Fri. Apr 17th, 2026

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-18

18

இரண்டு நாட்கள் கழிய சமர்த்தியின் பிடிவாதத்தால், குழந்தையைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்துத் தள்ளியவாறு அவளுடைய அறைக்கு அழைத்து வந்தனர். தலையை மட்டும் திருப்பியவளுக்கு அந்தக் கண்ணாடிப்பெட்டியில் பல குழாய்களுக்கு மத்தியில் கிடந்த ஏதோ ஒன்றுதான் அவளுக்குத் தெரிந்தது. அதைக் குழந்தை என்று நம்பக் கூட இவளால் முடியவில்லை.

“என் குழந்தை” என்றவாறு எழ முயன்றவளால் இம்மியும் கூட அசைய முடிந்திருக்கவில்லை. கரங்களைத் தூக்க முயன்றவளுக்கு எப்படி யோசித்துக் கரங்களைத் தூக்க வைப்பது என்றும் புரியவில்லை. அதுவும் ஏதேதோ குழாய்களின் மூலம் மறைந்திருந்த குழந்தையைப் பார்க்க வேண்டி அசைய முயன்றவளுக்கு அதுகூட முடியவில்லை. இதழ்கள் எவ்வாறு இருக்கும்? உதியைப்போல அழுத்தமாய் இருக்குமா, இவளது போல மென்மையாய் இருக்குமா? விழிகள் அவனதைப்போல கூர்மையா? இல்லை இவளது போலக் காந்தமாய் கவருமா? நாசி யாரைப் போல இருக்கும்? அவனைப் போல வேல்போன்று கூராய் இருக்குமா? இல்லை இவளுடையதைப் போல தாமரை மொட்டாக மிளிருமா…? கடவுளே அவள் பெற்ற குழந்தையின் அங்கங்களைக்கூடத் தரிசிக்க முடியாத கொடுமைக்குத் தள்ளப்பட்டுவிட்டாளே. பிறந்த உடனே குழந்தையைத் தூக்காத அன்னை உலகில் எங்காவது இருப்பாளா…? நினைக்க நினைக்கத் தாளவில்லை சமர்த்திக்கு, இறுதியில் தன் கையாலாகாத தனத்தை எண்ணி வெறுத்தவளாய் தாங்கமுடியாத் தவிப்பில் நெஞ்சம் வெடிக்க, உத்தியுக்தனைப் பார்த்து,

“கு… குழந்தையைத் தூ… தூக்கிக் காட்டுங்களேன்…” என்று இறைஞ்ச, அவளுடைய விருப்புக்கு மதிப்புக் கொடுத்துக் கண்ணாடிப்பெட்டித் திறக்கப்பட்டது. இன்னும் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைப் பக்குமாகத் தூக்கிய தாதி, எடுத்து வந்து அவளுடைய மார்பில் கவிழ்த்து வைக்க, சிலிர்த்துப் போனாள் சமர்த்தி. முகமோ புன்னகையைச் சிந்த, விழிகளோ கண்ணீரைச் சொரிய, வயிற்றிலோ பட்டாம்பூச்சி சிறகடிக்க. கரங்களோ அந்தக் குழந்தையை அணைக்க ஏங்க, அது முடியாமல் நெஞ்சம் துடிக்கத் திணறிப் போனாள் சமர்த்தி.

அழுகையும், ஆத்திரமும், வேதனையும் போட்டிப்போட, விசித்தவாறு குனிந்து பார்த்தவளுக்கு அந்தக் குட்டிக் கரிய முடிகொண்ட தலைதான் கண்களுக்குத் தெரிந்தது.

அவ்வியக்தனோ, தன் மனைவியின் அருகே அவள் படுக்கையில் படுத்தாற்போல அமர்ந்து அழுதவளின் கன்னத்திலும், தலை முடியிலும் முத்தமிட்டுச் சமாதானப்படுத்த முயல, இவளோ,

“என் குழந்தை… உதி… என் குழந்தை… ஆனால்… என்னால்… என்னால் அணைக்க முடியவில்லையே… என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே… காட்…” என்றவாறு விம்மத் தொடங்க, உடனே அவளுடைய மார்பில் கிடந்த குழந்தையை அவசரமாகத் தூக்கிய தாதி,

“ஹே மாம்… இட்ஸ் ஓகே… டோன்ட் க்ரை… எவ்ரிதிங் வில் பி ஓக்கே… இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திரு… உன் உடல் தேறியதும் உன் குழந்தையை நீ அணைக்கலாம், போற்றலாம், அதுவரை உடலை முயன்றவரை தேற்ற முயற்சி செய்…” என்று மென்மையாகக் கூறியவாறு கண்ணாடிப் பெட்டிக்குள் குழந்தையை வைத்தவள், பரிதாபமாகச் சமர்த்தியைப் பார்த்துவிட்டு வண்டிலைத் தள்ளிச் செல்லத் துடித்துப் போனாள் சமர்த்தி.

கையேந்திக் கெஞ்ச முடியாது. வேண்ட முடியாது. ஓடிச்சென்று தடுக்க முடியாது. தன்னை விட்டுச் செல்லும் குழந்தையை, எதுவும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க,

“ஷ்… ஷ்… பம்கின்… குழந்தைக்கு ஒன்றும் இல்லைமா.. ஒன்றுமே இல்லை… முன்கூட்டியே குழந்தை பிறந்ததால், இப்படி இருக்கிறது. அது தவிர வேறு எதுவுமில்லை கண்ணம்மா..” என்று சமாதானப் படுத்த, விம்மியவளுக்குத் தன்மீதே வெறுப்புத் தோன்றியது. அவள் மட்டும் அவசரப்படாமல் இருந்திருந்தால், அவள் குழந்தைக்கு இந்த நிலை வந்திருக்காதே… அன்று இவன் அந்த ஜூலியட்டை சந்திக்காது இருந்திருந்தால், இவள் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டாளே. நெஞ்சம் கசக்க, தன்னை அணைத்திருந்தவனை தன்னிடமிருந்து பிரித்துத் தள்ளவும் முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட பற்களைக் கடித்தவள்,

“வெளி… வெளியே போங்கள்…” என்றாள். மெதுவாக அவளை விட்டு விலகியவன்,

“பம்கின்…” என்றான் மென்மையாய்.

“போ வெளியே…” என்று சீற, அப்போதைய மனநிலையில் அவள் தவிப்பையும் வேதனையையும் புரிந்துகொண்டவனாய்,

“கண்ணம்மா நான் சொல்வதை…” என்று எதையோ கூறவரத் தன இயலாமையில் வந்த ஆத்திரத்தில்,

“ப்ளீஸ் உத்தி… கொஞ்ச நேரம் நான் தனியே… தனியே இருக்கவேண்டும்.. வெளியே போங்களேன்.. உங்களைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் வருகிறது… என் நேஞ்சே பிளந்துவிடும் போலத் தவிக்கிறது,… குறைந்தது உங்கள் கழுத்தை நெரிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது… ஆனால்… ஆனால் என்னால் முடியவில்லையே… என்று பெரும் ஏமாற்றமாக இருக்கிறது… ப்ளீஸ் உதி… நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை… தனியாக இருக்கவேண்டும்… அதுவும் கொஞ்ச நேரத்துக்கு… ப்ளீஸ் வெளியே போங்கள் உதி… ப்ளீஸ்…” என்று அழுகையில் விம்மியவாறு கூற, அப்போதைய நிலைக்குத் தனிமையே அவளுக்கு மருந்து என்பதைப் புரிந்து கொண்டவனாய் வெளியேறினான் உத்தியுக்தன்.

சமர்த்தியோ முகட்டு வெளிச்சத்தை வெறித்தவாறு விழிகளில் கண்ணீர் பொழிய, அப்படியே நீண்ட நேரமாகக் கிடந்தாள். மனமோ மார்பில் கிடந்துவிட்டுச் சென்ற குழந்தையின் மீதே நிலைத்திருந்தது, அதன் உடல் வருடும்போது எப்படியிருக்கும். மென்மையாக இருக்குமா? அதன் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்கவில்லையே,

நெஞ்சம் தவிப்புற மீண்டும் மீண்டும் தன்னை வெறுத்தவளாய் விழிகளை மூடியவளுக்கு நெஞ்சமே இரண்டாகப் பிளந்துபோன உணர்வு.

அதன் பின் சமர்த்தியிடம் பெரும் மாற்றம். உத்தியுக்தனை நேருக்கு நேர் பார்ப்பதை மொத்தமாகத் தவிர்த்தாள். ஆனால் இவனோ தன் மனைவி குழந்தை என்று மருத்துவமனையே கதியென்று கிடந்தான்.

இப்போது சமர்த்தி மட்டுமல்ல, குழந்தையிடமும் பாரிய மாற்றம். குழந்தைக்குப் பிராணவாயு மற்றும் உணவு செலுத்தும் குழாய்களையும் இதயத்தை அளவிடும் வார்களையும், அதை விடுத்து இன்னும் ஒரு சில முக்கிய வார்களையும் தவிர மிச்சத்தை முழுதாக நீக்கியிருந்தார்கள்.

சமர்த்தியை பரிசோதித்த வைத்தியர்களின் முகத்திலும் எல்லையில்லா நிம்மதி.

உத்தியுக்தனிடம் வந்தவர்கள், தாங்கள் பயந்தது போல எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், முள்ளந்தண்டு பழைய நிலைக்கு வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், கூடவே சமர்த்தியின் கை கால்களில் உணர்ச்சி இருப்பதால், பயப்பட எதுவும் இல்லை என்றும் கூற, அவனுக்குத் தன் காதலுக்கு மகுடம் சூட்டிய உணர்வு. எல்லையில்லா நிம்மதியில் தளர்ந்துதான் போனான் உத்தியுக்தன்.

இதை விட வேறு என்ன வேண்டும் அவனுக்கு. ஆனாலும் அவளுடைய வாழ்க்கை குறைந்தது ஒரு வருடம் சக்கர நாற்காலிதான் என்றார்கள். மெல்ல மெல்ல உடற்பயிற்சிகள் மூலமும், ஓரிரண்டு சிகிச்சை மூலமும் பழைய நிலைக்குக் கொண்டு வரலாம் என்று அவன் நெஞ்சில் பால் வார்த்தார்கள்.

வெறும் சாதம் கிடைத்தாலே போதும் என்று எண்ணியிருந்தவனுக்கு முன்பு அறு சுவையையும் படைத்தால் எப்படியிருக்கும்.

இப்படியே ஒரு மாதம் கடந்தது.

சமர்த்தி ஓரளவு எழுந்து அமரத் தொடங்கும் அளவுக்கு வந்திருந்தாள். கை கால்களை அசைக்கத் தொடங்கினாள். அதனால் கரங்களை அசைப்பதற்கான பயிற்சிகள், கால்களை அசைப்பதற்கான பயிற்சிகள் என்று நிறைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

ஓரளவு அவள் திடம் பெற்றதும், அவளைச் சக்கர நாற்காலியில் அமர்த்தி, அழைத்துச் சென்று குழந்தையைக் காட்டினார்கள்.

தாதியிடமிருந்து குழந்தையை வாங்கியவன், தன் மனையாளுக்கு முன்பாக மண்டியிட்டமர்ந்து அவள் ஏந்தியிருப்பது போல அவள் உடலோடு முட்டவைத்தவாறு பிடிக்க இவள் உடல் சிலிர்த்துக் கொண்டது. முதன் முறையாகக் குழந்தையின் முகத்தைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் அன்பில் வீங்கிப் போனது. அன்று பார்த்தபோது எத்தனை வார்கள் அதைச் சுற்றிப் போட்டிருந்தார்கள். இப்போது, பலதும் குழந்தையை விட்டு நீங்கியிருந்தது,

ஆனாலும் குழந்தையை வருட முடியவில்லை. அதை உணர்ந்தவன் போலக் குழந்தையைப் பக்குவமாய் அணைத்துக் கொண்டவாறு, அவள் கரத்தைப் பற்றித் தூக்கி குழந்தையின் வயிற்றிலும் முகத்திலும் பிடிக்க, வருடியவளுக்குத் தேகமெல்லாம் நடுங்கியது. நெஞ்சமெல்லாம் அன்பில் உருகிப் போயிற்று. குழந்தையின் மென்மையில் மொத்தமாய் தொலைந்து போகக் குழந்தையயை முத்தமிடும் நோக்கில், சற்றுக் குனிந்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை.

தவிப்புடன் உத்தியுக்தனைப் பார்க்க, அதைப் புரிந்துகொண்டவனாக, அவள் முகம் நோக்கிக் குழந்தையை எடுத்துச் சேன்றான், தன் மென் உதடுகளால் அதன் நெற்றியில் அங்கும் இங்கும் ஒத்தடமிட்டு விலகியபோது, மெல்லிய விம்மல் அவளிடமிருந்து புறப்பட்டது. அதைக் குழந்தை உணர்ந்ததுபோல பட்டும் படாமலும் விழிகளைத் திறந்து “ஐயே…” என்பது போல உதடுகளைச் சுருக்கியது. அதை உணர்ந்தவள் போல, அழுகையுடனே குழந்தையின் அழகில் தன்னை மறந்து சிரித்தாள் சமர்த்தி.

அதன்பின் குழந்தையைக் கண்ட தாக்கமோ என்னவோ, அவள் உடல் நிலை நன்றாகவே முன்னேறியது. கைகளை அசைக்கத் தொடங்கி இருந்தாள். உடலில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள் அவளைப் பெரிதும் திண்டாட வைத்தாலும், தன்னால் இயன்றவரை அந்தச் சிரமம் அவளைப் பாதிக்கா வண்ணம் தாங்கிக் கொண்டான் உத்தியுக்தன். யாரையும் அருகே வர அவன் விடவேயில்லை… உதவிக்கு வந்த விதற்பரையையம், புஷ்பாவையும் தடுத்து விட்டான்.

முதலில் அவன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தடுத்த சமர்த்தி, அவனுடைய பிடிவாதம் கண்டு வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டாள். இதற்கிடையில் பேரக் குழந்தையையும், மருமகளையும் ரதி இரண்டு முறை வந்து பார்த்து விட்டுச் சென்றார். அவரை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

அன்றும் சமர்த்தியைக் கழிவறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வந்து படுக்கையில் அமர வைத்து ஆடைகளைச் சரியாக்க முயன்ற வேளை, அவர்களிடம் வந்த வைத்தியர் சமர்த்தியைப் பரிசோதித்துவிட்டுத் திருப்திப் பட்டுக்கொண்டவராக,

“குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கப் போகிறீர்களா?” என்று கேட்க, உத்தியுக்தனோ வேகமாக மறுத்து,

“நோ… அவள் இருக்கும் நிலையில் முடியாது…” என்றான். அவன் ஆண், தந்தை… மறுத்து விடுவான். பெற்றவள் அவள் அல்லவா… ஆத்திரத்துடன் உத்தியுக்தனை முறைத்துவிட்டு, வைத்தியரிடம்,

“இல்லை… நான்… நான் கொடுக்கவேண்டும்…” என்றாள் அழுகையினூடே. இவனோ,

“பட் சதி… உன்னால் எப்படிக் குழந்தைக்கு… முடியாதே… நீ தூக்கி வைத்திருப்பாயா?” என்று கூற,

“ரிலாக்ஸ் மம் அன்ட் டாட்… இப்போதைக்குக் குழந்தைக்கு நேரடியாகப் பால் கொடுக்க முடியாது. பாலை எடுத்து, சிரிஞ்ச் மூலம் குழந்தைக்கு உணவு போகும் குழாயில் விடுவோம். குழந்தை தானாகக் குடிக்கும் அளவு சக்தி வரும் வரைக்கும் இப்படித்தான் அதன் பசியை ஆற்ற முடியும். அனேகமாக ஒரு கிழமைக்கு இப்படித்தான் நிலைமை இருக்கும்…” என்று கூற, சமர்த்தியின் சம்மதத்தோடு, மருத்துவமனையின் கருவி கொண்டு

பாலெடுக்க முயன்றார்கள். ஆரம்பத்தில் அவளுக்குப் பால் சுரக்க மறுத்தது. ஆனாலும் ஒரு சில முயற்சிகளின் பின்னர் கொஞ்சமாகப் பால் சுரக்கத் தொடங்கியது. அதை எடுத்துக் குழந்தைக்குக் குழாய் மூலம் செலுத்தினர்.

அவர்களின் குழந்தை ஒன்றரை மாதம் கடந்தும் சாதாரணக் குழந்தையின் அளவுக்கான ஆரோக்கியம் வரவில்லை என்பதாலும், இதயத்தின் துடிப்பு எதிர்பார்த்ததுபோல இல்லாததாலும் இன்னும் கண்ணாடிப் பெட்டியில்தான் வைத்திருந்தார்கள். ஐந்து நாட்கள் கழிய, சமர்த்தியைக் குழந்தையின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே நேரடியாகப் பால் குடிக்க வைக்க முயன்றனர். குழந்தையோ வாய் திறக்காது விழிகளையும் வாயையும் இறுக மூடி அப்படியே கிடக்கச் சமர்த்திக்கு அச்சம் தொற்றிக் கொண்டது. அந்த நிலையில் உத்தியுக்தனைப் பயத்துடன் பார்க்க,

“ரிலாக்ஸ்… நம் குழந்தை நிச்சயமாகப் பால் குடிக்கும்… பயப்படாதே…” என்று அவளை ஆறுதல் படுத்த, தாதியோ

“கவலைப்படாதீர்கள். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகக் குழந்தை வேறு விதமாகத்தான் உணவு உட்கொள்கிறது. அன்னையிடம் நேரடியாக உட்கொண்டு பழக்கமில்லாததால் தயங்குகிறது… நாங்கள் முடிந்த வரை முயன்று பார்க்கலாம்.” என்றவர், பாலெடுத்து அதன் வாயில் பூசி வாயைத் திறந்து பலவந்தமாகக் குடிக்க வைக்க முயல, குழந்தையோ இம்மியும் இசைந்து கொடுத்தாளில்லை. அதைக் கண்டதும் சமர்த்தியின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

பாலருந்தாக் குழந்தையைக் கண்டு மனம் வருந்தா அன்னை யாராக இருக்க முடியும்? மனம் கலங்கித் துடிக்க, உத்தியுக்தன்தான் அவளைச் சமாதானப்படுத்தவேண்டியதாயிற்று.

எப்படியோ பல உத்திகளின் பின்பு ஒரு மணி நேரக் கடும் போராட்டத்தின் பின்பு, மங்களகரமாய்க் குழந்தை முதன் முதலாகத் தாயிடமிருந்து நேரடியாகப் பசியாற முற்பட, அங்கிருந்த தாதி ஒருவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தே விட்டார். அங்கிருந்த அத்தனை பேருடைய முகத்திலும் வெற்றிப் பெருமிதம். சமர்த்தி மகிழ்ச்சியில் விம்மியே விட்டாள். அதைக் கண்ட உத்தியுக்தன், தானும் கலங்கியவனாக, அவளுடைய மேல் கரத்தில் தன் கரங்களைப் பதித்து அழுத்திக் கொடுத்து அவளுடைய காதோரமாய் முத்தமிட்டு விலகி,

“ஹே.. சொன்னேன் அல்லவா… நம் குழந்தைக்கு ஒன்றுமில்லையென்று. பிறகு எதற்கு இந்த அழுகை… ம்…” என்று கடிந்தவாறு தன் குழந்தை சிரமப்பட்டாலும் அன்னையமுதம் உட்கொள்வதைக் கண்டவனின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

தாடைகளை அசைத்துக் கொண்டிருந்த குழந்தையை நோக்கிக் குனிந்து அதன் கன்னத்தில் முத்தமிட்டபோது, இரண்டு கண்ணீர்த்துளிகள் அதன் கன்னத்தில் பட்டுச் செல்ல குழந்தையோ, புதிதாகக் கற்றுக்கொண்ட பசியாற்றலில் மூழ்கிப் போயிருந்தது.

அதைக் கண்டவனுக்கு நெஞ்சொடு புத்தியும் உருகிப்போயிற்று.

இத்தகைய அற்புதமான நாள் அவன் வாழ்வில் வரும் என்று அவன் நினைத்திருப்பானா? இதோ ஒரு மாதத்திற்கு முன்பு, இருவருமே அவனை விட்டுப் போய்விடுவார்களோ என்று அஞ்சி நடுங்கியிருந்தானே. மீண்டும் தனியனாய் போய்விடுவானோ என்று துடித்தானே. இப்போது அவன் தனியாளில்லை. மனைவி குழந்தை என்று அவனுக்கென்று ஒரு குடும்பம். இந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காய் உயிரைக் கூடக் கொடுக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. இது போதும்… இதற்கு மேல் அதீதமாய் எதையும் வேண்டப்போவதில்லை.

குழந்தை பசியாறியதோ இல்லையோ, பால் அருந்துவதை விடுத்து உறங்கிப்போக, இவளோ ஆனந்தப் பரவசத்துடன், ஒருகரத்தால் தன் குழந்தையை ஏந்திக் காயம்பட்ட மறு கரத்தால் அதன் தலை முடியை வருடிக் கொடுத்தவாறு பெரும் பாசத்தோடு விழிகளால் குழந்தையை மொய்க்க, உதடுகளோ,

“ஓ மை பட்டர் ஃப்ளை… ஐ ஆம் சோ சாரி… ப்ளீஸ் ஃபோர்கிவ் மி… நான் வேண்டும் என்று செய்யவில்லை… அந்த நேரம் ஏதோ புத்தி பேதலித்துப்போய்… ஆனால் இன்னும் உன்னை என் வயிற்றுக்குள் சுமக்க ஆசைப்படுகிறேன் கண்ணம்மா… வயிற்றிலிருக்கும் போது இரசிக்கும் உன்னுடைய குறும்புகளை இழந்துவிட்டேனே என்று தவிப்பாய் இருக்கிறது… மை ஏஞ்சல்… அவசரமாய் உலகத்தில் நீ பிறக்க நான்தான் காரணம்… என்னை மன்னிப்பாயா… பளீஸ் வில் யு ஃபோர்கிவ் மீ… மை ஸ்வீட் லிட்டில் பை… டூ யு நோ ஹெள மச் ஐ லவ் யு? உன்னை விட இந்த உலகத்தில் எனக்கு எதுவும் உயர்ந்ததில்லை… முக்கியமில்லை… நம்புடா… இந்தக் கணம் உனக்கு ஒரு சத்தியம் செய்கிறேன்… இந்தத் தடவை செய்த முட்டாள்தனத்தைப் போல ஒன்றை இனி எக்காலத்திலும் செய்யமாட்டேன்…. சத்தியமாகச் செய்யமாட்டேன்…” என்றவள் குழந்தையை இறுக்கி அணைத்து அதன் உச்சியில் முத்தமிட்டபோது, கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அவளால் தன்னையே மன்னிக்க முடியவில்லை. அவள் செய்த முட்டாள் தனத்தால், அவளுக்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் அல்லவா பெரும் ஆபத்தைத் தேடிக் கொடுத்து விட்டாள். எத்தனை காலம் சென்றாலும் இந்தக் குற்ற உணர்ச்சி அவளை விட்டு விலகாதே…

இப்போதும் கால்களுக்கிடையில் எதுவோ உருகிச்சென்றதுதான் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தால்…? நினைக்க நினைக்கத் தாளவில்லை சமர்த்திக்கு. எனோ உத்தியுக்தன் மீது அளவுகடந்த சீற்றம் எழுந்தது.

இத்தனை வலிக்கும், இத்தனை வேதனைக்கும், இத்தனை தவிப்புக்கும் முழு முதற் காரணம் இவன்தானே… இவன் மட்டும்தானே… உதடுகள் மேலும் துடிக்கத் தொடங்க, தன் குழந்தையையே வெறித்துப் பார்த்தாள் சமர்த்தி.

சற்று நேரத்தில் உறங்கிய குழந்தையைக் கண்டு, பக்குவமாக அதை அன்னையிடமிருந்து பிரித்து, உள்ளே வைக்க, இவளோ பெரும் வேதனையுடன் தன் குழந்தையைப் பார்த்தாள்.

பிறந்த போதே அன்னையிடமிருந்து பிரித்து வைத்துவிட்டார்களே… கடவுளே, நினைத்த நேரத்தில் அணைக்க முடியாத கொடுமை, பசித்தால் உடனே பால்கொடுக்க முடியாத அவலம்… இப்படி ஒரு சித்திரவதை அவளுக்குத் தேவையா?

ஒரு வேளை குழந்தைக்கு ஏதாவது நடந்து இருந்தால், வாழ்வில் அழியாத வடுவையல்லவா கொடுத்திருக்கும். இத்தனை தவிப்புக்கெல்லாம் காரணம் இவன்தானே. இவன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் அவள் ஏன் அவசரப்பட்டு வண்டியை எடுத்து விபத்தில் சிக்கிக் கொள்கிறாள். பழைய காதலிதான் வேண்டுமென்றால், எதற்கு இவளை இழுத்து வைத்திருக்கவேண்டும்.

ஆத்திரத்துடன் திரும்பி உத்தியக்தனைப் பார்த்தவள், வேகமாகத் தன் வண்டியைக் கரங்களால் தள்ளியவாறு தன் அறைக்குப் போக, உத்தியுக்தனோ,

“சதி… நில்… கைகள் வலிக்கப் போகிறது. நான் தள்ளிச் செல்கிறேன்… சற்றுப் பொறு…” என்றவன், வண்டியைத் தள்ளிக்கொண்டு அறைக்கு வந்து அவளைத் தூக்கிப் படுக்கையில் கிடத்திவிட்டு,

“ஏதாவது குடிக்கிறாயா சதி…?” என்றான் அன்பாய்.

வேண்டாம் என்று மறுத்தவள்,

“உதி…” என்றாள் என்றாள்.

அந்த உதி என்கிற அழைப்பில் உள்ளமும் உடலும் சேர்ந்து உருகிப் போகத் தவிப்புடன் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிக் கொந்தளிப்பு.

“என்னடா?”

“எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?”

“சொல்லுமா…”

“எனக்கு உங்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை உத்தியுக்தன். தயவு செய்து என்னைப் பார்க்க வராதீர்கள்…” என்றாள் எல்லையில்லா வலியை அடக்க முயன்றவாறு.

இவனோ அதைக் கேட்டு அடிபட்டவனாக, சமர்த்தியை வெறிக்க, உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தவள்,

“இது வரை காலமும் நான் பட்ட சித்திரவதை போதும்… இனியும் படஎன்னிடம் சக்தியில்லை உத்தியுக்தன். எனக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினீர்கள் என்றால், என்னையும் என் குழந்தையையும் நிம்மதியாக இருக்க விடுங்கள்… அதற்கு ஒரே வழி, நீங்கள் வராது இருப்பதுதான்” என்று பெரும் வலியோடு சொன்னவளை வெறித்தான் உத்தியுக்தன்.

“ஐ… ஐ ஹேட் யு… ஐ ஹேட் யு உதிதன்… எனக்கு… உ… உங்க..ளைப் பார்.. பார்க்கப்… பிடிக்கவில்லை… உ.. உங்களால்.. அந்த… ஜூலி..யட்டால்…தான் எனக்கு… இந்த நிலைமை… நம் குழந்தைக்கும்… இந்த நிலைமை… யு ஆர் நாட் டிசேர்வ் அஸ்… நீங்கள் மட்டும் என் வாழ்வில் வராது இருந்திருந்தால், நான் இத்தகைய சிக்கலில் மாட்டியிருக்க மாட்டேன்… போதும்… இதுவரை நான் பட்ட வலிகள் அவஸ்தைகள் போதும்… இனியும் நான் துடிக்கத் தயாராக இல்லை… தயவு செய்து என்னை… என்னை விட்டு… என்.. குழந்தையின்… வாழ்வி..லிருந்து… விலகி… விடுங்கள்… உங்கள்… நிழல் பட்.. ப்டாலே… பாவம்… மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தைத் தாங்கும் சக்தி எனக்கில்லை… உங்களைக் கும்பிட்டுக் கேட்கிறேன்… போய் விடுங்கள்…” என்றதும் உத்தியுக்தனின் முகம் பாறையாக இறுகிப்போயிற்று. அதுவரையிருந்த அத்தனை மகிழ்ச்சியும் துனிகொண்டு துடைத்தாற் போல மறைந்து போக,

“சமர்த்தி… நான்…” என்று எதையோ சொல்ல வர தன் காதுகளைப் பொத்தியவள்,

“வேண்டாம்.. நீங்கள் சொல்வதைக் கேட்க நான் தயாராக இல்லை…” என்றவள் தன் கரங்களை ஏந்திக் காட்டி,

“என் குழந்தை… என் குழந்தையை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டு, அதன் பசியைக் கூட ஆற்ற முடியாத பாவியாக நான் இங்கே இருந்து இருக்கிறேனே.. அதை நினைக்கும்போது நெஞ்சம் எல்லாம் காந்துகிறதே… கடவுளே… எத்தனை பெரிய பாவி நான்… இன்று இத்தனை குற்ற உணர்ச்சியிலும் நான் தவிப்பதற்குக் காரணம் நீங்கள்தான் உதிதன்… நீங்கள் மட்டும்தான்… தயவு செய்து என் முன்னால் வாராதீர்கள்… உங்களைப் பார்க்கப் பார்க்க… எனக்கு உள்ளே எரிகிறது… இதோ பாருங்கள்… இதற்கு மேலும் பிடிவாதமாக இங்கே இருந்தீர்கள்… அதன் பிறகு நான் என்ன செய்வேன் என்றே எனக்குத் தெரியாது.. உங்களைப் பார்க்கும்போது ஏற்படும் ஆத்திரத்திற்கு, என்னை எரித்தாலும் எரித்துவிடுவேன்.. உங்களுக்கு அதுதான் தேவையென்றால்… தாராளமாக என்னைத் தேடி வாருங்கள்… ஆனால்… நிச்சமாக எனக்கிருக்கும் ஆத்திரத்தில் ஏதாவது பாரதூரமாகச் செய்தாலும் செய்துவிடுவேன்… என் குழந்தைக்குத் தாயில்லாமல் போவதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்… போங்கள் வெளியே…” என்று தன்னை மறந்து சீற, உத்தியுக்தனின் உடல் ஒரு கணம் இரும்பென இறுகி நின்றது.

கடைசியாக அவள் கூறியதைக் கேட்டவனுக்கு நெஞ்சமே பிளந்துபோன உணர்வில் துடித்துப் போனான்.

இதற்காகத்தானா இத்தனை துடித்தான்? இதற்காகத்தானா காத்திருந்தான்? ஏனோ தேகமெல்லாம் தீப்பற்றியது போலத் தோன்றியது உத்தியுக்தனுக்கு. ஒரு வேளை அவள் சொல்வது போல ஏடாகூடமாகச் செய்து தொலைத்தால், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த வலியை அவனால் கழுவி எறிய முடியாதே.

அமைதியாக அவளைப் பார்த்தவன்,

“அதுதான் உனக்கு வேண்டும் என்றால்…” என்றவாறு வாசல் கதவை நோக்கிச் சென்று திரும்பி ஒரு முறை அவளைப் பார்த்தான்.

“உ… உன்னைக் கவனித்துக் கொள். பத்திரமாக இரு. குழந்தையையும் கவனமாகப் பார்த்துக் கொள்…” என்றவன் அவளை விழி நிறைய உள் வாங்கி இதயத்தல் நிரப்புவது போல சற்று நேரம் அப்படியே நின்றான்.

முட்டிக்கொண்டு வந்த வெதனையை மென்று விழுங்குபவனாக,

“ஆல் த பெஸ்ட்…” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காது கதவைத் திறந்து வெளியேற, அங்கே அவ்வியக்தன் இவர்கள் பேசியதைக் கேட்டவாறு இறுகிப்போய் நின்றிருந்தான்.

வெளியே வந்த உத்தியுக்தன் அங்கே அவ்வியக்தனை எதிர்பார்க்கவில்லை என்பது சுருங்கி விரிந்த முகத்திலிருந்து தெரிந்தது.

ஆனாலும் தன் தம்பியைக் கண்டு கொள்ளாதவனாக, விலகிச் செல்ல, தயாளனும் புஷ்பாவும் சமர்த்தியின் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் என்ன நினைத்தானோ, அவர்களை நெருங்கியவன், புஷ்பாவின் கரத்தைப் பற்றிச் சற்று நேரம்; அமைதி காத்தான்.

புஷ்பா, குழம்பியவராய் நிமிர்ந்து தன் கணவனைப் பார்த்துவிட்டு உத்தியுக்தனைப் பார்க்க, அவனோ எதுவும் பேசாமல் தன் கரத்தில் இருந்த புஷ்பாவின் கரத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். பின் நிமிர்ந்து அவரைப் பார்த்து,

“இவளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். எங்கள் குழந்தையையும்தான்…” என்றவன் மறு கணம் விறுவிறு என்று மருத்துவமனையை விட்டு வெளியேறிச் செல்ல, புஷ்பாவும் தயாளனும் குழப்பத்துடன் சென்று கொண்டிருந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஏனோ அவனுக்கு நெஞ்சமெல்லாம் ரணமாய்ப் போன உணர்வு. பெரும் வெற்றிடம், பெரும் ஏமாற்றம்.. எதிலோ தோற்றுப்போன வலி. உன்னால் தான் எனக்கு இந்த நிலை… அவள் சொன்னதில் தவறில்லையே. அவனுடைய வாழ்க்கையில் அவள் வராதிருந்திருந்தால், தனக்கென மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்திருப்பாள்தானே. அவனுடைய சுயநலத்திற்காக அவளைச் சிறை வைத்தது இவன் குற்றம்தானே.

போதும். இந்த ஜென்மத்திற்கு அவன் பட்ட வலி போதும்… இனியும் ஒரு முறை அவள் படும் வேதனையைக் காண்பதற்கான சக்தி அவனிடம் இல்லை. நிச்சயமாக இல்லை.

அவளாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும். யோசிக்கட்டும். உணர்ந்து கொள்ளட்டும். அது வரை அவளுடைய மன அமைதிக்காக ஒதுங்கியிருப்பது தான் முறை. நெஞ்சில் பாறாங்கல்லின் அழுத்தத்தோடு, பெரும் வலியோடு அங்கிருந்து விலகிச் செல்ல, இதை சற்றுத் தள்ளி நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்தான் அவ்வியக்தன். அடுத்துத் தன் கைப்பேசியை எடுத்தவன், சில இலக்கங்களைத் தட்டினான்.

மறு பக்கம், “ஹாய்… இட்ஸ் ஜூலியட்…” என்றது இனிமையான குரல்.

“இட்ஸ் மீ… அவ்வியக்தன்… உத்தியுக்தன்ஸ் ட்வின் ப்ரதர்…” என்றான் இவன்.

What’s your Reaction?
+1
4
+1
3
+1
1
+1
1
+1
7
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!