“கெட்டி மேளம் கெட்டி மேளம்…” ஐயரின் சத்தத்தையும் மீறிக் கெட்டிமேளம் முழங்கியது. ஆதியதுலன், நேரிழையின் சங்குக் கழுத்தில் தாலியைக் கட்டினான். பெற்றோரும், உற்றாரும் வாழ்த்த, செல்வி நேரிழை, ஒரு சில நொடிகளில் திருமதி ஆதியதுலனாக மாறிப்போனாள்.
மனம் கவர்ந்த காதலனுக்கும், உடன் பிறந்த தங்கைக்கும் திருமணம். மனம் முழுவதையும் கல்லாக்கி உள்ளே வெடித்துச் சிதறும் இதயத்தின் வலியை வெளிக்காட்டாது, இன்முகத்தை அரிதாரமாகப் பூசி நின்றிருந்தாள் நேயநறுமை.
ஆதியதுலன் நேரிழைக்குத் தாலியைக் கட்டும் அந்த நொடியை, தீரா வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் வலது கரம் இடது மார்பை அழுத்திக் கொடுக்க, அங்கே உயிர் போகும் அளவுக்கு வலித்தது. விம்மல் வேறு வெடித்துக் கொண்டு வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், தன்னவன், தங்கைக்குத் தாலி கட்டி முடித்து அவளை மனையாளாக்கி, அவள் நெற்றியில் குங்குமம் வைப்பதைப் பார்க்கும் சக்தியில்லாமல், திரும்பிவிட்டாள் நேயநறுமை. அங்கே நிற்கும் ஒவ்வொரு விநாடியும் நரகமாகத் தோன்ற,
“எக்ஸ்கியூஸ்மி…” தனக்குப் பக்கத்தில் நின்று இருந்தவரின் முகம் பார்க்காமல் முனங்கிவிட்டு விலகிச் செல்ல, அந்த நேரம் நேரிழையைத் தன் மனைவியாக்கிக் கொண்ட ஆதியதுலனின் விழிகள் நொடிப்பொழுதில் நேயநறுமையைத் தேடிப் பின் ஐயரிடம் நிலைத்தன.
இப்போதெல்லாம் நேயநறுமையிடம் நிறைய மாற்றங்கள். ஆமை தன் ஓட்டுக்குள் ஒடுங்குவது போல, அவளும் தனக்குச் சுத்தமாகப் பிடிக்காத அந்தச் சூழலிலிருந்து ஒடுக்கிக் கொண்டாள். அம்பிகாவும் தேவசகாயமும் தங்கள் மகளின் மாற்றத்தைக் கண்டு வியந்தாலும், ஆருயிர் தங்கைக்குத் திருமணமாகிப் பிரிந்து விடுவாள் என்கிற கவலையில் மகள் இப்படியிருக்கிறாள் என்று தங்களையே சமாதானம் செய்துகொண்டனர்.
ஆனால் உள்ளே நெக்குருகிப் போனது அவளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
இதோ திருமணமும் முடிந்துவிட்டிருந்தது. இதில் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் பலர்,
“பெரியவள் இருக்க இளையவளுக்கு என்ன அவசரம்? அதுவும் இந்தச் சின்ன வயசில்… இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாமே…” என்று கேட்கத் தயங்கவில்லை.
“என்ன செய்வது மாமி… மூத்தவளுக்குக் காலம் கூடி வரவில்லை. இளையவளுக்குத்தான் பொருந்தி வந்தது. வந்த சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அதுவும் அவளுக்கு இப்போது திருமணம் நடக்க வில்லை என்றால், முப்பத்தைந்துக்கும் பிறகுதான் திருமணம் நடக்கும் என்று ஒரு சாத்திரி சொன்னார்… அதுதான்..” என்று பொய்யும் மெய்யுமாகச் சொல்ல,
“அதுவும் சரிதான்… இருந்தாலும் உன் மூத்த மகளைத் தப்பாக அல்லவா பேசுவார்கள்…” என்றார் அந்தப் பெண்மணி உண்மையான அக்கறையுடன்.
‘ஈழத்தில் பேசுவார்கள். ஆனால் கனடாவில் இதைப் பற்றிக் கதைக்க யார் இருக்கிறார்கள். அவரவருக்கு அவரவர் பிரச்சனை. மூன்றாம் ஆளின் பிரச்சனையில் தலையிட நேரமில்லையே’
இங்கே உறவினர்களோடு அம்பிகா பேசிக் கொண்டிருக்க, அந்த மண்டபத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த நேயநறுமைக்கு அவசரத்திற்குப் பொங்கும் வலியைக் கொட்டிவிட முடியாத நிலை. இவள் வலி மற்றவர்களுக்குப் புரிந்தால்தானே.
இவளைக் கண்டதும், யார் யாரோ குறுக்கே வந்து, ஏதேதோ பேசினார்கள்.
“தங்கச்சிக்குத் திருமணம் முடிந்துவிட்டது. உனக்கு எப்போது…? என்ன திருமணம் செய்யாமல் தப்பி விடும் எண்ணமா?” ஏதோ நகைச்சுவை போல ஆளாளுக்கு பேச, இவளுக்கோ உள்ளே இருந்த அழுத்தத்தில் ஏதாவது ஏடாகூடமாகக் கத்திக் கொட்டிவிடுவோமோ என்கிற அச்சம் பேரலையாக எழுந்தது.
முன்பு என்றால் முகத்தில் அடித்தாற்போல எதையாவது சொல்லிவிட்டுக் கடந்து விடுவாள். ஆனால் இப்போது இருப்பது வேறு ஒருத்தியாயிற்றே. உடல் நடுங்கத் தொடங்கியது. என்ன சொன்னாள் என்று அவளுக்கும் நினைவில்லை. மனதுதான் கிடந்து தவித்துக் கொண்டிருந்ததே.
ஆதியதுலனின் நிரந்தரப் பிரிவு இத்தனை பெரிய வலியைக் கொடுக்கும் என்று சத்தியமாக அவள் நினைக்கவில்லை. இரண்டு நாள் வலிக்கும். மூன்றாம் நாள் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தாள்.
அதுவும் திருமணத்தின் போது அவன் தனக்கில்லை என்பதை மனது முழுதாக உணரும் போது சமாதானமாகி, பழைய நிலைக்கு வந்துவிடும் என்றுதான் எண்ணினாள். ஆனால், இருந்த வலியை விடப் பலமடங்கு அதிகமாக வலிக்கும் என்று சத்தியமாக அவள் நினைத்திருக்கவில்லை.
‘ஐயோ தகிக்கிறதே. என்னால் இந்தக் காட்சியைக் காண முடியவில்லையே… இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன்… காதல் இத்தனை கொடுமையானதா?’ தனக்குள் கதறித் துடித்தவளைப் பற்றி எதுவும் அறியாது முன்னால் நின்றிருந்தவர் எதையோ பேசித் தள்ளிக்கொண்டிருக்க, நல்ல வேளை, அவளைக் காப்பாற்றுவதற்கென்று அம்பிகா வந்து சேர்ந்தார்.
“நேயா… உன்னை எத்தனை முறை அழைப்பது…” என்று வந்த அம்பிகா, நேயநறுமையிடம் பேசிக்கொண்டிருந்த பெண்மணியிடம்,
“ரேனுகா அக்கா…! என்ன.. இங்கே இருக்கிறீர்கள்? உங்களைக் காணவில்லை என்று, அண்ணா தேடிக்கொண்டிருந்தாரே…” என்று சொல்ல, உடனே ரேணுகா பரபரப்புடன் அங்கிருந்து செல்ல, அவர் சென்று மறைந்ததும் மகளைப் பார்த்த அம்பிகா,
“மணமக்களை வாழ்த்தவேண்டும்… சீக்கிரமாக வா…” என்றவாறு மகளின் கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டு மண்டபம் நோக்கி நகரத் தொடங்க இவளுடைய கால்களோ பின்னின.
திரும்பவும் அவனை நெருக்கத்தில் பார்க்க வேண்டுமா. அது அவளால் முடியுமா… இத்தனை தொலைவில் இருக்கும்போதே அவன் இழப்பை அவளால் தாள முடியவில்லை. இதில் இன்னும் நெருங்கிச் சென்றால்? தடுமாறித் தவிக்கையில், அம்பிகா அவளை மேடை வரைக்கும் அழைத்து வந்துவிட்டிருந்தார்.
“அம்மா… வேண்டாம்… நீங்கள் மட்டும் போய் வாருங்களேன்..” என்று தவித்த மகளை ஒரு முறைப்பில் அடக்கினார் அம்பிகா.
“என்னதான் உன் பிரச்சனை நேயா…? அங்கே நடந்துகொண்டிருப்பது உன் தங்கையின் திருமணம். நீ எதிலும் கலந்துகொள்ளாமல் தள்ளி நின்றால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? உன் தங்கையின் மீது உனக்குப் பொறாமை என்று நினைக்க மாட்டார்களா? தனக்கு முன்பாகத் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டதால் கோபப் பட்டு ஒதுங்கியிருக்கிறாள் என்று பேச மாட்டார்களா?” மற்றவர்களுக்குக் கேட்காத வகையில் மகளைக் கடிய, இவளோ உதடுகளைக் கடித்துத் தன் வலியை அடக்க முயன்றாள்.
நிஜம் அதுதானே. அவளுக்குத் தங்கை திருமணம் முடித்ததில் பொறாமையில்லை. அவள் மணம் முடித்தவன் அவள் காதலன். அதனால் ஏற்பட்ட பொறாமையையும் இழப்பையும் தாங்க முடியாமல்தானே இப்படித் தவித்துத் துடிக்கிறாள். இதை வாய்விட்டுச் சொல்ல முடியாமல், கசங்கிப் போயிருக்க, அம்பிகா இவளின் கரத்தைப் பற்றிக் கொண்டு மணமேடை ஏறினார்.
அந்த நேரம் ஐயர் மணமக்களின் தலையில் அறுகரிசியைப் போட்டு வாழ்த்திவிட்டு விலக, அங்கே மாலையும் கழுத்துமாக நின்றிருந்த ஆதிய துலனைக் கண்டதும் அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது இவளுக்கு. கூடவே தன் இயலாமையின் மீது ஆத்திரமும் வந்தது.
அவன்தான் அவள் வேண்டாம் என்று அவளுடைய தங்கையை மணந்து மகிழ்ச்சியாக இருக்கிறான். இவள் ஏன் வெந்து தவிக்கிறாள். துடிக்கிறாள்? இல்லை நான் இனித் தவிக்க மாட்டேன். கரைய மாட்டேன். கலங்க மாட்டேன். என்னை வேண்டாம் என்றவனின் நினைவுகளும் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம். நீ எனக்கு ஒரு பொருட்டேயல்ல. அவள் திரும்பத் திரும்பத் தனக்குள் சொல்லிக்கொள்ள, அடுத்து தேவ சகாயமும் இவர்களை நெருங்கிய நேரம் மூவருமாக மேடையேறத் தொடங்கினர்.
என்னதான் மனத்தைத் திடமாக்க முயன்றாலும் கால்கள் தோய்ந்தன. உள்ளே ஒவ்வொரு அணுக்களும் உதறின. என்னதான் அவனைப் பார்க்கக் கூடாது என்று மனதிற்கு ஓதினாலும், பாழாய்ப் போன மனம் அவனிடம்தான் சென்று தொலைத்தது.
சிரமப்பட்டுத் தன் வலிக்குப் புன்னகை என்னும் திரையைப் போட்டு முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டவள், தாயிடம் கொடுத்து வைத்திருந்த தன் கைப்பையை எடுத்து அதிலிருந்து இரண்டு பெட்டிகளை வெளியே எடுத்தாள்.
அதில் ஒன்று முத்தாலான அட்டிகை. ஒரு முறை நேரிழை வாங்க ஆசைப்பட்டது. ஆனால் அதன் விலையைப் பார்த்ததும் அதை வாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டாள் நேரிழை. இவள் வேலைக்குப் போகத் தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைச் சேர்த்து அதே போல ஒரு அட்டிகையைத் தங்கைக்குத் தெரியாமல் வாங்கியிருந்தாள். அதை அவளுடைய பிறந்த நாளுக்குக் கொடுப்பதற்காகப் பத்திரமாக வைத்து இருந்தாள். அடுத்தது சின்னதாக ஒரு பெட்டி. அதை ஆசையோடு கரத்தில் எடுத்து வருடிக் கொடுத்தவளுக்கு இதயம் நின்றுவிடுவேன் என்று துடித்தது.
ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவள், நிமிர்ந்து பார்க்க, பாஸ்கரன் மணமக்களை வாழ்த்திக்கொண்டிருந்தார். நேரிழைக்குத் தங்க வளையலும் பதக்கத்தோடு சங்கிலியும் பரிசாகக் கொடுக்க அதைக் கண்டவளுக்கு மீண்டும் சுருக் என்ற வலி.
அவனுடைய காதலைப் பெற்றிருந்தால், இப்படி நேரிழை இருக்கும் இடத்தில் அவள் இருந்திருப்பாள்.
ஏக்கத்தோடு பார்த்திருக்கையில், பாஸ்கரன் விலகிச் சென்றதும் இவர்கள் மணமக்களை நெருங்கினார்கள்.
அவர்களை நெருங்க நெருங்க இவளுடைய உடல் நடுங்கத் தொடங்கியது. என்னதான் திடமாக இருக்க முயன்றாலும், பாழாய்ப் போன மனது கிடந்து தவித்தது. துடித்தது. நெருப்பில் வெந்தது. அவளது காதல்தான் வெந்தும் தணியாத காதல் ஆற்றே.
இவர்களைக் கண்டதும் நேரிழை அழத் தொடங்க சட்டென்று அவளுடைய தோளின் மீது தன் கரத்தைப் போட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டான் ஆதியதுலன். அந்தக் காட்சி மேலும் இவள் வலியை அதிகரிக்கச் செய்ய, சட்டென்று கண்களில் கண்ணீர் உற்பத்தியானது. அவசரமாகத் தலையைக் குனிந்து அந்தக் கண்ணீரை மறைத்துக் கொண்டவள், தாயின் பின்னே ஒட்டி நின்று கொண்டாள்.
அவளுக்குத் தனியாக அந்தச் சமையத்தைக் கையாள முடியும் போலத் தோன்றவில்லை. அப்படியே கரத்திலிருக்கும் பொருட்களை விட்டெறிந்துவிட்டு அங்கிருந்து ஓடிவிடவேண்டும் போலத் தோன்றியது. கூடவே ஆதியதுலனின் பட்டுச் சட்டையைப் பற்றி ஏன்டா என்னைத் தேர்வு செய்யாமல் நேரிழையைத் தேர்ந்தெடுத்தாய் என்று கேட்டு அவன் பரந்த மார்பில் விழுந்து விம்மி அழவேண்டும் போலவும் வேகம் வந்தது.
தோன்றியது மட்டும்தான். செயற்படுத்தத் திராணியற்று சிலையென நின்றிருக்க நேரிழையை நெருங்கிய அம்பிகா, மெல்லிய விசும்பலோடு இளையவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டார். தேவசகாயம், ஆதியதுலனை அணைத்து விடுவிக்க அவர் விழிகளிலும் கண்ணீர் நிறைந்திருந்தது. அவரைத் தட்டிக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்தவனின் விழிகளில் பட்டாள் நேயநறுமை. பட்டவளை விட்டு இம்மியும் அவன் விழிகள் விலகுவதாயில்லை.
நேயநறுமை அழகிதான். ஆனால், இன்று சேலையில் கொள்ளை கொள்ளும் அழகில் செழித்துக் கிடந்தாள் அவள். ஏற்கெனவே சிவந்த அவளுடைய நிறத்திற்குப் பொருத்தமாக மிதமான அரிதாரம். நீண்ட விழிகளை இன்னும் பெரிதாக்குவது போலக் கண்மை. இளம் சிவப்பு உதடுகளுக்கு இதமான இளஞ்சிவப்பில் உதட்டுச் சாயம். கழுத்தில் அட்டியல். அதற்குக் கீழே மாஜந்தா நிறத்தில் வேலைப்பாடுகள் செய்த இரவிக்கை. அதே நிறத்தில் கட்டியிருந்த இளம் மாஜந்தா நிறச் சேலை என்று வானத்துத் தேவதையாகக் காட்சி கொடுத்தவளைக் கண்ட அந்த நொடியிலிருந்து அவன் மனம் அவனிடமில்லை. இதயம் தவித்தது. துடித்தது. அவனையும் மீறி விழிகள் நேயநறுமை செல்லும் இடமெல்லாம் செல்ல, மனசாட்சியோ அவனை வெறுத்து ஒதுக்கியது.
“டேய்… என்ன காரியம் செய்கிறாய். இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கும், நேரிழைக்கும் திருமணம். அப்படியிருக்கிற போது அவளைப் பார்த்து வாயைப் பிளக்கிறாயே. உனக்கு மனசாட்சியே இல்லையா?” அவனைத் திட்ட, மனதுக்கும் மனசாட்சிக்கும் தொடர்பே இல்லை என்பதை அன்றுதான் கண்டுகொண்டான் ஆதியதுலன்.
அவன் மனது போகும் போக்குத் தவறு என்று அவனுடைய மனசாட்சி சுட்டிக்காட்டினாலும் அதைக் கருத்தில் எடுக்கும் நிலையில் அவனில்லை.
அவனையும் மீறி, அவள் நிற்கும் இடமெல்லாம் தவிப்புடன் நகர்ந்த விழிகளை அவனால் கட்டுப் படுத்தவே முடியவில்லை.
இதோ, நேரிழையின் கழுத்தில் தாலியும் கட்டி விட்டான். ஆனாலும் விழிகள் நேயநறுமையைத் தான் தேடுகின்றன. அவளிடம்தான் நிலைக்கிறது.
அன்று இரவு உன்னை நான் காதலிக்கிறேன் என்று அவள் சொன்ன அந்த நொடியிலிருந்து அவன் அவனாக இல்லை. மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. இன்னொருத்திக்குத் திருமணம் செய்கிறேன் என்று வாக்குக் கொடுத்த பிறகு, மனது அலைபாய்வது தவறுதான். குற்றம்தான். ஆனாலும் குரங்கு மனதை அடக்கும் வழிதான் அவனுக்குத் தெரியவில்லை. என்ன செய்வான்?
அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து தப்ப, முடிந்த வரை நேயநறுமையைப் பார்ப்பதைத் தவிர்த்து இருந்தான் ஆதியதுலன். அது அவனுக்குப் பெரிய சிரமமான காரியமாக இருக்கவில்லை. நேயநறுமையும் அதைத்தான் விரும்பினாள் போல. அவளும் ஒதுங்கியே இருந்துகொள்ள, அது சுலபமாகவும் இருந்தது.
ஆனால், இப்போது மணமேடையில், கொள்ளை கொள்ளும் அழகோடு கண்முன்னால் நிற்பவளைக் கண்டதும் திரும்பவும் அவனுடைய மனது ஒருநிலை இல்லாமல் தவிக்கத் தொடங்கியது. பார்வையோ அவனையும் மீறி அவளிடமே சரணடைந்திருந்தது.
இதோ அம்பிகாவும், தேவசகாயமும் வாழ்த்தி விட்டு நகர, பின்னால் தயக்கத்தோடு வந்தாள் நேயநறுமை.
அவள் நெருங்க நெருங்க ஆதியதுலனிடமிருந்து சீற்றமாக மூச்சுக்காற்று வெளிவர ஆரம்பித்திருந்தது.
நேயநறுமையோ, ஆதியதுலனின் முகத்தைக் கூட ஏறிட்டாளில்லை. நெஞ்சம் இறுக, புத்தி கலங்க, இதயம் வெடிக்கத் தங்கையை அணைத்துக்கொள்ள, நேரிழையும் அழுகையுடன் தன் சகோதரியை இறுக அணைத்துக் கொண்டாள். இருவருக்குமே கண்ணீர் ஆறாகப் பொங்கி வழிந்தது. அதுவும் நேயநறுமையின் கசங்கிய முகத்தைக் கண்டவனுக்கு கைமுஷ்டிகள் இறுகின. ஒரு கட்டத்தில் அவளுடைய வலியைப் பார்க்கும் சக்தியில்லாதவனாகத் தன் முகத்தைத் திருப்பிக்கொள்ள, நேயநறுமை மெதுவாகத் தன் தங்கையை விடுவித்து, அவளுடைய கன்னத்தைத் துடைத்துவிட்டு,
“ஷ்… அழாதே…” என்றவள், நேரிழையின் முகத்தைப் பற்றி அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு விலகி, தன் கரத்திலிருந்த பரிசுப்பெட்டியை நீட்டி,
“இது என்னுடைய சிறிய அன்பளிப்பு நேரிழை” என்றாள் மென்மையாக.
நேரிழை, பெரியவளை வியப்பாகப் பார்த்தவாறு அவள் கொடுத்த பெட்டியை வாங்கியவள், அதை ஆர்வத்துடன் திறந்து பார்த்தாள். அங்கே கிடந்த அட்டியலைக் கண்டு வியந்தவள்,
“அக்கா… இது… நீர்…” என்றாள் கண்களில் கண்ணீர் பொங்க. தன் தங்கையின் கன்னத்தில் உள்ளங்கையை வைத்துப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவள்,
“நீர் ஆசைப்பட்டது.. உம்முடைய திருமண நாளுக்கு என்னுடைய அன்பளிப்பு…” என்றவள் அந்த அட்டியலை எடுத்துத் தங்கையின் கழுத்தில் கட்டிவிட முயன்றாள்.
புதிய புரி, பூட்டச் சற்றுச் சிரமமாக இருக்க, அதைக் கண்டுகொண்ட ஆதியதுலன் உதவி செய்ய முயன்றவனாக நேயநறுமையின் கரத்திலிருந்த, அட்டியலைப் பற்ற முயன்றான். அவனுடைய வெம்மையான பலம் மிக்க கரங்கள், அவளுடைய தளிர் கரத்தின் மீது அழுந்தப் படிய, அந்த நிலையிலும் சிலிர்த்து அடங்கியவள், மறு கணம் பதறிப் போய்த் தன் கரத்தை விலக்கிக்கொண்டவளாக நிமிர்ந்து ஆதியதுலனைப் பார்த்தாள்.
என்னதான் முயன்றும் அவனுடைய கரம் பட்டதால் ஏற்பட்ட இன்ப உணர்வை அவளால் அடக்கவே முடியவில்லை. அவன் கரம் பட்ட இடங்களில் அவசரமாக மொட்டவிழ்ந்து பூப் பூப் பூக்க, அந்த உணர்வு கொடுத்த தாக்கத்தில், ஆடிப்போனாள். இப்போது அவன் அவளுடைய தங்கையின் கணவன். ஆனால் இந்த மனது இன்னும் அவனைத் தேடுகிறதே… துடித்தவளாக, அவன் கரம் பட்ட இடத்தைப் பிறர் கவனத்தைக் கவராத வகையில், தேய்த்துக் கொடுத்து அந்த உணர்வை இல்லாததாக்க முயன்றாள். ஆனால் மின்சாரமாகத் தாக்கிய அவன் தொடுகை உணர்வை அவளால் இம்மியும் அழிக்க முடிந்திருக்கவில்லை.
அதே நேரம் ஆதியதுலனோ அவசரமாகத் தன்னிடமிருந்து கரத்தை இழுத்து எடுத்துக்கொண்ட நேயநறுமையை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். பின் நிதானமாக மனைவியின் கழுத்தில் ஏறிய அட்டிகைக்குப் புரியைப் போட்டு நேரிழையைத் தன் பக்கமாகத் திருப்பி அழகு பார்த்தான். திருப்தியாகச் சிரித்தவன், நிமிர்ந்து நேயநறுமையை உணர்ச்சிகளைத் துடைத்த பாவனையோடு ஏறிட்டு,
“என் மனைவிக்கு நான் அணிவித்தால்தானே நன்றாக இருக்கும்…” என்றான் நிதானமாக.
அதைக் கேட்டதும் மீண்டும் வலி அவளை ஆக்கிரமித்தது. அவனுடைய திருமணம் மிகப் பெரும் வலியை அவளுக்குக் கொடுக்கும் என்று தெரியும்தானே. பிறகு ஏன் திரும்பத் திரும்பப் புண்ணாகிப் போன நெஞ்சில் அம்பெய்கிறான்? வலியை உமிழ்நீரோடு கூட்டி விழுங்கியவள், தன் கரத்திலிருந்த சிறிய பெட்டியைத் திறந்து அதை ஆதியதுலனின் முன்னால் நீட்டினாள்.
அவள் நீட்டிய பெட்டியிலிருந்த அந்த மோதிரத்தைக் கண்டவனின் விழிகளில் அதிர்ச்சி. நிமிர்ந்து நேயநறுமையைப் பார்க்க, அவளோ அவனைப் பார்க்க மறுத்து மோதிரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த மோதிரம், அன்று நகைக்கடையில் அவன் எடுத்துப் பார்த்த மோதிரம். அதன் விலையைக் கேட்டதும், அப்படியே திரும்பக் கொடுத்துவிட்டு வந்திருந்தான். அந்த மோதிரத்தைத்தான் அவனுக்கு முன்னால் நீட்டியிருந்தாள் நேயநறுமை. இவனோ அந்த மோதிரத்தை வாங்கும் எண்ணமில்லாமல், நின்றிருக்க, நேரிழையோ, அவள் கரத்திலிருந்த மோதிரத்தைச் சட்டென்று எடுத்து ஆசையுடன் பார்த்தாள்.
“வாவ்… மிக அழகாக இருக்கிறது அக்கா… அதுவும் ஆதியின் சுவைக்கு ஏற்ப வாங்கி இருக்கிறீர்…” வியப்புடன் சொன்னவள், கொஞ்சம் கூட யோசிக்காமல், அந்த மோதிரத்தை நேய நறுமையின் கரத்தில் திணித்து தன் கணவனின் கரத்தை இழுத்து அவள் முன்னால் நீட்டி,
“நீரே உம்முடைய அன்புப் பரிசை இவருக்குப் போட்டுவிடும்…” என்று கூற, ஒரு கணம் அதிர்ந்தாள் நேயநறுமை. அவள் எப்படி அவனுக்கு மோதிரம் போட்டுவிட முடியும். மறுத்தவள் தங்கையிடம் மோதிரத்தை நீட்டி,
“இ… இல்லை… நீரே போட்டுவிடும் நேரு…” மறுப்பதற்குள் ஆதியதலனின் மோதிரவிரல் சட்டென்று அந்த மோதிரத்திற்குள் நுழைந்து விட்டிருந்தது.
அதிர்ந்துவிட்டாள் நேயநறுமை. அவள் மோதிரம் போட்டுவிட்டாளா என்ன? ஆனால் எப்படி? அவள் தான் கரத்தை அசைக்கவேயில்லையே? வியர்த்து விறுவிறுத்துப் போனது அவளுக்கு.
புரியாத குழப்பத்தோடு அவனைப் பார்க்க, அவனோ, விரலில் ஏறியிருந்த அந்த மோதிரத்தைத் தூக்கிப் பார்த்தான். ஒரே ஒரு விநாடி அவன் முகம் கனிந்து பின் இளகிச் சாதாரணமானது. அவளை ஏறிட்டு,
“நன்றி…” என்றான் உணர்ச்சியற்ற குரலில். இதற்கு என்ன பதிலைச் சொல்வாள்? இன்னும் எப்படி அவனுடைய விரலுக்கு அவள் கரத்திலிருந்த மோதிரம் போனது என்று தெரியவில்லை.
அதிர்ச்சியும் தடுமாற்றமுமாக அவனை ஏறிட்டவள், அதற்கு மேல் அவனைப் பார்க்கும் தைரியமில்லாதவளாக, விட்டால் போதும் என்கிற எண்ணத்தில் மேடையைவிட்டு ஓட முயல, அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் அம்பிகா.
“எங்கே போகிறாய். புகைப்படம் எடுக்க நில்…” என்றவர் அவளை இழுக்க, அவர் இழுத்த வேகத்தில், புடவை காலில் சிக்கிச் சமநிலை தவறியவள் பின்னால் சரிய, சட்டென்று அவள் இடை தாங்கி நிறுத்தினான் ஆதியதுலன்.
அவன் கரம் பட்டதுதான் தெரியும். மீண்டும் அவள் உலகத்தில் புத்தம் புதிதாய் பூக்கள் பூத்தன. கூடவே பூத்த விநாடியிலேயே அவை வாடிக் கருகிப் போக, சட்டென்று அவனைத் தள்ளிவிட்டு விலகிக் கொண்டவள் தாயின் பக்கமாக நின்று கொண்டாள். தேகமோ நடுங்கியது. வதங்கியது. அவனுடைய நெருக்கமும் தொடுகையும் எந்தளவு அவளைப் பாதிக்கிறது என்பது புரிந்து போக, இதயம் ஓலமிட்டு அலறியது.
அவளுக்கு அவன் வேண்டும். வேண்டும். வேண்டும். மனது கூப்பாடு போட்டது. வெடித்துச் சிதறிய இதயத்திலிருந்து இரத்தம் பொங்கி வழிய, அவளுடைய நிலைபற்றி எதுவும் தெரியாத அம்பிகாவோ, செயலற்று நின்றிருந்த மகளைப் பற்றி நிலையாக நிற்க வைத்துப் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
சற்று நேரத்தில் புகைப்படம் எடுக்கும் படலம் முடிந்ததும், தன் மகளைப் பற்றியிருந்த கரத்தை அம்பிகா விலக்கியதுதான் தாமதம், கடகடவென்று மேடையை விட்டு இறங்கியவள், மறு கணம் புயலென மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள். நெஞ்சமோ துடித்தது. வலித்தது.
சுத்தமான காற்றுக் கூட அவள் மனத்தை அமைதிப்படுத்த மறுக்க ஓவென்று வந்தது அவளுக்கு. வாய்விட்டுக் கதறியழுதால் நன்றாக இருக்குமோ? நோ… அழக் கூடாது. அழவே கூடாது. இவளை வேண்டாம் என்று மறுத்தவன்தான் அழ வேண்டும் இவளல்ல.
வெறிகொண்டவள் போல நினைத்தவள், கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினாள்.
அந்தத் திருமண மண்டபம் ஒரு கோவிலை அண்டி வயல்வெளிக்கு மத்தியில் அமைந்திருந்ததால் காற்றுப் பயங்கரமாக வீசியது. ஆனாலும் அந்தக் காற்றால் அவளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
திக்குத் தெரியாத காட்டில் நடப்பது போல வெற்றுக் காலில், அந்த வயல்வெளியின் வரம்பில் ஓட்டமும் நடையுமாக நடந்தவளின் பெருவிரலில் அவள் பாதையை மறைத்து நின்ற ஆலமரத்தின் வேர் ஒன்று, பலமாகத் தாக்கச் சுளீர் என்று எழுந்த வலியில், சுயம் பெற்றவளாகச் சுத்தவரப் பார்த்தாள்.
அப்போதுதான் ஏதோ ஒரு வெறியில், யாரும் இல்லாத அந்த வெட்ட வெளியில் திக்குத்திசை தெரியாமல் நடந்து வந்திருப்பதே அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் உறுத்தவில்லை. மனது கிடந்து தவித்தது. அழ மறுத்தவளை மீறி விம்மல் வெடிக்கத் தயாரானது. ஆனாலும் உதடுகளைக் கடித்து அந்த விம்மலைத் தடுத்தவள் எல்லையில்லா துயரோடு ஆலமரத்தின் மீது சாய்ந்து, அப்படியே மடங்கித் தரையில் அமர்ந்தாள். எங்கே அழுதுவிடுவோமோ என்று அஞ்சியவளாக விழிகளை அழுந்த மூடினாள். மூடிய விழிகளுக்குள் அவனை முதன் முதலாகச் சந்தித்தது, அவனோடான நிகழ்வுகள் என்று அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, மூச்சு முட்டியது.
ஐயோ…! எப்போதுதான் இந்த வலியிலிருந்து வெளியேறப் போகிறாள்? நினைக்கும் போதெல்லாம் தேகம் எரிகிறதே. அடிவயிறு பொறாமையில் வேகிறதே. என்ன செய்வேன்? இனி அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் தகிக்குமே. மனது சபிக்குமே. அது அவர்களின் வாழ்க்கையை அழித்து விடாதா? அழிக்கட்டுமே. என்னை வேண்டாம் என்றவன் நன்றாக இருந்தால்தான் என்ன இல்லாமல் போனால்தான் என்ன? ஐயோ…! அவன் வாழ்க்கை பட்டுப்போனால் அவள் தங்கையின் வாழ்க்கையும் சேந்தல்லவா பட்டுப்போகும். என்ன தான் அவளை மறுத்து ஒதுக்கினாலும், அவனுக்கு வலித்தால் எனக்கும் வலிக்குமே…? கடவுளே…! இந்த வலியிலிருந்து என்னை மீட்டுவிடு…! என்னால்
முடியவில்லை…! உயிரே எரிகிறதே நான் என்ன செய்வேன்.. இல்லை…! இல்லை…! என்னால் முடியாது…! முடியவே முடியாது! இந்த வேதனையை மறக்கவேண்டும் என்றால் அவள் இதைவிடப் பெரிய வேதனையைச் சந்திக்க வேண்டும். அதற்கு எங்கே போவாள்? உள்ளே எடுத்த மூச்சைக்கூட வெளியே விட மறந்தவளாக, விழிகளைத் திறந்தவளின் கண்களில் பட்டது ஒரு ஓரமாக உடைந்து கிடந்த போத்தல் துண்டு ஒன்று.
விழிகளில் வெறி கொப்பளிக்கச் சரிந்து அந்தத் துண்டை எடுத்தவள் அதைச் சற்றுநேரம் வெறித்துப் பார்த்தாள். வலிக்கும் இதயத்தை இதைக் கொண்டு கீறிப் பிளந்து வெளியே எடுத்துத் தூக்கி எறிந்து விட்டால் என்ன? அப்போதாவது கொஞ்சம் அமைதி அடைய மாட்டாளா?
மறுகணம் முந்தானையை இழுத்து விலக்கியவள், இரவிக்கையின் இரண்டு பட்டன்களை நடுங்கும் கரம் கொண்டு கழற்றினாள். மறு கணம் அவன் மீது காதல் கொண்ட இதயத்தை வெட்டியெறியும் ஆவேசத்தோடு தாறுமாறாகக் கீறத் தொடங்கினாள் நேயநறுமை.
அவளுடைய அந்தப் பைத்தியக்காரத் தனத்தினால் இரத்தம் கொட்டத் தொடங்கியது. ஆனாலும் அவளுக்கு அது ஒரு வலியாகவே தெரியவில்லை. மனதில் அலைபாயும் வேதனைக்கு மத்தியில் இந்த வலியெல்லாம் ஒரு வலியாகவே தெரியவில்லை. ஆனால் அவளுடைய அந்தக் கடும் செயலால் மனது கொஞ்சம் அமைதியானது போலத் தோன்ற, பீரிட்டுக் கிளம்பிய அழுகை மங்கியது. திருப்தி உண்டானது. வேகமாகக் கிறுக்கிய கரம் தளர்ந்து விழுந்தது.
இதைத்தான் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று சொன்னார்களோ? அவளுடைய காதல் வலியை, அர்த்தமில்லா அந்தக் கீறல்கள் சற்று மட்டுப்படுத்தச் சற்று நேரம் திருப்தியோடு இடது பக்க நெஞ்சிலிருந்து வழிந்த இரத்தத்தை உணர்ந்தவாறு அப்படியே அமர்ந்திருந்தாள் நேய நறுமை.
26 அதே நேரம் மண்டபத்தில் நேயநறுமையைத் தேடிக்கொண்டிருந்த அம்பிகா, அவளைக் காணாமல் குழம்பிப் போனார். “கண்...” எப்போதும் போலத் தன்…
24 மறு நாளே, அம்பிகா பாஸ்கரனோடு பேச, பாஸ்கரனுக்குச் செய்தி கேட்டு அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவர் தன் வாழ்த்தையும் அன்பையும்…
23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…
21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…
20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…
19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம…