Wed. May 20th, 2026

வெந்தும் தணியுமோ காதல் 2/1

-1-

டிசம்பர் மாதம். பனிவீழ்ச்சி ஆரம்பித்திருந்த காலம் அது. எங்கு பார்த்தாலும் வெண்பனியில் மறைந்து கிடந்த கனடாவின் வினிபெக் நகரமானது, குளிரில் நடுங்கிக்கொண்டிருக்க, அந்தப் பிரமாண்டமான நிறுவனத்தில் மட்டும் மகிழ்ச்சியின் ஆரவாரம்.

அது நத்தார் பண்டிகையை நெருங்கிக் கொண்டிருப்பதால், அந்த நிறுவனத்தின் அத்தனை தொழிலாளர்களுக்குமான விருந்துபசாரம் நடந்து கொண்டிருந்தது. அது வருடா வருடம் நடப்பதுதான்.

அங்கே தொழிலாளர்கள், முதலாளிகள் என்கிற வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாக இணைந்து சிரித்துப் பேசி மகிழ்ந்துகொண்டிருந்த நேரம், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முன்வந்து தன் கரத்திலிருந்த வைன் அடங்கிய கண்ணாடிக் குவளையை மேலே தூக்கி அதில் வெண்கலக் கரண்டியால் தட்டி அத்தனை பேரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப, அனைவரும் தம் நிலை விடுத்துத் திரும்பி நிர்வாக இயக்குநரை ஏறிட்டனர்.

“காய்ஸ்… உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. நம்முடைய நிறுவனத்தின், இயக்குநரின் மகன், இந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர் மிஸ்டர் ஆல்ஃபிரெட் அலக்சான்டர், இந்த வருடத்திற்கான ‘Best Employee of the Year” என்கிற விருதைக் கொடுத்து உங்களைக் கௌரவிக்கப் போகிறார்…” என்றதும் அத்தனை பேரும் கை தட்டி ஆரவாரம் செய்தவாறு தங்கள் தொழிற்சாலையின் உரிமையாளர் எங்கே என்று தேட, மேடையில் திடீர் என்று முளைத்த ‘ஸ்பாட் லைட்’ இன் மத்தியில், ஆறடி உயரத்தில் கன கம்பீரமாக, கடும் நீல நிறக் கோட் சூட் அணிந்தவாறு நீல நிறக் கண்களோடு ஒருத்தன் நடந்து வந்து மேடையின் மத்தியில் நின்றான்.

அவர்தான் அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளன் என்பதைக் கண்டு கொண்ட தொழிலாளர்கள், அவனுடைய கம்பீரத்திலும், அழகிலும் ஒரு கணம் வாயடைத்துத்தான் போனார்கள். பணம் சேர்ந்தால் அழகும் கம்பீரமும் தானாக வந்துவிடும் போல. அவனுடைய உயர் வகை வாசனைத் திரவியம், அந்த இடத்தை நிரப்பி ஒருவித பணக்காரக் களையைக் கொடுக்க, அதில் மயங்கிய தொழிலாளர்கள், மகுடிக்கு மயங்கிய பாம்பாக, அவனையே வாய்பிளக்கப் பார்த்தவாறு மகிழ்ச்சி ஆரவாரமாக கரங்களைத் தட்டினர்.

அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஆல்ஃபிரெட், மெதுவாக மேடையை விட்டு இறங்கி அத்தனை பேருக்கும் மத்தியில் வந்து நின்று, ஒரு கரத்தை பான்ட் பாக்கட்டிற்குள் நுழைத்தவாறு, நிர்வாக இயக்குநர் நீட்டிய ஒலிவாங்கியை மறு கரத்தில் வாங்கி,

“ஹாய்… காய்ஸ். நான் அதிகம் பேசி உங்கள் மகிழ்ச்சியான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் என் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் அனைவரும் அயராது பாடுபட்டிருக்கிறீர்கள்… அதற்காக நான் உங்கள் அனைவருக்கும் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். அது மட்டுமில்லை ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனத்திற்காகக் கடுமையாக உழைக்கும் உங்களைப் பெருமைப் படுத்துவது என் கடன். பொதுவாக என் தந்தைதான் இந்த விழாவுக்கு வருவார். இன்று அவரால் வரமுடியாத சூழ்நிலை. அதனால்தான் நான் வந்திருக்கிறேன். நான் கொடுக்கும் விருதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்…” என்று இனிய புன்னகையுடன் அவன் சொல்ல, அத்தனை பெண்களின் பார்வையும் ஆல்ஃபிரெட்டிடம் மட்டுமே நிலைத்திருந்தது.

நிர்வாக இயக்குநர் கையில் ஒரு விருதோடு ஆல்ஃபர்டை நெருங்கி அவனிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்ட ஆல்ஃபிரட் அதிலிருந்த பெயரைப் உரக்க வாசித்து விருது பெறும் உழைப்பாளியை அழைக்க, புன்னகையுடன் ஒரு கறுப்பின ஆண்மகன் வந்து அந்த விருதை வாங்கிச் சென்றார். தொடர்ந்து விருதுகள் கொடுக்கப் பட, கடைசியாக,

“லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… “Best Employee of the Year” கோஸ் டு… நே… நேயநடுமை டேவசகாயம்…” என்று அவன் சொல்ல, ஒரு ஓரமாக அமர்ந்திருந்த அவள், அந்தப் பெயரில் முதலில் அதிர்ந்து பின் வியந்து, கொஞ்சமே கொஞ்சமாய்த் தன் உணர்ச்சிகளை வில் புருவங்களை மேலேயேற்றி இறங்கி வெளிக் காட்டியவள், இப்போது மெதுவாய் நகர்ந்து வெளிச்சத்திற்கு வந்து நின்றாள்.

கழுத்திலிருந்து கணுக்கால் வரை உடலின் எந்தப் பாகமும் வெளியே தெரியாத வகையில் அணியப்பட்ட கருஞ்சிவப்பு வெல்வெட்டிலான மேர்மைட் ஆடை உடலைச் சிக்கென்று கவ்விப் பிடித்திருக்க, உயர்த்திக் கட்டிய கொண்டையும், உயரத்தைச் சற்று அதிகமாகக் காட்டுவதற்காக அணியப்பட்ட மூன்று அங்குல குதிக்கால் பாதணியும், அணிந்திருந்த ஆடைக்குப் பொருத்தமான உதட்டுச் சாயமும், இதமான முகப்பூச்சும் என்று புன்னகை சிந்த வந்து நின்றவளைக் கண்ட ஆல்ஃபிரெட், ஒரு கணம் தன் இமைதட்டி விழிக்க மறந்துபோய் நின்றிருந்தான் என்றால் அது மிகையல்ல.

அவனால் தன் விழிகளை நம்பவே முடிய வில்லை. அவனுடைய வேலைத்தளத்தில் இத்தகைய ஒரு அழகியா? அவனையும் மீறி அவனுடைய பார்வை ஆவலுடன் அவளைத் தலை முதல் கால் வரை அலச, அவளோ எந்த அலட்டலும் இல்லாமல் அவனை நோக்கி நிதானமான நடையோடு வந்து கொண்டிருந்தாள். அவனுடைய நிறத்தோடு ஒப்பிடும் போது அவள் மாநிறம்தான். ஆனால் வடித்துவைத்த அந்தச் சிலைக்கு அந்த மாநிறம் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்க, அவனால் உள் எடுத்த மூச்சை வெளியே விட முடியவில்லை.

ஒய்யார நடையோடு தன்னருகே வந்து நின்றவளிடம், விருதைக் கொடுக்க மறந்தவனாக ஆல்ஃபிரெட் நின்றிருக்க, அவன் காதுக்கு அருகே குனிந்த நிர்வாக இயக்குநர்,

“சார்…” என்று அழைக்கவும்தான் ஆல்ஃபிரெட் சுயத்திற்கு வந்தான். அவசரமாக உதட்டில் புன்னகையைத் தேக்கியவன், தன் கரத்தை அவளை நோக்கி நீட்ட, இதமான புன்னகையுடன் அவனுடைய கரத்தில் தன் கரத்தை வைத்தாள் நேயநறுமை.

அவள் கரத்தை அழுந்த பற்றிக் குலுக்கியவன், அந்தக் கரத்தின் மென்மையில் ஒரு கணம் மயங்கிப் போனான். அக்கரத்தை விட மனமில்லாமல் அப்படியே நின்றிருக்க, நேய நறுமையோ அவன் கரத்தில் சிக்கிக் கிடந்த தன் கரத்தை மெதுவாக உருவி விடுவித்து, அவன் மறு கரத்தில் வைத்து இருந்த விருதை தானே பற்றி வாங்கிக்கொள்ள, அப்போதுதான் சுயம் வந்தவனாக, அவளிடம் அந்த விருதைக் கொடுத்தான் ஆல்ஃபிரெட். இதமான புன்னகையோடு அவனைப் பார்த்து நன்றி சொன்னவள், விருதை வாங்கிய கையோடு, நன்றி என்றுவிட்டு, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு கைதட்டிய சக வேலையாட்களைப் பார்த்துப் புன்னகையைச் சிந்தியவள் அந்த விருதை உயர்த்திக் காட்டிவிட்டு நகர்ந்து செல்ல, தேர் நகர்வது போல நகர்ந்து சென்றவளைப் பார்த்திருந்த அஃப்ரடிற்குத் தொண்டைக்குளிக்குள் உமிழ்நீர் சேர்ந்துகொண்டது. அவனால் அந்தப் பெண்ணிடமிருந்து தன் விழிகளை விலக்கவே முடிந்திருக்கவில்லை.

அவன் எத்தனையோ அழகிகளைக் கண்டிருக்கிறான். உறவு கொண்டிருக்கிறான். ஆனால் இவள் வேறு இரகம். பார்க்கும் போதே இதயம் படபடக்கிறது. புத்தியும் மனதும் வேறு திக்குச் செல்ல மறந்து அவளிடமே நிலைத்திருக்க, அவன் பின்னால் நின்றிருந்த நிர்வாக இயக்குநர்,

“சார்… விருந்தை ஆரம்பிக்கலாமா?” என்று நிர்வாக உறுப்பினர், அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் குசுகுசுக்க, இவனோ அவர் கேட்டதை விடுத்து, நடந்து சென்று கொண்டிருந்த நேய நறுமையை விழிகளால் காட்டி,

“இந்த நேயநறுமை… எந்த இலாகாவில் வேலை செய்கிறார்கள்?” என்றான் ஆர்வத்துடன்.

“ஐடி துறை சார்…” என்றார் அவர் கிசுகிசுப்பாக.

“ம்… எனக்கு இவளுடைய முழு விபரங்களும் தேவை… உடனே எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள்…” உத்தரவு போலச் சொல்லிவிட்டு, தன் விழியை நேயநறுமை சென்ற இடமெல்லாம் செலுத்த, அவளோ, இப்படித் தன்னை ஒருத்தன் வெறிக்கப் பார்க்கிறான் என்கிற சிந்தையே இல்லாமல் தன்னைச் சூழ்ந்து வாழ்த்துச் சொன்ன நட்பு வட்டத்திற்கு நன்றி சொல்லிவிட்டு ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்துகொண்டாள்.

வேலை செய்த கொஞ்சக் காலத்திலேயே இத்தகைய விருதைப் பெற்றிருக்கிறோமே என்கிற மகிழ்ச்சி அவள் முகத்தில் இம்மிகூடத் தெரிய வில்லை. ஏதோ பத்தோடு பதினொன்றாக எதையோ கொடுத்திருக்கிறார்கள். வாங்கி வைத்திருக்கிறோம் என்கிற மனப்பான்மையோடு அமர்ந்திருந்தவளின் வெறுமையான பார்வை திக்குத் தெரியாத காட்டில் அலைவது போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது.

இப்போது அவளிடம் தான் எத்தனை மாற்றம். இதுதான் நேயநறுமை என்று யார் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

முன்பு இருந்த செழித்த குண்டுத் தேகத்தைக் காணோம். விழிகளில் சதா துடிக்கும் உணர்ச்சி சுத்தமாகத் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. எப்போதும் குதுகலத்தை வெளிக்காட்டும் புன்னகை சிந்தும் உதடுகள், இப்போது வெறுமையான உயிரற்ற புன்னகையச் சிந்தியிருந்தன. அந்தத் துள்ளல், துடிப்பு எதையுமே காணோம். ஏதோ அந்த உலகத்திற்கும் தனக்கும் ஒட்டுதலே இல்லாதவள் போல அமைதியாக அமர்ந்திருந்த இந்த நேயநறுமை புதிது. மிக மிகப் புதிது.

அவளுடைய நெஞ்சைத் தொட்ட காதல் அவளுடைய மொத்த மகிழ்ச்சியையும் ஒட்டு மொத்தமாகப் பறித்துக் கொண்டதோ?

இதோ, அவள் உயிரோடு மரித்து வருடங்கள் மூன்றாயிற்று. ஆனாலும் மீண்டெழாமல், மீண்டெழப் பிடிக்காமல், அதில் அக்கறையும் இல்லாமல் எந்த மாற்றமும் இல்லாமல் வலியைச் சுமந்துகொண்டு தான் இருக்கிறாள். எத்தனை காலத்திற்கு இப்படியே இருக்கப் போகிறாய் என்று கேட்டால், அவளிடம் பதிலே இல்லை.

அன்று ஆதியதுலனுக்கும், நேரிழைக்கும் திருமணம் முடிந்து அவர்கள் முதலிரவுக்காக ஒரு விடுதிக்குச் சென்ற அந்த நாளில், ஈழத்தில் ஒரு விநாடி கூட இருக்க முடியாமல், உடனே கனடா வருவதற்காகக் கிளம்பிவிட்டாள் நேயநறுமை.

மிச்ச சொச்ச சடங்குகளை முடிக்காமல் இவள் கிளம்புகிறேன் என்றதும், தேவசகாயமும், அம்பிகாவும் அவளைத் தடுக்கத்தான் பார்த்தார்கள். ஆனால் உள்ளிருப்புப் பயிற்சிக்காக நேர் காணலுக்கு வந்திருக்கிறது என்று அவள் ஒரு பொய்யைச் சொல்ல, அது அவளுடைய எதிர்கால நல்வாழ்க்கையை நிர்ணயிக்கும் செய்தி என்பதால் அதற்குமேல் தடுக்காமல் அவளைக் கனடா அனுப்பி வைத்தார்கள் அம்பிகாவும் தேவசகாயமும்.

நேரிழைக்குக் கூடச் சகோதரி இப்படித் திடீர் என்று கிளம்பியதில் சற்றுக் கோபம்தான். ஆனால் ஆதியதுலனோ எதிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ள, கனடா வந்து சேர்ந்தவள் முதலில் செய்த வேலை, டொரன்டோவை விட்டுத் தொலைவில் உள்ள ஒரு நிறுவனத்தில் உள்ளிருப்புப் பயிற்சிக்காக விண்ணப்பம் போட்டதுதான்.

அவளுக்கு யாருடைய முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. பேசப் பிடிக்கவில்லை. அந்த வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆதியதுலனின் நினைவைக் கொடுக்க அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.

நெஞ்சம் வலிக்க, இதயம் வெடிக்க, அங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் முள்ளாய் குத்த, பெற்றவர்களின் அனுமதியைக் கூடக் கேட்காமல் தொலைவில் உள்ளிருப்புப் பயிற்சிக்காக மனுப் போட, அவளுடைய நல்ல நேரம் வன்கூவரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அழைப்பு வந்தது. அதுவும் எட்டு மாதங்கள். உடனே நேர்காணலை அவள் நிறைவு செய்ய வேலையும் கிடைத்தது.

கனடா வந்து சேர்ந்த தேவசகாயமும், அம்பிகாவும் அவள் வினிபெக் போவதாகச் சொன்னதும் முதலில் அதிர்ந்தார்கள்.

‘ஒருத்தி ஈழம் போய்விட்டாள். நீயும் தூரமாகப் போனால் என்ன செய்வது. அதெல்லாம் வேண்டாம் பக்கத்திலேயே எங்காவது ஒரு வேலையைத் தேடிக் கொள்’ என்று சொல்ல, மறுத்தாள் நேயநறுமை.

ஏற்கெனவே பிடிவாதத்திற்குப் பிறந்தவள் என்பதால், அம்பிகாவின் மறுப்பும், தேவசகாயத்தின் தவிப்பும் இவளுடைய புத்திக்கு எட்டவேயில்லை.

அவர்களும் கெஞ்சி மிஞ்சிப் பார்த்தார்கள். நேரிழை கூடப் பேசிப் பார்த்தாள்.

“ஏன்கா இந்தப் பிடிவாதம்? இப்போது இந்தளவு தூரம் போய் என்ன சாதிக்கப் போகிறீர். நீர் பக்கத்திலிருந்தாலாவது அம்மா அப்பா சந்தோஷமாக இருப்பார்கள். சொல்வதைக் கேளும்…” எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் இவள் அசைந்து கொடுக்க வில்லை.

கடைசியாகத் தன் கைப்பேசியை ஆதியதுலனின் கரத்தில் திணித்த நேரிழை,

“சொன்னால் கேட்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள் ஆதி. நீங்களாவது கொஞ்சம் பேசிப் பாருங்களேன்..!” என்று கூறித் தன் கணவனை ஆவலுடன் பார்க்க அவனோ தான் என்ன பேசுவது என்று புரியாமல் தன் மனைவியை ஏறிட்டான்.

“நீங்களாவது சொல்லுங்கள் ஆதி… அவளைப் போகவேண்டாம் என்று சொல்லுங்கள்…” நேரிழை கெஞ்ச, இவனுக்கு எரிச்சல்தான் வந்தது.

“நீங்கள் யார் சொல்லியும் கேட்காதவள், நான் சொல்லியா கேட்கப் போகிறாள்…? எதற்கு அவளைத் தடுக்கிறீர்கள்? அவளுக்குப் போகப் பிடித்திருக்கிறது. போகட்டுமே? தொலைவுக்குச் சென்று தனியாகச் சுயமாக இயங்குவது அவளுக்கும் நல்லதுதானே. எப்போதுமே அவளை மடியில் வைத்திருந்தால், எப்போதுதான் அவள் சுதந்திரமாக செயல்படுவது? அது மட்டுமில்லை, நீங்கள் மறுக்க மறுக்க அவள் பிடிவாதம்தான் கூடும். கூடப்பிறந்தவள் உனக்கே உன் அக்காவைப் பற்றித் தெரியாதா? உன் அக்கா ஒன்றும் சின்னக் குழந்தையில்லை, அதைச் செய் இதைச் செய் என்று அறிவுறுத்தஞ் ஆறறிவு நன்றாகவே வேலை செய்யக் கூடிய பெண்… சும்மா தொல்லை செய்யாமல் அவள் போக்கில் போகட்டும் விடுங்கள்…” என்று அவன் சொல்ல, இங்கே அவன் பேசியதை ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த நேயநறுமையின் இதயம் மேலும் இறுகிப் போனது.

முதலில் அவன் தன்னிடம் பேசப்போகிறான் என்பதை உணர்ந்து, உடல் சிலிர்க்க, இதயம் படபடக்க, உணர்ச்சி மேலிட்டதால், மயிர்க்கால்கள் எழுந்திருக்க ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தவள், அவனுடைய அந்த மறுப்பிலும், அவனுடைய அலட்சியமான பேச்சிலும் நொறுங்கிப்போனவளாக, உடனே அலைபேசியை அணைத்து விட்டாள்.

உடலின் ஒவ்வொரு அணுவும் வேதனையில் கசங்கிப் போனது. அவன் தனக்குச் சொந்தமில்லை என்று தெரிந்த பின்னும், பாழாய்ப் போன காதல் கொண்ட மனம், அவன் நினைவில் நின்று தவிக்கிறது. அவன் குரலைக் கேட்டதும் கிறங்கிப் போகிறது. அவன் மீது பித்தம் கொள்ளும் காமம் சதிராடுகிறது. ஆதியதுலன் எனக்கு மட்டும் சொந்தமானவன். எனக்கே எனக்கானவன். ஆனால் அவனை அபகரித்து விட்டாள் நேரிழை. என் வேதனையில் அவள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பாள்? நிச்சயமாக இருக்க மாட்டாள்…! மனது உயிரான தங்கையைச் சபித்தது.

மறுகணம் நொறுங்கிப் போனாள்.

ஐயோ… நான் என்ன யோசிக்கிறேன்? என் தங்கையையா சபிக்கிறேன்? இடையில் வந்த ஒருத்தனுக்காகக் கூடப் பிறந்தவளைத் திட்டித் தொலைக்கிறேனே. அத்தனை கெட்டவளா நான்? இது என்ன கொடுமை? தன் எண்ணம் போன திசை உணர்ந்து துடித்தாள் நேயநறுமை.

‘இதோ, இதற்காகத்தானே யாருமில்லாத இடமாக ஓடி ஒளிந்துவிட ஆசைப்படுகிறேன். இந்த இராட்சத குணம், என் தங்கையின் வாழ்க்கையில் தீங்கிழைத்து விடுமோ என்று அஞ்சித்தானே யாருடைய முகத்தையும் பார்க்கப்பிடிக்காமல் தொலைவுக்குப் போகத் துடிக்கிறேன். நேரிழையைப் பார்த்தால், மனசார அவளைச் சபித்துவிடுவோமோ என்று அஞ்சித் தானே ஓடிவிட நினைக்கிறேன். அதையேன் யாருமே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள். அம்மாவையும் அப்பாவையும் பார்ததால், தங்கையின் திருமணத்திற்குச் சம்மதித்தவர்கள் என்னைப் பற்றி யோசிக்கவில்லையே என்கிற அர்த்தமற்ற ஆத்திரம் வருகிறது. அவர்களுக்கு இவள் காதலித்தது கூடத் தெரியாது. அப்படியிருக்கிற போது அவர்களைக் குற்றவாளியாக்குவது தவறுதான். ஆனால் புத்தி கெட்ட மனதிற்குப் புரிய மறுக்கிறதே. தங்கையை நினைத்தால், என் காதலைப் பறித்தவள் என்கிற ஆத்திரம் வருகிறது. இதை எங்ஙனம் அடக்குவேன்? இதிலிருந்து தப்பி ஓடிவிடத்தானே துடிக்கிறேன். அது தெரியாமல், போகாதே என்றால் நானும் என்னதான் செய்வது?’

அதற்குமேல் யாருடைய பேச்சையும் கேட்காமல் வன்கூவர் வந்துவிட்டாள் நேயநறுமை.

அவள் வன்கூவர் வந்த அந்த மாதமே நேரிழை கர்ப்பம் என்கிற செய்தி இவள் காதுக்கு வந்தது. மீண்டும் மனது கிடந்து தவித்தது. துடித்தது. சபித்தது. வலியில் அரற்றியது. காதல் இத்தனை வலியைக் கொடுக்கும் என்று சத்தியமாக அவள் நினைத்திருக்கவில்லை.

திருமணம் முடித்து ஒரு மாதத்திலேயே அவள் கர்ப்பம் என்றால், அவர்களுக்கிடையில் எந்தளவு நெருக்கம் இருந்திருக்கவேண்டும். அதை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

ஆதியதுலன் நேரிழையை அணைத்து உறவு கொள்வது போன்ற கற்பனையில் வெந்து துடித்தாள்.

திருமணமானால் குழந்தை உருவாவது இயற்கை தானே. ஆனால் அந்தக் குழந்தை உடனே உருவானதைத்தான் இவளால் தாங்க முடியவில்லை.

செய்தியறிந்து உள்ளம் கதறினாலும் தங்கையை வாழ்த்த அவள் தவறுவதில்லை. என்னதான் அவள் மீது கோபம் இருந்தாலும் வெறுப்பும் பொறாமையும் இருந்தாலும் உயிருக்கும் மேலான தங்கையாயிற்றே.

எட்டுமாதம் உள்ளிருப்பு பயிற்சியின் போது நேயநறுமைக்கு அழகான பெண்குழந்தை பிறந்த செய்தி கேட்டு முதலில் குழம்பிப் போனாள் நேய நறுமை.

அது எப்படி அவர்கள் திருமணம் முடித்து எட்டு மாதம் தொடங்க முதலே குழந்தை பிறந்தது? அப்படியென்றால் திருமணத்திற்கு முன்பே அவர்கள் தப்பாக நடந்துகொண்டார்களா? குழந்தை உருவானதால் தான் உடனே திருமணத்தைச் செய்து கொண்டார்களா? இது தெரியாமல் இவள் முட்டாள் போல ஏதேதோ நினைத்து… நினைக்கும் போதே அருவெறுத்தது அவளுக்கு. அடிக்கடி நேரிழையும், ஆதியதுலனும் தனியாக நின்று பேசுவதும், சிரிப்பதும், இருவருமாக வெளியே செல்வதும் இரகசியம் பேசுவதும் என்று அனைத்தும் நினைவுக்கு வந்து வதைத்தது. இது எதுவும் தெரியாமல் அவன் மீது காதலை வளர்த்து கடைசியில் முட்டாளாகிவிட்டாளே.

உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,

“எ… எப்படிமா…? திருமணம் முடித்து எட்டு மாதங்கள் கூட ஆகவில்லையே… அதற்குள் குழந்தை எப்படிப் பிறந்தது?” புரியாது போலக் கேட்டாலும், அது தாய்க்குக் கொடுத்த குறிப்புதான். பத்து மாதத்தில் பிறக்கவேண்டிய குழந்தை எட்டு மாதத்தில் பிறந்திருக்கிறதே… இதை ஏன் என்று யோசிக்கமாட்டீர்களா என்று தாயைத் தூண்டிவிடத் தான் கேட்டாள். ஆனால், அவள் நினைத்தது போல அல்லாமல் காரணம் வேறாக இருந்தது.

“அதுவாடா… நேருக்குக் கர்ப்பத்தில் ஏதோ சிக்கலாம். அதனால் நிறைமாதத்திற்கு முன்பே குழந்தையைச் சத்திர சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விட்டார்களாம்… குழந்தை இப்போது இங்கியூபெட்டரில் இருக்கிறது” தாய் சொல்ல, மறுகணம் அக்காவாய் பதறினாள் நேயநறுமை.

“ஏன்மா… அவளுக்கு என்னாச்சு?”

“எங்களுக்கும் சரியாகத் தெரியவில்லை நேயா… ஆதி தம்பியும் தெளிவாக ஒன்றும் சொல்லவில்லை. பாவம் தம்பி பதறிப்போய் இருக்கிறார். நாங்கள் அங்கே போய்ப் பார்த்தால்தான் விபரம் தெரியும்…” தாய் சொல்ல, ஏளனமாகச் சிரித்தாள் நேயநறுமை.

அவன் விபரம் சொல்லவில்லை என்றால், அவள் சந்தேகப்பட்டது போலக் குழந்தை முன்னமே உருவாகியிருக்க வேண்டும். அதை மறைக்கத்தான் தங்கையை உடனே மணந்திருக்கிறான். ஆனால் தங்கை மீது அத்தனை காதல் கொண்டவன், எதற்காக நயகரா அருவியில் அப்படி நெருக்கமாக நடந்து கொண்டான். ஒரு வேளை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்த்திருப்பானோ? எப்படி நினைத்தும், ஆதியதுலனை அந்த விதத்தில் தப்பாக நினைக்க முடியவில்லை அவளால்.

நேரிழை கூட, ஆதியதுலன் பற்றி பேசும்போது, ஒரு போதும் அவன் இரட்டை அர்த்தத்தில் தப்பாகப் பேசியதில்லை என்று சொல்லியிருக்கிறாள். இவ்வளவு ஏன், இவள் பேசினால் கூட அந்தப் பேச்சைத் திசைதிருப்பிவிடுவான் என்றும் சொல்லியிருக்கிறாள். அப்படிப்பட்டவன், தங்கையையும் காதலித்து, இவளையும் கைக்குள் போட முயன்றிருப்பானா? நிச்சயமாக இல்லை. இவள்தான் அவனுடைய அக்கறையைத் தப்பாகத் தனக்குச் சாதகமாக நினைத்திருக்கிறாள். ஆமாம் அப்படித்தான் இருக்க வேண்டும். தன்னையே சமாதானம் செய்தவள்,

“எப்போது புறப்படுகிறீர்கள்??”

“நாளை மறுநாள்தான் விமானத்தில் இடம் கிடைத்திருக்கிறது. நாங்கள் கிளம்பி விடுவோம். ஈழத்தில் இறங்கியதும் உன்னை அழைத்துப் பேசுகிறேன் சரியா..? ஏன்மா நீயும் வரலாமே… நம்முடைய குடும்பத்தின் முதல் வாரிசு. நீ பார்க்கவில்லையென்றால் எப்படி?” தாய் கேட்க விரக்தியாகச் சிரித்தாள் நேயநறுமை.

எதற்கு அந்தக் குழந்தையையும் சபிக்கவா? வேதனையோடு நினைத்தவள்,

“முயற்சி செய்கிறேன்மா. விடுப்பு கிடைத்தால் நிச்சயமாக வருகிறேன்…” நேயநறுமை சொல்ல,

“ம்… இந்த எட்டு மாதமாக இதைத்தான் சொல்கிறாய். ஆனால் எங்கே…” ஏக்கத்தோடு அவர் சொல்ல,

“மா… என் வேலை அப்படி என்ன செய்யட்டும்? சரி… முதலில் அவளைக் கவனியுங்கள்…” என்று கைப்பேசியை வைத்தவளுக்கு, தன்னவனுக்கு ஒரு குழந்தை கிடைத்துவிட்டது என்பதையும் தாண்டித் அந்தக் குழந்தை தன்னதில்லை என்கிற வலிதான் அதிகமாக இருந்தது. கூடவே தங்கையின் உடல் நிலையை நினைத்துக் கவலையும் வந்தது.

ஈழம் சென்ற தாயும் தந்தையும், தாயும் சேயும் நலம் என்கிற செய்தியை அவளுக்குச் சொன்ன பிறகுதான், நேயநறுமையின் மனது அமைதியானது. கூடவே இங்கியூபெட்டரில் இருந்த குழந்தையின் புகைப்படத்தையும், நேரிழையின் புகைப்படத்தையும் இவளுக்கு அனுப்பி வைக்க, இவளோ அந்தக் குழந்தையின் படத்தையே வெறிக்கப் பார்த்தாள்.

விதி மாறிச் செயல்பட்டிருந்தால், அவளுடைய காதல் கைகூடியிருந்தால், அவனுக்கும் அவளுக்குமாக அந்தக் குழந்தை பிறந்திருக்கும்.

அந்தக் குழந்தை தன்னதில்லை என்கிற ஏக்கம் அவளைப் பூதாகரமாகத் தாக்க, நடுங்கும் கரங்களோடு அந்தக் குழந்தையை வருடிக் கொடுத்தவளுக்கு நெஞ்சில் வேதனை முட்டிக்கொண்டு வந்தது.

அன்றைய நாள் முழுக்க எதையோ பறி கொடுத்தவள் போலத் தவித்துப்போனாள் நேய நறுமை.

அதற்குப் பிறகு தன்னைத்தானே நிலை நிறுத்த வேண்டி வேலையில் முழு மூச்சாக ஈடுபட்டாள். மனமும் உடலும் ஓயும் வரைக்கும் வேலை செய்தாள். படித்தாள்.

உள்ளிருப்புப் பயிற்சி முடிந்த பிறகும் டொரன்டோ போகும் எண்ணமில்லாமல், அங்கிருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொண்டவள், கடைசி ஒரு வருடத்தையும் அங்கேயே முடித்தாள்.

இதில் அவளுடைய தொழில் திறமையைக் கண்ட நிர்வாகம் அவளுக்குப் பகுதிநேர வேலை வாய்ப்பும் கொடுத்திருக்க, அது அவளுக்கு இன்னும் சுலபமாகிப் போனது. கூடவே அவள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும்போது, நிரந்தர முழுநேர வேலை வாய்ப்புக் கொடுப்பதாக அந்த நிர்வாகம் உறுதி செய்ய, பல்கலைக்கழகத்தை முடித்த கையோடு, அந்த நிறுவனத்தோடு தன்னை இணைத்துக் கொண்டாள் நேயநறுமை.

அவளுடைய அந்த முடிவில் தேவசகாயமும், அம்பிகாவும் அதிர்ந்துதான் போனார்கள்.

ஏதோ எட்டு மாதம் வேலைக்குப் போகிறேன் என்றாய் சரி என்று விட்டோம். ஆனால் இப்போது அங்கேயே நிரந்தரமாக வேலை எடுத்துத் தங்கப் பார்க்கிறாயே. இது சரியில்லை… திரும்ப வந்துவிடு!” என்று எவ்வளவோ கேட்டார்கள். கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை நேயநறுமை.

இதோ, அவள் வன்கூவர் வந்து வருடங்கள் மூன்றாயிற்று. இன்றுவரை அவள் டொரன்டோ மண்ணை மிதிக்கவில்லை. ஈழம் சென்று தன் தங்கையைப் பார்க்கவுமில்லை. அவள் மகளைத் தரிசிக்கவுமில்லை.

அவளுடைய இந்த ஒதுக்கத்தைக் கண்டு அம்பிகாவும், தேவசகாயமும் குழம்பினார்கள்.

“ஏன்மா? எங்களை விட்டுத் தள்ளி இருப்பதிலேயே குறியாக இருக்கிறாய். நாங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டோமா. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லு, மாற்றிக்கொள்கிறோம்…” என்றும் கேட்டுப் பார்த்தார்கள். இவளோ,

“அப்பா… அம்மா… பிளீஸ்… எத்தனை நாட்களுக்குத்தான் உங்கள் நிழலிலிருக்க முடியும். என் காலில் நிற்க நான் பழகவேண்டாமா?” என்று கூற மூத்தவளை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல், குழம்பிப் போனார்கள் அவர்கள்.

அந்த நேரம்தான், நேரிழைக்குக் குழந்தையும் கிடைத்தது. அதற்கு மேல் மூத்தவளைப் பற்றி யோசிக்க அவர்களுக்கும் நேரமிருக்கவில்லை. அடிக்கடி ஈழம் சென்று பேரப்பிள்ளையைப் பார்த்து விட்டு வருவார்கள். கூடவே வன்கூவர் வந்து இவளோடு ஒரு வாரம் தங்கிவிட்டுத் திரும்ப டொரன்டோ வருவார்கள்.

அவர்களின் வாயிலிருந்து நேரிழையைப் பற்றி அறிந்துகொள்வாள் நேயநறுமை. கூடவே குழந்தை பற்றியும், அதன் துருதுருப்பு பற்றியும் தாத்தா பாட்டிக்கே உரித்தான பெருமையுடன் வானளவாகப் புகழ, அதை மெல்லிய புன்னகையுடன் கேட்டு இருப்பாள் நேயநறுமை.

கடைசியாக ஆதியதுலனைப் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை அறிவதற்காகக் காதுகளைக் கூர்மையாகத் தீட்டிவைத்திருக்க, கடைசியாக, ஆதியதுலன் நேரிழையை எப்படிப் பார்த்துக்கொள்கிறான் என்பது வரை ஒன்றுவிடாமல் கூற, அதைக் கேட்பதற்காகவே காத்திருப்பவள் போல அவன் பெயரைக் காதில் வாங்கி இதயத்தில் நிரப்பிய பின், இந்த வாழ்க்கை தனக்குக் கிடைக்க வேண்டியது தங்கைக்குக் கிடைத்துவிட்டதே என்கிற வேதனையோடும், பொறாமையோடும் அன்றைய நாள் முழுக்க எதையோ பறிகொடுத்தவள் போல அமைதியாக ஒடுங்கிக் கொள்வாள்.

நேரிழையும் அடிக்கடி இவளோடு தொலை பேசியில் பேசுவாள். தன் உணர்ச்சிகளை எல்லாம் மூட்டைகட்டி ஒரு ஓரமாகப் போட்டுவிட்டுத் தங்கை சொல்வதை அமைதியாகக் கேட்பாள் நேயநறுமை.

“அக்கா.. நீர் முன்னைப் போல இல்லை. இப்போதெல்லாம் என்கூடப் பேசுவதற்கு நிறையவே தயங்குகிறீர்…” சிணுங்கும் தங்கையிடம் என்ன வென்று பதில் சொல்வாள்.

‘உன் மீது எனக்குப் பொறாமை. என் வாழ்க்கையை நீ தட்டிப்பறித்து விட்டாய். ஆதியதுலனை நான் மனதார நேசித்தேன். இப்போதும் நேசிக்கிறேன்.. உன்னுடைய வாழ்க்கையைத் திரும்ப என்னிடம் கொடுத்துவிடு…’ என்று கேட்கவா முடியும்? வாயைத் திறந்தால் ஒரு வேளை கேட்டு விடுவோமோ என்கிற பயம் வேறு அவளுக்கு.

இதோ எப்படியோ வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அவன் மீதான காதல் இம்மி கூடக் குறையில்லை அவளுக்கு. ஆரம்பத்தில் எந்தளவு காதல் இருந்ததோ மாற்றுக் குறையாமல் அதேயளவு காதல் இன்னும் அவள் இதயத்தில் பத்திரமாகத் தான் இருக்கிறது.

அந்தக் காதலிலிருந்து தப்ப அவள் மேற்கொண்ட முயற்சியின் பலனாகத்தான் இதோ இப்போது கையில் விருதாக வந்திருக்கிறது. ஆனால் அந்த விருதைப் பெற்ற மகிழ்ச்சி கொஞ்சம் கூட மனதில் எழவில்ல.

காலங்கள் வடுவை ஆற்றும் என்கிறார்களே. ஆனால் இவள் காயத்தை மட்டும் ஏன் ஆற்ற மறுக்கிறது.

காதல், காதல், காதல்,

காதல் போயிற் காதல் போயிற்

சாதல், சாதல், சாதல்.

இன்பம், இன்பம், இன்பம்;

இன்பத் திற்கோர் எல்லை காணில்,

துன்பம், துன்பம், துன்பம்.

இதைப் பாரதி கூட உணர்ந்துதான் பாடி இருக்கிறார் போல. ஏக்கத்தோடு தன் கரத்திலிருந்த விருதைப் பார்த்தவள் அதை மேசையில் வைத்து உருட்டியவாறு அங்கே நடனமாடும் ஆடவர்களை ஏனோ தானோ என்று பார்த்திருக்க,

“ஹாய்…” என்கிற சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே கவர்ந்திழுக்கும் புன்னகையோடு, கம்பீரமாக நின்றிருந்தான் ஆல்ஃபிரெட் அலக்சான்டர்.

உடனே மரியாதை நிமிர்த்தம் எழுந்து நின்றவள்,

“ஹா… ஹாய் மிஸ்டர் அலக்சான்டர்…” என்று அவள் தட்டுத் தடுமாற,

“ஆல்ஃபிரெட்… பிளீஸ்… கால் மி ஆல்ஃபிரெட்..” என்றான் அவளை ஆர்வமாகப் பார்த்தவாறு.

 

What’s your Reaction?
+1
10
+1
2
+1
6
+1
2
+1
0
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!