Categories: Ongoing Novel

உயிர் நீ மெய் நான்…! – 3

(3)

‘கனடிய ஏர்லைன் தரையை முத்தமிட்டுச் சற்று தூரம் ஓடிக் குறிப்பிட்ட இடத்தில் நிற்க அத்தனை பயணிகளும் கட கட என்று வெளியேறத் தொடங்கினர். ஆதிபனும் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்து அந்த நாட்டைப் பார்த்தான்.

கிட்டத்தட்ட நான்கு வருஷங்களுக்கு முன்பு வந்த நாடு. இப்போதும் எந்த மாற்றமும் இல்லாது, அதே அமைதி, அதே செழிப்புடன்  இருந்தது. இப்போது மே மாதம் ஆகையால், குளிர்காற்று அவனைத் தழுவிச் செல்ல, அணிந்திருந்த தடித்த ஆடையை இழுத்துப் பிடித்தவாறு, பெட்டியோடு வெளியே வந்தான், ஆதிபன்.

அவனைக் கண்டதும், ஓடிப்போய் அணைத்து விடுவித்தான், அவனோடு கனடாவில் ஒன்றாகப் படித்த சபேசன்.

“ஹாய் நண்பா…!  எப்படி இருக்கிறாய்?  பார்த்தால் மிக நன்றாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது…” என்று அவனுடைய வயிற்றை வலிக்காதவாறு குத்திவிட்டுக் கூற, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்திய ஆதிபன்,

“எனக்கென்ன…? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நீ எப்படி…?” என்றான் நட்பாய்.

“ப்ச்… எனக்கென்னடா…? ஒரு குறையும் இல்லை. கை நிறையச் சம்பளம், மிக விரைவாகவே விரும்பியவளை மணக்கப் போகிறேன், எல்லாம் சிறப்பாகவே போகிறது.” இருவரும் பேசியவாறே சபேசனின் வாகனத்தை வந்தடைந்தனர்.

ஆதிபனின் பெட்டிகளை ட்ரங்கில் எறிந்து விட்டு, இருவரும் முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ள, சபேசன் வாகனத்தை உசுப்பினான்.

திரும்பி தன் நண்பனைப் பார்த்த, ஆதிபன்,

“சபேசா… நான் சொன்னதை விசாரித்துப் பார்த்தாயா? ஏதாவது தகவல் கிடைத்ததா?” என்றான் மெதுவாக.

“ப்ச்… பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. நீ இலங்கைக்குச் சென்ற பிறகு கொஞ்ச நாட்கள் அந்த ஜார்ஜ் கூடத்தான் இருந்தாள். அதற்குப் பிறகு அவளை யாரும் பார்க்கவில்லை. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தெரிந்த நண்பர்கள் அத்தனை பேரையும் கேட்டுவிட்டேன். நீ சொல்லும்வரை, அணு  நோய்வாய்ப் பட்டிருந்தாள் என்பதே யாருக்கும் தெரியாது. இதற்கு மேல் நாம் விபரங்கள் சேகரிக்க வேண்டும் என்றால், நாம் ஜார்ஜ் ஆப்ரஹாமைத்தான் விசாரிக்கவேண்டும். நேற்றுதான் அவர் செயலாளரோடு பேசி, நாளை மறுநாள் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நாம் அடுத்த அடியை எடுத்து வைப்பதாக இருந்தால், அதற்கு ஜார்ஜ் தான் உதவி செய்யவேண்டும்…” என்றவன்,

குறுகுறுப்போடு தன் நண்பனைப் பார்த்து,

“அந்தக் கடிதத்தை நீ நிஜம் என்று நம்புகிறாயா, ஆதிபன்…? அணுவைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவள் அப்போதே கொஞ்சம் தன் விருப்புக்குத்தான் நடந்து கொள்வாள். அவள் குழந்தை பெற்றுக் கொண்டதெல்லாம் நம்பக் கூடியதாகவா இருக்கிறது? அப்படியே பெற்றுக் கொண்டாலும், அது உன்னுடைய குழந்தைதான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சம்திங் ராங்! எனக்கென்னவோ யாரோ ஏதோ ஒரு ஆதாயத்திற்காக உன்னை ஏமாற்றுகிறார்கள் என்றே தோன்றுகிறது.” என்று சபேசன் கூற, மறுப்பாகத் தலையசைத்த ஆதிபன்,

“ஆரம்பத்தில் நானும் இது பொய்யாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால்… யோசிக்கும் போது அது நிஜமாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. இறக்கும் தருவாயில் ஒருத்தி இப்படிப் பொய் சொல்வாளா? சரி அப்படியே அவள் பொய் சொல்கிறாள் என்றாலும், ஏன் பொய் சொல்லவேண்டும்…?”

“இது என்ன கேள்வி…? உன்னிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கிறதே…!” என்ற நண்பனைக் கிண்டலாகப் பார்த்தவன்,

“ப்ச்… இங்கே இருக்கும் பணக்காரர்களை விடவா என்னிடம் இருக்கப் போகிறது. அவ்வளவு ஏன்? ஜார்ஜ் அப்ரஹாமிடம் இல்லாத பணமா என்னிடம் இருக்கப் போகிறது…? இவ்வளவு ஏன்? குழந்தையை வைத்து, பணம் பறிப்பதாக இருந்தால், குறைந்தது குழந்தையின் படத்தையாவது எனக்கு அனுப்பியிருக்கவேண்டும். தவிர நான்கு வருடங்கள் அவள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவள் எழுதியிருப்பதைப் படிக்கும் போது, குழந்தையைத் தேடி வராதே என்பது போலத்தான் தோன்றுகிறது. கடைசி நேரக் குற்ற உணர்ச்சியில் எழுதியிருக்கிறாள் போல…” என்றவன், ஒரு பெருமூச்சுடன் நண்பனை ஏறிட்டு,

“எனக்கு இப்போது வேண்டியது அணு….! அவள் எங்கே இருக்கிறாள்? என்கிற விடை கிடைத்தால் போதும். ஒரு முறை சந்தித்துவிட்டால்  மிச்சத்தைச் சுலபமாகவே அறிந்து கொள்வேன்.

“புரிகிறது… ஒரு நாள் காத்திரு. ஜார்ஜோடு பேசிப் பார்க்கலாம். நிச்சயமாக அவருக்கு இது பற்றித் தெரிந்திருக்கும்.”

ஆனால், அவர்கள் நினைத்தது போல அணுரேகாவின் இடத்தைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

இவர்கள் ஜார்ஜ் ஆப்ரஹாமை சந்தித்தபோது, அவருக்குமே அணு எங்கே இருந்தாள் என்று தெரிந்திருக்கவில்லை.

“சாரி ப்ரதர்ஸ். அணு, என் கூட ஒரு மூன்று மாதங்கள்தான் இருந்தாள். இருவருக்கும் நிறையக் கருத்து வேறுபாடுகள். திடீர் என்று அவளாகவே என்னிடம் வந்து, ஒத்துப் போகவில்லை, பிரிகிறேன் என்று கூறிவிட்டு, நான் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்.

எங்கே சென்றாள், என்னானது என்று இது வரை எனக்குத் தெரியாது.

அவளுக்கு உடல் நலமில்லை என்பது கூட நீங்கள் இப்போது சொல்லித்தான் தெரிகிறது. ஆனால், கடைசியாக அவள் தங்கியிருந்த இடம் மட்டும்தான் எனக்கு தெரியும்.  அந்த இடத்தின் விலாசம் கொடுக்கிறேன், விசாரித்துப் பாருங்கள்.” என்றவர், கடைசியாக அணுரேகா தங்கிய இடத்தின் விலாசத்தைக் கொடுத்துவிட்டு,

“சாரி… இதற்கு மேல் என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை.” என்ற போதும், கடைசி நம்பிக்கையாக, அவள் தங்கிய விலாசம் கிடைத்ததே என்கிற நிம்மதியில், அந்த இடத்தை நோக்கிச் சென்றார்கள்.

ஆனால், அங்கும் அவர்களுக்குத் தோல்வி தான் கிடைத்தது.

அணுரேகா தங்கியிருந்த இடத்தில் வேறு யாரோ குடிபெயர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்த போது, அவர்களுக்கு எதுவும் தெரிந்து இருக்கவில்லை. பக்கத்து வீடுகளிலும் தட்டிக் கேட்டார்கள். அதில் ஒரு பெண் மட்டும், கடைசியாக  இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அணுரேகாவைக் கண்டதென்றும், அதற்குப் பிறகு அவளைப் பார்க்கவில்லை என்றும் கூற,  இருவருக்குமே கண்களைக் கட்டி நடுக்காட்டில் விடுபட்ட உணர்வு.

அந்தப் பரந்து விரிந்த நாட்டில் எங்கே என்று தேடுவது? எல்லாத் திசையும் மூடி மறைத்திருந்தால் எந்தத் திசை நோக்கிச் செல்வது?

அதன் பிறகு இரண்டு கிழமைகள் தேடுவதிலேயே பறந்து போயிற்று. அணுவிற்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், பழகியவர்கள்,  என்று எல்லா இடமும் விசாரித்தாயிற்று. யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

‘ஊர் என்றால், யார் எங்கே போனாலும் சட்டென்று தெரிந்து போகும். இங்கே அப்படி இல்லையே. பக்கத்து வீட்டிலிருந்தாலும் கூட, இருப்பவர் யார் எவர் என்று தெரியும் அளவுக்கு நெருங்கிப் பழகுவதில்லை. இந்த லட்சணத்தில் என்னத்தை விசாரிப்பது? என்னவென்று விசாரிப்பது?’ குழம்பித் தவிக்கையில்தான் பளிச்சென்று அது நினைவுக்கு வந்தது.

“சபேசா… அணு தனக்குப் புற்று நோய் என்று சொல்லியிருந்தாள். இறுதி நேரம் என்றும் எழுதியிருந்தாள். அப்படியானால், சாதாரண மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்திருக்க வாய்ப்பில்லை. புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட மருத்துவமனையை விசாரித்துப் பார்த்தால் என்ன?” என்றதும், அடுத்த முயற்சியாக, புற்றுநோய்ச் சிகிச்சைக்குப் பெயர்பெற்ற மருத்துவ மனைகளைத் தேடிச் சென்றார்கள் இருவரும்.

இறுதியாக சனிப்ரூக் மருத்துவமனைக்குச் சென்று அணுரேகாவின் பெயரைச் சொல்லி விசாரித்த போது, அந்தப் பெயரில் ஏதாவது நோயாளிகள் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கிய வரவேற்பாளர்,

“அந்தப் பெயரில் யாரும் இல்லையே…” என்று கூற, இவர்கள் இருவரும் சோர்ந்து போனார்கள்.

ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல்,

“முன்பு, அந்தப் பெயரில் யாராவது சிகிச்சைக்கு வந்திருக்கிறார்களா?” என்று கேட்க, சரி என்றவர், அந்தப் பெயரில் தேட, மூன்று பெயர்கள் திரையில் மின்னின. நிமிர்ந்து ஆதிபனைப் பார்த்த வரவேற்பாளர்,

“அவருடைய இறுதிப் பெயர் என்ன?” என்று கேட்க,

“தியாகராஜ்…” என்றான் ஆதிபன். உடனே அந்தப் பெயரை அழுத்தி, விபரங்களைப் பார்த்த அந்தப் பணிப்பெண். பரிதாபமாக இவர்களைப் பார்த்து,

“ஐ ஆம் சாரி…! அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டார்களே…!” என்றதும், அந்தச் செய்தி, பேரிடியாக இவன் தலையில் வந்து விழுந்தது.

கொஞ்ச நேரம் உலகம் தன் சுழற்சியை நிறுத்தியது போன்ற உணர்வில் மலைத்துப் போய் நின்றான்.

“இ…. இறந்து விட்டாளா…!” என்றபோது இவனுக்குக் காற்றுதான் வந்தது. சத்தியமாக அவனால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடிய வில்லை. ‘எத்தனை நம்பிக்கையோடு வந்தான். நிச்சயமாக அணுரேகாவின் மூலம் அவனுடைய  மகனைக் கண்டு பிடிக்கலாம் என்று நினைத்தானே.’ கடைசியில் இத்தகைய பெரும் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியதாயிற்றே…” அவனையும் மீறிக் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன. கால்கள் தள்ளாடின.

அதைக் கண்ட சபேசன், அதிர்ந்து போய் அவனுடைய தோள்களைப் பற்றி, அங்கிருந்த இருக்கையில் அமரவைத்துவிட்டு,

“ஆதிபா… உன்னைத் திடப்படுத்திக்கொள்…” என்று தட்டிக் கொடுக்கக் கலக்கத்தோடு, நண்பனைப் பார்த்த ஆதிபன்,

“நம்பியிருந்தேன்டா…! எப்படியாவது என் மகனைக் கண்டுபிடித்து விடுவேன் என்று நம்பியிருந்தேன்…! ஆனால்.. இப்படியாகும் என்று நினைக்கவில்லையே… ஐயோ..! இனி எப்படி அவனைக் கண்டுபிடிக்கப் போகிறேன்?” கலங்கித் துடிக்க, அவனுடைய தோளைத் தட்டிக் கொடுத்த சபேசன்,

“டேய்.. கண்டு பிடிக்கலாம். முதலில் நம்பிக்கையாக இரு.” என்று சமாதானம் செய்தவன், பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டிருந்த தாதியிடம்,

“அணுரேகாவுக்கு சிகிச்சை கொடுத்த யாரையாவது சந்திக்கலாமா…? பேசலாமா…?” என்றான்.

சற்று நேரம் அமைதி காத்தவர், மீண்டும் திரையினைப் பார்த்துவிட்டு, யாருடனோ தொடர்பு கொள்ள,

அடுத்த பத்தாவது நிமிடம், ஒரு தாதி நீல நிற ஆடையோடு வெளியே வந்தார். வந்தவர், நேராக வரவேற்பாளரிடம் சென்று எதையோ பேசிவிட்டுப் பின் திரும்பி, சபேசனையும், ஆதிபனையும் கோபமாகப் பார்த்து எதையோ முணுமுணுத்தார். பின் அவர்களை நோக்கி வந்து,

“உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார் அதிகாரமாக. எதற்காக இத்தனை கோபம் என்று குழம்பிய சபேசன்,

“நீங்கள்தான் அணுரேகாவிற்கு சிகிச்சை கொடுத்த தாதியா…?” சந்தேகம் தீர்க்கக் கேட்க,

“அவர்களில் நானும் ஒருத்தி…” என்றார் பட்டென்று. இப்படி முறித்துப் பேசுபவரிடம் என்னவென்று பேசுவது? குழம்பி நிற்க, எழுந்த சபேசன், அவர் மார்பில் குத்தியிருந்த பெயரைப் பார்த்துவிட்டு,

“ஜானிடா… அணுரேகாவுக்கு என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா? ஏன் இறந்தார்கள்…?” மெல்லிய கவலையுடன் கேட்க, அவர்களைப் பார்த்து முறைத்தவர்,

“ஏன்…? அந்தப் பெண் இங்கே மருத்துவ மனையில் அவதிப்பட்டபோது, நீங்கள் எல்லோரும் எங்கே போயிருந்தீர்கள்? இப்போது காலம் கடந்து விசாரிக்க வந்திருக்கிறீர்களே…! உங்களுக்கு எதற்குப் பதில் கொடுக்க வேண்டும்…?” என்று கேட்க, அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதிபன், சட்டென்று எழுந்து அந்தத் தாதியை நெருங்கினான்.

“ஜனிடா, ஒரு மாதத்திற்கு முன்பு வரை, அவளுக்கு நோயிருந்த செய்தி எதுவும் எங்களுக்குத் தெரியாது. ஏன், இந்த மருத்துவமனைக்கு நாங்கள் வந்த நொடி முதல், அவள் இறந்ததும் தெரியாது. ப்ளீஸ்… சொல்லுங்கள்…! அவளுக்கு என்ன பிரச்சனை?” என்றவனைப் பெருமூச்சோடு பார்த்து,

“அவர்களுக்கு கற்பவாய்ப் புற்றுநோய். ஆரம்பத்தில் சிகிச்சை கொடுத்திருந்தால், காப்பாற்றி இருக்கலாம். ஆனால் கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். இங்கு வரும் போது, நோய் முற்றிவிட்டிருந்தது. அதிக கற்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் விளைவு. அல்லது, பலருடனான பாதுகாப்பற்ற உடலுறவு இதற்குக் காரணமாக இருக்கலாம்.  நான்கு மாதங்களாக இங்கேதான் சிகிச்சை எடுத்திருந்தார்கள். நோய் முற்றிய நிலை, பிழைக்க மாட்டார்கள் என்று அவர்களுக்குமே தெரியும்!” என்று அவர் முடிக்கும் போது, இவனுடைய கண்கள் கலங்கிவிட்டிருந்தன.

“கடவுளே…!” என்று முனங்கியவன், கையறு நிலையில், தன்  தலையைக் கோதிப் பின்னே தள்ளியவாறு, கண்கள் இரண்டையும், இறுக மூடிச் சற்று நேரம் அப்படியே இருந்தான். அவனையும் மீறி இரு துளி கண்ணீர் கன்னத்தை வருடிச் செல்ல, பற்களைக் கடித்து எதையோ முணுமுணுத்தவனுக்கு, அடுத்து என்ன செய்வது என்று சுத்தமாகத் தெரியவில்லை.

‘இருந்த துருப்புச் சீட்டும் கைநழுவிப் போன நிலையில், அடுத்து என்ன செய்வது?’ பெரிதும் தவித்தான் ஆதிபன்.

‘சே…! பாதகி…! உயிரோடு இருந்தும் துரோகம் செய்தாள். இப்போது இறந்தும் துரோகம் செய்து விட்டாளே…?’ என்று ஏங்கியவன், அந்தத் தாதியை வேதனையுடன் பார்த்தான்.

“அணு.. அணுவோடு.. வேறு யார் வந்து இருந்தார்கள். அவர்களின் முகவரி கிடைக்குமா?” தவிப்போடு கேட்க,

“ஆரம்பத்தில் அணுவோடு ஒரு பெண் வந்திருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அணுவுக்கு நோய் முற்றி, இனி அவள் பிழைக்க மாட்டாள் என்று தெரிந்த பின்பு,  அந்தப் பெண் வருவதை நிறுத்திக் கொண்டாள்…”

“அந்தப் பெண்ணைத் தொடர்பு கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா?” பரபரப்புடன் கேட்க,

“ஏதாவது தேவை என்றால், தன்னோடு தொடர்பு கொள்ளுமாறு ஒரு இலக்கத்தைக் கொடுத்திருந்தாள். இருங்கள்…” என்ற அந்த தாதி, கணினியை நோக்கிச் சென்று எதையோ தட்டி, ஒரு சீட்டில் அந்த இலக்கத்தை எழுதி இவர்களிடம் நீட்டி,

“இதுதான் அந்த இலக்கம்.” என்றதும் பறிக்காத குறையாக அந்த இலக்கத்தை வாங்கியவன்,

“நன்றி… மிக மிக நன்றி…!” என்றவன் அடுத்த கணம் கரங்கள் நடுங்கக் கைப்பேசியை எடுத்து இலக்கத்தை அழுத்த,

“த நம்பர் யு ஹாவ் டயல்ட் இஸ் நாட் இன் சேர்விஸ் (நீங்கள் தொடர்பு கொண்ட இலக்கம் தற்போது சேவையில் இல்லை) என்று வர,

அதுவரை இருந்த நம்பிக்கை சுத்தமாக வடிந்து செல்ல,

“ஷிட்…! ஷிட்…! ஷிட்…!” என்று கத்தியவன் தொடர்ந்து “xxxx xxxxx xxxxx” என்று கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டுத் தன் நண்பனைப் பார்த்து,

“அந்த இலக்கம் உபயோகத்தில் இல்லை…” என்றான் அடக்கி வைத்த வேதனையோடு. அவனைப் பரிதாபமாகப் பார்த்த அந்த தாதி,

“அணுரேகா இறந்த பின், அவளுடைய உடலை ஏற்றுக்கொள்ள யாரும் முன் வராததால், அரசாங்கமே, அந்த உடலைத் தகனம் செய்ய ஆவன செய்தது. அந்த நேரத்தில் அணுரேகாவுக்கு சொந்தமான அத்தனை பொருட்களும்,  காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.” என்றதும் பரபரப்புடன் நிமிர்ந்த ஆதிபன்,

“எந்த ஸ்டேஷன்…?” என்றதும், விபரத்தைக் கூறினார் தாதி.

அடுத்து, இருவரும் அந்தக் காவல்துறையை நோக்கிப் பாய்ந்தனர்.

ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு காவல்துறை அதிகாரி இவர்களிடம் வந்தார்.

வந்தவரிடம் ஒன்று விடாமல் நடந்தவை அனைத்தையும் கூற, இவர்கள் சொன்னது அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்ட அதிகாரி, அடுத்துச் செய்ய வேண்டிய அத்தனை படி முறைகளையும் முடித்துக்கொண்டு,

அந்தப் பையை அவனிடம் எடுத்து வந்து கொடுத்தார்.

பரபரப்போடு அதை வாங்கிய ஆதிபன், காவல் அதிகாரியிடம் நன்றி சொல்லி விட்டு, வாகனத்தை நோக்கி வந்தான். வந்தவன், பின்னிருக்கையில் பையைக் கவிழ்த்துக் கொட்ட, அத்தனை பொருட்களும் இருக்கையில் விழுந்தன.

சிறிய கைப்பை, அழுக்கேறிய ஒன்றிரண்டு ஆடைகள், ஒரு சில  அழகு சாதனப் பொருட்கள்…  என்று உருண்டு ஓடின.

எதிர்பார்ப்பும், வேண்டுதலுமாக, அவளுடைய கைப்பையை எடுத்தவன், திறந்து பார்த்தான். உள்ளே கைப்பேசி இருந்தது. கரங்கள் நடுங்க, அந்தக் கைப்பேசியை உயிர்ப்பித்துப் பார்த்தான், ஆதிபன். கடவுச்சொல் கேட்டது.

அவளோடு இருந்த காலத்தில், அவள் உபயோகித்த கடவுச் சொல்லைப் போட்டுப் பார்த்தான். சட்டென்று விழித்துக் கொண்டது கைப்பேசி. அதில் அணுவின் அழகிய புகைப்படம் மின்னின.

அணுரேகாவிடம் உலகில் பிடித்த நபர் யார் என்று கேட்டால், சற்றும் தயங்காமல் தன்னைத்தான் சுட்டிக் காட்டுவாள். அதை மெய்ப்பிப்பது போல,  அவளுடைய புகைப்படங்கள் தான் அந்தக் கைப்பேசியையே நிறைத்திருந்தன. தன்னையும் மறந்து ஒவ்வொரு படங்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, அடுத்து பளிச்சென்று விரிந்தது அந்தப் புகைப்படம்.

மூன்று வயதேயான ஒரு சிறுவன் தலையில் பிறந்தநாள் கோன் அணிந்தவாறு, ஈ என்று சிரித்துக்கொண்டு பிறந்தநாள் கேக்கின் முன்னால் நின்றிருந்தான்.

‘ஏனோ அந்தப் படத்தைப் பார்த்தவனுக்கு நெஞ்சம் பயங்கரமாக நடுங்கியது. இதுதான் அவன் குழந்தையா?’ கண்களை நிறைத்த கண்ணீரை அழுந்தத் துடைத்து விட்டு, அந்தப் புகைப்படம் எடுத்த திகதியைப் பார்த்தான். ஆறு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தது

கண்களை நிறைத்த கண்ணீர் கன்னத்தை நனைத்துச் செல்ல, விழிகளை அழுந்தத் துடைத்தவாறு மேலும் படங்களை தட்டிச் செல்ல, அந்தக் குழந்தையின் பிறந்த நாளை எளிமையாகவே வீட்டில் வைத்துக் கொண்டாடியிருந்தனர்.

அந்தப் படங்களில் அதிகம் குழந்தையும், அணுரேகாவும், யாரோ ஒரு இளம் பெண்ணும் தான் நின்றிருந்தனர். அந்த இளம்பெண்ணின் உருவம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவள்தான் அணுரேகாவையும், குழந்தையையும் சுத்திச் சுத்திப் படம் எடுத்திருக்கவேண்டும். அவர்களைத் தவிரப் புதிதாக யாரும் வந்ததாகத் தெரியவில்லை.

பிறந்த நாள் புகைப்படத்தைத் தவிர, அந்தக் குழந்தையின் வேறு நிறையப்  புகைப்படங்கள் அந்தக் கைப்பேசியை நிறைத்திருந்தன.

குழந்தையின் படத்தைக் காணக் காண இவனுக்குக் கண்கள் கலங்கிக்கொண்டு வந்தன. அதைக் கண்ட சபேசன்,

“டேய்…! உன்னை திடப்படுத்திக் கொள்…!” என்றான் மென்மையாக. அந்தக் குழந்தையின் படத்திலிருந்து தன் விழிகளை இம்மியும் விலக்கிக் கொள்ளாத ஆதிபன்,

“இந்தக் குழந்தை… இது… என்… என்னுடையது தானா?” என்றான் கலக்கமும், சந்தேகமுமாக. ‘ஒரு புகைப்படத்தை வைத்து, இந்தக் குழந்தை தன்னது என்று எப்படி முடிவு செய்வது?’ புரியவில்லை அவனுக்கு. ஆனால் சபேசனோ,

“இதில் உனக்குச் சந்தேகம் வேறா? நிச்சயமாக உன் குழந்தைதான் ஆதிபன். விழிகளின் அமைப்பையும், கருமணியின் நிறத்தையும் பார்…! அப்படியே உன்னதைப் போல இருக்கிறது.நீண்ட கைகால்கள் பின்னாளில் உன்னைப் போல உயரமாக வருவான் என்பதற்கு ஆதாரம்.” என்றதும்,  அதுவரையிருந்த  சந்தேகம் மெல்ல விலகலாயிற்று ஆதிபனுக்கு.

“எனக்கு என் குழந்தை வேண்டும்…!” என்று இவன் அழுத்தமாகக் கூற,

“அதுதான், எப்படி ஆதிபன்…?”

“அதற்கு நாம் இவளைக் கண்டு பிடிக்க வேண்டும்…!” என்றவன் அந்தக் கைப்பேசியில் அந்தக் குழந்தையை அணைத்த வாக்கில் நின்றிருந்த இளம் பெண்ணைச் சுட்டிக்காட்டினான், ஆதிபன்.

அதில் சிரித்தவாறு குழந்தையை இறுக அணைத்து நின்றிருந்தாள் மதிமை.

 

 

What’s your Reaction?
+1
8
+1
4
+1
4
+1
0
+1
2
+1
3
Vijayamalar

Recent Posts

உயிர் நீ மெய் நான்…! – 12

(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…

3 days ago

உயிர் நீ மெய் நான்…! – 11

(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா...!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன்…

5 days ago

உயிர் நீ மெய் நான்…! – 9/10

(9) புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க, தன் விழிகளாலேயே நண்பனிடம்…

7 days ago

உயிர் நீ மெய் நான்…! – 7/8

(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய…

1 week ago

உயிர் நீ மெய் நான்…! – 5/6

(5) அன்று சனிக்கிழமை. அரக்கப் பரக்க வரோதயனைத் தயாராக்கி, தானும் தயாராகி அவளுடைய குடியிருப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிற குழந்தை காப்பகம்…

2 weeks ago

உயிர் நீ மெய் நான்…! – 4

(4) மிக வேகமாக ஓடிக் கொண்டு இருந்த வாகனத்தின் பின் இருக்கையில்,  அவளும்,  அவளது தாயும் அமர்ந்தவாறு குதுகலத்துடன் எதையோ…

2 weeks ago