழுவதுமாகப் புரிந்துகொண்டான் ஏற்றமாதிபன்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லையே?” என்றவன், அவளை நோக்கிக் குனிந்து அந்தக் குழந்தை முகத்தை ஏறிட்டான். அவள் குழந்தையாகத் தான் அவனுக்குத் தெரிந்தாள். அதனால் முகம் கனிய, “என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்றான் கிசுகிசுப்பாக.
அவன் வெளிப்படையாகக் கேட்கும்போது எதற்காக மறைக்க வேண்டும் என்று முடிவு செய்தவளாக, படபடவென்று தலையை ஆட்டி ‘ஆம்’ என்றாள். அவள் தலையை ஆட்டிய விதத்தில் அவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது. இப்போது பற்கள் தெரியச் சிரித்தவன், தன் கரத்தை எடுத்து அவள் வலது கன்னத்தில் மெதுவாக வைத்தான்.
இவளோ அவனுடைய செயலில் கிறங்கிப் போனவளாக, நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட, அவனோ அவளுடைய கன்னத்தின் மென்மையை உணர்ந்துகொண்டவனாக, மெதுவாகப் பெருவிரலால் வருடிக் கொடுத்து,
“யூ லுக் சோ கியூட்… அண்ட் யங்” என்றான் இரசனையுடன். அந்த விழிகளில் என்ன கண்டானோ, பட்டும் படாமலும் அவளுடைய கன்னத்தைக் கிள்ளிவிட்டுத் தன் கரத்தை விலக்கிக்கொண்டு பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை நுழைத்தவாறு,
“லிசன் பேபி… உனக்கு என் மீதிருக்கும் ஆசை இயற்கையானது. அது அந்த வயதுக்கே உண்டான ஒரு ஈர்ப்பு. அதனால் உன் மனதில் தோன்றிய இந்த ஆசையைத் தீவிரமாக நினைத்து இதில் கவனம் செலுத்தாதே. இது தற்காலிகமானது. இன்னும் சில மாதங்களில் என்னை நீ முழுதாகவே மறந்து விடுவாய்… ஏன், இந்தப் பிறந்தநாள் விழா முடிந்ததும் கூட உனக்கு என்னை நினைவிருக்காது! அதனால், உன் நேரத்தை விரயமாக்காதே…” என அவன் சொல்ல, சற்றுக் கோபமாக அவனைப் பார்த்தாள் விதரணை.
“நான் உங்களை…” அவள் முடிக்கவில்லை; அவளுக்கு முன்பாகத் தன் கரத்தைத் தூக்கி அவள் பேச்சைத் தடுத்தான் ஏற்றமாதிபன்.
“இதோ பார்… எனக்கிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன். உன்னைப் போல நிறையப் பெண்களைச் சந்தித்துத்தான் கடந்தும் வந்திருக்கிறேன். நீ இன்னும் குழந்தை… நிச்சயமாகக் காதலிக்கும் வயது உனக்கு வரவில்லை. முதலில் படி… உன் சொந்தக் காலில் நில்… அதற்குப் பிறகு ஒரு ஆணைப் பார்த்து ஆசைப்படு; நிச்சயமாக அந்த ஆசை காதலாக மாறும்…” புன்னகையுடன் சொன்னவன், மென்மையாய் அவள் பட்டுக்கன்னத்தைத் தட்டி விட்டு விலகிச் செல்ல முயல, இவளோ நின்ற வாக்கில் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவன் சொன்னது அனைத்தும் அவன் மீது ஆசைப்பட்ட மனத்தைச் சாட்டையால் அடித்தது போல வலித்தது. அவளையும் மற்றப் பெண்கள் போல நினைத்துவிட்டானே! மற்றப் பெண்கள் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது; ஆனால் அவள் அப்படியில்லை. ஒன்றின் மீது ஆசை வைத்தால், அதை எக்காலத்திலும் மாற்றிக்கொள்ள மாட்டாள்.
ஆனால் அவன்? அவளைக் குழந்தையாகப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவன் மீது அவளுக்குத் தோன்றிய உணர்ச்சியைக் கொச்சைப்படுத்திவிட்டு அல்லவா போகிறான்! மனம் அடிபட்டுப் பொனது.
ஆனாலும் சென்றவனைப் பார்த்து, “ஒரு நிமிஷம் ஏற்றமாதிபன்…” என்றாள். அவனோ நின்று திரும்பிப் பார்த்தான். முன்பு முகத்தில் இருந்த கனிவும் புன்னகையும் இப்போது காணாமல் போயிருந்தன. அவள் மீண்டும் அவனைத் துரத்துவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்று அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிந்தது.
“நான் மற்றப் பெண்கள் போல அல்ல. ஒன்றின் மீது ஆசை வைத்தால், அதை எக்காலத்திலும் மாற்றிக்கொள்ள மாட்டேன்…” என்றாள் உறுதியாக. இப்போது அவன் முகத்தில் மெல்லிய சீற்றம். நாகரிகமாக மறுத்துவிட்ட பிறகும் திரும்பவும் அதிலேயே நின்றால் என்னதான் செய்வது? ‘சுர்’ என்று கோபம் வர, புன்னகை மறந்து அவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன்.
ஏற்றமாதிபன் ஒன்றும் அத்தனை பொறுமைசாலியில்லை. அவனுக்குச் சட்டென்று கோபம் வரும்; கோபம் எல்லை மீறும்போது கை நீட்டிவிடுவான். அவன் அப்படிச் செய்ததில் சில முறை பள்ளியில் பெரிய பிரச்சினைகள் வந்திருக்கின்றன. எப்படியோ பேசிச் சமாளித்து அவனை வேறு பள்ளியில் சேர்த்ததெல்லாம் நடந்த வரலாறு. அவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே காலையில் தியானம் செய்து தன்னை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்று, ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தான். ஆனால் அந்த வெற்றியை ஒரே நொடியில் இவள் உடைத்தெறிந்து விடுவாள் போல இருக்கிறதே!
பார்த்து முழுதாக இரண்டு மணி நேரம் கூட ஆகியிருக்காது; அதற்குள் அவன் பின்னால் வந்ததோடு மட்டுமில்லாமல், ஆசை என்று வேறு சொல்கிறாள்! அந்த ஆசை எதற்கானது என்று அவனுக்குப் புரியாதா என்ன? அந்த இளமைக்கு ஒரு தேடல் தேவைப்படுகிறது; அது முடியும் வரைதான் இவன் மீதான ஆசை இருக்கும். அது முடிந்ததும் அவன் மீதான குறைகளும் குற்றங்களும்தான் அவளுக்கு முதன்மையாகத் தெரியும். அதற்குப் பிறகு ‘ஒத்துவருவதில்லை’ என்று பிரிந்துவிடுவாள். எத்தனை பேரைப் பார்த்திருக்கிறான் அவன்! அதனால்தானே இந்தக் காதல் என்ற புதைகுழியில் இதுவரை அவன் விழவில்லை. காதல், திருமணம் எல்லாம் தான் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் என்பதில் மிகத் திடமாக இருந்தான் ஏற்றமாதிபன்.
அதைப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பெண் வேறு… எரிச்சலோடு நிமிர்ந்து பார்க்க, தான் ஆசைப்பட்டது நிறைவேறவில்லையே என்கிற கோபத்தில் நின்றிருந்தாள் அவள். இப்போது கூட அவளுடைய கோபம் அவனுக்கு அழகாகத்தான் தெரிந்தது. அதற்காக அவள் ஆசைப்பட்டதை ஏற்க முடியுமா என்ன? கொஞ்சம் வயது முதிர்ந்தவளாக இருந்திருந்தால் அவன் சொல்வதைப் புரிந்திருப்பாள். ஆனால் இவள்? நிச்சயமாக இவளுக்கு வயது பதினெட்டாக இருக்க வாய்ப்பில்லை; குறைந்தது பதினைந்து அல்லது பதினாறுதான் இருக்கும். இதற்குள் ஒருவன் மீது ஆசைப்படுகிறாள்! இதை என்னவென்று சொல்வது?
நறுக்கென்று நான்கு வார்த்தைகள் கேட்க ஆசையாகத்தான் இருந்தது; ஆனால் முடிய வில்லை. ஏனோ அவனுடைய விழிகளுக்கு அந்தப் பெண், பால்மணம் மாறாத குழந்தை போலத்தான் தோன்றினாள். அந்தக் குழந்தையை யார்தான் திட்டுவார்கள்? சிரமப்பட்டுத் தன் கடிய குணத்தை மறைத்தவனாக,
“ப்ச்… உனக்கு நான் சொல்வது புரிகிறதா இல்லையா? ஆசைப்படுவதற்கும் காதலிப்பதற்கும் ஏற்ற வயது உனக்கில்லை. முதலில் படித்துச் சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சியில் இறங்கு. அதுதான் உன்னைக் காப்பாற்றும்…” என்றான் அவன் இழுத்து வைத்த பொறுமையோடு.
அவனை முறைத்தவள், “யார் சொன்னார்கள் காதலிக்கும் வயதை நான் எட்டவில்லை என்று? அதுதான் எனக்குப் பதினெட்டு என்று சொன்னேனே!” – இளங்கன்று பயமறியாமல் துள்ளியது.
“பதினெட்டு வயது ஒன்றும் முதிர்ந்த வயதில்லை பெண்ணே! அதுவும் முதிர்ச்சியடையாத வயதுதான்” என்றான் இவன் தெளிவாக. இவளுக்குக் கோபம்தான் வந்தது.
“யார் சொன்னது பதினெட்டு வயது முதிர்ச்சி அடையாத வயது என்று? அது முதிர்ச்சியடைந்த வயது என்பதால்தான், தேர்தலுக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் பதினெட்டு வயதுடைய ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்கள்!” என்றாள் இவள் கோபமாக. அதைக் கேட்டுத் தலையைச் சரித்துப் பார்த்தவன்,
“கனடாவில் பெரும்பான்மையான மாகாணங்களில் பத்தொன்பது வயதுக்கு மேலேதான் மது அருந்த முடியும். அப்படிப் பார்த்தால், பதினெட்டு வயது என்பது இன்னும் ஒரு படி கீழேதானே?” என்றான் இவன் அடுத்து.
“ஒன்டாரியோவில் பதினாறு வயது ஆணோ பெண்ணோ பெற்றோரின் அனுமதியோடோ, அல்லது பாதுகாவலரின் அனுமதியோடோ சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம். பதினெட்டு வயது நிரம்பினால் தன்னிச்சையாகத் திருமணம் செய்ய முடியும். அப்படிப் பார்த்தால் எனக்குத் திருமண வயது ஆகிவிட்டது! ஒருவர் மீது ஆசைப்படுவது ஒன்றும் தப்பில்லை…” என்றாள் இவள் துடுக்காக.
அதைக் கேட்டு ஒரு கணம் அவன் பதில் சொல்ல முடியாமல் திணறித்தான் போனான். அவள் சொல்வது உண்மைதானே! பதினாறு, பதினேழு வயது ஆணோ பெண்ணோ, பெற்றோரின் அனுமதியோடு சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்டவர்கள் தங்களின் விருப்பப்படி யாருடைய அனுமதியுமின்றித் தன்னிச்சையாகத் திருமணம் செய்ய முடியும். கனடாவின் கூட்டாட்சிச் சட்டப்படி (திமீபீமீக்ஷீணீறீ லிணீஷ்), பதினாறு வயதில் ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்ள முடியும்; அதைச் சட்டம் தவறாக நினைக்காது. இவ்வளவு ஏன், பதினான்கு அல்லது பதினைந்து வயதில் கூடச் சில சட்ட விதிகளுக்கு அமையப் பாலியல் உறவு கொள்ள முடியும். அப்படியிருக்கும்போது, இந்த வயதில் ஒருவர் மீது ஆசை வைப்பதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒருவர் மீது ஆசை வைப்பது என்பது அவரவர் உரிமை; அதைக் குற்றம் என்று ஒதுக்கிவிட முடியாது.
பெருமூச்சுடன் அவளை ஏறிட்டவன், “சட்டத்தின் படி நீ சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் உணர்வின்படி அது பொருத்தமில்லாதது பெண்ணே! மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் என் கண்முன்னே நீ சிறுமியாகத் தெரிகிறாய். நிச்சயமாக உன்னை என்னால் வேறு மாதிரி கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது…” அவன் உறுதியாகச் சொல்ல, இப்போது அவனை நெருங்கி நின்றாள் விதரணை.
“அப்படியென்றால் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து… எனக்கு இருபதாகிவிடும்… அப்போது என்னை ஏற்றுக்கொள்வீர்களா?” – ஆர்வமும் எதிர்பார்ப்புமாகக் கேட்டாள் இவள்.
அதைக் கேட்டதும் இருந்த கோபமும் எரிச்சலும் மறந்து, சிரித்தான் அவன். “முதலில் படித்து உன் காலில் நில் பெண்ணே!” – அவன் சொல்லிவிட்டுத் திரும்ப, இரண்டெட்டில் அவனுக்கு முன்பாக வந்து நின்றாள் விதரணை.
“இல்லை… சொல்லுங்கள்! நீங்கள் சொன்னது போல நான் படித்துச் சொந்தக் காலில் நின்றால்… என்னை ஏற்றுக்கொள்வீர்களா?” – கூடவே பிறந்த பிடிவாதத்தோடு கேட்டாள் அவள்.
அதற்கு அவன் எதையோ சொல்ல வாயெடுத்தான். பின் என்ன நினைத்தானோ, “லிசன் பேபி…” – அவன் முடிக்கவில்லை, இவள் கோபமாக அவனைப் பார்த்தாள். “நான் ஒன்றும் குழந்தையில்லை!” என்றாள் சீறலாக.
“சரி… நீ குழந்தையல்ல…” – குறும்பாகச் சொன்னவன், இப்போது அவளை இரக்கத்துடன் பார்த்தான். “இதோ பார்மா… இப்பவும் என்னால் உன்னை வயது வந்த பெண்ணாகப் பார்க்கவே முடியவில்லை. உன்னைப் பார்க்கும்போது எனக்கு சிறுமி போலத்தான் தோன்றுகிறது. ஒரு குழந்தையின் மீது எப்படி அந்த எண்ணத்தில் ஆசையை வளர்க்க முடியும்? புரிந்து கொள்… முதலில் கொஞ்சம் வளர். ஐ மீன், அனுபவத்தையும் அறிவையும் வளர்த்துக்கொள்.” என்றவன், குனிந்து சுட்டுவிரலால் அவளுடைய நெற்றியைத் தொட்டுக்காட்டி,
“அதற்குப் பிறகும் இந்த ஏற்றமாதிபன் உன் நினைவில் இருந்தால்… இப்போதிருக்கும் ஆசை அப்போதும் இருந்தால்… என்னிடம் வா. அதற்குப் பிறகு எனக்கும் உன் மீது ஆசையிருந்தால் பார்க்கலாம்…” சொன்னவன், அதற்கு மேல் அங்கு இருக்காமல் விலகிச் செல்ல, இவளோ அசையாமல் சிலையென நின்றிருந்தாள் விதரணை.

