மிக வேகமாக ஓடிக் கொண்டு இருந்த வாகனத்தின் பின் இருக்கையில், அவளும், அவளது தாயும் அமர்ந்தவாறு குதுகலத்துடன் எதையோ கிண்டலும் கேலியுமாகப் பேசிக்கொண்டு வர, முன்பக்க இருக்கையில் பன்னிரண்டு வயதை எட்டியிருந்த அவளுடைய குட்டித் தம்பி அமர்ந்திருந்தான். வண்டியை ஓட்டியவாறு, அவளுடைய தந்தை அருகே அமர்ந்திருந்த தன் மகனோடு குறும்புச் சேட்டை செய்து கொண்டிருந்தார்.
தன் மகனிடம் எதையோ சொல்லியவாறு அவனுடைய தலையைக் கலைத்துவிட, அந்தப் பன்னிரண்டு வயதுக்கே உரித்தான கோபத்தோடு, கலைத்துவிட்ட முடியைச் சரியாக வாரிவிட்டவாறு, திரும்பித் தாயிடம் எதையோ பேச முயன்ற நேரம், ஒரு திருப்பத்தில் தந்தை வண்டியைத் திருப்ப ஆரம்பித்த வேளையில், முன்புறமிருந்து பாரிய பொருட்களை ஏற்றியவாறு அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தது அந்த சுமையுந்து.
அதுவும் அந்த சுமையுந்துவை ஓட்டிவந்த ஓட்டுனருக்கு அவரையும் மீறி தூக்கம் வர, தன்னையும் அறியாமல் விழிகளை மூடிய நேரம், கட்டுப்பாட்டை இழந்த சுமையுந்து, இவர்களின் வாகனத்தை நோக்கிப் பாய்ந்தது.
“பாம்… பூம்…. க்ரீரீரீச்… பாம்….”
சடார் என்று விழிகளைத் திறந்தவாறு எழுந்தமர்ந்தாள், மதிமை. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. தேகம் பயங்கரமாக நடுங்கியது. சுவாசக் காற்று வெளி வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, வலக்கரத்தால் நிற்கத் துடித்த இதயத்தைப் பலமாக அழுத்திக் கொடுத்தவாறு வாயைத் திறந்து மூச்செடுக்க முயன்று தோற்று, முயன்று தோற்று இறுதியாகக் கடும் முயற்சியால் ஒரு கேவலுடன் சுவாசம் வெளியே பாய, அவசரமாக நின்ற சுவாசத்தை மீளப் பெற்றுக்கொண்ட அவசரத்தோடு இன்னொரு முறை மூச்சை உள்ளிழுத்து விட்டவளுக்கு, இன்னொன்றும் தோன்றியது.
பதட்டத்துடன் திரும்பியவள் தன்னருகே படுத்திருந்த அந்தச் சின்ன உருவத்தை ஏறிட்டாள். அந்தச் சிறிய உருவம் அசைவின்றிப் படுத்திருந்தது. எப்போதும் போல திக்கென்றான பயத்தோடு, குழந்தையைப் போர்த்தியிருந்த போர்வையை இழுத்து விலக்க, நான்கு வயதை எட்டாத அந்தக் குழந்தை, விழிகளை மூடியவாறு அசைவின்றிப் படுத்திருந்தது.
ஒரு வித நடுக்கத்தோடு, அதன் மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்தாள்.
சுவாசம் வருகிறதா இல்லையா? அச்சத்தில் இரத்தம் வடிந்து செல்ல, மீண்டும் சுவாசம் வருகிறதா என்று உன்னிப்பாக அவதானித்தாள். ஏற்கெனவே பதறிப் போனவளுக்கு எதுவும் தெரியவில்லை. கண்கள் கலங்க.
அந்த உருவத்தின் தோளில் கரத்தைப் பதித்து உலுக்க, இப்போது தூக்கத்தில் மெதுவாக அசைந்தது அந்த உருவம்.
அதுவரை அழுத்தியிருந்த பாரம், மாயமாக மறைந்து போக, அழுகையும், நிம்மதியுமாக ஒரு பெரிய மூச்சை வெளியே விட்டவள், குனிந்து குழந்தையின் தலைமுடியில் உதடுகளைப் பதித்து விட்டு தட்டிக் கொடுக்க, உடனே உறங்கிப் போனது குழந்தை.
கொஞ்ச நேரத்தில் எப்படி பயந்து போனாள். வாழ்வில் நடந்த அவலத்தை மறக்க மறுக்கும் மனம், இப்படித்தான் தேவையற்று எதை எதையோ எண்ணிக் கலங்கிப் போகிறது.
சோர்வோடு எழுந்தவள், குளியலறை சென்று, அவசரத் தேவையை நிறைவு செய்து விட்டு, கைகழுவும் தொட்டியின் முன்னால் வந்து நின்றாள். தண்ணீரைத் திறந்துவிட்டு நிமிர்ந்த போது, கண்ணாடியில் அவளுடைய முகம் தெரிந்தது.
நான்கு வருடங்களாக, மகிழ்ச்சியைத் தொலைத்த முகம் கண்ணாடியில் வாடித் தெரிந்தது. சற்று முன் கண்ட கனவின் அழுத்தத்தினால் வெளுறிப்போன முகத்தைக் கண்டு சலிப்புற்றவளாகக் கரங்களைக் கழுவியவள், தண்ணீர் அள்ளி முகத்தைக் கழுவிவிட்டுக் குழாயை மூடியவாறு, பக்கத்தில் தொங்கிய சிறிய துவாயை இழுத்து எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தாள்.
மீண்டும் துவாயை அந்த இடத்தில் போட்டு விட்டு, வெளியே வந்த போது, படபடப்பு பெருமளவில் குறைந்திருந்தது.
மீண்டும் படுக்கையை நோக்கி வந்தவள், விளக்கு மேசையில் உயிரூட்டப் பட்டுக் கொண்டு இருந்த கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பாரத்தாள். அதிகாலை மூன்று மணி என்றது கடிகாரம்.
பெருமூச்சோடு, படுக்கையில் அமர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள்.
இவள் பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்தது குழந்தை. அந்தக் குழந்தையைக் கண்டவளின் முகம் கனிந்து குழைந்து போயிற்று.
அவளுக்குக் கிடைத்த வரப்பிரசாதமல்லவா அந்தக் குழந்தை. அந்தக் குழந்தை மட்டும் அவளுடைய கரங்களுக்குக் கிடைக்காமல் போய் இருந்தால், அவள் என்னவாகி இருப்பாள்? நிச்சயமாக சுயம் தொலைத்திருப்பாள். முட்டாள்தனமாக தவறாக எதையாவது செய்து தொலைத்திருப்பாள். அந்த அவலத்திலிருந்து அவளைக் காக்க வந்த தெய்வம்தான் அந்தக் குழந்தை.
கண்கள் கனத்துப் போகக் குனிந்து குழந்தையின் தலையில் முத்தமிட்டாள், மதிமை.
மனம் அவளுடைய அனுமதியைக் கேட்காமல், கடந்து வந்த வருடங்களைத் தேடிப் போனது.
அன்று மகிழ்ச்சியாக குதுகலமாக மொன்ட்ரியல் போய் விட்டு, திரும்ப டொரன்டோ வந்தபோது ஏற்பட்ட வாகன விபத்தில், மொத்தமாய் அவள் தந்தை, தாய், தம்பியைப் பறிகொடுத்து விட்டு, இரண்டு கிழமைகள் உயிரோடு போராடி மீண்டு வந்தவள்தான், மதிமை.
சுயநினைவு வந்த போது, அவளோடு பயணித்த தாய் தந்தை தம்பி அத்தனை பேரும் உயிரோடு மீளவில்லை என்பதை அவள் அறிந்த போது, அவளுடைய உலகமே முழுதாக மரித்துப் போயிருந்தது. ‘அழக் கூடத் திராணியற்று, அத்தனை பேரையும் தொலைத்து விட்டு, அவள் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்?’ என்று நடைபிணமாய் இருந்தவள், ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு அந்த மருத்துவமனையிலேயே தன் உயிரை நீக்க முயற்சி செய்த போது, எப்படியோ அவளைக் காப்பாற்றி விட்டார்கள்.
ஆனாலும் முழுதாக தன்னிலைக்கு வராமல் கிடந்த அந்த நேரத்தில், அவள் மடியில் பூம்பந்தாகப் போடப்பட்டவன்தான், வரோதயன். பிறந்து ஒரு சில நாட்களேயான அந்தக் குழந்தை, அவளுடைய மடியில் கிடந்து நெளிந்து உதடுகளைப் பிதுக்கி அழத் தொடங்கிய போது, உள்ளே மடிந்து போன உணர்வுகள் சற்று துளிர்விடத் தொடங்க, மெல்ல மெல்ல தன்னிலை பெறத் தொடங்கினாள், அந்தப் பூம்பாவை.
புதிதாய் ஒரு உயிர் அவள் மடியில் கிடந்து நெளிந்த போது, அதுவரையிருந்த அழுத்தம் விடைபெற்றுச் செல்ல, தன்னை மறந்து குழந்தையை எடுத்து அணைத்தவாறு நிமிர்ந்து பார்க்க, வெள்ளையினத்துப் பெண் ஒருத்தி இவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
கண்கள் கலங்கிப்போக, கரத்தில் கிடந்த குழந்தையைப் பார்த்தவாறே, “யார் நீங்கள்?” என்றாள். விழிகள் மட்டும் குழந்தையை விட்டு விலகவேயில்லை.
“நான் கிளாரியா…! இங்கேதான் வேலை செய்கிறேன். மனதளவில் விரக்தியானவர்களைத் தேற்றி நல்ல நிலைக்குக் கொண்டு வருவது என் கடமை. உன்னைப் பற்றியும், உன் குடும்பத்திற்கு நடந்த விபத்து பற்றியும் அறிந்தேன். அதுதான் உன் கூடப் பேசிப்பார்க்கலாம் என்று வந்தேன். எப்படியிருக்கிறாய்?” அதைக் கேட்டபோதே மழுக் என்று கண்ணீர் கன்னத்தை நனைத்துச் சென்றது மதிமைக்கு.
‘அவளுடைய வலியைப் போக்க இவர்களால் முடியுமா என்ன? சுலபத்தில் துடைத்தெறியும் வலியா அவளுடையது. இதைச் சொன்னால் எங்கே புரிந்துகொள்ளப் போகிறார்கள்?’ உதடுகளை அழுந்த மூடியவாறு, மடியில் தவழ்ந்த அந்தப் பிஞ்சு சிசுவின் தலையை வருடிக் கொடுத்தவாறு,
“இது… இது யார் குழந்தை…?” என்றாள்
“இங்கே பக்கத்தில்தான்…” என்ற அந்தத் தாதி, அவளுக்கு அருகே அமர்ந்து,
“உன் நிலை பற்றி அறிந்தேன்… அதுதான் உன் மனதை திசை திருப்ப இந்தக் குழந்தையை உன் மடியில் கிடத்தினேன்.” என்றவர், தலை குனிந்திருந்தவளின் தோள்களில் தட்டிக் கொடுத்து,
“ஒரு உறவு உன்னை விட்டுப் போனால், கடவுள் உனக்கு புது உறவுகளைத் தரப்போகிறார் என்று அர்த்தம். மனதைப் போட்டு வதைக்காதே…!” என்றவர் அவள் மடியிலிருந்த குழந்தையை வேதனையோடு பார்த்தார்.
“நீ இழந்தவர்களை எண்ணி வருந்துகிறாய். இவனைப் பெற்றவள், இவனைப் பெற்றதை எண்ணிக் கலங்கி நிற்கிறாள். இதுதான் விதியின் விளையாட்டு! மதிமை… இழந்தவர்களை மீளப் பெற முடியாதுதான். ஆனால், உன்னை மீளப் பெற முடியும், இல்லையா…? முயன்றால் முடியாதது எதுவுமில்லை…!” என்றவர் கொஞ்ச நேரம் அந்தக் குழந்தையை அணைத்திருக்க அனுமதித்துவிட்டு் குழந்தையை வாங்கக் கரத்தை நீட்டியபோது, இவளுக்கு அந்தக் குழந்தையை மீளக் கொடுக்க சுத்தமாக முடிந்திருக்கவில்லை.
முதலில் மறுப்பாகத் தலையசைத்தவள், “கொஞ்ச நேரம் வைத்திருக்கிறேனே…” கெஞ்ச,
சிரித்த கிளாரியா “சரி…” என்றாள். கொஞ்ச நேரம் அவள் அந்த சிசுவைக் கையாளும் முறையை உன்னிப்பாகக் கவனித்தார். அடிக்கடி அவருடைய விழிகள் மதிமையின் முகத்தையும் அளவிடத் தவறவில்லை.
அங்கே தெரிந்த பாசத்தையும், அன்பையும் கண்டு நெகிழ்ந்துபோனார்.
குடும்பத்தை இழந்ததால் மனமுடைந்து தன்னையே அழிக்க முயன்றவள் என்று இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். சற்று நேரம் அமைதியாகக் கடந்த பின்,
“இப்போது பரவாயில்லையா உனக்கு…” என்று மென்மையாகக் கேட்கத் தலையை நிமிர்த்தி கிளாரியாவைப் பார்த்தவள், ஆம் என்று ஆட்ட,
“குட்… குழந்தைகள் சுலபத்தில் மனிதர்களின் வலியைப் போக்கிவிடுவார்கள் இல்லையா…!” என்றவாறு குழந்தையை வாங்கக் கரத்தை நீட்ட, இவளோ குழந்தையைத் தன்னோடு இறுக அணைத்தவாறு, ‘இதை உனக்குக் கொடுக்க வேண்டுமா?’ என்பது போலக் கிளாரியாவைப் பார்த்தாள்.
“நேரம் போகிறது… நீயும் ஓய்வெடுக்க வேண்டும்.” கனிவுடன் கூற,
“இவனை நானே எடுத்து வரவா?” என்றாள் ஆவலாக.
“அதனால் என்ன? வா…!” என்று அனுமதி கொடுக்க, அந்தக் குழந்தையைப் பக்குவமாகத் தூக்கியவாறு கட்டிலை விட்டு இறங்கியவள், அந்தத் தாதியின் பின்னால் நடந்து செல்லத் தொடங்கினாள்.
சற்றுத் தூரம் சென்றதும், ஒரு அறையைத் திறந்து உள்ளே செல்ல, கரிய நிறக் கூந்தலுக்கு செம்பட்டை நிற வர்ணம் பூசிய இந்தியப் பெண் ஒருத்தி, சோர்வோடு சாய்வாக அமர்ந்திருந்தாள். அழுதிருந்தாள் போலும். கண்கள் சிவந்து முகம் கசங்கியிருந்தது.
இவர்களைக் கண்டதும், தன் தலையை மறுபக்கமாகத் திருப்ப, அந்த முகத்திருப்பலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கிளாரியா,
“இப்போது எப்படி இருக்கிறது அணுரேகா…?” என்றார் மென்மையாக.
“இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம். தயவு செய்து இதை யாருக்காவது தத்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். என்னால் இந்தக் குழந்தையின் பொறுப்பை எடுத்துக் கொள்ள முடியாது…!” ஆத்திரத்துடன் கத்த,
உடனே மதிமையின் பக்கமாகத் திரும்பிய கிளாரியா, அவள் கரத்திலிருந்த குழந்தையைத் தன் கரத்திற்கு மாற்றியவாறு,
“இனி நீ உன் அறைக்குப் போ. இவளோடு பேசவேண்டியது நிறையவே இருக்கிறது.” சட்டென்று அங்கிருந்து அவளை அப்புறப் படுத்த முயல, புரிந்து போனது மதிமைக்கு.
இன்னொருத்தரின் தனிப்பட்ட விபரம், மூன்றாம் நபருக்குத் தெரியக் கூடாது. குறிப்பாக நோயளர்களினது. மறுக்காமல் அந்த அறையை விட்டு வெளியே வந்தாலும், அந்த இடத்தை விட்டு அவள் நகரவில்லை.
மாறாகக் காதுகளை நன்றாகத் தீட்டியவாறு, அங்கே என்ன பேசுகிறார்கள் என்பதை அவதானிக்கத் தொடங்கினாள்.
“சரி, உன்னால் குழந்தையை வைத்திருக்க முடியாது. குறைந்தது இவனுடைய தந்தை யார் என்றாவது சொல். அவரிடம் பேசிப் பார்க்கிறேன்.”
“இவனுடைய தந்தை எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. தவிர, அவருக்கு இப்படி ஒரு குழந்தை உருவாகியதே தெரியாது.” என்றவள் ஆழ மூச்செடுத்து விட்டு,
“கிளாரியா…! என்னால் இந்தக் குழந்தையை சரியாக வளர்க்க முடியாது. பார்த்துக் கொள்ளவும் முடியாது. தயவு செய்து தத்துக் கொடுத்து விடுங்கள். ப்ளீஸ்…!”
“அது அத்தனை சுலபமில்லை. அதுவும் பெற்றவள் இருக்கும் போது வாய்ப்பே இல்லை. இதற்கு நிறைய சட்டச் சிக்கல்கள் உண்டு. தவிர, தத்தெடுக்க வருபவர்கள் குழந்தையை சரியாக வளர்ப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பெற்றவள் குழந்தையை வளர்ப்பது போல மற்றவர் வளர்ப்பார்களா, சொல்?” என்று கேட்க ஏளனத்துடன் சிரித்த அணுரேகா,
“என்னைப் பெற்றவர்கள் என்னைச் சரியாக வளர்த்திருந்தால், நான் இன்று இப்படி இருந்திருக்க மாட்டேனே…!” என்றாள் விரக்தியாக. பின் ஒரு தலையசைப்புடன்,
“எதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை… இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…” உறுதியாகக் கூற, கடைசியில் தன் முயற்சியைக் கைவிட்ட கிளாரியா,
“இதுதான் உன் முடிவென்றால், அதற்கான ஆவன செய்கிறேன். அது வரை குழந்தை உன் கூட இருக்கட்டும்.” என்று அருகேயிருந்த தொட்டியில் குழந்தையை வைத்து விட்டு, வெளியே வர, வெளியே நின்றிருந்த மதிமையைக் கண்டு புருவங்களைச் சுருக்கி,
“இங்கே நீ என்ன செய்கிறாய்?” என்றார் கறாராக.
இவளோ க்ளோரியாவை நேராகவே பார்த்து அதிகம் சுத்தி வளைக்காமல், “குழந்தையை நான் வளர்த்துக் கொள்ளவா…?” என்றாள் ஆவலாக. அதைக் கேட்ட அதிர்ந்த கிளாரியா,
“உனக்கென்ன பைத்தியமா…? அதெல்லாம் முடியாது…!” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டு நடக்கத் தொடங்க, அவர் பின்னால் ஓடியவாறே,
“ஏன்? ஏன் முடியாது…? என்னால் முடியும்…! என் தம்பியை வளர்த்தது நான்தான். என்னால் நிச்சயமாக ஒரு குழந்தையை வளர்க்க முடியும். ப்ளீஸ்… நீங்கள் அந்தக் குழந்தையை என் மடியில் போட்டபோதே, அதனோடு சொல்ல முடியாத பிணைப்பு எனக்கு வந்துவிட்டது. அவனை என்னிடமே கொடுத்து விடுங்களேன்…” என்று கெஞ்ச, நின்று திரும்பி மதிமையைப் பார்த்த கிளாரியா,
“நிச்சயமாக அதுக்கு வாய்ப்பில்லை. நீ மனதளவில் பாதிக்கப்பட்டவள். உன்னிடம் குழந்தையை ஒப்படைக்க, இந்த மருத்துவமனை மட்டுமில்ல, யாருமே சம்மதிக்க மாட்டார்கள். தவிர, குழந்தையை கணவன் மனைவியாக இருக்கிறவர்களிடம் மட்டும் தான் ஒப்படைக்க முடியும். திருமணமாகாத உன்னிடம் ஒப்படைப்பதற்கு வாய்ப்பே இல்லை…! அதுவும், உனக்கு வாய்ப்பே இல்லை!” என்றதும் முகம் வாடிப் போனாள், மதிமை. அதைக் கண்டு இரங்கியவராக,
“இதோ பார்…! நீயே ஒரு குழந்தை. நீ எப்படி இன்னொரு குழந்தையை வளர்ப்பாய்…? ஆர்வத்திற்கு ஒரு மாதம், இரண்டு மாதங்கள் வைத்திருக்க முடியும். அதற்குப் பிறகு? குழந்தை வளர்ப்பது அத்தனை சுலபம் என்று நினைத்தாயா? பொருளாதாரத்திற்கு என்ன செய்வாய்? உன் செலவே வரிசையாக பின்னால் நீண்டிருக்கிறது. இதில் இந்தக் குழந்தையை வைத்திருப்பது நடக்கும் காரியமா? நடப்பதைப் பேசு…!” என்று விட்டுச் செல்ல,
பெரும் சோர்வோடு தன் அறைக்கு வந்தாள் மதிமை. மனமோ, எப்படி அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்வது என்று யோசித்தது. ‘பேசாமல் பெற்றவளிடமே கேட்டுவிட்டால்?’ முடிவு எடுத்தவளாக, நேராக, அணுரேகாவைத் தேடிப் போனாள், மதிமை.
இவளைக் கண்டதும், புருவம் சுருங்க…
“யார் நீ…?” என்றாள் எரிச்சலோடு.
‘சிறிய கேள்விதான். ஆனால் என்னவென்று பதிலைச் சொல்வது?’ தயங்கி நின்றவள்,
பின் நேரடியாக அணுரேகாவைப் பார்த்து,
“உ… உன் குழந்தையை நான் வளர்த்துக் கொள்ளவா?” என்று கேட்டாள். அதைக் கேட்டு அதிர்ந்த அணுரேகா,
“என்ன உளறல் இது?” என்றாள் வெளிப்படையாக எரிச்சலைத் தேக்கி.
“நீ… கிளாரியாவோடு பேசியதைக் கேட்டேன்… எனக்கும் யாருமில்லை. எல்லோரையும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டேன்.” என்றவள் மெல்லிய குரலில் நடந்தது அனைத்தையும் கூறிவிட்டு, கலங்கிய கண்களோடு தொட்டிலில் கிடந்த குழந்தையைப் பார்த்து,
“கொஞ்சத்துக்கு முன்புதான், கிளாரியா இந்தக் குழந்தையை என் மடியில் கிடத்தினார்கள். அப்படியே என் தம்பி போல எனக்குத் தோன்றியது. இனி என் வாழ்க்கையில் யாருமில்லை என்று நினைத்திருந்தேன். அது கொடுத்த அச்சத்தில் தற்கொலைக்குக் கூட முயன்று பார்த்தேன். காப்பாற்றிவிட்டார்கள். ஆனால்.. இந்தக் குழந்தை என்னிடம் வந்தால், நிச்சயமாக அந்தக் குழந்தைக்காக வாழவேண்டும் என்கிற ஆவலை எனக்குள் தோற்றுவிக்கும். எப்படியோ யாருக்கோ கொடுக்கிற குழந்தையை என்னிடம் கொடுத்துவிடுங்கள். நிச்சயமாக, அவனை நன்றாகப் பார்த்துக் கொள்வேன்… ப்ளீஸ்…” கெஞ்சிக் கேட்க, அணுரேகா மதிமையை அழுந்தப் பார்த்தாள்.
‘இவளுக்கு எத்தனை வயதிருக்கும்…? பதினேழு, பதினெட்டு… இருபத்தாறு வயதைத் தொட்ட என்னாலேயே இந்தக் குழந்தையைப் பார்க்கத் தெரியவில்லை. இவளால் எப்படி இது சாத்தியம்?’ மறுப்பாகத் தலையை அசைத்தவள்,
“உனக்கு என்ன வயது?” என்று அணுரேகா கறாராகக் கேட்க, தலை குனிந்தாள் மதிமை.
‘எப்படிச் சொல்வாள். சொன்னால் கிடைக்கும் வாய்ப்பு பறிபட்டுப் போகுமே.’
“கேட்டேனே… எத்தனை வயது…?”
“ப.. பதின் ஏழு…” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள், அணுரேகா.
“பதினேழா?” என்றவள் அந்தச் சின்ன உருவத்தை சந்தேகத்துடன் பார்த்து விட்டு,
“பதினேழா?” கேட்ட அணுரேகா வாயைப் பிளந்தாள். அந்தப் பதினேழு வயதில் அவள் எப்படி இருந்தாள் என்பதை நினைத்துப் பார்த்தாள். எந்தப் பொறுப்பகளும் அற்ற நிலையில், மகிழ்ச்சியாக ஆண் நண்பர்களோடு பிடித்த மாதிரி வாழ்ந்தாள். ‘இந்த வயதில் குழந்தையை வளர்ப்பதா?’ மறுப்பாகத் தலையசைத்து,
“உன்னால் எப்படி இன்னொரு குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும்?” கிளாரியா சொன்னதையே இவளும் சொல்ல,
“இல்லை…! சத்தியமாக என்னால் முடியும்.என் தம்பி பிறந்திருந்த போது, அவனை நான் தான் பார்த்துக்கொண்டேன். பாலூட்டிக் குளிப்பாட்டுவது மட்டும் தான், அம்மா. மிச்சம் எல்லாம் நான் தான். எனக்கும் என் தம்பிக்கும் ஐந்து வயது வித்தியாசம். நிச்சயமாக ஒரு குழந்தையை என்னால் பார்த்துக் கொள்ள முடியும். ப்ளீஸ்… உங்கள் குழந்தையை என்னிடம் கொடுத்து விடுங்கள்…” கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்க, அணுரேகா மதிமையை உற்றுப் பார்த்தாள்.
அந்த விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அணுரேகாவை அசைத்துப் பார்த்தது. அதில் தெரிந்த மெய்மையைக் கண்டாள். என்ன நினைத்தாளோ,
“நீ என்னோடு வருகிறாயா?” என்று கேட்டாள் அழுத்தமாக. இவள் குழப்பத்துடன் ஏறிட,
“நீ விபத்தில் உறவுகளைப் பறி கொடுத்து விட்டதாகச் சொன்னாய். எனக்கும் யாருமில்லை. இந்தக் குழந்தையை வளர்ப்பதற்கான பொறுமை எனக்குக் கிடையாது. உனக்குத் தத்துக் கொடுக்கவும் முடியாது. காரணம் உன் வயது. தவிர நீ திருமணமாகாதவள். நிச்சயமாக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க சட்டம் இடம் கொடுக்காது. அதனால் தான் சொல்கிறேன். நீ என்னோடு வா… குழந்தையை பார்த்துக்கொள்…! விருப்பமானது போல வளர்த்துக்கொள். ஆனால், ஒரே கூரையின் கீழ் மூவரும் இருக்கலாம்.” என்று சொன்ன போது, அப்போதைக்கு அந்த யோசனை இவளுக்கும் பிடித்தே இருந்தது.
இவளுக்கும் மருத்துவமனையை விட்டு வெளியேறியதும் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வதென்று சுத்தமாகத் தெரியவில்லை. தாய், தந்தை, தம்பி என்று ஒரு கூட்டில் வாழ்ந்துவிட்டு, இனி வேறு ஒரு புதிய வாழ்க்கையைத் தனியாக வாழ்வதென்றால்… நினைக்கும்போதே அச்சம் எழுந்தது. தவிர, தானிருக்கும் மனநிலையில் தனிமை சரி வராது என்பதும் புரிந்து போயிற்று, மதிமைக்கு. அதனால், சற்றும் யோசிக்காமல் சம்மதம் சொல்லிவிட்டாள், மதிமை. ஆனாலும் அவளை அழைத்துப் போக முதல், ஒரு சில நிபந்தனைகளோடுதான் அழைத்துச் சென்றாள்.
“இதோ பார்…! என்னோடு வருகிறாய் என்பதற்காக அதிக உரிமையை நீ எடுக்க முடியாது. என் வாழ்க்கை, என் விருப்பம்… அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை…! நீ என்னோடு தங்கியிருக்கிறாய் என்பதற்காக என்னைக் கேள்வி கேட்கவோ, இல்லை திருத்துவதற்கோ உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இல்லை அதைப்பற்றி விமர்சிக்கும் உரிமையோ உனக்குக் கிடையாது…!” என்று அணுரேகா சொன்னபோது அமைதியாகவே அணுரேகா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள், மதிமை.
அவள் ஒன்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பவளில்லை. பெற்றவர்களும் அப்படியே வாழ்ந்து காட்டியவர்கள். எதற்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும், தனிநபர் சுதந்திரத்திற்குக் கொடுக்கவேண்டும் என்று தந்தை அடிக்கடி சொல்வார். அதனால் அவளுக்கும் அது பழக்கமில்லாத ஒன்றுதான். அதனால் உடனே சரி என்று தலையை ஆட்ட, தொடர்ந்து,
“குழந்தை முழுக்க முழுக்க உன் பொறுப்பு. நான் அதில் எதுவும் தலையிடமாட்டேன். வேண்டுமானால் அதற்குரிய செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், எப்போதும் குழந்தையின் தந்தை யார் என்று என்னிடம் வந்து கேட்காதே. அவனுக்குத் தந்தை கிடையாது… பெற்றவள் நானாக இருந்தாலும், தாயாக நீதான் இருக்கப் போகிறாய், புரிந்ததா?” என்றபோது அணுரேகாவை வினோதமாகத்தான் பார்த்தாள், மதிமை.
குழந்தையைப் பெற்றவள் அவள். கொஞ்சம் கூடவா குழந்தை மீது பாசமில்லை? இப்படி ஒரு தாய் இருப்பாளா? ஏனில்ல? குழந்தைகளைப் பெற்று விட்டுக் குப்பைத் தொட்டியில் போடும் தாய்மார்கள் இருக்கத்தானே செய்கின்றனர். அணுரேகாவும் ஒரு வகையில் அப்படித்தானே. கொஞ்ச நேர மகிழ்ச்சிக்காக வயிற்றில் குழந்தையை வாங்கிவிட்டு, அதன் பிறகு பொறுப்பு வேண்டாம் என்று பெற்ற குழந்தையையே தூக்கி எறியத் துணிகிறாளே…!
அப்போதும் எதுவும் கூறாமல் தலையை ஆட்ட,
“குட்… நீ என் குடியிருப்பில் வந்து தங்கலாம். வாடகையை நான் மாதா மாதம் கட்டிவிடுவேன். குழந்தைக்கு வேண்டிய பொருட்களையும் நானே வாங்கிப் போடுகிறேன். ஆனால், உன்னுடைய தேவையை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு என்னிடம் பணம் எதிர்பார்க்காதே…!” தெளிவாகக் கூறி விட, அதற்கும் சரி என்றே தலையை ஆட்டினாள், மதிமை.
அதன் பிறகு மருத்துவமனையிலிருந்து வெளியேறி, அவள் தாய் தந்தையோடு வாழ்ந்த வீட்டிலிருந்த தேவையற்ற பொருட்கள் அனைத்தையும் விற்றுப் பணமாக்கி, தன் உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அணுரேகா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தாள்.
அதன் பிறகு அவள் உலகமே மாறி விட்டு இருந்தது. அவளுடைய அழுத்தங்களை முற்றாக மறக்கச் செய்தான், வரோதயன். இவள் உலகம் அவனானான். அவன் உலகம் இவளானாள்.
அணுரேகாவும் தொல்லை விட்டது என்று தன் இலகு வாழ்க்கைக்குள் சுலபமாகவே நுழைந்து கொண்டாள். ஏற்கெனவே குழந்தை மீது அதிக ஆர்வமில்லாதவள் என்பதால், வரோதயனோடு பட்டும் படாமலும்தான் இருந்தாள். காலை வெளியே சென்றாள் என்றால், வீடு வந்து சேர இரவு பதினொரு மணியாகும். சில வேளைகளில் வரவும் மாட்டாள். ஒரு சில முறை ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
வரும் போது, மதிமையின் முகத்தில் தெரியும் அச்சத்தையும், கலக்கத்தையும் கண்ட பின்பு, என்ன நினைத்தாளோ, அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதை விட்டு விட்டாள். ஆனாலும் எங்காவது உல்லாச விழாக்கள் இருந்தால், அவளை அழைத்துச் செல்லக் கேட்பாள். மதிமைதான் மறுத்து விடுவாள்.
பதினேழு வயது வரை, நல்ல தாயின் வளர்ப்பில் வளர்ந்தவளாயிற்றே. அத்தனை சுலபத்தில் அவர் கற்றுக்கொடுத்த பழக்க வழக்கத்தை இவளால் தூக்கி எறிந்துவிட முடியவில்லை.
ஆரம்பத்தில் அணுரேகாவின் போக்கைக் கண்டு வியந்தவளுக்கு, மெல்ல மெல்ல அணு ரேகாவின் நடவடிக்கைகள் புரிந்து போயிற்று.
ஆனாலும் அது தவறு என்று சுட்டிக் காட்டும் அளவுக்கு அணுரேகாவோடு நெருங்க முடியவில்லை. ஒரு வேளை இவள் எதையாவது சொல்லப் போய், என் குழந்தையைப் பார்த்துக் கொண்டது போதும், வெளியேறு என்று விட்டால் அவள் எங்கே செல்வாள்? தற்போதைக்கு இருக்க கூரையும், வளர்க்க உறவென்று அந்தக் குழந்தையும் இருப்பதே இவளுக்குப் போதும் என்கிற நிலையில், அதிகம் அணுரேகாவின் வாழ்க்கையில் தலையிட வில்லை மதிமை.
குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், ஒரே வீடு என்கிற பெயராக இருந்தாலும், விடுதியில் இருப்பது போலவே பட்டும் படாமலும் வாழ்ந்தனர் எனலாம்.
இதற்கிடையில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு பல்கலைக்கழகம் போகாமல், சேனக்கா காலேஜில் சேர்ந்து கணக்கியல் சார்ந்து படித்தாள். ஆனாலும் முழுதாகப் படித்து முடிக்க முடியாத அளவுக்கு, ஏதாவது வந்து கொண்டே இருந்தது.
முழுநேரம் படிக்க வேண்டுமானால் வரோதயனைப் பார்த்துக் கொள்ள முடியாது. அவனைப் பார்த்துக் கொள்வதற்கும், அவனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இவளுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பணம் வேண்டுமே. அதனால் வேலைக்கு மனுப்போட்டு இறுதியாக ஒரு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தாள், மதிமை.
அன்றைய அந்த சூழ்நிலைக்கு அந்தத் தொழிலே பெரிதாகத்தான் தோன்றியது, அவளுக்கு.
இரண்டு கிழமைகளுக்கு ஒரு முறை கிடைக்கும் சம்பளத்தோடு, உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ‘டிப்பும்’ அவளுக்குப் பெரிதும் உதவியது என்று தான் சொல்ல வேண்டும். அதை வேறு தனியாக வங்கிச் சேமிப்பில் போட்டுக் கொண்டிருந்ததால், ஓரளவு கையில் பணம் சேர்ந்தது, மதிமைக்கு.
இதில் வரோதயனுக்குப் பக்கத்திலேயே நல்ல ஒரு காப்பகம் கிடைக்க, அவனை அங்கே விட்டு விட்டு, வேலைக்குப் போய் விடுவாள் இல்லை என்றால் கல்லூரிக்குப் போவாள். மதியம் ஐந்து மணிவரைதான் அந்தக் காப்பகம் இயங்கும். இவள் தன் வேலையை அரக்கப் பரக்க முடித்துக்கொண்டு ஐந்து மணிக்கெல்லாம் வரோதயனைத் தன்னோடு அழைத்து வந்து விடுவாள். முடியாத பட்சத்தில் அணுரேகா போனால் போகிறது என்று அழைத்து வருவாள்.
இப்படியே வாழ்க்கை போயிருந்தால் மிக நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், விதி யாரை விட்டது.
நான்கு நாட்கள் எங்கோ சென்றிருந்த அணுரேகா, வயிற்று வலியோடு திரும்பி வந்தாள். ஒரு சில நாட்கள் அந்த வலியைத் தாங்கியவள், ஒரு கட்டத்தில் மயங்கி விழ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். நிறைய பரிசோதனைகளின் பின்பு புற்றுநோய் அதுவும் மருத்துவம் செய்தும் பயனில்லை என்கிற அளவுக்கு முற்றிப்போன பின்பு, அணுரேகா மட்டுமில்லை, மதிமையும் உடைந்து தான் போனாள்.
தாய் தந்தையை இழந்த பின், ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தாலும் கூட, ஒரு சகோதரியாகக் கிடைத்தவள், அணுரேகா. அவளுக்கு இப்படி ஒரு நோய் என்று கேட்டதும் கலங்கித்தான் போனாள்.
அதற்குப் பிறகு அணுரேகாவிடமும் பல மாற்றங்கள். தனிமையை அதிகம் விரும்பினாள். நிறைய அழுதாள். என்றுமில்லாத திருநாளாகத் தன் குழந்தையோடு சற்று நேரம் செலவிட முயன்றாள். மதிமையோடும் மனம் விட்டுப் பேசத் துனிந்தாள்.
இவளும் முயன்ற வரை அணுரேகாவை கவனமாகப் பார்த்துக்கொள்ள விளைந்தாள். ஆனால், அணுரேகா அதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
“இந்த நிலைக்குக் காரணம் நான் தான். நான் மட்டும் தான். அதனால் இதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எனக்காக சிரமப்படாதே… போ… போய் விடு!” என்று விரட்டி விடுவாள். கிடைக்கும் உதவியை மறுத்தால், இவளும் என்னதான் செய்வது.
இதற்கிடையில் செலவுகள் பயங்கரமாக இழுத்தன. அவர்கள் சற்று வசதியாக இருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை விட்டு, வாடகை குறைந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார்கள்.
எல்லா இடத்திலும் வாடகை அதிகமாக இருக்கும் போது மட்டும், அந்தக் குடியிருப்பில் மட்டும் வாடகை குறைந்திருப்பதற்குக் காரணம், அங்கே யாரும் குடியிருக்க விரும்பாமையே.
ஏன் என்றால் அந்தக் கட்டடம் ஒரு ஒதுக்குப்புறமாக இருந்தது மட்டுமின்றி சுத்தவர காட்டுப் பகுதி. அதனால் அங்கே அதிக திருட்டும், போதைப் பொருட்கள் கைமாற்றுவதும், அடிதடி மற்றும் துப்பாக்கிச் சூடும் என்று சர்வசாதாரணமாக நடக்கும். அதுவும் முக்கிய கழிசடைகள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் இருப்பதால், கிழமைக்கு ஒரு முறை ஏதாவது அசம்பாவிதம் நடந்து காவல்துறையே அங்கே வந்து நிற்கும்.
ஆரம்பத்தில் மதிமை அந்தக் குடியிருப்பை விட்டு வெளியே வரவே அஞ்சினாள். இத்தனை பாதுகாப்பாக இருந்து விட்டு, இப்படி ஒரு குடியிருப்பில் இருக்க வேண்டிய நிலையை நினைத்து நொந்தாள். ஆனால்… வேறு வழி… குடியிருப்பிற்குப் பணம் கொடுப்பது மட்டுமன்றி, வாழ்வாதாரத்திற்கும் பணம் வேண்டுமே. வசதியான இருப்பைத் தேடிப் போனால், இருப்பிடத்திற்கு மட்டுமே முழுப் பணத்தையும் கொட்டவேண்டி வரும். அதற்குப் பிறகு உணவுக்கு எங்கே போவது. அதுவும் காலம் போகும் போக்கில், அத்தியாவசிய உணவுக்குமே அள்ளிக் கொட்ட வேண்டியிருந்தது.
இதில் எதையும் தாங்கிக்கொள்ளலாம், ஆனால் குழுவாக இருந்து இளைஞர்கள் கஞ்சா அடிக்கும் போது தான் இவளுக்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போலத் தோன்றும். அதுவும் படிக்கும் மாணவர்கள். பார்க்கும் போதே கோபம் வரும். கோபம் வந்து என்ன பயன்? அவர்களிடம் சென்று அறிவுரை சொல்ல முடியாதே. அதைக் கேட்க நீ யார் என்று இவளையே பிரித்து மேய்ந்தவிடுவார்கள்.
சில வேளைகளில் சுயநலமாக இருப்பதும் அவசியமாகிப் போகிறது. இதில் அவளிடமே கஞ்சா வேண்டுமா என்று விற்க வந்தவர்களும் உண்டு. இவள்தான் முகத்தைத் திருப்பி, தப்பினால் போதும் என்று ஓடிவந்து விட்டாள்.
அதற்குப் பிறகு.. அந்தக் குழு இவளைக் கண்டால் இழிப்பதும், சில வேளைகளில் பின் தொடர்வதும் என்று சற்று அலுப்புக் கொடுத்தார்கள் தான். ஒரு நாள் காவல்துறையை அழைத்துச் சொல்லலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் அதற்குப் பிறகு? அவன் கையாளோ நண்பர்களோ இவளை இருக்க… நிற்க விடுவார்களா? தற்போதைக்கு அவளுக்கு இருக்கக் கூரை இருக்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
இதைப் பற்றி அணுரேகாவிடமும் கூறிப் பார்த்தாள்.
“என்ன செய்வது மதிமை… நாம் இருக்கும் நிலைக்கு இதை விட வசதியாக எங்கே போக முடியும்… நல்ல குடியிருப்பு வேண்டும் என்றால், சுளையாக இரண்டாயிரம் டாலர்களாவது வேண்டும். நாம் உழைக்கும் பணத்தை இதற்குக் கொடுத்துவிட்டால், மிச்சத் தேவைக்கு எங்கே போவது…? இங்கே மருத்துவம் இலவசமாக இருந்தாலும், மருந்து மாத்திரை என்று பணம் தண்ணீராய் செலவழிக்க வேண்டி இருக்கிறதே” என்று கூற, முதன் முறையாக அணுரேகா மீது சற்று ஆத்திரம் வரத்தான் செய்தது.
இத்தனை வருடத்தில் அவசர செலவென்று கொஞ்சப் பணம் சேகரித்து வைக்க வேண்டாமா…? அந்தப் பழக்கம் அணுரேகாவிற்கு ஒரு போதும் இருந்ததில்லையே. கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து விடுவாள். இப்போது பணம் வேண்டும் என்கிற போது, யாரிடம் கையேந்துவது என்று தெரியாமல் விழிக்க வேண்டி இருக்கிறது!
அதையே அணுரேகாவும் காலம் கடந்த பின்தான் உணர்ந்து கொண்டாள். அடிக்கடி இது பற்றிக் கூறி வருந்தியும் இருக்கிறாள்.
ஆனாலும், மதிமையால் எக்கேடும் கெட்டுப் போ என்று கையைக் கழுவ முடியவில்லை. என்ன சொன்னாலும், கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நல்ல ஒரு துணையாக இருக்காவிட்டாலும், பக்க பலமாக இருந்திருக்கிறாள். அந்த நன்றிக்கடனால், மருத்துவ செலவுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தாள்.
கடைசியில் அவளுடைய இருப்பும் சுத்தமாகக் கரைந்து போக, அடுத்த வேளை என்ன செய்வது என்கிற நிலையில், அதற்கு மேல் செலவுகளை இழுத்துப் பிடிக்காமல் உயிரை விட்டாள், அணுரேகா.
காப்புறுதி கூடச் செய்யாமல் இறந்தவளின் பிணத்தை ஏற்றுக்கொள்ள உறவுகளும் முன்வர வில்லை. இவளாலும் பொறுப்பெடுத்து நடத்த முடியவில்லை. அதற்குப் பணத்திற்கு எங்கே போவது இறுதிக் காரியங்களைச் செய்வதற்கும் வாய்ப்பில்லாத நிலையில், அரசு முன் வந்து அணுரேகாவின் உடலைத் தகனம் செய்தது.
எல்லாம் முடிந்தபின் எழுந்து நின்ற போது, அந்த உலகில், அவளும் வரோதயனும் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தனர்.
அணுரேகா இறந்ததில் மதிமைக்கு வருத்தம் தான். இரண்டு நாட்கள் கண்கள் சிவக்க அழுதாள் தான். ஆனால், மூன்றாம் நாள், பரந்து விரிந்த அந்த உலகம் அவளைப் பயமுறுத்தத் தொடங்கியது.
மாதம் முடிந்ததும் வாடகை கொடுக்க வேண்டும். அவளுக்காக இல்லாவிட்டாலும், வரோதயனுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும். இதெற்கெல்லாம் பணம் வேண்டுமே. அணுரேகா இருந்த வரைக்கும் அந்தக் குடியிருப்புக்கு அவள் தான் பணம் கொடுத்தாள். இனி அதையும் சேர்த்து இவள் கொடுக்க வேண்டும். அவளால் முடியுமா? அதுவும் இன்னும் முழுதாகப் படித்துக் கூட முடிக்கவில்லை. ஒரு பட்டத்தை வாங்கிவிட்டால் நல்ல உத்தியோகத்தில் இருக்கலாம் என்றால், எங்கே… உழைக்கும் பணம் முழுவதும் வரோதயனுக்கும், அவள் தேவைக்குமே போதுமானதாக இருந்தது. தவிர வரோதயனையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே.
(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…
(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா...!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன்…
(9) புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க, தன் விழிகளாலேயே நண்பனிடம்…
(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய…
(5) அன்று சனிக்கிழமை. அரக்கப் பரக்க வரோதயனைத் தயாராக்கி, தானும் தயாராகி அவளுடைய குடியிருப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிற குழந்தை காப்பகம்…
(3) ‘கனடிய ஏர்லைன் தரையை முத்தமிட்டுச் சற்று தூரம் ஓடிக் குறிப்பிட்ட இடத்தில் நிற்க அத்தனை பயணிகளும் கட கட…