விமான நிலையத்தில், அத்தனை சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு மூவரும் வெளியே வர, அங்கே விக்ரமசூரியர் இவர்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்.
தன் மகன் வருவதைக் கண்டதும் அவருடைய முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி, ஆவலுடன் தன் பேரன் எங்கே என்று விழிகளால் தேட, அங்கே வரோதயன் கரத்தைப் பற்றியவாறு வந்து கொண்டிருந்தாள், மதிமை.
மனமோ அச்சத்தில் திக் திக் என்று அடித்தது.
‘அறியாத ஊர், புதிய மனிதர்கள், தெரியாத வாழ்க்கை. எப்படி இவை எல்லாவற்றையும் சமாளிக்கப் போகிறோம்? அதுவும் ஆதிபனின் தந்தை என்ன சொல்வாரோ தெரியவில்லையே…? என்கிற பயம் அவளை ஆட்டிப் படைக்க முடிந்த வரை ஆதிபனின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொள்ள முயன்றாள்’ மதிமை. எத்தனை நேரம்தான் அவன் பின்னால் மறைந்திருப்பது. ஒரு கட்டத்தில், கிட்டத்தட்ட அறுபது வயதைத் தொட்டுவிட்ட ஒருவரை ஆதிபன் விரைந்து சென்று அணைக்க, இப்போது, திரை விலகியதும் தெரியும் சிற்பம் போல, மதிமையும், வரோதயனும் வெளிச்சத்திற்கு வந்தனர்.
அதுவரை மகனை இறுக அணைத்திருந்த விக்கிரமசூரியரோ, அவனை விட்டுவிட்டு, வாய் கொள்ளாச் சிரிப்புடன் மதிமையை நெருங்கி, புன்னகைத்து விட்டு, வரோதயனை நோக்கிக் கரங்களை விரித்து,
“அடடே…! என் வரோதயக் குட்டி? வாடாக் கண்ணா…! உன் அப்பப்பாவிடம் வா…!” என்றவர், ஆசையும், ஆவலுமாக அவள் இடையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கிட்டத்தட்டப் பறித்து மார்போடு இறுக அணைத்துக் கொண்டார். அவருடைய விழிகளோ, பேரனைக் கண்ட பரவசத்தைத் தாங்க முடியாது கண்ணீரைச் சொரிந்தன.
வரோதயனோ, கரடியிடம் சிக்குப்பட்ட மான் குட்டியாகத் திமிறியவாறு, மதிமையை நோக்கிக் கரத்தை விரித்து, “அம்மா….” என்று அழத் தொடங்க, புதியவரோ, அவளிடம் குழந்தையைக் கொடுக்கும் எண்ணமில்லாதவராகத் திமிறிய பேரனை மாங்கு மாங்கென்று முத்தமிட்டு அபிஷேகம் செய்ய, குழந்தைதான் திணறிப் போனான்.
இத்தகைய முரட்டுத் தனமான அன்பிற்குப் பழக்கப்படாதவன் என்பதால், அந்தப் பிஞ்சு உருவம் அச்சம் கொண்டதாய், மீண்டும் தாயை நோக்கிப் பாய முயன்றவாறு,
“அம்மா….!” என்று வீரிட்டு அழத் தொடங்க, மதிமைக்கு அடிவயிறு வலித்தது. தன் மகனின் அலறல் கண்டு இதயம் விண்டு போகக் கண்கள் கலங்க, என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தாள்.
‘அணைத்திருப்பது குழந்தையின் தந்தையின் தந்தை. இப்படி முத்தமிடாதே, அணைக்காதே என்று சொல்ல அவளுக்கு ஏது உரிமை?’ கையறு நிலையில், பரிதாபமாக ஆதிபனை ஏறிட, அவனோ இந்தக் காட்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
எப்படிக் குழந்தையைப் பெரியவரிடமிருந்து பெற்றுக்கொள்வது என்று தெரியாமல் திணற, இப்போது, விக்கிரம சூரியரே தானாகக் குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டுக் கலங்கிய கண்களை அழுந்தத் துடைத்துவிட்டு,
“வாம்மா… என் பேரனை இப்போதாவது கண்ணில் காட்டினாயே…!” என்று சொன்னாலும் அதில் தெரிந்த கோபத்தை உணர்ந்து கொண்டவளாக, பாய்ந்து வந்த குழந்தையை மார்போடு அணைத்தவாறே தலை குனிய,
“அதை விடு…! எப்படி இருக்கிறாய்…? பயணங்கள் சிக்கலில்லாமல் இருந்ததுதானே…!” என்று சம்பிரதாயக் கேள்விகளைக் கேட்க.
“நன்றாக இருக்கிறேன் விக்கிரமசூரியர்… பயணங்களும் பிரச்சனையில்லாமல் இருந்தது” என்றவாறு அழுத குழந்தையை சமாதானப் படுத்த முயல, விக்ரமசூரியரின் உடல் ஒரு கணம் இறுகியது.
விழிகள் இடுங்கத் திரும்பி, ஆதிபனை ஆத்திரத்தோடு பார்த்தார். அவனும் ஒரு வித அதிர்ச்சியோடு தான் மதிமையைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மதிமையோ, அவர்கள் தன்னை ஒரு மாதிரி பார்ப்பது பற்றி அறியாது, குழந்தையின் கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“சரிடா கண்ணா…! உன் கிரான்பா தானே தூக்கினார்… அதற்கு இப்படி அழலாமா?” என்று ஆங்கிலத்தில் சமாதானப் படுத்திவிட்டு நிமிர, இரண்டு ஆண்களும் இவளைக் கடுமையாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அவர்களின் முறைப்பைக் கண்டு திகைத்தவள்,
“நான்… ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?” என்று திணறியவாறு ஆதிபனிடம் கேட்க, அவனோ தன் தந்தையைப் பார்த்து,
“சாரிபா…! இவளுக்கு இந்த முறை தலைகள் இன்னும் தெரியாது… சொல்லிக் கொடுக்கிறேன்…” என்றதும்,
“அதைச் செய்து தொலை…! என்னை இப்படி அழைத்தது பரவாயில்லை. இதுவே மற்றவர்களை அழைத்தால்… மரியாதை தெரியாதவள் என்று முத்திரை குத்திவிடுவார்கள். தவிர, நான் ஒன்றும் கிரான்பா இல்லை. அப்பப்பா… அதையும் சொல்லிக் கொடு. வீட்டிற்கு உன் அம்மம்மா வந்திருக்கிறார்கள். அவர்கள் பூட்டி முறை வேண்டும்… அங்கே வந்து கிரான்மா, கிரேட் கிரான்மா என்று உளறினால், பிறகு அவரின் உருத்திரதாண்டவத்தைப் பார்க்கவேண்டி வரும்.” என்று கடுப்புடன் சொல்ல, சட்டென்று முகம் மலர்ந்தவன்,
“அம்மம்மா வந்திருக்கிறார்களா அப்பா…?” என்றான் ஆவலாக.
“பின்னே… உனக்குத் திருமணம் நடந்த செய்தியை அறிந்த பிறகும் வராமல் இருப்பார்களா? வந்து இரண்டு கிழமைகள் ஆகின்றன. இரண்டு நாள் கழித்து மீண்டும் சிங்கப்பூர் போய்விடுவார்கள்…” என்றதும்,
“இன்னும் இரண்டு நாட்கள் தான் இருப்பார்களா? அப்படிப் போக வேண்டிய அவசியம் என்னப்பா…? இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டுப் போகலாமே…?” ஆவலுடன் கேட்க,
“அவர்கள் சும்மாவா… மருந்து மாத்திரை என்று வாழ்கிறவர்கள். அதிக நாட்கள் வெளியில் தங்க முடியாதே…!” என்று சலிப்புடன் சொல்லிவிட்டுப் பின் மதிமையைப் பார்த்து முறைத்து,
“உன் மனைவியிடம் சொல்லி வை…! அங்கே வந்து இந்த வெள்ளக்காரப் புத்தியைக் காட்ட வேண்டாம் என்று… விக்ரமசூரியராம் விக்ரமசூரியர்… ஏதோ அவளே பெற்றுப் பெயர் வைத்தது போல…” என்று கோபத்துடன் எகிறிவிட்டு முன்னேறிச் செல்ல, இவனோ மதிமையை நெருங்கி,
“அப்பாவை, எப்படி அழைத்தாய்?” என்றான் ஆதிபன்.
“ஏன்…? தப்பாக அழைத்து விட்டேனா…? ஆனால், அதுதானே அவர் பெயர்…” என்றாள் இவள் புரியாத குழப்பத்தோடு.
“மண்ணாங்கட்டி…! இது கனடா என்று நினைத்தாயா, உறவுகளைப் பெயர் சொல்லி அழைக்க? ஈழம்.. அந்த அந்த உறவுகளின் முறை சொல்லிப் பேச வேண்டும்.”
“ஓ… அப்படியா…? சாரி…! எனக்கு அப்படி அழைக்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை. யாரும் இது பற்றி சொன்னதுமில்லை. உங்கள் அப்பாவை நான் எப்படிச் சொல்ல? அப்பா என்று கூப்பிடவா?” என்று அவனிடமே கேட்க, அவனோ,
“அப்பா என்று அழைத்தால், நீ எனக்குச் சகோதரி முறையாகிவிட மாட்டாயா…?”
“உங்களுக்குத்தான் அவர் அப்பா. நான் அப்பா என்றதும் உறவு முறை மாறிவிடுமா?” என்று எரிச்சலுடன் கேட்டவள், அப்படியானால் அவரை நான் எப்படித்தான் அழைப்பது?” என்றாள் மதிமை.
“அவர் உனக்கு மாமா…” என்றான் ஆதிபன் இழுத்து வைத்த பொறுமையோடு.
“ஓ… மாமா.. ம்.. நாட் பாட்… அழைக்கச் சுலபம்தான்…’’ என்றதும், தனக்குத் தெரிந்த உறவு முறைகளை மதிமைக்கு முடிந்த வரை தெளிவாகக் கூற, சரி சரி என்று தலையை ஆட்டியவாறு கேட்டுக் கொண்டு வந்தாள், மதிமை.
கடைசியில் அவர்களின் வாகனம், பிரமாண்டமான மாடமாளிகையின் முன்னே வந்து நின்றது. ஆதிபனின் வீடு இத்தனை பெரிதா என்று வியப்பு மாறாமலே வண்டியை விட்டு இறங்க, ஆதிபனோ, வாகனத்தை விட்டு வெளியே வந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்க, தன் மகனை நெருங்கிய விக்ரமசூரியர், கரங்களை விரித்து,
“மகன்… குழந்தையை என்னிடம் கொடு…” என்றார் ஆவலாக. அவர் கரங்களை விரித்ததுதான் தாமதம், குழந்தை சட்டென்று தாயை நோக்கிப் பாய்ந்தது.
தன்னிடம் பாய்ந்து வந்த மகனை அணைத்துத் தூக்கியவாறு,
“கண்ணா… அப்பப்பா… அழைக்கிறார் இல்லையா…? அவர் அழைத்தால் போகவேண்டும் கண்ணா…! உனக்காக நிறைய விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார். நீ போனால்தான் கொடுப்பார்… இல்லை என்றால், வேறு யாருக்காவது கொடுத்து விடுவார்…” என்று ஆங்கிலத்தில் மிரட்ட, குழந்தை சட்டென்று நிமிர்ந்து அப்பப்பா என்னும் கரடியைச் சந்தேகத்துடன் பார்த்தது.
‘நிஜமாகவே கொடுப்பாரா, இல்லை பொய் சொல்கிறாரா?’ என்று தன் பாணியில் பார்த்தது. பின் ஏதோ உந்தித் தள்ள, அவரை நோக்கிச் சரிய,
வாரி அணைத்துக் கொண்டார், பெரியவர். உடனே தன் பேரனின் உச்சந்தலையில் அழுத்தமாக உதடுகளைப் பதித்தவர், “உனக்கு என்ன வேண்டும் சொல் கண்ணா…! அத்தனையும் வாங்கித் தருகிறேன்.” என்று விட்டுக் கறாராய் ஆதிபனையும் மதிமையையும் பார்த்து,
“இனி இவன் கூடத்தான் என் நேரத்தைச் செலவிடப் போகிறேன். இவனுடனான நான்கு வருடங்களைத் தொலைத்து விட்டேன். தொலைத்த வருடங்களை நிறைவு செய்ய வேண்டும். இடையில் வந்து என் குழந்தை என்று யாராவது வந்தீர்கள்… அதற்குப் பிறகு வேறு ஒரு விக்ரமசூரியரைப் பார்ப்பீர்கள்…?” என்று மிரட்டிவிட்டுக் குழந்தையின் தலையை வார, மதிமையோ அவர் உண்மையாகவே மிரட்டுகிறார் என்கிற அச்சத்தில் ஆதிபனை நிமிர்ந்து பார்த்தாள். அவனோ தந்தையின் அந்த மிரட்டலை ரசித்தவாறு நின்றிருக்க, அவனை நோக்கிச் சரிந்த மதிமை.
“அவர் நிஜமாகவே மிரட்டுகிறாரா… இல்லை சும்மாவா?” என்றாள் சந்தேகமாக. இப்போது மதிமையைப் பார்த்துச் சிரித்தவன்,
“நிஜமாகத்தான் மிரட்டுகிறார்… ஆனால் செல்லமாக…” என்றான் தெளிவாய் குழப்பியவாறு. அவன் சொன்னது புரியவில்லை, ஆனாலும் புரிந்த மாதிரி தலையாட்டியவள்,
“அப்படி என்றால்…?” என்றாள் அடுத்து. இப்போது நன்றாகவே சிரித்தவன்,
“இனி வரோதயன் நமக்குக் கிடையாது… அவருக்குத்தான்…! மனமிரங்கி அவராகப் பேரனைக் கொடுத்தால்தான் உண்டு.” என்றதும், ஐயோ என்பது போலப் பயத்தோடு பெரியவரைப் பார்த்தாள் மதிமை.
அவர் வரோதயனை வைத்திருந்த விதத்தைப் பார்க்கும்போதே இவளுக்கு வயிற்றைக் கலக்கியது. அடுத்த வாட்டி அவனைப் பார்க்கும்போது, கை வேறு கால் வேறாகத்தான் அவர்களிடம் வருவான் போல அப்படிக் கசக்கிப் பிழிந்துகொண்டிருந்தார், அவர் பேரனை.
ஆனால், அவன் அவருடைய வாரிசு. உரிமையாய் பந்தாடும்போது அதை எப்படித் தடுப்பாள்? வருத்தத்தோடு தன் மகனைப் பார்த்திருக்க,
“விக்கிரமா… குழந்தையை தாய் கையில் கொடு…” என்கிற கம்பீரக் குரல் வாசல் பக்கத்திலிருந்து வந்தது.
அத்தனை பேரும் வாசல் பக்கம் திரும்பிப் பார்க்க, அங்கே சக்கர நாற்காலியில் வயதுபோன ஒருவர் அமர்ந்திருக்க, அவரைத் தள்ளிக்கொண்டு ஒரு பெண் பின்னால் வந்தாள். அருகே நாற்பது வயது மதிக்கத் தக்க பெண் கையில் ஆரத்தித் தட்டுடன் நின்றிருந்தார். அந்த முதியவரின் கட்டளைக் குரலுக்கு அடி பணிந்தவராகச் சட்டென்று தன் கரத்தில் நெளிந்து கொண்டிருந்த பேரனை மதிமையிடம் நீட்டிவிட்டு, தள்ளி நின்று கொண்டார், விக்கிரமசூரியர்.
தமக்கு ஆரத்தி எடுக்கப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட ஆதிபன்,
“இதெல்லாம் எதற்கு அம்மம்மா?” என்று எரிச்சலுடன் கேட்க, அந்த வயது போனவரோ,
“இதெல்லாம் எதற்கா? இது சம்பிரதாயம். எத்தனை பேர் கண் பட்டதோ?” என்றுவிட்டுத் திரும்பி,
“மங்கம்மா… ஆரத்தியை எடு…” என்று கூறியதும், அந்த மங்கம்மா வாய் முழுக்கப் பல்லாக, இருவரையும் நெருங்கி ஆரத்தியை சுத்தத் தொடங்கினார்.
“ப்ச்… அம்மம்மாதான் சொன்னார்கள் என்றால், நீங்களும் ஆரத்தி எடுத்துக்கொண்டு வந்து விடுவீர்களா? இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரியும்தானே…!” என்று இவன் பொறுமை இழந்து சொல்ல,
“உனக்கு நம்பிக்கை இல்லை என்றால், மற்றவர்களின் நம்பிக்கை தப்பாகிவிடுமா?” என்று பட்டென்று கேட்டார் சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த அவனுடைய அம்மம்மா ராஜேஷ்வரி.
இவனோ பதில் சொல்ல முடியாமல் சலிப்புடன், ஆரத்தி சுற்றிய மங்கம்மாவைப் பார்க்க, அவரோ,
“என்ன ராசா அப்படிச் சொல்லக் கூடாது… இது நம்முடைய பாரம்பரியம். அதுவும் அழகான அரசிபோல ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வருகிறாய். அப்படியே சிவனும் பார்வதியும் போல எத்தனை அம்சமாக இருக்கிறீர்கள். எத்தனை பேரின் கண் பட்டிருக்கும்…!” என்றவாறு ஆரத்தி சுற்ற, அவனோ அந்தப் பாட்டியைக் கிண்டலாகப் பார்த்து,
“ஏதோ சிவனையும் பார்வதியையும் நேராகப் பார்த்ததுபோலப் பேசுகிறீர்களே.” என்று கூற, புன்னகைத்த அந்த மங்கம்மா,
“அந்த சிவனையும் பார்வதியையும் பார்க்காவிட்டால் என்ன, அதுதான் உங்கள் இருவரையும் பார்த்து விட்டேனே…” என்றவர், கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரைத் துடைத்து விட்டு மதிமையை ஏறிட்டு,
“தாயீ… சின்னையா கைக்குழந்தையாக இருந்த காலத்தில் இங்கே வேலைக்கு வந்தேன். என் கையில்தான் வளர்ந்தார். அதனால் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொள்வேன். தப்பாக நினைக்காதே…!” என்றவர் ஆசையோடு ஆதிபனைப் பார்த்துவிட்டு ஆரத்தித் தட்டுடன் வெளியே செல்ல, சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் கனிவாகப் பார்த்துவிட்டு மதிமையிடம்,
“இவர்கள் மங்கம்மா…! மலையத் தமிழர். இந்த வீட்டிற்கு வேலைக்கு வந்தவர்களாக இருந்தாலும், இதுவரை, நாங்கள் அப்படி நினைத்ததில்லை. என் அம்மாவின் சகோதரி போலத்தான் நினைத்துக் கொள்வேன். என் மீது அப்படி ஒரு பாசம். எப்போதும் என்னை இடுப்பிலேயே தூக்கி வைத்திருப்பாள். அப்பாவும் அம்மாவும் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்களாம். சொல்லப்போனால், என் ஆறாவது வயது வரை அவர்கள் இடுப்பில் தொங்கியது இன்றும் நினைவில் இருக்கிறது. இப்போது இவர்களின் வயது ஐம்பதாவது இருக்கும்.திருமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை. பக்கத்தில்தான் இருக்கிறார்கள்.” என்று சிறு புன்னகையுடன் சொன்னவன், திரும்பி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவரை நோக்கிச் சென்று அவரை அணைத்து தலையில் முத்தமிட,
“ஆமாம், இதில் ஒன்றும் குறைச்சலில்லை…” என்றார் முகத்தைச் சுளுக்கியவாறு. இவனோ அவரைக் குனிந்து பார்த்து,
“இப்போது இத்தனை கோபப்படும் அளவுக்கு என்ன நடந்தது?” என்று சமாதானப் படுத்த முயல, அவனை முறைத்த பாட்டி, ஒற்றைக் கரம் கொண்டு அவனுடைய தோளில் நல்ல ஒரு அடி போட்டு,
“படவா… என்ன நடந்தது என்றா கேட்கிறாய்…? உன்னைப் படிக்க அனுப்பி வைத்தோமா, இல்லை காதலில் கட்டுண்டு கிடக்க அனுப்பி வைத்தோமா…! இப்படி ஒரு நம்பிக்கைத் துரோகத்தைச் செய்து விட்டு வந்திருக்கிறாயே…! உனக்கு உறுத்தவில்லை…?” என்றவர் குழந்தையைக் கையில் வைத்தவாறு திருதிரு என்று விழித்துக் கொண்டிருந்த மதிமையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு,
“இவள் யார்…? என்ன குலம், கோத்திரம் ஏதாவது உனக்குத் தெரியுமா? ஒருத்தியோடு வாழ வெறும் அழகு போதுமா உனக்கு…? கொஞ்சமாவது எங்களைப் பற்றி நீ யோசிக்கவில்லையே..?.” என்று அந்தக் காலத்து மனுஷியாகக் குரலை உயர்த்த, ஆதிபனுக்குப் பொறுமையை இழுத்துப் பிடிக்கச் சற்று நேரம் எடுத்தது.
ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமாதானப் படுத்தியவனாக,
“அம்மம்மா… இந்த குலம் கோத்திரம் அந்தஸ்து எல்லாம் உங்கள் காலத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். கணினியில் பார்த்துக் காதலித்துத் திருமணம் முடிக்கிற காலம் இது. இந்தக் காலத்தில் இதெல்லாம் தேவையா…?” என்றவன் மதிமையை ஏறிட்டு,
“இங்கே வா…” என்றான். இவளோ தயக்கமாக அவனிடம் செல்ல,
“நான் சொன்னேனே…! என்னுடைய அம்மாவின் தாய் இவர்கள் தான்…” என்றதும், ஓ என்றவள், சட்டென்று குனிந்து அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்க, அதுவரை இறுகியிருந்த பாட்டி சட்டென்று தளர்ந்தார்.
அதைக் கண்ட ஆதிபனின் விழிகள் மெச்சுதலாய் மதிமையைப் பார்க்க, மதிமையும் விழிகளால், சரியாக செய்தேனா என்று கேட்டாள். அவனோ தன் அம்மம்மாவுக்குத் தெரியாத வகையில் கட்டைவிரலைத் தூக்கிக் காட்டி, அவள் மனதில் பாலை வார்த்தான்.
பின்னே வாகனத்தில் வரும்போது என்ன என்ன செய்யவேண்டும் என்று விம் போட்டு விளக்கியவாறு அல்லவா வந்தான். அவன் சொன்னது போலவே அம்மம்மாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டதும், சட்டென்று இளகிப் போனார், ராஜேஷ்வரி. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“சரி சரி… வாசலில் நின்றது போதும், உள்ளே செல்லுங்கள்…” என்று உத்தரவு போலச் சொல்ல, திரும்பி மதிமையைப் பார்த்த ஆதிபன், ‘அடுத்த பேச்சு வாங்க முதல் தப்பிவிடலாம், உள்ளே வா!’ என்பது போலக் கண்ணைக் காட்டிவிட்டு உள்ளே நடக்கத் தொடங்க, மதிமையும் விட்டால் போதும் என்பது போல அவன் பின்னால் சென்றாள்.
(21) ஆதிபன் மனம் அமைதி அஅடையும் வரைக்கும், இரவின் குளிரில் சற்று தூரம் நடந்து சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய…
(19) அதைக் கேட்டதும் பளிச் என்று மலர்ந்தது ஆதிபனின் முகம். சட்டென்று குவளையோடு இருந்த அவளுடைய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டவன்,…
(17) தந்தை கேட்டதற்கமைய, மகனின் படம் ஒன்றை அனுப்பி வைத்த ஆதிபன், கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். ‘ஏனோ தந்தையிடம்…
(16) மதிமையின் இருப்பிடத்திற்கு உள் வண்டி நுழைந்ததும், அதை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வெளியே வந்த ஆதிபன், மதிமை…
(15) மறுநாள் காலை பத்து மணியளவில் விழிகளைத் திறந்த மதிமைக்குக் காய்ச்சல் சிறிது விட்டிருந்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவள்,…
(14) திடீர் என்று யாரோ உலுப்புவது போலத் தோன்ற சடார் என்று தன் விழிகளைத் திறந்தான், ஆதிபன். ஒரு கணம்…