மறு நாளே, அம்பிகா பாஸ்கரனோடு பேச, பாஸ்கரனுக்குச் செய்தி கேட்டு அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவர் தன் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துவிட்டு, அடுத்த நல்ல முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார் உடனே.
“அதில்லை அண்ணா… நேருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவள் வேறு படிக்கிறாள். வயதும் பதினெட்டுதான். இந்த நிலையில் உடனே திருமணத்தை வைப்பது சரிவருமா?” தயக்கமாகக் கேட்க, மறு பக்கம் சிரித்தார் பாஸ்கரன்.
“அம்பிகா… இதில யோசிக்க என்ன இருக்கிறது? நேரிழை ஒன்றும் குழந்தையில்லையே. தவிர இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்வதை வெறுக்கவோ மறுக்கவோ இங்கே யாருமில்லை. பிறகு எதற்காக அவர்களின் ஆசையை நாம் தடுக்க வேண்டும்? அது மட்டுமில்லை அம்பிகா, ஆதிக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று எங்கள் சாத்திரி சொன்னார். இல்லையென்றால் பத்து வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்குமாம். அதுவரை நான் உயிரோடு இருப்பேனோ இல்லையோ. நான்
ஆரோக்கியமாக இருக்கும் நேரத்திலேயே அவனுடைய திருமணத்தை பார்த்துவிட வேண்டும் அம்பிகா. இந்த நேரத்தில் அவளுடைய வயதைக் காரணம் காட்டி தள்ளிப்பொடுவது அத்தனை உசிதமில்லை…” சொல்ல, சற்று நேரம் அமைதி காத்தார் அம்பிகா.
பாஸ்கரன் சொல்வதிலும் உள்ள நியாயம் புரியவே செய்தது. ஆனால் மகளின் படிப்பு? அதையே பாஸ்கரனிடம் சொல்ல,
“ப்ச்… படிப்புதானே… கல்வி எங்கே கற்றால் என்ன? அது என் பொறுப்புமா… அவளை எனக்கு மகளாகக் கொடுத்து விடு. அது போதும்..” அவர் வலியுறுத்திச் சொல்ல அதற்கு மேல் மறுக்கவில்லை அம்பிகா. அனைத்தையும் கடவுளின் தலையில் போட்டுவிட்டுத் திருமண ஏற்பாட்டைச் செய்யத் தொடங்கினார்.
இவர்களுக்கும் சொல்லிக் கொள்ளும்படி உறவுகள் என்று கனடாவில் பெரிதாக இல்லை. ஊரிலும் இல்லை. இருக்கும் ஒரே உறவு நட்பு என்றால் அது பாஸ்கரன் மட்டும்தான். அப்படி இருக்கையில் கனடாவில் திருமணத்தை வைத்து என்ன செய்வது? இதில் பாஸ்கரனுக்குக் கனடா வருவது இயலாத காரியம் என்பதால், அனைவரும் ஈழம் செல்வது என்று முடிவானது.
ஈழத்தில் திருமணம் என்றதும் பாஸ்கரனைக் கையில் பிடிக்க முடியவில்லை. தன் ஒரே மகனின் திருமணத்தைக் கண்ணாரக்காணலாம் என்கிற குதுகலத்தோடு, திருமணத்திற்கான அத்தனை வேலைகளும் தன் பொறுப்பு என்று அதைக் கையில் எடுத்துக்கொண்டார். இவர்களும் எந்த அழுத்தமும் இல்லாமல் ஈழம் செல்ல ஆயத்தமானார்கள்.
நேயநறுமைக்கோ ஈழம் செல்வதற்கு இம்மிகூட விருப்பமில்லை. ஆதியதுலனும், நேரிழையும் மணந்து கொள்ளும் காட்சியைக் காணும் சக்தி அவளுக்குச் சுத்தமாக இருக்கவில்லை. ஆனால் போகாமலிருக்க முடியாதே. பரீட்சை வேறு முடிந்து
விட்டது. எதைக் காரணத்தைக் காட்டி, வீட்டில் தங்குவது? அதுவும் இருப்பதோ ஒரே ஒரு தங்கை. அவள் திருமணத்திற்குப் போகாமலிருக்க முடியாது. அப்படியே மாட்டேன் என்றாலும் அம்பிகா சந்தேகப் படுவார். அது அத்தனை பேருக்கும் சிக்கலாகிப் போகும். வேறு வழியில்லாமல் அவளும் ஈழம் செல்லத் தயாரானாள். ஆனால் இதயம்தான் குண்டுக் கல்லை வைத்தது போல பாரமாகிப் போனது.
முதலில் தன்னை வேண்டாம் என்றவன் தனக்கும் வேண்டாம் என்றுதான் அலட்சியமாக நினைத்து அவன் நினைவுகளை உதற முயன்றாள். ஆனால் அது இயலாத காரியம் என்று நாட்கள் நகரத் தொடங்கத்தான் அவளுக்குப் புரியத் தொடங்கியது.
முன்பு இலகுவாக இருந்தது, அவர்களின் திருமண நாள் நெருங்க நெருங்க நெருப்பில் குளிக்கத் தொடங்கினாள் இவள். அதுவும் நேரிழையும் ஆதியதுலனும் பக்கத்தில் நிற்பதைக் கண்டாலே, இவளுக்கு எரிந்தது. அவன் என்னவன். எனக்கு மட்டும் சொந்தமானவன் என்கிற எண்ணம் பேரலையாக எழுந்து அவளை அலைக்கழித்தது. ஆனாலும் அதை வாய் விட்டுச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்துப் போனாள் நேயநறுமை. விளைவு அனைத்திலும் இருந்து ஒதுங்கிக்கொண்டாள்.
இதோ ஈழம் செல்லும் நாளும் நெருங்கியது. மறு நாள் அவர்கள் புறப்படப்போகிறார்கள். மண மகள் திருமணமாகாமல் மாப்பிள்ளை வீட்டில் தங்க முடியாது என்பதால், மண்டபத்திற்கு அருகாமையில், ஒரு வீட்டைத் தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து இருந்தார்கள். அதுதானாம் பெண் வீடு. அங்கே போனால் அதற்குப் பிறகு ஆதியதுலனைப் பார்க்க முடியாது. அடுத்த இரண்டு நாட்களில் திருமணம். திருமணம் முடிந்தால், மொத்தமாக அவளுக்கு உரியவனற்றுப் போவான். நினைக்கும் போதே நெஞ்சம் வெடித்தது அவளுக்கு.
அவள் தொலைத்தது காதலை மட்டுமல்ல, அவளுடைய இனிய உணர்வை. எதிர்காலத்தை. மகிழ்ச்சியை. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, எந்தத் திசையில் இழந்த நிம்மதியை மீளப்பெறுவது என்று தெரியாமல் திணறினாள் நேயநறுமை.
இப்போது எதற்காகத் துடிக்கிறேன்? தவிக்கிறேன்? நான் என்ன உயிரையா தொலைத்து விட்டேன்? வெறும் காதலைத்தானே? தொலைந்தால் தொலைந்து விட்டுப் போகட்டும். இதே போலக் காதல் இன்னொருத்தனிடம் வராமலா போய்விடும்? நினைக்கும் போதே கண்ணீர் கன்னத்தில் வடிந்து செல்ல வெறுத்துப் போனாள் நேயநறுமை.
ஐயோ… இப்போது ஏன் கண்ணீர் இப்படிக் கொட்டுகிறது? வாழ்க்கையில் அழுகையையே பார்த்தறியாத நான், இப்போது அதை மட்டும் தானே பார்த்துத் தொலைக்கிறேன். இப்படியே காலம் முழுக்க அழுதே கரைந்து விடுவேனோ? நோ… நோ… இது தற்காலிகம்தான். அவர்கள் இருவருக்கும் திருமணமான மறு விநாடியே அவனை மறந்து விடுவேன். நிச்சயமாக மறந்து விடுவேன்.
மனதிற்குள் உருப்பட்டுக்கொண்டிருக்க, உள்ளுணர்வோ அவளைக் கேலியாகப் பார்த்துச் சிரித்தது.
‘உன்னால் அவனை மறக்க முடியுமா? அவன் மீது வைத்த காதலை இன்னொருத்தன் மீது வைக்க முடியுமா?’ அவளிடமே கேட்க, அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல் எழுந்துவிட்டாள் நேயநறுமை. மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. அந்த அறைக்குள் அடைந்து கிடந்தால், மூச்செடுக்க முடியாமலே செத்துவிடுவோமோ என்கிற அச்சம் தோன்றத் திரும்பித் தன் தங்கையைப் பார்த்தாள். நேரிழை நல்ல உறக்கத்திலிருந்தாள்.
அவளுக்கென்ன மனதுக்குப் பிடித்தவன் இதோ இன்னும் ஒரு சில நாட்களில் சொந்தமாகப் போகிறான். ஆனால் இவளுக்கு அப்படியா? மீண்டும் இதயம் வெடிக்கும் வகையில் வேதனை பிளந்து கொண்டு வந்தது.
இனி வரும் காலங்களில் உறக்கம் அவளைத் தேடிவருமா என்ன? இனி அது எட்டாக் கனிதானோ? வலியோடு எண்ணியவள், படுக்கையை விட்டு எழுந்தாள்.
அங்கிருந்த ஷால் ஒன்றை இழுத்தெடுத்து மேனியைச் சுற்றிப் போட்டவாறு வெளியே வந்தாள்.
இருட்டில் நிசப்தமான வீடு, கொந்தளித்துக் கொண்டிருந்த மனதிற்குக் கொஞ்சமும் அமைதி கொடுப்பதாகயில்லை. சுவாசிக்கக் கூட காற்று இல்லாதவள் போல, நடந்து சென்றவள், உப்பரிகையின் கதவைத் திறக்க, பக்கென்று மூக்கில் அடித்தது அவளுக்குப் பிடித்தமான ஆண் வாசனை.
தவிப்போடு நிமிர்ந்து பார்த்தாள் நேயநறுமை. ஆதியதுலன்தான், அந்தக் குளிரிலும் வெற்று மேலோடு, கீழே பிஜாமா ஒன்றை அணிந்தவாறு உப்பரிகையின் தடுப்பைப் பற்றியவாறு முழுதாய் தேய இருக்கும் சந்திரனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவன் இங்கே இந்த நேரத்தில் என்ன செய்கிறான்? சொல்லப்போனால், மனதுக்குப் பிடித்தவள் உரிமையாகப் போகிறாள் என்கிற மகிழ்ச்சியில், கனவு கண்டு உறங்கியிருக்க வேண்டுமே? ஆனால் இந்தக் குளிர் கூட உறைக்காதவனாக எதற்காக நிற்கிறான்? கேள்விகள்
நெஞ்சில் எழ, அவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள். அவனுடைய வெற்றுத் தேகம், அடக்கியிருந்த அவள் ஆசையை மேலும் தூண்டிவிடக் கலங்கிப்போனாள் நேயநறுமை.
இந்த உருண்டு திரண்ட இறுகிய ஆண்மை நிறைந்த தேகம் அவளது உடைமையல்ல. அவன் விடும் மூச்சுக்காற்று அவளுக்கு உரித்தானதல்ல. அவன் தேகத்தில் கசியும் வாசனை அவளுக்குச் சொந்தமில்லை. அந்த நினைப்பே பெரும் தீயாய் வதைக்க, அதற்கு மேல் அவனைப் பார்க்கும் சக்தியில்லாதவளாக, சட்டென்று திரும்பி விட்டாள் நேயநறுமை.
“எதிர்பாராத திருப்பங்கள் கொண்டதுதான் வாழ்க்கை இல்லையா…” என்றான் வானத்தை வெறித்துப் பார்த்தவாறு.
ஒரு கணம் அவன் தன்னோடுதான் பேசுகிறானா இல்லை வேறு யாருடனும் பேசுகிறானா என்கிற குழப்பம் வர, திரும்பிப் பார்த்தாள். இன்னும் அவன் வானத்தைத்தான் அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளை அவன் பார்க்கவில்லை. ஆனாலும், அவள்தான் வந்திருக்கிறாள் என்று எப்படித் தெரியும்? ஒரு வேளை நேரிழை என்று நினைத்துப் பேசுகிறானா? குழப்பத்தோடு திரும்பி அவன் முகத்தைப் பார்க்க, இப்போது நிதானமாகத் திரும்பி அவளைப் பார்த்தான் ஆதியதுலன்.
அந்த விழிகளில் குழப்பமில்லை. அதிர்ச்சி இல்லை. நீ என்று தெரிந்துதான் கேட்டேன் என்கிற தெளிவு இருந்தது. ஆனால் ஆசைப்பட்டுக் காதலித்தவளை மணந்து கொள்ளும் ஆண்மகனின் மலர்ந்த முகத்தை அவனிடம் காணவில்லை. பரவசம் இல்லை. குதூகலம் இல்லை. மாறாக இறுக்கம் தெரிய ஒரு கணம் குழம்பினாள் நேயநறுமை.
ஏனோ ஒன்றோடு ஒன்ற சேர மறுப்பது போலத் தோன்ற,
“நி.. நிஜமாகவே நீங்கள் நேருவை விரும்புகிறீர்களா?” கேட்டபோதோ அவளுடைய குரலில் தவிப்பு.
அவனோ ஒரு விநாடிக்கும் குறைவாக அவளுடைய விழிகளைக் கூர்மையாகப் பார்த்துவிட்டுப் பின் திரும்பி தேய்பிறையை வெறித்துப் பார்த்தான். பின் திரும்பி அவளை ஏறிட்டான்.
“அதில் உனக்குச் சந்தேகமா?” என்றான் வெறுமையாக. மார்பிலிருந்து விலக முயன்ற ஷாலை சரியாகப் போட்டவாறு, அவனை நெருங்கியவள், தானும் வெளியே பார்த்தவாறு,
“அப்படி மகிழ்ச்சியைக் கொடுத்தால் ஏன் இங்கே நிற்கிறீர்கள். உங்கள் முகத்தில் அதற்கான மலர்ச்சி எதுவும் தெரியவில்லையே…” சொன்னவள் திரும்பி அவனை அழுத்தமாகப் பார்த்து, “நிஜமாகவே நீங்கள் நேருவை விரும்புகிறீர்களா?” என்றாள் அவனிடமிருந்து விழிகளை விலக்காமல்.
அவனையும் மீறி ஒரு பெருமூச்சு வெளி வந்ததோ? அவள் சந்தேகப்படும் முன்பே அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“யார் சொன்னா…? நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். அதீத மகிழ்ச்சியும் உறக்கத்தைக் கெடுத்து விடும். உனக்குத் தெரியாதா என்ன?” கேட்டவனை ஏக்கத்தோடு பார்த்தாள் நேயநறுமை.
இப்போது அவன் அவளுடைய தங்கைக்குச் சொந்தமானவன் என்று தெரிந்தும் அவன் மீது ஆசை கொண்ட புத்தி, அவனை விட்டு விலக மறுத்தது. அவனுடைய தேக வாசனையை ஆழ சுவாசித்துப் புத்தியிலும் இதயத்திலும் நிரப்ப முயன்றது.
“மகிழ்ச்சி…? ஆனால்… அந்த மகிழ்ச்சி உங்கள் இதயத்தை எட்டவில்லை போலவே…?” சொன்னவளை முழுதாகத் திரும்பிப் பார்த்தான் அவன்.
“எதை வைத்துச் சொல்கிறாய்?”
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்… உங்கள் அகம் மகிழ்ச்சியாக இல்லை” சொன்னவளை ஒரு மாதிரி பார்த்தான் ஆதியதுலன்.
“நீ என்ன மனோதத்துவ நிபுணியோ…?” கிண்டலாகக் கேட்டாலும் இப்போது அவனுடைய முகத்திலிருந்த இறுக்கம் காணாமல் போயிருந்தது.
“சொல்லுங்களேன்… நிஜமாகவே உங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் தானா?” கேட்டாள் நேயநறுமை. ஒரே கேள்விதான். திருப்தியான பதில் வரும்வரை அந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றியது அவளுக்கு.
“பிடிக்காத எதையும் நான் செய்வதில்லை…” சொன்னவன், அங்கிருந்து விலகிச் செல்ல முயல, சட்டென்று அவனுடைய ஆண்மை ததும்பும் கரத்தைப் பற்றிக்கொண்டாள் நேயநறுமை.
அவனது கரம் பற்றியதுதான் தெரியும், சட்டென்று உள்ளே மின்சாரம் பாய, அந்த மின்சாரம் உடலை எரிப்பதற்குப் பதில், குளிர் நீரை அவளுக்குள் வாரி ஊற்ற ஒரு கணம் உருகித்தான் போனாள்.
வெறும் கரத்தைத் தொட்டதற்கே, தேகம் இப்படி மின்சாரம் தாக்கியது போலச் சிலிர்க்கிறதே… அவனுடைய அணைப்பில் அவள் இருந்தால்? தாபம் கண்களை மறைக்க, நிதர்சனம் காணாமல் போக, ஏக்கத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நேயநறுமை. அவனோ, இணைந்த இரண்டு கரங்களையும்தான் ஒரு மாதிரிப் பார்த்துக்கொண்டு இருந்தான். அடுத்த கணம் அந்தக் கரத்தை உதறி விடுவித்தவன்,
“டோன்ட் டச் மி…” என்றான் சீற்றமாக. அப்போதுதான் அவளுக்குத்தான் என்ன செய்கிறோம் என்பதே புரிந்தது போல. உதடுகளைக் கடித்தவள்,
“சா… சாரி…” என்றாள் கலக்கமாக. அவளுடைய மன்னிப்பு எனக்கு எதற்கு என்பது போல அவளை வெட்டுவது போலப் பார்த்தவன், உள்ளே செல்ல முயல,
“அதுலன்…” என்றாள் நேயநறுமை. திரும்பிச் செல்ல முயன்றவன், நின்றான். ஆனால் அவளைத் திரும்பிப் பார்த்தானில்லை.
“எனக்கு ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லிவிட்டுப் போங்கள்” கேட்கும் போதே நெஞ்சம் அடைத்தது அவளுக்கு. அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் விலகியும் போகவில்லை.
“உங்களுக்கு என் மீது ஒரு விநாடி கூடச் சலனம் தோன்றவில்லையா…?” பெரும் ஏக்கத்துடன் கேட்டாள் அவள்.
ஒரு விநாடியாவது அவள் மீது சின்னதாகச் சலனம் தோன்றியது என்று சொன்னாலும் போதும். அதைக் காதலாக நினைத்து கடைசிவரை வாழ்ந்து விடுவாள். ஆனால் அவனோ பதில் சொல்லாமல் முதுகு காட்டி நின்றிருக்க,
“சொல்லுங்கள் அதுலன்… என்னையும், என் தங்கையையும் ஒன்றாகத்தானே பார்த்தீர்கள்… அப்போது கூட உங்களுக்கு என் மீது ஆசை தோன்றவில்லையா. அன்று முதன் முறையாக உங்கள் கரங்களில் விழுந்தேன் நினைவிருக்கா? நீங்களும் என்னை அணைத்துப் பிடித்தீர்கள். அப்போதுகூட நான் உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா? அன்று வணிக வளாகத்தில், ஆலங்கட்டி மழை பெய்யும் போது என்னை அணைத்துக் கொண்டு ஓடினீர்கள்… அப்போது கூட உங்களுக்கு என் மீது ஒருவித ஈர்ப்பு வரவில்லையா…? அன்று நயகராவில் என்னை உங்களுக்குள் பொத்தி பாதுகாத்தீர்களே அப்போதும் கூட உங்களுக்கு எதுவும் தோன்றவில்லையா? இது எதுவும் தோன்றாமலா, உணவகத்தில் எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் கேட்காமலே செய்தீர்கள்?” ஏக்கத்துடன் கேட்க இவன் உடலோ ஒரு விநாடி இரும்பென இறுகிப் பின் தளர்ந்தது.
தன்னையும் மீறிப் பற்களைக் கடித்து விடுவித்தவன் வாய்க்குள் எதையோ முனங்கிவிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தான் ஆதியதுலன்.
“இப்போது எதற்கு இந்தக் கேள்வி?”
“எனக்குத் தெரியவேண்டும்… உங்களைச் சின்னதாகக் கூட நான் சலனப்படுத்தவில்லையா என்று எனக்குத் தெரியவேண்டும்… சொல்லுங்கள்…” கேட்பதைக் கூட எத்தனை அழுத்தமாகக் கேட்கிறாள். கொஞ்சமாவது கெஞ்சும் பழக்கம் இவளுக்கு இல்லையா?
இப்போது அவளை நெருங்கி வந்தவன், அவள் முகம் நோக்கிக் குனிந்து,
“இல்லை… மயிர் முனை அளவு கூட நீ என்னைச் சலனப்படுத்தவில்லை… உன்னுடைய பழக்க வழக்கங்கள், நடைமுறை, செயல் முறை எதுவுமே என்னைக் கவரவில்லை. சொல்லப் போனால், உன் மீது வெறுப்பைத்தான் வரவழைத்தது” அவன் உறுதியாகச் சொல்ல, உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள் நேயநறுமை.
“ஆனால் அன்று நயகரா போன போது, நிறைய அக்கறை எடுத்துக் கொண்டீர்களே. அந்த தோணியில் போகும் போது பாதுகாப்பாக என்னை அணைத்தவாறு நின்றீர்களே. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அன்று நீங்கள் என்னை முத்தமிட முயன்றீர்களே…” அவள் சொல்ல, அவனோ அவளை எரிச்சலோடு ஏறிட்டான்.
“என்ன உளறுகிறாய்? நான் உன்னை முத்தமிட முயன்றேனா? அதுவும் உன்னை?” என்றவன் இளக்காரமாகச் சிரித்து, “என்ன கனவு ஏதாவது கண்டாயா?” என்றான் எள்ளலாக.
அவன் சொன்ன விதத்தில் நொறுங்கிப் போனாள் நேயநறுமை.
அப்போ அவள் நினைத்தது போல அவன் முத்தமிட வரவில்லையா? ஏமாற்றத்தோடு அவனைப் பார்க்க,
“சீ.. சீ… நீ இப்படி நினைப்பாய் என்று தெரிந்திருந்தால், உன்னோடு வந்தே இருக்கமாட்டேன்… நிஜத்தைச் சொல்லவேண்டும் என்றால், எனக்கு உன்னைச் சுத்தமாகப் பிடிக்காது… அது உனக்கும் தெரியும்… நான் வந்த அன்று நீ பேசியது நினைவிருக்கா? அந்தக் கணமே உன்னை மனதார வெறுக்க ஆரம்பித்து விட்டேன். நீ எப்போதும் எந்தக் காலத்திலும் எனக்குப் பிடித்தமானவளாக இருக்க முடியாது…” அவன் சொல்ல, உடைந்து போனாள் நேயநறுமை.
கடலளவு வேதனையை முகத்தில் தேக்கியவள், பின் திரும்பி கரிய நிற வானத்தைப் பார்த்தாள். அவளுடைய வாழ்க்கையும் இனி அப்படித்தான் இருக்கப் போகிறதோ. ஏக்கத்துடன் எண்ணியவளாக,
“ஆனால்… நீங்கள் என்னைச் சலனப்படுத்தினீர்கள் அதுலன்…” என்றாள் இவள் அத்தனை வலியையும் குரலில் தேக்கி. அதைக் கேட்டதும் இவனுடைய நடை தடைப்பட, அதிர்ச்சியுடன் திரும்பி அவளைப் பார்த்தான் ஆதியதுலன்.
“என்ன உளறுகிறாய்?” அவன் குரலில் அதீத சீற்றம் தெரிய, இவளோ திரும்பி அவனைப் பார்த்தாள். மீண்டும் கண்ணீர் இவளுடைய அனுமதியை வேண்டாமல் கண்களில் உற்பத்தியாக, ஆத்திரத்தோடு அதைத் துடைத்துவிட்டாள்.
“ஆ… நான் உங்களைக் காதலிக்கிறேன்… இது இப்போது தோன்றிய காதலில்லை அதுலன். என்னுடைய ஆறாவது வயதிலிருந்து தோன்றிய காதல்… அம்மா உங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் உள்ளே ஒருவித சிலிர்ப்பு தோன்றும். உங்களைப் பார்க்கவேண்டும் என்கிற பேராவல் எழும். பின்னாளில், அதுவே உங்கள் மீதான பொறாமையாகவும் மாறியது. நான் நினைத்தேன், அம்மா உங்கள் மீது அதீத அக்கறை எடுப்பதால் தான் நான் பொறாமைப்படுகிறேன் என்று. ஆனால்
அது அப்படியல்ல… என்னை விட இன்னொருத்தர் உங்கள் மீது அன்பு வைப்பது பிடிக்காமல்தான் கோபப்பட்டிருக்கிறேன் என்று இப்போதுதான் தெரிகிறது… என் காதலை, என் ஆசையை, எப்படி உங்களிடம் சொல்வது என்று தெரியாமல் திணறிப் போயிருந்தேன்… அதற்கான சந்தர்ப்பமும் பார்த்திருந்தேன். ஆனால்… நீங்கள்” என்று பெரும் வலியோடு சொன்னவள், மறு கணம் ஆத்திரம் பிறக்க, அவனை நெருங்கி, அவனுடைய சட்டையைப் பற்றி உலுப்பி,
“ஏன்… ஏன் என் தங்கையைக் காதலித்தீர்கள்… என்னிடம் என்ன குறையைக் கண்டீர்கள்…? சொல்லுங்கள்… என்னை விட என் தங்கை எந்த விதத்தில் உயர்வு” என்று அவள் ஆங்காரமாகக் கேட்கச் சட்டென்று அவளுடைய கரத்தைத் தட்டி விட்டான் ஆதியதுலன்.
“முட்டாள் தனமாக உளறாதே நறுமை… காதலாம் காதல். அதுவும் சிறுவயதிலிருந்து. இதை நம்பச் சொல்கிறாயா? நீ வந்த முதல் நாள் பேசியது எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று நினைத்தாயா” எரிச்சலுடன் சொன்னவன், அதற்கு மேல் அவளைப் பார்க்கப் பிடிக்காமல், அங்கிருந்து போக முயல, எங்கிருந்து அத்தனை தைரியம் வந்ததோ அவளுக்கு. சட்டென்று அவன் முன்னால் போய் நின்று அவனுடைய பாதையை மறைத்து நின்றாள் நேயநறுமை.
“நேருவை நீங்கள் மணக்கப்போவதைச் சத்தியமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த நினைப்பே என்னைக் கொன்றுவிடும்… பிளீஸ் அதுலன்… உங்களுக்கு நேரு வேண்டாம்… என்னை மணந்து கொள்ளுங்கள். நான் உங்களை உள்ளங்கையில் தாங்குகிறேன்… ஐயோ… நீங்கள் இல்லாத வாழ்க்கையை… என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை… உங்களுக்கு ஒன்று தெரியுமா? இதுவரை காலமும் எந்த ஆணையும் இதயம் வரை நெருங்க விட்டதில்லை. முதன் முறை, காதல் என்றால் என்ன என்று உங்களைக் கண்டபின்தான் அறிந்து கொண்டேன். அந்தக் காதல் மொட்டவிழ முதலே கருகிப்போகக் கூடாது… கெஞ்சிக் கேட்கிறேன்… என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். நேரு வேண்டாம்…” அவள் கெஞ்சலும், அதே நேரம் அவளைத்தான் மணந்து கொள்ளவேண்டும் என்பது போலவும் அவள் பேச, ஆதியதுலனின் முகம் இறுகிப் போனது.
“போதும் நறுமை… உளறுவதை நிறுத்து…” சொன்னவன் அவளைத் தாண்டிப் போக முயல, சட்டென்று அவன் நெஞ்சில் கரம் பதித்து அவனைத் தடுத்தாள் நேயநறுமை.
“ஆதி… பிளீஸ்… உங்களுக்கு ஏன் என் தவிப்பு புரியவில்லை… கடவுளே… நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா…” கேட்டவள், சட்டென்ற அவனுடைய இடது கரத்தை எடுத்துத் தன் இடது மார்பில் வைத்து அழுத்தி,
“இங்கே இதயம் பலமாகத் துடிப்பது உங்களுக்குத் தெரிகிறதா? இந்த இதயம் நீங்கள் வேண்டும் என்று கதறுவது புரிகிறதா…” கேட்டவள், மறு கணம் அவனை இறுக அணைத்து, அவன் மார்பில் தன் முகத்தைப் பதித்து, மறுப்பாகத் தலையசைத்து,
“நான் உங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அதுலன்… எனக்கு நீங்கள் வேண்டும்…” என்றாள் கலக்கமும் துடிப்புமாக. பின் அவனை விட்டு விலகி, அவன் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து,
“இப்போதே போய் அம்மா அப்பாவிடம் சொல்லுங்கள். எனக்கு நேரிழை வேண்டாம், நறுமை தான் வேண்டும் என்று போய்ச் சொல்லுங்கள்…” பைத்தியம் போல அவள் உளற, அதுவரை இறுகியிருந்த அதியதுலனின் முகத்தில் இப்போது அருவெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.
“சீ… சீ… நீ இத்தனை கீழ்த்தரமானவளாக இருப்பாய் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவேயில்லை. உன் தங்கையை நான் விரும்புகிறேன் என்று தெரிந்தும், திருமணம் முடிவான பின்னும் வந்து காதலிக்கிறேன் என்னை ஏற்றுக்கொள் என்கிறாயே… உனக்கு வெட்கமாயில்லை? இதுதான் அத்தை உன்னை வளர்த்த இலட்சணமா?” அவன் கேட்க அவனை வெறித்துப் பார்த்தாள் நேயநறுமை.
“இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. எனக்கு உரிமையான ஒன்றை என்னிடமே வைத்திருக்க ஆசைப்படுகிறேன். இதில் என்ன தப்பிருக்கிறது. நீங்கள் நேரிழைக்கு ஏற்றவரில்லை. எனக்கே எனக்கானவர்… உங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது” அவள் உறுதியாகச் சொல்ல, அவளை வெறுப்போடு தலை சரித்துப் பார்த்தான் ஆதியதுலன்.
“நான் என்ன பொருளா நீ ஆசைப்பட்டதும் வாங்கி வைத்துக்கொள்ள. நான் உன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், உன் மீது எனக்கும் ஆசை வரவேண்டும். காதல் வரவேண்டும். நிச்சயமாக இந்த ஜென்மத்தில் உன் மீது வராது…” அவன் சொல்ல, அதுவரை கோபத்தில் அதிர்ந்து நின்ற இதயம் தவிப்பில் துடித்தது.
“ஏன் வராது அதுலன்… நாம் வாழ்ந்து பார்த்தால்தானே காதல் வருமா வராதா என்று தெரியும்? இப்போது சொல்லுங்கள்… நான் என்ன செய்தால் உங்கள் காதலைப் பெற முடியும்? உங்கள் கூட ஒன்றாக…” அவள் முடிக்கவில்லை, மறு கணம் தள்ளிப்போய் சுவரில் தலை அடிபட விழுந்தாள் நேயநறுமை. அவள் என்ன ஏது என்பதை உணர்வதற்குள்ளாகவே, சீற்றமாக அவளை நோக்கி வந்தவன், எப்படியோ சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டவனாக, அவளை அருவெறுப்புடன் பார்த்தான்.
“சீ… என்ன பேச்சுப் பேசுகிறாய்? அதுவும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு…” என்றான் கடும் வெறுப்போடு. பின் சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கியவனாக,
“நீ இப்படிப் பேசுவது அத்தை மாமாவுக்குத் தெரிந்தால், என்ன நினைப்பார்கள்? உனக்குத் தேவை நானில்லை. உன் வேட்கையைத் தணிக்க ஒரு ஆண்… அதற்கு ஆள் நானில்லை… போ… போய் உன் ஆசைக்கு ஒருத்தன் வருவான்… அவனிடம் போய் உன் உடல் பசியைத் தீர்த்துக் கொள்…” சீற்றமாகச் சொன்னவன், அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் உள்ளே சென்றுவிட, இவளோ அடிபட்ட பாவனையோடு அப்படியே சுவரோடு சாய்ந்து நின்றிருந்தாள். அதற்கு மேல் அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
பிச்சை எடுப்பது போலக் காதலை யாசகம் கேட்டாயிற்று. கெஞ்சியும் பார்த்தாயிற்று. ஆனால் கொஞ்சம் கூட இரங்காமல் அவளுடைய காதலை மறுத்துவிட்டு, தீ வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டுச் செல்கிறானே. பாவி. கோபம் வந்தது அவளுக்கு. கூடவே அவன் தனக்கில்லை என்கிற ஏமாற்றம் அவளைக் கொன்றது. அதையும் மீறி அவன் வேண்டும் என்றது மனது.
உடைந்து போன கண்ணாடித் துண்டுகளை ஒன்றாக இணைக்கும் வழி அறியாதவளாக, நெஞ்சம் வலிக்க அந்தக் குளிர் இரவை நீண்டநேரமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நேயநறுமை. ஆனாலும் மனது சரிப்பட மறுத்தது. தவித்தது. துடித்தது. அனைத்துக்கும் மேலாக, உடலின் ஒவ்வொரு அணுவும் வலித்தது.
அவன் தனக்கில்லை என்று தெரிந்தும், மலர்ந்த காதல் கருகிச் சாம்பலாகாமல் இன்னும் துளிர்விட்டு நான் இன்னும் உயிரோடிருக்கிறேன், என்று அவளை வதைத்தது.
எதுவாக இருந்தாலும் அலட்சியமாக விட்டெறிந்து விட்டுப் போகும் இவளால், அவனை மட்டும் ஏன் தூக்கி எறிய முடியவில்லை. ஐயோ… உதறி எறிந்துவிட்டுச் சென்றவனே வேண்டும் என்கிறதே இந்த நாசமாய் போன மனது. பாழாய்ப் போன இளமை அவன் அணைப்புக்கு ஏங்குகிறதே. காமத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாதவள், அவனிடம் கற்றுக் களித்திட இப்போதும் ஏங்கித் தொலைக்கிறதே. இந்த நரகவேதனையை எதிர்வரும் காலங்களில் எப்படிக் கையாளப் போகிறாள்? புரியாத தவிப்போடு நிலைகுலைந்து நின்றிருந்தவளுக்கு ஓவென்ற வந்தது.
அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் அறைக்கு வந்தவளுக்கு, அங்கே நேரிழை நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கண்டதும் பொறாமைத் தீ பகபகவென்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.. பாய்ந்து சென்று அவளை எழுப்பி,
“அதுலன் எனக்கு மட்டும் சொந்தமானவன்… அவனை நீ எப்படிக் காதலிக்கலாம். அவனை எனக்கு விட்டுக் கொடு…” என்று அலறவேண்டும் போலத் தோன்றியது. ஆனாலும் அதைச் செயலாற்ற முடியாமல் தள்ளாடினாள்.
அவள் சொல்லிவிடுவாள்தான். ஆனால் நேரிரழை துடித்துப்போவாளே. நேரிழை இவளைப் போல அல்ல. மிருதுவானவள். அனிச்சம் பூ போலச் சட்டென்று வாடிவிடக் கூடியவள். தான் விரும்பும் ஆதியதுலனை அவளும் விரும்புவது தெரிந்தால் துடித்துப்போவாள். சொல்லப்போனால் இவளுக்காக விட்டுக் கொடுத்துவிடுவாள். நினைத்தவளுக்குள் சட்டென்ற அந்த சாத்தான் புகுந்தது.
விட்டுக் கொடுக்கட்டுமே… எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பவள். இதையும் விட்டுக் கொடுக்கட்டும். இப்போதே எழுப்பி, நிஜத்தைச் சொல்லி, விலகிவிடு என்று சொல்ல மனது துடித்தது. கூடவே எனக்குக் கிடைக்காதவன் இவளுக்கும் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணம் நொடிப் பொழுதில் தோன்றியது.
அந்தக் காதல் உதித்த நாளிலிருந்து நல்லவளாகவும் இருக்க முடியாமல், கெட்டவளாகவும் மாற முடியாமல் இரண்டுக்கும் நடுவில் நின்று அவள் துடிக்கும் துடிப்பை என்னவென்று சொல்வது.
அவள் ஒன்றும் மகாத்மாவோ புத்தரோ இல்லையே நடப்பதை ஏற்று, இன்பம் துறந்து வாழ. சாதாரண மனுஷி. அதுவும் ஆசாபாசம் கொண்ட சாதாரண மனுஷி. அப்படி இருக்கிற போது, தான் ஆசைப்பட்ட வாழ்க்கை பறிபோவதை கை கட்டி வாய் பொத்திப் பார்த்துக்கொண்டிருப்பாள்? நோ… இல்லை… ஆதியதுலன் எனக்கு மட்டும்தான் சொந்தம். அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. முடியவே முடியாது…’
எண்ணியவளுக்குள் சட்டென்று பிறந்தது அந்த அரக்கக் குணம். அதுவரை தங்கை மீதிருந்த பாசம் காணாமல் போக, முகம் விகாரமாக மாறியது. விழிகள் சிவந்தன. சாத்தான் உள்ளத்திற்குள் புகுந்து அவளை ஆட்டுவித்தது.
அதற்கு மேல் தாமதிக்காமல், ஓரெட்டில் தங்கையை நெருங்கியவள், அவளை உற்றுப் பார்த்தாள்.
குழந்தையாய் விழிகளை மூடி நல்ல உறக்கத்திலிருந்தாள் நேரிழை.
அந்தப் பால் வண்ண முகத்தைக் கண்டும்
இவளுடைய மனம் இரங்கவில்லை. வெறி கொண்டது. எதற்காகப் பிறந்தாய். என் வாழ்க்கையைப் பறிக்கத் தான் பிறந்தாயா? என் காதலைப் பறிக்கத்தான் பிறந்தாயா? அதுலன் எனக்குத்தான் சொந்தம். எனக்கு மட்டும் சொந்தமானவன். அவனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். விழிகளில் ஆத்திரம் தெறிக்க, பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து, அதை நேரிழையின் முகத்தை நோக்கி எடுத்துச் சென்றாள்.
அடுத்து அவளுடைய மூச்சை நிறுத்த மூக்கு வரைக்கும் எடுத்து வந்தவள், மறு கணம், தூக்கக் கலக்கத்தில் எக்குத்தப்பாகத் தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்த தன் தங்கையின் தலையைத் தூக்கி அதன் கீழ் அந்தத் தலையணையை வைத்து விட்டுக் குனிந்து அவளுடைய நெற்றியில் முத்தமிட, அதுவரை அகோரமாக மாறியிருந்த முகத்தில் ஏக்கமும் பரிதவிப்பும் சூழ்ந்து கொண்டது.
“நீ அதிர்ஷ்டசாலி நேரு மாமா… அவருடைய காதல் உனக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்குத்தான்… மிக மிகக் கஷ்டமாக இருக்கிறது… இதிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறேன் என்று சத்தியமாகத் தெரியவில்லை…” கலங்கியவாறு முணுமுணுத்தவள் தங்கைக்குப் போர்வையை இழுத்துப் போட்டு விட்டு அவளுக்கு அருகே வந்து படுத்தாள்.
ஒரு பக்கம் தங்கையாவது நன்றாக இருக்கட்டும் என்று மனது வாழ்த்தினாலும், மறு பக்கம் ‘அப்படி என்றால் என் வாழ்க்கை…’ என்று சுயநலமாகக் கேட்டது.
மனிதன் பொது நலமாக யோசிப்பதற்குப் பின்னாலும் சுயநலம் என்று ஒன்று உண்டுதானே.
உறக்கம் வராமல் திரும்பிப் படுக்க, அதுவரை நல்ல உறக்கத்திலிருந்த நேரிழை இவள் திரும்பித் திரும்பிப் படுக்கவும், உறக்கம் கலைந்து திரும்பிப் பார்த்தாள்.
“அக்கா…” என்றவள் மேசையில் கிடந்த மின்னிலக்க கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். இரவு இரண்டு மணி.
“இரண்டு மணி ஆகிவிட்டது. இன்னுமா நீர் உறங்கவில்லை?” கேட்ட தங்கைக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள் நேயநறுமை.
பின்னே இவள் முகத்தைப் பார்த்தால் இவள் அழுவதும் கலங்கி நிற்பதும் தெரிந்து போகுமே.
“இ… இல்லையே… நா… நான் உறங்கிவிட்டேன். திடீர் என்ற தண்ணீர் விடாய்த்தது. அதுதான் குடித்துவிட்டு வந்து படுத்தேன். நீர் ஏன் இன்னும் உறங்காமலிருக்கிறீர்.”
“ப்ச்… நல்ல தூக்கம். நீர்தான் என்னை எழுப்பி விட்டீர்….” தங்கை சொல்ல அவள் அறியாமல் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டாள் நேயநறுமை.
சற்று நேரம் இருவரும் பேசவில்லை.
“நேரு மாமா…”
“ம்…”
“நிஜமாகவே உமக்கு அதுலனைப் பிடித்து இருக்கிறதா…” அவளையும் மீறி ஏக்கம் குரலில் வெளிப்படவே செய்தது.
சற்று நேரம் மௌனம்.
“நேரு…”
“ம்…”
“கேட்டேனே…”
“ஏன் திடீர் என்று இந்தக் கேள்வி?” தங்கையிடமிருந்து வந்தது.
“ப்ச்… கேட்கவேண்டும் என்று தோன்றியது. கேட்டேன்…”
“பதில் தெரிந்துகொண்டும் கேட்டால் என்ன சொல்ல…” கிசுகிசுப்பாக வந்தது நேரிழையிடம் இருந்து.
திரும்பித் தன் தங்கையைப் பார்த்தாள். இவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள் நேரிழை. இப்போது தங்கையின் பக்கம் திரும்பிப் படுத்தவள், அவளுடைய முதுகை வெறித்துப் பார்த்தவாறே,
“என்னவோ தெரியவில்லை நேரு… உனக்கு அவர் மீது காதல் என்று சத்தியமாக என்னால் நம்ப முடியவில்லை. என்னதான் முயன்றும், அதைக் கற்பனையில் கூட யோசிக்க முடியவில்லை…” என்றாள்.
“ஏன் அப்படி?”
“தெரியவில்லை… அவருடைய குணத்துக்கும் உம்முடைய குணத்திற்கும் நிறைய வேறுபாடு. நீர் மென்மையானனீர்… ஆனால் அவர்… கடுமையானவர். எப்படி ஒத்துப் போகும்?” கேட்க, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்திய நேரிழை இவள் பக்கம் திரும்ப, இவளோ சட்டென்று மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
“எதிர் துருவங்கள்தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும். உமக்குத் தெரியாதா? எனக்கு அவரைப் பிடித்து இருக்கிறது. அவருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. இதை விட வேறு என்ன வேண்டும்..” கேட்டவள்,
“சரி நான் தூங்கப் போகிறேன். நீரும் தூங்கும்…” என்றுவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொள்ள, மூட மறுத்த விழிகளை இழுத்து மூடி விட்டுப் பிடிவாதமாக அழ மறுத்துச் சரிந்து படுத்துக் கொண்டாள் நேயநறுமை.
26 அதே நேரம் மண்டபத்தில் நேயநறுமையைத் தேடிக்கொண்டிருந்த அம்பிகா, அவளைக் காணாமல் குழம்பிப் போனார். “கண்...” எப்போதும் போலத் தன்…
25 “கெட்டி மேளம் கெட்டி மேளம்...” ஐயரின் சத்தத்தையும் மீறிக் கெட்டிமேளம் முழங்கியது. ஆதியதுலன், நேரிழையின் சங்குக் கழுத்தில் தாலியைக்…
23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…
21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…
20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…
19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம…