November 25, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-18

(18)

அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு தன் கன்னம் இளைத்து,

“இன்னொரு முறை சொல்வீர்களா?” என்றாள் ஏக்கமாக. அவனோ தன் கன்னத்தை முட்டி நின்ற அவள் தலையை வலது கரத்தால் வருடிக் கொடுத்து,

“என்ன சொல்லட்டும்?” என்றான் புரியாமல். .

“அதுதான்… என்னைக் காதலிக்கிறீர்கள் என்று சொன்னீர்களே… அதை!” கேட்டவள், விலகி அவன் விழிகளை ஆர்வத்தோடு, ஏறிட, அந்தப் பதினாறு வயதுப் பாவையை இப்போதும் அவளுள் கண்டுகொண்டவனாகக் கனிந்து போனான் ஏற்றமாதிபன்.

“ஐ லவ் யூ பேபி… என் உலகம், உயிர், உடல், ஆத்மா அனைத்தும் நீயாக… உனக்கே உனக்காக, உன்னில் நானாக… ஐ லவ் யூ… அன்ட் ஆல்வேஸ் ஐ ஆம் யுவர்ஸ்!” என்றான். அவனது விழிகளில் காதலும் காமமும் சரிவிகிதத்தில் பொங்கி வழிய, அதை உணர்ந்தவளின் தேகமோ அதீத மகிழ்ச்சியிலும், இன்பத்திலும் சிலிர்த்து நடுங்கின.

அவன் சொன்னதைக் கேட்கக் கேட்க அவளுக்குத் திகட்டவே இல்லை. இரண்டு நாட்கள் தண்ணீரைக் காணாத இடத்தில், ஒரு குளத்தைக் கண்டதும், தாகம் தீர அள்ளி அள்ளிக் குடிப்பது போல, மீண்டும் மீண்டும் அவன் காதலை அவன் வாயால் கேட்கும் ஆவலில், அவன் கழுத்தை நெரித்தவாறே அவன் தேகத்தோடு தன் முழு உடலையும் மோதி,

“இன்னொரு முறை…” என்றாள் மகிழ்ச்சியில் கமறிய குரலில். அவள் நிலையைப் புரிந்து கொண்டவனுக்கு புன்னகை மேலும் மலர்ந்தது.

முழங்காலில் அமர்ந்து, அவளுடைய மொத்த உடலும் தன் முதுகில் படர்ந்திருக்கக் கழுத்தைச் சுற்றிய கையோடு அவன் கன்னம் முட்டியிருந்த அவள் தேகத்தை உணர்ந்து கிறங்கியவனாகத் தன் வலது கரத்தால் அவளி இடை பற்றித் தன்னை நோக்கி இழுத்து மடியில் விழவைத்து அவளை தாங்கிக் கொண்டவன், குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவாறு,

“ஐ லவ் யூ… பேபிகேர்ள்…” என்றான் மென்மையாக. அவளுக்கோ எவ்வளவு கேட்டும் போதாத நிலை. அவன் ஆயிரம் முறை சொல்லவேண்டும், இலட்சம் முறை சொல்லவேண்டும். அவன் சொல்வதை சாகும் வரைக்கும் கேட்கவேண்டும். இப்போது கன்னத்தில் கண்ணீர் வடிய,  தன் நாசியைத் தொட்டுக் காட்டி, “இன்னொரு முறை…” என்றாள் மூக்கை உறிஞ்சியவாறு.

அதைக் கேட்டு குலுங்கிச் சிரித்தவன், அவள் காட்டிய நாசியில் கடித்து முத்தமிட்டு விலகி, “ஐ லவ் யூ… பம்கின்” என்றான்.

மெதுவாகத் தன் கன்னத்தைத் திருப்பி அவனிடம் காட்ட, மறுகணம் புயலானான் ஏற்றமாதிபன். குனிந்தவன் கண்ணீர் வடிந்த அவள் வலது கன்னத்தை வலிக்காமல் கடித்து உறிஞ்சி விடுவித்து, எச்சில் பட முத்தமிட்டு, “ஐ லவ் யூ… ஏஞ்சல்” என்றான். இடது கன்னத்தையும் அதேபோல் கடித்து முத்தமிட்டு, “ஐ லவ் யூ சோ மச்… பொண்டாட்டி” என்றவாறு மெல்லக் குனிந்து அவளது இதழ்களைப் பார்த்தான்.

அவனுக்கே அவனுக்கான இதழ்கள்! இரண்டு முறை அவற்றைச் சுவைத்திருக்கிறான்தான்; ஆனால் அவை வேறு வேறு சந்தர்ப்பங்களில். அதில் காதலில்லை, காமமில்லை. அதையும் தாண்டிய அவளுடைய நலனே இருந்தது. இப்போது நெஞ்சம் வெடிக்கும் அளவுக்குக் காதல் இருந்தது. உணர்ச்சி வெடிக்கும் காமம் இருந்தது. அந்தக் காதலும் காமமும் கலந்து முத்தமிடுவது இதுதானே முதன்முறை!

சிலிர்ப்புடன் அந்த இதழ்களை நோக்கிச் சென்றவன், “ஐ லவ் யூ பேபி…” என்றவாறு தன் இதழ்களால் அவள் இதழ்களை முழுதாகச் சிறைப்படுத்திக் கொள்ள, மறுகணம் இருவருக்குமே உலகம் மறந்து போனது.

காதல் என்கிற உணர்வு ஒரு மனிதனை எப்படித்தான் இப்படிப் பித்தர்களாக்கித் தொலைக்கிறதோ! இம்மையும் மறுமையும் மறக்க, சொர்க்கமும் நரகமும் தொலைய, ‘நான் – நீ’ என்கிற ஆணவம் கரைய, இறப்பு-பிறப்பு என்கிற மாயை மறைய… மெய்யும் உயிரும் தீண்டும் அந்த ஆத்மார்த்தமான காதலில் ஆவேசமான அழுத்தத்துடன் அவள் உதடுகளைக் கவ்வி முத்தமிட்டான் ஆதிபன்.

இது என்ன அவள் உதடுகள் அமிர்தசுரபியா என்ன? சுவைக்கச் சுவைக்கப் போதை தலைக்கு ஏறுகிறதே. எவ்வளவு பருகினாலும் போதாது என்பது போல, முத்தமிட்டவாறே அவளை இறுக அணைத்தவாறு, வலது கரத்தால் அவள் கன்னத்தை அசையாமல் பற்றியவாறு காயம் பட்ட மறு கரத்தால் அவள் தலையைத் தாங்கி,  இன்னும் ஆழமாக முத்தமிட, விதரணை முழுதாகத் தன்னை அந்த முத்தத்தில் தொலைத்து்தான்விட்டாள்.

இதற்காகத்தானே இத்தனை காலமாய் உயிர் வாழ்ந்தாள்! ஏழு வருடத் தீராத ஆசை… இந்த ஒரு முத்தத்திற்காக அவள் எப்படியெல்லாம் ஏங்கியிருந்தாள்! இதோ, இப்படி அவன் கையணைப்பில் சிறைப்பட, அவனது கரங்கள் தன் மேனியைத் தீண்டும் அந்த ஒரு கணத்திற்காக எத்தனை காலந்தான் தவமிருந்தாள்! தன் வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்கவே நடக்காது என்று எண்ணியிருந்தாளே… ஆனால் இப்போது, அவன் மொத்தமாக அவளை உறிஞ்சிக் கொள்கிறானே!

ஐயோ… இது கனவா நனவா? தேகம் இப்படிப் பாகாய் உருகிக் கரைகிறதே! இதயம் இந்தச் சுகம் தாளாமல் முரசு போலப் பலமாகத் துடிக்கிறதே! இதோ, என் மன்னவனின் மடியில் நான்… அவன் அணைப்பில் என் உயிர்! காதலின் வீரியம் தாங்க முடியாமல், மொத்தமாய் தன் இதழ்களை அவனிடம் ஒப்படைத்து, அவன் செயலில் மதிமயங்கிப் போனாள். சுனாமியாய் ஒரு முத்தம் இருவருக்கும் இடையில் தடையின்றிப் புகுந்து, அவர்களின் கடந்த கால வலிகளை இழுத்தடித்துச் சுழற்றி ஒரு பக்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த உலகையே அவர்களை மறக்கச் செய்திருந்தது. இது என்ன உணவா போதும் என்று விலக்க. இது முத்தம். அவன் முத்தம். எப்படி போதும் என்பாள். இன்னும் வேண்டும் என்று புத்தியும் உடலும் சத்தியாக்கிரகம் செய்ய, அவன் முகத்தை இருகரங்களாலும் பற்றித் தன் உதடுகளை மொத்தமாக அவனிடம் ஒப்படைத்துவிட்டு அவனுடைய உதடுகளைப் பறிக்க முயன்றுகொண்டிருந்தாள் விதரணை.

தொடர் முத்தத்தில் இருவருக்குமே சற்றுக் களைப்பு ஏற்படத்தான் செய்தது. ஆழ மூச்செடுத்தால்தான் அந்த முத்தத்தைத் தொடர முடியும் என்கிற நிலையில், சற்று ஓய்வெடுக்க நினைத்தவனாக அவளுடைய இதழ்களிலிருந்து தன் இதழ்களைக் கொஞ்சமாய் பிரித்தெடுக்க முயன்றான் ஏற்றமாதிபன். ஆனால் அதற்கு அவள் விட வேண்டுமே! நடப்பது கனவா நனவா என்று கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. மனதுக்குப் பிடித்த காட்சி கண்முன்னே அரங்கேறும்போது அதை எப்படி அவள் உதறித் தள்ளுவாள்?

விலக முயன்ற அவன் இதழ்களைப் பாய்ந்து அவள் அள்ளிக்கொள்ள, தானாக வந்த விருந்தை வேண்டாம் என்று மறுப்பானா அவன்? சீறலான மூச்சுக் காற்றுடன் தன்னைத் தேடி வந்த இதழ்களுக்கு அறுசுவை விருந்து படைக்க, சொக்கித்தான் போனாள் விதரணை.

அவள் மனதின் ஆழமான வடுவாகப் பதிந்துபோன பெற்றவர்களின் மரணத்திற்கு வடிகாலாக அவனைத் தேடினாளோ? இல்லை, அவனால் மட்டும்தான் தன் வலியைப் போக்க முடியும் என்று நினைத்தாளோ? அவனும் தன்னைக் காதலிக்கிறான் என்கிற உண்மை புரிந்த கணமே மொத்தமாகத் தொலைந்தவளாக, அவனுக்கு முழுதாகத் தன்னைக் கொடுத்துவிடத் துடித்தாள். அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, தன் மெல்லுடல் அவன் வன்னுடலோடு மோத, மீண்டும் ஒரு ஆழமான முத்தம்.

நீண்ட நேர முத்தத்தில் இருவருக்குமே மூச்சிறைக்க, தற்காலிக விடுப்பு எடுத்து நெற்றியும் நெற்றியும் முட்ட, மூக்கும் மூக்கும் உரச, ஏறி இறங்கிய மார்போடு இருவரும் விழிமூடி நின்றனர்.

“ஏற்றன்…” மெதுவாய் அவள் கிசுகிசுக்க, அவனோ அவள் தேகத்தைத் தன் கரங்களால் அளைந்தவாறே பதில்சொல்லத் திறானியற்று, “ம்” நின்றான். அவனுக்கும் இதுதான் முதல் முத்தம். புதிதாய் கற்றுக்கொண்ட பாடம் திகட்டாது சொர்க்கம் கொடுக்க, அந்த முத்தத்தில்தான் அவனும் மதிமயங்கிக் கிடந்தான். அவளோ

“டேக் மீ…” என்றாள் அவனுக்குள் இரண்டறக் கலக்கும் வெறியில்.

சற்று நேரம் பதில் சொல்லாமல் அவன் அமைதி காக்க, மெதுவாக அவன் முகத்திலிருந்து தன் முகத்தைப் பிரித்தெடுத்து விழிகளை விரித்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் இன்னும் விழிகளை மூடியவாறுதான் இருந்தான். மூடிய விழிகளுடனான அந்த முகத்தில்தான் எத்தனை உணர்ச்சிகள்! காதல், காமம், ஆசை, தவிப்பு, ஏக்கம், தேவை என அனைத்தும் கலந்த கலவையாகத் தெரிந்த அவன் முகத்தைக் கண்டவள், ஆசையோடு அவன் கன்னத்தில் பதிந்திருந்த கரத்தால் ஒருமாதமாக வளர்த்துவிட்ட தாடி மறைத்த கன்னத்தை வருடிக்கொடுத்தாள்.

குனிந்து அவன் தாடையில் தன் இதழ்களைப் பதித்தவள், அப்படியே கோடாகத் தன் இதழ்களை நகர்த்தி அவன் காதுகளுக்கு அருகே வந்து, “என்னை முழுதா எடுத்தக் கொள்ளுங்கள்…” என்றாள் இறைஞ்சலாக. .

இப்போது மெதுவாக அவன் விழிகளைத் திறந்தான். அதில் பொங்கி வழிந்த காமத்தைக் கண்டு உடல் சிலிர்த்துத்தான் போனாள் விதரணை. ஆனால் அவனோ, அவளையே இமைக்காமல் சற்று நேரம் பார்த்திருந்தான்.

பின் குனிந்து, அவள் நெற்றியில் சின்னதாய் முத்தமிட்டவன், பதில் எதுவும் சொல்லாமல், மடியில் அமர்ந்திருந்தவளின் இடையைக் காயம் படாத கரத்தால் சுற்றி வளைத்துத் தன் உடலோடு இறுக்கித் தூக்கியவாறே, படுக்கையின் மறுபக்கம் வந்து அவளை அதில் அமர்த்தி, அவள் தோள்களைப் பற்றிப் படுக்கையில் சரித்து, கால்களையும் தூக்கிப் படுக்கையில் பக்குவமாக வைத்துவிட்டு, மீண்டும் அவள் முகம் நோக்கி வந்தவன்,   மெதுவாக அவள் கன்னத்தை வருடிக் கொடுத்து, வலிக்காமல் தட்டிக்கொடுத்து

“ஸ்லீப் பம்கின்…” என்றான் இதமாக. அவளோ அதிர்வுடன் அவனைப் பார்க்க, சற்று நேரம் அவளை ஆசையோடு பார்த்துவிட்டு, அவன் விலக முயல, சட்டென்று அவன் கரத்தைப் பற்றினாள் விதரணை.

திரும்பிப் பார்த்தான் ஏற்றமாதிபன். இப்போது அவன் முகத்திலிருந்த ஏக்கமும் தாபமும் காணாமல் போயிருந்தது; கனிவு மட்டும்தான் அங்கே எஞ்சியிருந்தது.

“ஏன்… ஐ… ஐ நீட் யூ … டேக் மீ… பிளீஸ்…!” என்று அவள் கெஞ்ச, சட்டென்று குனிந்து அவள் உதட்டில் தன் கரத்தைப் பதித்தான் ஆதிபன்.

“கெஞ்சாதே…” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன், இப்போது அவளுடைய தலையை வருடிக் கொடுத்து,

“வேண்டாம்… தூங்கு…” என்றான் இப்போது சற்று அழுத்தமாக. அவளோ ஏமாற்றமாக அவனைப் பார்த்து,

“ஏன்… என்னை… என்னைத் தொடப் பிடிக்கவில்லையா?” கேட்கும்போதே அவள் குரல் கரகரக்க, இப்போது அவன் முகத்தில் மெல்லிய கோபம் ஒன்று பிறந்தது. அந்தக் கோபத்தோடு அவளைப் பார்த்தவன்,

“உன்னைத் தொடவில்லை என்றால், அதற்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமா?” கேட்டவன், கலவரம் கொண்ட அவள் முகத்தைக் கண்டு என்ன நினைத்தானோ, தன் கோபத்தை மறைத்து மென் புன்னகையுடன் அவளருகே அமர்ந்தான்.

சற்று நேரம் அமைதி காத்தவன், அவள் கரத்தைப் பற்றித் தூக்கி அதில் தன் முத்தத்தைப் பதித்தவன்,

“இப்போதில்லை… முதலில் உன் உடல் தேற வேண்டும். உடல் மட்டுமில்லை, உன் மனதும் தேற வேண்டும். நாம் இருவரும் ஒன்றாகக் கலக்கும் அந்த நாள், நம்மிருவருக்கும் இடையே காதல் மட்டும்தான் இருக்க வேண்டும். நம் முதல் உறவு, என்றும் கசப்பானதாகவோ, மனவலியைத் தரக்கூடியதாகவோ இருக்கக் கூடாது. முக்கியமாக, மறுநாள் விடியலில் எழும்போது ஒருவரை ஒருவர் குற்ற உணர்ச்சியோடு பார்க்கக் கூடாது!” என்றான் உறுதியாக.

அவளோ மறுப்பாக ஏதோ சொல்ல வந்தாள்.

“நோ… விதரணை! நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று தெரிந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இத்தனை ஆரவாரம் செய்கிறாய். ஆனால், உன் அடிமனதில் உன்னைப் பெற்றவர்கள் இல்லாது போன வலி மாற்றுக் குறையாமல் அப்படியேதான் இருக்கிறது. சொல்லப்போனால், நீ இப்போது என்னைத் தேடுவதற்குக் காரணமே அதுதான். அந்த வலியிலிருந்து தப்ப உனக்கு நான் தற்காலிகத் தீர்வாகத் தேவைப்படுகிறேன். இன்று நாம் இணைந்தால், நாளை நிச்சயமாக நீ குற்ற உணர்ச்சியில் தவிப்பாய். ‘அப்பா அம்மா இறந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்கு. இந்த நிலையில் இப்படிச் செய்துவிட்டோமே’ என்று உன் மனசாட்சி உன்னைத் துளைக்கும். அதற்குப் பிறகு என்னைக் குற்றவாளியாகப் பார்ப்பாய். இல்லை நீ குற்றம் செய்தது போல உணர்வாய். அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லை!” என்றவன், தன் கரத்திலிருந்த அவள் கரத்தை விடுவித்து, அவளை நோக்கிச் சரிந்து அவள் கன்னத்தைப் புறங்கையால் வருடிக் கொடுத்தவாறு,  “எனக்கு நீ வேண்டும் விதரணை. என் உடலின் ஒவ்வொரு அணுவும் உனக்காக, உன் தொடுகைக்காக, உனக்குள் இரண்டறக் கலப்பதற்காக ஏங்கிக் கிடக்கின்றன. ஆனால், உனக்காக, உன் நன்மை கருதித்தான் என்னை நான் அடக்கி வைத்திருக்கிறேன் கண்ணம்மா… புரிந்து கொள். உன் பெற்றவர்களின் மரணத்திற்கான காரணிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; அவர்களைக் கூண்டோடு அழிக்க வேண்டும்! அப்போதுதான் உன் மனதும் ஓரளவு சமாதானமடையும். அதன் பிறகு உன் வலி கொஞ்சம் மட்டுப்படும். என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நெருங்குவாய். அப்போது உன்னை எடுத்துக் கொள்கிறேன்”

சொன்னவனின் முகத்தில் அதுவரையிருந்த இன்ப உணர்ச்சி இப்போது சுத்தமாக வடிந்து போயிருந்தது. அந்த அழுத்தத்தோடு நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,

“உன் மனத்தவிப்புக்கான விடை கிடைத்த பின்புதான் நாம் இருவரும் வாழவே தொடங்க வேண்டும். அதுவரை நான் என் உணர்வுகளை அடக்கி வைத்திருக்கத்தான் வேண்டும்…” என்றான்.

சற்று முன் அவன் காட்டிய வேகத்தையும் உணர்ச்சிப் பெருக்கையும் உணர்ந்தவள்தானே அவள்! எத்தனை ஆசையாக அவளை வருடினான்… அவள் மேனியைத் தீண்டினான்… அவனால் உண்மையில் தன்னை அடக்கியாள முடியுமா?

நினைத்தவளாக அவனை ஏறிட்டுப் பார்த்தவள், “உ… உங்களால் முடியுமா?” என்றாள் ஏக்கமாக. அவனால் முடியுமா இல்லையா என்பது அவளுக்குத் தெரியாது; ஆனால், அவளால் முடியுமா என்பதுதான் அவளுக்குப் பெரிய கேள்வியாக இருந்தது.

அவள் கேட்டதில் சிரித்தவன், “உன் மீது தீராத காதலில் உழன்றாலும், உன் நன்மைக்காக என்னை அடக்கி ஒதுங்கியிருந்தவன் விதரணை நான். அந்த மன அடக்கம் எனக்கு நிறையவே இருக்கிறது… அண்ட் ஐ வில்” என்று உறுதியாகச் சொன்னான்.

அவனது மன உறுதியில் கொஞ்சம் வியந்துதான் போனாள் விதரணை. அவன் சொல்வதும் சரிதானே! அவள் மீது காதல் கொண்டு, தன் ஆசையை இத்தனை காலமாய் உள்ளே அடக்கி வைத்திருந்தவனின் மனத் தைரியத்தைச் சந்தேகப்பட முடியுமா என்ன? நினைத்தவளின் கன்னத்தை மென்மையாய் வருடிக் கொடுத்தவன், “உன் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்று உள்ளே வலிக்கிறது விதரணை… ஆனால் உன் நன்மை கருதித்தான் ஒதுங்கியிருக்கிறேன் என்று உனக்குப் புரிகிறதுதானே?” எனக் கேட்டான்.

அழகாகச் சிரித்தவள், சட்டென்று எழுந்து அவன் இதழ்களில் முத்தம் பதிக்க, அவனும் ஆவலோடு அவள் முத்தத்தை ஏற்றுப் பதில் கொடுத்தான். மீண்டும் ஒரு ஆழமான முத்தத்தோடு இருவரும் பிரிந்து கொண்டார்கள்.

“ஓகே பேபி கேர்ள்… இனி தூங்கு…” என்றுவிட்டு அவன் விலகத் தொடங்கினான்.

“பேபி கேர்ளா? என்னைப் பார்க்க என்ன குழந்தையாகவா தெரிகிறது?” என்றாள் மூக்கைச் சுருக்கி. அந்தச் சுருங்கிய மூக்கில் சுட்டுவிரலால் ஒரு தட்டுத் தட்டியவன்,

“முதன்முறையாக உன்னைப் பார்த்தபோது எனக்கு நீ பேபி கேர்ளாகத்தான் தெரிந்தாய்… இப்போது பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது. வயது ஏறினாலும், இன்னும் அதே 15 வயதுக் குழந்தை போலத்தான் தெரிகிறாய்!” என்றான்.

அவன் சொல்லவும் முகம் சிவந்தவள், அவனைக் கோபமாகப் பார்த்து, “எனக்கு பதினைந்தல்ல, பதினாறு!” என்றாள் சண்டைக்கு வருபவளாக.

“சரி… சரி… பதினைந்து வயதும் பத்து மாதமும்… ஓகேவா?” அவன் சொல்ல, வெட்கத்தில் உதடு கடித்து முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டாள் விதரணை. அதைக் கண்டு வாய்விட்டு மெதுவாகச் சிரித்தவன், “சரி தூங்கு…” என்றுவிட்டுத் திரும்பினான்.

சட்டென்று கரத்தை விலக்கியவள், “எங்கே போகிறீர்கள்?” என்றாள்.

அவனோ அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அலுவலக அறைக்குப் போகப் போகிறேன்,” என்றான்.

“ஏன்?” என ஏக்கமாகக் கேட்க, தலை சரித்து அவளைப் பார்த்தான். ‘உன் பக்கத்திலிருந்தால் என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாது பேபி கேர்ள்… அதை விட, அலுவலக அறையிலிருந்தால் ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யலாம்’ என்று சொல்ல நினைத்தவன், சட்டென்று வாயை மூடிக்கொண்டான்.

“வேலை இருக்கிறது கண்ணம்மா… பார்க்க வேண்டும். நீ தூங்கு,” என்றான் மழுப்பலாக.

உடனே மறுத்து எழுந்து அமர்ந்தவள், “இப்போது என்ன வேலை உங்களுக்கு? அதெல்லாம் வேண்டாம். பக்கத்தில் படுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் எனக்கு உறக்கம் வராது. கனவு வரும்… அம்மா… அப்பா…” என்றவள் தடுமாற, உடனே அவளை நெருங்கி அமர்ந்துகொண்டான் ஆதிபன். கலங்கியவளை இழுத்து மார்பில் அணைத்தவன், அவள் முதுகைத் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்.

“ஷ்… பம்கின்… பிளீஸ்… உன் வலி எனக்குப் புரிகிறது… ஆனால் இப்படி மனதை விட்டால் வாழ்வில் எதையும் உன்னால் சாதிக்க முடியாது. இப்படி நீ கலங்கினால் எனக்கும் வலிக்கிறதுடா…” அவன் மென்மையாகச் சொல்லி அவள் தலையில் முத்தம் பதிக்க, சற்று நேரம் அப்படியே அவனது அணைப்பில் கிடந்தாள் விதரணை.

தன் கண்களை அழுந்தத் துடைத்தவள், “சாரி… அதிலிருந்து வெளிவரத்தான் முயல்கிறேன்… ஆனால் வலிக்கிறது, நான் என்ன செய்யட்டும்? என் மார்பிலிருக்கும் இந்தக் காயத்தைப் பார்க்கும் போதெல்லாம் தானாக அவர்களின் மரணம்தான் நினைவுக்கு வருகிறது. அந்த லக்கி… அவன்… என்னை…” என்றவள் சீறலாய் ஒரு மூச்செடுத்து நிறுத்தினாள். பின் சிரமப்பட்டு ஒரு புன்னகையைச் சிந்தி, “அதுதான் நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்கள் என்று தெரிந்துவிட்டதே. விரைவாகச் சரியாகிவிடுவேன்… நீங்கள்… நீங்கள் போங்கள்” சொன்னாலும் அவள் முகத்திலிருந்த கலக்கமும், தவிப்பும் அவன் நெஞ்சைப் பிசைய,   அவளையே சற்று நேரம் உற்றுப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

பின் என்ன நினைத்தானோ, சட்டென்ற அவள் கரத்தைப் பற்றி, “வா…” என்று சொல்ல மறுக்காமல் படுக்கையை விட்டு எழுந்தாள் விதரணை.

அவளை அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.

இரவு ஒன்றரையைத் தாண்டியிருக்க, எங்கும் மயான அமைதி நிலவியது. சத்தமில்லாமல் அவளை இழுத்துக்கொண்டு தோட்டத்தின் மறுபக்கத்திற்கு அவன் வர, அங்கே ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்த அழகிய மின்குமிழ்களின் வர்ணஜாலத்தில் அந்தத் தோட்டம் ஜொலித்துக்கொண்டிருந்தது.

இந்தத் தோட்டம் அவர்களின் வீட்டின் பின்புறம் இருந்தது. அதிகப் பூமரங்கள் இல்லாமல், கண்களைக் கவரும் செடிகளை அளவான விகிதத்தில் வெட்டிப் பராமரிக்கப்பட்ட ஒரு பூங்காவாக வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த இடம்.

அங்கிருந்து சற்றுத் தள்ளியிருந்த பன்னிரண்டுக்கு பன்னிரண்டு அடியுள்ள அந்தத் தோட்டத்து மணிமண்டபம் (Gazebo) தெரிய, அவளை அழைத்துக்கொண்டு அங்கே வந்தான் ஏற்றமாதிபன்.

உள்ளே வந்ததும், பூச்சிகள் நுழையாதிருக்க அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலைகளை இழுத்து விட்டுப் பின் அங்கிருந்த மென்னிருக்கையில் அமர்ந்து, அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் அவள் முகத்தை இழுத்து மார்பில் சாய்த்து. “தூங்கு…” என்றான் மென்மையாக.

அந்தத் தோட்டமும், அழகாய் அலங்கரிக்கப்பட்ட மின்குமிழ்களின் ஒளியும், சற்றுத் தள்ளியிருந்த நீச்சல் குளமும், இரவின் அந்த வாசனையும்… எல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னவனின் தேக வாசனையும் அவளுடைய மனவலியை ஆற்றத் தொடங்க, கிட்டிய சொர்க்கத்தை உதறாமல்,  உரிமையோடு அவன் மார்பில் முகம் புதைத்தாள் விதரணை.

ஆசையோடும் அன்போடும் அவனது அடர்ந்த முடிகொண்ட மார்பை அவள் வருடிக் கொடுக்க, சட்டென்று அந்தக் கரத்தைப் பற்றித் தன் கைக்குள் பொத்திக்கொண்டான் ஏற்றமாதிபன்.

“தூங்குடா…” என்றான் மென்மையாக.

அவன் ஏன் அவள் கரத்தைப் பற்றினான் என்பதற்கான காரணம் விதரணைக்கு உடனே புரிந்து போனது. அவள் தொடுவதால் அவனது உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன; எங்கே தன் சுயக்கட்டுப்பாட்டை உடைத்துவிடுவோமோ என்கிற பயத்தில்தான் அவன் தடுக்கிறான். ‘ஆனால், அவன் மடியில் அமர்ந்து அவன் மார்பில் முகம் புதைத்திருக்கும் போது மட்டும் அவன் உணர்ச்சிகள் கொந்தளிக்காதா என்ன?’

குறும்புடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ இப்போது கோபத்துடன் அவளைக் குனிந்து பார்த்து,

“வாட்?” என்றான் அடக்கப்பட்ட எரிச்சலோடு.

இப்போது தன் மனவலி மறந்து பளிச்சென்று சிரித்தவள், மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு அவன் வலது கரத்தை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போட்டு மார்போடு அணைத்து ஒரு பூனைக்குட்டி போலச் சுருண்டு படுத்துக் கொண்டவள், வெளியே தெரிந்த மின்குமிழ்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் என்ன நினைத்தாளோ, அண்ணாந்து அவனைப் பார்த்தாள்.

“என்னடா?” – இதமாகக் கேட்டான் அவன்.

“நீங்கள் இதற்கு முன்பு வேறு பெண்களை முத்தமிட்டிருக்கிறீர்களா? ஐ மீன்… ஜாஸ்மினைத் தவிர்த்து!” – அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவன், பின் கோபமாக அவளை முறைத்தான்.

“சொல்லுங்களேன்…” என அவள் சிணுங்க,

“ஆம் என்றால் என்ன செய்வாய்?” என்றான் அழுத்தமாக. சற்று யோசித்தவள், “ம்… யாருடைய முத்தம் நன்றாக இருந்தது என்று கேட்பேன்!” என்றாள்.

அவனையும் மீறி உதடுகள் சிரிப்பில் வளைய,

“அப்போ யாராவது ஒரு பெண்ணோடு உடலுறவு வைத்திருந்தால் என்ன செய்வாய்?” எனக் கேட்க, அதற்கும் சற்று யோசித்தாள் விதரணை. பின் நிமிர்ந்து பார்த்து,

“அதிலும் யார் உங்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள் என்று கேட்பேன்… இல்லையென்றால், அவளை விட நான் திறமையானவள் என்பதை நிரூபிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்!” என்றாள் உறுதியாக.

அதைக் கேட்டு அதிர்ந்து போனான் ஆதிபன். “உனக்குக் கோபம் வராதா? பொறாமையாக இருக்காதா?”

“ம்… அது நிறையவே இருக்கும். அதற்காக உங்களை இழந்துவிட முடியுமா? செக்ஸ் என்கிறது ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ மகிழ்ச்சிதான். அதுக்காக ஆயுளுக்கும் உங்களோடு வாழும் வாய்ப்பை இழப்பதற்கு நான் என்ன முட்டாளா? ஒரு வேளை  அப்படி ஒருத்தி உங்கள் மனதில் பதிந்திருந்தால், அவளை உங்கள் மனதிலிருந்து நீக்கி நான் இடம்பிடிக்க என்ன செய்ய வேண்டுமோ அத்தனையம் செய்திருப்பேன்…” என்றவள், சுட்டுவிரலால் அவன் கன்னத்தை வருடி, “நான் காதலிக்கிறேன் ஏற்றமாதிபன். காதல் என்றால் வெறும் இந்த உணர்ச்சிக்கானது மட்டுமல்ல; அது ஆத்மார்த்தமானது. அது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும்… நீங்கள் செய்த தவறையும் சேர்த்து! பொறாமைப்பட்டு உங்களை இழந்தால் என்னைப் போல பைத்தியக்காரி யார் இருப்பா…?” அவள் சொல்ல அதிர்ந்துதான் போனான் ஆதிபன்.

இது என்னவிதமான காதல்? அவன் இன்னொருத்தியோடு உறவு கொண்டிருந்தால் கூட ஏற்றுக்கொள்ளும் அளவுக்கா? நம்ப முடியாமல் அவளையே பார்த்தவன்,

“ஒரு வேளை, எனக்கு படக்கூடாத இடதில் அடிபட்டு உன்னை மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லை என்றால், இதே காதலை என்னிடம் காட்டியிருப்பாயா?” கூர்மையாக அவளிடம் கேட்க, அதற்கு அவள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.

“ம்… நிச்சயமாக… நான்தான் சொன்னேனே, என்னைப் பொறுத்தவிரை நீங்கள்தான் முக்கியமே தவிர, நீங்கள் கொடுக்கும் சுகம் அல்ல என்று. எனக்கு உங்களோடு இருக்கவேண்டும். உங்கள் உடல் சிந்தும் வாசனையை என் நாசி நுகரவேண்டும். உங்கள் உடல் சூட்டை நான் உள்வாங்கவேண்டும். உங்கள் அணைப்பில் அப்படியே சுருண்டு படுக்கவேண்டும். ஆணும் பெண்ணுக்குமான உடல் உறவு மிக மிக அவசியம்தான். ஆனால் அதையும் விட, ஆசைப்பட்டவனோடு வாழ்வது அதை விட அவசியம். நீங்கள் எப்படியாக இருந்தாலும் உங்கள் கூட வாழ்ந்திருப்பேன் ஏற்றமாதிபன்…” எந்தவிதத் தயக்கமுமின்றி அவள் சொன்னதில் அவன் மேலும் அதிர்ந்துதான் போனான்.

இது என்னவிதமான காதல்? காதல் என்றால் காமமும் சேர்ந்ததுதானே. ஆனால் இவள் என்னவென்றால் அதையும் தாண்டிப் புதிதாய் ஒரு காவியம் சொல்கிறாளே. நம்ப முடியாமல் பார்த்தவன்,

“அப்படியென்றால், என்னைத் திருமணம் செய் என்று கேட்டபோது எதற்காக மறுத்தாய்? ஏன் என்னை வெறுப்பாகப் பார்த்தாய்?” என்று இவன் கேட்க, அழகாய் புன்னகைத்தவள், எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு,

“எனக்குத்தான் நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்கள் என்று தெரியாதே. இன்னொருத்தியை நீங்கள் விரும்பும்போது, நான் எப்படி குறுக்கே நுழைய முடியும்…? இப்போது நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்கள் என்று உறுதியான பின்பு உங்களை எப்படி விட்டுக் கொடுப்பேன்?” என்றவள்,  அவனை ஆவலுடன் ஏறிட்டு,

“சொல்லுங்களேன்… அந்த ஜாஸ்மினைத் தவிர வேறு யாரையும் முத்தமிட்டீர்களா?” என மீண்டும் கேட்டாள்.

அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்ட ஆதிபன்,

“இல்லைடா… அன்று ஜாஸ்மினை முத்தமிட்டது கூட உன்னை விரட்டத்தான். அதுவும் மேலோட்டமாக உதட்டின் ஓரம் கொடுத்த முத்தம் அது. அது தவிர எந்தப் பெண்ணையும் நான் முத்தமிட்டதில்லை. என்னுடைய எதிர்பார்ப்பும் தேவையும் வேறாக இருந்ததால் இதில் எனக்குப் பெரிதாக ஆர்வம் வந்ததில்லை. நாட்டமும் வந்ததில்லை. முதன்முறையாக உன்னிடம்தான் என்னையே உணர்ந்தேன். உன்னைக் கண்ட நொடி, எனக்குள் புதிய மாற்றம். எனக்கும் அப்படியான ஆசை உண்டு என்று உணர்ந்த நொடி அதுதான் என்று நினைக்கிறேன். அந்தக் குட்டி உதடுகளை முத்தமிட வேண்டும், உன்னைக் கட்டி அணைத்து உனக்குள் தொலையவேண்டும் என்று ஆசைப்பட்டதெல்லாம் உன்னிடம் மட்டும்தான்!” என்ற அவன் சொல்ல, அவளுடைய முகம் பளிச்சென்று மின்னியது.

தன்னவன் கிடைக்கப்பெற முடியாத அற்புத வைரம்  அப்படியே அவனை அணைத்து அவனுள் தொலையும் வெறியே வந்தது. இதை விட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன வேண்டும்?

“ஏற்றன்… ஒருவேளை இப்போது எதுவுமே நடக்காமல் இருந்திருந்தால், நீங்கள் என்னைத் தேடி வந்திருப்பீர்களா? இல்லை இன்னொரு திருமணம் செய்திருப்பீர்களா?” – அவளது அடுத்த கேள்விக்கு மீண்டும் அமைதி நிலவியது. ஆனால் அவளை வருடிய கரங்கள் மட்டும் நிற்கவில்லை.

“கேட்கிறேனே…?” என மென்மையாகத் தூண்டினாள்.

“உன்னைத் தேடி வந்திருக்கவும் மாட்டேன், இன்னொரு திருமணம் செய்திருக்கவும் மாட்டேன். இந்த நாட்டுக்காக என்னை முழுதாக அர்ப்பணித்திருப்பேன்!” என்றான் அவன் உறுதியாக. அதைக் கேட்டுச் சிலிர்த்துப் போனாள் விதரணை. அந்த சிலிர்ப்போடு அவனை இறுக அணைத்துக் கொண்டவள்,

“ஒருவேளை… எனக்கு வேறொருவனைப் பிடித்திருந்து, அவனோடு நான் வாழத் தொடங்கியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

அவள் அழுத்தமாகக் கேட்க, ஆதிபன் பதில் பேசாமல் மௌனமாக அவள் முகத்தையே பார்த்தான். அந்த மௌனம் சில நொடிகள் நீடித்தன. அவன் உடலின் சூட்டை உணர்ந்து கொண்ட விதரணைக்கு, அந்தக் கேள்வி அவனுக்குப் பிடிக்கவில்லை என்று புரியவே செய்தது. ஆனாலும் அவன் வாயால் அறியவேண்டும் என்கிற வேகம் எழ, அவனையே பார்த்திருக்க, அவளை உற்றுப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

“நீ நன்றாக இருக்கிறாயா என்பதை மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துக்கொண்டே இருந்திருப்பேன். ஒருவேளை… அவன் உனக்கு ஏதேனும் ஒரு சிறு அநீதி இழைப்பது தெரிந்தால் கூட, அவனைக் கொன்றுவிட்டு உன்னை என்னோடு அழைத்துச் சென்றிருப்பேன்!”

அவன் சொன்ன விதத்தில் ஒரு கணம் நடுங்கித்தான் போனாள் விதரணை. அவன் சொன்ன விதத்தில் இதயம் சில்லிட்டது மட்டும் நிஜயம்.   அதுவும் ‘அவனைக் கொன்றுவிடுவேன்’ என்று அவன் சொல்லும் போது அவன் கண்களில் தெரிந்த தீவிரம், சீற்றம்… உறுதி.. அதைக் கண்டு ஆடித்தான் போனாள்.

கூடவே அவன் தன் மீது வைத்துள்ள காதலின் அளவும் புரிய, உள்ளே பேரானந்தத்தின் ஊற்று அவளுக்குள்.  அவன் விழிகளை மாறி மாறிப் பார்த்தவள்,

“ஏற்றன்…”

“ம்…”

“ஐ லவ் யு…” என்றாள் அழுத்தமாக. அதைக் கேட்டு புன்னகைத்தவன்,

“ம்.. ஐ நோ… “ என்றான் அவள் கூந்தலை வருடிக் கொடுத்தவாறு.

அந்த அமைதியோடு நிம்மதியோடு மேலும் அவனுக்குள் சுருண்டவளுக்கு  ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவளது ஆத்மா இன்றுதான் அமைதியடைந்து முழு நிறைவைப் பெற்றது போல உணர்ந்தாள் விதரணை.

சற்று நேரம் அங்கு மின்னிய விளக்கையே பார்த்திருந்தவள்,  தன் தாய் தந்தையைத் தற்காலிகமாக மறந்து விட்டு அடுத்த ஒரு சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட, ஆதிபனும் அவளை அணைத்தவாறே, தன்னை மறந்து அங்கேயே கண்ணயர்ந்து போனான்.

What’s your Reaction?
+1
22
+1
3
+1
6
+1
1
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!