September 2, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2/3

(2)

 

அன்று அதிகாலை எழுந்த விதரணைக்கு, அன்றைய நாள் மிக அழகாக மலர்ந்திருப்பது போலத் தோன்றியது. இருக்காதா பின்னே? அன்று இரவு அவளுக்கு அத்தனை நல்ல தூக்கம்; அதில் ஓர் இனிய கனவு வேறு! அந்தக் கனவு மனதுக்கு மிகவும் பிடித்திருக்க, அவளது உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. சொல்ல முடியாத ஒரு நெகிழ்ச்சி. அந்தக் கனவுக்கு எதிர்காலமில்லை என்று தெரிந்தாலும், அது அவளுக்குப் பிடித்திருந்தது. மீண்டும் அந்தக் கனவை மனதில் பதியவைத்து உற்சாகமானவள், அதன் தாக்கத்தில் இதழ்கள் மலரப் படுக்கையை விட்டு சோம்பல் முறித்தபடி எழுந்தாள். படுக்கையை கையோடு சரிசெய்து விட்டு, கழிவறை சென்று அன்றாடக் கடமைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தாள். வரும்போதே தாளிக்கும் வாசனை நாசியைத் துளைத்தது.

“ஐ… பூரி!”  – தன்னை மறந்து முணுமுணுத்தவள், தம்பியின் அறைக்கதவைத் திறந்து பார்த்தாள். டீ-ஷர்ட் நெஞ்சுவரை ஏறியிருக்க, ‘தத்தக்கா பித்தக்கா’ என்று கால்களைப் பரப்பியபடி அசாத்தியமாகப் படுத்திருந்தான் விதுரன்.

அதைக் கண்டு இளநகை பூத்தாலும், அவனை எழுப்ப மனமில்லாமல் கீழே வந்தாள். அங்கே அமுதா உருளைக்கிழங்கு பிரட்டல் கறிக்குத் தாளிதம் போட்டுக்கொண்டிருந்தார்.

இப்பொழுதெல்லாம் இத்தகைய காட்சிகளைக் காண்பது அரிதாகிவிட்டது. பெண்ணியம் பேசி, அடுப்படியையே கொச்சைப்படுத்தி விட்டார்கள்; பெண்கள் சமைப்பதே ஒரு தகாத செயல் என்கிற நிலைக்குச் சமூகம் கொண்டு வந்துவிட்டது. ஆனாலும், தாயின் கையால் சமைத்த உணவைச் சாப்பிடும் பாக்கியம் குழந்தைகளுக்குக் கிடைத்து விட்டால், அதைவிட ஆனந்தம் வேறென்ன இருந்து விடப் போகிறது? அந்த வகையில் விதரணை அதிர்ஷ்டசாலிதான். மூன்று வேளை உணவும் வாய்க்கு சுவையாக ‘டான்’ என்று மேசைக்கு வந்துவிடும்.

அமுதா எப்போதும் தன் குடும்பத்திற்காகச் சமைப்பதைச் சுமையாக நினைத்ததேயில்லை. இத்தனைக்கும் அவர் பல்கலைக்கழகத்தில் ‘பிகாம்’ முடித்து, நல்ல மதிப்பெண்களோடு வெளிவந்தவர் தான். ஆனாலும், கற்ற கல்விக்காக வேலை தேட வேண்டும் என்று அவர் துடிக்கவில்லை. ஒரு சமூகத்திற்கு நல்ல குழந்தைகளை வழங்க வேண்டும் என்றால், அதற்காக எதையாவது தியாகம் செய்தால்தான் முடியும் என்கிற எண்ணத்தில், தன் தொழிலை விடுத்துக் குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர் அவர். அவருடைய தியாகம் வீண் போகவில்லை; அவர் பெற்ற இருவருமே ரத்தினங்களாகத்தான் வளர்ந்தார்கள். இருவருமே படிப்பில் படுசுட்டி. இதில் அமுதா, இருவருக்குமே அடிப்படைச் சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டார். ஒருவேளை அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், விதரணையோ அல்லது விதுரனோ தேவையான உணவைச் செய்து வைத்துவிடுவார்கள்.

அதிகாலை முதலே தங்களுக்காக வியர்க்க விறுவிறுக்கச் சமைக்கும் தாயைக் கண்டதும், உள்ளம் உருகிப்போனது விதரணைக்கு. அந்த அன்பு பெருக்கெடுத்து ஓட, தாயை நெருங்கிப் பின்னால் நின்றவாறே அவரை அணைத்து, அவர் முதுகில் ஆழமான முத்தம் ஒன்றை வைத்தாள். தன் மகளின் செல்ல முத்தத்தில் முகம் பூரித்துப் போனார் அமுதா. என்னதான் சிரமப்பட்டாலும், குழந்தைகளின் இத்தகைய அன்பில் அத்தனை அயர்ச்சியும் ஒரு நொடியில் காணாமல் போய் விடுகிறது.

முகம் மலர,

“என்னடா…?” என்றவாறு செய்த வேலையை விடுத்துத் திரும்பித் தன் மகளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தார். தாயை விட்டு விலகியவள், அவர் நெற்றியில் பூத்திருந்த வியர்வையைத் தன் புறங்கையால் துடைத்துவிட்டு, அங்கிருந்த சமையல் மேடையில் ஏறி அமர்ந்தபடி,

“அம்மா… தேநீர்…” என்றாள் செல்லமாக.

“அதோ… அந்தப் பிளாஸ்க்கில் இருக்கிறது, ஊற்றிக் குடி…” என்றவாறு அவர் மீண்டும் தன் வேலையில் கவனமானார்.

உடனே அமர்ந்திருந்த வாக்கிலேயே எட்டிப் பிளாஸ்க்கை எடுத்து, ஒரு குவளையில் தனக்கானதை ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தாள் விதரணை. அப்போதுதான் கவனித்தாள், அவள் தாயின் காலில் இருந்த மெட்டியைக் காணவில்லை.

“அம்மா… உங்கள் கால்சலங்கை, மெட்டி எங்கே?” இவள் கேட்க, குனிந்து பார்த்தவர்,

“ப்ச்… கழுவ சோப் தண்ணியில் ஊற வைத்திருக்கிறேன். பிறகு தேய்த்து கழுவிவிட்டுப் போட வேண்டும்…” தாய் சொல்ல குதித்து இறங்கியவள், தாயிடம் எங்கே என்று கேட்டாள். அமுதா சமையலறையின் ஒரு மூலையில் இருந்த குவளையைக் காட்ட, இவளே அதை எடுத்து வந்து பிரஷினால் நன்றாகத் தேய்த்துக் கழுவி விட்டு, தாயை நிறுத்தி அவர் காலில் சலங்கையையும், மெட்டியையும் போட்டுவிட, அதைப் புன்னகையடன் பார்த்திருந்தார் அமுதா.

அமுதாவுக்கு இதெல்லாம் போடவேண்டும் என்கிற ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. ஆனால் விதரணைக்கு கால்சலங்கை, மெட்டியில் பைத்தியம் என்றே சொல்லலாம். அமுதா மெட்டியும், கால் சலங்கையும் போடவில்லை என்றால் உடனே கண்டுபிடித்து விடுவாள்.

“ஏன்டி… கொஞ்ச நேரம் இதுகளைப் போடாமல் இருந்தால்தான் என்ன?” என்று தாய் கேட்க, பக்குவமாய் தாய்க்கு கால் சலங்கையையும், மெட்டியையும் போட்டவிட்டு நிமிர்ந்தவள், தன் தாயின் விரல்களை இரசித்தவாறே,

“தெரியவில்லை அம்மா… நீங்கள் நடக்கும் போது இப்படி காலில் மெட்டியின் சலங்கை சத்தம் கேட்கிற போது காதுக்கு இதமாக இருக்கும். அப்படியே மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கும்…” அவள் இரசனையுடன் சொல்ல, மகளைப் பார்த்து சிரித்தவர்,

“பிறந்தது கனடா… ஆனால் ஊரில் பெண்கள் ஆசைப்படுவது போல மெட்டிக்கும் கால் சலங்கைக்கும் ஆசைப்படுகிறாய்…” என்றதும், அதைக் கேட்டு உதடுகளைப் பிதுக்கியவள்,

“ப்ச்… இப்போ இதுதான் ஃபாஷன் தெரியுமா. நம்முடைய நாகரிகத்தை, வெள்ளையர்கள் திருடி அதை மிக அழகாகப் பயன்படுத்துகிறார்கள்… நாம்தான் போட மறந்து விட்டுவிடுகிறோம்…” என்றவள், மீண்டும் மேடையில் ஏறி அமர்ந்தவாறு, “எந்த நாட்டில் பிறந்தால்தான் என்ன, உயிரோடு உணர்வோடு, எங்கள் மரபணுவோடு சேர்ந்து வந்த உணர்வை தூக்கி எறிய முடியாதே…” என்றவாறு கால்களை ஆட்ட, தன் மகளை நெருங்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகிய அமுதா,

“நான் அம்மாவா, நீ அம்மாவா என்று சிலவேளை எனக்கே குழப்பமாக இருக்கிறது. ஒரு சமையம் குழந்தை போல நடந்து கொள்கிறாய். இன்னொரு சமையம் பெரிய மனுஷியாக நடந்து கொள்கிறாய்…” என்று சொன்னவாறு மீண்டும் தன் வேலையில் கவனமாக, சிரித்தவள்,

“ஏனம்மா, அந்த குண்டுப் பையன் இன்னும் எழவில்லை போலிருக்கிறதே? அவன் இன்றைக்குச் சீக்கிரமாகப் பள்ளிக்குப் போக வேண்டும் என்றானே?” எனச் சகோதரியாக அக்கறையோடு கேட்க, தாய் அவளை முறைத்தார். எந்தத் தாய்க்குத் தான் மகனைக் குறை சொன்னால் பிடிக்கும்?

“ஏன்டி! எத்தனை தரம் சொல்லிவிட்டேன் அவனை அப்படிச் சொல்லாதே என்று… உனக்கு அவனை வம்புக்கிழுக்காமல் இருக்க முடியாதா?” என்று சலித்த தாயைப் புன்னகையோடு பார்த்தாள் விதரணை.

“என்னம்மா செய்வது? நீங்கள் இன்னும் நாலைந்து பிள்ளைகளைப் பெற்றுப் போட்டிருந்தால் பொழுது சுவையாகக் கடந்திருக்கும். நீங்கள் தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கிற தாரக மந்திரத்தைப் பின்பற்றிய ஆட்களாயிற்றே! கருவேப்பிலைக் கொத்து போல ஒரே ஒருவனை எனக்காகப் பெற்றுப் போட்டிருக்கிறீர்கள். நான் அவனுடன் சண்டை போடாமல் வேறு யாருடன் சண்டை போடுவதாம்?” எனக் கேட்க, அமுதா நெஞ்சில் கை வைத்தார்.

“அம்மாடி… இன்னும் நான்கு ஐந்தா? உங்கள் இருவரோடும் என்னால் மல்லுக்கட்ட முடியவில்லை. இதில் இன்னும் பெற்றிருந்தால் அவ்வளவுதான்!” அவர் சொல்ல, உதடுகளைப் பிதுக்கினாள் விதரணை.

“அப்படி இல்லைமா… அதிகமான பிள்ளைகள் இருந்தால் உங்களுக்குத் தொல்லையே இருந்து இருக்காது தெரியுமா? ஆய்வில் கூடச் சொல்லியிருக்கிறார்கள் அதிக குழந்தைகள் இருந்தால் வேலைகள் குறையுமாம். அவர்களே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்வதால், பெற்றவர்களின் வேலை குறைவாக இருக்குமாம். நம்மைப் போல ‘ஒன்று – அரை’ என்று பெற்றுப் போட்டால், அவர்களின் பிரச்சனைகள் மொத்தத்தையும் பெற்றவர்கள் தான் கையாள வேண்டியிருக்குமாம். அதுமட்டுமில்லை அம்மா… ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், பின்னாளில் அதிக குழந்தைகள் இருப்பது பெற்றவர்களுக்கு மிகப் பெரும் பலமாக இருக்குமாம்!”

மகள் சொல்லச் சொல்ல அமுதா அவளை முறைத்தார். “ம்கூம்… உங்கள் இருவரை வளர்க்கவே பொருளாதாரச் சிக்கலைத் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. இதில் ஐந்தாறு பெற்றுவிட்டாலும்… வேண்டுமானால் நீ பெற்றுக் கொள்! பத்துக் குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்… யார் வேண்டாம் என்றார்கள்?” என்று அவர் சலிக்க, தாயைப் பார்த்துச் சிரித்தாள் இளையவள்.

“அப்படி இல்லை அம்மா… இப்படிப் பாருங்களேன், இப்போ உங்களுக்கு ஐந்து பிள்ளைகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்னாளில் நாங்கள் ஐவருமே வேலை செய்வோம் இல்லையா? உங்களுக்கு ஏதேனும் சிக்கல் என்றால், இந்த ஐவரும் ஓடி வருவோம்; செலவு செய்வோம். உங்களுக்கான தேவைகளை நாங்கள் ஐவருமே கவனித்துக்கொள்வோம். இதுவே ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளை என்றால் அவர்களுக்கும் இருவரைப் பார்ப்பது கூடுதல் சுமைதானே? அதுமட்டுமில்லை, சகோதரர்களுக்கும் ஆளுக்கு ஒருவர் உதவியாக இருப்பார்கள். ம்… என் கிரகம், எனக்கு ஒரு தம்பி; அதுவும் ஒன்பது வயது இளையவன்! அவன் எப்போது வளர்ந்து, எப்போது எனக்கு உதவியாக இருப்பான்?” – பெருமூச்சோடு சொன்னவள், பின் முகத்தில் குறும்பு பொங்கத் தொடர்ந்தாள்.

“போனால் போகிறது… நீங்கள் சொன்னது போல நான் ஐந்து பிள்ளைகளைப் பெற்றுப் போடுகிறேன். ஆனால், அவர்களை வளர்க்கும் பொறுப்பு உங்களது!” என்று கண்களைச் சிமிட்ட, மகளைப் பார்த்து முறைத்து விட்டுப் பின் சிரித்தார் அமுதா.

“யாராவது பேரக் குழந்தைகளைச் சுமையாக நினைப்பார்களா? ஐந்தென்ன, பத்து வேண்டுமானாலும் பெற்றுப் போடு. என் கண்ணின் மணியாக வளர்த்து உன்னிடம் ஒப்படைக்கிறேன்…” – தாய் புன்னகையுடன் சொல்ல, சிரித்தவள்,

“ம்… இந்த ‘பாடி’ பத்துப் பெறத் தாக்குப் பிடிக்குமா?” என்றாள் தாயிடம் கிண்டலாக.

அதைக் கேட்டுப் பற்கள் தெரியச் சிரித்த அமுதா,

“அது உன் பிரச்சனை, உன் கணவன் பிரச்சனை! எனக்கு என்ன வந்தது?” என்று விளையாட்டாகச் சொல்ல, ஒரு கணம் விதரணையின் முகத்தில் இருள் வந்து சூழ்ந்து விலகியது.

அவள் கணவன் பிரச்சனையா? நகைச்சுவைக்காக அவள் பேசினாலும், அவள் வாழ்க்கையில் ஒரு பிள்ளைக்குக் கூட வாய்ப்பு இல்லையே! அவளையும் மீறி இதயம் கண்ணீர் சிந்த, அதைச் சமாளித்தவளாகத் தாயைப் பார்த்து முறைத்தாள்.

“நீங்கள் என்னையே சும்மா சும்மா திட்டுகிறீர்களே… ஏன், உங்கள் மகன் மட்டும் சும்மாவா? வயதுக்கு மூத்தவள் என்கிற மரியாதையே இல்லாமல் என்னோடு சரிசமமாக நின்று சண்டை போடுகிறான். அதை விட்டுவிட்டு அவனைத் திருத்துவதுதானே?” எனக் குறைகூறினாள்.

“ஆ… அது எப்படி? அவன் சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை!” என்றார் அமுதா தாய்க்கே உரிய பாசத்தோடு.

“ஆமாம்… இது ஒன்றுதான் உங்களுக்குத் தெரியும்! எப்போது பார்த்தாலும் ஆண்பிள்ளை, சாண்பிள்ளை என்று… இது என்ன நியாயம்? ஏன், சாண் பிள்ளையானாலும் பெண்பிள்ளை என்று சொல்லக்கூடாதாக்கும்?” என்று விதரணை கேட்டாள்.

“அது அப்படி இல்லைடா… முன்னால் வேட்டைக்குப் போவதாக இருந்தாலும், கடுமையான உழைப்பைக் கொடுப்பதாக இருந்தாலும் அதைச் செய்வது ஆண்தான். அதனால்தான் குடும்பத்தில் ஆண்பிள்ளை நிச்சயம் வேண்டும் என்பார்கள். அந்த வழக்கு இப்போதும் நம்மோடு தொடர்ந்து வருகிறது…” என்று அமுதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அறிவழகன் உள்ளே வந்தார்.

“என்ன… எப்போதும் போலக் காலையிலேயே அம்மாவும் மகளும் வாக்குவாதத்தைத் தொடங்கி விட்டீர்களா?” என்று குரலில் கேலி துலங்கக் கேட்டார்.

“பாருங்கள் அப்பா! அம்மா என்னைப் பெற்றார்களா அல்லது எங்காவது இருந்து எடுத்து வந்தார்களா என்றே தெரியவில்லை. எப்போதும் தம்பியைத்தான் பிடிக்கிறது… அவனைத்தான் உயர்த்திப் பேசுகிறார்கள்!” என்று சிணுங்கிய மகளைப் புன்னகையுடன் பார்த்தவர்,

“விடம்மா… அவளுக்கு உன் தம்பி உசத்தி என்றால், எனக்கு நீதான் உசத்திடா! இது அவளுக்கு எங்கே புரியப்போகிறது?” என்று சொல்லியபடி தன் செல்ல மகளின் கூந்தலைக் கலைத்துவிட, தாயை முறைத்தவள், “அப்படிச் சொல்லுங்கள் அப்பா!” என்றவாறு தந்தையை ஆசையுடன் பார்த்தாள்.

“என்னப்பா… காலையிலேயே நிலவறையில் என்ன வேலை உங்களுக்கு?” – விதரணை கேட்க, அறிவழகன் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார்.

“நிலவறையா? நான் அங்கே போனேன் என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ இப்போதுதானே எழுந்து வருகிறாய்?” என்று அவர் கேட்க, அவளோ தந்தையை நெருங்கி அவர் தலையிலிருந்த தூசியைத் தட்டிவிட்டபடி சொன்னாள்:

“ம்… உங்கள் தலையில் தூசு கொட்டிக் கிடக்கிறதே! இந்த வீட்டில் நிலவறையைத் தவிர வேறு எங்கே தூசி இருக்க முடியும்?”

மகளைப் புன்னகையுடன் பார்த்து, “அது ஒன்றுமில்லைடா… ஃபர்னஸ் ஃபில்டர் மாற்ற வேண்டி இருந்தது… அதுதான் மாற்றப் போயிருந்தேன்,” என்றார்.

“ம்… ஆனால் உங்கள் சட்டையில் வெள்ளையாய் ஏதோ ஒட்டி இருக்கிறதே…” என்று அதையும் அவள் தட்டிவிட்டாள். குனிந்து பார்த்தவர், ஆங்காங்கே தெறித்திருந்த வெள்ளை பெயிண்டைத்  தட்டி விட்டவாறே, “ப்ச்… சீலிங்கில் சின்னதாய் ஒரு வெடிப்பு… அதைச் சரியாக்கிவிட்டு பெயிண்ட் அடித்தேன். நேரம் கிடைக்கும் போதுதானே செய்ய முடியும்?” என்றார்.

தந்தையின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தாள் இளையவள். “ஏன்ப்பா… ஏதாவது பிரச்சனையா?”  – மகள் கேட்க, அவளை அதிர்வுடன் பார்த்தார் பெரியவர்.

“பிரச்சனையா? என்ன பிரச்சனை? ஏன் கேட்கிறாய்? அப்படியெல்லாம் எதுவும் இல்லையே…” என்று அவர் அலட்சியமாகச் சொன்னாலும், அதில் தெரிந்த பதற்றத்தை அவள் உடனே கண்டு கொண்டாள்.

“அப்பா…?” என்று கேள்வியும் குழப்பமுமாக அவள் எதையோ சொல்ல வர, அவருடைய நல்ல நேரமோ, அப்போது தொலைபேசி சத்தமிட்டது.

‘தப்பித்தோம்’ என்று உள்ளுக்குள் நினைத்தவர் போல, “யாரோ அழைக்கிறார்கள்…” என்றபடி தொலைபேசியை நோக்கி நகரத் தொடங்க,

“இருங்கள் அப்பா… யார் என்று நான் பார்க்கிறேன்…” என்றவள், துள்ளிக்கொண்டு தொலைபேசி இருந்த இடத்தை நோக்கிச் சென்று அதை எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ… நான் விதரணை பேசுகிறேன்…” என்றாள் கம்பீரமாக.

 

(3)

“ஏய் விதரணை… நான்தான்டி அபி பேசுகிறேன்! நீ எப்படி இருக்கிறாய்? ஆன்டி, அங்கிள் அனைவரும் சுகமா? அந்த குண்டுப் பையன் என்ன செய்கிறான்?” – மறுமுனைக் குரலைக் கேட்டதும் விதரணையின் முகம், அன்றலர்ந்த தாமரையாய் மலரத் துள்ளிக் குதித்தாள்.

“அபி…! நீயா? ஐயோ… நம்பவே முடிய வில்லையே! இதனால்தான் இரண்டு மூன்று நாட்களாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது போல. எத்தனை காலமாயிற்று உன் குரலைக் கேட்டு! உனக்கு இப்போதுதான் என் நினைவு வந்ததா?” என்று கோபமாகக் கொந்தளித்தவளை, மறுபக்கமிருந்து வந்த குரல் கெஞ்சி அடக்கியது.

“மன்னித்துவிடு விது… ஒரே வேலை, படிப்பு! மூச்செடுக்கவே நேரம் கிடைக்கவில்லை. அது தான் அடிக்கடி உனக்கு வாட்ஸ்அப்பில் செய்தி பரிமாறுகிறேனே, அது போதாதா?” என்று சமாதானம் செய்ய முயல, இவளோ அதை ஏற்றுக் கொள்வதாயில்லை.

“என்னது… அடிக்கடியா? பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது! நீ எங்களோடு பேசி மூன்று வருடங்களாயிற்று தெரியுமா? இதில் கடந்த ஒரு வருடமாக நீ வாட்ஸ்அப்பில் கூடச் செய்தி எதுவும் போடவில்லை. இதில் அடிக்கடி செய்தி போடுகிறாய் என்கிற ‘பில்டப்’ வேறு… உன்னை…” எனச் சீற, உடனே மறுபக்கமிருந்த அபிநயா அடங்கிப் போனாள்.

“ரியலி சாரிடி… உனக்கே தெரியுமே, நான் படிப்பது சட்டம்! இங்கே பல்கலைக்கழகத்தில் மூச்சுக்கூட எடுக்க முடிவதில்லை, என்ன செய்வது?” என்று குறைகூற, அதைக் கேட்டதும் போனால் போகிறது என்று, தன் கோபத்தைத் தணித்துக் கொண்டாள் விதரணை.

“சரி சரி… விடு… ஏதோ கெஞ்சிக் கேட்பதால், மன்னித்துத் தொலைக்கிறேன். இப்போது சொல், எப்படியிருக்கிறாய்? வசந்தா ஆன்டி, ஆனந்தகுமார் மாமா எல்லோரும் நலம்தானே? உன் அக்கா அபிராகவி எப்படி இருக்கிறாள்?” என அடுக்கிக் கொண்டு போனவளை அபிநயா தடுத்தாள்.

“இரு இரு… இப்படி மூச்சுவிடாமல் கேள்விகள் கேட்டால் நான் என்ன செய்வது? அம்மா, அப்பா, அக்கா, அத்தான், குழந்தைகள் எல்லோரும் சுகம். படிப்பு ஏதோ சுமாராகப் போகிறது…” என்றவள் நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழியின் குரலைக் கேட்ட மகிழ்வில்,

“ரியலி ஐ மிஸ் யு விது… நீ நன்றாக இருக்கிறாய் தானே.. உன்னைப் பார்த்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக நான் அமெரிக்கா போவதற்கு முன்பு பார்த்தது; அதன் பின்னர் டொரன்டோ வரவுமில்லை. உன்னைப் பார்க்கவுமில்லை…!” – அவளது பெருமூச்சு தொலைபேசியினூடாகக் கேட்க, விதரணையின் முகமும் வாடியது.

அபிநயாவும் விதரணையும் சிறுவயதிலிருந்து நெருங்கிய தோழிகள். அவர்கள் உயர்நிலை வகுப்பு வரை ஒரே பள்ளியில்தான் பயின்றார்கள். அதன் பிறகு பல்கலைக்கழகத்தில் என்ன பாடம் எடுப்பது என்று இருவரும் அலசி ஆராய்ந்தபோதுதான், இருவருடைய தேர்வும் வெவ்வேறாக இருந்தது. அபிநயாவுக்குச் சட்டம் பயில ஆசை, இவளுக்கோ கணினி சார்ந்த படிப்பு படிக்க ஆசை. இதில் அபிநயாவின் தந்தைக்கு அமெரிக்காவில் நல்ல வேலை கிடைக்க, ஒட்டுமொத்தக் குடும்பமும் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டது. சிறுவயது முதல் ஒன்றாக இருந்த தோழிகள் இருவரும் வாழ்க்கை என்னும் சுழலில் சிக்கிப் பிரிந்தார்கள்.

ஆரம்பத்தில் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி நேரத்தைப் போக்கியதும் உண்டு. ஆனால் காலம் செல்லச் செல்ல, படிப்பின் சுமை இருவரையும் தொடர்பாடலில் இருந்து விலக்கி வைத்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தைகள் குறைந்து, நின்றே போனது என்றுதான் சொல்ல வேண்டும்.

பழைய நினைவுகளில் ஒரு கணம் விழிகள் கலங்கிய விதரணை,

“ப்ச்… எனக்கு என்ன அபி… நான் நன்றாகத் தான் இருக்கிறறேன்… சரி.. அதை விடு. திடீரென்று அம்மையார் என்னை அழைக்க என்ன காரணம்?” என்று வியந்து கேட்க, மறுபக்கம் கோபமான மூச்சொலி இவள் செவிகளை வந்தடைந்தது.

“ஏன்டி… ஏதாவது வேலை இருந்தால்தான் நான் அழைப்பேன் என்று நினைத்தாயா?”

“இல்லையா பின்னே.. திடீரென்று அழைத்து இருக்கிறாய்… சும்மா அழைத்திருப்பாய் என்று நினைக்க முடியவில்லையே! ம்… ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பார்கள். அதுதான் கேட்டேன்…” என்றாள் குரலில் கிண்டல் தொனிக்க.

அதைக் கேட்டுச் சிரித்த அபிநயா,

“நீ இன்னும் மாறவே இல்லை விதரணை! அப்படியேதான் இருக்கிறாய்…” என்று இரசித்துச் சொல்ல, சிரித்தவளோ,

“என்ன செய்வது? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்களே!” என்றாள் கிண்டலாக.

“சரி… அதை விடு. இப்போது நான் எங்கே இருக்கிறேன் என்று சொல் பார்க்கலாம்?” – ஆர்வமாக அபிநயா கேட்க, அதைக் கேட்டுப் புருவங்களைச் சுருக்கினாள் விதரணை.

“எங்கே இருக்கிறாய்? ஆப்பிரிக்க மரத்திலா? அங்கேதான் உன் முன்னோர்கள் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன்… ஆனால், இத்தனை சீக்கிரத்தில் நீயும் அங்கே போயிருப்பாய் என்று நான் யோசிக்கவில்லை!” என்று இவள் சொல்லி முடிக்கவில்லை, மற்றவளின் சீற்ற மூச்சில் தன்னை மறந்து கிளுக் என்று சிரித்தாள் விதரணை.

“ர்ர்ர்ர்… இப்படியே நீ கிண்டல் செய்தாயானால் நான் போனை வைத்துவிடுவேன்!” கோபமாக அவள் சொல்ல, இவளோ அதற்கு மேல் சிரிப்பை அடக்காமல் சிரித்துவிட்டாள்.

“சரி சரி… கோபிக்காதே. எல்லாம் ஒரு அன்பில் சொல்வதுதான். இப்போது சொல்… அம்மையார் எங்கே இருக்கிறீர்கள்?” எனக் கேட்க,

“நீயே சொல்லேன்…” என்றாள் அபிநயா மீண்டும்.

“ம்கூம்… நான் ஒன்று சொல்வேன், நீ திட்டுவாய்? எதற்கு வம்பு…? நீயே சொல்லு!”

“சரி நானே சொல்கிறேன்… நான் இப்போது டொரன்டோவில்தான் இருக்கிறேன்!” – அவள் சொல்லி முடிக்கவில்லை,

“என்னது…?” என்று மற்றவளின் காது கிழியக் கத்திவிட்டாள் விதரணை.

இவளது அலறலைக் கேட்டு அறிவழகனும் அமுதாவும் பதறித் திரும்பிப் பார்க்க, அவர்களைக் கண்டு அசடுவழியச் சிரித்தவள், சைகையால் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, பேரானந்தத்தில் முகம் மலர,

“நிஜமாகவா சொல்கிறாய்? எப்போது வந்தாய்? ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? ஏன் எனக்கு முன்னரே சொல்லவில்லை? அந்தளவுக்கு நான் அன்னியமாகிவிட்டேனா?” என்று சண்டைக் கோழி போலச் சிலிர்த்துக்கொள்ள, உடனே அவளை அடக்கினாள் அபிநயா.

“கொஞ்சம் பொறுமா… இப்பவே போர்க்கொடி தூக்காதே. நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கிறேன், அதற்குப் பிறகு சண்டைக்கு வா!” என்ற அபிநயா சற்றத் தயங்கினாள் போல. இரண்டு விநாடி மறுபக்கம் அமைதி நிலவியது. இவளுக்கோ பொறுமையில்லை. அந்த இரண்டு விநாடியே இருபது நிமிடங்களாகத் தோன்ற,

“ஏய்… இருக்கிறாயா… என்ன சொல்ல வந்தாய்… சொல்லேன்.. இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்…” அதற்குப் படபடக்க,

“ப்ச்… இருமா… கொஞ்சம் பொறு…” என்று அடக்கிய அபிநயா ஆழ மூச்செடுத்துவிட்டு,

“அது வந்து… நான் நேற்றுத்தான் இங்கே வந்தேன்…” என்றாள் தயக்கத்தோடு. அதைக் கேட்ட விதரணைக்கு, அதையும் தாண்டித் தோழி எதையோ பெரிதாகச் சொல்லப் போகிறாள் என்று உள்ளுணர்வு சொல்ல,

“ஓ… அப்படியா? ஏன் இந்தத் திடீர் பயணம்? ஏதாவது பிரச்சனையா அபி…?” – குரலைத் தாழ்த்தி வருத்தத்தோடு கேட்டாள் விதரணை.

“ஐயோ…! அப்படியெல்லாம் எதுவுமில்லை விது… அது வந்து… எனக்குத் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள்…” என்று அவள் முடிக்க, விதரணையின் விழிகள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் வட்டமாய் விரிந்தன.

“என்னது… மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்களா? என்னடி சொல்கிறாய்? அதற்குள்ளாகவா? அப்படி என்ன அவசரம்?” என்று விதரணை கேட்டாள்.

“ப்ச்… எனக்குப் படிப்பு முடிந்துவிட்டது. இனிச் சட்டம் படித்து முழுமையான வழக்கறிஞராக இன்னும் ஐந்தாறு வருடங்கள் ஆகும். அதுவரை காத்திருக்க அப்பாவுக்கு விருப்பமில்லை. அதோடு, அப்பாவின் வியாபாரப் பங்குதாரர் தன் மகனுக்கு என்னைக் கேட்டு வந்திருக்கிறார். அப்பாவால் மறுக்க முடியவில்லை. இப்போதைக்கு நிச்சயதார்த்தத்தை வைத்த கையோடு, சட்டப்படி திருமணம் செய்து வைக்கிறார்கள். அடுத்த வருடம் சம்பிரதாயப்படி திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள். என்னுடைய படிப்புக்கு எந்தத் தடையும் இருக்காதாம்; ‘திருமணத்தை முடித்துக்கொண்டே படி’ என்கிறார்கள். எனக்கும் அமலனைப் பிடித்து இருக்கிறது. சிறுவயதிலிருந்தே அவரைத் தெரியும்; என்னோடு எப்போதும் அன்பாகவே பேசுவார். எதற்கு மறுக்க வேண்டும் என்று நானும் ‘சரி’ சொல்லிவிட்டேன்…” என்று அபிநயா சொல்ல, இவளால் தன் தோழி சொன்னதை நம்பவே முடியவில்லை.

“நிஜமாகவே உனக்குத் திருமணம் நிச்சயித்து விட்டார்களா? என்னால் நம்பவே முடியவில்லை அபி… நிஜமாகவே உனக்கு அவரைப் பிடித்து இருக்கிறதா… நீ ஒன்றும் சூழ்நிலைக்காக சம்மதிக்க வில்லைதானே…” என்று சந்தேகமாகக் கேட்க, மறுபக்கமிருந்து,

“இல்லமா… பிடிச்சுதான் சம்மதித்தேன்…” என்றாள் வெட்கத்தில்.

அந்தக் குரலே சொல்லிவிட்டது, அவளுக்கு மணாளனைப் பிடித்துவிட்டது என்று. அதற்கு மேல் மறுக்கவோ, ‘வேண்டாம்’ என்று சொல்லவோ இவள் யார்?

“உனக்குச் சம்மதம் என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான்… சரி சொல், எப்போது எழுத்து?” என்று ஆவலோடு கேட்டாள்.

“வருகிற புதன்கிழமை, மாலை ஆறு மணிக்கு. ‘பிரின்சஸ் பாங்குவெட்’ மண்டபத்தில்தான் நடக்கிறது. நீயும் உன் குடும்பமும் நிச்சயமாக வர வேண்டும்!”

“நானில்லாமல் உன்னுடைய நிச்சயதார்த்தம் நடந்துவிடுமா என்ன?” – கேட்டவள் சட்டென்று தயங்கினாள். எதையோ யோசித்தவளாக உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,

“புதன்கிழமை என்றால், அதிகப் பேர் வர மாட்டார்களே அபி…” என்றாள் யோசனையாக.

“ம்… புதன்கிழமை நாள் மிக நன்றாக இருக்கிறதாம் விது. அதனால்தான் அன்றைக்கு வைத்திருக்கிறார்கள். தவிர, மாலை ஆறு மணிக்குத்தானே நிச்சயதார்த்தம்; எங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் வரமாட்டார்களா என்ன?”  – அபிநயா சொல்ல,

“ம்… ஆனால்… யா.. யார் யாரெல்லாம் வருகிறார்கள்…?” என்றாள் விதரணை, ஒருவித இறுக்கமான உணர்வோடு.

“யார் யார் என்றால்…? நம் நண்பர்கள் அத்தனை பேரும் வருகிறார்கள். எங்கள் நெருங்கிய உறவினர்கள், அமலனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்…” என அவள் அடுக்க,

“ஓ…” என்றவள் தொண்டையைச் செருமிவிட்டு, “வித்யாதர் அங்கிள், ஆன்டி வருகிறார்களா?” எனக் கேட்டாள்.

“அட… உனக்கு இன்னும் அவர்களை நினைவிருக்கிறதா?” – வியந்த அபிநயா, “ம்… அவர்கள் வருகிறார்கள். ஆனால், அண்ணாதான் வரமாட்டாராம். அவர் இப்போது வேலை விஷயமாகக் கல்கரிக்கு போயிருக்கிறார்… நீ அண்ணாவை மறக்கவேயில்லையா…” என்று கேட்க, இவளோ அதிர்ந்து,

“என்ன…?” என்றாள்.

“ஐ மீன்… அவரை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாயா என்று கேட்டேன்… அவரை நீ ஓரிரு முறைதானே பார்த்திருக்கிறாய். அதனால் கேட்டேன்…” என்று அபிநயா சொல்ல, இவளின் உதட்டில் வலி நிறைந்த புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.

அவனை எப்படி மறக்க முடியும்? மறக்கக் கூடியவனா அவன்? தனக்குள் எண்ணியவளுக்கு, அவன் வரமாட்டான் என்கிற செய்தியே பெரும் நிம்மதியைக் கொடுத்திருந்தது. ஏனென்றால், அவள் வாழ்க்கையில் இனிப் பார்க்கக் கூடாத, பார்க்க விரும்பாத ஒரே மனிதன் என்றால் அது அவன்தான். அவன் வருவதாக இருந்தால், நிச்சயமாக இவள் அந்த நிச்சயதார்த்தத்திற்குப் போக மாட்டாள்.

“ஏய் விது… இருக்கிறாய் தானே? விதரணை…” மறுபக்கமிருந்து அபிநயா அழைக்க, திடுக்கிட்டுச் சுயம் பெற்றவள்,

“ஆ… இருக்கிறேன்! நான்… நான் நான்கு மணிக்கே மண்டபத்திற்கு வந்துவிடுவேன், சரியா? ஆனாலும் அமலனை நினைத்தால்தான் மனது ‘திக்’ என்கிறது. உன்னிடம் மாட்டிப் படப்போகிறாரே! வேண்டுமானால் அவருக்கு ஒரு ‘மொட்டைக்கடிதம்’ போட்டுவிடவா?” என்று கேலியுடன் சொன்னாள்.

“ஐயையோ… நீ செய்தாலும் செய்வாய்! ஆளை விடு சாமி… தோழிக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறதே என்று சந்தோஷப்படுவாயா? அதை விட்டுவிட்டு மொட்டைக்கடிதம் போடுகிறேன் என்கிறாயே…” என்று அபிநயா எகிற, அதைக் கேட்டுச் சிரித்தாள் விதரணை.

“அதில்லைடி… ஏதோ நம்மால் ஆன சிறு உதவி செய்யலாமே என்றுதான்…”

“ஆத்தா… நீ எந்த ஆணியும் பிடுங்க வேண்டாம்! தொலைபேசியை அங்கிள், ஆன்டியிடம் கொடு. அவர்களையும் என் வாயாலேயே அழைத்தால்தான் எனக்கு மகிழ்ச்சி…” என்று சொல்ல,

“என்னடி இது… உன் வாயால்தான் நீ அழைக்க முடியும். அதற்காகப் பக்கத்தில் இருப்பவர் வாயைக் கடன் வாங்கியா சொல்ல முடியும்?” என்று மீண்டும் தோழியின் காலை வாரினாள் விதரணை.

“மரியாதையாகத் தொலைபேசியை அமுதா ஆன்டியிடம் கொடு… இல்லையென்றால் நேராக அங்கே வந்து உன்னைக் கொன்றாலும் கொன்று விடுவேன்!” என்று அபி சீறினாள்.

“அப்படியாவது என்னைத் தேடி வீட்டுக்கு வருகிறாயா என்று பார்க்கலாம், வா… வா…” என்றாள் விதரணை, மேலும் நகைத்தவாறே.

“சபா… முடியவில்லை! தயவுசெய்து அமுதா ஆன்டியை வரச்சொல்லு விது…” என்று அபி கெஞ்ச, அதற்கு மேல் தோழியை வதைக்காமல் தன் தாயை அழைத்தாள் விதரணை.

தொலைபேசி கைமாறியதும், முறைப்படி அவரையும் நிச்சயதார்த்தத்திற்கு வருமாறு வேண்டிக் கொண்டு விடைபெற்றாள் அபிநயா.

விதரணைக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரிய வில்லை. உயிர்த்தோழி அபிநயாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது! நினைக்கவே வானத்தில் பறப்பது போன்ற ஒரு மகிழ்ச்சி அவளை ஆட்கொண்டது.

அறிவழகனுக்கும் அமுதாவுக்கும் பெரும் மகிழ்ச்சி. “சின்னக் குழந்தையாகத் துள்ளி விளை யாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிற்குத் திருமணமா?” என்று வியந்து போனார்கள். அப்போது தான் அவர்களுக்கு விதரணையின் வயதும் நினைவுக்கு வந்தது.

“ஏன் கண்ணா… நம் விதரணைக்கும் இருபத்து மூன்று வயதாகிவிட்டது. அவளுக்கும் நல்ல வரனாகத் தேடிப் பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட வயதைத் தாண்டிவிட்டால் பிறகு மாப்பிள்ளை பார்ப்பது சிரமம். காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து போகிறது. இதோ நேற்று குழந்தைகளாக இருந்தவர்கள், இப்போது வளர்ந்து நிற்கிறார்கள். இனிச் சிறுபிள்ளை என்று விட்டும் பிடிக்க முடியாது. இப்போதே பார்க்கத் தொடங்கிவிட வேண்டும்; அப்போதுதான் தகுந்த வயதில் திருமணம் செய்து வைக்க முடியும்,” என்று அமுதா சொல்ல, அதிர்வுடன் தன் மனைவியைப் பார்த்து,

“விதரணைக்குத் திருமணம் பேசப் போகிறாயா? அவள் இன்னும் குழந்தைமா…” என்று அவர் சொல்ல, கணவரை முறைத்தார் அமுதா.

“குழந்தையா? அவளுக்கும் அபிநயாவுக்கும் ஒரே வயசுதான். அபிநயாவுக்கு திருமணம் என்றதும் மகிழ்ந்தீர்கள்; நம் பிள்ளை என்று வந்ததும் வேண்டாம் என்று மறுக்கிறீர்கள்?” என்று கேட்க, தலையைச் சொரிந்தார் அறிவழகன்.

“அதில்லைமா… அவளை என்னால் இன்னும் பெரிய பெண்ணாக நினைக்கவே முடியவில்லை. என்ன செய்யட்டும்? நம்மோடு இருக்கும் வரைக்கும் தானே அவள் சுதந்திரமாக இருக்க முடியும்? திருமணம் ஆகிவிட்டால் அவள் முடக்கப்பட்டு விடுவாளோ என்று பயமாக இருக்கிறது…” என்று அவர் சொல்ல, கணவனைக் கோபத்தோடு பார்த்தார் அமுதா.

“என்ன உளறுகிறீர்கள்? இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் நிறையப் பெண்கள் முப்பது வயதைக் கடந்தும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.

முதலில் ‘திருமணம் ஒரு சுமை’ என்கிற விதையை விதைத்தவனைத்தான் சொல்ல வேண்டும்! எல்லாக் காலத்திலும் ஒருவரால் முழுச் சுதந்திரத்தோடு இருக்க முடியாது. அந்தந்த வயதில் அதற்குரிய பொறுப்புகளைச் சுமக்கத்தான் வேண்டும். அது என்ன திருமணம், குழந்தை குட்டி என்றாலே சுமை என்று சொல்வது? திருமணம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? உலகத்தில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமான வாழ்க்கையும் குடும்பமாக வாழ்வதில்தானே இருக்கிறது?” என்று அவர் கோபமாகக் கேட்க, தன் மனைவியைப் பரிதாபமாகப் பார்த்தார் அறிவழகன்.

“அது வந்து… இப்போதுதானே படிப்பையே முடித்திருக்கிறாள்; வேலைக்குப் போக வேண்டாமா?”

“அதனால்தான் சொல்கிறேன், அவளுக்கு ஒரு நல்ல வரனாக இப்போதே பார்க்கத் தொடங்கலாம் என்று…” என்றார் அமுதா சற்றே எரிச்சலாக.

“அவள் மேலே படிக்க ஆசைப்படுகிறாளே?” – கேட்ட கணவனை முறைத்தார் அமுதா.

“படிப்பு முக்கியம்தான், இல்லை என்று சொல்லவில்லை. அதேபோலக் குடும்ப வாழ்க்கையும் முக்கியம். நாம் படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே இளைய சந்ததியினரின் மனதில் குடும்ப வாழ்க்கை ஒரு சுமை என்கிற முத்திரையைப் பதித்துவிட்டோம். வாழ்ந்து பார்த்தால்தானே அது சுமையா சுகமா

என்று தெரியும்? அதை விடுத்து யாரோ சொன்னதைக் கேட்டு ‘ஆமாம் சுமை’ என்று தலையாட்ட வேண்டியதுதான்! ஏன் கண்ணா… நான் உங்களைத் திருமணம் செய்து வந்த பிறகு, எப்போதாவது குடும்ப வாழ்க்கை சுமை என்று சொல்லியிருக்கிறேனா? ஆமாம், நாம் நிறையக் கஷ்ட துன்பங்களை அனுபவித்தோம்தான்; அதற்காக அந்த வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிவிட்டேனா? அப்படி நினைக்கத்தான் முடியுமா? தன் குழந்தை மற்றும் கணவன் மீது தீராத அன்பு கொண்ட எந்தப் பெண்ணும் குடும்ப வாழ்க்கையைச் சுமை என்று சொல்லவே மாட்டாள். குடும்ப வாழ்க்கை காதலோடு கைகோர்த்தால், அது எவ்வளவு அழகானது தெரியுமா?”

தன் காதல் கணவனையும், அந்தக் காதலால் பெற்ற குழந்தைகளையும் எண்ணி முகம் பூரிக்க அமுதா சொல்ல, அந்தப் பூரிப்பைக் கண்ட அறிவழகனுக்குப் பெருமையில் நெஞ்சம் விம்மியது.

ஒரு ஆணுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? தன் மனைவியைத் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதே ஒரு ஆண் தன் குடும்ப வாழ்க்கையில் பெறும் மிகப்பெரிய வெற்றி! அதே போல, மனைவியும் தன் கணவனின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பதும், அவளின்றி அவனிடம் ஓரணுவும் அசையாது என்கிற பந்தத்தை உருவாக்குவதும் அந்தப் பெண் அடையும் வெற்றி.

அறிவழகன் எப்போதும் தன் மனைவியிடம் ‘தான்’ என்கிற அகங்காரத்தைக் காட்டியதே இல்லை. தன் மனைவி எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால், அவள் என்ன சொன்னாலும் தலையாட்டிவிடுவார். ஒருவேளை எதாவது அவர் மனதிற்குப் பிடிக்கவில்லை என்றால், அதைச் சுட்டிக்காட்டவும் அவர் தவற மாட்டார். அமுதாவும் எதிலும் பிடிவாதம் பிடித்ததில்லை; தன் கணவனுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று ஆராய்வாள். காரணம் புரிந்ததும் உடனே அதை மாற்றிக்கொள்வாள். அதேபோலத்தான் அறிவழகனும்; மனைவிக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த வேலையைச் செய்ய மாட்டார்.

அதற்காக இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் வந்ததில்லையா என்று கேட்டால்… வரும், நிறையவே வரும்! அவரவர் தம் கருத்துகளைச் சரியோ பிழையோ முன்வைக்கத் தவறுவதே இல்லை. விவாதங்கள் நடக்கும், அதனால் மனக்கசப்பும் வருவதுண்டு. சில வேளைகளில் இரவு வரை இருவரும் தங்கள் கோபத்தை இழுத்துப் பிடித்து இருப்பார்கள். ஆனால், மறுநாள் காலை எதுவுமே நடக்காதது போலச் சிரித்துக்கொண்டு வெளியே வருவார்கள். இவர்களுக்குக்கிடையில் இப்படி ஒரு விவாதம் நடந்தது என்பது அவர்கள் பெற்ற குழந்தைகளுக்குக் கூடத் தெரியாது.

விதரணைக்கு இது ஆச்சரியமாக இருக்கும். அவளுடைய தோழிகளில் சிலர், தந்தை குடித்து விட்டுச் செய்யும் கொடுமை பற்றியும், தாய் தந்தையைப் படுத்தி எடுக்கும் பாடுகள் பற்றியும், பெற்றோர் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் அழுகையுடனும் வேதனையுடனும் சொல்லும்போது, இவள் வேற்றுக் கிரகவாசி போல அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பாள்.

இப்படியெல்லாமா ஒரு குடும்பத்தில் நடக்கும்? தன் மனைவி மீது காதல் கொண்ட ஒரு ஆணால், கணவன் மீது காதல் கொண்ட ஒரு பெண்ணால், அவர்களை விடுத்து இன்னொருவரைத் தேடிப் போக எப்படி முடிகிறது? இவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இதையே தாயிடம் வந்து சொல்ல, அமுதாவுக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

இப்படியான எதிர்மறையான குடும்பச் சூழ்நிலையில் வாழும் குழந்தைகளுக்குத்தான் திருமண வாழ்க்கையே வெறுத்துப் போகிறது. குழந்தைகளின் முன்னால் தாய்-தந்தை சண்டை போடுவதால்தான், குழந்தைகளுக்குத் திருமண மென்றாலே பயம் வருகிறது. அதுமட்டுமா, ‘நான் ஆண்’ என்கிற அகங்காரத்தைக் காட்டும் தந்தைகள் புரிந்துகொள்வதில்லை, தாங்கள் தங்கள் குழந்தை களின் மனதில் எத்தகைய கசப்பை விதைக்கிறோம் என்று!

குடும்பம் என்பது மிக அழகானது. அங்கே ‘நான் ஆண், நீ பெண்’ என்கிற பேதத்திற்கு இடமே இல்லை. ‘நாம்’… எவ்வளவு அழகான சொல்! படுக்கையிலும் சரி, வீட்டு வேலைகளிலும் சரி, ‘நாம்’ என்கிற சொல் முன்னிறுத்தப்படுமேயானால், சண்டை என்று ஒன்று ஏன் வரப்போகிறது? மனக் கசப்புதான் ஏன் பிறக்கப்போகிறது?

“என்னப்பா… நான் பேசிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்?” – மனைவி கேட்க, இன்னும் தெளிவில்லாத முகத்தோடு தன் மனைவியை ஏறிட்டு,

“அதில்லைமா… நீ அவசரப்படாதே. அவள் இன்னும் எனக்குக் குழந்தை போலத்தான் தெரிகிறாள். அவளுக்குத் திருமணம் என்றால் ஏதோ சங்கடமாக இருக்கிறதே அமுதா…”

“சரியாய்ப் போச்சு! கால காலத்தில் செய்ய வேண்டியவற்றைச் சரியாகச் செய்ய வேண்டும். நம் உடலில் தெம்பு இருக்கும்போதே கடமைகளைச் செய்துவிட வேண்டும்.”

“நீ சொல்வதும் சரிதான் அமுதா… அவளுக்கென்று ஒருவன் எங்கோ பிறந்துதானே இருப்பான்? எதற்கும் விதரணையிடம் ஒரு வார்த்தை பேசிப்பார்..” என்று அவர் சொல்ல,

“அவளுக்குத் தெரியாமலா திருமணம் பேசப் போகிறோம்? தவிர, இப்பவே பேசிச் செய்து வைக்கவா போகிறோம்? முதலில் அவளுக்கு யார் மீதாவது ஆர்வம் இருக்கிறதா என்று கேட்க வேண்டும். இல்லை என்றால், நல்ல வரனாகத் தேட வேண்டும். அதற்குப் பிறகு இருவரும் பேசிப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்க வேண்டும்… நமக்குப் பிடித்தது போல! பிறகுதானே எல்லாம்?” என்றவர் தன் வேலையைச் செய்யத் தொடங்க, அதைக் கேட்டு அறிவழகனின் முகத்தில் மென் புன்னகை மலர்ந்தது.

தன் மனைவி சொன்ன ‘நமக்குப் பிடித்தது போல’ என்ற வாக்கியம் அவரை ஏனோ சிலிர்க்க வைத்தது. இருவருக்கும் பேசித்தான் திருமணம் நடந்தது. அப்போது அவர் கனடாவிலிருந்து ஈழத்திற்குச் சென்றிருந்தார். அமுதாவுக்கு அப்போது வயது பத்தொன்பது; பல்கலைக்கழகம் படித்துக் கொண்டிருந்தார். நாட்டுச் சூழ்நிலை காரணமாக அவரைத் திருமணம் முடித்து வெளியே அனுப்பி விடப் பெற்றோர் தீர்மானித்திருக்க, இவரின் வரன் வந்ததும் எல்லாப் பொருத்தமும் திருப்தியாக அமைய, பெண் பார்க்க வரச்சொல்லி அமுதாவின் பெற்றோர் சொல்லி அனுப்பினார்கள்.

கோவிலில் வைத்துப் பெண் பார்த்தார் அறிவழகன். ‘கண்டதும் காதல்’ என்றெல்லாம் சொல்ல மாட்டார். ஆனால், திருத்தமான முகமும், அமைதியான மென் புன்னகையுடன் வந்திருந்தவரைக் கண்டதும் மனதிற்கு இதமாக உணர்ந்தார். அவருக்கும் ஈழத்தில் அதிக காலங்கள் இருக்க முடியாத நிலை என்பதால், அதிகம் யோசிக்காமல் உடனே திருமணத்திற்குச் சம்மதம் சொன்னார். ஆனால், திருமணமான பிறகு தான் எத்தனை பெரிய சொர்க்கத்தைக் கடவுள் தனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்பதே அறிவழகனுக்குத் தெரிந்தது.

அதற்குப் பிறகு தன் மனைவியிடம் மொத்தமாகச் சரணாகதி அடைந்துவிட்டார் அவர். அன்று முதல் இன்று வரை, மனைவி இல்லாமல் அவர் இருந்ததே இல்லை; அவரால் இருக்கவும் முடியாது. இதுவரை தன் காதலை அவர் மனைவிக்கு வார்த்தைகளால் சொன்னதில்லை; அமுதாவும் அப்படித்தான். ஆனால், உணர்வுகள் பிணைந்திருக்கும்போது, ‘காதல்’ என்று ஒரு வார்த்தைச் சொல்ல வேண்டுமா என்ன?

“என்ன கண்ணா… அடிக்கடி ஏதோ கனவு காண்கிறீர்கள்?” – மனைவி கேட்க, திடுக்கிட்டு விழித்தவர், தன் மனைவியைக் காதலோடு பார்த்தார்.

“ப்ச்… இல்லை… நமக்குப் பிடித்தது போல என்று சொன்னாயே… அதை நினைத்தேன்…” – முகம் மலர்ந்து சொன்ன கணவனை மெல்லிய குறும்போடு பார்த்தார் அமுதா.

“அப்போ… பிடிக்கவில்லையா?” எனக் கேட்க, “இல்லை… இல்லை… பிடித்திருந்தது!” என்றார் அவர் அசடு வழிய. அதைக் கண்டு நகைத்தவர், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுத் தன் கணவனை நெருங்கினார்.

அவர் நாசியை இரு விரல்களால் பற்றி அப்படியும் இப்படியும் ஆட்டி, தன் நெற்றியால் அவர் நெற்றியை முட்டி எடுத்து, “எனக்கு உங்களைப் பிடித்திருந்தது… பார்த்த அந்த நொடியே!” என்றார் விழிகளில் பொங்கி வழிந்த காதலோடு.

அதில் சொக்கிப் போனவர், “ம்… நானும் தான்…” என்றார் முணுமுணுப்பாக. அதைக் கேட்டுத் தன் கணவனை விட்டு விலகியவர், தலை சரித்துப் பார்த்து,

“பொய்!” என்றார் அழுத்தம் திருத்தமாக.

“பொய்யா? இல்லைம்மா… சத்தியமாக உன்னைப் பார்த்ததும் பிடித்தது!” என்றார் படபடப்பாக. மனைவியோ அவரை அழுத்தமாகப் பார்க்க,

“சரி… சரி… உன்னைக் கண்டதும் மனதில் இதமாக இருந்தது நிஜம் அம்மா. அதுவும் என்னைப் பார்த்து அழகாக ஒரு புன்னகை செய்தாயே… அது இப்போதும் நினைவில் இருக்கிறது. நீ எனக்குச் சொந்தமான பின்பு, உன்னை எனக்குக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை தெரியுமா… சத்தியமாக நம்பு!”

அவர் சொல்லச் சொல்லச் சிரித்தவர், “ம்… அது உண்மைதான். ஆனால், பார்த்ததும் எனக்குத் தான் உங்களைப் பிடித்திருந்தது; உங்களுக்கு அல்ல!” என்று செல்ல ஊடலுடன் கணவனை முறைத்துவிட்டுச் சமையலறைக்குள் நுழைய, அதைக் கண்டு அழகாகச் சிரித்தார் அறிவழகன். காதலின் உச்சமே ஊடல்தானே! அதுவும் செல்ல ஊடல் காதலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

அதன் பின்பு அமுதா, விதரணையிடம் அவ ளுக்குத் திருமணம் பேசுவது பற்றிப் பேச, ஒரு கணம் அதிர்ந்தவள் பின் தன் தாயைப் பார்த்தாள்.

“அம்மா! நான் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். எனக்குத் திருமணம், அதில் வரும் பொறுப்புகள் – இவை எதிலும் நாட்டமில்லை. நான் இன்னும் படிக்க வேண்டும்; வேலைக்குப் போக வேண்டும். நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும்; சாதிக்க வேண்டும்! இதற்குத் திருமணம் தடையாக இருக்கும்… வேண்டாம் அம்மா!” – மகள் உறுதியாகச் சொல்ல, அமுதா அவளை முறைத்தார்.

“நீ பேசுவது எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. சாதிப்பதற்கும், படிப்பதற்கும், திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்? திருமணம் முடித்தால் சாதிக்க முடியாது என்று யார் சொன்னது? சொல்லப் போனால், வரும் கணவன் உன்னுடைய சாதனைக்கு உதவியாக இருந்துவிட்டுப் போக மாட்டானா? மற்றவர்கள் பேசுவது போலப் பைத்தியக்காரத்தனமாகப் பேசாதே…” – தாய் கடிய, இவளுடைய உதட்டில் விரக்திப் புன்னகை ஒன்று மலர்ந்தது.

‘வரும் கணவன்…’ அப்படி ஒருவன் வந்தால் தானே? – மனதிற்குள் விரக்தியாக நினைத்தவள்,

“சாரி அம்மா… எனக்கு இப்போதைக்கு அதைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை. அதனால் தேவையற்று இதில் நேரத்தை விரயமாக்காதீர்கள்…” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அமுதாவின் புருவங்கள் பெரும் யோசனையில் சுருங்கின. அவருக்குத் தன் மகளைப் பற்றித் தெரியாதா என்ன? அவளுடைய மறுப்பு, மற்றவர்கள் காரணத்திற்காகச் சொல்லும் சாதாரண மறுப்பல்ல. அதையும் தாண்டி அந்த மறுப்பில் ஒரு வலியைக் கண்டுகொண்டவருக்கு எதுவுமே பிடிபடவில்லை.

விதரணை ஒன்றும் எதையும் மறைத்துப் பேசும் இரகமில்லை; மனதில் இருப்பதை நேரடியாக அன்னையிடம் சொல்லக்கூடியவள்தான். ஆனால், இப்போது என்னிடம் எதை மறைக்கிறாள்? யோசித்தவருக்குத் தன் மகளின் வலிக்கான காரணம் புரியவில்லை.

‘ஒருவேளை எனக்குத் தெரியாமல் அவள் யாரையாவது காதலிக்கிறாளோ? அப்படியென்றால் அதை நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே! நாங்கள் ஒன்றும் காதலுக்கு எதிரியில்லையே. யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்; ஆனால், அவர் தமிழனாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் மகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை. ஒருவேளை வேற்று இனத்தவன் ஒருவனை விரும்பி, அதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாளோ…?’ – அமுதாவின் மனம் அலை பாய்ந்தது.

‘ம்கூம்… இதை இப்படியே விடக்கூடாது. எப்படியாவது மகளிடம் இதைப் பற்றிப் பேசி உண்மைக் காரணத்தை அறிந்துவிட வேண்டும்’ என்று அவர் உறுதி செய்துகொண்டார். ஆனால் பாவம், இதைப் பற்றிக் கேட்க அவருக்கு இனி வாய்ப்பே கிடைக்கப்போவதில்லை என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

விதி கொடியது; மிக மிகக் கொடியது! அறியாத, தெரியாத திருப்பங்களை உடனுக்குடன் கண்முன்னே காட்டிவிடும். அது தெரியாமல் நாம் எத்தனை திட்டங்களைப் போடுகிறோம்? வாழ்வில் ஒன்று மட்டும்தான் உறுதி  – அது இந்த விநாடி, இந்த நிமிடம்! அது நிறையப் பேருக்குப் புரிவதில்லை.

What’s your Reaction?
+1
16
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0

Related Post

2 thoughts on “நீயின்றி உயிராடும் திகிலாலே – 2/3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!