Sun. Jul 5th, 2026

உயிர் நீ மெய் நான்…! – 12

(12)

அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின் நாற்றம் மூக்கை அறைய, ஒற்றைக் கரத்தால் மூக்கை பொத்திக் கொண்டான், ஆதிபன்.

‘சே… என்ன கழிசடை கட்டிடம் இது…?  இப்படி நாறுகிறது!  இங்கே எப்படித்தான் குடியிருக்கிறார்களோ..?’ என நினைத்தவன் வேக நடையோடு அந்த குடியிருப்பை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் மதிமையின் வீட்டிற்கு முன்னால் நின்றவாறு கதவைத் தட்ட, கதவை யாரும் திறப்பதாயில்லை. மீண்டும் தட்டிப் பார்த்தான்.

“நேரம் ஒன்பது மணிதான் ஆகிறது. அதற்குள் தூங்கியிருப்பாளா? எரிச்சலுடன் கைப்பேசியை எடுத்து அவளோடு தொடர்பு கொள்ள முயன்றான்.

அதே நேரம் குப்பைத் தொட்டியில் மறைந்து நின்றிருந்த மதிமை, இப்போது யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு மெதுவாக வெளியே வந்தாள்.

தெருவிளக்கு வெளிச்சத்தைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அதே நேரம் சந்தேகப்படும்படி யாரும் இல்லை. ஒரு ஐநூரு மீட்டர் தான். அதற்கப்பால் அடர்ந்த மரங்களும், அந்தக் குடியிருப்புக்குமான பூங்கா. அதைக் கடந்து விட்டால் சின்னத் தெரு. அதையும் கடந்து விட்டால் முக்கிய  தெருவை அடைந்துவிடலாம்.

முடிவு செய்தவளாக இரண்டடி வைத்திருக்க மாட்டாள், பான்ட் பாக்கட்டிற்குள் இருந்த அவளுடைய கைப்பேசி பலமான சத்தத்துடன் விழித்துக் கொண்டது.

ஒரு கணம் ஈரக்குலையே நடுங்கிப் போனது மதிமைக்கு.

பதறிப் பான்ட் பாக்கட்டிற்குள் கையை விட்டுக் கைப்பேசியை எடுக்க முயன்றால், அவசரத்திற்கு கைப்பேசி வர மறுத்தது.  இழுத்து எடுத்துக் கைப்பேசியை அணைப்பதற்குள், பின்னால் நிழலாடியது.

பீதியோடு திரும்பிப் பார்க்க, அந்தக் கூட்டத்தில் ஒருவன் கிண்டலுடன் அவளைப் பார்த்தவாறு நெருங்கத் தொடங்கியிருந்தான்.

கூடவே பற்களோடு பற்களை அழுத்தி ஒரு விதமான விசில் ஒலி எழுப்ப, மதிமையின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது.

அதே நேரம் பல முறை கதவைத் தட்டி, கைப்பேசியில் அவளை அழைத்தும் பயனின்றிப் போக, அதற்கிடையில் எங்கே போய்த் தொலைந்தாள் என்கிற கேள்வி எழுந்தது.

அரை மணி நேரத்திற்கு முன்பு தானே என்னோடு தொடர்பு கொள்ள முயன்றாள். வெளியே சென்றவள் இன்னுமா வீடு வந்து சேரவில்லை? யோசித்தவனுக்கு, அங்கேயே நின்ற கதவைத் தட்டிக் கொண்டிருக்கப் பிடிக்கவுமில்லை. அதுவும் அந்தக் கட்டடத்திற்குள் தங்கியிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் குமட்டிக்கொண்டு வர, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் கீழ் தளத்திற்கு வந்து நடக்கத் தொடங்க, எங்கிருந்தோ வேகமாக வந்த ஒருவன், இவன் மீது பலமாக மோதிக்கொண்டான்.

ஆதிபனின் கரத்திலிருந்த கைப்பேசி, தரையில் விழுந்து இழுபட்டுச் செல்ல,

ஆத்திரத்துடன் தன்னோடு மோதியவனை முறைத்துப் பார்த்தான் ஆதிபன்.

அவனோ, அது உறைக்காதவனாக,

“சாரி… சாரி…” என்றவாறு அதே வேகத்தோடு கடந்து செல்ல, வாய்க்குள் அவனைத் திட்டியவாறே நடந்து சென்று கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.

விழுந்த வேகத்தில் திரை நொறுங்கிப் போயிருந்தது. கூடவே உயிர்க்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது.

உள்ளங்கையில் இரண்டு முறை தட்டிப் பார்த்தும் கைப்பேசி எழவில்லை.

Xxxxx xxxxx’ வாய்க்குள் திட்டியவாறு கைப்பேசியை பான்ட் பாக்கட்டிற்குள் நுழைத்தவன், மேலும் முன்னேற, முன் வாசலில் நாலைந்து பேர் எதையோ தேடுவது போல நின்றிருந்தனர். அந்த நேரம் யாரோ அழைப்பது போல விசில் சத்தம் எழுப்ப, அந்த நான்கு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு அந்தத் திசை நோக்கி ஓடத் தொடங்கினர்.

இவனோ குழப்பத்தோடு ஓடியவர்களைப் பார்த்தவாறே வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அதே நேரம், மதிமையைக் கண்டு கொண்ட அந்த எதிரி, விசில் சத்தம் எழுப்பியவாறு அவளை நெருங்கி அவளுடைய கரத்திலிருந்த கைப்பேசியை பறித்துப் பார்த்தான். அந்தக் காலத்துக் கைப்பேசி.

அதைக் கண்டதும் கிண்டலுடன் அவளைப் பார்த்துவிட்டு, அதைத் தூக்கி வீசக் கைப்பேசி எந்த சிக்கலுமில்லாமல் அந்தப் பெரிய குப்பைத் தொட்டியில் போய் விழுந்தது. ஆனால், அவனுடைய அந்த அசைவும், கவனக் கலைப்பும் மதிமைக்குப் போதுமானதாக இருந்தது. அவசரமாகத் தன்னைக் காத்துக்கொள்ள ஏதாவது கைக்கு அகப்படுகிறதா என்று பார்த்தாள். சற்றுத் தள்ளி, பலமான இரும்புக் கம்பி ஒன்று எப்போதோ விழுந்து துருப்பிடித்திருந்தது.

கண் இமைக்கும் வேகத்தில் பாய்ந்தவள், அந்தக் கம்பியை எடுத்துச் சுழன்று எதிரியின் தலையில் அடிக்க, அதை எதிர்பாராதவன் அவள் அடித்த வேகத்தில் நெற்றி பிளக்க, வலியில் முனங்கியவாறு குனிந்த நேரம், மீண்டும் ஓடத் தொடங்கினாள் மதிமை.

அதே நேரம் தன் வாகனத் தரிப்பிடத்திற்கு வந்த ஆதிபனுக்குக் கொஞ்ச நேரம் என்ன செய்வது என்கிற யோசனை எழுந்தது. ‘மகனிடம் அவளை அழைத்து வருவதாகக் கூறிவிட்டிருந்தான். இப்போது அவள் இல்லை என்றதும் எப்படி நடந்து கொள்வான்? மேலும் அழுவானா? காய்ச்சல் அதிகரிக்குமா?’ இப்போது எல்லாவற்றையும் விட மகனின் நிலைதான் அவனுக்குப் பெரும் வலியைக் கொடுத்தது.

இனி அங்கிருந்து என்ன செய்வது? புறப்பட வேண்டியதுதான்… எண்ணியவாறு கதவைத் திறந்து உள்ளே ஏற முயன்றவனின் பார்வை, அவனுடைய வானகத்திற்கு முன்புறமிருந்த அடர்ந்த செடியொன்றில் தொங்கிக் கொண்டிருந்த ஹுடியின் மீது நிலைத்தது.

முதலில் அதை அலட்சியமாக நினைத்து உள்ளே ஏறியவனுக்கு, எதுவோ உறுத்தியது. மின்விளக்குக் கம்பம் சற்று தள்ளியிருந்ததால், அந்த ஹுடியின் நிறம் சற்று தெளிவாகவே தெரிந்தது.

விரைந்து சென்றவன் தொங்கிக் கொண்டிருந்த அந்த ஹுடியை இழுத்து எடுத்துப் பார்த்தான். அந்த ஹுடியில் அங்கும் இங்கும் தெறித்தாற்போல பதியப்பட்டிருந்த நட்சத்திரங்கள் அது யாருடையதாக இருக்கும் என்பதை அவனுக்குப் புரிய வைத்தது.  இந்த ஹுடியைத் தானே அன்று அந்தப் பெண் அணிந்திருந்தாள்?

நம்ப முடியாதவனாக அதை நாசியில் வைத்து முகர்ந்து பார்த்தான். அந்தக் குடியிருப்புக்குரிய வாசனையையும் மீறி, அவளிடமிருந்து வந்த லவன்டர் வாசனை அவனுடைய நாசியைத் துளைத்தது. கூடவே பாக்கட்டில் சில்லறை சத்தம் கேட்க, கரத்தை உள்ளே விட்டு எடுத்துப் பார்த்தான்.

‘இருபத்தைந்து சதங்கள் அவன் கரத்தோடு வந்தன. அப்படியானால்  நிச்சயமாக இது அவளுடையது தான்.  அதுவும் சற்றிற்கு முன்புதான் இங்கே தொங்க விடப்பட்டிருக்க வேண்டும். அவளுடைய இந்த ஹுடி ஏன் இங்கே இருக்கிறது? ‘குழப்பத்தோடு திரும்பியவனின் விழிகள் அப்போதுதான் அதைக் கண்டது.

சற்றுத் தொலைவில் ஒரு பெண் ஓடுவதும், அவளை நால்வர் துரத்துவதையும் கண்டவனுக்குப் புருவங்கள் முடிச்சிட்டன. கூடவே விழிகள் ஹுடியையும் ஏறிட்டு விட்டு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சரியாகவே கணக்குப் போட, ஏனோ இவனுடைய உடல் ஆத்திர மிகுதியில் உதறியது. கை முஷ்டிகள் இறுகின. பற்கள் ஒன்றோடொன்று கடிபட்டன.

அடுத்த கணம், கரத்திலிருந்த ஹுடியை வாகனத்தின் மீது எறிந்துவிட்டு, மதிமையை நோக்கி ஓடினான், ஆதிபன்.

எதிரிகளிடமிருந்து தப்பி, படு வேகமா ஓடிக் கொண்டிருந்த மதிமை, அங்கே அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கூடாக ஓடத் தொடங்கி, கடைசியில் ஒரு உருவத்தோடு பலமாக மோதிக் கொண்டாள். மோதியது யார் என்று தெரியாமல் திமிறியவளை, தன் உடலோடு இறுக்கமாக வளைத்துப் பிடித்தவன்,

“ஷ்… நான்தான்… சத்தம் போடாதே!” என்று எச்சரித்தவாறு, அவளைக் கைவிடாமலே சுழன்று சென்று அங்கிருந்த பெரிய மரத்திற்குப் பின்னால் மறைந்து கொள்ள, இவர்கள் மரத்திற்குப் பின்னால் மறைந்திருப்பது தெரியாமலே இரண்டு குண்டர்களும் அவர்களைக் கடந்து சென்றனர்.

உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடிய மதிமை, ஆதிபனின் கரங்களில் சிக்கிக் கொண்டது தெரிந்ததும், அதுவரையிருந்த அழுத்தமும், அச்சமும் மாயமாக மறைந்து போக, யாரோ தெரிந்த ஒருவனின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்கிற நிம்மதியில் சக்தி அனைத்தும் வடிந்த நிலையில், அவனுடைய பரந்து விரிந்த மார்பில் தன் தலையைப் பதித்து அழுகையில் விம்மத் தொடங்கி விட்டாள். அதை உணர்ந்தவனாக அவளை இறுக அணைத்தவன்,

“இட்ஸ்… ஓக்கே… இட்ஸ் ஓக்கே….” என்று சமாதானப் படுத்த விளைபவனாக அவளுடைய முதுகை வருடிக் கொடுக்க, அவனுடைய அடி மார்போ வேகமாகத் துடித்த அவளுடைய   இதயத்தை உள்வாங்கிக் கொண்டது.

“பயப்படாதே…! இங்கிருந்து விரைவாகவே போய் விடலாம்… உன்னை சமப்படுத்திக் கொள்…! அழாதே…! சின்ன சத்தம் கூட எழுப்பாதே..!” என்று எச்சரித்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுடைய வாகனத்திற்கு போய் விட்டால் போதும்… தப்பிவிடலாம்.

மெதுவாக அணைத்திருந்த கரத்தை விலக்கி அவளுடைய வெற்றுத் தோளில் கரம் பதித்துத் தன்னிடமிருந்து விலக்க, அவள் தோற்றத்தைக் கண்டவன் அதிர்ந்து போனான்.

நெற்றியில் வடிந்த இரத்தம், அவளுடைய வெண்ணிற உள் பெனியனை செந்நிறமாக மாற்றி இருந்தது. அந்தக் குளிர் வெண்ணிறத் தோள்கள் கண்டிச் சிவந்திருந்தன. முகம் பயங்கரமாக இருந்தது.

“யு… ஓக்கே…?” என்று மென்மையாகக் கேட்க, விழிகளில் கண்ணீர் தேங்க, ‘ஆம்’ என்றாள் அவள்.

உடனே தான் அணிந்திருந்த தடித்த ஜாக்கட்டைக் கழற்றி அவள் தோள்களின் மீது போட்டு விட்டவன்,

“வா…” என்றவாறு அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்க,  அவர்கள் பக்கமாக இருவர் வருவது மின்விளக்கின் வெளிச்சத்தில்  தெரிந்தது. சட்டென்று அவளை இழுத்துக்கொண்டு, அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் பதுங்கிக் கொள்ள, அவன் இழுத்த வேகத்தில்,  அவனுடைய தோளோடு மோதிய அவளைச் சட்டென்று இழுத்துத் தனக்கு முன்பாக நிறுத்திப் பாதுகாப்பாக அணைத்துக் கொண்டான், ஆதிபன்.

ஒற்றைக் கரமோ அவளுடைய இடையோடு பாய்ந்து சென்று வயிற்றில் ஊர்ந்து  இறுக்கிக் கொண்டது.

அவனோடு மோதியதோ, அவன் தன்னை இழுத்து அணைத்ததோ, அவனுடைய பரந்த உடலுக்குள் கோழிக்குஞ்சாகப் புதைந்து கொண்டதோ எதுவும் மதிமைக்கு உறுத்த வில்லை. விழிகளோ அச்சத்தோடு அழுந்த மூடிக்கொண்டன.

வரும் எதிரிகள் அவர்களைக் கண்டு கொண்டால்? தேகம் நடுங்கியது. நடுக்கத்தோடு வயிற்றில் அழுத்தமாகப் பதிந்திருந்த அவனுடைய பலம் பொருந்திய கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் மதிமை.

கொஞ்ச நேரத்தில் எந்த சத்தமும் இல்லாது போகத் தலையச் சற்று திருப்பிப் பார்த்தான் ஆதிபன். அவர்களைக் காணவில்லை. மறுபக்கம் திரும்பி சற்று எட்டியும் பார்த்தான். ம்கூம்… வேறு திசைக்குச் சென்று விட்டார்கள் போல.

நிம்மதியுடன், அதுவரை மதிமையை அணைத்திருந்த கரத்தை விடுவித்தவன்,

“வா…” என்றவாறு  அவள் கரத்தை விடாமலே பற்றியவாறு இழுத்துச் சென்றான், ஆதிபன்

மதிமைக்கு அந்த நேரத்தில் ஆதிபன் வானத்திலிருந்து கீழே குதித்த தேவதூதன் போலத்தான் தோன்றியது. தக்க தருணம் பார்த்து அவளைக் காக்க வந்துவிட்டானே.

நன்றிப் பெருக்கோடு தன்னை இழுத்துக் கொண்டு சென்றவனைப் பார்த்தவாறே அவன் சென்ற திசைக்கு இழுபட்டுச் சென்றாள், மதிமை.

அந்த கட்டடத்தின் சுவர் ஓரமாக மதிமையோடு பதுங்கிக் கொண்டவன், எங்காவது அந்த எதிரிகள் வருகிறார்களா என்று பார்த்தான். மதிமையோ, கண்களில் கண்ணீர் பொங்க,

“ந… நன்றி…” என்றாள் திக்கித் திணறி.

அவளுடைய நன்றியைக் கேட்டதும், அவளை நோக்கித் திரும்பியவன்,

“உன் நன்றியை பிறகு வாங்கிக் கொள்கிறேன். இவர்கள் யார்…? உன்னை ஏன் துரத்துகிறார்கள்…?” என்றான் அங்கும் இங்கும் பார்த்தவாறு.

“தெரியவில்லை… ஆனால் இவர்கள் சட்ட விரோதமான செயல்கள் செய்பவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வந்திருக்கிறார்கள் போல. பெண்களைக் கடத்திச் சென்று…” அவள் முடிக்கவில்லை, சட்டென்று அவளை நோக்கித் திரும்பியவன், அவளுடைய வாயைத் தன் கரங்களால் அழுந்த மூடிக் கொள்ள, இவளோ என்ன என்பது போலப் பார்த்தாள்.

“ஷ்…” என்று மெதுவாக எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே ஒருசிலர் நடந்து வரும் சத்தம் மதுமையின் காதில் விழுந்தது. அதுவும் மிக அருகாமையில்.

மீண்டும் உயிர்க்குலை அதிர்ந்தது. இதயம் நின்றுவிடுவேன் என்று பயமுறுத்தியது. சற்று முன் தனியாகப் போராடினாள். இப்போது அவளுக்குத் துணையாக ஒருத்தன் இருக்கிறான் என்கிற நிம்மதியோடு, ஆதிபனோடு  ஒட்டிக் கொண்டாள் மதிமை.

அவனுடைய டீஷேர்ட்டைத் தன் இரு கரத்தாலும் இறுகப் பற்றி, அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொள்ள, ஆதிபனின் உடல் ஒரு கணம் இறுகியது.

சற்று முன் அவனாக அவளை இழுத்து அணைத்த போது எதுவும் தோன்றவில்லை தான். ஆனால் இப்போது அவளாக அவன் மார்பில் சாய்ந்தபோது, அவன் உடலில் ஒரு வித இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. உள்ளே என்னவோ திகுதிகு என்று எரிந்தவாறு எழும்பத் தொடங்கியது. மனம் அந்த நிலையிலும் படபடத்தது. புத்தியோ அவளுடைய அந்த நெருக்கத்தை ரசிக்க முயன்றது.  அவனையும் மீறி தேகம் அவள் உடலோடு மேலும் ஒட்ட விளைந்தது.

இப்படி அவன் உணர்வுகளைப் பற்றி அறியாத மதிமை, மேலும் அவனோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள முயல, ஆதிபனுக்குத்தான் இழுத்துப் பிடித்த மூச்சை அத்தனை சுலபத்தில் வெளியிட முடியவில்லை. புத்தி தன் செயற்பாட்டை சுத்தமாக இழந்தது.

அதே நேரம், அந்த எதிரிகளில் ஒரு சிலர் வேகமாக அவர்கள் மறைந்திருந்த திசை நோக்கி வர,  அவர்களின் கால் பட்டு, எப்போதோ குடித்துவிட்டு வைத்த போத்தல் ஒன்று உருண்டு செல்ல, அதுவரை குழம்பிக் கொண்டிருந்த ஆதிபன், சட்டென்று விழித்துக்கொண்டான்.

அடுத்த கணம், மதிமையின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு வேறு திசை நோக்கி ஓட முயன்றான். அந்தோ பரிதாபம், அந்தத் திசையிலும் ஓரிருவர் நிற்பதைக் கண்டதும், குறுக்காக ஓட வழியிருக்கிறதா என்று பார்த்தான்.

முன்பு கண்ட இருவர் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.

இன்னும் கொஞ்சத் தூரம்தான் போய்விட்டால் அவனுடைய வாகனத்தை அடைந்து விடலாம். ஆனால் எப்படி? சுத்தவர நிற்கிறார்களே.  இப்போது திரும்பவும் முடியாது. முன்னேறவும் முடியாது. பக்கமாகவும் செல்ல வழியில்லை. குழம்பிப் போனான், ஆதிபன். மெல்ல மெல்ல மூன்று திசையிலிருந்தும் எதிரிகள் நெருங்கத் தொடங்கினர். அதுவும் இடது பக்கத்திலிருந்து வந்தவர்கள் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் இவர்களைக் கண்டு கொள்வது நிச்சயம்.

தயங்கி நின்றது ஒரு சில கணமே. மறு கணம், அவளை நோக்கித் திரும்பிய ஆதிபன்,

“என்னை மன்னித்து விடு, மதிமை. எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுத்து விட்டு, அவர்கள் நெருங்குவதற்குள்,

மதிமையைச் சுவரோடு அழுத்தித் தன் பெரிய உடலால் மறைத்துக்கொண்டான் ஆதிபன். அடுத்த கணம், அவளுடைய  முகத்தைத் தன் கரங்களால் பற்றிச், சற்றும் யோசிக்காது அவளுடைய தளிர் மென் உதட்டோடு இறுகிய தன் அழுத்தமான உதட்டினைப் பொருத்திக் கொள்ள, கூஜாவுக்குக் கச்சிதமாகப் பூட்டிக்கொண்ட மூடி போல, இரு உதடுகளும் மிகப் பொருத்தமாக ஒன்றோடு ஒன்று பொருந்திப் போனது.

கரங்களோ.. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த காதலியை வருடுவது போல, அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.

சட்டென்று பார்த்தால் இரவுக் குறியில் களவொழுக்கத்தில் தலைவனும் தலைவியும் கூடிக் குலவும் காட்சி போல் தோன்றும்.  ஆனால் சத்தியமாக மதிமை இதை  எதிர்பார்க்கவில்லை.

முதலில் அதிர்ந்தவள், அடுத்த கணம் அவனை உதற முயல, எங்கே, அவனுடைய அழுத்தமான, பலம் பொருந்திய கரங்களிலிருந்து அவளால் இம்மியும் விலக முடியவில்லை.

அவள் திமிறிய நேரம், எதிரிகள், இவர்கள் இருவரையும் நெருங்கி விட்டிருந்தனர்.

அதை உணர்ந்து அதுவரை திமிறிக் கொண்டிருந்த மதிமை, தன் திமிறலை விடுத்துச் சிலை என நின்றிருந்தாள்.

ஒரு பக்கம் அவளைக் காவு வாங்கும் எதிரிகள். இன்னொரு பக்கம், அவள் சம்மதமில்லாமலே தப்பாக நடக்க முயலும், அந்த ஆதிபன்.

இரண்டுக்கும் மத்தியில் மலைத்துப் போய் நின்றிருந்த மதிமைக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் புத்தி தன் செயற்பாட்டை இழந்து கொண்டது.

நெருங்கும் எதிரிகளுக்கு அஞ்சுவதா, இல்லை இதழைக் களவாடிய அவனை நினைத்துப் பதறுவதா? ஐயோ…! எதிரிகள் நெருங்கி விட்டார்களே…! அடுத்து என்ன நடக்கும்? இவர்களைக் கைப்பற்றுவார்கள். இவளை மட்டும் தூக்கிப் போவார்கள். அடுத்து இவனுக்கு என்ன நடக்கும். அவர்களிடம் வேறு துப்பாக்கி இருக்கிறதே. எந்த சிக்கலும் இல்லாமல், அவனைச் சுட்டு  விட்டுப் போவார்கள். இவன் இறந்தால் வரோதயனின் நிலை என்ன? நினைக்கும்போதே கால்கள் பலத்தை இழந்தன. மயங்கிவிடுவோம் என்பது போலச் சரிந்தவளை, ஆதிபன் கைவிடாமலே மேலும் இறுகப் பற்றிக் கொண்டான்.

அதே நேரம் அந்த எதிரிகள், கட்டுண்டிருந்த மதிமையையும், ஆதிபனையும் கண்டதும் சந்தேகத்துடன் அவர்களைப் பார்க்க, அதைப் புரிந்து கொண்ட ஆதிபனின்  உடல் கூட இறுகிப் பின் தளர்ந்தது.

அதில் ஒருவன் ஆதிபனின் தோளில் கரத்தைப் பதிக்க, அதுவரை மதிமையின் உதடுகளில் குடித்தனம் நடத்தியிருந்தவன் எதிரி தோளைத் தொட்டதும் அடி வயிறு கலங்கினாலும், அதைக் காட்டிக் கொள்ளாது மதிமையின் இதழைப் பிரியாமல் அப்படியே நின்றிருக்க, அவனோ பலமாக ஆதிபனின் தோளில் தட்டினான்.

இப்போது தன் காதலியைப் பிரிய மனமில்லாதவன் போல, ஒற்றைக் கரத்தால் மதிமையை எதிரிகளிடமிருந்து மறைத்துக் கொண்டவன், அவளை இழுத்துத் தனக்குள் புதைத்தவாறு எரிச்சலை வெளிப்படையாகவே காட்டுபவனாக நிமிர்ந்து முன்னால் நின்று இருந்தவனை ஏறிட்டு,

“வட்ஸ் அப் மான்…” என்றான் ஆத்திரத்தோடு.

இதுவரை பார்த்திராத புதியவன் என்பதாலும், அவன் முகத்தில் தெரிந்த எரிச்சலையும் கண்டு, தன் கரத்தை எடுத்துக்கொண்ட எதிரி, இப்போது குனிந்து அதுவரை முத்தமிட்டுக் கொண்டிருந்த பெண்ணைப் பார்க்க முயன்றான்.

ஆனால் ஆதிபன் லாவகமாகத் தன் பெரிய உடலால் அவளை சுலபமாகவே மறைத்துக் கொண்டதாலும், அவள் அணிந்திருந்தது ஆதிபனின் மேல்சட்டை என்பதாலும், மதிமையை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. கூடவே… பற்களை இழித்தவாறு அசிங்கமாக எதையோ சொல்லி விட்டு,

“இங்கே செய்யாமல், வேறு எங்காவது போய் செய்…” என்று விட்டுக் கிண்டலுடன் சிரித்தவாறு விலகிச் செல்ல, ஆதிபனோ அவர்களை அலட்சியம் செய்வது போல மதிமையை நோக்கி மீண்டும் குனிந்தான்.

ஆனாலும் அவனுடைய கரங்கள் பயங்கரமாக நடுங்குவதும், கால்கள் பயத்தில் பலம் இழப்பதும் அவனுக்கு மட்டும்தான் தெரிந்தது.

அந்த நேரத்தில் தோன்றிய யோசனையில் துணிச்சலாக அவளை முத்தமிட்டான் தான். ஆனால், இருவரும் அவர்களிடம் சிக்கியிருந்தால்? தன் கைவளைவில் இருக்கும் பெண்ணைப் பார்க்க வேண்டும் காட்டு என்று அவர்கள் கேட்டார்கள் என்றால்?  இல்லை, அவர்கள் கண்டுகொண்டால்…? நினைக்கும் போதே சர்வமும் நடுங்கியது ஆதிபனுக்கு.

ஆனாலும் கடவுள் அருளால், இருவரையும் காதலர்கள் என்று முடிவு கட்டி விலகி விட்டார்கள்.

அந்த எதிரிகள் விலகிய பின்னும், தனக்குள் புதைந்திருந்தவளை விட்டு விலகாமல், தலையை மட்டும் சற்றுத் திருப்பி, அவர்கள் எங்கே போகிறார்கள் என்று இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, மூன்று திக்காலும் வந்த எதிரிகள், ஒருவரை ஒருவர் சந்தித்து எதையோ பேசிவிட்டு மறு திசை நோக்கிச் சென்றதும் தான், இவனுக்கு உயிரே வந்தது.

இப்போது மதிமையை விட்டு விலகியவன், அவளிடம் எதுவும் பேசாமல் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்தவாறு தன் வாகனம் இருக்கும் திசை நோக்கி ஒரே பாய்ச்சலாக ஓடினான். நல்ல வேளை எதிரிகள் மறு பக்கத்தில் தேடிக்கொண்டிருந்தால், இந்தப் பக்கம் யாரையும் காணவில்லை.  கண்ணிமைக்கும் நொடியில் கதவைத் திறந்தவன்,

“ஏறு… சீக்கிரம்…” என்றவன், பாய்ந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை உசுப்ப, மதிமையும் விவாதிக்காமல் பாய்ந்து முன்னிருக்கையில் அமர, அடுத்த கணம் அவனுடைய வாகனம் மின்னல் விரைவுடன் முக்கிய பாதையை நோக்கிப் பாய்ந்தது.

இவர்களின் வாகனம் அந்தக் கட்டடத்தை விட்டு விலகவும்  எதிரிகள், அத் திசையாக வரவும் நேரம் சரியாக இருந்தது.

 

 

What’s your Reaction?
+1
13
+1
3
+1
4
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!