Categories: Ongoing Novel

உயிர் நீ மெய் நான்…! – 1

(1)

அலுவலக மேசையின் முன் அமர்ந்தவாறு ஏதோ ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான், ஆதிபன்.

வாரி விட்டும் சரியாக நிற்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் சுருண்ட அடர்ந்த குழல். தொட்டுவிடத் துடிக்கும் புருவங்கள். அதற்குக் கீழே குத்தீட்டியின் கூர் முனையாய்  மின்னும் விழிகள். தொட்டால் சுடும் நாசி. சிரிக்க மறுக்கும் அழுத்தமான உதடுகள். கனகச்சிதமாக நறுக்கி விடப்பட்ட தாடி மீசை, அகன்ற கழுத்து. அதன் ஓரமாய் சற்று புடைத்தோடிய நரம்பு. ஒழுங்காய் உடற்பயிற்சி செய்ததன் பயனாய்,  உருண்டு திரண்ட புஜங்களும், அதனோடு இணைந்த கரங்களும். கன்னிப் பெண்களைக் கண்டால், வா வந்து உறங்கு என அழைக்கும் பரந்து விரிந்த மார்பு. ஒட்டிய வயிற்றில், பிரத்யேகமாக அதற்கென்றே உடற்பயிற்சி செய்து வரவழைக்கப்பட்ட ஆறடுக்கு தசைத் திரட்சிகள். ஒடுங்கிய இடை. ஒரு உதையில் எதிரியைக் குத்துக்கரணம் அடிக்க வைக்கும் இறுகிய கால்கள்.

மொத்தத்தில்  பெண்களைச்  சுலபமாய்  கவர்ந்திழுக்கும் நவீனரக ஆதித்த கரிகாலன்.

ஈழத்தில்  பணக்கார வரிசையத் தொட்டுவிட்ட  விக்ரமசூரியரின் ஒரே புத்திரன். மேற்படிப்பை கனடாவில் முடித்து விட்டு வந்த மகனிடம், அத்தனை பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ள, தந்தை கொடுத்த தொழிலைத் திறம்பட நடத்தி, ஐந்து வருடங்களில் மூன்றாவது  இடத்தைத் தொட்டு விட்டவன்.

இன்னும் இரண்டு வருடங்களில், முதல் இடத்தைத் தொடுவது தான் அவனுடைய லட்சியமாக உழைத்துக் கொண்டிருப்பவன். இதுவரை திருமண பந்தத்தில் சிக்காதவன். சிக்கிக் கொள்ள விரும்பாதவனும் கூட. அவன் பின்னே நூறு பேர் சுற்றினாலும், சுட்டமண்னைத் தட்டுவது போலத் தட்டிவிட்டு சென்றுவிடும் ஆணழகன்.

அவன் முக்கிய கோப்பொன்றை அலுவலக மேசையில் அமர்ந்தவாறு கவனமாக பார்த்துக் கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது. வேலையில் கவனம் சற்று குலைய, எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தான். தட்டும் சத்தத்தில் இருந்து அவனுடைய செயலாளர் செந்திரு என்று தெரிந்தது. இப்போது இலகுவாக இருக்கையில் சாய்ந்தமர்ந்தவாறு,

“யெஸ்… கம் இன்…” என்றான் தன் அழுத்தமான ஆழமான குரலால்.

அவன் அனுமதி கிடைத்ததும் கதவை மெதுவாகத் திறந்த செந்திரு, அழகிய புன்னகை ஒன்றை சிந்தியவாறு, உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு, அவனை நோக்கி வந்தார்.

அவனுடைய தந்தை வேலை செய்த காலத்திலிருந்து அவருக்குச் செயலாளராக வேலை செய்தவர். இவன் பொறுப்பேற்று அலுவலகத்தில் கால் பதித்த நாள் முதல் பக்கபலமாக நின்று இவனை மேலும் மெருகேற்றியவர்.

அவரைக் கண்டதும், தன் கரத்திலிருந்த பேனாவை மேசையில் போட்டுவிட்டு, அவருடைய புன்னகைக்குப் பதில் புன்னகை செய்தவாறு,

“ஹே… வட்ஸ் அப்…?” என்று கேட்க, அவனை நோக்கி வந்தவர் தன் கையிலிருந்த ஒரு கட்டுக் கடிதங்களை அவனுடைய மேசையில் வைத்துவிட்டு, மறு கரத்திலிருந்த கோப்பை அவன் முன்னால் வைத்துத் திறந்தவாறு,

“இன்றைக்கிடையில் அனுப்ப வேண்டும்… கையெழுத்துப் போடுங்கள்…” என்றதும், சற்று முன் மேசையில் போட்டிருந்த பேனாவை எடுத்து, அவர் நீட்டிய கோப்பில் கையொப்பம் இட்டவாறு, தொழில் சம்பந்தமான ஒரு சில கேள்விகளைக் கேட்க, செந்திருவும் அதற்கான பதிலைச் சொல்லியவாறே, அவன் எங்கெங்கே கையொப்பம் இடவேண்டும் என்று சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தார். கையொப்பம் இட்டு முடிந்ததும், பேனாவை மூடிவிட்டு, மீண்டும் மேசையில் போட்டுவிட்டு,

“இன்று மாலை நண்பர்களுடன் வெளியே போகிறேன். அதனால், ஏதாவது கையெழுத்து வேண்டும் என்றால் இப்போதே எடுத்து வந்து விடுங்கள்.” என்று கூறியவாறு  கடிதக் கட்டைக் கரத்தில் எடுக்க, அவன் கையெழுத்துப் போட்டு முடித்திருந்த கோப்பை எடுத்துக் கையில் வைத்தவாறு,,

“அப்பா எப்போது ஊருக்கு வருகிறார்?” என்று ஆவலுடன் கேட்டார் செந்திரு.  உதடுகளைப் பிதுக்கியவன்,

“தெரியவில்லை… நேற்றுத்தான் தொழில் விடயமாக மலேஷியா போனார். எப்போது வருகிறார் என்று அவரிடம் தான் கேட்கவேண்டும்.” என்று கூற, அழகாய் புன்னகைத்தார், அந்த அறுபது வயதைத் தொட்டுவிட்ட பெண்மணி.

“உண்மைதான்…” என்று விட்டு நிமிர்ந்தவர், ஆதிபனை ஒரு விநாடி குறுகுறு என்று பார்த்தார்.

கடிதக் கட்டின் முதல் கடிதத்தைக் கரத்தில் எடுத்து அதைப் பிரிக்கத் தொடங்கியவன், செந்திரு தயங்கி நிற்பது புரிய, விழிகளை மட்டும் உயர்த்தி,

“வட்…?” என்றான் சற்று அழுத்தமாக.

“விக்ரமசூரியர் மலேஷியா போக முதல் அவரைச் சந்தித்தேன்…” என்றதும், ஆதிபனின் விழிகளில் மெல்லிய சுவாரசியம் எட்டிப் பார்த்தது.

“ரியலி…!” என்று கிண்டலுடன் கேட்டவாறு கடித உரையைப் பிரித்துக்கொண்டு, “எனக்குத் தெரியாமல் கூட்டு ரகசியம் போல…!”  என்று கேட்க,

அவனைச் சற்று கோபத்துடன் பார்த்த செந்திரு,

“ப்ச்… கூட்டு ரகசியமில்லை…! அப்பா உங்களை இட்டு நிறையவே வருந்துகிறார் தெரியுமா…?” என்ற செந்திருவை அலட்சியமாகப் பார்த்துவிட்டு,

“நான் என்ன ஆறு வயதுக் குழந்தையா என்னை நினைத்துக் கவலைப்பட…?” என்று அதே கிண்டலுடன் கேட்டவனை, பொறுமை இழந்து பார்த்த செந்திரு,

“குழந்தை போலத்தான் நடந்து கொள்கிறீர்கள் ஆதிபன்…! இப்போது எதற்காகத் திருமணம் வேண்டாம் என்கிறீர்கள்…? காலாகாலத்தில் திருமணம் முடித்தால் தானே, குழந்தை குட்டி என்று வாழ்க்கை அழகாக நகரும்…!” என்று அனுபவம் நிறைந்தவராக அறிவுரை கூறத் தொடங்க, அவனோ பதில் சொல்லாமல் அந்தக் கடித உரையிலிருந்து கடிதத்தை வெளியே எடுத்துப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினான்.

“ஆதிபன்…! உங்கள் செயலாளராக மட்டும் இல்லாமல், உங்கள் மீது அன்பு கொண்ட ஒரு தோழியாகவும் சொல்கிறேன். எதற்கு இத்தனை பிடிவாதம்…? உங்கள் அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படி விட்டு இருப்பார்களா? நச்சரித்து உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பார்கள். ஆனால் விதி, உங்கள் பதினெட்டாவது வயதில், அவர்களை எடுத்துக் கொண்டது. பாவம் உங்கள் அப்பா, உங்களுக்காக வேறு திருமணம் செய்யாமல், இதுவரை காலமும் வாழ்ந்து விட்டார். அவருக்காகவாவது திருமணத்திற்குச் சம்மதிக்கலாம், இல்லையா…?” அவர் முடிக்க வில்லை, நெளிந்த உதடுகளுடன் அவரை மேல் கண்ணால் பார்த்தவன்,

“அப்பாவை இன்னொரு திருமணம் முடிக்கச் சொல்லி, பலவாட்டி சொல்லிவிட்டேன்… அவர் தான் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்… நீங்களாவது அவரிடம் சொல்லி, இன்னொரு திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாமே…!” என்று கேட்க, செந்திரு இப்போது வெளிப்படையாகவே பார்த்து முறைத்தார்.

“உங்களைத் திருமணம் செய்யச் சொல்லிச் சொன்னால், உங்கள் அப்பாவைத் திருமணம் செய்யச் சொல்கிறீர்களே…? அவர் வாழ்ந்து முடித்தவர்… நீங்கள் அப்படியா? சொன்னால் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?” என்றவரை மெல்லிய புன்னகையுடன் பார்த்தவன்,

“செந்திரு… திருமணம் இளமைக் காலத்தை விட, முதுமைக் காலத்திற்குத்தான் மிகவும் அவசியம். நமக்குத் தோள் கொடுக்க, நம்மோடு சற்று நேரம் பேச, தோள் சாய என்று ஒரு துணை வேண்டும். தவிர, அம்மாவை இழந்து பத்து வருடங்களாகிவிட்டன. இன்று வரை தனிமரமாக இருக்கிறார். அதனால் அவருக்குத்தான் துணை வேண்டும்.” என்றவனைப் பெருமூச்சுடன் பார்த்த செந்திரு,

“அப்பாவுக்குத் துணை வேண்டும் என்கிறீர்களே…! அது உங்களுக்கும் வேண்டும் தானே…? இப்போது திருமணம் முடித்தால், பிற்காலத்தில் அதே தோள் உங்களுக்குக் கிடைக்காதா?” என்று அவனுடைய மனதை மாற்றும் வேகத்தில் கேட்க, சட்டென்று ஆதிபனின் முகத்தில் ஒரு வலி வந்து மறைந்தது. அப்படி நம்பித்தானே அவளோடு பழகினேன். கடைசியில், வேதனையோடு எண்ணும்போதே,

“சரி ஆதிபன், உங்களை விடுங்கள்… உங்களுக்காகக் காத்திருக்கும் விசித்திராவைப் பற்றிக் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஐந்து வருடங்களாக உங்களையே நினைத்து வாழ்ந்து கொண்டி இருக்கிறாளே…! அவளுக்காகவாவது உங்கள் மனதை மாற்றுவதில் தப்பில்லையே…?” என்றார் மென்மையாக.

அதைக் கேட்டு உதட்டைச் சுளுக்கிய ஆதிபன், “கமான் செந்திரு…! திரும்பவும் இதே பேச்சைக் கொண்டு வராதீர்கள்.  விசித்திராவைச் சந்தித்த நாளிலிருந்து இந்த நாள் வரை என் மனதில் அவளுக்கு இடம் கொடுத்தது கிடையாது. அது அவளுக்கும் தெரியும். ஏன்? யாருக்கும் வாக்குக் கொடுக்கவில்லை. இவ்வளவு ஏன்? இதுவரை அவளுக்கு அப்படியொரு சமிக்ஞை கூட நான் செய்ததில்லை. அப்பாவின் நண்பரின் மகள் என்பதால், அவளோடு நட்பாக நடந்துகொண்டேன்.அதைத் தவிர, என் மனதில் வேறு எதுவும் இருக்கவில்லை. அவளாக அதைக் காதல் என்று நினைத்தால் நான் என்ன செய்யட்டும்? இந்தக்   கணம் வரை அவள் மீது எனக்குக் காதல் வந்ததுமில்லை, அவளை மணக்க வேண்டும் என்கிற யோசனை தோன்றியதுமில்லை. இனியும் வரப்போவதில்லை.  இதைத் தெளிவாக அப்பாவிடம் சொல்லியும் விட்டேன். இதற்கு மேலும் வந்து தொந்தரவு செய்தால், நான் என்னதான் செய்யட்டும்?” என்று சலிப்புடன் கேட்க.

“இல்லைபா. விசித்திராவும் வேறு திருமணம் முடிக்கச் சம்மதிக்கிறாள் இல்லையே…! திருமணம் முடிப்பதாக இருந்தால் உங்களைத்தான் மணப்பேன் என்று நிற்கிறாள். பாவம், உங்கள் அப்பா ‘தன் நண்பனின் மகளுக்காகப் பார்ப்பதா? இல்லை.. உங்களுக்காகப் பார்ப்பதா?’ என்று கலங்கி நிற்கிறார்.”

“செந்திரு…! அவள் பிடிவாதம் பிடிக்கிறாள் என்பதற்காக, என் விருப்பு வெறுப்புகளைக் கைகழுவச் சொல்கிறீர்களா…? அவள் பிடிவாதம் அவளுக்கு என்றால், என் பிடிவாதம் எனக்கு. அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பதற்காக எனக்கு அவளைப் பிடிக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன?  ஏற்கெனவே விசித்திராவிடம், அழுத்தம் திருத்தமாக இது பற்றிப் பேசியும் விட்டேன். காது கொடுத்துக் கேட்கமாட்டேன் என்றால், நான் எதுவும் செய்ய முடியாது…!” அவன் எரிச்சலுடன் முடிக்க,

“அதில்லை ஆதிபன்…” அவர் முடிக்கவில்லை, பொறுமை  இழந்தவனாகக்  கரத்திலிருந்த கடிதத்தை மேசையில் வேகமாகப் போட்டு,

“தட்ஸ் இட்… செந்திரு…! எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நான் அதைப் பார்க்க வேண்டும். வேறு ஏதாவது கையெழுத்திட இருக்கிறதா…?” என்று அழுத்தமாகக் கேட்க, அதற்கு மேல் எப்படிப் பேசுவது என்று தெரியாமல், சற்று நேரம் அமைதி காத்தார் அவர்.

இதோ இப்படித்தான், திருமணம் என்றாலே கண்களை இறுக மூடிக்கொண்டு மாட்டேன் என்கிறான். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், தந்தையைத் திருமணம் முடிக்க வற்புறுத்துகிறான். பாவம் விசித்திரா. இவனைக் கண்டதும் காதல் வயப்பட்டு, மணந்தால்.. இவனைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். அதுவும் ஒரு வருடம் இரண்டு வருடங்களில்லை, ஒன்பது வருடங்கள். இவனோ திருமணம் என்றாலே பிடரியில் கால் முட்ட ஓடுகிறான். அப்படியிருந்தும் இவன் மனம் மாறுவான் என்கிற பிடிவாதத்தோடு காத்திருக்கிறாள். இவனோ, அந்தப் பேச்சை எடுத்தாலே இப்படித்தான் முறித்து விடுகிறான்.

விக்ரமசூரியரும் மகனிடம் பல முறை பலவிதமாகக் கேட்டுவிட்டார். இவன் பிடி கொடுத்தால் தானே. நான் விசித்திராவை ஒரு தோழியாகத்தான் பார்க்கிறேனே தவிர, அதை விட, வேறு எந்த சிந்தனையும் எனக்கில்லை என்று விட்டான். சரி விசித்திரா தானே வேண்டாம், வேறு திருமணம் பேசுகிறேன் என்றாலும், கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டு தப்பி விடுகிறான்.

அவரும் சொல்லிப் பார்த்துச் சலித்து, கடைசியில் விட்டுவிட்டார்.

மலேஷியா செல்ல முதல், செந்திருவிடம் இதுபற்றிப் புலம்பித் தள்ளிவிட்டார்.

செந்திரு தான் மனம் கேட்காமல், இவனிடம் பேச வந்துவிட்டார். இருந்தும் என்ன பயன்? அத்தனை முயற்சியும் வீணாகப் போயிற்று. சலிப்புடன் அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, கோப்போடு வெளியே செல்ல, சென்றவரை மேற்கண்ணால் பார்த்துவிட்டு மேசையில் போட்ட கடிதத்தை எடுத்து அதில்  கவனம் செலுத்தத் தொடங்கினான், ஆதிபன்.

ஆதிபனின் தந்தை விக்ரமசூரியரின் நண்பர் மகள்தான் விசித்திரா. அழகிதான். நிறையக் கற்றவளும் கூட. ஆரம்பத்தில் ஆதிபனின் தந்தை விக்ரமசூரியர் வியாபாரத்தைத் தொடங்க சிரமப்பட்ட போது, அவரோடு பங்குதாரராகச் சேர்ந்து தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்து உதவியவர்தான்,  தேவநாதன்.

தேவநாதன் பணம் மட்டும் தான் கொடுத்து உதவினார். ஆனால், விக்ரமசூரியர்  பணத்தோடு கடும் உழைப்பையும் போட்டார்.  விளைவு வாகன உதிரிப்பாகங்கள் செய்யும் அந்தத் தொழிற்சாலை நன்கு   பிரசித்தி   பெற்றது.   கூடவே   தேவநாதன் தன் நண்பர்களையும் அந்தத் தொழிற்சாலையில் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ள, மேலும் அவருடைய தொழிற்சாலை கிளைகள் விட்டுப் படரத் தொடங்கியது.

விக்ரமசூரியரும், ஆதிபனும் அந்தத் தொழிற் சாலையின் 48 வீதப் பங்குதாரர்களாக இருக்க, தேவநாதன் இருபத்தெட்டு வீதத்தையும், அவருடைய நண்பர்கள் மிகுதியையும் வைத்திருந்தார்கள்.

அதன் பின்பு ஆதிபன், தந்தையின் பொறுப்பை தன்னகத்தே எடுத்துக் கொள்ள, மிக சிறப்பாகவே தொழிற்சாலையை நடத்தினான் என்று தான் சொல்லவேண்டும். இவன் வந்த பின் லாபம் மிக நன்றாகவே இருந்தது. பணமும், படிப்பும் அறிவும் கொண்ட அந்த இளைஞனை, யார் தான் விட்டு வைப்பார்கள்.

இதில் தேவநாதனின் மகள் விசித்திராவுக்கு அவன் மீது காதல் என்பதை அறிந்ததும், விக்ரமசூரியருக்கு மிக்க மகிழ்ச்சி தான். அப்படி விசித்திரா ஆதிபனை மணந்தால், விசித்திரா வீட்டு மருமகளாக வருவதோடு, ஒரே குடும்பம் பெரும்பான்மையான பங்குகளைக் கைப்பற்றும் என்கிற தொழில்முறை விருப்பமும், அதில் அடங்கியிருந்தது.

ஆனால் திருமணம் முடிக்க மறுக்கும் அவனை எப்படித்தான் வழிக்குக் கொண்டு வருவது? சின்னக் குழந்தை என்றால் சொல்லிச் செய்விக்கலாம். கொஞ்சம் வளர்ந்திருந்தால், அதட்டியாவது பணிய வைக்கலாம். இதையெல்லாம் தாண்டி இருபத்தொன்பது  வயதைத்  தொட்டு விட்டவனிடம்,  என்ன சொல்லி மிரட்டி திருமணத்திற்குப் பணிய வைப்பது?

அவன் தாய் இருந்திருந்தாலாவது அவன் போக்கில் விட்டு எதையாவது பேசி ஒப்புக்கொள்ள வைத்திருப்பாள். அவன் தந்தையாக எந்தளவு தான் கெஞ்சுவது. கடைசியாக, நீயாக என்று வழிக்கு வருகிறாயோ, அன்று தான் உனக்குத் திருமணம் என்று விலகி விட்டார், விக்கிரமசூரியர். விலகினாலும், தேவநாதனின் நச்சரிப்பால் அவரால் ஒதுங்கியிருக்கவும் முடியவில்லை. என்ன என்றாலும் பெண்ணைப் பெற்றவர்… வருடங்கள் போக வயதும் அல்லவா போய்ச் சேருகிறது.

விளைவு, இதோ இப்படித்தான் அவனுக்கு  நெருக்கமானவர்களிடம்  பேசிப் புலம்பி அவர்களைத் தூண்டியும் விடுவார். அப்படித் தூண்டியும் மசிகிற ஆள் இல்லையே, ஆதிபன். இதோ  இப்படித்தான் பேச்சை முறித்து அனுப்பி விடுகிறான்.

கரத்திலிருந்த கடிதத்தை மேலாகப் பார்த்து விட்டு, அதில் உள்ள செய்தியைக் கிரகித்துக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் கதவு தட்டப்பட, சலிப்புடன் நிமிர்ந்து பார்த்து,

“யெஸ்…” என்றான்.

உயர்ரக வாசனைத் திரவியத்தின் வாசனை சட்டென்று படர்ந்து நாசியைத் துளைக்க, உள்ளே வந்தாள் அந்த அழகி.

மிக உயரம். ஆதிபனுக்குப் பக்கத்தில் நின்றால், அம்சமாகப் பொருந்திப் போவாள். கரிய நிறக் கூந்தலைச் செம்பட்டையாகச் சாயம் பூசியிருந்தாள். மாடலிங்குக்குத் தகுதியானவள் போல கச்சிதமான உடல். நவநாகரிகத்தைத் தத்தெடுத்த உடை. அது பெண்மையின் அழகை அப்பட்டமாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

பார்க்கும்போது சட்டென்று அமலாபாலை நினைவுப் படுத்தியவள், உதடுகளில் அழகிய புன்னகையைச் சிந்தியவாறு ஆதிபனை நோக்கி வர,

கரத்திலிருந்த கடிதத்தை மேசையில் போட்டவனுக்கு மனதிற்குள், ‘ஐயோ’ என்றானது.

சுத்தம், இன்று வேலை முடித்தாற்போலத்தான். வந்தால் சும்மா இருக்காமல்  லொட லொடப்பாள். இதில் வேலையை எப்படிச் செய்வது? சலிப்பை சிரமப்பட்டு முகத்தில் காட்டாமல்,

“ஹாய்..! இங்கே என்ன செய்கிறாய்?” என்றான் மெல்லிய எரிச்சலோடு.

முன்பு என்றால் அவள் உள்ளே நுழைந்தாலே மகிழ்ச்சி வரும். அவளோடு சேர்ந்து பயமில்லாமல் அரட்டை அடிப்பான். பின்னாளில் அவள் காதல் என்று வந்ததும், அத்தனை மகிழ்ச்சியும் துணி கொண்டு துடைத்தாற்போல மங்கிப் போயிற்று. இப்போதெல்லாம் அவள் வந்தாலே எரிச்சல்தான் வருகிறது. அதை வெளிப்படையாகச் சொல்லியும் கேட்கிறாளில்லை. இனி வருபவளைக் கழுத்தைப் பிடித்தா வெளியே தள்ள முடியும்.

எரிச்சலுடன் அவளைப் பார்க்க,

“ப்ச்.. பக்கத்தில் ஒரு வேலையாக வந்தேன். அப்படியே உன்னைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தேன்… எப்படியிருக்கிறாய்..? உன்னை பார்த்து அதிக நாட்களாகி விட்டன.” என்றவளின் குரலில் தெரிந்த தாபத்தை உணர்ந்தவனுக்கு உள்ளே சற்று அருவெறுத்தது.

“நிறைய வேலைகள் இருக்கின்றன விசித்திரா. நலம் விசாரிக்கத்தான் வந்தாய் என்றால், நான் நன்றாகவே இருக்கிறேன்…!” என்றவன் மேசையில் போட்ட கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிக்க, அவனுக்கு அருகாமையில் மிக நெருக்கமாக வந்து நின்றாள், அந்தப் பதுமை. அத்தோடு விட்டிருக்கலாம், அவனை உரசியவாறே குனிந்து அவன் என்ன படித்துக்கொண்டிருக்கிறான் என்று பார்த்தாள். ஏதோ தொழில் முறைக் கடிதம் என்றதும், உதடுகளைச் சுழித்தவள்,

“எப்போது பார்த்தாலும் உனக்கு தொழில்தான் முக்கியமா?” என்று விட்டு அந்தக் கடிதத்தைப் பறித்து மேசையில் போட்டுவிட்டு, அவனை உரசியவாறே மேசையில் ஏறி அமர, ஆதிபனுக்குப் பொறுமை மெல்ல மெல்லக் கரையத் தொடங்கியது.

இப்படிப் பிடிவாதமாக நச்சரிக்கும் போது, காதல் வராது, எரிச்சல்தான் வரும் என்று அவளுக்கு யார் புரியவைப்பது? பொறுமை மெதுவாகக் கரைந்து போக,

“விசித்திரா…! இது மேசை. உனக்காகவே பெரிய கதிரை அங்கே இருக்கிறது. போய் உட்கார்வது தானே…?” என்று சலிப்புடன் கேட்க. அவளுக்கோ அவன் சலிப்பு சுத்தமாகத் தெரிவதாயில்லை. மாறாக, அவனை நோக்கிக் குனிய, முன்புற சட்டை நன்றாகவே கீழிறங்க, அந்தப் பெண்மையை அழகாய் அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அவனும் ஆண்தானே. அவனையும் மீறி விழிகள் அவள் காட்டிய மென்மையில் ஒரு கணம் நிலைத்து நின்ற பின்பு நிமிர்ந்து அவளை ஏறிட்டுப் பார்த்தவன்,

“இதைக் காட்டத்தான் வந்தாய் என்றால், நான் பார்த்துவிட்டேன்… இனி புறப்படுகிறாயா?” என்று தெளிவாகச் சொல்ல, ஒரு கணம் அதிர்ந்து விட்டாள், விசித்திரா.

தன்னைக் கண்டு கொண்டானே, என்கிற சங்கடத்தில் நிமிர்ந்தவள்,

“ஆதிபன்…! என்னை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்…?” என்று விட்டு அவனுடைய கரத்தைப் பற்றப்போக, சட்டென்று இருக்கையை தள்ளி அமர்ந்தவன்,

“இட்ஸ் இனஃப் விசித்திரா…! கெட் அவுட்…!” என்றான் சீற்றமாய். ஆனால், அது அவளுக்கு உறுத்தியது போலத் தெரியவில்லை. தன் உதடுகளைப் பிதுக்கி,

“தானாக வரும் சொர்க்கத்தை வேண்டாம் என்பது மடத்தனம்…!” என்றவள் எழுந்து சென்று  அவனுக்கு  முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்து காலுக்கு மேல் காலைப் போட்டு,

“ஆதிபன்…! உன்னை நான் எந்தளவுக்குக் காதலிக்கிறேன் என்று எப்படிக் காட்டுவது என்று சத்தியமாகத் தெரியவில்லை. ஏன்? என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய்? ஐ லவ் யு ஆதிபன்.. ரியலி ரியலி லவ் யு…! என் பதினெட்டாவது வயதில் உன்னைச் சந்தித்த நாள் முதல்,  உன்னோடு வாழவேண்டும் என்கிற வேட்கையில் தவிக்கிறேன். தயவு செய்து என்னை மணக்கச் சம்மதம் சொல். உனக்குத் தெரியாத இன்பத்தை நான் கொடுக்கிறேன். இதோ பார்…! நாம் திருமணம் முடிப்பதால், நமக்கு மட்டுமில்லை நம் தொழிலுக்கும் அது நல்லது. இந்த தொழிலின் அதிகமான பங்குதாரர்களாக நாம் தான் இருப்போம். நாம் மணந்தால் லாபம்தான் அதிகமே தவிர, நட்டமில்லை. ஏன், அதைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்?” கெஞ்சலும் கொஞ்சலுமாக கேட்க.

பற்களைக் கடித்துத் தன் கோபத்தை அடக்க முயன்றான், ஆதிபன். பின் ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவாறு,

“இட்ஸ்… இனஃப் விசித்திரா…! திஸ் இஸ் யுவர் லிமிட். உனக்குப் பல முறை சொல்லிவிட்டேன், திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று. அதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால் நான் என்ன செய்யட்டும்…? லிசின்… எனக்குத் தலைக்கு மேல் நிறைய வேலை இருக்கிறது.. உன்னோடு பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. தயவு செய்து இடத்தைக் காலி செய்கிறாயா?”

நறுக்குத் தொனித்தாற்போல அவன் கூற, விசித்திராவின் முகம் கறுத்துப் போயிற்று.

“ஆதிபன்… நான் உன்னைக் காதலிக்கிறேன். அதையேன் புரிந்து கொள்ள மறுக்கிறாய்?” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“இது காதலில்லை, காமம்…! உடல் சுகம் சலித்ததும் நீ என்னைத் தூக்கி எறிந்து விட்டுப் போய்விடுவாய். இதோ பார்…! எனக்கு உன்னை ஒரு தோழியாகப் பிடிக்கும். அதைத்தாண்டி நமக்கிடையில் எதுவும் இல்லை. இருக்கவும் இருக்காது. தயவு செய்து இந்த நோக்கத்தில் இங்கே வருவதாக இருந்தால் வராதே..!” சலிப்பும் எரிச்சலும் ஒன்றிணையச் சொல்ல, முகம் வாடிப்போனாள், விசித்திரா.

“அதுதான் ஏன் ஆதிபன்..? என்னிடம் அப்படி என்ன   குறையைக்   கண்டு    விட்டாய்?   அழகு இல்லையா…?  படிப்பில்லையா…? அறிவில்லையா? என்னிடம் என்னதான் இல்லை? இன்றைய தேதியில் என் அப்பாவின் வியாபாரத்தை நான்தான் செய்கிறேன். அது உனக்குத் தெரியும். நிச்சயமாக நாம் இருவரும் இணைந்தால், உலகளவில் உயர்ந்து விடலாம்.” என்றவளைப் பொறுமையற்றுப் பார்த்தான் ஆதிபன்.

அவளைப் பொறுத்தவரை பணம் மட்டும்தான் உலகம். ஆனால், அதையும் தாண்டி நிறைய இருக்கிறது என்று அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது. சோர்வுடன் சாய்ந்து அமர்ந்தவன்,

“இதை எல்லாம் தாண்டி இரண்டு மனங்கள் கலக்க வேண்டும்… அது ஒரு போதும் நமக்கிடையில் நடக்கப் போவதில்லை.”

“அதுதான் ஏன்…? நான் உன்னை விரும்புகிறேன். நீ என்னை விரும்ப என்ன தடை…? ஏன், என்னை மணக்க மறுக்கிறாய்?” இப்போது மெல்லிய ஆவேசத்தோடு விசித்திராவின் குரல் வர,

“அதை உனக்குச் சொல்லவேண்டிய அவசியம்  எனக்கிருப்பதாகத்  தெரியவில்லை…!” என்றான் இவன் அழுத்தமாக.

“கமான்… ஆதிபன்…! உன்னைக் காதலிக்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை, உனக்காகப் பைத்தியம் போலக் காத்திருக்கிறேன். அதையேன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்?”

“உன்னைக் காத்திருக்கச் சொல்லி நான் எப்போது சொன்னேன்…? நான்கு  வருடங்களுக்கு முன்பு நீ உன் காதலை என்னிடம் சொன்னபோது, உடனேயே மறுப்புச் சொன்னேன். அத்தகைய எண்ணத்தில் உன்னோடு பழகவில்லை என்பதையும் தெரிவித்திருந்தேன். ஆனால்,  நீதான் இன்று வரை கேட்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாய்…! இதோ பார் விசித்திரா, அன்று சொன்னதுதான் இன்றும்.எனக்கு உன்னை ஒரு காதலியாக மட்டுமில்லை, மனைவியாகக் கூட யோசித்துப் பார்க்க முடியாது. நீ உனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்…!  தயவு செய்து என்னை விட்டு விடு…” என்று நிதானமாகக் கூற. அதுவரை அவன் சொல்வதை அமைதியாகக் கேட்டிருந்தவளுக்குக் கடும் ஆவேசம் பிறந்தது.

“உனக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை? சொல் ஆதிபன்….! என்னை மறுக்கும் அளவுக்கு உன்னைத் தடுப்பது என்ன? நீ யாரையாவது விரும்புகிறாயா?”  அழுத்தமாகக் கேட்க, அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த ஆதிபனுக்குப் பளிச்சென்று முகம் மலர்ந்தது.

‘இவளிடமிருந்து தப்புவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது அது…’ உதடுகள் புன்னகையில் மலர,

“யெஸ்… ஐ ஆம்…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அதுவரை தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்த விசித்திரா, அதிர்வுடன் நிமிர்ந்து ஆதிபனைப் பார்த்தாள்.

“ஆ… ஆதிபன்… நீ… நீ என்ன சொல்கிறாய்…? நீ… நீ… விரும்புகிறாயா?” என்றவள் மறுப்பாகத் தலையை அசைத்து,

“இல்லை…! பொய்…! உன்னைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்து கொண்டு இருப்பவள் நான். உன் நண்பர்கள் முதற்கொண்டு எதிரிகள் வரை எனக்கு அத்துப்படி. இதுவரை நீ யாரையும் சந்தித்ததில்லை, பேசியதில்லை.. நிச்சயமாக நீ பொய் சொல்கிறாய்..!” என்று கூற, ஒரு கணம் ஆதிபனின் விழிகள் ஆத்திரத்தில் மின்னின.

‘என்ன..? அவனையே வேவு பார்க்கிறாளா…? எத்தனை திமிர் இருக்க வேண்டும்?’

“உனக்கு இங்கே இருக்கும் என் நட்பு வட்டாரத்தைப் பற்றி மட்டும்தானே தெரியும்? நான் கனடாவிற்குப் படிக்கச் சென்றிருந்த போது, அங்கே ஒருத்தியைச் சந்தித்துக் காதல் கொண்டது பற்றி எதுவும் தெரியாதே…?” என்று கிண்டலாகக் கூற, விசித்திராவின் முகம் இரத்தப் பசையை இழந்தது.

“கனடாவிலா…? நோ.. இல்லை… நான் இதை நம்ப மாட்டேன். படித்து முடித்துக் கனடாவிலிருந்து இங்கு வந்ததற்குப் பிறகு  இன்று வரைக்கும் நீ அங்கே போனதில்லை. உனக்கு அங்கே ஒரு காதலி இருக்கிறாள் என்றால், ஏன் இதுவரை அவளைச் சென்று சந்திக்கவில்லை? அவள் ஏன் இங்கே உன்னைத் தேடி வரவில்லை…?” ஆவேசத்துடன் தன் சந்தேகத்தைக் கேட்க, ஆதிபனுக்குத் தன் முகமாற்றத்தைக்  காட்டாதிருக்க  படாதபாடு  பட வேண்டி இருந்தது.

ஆனாலும் சமாளித்தவனாக, “அவளுக்கு இலங்கை வருவது பிடிக்காது. அதனால் இதுவரை இங்கே வந்ததில்லை. நான் அடிக்கடி இந்தியா போகிறேனே, ஏன் என்று நினைத்தாய்? நான் அங்கே போகும் போதே,   அவளும் வருவாள். இருவரும் மகிழ்ச்சியாக இருந்து விட்டு, பிரிந்து விடுவோம். இவ்வளவு ஏன்? இன்னும் ஒரு கிழமையில் கனடா போக இருக்கிறேன். அவளை சந்தித்து இங்கே அழைத்து வருவதுதான் என் எண்ணம்…!” பொய் சொல்லியாயிற்று பொருந்தச் சொல்ல வேண்டுமே. அதுவும் அவள் நம்புவது போலச் சொல்லவேண்டுமே.

அவன் சொன்னதைக் கேட்ட விசித்திராவுக்கு ஆத்திரம் வந்தது. இங்கே ஒருத்தி பைத்தியம் போலக் காத்திருக்க, அவன் அங்கே ஒருத்தியை விரும்புவதா?” பற்களைக் கடித்தவள்,

“யார்…? யார் அவள்…? சொல்…! யார் அது…?” ஆவேசத்துடன் கேட்க, இவனோ நிதானமாக அவளைப் பார்த்தான்.

“அதை உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்ல…! அவளை இங்கே அழைத்து வரும் போது பார்த்துக் கொள்!” அழுத்தமாகக் கூற, பற்களைக் கடித்த விசித்திரா, சடார் என்று இருக்கையை விட்டு எழுந்து,

“ஆதிபன்…! இந்த ஜென்மத்தில் உன் மனைவியாக ஒருத்தி வருவாள் என்றால், அது நான்… நான் மட்டுமாகத்தான் இருக்கும். வேறு யாரையும் மணக்க விட மாட்டேன்…!” என்ற போது, இவனுடைய உதடுகளில் ஒருவிதமான புன்னகை மலர்ந்தது.

கிண்டலுடன் அவளைப் பார்த்தவன், காலுக்கு மேல் காலைப் போட்டவாறு, “ரியலி…!” என்றான்.

அவனுடைய ஏளனம், இவளை உசுப்பிவிட, அவனை அழுத்தமாக ஏறிட்டவள், “யு… ஆர் மைன்…! ஓன்லி மைன்!” என்றுவிட்டு விருட்டென்று வெளியே செல்ல, அவள் செல்வதையே புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான், ஆதிபன்.

 

 

What’s your Reaction?
+1
17
+1
0
+1
4
+1
3
+1
1
+1
2
Vijayamalar

Recent Posts

உயிர் நீ மெய் நான்…! – 12

(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…

3 days ago

உயிர் நீ மெய் நான்…! – 11

(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா...!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன்…

5 days ago

உயிர் நீ மெய் நான்…! – 9/10

(9) புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க, தன் விழிகளாலேயே நண்பனிடம்…

7 days ago

உயிர் நீ மெய் நான்…! – 7/8

(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய…

1 week ago

உயிர் நீ மெய் நான்…! – 5/6

(5) அன்று சனிக்கிழமை. அரக்கப் பரக்க வரோதயனைத் தயாராக்கி, தானும் தயாராகி அவளுடைய குடியிருப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிற குழந்தை காப்பகம்…

2 weeks ago

உயிர் நீ மெய் நான்…! – 4

(4) மிக வேகமாக ஓடிக் கொண்டு இருந்த வாகனத்தின் பின் இருக்கையில்,  அவளும்,  அவளது தாயும் அமர்ந்தவாறு குதுகலத்துடன் எதையோ…

2 weeks ago