2-
அவளைப் பார்த்துப் புன்னகைத்த ஆல்ஃபிரெட், அவளுக்கு அருகாமையிலிருந்த இருக்கையைக் காட்டி,
“இங்கே நான் உட்காரலாமா?” அனுமதி கேட்டான்.
“வை நாட்…” சொன்னவள், தானும் தன் இருக்கையில் அமர்ந்தவாறு, மீண்டும் அங்கே நடந்துகொண்டிருந்த விருந்தை வேடிக்கை பார்க்க, அவளை ஆர்வமாகப் பார்த்தான் ஆல்ஃபிரெட்,
“நீ சாப்பிடவில்லையா?” கேட்டான் அவளிடம் பேச விருப்புக்கொண்டு. வெறுமை கலையாமலே திரும்பி அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள்,
“இல்லை…” என்றாள் ஒற்றைச் சொல்லாக.
அவளுடைய அந்த ஒதுக்கம், அல்லது அலட்சியம், இல்லை அக்கறையின்மை அவனை ஒரு கணம் வியந்து பார்க்கச் செய்தது.
அவனுக்குத் தெரிந்து, எந்தப் பெண்ணும் அவனை இந்தளவு ஒதுக்கியதில்லை. சொல்லப் போனால், அவனுடைய கருத்தைக் கவர்வதற்காக நிறையப் பெண்கள் முயன்றிருக்கிறார்கள். நெருக்கமாய்ப் பழகியிருக்கிறார்கள். ஆனால் இவள், வேறு விதமாக இருந்தாள்.
அவனுடைய சுவாரசிய விழிகள் மேலும் அவள் மீது அழுத்தமாகப் பதிய,
“வருகிறாயா சாப்பாடு எடுத்து வரலாம்?” கேட்கத் தலை சரித்து அவனைப் பார்த்தாள் நேயநறுமை.
அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் சொந்தக்காரன் அவன். அவன் கேட்கிறான். மறுக்க முடியாது. முகத்தில் புன்னகையைத் தேக்கியவள்,
“வை நாட்…?” கேட்டவாறு எழ, இங்கே ஈழத்தில்,
கை கால்கள் முளைத்த இரண்டு வயது சிட்டுக் குருவியாக, ஆதியதுலனுடையதும், நேரிழையினதும் வாரிசு ஓடிச் சென்று வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தந்தையின் கால்களின் மீது சாய, அவசரமாகக் கோப்புகளைத் தன் பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஆதியதுலன், காலில் முட்டி மோதிய குழந்தையை உணர்ந்து தான் செய்துகொண்டிருந்த வேலையைக் கைவிட்டு அந்தப் பூம்பந்தை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.
அதன் வாயில் சோற்றுப் பருக்கை.
அதைக் கண்டு புன்னகைத்தவன்,
“என்ன… சாப்பிட்ட கையோடு ஓடிவந்து விட்டீர்களா?” மென் நகையுடன் கேட்டவன், அருகே இருந்த மென்தாளை இழுத்து எடுத்து அதன் வாயைத் துடைத்துவிட்டுக் குப்பையில் போட, கையில் உணவுப் பாத்திரத்தோடு ஓடிவந்தாள் நேரிழை.
“உங்களிடம் வந்துவிட்டாளா ஆதி. பாருங்களேன்… ஒரு இடத்தில் நிற்கமாட்டேன் என்கிறாள்…” அன்னையாய் குறை சொல்லித் தந்தையின் தோளில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை வாங்க முயல, அதுவோ, தாயிடம் வரமாட்டேன் என்று தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொள்ள, உள்ளம் கனிந்து போனான் தந்தையாய்.
“சரி… சாப்பாட்டை என்னிடம் கொடு. நான் ஊட்டிவிடுகிறேன்…” அவன் சொல்ல,
“என்னது நீங்களா…? வேலைக்குப் போக வேண்டுமே…? நீங்கள் புறப்படுங்கள்… ஏய்.. மகிழ்… என்னிடம் வா…” கேட்டவாறு குழந்தையை வாங்க முயல, அதுவோ உதடுகளைப் பிதுக்கி அழத் தொடங்கியது.
உடனே உருகிப் போனான் ஆதியதுலன்.
“ஐந்து நிமிடங்கள் தாமதமாகப் போவதால் உலகம் அழிந்துவிடாது… நானே ஊட்டிவிடுகிறேன்… தட்டைக் கொடு…” சொன்னவன் அவளிடமிருந்து தட்டைக் கிட்டத்தட்டப் பறித்து, குழந்தையை அங்கிருந்த மேசையில் அமர்த்திவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட, அவளோ சமத்தாக உண்ணத் தொடங்கினாள். அந்தக் காட்சியை விழிகள் நிறையப் பார்த்தாள் நேரிழை.
அவள் என்ன அதிர்ஷ்டம் செய்தாளோ, அவளுடைய கணவனாக இவன் கிடைத்தான். இல்லையென்றால் என்னாகியிருக்கும். நன்றி பெருக்கோடு விழிகளில் கண்ணீர் சேர அவனை ஏறிட்ட நேரம், அவனோ உணவை மகளுக்கு ஊட்டி விட்டு, அதன் உச்சியில் உதடுகளைப் பதித்து,
“வேலையிலிருந்து அப்பா வரும் வரை, அம்மாவுக்குத் தொல்லை கொடுக்காமல் நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும்.” அவன் சொல்ல, அதைக் கேட்டுப் புன்னகைத்தாள் நேரிழை.
“யார்…? உங்கள் மகள் நல்ல பிள்ளையாக இருக்கிறதாக்கும்? டெரிபிள் டூ என்றால் என்ன என்று இப்போதுதான் தெரிகிறது. ஒரு இடத்தில் இருந்தால் போதாதா… அப்படியே என் அக்கா போல அத்தனை வால். இவளைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா இதைத்தான் சொல்கிறார்கள். அக்காவும் ஒரு இடத்திலிருக்க மாட்டாளாம். எதையாவது போட்டு உடைத்துக்கொண்டே இருப்பாளாம்…” இவள் சொல்ல, ஒரு கணம் ஆதியதுலனின் செயல் தடைப்பட்டது.
சட்டென்று அவனுடைய மனக்கண்ணின் முன்னால், எழிலோவியமாய் வந்து நின்றாள் நேய நறுமை. மறு கணம் அந்த ஓவியம் கலைந்து போக, அதுவரை கனிந்திருந்த முகம் சட்டென்று இறுகிப்போனது.
“சரி… நான் கிளம்புகிறேன்…” என்றவன், குழந்தைக்கு ஊட்டிமுடித்த தட்டை அவளிடம் கொடுக்க, அதை வாங்கியவாறே,
“ஆதி… இவளுடைய காது குத்துக்கு அத்தனை பேரையும் அழைத்தாயிற்று. அம்மாவும் அப்பாவும் இந்த வாரமே வந்துவிடுவார்கள்…”
“ம்…”
“ஆனால்… நேயா மட்டும் வரமாட்டாளாம்…! அவள் குழந்தையின் முதலாவது பிறந்த நாளுக்குக் கூட வரவில்லை. இப்போதும் வரவில்லை என்கிறாள். ஒரு முறை நீங்களாவது அழைத்துப் பாருங்களேன்…?” ஏக்கமாகக் கேட்க, திரும்பி நேரிழையைப் பார்த்தான் ஆதியதுலன்.
“வரப் பிடிக்காதவர்களை எதற்கு வலுக்கட்டாயமாக அழைக்கிறாய் நறுமை? விடு… உன்னையும் உன் குழந்தையையும் அவளுக்குப் பார்க்க ஆர்வம் இருந்தால் வருவாள்…” என்று அவன் கறாராகச் சொல்ல,
“அதில்லை ஆதி…! இந்த முறை அவள் கட்டாயமாக வரவேண்டும்…! அவளிடம் நான் நிறையப் பேச வேண்டும்…” நேரிழை சொல்ல அவளை ஒரு மாதிரிப் பார்த்தான் ஆதியதுலன்.
“என்ன பேசப்போகிறாய்?” அவன் கூர்மையோடு கேட்க, ஆதியதுலனை அழுத்தமாகப் பார்த்தாள் நேரிழை.
“பேசவேண்டியதைப் பேசித்தான் ஆகவேண்டும் ஆதி… எத்தனை நாட்களுக்கு இப்படி ஒதுங்கியிருக்க முடியும். பிளீஸ் ஆதி… நீங்கள் அழைத்தால் நிச்சயமாக வருவாள்… ஒரு முறை அழைத்துப் பாருங்களேன்…” என்றாள் விழிகளைச் சுருக்கி.
அதில் நேயநறுமையைக் கண்ட ஆதியதுலன் ஒரு கணம் தடுமாறித்தான் போனான். நேரிழையிடம் நிறைய உடல் மொழி நேயநறுமையைப் போலவே இருக்கும். இப்படி விழிகளைச் சுருக்குவது, கோபம் வந்தால் முகம் சிவப்பது, பிடிக்கவில்லை என்றால் உதடுகளைச் சுழிப்பது, கேள்வியின் போது இமையை மேலே தூக்குவது, தவறு செய்தால் நாக்கைக் கடிப்பது, என்று அவன் மறக்க நினைத்தாலும் பிடிவாதமாக அவளை நினைவுபடுத்திக் கொண்டிருப்பாள் நேரிழை.
பற்களைக் கடித்தவன்,
“நீங்கள் யாரும் அழைத்தும் வராதவள், நான் அழைத்தா வரப் போகிறாள்? ஏன்… உன் அக்காவிடம் மானங்கெடச் சொல்கிறாயா? பிடித்தால் நீங்களே அவளை வரவழையுங்கள்… என்னை இதில் கோர்த்துவிடாதீர்கள்…” உறுதியாகச் சொன்னவன், உடனே கிளம்பிவிட, இவளுக்கோ முகம் வாடி விட்டது. இப்படி அத்தனை பேரும் ஒதுங்கிக் கொண்டால் சிக்கலை எப்படிச் சரியாக்குவது?
நேரிழையைப் பார்த்துக் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிறது. அவளைப் பார்க்க ஆசைப் பட்டும், அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் ஒதுங்கி இருப்பவளை என்னவென்று சொல்ல.
அம்பிகா கூட, நேயநறுமையை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார்.
“இவளுக்கு என்னாயிற்றேன்றே தெரியவில்லை நேருமா… அவள் எங்களைத் தவிர்க்கிறது போலவே தோன்றுகிறது. வன்கூவர் போனதற்குப் பிறகு, டொரன்டோ வரவேயில்லை. அழைத்தாலும் அங்கே வேலை, இங்கே வேலை என்று மறுக்கிறாள். சரி நாங்கள் வீட்டை விற்றுவிட்டு அங்கே வருகிறோம் என்றால், அதற்கும் மறுக்கிறாள். முன்பு தனியாக எங்களை விட்டு இருந்தே பழக்கப்படாதவள், இப்போது தனிமைதான் பிடித்திருக்கிறதாம். திருமணப் பேச்சை எடுத்தாலே சீறுகிறாள். அப்பாவும் நானும் எவ்வளவோ பேசிப் பார்த்துவிட்டோம். கொஞ்சம் கூட இணங்கி வருகிறாள் இல்லை. சரி யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டால் அதுவுமில்லை என்கிறாள். இந்த வயதில் திருமணம் செய்யாமல் எந்த வயதில் திருமணம் செய்வது? சொன்னால் புரிந்து கொள்ள மறுக்கிறாள்…” அம்பிகா மூத்த மகளின் கவலையில் கூற, இவளுக்கும் சகோதரியின் இந்த மாற்றம் பெரும் வியப்பை ஏற்படுத்தவே செய்தது.
எதற்காக அவள் இந்தளவு ஒதுங்குகிறாள்? சத்தியமாகப் புரியவில்லை நேரிழைக்கு. இவள் கூட சகோதரியைச் சென்று பார்க்க பல முறை முயன்றாள். ஒவ்வொரு முறையும் அமெரிக்கா போகிறேன், கியுபெக் போகிறேன், மெக்சிகோ போகிறேன் என்று, இவள் வரவைத் தடுத்து விட்டாள். எத்தனை முறைதான் கேட்க முடியும். ஒரு கட்டத்தில் சலித்துப் போய் நேரிழையே அவளைப் பார்க்கும் எண்ணத்தை விட்டுவிட்டாள்.
இதில் அவள் தாயாகப் போகிறாள் என்கிற செய்தியை அறிந்த போது கூட அவளைப் பார்க்க வரவில்லையே. தொலைப்பேசியில் வாழ்த்துச் சொன்னாள். ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, பரீட்சை நேரம் என்றாள்.
குழந்தை பிறந்து முப்பத்து ஒன்றுக்கும் அவள் வரவில்லை. பிறகு குழந்தையின் பிறந்த நாளுக்கு இப்போதுதான் புதிதாக வேலை கிடைத்திருக்கிறது. உடனே விடுப்பு எடுக்க முடியாது என்றாள். அதன் பிறகுதான் மெல்ல மெல்ல அவளுடைய ஒதுக்கம் புரியத் தொடங்கியது. அலசி ஆராய்ந்த போது, என்று இவளுக்குத் திருமணம் நடந்ததோ, அதன் பிறகு இவளிடம் பட்டும் படாமலும் தான் பேசுகிறாள். காரணம் அதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ என்று நினைத்துத் தூக்கம் இல்லாமல் கலங்கியதுதான் அதிகம். இதைப் பற்றி சகோதரியிடம் பேசி அறிய முயன்றால், அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் ஒதுங்கிப்போனாள் நேய நறுமை.
இவள்தான் காரணம் புரியாமல் தவித்துப் போனாள். தமக்கை மீது கோபமிருந்தாலும், அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து, தைத்திருநாள் வாழ்த்து, புதுவருட வாழ்த்துகளைக் குறுஞ்செய்தியாக அனுப்புவதை மட்டும் நிறுத்தவில்லை. இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் நேரிழைக்கு அம்மை போட்டு விட்டது. அதன் பிறகு அவள் தேறிவர பாஸ்கரனுக்கு இதயத்தில் பிரச்சனை என்று அதற்குச் சிகிச்சை அது இது என்று நான்கு மாதங்கள் ஓடி விட்டன. குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட முடியவில்லையே என்று பாஸ்கரனுக்கு நிறைய வருத்தம். அவருடைய மனத் திருப்திக்காகத்தான், இத்தனை நாட்களாகக் குழந்தைக்கு காது குத்துப்படாமல் இருந்ததைப் பயன்படுத்தி, காதுகுத்து விழாவை, விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்தார்கள். இல்லை கொண்டாட வாய்ப்பை உருவாக்கினாள் நேரிழை. அப்போதாவது சகோதரி வரமாட்டாளா என்கிற ஆசைதான்.
இந்த விழாவுக்கும் நேயநறுமை வராமல் போய்விடுவாளோ என்கிற அச்சம் நேரிழையை ஆட்டிப்படைக்கவே செய்தது.
காரணம் தெரியவில்லை. இப்போது சமீப காலமாக மூத்தவளின் நினைவு அடிக்கடி வந்து வாட்டுகிறது. அவளோடு பழையது போலக் குறும்புத் தனமாக விளையாட ஆசை வருகிறது. முன்பு போல இவள் முகத்தில் மீசை வரைந்து கோபப் படுத்தச் சகோதரி பக்கத்தில் வேண்டும் போலப் பெரும் ஏக்கம் எழுகிறது.
இவளுடைய இந்தத் தவிப்பு ஆதியதுலனுக்குப் புரியாமலில்லை. ஆனால் அவன் இது எதிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டான்.
இவனாவது சகோதரியிடம் பேசி அவளை வரவழைக்கக் கூடாதா என்கிற ஏக்கம் எழும்.
“ஏன் ஆதி… ஒரு முறை நீங்கள் பேசிப் பாருங்களேன். குறைந்தது அவளுடைய ஒதுக்கத்திற்கான காரணம் என்னவென்றாவது கேட்டுச் சொல்லுங்களேன்… ஏன் இப்படி ஒதுங்கி நிற்கிறாள் என்றாவது அறிய முயலுங்களேன்..” ஆற்றாமையுடன் இவள் கேட்க, உன்னுடைய அக்காவுக்குச் சுத்தமாக என்னைப் பிடிக்காது என்று உனக்கு நன்றாகத் தெரியும். இதில் நான் போய்ப் பேசினால், உடனே மனமிரங்கி வந்துவிடுவாளாக்கும். நடக்கிறதைப் பேசு நேரிழை…” சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
ஆனால் அவனுக்குத் தெரியாதா இதற்கான காரணம் என்னவென்று? அந்தக் காரணத்தைக் களைந்து அவளைப் பழையது போலப் பட்டாம் பூச்சியாகப் பறக்க வைக்க அவனால் முடியுமா? கடந்த காலம் அதற்கு வழிவிடுமா?
இவ்வளவு ஏன், உன் அக்கா என் மீது காதல் கொண்டதால்தான் இப்படி ஒதுங்கியிருக்கிறாள் என்பதைச் சொன்னால், இவளால் தாங்கிக் கொள்ள முடியுமா? உடைந்து போவாளே. தன் சகோதரியின் வாழ்க்கையை நான் பறித்துக்கொண்டேனா என்று துடித்துப் போவாள். அதை இவனால் தாங்க முடியுமா? இதற்கு ஒரே வழிதான் உண்டு. அவன் அமைதியாகக் கடந்து செல்வது.
இப்படியே கண்ணாமூச்சி ஆட்டமாக வருடங்கள் மூன்றைத் தொடப்போகிறது. இன்னும் நேரிழையும் தன் கூட்டைவிட்டு வரவில்லை. ஆதியதுலனும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
இதற்கு மேலும் அமைதி காக்க முடியாது என்று அதிரடியாகக் காரியத்தில் இறங்கிவிட்டாள் நேரிழை. அதில் ஒன்றுதான் இந்த காதுகுத்து விழா. ஈழத்தில் காதுகுத்து விழா என்று பெரிதாக யாரும் செய்வதில்லைதான். குழந்தை பிறந்து முப்பத்தோன்று துடக்குக் கழித்த நாளிலோ, இல்லை நாற்பத்தோராம் நாளில் கோவிலுக்குக் குழந்தையை அழைத்துச் சென்ற பின்போ, பத்தரை வீட்டிற்கு அழைத்து காது குத்துவார்கள். கோவிலில் வைத்துக் காது குத்துவதும் உண்டு. ஒரு சிலர், குழந்தைக்கு வலிக்குமே என்று அஞ்சிக் குத்துவதும் இல்லை. அந்த வகைதான் நேரிழை. அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு வலிக்குமே என்று அஞ்சி காது குத்த மறுத்துவிட்டாள். ஒரு வயது ஆன பின்னும், கொஞ்ச நாட்கள் போகட்டும் என்றாள். குழந்தைக்கு இரண்டு வயது ஆன பின்னும், காது குத்தும் எண்ணம் இல்லாமல்தான் இருந்தாள். ஆனால் இப்போது நேரிழைக்கு நேயநறுமையை வரவழைக்க ஏதாவது சாட்டுத் தேவை. அதனால்தான் காது குத்தும் நிகழ்வே. அதுவும் எல்லோரையும் அழைத்தெல்லாமில்லை. தாய், தந்தை, கூடப் பிறந்தவள், பாஸ்கரன் என்று தன் குடும்பமும் ஒரு சில நெருங்கிய நட்பு வட்டமும் தான். தன் சகோதரியை வரவழைக்க, இத்தனை திட்டம் போட்டாயிற்று. ஆனால் அவள் வருவாளா மாட்டாளா? பிறந்த நாளுக்கு வராதவள், இந்த நிகழ்வுக்கு வந்தவிடுவாளா என்ன? யோசனையோடு இருந்தவள் தாயை அழைத்தாள்.
“சொல்லுடா… நேரு… மகிழ் என்ன செய்கிறாள்? நன்றாக இருக்கிறாளா?” அம்பிகாவின் கனிவின் குரல் இவள் செவியில் விழ,
“அம்மா… நேற்றுதானே பேசினோம்… திரும்பவுமா?” மகள் சிணுங்க, சிரித்த அம்பிகா,
“அது நேற்று.. இது இன்று…” என்றார் குறும்பாக.
“ம்கும். இதில் மட்டும் குறைச்சலில்லை. சரி சொல்லுங்கள்.. உங்கள் மூத்த மகள், மகிழின் காது குத்து விழாவுக்கு வருகிறாளா இல்லையா?” கறாராகக் கேட்க, உடனே முகம் வாடினார் அம்பிகா.
“அது வந்து… அவள்..” இவர் தயங்கப் புரிந்து போனது நேரிழைக்கு.
“ஓ… அப்படியென்றால் அவள் வரமாட்டாள். அப்படித்தானே…” கோபமாகக் கேட்டவள், உடனே கைப்பேசியை வைத்துவிட்டு, தன் கோபத்தை உதறிவிட்டு சகோதரியை அழைத்தாள்.
அப்போதுதான் ஆல்ஃபிரடோடு சேர்ந்து உணவு உண்ண ஆரம்பித்திருந்தவள், கைப்பேசியில் அழைப்பு வர, எடுத்துப் பார்த்தாள். அதில் நேரிழையின் பெயர் தெரிய, ஒரு விநாடி எடுப்பதா, வைப்பதா என்று தயங்கினாள் நேயநறுமை. ஆனால் எதற்காக இந்த நேரத்தில் அழைக்கிறாள்? என்கிற கேள்வியும் எழ,
“சாரி… எக்ஸ்கியூஸ் மி…” என்றவள் கைப்பேசியோடு சத்தம் வராத இடம் நோக்கிச் சென்றாள். ஆழ மூச்சொன்றை எடுத்து விட்டுத் தங்கையின் அழைப்பை ஏற்க,
“என்ன… இந்த விழாவுக்கும் அம்மையாரால் வர முடியாதோ? இந்த முறை என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள்? குழந்தை பிறந்ததற்கும் வரவில்லை, அதன் பிறந்த நாளுக்கும் வரவில்லை, இடையில் வந்தும் பார்க்கவில்லை… நான் வந்து பார்ப்பதாகச் சொன்ன போதும் ஒத்துக்கொள்ளவில்லை… அப்படியென்றால், எப்போதுதான் எங்களை வந்து பார்ப்பதாக உத்தேசம்? என்ன நான் செத்த பிறகா? அதற்குப் பிறகாவது என் பிணத்துக்கு அஞ்சலி செலுத்த வருவீரா இல்லை அப்போதும் வேலை கீலை என்று உதறித் தள்ளுவீரா?” முடிக்கவில்லை,
“நேரு…!” என்கிற ஆத்திரம் நிறைந்த குரல் நேயநறுமையிடமிருந்து வந்தது. அந்தக் குரலில் தெரிந்த பதட்டத்தையும், அதிர்வையும் நடுக்கத்தையும் கண்டு கொண்ட நேரிழையின் உதடுகளில் வலி நிறைந்த புன்னகை.
“வேறு என்ன சொல்லச் சொல்கிறீர் அக்கா… மூன்று வருடங்கள்… மூன்று வருடங்களாயிற்று உம்மைப் பார்த்து. இப்படியே ஒதுங்கியிருந்தால் என்னதான் அர்த்தம்? ஒரேயடியாக எங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, எங்கோ ஒரு மூலையில் தனியாக இருந்து விட்டால் எல்லா பிரச்சனையும் வலியும் காணாமல் போய்விடுமா?” மீண்டும் கோபமாகக் கேட்க இவளோ உதடுகளை அழுந்தக் கடித்து நின்றாள்.
“என்ன சத்தத்தைக் காணோம்? எத்தனை நாளைக்கு இந்த வனவாசம்…?” மீண்டும் தங்கையிடமிருந்து அழுத்தமான குரல் வர இவளிடமிருந்து பெருமூச்சுதான் வெளிப்பட்டது.
“நேயா…! பிளீஸ்…!” என்றாள் தவிப்புடன். நீண்ட நாட்களுக்குப் பிறகு சகோதரியின் இறைஞ்சிய குரலைக் கேட்ட நேரிழைக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. எதையோ சொல்வதற்கு வாய் எடுத்தவள், தொண்டை வரை வந்த வார்த்தைகளை மென்று முழுங்கிவிட்டு,
“அக்கா… எனக்கு உம் கூட நிறையப் பேச வேண்டும்… பிளீஸ் ஒரு வாட்டி இங்கே வாரும்…” கெஞ்சலாய் கேட்க, விரக்தியாகச் சிரித்தாள் நேய நறுமை.
“நீ என்னோடு பேசுவதற்கு நான் ஏன் அங்கே வரவேண்டும். அதற்குத்தான் தொலைப்பேசி என்று ஒன்று இருக்கிறதே. இதில் பேசவேண்டியதுதானே?” கிண்டல் போலச் சொன்னாலும், அந்தக் குரலில் சகோதரியின் மறுப்புத் தெரிய, இதயம் விண்டு போனது இளையவளுக்கு.
“ஏன்கா… அத்தனை பெரிய தவறா செய்து விட்டேன்?” வலியுடன் கேட்கத் துடித்தாள் பெரியவள்.
“நேரு… ஏன் இப்படிப் பேசுகிறீர்… அப்படி நீர் ஒன்றும் செய்யவில்லையே..!” திக்கித் திணறிக் கேட்டவளின் செவியில் மறு பக்கம், ஆழ மூச்செடுத்து விடும் சத்தம் கேட்டது.
“அக்கா… உண்மையாகவே உமக்கு என் மீது அன்பிருக்கிறது என்றால், மகிழின் காது குத்து விழாவுக்கு நீர் வரவேண்டும். இல்லை என்றால், நான் அங்கே வருவேன்…” அழுத்தம் திருத்தமாகச் சொல்ல,
“நேரு…! ஏன் இந்தப் பிடிவாதம் நான் சொல்வதை…”
“சரி… நான் குழந்தையை அழைத்துக்கொண்டு வினிப்பெக் வருகிறேன். அங்கே வைத்து மகிழுக்குக் காது குத்தலாம்… இப்போதே அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறேன்…” இளையவள் உறுதியாகச் சொல்ல,
“கமான்…! எதற்கு இந்த பிடிவாதம்…? என் நிலையைக் கொஞ்சம் புரிந்து கொள்ளும் நேரு… என்னால் இப்போதைக்கு…”
“உம்முடைய நிலைதான் கடந்த மூன்று வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே. இதோ பாரும் அக்கா…! எனக்கு உம்மைப் பார்க்க வேண்டும். பேச வேண்டும்… அதற்கு நீர் இங்கே வருகிறீரா…? இல்லையா…? அதற்கு மட்டும் பதிலைச் சொல்லும். ஒரு வேளை நான் சொன்னது போல…. என் உயிரை விட்டால்தான்… நீர்” முடிக்கவில்லை,
“போதும் நேரு…! இதற்குமேல் ஒரு வார்த்தை பேசாதீர்… இப்போ என்ன…? மகிழினியின் விழாவுக்கு நான் வரவேண்டும். அவ்வளவுதானே. சரி வருகிறேன். முதலில் இப்படிப் பேசுவதை நிறுத்தும்.” கண்டிப்புடன் சொல்ல, பளிச் என்று தங்கையின் முகம் மலர்ந்து போனது.
“நிஜமாக வருவீர் தானே…? இல்லை என்றால் இப்போதைக்கு என்னைச் சமாதானம் செய்யப் பொய் ஒன்றும் சொல்லவில்லையே…?” சந்தேகம் கேட்க,
“வருகிறேன்.. போதுமா?” என்றாள் அழுத்தமாக.
“சத்தியம் செய்யும்…!”
“சரி… சத்தியம்…!”
“ஆஹா… என் மேல் சத்தியம் செய்யும்…!” சொல்ல சிரித்தாள் நேயநறுமை.
“ஏய்… எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று உமக்குத் தெரியும்தானே…” அவள் சொல்ல,
“பரவாயில்லை… நீர் சத்தியம் செய்யும்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“சரி… உம் மேல சத்தியம் போதுமா…?”
“அம்மா அப்பா மேலும் சத்தியம் செய்யும்…”
“சரி… அம்மா அப்பா மேலும் சத்தியம்… நான் வருகிறேன்… இப்போது மகிழ்ச்சியா…?” அவள் கேட்க, மறு கணம் மகிழ்ச்சியின் உறைவிடமானாள் நேயநறுமை.
மறு கணம் அலைபேசியில் தன் உதடுகளைப் பதித்து பல முறை முத்தமிட்டவள்,
“அக்கா…! எனக்கு மகிழ்ச்சியில் அழுகையே வரும்போல இருக்கிறது…. இப்போதே உம்மை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட ஆசையாக இருக்கிறது… இப்போதே உமக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டேன். இப்போதே கண் மை எல்லாம் வாங்கி வைக்கிறேன் சரியா. அப்போதுதான் எனக்கு மீசை தாடி வரைய ஏதுவாக இருக்கும். ஏமாற்றாமல் வந்துவிடும்.. பிளீஸ்…” கெஞ்சிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், மலர்ந்த முகத்துடன், ஆதியதலனை அழைத்தாள்.
அவனோ வேலைக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். நேரிழை அழைக்கவும்,
“ம்… சொல்லுமா…”
“ஆதி…! ஒரு நல்ல செய்தி…!” அவளுடைய குதுகலத்தைக் கண்டு இவனுடைய உதட்டிலும் புன்னகை மலர்ந்தது.
“ம்… சொல்லு?”
“நம்முடைய நேயநறுமை, இங்கே வருகிறேன் என்று ஒத்துக்கொண்டுவிட்டாள்..” அவள் சொன்னது தான் தாமதம், கொஞ்சம் கூட யோசிக்காமல் வண்டியின் தடையை அழுத்த, அது கிறீச் என்கிற சத்தத்தோடு ஒரு ஓரமாகப் போய் நின்றிருந்தது அவனுடைய வண்டி. சற்று நேரம் அவனிடமிருந்து எந்தப் பேச்சும் வெளிவரவில்லை.
“ஆதி… இருக்கிறீர்கள்தானே..? ஆதி…? அது என்ன சத்தம்?” நேரிழை படபடப்போடு கேட்க, இவனோ பதில் சொல்லாது சற்று நேரம் அமைதி காத்தான்.
“ஆதி…! என்னாயிற்று…?” நேரிழை பதற, தன்நிலை பெற்றான் ஆதியதுலன்.
“சொ… சொல்லு…” என்றான் என்னவென்று பிரித்தறிய முடியாத ஒரு இறுக்கத்துடன்.
“இல்லை… அங்கே என்ன சத்தம்…?” அவள் கேட்கத் தலையை உலுப்பிக் கொண்டவன்,
“நத்திங்… இடையில் ஒரு வண்டி குறுக்காக வந்துவிட்டது… அதுதான் திடீர் என்று தடைபோட வேண்டியதாயிற்று. நீ என்னவோ சொல்ல வந்தாயே… சொல்லு…” அவன் சொல்ல,
“இல்லை… நம்முடைய நேயநறுமை… குழந்தையின் காதுகுத்துக்கு வருவதாகச் சொல்லி விட்டாள். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா?” அழுகையும் மகிழ்ச்சியும் பொங்கி வழியக் கூற, இவனோ எந்தப் பதிலும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
“ஆதி…”
“ம்… சந்தோஷம் நேரு… சரி.. வேலைக்கு நேரமாகிவிட்டது… பிறகு பேசவா?” முடிந்தவரைக் குரலைத் திடமாக்கி அவன் கேட்க,
“ம்.. சரி சரி.. இதை அம்மாவிடம் சொல்ல வேண்டும்… வைக்கிறேன்…” என்றவள் கைப்பேசியை வைக்க, இவனோ சற்று நேரம், அசைவில்லாமல் இருந்துவிட்டு, விழிகளை மட்டும் சற்று அசைத்து, அசைந்து டாஷ் போர்டைப் பார்த்தான்.
என்ன நினைத்தானோ, குனிந்து அந்த டாஷ்போடைத் திறந்தான் ஆதியதுலன். அதில் குறிப்பேடு ஒன்றிருக்க, அதை இழுத்து எடுத்தவன், அதைப் பிரித்தான். அதன் நடுவில் கொவ்வை இதழும், குமிழ் சிரிப்பும், மின்னல் விழிகளுடனும் புகைப்படமாய் வீற்றிருந்தாள் நேயநறுமை.
அதை நடுங்கும் கரம் கொண்டு எடுத்தவன் உயர்த்திப் பிடித்தான். அந்த விழிகளோ, நெருங்கி வா… முத்தமிடு என்பது போல அவனுக்குக் கட்டளையிட, அது கொடுத்த தாக்கத்திலிருந்து வெளி வர முடியாதவனாக, ஆத்திரத்துடன் அந்தப் புகைப்படத்தைத் திரும்பவும் அந்தக் குறிப்பேட்டில் எறிந்து, சத்தமாக அதை மூடி டாஷ்போடிற்குள் எறிந்துவிட்டுப் பற்களைக் கடித்து விழிகள் மூடிச் சற்று நேரம் அப்படியே கிடந்தான்.
மனக்கண்ணில் குறும்புப் புன்னகையும், துள்ளல் நடையுடனும் அவனைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் நேயநறுமை. மறு கணம் முகம் கசங்க அவனைப் பார்த்து,
“உங்களுக்கு என் மீது ஒரு விநாடி கூட, சலனம் தோன்றவில்லையா…?” அவள் கேட்க இவன் முகம் கசங்கிப் போனது.
“ஆனால்… நீங்கள் என்னைச் சலனப்படுத்தினீர்கள் அதுலன்… நான் உங்களைக் காதலி…” அவள் முடிக்க முதல் படக் என்று தன் விழிகளைத் திறந்தான் அவன். அவனுடைய முகத்தில் சொல்ல முடியாத வலி வந்து உட்கார்ந்து கொண்டது.
“ஏன்டி… ஏன் என்னைக் காதலித்தாய். உனக்குக் காதலிக்க வேறு யாரும் கிடைக்கவில்லையா?” மனதிற்குள் நினைத்தவன், தன் தலையை உலுப்பி ஆழ மூச்செடுத்துத் தன்னை ஆட்டிப்படைக்கும் அவள் நினைவை உதறித் தள்ளியவன் மறு கணம் எதன் மீதோ கோபம் கொண்டவனாக வண்டியைக் கிளப்ப, அதுவும் சீறிப்பாய்ந்து பாதையில் ஓடத் தொடங்கியது.
இங்கே, தங்கையுடன் பேசிவிட்டுத் தன் கைப்பேசியை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் நேயநறுமை.
என்ன வார்த்தைகளைச் சொல்லிவிட்டாள். சர்வ சாதாரணமாக இறந்தால்தான் வருவாயா என்று கேட்டுவிட்டாளே… பைத்தியக்காரி… அவளைப் பார்த்து வயிரெரிந்து அவள் வாழ்க்கை நாசமாகி விடுமோ என்று அஞ்சித்தானே தள்ளியே இருக்கிறாள். இது புரியாமல் முட்டாள் போல வா என்றால் என்ன செய்வது?
வலியோடு முகம் கசங்க சுவரில் சாய்ந்து நின்றவளுக்கு, அடுத்து என்ன செய்வது என்று சுத்தமாகப் புரியவில்லை.
இப்போதைக்குத் தங்கையைச் சமாதானம் செய்யப் பொய் சொல்லியாயிற்று. விழாவின் போது ‘சாரி… வர முடியவில்லை…’ என்று எதையாவது கூறி சமாளிக்க வேண்டும்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் எகிறுவாள். கோபிப்பாள். ஒரு வருடம் பேசாமலிருப்பாள். அவ்வளவும் தானே.
உலகமே வெறுத்துப் போயிற்றாம். இதில் விழாக்கள்தான் ஒரு கேடு. விழாக்களை அனுபவிக்க மனதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும். நிறைவு இருக்க வேண்டும். இவளுக்குத்தான் அது இல்லையே.
இந்த ஜென்மத்தில் அவளால் ஆதியதுலனைப் பார்க்க முடியாது என்பது பாவம் நேரிழைக்குத் தெரியாதே. அவனை மட்டுமா? அவளையும்தானே. அவளைப் பார்த்தாலே அவன் கூட சேர்ந்து வாழ்ந்ததுதானே நினைவில் வந்து கொல்லும்.
ஆனால் விதியும், காலமும் மனிதன் நினைப்பதையா செயல்படுத்துகிறது. எந்தளவுக்கு அவர்களைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் மறுத்து ஒதுங்கியிருக்கிறாளோ, அவளே கதறியடித்து அவர்களைத் தேடிச் செல்லும் நாள் விரைவில் வரும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.
காலம் மிகக் கொடியது. விதி அதனிலும் கொடியது. அடுத்து என்ன நடக்கும் என்பதை உணர முடியாத மனிதர்கள் அதனோடு போட்டிப்போட்டு வென்று விடலாமா என்ன?

