-3-
அன்றைய விழாவுக்குப் பிறகு, ஆல்ஃபிரெட், அந்த வேலைத்தளத்தின் பொறுப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டான். கூடவே நேயநறுமையின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கப் பல வகையிலும் முயன்றான்.
அடிக்கடி அது வேண்டும் இது வேண்டும் என்று அவளைத் தன் அறைக்கு அழைத்தான். அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்டான். இவளும் எந்த விகல்பமும் இல்லாமல், அவன் சொன்னதைத் தன் கடமை என்று நினைத்துச் செய்வாள். உள்ளே வந்தவளைக் காணாததைக் கண்டது போல அல்ஃபிரட் பார்த்து வைப்பது கூட இவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இது மற்றைய தொழிலாளர்களின் கவனத்தைக் கவர, அது மெல்லிய குசுகுசுப்பாக மாறி கடைசியில் இவளுடைய காதிலும் வந்து விழுந்தது. அதன் பிறகுதான் ஆல்ஃபிரெட் அடிக்கடி தன்னை மட்டும் அழைப்பது இவளுக்கு உறைத்தது.
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட்டுவதற்கு ஏழறிவு ஒன்றும் தேவையில்லையே.
ஆல்ஃபிரெட்டின் உள் உணர்வு புரிந்து போக, இவளுக்கு ஆத்திரம்தான் வந்தது.
அவள் நிலை என்ன என்பது கூடத் தெரியாமல், இப்படி அத்தனை பேரின் கவனத்தையும் திசை திருப்பும் வகையில் முட்டாள் தனமாக நடந்துகொள்கிறானே. மனதிற்குள் எரிச்சலுடன் நினைத்தவன், அதை வளர விட முதல், முளையிலேயே கிள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள் நேயநறுமை.
அன்று வெள்ளிக் கிழமை. வேலைத்தளத்திற்கு வந்த ஆல்ஃபிரெட்டின் கரத்தில் ஒரு பூங்கொத்து. தன் அறைக்கு வந்தவன், உடனே நேயநறுமையை அழைக்க, பற்களைக் கடித்தவள், அவளைக் குறு குறு என்று பார்த்த சக பணியாளர்களிடம் ஒரு அசட்டுப்புன்னகையைச் செலுத்திவிட்டு அவனுடைய அறைக்கு வந்தாள்.
அவனோ முகம் மலர தன் இருக்கையில் அமர்ந்தவாறு அங்கும் இங்கும் சுழன்றுகொண்டு இருந்தான். இவள் வந்ததும் சட்டென்று எழுந்தவன், முகம் முழுதும் மலர்ச்சியோடு மேசையிலிருந்த அந்தப் பூங்கொத்தை எடுத்து அவளிடம் நீட்ட, இவளோ அவனையும் அந்தப் பூங்கொத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.
மறு கணம் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி,
“உனக்கு என்ன வேண்டும் ஆல்ஃபிரெட்…” என்றாள் நேரடியாக. அவளுடைய அந்த நேரடிப் பேச்சை ஆல்ஃபிரெட் எதிர்பார்க்கவில்லை. அவன் பூங்கொத்தை நீட்டியதும் வாங்குவாள். நன்றி உரைப்பாள், முகம் மலருவாள் என்று நினைத்திருக்க, அவளோ நேரடியாக என்ன வேண்டும் என்று கேட்கிறாளே. பதில் சொல்ல முடியாமல் தயங்க, அவளை அழுத்தமாக ஏறிட்டாள் நேயநறுமை.
“உனக்கு என்னோடு உடலுறவு கொள்ள வேண்டுமா” என்றாள் நிதானமாக. அவனோ விழிகள் மின்ன, தோள்களைக் குலுக்கி,
“அதில் தவறு இருக்கிறதா?” என்றான் ஆசையோடு. அதைக் கேட்டு மெல்லிய புன்னகை சிந்தியவள்,
“நீ என்னை காதலிக்கிறாயா?” என்றாள் அடுத்து. சற்று நேரம் அவன் யோசித்தான்.
“யேஸ்… ஐ ஆம்… உன்னைப் பார்த்த நொடியிலிருந்து எனக்கு உன்னைப் பிடித்துவிட்டது. நான் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். ஆனால் உன்னோடு பேசும் போதும், பழகும் போதும் நான் உயிருள்ள மனிதனாக உணர்கிறேன். உன்னோடு ஒன்றாகக் கடைசிவரை வாழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்னிடமிருக்கும் அத்தனை சொத்தையும் உனக்குப் பரிசாகக் கொடுத்து உன்னை என்னவளாக ஏற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்… நீ என்னை ஏற்றுக் கொள்வாயா? பிளீஸ்…” அவன் கேட்க அவளுடைய முகம் கசங்கியது.
இப்படித்தான் அன்று ஒருவனிடம் இவள் யாசகம் கேட்டாள். ஆனால் அவனோ முகத்தில் அடித்தது போல மறுத்துவிட்டான். இன்று அவனுடைய இடத்தில் இவளிருக்கிறாள். கண்ணின் முன்னே ஒருத்தான் காதல் யாசகம் கேட்கிறான். இவளால்தான் அதைக் கொடுக்க முடியாதே! இப்படித்தான் ஆதியதுலனும் நின்றிருப்பானோ. நெஞ்சம் முழுக்க நேரிழையை நினைத்துக்கொண்டு இவளுடைய காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல், தவித்திருப்பானோ? வலியோடு தன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்டாள் நேயநறுமை. ஏனோ ஆல்ஃபிரெட் மீது கோபம் வர மறுத்தது.
ஆழ மூச்செடுத்துத் தன் வலியை மறைத்தவள்,
“ஆல்ஃபிரெட்… ரியலி ஐ ஆம் சாரி… என்னால்… உன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ள முடியாது…” என்றாள் நிதானமாக, கூடவே அழுத்தமாக. அதைக் கேட்ட ஆல்ஃபிரெட்டின் முகம் வாடிப் போயிற்று.
“வட்… என்னை மறுக்கிறாயா? ஆனால் ஏன்?” அவன் அதிர்ந்து கேட்க, இவளோ நிதானமாக அவனைப் பார்த்து,
“அதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு நான் உன்னிடம் நெருங்கிப் பழகவில்லை ஆல்ஃபிரெட்… நீ அதைப் புரிந்துகொள்வாய் என்று நினைக்கிறேன்” அவளுடைய வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற பேச்சில் ஒரு கணம் அவனுக்குக் கோபம் வந்தது நிஜம். ஆனால் அத்தனை வசதி கொண்ட தன்னை அவள் மறுக்கிறாளே என்கிற ஆச்சரியமும் எழவே செய்தது.
“நேயா… உண்மையாகவே நான் உன்னைக் காதலிக்கிறேன். உன்னைத் திருமணம் முடிக்கவும் ஆசைப்படுகிறேன்… அப்படியிருக்க என்னை மறுக்க காரணம் என்ன? என்னிடம் பணம் இருக்கிறது. படிப்பு, அந்தஸ்து, பதவி எல்லாமே இருக்கிறது. அப்படியிருந்தும் வேண்டாம் என்கிறாயே…? ஏன்? ஒரு வேளை நான் வேற்று இனம் என்பதால் மறுக்கிறாயா?” அவன் கேட்க, சிரித்தாள் நேயநறுமை.
‘நீ ஆதியதுலன் அல்ல… அதுதான் காரணம்…’ மனதிற்குள் வேதனையுடன் நினைத்தவள்,
“காதலுக்கும் இனத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?” என்றாள் அவனைப் பார்த்தவாறே. அவனோ விழிகளைச் சுருக்கி,
“ஆர் யு எ லெஸ்பியன்…?” கேட்க இவளுடைய முகம் இறுகியது.
“ஆல்ஃபிரெட்.. இட்ஸ் பேர்சனல்… அன்ட்… நோ… ஐ ஆம் நாட்…” அவள் முடிக்கவில்லை, கோபமாக அவள் முன்னால் வந்து நின்றான் ஆல்ஃபிரெட்.
“தென் வை…? ஏன் என்னை மறுக்கிறாய்? என்னிடம் என்ன இல்லை? இந்த இரண்டு கிழமைகளாக உன் மீது பைத்தியமாக இருக்கிறேன். எனக்கு நீ வேண்டும்…! புரிந்து கொள்…! உனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை என்றால் சொல்… நாம் சேர்ந்தே வாழலாம்…” கேட்டவனை நிதானமாகப் பார்த்தாள் நேயநறுமை.
“ஆர் யு ஹரசிங் மீ?” அழுத்தமாக இவள் கேட்க, உடனே மறுத்தான் ஆல்ஃபிரெட்.
“இல்லை… சத்தியமாக இல்லை… என் காதலை உனக்குத் தெளிவு படுத்த முயல்கிறேன். நீ புரிந்து கொள்ளவில்லை என்றதும் கோபம் வருகிறது… தயவு செய்து என் உணர்வுகளைப் புரிந்துகொள்…” அவன் கெஞ்ச, இப்போது நேயநறுமைக்கு, அவன் மீது பரிதாபம்தான் வந்தது.
இதே நிலையில் அவளும்தானே இருந்தாள். மறுக்கப்படும் காதல் எத்தனை வலியைக் கொடுக்கும் என்று அவளுக்கும் தெரியுமே. வேதனை கொண்டவளாக, ஆல்ஃபிரெட்டை நெருங்கினாள் நேய நறுமை. அவனுடைய காதல் நிறைந்த விழிகளுக்குள் தன் விழிகளைப் பதித்தவள்,
“ஆல்ஃபிரெட்… உன்னிடம் ஒன்று கேட்டால் அதற்கான உண்மையான பதிலைச் சொல்வாயா?”
“ம்… கேள் நேயா…”
“நான் உன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சில காலங்கள் போக, நீ வேறு பெண்ணைத் தேடிச் செல்வாயா? இல்லை என் சம்மதம் கிடைக்கும் வரைக்கும் காத்திருப்பாயா?” அவள் கேட்கக் குழப்பமாக அவளைப் பார்த்தான் ஆல்ஃபிரெட்.
“எத்தனை காலத்திற்கு?”
“பத்து வருடங்கள்? மேபி காலம் முழுக்க…?” அவள் கேட்க அவனுடைய முகத்தின் உணர்ச்சிகள் வடிந்து போயின.
“என்ன உளறுகிறாய்? எனக்கு என் வாழ்க்கை முக்கியம் நேயநறுமை. இந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியாள எனக்கென்று சந்ததிகள் வேண்டும். அதற்கு நான் ஒருத்தியை திருமணம் செய்ய வேண்டும். அவள் மூலமாகக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்…” அவன் சொல்ல, தலை சரித்துப் பார்த்தவள்,
“அப்படியானால் பதில் இல்லை என்றுதானே அர்த்தம்…”
“மே பி…” அவன் தயங்க, சிரித்தாள் நேய நறுமை.
“பெஸ்ட் ஆஃப் லக் ஆல்ஃபிரெட்… வேறு பெண்ணைத் தேடிக் கண்டுபிடி… நீ காலம் முழுக்கக் காத்திருந்தாலும் உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது… சாரி…” தெளிவாகச் சொன்னவள், பின் சந்தேகம் கொண்டவளாக,
“நான் இங்கே தொடர்ந்து வேலை செய்யலாமா? இல்லை வேறு வேலைக்கு மனுப்போடவா…?” அவள் கேட்க அதிர்ந்தான் ஆல்ஃபிரெட். இன்னும் அவளைத் தன் பக்கம் இழுக்கலாம் என்கிற எண்ணம் அவன் மனதிலிருந்தது போல,
“வட்…? நோ… நோ…! நீ இங்கேதான் வேலை செய்யவேண்டும்… உன் திறமை எங்களுக்குத் தேவை…” என்றான் அவசரமாக.
“நன்றி ஆல்ஃபிரெட்…” என்றவள், வெளியேறத் தொடங்கினாள். பின் நின்று அவனை வலியோடு திரும்பிப் பார்த்து,
“ஆல்ஃபிரெட்…! உன்னுடைய வேண்டுதலை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்ததற்கு என்னை மன்னித்து விடு. உன்னுடைய வலி எத்தகையது என்பதை என்னால் உணர முடிகிறது… ஆனால்… என்னால் இந்த ஜென்மத்தில் வேறு யாரையும் துணையாக ஏற்றுக்கொள்ள முடியாது…” அவனுக்குப் புரியும் விதமாக, உறுதியுடன் சொன்னவள், ஆழ மூச்செடுத்து விட்டு, “இதற்கு மேலும் என்னை நீ தொல்லை செய்ய மாட்டாய் என்று நம்புகிறேன்…” என்றுவிட்டு வெளியேற இவனோ யோசனையுடன் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான்.
அவள் காரணத்தைச் சொல்லாவிட்டாலும் ஓரளவு அவள் எதற்காக மறுக்கிறாள் என்பதை அவனால் புரிந்துகொள்ளவே முடிந்தது. அதனால் அவனுடைய உதடுகள் சற்று ஏளனத்துடன் வளைந்தன.
‘யாரையோ காதலித்திருக்கிறாள் போல. அந்தக் காதலிலிருந்து வெளி வர முடியாமல் தவிக்கிறாள். ஆனால் நான் யார்? ஆல்ஃபிரெட் அலக்சான்டர். என்னால் முடியாததென்று எதுவுமேயில்லை. அவளுடைய மனதிலிருக்கும் காதலை மொத்தமாக அழித்து, அந்த இடத்தில் என்னை நிறைத்துக் கொள்கிறேன்…’ உறுதியாக நினைத்தவனின் உதட்டில் இப்போது மெல்லிய புன்னகை. கூடவே யோசனையும். அவனால் அது முடியுமா என்கிற சந்தேகமும் வந்தது.
இந்த இரண்டு கிழமையாக அவளைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான். அங்கே வேலை செய்யும் பெண்களில் ஒரு சிலர் அவனைக் கவர்வதற்காகக் கவர்ச்சி ஆடைகளை அணிந்து வரும்போது, இவள் மட்டும் உடலின் எந்தப் பாகமும் தெரியாதவகையில் கழுத்திலிருந்து கால் பாதம் வரை மறைக்கும் வகையில் ஆடை அணிந்து வருகிறாள். கூடவே அவளுடைய வெற்றுப் பார்வையும், எதற்கும் அஞ்சாத பாவனையும், எதையும் அசால்ட்டாகக் கையாளும் விதமும், அவளைத் தன் வசமிழுப்பது அத்தனை சுலபம் அல்ல என்று புரியவும் வைத்தது.
யோசனையோடு புருவங்கள் நெரிய. தன் இருக்கையில் வந்தமர்ந்தவன், நிமிர்ந்து பார்த்தான். கண்ணாடிக்கு வெளியே, தன்னிடத்தில் அமர்ந்த இருந்த நேயநறுமை, இடையில் விட்ட வேலையைத் தொடர்வதை, இமைக்காமல் வெறித்துப் பார்த்தான். ஆசை இன்னும் பொங்கி எழுந்தது அவனுக்கு.
இவளிடம் மட்டும் அப்படி என்ன தனித்துவமான விஷயம் இருக்கிறது? புரியவில்லை அவனுக்கு. ஒரு வேளை மற்றைய பெண்கள் இவனைத் தம் பக்கம் கவர்வதற்காகச் செய்யும் முயற்சிகளில் ஒரு
துளியளவு கூட இவள் செய்யாமலிருப்பது காரணமாக இருக்குமோ? அது எப்படி? அந்த வயதுக்குரிய உணர்ச்சிகள், தேவைகள் எதுவுமே இவளுக்கு இருக்காதா? சொல்லப்போனால் மற்றைய பெண்கள் இவனைப் பார்க்கும்போது விழிகளில் தெரியும் சுவாரசியம் எதுவும் இவளிடமில்லை. இவ்வளவு ஏன், இங்கே வரும் பெண்கள் இவனைக் கவர்வதற்காகவே உடல் தெரியும் வகையில் ஆடைகளை அணிந்து வருகிறார்கள். ஆனால் இவள்….?
ஆல்ஃபிரெட்டின் விழிகள் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தவளை அலசியது.
கழுத்திலிருந்து கணுக்கால் வரை, எந்த பாகமும் தெரியாத வகையில் பான்ட் ஷேர்ட் அணிந்திருந்தாள். ஆனாலும் அவள் பக்கம் கவர்ந்திழுக்கிறாள்.
ம்கூம்… இவளை அத்தனை சுலபத்தில் விட முடியாது. எனக்கு இவள் வேண்டும். முழுசாக வேண்டும். மனது கிடந்து அடித்துக் கொண்டது ஆல்ஃபிரெட்டுக்கு.
இங்கே இவன் தவித்திருக்க, வேலையில் கவனமாக இருந்த நேயநறுமையோ, சற்று முன் நடந்த சம்பவத்தை மொத்தமாக மறந்துவிட்டுத் தன் வேலையில் கவனமாகத் தொடங்கினாள்.
-4-
அன்று நேயநறுமை, தன் மனநிலையை ஆல்ஃபிரெட்டிடம் தெளிவாகச் சொன்ன பிறகும், அவன் அமைதியாக இருக்கவில்லை.
அடிக்கடி அவளை அழைத்துப் பேசினான். வேலை விடயமாகத்தான் பேசினான். ஆனாலும் அவன் அழைப்பிற்கான காரணம் புரியாமலில்லை.
சொல்லும் வரைக்கும் சொல்லியாயிற்று. அதற்கு முதல் மனத்தைப் புண்படுத்தியே தீருவேன் என்றால் அவளும்தான் என்ன செய்வது.
அன்றும் அவளை அழைத்தவன், அவளிடம் ஒரு பரிசுப்பொதியை நீட்ட, இவளோ அதை வாங்காமல் என்ன என்பது போலப் பார்த்தாள்.
“உனக்குத்தான்.. வாங்கிக்கொள்..” புன்னகைத்தவாறு சொல்ல, புருவங்கள் சுருங்க அவனை நெருங்கியவள், அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். புதிய இரகக் கைப்பேசி. ‘ஐஃபோன்16 ப்ரோ’ அவனை ஏளனமாகப் பார்த்து உதடுகளை வளைத்தவள்,
“எதற்கு இது?” என்றாள் அழுத்தமாக.
“ப்ச்… அன்று விழாவில் நீ யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாய். பழசாக இருந்தது. அதுதான் உனக்கு இதை வாங்கி வந்தேன். எடுத்துக்கொள். பழையதைக் குப்பையில் போட்டு விடு…” சொல்ல, அவனைத் தலை சரித்துப் பார்த்தாள் நேயநறுமை. பின் தன் கரத்திலிருந்த கைப்பேசியை மேசையில் வைத்து விட்டு மேசையில் இரண்டு கரங்களையும் ஊண்டி, அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“உங்கள் அப்பாவையும் அம்மாவையும் தூக்கிக் குப்பையில் போட்டு விடலாமா?” அவள் கேட்க, கோபமாக முறைத்தான் ஆல்ஃபிரெட்.
“என்ன உளறுகிறாய்?”
“உளறவில்லை, உண்மையாகவே கேட்கிறேன். போட்டுவிடலாமா அல்ஃபிரட்…” கேட்க அவனோ புரியாமல் பார்த்தான்.
“உன்னுடைய கைப்பேசியைக் குப்பைத் தொட்டியில் போடுவதற்கும், என் அம்மா அப்பாவைக் குப்பைத் தொட்டியில் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? அதுவும் இதுவும் ஒன்றா?” எரிச்சலாகக் கேட்டான் அவன். இப்போது நிமிர்ந்த நின்றவள், தன் பான்டின் பின் பகுதியில் செருகியிருந்த கைப்பேசியை வெளியே எடுத்து அதை அன்போடு பார்த்தாள்.
“பார்ப்பதற்கு இது வெறும் கைப்பேசிதான். உயிரற்றது. ஆனால் எனக்கு உணர்வுப்பூர்வமான உயிருள்ள என் அங்கம்…” என்று சொல்ல, இவளுக்கு என்ன பைத்தியமா என்பது போலப் பார்த்தான் ஆல்ஃபிரெட். அவன் பார்வையைக் கண்டே அவன் என்ன நினைக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவள், மீண்டும் கைப்பேசியைப் பான்ட் பாக்கட்டில் செருகிவிட்டு,
“உங்களுக்குச் சொன்னால் புரியாது… உங்களுடைய பரிசுக்கு நன்றி. ஆனால் எனக்குத் தேவையில்லை.” என்றவள், அதற்குமேல் எதையும்
வாதிடாமல் வெளியேறிச் செல்ல, அவளைக் குழப்பமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆல்ஃபிரெட்.
அவனுக்கெங்கே தெரியப்போகிறது, அவளுடைய பதினெட்டாவது பிறந்த நாளுக்கு, தாய் தந்தை பரிசாகக் கொடுத்த கைப்பேசி அது என்று. அதில் எத்தனை அழகான நினைவுகள் உள்ளடங்கி இருக்கிறது.
பெருமூச்சுடன் தன் இடத்திற்கு வந்து அமர்ந்தவளின் கைப்பேசி அடிக்க புருவங்களைச் சுருக்கியவாறு எடுத்துப் பார்த்தாள்.
அவளுடைய தங்கைதான் அழைத்திருந்தாள். அதைக் கண்டதும் இதயம் வலித்தது இவளுக்கு.
இது நூறாவது முறை அவள் அழைப்பது. இவள்தான் கைப்பேசியின் அழைப்பை எடுக்காது அணைத்து வைத்திருந்தாள். இத்தனைக்கும் சகோதரி இலங்கை வரப்போவதில்லை என்பது நேரிழைக்குத் தெரிந்திருக்கும். பாவம், நான் வருவேன் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பாள். இப்போது நான் ஏமாற்றிவிட்டது தெரிந்ததும் சண்டை பிடிப்பதற்காக அழைக்கிறாள். பெருமூச்சுடன் கைபேசியின் அழைப்பைத் துண்டித்துவிட்டு மேசையில் வைக்கத் திரும்பவும் அழைப்பு வந்தது.
பொறுமையிழந்த நேயநறுமை, கைப்பேசியின் உயிரை அணைத்துவிட்டுக் கைப்பையில் போட்டு விட்டு வேலையில் கவனமாக ஏனோ மனது அடித்துக்கொண்டது.
மிகப் பெரிய தவறு செய்கிறோமோ. இத்தனை வருந்தி அழைத்தும் இலங்கை போகாமல் இருப்பது தப்போ? இப்போது எங்களுக்குப் பகல் என்றால் ஈழத்தில் இரவு. அப்படியென்றால் நாளைக்குத் தான் குழந்தைக்குச் செல்வச்சன்னிதி முருகன் கோவிலில் வைத்துக் காது குத்துகிறார்கள். கடைசியாக இவள் வருகிறாளா இல்லையா என்கிற நிலையை அறிய அழைக்கிறாள். கடந்த மூன்று நாட்களாக அழைத்துக் கொண்டேதான் இருக்கிறாள். இவள்தான் பதில் சொன்னாளில்லை.
இவளும்தான் என்ன செய்வது? நெஞ்சு முட்டக் கசப்பை வைத்துக்கொண்டு எப்படி அவள் முகத்தில் விழிப்பது? தவித்தவள், அன்றைய வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
அன்று இரவு பதினொரு மணி வரை தூக்கம் வராமல் படுத்திருந்தாள் நேயநறுமை. என்றும் இல்லாமல் ஏனோ மனது கிடந்து தவித்தது. தவறு செய்தது போலப் பிசைந்தது. நெஞ்சம் படபடத்தது. தாய் தந்தையோடு பேசவேண்டும் போலத் தோன்றியது. அவர்களோடு பேசினால் மனது சற்று அமைதியடையும். அவர்களை அழைத்துப் பேசலாமா? நினைத்தவள் உடனே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.
இப்போது அங்கே பகல் ஒன்பது மணியிருக்கும். இப்போது அனைவரும் கோவிலுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டு இருப்பார்கள். இப்போது அழைத்தால் நேரிழை கோபிப்பாள். அழுவாள். திட்டுவாள். வேண்டாம். பிறகு பேசிக் கொள்ளலாம். முடிவு செய்தவள், உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். ஒரு கட்டத்தில் எரிச்சல் வர, எழுந்தமர்ந்து, விளக்கு மேசையிலிருந்த தன் கைப்பேசியை உயிர்ப்பித்துப் பார்க்க, தங்கையிடம் இருந்து தான் நிறைய அழைப்புகள் வந்திருந்தன.
அதைக் கண்டதும், முகம் கசங்கிப் போனது. அவசரமாக அந்த அழைப்புகளை அழித்தவள், கைப்பேசியில் சேகரித்து வைத்திருந்த புகைப்படங்களை இரசனையோடு பார்க்கத் தொடங்கினாள்.
தாய் தந்தையோடு, தங்கையோடு என்று வேறு ஒரு பரிமாணத்தில் குரங்குச் சேட்டை செய்தவாறு நின்றிருந்தாள் நேயநறுமை. அத்தனை சேட்டையும் காதல் என்கிற மாயையில் மொத்தமாக நொறுங்கிப்போயிற்று.
ஆசையோடு தாய் தந்தை தங்கை என்று இரசித்தவாறு படங்களைத் தட்டிச் சென்றவள், கடைசியாக பளிச்சென்ற சிரிப்போடு திரையில் விழுந்தான் ஆதியதுலன்.
அழகன். ஆடம்பரமானவன். கவர்ந்திழுக்கும் காதலன். அவள் நாயகன். அவனுடைய நிழற் படத்தைப் பார்த்தவளின் விழிகள் இமைப்பதாயில்லை. இமைத்தால் அது மறைந்து போகுமோ? அந்தப் படத்தைப் பார்த்தவாறே விரல்களால், அதை வருடிக் கொடுத்தவளின் உதடுகள் வறண்டன. மனமோ பேதலித்தது.
என்னவெல்லாம் கற்பனை செய்திருந்தாள். அத்தனையும் ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப் புதைத்து விட்டானே.
“ஏன் அதுலன்…? ஏன் என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை?” ஏக்கமாகக் கேட்டவளின் நெஞ்சம் வலியில் துடிக்க, அடுத்த புகைப்படத்தைப் பார்த்தாள். அது நயகரா அருவியின் அருகே வைத்து வின்சன் எடுத்தது. அதற்குப் பிறகு அவன் அறியாமலே நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தாள்.
“ஒரு செல்ஃபி பிளீஸ்…” என்று, அவன் மறுக்க முதல் கிளுக்கிய ஒரு சில புகைப்படங்கள் அவள் இதயத்தில் இரத்தத்தைச் சிந்த வைத்தன. பின்னால் பொங்கி வெடித்துப் பாயும் நயகரா அன்னை. இங்கே அதன் தூரல்களுக்கு மத்தியில் அவள் குதுகலமாய்ச் சிரிக்க, அவனோ வியப்போடு அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தான். அடுத்த புகைப்படம், அவனிடம் தனக்கிருப்பது காதல் என்று தெரிந்த பின் எடுத்த புகைப்படம். அதில்தான் அவள் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறாள். முகம் பூரித்து, இவன் எனக்கே எனக்கானவன் என்கிற உரிமையோடு, நயாகரா அன்னையின் அரவணைப்பில்… சட்டென்று கண்களில் நீர் பூக்க விழிகளை அழுந்த மூடினாள் நேயநறுமை.
அன்று நடந்த இனிய நிகழ்வு ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்து கடைசியில் அவன் தங்கையை அணைத்து நின்ற கோலம் வரை மனக்கண்ணில் தோன்ற. இப்போதும் அவளுடைய உடல் தூக்கிப் போட்டது.
வருடங்கள் கடந்துவிட்டாலும், இன்னும் பச்சை இரணமாய் இதயத்தைக் கசக்கிப்பிழியும் அந்த நினைவிலிருந்து வெளி வர முடியாதவளாகத் தவித்தவள், அதற்கு மேல் அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் திராணியற்று, விளக்கு மேசையில் கவிழ்த்து வைத்துவிட்டுத் திரும்பிப் படுத்தாள். நெஞ்சம் தோல்வியுற்ற காதலால் கதறியது.
வெந்து தணியும் காடு. ஆகாயத்தைத் தொடும் அளவுக்கு எரியும் காடு, ஏதோ ஒரு கட்டத்தில் தணிந்து போகும். ஆனால் இவளுடைய காதல் மட்டும் ஏன் தணியமாட்டேன் என்கிறது. ஏன் இரணமாய் உயிரோடு எரிக்கிறது. வெந்தும் தணியாத காதலா அவளுடையது?
மீண்டும் கண்கள் கரிக்க, மனது எப்போதும் போலத் தாயைத் தேடியது. அவர் மடியில் படுத்து ஒரு மூச்சு அழுதால், ஒரு வேளை இந்த மனம் ஆறுமா. எரிக்கும் காதல் தணிந்து போகுமா? வலியோடு யோசித்தவளுக்குத் தாயின் நினைவு வந்தது.
“நீயும் நேருவும் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறதுடா… பேசாமல் அங்கேயே வந்திடேன்…” தாயின் ஏக்கம் நிறைந்த குரல் இவள் வலியை மேலும் கிளப்பிவிடத் தவித்தாள் நேயநறுமை.
“கண்ணம்மா… உன்னுடைய மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோ பெரும் வலியில் தவிக்கிறாய் என்று மட்டும் எனக்குத் தெரிகிறது. இந்த அப்பாவும் அம்மாவும் ஏதாவது தவறு செய்து இருந்தால், மன்னித்துவிடுமா…” என்று தேவசகாயம் அவளிடம் பேசும்போது கடைசியாகச் சொன்னது நினைவுக்கு வர, துடித்துவிட்டாள் நேயநறுமை.
கன்னங்களின் ஓரம் வடிந்த கண்ணீரைத் துடைக்க மனமில்லாமல், நிமிர்ந்து முகட்டை வெறித்துப்பார்த்தவாறு படுத்திருந்தவள்,
“சாரிபா… நான் உங்கள் இருவருக்கும் நிறையத் தொல்லை கொடுத்துவிட்டேன்… உங்கள் இருவரின் மீதும் எனக்கு எந்தக் கோபமுமில்லை… என் மீது தான் எனக்குக் கோபம். என்னால் ஆதியதுலனை விட்டுக் கொடுக்க முடியவில்லையே என்கிற கோபம். இவ்வளவு நடந்தும் என்னால் அவனை மறக்க முடிய வில்லையே என்கிற எரிச்சல்… இது அனைத்தையும் உங்களிடம் சொல்ல முடியாமல் கோழையாக இருக்கிறேனே என்கிற குற்ற உணர்ச்சி… இது எல்லாம் சேர்த்துத்தான்பா உங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்து நிற்கிறேன்.’ தன்னை மறந்து புலம்பியவள், இப்போது சரிந்து படுத்தாள்.
இது என்ன மனது இப்படி அடித்துக் கொள்கிறது. உள்ளே ஏதோ தவறு செய்தது போலத் தவிக்கிறதே… இன்று எனக்கு என்னாச்சு? எப்போதும் வேதனையோடு உறங்கச் செல்வது வழக்கம்தான். ஆனால் இன்று ஏன் என்னவோ மாதிரி உணர்கிறேன்…? கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். அதிகாலை ஒரு மணியையும் கடந்திருந்தது.
ஒரு மணி கூட ஆகிவிட்டது. இன்னும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது. எரிச்சலோடு நினைத்தவள், எப்போதும் போல எழுந்து பால் குடித்துவிட்டுக் கதைப்புத்தகம் வாசிக்கலாமா? நினைத்தவளுக்கு சட்டென்று முகம் வாடியது.
அவனும் அப்படித்தானே. தூக்கம் வரவில்லை என்றால், பால் குடித்து ஏதாவது புத்தகம் வாசிப்பான்.
அன்று நடந்த சம்பவம் நினைவுக்கு வர, சற்று நேரம் அந்த நினைவில் தன்னை மறந்து கிடந்தாள் நேயநறுமை. எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ திடீர் என்று அந்த இரவைக் கிழித்துக் கொண்டு, அவளுடைய கைபேசி அழுதது.
நினைவு கலைந்து திரும்பிப் பார்த்தாள் நேயநறுமை.
இந்த நேரம் யார் அழைக்கிறார்கள். ஒரு வேளை அம்மாதான் அழைக்கிறார்களோ? கோவிலுக்குச் சென்று சேர்ந்து விட்டார்கள் போல’ முகம் மலரப் பாய்ந்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். புதிய இலக்கம். ஆனால் ஈழத்திலிருந்துதான் வந்திருந்தது. இவள் தவிப்பு தாய்க்குத் தெரிந்துவிட்டது போல.
நெஞ்சம் நிறைந்த நிம்மதியோடு அந்த அழைப்பை உயிர்ப்பித்து, “அம்மா…” என்றாள் ஆசையும் ஆர்வமுமாக.
மறு பக்கம் சற்று அமைதி காத்துவிட்டு,
“நா… நான்… ஆதியதுலன் பேசுகிறேன்…” என்கிற குரலைக் கேட்டு ஒரு கணம் அதிர்வுற்று அசைய மறந்து நின்றாள் நேயநறுமை.
அவளால் அவன் அழைத்ததை உடனே ஜீரணிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகான அவனுடைய குரலைக் கேட்டு உயிர் மெய் உருக நின்றிருந்தவளுக்குப் பேச்சே வரவில்லை.
“அ… அதுலன்…” நம்ப முடியாமல் அவன் குரலை உள்வாங்கியவளுக்கு அந்த நிலையிலும் இதயம் சிலிர்த்து மயிர்க்கால்கள் அனைத்தும் எழுந்து நின்றன. அவசரமாகப் பெண்மை மலர்ந்து மணம் வீசியது.
இதோ அவனால் மட்டும்தான் அவளை முழுமை பெறச்செய்ய முடியும். அவனால் மட்டும்தான் அவளைப் பெண்ணாக உணரவைக்க முடியும். அவனால் மட்டும்தான் அவளையே அவளுக்கு அறிமுகம் செய்துவைக்க முடியும். அவன் ஒருவனால் மட்டும்தான் காதலையும், காமத்தையும் ஒன்றாக அவளுக்கு உணர வைக்க முடியும். பேசமறந்து நின்றிருந்த நேரம், மீண்டும் அவனுடைய நறுமை என்கிற அழைப்பில் சுயம் பெற்று,
“அதுலன்… சொ… சொல்லுங்கள்” என்றாள் திக்கித் திணறி. விழிகளிலோ கண்ணீர் கோர்த்தது.
“உடனே ஊருக்கு வா…” என்றான் ஆதியதுலன் இறுகிப்போன குரலில். அப்போதுதான் அவனுடைய குரலில் மாற்றமே அவளுக்குப் புரிந்தது. எப்போதும் எடுக்காதவன் எதற்காக எடுத்திருக்கிறான்? அதுவும் அவனுடைய குரல் இறுகியிருக்கிறதே ஏன்? அதில் ஒரு நடுக்கமும் பதட்டமும் தெரிகிறதே? எதற்காக? அவன் பேசும் போது அடக்கி வைத்திருந்த மூச்சுக் காற்றுக் கூட இவள் காதில் விழ, அதுவரையிருந்த சிலிர்ப்பு அடங்கிப் பதட்டத்துடன் எழுந்தமர்ந்தாள் நேயநறுமை. ஏதோ சரியில்லை என்று மட்டும் அவளுக்குப் புரிய,
“எ… என்னாச்சு… யாருக்கு என்னாயிற்று… நேரு… நேரு நன்றாக… அம்மா… அப்பா… எல்லோரும் இன்று கோவிலுக்குப் போவதாகச் சொன்னார்களே… போய்ச் சேர்ந்துவிட்டார்களா?” அவள் கேட்க,
“நறுமை… பிளீஸ்… நீ முதலில் ஊருக்கு வா…” சொன்னவன் கைப்பேசியை அணைக்க இவளுக்கு அண்ட சராசரங்களும் நடுங்கின.
நிச்சயமாக ஏதோ சரியில்லை என்பது மட்டும் அவளுக்கு உறுதியாயிற்று. இத்தனை காலத்தில் ஒரு முறை கூட அழைத்துப் பேசாதவன், இன்று பேசுகிறான் என்றால்? அதுவும் ஊருக்கு வா என்று அழைப்பதென்றால்…? வயிற்றில் புளியைக் கரைக்க, கரங்கள் நடுங்க, உதடுகள் வறண்டு போக, திரும்பவும் அவனை அழைத்துப் பார்த்தாள். அவனுடைய கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது.
நிச்சயமாக அவன் விளையாடவில்லை. அவன் இப்படி விளையாடக் கூடியவனுமல்ல. அவனுடைய அந்தக் குரல், அதன் இறுக்கம், அதையும் தாண்டிய தவிப்பும் கலக்கமும், நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டதாக உரைக்க அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாதவளாகப் பதறி எழுந்தவள், கிடைத்த ஆடைகளை ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டு, விமானநிலையத்தை நோக்கி ஓடினாள்.
அவளுடைய நல்ல நேரம், இரண்டு மணி நேரத்தில் புறப்படும் ஒரு விமானத்தில் இருக்கை கிடைத்தது, உடனே அதைப் பதிவு செய்தவளுக்குப் படபடப்பு அடங்கவில்லை.
மனது கிடந்து தவித்தது. ஏதோ தப்பாக அவளுடைய உள்ளுணர்வு சொல்ல, நடுங்கும் கரத்தால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள் நேயநறுமை.
தான் ஊருக்கு வருவதை அவனுக்குத் தெரிவிக்க வேண்டுமே. உடனே தான் விமானத்தில் ஏறுவதையும், வந்து இறங்கும் நேரத்தையும் அவனுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டுக் கையோடு, அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, ‘அவசர நிலை கருதி, இரண்டு வாரம் விடுப்பு எடுக்கிறேன்’ என்கிற செய்தியை அனுப்பிவிட்டு, திரும்பவும் ஆதியதுலன் ஏதாவது பதில் போட்டு இருக்கிறானா என்று பார்த்தாள்.
அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை அவன் பார்த்துவிட்டது தெரிந்தது. ஆனால் பதில் வர வில்லை.
நெஞ்சோ கிடந்து தவித்தது. முடிந்தவரை தன் பயத்தை மறைத்து, விமானம் ஏறி ஈழம் வந்து சேர்ந்தாள். விமான நிலையத்தை விட்டு வெளியே வர, அவளுடைய பெயர்ப் பலகையைத் தாங்கியவாறு ஒருத்தர் நின்றிருந்தார். அவரை நெருங்கியவள்,
“நான்… நான்தான் நேயநறுமை…” என்றாள் தவிப்பாக.
“வாருங்கள் மாடம்…” என்றவர் அவளை ஏற்றிக்கொண்டு நேராக ஒரு மருத்துவமனைக்கு முன்பாக நிறுத்த, இவளுக்குச் சர்வமும் நடுங்கியது.
“யா… யாருக்கு… என்னாச்சு?” இவள் கேட்க, அந்த வண்டி ஓட்டுனர் வருத்தமாக அவளைப் பார்த்த நேரம் பதட்டமாக பாஸ்கரன் வெளியே வந்தார்.
வண்டியை விட்டு இறங்கியவள், பாஸ்கரனைக் கண்டதும், வேகமாக அவரை நெருங்கி,
“என்னாச்சு? எதற்காக என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள்… அம்மா… அப்பா… நேரு… மகிழ்… எல்.. எல்லோரும்…. எல்லோரும் நலம்தானே…?” உதடுகள் கோண, முகம் சிவக்க, நடுக்கத்துடன் அவள் கேட்க, அவளுடைய தோள்களைப் பற்றிய பாஸ்கரனின் விழிகளில் கண்ணீர் ஆறாகப் பொங்கி வழிந்தது.
அவசரமாக அவரை விட்டு விலகி நின்றவள், கோபமும், வேதனையுமாக அவரைப் பார்த்து,
“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னாச்சு…? அவர்கள்… அவர்கள் நன்றாகத்தானே… அவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?” முடிக்க முடியாமல் திணற, கலங்கிய முகத்துடன் அவரைப் பார்த்த பாஸ்கரன்,
“உ… உள்ளே வாமா…” என்றார் முடிந்தவரைத் தன்னைத் திடமாக்கியவாறு.
இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,
“இல்லை… நான் வரவில்லை… அவர்களுக்கு என்னாயிற்று என்று சொல்லுங்கள்…” உறுதியாகக் கேட்கும்போதே பின்னால் இறுகிய முகத்தோடு வந்தான் ஆதியதுலன். அவனைக் கண்டதும்தான் தாமதம், பாஸ்கரனை விட்டு அவனை நோக்கிப் பாய்ந்தாள் நேயநறுமை.
அவனை நெருங்கியவள், அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றி, அவனுடைய உயரத்திற்கு கால் நுனி விரலால் எம்பி நின்று,
“யாருக்கு என்னாச்சு. என் அம்மா அப்பாவுக்கு என்னாச்சு? நேரு… நேரு நன்றாக இருக்கிறாளா…? மகிழினி…? குழந்தைக்கு எதுவுமில்லையே…? சொல்லுங்கள் அதுலன்… யாருக்கு என்னாச்சு…” அவனை உலுக்க, அவனோ பதில் சொல்லாது இறுகிய முகத்தோடு அவளையே வெறித்துப் பார்த்தான்.
அவனுடைய உடலும் நடுங்கிக்கொண்டுதான் இருந்தது. கண்களோ சிவந்திருந்தன. விழிகளை ஒரு விநாடி கூட இமைக்காமல் தன் சட்டையை இறுகப்பற்றிக் கசங்கிய முகத்துடன் அவனிடம் கேள்வி கேட்டவளையே பார்த்திருக்க, அந்தக் காட்சியைக் கண்ட பாஸ்கரனுக்கு, அதற்கு மேல் அடக்க முடியாமல் உடைந்து போனார்.
“ஐயோ…! நான் என்ன செய்வேன்…! எல்லாமே போயிடுச்சே…! அந்தக் கடவுள் நம்மைக் கை விட்டுட்டார்மா…! மொத்தமாகக் கைவிட்டு விட்டார்…! நான் பாவி…! கடைசி நேரம் கிளம்பும்போது கையசைத்து விடைகொடுத்தது நான்தான். என் பாவப்பட்ட ராசிதான் அவர்களை மொத்தமாக எடுத்துக்கொண்டதுபோல… என்னுடைய நண்பனை… மொத்தமா தொலைத்துவிட்டு நிற்கிறேனே…” என்று அவர் வாய்விட்டுக் கதற, அவர் சொன்ன செய்தியை ஜீரணிக்க முடியாமல், அவரைத் திரும்பி வெறித்துப் பார்த்தாள் நேயநறுமை.
இன்னும் ஆதியதுலனிடமிருந்து அவள் விலக வில்லை. பற்றிய அவன் ஷேர்ட்டையும் அவள் விடவில்லை.
அவனை விலகினால், அத்தனை சக்தியும் தன்னை விட்டு நீங்கிவிடும் என்று அஞ்சினாளோ? இல்லை அவனால் மட்டும்தான் வர இருக்கும் அதிர்ச்சியை, இடிதாங்கியாகத் தாங்கி அவளைக் காத்துக்கொள்ள முடியும் என்று நினைத்தாளோ? இல்லை அவனைத் தவிர வேறு யாரிடமும் ஆறுதலைப் பெற முடியாது என்று அவள் புத்தி சொன்னதோ? இல்லை அவனால் மட்டும்தான், எந்த இழப்பாக இருந்தாலும் அதை ஈடுகட்ட முடியும் என்று முழுதாக நம்பினாளோ? இம்மியும் அவனை விட்டு விலகாமல் திரும்பி பாஸ்கரனைப் பார்த்தாள்.
கால்களோ அதன் பாட்டிற்கு நடுங்கின. இதயமோ வாயில் வந்து துடிக்கிறேன் என்று பதறியது. ஆனாலும் திடமாக நின்றவளாக,
“மாமா… நீ… நீங்கள் சொல்வது… எனக்கு…” முடிக்கமுடியாமல் தடுமாற, எல்லையில்லா வலியோடு, அவளைப் பார்த்த பாஸ்கரனுக்கும் பேச்சு வர மறுத்தது.
“மகிழினியைத் தவிர அத்தனை பேரும் எங்களை எல்லாம் அநாதையாக்கிவிட்டுப் போய் விட்டார்களம்மா…” அவர் உடைந்து கதற, அவர் சொல்வதற்கான அர்த்தம் புத்தியில் பலமாகத் தாக்க, அதை ஜீரணிக்க முடியாதவளுக்குக் கண்கள், இருட்டிக்கொண்டு வந்தது.
‘இவர்… இவர் என்ன சொல்கிறார்… அநாதையா …க்கிவிட்டு…. போ…போய் விட்டார்களா? அதற்கு
மேல் அந்த அதிர்ச்சியைக் கையாளும் சக்தி இல்லாமல் புத்தி தன் செயற்பாட்டை இழக்க, அப்படியே தன்னவன் மீது சாய்ந்தவள் கால்கள் மடிந்து தரை சரிய, அதை உணர்ந்து கொண்டவனாக, அவளைத் தன்னோடு அணைத்துத் தாங்கிக் கொண்டான் ஆதியதுலன்.

