Categories: Ongoing Novel

உயிர் நீ மெய் நான்…! – 19/20

(19)

அதைக் கேட்டதும் பளிச் என்று மலர்ந்தது ஆதிபனின் முகம். சட்டென்று குவளையோடு இருந்த அவளுடைய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டவன்,

“நன்றி மதிமை… மிக மிக நன்றி. நான் உனக்குச் சத்தியம் செய்கிறேன், எந்த சந்தர்ப்பத்திலும், நீ இப்போது எடுத்த முடிவு தவறு என்று சிந்திக்கும் வகையில் வைக்க மாட்டேன்.” என்று உறுதி கூற,

அவன் கரம் பட்டதும் உள்ளே அவஸ்தை ஊற்றெடுக்க, அவசரமாகத் தன் கரத்தை இழுத்தெடுத்தாள், மதிமை.

அதைக் கண்டும் காணாதவனுமாக,

“எந்தச் சந்தர்ப்பத்திலும், வரோதயன், அணு ரேகாவுக்குப் பிறந்தவன் என்பது தெரியக் கூடாது மதிமை…! அவன் உனக்குப் பிறந்தவன். உனக்கும் எனக்கும் பிறந்தவன், சரியா…?” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, மதிமையும் சரி என்பது போலத் தலையை அசைத்தாள்.

“அங்கே போனதும் நம்மைப் பற்றி நிறையத் துருவித் துருவி விசாரிப்பார்கள். யார் என்ன கேட்டாலும் இதுதான் நம் கதை. இங்கே பல்கலைக் கழகத்தில் படித்தபோது இருவரும் காதலித்தோம். மனக்கசப்பில் பிரிந்துவிட்டோம். நமக்குக் குழந்தை இருப்பதை அறிந்ததும், உன்னை மணந்து அழைத்து வருகிறேன்?” என்று கூற, அவளோ அவனை வியப்புடன் பார்த்து,

“பொய்.. ” என்றாள் அதிர்வாய்.

“பொய்யில்லை மதிமை… மெய். என்ன அணுரேகாவின் இடத்தில் நீ இருக்கிறாய். அவ்வளவும் தான். தவிர, பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனில்…  இது நமக்காகவும், வரோதயனுக்காகவும் செய்கிற ஆள்மாறாட்டம்…” என்றவனை, தலை சரித்துப் பார்த்தவள்,

“மில்ஸ் அன்ட் பூன்ஸ் கதை நிறையப் படிப்பீர்களோ?” என்றாள் கிண்டலாய். இவனோ புரியாமல் அவளை ஏறிட,

“ப்ச்… அதில்தான் இப்படி நிறையக் கதைகள் வரும்… கடைசியாக நாயகனும் நாயகியும் சேருவார்கள்…” என்றவள் பின் உதட்டைப் பிதுக்கியவாறு,

“இதில் சின்ன தவறு இருக்கிறதே, ஆதிபன்..” என்றாள் மதிமை. இவனோ பிதுக்கிய உதட்டில் தன்னைத் தொலைத்தவனாக, உமிழ் நீர் கூட்டி விழுங்கியவாறு,

“என்ன?” என்றான். விழிகள் மட்டும் அந்த உதடுகளை விட்டு விலகமாட்டேன் என்று அடம் பிடித்தன.

“நீங்கள் படிக்கும் காலம் என்றால், ஐந்தாறு  வருடங்களுக்கு முன்புதானே. அப்போது எனக்கு பதினைந்து பதினாறு வயதுதான் இருக்கும்… என் வயதை அறிந்தால், நீங்கள் சொல்லும் கதையை நம்புவார்களா?” என்று கிண்டலுடன் கேட்க, அதுதானே என்பது போல அவளைப் பார்த்தான் ஆதிபன். பின் தலையை உலுப்பி,

“உன்னுடைய நிஜ வயது யாருக்குத் தெரியப் போகிறது. இப்போது உனக்கு எத்தனை வயது? இருபத்தொன்றா? அதனால் என்ன, உன் வயதை இருபத்தி நான்காக மாற்றிவிட்டால் போயிற்று. அத்தனை பேரும் உன் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தைக்  கொண்டு வா என்று கேட்கவா போகிறார்கள்? யாருக்கு உன் வயதைப் பற்றிய நினைப்பு வரப் போகிறது?” என்று அலட்சியமாகக் கூற, தன் தோள்களைக் குலுக்கியவள்,

“நம்பினால் சரிதான்…” என்றாள்.

“நம்புவார்கள்… நம்பவில்லை என்றால், நம்ப வைத்து விட வேண்டியதுதான்…” என்று இலகுவாகச் சொன்னவன், அவளை ஆர்வத்துடன் பார்த்து,

“மதிமை…” என்றான் மென்மையாக. அந்தக் குரலில் உள்ளம் ஒரு முறை தடம் புரண்டு எழ, அவனை நிமிர்ந்து பார்த்தாள். இப்போது எழுந்தவன், குனிந்து  அவளுடைய வலது கரத்தைத் தன் இடக்கரத்தால் பற்றியவன், அவளை மெதுவாக இழுக்க, இப்போது இருக்கையை விட்டு எழுந்தாள், மதிமை.

அவளைத் தன்னை நோக்கி மெதுவாக இழுக்க, ஓரடி முன்னால் வைத்து ஆதிபனை நெருங்கி நின்றாள், மதிமை. அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்தவன்,

“நன்றி மதிமை… நீ செய்யும் இந்தக் காரியம், எத்தனை பெரிய சிக்கலிலிருந்த என்னை மீட்கப் போகிறது என்று உனக்குத் தெரியாது. நன்றி…?” என்றதும், மெதுவாகத் தலையை மேலும் கீழும் அசைத்தவள்,

“இதில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது. இந்தத் திருமணத்தால், எனக்கும் அதிக பயன் உண்டு…” என்று மென்மையாகக் கூற, இப்போது அவளை நெருங்கியவன், அவளுடைய முகத்தைச் சட்டென்று தன் உள்ளங்கைகளால் பற்றிக் கொள்ள, வியப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதிமை.

அவனோ அவளை ஒரு வித பரவசத்துடன் பார்த்துவிட்டுக் குனிந்து அவளுடைய நெற்றியில் தன் அழுத்தமான உதடுகளைப் பதித்து விலக, மதிமைக்கோ உலகம் தட்டாமாலையாகச் சுழன்றது.

அவசரமாக இரத்த ஓட்டம் புத்தியில் சென்று அடிக்க, கால்களோ வலுவிழந்தவை போல நடுங்கின. அன்று அவன் உதட்டில் கொடுத்த முத்தத்தை விட, இந்த முத்தத்தின் வீரியம் அதிகமாக இருப்பது போலத் தோன்றியது, மதிமைக்கு.

இப்போது அவளை விட்டு விலகியவன்,  அடுத்த கணம், வீட்டை நோக்கி வேகமாக உள்ளே சென்றான்.

அன்று வேலையிலிருந்து வந்த சபேசனுக்குச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் மயங்கி விழாத குறை. நம்பாமல் பத்து முறை நிஜமா நிஜமா என்று கேட்டு விட்டான்.

நண்பனின் துணையுடன் மறுநாளே சட்டப் பூர்வமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். அன்றைய நாள் அதோடு முடிந்தது.

இருவரும் சட்ட ரீதியாக கையெழுத்துப் போட்டுக் கணவன் மனைவி ஆனாலும் கூட,  உள்ளே மணந்ததற்கான உணர்வு தோன்றவேயில்லை. அவசர அவசரமாக எல்லாம் முடிந்துவிட்டிருந்தது.

வேறு எதைப் பற்றி யோசிக்கவும் இருவருக்கும் தோன்றவில்லை.

மறுநாள் மதிமையின் கடவுச்சீட்டுப் பெறவேண்டி அன்றைய தினமும் கடந்து சென்றது. அவளுடைய கடவுச் சீட்டு வர, ஒரு கிழமை எடுக்கும் என்கிற நிலையில், வரோதயனின் கடவுச் சீட்டு வந்து சேர்ந்திருந்தது.

இதில் ஈழம் போவதால், அத்தியாவசிய பொருட்கள் மதிமைக்கு வாங்க வேண்டியிருக்க, இரண்டு நாட்கள் அதில் கடந்து சென்றன.

ஆதிபனும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவனாக, அவளிடம் அதீதமாக எதையும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்க நேரமும் கிடைக்கவில்லை. அந்தளவுக்கு அலைச்சல் இருவருக்குமே. இதில் சபேசனின் வருங்கால மனைவி, சிந்துஜா  தான்,  சபேசனின்   காதில்     எதையோ சொல்ல, மறு நாளே அவனை இழுத்துக் கொண்டு நகைக்கடைக்குப் பயணமானான் சபேசன்.

அங்கேயே ஏற்கெனவே செய்யப்பட்டிருந்த தாலிக்கொடி, தாலி மற்றும், வேண்டிய அத்தியாவசிய நகைகளை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர, வீட்டில் புதிதாக நிறைய ஆட்கள் வந்திருந்தார்கள்.

இவன் குழப்பத்துடன் சபேசனைப் பார்க்க,

“ப்ச்.. உள்ளே வா…! எனக்கு நெருங்கிய உறவினர்களும், சிந்துவுடைய உறவினர்களும் வந்திருக்கிறார்கள்…” என்றவன் அவனை இழுத்துக்கொண்டு உள்ளே போக, அங்கே மதிமை, சபேசனின் உறவுக்காறப் பெண்களுக்கு மத்தியில், பட்டுச் சேலை உடுத்தித் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, மணப்பெண் கோலத்தில் நின்றிருந்தாள்.

அவள் நின்றிருந்த கோலத்தைக் கண்ட ஆதிபனால், இழுத்த மூச்சை வெளியே விடவே முடியவில்லை. விழிகளோ, அவளுடைய எழில் அழகினை மொத்தமாகக் குத்தகைக்கு வாங்கியது போல, அங்கேயே நிலைத்திருந்தன.

மதிமை ஓரளவு அழகிதான். ஆனால், அவளுக்குச் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தில் உலக அழகிகளையே தோற்கடித்துக் கொண்டு இருந்தாள். அழகிகளாகச் சித்தரிக்கப்பட்ட ரம்பா, மேனகா, ஊர்வசி எல்லாம் மண்ணைக் கவ்விக்கொண்டார்கள்.

தன் விழிகளை நம்ப முடியாமல், மீண்டும் மதிமையை ஏறிட, அவளோ சங்கடமும் வெட்கமுமாகத் தலை கவிழ்ந்திருந்தாள்.

மதிமையைக் கண்டதும் சிலையாகிவிட்டிருந்த ஆதிபனைக் கண்ட சிந்துஜாவின் தாய்,

“சரி… சரி… பெண்ணைப் பார்த்தது போதும், உள்ளே போய் வேட்டியைக் கட்டிக்கொண்டு வாருங்கள்…” என்று விரட்ட, அப்போதுதான் சுயம் பெற்றவனாகத் திரும்பி சபேசனைப் பார்த்தான் ஆதிபன்.

சபேசனோ சிந்துஜாவைப் பார்க்க,  உடனே அறையின் உள்ளே சென்றவள்,  திரும்பி வரும் போது, அவளுடைய கரத்தில், ஒரு பை இருந்தது.

அதை வாங்கிய சபேசன், ஆதிபனிடம் நீட்ட,

“என்னடா இதெல்லாம்…?” என்றான் குழப்பமாக.

“சொல்கிறேன்… முதலில் இவற்றை அணிந்து கொண்டு வா…” என்று நண்பனை இழுத்துச் சென்று அறையில் விட, வேறு வழியில்லாமல் அறைக் கதவைச் சாற்றிவிட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்தான். வேட்டி சட்டை இருந்தது. நேர்த்தியாக அதை அணிந்துகொண்டு வெளியே வர,  சபேசன் ஓடிப்போய் நண்பனின் கரத்தைப் பற்றி முன்னறைக்கு அழைத்து வந்தான்.

அவர்களுடைய திருமணத்தின் போது கூட இத்தகைய நேர்த்தியாக இருவருமே ஆடை அணிந்திருக்கவில்லை. ஆதிபன், மதிமையையும், மதிமையை ஆதிபனையும் இமைக்காமல் பார்த்திருக்க,

“சரி சரி பார்த்தது போதும், சபேசா இவர்களை சாமியறைக்கு அழைத்து வா…” என்று சபேசனின் தாயார் உத்தரவிட்டுவிட்டு சாமியறை நோக்கிச் செல்ல, சிந்துஜா மதிமையையும், சபேசன் ஆதிபனையும் அழைத்துக்கொண்டு சாமியறைக்குச் சென்றனர். அங்கே ஒரு தட்டில் மஞ்சள் குங்குமம், பூ, பழம், வெற்றிலை, பாக்கு மாலைகளோடு அன்று அவர்கள் வாங்கி வந்த பொற்றாலி மெட்டியோடு மிக அழகாக அடுக்கப்பட்டிருந்தது.

சபேசனின் தாயார், தன் கணவனை வரும்படி அழைத்து விட்டு, மலர் மாலைகளைக் கரத்தில் எடுத்து,

ஒன்றை மதிமையிடமும், மற்றதை ஆதிபனிடமும் கொடுத்துவிட்டு,

“மதிமை… முதலில் மாலையை நீ போடுமா…” என்று உத்தரவிட, மதிமையோ அவனை நோக்கி மாலையை உயர்த்தினாள். அந்தோ பரிதாபம், அவனுடைய உயரத்திற்கு அவளால் மாலையைப் போடவே முடியவில்லை. அதைக் கண்ட உறவினர்கள் கலகலவென்று சிரிக்க, மதிமைக்கோ முகம் சூடேறிப் போனது. அது கொடுத்த தவிப்பில், தன் கீழ் உதட்டைக் கடித்தவாறு, அவனை மேல் கண்ணால் பார்க்க, அவனோ, மெல்லிய புன்னகையோடு இன்னும் குனியாமல் அவளைத்தான் பார்த்திருந்தான்.

அவளுடைய சிவந்த முகத்தை அவனும், அவனுடைய அந்தக் குறும்புப் புன்னகையை அவளும் தம்மை மறந்து ஒரு கணம் ரசித்து நிற்க, சிந்துஜாவோ,

“மதிமை… மாலையை முதலில் போடுங்கள்… ஆதிபன்.. நீங்கள் கொஞ்சம் தலையைக் குனிந்தால் தான் என்ன?” என்று மதிமைக்காக வக்காலத்து வாங்கி வர,

“அதெல்லாம் முடியாது… என் நண்பன் வணங்கா முடி… யாருக்கு முன்பாகவும் தலை குனிய மாட்டான்…” அவன் முடிக்கவில்லை, மாலையைப் போடாமல் கலங்கி நின்ற மதிமையைக் கண்டு மனம் இரங்கியவனாக, அவளை நோக்கித் தன் தலையைக் குனிந்தான், ஆதிபன்.

அதைக் கண்ட சபேசன், கப் என்று தன் வாயை மூடிவிட்டுத் தன் நண்பனை முறைத்துப் பார்த்து,

“இப்போது தான் உன்னைப் பற்றிப் பெருமையாகச் சொன்னேன், அதற்கிடையில் கவிழ்ந்து விட்டாயேடா…!” என்று சோக கீதம் பாட, அதற்கிடையில், மதிமையின் கழுத்தில் மாலையைப் போட்டிருந்தான், ஆதிபன்.

ஏனோ போட்ட மாலையிலிருந்து தன் கரத்தை விலக்க முடியவில்லை, ஆதிபனால். அப்படியே மாலையோடு அவளை இழுத்து உச்சி முகர பேராவல் பிறந்தது. அதே நேரம், அத்தகைய அன்னியோன்யத்திற்குப் பழக்கப்படாதவனாக நின்றிருக்க, சபேசனின் தாயோ, அடுத்து அந்தப் பொற்றாலியைக் கரத்தில் எடுத்து, அதன் சுரையைக் கவனமாக் கழற்றிக், கண்களில் ஒற்றி, எதையோ மந்திரமாகச் சொல்லிவிட்டுக் கணவனை நோக்க, அவரும் தன் மனைவியின் கரத்திலிருந்த தாலியைச் சேர்ந்து பற்றிக்கொண்டார்.

அதை ஆதிபனை நோக்கி நீட்டியவாறு,

“ஆதிபா… இந்தா… இந்த தாலியை வாங்கி உன் மனைவியின் கழுத்தில் கட்டு…” என்று சபேசனின் தாயார் உத்தரவிட, மறுக்காமல் அதை வாங்கி, மதிமையை ஏறிட்டுப் பார்த்தான். இருவரின் விழிகளும் ஒரு நொடியில் ஒன்றை ஒன்று முத்தமிட்டு நிற்க, அவளுடைய விழிகளில் இருந்து தன் விழிகளை விலக்காமலே, மதிமையை நெருங்கி நின்றான், ஆதிபன்.

மார்பளவே நின்றிருந்த தன்னவளைத் தலை குனிந்து பார்த்தவன், இரண்டு கரங்களாலும் ஏந்தியிருந்த கொடியை அவளுடைய கழுத்தை நோக்கி எடுத்துச் செல்ல, அவன் நெருங்கி நின்ற வேகத்தில் மதிமையின் மதிமுகம், அவனுடைய வெம்மையான பரந்த மார்பை முட்டும் அளவுக்கு நெருங்கி நின்றிருந்தது.

அவனுடைய ஆண்மை பொருந்திய வாசனை, அவளுடைய நாசியை வருடிச் செல்ல, இனம் புரியாத பரவசம் அவளுடைய உள்ளத்தில். கூடவே கழுத்தைச் சுற்றியிருந்த அவனுடைய உருண்டு திரண்ட கரங்களுக்குள் சிக்கியிருந்தவளுக்கு, வாழ்வில் முதன் முறையாக, பாதுகாப்பு நிறைந்த உலகத்தில் நிரந்தரமாகக் குடியேறிய உணர்வு.

கொடியை அவளுடைய கழுத்தைச் சுற்றி எடுத்துச் செல்ல, அவனுடைய விரல்களோ அவளுடைய கழுத்தை மெதுவாக உரசிச் சென்றன. அவனுடைய விரல்கள் பட்ட மாத்திரத்தில் மதிமையின் மயிர்க்கால்கள் அத்தனையும் எழும்பி நிற்க, முகமோ அந்திவானமாகச் சிவந்து போக, கீழ் உதடு, அந்த உணர்ச்சியிலிருந்து காக்கும் பொருட்டு மேல் பற்களுக்குள் சிறைப்பட்டது.

அணிவித்த கொடியிலிருந்து கரத்தைப் பிரிக்க முடியாமல் விரல்கள் அந்தமென் கழுத்தை வருடியவாறே பிரிந்து வர, அடுத்து அவன் முன்னால் குங்குமத்தை நீட்டினார், சபேசனின் தாயார்.

“இந்தாப்பா… நெற்றியிலும், வகிட்டிலும், தாலியிலும் குங்குமம் வைத்து விடு…” என்றதும் மறுக்காமல் சொன்னது போலச் செய்தான் ஆதிபன். அடுத்து மெட்டிகளை அவனிடம் நீட்டி,

“காலில் போட்டுவிடு, ஆதிபன்…” என்றதும் உடனே முழங்கால் மடித்து அமர்ந்தவன் அவளுடைய பாதத்தைத் தூக்கித் தன் தொடையில் வைத்து மெட்டியை அணிவிக்க, மதிமைக்கு மூச்சு அடை பட்டது. அவன் கரங்கள் பாதத்தைத் தொட்டதும், மீண்டும் அடிவயிற்றில் அவசரமாக பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. மெட்டியிட்ட காலை மெதுவாக எடுத்துத் தரையில் வைத்தவன், அடுத்த காலையும் தூக்கித் தொடையில் வைத்து மெட்டி போட்டுவிட்டு நிமிர்ந்து மதிமையை ஏறிட, அவளோ சிவந்த முகத்துடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மிக எளிமையான திருமணம்தான். ஆனால் கோவிலில் நடந்த திருமணத்தை விட, மிக நிறைவாகவே நடந்து முடிந்திருந்தது.

அடுத்து பாலும் பழமும் கொடுத்து, அங்கிருந்தவர்கள் ஆசிர்வதிக்க, ஆதிபனுக்கு நன்றிப் பெருக்கில் நெஞ்சு நிறைந்து போனது.

கடைசியாக ஆசிர்வதிக்க வந்த சபேசனின் தாயின் கரத்தைப் பற்றிக்கொண்ட ஆதிபனுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.

திருமணம் என்பது வாழ்வில் மறக்க முடியாத அற்புதத் தருணம். அதை ஏனோ தானோ என்று செய்து முடிக்க நினைத்திருந்த வேளையில், இத்தனை நிறைவாக அதைச் செய்து முடித்ததை அவனால் நம்பவே முடியவில்லை.

வார்த்தைகள் வராமல் தடுமாறியவன்,

“நான்… நான் எப்படி நன்றி சொல்வது என்று… தெரியவில்லை…” என்று திணறியவாறு கூற, மெல்லிய புன்னகையோடு, அவனுடைய கன்னத்திலும், மதிமையின் கன்னத்திலும் தன் உள்ளங்கைகளைப் பதித்தவர்,

“நீ என் மகனின் நண்பனாக இருந்தாலும், நீயும் என் மகன்தான்பா. உன்னுடைய அம்மா உயிரோடு இருந்திருந்தால், உன் திருமணம் இப்படி ஏனோ தானோ என்று நடந்திருக்க விட்டிருப்பார்களா? சபேசன் வந்து சொன்னான், இப்படி அவசரமாக உங்கள் இருவரின் திருமணமும் நடந்ததாக. அதனால்தான் இந்த ஏற்பாடைச் செய்தோம். ஏதோ எங்களால் முடிந்ததை, முடிந்த வரையில் விரைவாக செய்திருக்கிறோம்…” என்றவர், அறுகரிசியைக் கரங்களில் எடுத்து இருவரின் தலையிலும் போட்டவாறு,

“எப்போதும் நீங்கள் இருவரும் இணை பிரியாது, மகிழ்ச்சியாக, இதே காதலோடு இருக்கவேண்டும் சரியா?” என்றதும் மதிமை சிரமப்பட்டுத் தன் முகபாவனை மாறாமல் காத்துக் கொண்டாள்.

காதலா, அவர்கள் இருவருக்கும் இடையிலா? சந்தர்ப்ப சூழ்நிலையில், இருவரின் லாபம் கருதி நடந்த திருமணத்தில் காதல் எங்கேயிருந்து வரப் போகிறது? இப்படி எண்ணினாலும், அவன் பார்க்கும்போதும், அவனுடைய விரல் நகம் தீண்டும் போதும் உள்ளே எழும் சிலிர்ப்பை என்னவென்று சொல்வது?

தவிப்போடு  நிமிர்ந்து தன் கணவனைப் பார்க்க, ஆதிபனும் அதே உணர்வோடுதான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடர்ந்து உணவு வரவழைக்கப் பட, வந்தவர்கள் அனைவரும் வயிறார உண்டுவிட்டுக் கிளம்பிச் செல்ல,

கடைசியாக சபேசன் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்தவனாக, தன் தாய் தந்தையோடு,  கிளம்பிவிட்டிருந்தான்.

மறுத்துத் தடுத்த ஆதிபனிடம்,

“ஹே… பிடிக்கிறதோ, இல்லையோ… நீங்கள் இருவரும் கணவன் மனைவி. உங்கள் இருவருக்கும் நிறையப் பேச இருக்கும். அதற்கு சுதந்திரம் தேவை. உனக்கு எப்படியோ, மதிமைக்கு நிச்சயமாக தனிமை தேவை. நாளை சனிக்கிழமை என்பதால், எனக்கு வேலையில்லை. அதனால், இப்போது அம்மா அப்பாவோடு போகிறேன். ஞாயிறு மாலை வருகிறேன்… அதற்கிடையில், நீங்கள் இருவரும் தயக்கத்தை உதறிவிட்டுப் பேசுங்கள். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள முயலுங்கள்…” என்று விட்டுக் கிளம்பிவிட,

அன்று நடந்த கொண்டாட்டத்தில் ஓடித் திரிந்த வரோதயனும் விரைவாகவே உறங்கி விட,

கணவன் மனைவியாக இருவரும் என்ன பேசுவது, ஏது பேசுவது, அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் குழப்பத்துடன் திருதிரு என்று விழித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

(20)

சும்மா இருந்த போது ஏற்படாத தயக்கம்,  பதிவுத் திருமணம் செய்த போது கூட ஏற்படாத தடுமாற்றம், இப்போது அவர்களைச் சூழ்ந்து இருந்தது.

அதற்கான காரணம் என்ன என்று இருவருக்குமே தெரியவில்லை. உறவுகள் என்று ஒரு சில பேரின் மத்தியில், பொன் தாலியைக் கட்டிய பின்பு, அந்தத் திருமணத்தின் அழுத்தம், அல்லது அதன் முக்கியத்துவம் இருவரையும் சூழ்ந்திருப்பது கூடக் காரணமாக இருக்கலாம். இல்லை, இருட்டத் தொடங்கிய நேரத்தில், இருவருக்குமாகக் கிடைத்த தனிமை, அதுவும் உரிமையுள்ள தனிமை இருவரையும் பேதலிக்கச் செய்யக் காரணமாக இருக்கலாம். என்னவென்று சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனாலும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க மிகவும் திணறினர் என்றுதான் சொல்லவேண்டும்.

நீண்ட தயக்கத்தின் பின் முதலில் சுதாரித்தது ஆதிபன்தான்.

“ம்கூம்.. வந்து… சாரி… இன்று இப்படி சபேசனின் பெற்றவர்களும் உறவினர்களும் வந்து, நம் திருமணத்தை… ஐ மீன், இரண்டாவது திருமணத்தை…” என்று அவன் வார்த்தைகள் வராமல் தடுமாற, அவனை நோக்கித் திரும்பிய மதிமை,

“புரிகிறது… நானும் இதை எதிர்பார்க்க  வில்லை. திடீர் என்று அத்தனை பேரும் வீட்டிற்கு வந்ததும் நானும் குழம்பித்தான் போனேன். சிந்துஜாதான், என்னை இந்த சேலை கட்டுமாறு சொன்னாள். எனக்கு வேறு சேலை கட்டிப் பழக்கமில்லை. அதோடு விடாமல், இப்படி முகத்திற்கு ஏதேதோ பூசி…” என்று சங்கடத்தோடு கூற, இப்போது அவனுடைய விழிகள் அவளை ஆவலுடன் தரிசித்தன.

அவளைப் பார்த்த உடன் உள்ளே ஏற்பட்ட உணர்வலைகளை நினைத்தவன்,

“இல்லை… நீ… மிக அழகாக இருக்கிறாய்…!” என்றான் தன்னை மறந்து. அதைக் கேட்டு மேலும் முகம் சிவந்தவள்,

“ந… நன்றி…” என்றுவிட்டு நிமிர, அவனுடைய விழிகள் ரசனையோடு தன் மேனியில் படர்வதைக் கண்டு, சற்று விதிர் விதிர்த்துத்தான் போனாள். அதுவும் சேலைக்கூடாகத் தெரிந்த வெற்றிடையில் அவன் விழிகள் நிலைத்திருப்பதைக் கண்டு, பெரும் சங்கடம் எழ, அவரசமாக சேலையை இழுத்து விட்டுக்கொண்டாள் மதிமை.

அழகிய சிற்பத்தைத் திரை மறைத்ததும், மெல்லிய எரிச்சல் தோன்ற, நிமிர்ந்து மதிமையைப் பார்த்தவனுக்கு, அப்போதுதான் தான் செய்துகொண்டிருந்த காரியமே புரிந்தது.

பதட்டத்தோடு தன் முகத்தைத் திருப்பிக் கொண்டவன்,

“நான்… நான் ஆடை மாற்றப் போகிறேன்…” என்றுவிட்டு அவளுடைய அனுமதியையும் கேட்காமல் தன் அறைக்குள் நுழைந்தவனுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர.

அவனுக்கு என்னவாகிவிட்டது. ஏன் அவளைக் கண்டால் மட்டும் நிதானம் இழக்கிறான். அவளைப் பார்த்து நான்கு நாட்கள் கூட முழுதாக ஆகவில்லை. அதற்குள் ஏன் இந்தத் தடுமாற்றம். அதுவும் தாலி கட்டிய பின்பு, மனதைக் கடிவாளமிட்டு வைத்திருப்பது தான் மிகச் சிரமமாக இருக்கிறது.

மீண்டும் அந்த அழகிய உருவம் மனதில் வந்து நர்த்தனமாட, திணறிப் போனான் ஆதிபன்.

ஏனோ.. தாலி கட்டிய உரிமையாலோ, என்னவோ, அவள் வேண்டும் என்று கேட்டது அவனுடைய உடல். புத்தியோ, அவனைத் திட்டித் தீர்த்தது. நீ அவளை மணந்ததிற்குக் காரணம், விசித்திரா. அவளிடமிருந்து உன்னைக் காத்துக் கொள்ளத்தான் இந்தத் திருமணத்தையே முடித்தாய். அவளும், வரோதயனுக்காகவும், தன் பாதுகாப்பிற்காகவும் வேண்டித்தான் உன்னை மணம் முடிக்கச் சம்மதித்தாள். அப்படியிருக்கும்போது, அவளை வேறு மாதிரி நினைப்பது மாபெரும் தவறு. ம்கூம்…  இது சரியில்லை என்று அவனை வழிப்படுத்த முயன்றது. ஆனால் எங்கே? காமம் என்கிற பேய் நுழைந்து விட்டால், நீதியாவது நியாயமாவது.

மனம், ஆவேசமாக அவள் வேண்டும் வேண்டும் என்று சண்டித்தனம் செய்ய, அதனிடமிருந்து தப்ப நினைத்தவனாக வேட்டி சட்டையைக் களைந்துவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தவன் தண்ணீரைத் திறந்து அதன் கீழ் நின்றான். ஆனாலும் உள்ளே பற்றியெரிந்த காமம் குறைவதாக இல்லை.

ம்கூம்… இது சரிப்பட்டு வராது… வேகமாக ஆடை மாற்றியவன், அவள் இருக்கும் திசைக்கு எதிர்ப்பக்கம் ஓடும் வேகத்தில் வீட்டை விட்டு வெளியேற முயன்றவனை வியப்போடு பார்த்தவள்,

“எங்கே போகிறீர்கள்?” என்றாள் வியப்பாய். அவனோ அவளுடைய முகத்தைப் பார்க்காமலே,

“சின்ன வேலை…. இருக்கிறது… வெளியே போகிறேன்…” என்றவன் விட்டால் போதும் என்று பாய்ந்து வெளியேற, இவள்தான் குழம்பிப் போனாள்.  அவள் முகத்தைப் பார்த்துக் கூடச் சொல்ல முடியாமல் போகிறானே… ஏன்?

ஏனோ அவனை எதிர்பார்த்தது அவளுடைய மனம். அவன் அணைப்பில் கட்டுண்டு கிடக்கப் பெரும் ஆவல் எழுந்தது. அவன் அணைப்பிற்காக உடல் வேறு ஏங்கித் தொலைக்கிறது.  இதுவரை ஆண்மை என்றால் என்ன என்பதை அறியாதவள் அவள். அறிந்து கொள்ள அவளுக்கு நேரமும் கிடைத்ததில்லை, சூழலும் அமைந்ததில்லை. ஆனால் அதைக் கொஞ்சமாகத் தெரிந்த போது அது வேண்டும் என்று, தேகம் ஆளாய் பறக்கிறது.

எத்தனை வெட்கம் கெட்ட செயல், இது. இருவரும் ஒருவரை ஒருவர் மணந்ததுக்குக் காரணமே அவர்களின் கஷ்டங்களைப் போக்கத்தான். இதில் அவளுடைய ஏக்கத்தைப் போக்குவது எப்படி? சீ சீ… இப்படி அவள் நினைப்பது தெரிந்தால் அவன் என்னதான் நினைப்பான்? நினைக்கும்போதே அவமானம் அவளைப் பிடுங்கித் தின்றது.

‘நினையாதே மனமே நினையாதே…! இந்தக் கணமே, இந்த விநாடியே அவன் மீதிருக்கும் அந்த வினோத உணர்வை அகற்றி விடு. முற்றாகத் துடைத்துவிடு. இது சரி வராது…!’ தனக்குள்ளேயே பலமுறை உறுப் போட்டவாறு வரோதயனைத் தேடிச் செல்ல, அவன் ஆதிபனின் படுக்கையில் நல்ல உறக்கத்திலிருந்தான்.

இப்போது ஆதிபன் மறைந்து அங்கே வரோதயன் நிறைத்துக் கொள்ள, அவனை நெருங்கியவள், அவனுக்கு அருகாமையில் அமர்ந்து அவனுடைய நெற்றியில் முத்தமிட்டு அந்தக் குழந்தை உறங்கும் அழகில் லயித்தாள். விரல்களோ குழந்தையின் கார் குழலை வருடிக் கொடுத்தன. எத்தனை நேரம் குழந்தையை வருடிக்கொண்டிருந்தாளோ, விழிகள் அவளையும் மீறி மூடிக்கொள்ள,  தலை படுக்கையை நோக்கிச் சரிந்தது.

What’s your Reaction?
+1
14
+1
1
+1
7
+1
4
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

உயிர் நீ மெய் நான்…! – 23

(23) விமான நிலையத்தில், அத்தனை சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு மூவரும் வெளியே வர, அங்கே விக்ரமசூரியர் இவர்களுக்காக ஆவலுடன் காத்துக்…

2 days ago

உயிர் நீ மெய் நான்…! – 21/22

(21) ஆதிபன் மனம் அமைதி அஅடையும் வரைக்கும், இரவின் குளிரில் சற்று தூரம் நடந்து சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய…

4 days ago

உயிர் நீ மெய் நான்…! – 17/18

(17) தந்தை கேட்டதற்கமைய, மகனின் படம் ஒன்றை அனுப்பி வைத்த ஆதிபன், கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். ‘ஏனோ தந்தையிடம்…

1 week ago

உயிர் நீ மெய் நான்…! – 16

(16) மதிமையின் இருப்பிடத்திற்கு உள் வண்டி நுழைந்ததும், அதை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வெளியே வந்த ஆதிபன், மதிமை…

2 weeks ago

உயிர் நீ மெய் நான்…! – 15

(15) மறுநாள் காலை பத்து மணியளவில் விழிகளைத் திறந்த மதிமைக்குக் காய்ச்சல் சிறிது விட்டிருந்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவள்,…

2 weeks ago

உயிர் நீ மெய் நான்…! – 14

(14) திடீர் என்று யாரோ உலுப்புவது போலத் தோன்ற சடார் என்று தன் விழிகளைத் திறந்தான், ஆதிபன்.  ஒரு கணம்…

3 weeks ago