Categories: Ongoing Novel

உயிர் நீ மெய் நான்…! – 2

(2)

விசித்திரா அறையை விட்டுச் சென்றதும், புயல் அடித்து ஓய்ந்தது போலத் தோன்றியது ஆதிபனுக்கு.

இப்படி பலவந்தமாகக் காதலை வரவழைக்க முடியாது என்று அவளுக்கு யார் சொல்வது? சொன்னாலும் புரிந்து கொள்வாளா என்பது வேறு விடையம்.

மறுப்பைத் தெரிவித்த பின்னும், அதைக் கேட்காமல் பிடிவாதமாக உன் மீது காதல் என்று வந்து நின்றால், அவனும் தான் என்ன செய்வது? அழுத்தமாகவும் சொல்லியாயிற்று. தெளிவாகவும் சொல்லியாயிற்று. ஏன், கடுமையாகவும் அறிவித்து ஆயிற்று. அப்படியிருந்தும், இதோ இப்படி அடிக்கடி வந்து தொல்லை செய்கிறாள்.

ஒரு பெருமூச்சுடன், விசித்திராவை மறந்து விட்டு, விட்ட வேலையைச் செய்யத் தொடங்கினான்.

மேசையில் படித்தும் படிக்காமலும் இருந்த கடிதத்தை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, அதற்கு ஏற்ப அதை ஒரு பக்கமாக வைத்தவன், வேறு ஏதாவது முக்கிய கடிதங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தான்.

அதில் ஒரு கடிதம் மட்டும் இவனுடைய கருத்தைக் கவர, அதைத் தூக்கிப் பார்த்தான். அந்தக் கடிதம், கனடாவிலிருந்து வந்திருந்தது.

தனியார் செய்தி என்றால் கைப்பேசியில் மெசெஞ்சர், வட்ஸ் அப் என்று வந்து விடும். தொழில் சார் கடிதம் என்றால் மட்டும்தான் இப்படி அச்சடிக்கப்பட்டு வரும். கனடாவிலிருந்து தொழில் சார் கடிதம் வர அவனுக்கு வாய்ப்பேயில்லை.

வியந்தவனாக அந்த உறையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். நிச்சயமாக அது தொழில் சார் கடிதமில்லை என்று மட்டும் நன்கு புரிந்தது. அவனுடைய அலுவலக முகவரிதான் இருந்ததே தவிர, எங்கிருந்து அனுப்பப் பட்டிருக்கிறது என்கிற செய்தி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

யாராக இருக்கும்? குழப்பத்தோடு கடித உரையைக் கிழித்து விரல் நுனியை உள்ளே விட்டுக் கடிதத்தை இழுத்து எடுக்க, நீல நிறக் கடிதம் அவன் விரல்களோடு வந்தது.

ஆச்சரியத்தோடு கடிதத்தில் விழிகளை ஓட்டியவன், மெல்ல மெல்ல அதிலிருந்த செய்தி அவனுடைய உச்சந்தலையில் சென்றடைய, நம்ப மாட்டாத அதிர்ச்சியில், திரும்பவும் தான் படித்தது சரியா என்று வாசித்துப் பார்த்தான். அடுத்து அதன் நிஜம் புரிந்து போக, முகம் இரத்தப் பசையை இழந்து வெளிறத் தொடங்கியது. வியர்வை ஆறாகப் பெருக, புறங்கையால் நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தவன், மீண்டும் அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தான்.

ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருந்தது கடிதம்.

ஆதிபன்,

இந்தக் கடிதம் உனக்கு அதிர்ச்சியைத் தரும் என்று தெரியும். ஆனாலும், வேறு வழியில்லாமல் இதை எழுதுகிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு, எனக்கொரு ஆண் குழந்தை பிறந்தது. தந்தை யார் என்று கேட்காதே…! நீதான்… உன்னோடு வாழ்ந்த நாட்களில், நான் வேறு யாரையும் நாடவில்லை என்பது உனக்கும் தெரியும். நாம் பிரிந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிய வந்தது. குழந்தையை அழிக்க முயன்றேன். முடியவில்லை.  குறிப்பிட்ட நாட்களைத் தாண்டி வளர்ந்து விட்டது. வேறு வழியில்லாமல் பெற்றுக்கொண்டேன்.

வேண்டாத குழந்தை என்பதால், வளர்க்கும் பொறுப்பை நல்ல ஒருத்தியின் கரங்களில் கொடுத்திருக்கிறேன்.

இந்த ரகசியம் இப்படியே மறைந்து போகட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்.. இப்போது உன்னிடம் மறைத்தது தப்பு என்று தோன்றுகிறது. இத்தனை நாள் கழித்து இப்போது ஏன் சொல்கிறேன் என்று யோசிக்கிறாயா…? விதி…! எனது நாட்கள் எண்ணப்பட்டு விட்டன. புற்றுநோய்…! எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். நான் மரணிக்க முதல், உன்னிடம் இந்த உண்மையைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது, சொல்லி விட்டேன். நீ குழந்தையைத் தேடி வரவேண்டிய அவசியமில்லை. குழந்தை இருக்க வேண்டிய இடத்தில், மிக நன்றாக மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இப்படிக்கு,

அணுரேகா.

படித்தவனுக்கு இப்போது ஆத்திரம் வந்தது. யாரோ அவனோடு விளையாடப் பார்க்கிறார்கள். சுத்தப் பேத்தல்…! ஜெஸ்ட் கார்பேஜ்…!” என்றவன், அந்தக் கடிதத்தைக் கசக்கிச் சுழற்றி வீச, அது பறந்து சென்று ஜன்னலில் பட்டுக் கீழே விழுந்தது.

ஆனாலும் இதயத்தின் படபடப்பு இம்மியும் குறைவதாயில்லை. தன் கவனத்தை வேலையில் செலுத்த முயல, விழிகளோ தரையில் கிடந்த அந்தக் கடிதத்தைத்தான் மொய்த்துக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அதுவும் முடியாமல் எழுந்தவன், சென்று அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்து, மீண்டும் படித்துப் பார்த்தான். ஒரு முறையில்லை, இரு முறையில்லை. பல முறை படித்தாயிற்று. ஆனால், எழுத்துகளோ, அதில் உள்ள பொருளோ சற்றும் மாறுவதாயில்லை. ஒரே விடையத்தைப் பல பரிமாணங்களில் அவனுக்கு உணர்த்திக்கொண்டிருக்க, இதயம் படு வேகமாகத் துடித்தது. கரங்கள் நடுங்கின.

‘ராட்சசி…! எத்தனை பெரிய தகாத காரியத்தைச் செய்துவிட்டு, சர்வ சாதாரணமாக இப்படி ஒரு கடிதத்தைப் போட்டு விட்டு நிம்மதியையே குலைத்துவிட்டாளே…! அதுவும் குழந்தையைத் தேடி வரவேண்டிய அவசியமில்லை என்று வேறு சொல்கிறாளே…! கடவுளே…! இப்போது அவன் என்ன செய்யப் போகிறான்…? ஒரு வேளை அணுரேகா சொல்வது போல, அது அவனுடைய குழந்தையாக இருந்தால்.. இல்லை… இருக்காது…! நிச்சயமாக அது அவனுடைய குழந்தையாக இருக்காது. அவனிடம் பணம் பறிக்க ஏதோ சதி செய்கிறாள்.ஆனால்.. அப்படிச் சதி செய்பவளாக இருந்தால் அதற்கான  தகவல்களைக் கொடுத்திருக்க வேண்டுமே! குறைந்தது அந்தக் கடிதம் எங்கிருந்து அனுப்பப் பட்டிருக்கிறது என்பதையாவது குறிப்பிட்டு இருக்க வேண்டாமா? இது எதுவுமில்லாமல் அனுப்பி இருக்கிறாள் என்றால், அந்தக் கடிதத்தைப் பின்பற்றி அவன் வரக்கூடாது என்பது தானே அவள் எண்ணம். அப்படியானால், இந்தக் கடிதம் சொல்வது உண்மையா? நினைக்கும் போதே நெஞ்சம் தகித்தது. மனம் அவசரமாக நான்கு வருடங்களுக்கு முன்பு கசப்புடன் பாய்ந்தது.

மேற்படிப்பிற்காக அவன் கனடா சென்றிருந்த நேரம். அவன் வகுப்பில் சேர்ந்து படித்தவள்தான், அணுரேகா.

மிக மிக அழகி. கனடிய நவநாகரீகத்திற்குள் சுலபமாகவே பொருந்திப் போனவள். தாயும் தந்தையும் இளவயதிலேயே விவாகரத்து பெற்றுப் பிரிந்து போக, அதனால், கவனிப்பாரற்றுக் கைவிடப் பட்டவள். அதனால், பிடித்த வாழ்க்கையை சுதந்திரமாகவே வாழத் தலைப்பட்டவள். அவளுடைய நடை உடை பாவனை அனைத்தும், இலகுவாகவே ஆண்களைக் கவர்ந்து கொள்ளும்.

முதன் முறையாகச் சங்கடமும் கூச்சமுமாக வகுப்பறைக்குள் நுழைந்த ஆதிபனை, ஏனோ தானோ என்று அலட்சியமாகத்தான் பார்த்தாள் அணுரேகா.

அவள், இவனை விட இரண்டு வயது பெரியவள். ஆனாலும் ஒரு சில பாடங்கள் ஆதிபனோடு படித்தாள். அவன் புத்திசாலித்தனத்தையும் மீறிய அப்பாவித்தனத்தைக் கண்டு, இல்லை.. அவன் தந்தை பெரும் பணக்காரர் என்பதை அறிந்து, தானாகவே அவனிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்.

பொதுவாகத் தெரிந்த பெண்களைக் கண்டால், ஹாய் என்கிற புன்னகையோடு விலகிப் போகக் கூடியவன்தான், ஆதிபன். அதுவும் அவனுக்குத் தெரிந்த பெண் என்றால், அது அவனுடைய அன்னைதான். அதுக்கடுத்து விசித்திரா. அன்னை இறந்த பின், தனக்குள்ளேயே ஒடுங்கிக்கொண்டதால் ஆதிபனுக்கு அதிகளவில் நட்பு வட்டாரங்கள் இருந்ததில்லை. இதில் பெண்கள் சுத்தமாக இல்லை. அதிகளவில் பெண் வாடை தெரியாதவனுக்கு, அவர்களோடு பேசும்போது பெரும் கூச்சம் எழுந்தது உண்மைதான்.

அதைக் கண்டு கொண்ட அணுரேகா, மெல்ல மெல்ல அவனைக் கூட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயன்றாள். ஆரம்பத்தில் தன்னை விட ஓரிரு வயது கூடியவள் என்பதால், மரியாதையாகத்தான் பழகினான். பின்பு அந்த மரியாதை குறைந்து அவளைத் தோழியாக ஏற்றுக்கொண்டான். ஆனால், அணுரேகாவின் கடும் முயற்சியில் அவளுடைய வலையில் சுலபமாகவே விழுந்தான், ஆதிபன். கூடவே அவனுக்கு அருகே இருப்பதும், அவனோடு உரசுவதுமாக இருக்க, அத்தகைய நெருக்கத்திற்குப் பழக்கப் படாதவன், ஆரம்பத்தில் ஒதுங்கினாலும், பின்னாளில் அதை ரசிக்கவும் தொடங்கினான்.

அவன் ஒன்றும் வெறும் சதைப் பிண்டம் இல்லையே, உரசுவது கூடத் தெரியாமல் கடந்து போக. அவனும் ஆசாபாசம் கொண்ட உணர்வுகள் நிறைந்த ஆண் அல்லவா? பஞ்சு சும்மா இருந்தாலும், தீ பற்றிக்கொள்வேன் என்று சீண்டும் போது  பஞ்சுதான் என்ன செய்யும். அணுரேகாவின் ஆடைகளும், அவள் தொட்டுப் பேசும் விதமும் காதலையும் மீறி ஆண்மையைத் தட்டி எழுப்ப, சுலபமாகவே அணுரேகாவின் கை பொம்மை ஆனான், ஆதிபன்.

பிறகென்ன, மெதுவாகக் கூச்சத்தை உதறி விட்டு, விருப்புடனே அவளோடு இணைந்து பழகத் தொடங்கினான்.

அந்த நேரம், அவன் என்ன செய்கிறான், ஏது செய்கிறான் என்று கவனிக்க ஆட்களில்லாத சுதந்திரமும், அந்த இருபத்து மூன்று வயது வாலிபமும் அவனுக்குத் துணையாக இருந்ததுதான் பரிதாபமே.

விளைவு, இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாகவே தங்கினார்கள். முதன் முறையாக, பெண்மையின் சுகத்தைக்  கண்டு கொண்ட  ஆதிபனுக்கு சுலபத்தில் அணுரேகாவை விட்டு விலகியிருக்க முடிந்திருக்கவில்லை.

நாட்கள் மாதங்களாயின. மாதங்கள் இரண்டு வருடங்களாயின. ஆதிபன் அணுரேகாவை உயிருக்கும் மேலாகக் காதலிக்கத் தொடங்கினான். அப்படித்தான் நினைத்தான். அவளும் தன்னைக் காதலிப்பதாகவே முழுதாக நம்பினான். இல்லை என்றால், இப்படி அவனோடு ஒரே படுக்கையை அவளால் பகிர்ந்திருக்க முடியுமா? அந்த வயதில், அவன் ஊர் பழக்கம் வேறு, கடனாவின் நாகரீக வாழ்க்கை வேறு என்று அவன் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில், ஆதிபனின் படிப்பு முடிந்து இலங்கை செல்லும் நேரமும் நெருங்கத் தொடங்கியது.

நெருங்க நெருங்க அணுரோகாவை விட்டுப் பிரியும் நிலை வந்துவிடுமோ என்று கலங்கினான் ஆதிபன்.

அதுவரை, அவளாகவே தன் காதலைச் சொல்வாள் என்று காத்திருந்த ஆதிபனுக்கு, ஏமாற்றம்தான் விளைந்தது. அவள் கடைசி வரை தன் காதலைச் சொல்லவில்லை.

அன்று கூடல் முடிந்த திருப்தியோடு எழுந்த அணுரேகா, நடந்து சென்று அங்கிருந்த கபோர்டைத் திறந்து அதிலிருந்த மதுப் போத்தலை வெளியே எடுத்து, அவனை நோக்கி நீட்டி, வேண்டுமா என்று கேட்டாள்.

இவன் மறுப்பாகத் தலையசைக்க, தோள்களைக் குலுக்கி விட்டு, ஒரு குவளையில் மதுவை ஊற்றி விட்டு, உதட்டில் பொருத்தி ஒரு இழுவை இழுத்து விட்டுத் திரும்பி ஆதிபனைப் பார்த்தாள்.

“ஆதிபன்…! உன்னிடம் முக்கியமான ஒரு விடையம் பற்றிச் சொல்லவேண்டும்…” அவள் முடிக்கவில்லை, பளிச்சென்று மலர்ந்தது ஆதிபனின் முகம்.

‘இதுநாள் வரை அவன் ஆவலாகக் காத்திருந்த தருணம்… அவள் தன் காதலைச் சொல்லப் போகிறாள்…’ என்கிற உவகையில் அவளை ஏறிட, அவளோ மதுவை இன்னொரு இழுவை இழுத்துவிட்டு,

“நாம்… நாம் ஏன்…?” என்று அவள் கூறும் போதே, இவனுடைய இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.

‘இதோ, கேட்கப் போகிறாள்.. தன் காதலைச் சொல்லப் போகிறாள்…! திருமணம் முடிக்கலாமா என்று கேட்கப் போகிறாள்.’ நெஞ்சம் குத்தாட்டம் போட, அவளையே ஆவலுடன் பார்த்தான்.

அவளோ தன் கரத்திலிருந்த குவளையை உருட்டியவாறு, சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பின் அவனைப் பார்த்து,

“நாம் ஏன் பிரியக் கூடாது…?” என்று அவள் கேட்டதுதான் தாமதம், அதிர்ந்து போனான், ஆதிபன். சத்தியமாக இப்படி அணுரேகா சொல்வாள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. முதலில் அவன் ஏதோ தப்பாகப் புரிந்துகொண்டான் என்று தான் நினைத்தான். ஆனால், அது இல்லை என்று தெரிந்த போது, அவன் இதயம் சுக்குநூறாகப் போயிற்று.

“எ… என்ன உளறல் இது…? என்ன சொல்கிறாய் நீ…? பி… பிரிவதா…” அவன் முடிக்கவில்லை, நிதானமாக நடந்து சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அணுரேகா,

“யெஸ்… இரண்டு வருடங்கள்… ஒரே விதமான வாழ்க்கை…! சலிப்பாக இருக்கிறது. ஐ நீட் டிஃபரன்ட் லைஃப்.” அவள் முடிக்கவில்லை, சடார் என்று படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தான், ஆதிபன்.

“அணுரேகா, நீ என்ன சொல்கிறாய்…? சலிப்போடு வாழ்கிறோமா…? நாம்… காதலோடு வாழ்கிறோம் அணு…” அவன் முடிக்கவில்லை, வாய்க்குள் ஊற்றிய மது தெறித்து விழ, கலகலவென்று சிரித்தாள் அணுரேகா.

“காதலா…? மை காட்…! யு ஆர் சோ ஃபன்னி…!” என்றவள் குவளையை மேசையில் வைத்துவிட்டு,

“என்னை உளறுகிறேன் என்று விட்டு, நீதான் நன்றாக உளறுகிறாய் ஆதிபன்…!”

“உ… உளறலா…? அணு… நீ… சொல்வது…? அப்படியானால் நீ என்னைக் காதலிக்க வில்லையா…?” என்று கேட்டபோது அவனுக்கு வெறும் காற்றுதான் வந்தது. அதைக் கேட்டதும், பரிதாபத்துடன் அவனை ஏறிட்ட அணு,

“மை காட்…! நிஜமாகவே நான் உன்னைக் காதலிப்பதாக நினைக்கிறாயா? நீ ஜோக் அடிக்கிறாய் என்று நினைத்தேன். நீ இத்தனை பெரிய முட்டாளாக இருப்பாய் என்று நினைக்கவில்லை ஆதிபன்…” என்றவள், காலுக்கு மேல் காலைப் போட்டு, அங்கிருந்த மேசையில் சரிவாக அமர்ந்தவாறு,

“லிசின், இந்தக் காதல், திருமணம் இது எதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அவற்றை நான் வெறுக்கிறேன் என்று உனக்கும் தெரியும். தெரிந்து கொண்டும், இப்படிப் பிதற்றினால் நான் என்ன செய்யட்டும்…?” என்றவள் எழுந்து அவனை நோக்கி வந்தவாறே,

“வாழும் வரை, பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போகவேண்டும். இதில் ஒருத்தனைக் காதலித்தால், என் சுதந்திரம் என்னாவது..?” முடிக்க வில்லை, முதன் முறையாக அவளைக் கோபத்தோடு பார்த்தான் ஆதிபன்.

“அணு… என்ன உளறல் இது…? இது எதிலும் நம்பிக்கையில்லாமல், பின்பு எதற்காக என்னோடு பழகினாய்..? நான்… நான் நினைத்தேன், நீ என்னை விரும்புகிறாய் என்று…”

சொல்லும் போதே, குரல் கமறியது அவனுக்கு.

இப்போதும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தவள்,

“ஒருத்தனோடு பழகினாலே அது காதல் தானா…? அப்படிப் பார்த்தால், உனக்கு முன்பு இரண்டு ஆண் நண்பர்கள் எனக்கு இருந்திருக்கிறார்கள். அவர்களையும் நான் காதலித்தேன் என்று சொல்வாயா…? ப்ச் ப்ச்… இல்லை ஆதிபன்…! என்னால் யாரையும் காதலிக்க முடியாது. ஐ ஆம் ஃப்ரீ பேர்ட். என்னை ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது. காதல் திருமணம் குழந்தைகள்… காட்… நினைக்கும் போதே மூச்சு முட்டுகிறது.” என்றவள் அவனுக்கு அருகாமையில் அமர்ந்து, அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.  கசங்கியிருந்த அவன் முகத்தைக் கண்டு இரக்கம் கொண்டவளாக,

“ஆதிபன்… உன்னோடு நான் பழகியதற்குக் காரணம், உன் அப்பாவித் தனம். பெண் வாடையே தெரியாத உன்னை, எனக்குப் பிடித்திருந்தது. உனது முதலாவது அறிமுகம் நானாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். தவிர என்னைக் கவர்ந்தது உன் உருவம்.” என்றவள் அவனை நெருங்கி, அவன் முடிக்குள் விரல்களை நுழைத்து,

“இந்த அடர்ந்த கரிய சுழல் முடி…” சுட்டு விரலால் அவனுடைய நெற்றி வரை கீறி, “இந்த பரந்த நெற்றி, அடர்ந்த இரு புருவங்கள்…” என்றவள் தன் உதடுகளைக் கடித்து விடுவித்து, அந்தக் கூரிய இரு விழிகளையும் உற்றுப் பார்த்து, “அப்பாவித் தனத்தோடான கூரிய இரு விழிகளும், தொட்டால் சுடும் நாசியும், தடித்த இந்த அழகிய உதடுகளும்…” என்றவாறே திரண்ட அவன் தோள்களையும் புஜங்களையும் காமத்தோடு அழுந்தப் பற்றி, “இதோ… உருண்டு திரண்ட இந்தத் தேகமும்…வெண்மைக்கும், கருமைக்கும் இடைப்பட்ட நிறமும்…. இவை… இவைதான் என்னை உன் பக்கமாக விழ வைத்தது. அதுவும் இரவில் உன் அணைப்பு, என்னை வேறு உலகுக்குக் கொண்டு சென்றது. யெஸ்… ஐ லவ் தட்…! கூடவே.. நீ என்னை நடத்திய விதம் எனக்குப் பிடித்திருந்தது. நீ அருகே இருக்கும் போது ராணியாக உணர்ந்தேன். ஆனால், இப்போது அது எனக்குச் சலித்து விட்டது ஆதிபன்.” என்றவள் அவனை விட்டு விலகி,

“டு யு நோ வட்..?  கொஞ்சத்திற்கு   முதல்  பிரியலாம் என்று சொன்னேனே…! அது ஏன் தெரியுமா…? நான் இன்னொருத்தனைச் சந்தித்தேன்… ஜார்ஜ் ஆப்ரஹாம். கனடாவில் மிகப் பெரும் செல்வந்தர்… அவருக்கு என்னைப் பிடித்து இருக்கிறது… இப்போது அவரோடு வாழ ஆசைப்படுகிறேன்.” என்றவளை  கசப்போடு ஏறிட்டான், ஆதிபன்.

ஏனோ அவனால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. அவன் நினைத்தது என்ன? நடப்பது என்ன? ஒரு வருடமில்லை, இரண்டு வருடங்கள், அவளோடு இருந்திருக்கிறான். அதுவும் நகையும் சதையுமாக. ஆனால், அவள் எத்தனனை சுலபமாகப் பிரிந்துவிடலாம் என்று அவனிடமே கூறுகிறாள்…!

அப்படியானால் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கை… அதற்கென்ன அர்த்தம்…?”   நெஞ்சை முட்டி நின்ற வேதனையை விழுங்கியவன்,

“ஏன்…? நான் உன்னை நன்றாகத்தானே பார்த்துக்கொண்டேன்… நான் எங்காவது குறை வைத்தேனா…?” கேட்கும் போதே அவன் குரல் நடுங்கியது. அதைக் கேட்டதும் சலிப்போடு அவனைப் பார்த்த அணுரேகா,

“என்னை உன்னிடமிருந்து விலகச் சொல்வதே உன்னுடைய அந்த அதீத அக்கறைதான், ஆதிபன். உன்னுடைய கட்டுப்பாடுகள், பொஸஸிவ்… இதை எல்லாம் நான் வெறுக்கிறேன். உன்னுடைய அதி கூடிய அக்கறையும், கவனிப்பும் எனக்குச் சுமையாக இருக்கிறது. இதைப் பல முறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன். நீதான் கேட்பதாக இல்லை.

என்னை எப்போதும் உன் கூட வைத்திருக்க ஆசைப்படுகிறாய். நான் என்ன செய்தாலும், அதை நோண்டித் துருவுகிறாய். ஆண் நண்பர்களோடு பேசினால் கோபப் படுகிறாய்… இதெல்லாம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை…! நான் காற்று போல… எந்தத் திசைக்கு வேண்டுமானாலும் கட்டுப்பாடில்லாமல் வீசுவேன். என்னை ஒரு இடத்தில் நிறுத்த நினைத்தால்… அது முடியாத காரியம் ஆதிபன்…! சொன்னால் புரிந்து கொள்.

இதோ பார்…! என் உலகம் வேறு, உன் உலகம் வேறு…! நீ எல்லாம், மனைவி குழந்தைகள் என்று ஒரு கட்டுப்பாட்டோடு, ஒரு கூட்டிற்குள் வாழும் ரகம். நான்…? நான் கடல் போல! வெறும் செம்பில் என்னை அடைத்து விட முடியாது. தயவு செய்து புரிந்துகொள்…!”

“அணு… உன்னால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது. இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம்… இத்தனை நாட்களில் கொஞ்சம் கூடவா நீ என்னைக் காதலிக்கவில்லை, விரும்பவில்லை… காதலில்லாமலா என்னோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டாய்…? இன்னும் அவனுக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

“கமான்…! படுக்கைக்கும், காதலுக்கும் என்ன சம்பந்தம்? நீ ஆண்… நான் பெண்… இருவருக்கும் ஒத்துப் போகிறது… ஒன்றாக வாழ்கிறோம்… அவ்வளவு தான். இதை வைத்துக்கொண்டு காதல் கத்தரிக்காய் என்றால், நான் என்ன செய்யட்டும்…? லிசின்… இப்போது உன்னைப் பிடித்து வாழ்கிறேன்… எப்போதுமே உன்னைப் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியுமா…?” என்று அவள் கேட்க,

இப்போது படுக்கையை விட்டு எழுந்தான் ஆதிபன். குனிந்து தன் கைப்பேசியை எடுத்தவன், நேரத்தைப் பார்த்தான். விடியற்காலை இரண்டு முப்பது என்றது நேரம். நெஞ்சம் முழுவதும் ஏமாற்றமும், வலியும் நிறைந்திருந்தாலும், அதை உமிழ்நீர் கூட்டி விழுங்கியவன், திரும்பி அணுரேகாவைப் பார்த்தபோது, அவனுடைய முகம் இறுகிப் போயிருந்தது.

“குட்… அதுதான் உன் முடிவென்றால்…”  அவள் முகத்தை அழுத்தமாகப் பார்த்துவிட்டு,

“நான் குளியலறை சென்று வெளியே வருவதற்குள், உன்னுடைய குந்துமணி அளவு பொருட்கள் கூட இந்த அறைக்குள் இருக்கக் கூடாது…” என்று விட்டுத் திரும்ப, இப்போது அதிரும் தருணம் அவளுடையதாயிற்று.

“ஆதிபன்… இப்போதேயா…? இப்போது நேரம் இரண்டு முப்பது… இப்போது நான் எப்படி…?” ஏளனத்துடன் பாார்த்துச் சிரித்தவன்,

“நீ நடந்து போகிறாயோ, இல்லை பறந்து போகிறாயோ… அது உன் இஷ்டம்…! உன்னைத் தொட்ட கறை போக நான் குளிக்க வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது எடுக்கும்… அந்த அரை மணி நேரத்திற்குள் நீ அத்தனையையும் எடுத்துக்கொண்டு சென்றுவிடவேண்டும். இல்லை என்றால், நான் தூக்கி வீசுவேன்…! உன்னையும் சேர்த்து…!” என்று கடுமையாகச் சொன்னவன், அடுத்து, அவளைத் திரும்பிப் பார்க்காமல் குளியலறைக்குள் நுழைந்தான்.

குளிர் நீரின் கீழ் நின்றவன், பத்து முறை சவர்க்காரம் போட்டுக் குளித்து ஏமாற்றத்தையும் சேர்த்துக் கழுவிவிட்டு அறைக்குள் வந்தபோது, அவன் சொன்னது போலவே அணுரேகா அறையை விட்டுச் சென்றிருந்தாள்.

அதன் பிறகு அவளுக்கும் அவனைப் பிரிந்த உறுத்தல் கொஞ்சம் கூட இருக்கவில்லை. புதிய அந்தக் காதலனுடன் மகிழ்ச்சியாகவே தான் நாட்களைக் கடத்தினாள். அவளைப் பிரிந்த அடுத்த ஒரு மாதத்தில் ஆதிபன் இலங்கைக்கும் வந்து சேர்ந்து விட்டான். கூடவே பெண்கள் மீது வைத்திருந்த மரியாதையையும் சுத்தமாகத் தொலைத்திருந்தான்.

காலங்கள் போக, அவன் அணுரேகாவை முற்றாகவே மறந்து விட்டான். அதுவும் கடும் முயற்சிகளுக்குப் பிறகு தான். ஆனாலும் அவன் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்று தான் சொல்லவேண்டும்.

ஆனால், அத்தனை முயற்சியையும் முற்றாக அழித்து விட்டது அந்த ஒற்றைக் கடிதம்.

அணுவின் பிரிவிற்குப் பிறகு, அவனால் வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. பிடிக்கவுமில்லை. இதோ நான்கு வருடங்கள் கடந்து விட்டன. இப்போது பெரிய ஒரு வெடிகுண்டை அவன் தலையில் போட்டு விட்டு நிற்கிறது அந்தக் கடிதம்.

அவனால் இன்னும் தனக்கொரு மகன் இருக்கிறான் என்பதை நம்பவே முடியவில்லை… ஏனோ கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன. மீண்டும் அந்தக் கடிதத்தைப் படித்தவனுக்கு நெஞ்சம் கசங்கியது.

‘நிஜமாகவே அவனுக்குக் குழந்தை இருக்கிறது என்றால், அந்தக் குழந்தை எங்கே இருக்கிறது? என்ன செய்கிறது? யாரிடம் சிக்கி சின்னாபின்னப் படுகிறது… அணுரேகா சொல்வதைப் பார்த்தால், குழந்தை நன்றாக இருப்பது போல அல்லவா தோன்றுகிறது. ஆனால், அவள் சொல்வதை வைத்து எப்படி நம்புவது. இது அவனுடைய குழந்தை… அவனுடைய இரத்தம். வேறு யாரோ தெரியாத ஒருத்தியின் வளர்ப்பில் வளர்வதா? காட்… எப்படி அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்கப் போகிறான். கண்டு பிடித்தாலும், குழந்தையைச் சுலபமாக அழைத்து வந்துவிட முடியுமா…?’ ஆயிரம் கேள்விகள் நெஞ்சை முட்டி நின்றன.

‘அவன் மீண்டும் ஈழம் வர முதல், ஒரு முறையாவது அணுரேகாவை சந்தித்திருக்க வேண்டுமோ? சந்தித்திருந்தால் கண்டு பிடித்து இருப்பானோ…! கண்டுபிடித்திருந்தால், நிச்சயமாகக் குழந்தையை யாருக்கும் கொடுத்திருக்கச் சம்மதித்திருக்க மாட்டான்.

குழந்தையை கையோடு அழைத்து வந்திருப்பான். காட்…! அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இப்படித் தவிக்க விட்டு விட்டாளே! ராட்சசி…! அவளுடைய கடிதத்தைப் பார்த்தால், அவளுடைய உயிருக்கு ஆபத்து போல அல்லவா தோன்றுகிறது?’

அந்த நிலையிலும், அணுரேகாவை ஓடிச் சென்று பார்க்கவேண்டும் என்று உள்ளம் பரபரத்தது. கூடவே.. அந்த நினைப்பே வெறுப்பையும் கொடுத்தது.

கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியிருந்தவனுக்கு,  ‘எதுவாக இருந்தாலும், கனடா சென்று பார்ப்பதே, இதற்கான தீர்வு!’ என்று தீர்மானித்தான்.

 

 

What’s your Reaction?
+1
11
+1
1
+1
2
+1
0
+1
4
+1
0
Vijayamalar

Recent Posts

உயிர் நீ மெய் நான்…! – 12

(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…

3 days ago

உயிர் நீ மெய் நான்…! – 11

(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா...!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன்…

5 days ago

உயிர் நீ மெய் நான்…! – 9/10

(9) புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க, தன் விழிகளாலேயே நண்பனிடம்…

7 days ago

உயிர் நீ மெய் நான்…! – 7/8

(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய…

1 week ago

உயிர் நீ மெய் நான்…! – 5/6

(5) அன்று சனிக்கிழமை. அரக்கப் பரக்க வரோதயனைத் தயாராக்கி, தானும் தயாராகி அவளுடைய குடியிருப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிற குழந்தை காப்பகம்…

2 weeks ago

உயிர் நீ மெய் நான்…! – 4

(4) மிக வேகமாக ஓடிக் கொண்டு இருந்த வாகனத்தின் பின் இருக்கையில்,  அவளும்,  அவளது தாயும் அமர்ந்தவாறு குதுகலத்துடன் எதையோ…

2 weeks ago