“ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா…!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன் பார்த்தான் ஆதிபன்.
“ஆனால் எப்படிடா…? ஆரம்பத்திலேயே அவளிடமிருந்து வரோதயனை அழைத்து வர எத்தனை சிரமப்பட்டோம். இப்போது திரும்பவும் அதே தப்பை செய்ய வேண்டுமா?” என்று மறுத்த நண்பனை முறைத்த சபேசன்,
“ஆதிபன், உனக்கு வேறு வழி ஏதாவது இருக்கிறதா? நான்கு நாட்களாகி விட்டன உன் மகனின் காய்ச்சில் நிற்க. தொடர்ந்து தாயைத் தேடி அழுகிறான். இந்த நிலையில் இப்படிப் பிடிவாதம் பிடிப்பது அத்தனை நல்லதில்லை…!” என்று ஆதிபனிடம் சபேசன் கூற, இவனோ மறுப்பாகத் தலையை அசைத்து விட்டு,
“இல்லைடா…! இன்னும் இரண்டு நாட்கள் பார்க்கலாம்…” என்று கூறும்போதே கைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்ததால் ‘பெல் பப்ளிக் பூத்’ என்று திரையில் விழுந்திருந்தது.
அவனுக்கு பெல் பப்ளிக் பூத்திலிருந்து யார் அடிக்கப் போகிறார்கள். குழப்பத்துடன் அழைப்பை ஏற்க முயன்றவன் சற்று நிதானித்தான். சற்றைக்கு முன்புதான் அந்தப் பெண் இவனோடு தொடர்பு கொள்ள முயன்றாள். இவனை அணைத்து வைத்ததும், பொதுத் தொலைபேசி இடத்திலிருந்து அழைக்கிறாளோ. பற்களைக் கடித்தவன், சட்டென்று கைப்பேசியை அணைத்து விட்டுப் பான்ட் பாக்கட்டிற்குள் போட,
அதையே பார்த்திருந்த சபேசன்,
“யார்டா… அந்தப் பெண்ணா…?” என்று கேட்டான். உதடுகளைப் பிதுக்கியவன்,
“தெரியவில்லை… பெல் பப்ளிக் பூத்தில் இருந்து அழைத்திருக்கிறார்கள். ஒரு வேளை அவளாக இருக்கலாம்…” என்றதும்,
“பார்த்தாயா…! அந்தப் பெண்ணும் உன்னோடு தொடர்பு கொள்ள முயல்கிறாள். நான் சொல்வதைக் கேள்…! நம் வரோதயனுக்காகவாவது உன் பிடிவாதத்தை விட்டு அவளை அழைத்து வாவேன்… அவள் வந்தால், வரோதயன் சரியாகி விடுவான்.” என்று கூற,
“போதும் நிறுத்து சபேசா…! அவள் என்ன வைத்தியரா…? உடனே வந்து என் மகனின் காய்ச்சலை நிறுத்த…?”
“அவள் வைத்தியர் இல்லைதான். ஆனால் உன் மகனைத் தாயாக இருந்து வளர்த்தவள். பார்த்தாயில்லையா…? அடிக்கடி அவன் தன் தாயைத்தான் தேடுகிறான். அந்தப் பெண் மிக அருமையாக வரோதயனை வளர்த்தால்தான், அன்னையைத் தேடிக் காய்ச்சலை வாங்கி இருக்கிறான். இதிலிருந்து உனக்குப் புரிய வில்லையா…? ஆதிபா தாயைக் காண முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறான்…” என்ற சபேசன் தன் நண்பனை நெருங்கி, அவனுடைய தோளில் கரத்தைப் பதித்து,
“எனக்கு நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது… ஆனால் பார். வரோதயனுக்குப் பாரதூரமாக ஆகிவிட்டால், அதை உன்னால் தாங்கிக் கொள்ள மடியுமா…?” என்றதும் பதறிப் போனான் ஆதிபன்.
“டேய்…! ஏன்டா இப்படி சொல்கிறாய்? என் வரோதயனுக்கு எதுவும் ஆகாது… ஆகவே ஆகாது…!” என்று உறுதியாகச் சொல்ல…
சபேசனோ, கட்டிலில் சுருண்டு வாடிக் கிடந்த குழந்தையைக் காட்டி, “குழந்தை கிடக்கிற கிடையைப் பார்…! இதைப் பார்த்துமா உன் பிடிவாதம் குறையவில்லை. நான் சொல்வதைக் கேள். போ…! போய் அந்தப் பெண்ணை அழைத்து வா…! அவளைக் கண்டால் உன் மகனுக்கு சரியாகிவிடும்.” என்று அழுத்தமாகக் கூற.
அப்போதும் அசையாமல் கட்டிலில் காய்ச்சலில் வாடி வதங்கிக் கிடந்த குழந்தையைத் தான், பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆதிபன் நான் சொல்வதை நீ கேட்கிறாயா இல்லையா? குழந்தையை இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால், குழந்தையின் காய்ச்சல் நின்று விடுமா? அவன் வந்த நாளிலிருந்து அம்மா அம்மா என்றுதான் பிதற்றுகிறானே தவிர, அவனிடம் எந்த மாற்றமுமில்லை. இதோ பார் ஆதிபன், உன் மகனுக்கு வேண்டியது அந்தப் பெண்ணுடைய அரவணைப்பு மட்டும் தான். தயவு செய்து ஒரு முறையாவது சென்று அவளை அழைத்து வா, இல்லை… வரோதயனை உன் கூட அழைத்துச் சென்று காட்டு.” என்ற நண்பனை என்ன செய்வது என்கிற குழப்பத்துடன் நெற்றியை வருடியவாறு பார்த்தான், ஆதிபன்.
“டேய்! இப்போது சென்று அழைத்து வந்தால், தேவையற்ற தொடசல். உனக்குக் குழந்தையைப் பார்க்கத் தெரியவில்லை, என்னிடம் கொடுத்துவிடு என்று மீண்டும் அதிலேயே நின்றால்? தவிர, இதையே சாக்காக வைத்துக் கொண்டு அவள் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொண்டால்? ஓ… நோ…!” என்றதும், தன் நண்பனைக் கோபத்தோடு பார்த்தான், சபேசன்.
“முட்டாள் போலப் பேசாதே, ஆதிபா…! அப்படியே உன்னோடு ஒட்டுண்ணியாக இருக்க ஆசைப்படுபவளாக இருந்திருந்தால், நீ கொடுத்த அந்த செக்கை மகிழ்ச்சியாகவே வாங்கியிருப்பாள். எனக்கு ஏதோ அந்தப் பெண்ணைத் தப்பாக நினைக்க முடியவில்லை. சரி அதை விடு! ஒரு வேளை வரோதயனின் உயிரைக் காக்க, அந்தப் பெண்ணிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றால், என்ன செய்வாய்? குழந்தையை அப்படியே… சாக…” முடிக்கவில்லை,
“ஏய்…!” என்கிற சீற்றத்தோடு பாய்ந்தவன், சபேசனின் சட்டையை இறுகப் பற்றித் தன்னை நோக்கி இழுத்திருந்தான், ஆதிபன். ஆனால் சபேசனோ, நிதானமாகவே தன் நண்பனைப் பார்த்து,
“அந்த நினைப்பையே உன்னால் தாங்க முடியவில்லையே…! நாளை இப்படி நடந்தால் என்ன செய்வாய், ஆதிபா…?” என்றதும், அப்போதுதான் தான் உணர்ச்சி வசப்பட்டு நண்பனின் சட்டையைப் பற்றிக் கொண்டது தெரிந்தது.
“சா… சாரிடா…” கலக்கத்துடன் கூறியவாறு, தன் கரங்களை விலக்க,
“ஆதிபா…! நாளையை நினைத்துக் கலங்க இது நேரமில்லை. முதலில் வரோதயனின் உடல் நிலையைப் பற்றி யோசி. டாக்டர் சொன்னதை நீயும் கேட்டாய் தானே? அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… மன அழுத்தத்தினால் வந்த காய்ச்சல் என்றார்…” என்று முடிக்க முதல், குறுக்கிட்ட ஆதிபன்,
“விரைவாகவே குணமாகும் என்றார்…” என்றான் பட்டென்று.
“அதற்கு மதிமை இங்கே வரவேண்டும், ஆதிபா…! வரோ குட்டியின் மன அழுத்தம் குறைந்தால் தான் அவனுக்கு காய்ச்சல் நிற்கும். அதற்கு அந்தப் பெண் இங்கே வரவேண்டும். ஆதிபா…! குழந்தையின் பிரச்சனைக்குத் தீர்வு நம் கையிலேயே இருக்கிறது. அப்படி இருக்கையில் இப்படிப் பிடிவாதம் பிடித்தால்…?” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, கட்டிலில் படுத்திருந்த வரோதயனின் உடல் உதறத் தொடங்கியது.
வலிப்பு போல கை கால்கள் இழுத்துக் கொள்ள இருவருமே பதறிப் போனார்கள். இதயம் நின்றுவிடுவேன் என்பது போலப் பலமாக அடிக்க,
“பதறாதே ஆதிபா…! இது காய்ச்சல் வலிப்புதான் (Febrile Seizures) சட்டென்று காய்ச்சல் ஏறியதும் இந்த வலிப்பு வந்து விட்டது போல…” (Febrile Seizures இது 6 மாதத்திலிருந்து 5 வயதுக்கு உட்பட்ட மிக ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தோன்றும் வலிப்பு. இது பெரும்பாலும் தொற்று நோயால் ஏற்படும் காய்ச்சலின் போது தோன்றும். இது வந்ததும் ஒரு சில விநாடிகளில் தானாகவே நின்று போகும். இதற்கு சிகிச்சை தேவையில்லை. இது பரம்பரையாக வரக் கூடிய ஒன்றாகும்.) என்று சொல்ல, தலையை ஆட்டிய ஆதிபன்,
“தெரியும்… தெரியும்…” என்றவாறு மகனை வருடிக் கொடுத்தாலும், அவனுடைய விழிகளில் கண்ணீர் எட்டிப் பார்க்கவே செய்தது. ஒரு சில விநாடிகளில், வலிப்பு அடங்கிய வரோதயன், விழிகளைத் திறந்து,
“அம்மா வந்து விட்டார்களாப்பா…” என்றான் முனங்கலாய். துடித்துப் போனான், ஆதிபன். தன் பிடிவாதத்திற்காக, குழந்தையை நரகத்தில் தள்ளுவதா என்கிற கேள்வி, அவனை மீறி எழுந்தது.
மெதுவாக மகனின் முடியை வாரிக் கொடுத்த ஆதிபன்,
“இதோ… இப்.. இப்போதே போகிறேன்டா.. அம்மாவை அழைத்து வருகிறேன்… அது வரை அமைதியாக உறங்கு.” என்று மென்மையாகக் கூற, அந்த நிலையிலும் பளிச்சென்று மலர்ந்தான், மகன்.
“எப்போ வருவார்கள்பா…?” சோர்வுடன் கேட்டது குழந்தை.
மெதுவாகச் சிரித்தவன், “இதோ… இ… இப்போதே போகிறேன்… அது வரை நல்ல பிள்ளையாகத் தூங்கு சரியா…?” என்று கூற, குழந்தை தலையை ஆட்டியவாறே, ஆம் என்று விட்டு விழிகளை மூட, நனைந்த கண்களைத் துடித்தவாறே எழுந்தவன், தன் நண்பனைப் பார்த்து,
“பார்த்துக்கொள் சபேசா… அவளை அழைத்து வருகிறேன்…” என்று கூற, நிம்மதி மூச்சொன்றை விட்ட சபேசன்,
“அதைப் பற்றி யோசிக்காதே! நீ போய் விட்டு வா. எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம்.” என்றவாறு தன் பான்ட் பாக்கட்டிலிருந்து கார் சாவியை எடுத்து நீட்ட, மறுக்காமல் வாங்கிக் கொண்டான், ஆதிபன்.
இன்னும் குழப்பத்துடன் நின்றிருந்த நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்து,
“போய் வாடா…! எல்லாம் சரியாகிப் போகும்” என்றதும், பெரிய மூச்சொன்றை வெளிவிட்டவன் வீட்டை விட்டு வெளியே வந்தவன், வாகனத்தை நெருங்க முதல் தயங்கி நின்றான்.
அவன் செய்வது சரியா தவறா தெரியவில்லை. ஆனால் மகனின் மன நிம்மதிக்காக இதைச் செய்ய வேண்டித்தான் இருக்கிறது. கூடவே அந்தப் பெண்ணை நினைத்து வருந்தவும் செய்தான்.
அவள் ஒன்றும், அதிக வயதானவள் இல்லையே! சொல்லப் போனால்.. வாழ்க்கை என்றால் என்ன என்று கூட அறியாதவள். அவளுடைய வாழ்க்கையும் தன் மகனால் கெட்டுப் போய் விடுமோ என்கிற கேள்வியும் எழவே செய்தது. தன் மகனுக்காகவே என்றாலும், சுய நலமாக அவனால் சிந்திக்க முடியவில்லை. அதையும் தாண்டி அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது, இவனுக்குள்ளும் ஒரு வித தடுமாற்றம் எழுவதை உணர்ந்தே இருந்தான்.
அது வேறு அவளை நெருங்க அச்சத்தைக் கொடுத்தது. அவளை அழைத்துவரப் பிடிவாதமாக மறுக்க அதுவும் ஒரு காரணம். இப்போது வெறு வழியில்லாமல் புறப்பட்டு விட்டான்.
கூடவே… அவளை அழைத்து வந்த பிறகு என்ன நடக்கும் என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால் அந்தக் கேள்விக்கான பதிலும் புரியவில்லை. குழப்பத்துடன் வாசலில் தயங்கி நின்றவன், ‘அம்மா வந்துவிட்டார்களா?’ என்று கேட்ட மகனின் முகம் நினைவுக்கு வர, வேறு வழியில்லாமல், கடகடவென்று சபேசனின் வாகனத்தை நோக்கி நடந்தான்.
இரவு எட்டு மணி ஆகிவிட்டதற்கு அறிகுறியாக உலகமே இருட்டிப்போயிருந்தது. அவன் மனதைப் போலவே.
அதே வேளை ஒலிவாங்கியை அதன் இடத்தில் வைத்துவிட்டுச் சோர்வோடு சில்லறைக் காசுகளை ஹுடியின் பாக்கட்டிற்குள் போட்டவாறு, குளிருக்கு இதமாகக் கரங்களையும் அதற்குள்ளேயே நுழைத்துக் கொண்டு வெளியே வந்த மதிமைக்குக் காதுகளை அடைத்துக் கொண்டு வந்தன. காய்ச்சல் ஏறுகிறது போல. முணுமுணுத்தவள் வேகமாக நடக்கத் தலைப்பட்டாள். மனமோ தன் மகனை எண்ணியே கலங்கித் தவித்தது. இனி எப்போதுமே வரோதயனைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்காதோ? ஒரு வேளை குழந்தையை அழைத்துக்கொண்டு இலங்கைக்கே போய்விட்டார்களோ…?” நினைக்கும் போதே மீண்டும் கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது.
ஆனாலும் கண்ணீரை அழுந்தத் துடைத்து விட்டு, சோர்வோடு தன் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு வரும் போது தான் கவனித்தாள், அவள் பின்னால் இருவர் தொடர்ந்து வருவதை.
சந்தேகம் தோன்ற, சட்டென்று திரும்பிப் பார்க்க, பளிச்சென்று எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கில் நின்றிருந்தனர், அவர்கள். அதில் ஒருத்தன் எந்த உணர்ச்சியும் காட்டாமல், அவளையே வெறிக்க, அதிர்ந்து போனாள், மதிமை.
சற்றைக்கு முன்பு அவள் வெளியேறிய போதுதான் அவர்களைக் கண்டாள். இப்போது அவள் பின்னே நிற்கிறார்கள் என்றால், பின் தொடர்ந்து வருகிறார்களா? அச்சத்தில் வயிற்றில் புளியைக் கரைத்தது. இதயம் வாய்க்குள் வந்து துடித்தது. அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது.
அவசரப்பட்டு வெளியே வந்து விட்டாளோ? விடியும் வரைக்கும் காத்திருந்திருக்க வேண்டுமோ? பொதுவாக ஆறு ஏழு மணியோடு வீட்டிற்குள் முடங்கிக் கொள்பவள்தான் அவள். ஆனால் வரோதயன் இல்லாததால் புத்தி தெளிவாக யோசிக்க மறுத்தது. எப்படியாவது அவனோடு பேசிவிடவேண்டும் என்கிற உந்துதல், எதைப் பற்றியும் யோசிக்க விடாமல், அவளை வெளியே வரவழைத்து விட்டது. கலக்கத்துடன் அவசரமாகத் தன் வேகத்தை மதிமை கூட்டத் தொடங்க, பின் தொடர்ந்தவர்களும் தம் வேகத்தைக் கூட்டினார்கள்.
இதயம் வாய்க்குள் வந்து துடித்தது. இன்னும் கொஞ்சத் தூரம் திரும்பினால், குடியிருப்பின் எல்லைக்குள் போக முடியும். கடவுளே, என்று முனங்கியவாறு இப்போது ஓடத் தொடங்க, சட்டென்று அவள் முன்னால் வந்து நின்றான், ஒருவன்.
பதறிப்போனாள் மதிமை. அச்சத்தில் விழிகள் தெறித்து விழும் என்பன போல விரிய, இதயத்தின் ஓசை காதில் கேட்டது. அவனிடமிருந்து தப்ப எண்ணியவளாகத் திரும்பியவளை, மறைத்தவாறு நின்றிருந்தான் மற்றொருவன்.
அடுத்து என்ன செய்வது என்று தயங்கி நின்றது, ஒரு சில விநாடிகள் மட்டுமே.
சட்டென்று தன் பாதையை மறைத்துக் கொண்டிருந்தவனை ஒரு தள்ளுத் தள்ளியவள், வேகமாக ஓடத் தொடங்க, மறு கணம் அவள் அணிந்திருந்த ஹுடியின் பின்புறம் சுருட்டிப் பிடிக்கப் பட்டது. கூடவே இழுத்துப் பின் புறமாக அவள் அசையா வண்ணம் அணைத்துப் பிடிக்கத் திமிறியவாறு, சீறும் வேங்கையெனத் திரும்ப முயன்றாள். அந்த உடும்புப் பிடியிலிருந்து அவளால் விலகக் கூட முடியவில்லை. அதைக் கண்டு ஏளனப் புன்னகையுடன் மற்றவன் இவளை நோக்கி வந்தான்.
வந்தவன் பான்ட் பாக்கட்டிலிருந்து ஒரு சிறிய பெட்டியை வெளியே எடுத்துத் திறக்க, அதில் மருந்தை ஏந்தியவாறு சமத்தாக படுத்திருந்தது ஊசி ஒன்று.
அந்த ஊசியைக் கரத்தில் எடுத்து, ஒரு துளி திரவத்தை வெளியேற்றியவன், அவளை நோக்கி முன்னேறி, அந்த மருந்தை அவளுக்குச் செலுத்தும் நோக்கில் கழுத்தை நோக்கி எடுத்து வர, எங்கிருந்துதான் அத்தனை பலமும் வேகமும் வந்ததோ, திமிறியவள், முன்னால் நின்றிருந்தவனின் ஆண்மையில் முழங்காலை மடித்து ஒரு எத்து எத்திவிட்டு, சற்றும் தாமதிக்காமல் பின் பக்கம் நின்று அணைத்துப் பிடித்திருந்தவனின் தலையில் தன் தலையால் ஓங்கி அடிக்க, இவளுக்குத்தான் பொறி கலங்கியது.
அதே நேரம் உதை வாங்கியவன் சுருண்டு விழ, அணைத்திருந்தவனின் கரங்களும் சற்று விலக, சட்டென்று அந்தப் பிடியை உதறிவிட்டு ஓட எத்தனித்தவளின் ஹுடி இன்னும் பின்னால் நின்றிருந்தவனின் கரங்களில் சிக்கிக் கொண்டது.
சற்றும் யோசிக்காமல் தன் ஹுடியின் இழுப்பை விலக்கி உதறிவிட்டு ஓட, அவளுடைய ஹுடி அந்தக் கயவனின் கரத்தோடு சென்று விட்டிருந்தது.
ஆனாலும் இவள் நிற்காமல் பாய்ந்து ஓட போதாத நேரம், கால் அங்கிருந்த மரவேரில் தட்டுப்பட்டு சமநிலை தவறிப் பொதார் என்று தரையில் குப்புற விழுந்தாள். நெற்றியோ சரியாக அங்கிருந்த ஒரு கல்லில் பலமாக மோதிக் கொண்டது.
அந்தக் கயவர்களிடமிருந்து தப்பும் உத்வேகம் பலவீனத்தை முற்றாக மறைத்திருந்தது. தலை விண் விண் என்று தெறித்தாலும், குழந்தைபோல இரண்டடி தவழ்ந்தவள், அடுத்த கணம் அம்பென எழுந்து ஓடத் தொடங்கினாள்.
மதிமையின் ஹுடியைக் கரத்தில் பற்றி இருந்தவன், அதைத் தூக்கி வீசிவிட்டுத் தரையில் கிடந்து புரண்ட நண்பனை நோக்கிப் பாய்ந்தான். அவனோ கீழ்புறத்தைப் பற்றி முனங்கியவாறு சிரமப்பட்டு எழுந்தவன், பற்களைக் கடித்து,
“அவளை விடக் கூடாது… விடவே கூடாது…” என்றான் ஆத்திரத்தோடு.
பின், அங்கும் இங்கும் தேடினான். தரையின் ஓரமாக விழுந்திருந்த ஊசியைக் கண்டதும், அதை எடுத்து மீண்டும் பெட்டியில் வைத்துப் பான்ட் பாக்கட்டிற்குள் செருகிவிட்டு, மதிமை சென்ற திசை நோக்கி ஆவேசத்துடன் பாய, அவனுடைய நண்பனும் சேர்ந்து ஓடத் தொடங்கினான்.
அதே நேரம் புயலென ஓடிக்கொண்டிருந்த மதிமைக்கு, உடல் மெல்ல மெல்லத் தளரத் தொடங்கியது. குளிர் ஊசியாகக் குத்தியது. வீட்டிலிருந்த ஆடையோடுதான் வெளியே வந்திருந்தாள். இப்போது ஹுடி இல்லை என்றதும் கையில்லாத பெனியனுக்கூடாக பயங்கரமாகக் குளிர்ந்தது.
இரத்தம் வேறு நெற்றியிலிருந்து வழிந்து, உள்ளே அணிந்திருந்த வெண்ணிற பெனியனைச் செந்நிறமாக மாற்ற முயன்றுகொண்டிருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாதவளாக, அங்கிருந்த மரம் ஒன்றைப் பற்றியவாறு நின்று விட்டாள், மதிமை.
எப்படி அங்கிருந்து தப்புவது என்று மதிமைக்குச் சுத்தமாகத் தெரியவில்லை.
அதே வேளை, எதிர்பார்த்தது நடக்கவில்லை என்கிற ஆத்திரத்தில், அந்தப் போதைப் பிரியர்கள் தம் நண்பர்களுக்கும் செய்தி அனுப்பியிருக்க வேண்டும். கீழே இறங்கிய மின்தூக்கியிலிருந்து நான்கைந்து பேர், வெளியே வந்து அவளை அங்கும் இங்கும் தேடத் தொடங்கினர்.
சற்று நேரம் ஒரு மரத்தைப் பற்றியவாறு ஆசுவாசப் படுத்தி நின்ற மதிமை, பின்னால் அரவம் கேட்க, ஒரு கணம் விறைத்தவளாக நின்றாள். அடுத்த கணம், அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடத் தொடங்க, முன்னால் ஒரு சிலர் வருவது தெரிந்தது.
அந்தக் காண்டா மிருகங்களைக் கண்டதும் புரிந்து போனது மதிமைக்கு, அவளைத் தேடுவதற்காக ஆட்களை வரவழைத்து விட்டார்கள் என்று.
பதட்டம் மேலும் எகிறச் சுத்தவரப் பார்த்தாள். மரங்களுக்கு மத்தியிலிருந்த அவள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் அவளுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர் மட்டுமே. ஆனால் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் என்று உணர வைத்தது அந்த சூழ்நிலை.
நல்லவேளை அவள் நின்றிருக்கும் திசையில் மட்டும் தான் விளக்கில்லை. அதனால் மறைந்திருப்பதும் சுலபம். வெளிச்சத்திற்கு வந்தால், அவளைக் கண்டு கொள்வார்கள். அந்த மரத்தோடு ஒட்டி நின்றவள், பான்ட் பாக்கட்டைத் தடவி கைப்பேசியை எடுத்து உயிர்ப்பித்தாள்.
அவசரத்திற்கு யாரை அழைப்பது என்று தெரியவில்லை மதிமைக்கு.
சட்டென்று மனதில் வந்தது ஆதிபன் மட்டுமே. பல முறை அவனை அழைத்தும் அவளுடைய அழைப்பை அவன் எடுக்கவில்லை என்பது புத்தியில் ஏறாமல், அவனுடைய இலக்கத்தை அழுத்திக் காதில் வைத்தாள். கரங்களோ பயங்கரமாக நடுங்கின. எங்கே கைப்பேசி விழுந்து விடுமோ என்று அஞ்சியவளாகக் கைப்பேசியை இறுகப் பற்ற, அழைப்பு போனதன்றி, அவன் கைப்பேசியை ஏற்கவில்லை. சற்று பொறுத்து, ‘சாரி ஐ மிஸ் யுவர் கால்…’ என்கிற குரல் அஞ்சல் வர, அழுகையோடு கைப்பேசியை அணைத்தவளுக்கு, அப்போதுதான் காவல்துறையின் நினைப்பே வந்தது.
ஐயோ… அவனை அழைத்த நேரத்திற்கு காவல்துறையை அழைத்து இருக்கலாமே. தன்னையே திட்டியவாறு 911 அழுத்த முயன்ற நேரம், அந்த எதிரிகளின் கண்களுக்கு மரங்களுக்கு மத்தியில் மின்னிய வெளிச்சம் தென்பட, அதைச் சுட்டிக்காட்டி அவள் நின்ற திசை நோக்கிப் பாய்ந்து வர, சலசலப்புக் கேட்டு இலக்கத்தை அழுத்தாமலே திரும்பிப் பார்த்தாள், மதிமை.
அவள் நின்றிருந்த திசை நோக்கி அந்தக் காண்டா மிருகங்கள் வருவது தெரிந்தது. பதறியவளாகக் கைப்பேசியை மீண்டும் பான்ட் பாக்கட்டிற்குள் திணித்தவள், சட்டென்று அந்த இடத்தை விட்டு மரங்களுக்கு மத்தியில் வேகமாக நடக்கத் தொடங்கினாள். ஓடுவதற்குச் சுத்தமாக அவளிடம் தெம்பு இருக்கவில்லை.
அதே நேரம் காலடியோசை மிக அருகே கேட்கத் தொடங்க, சட்டென்று ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டவளுக்கு, மயக்கம் வரும் போலத் தோன்றியது.
நாலா திசையும் நின்றிருந்த அந்த எதிரிகளுக்கு மத்தியில் எப்படித் தப்பிப்பது என்று சுத்தமாகத் தெரியவில்லை மதிமைக்கு.
அவர்களில் குறைந்தது ஏழு பேராவது இருப்பார்கள். இவள் ஒருத்தி. நிச்சயமாகத் தப்ப வாய்ப்பில்லை. இவளைப் பிடித்தால் என்ன செய்வார்கள். பாலியல் வன்புணர்வு செய்வார்களா? இல்லை… வேறு வேறு தேசத்திற்குப் பாலியல் அடிமையாக அனுப்புவார்களா? அப்படி நடந்தாலும் ஏன் எதற்கு என்று கேட்க ஒரு நாதியுமில்லை. இவளைக் காணவில்லை என்றால், விசாரிக்கக் கூட ஆட்களில்லை.
இயலாமையில் கண்கள் கலங்க, நின்றவளுக்கு அவள் பக்கமாக எதிரிகள் வருவது தெரிந்தது. மரத்தோடு ஒட்டி நிற்க, அவள் நின்ற இடத்திற்கு மிக அருகாமையில் வந்த ஒருவன் அங்கும் இங்கும் பார்த்தான். அடுத்து இவள் நின்றிருந்த மரத்தை நோக்கி வர, சற்றும் யோசிக்காது கண்ணிமைக்கும் நொடியில் தரையில் விழுந்து சுழன்று சற்றுப் பெரிய ஊசியிலை மரத்திற்குப் பின்னால் சென்று அமர்ந்தவாறு எட்டிப் பார்த்தாள். அவர்கள் சற்று முன் நின்றிருந்த மரத்தடியில் நின்றவாறு ஒருத்தன் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்.
நிச்சயமாக அவளால் அந்தக் கட்டடத்திற்குள் நுழைய முடியாது. வெளியேதான் போக வேண்டும். மூச்சைப் பிடித்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தாள். பாதைகள் இருந்த பக்கமாக அவர்கள் நின்றிருப்பது தெரிந்தது. யாராவது ஒருவரைத் திசை திருப்ப வேண்டும். ஆனால் எப்படி…? குழம்பியவளின் விழிகளில் சற்றுத் தள்ளியிருந்த பெரிய குப்பைத் தொட்டி கண்ணில் பட, சின்ன ஒலி கூட ஏற்படுத்தா வண்ணம், அந்தக் குப்பைத்தொட்டியை நோக்கி ஓட, அந்த மெல்லிய சலசலப்பும் எதிரிகளின் கவனத்தைச் சற்றுத் திசைதிருப்பவே செய்தது.
அவர்கள் வேகமாக சத்தம் வந்த திசை நோக்கிச் சென்று பார்த்தனர். கண்ணுக்குச் சந்தேகப்படும்படி எதுவும் தெரியவில்லை.
அதே நேரம் குப்பைத் தொட்டிக்குப் பின் புறமாக மறைந்து நின்றிருந்த மதிமை வேறு யாரும் கண்களுக்குத் தென்படுகிறார்களா என்று பார்த்தாள். யாருமில்லை. அப்படியே வெளியே ஓடிவிட வேண்டியதுதான் என்கிற முடிவோடு, வெளியேறத் தொடங்க, யாரோ அந்தப் பக்கமாக நடந்து வருவது தெரிந்தது. சட்டென்று தொட்டிக்குப் பின்பாக மறைந்து நின்றுகொண்டாள், மதிமை.
வருவது யார் என்று தெரியவில்லை. ஒரு வேளை அந்தக் கயவர்களின் ஆளாக இருந்தால்? அச்சம் பயங்கரமாக எழுந்தது. எப்போதும் மூக்கைச் சுழிக்கும் அந்தக் குப்பைத் தொட்டிதான் தற்போது அவளுக்குக் கிடைத்த கவச குண்டலம் போல, அதனோடு ஓட்டி நின்றுகொண்டாள், மதிமை.
அதே நேரம் மிக அருகாமையில் இருவர் பேசும் குரல் இவள் செவிகளில் விழுந்தது.
“இல்லை… அவள் எங்கும் போயிருக்க முடியாது… இங்கேதான் இருட்டில் எங்காவது மறைந்திருப்பாள்… தேடுங்கள்…” என்கிற குரலில் சர்வமும் அடங்கியவளாக அந்த தொட்டியில் பல்லியென ஒட்டியவாறு நின்றுகொண்டாள் மதிமை.
(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…
(9) புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க, தன் விழிகளாலேயே நண்பனிடம்…
(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய…
(5) அன்று சனிக்கிழமை. அரக்கப் பரக்க வரோதயனைத் தயாராக்கி, தானும் தயாராகி அவளுடைய குடியிருப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிற குழந்தை காப்பகம்…
(4) மிக வேகமாக ஓடிக் கொண்டு இருந்த வாகனத்தின் பின் இருக்கையில், அவளும், அவளது தாயும் அமர்ந்தவாறு குதுகலத்துடன் எதையோ…
(3) ‘கனடிய ஏர்லைன் தரையை முத்தமிட்டுச் சற்று தூரம் ஓடிக் குறிப்பிட்ட இடத்தில் நிற்க அத்தனை பயணிகளும் கட கட…