தந்தை கேட்டதற்கமைய, மகனின் படம் ஒன்றை அனுப்பி வைத்த ஆதிபன், கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.
‘ஏனோ தந்தையிடம் அணு ரேகாவைப் பற்றிக் கூறப் பிடிக்கவில்லை. குழந்தையின் தாய் இறந்துவிட்டது தெரிந்தால், நிச்சயமாக விசித்திராவைத் திருமணம் செய் என்று நச்சரிப்பார். இதோ இப்போது விசித்திரா பயம் காட்டுவது போல, எதையாவது செய்து இவனைச் சம்மதிக்க வைப்பார்கள். விசித்திரா அவனை அடைவதற்காக எந்த எல்லைக்கும் போவாள், இப்போது போனது போல. அதை விட, அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டால், அதை மீறிச் சிந்திக்க யாருக்கும் துணிவிருக்காது.’
‘சரி, தந்தையிடம் திருமணமாகிவிட்டது என்று சொல்லியாயிற்று. அதை மெய்ப்பிக்க வேண்டும். அதற்கு இவள் சம்மதிப்பாளா?’ குழம்பியவளின் விழிகள் மதிமையை நாடின.
இப்போது குழந்தையை மடியில் வைத்தவாறு தரையில் அமர்ந்தவாறு எதையோ ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். தன் சிந்தனைகளை உதறிவிட்டு அவளை நெருங்கியவன், அவளுடைய தோள்களுக்கு மேலாக எட்டிப் பார்க்க, ஒரு ஆல்பம் அவள் கரத்தில் வீற்றிருந்தது. அதில் வரோதயன் குழந்தையாக இருந்த போது எடுத்த படங்கள் இருப்பதைக் கண்டு, விழிகள் மின்ன,
“கான் ஐ…” என்றான் ஆவலாக. ஆதிபனின் குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தவள், அவன் ஆல்பம் கேட்பது தெரிந்ததும், மறுக்காமல் அதை நீட்ட, ஆசையுடன் வாங்கியவன் அவளுக்குப் பக்கமாகவே சப்பாணி கட்டி அமர்ந்தவாறு ஆல்பத்தைப் புரட்டத் தொடங்கினான்.
அவளுக்குப் பக்கத்தில் அவன் சப்பாணி கட்டி அமர்ந்தால், அவனுடைய முழங்கால், இவளுடைய தொடையை உரசிக்கொண்டிருக்க மீண்டும் அவளுக்குள் மின்னாமல், முழங்காமல் இடி இடித்து மழை பெய்தது. வயிற்றிற்குள் பட்டாம்பூச்சிகள் அவசரமாய் குட்டி போட்டுச் சிறகடித்தன. கூடவே அந்த உரசலைத் தன்னை மீறி ரசிக்கவும் தொடங்கினாள்.
ஆதிபனோ, அது பற்றி உணராது, ஒவ்வொரு படங்களாக ரசித்துப் பார்க்கத் தொடங்கினான். வரோதயன் கைக்குழந்தையாக இருந்த நாள் முதல், அவனுடைய மூன்றாவது பிறந்த நாள் வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அத்தனையும், அவன் இழந்த அந்தக் காலங்களைக் கொஞ்சமாய் மீட்டுக் கொடுக்க, விழிகள் மெல்லியதாய் கலங்கின.
அந்த அற்புதத் தருணங்களை நேரடியாகப் பார்த்து ரசிக்கக் கொடுத்து வைக்கவில்லையே.
மேலும் ஆவலுடன் புரட்ட, அந்தப் புகைப்படத்தில் அதிகமாக இருந்தது மதிமைதான்.ஒரு சில படங்களில் அணுரேகா நின்றிருந்தாள். கடைசிப் படத்தில்.. தலையில் முடி உதிர்ந்து, பார்க்கவே பரிதாபமாக நின்றிருந்த அணு ரேகாவைக் காண இவனுக்கு இதயம் வலித்தது.
என்ன சொன்னாலும் முதன் முதலாகக் காதல் என்கிற உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தியவள் அவள்தானே. முதல் காதல், முதல் முத்தமும் அவளுடையது தான். முதல் தொடுகையும் அவள்தான். காலத்திற்கும் அது மறக்காதே.
‘முட்டாள் பெண். தானாகவே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டாள். பைத்தியக்காரி. சரி, அவனோடுதான் வாழப் பிடிக்கவில்லை. பின்னாலில் வந்தவனோடாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே! அப்படித் தான்தோன்றி வாழ்க்கையில் என்ன மகிழ்ச்சியைக் கண்டு விட்டாள்? கடைசியாக உயிரையே துறந்து விட்டாளே!’ வேதனையோடு எண்ணியவனின் கவனம் இப்போது, முகம் முழுக்க மகிழ்ச்சியோடு, பெருமிதத்தோடு வரோதயனை அணைத்திருந்த மதிமையிடம் நகர்ந்தது.
ஏனோ அவளுடைய உருவத்திலிருந்து தன் விழிகளை ஆதிபனால் விலக்கவே முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை, அவளைப் பார்க்கும் போதெல்லாம், உள்ளே ஒரு வித கர்வம் எழுகிறது. அவனையும் மீறி புத்தியும், உணர்வுகளும் அவள் திசைக்குச் செல்கிறது. அணுரேகாவோடு ஒப்பிடும் போது, பெரிய அழகி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது தான். ஆனால், அந்த விழிகள், செழித்த உதடுகள், அதிகம் மெலிவில்லாத தேகம் அத்தனையும், பார்க்கும் ஆண்களைச் சட்டென்று கவர்ந்திழுத்து விடும்.
அவனையும் மீறி பெருவிரல்கள், வரோதயனை அணைத்திருந்த மதிமையை வருடிக் கொடுக்க, சட்டென்று ஆண்மையின் உயிர்நீர் சுரப்பிகள், விழித்துக் கொண்டன.
‘அந்தப் படத்தை வருடும் போதே இந்த உணர்வென்றால், அருகே இருக்கும் அவளை வருடினால்? அணைத்தால்?’ சட்டென்று விழித்துக் கொண்டான் ஆதிபன்.
ஏனோ மூச்சு முட்டுவது போன்ற உணர்வில் திமிறியவன், அந்த ஆல்பத்தை மூடிவிட்டு எழுந்து, அவளைப் பார்க்காமலே,
“பொருட்களை எடுத்துக்கொண்டாயானால் புறப்படலாம்…” என்றான் எங்கோ பார்த்தவாறு.
‘ம்கூம், இந்த நிலையில் அவளைப் பார்க்க முடியும் போலத் தோன்றவில்லை.’ தவறாக யோசித்த மனது, பதட்டப்பட்டது.
“இதோ… இன்னும் ஐந்து நிமிடங்கள்…” என்றவள் எஞ்சிய பொருட்களையும் எடுத்துப் பைக்குள் திணிக்க, இப்போது கொஞ்சம் சமாளித்தவனாக அவளைப் பார்த்து,
“உன் பிறப்புச் சாட்சிப் பத்திரம், கடவுச் சீட்டு, சின் கார்ட்… இதெல்லாம் எடுத்து வைத்தாயா?” என்று கேட்க, அப்போதுதான் அவளுக்கே அப்படி ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது.
நாக்கைக் கடித்தவள், “இதோ…” என்றுவிட்டு அறைக்குள் ஓடி, முக்கியமான பத்திரங்கள் கொண்ட கோப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“உனக்கு கடவுச் சீட்டு இருக்கிறதா?” என்று இவன் கேட்க, உதடுகளைப் பிதுக்கியவள்,
“இருக்கு… ஆனா.. அது காலாவதி ஆகி விட்டது… புதிது எடுக்கவேண்டும்…” என்றவாறே, அந்தக் கோப்பையும் பைக்குள் திணித்தவள், வேறு முக்கிய பொருட்களையும் பைக்குள் திணிக்க. அவள் திணித்தவற்றில் அதிகமானவை வரோதயனின் பொருட்கள்தான்.
அதைக் கண்டவனின் மனது சற்று இளகிப் போனது. கூடவே விழிகள் அவளை ஆவலுடன் தரிசிக்கத் தொடங்குவதை உணர்ந்து கொண்டவன், அவசரமாகத் தன் முகத்தைத் திருப்ப மூச்சு முட்டியது.
“வெளியே நிற்கிறேன்…” என்று முணு முணுத்துவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியேறியவனின் படபடத்த நெஞ்சம் அடங்கச் சற்று நேரம் எடுத்தது.
மகனை இறுக அணைத்து அவனுடைய மார்பில் தன் முகத்தைப் பொதித்துக் குழந்தையிடம் தன் வாசனையை நுகரத் தொடங்கிய ஆதிபனின் மனத்தில் ஏகப்பட்ட குழப்பம் சிந்தனைகள்.
‘எப்படி அவளிடம் சொல்லப் போகிறோம்…? எப்படி புரிய வைக்கப் போகிறோம்? சொன்னாலும் அவளுக்குப் புரியுமா? அவன் வேண்டுகோளை ஏற்பாளா? ஏன் ஏற்க மாட்டாள்? வரோதயனின் நன்மைக்கா இதைக் கூட செய்ய மாட்டாளா?’ யோசனையோடு இருக்க, இரண்டு தோள்களிலும் பெரிய பையை ஏந்தியவாறு வெளியே வந்தாள், மதிமை.
அதுவரை தன் மகனைத் தோளில் ஏந்தி இருந்த ஆதிபன், வரோதயனைக் கீழே இறக்கி விட்டு, அவளுடைய கரத்திலிருந்த பையை வாங்கித் தன் தோள்களில் மாட்டியவாறு,
“குழந்தையை அழைத்து வா மதி…” என்று விட்டு முன்னேற, அவனுடைய அந்த மதி என்கிற அழைப்பில், தடை போட்டது போல நின்றாள், மதிமை. ஏனோ கண்கள் நிரம்பின.
அவளுடைய தந்தை அவளை அப்படித்தான் அழைப்பார். நான்கு வருடங்களுக்குப் பிறகான அந்த அழைப்பில் உருகிப்போனாள் மதிமை.
“மதிமா… அதை எடுத்தாயா? மதி இதை எடுத்தாயா? மதி என் கண்ணாடி எங்கே…? மதி.. இங்கே பேனா வைத்தேன் கண்டாயா…?” தாயிடம் கூடக் கேட்கமாட்டார். தன் மகளிடம்தான் கேட்பார். தந்தையின் நினைவில் கண்ணீர் கன்னத்தை நனைத்துச் செல்ல, சற்றுத் தூரம் பைகளை ஏந்தியவாறு நடந்த ஆதிபன், மதிமை பின் தொடராது இருப்பது உறுத்த நின்று திரும்பிப் பார்த்தான்.
அவள் விழிகள் கலங்கியிருப்பதைக் கண்டதும், திகைத்தவனாக அவளை நெருங்கி,
“ஹே… என்னாச்சு…?” என்றான் மெல்லிய பதட்டத்தோடு. அவரசமாக விழிகளைச் சிமிட்டிக் கண்ணீரை உள் இழுத்தவள்,
“ஒ… ஒன்றுமில்லை…” என்றாள் அடைத்த குரலில்.
“ஒன்றுமில்லாததிற்கா, கண்கள் கலங்கி குரல் அடைத்திருக்கிறது?” கேள்வியாகக் கேட்க, வலி நிறைந்த புன்னகையைச் சிந்தியவள், மறுப்பாகத் தலையசைத்து,
“நீங்கள் என்னை… மதி… மதி என்று அழைத்தீர்களா…? அப்பாவின் நினைவு வந்து விட்டது…” என்றவள் என்னதான் முயன்றும் வழிய முயன்ற கண்ணீரை அவசரமாகப் புறங்கையால் துடைத்துவிட்டு,
“அ… அவர் என்னை அப்படித்தான்… அப்படித் தான் அழைப்பார்…” என்றபோது மீண்டும் கண்களில் கண்ணீர் சாரல்.
அதைக் கேட்டதும் கலங்கிப்போனான் ஆதிபன்.
“ஐ… ஐ ஆம் சாரி… உன் பெயரைச் சுருக்கிக் கூப்பிட நினைத்தேன்… அவ்வளவுதான். அது உன்னை வருத்தும் என்று எண்ணவில்லை… இனி இப்படி அழைக்க மாட்டேன்…” என்றவன் அவளுடைய தோள்களில் தன் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்தவாறு,
“நிஜமாகவே சாரிமா…” என்றான். அதைக் கேட்டு வெட்கப் புன்னகை ஒன்றை சிந்தியவள்,
“இல்லை.. பரவாயில்லை…! நான்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.. சின்னக் குழந்தை போல, உங்கள் முன்னால் இப்படி அழுது வடிகிறேன்.” என்றதும் அதைக் கேட்டுச் சிரித்தவன்,
“சின்னக் குழந்தை போலவா… நீ சின்னக் குழந்தையேதான்..! சரி… வா..! நேரம் போகிறது.” என்றுவிட்டு அவளை அழைத்துக்கொண்டு நடக்கத் தொடங்க,
வரோதயனைக் கைப்பற்றியவாறு மேலும் நடக்கத் தொடங்கினாள் மதிமை.
வெளியிலேயே உணவை முடிக்கும் போது, மதிமையிடம் அவளைப் பற்றியும் அவளுடைய குடும்பம் பற்றியும் முழுதாகக் கேட்டு அறிந்து கொண்டான். கூடவே அவள் மீது இரக்கமும் எழுந்தது.
பதினேழு வயதில் பெற்றவர்களையும், சொந்த தம்பியையும் இழந்து அநாதையாக நிற்பதென்றால் எத்தனை பெரிய கொடுமை. அந்த இடத்தில் அணுரேகா மட்டும் வராதிருந்திருந்தால் இன்னும் சிரமப்பட்டிருப்பாள்.
அணுரேகா எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த இடத்தில் அவளைக் கையெடுத்துக் கும்பிடத்தான் தோன்றியது ஆதிபனுக்கு.
கடைசியாக இருவரையும் அழைத்துக்கொண்டு ஆதிபன் கிளம்ப, அடுத்து அவன் வீடுகள் காட்ட அழைத்துப் போகிறான் என்றுதான் மதிமை நினைத்தாள். ஆனால், அவன் நேராக அவர்கள் தங்கும் வீட்டிற்கு வந்து சேர,
“நான் தங்க, வீடு பார்க்கலாம் என்றீர்களே…?” என்றாள் கேள்வியாக. இவனோ, சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
“இனி உனக்கு அது தேவைப்படாது என்று நினைக்கிறேன் மதிமை.. வா…!” என்று விட்டுக் குழந்தை இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மகனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு உள்ளே போக, விவாதமின்றி அவன் பின்னே சென்றாள், மதிமை.
சபேசன் இன்னும் வந்திருக்கவில்லை. உள்ளே நுழைந்ததும், குழந்தையைத் தன் அறைக்கு எடுத்துச் சென்று படுக்கையில் போட்டுவிட்டு, வெளியே வர,
மதிமை முன்னறையில், ஜன்னலுக்கு வெளியே தெரிந்த சின்னத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்க்கும் போதே தெரிந்தது, அவளுடைய மனதில் ஆயிரம் யோசனைகள் ஓடுகின்றன என்று.
“தேநீர், இல்லை என்றால் காப்பி ஏதாவது குடிக்கப் போகிறாயா?” என்று அவளை நோக்கிக் கேட்க, நினைவலைகள் கலைந்தவளாகத் திரும்பிப் பார்த்தாள், மதிமை.
சாப்பிட்டது இன்னும் வயிற்றை நிரப்பியிருக்க,
“இல்லை வேண்டாம்… சாப்பிட்டதே இன்னும் செரிக்கவில்லை…” என்றவளிடம்,
“மசாலா தேநீர் குடி, சுலபமாக செரித்து விடும்… ஒரு நிமிஷம்…!” என்றவாறு சமையலறைக்குள் நுழைந்தவனுக்கு, எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பம் எழவே செய்தது.
இப்படிக் கேட்கலாமா, அப்படிக் கேட்கலாமா என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டவன், அவளுக்கும் தனக்குமாகத் தேநீரை வார்த்துக் கொண்டு முன்னறைக்கு வர, மதிமை இன்னும் தோட்டத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“தோட்டத்திற்குப் போகலாமா?” என்று இவன் கேட்கத் திரும்பியவள், அவனை நெருங்கி, அவன் நீட்டிய தேநீரை வாங்கியவாறே, ‘ஆம்’ என்றாள் மகிழ்ச்சியாக.
“சரி வா…” என்றவாறு கதவைத் திறந்து முன்னேற, மதிமையும் பின் தொடர்ந்தாள். மெல்லிய குளிர் சற்று சிலுசிலுப்பைக் கொடுத்தாலும் இதமாகத்தான் இருந்தது அந்தக் காலநிலை.
தோட்டத்தில் அமைந்திருந்த பெரிய மரத்திற்குக் கீழே இருந்த ‘பெஞ்’சைக் காட்டி,
“உட்கார்…” என்று சொல்ல, மறுக்காமல் உட்கார்ந்தாள் மதிமை. அவளுக்குப் பக்கத்தில் ஓரடி இடைவெளி விட்டு ஆதிபனும் அமர்ந்து காலுக்கு மேல் ஒற்றைக் காலைப் போட்டவாறு தேநீர் அருந்தத் தொடங்க, இருவரும் சற்று நேரம் அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.
மதிமைக்கோ, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இவனுக்கோ, அதை எப்படி சொல்வது என்றும் புரியவில்லை. இருவருமே தம் தம் சிந்தனையில் சற்று நேரம் இருக்க, ஆதிபன் தான் அந்த அமைதியைக் குலைக்க முயன்றான்.
“மதிமை…” என்றான். இவள் சிந்தனை கலைந்து அவனைத் திரும்பிப் பார்க்க,
“எ… என்னைத் திருமணம் முடிக்கிறாயா?” என்றான் எந்த வித ஆலாபனையும் இல்லாமல்.
அதிர்ந்து போனாள், மதிமை. ‘அவள் என்ன கேட்டாள்? அவன் என்ன சொன்னான்? இல்லை… அவன் வேறு ஏதோ கேட்கப் போய், அவளுக்குத் தப்பாகப் புரிந்திருக்கிறதா?’ நம்ப முடியாத அதிர்ச்சியுடன்,
“சாரி… என்ன கேட்டீர்கள்…?” என்றாள் மதிமை.
அவளை முழு நிமிடம் பார்த்தவன்,
“மதிமை… எனக்கு உறவு என்று சொல்ல என் அப்பா மட்டும் தான். ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன், என் அம்மா பதினெட்டாவது வயதில், இறந்துவிட்டார்கள். எனக்கு அம்மா என்றால் உயிர். அவர்களுக்கும் அப்படித்தான்…” என்றவன் மெல்லியதாகச் சிரித்து,
“நம்ப மாட்டாய், என்னுடைய பதினாறாவது வயதில் கூட உணவு ஊட்டுவார்கள். அப்பா திட்டினாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் இறந்த பின், என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. நான் அம்மாவை நிறையவே தேடினேன். அப்பா என் மீது பாசமாகத்தான் இருப்பார். ஆனால் அம்மா இருப்பது போல இருக்காது இல்லையா…?, என்னுடைய இருபத்து மூன்றாவது வயதில், படிப்பதற்காக இங்கே வந்தேன். அப்போதுதான் பழக்கமானாள் அணுரேகா. என்னை விட இரண்டு வயது அதிகமானவள். அவளாகத்தான் என்னை நெருங்கினாள். அது வரை பெண்களின் அறிமுகம் இல்லாத எனக்கு, பெண் என்றால் என்ன என்பதை வேறு கோணத்தில் புரிய வைத்தது, அணுரேகா தான். அவளுடைய அந்த நெருக்கத்தை விரும்பியே ஏற்றுக்கொண்டேன். சொல்லப் போனால், நான் அவளைக் காதலித்தேன். ஆனால் அவளுக்கு என் காதலை விட, அவளுடைய சுதந்திரம்தான் முக்கியமாகப் பட்டிருக்கிறது. அப்போது எனக்கு அது தெரியவில்லை. பின்னாளில் தெரிந்த போது உடைந்து விட்டேன்.
அதற்குப் பிறகு, அவள் என் வாழ்க்கையில் இ ருந்து விலகியதும், வேறு எந்தப் புது உறவும் வேண்டாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். விலகியும் இருந்தேன், அணுரேகாவின் கடிதம் வரும் வரைக்கும்…” என்றவன், தன் கரத்திலிருந்த தேநீரை வெறித்தவாறு சற்று நேரம் நின்றான்.
“இப்போது எனக்கொரு மகன் இருக்கிறான் என்கிற போது, அவனுடைய மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. உன்னிடமிருந்து அவனைப் பிரித்து வந்த பின்னாடி, அவன் நிறையவே உன்னைத் தேடினான். நான்கு நாட்களாக உனக்காக ஏங்கிக் காய்ச்சல் கூட வந்துவிட்டிருந்தது. அங்கே உன்னைத் தேடி வந்தது கூட, அவனிடம் உன்னை அழைத்து வரத்தான். ஆனால், இந்த விநாடி வரை உன்னையும் அவனையும் தள்ளி வைக்கத்தான் விரும்புகிறேன். நீ அவனை நெருங்கும் போது, அவன் என்னை விட்டுத் தொலைவுக்குப் போவது போல நினைக்கிறேன். ஆனால்… என் சுய நலத்தையும் மீறி, வரோதயனுக்கு நல்ல ஒரு தாய் வேண்டும். அது நீயாக மட்டும்தான் இருக்க முடியும் என்பது என் கணிப்பு…!” என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நானும் சரி, என் அப்பாவும் சரி, இருவரும் தொழிலில் முழு மூச்சாக இறங்கிவிடுவோம். வேறு உறவு என்று சொல்ல, எனக்கொரு சித்தி இருக்கிறார்கள். அவர்கள் சிங்கப்பூரில் இருப்பதால் அவர்களாலும் என் மகனைப் பார்த்துக்கொள்ள முடியாது. என் அம்மம்மா சித்தியோடுதான் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். வயது போன நேரத்தில் அவர்களாலும் வரோதயனைப் பார்த்துக் கொள்ள முடியாது. அப்பா வழி உறவு என்று சொல்ல யாருமில்லை. ஆக.. வரோதயனைப் பார்த்துக் கொள்ள உன்னை விட வேறு யாருமில்லை.
அதையும் மீறி, அவனைப் பார்த்துக்கொள்ள ஒருத்தரை நியமித்தாலும், அவன் உன் கூட இருப்பது போல வருமா தெரியவில்லை. உனக்கும் யாருமில்லை. வரோதயனைப் பிரிந்தும் உன்னால் இருக்க முடியாது என்பது எனக்குப் புரிகிறது. தவிர நானும்..” என்று சொல்ல வந்தவன், விசித்திராவைப் பற்றிச் சொல்வதற்காக வாயைத் திறந்தான். பின் கப்பென்று மூடிக் கொண்டான்.
‘விசித்திரா பற்றி இவளிடம் சொல்வது சரி வருமா? சொன்னால், நீ அவளையே மணந்து கொள் என்னை விட்டுவிடு என்றால்? ஏனோ அந்த நினைப்பே வெறுப்பைக் கொடுத்தது. ஏதோ ஒன்று அவள் வேண்டும் வேண்டும் என்றது. அதையும் மீறி, இவளைப் பற்றி இன்னும் சரியாகத் தெரியாத நிலையில், அவன் வாழ்க்கை சம்பவத்தை முழுவதும் சொல்லி விடவேண்டுமா என்கிற கேள்வியும் எழுந்தது.’ எதுவாக இருந்தாலும் அதைப் பிறகு சொல்லலாம் என்கிற முடிவை எடுத்தவனாக, அவளை ஏறிட்டு,
“என்ன சொல்கிறாள் மதிமை…? நீ என்னோடு ஊருக்கு வருகிறாயா? என் மனைவியாக?” என்று கேட்க, அவளோ அவனை அழுத்தமாக ஏறிட்டு,
“நீங்கள் எதற்காக என்னை மணக்கக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால், திருமணம் என்பது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்யும் சாதாரண செயலில்லை. இது வாழ்க்கை. இதில் சிறு தவறு நடந்தாலும், பாதிக்கப்படப் போவது, வரோதயன். உங்கள் அப்பா. உங்களைச் சுற்றியுள்ள சமுகம்… எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, இன்னும் ஒருவரை ஒருவர் முழுமையாக அறிந்துகொள்ளவே இல்லை. நான் யார்? என்ன மதம்? என்ன இனம் ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? சரி அதைத்தான் விடுங்கள், நான் நல்லவளா? கெட்டவளா? அதாவது உங்களுக்குத் தெரியுமா…? இது எதுவும் தெரியாமல் திருமண பந்தத்தில் எப்படி இணைய முடியும்? இவ்வளவு ஏன்? குறைந்தது பொருளாதார ரீதியிலாவது இருவரும் சமமாக இருக்கிறோமா என்றால் அதுவுமில்லை. ஒரு வீதம் கூடப் பொருந்தாத நம் திருமண வாழ்க்கை எப்படி நிலைக்கும். எப்படித்தான் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்றவளை நிதானமாக ஏறிட்டவன்,
“நீ சொல்வது எனக்குப் புரிகிறது, மதிமை. நானும் இந்தத் திருமணம் நிலைத்திருக்கவேண்டும் என்பதற்காக உன்னை மணக்கக் கேட்கவில்லை. உன்னை மணப்பதற்குப் பின்னால் பக்கா சுயநலம் இருக்கிறது. அது வரோதயன் மட்டுமில்லை. இன்னும் ஒரு சில காரணங்கள் இருக்கின்றன…” என்றவனை அழுத்தமாக ஏறிட்டவள்,
“வேறு என்ன காரணங்கள்…?” என்றாள்.
“என் அப்பா… அப்பா என்னை மணந்து கொள்ளுமாறு நச்சரிக்கிறார். இப்போதெல்லாம் அவரை நேருக்கு நேர் பார்த்துப் பேசவே பயமாக இருக்கிறது. இதுவே உன்னை மணந்துகொண்டால், அதற்கு மேல் அவருடைய நச்சரிப்பு எனக்கு இருக்காது இல்லையா…?”
“தவிர, அங்கே நீ வரோதயனின் வளர்ப்புத் தாய் என்கிற ரீதியில் வர முடியாது. ஈழம் கனடா போல இல்லை, நினைத்தது போல வாழ. அங்கே சின்னப் பிசகு நடந்தாலும், ஆயிரம் கேள்விகள் பிறக்கும். என்னைக் குற்றம் சொல்ல மாட்டார்கள். உன்னைத்தான்.. வேடிக்கைப் பொருள் ஆக்குவார்கள். வரோதயனை என் குழந்தையென்றும், நீ அவனின் வளர்ப்புத் தாய் என்றும் அறிமுகப்படுத்தினால், அதைப் போகிற போக்கில் ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறாயா? எத்தனை விதமாகக் கதைகள் திரிக்கப்படும் தெரியுமா? ஒன்று பலவாகும். பல நூறாகும்.. இதில் நீ மட்டுமில்லை மதிமை, என் மகனும்தான் பாதிப்படைவான்…! நீ சொல்வது எனக்குப் புரிகிறது. இருவரும் வேறு வேறு துருவங்கள். ஒருத்தரை ஒருத்தர் தெரியாதவர்கள். நமக்கிடையில் வாழ்க்கை எப்படிச் சுமுகமாகப் போகும் என்கிற உன் கேள்வியும் எனக்குப் புரிகிறது. நான் ஒரு உறுதி கொடுக்கிறேன். என்னால் உனக்கு எந்தச் சிக்கலும் வராது…” என்றவன் அவளை அழுத்தமாகப் பார்த்து,
“மதிமை… இப்போதைக்கு நாம் திருமணம் முடிக்கலாம். சிறிது காலத்தில், உனக்கோ, இல்லை எனக்கோ இந்த பந்தத்தில் மனக்கசப்போ, ஒவ்வாமையோ தோன்றும் போது, நண்பர்களாகவே பிரியலாம். இல்லை.. வரோதயனுக்கு உன் தேவை வேண்டியதில்லை என்கிறபோதோ, இல்லை உனக்கு நம் குடும்ப பாரம் சுமையாகத் தெரியும் போது.. தாராளமாக விலகிச் செல்லலாம். இடையில் உனக்கு வேறு யாரும் ஒருத்தனின் மீது காதல் வந்தால், அவனை உன் வாழ்க்கைத் துணையாக அமைக்கவேண்டும் என்று பிரியப்பட்டால், சத்தியம் செய்கிறேன், எந்த சிக்கலும் இல்லாமல், உன் பிரிவுக்குச் சம்மதிப்பேன். அதனால் திருமணம் முடித்ததும், இப்படித்தான் வாழவேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயத்தையும் உனக்கு நான் தரப்போவதில்லை. எந்த உரிமையையும் உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கப் போவதுமில்லை. திருமணம் முடித்த பின்னாடி நாலு பேருக்கு நாம் கணவன் மனைவியாக இருந்தாலும், நம்முடைய வாழ்க்கை இரயில் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளாகத்தான் இருக்கப் போகிறது. என் மனைவி என்ற பேரில், என் மகனின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஒரு சாதாரண பெண்ணாகத்தான் வரப்போகிறாய்.” என்றவன், ஒரு பெருமூச்சோடு,
“நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். இனி முடிவு உன்கையில்தான்…! எந்த முடிவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், நீ என்னை மணக்கச் சம்மதிக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுதலும் கூட.” எனத் தனை சாதாரணமாக முடித்து விட்டான். இவள்தான் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றாள்.
‘ஆதிபனை அவள் மணப்பதா? இது சரி வருமா? அவளையும் மீறி அவன் அருகே இருக்கும் போது சிலிர்த்துப் போகும் மனது நினைவுக்கு வந்தது. அவசரமாக அந்த உணர்வை ஒரு ஓரமாக தூக்கிப் போட்டவள், அவனை மணப்பதால் உள்ள சாதக பாதகங்களை யோசித்தாள். எந்த வகையில் யோசித்தாலும் வரோதயன்தான் கண் முன்னால் வந்து நின்றாள். அவனுக்காகத்தானே அவள் வாழ்கிறாள். அப்படியிருக்கையில் மறுக்க என்ன காரணம் இருக்கிறது? தவிர, இங்கே இருந்துதான் என்ன செய்யப் போகிறாள்? அதுவும் அவளுடைய உயிரான வரோதயன் இல்லாமல், நிம்மதியாக இருக்கமுடியுமா? நினைவே நெஞ்சை வலிக்கச் செய்தது. அங்கே போவதால் அவளுக்கு லாபம்தான் அதிகம். அவளுக்கென்றொரு குடும்பம். பாதுகாப்பான சூழ்நிலை, அவளுக்கே அவளுக்காய் வரோதயன்…! நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது ஏன் மறுக்க வேண்டும்?’ யோசித்தவள், இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இந்த முடிவு சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையில், உங்களை மணக்கச் சம்மதிக்கிறேன்…” என்றாள் தெளிவாய்.
(16) மதிமையின் இருப்பிடத்திற்கு உள் வண்டி நுழைந்ததும், அதை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வெளியே வந்த ஆதிபன், மதிமை…
(15) மறுநாள் காலை பத்து மணியளவில் விழிகளைத் திறந்த மதிமைக்குக் காய்ச்சல் சிறிது விட்டிருந்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவள்,…
(14) திடீர் என்று யாரோ உலுப்புவது போலத் தோன்ற சடார் என்று தன் விழிகளைத் திறந்தான், ஆதிபன். ஒரு கணம்…
(13) தன் வாகனத்தைக் கன வேகத்தில் முக்கிய பாதையில் ஏற்றிய ஆதிபன், சற்று தூரம் சென்ற பிறகு தான் ஒழுங்காக…
(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…
(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா...!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன்…