September 2, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 1

(1)

மே மாதத்தின் இறுதி நாட்கள். அதிகாலை ஐந்து மணிக்கே பகலவன் கனடாவை எட்டிப்பார்க்கச் சுறுசுறுப்போடு தயாராகிவிட்டான். அனல் கக்கும் சூரியக் கதிர்கள் கனடாவை ஆக்கிரமிப்பதற்கான கோடைகாலம் இன்னும் முழுமையாக வரவில்லை என்றாலும், கடந்த சில நாட்களாக வெப்பநிலை இருபத்திரண்டு பாகைக்கும் சற்றுக் கூடுதலாகவே இருந்தது. இதில் இரவில் வெப்பநிலை பதினான்கு பாகைக்கு இறங்கியிருந்தாலும், ஒரு கிழமையாகத் தொடர்ந்து பெய்த மழையினால் காற்றில் ஒருவிதப் புழுக்கம் டொரன்டோ மாநகரம் முழுவதையுமே ஆக்கிரமித்திருந்தது. குளிர்காலத்தில் சுகமாய்த் தழுவும் தூக்கம், ஏனோ வெப்பம் தலைகாட்டும் காலங்களில் சற்றே தள்ளி நின்றுவிடுகிறது. அதுவும் ரவீன் லாட்டை (இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கு, காடு, ஓடை அல்லது செங்குத்தான மரங்கள் நிறைந்த இயற்கையான நிலப்பகுதியை ஒட்டி அமைந்திருந்தால், அந்த வீட்டின் நிலத்தை ‘ரவீன் லாட்’ என்று அழைப்பார்கள்) அண்டிய அந்தக் கம்பீரமான நான்கு படுக்கையறைகளைக் கொண்ட வீட்டில், நிலவிய அந்தப் புழுக்கத்தில், போர்த்தியிருந்த போர்வையை உதறித் தள்ளிவிட்டு, மென் கட்டிலில் குப்புறப் படுத்துக் கிடந்தாள் அந்த அழகி. அப்போதுதான் திரும்பிப் படுத்திருந்தாள் போல, படுக்கை கசங்கியிருந்தது. சற்று நேரத்தில் அந்த நிலையும் அவளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை எடுத்துக் காட்டும் வகையில் சலிப்புடன் உச்சுக்கொட்டிவிட்டு நிமிர்ந்து படுத்தாள்.

அட, கனடாவில் இப்படியொரு அழகுத் தேவதையா? வியந்து போனது புழுக்கம். அதுவரை அவளை வதைத்துக்கொண்டிருந்த புழுக்கம் அவளழகில் மெய் மறந்து, தன் வெப்பத்தை மறந்து குளிர்ச்சியாக மாறி அவளை ஆசையோடு தழுவிக்கொள்ள, சட்டென்று தணிந்துபோன அந்த வெப்பத்தில் மீண்டும் கண்ணயர முயன்றாள் அந்தப் பாவை.

எந்தச் சுருளும் இன்றி, பட்டெனச் சிலிர்த்துப் பரவிக் கிடந்த நீண்ட கருங்கூந்தலின் மத்தியில் இரவில் தோன்றும் வெண்மதி வைகறையில் பளிச்சிடும் நிலவைப்போல, அவளுடைய அழகிய வதனம் அந்தப் பேரிருள் போன்ற கூந்தலுக்கு நடுவே வட்டமாய் மலர்ந்திருந்தது.

பிரம்மன் இத்தனை பெரிய ரசிகனா…? அடேங்கப்பா! பிறைச் சந்திரனாய் நெற்றி, அதன் கீழே இரு பக்கமும் வில்லென அடர்ந்த நீண்ட புருவங்கள். உறக்கத்தில் மூடியிருந்தாலும் கவி பாடும் நீண்ட விழிகள்; அவள் விழித்தால் உலகமே அந்தக் கண்களுக்குள் அடைக்கலமாகும் என்பதில் ஐயமில்லை. அளவான கூர்மையான நாசி, அதில் ஒரு குட்டி வளையமாய் மூக்குத்தி. சற்று உப்பிய, கிள்ளத் தோன்றும் கன்னங்கள். வெப்பத்தில் சிறிது சுளித்திருந்த இயற்கையாகவே சிவந்த பவள உதடுகள். அதன் கீழே வெண்ணிறக் கழுத்து. இரவாடை என்பதாலும், வெப்ப காலம் என்பதாலும் அணிந்திருந்த சற்றுத் தளர்ந்த டீ-ஷர்ட்டை மீறிச் செழிப்பாய்த் தெரிந்த எழில். சற்றுக் கீழே குனிந்தால்… அடடா! பிரம்மன் ஏன் இத்தனை கஞ்சனானான் என்று யோசிக்கத் தோன்றும். அதன் கீழே அழகிய இரட்டைத் தொடைகளும் கால்களும்… சற்றுச் சதைப்பற்றான உடல்வாகு தான், ஆனாலும் பெண்மை அள்ளிக் கொட்டிக் கிடந்தது. பிரம்மன் இவளைப் படைக்கும்போது மிக நல்ல மனநிலையில் இருந்திருக்கிறான் போல! இவளைக் கண்டால் கலைவாணிக்குக் கூட பிரம்மா மீது கோபம் வரும். அப்படிப்பட்ட அழகுப் பாவை கனடாவில் வசிக்கிறாள் என்றால், அது அந்த நாட்டுக்குத்தானே பெருமை!

ஆமாம், இந்த அழகி யார்?

இவள் பெயர் விதரணை. அறிவழகனுக்கும் அமுதாவுக்கும் பிறந்த செல்லப்பெண். அவளுடைய தந்தை அறிவழகன், கனடாவில் உள்ள ஜெனரிஸ் பயோ பாமா என்கிற மருந்து உற்பத்தி செய்யும் (றிலீணீக்ஷீனீணீநீமீutவீநீணீறீ) நிறுவனம் ஒன்றில் மருந்துப் பரிசோதகராக வேலை பார்க்கிறார். மாதம் பிடித்தம் போக $5000 சம்பாதித்தாலும், வீட்டுக் கடன், மின்சாரம், தண்ணீர், எரிவாயு கட்டணம் மற்றும் வீட்டுச் செலவுகள் என அனைத்தையும் கொடுத்த பிறகு, மாத இறுதியில் விழி பிதுங்கி வேறு வழியில்லாமல் கடனட்டையை உபயோகிக்கும் சராசரி கனேடியத் தந்தை. தாய் அமுதா, கனடாவில் வாழ்ந்தாலும் தான் வேலைக்குப் போனால் குழந்தைகள் சரியாக வளராதோ என்கிற அச்சத்தில், வீட்டிலிருந்து அனைவரையும் கவனித்துக்கொள்ளும் இல்லத்தரசி. அன்பான பெண்மணி; தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழும் சாதாரணக் குடும்பத்தலைவி.

அடுத்து அந்த வீட்டின் சின்ன எஜமானன், விதுரன். விதரணையின் குட்டித் தம்பி. இப்போது தான் பதினான்கு வயதாகிறது. அவனுக்கும் விதரணைக்கும் கிட்டத்தட்ட ஒன்பது வருட வித்தியாசம். அதனால் விதரணைக்குத் தன் குட்டித் தம்பி என்றால் கொள்ளைப் பிரியம். அவனுக்காக உலகத்தையே புரட்டிப் போடுவாள். ஆனால், இருவருக்குமிடையில் ஏதாவது சண்டை வந்தால் அந்த உலகமே இரண்டாகும்; மறைத்து வைத்த பல ரகசியங்கள் தடையின்றி மேடையேறும்.

“அன்றைக்கு அப்பா வாங்கி வைத்த ஜூஸை நீதானே குடித்தாய்? குடித்தது மட்டுமில்லாமல், அது தெரியாதிருக்கத் தண்ணீர் ஊற்றி வைத்த கேடிதானே நீ?” – சீறுவாள் பெரியவள்.

“நீர் மட்டும் எப்படி? அப்பாவின் பாக்கெட்டில் இருந்த இருபது டாலர்களைத் திருடி, உமது நண்பர்களோடு சேர்ந்து ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடவில்லையா?”

“இவ்வளவு போட்டுக் கொடுக்கிறாயே… அன்று பேஸ்பால் விளையாடுகிறேன் என்று பக்கத்து வீட்டு ஆண்டர்சனின் ஜன்னலை உடைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிய கோழை நீதானே?”

“நீ பல்கலைக்கழகத்திற்குப் படிக்கப் போகிறாயா? இல்லை பசங்களுக்கு ரூட் விடப் போகிறாயா? அன்று ஹனுஜன் என்பவன் உன்னைக் காதலிப்பதாகச் சொல்லி, டேட்டிங் போகலாமா என்று கேட்டான் என என்னிடமே வந்து சொன்னாயே… இதை அம்மாவிடம் சொன்னால் என்னாகும் தெரியுமா?”

“நானாவது இருபத்துமூன்று வயதில் சைட் அடிக்கிறேன். நீ அப்படியா? உனக்கு இன்னும் மீசை கூட முளைக்கவில்லை, அதற்குள் உனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பதாகச் சொன்னாயே, மறந்துவிட்டதா?”

இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுக்க, அமுதாவுக்கோ காதைப் பிடுங்கி எங்காவது வைத்துவிட வேண்டும் போலத் தோன்றும். கடைசியாக அவர் கையில் கரண்டியை உயர்த்திக்கொண்டு வந்த பிறகுதான் அவர்களின் சண்டையே ஓயும். ஆனாலும், ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டிருப்பது மட்டும் குறையாது.

“ஏண்டி… அவன்தான் சின்னப் பிள்ளை. உனக்கோ அரைக்கழுதை வயதாகிறது. கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்தான் என்ன?” என்று அமுதா வரிந்து கட்டிக்கொண்டு வருவார்.

அதைக் கேட்டு இவள் நெஞ்சைப் பிடித்துக் கொள்வாள்.

“என்னது? சின்னப் பிள்ளையா? யார்? இந்தத் தடியனா? எப்படிம்மா உங்களால் இப்படியெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல், அதுவும் மனசாட்சியே இல்லாமல் பேச முடிகிறது?” என்பவள் தன் தக்காளிப் பழத் தம்பியை மேலும் கீழும் பார்த்து, “வெண்ணெயும் தயிருமாகத் தின்று ஜப்பான் குத்துச்சண்டை வீரன் போலப் பிதுங்கிப்போய் இருக்கிறான், இவனைப்போய் சின்னப் பிள்ளை என்கிறீர்களே? இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா?” என்று கிண்டலும் கோபமுமாகப் பதிலடி கொடுப்பாள்.

தன் சகோதரியை எரிப்பது போலப் பார்ப்பான் இளையவன். “வேண்டாம்… இதற்கு மேல் ஏதாவது பேசினால் நான் மனிதனாகவே இருக்க மாட்டேன். நான் எப்படியிருந்தால் உமக்கென்ன? நான் என்ன உம்முடைய புருஷன் வீட்டுச் சாப்பாட்டையா தின்கிறேன்? என்னுடைய அப்பா சம்பாதித்த காசில் வாங்கிச் சாப்பிடுகிறேன். சாப்பிடுவேன்! அதைக் கேட்க நீர் யார்?” என்று பொங்கி எழுவான் இளையவன்.

“அடப்பாவி! இப்போது புரிகிறதா அப்பாவுக்கு ஏன் இத்தனை கடன் என்று? எல்லாம் நீ சாப்பிடுகிற சாப்பாட்டால்தான் அப்பா கடனாளியாக இருக்கிறார். ‘அண்ட் ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்’, அப்பா உனக்கு மட்டும் அப்பா இல்லை, எனக்கும் தான். அவர் உழைக்கும் சொத்தில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், என் பங்கையும் சேர்த்துத்தான் நீ சாப்பிடுகிறாய்!”  – வம்புக்கு இழுப்பாள் விதரணை.

அதற்காகவே சகோதரியின் காதுபடச் சத்தமாகச் சாப்பிடுவான் விதுரன். இல்லையென்றால், தண்ணீரையோ தேநீரையோ சத்தமாக உறிஞ்சிக் குடிப்பான்; அல்லது இருக்கையைச் சத்தமாக இழுப்பான்.

விதரணைக்கு ‘மிசோஃபோனியா’ (விவீsஷீஜீலீஷீஸீவீணீ) பிரச்சனை உண்டு. அவளால் குறிப்பிட்ட சில சத்தங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இப்படிச் சத்தம் போட்டுச் சாப்பிடுவது, உறிஞ்சிக் குடிப்பது, இருக்கையைக் கிறீச்சிட இழுப்பது  – இதெல்லாம் அவளுக்குச் சினத்தை வரவழைக்கும் செயல்கள். தன் சகோதரியின் பலவீனத்தைத் தெரிந்தே அவன் வேண்டுமென்று சத்தம் எழுப்ப, ‘நங்’கென்று அவனுடைய தலையில் ஒரு கொட்டு வைப்பாள் விதரணை. பிறகு என்ன? வாயைப் பிளப்பான் விதுரன்.

“அம்மா… பாருங்கள்மா இவளை… ஊஊஊ!” என்று அவன் கதறத் தொடங்க, தலையில் கை வைத்து உட்கார்ந்து விடுவார் அமுதா.

“நீ ஏன்டா சத்தமாகச் சாப்பிடுகிறாய்? எனக்குத் தான் இந்தச் சத்தங்கள் பிடிக்காது என்று உனக்குத் தெரியும்தானே…” என அவள் சீற, அமுதாவுக்கு ‘சீ’ என்று ஆகிவிடும்.

“ஐயோ! கடவுளே! நான் பிள்ளைகளைப் பெற்றேனா இல்லை அரக்கர் கூட்டத்தைப் பெற்றேனா என்றே புரியவில்லையே? விது… அவன்தான் சின்னப் பிள்ளை ஏதோ செய்கிறான் என்றால், நீயும் எதற்கு அவனுடன் மல்லுக்கட்டுகிறாய்?” என்று மகனுக்காக அவர் வரிந்துகட்டிக்கொண்டு வர, இருவருமே தாயைக் கோபமாகப் பார்ப்பார்கள்.

“திரும்பவுமா?”  – இப்போது இதே வசனத்தைச் சொல்லித்தான் சண்டையே ஆரம்பித்தது. தாய்

திரும்பவும் அதே வசனத்தைச் சொல்ல, சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு பக்கம் சிரிப்பு வரத்தான் செய்தது; ஆனாலும் முறைத்துக்கொண்டு அமெரிக்க  – ரஷ்ய உடன்படிக்கை போல வெட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.

இந்த வீட்டு நிலவரம் எதுவும் தெரியாமல் அறிவழகன் வீட்டிற்கு வருவார். களைத்து வரும் மனுஷனிடம் இதையெல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்கவா முடியும்? வந்தவருக்குத் தேநீர் ஊற்றிக் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்திய பின்னர், மகளைப் பற்றி அவரிடம் திட்டித் தீர்ப்பார் அமுதா.

“சத்தியமாக என்னால் இவர்களோடு காலம் தள்ள முடியவில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைதான். இந்த விதரணைக்கு இருபத்துமூன்று வயதாகிவிட்டது, இன்னும் சின்னக் குழந்தை போல விதுரனுடன் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்குக் கொஞ்சமாவது பொறுப்பு வர வேண்டாமா? நாளைக்குத் திருமணம் நடந்தபின் என்ன செய்யப்போகிறாள்? இப்படியே இருந்தால், வரப்போகிறவன் கொஞ்ச நாட்களிலேயே அவள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவான்!” என்று குறைகூறித் தன் மன ஆற்றாமையை வெளிப்படுத்துவார்.

“அம்மு… எதுக்கு இப்படிப் புலம்புகிறாய்? இது என்ன அந்தக்காலமா, கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும் காலில் விழுந்து அழ? ‘சரிதான் போடா’ என்று என் மகள் கிளம்பி என்னிடமே வந்துவிடுவாள்!” – புன்னகையுடன் கூறும் கணவரை முறைக்கத்தான் முடிந்தது அமுதாவால்.

ஏனென்றால், எப்போதும் விதரணை தந்தை செல்லம்தான். அவள் பிறந்ததிலிருந்து அவர் கையில்தான் அதிகம் தவழ்ந்தாள். நீண்ட காலமாக இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்து, இனி குழந்தை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணிய நேரத்தில் வந்து பிறந்தவன்தான் விதுரன். அதனால் அவன் எப்போதும் தாய் செல்லம். தாயில்லாமல் ஒரு நொடி கூட அவனால் வீட்டில் இருக்க முடியாது. வயதானாலும் அவனுக்கு எப்போதுமே தாய் வேண்டும்; இப்போது கூடத் தாயின் மடியில் ஏறி அமர்ந்து கொள்வான். அவர் மடியில் தலை சாய்த்து, தன் கூந்தலைக் கோதச் சொல்லிவிட்டு, கைபேசியில் கேம் (நிணீனீமீ) விளையாடுவான்.

இதைப் பார்த்தால் விதரணைக்கு ஏகப்பட்டக் கடுப்பு வரும். அவனைத் தள்ளிவிட்டுத் தான் தாயின் மடியில் படுக்க முயல்வாள். பிறகு அதற்கென்றே ஒரு ‘ஈராக்  – ஈரான் யுத்தம்’ அந்த வீட்டில் அரங்கேறும்.

இப்படி அமுதா இங்கே ஆதங்கப்பட, அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல, இருவரும் ஒருத்தரின் தோளில் மற்றொருவர் கை போட்டவாறு ஒன்றாக வந்து நின்று அமுதாவை வாய் பிளக்க வைப்பார்கள்.

அதைக் கண்டு அமுதாவுக்கு இன்னும் கோபம் தான் வரும். சற்று முன் குடுமிப்பிடி சண்டை போட்டது என்ன, இப்போது எதுவுமே நடக்காதது போல ஒற்றுமையாக வந்து நிற்பது என்ன? பெற்றவர்கள் முறைக்க, அவர்களோ கிண்டலாக ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு,

“சண்டையா? அதுவும் இந்த வீட்டிலா? யார் சண்டை பிடித்தார்கள்? ஏன்டா தம்பி, உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று ஒன்றுமே புரியாதவள் போலத் தட்டைத் திருப்பிப் போட்டுவிடுவாள் விதரணை. தம்பியும் சளைத்தவனா என்ன? அவள் தம்பிதானே!

“அதுதானே அக்கா? யாரும்மா சண்டை போட்டார்கள்? அப்படி எதுவும் தெரியவில்லையே? ஏன் அப்பா, நீங்கள் அம்மா கூடச் சண்டை பிடித்தீர்களா இருக்காதே, நீங்களே இப்போதுதானே வேலையிலிருந்து வந்தீர்கள். அப்படியென்றால் யார் இங்கே பிரச்சனை செய்தார்கள்? அம்மா… நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா?” என்று அவன் தாயின் காலை வார, இருவரும் கண்ணடித்துக் கொள்ளும்போது அமுதாவைப் பார்க்க வேண்டுமே!

“ஏன்டா… அப்பா வருவதற்கு முன் என்னை அந்தப் பாடு படுத்திவிட்டு, இப்போது எதுவும் தெரியாதது போல நடிக்கிறீர்களா? இருங்கள் உங்களை…” என்று அவர் அவர்களை அடிப்பதற்காகத் துரத்த, அதைக் கண்டு களைப்பு மறந்து சிரிப்பார் அறிவழகன்.

சிரிக்கும் தந்தையிடம் இருவரும் சலுகையாக ஓடிவந்து அணைத்துக்கொள்ள, மனைவியிடமிருந்து அவர்களைப் பாதுகாத்துத் தன் கரங்களுக்குள் அள்ளி அணைத்துக்கொள்வார் அறிவழகன். தன் மனைவியைப் பார்வையாலே அடக்கிவிட்டுப் பிள்ளைகளைப் பார்ப்பார்.

“ஏன்டா… ஏன் இப்படி அம்மாவைப் படுத்துகிறீர்கள்? அவள் பாவமில்லையா? உங்களுக்காக எவ்வளவு செய்கிறாள்! உங்களை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக அவள் வேலைக்கே போவதில்லை. அவளைப் போய் இப்படிப் படுத்தி எடுக்கிறீர்களே?” என்று சிறு கண்டிப்போடும் கருணையோடும் கேட்கும் தந்தையை ஆசையோடு அணைத்துக்கொள்வார்கள் பிள்ளைகள்.

“ப்ச்… எங்களை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? இவனுக்கு பாடசாலை இன்றில்லை, எனக்கும் வேலை இன்னும் கிடைக்கவில்லை. இதில் நண்பர்கள் வீட்டிற்குப் போவதென்றால் அம்மாவுக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்ல வேண்டும். அதைவிட வீட்டிலேயே இருந்துவிடலாம். வீட்டிலும் எத்தனை நேரம்தான் கைபேசியைக் குடைவது? அதுதான் பொழுது போக இப்படி ஜாலியாகச் சும்மா சண்டை பிடிப்பது போல…” என்று கண்சிமிட்டும் மகளின் தலையை அன்புடன் கலைப்பார் தந்தை.

அதைக் கண்டு முறைப்பான் இளையவன்.

“அப்பா… இவள் பொய் சொல்கிறாள்! என்னை ‘குண்டு’ என்றெல்லாம் கிண்டல் செய்கிறாள். நான் இப்படி இருக்க யார் காரணம்? நான் சிறுவனாக இருந்தபோது ‘சாப்பிடு சாப்பிடு’ என்று வெண்ணெயும் தயிருமாக ஊட்டி வளர்த்தீர்கள். பாருங்கள், இப்போது இப்படி இருக்கிறேன். அதை வைத்துக் கிண்டல் செய்யலாமா அப்பா?” – சகோதரியை முறைத்தவாறு குறை சொல்லும் தம்பியைக் கிண்டலாகப் பார்ப்பாள் விதரணை

“டேய்… அது அப்போ! இப்போவாவது சாப்பாட்டைக் குறைக்கலாம் தானே? இப்போது யார் உன்னைச் சாப்பிடு என்று கொஞ்சுகிறார்கள்?”

“அது… அது வந்து… அம்மா ஆசையாகக் கொடுக்கும்போது எப்படி வேண்டாம் என்று சொல்வது? அம்மாவின் மனது வருந்தக் கூடாது என்பதற்காகத்தான் அம்மா கொடுப்பதை வாங்கிச் சாப்பிடுகிறேன். உமக்கு என்ன வந்தது?” – முறைக்கும் இளையவனின் குண்டுக் கன்னத்தைப் பற்றிக் கிள்ளி,

“டேய் போதும்டா… ரொம்பத்தான் பாவம் பார்க்கிறாய்! ஆனாலும் ஒன்றுடா… இப்படியே போனால் ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் உன் பிள்ளையார் வயிறு வெடிப்பது உறுதி!” என்று நக்கலாகச் சிரித்தாள் விதரணை.

“அப்பா! பாருங்கள் அப்பா உங்கள் மகளை… இவள் மட்டும் உலக அழகி என்று நினைப்பு! எனக்கு மூத்தவள்தான், ஆனால் இப்போதே இவளை விட நான் உயரம் அதிகம். இவள் வகுப்பில் இவள் தான் ரொம்பக் குள்ளம். குள்ளச்சி, குட்டச்சி… கனடியன் கூஸ்… சீ, அது கூட உயரம்! தாரா… வாத்து…” என்று தம்பி பதிலுக்குத் திட்ட, முகம் சிவந்தாள் விதரணை.

“டேய்… யாரைப் பார்த்துடா குள்ளம் என்கிறாய்? நான் அந்த அளவு ஒன்றும் குள்ளமில்லை. ஐந்தடி நான்கு அங்குலம் இருக்கிறேனாக்கும்!” என்று அவள் சண்டைக்கு வர, தன் வாயில் கை வைத்து விழிகள் விரித்து அவளை அதிர்ந்து பார்த்தான் விதுரன்.

“யார்… நீயா? ஐந்தடி நான்கா? பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது என்று அம்மா சொல்வார்கள். நீ ஐந்தடி மூன்று கூட இல்லை!” என்று அவன் எகிற, “அது… நான்… அப்பா! இவன் பொய் சொல்கிறான்… நான் ஐந்து நான்குதான்!” என்று அவள் உதடு பிதுக்கி அடுத்த போருக்குத் தயாரானாள். அதைக் கண்டுகொண்ட தந்தை, அவசரமாக அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்து வைத்தார்.

இப்படிச் சண்டை பிடிப்பதும், பின் ஒன்று சேர்வதுமாகச் சுவாரசியமாகக் காலத்தைக் கடத்தும் இனிமையான குடும்பம்தான் விதரணையின் குடும்பம்.

ஆனால்…

What’s your Reaction?
+1
19
+1
4
+1
6
+1
9
+1
0
+1
1

Related Post

4 thoughts on “நீயின்றி உயிராடும் திகிலாலே – 1”
    1. மிக மிக நன்றி. உங்களின் இந்த கருத்துப் பகிர்வுதான் எனக்கான ஊட்ட சக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!