Categories: Ongoing Novel

உயிர் நீ மெய் நான்…! – 14

(14)

திடீர் என்று யாரோ உலுப்புவது போலத் தோன்ற சடார் என்று தன் விழிகளைத் திறந்தான், ஆதிபன்.  ஒரு கணம் குழம்பியவன் நேரத்தைப் பார்த்தான்.

ஆறு மணியைக் கடந்து விட்டிருந்தது நேரம். விழிகளைச் சுருக்கியவாறு திரும்பித் தன் மகனை ஏறிட்டான். அவன் உறங்கியிருந்த இடம் வெற்றிடமாக இருந்தது.

பதறி எழுந்தவன், அந்த அறைக்குள் அங்கும் இங்கும் தேடினான்.  கழிவறை சென்றிருப்பானோ. ஓடிப்போய் பார்த்தான். அங்கும் இல்லை.

‘எங்கே போயிருப்பான். ஒரு வேளை அந்தப் பெண்…’ நினைக்கும்போதே நெஞ்சாங்கூடு காலியாக, அதே வேகத்தோடு அந்தப் பெண்ணின் அறை நோக்கி ஓட,

அங்கே கண்ட காட்சியில் இமைக்க மறந்தவனாக நின்றான் ஆதிபன்.

அங்கே அவனுடைய மகன் மதிமையின் மார்பில் புதைந்தவாறு, அவளுடைய அணைப்பில் கட்டுண்டு உறங்கிக்கொண்டிருந்தான். மதிமையும் அவனை இறுக அணைத்தவாறு உலகம் மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

‘மகன் எப்போது எழுந்தான், எப்போது இவளிடம் வந்தான்? இவள் இங்கே வந்திருப்பது மகனுக்கு எப்படித் தெரிந்தது. ஒரு வேளை இவள்தான் தூக்கம் கலைந்தெழுந்து மகனை அழைத்து வந்திருப்பாளோ?’ குழம்பிப் போனவன், தன் மகனை அணைத்தவாறு கிடந்தவளை ஒரு வித பொறாமையுடன் பார்த்தான், ஆதிபன்.

பெற்றவன் அவன். அவனாலேயே இன்னும் முழுதாக மகனை நெருங்க முடியவில்லை. ஆனால்.. யாரோ ஒருத்தி, எத்தனை சுலபமாக நெருங்கியிருக்கிறாள். பெற்ற பாசத்தை விட, வளர்த்த பாசம் ஒரு படி மேலோ?

அந்தப் பொறாமை உந்தித் தள்ள, இருவரையும் நெருங்கிய ஆதிபன், தன் மகனை அவளிடமிருந்து பிரித்துத் தூக்க முயல,  அந்த உறக்கத்திலும் வரோதயனை இறுக அணைத்துக்கொண்டாள் மதிமை. விளைவு ஆதிபனின் ஒற்றைக் கரம், மதிமையின் மேல் வயிற்றுக்கும், வரோதயனின் மார்புக்கும் இடையில் சிக்கிக்கொண்டது.

ஒரு கணம் தடுமாறித்தான் போனான், ஆதிபன்.

கிட்டத்தட்ட மறந்து போய் விட்டிருந்த பெண்மையின் மென்மையை அவனுடைய கரங்கள் உணர்ந்து கொள்ள. சட்டென்று ஒரு விநாடி அவனுடைய இதயத்தின் தாளம் தப்பி நேராகியது. அதையும் மீறிப் பதட்டம் அவனை ஆட்கொள்ள, தன் கரத்தை விடுவிக்க முயன்றான். விளைவு காரணமின்றியே அவள் தேகத்தை வருடியது அவனுடைய ஒற்றைக் கரம்.

பற்களைக் கடித்தவன், அவள் தேகத்தை உரசாதவாறு கரத்தை எப்படி விலக்குவது என்று குழம்பினான். மகனைப் பிரித்துத் தூக்கினால் மட்டுமே அது சாத்தியமாகப் பட, அதையே செயலிலும் காட்ட விளைந்தான்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. மகனும் மதிமையை இறுக அணைத்துக் கொண்டிருந்தான்.

எரிச்சலுடன் அவள் மீது போட்ட காலையும், இடையில் விழுந்திருந்த மகனின் கரத்தையும் சிக்காத கரத்தால் விலக்கியவன், மகனை வாரியணைக்க முயல, யாரோ தன்னிடமிருந்து வரோதயனைப் பிரிக்க முயல்கிறார்கள் என்பது உள் புத்திக்குத் தெரிய, சடார் என்று விழிகளைத் திறந்தாள் மதிமை.

அங்கே மிக நெருக்கத்தில் முத்தமிடுவது போலத் தெரிந்த ஆதிபனின் முகத்தைக் கண்டதும் ஒரு கணம் குழம்பியவள், மறு கணம் அதிர்ச்சி கொண்டவளாக சடார் என்று எழுந்து தள்ளி அமர,

ஆதிபனுக்குத்தான் ஏதோ தவறு செய்தது போல மனம் நின்று அடித்துக் கொண்டது.

“நான்… நான் வரோதயனை தூக்கிச் செல்ல வந்தேன்.” எப்படியோ திக்கித் திணறாமல் சொல்ல, அவளோ ஒரு வித பயத்தோடு சுத்தவரப் பார்த்துவிட்டு,

“நான்… நான் எப்படி இங்கே வந்தேன்…?” என்றாள் ஒரு வித நடுக்கத்துடன். அதை உணர்ந்தவனாக,

“ஹே… ஹே.. ரிலாக்ஸ்… வரும்போது நன்றாக உறங்கி விட்டிருந்தாய். எழுப்பிப் பார்த்தேன். நீ எழவில்லை. அதுதான் தூக்கி வந்து இங்கே கிடத்தினேன்… இது சபேசனின் வீடு. இங்கேதான் நானும் தற்காலிகமாகத் தங்கியிருக்கிறேன்…” என்றதும், அதுவரை நல்ல உறக்கத்திலிருந்த வரோதயன், இருவரின் பேச்சுக் குரல் கேட்டதும், மெல்லிய முனங்கலோடு திரும்பிப் படுக்க, அசைவு உணர்ந்து குனிந்து பார்த்தாள், மதிமை.

வரோதயனைக் கண்டதும் விழிகளில் கண்ணீர் நிரம்பின.  உயிரான குழந்தை பக்கத்தில் வந்து படுத்திருப்பது கூடத் தெரியாமல் உறங்கி இருக்கிறாளே.  தெரிந்திருந்தால், வாரி அணைத்து  அன்பத்தனையும் பொழிந்து தள்ளி இருப்பாளே. நடுக்கத்தோடு இன்னும் சுருண்டு உறங்கிக்கொண்டிருந்த மகனின் தலை முடியை வருடிக் கொடுத்தவள்,

“எ… எப்போது என் அருகே வந்து படுத்தான் என்று தெரியவில்லை…” என்றவாறு, மேலும் அவனை வருடப் போக, சட்டென்று அவளுடைய கரத்தைத் தடுத்தான் ஆதிபன்.

“இல்லை… அவனை நான் தூக்கி…” என்று எதுவோ சொல்ல வந்தவனுக்கு, அப்போதுதான் அவனுடைய உள்ளங்கை அவளுடைய கரத்தின் சூட்டை உணர்ந்து கொண்டது.

நம்ப முடியாதவனாக மீண்டும் ஒரு முறை உள்வாங்கிப் பார்த்தான். திருப்தி வராதவனாக அவளுடைய கரத்தை விடுவித்தவன், நெற்றியில் கரம் பதித்துப் பார்த்தான். அவளுடைய தேகம் சுட்டது.

“உனக்கு மீண்டும் உடல் சுடுகிறது…” என்றான் அறிக்கை வாசிப்பவன் போல.  ஆனால் அது அவளுக்கு உறைக்கவில்லை. தன் கழுத்தில் கரம் பதித்தவளுக்கு அப்போதுதான் தேகம் நடுங்குவதே புரிந்தது.

“தெரியவில்லை…” என்றவள், கட்டிலை விட்டு இறங்க முயன்றாள். தலை சுற்றிக்கொண்டு வந்தது. சட்டென்று படுக்கையில் அமர்ந்தவள், உள்ளங்கைகளில் தன் முகத்தைப் புதைத்து,

“ஐ திங் சோ…” என்றாள் முனங்கலாய்.

உடனே தன் மகனை விட்டு விலகிய ஆதிபன், சற்று தள்ளியிருந்த மேசையில் கிடந்த  மருந்துகளில் ஒரு சில மருந்தை எடுத்துத் தண்ணீர் குவலையுடன் அவளை நெருங்கி, அவளிடம் நீட்டியவாறு,

“இதைக் குடி… காய்ச்சலும் வலியும் மட்டுப் படும். வைத்தியசாலையில் கொடுத்திருந்தார்கள்…” என்றதும், மறுக்காமல் வாங்கி விழுங்கி வைத்தாள் மதிமை. பின் சிரமப்பட்டு பாரம் ஏறியிருந்த தலையைத் தாங்கியவாறு,

“குளியலறை எங்கே இருக்கிறது?” என்றாள்.

“என்னுடைய அறையில் இருக்கிறது வா…” என்றதும்  தரையில் ஒரு காலைப் பதித்து எழுந்தவள் தள்ளாட, அதைக் கண்ட ஆதிபன் பாய்ந்து அவளுடைய கரத்தைப் பற்றி நிலை நிறுத்துவதற்குள், கால் மடங்கிச் சரிந்தவள், அவனுடைய மார்பில் மொத்தமாக வந்து விழுந்தாள்.  விழுந்தவளைத் தன்னை அறியாமலே அணைத்துக் கொண்டவன்,

“ஈசி… ஈசி…” என்றவாறு தட்டிக் கொடுத்தாலும் மதிமையின் தொடுகை அவனைச் சற்று நிலை தடுமாறச் செய்தது.  அணுவைத் தொடும் போது, அகங்காரம், கடுமை, கட்டாயம் அவசரம் என்று உணர்வுகள் அவனை ஆட்டிப்படைக்கும். ஆனால் மதிமையின் நெருக்கத்தில் அவன் உணர்ந்தது வேறு ஒன்று. இதமான தென்றல் காற்றின் வருடல். கோடைக்காலத்தில் பொட்டுப்பொட்டாய் விழும் மழைத் துளி. ஆலமரத்தின் நிழல்…! தாகத்தின் போது கிடைக்கும் தண்ணீர். ஏதோ ஒரு சுகமான உணர்வு அவனைத் தட்டிச் செல்ல,  அந்த மென்னுடலில் தொடுகை, அவனுக்கு மயிலிறகின் சுகத்தைக் கொடுத்தது என்னவோ உண்மைதான். கூடவே அந்த அணைப்பை விடக் கூடாது என்று உள்ளுணர்வு செல்ல,

அது கொடுத்த  தாக்கத்தில் அதிர்ந்து போனான் ஆதிபன்.

‘நானா… நானா இப்படி யோசிக்கிறேன். எப்படிச் சாத்தியம். அதுவும் நான்கு வயதில் ஒரு மகனை வைத்துக்கொண்டு இப்படிச் சிந்திப்பது தகுமா?  தன்னையே திட்டியவன், அந்தக் கணமே, உள்ளே தோன்றிய அந்த இனிமையான  உணர்வை  தட்டி அடக்கினான்.

அவசரமாக மார்பில் விழுந்து கிடந்தவளைப் படுக்கையில் அமர்த்த, மதிமையோ ஒருத்தனின் மனதில் மெல்லிய சலனத்தை ஏற்படுத்திவிட்டோம் என்பது தெரியாமல் சோர்வுடன் அமர்ந்திருந்தாள். மீண்டும் எழ முயன்றவள், தடுமாற, அவளுடைய கரத்தைப் பற்றப்போனவனைத் தடுத்து,

“இ… இல்லை, நா… நானே போய்க்கொள்வேன். எங்கே இருக்கிறது உங்கள் அறை?” என்றவாறு நடக்கத் தொடங்கியவள் பலவீனத்தில் அங்கிருந்த சுவரைப் பற்றிக் கொண்டாள். அதற்கு மேல் அவனாலும் அவள் படும் சிரமத்தைக் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. சட்டென்று அவளைத் தன் கரங்களில் ஏந்த, இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,

“இல்லை நானே…” என்றவளை முறைத்தவன்,

“உன்னைத் தூக்குவதால் ஒன்றும் உன் கற்புப் பறிபோகாது…” என்றான் தன் இயலாமையின் மீது ஏற்பட்ட கோபத்தால். இவளோ புரியாமல் அவனைப் பார்த்து,

“கற்பு?” என்றாள்.

“ம்.. கற்பு…” என்றான் இவன்.

“அப்படி என்றால்…?” என்றவளை அதிர்வோடு பார்த்த ஆதிபன்,

“கற்பு என்றால் என்ன என்று தெரியாதா?” என்று கேட்டான். இவளோ குழப்பத்தோடு இல்லை என்று தலை ஆட்ட,

“சுத்தம்… நீ தமிழ் பெண்தானே…” என்று எரிச்சலுடன் கேட்க,

“உங்களோடு பேசும் அளவுக்குத் தமிழ் தெரியும், ஆனால்… இப்போது நீங்கள் சொன்ன தமிழ் பற்றி எதுவும் தெரியாது…” என்றவளை ஏந்திச் சென்றவாறு,

“கற்பென்றால்…” என்று விளங்கப்படுத்த முயன்றவனுக்குச் சத்தியமாக அதற்கான சரியான அர்த்தம் தெரியவில்லை. ‘ஒழுக்கம் என்று சொல்வதா? சும்மா கரத்தைத் தொட்டதால் ஒழுக்கம் பறிபோய்விடும் என்று சொல்லிவிட முடியுமா?’ குழம்பியவன்,

“சாஸ்டிடி… (Chastity)” என்றதும், அவனைப் புரியாமல் பார்த்தவள்,

“ஒருத்தன் ஒருத்தியைத் தொடுவதற்கும், இப்படித் தூக்குவதற்கும், கற்புக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள். அதற்கு என்ன பதிலைச் சொல்வது? தடுமாறியவன், அதற்கு விளக்கம் சொல்லத் தெரியாமல் அவளை எரிச்சலுடன் பார்த்து,

“இப்போது இந்த ஆராய்ச்சி தேவையா?” என்றவாறு அவளை ஏந்திச் சென்று கழிவறையில் விட,

“நன்றி என்று முனங்கியவாறே, உள்ளே சென்று கதவைச் சாத்த முயல, அதைத் தடுத்தவன்,

“பூட்டாதே… சற்று திறந்தே இருக்கட்டும். போய்விட்டு வா… ஏதாவது தேவை என்றால் தயங்காமல் கூப்பிடு. வெளியேதான் நிற்பேன்…” என்று அறிவித்து விட்டு சுவரோடு சாய்ந்து நிற்க, உள்ளே சென்றவள், தன் தேவையை நிறைவு செய்துவிட்டுக் கைகழுவும் தொட்டிலின் அருகே வந்தாள்.

தொட்டிக்கு மேலிருந்த கண்ணாடியில் அவளுடைய விம்பம் தெரிய, உற்றுப் பார்த்தாள். தலை கலைந்திருந்தது. முகம் கசங்கியிருந்தது. நெற்றியில் கட்டு. சலிப்புடன், தண்ணீர் குழாயைத் திறந்தவள், தண்ணீர் அள்ளி முகத்தை நன்றாக அடித்துக் கழுவினாள்.

குளிர் நீர் பட்டதும் உடல் நடுங்கினாலும், புத்தி சற்று தெளிந்தது. நிமிர்ந்தபோதுதான் இன்னும் இரத்தக் கறை கொண்ட ஆடையோடு இருப்பது புரிந்தது. மாற்று ஆடையில்லாமல் அதைக் கழற்றி எறிய முடியாதே.

சோர்வோடு வெளியே வந்தவள், கதவைத் திறக்க சுவர் ஓரமாக நின்றிருந்தான் ஆதிபன்.

வெளியே வந்தவளை ஏறிட்டு,

“யு ஓக்கே?” என்றான் அக்கறையாக. தலையை ஆம் என்று ஆட்டியவள், மெல்லிய தயக்கத்தோடு அவனைப் பார்க்க, ஆதிபன் அவளுடைய தயக்கத்தைப் புரிந்து கொண்டவனாக,

“சொல்… ஏதாவது வேண்டுமா?” என்றான் அக்கறையாக.

“உங்களிடம் ஏதாவது நான் அணியக் கூடிய மாதிரி ஆடைகள் இருக்கின்றனவா…” என்றவள் தன்னைக் குனிந்து பார்த்து,

“இதோடு இருக்க.. அருவெறுக்கிறது…” என்றாள் முகத்தைச் சுழித்து.

“உனக்குத் தகுந்தாற் போல என்றால் இல்லை… வேண்டுமானால் என்னுடைய டீஷேர்ட் இருக்கிறது அதை கொடுக்கவா? உனக்குச் சற்றுப் பெரிதாகத்தான் இருக்கும். ஆனால் சுவாத்தியமாக இருக்கும்.” என்றதும், அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.

அவள் சரி என்று தலையாட்ட, உடனே அங்கிருந்த கபோர்டை நோக்கிச் சென்றவன், அதைத் திறந்து, துவைத்துத் தொங்க வைத்திருந்த டீஷேர்ட்டில் ஒன்றை எடுத்து வந்து அவளிடம் நீட்டி,

“இதை அணிந்து கொள். நாளை நீ நன்றாக இருந்தால், உன் இருப்பிடம் சென்று உன் ஆடைகளை எடுத்து வரலாம்…” என்று கூற, நன்றி கூறிவிட்டு, மீண்டும் குளியலறை சென்றவள், ஆடைகளைக் களைந்து விட்டு, நெற்றியைச் சுற்றிக் கட்டியிருந்த கட்டைக் கழற்றி அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சுடுநீரின் கீழ் நிற்க, இரத்தக்கறையோடு, வியர்வையும் அழுக்கும் கரைந்து சென்றது.

கூடவே அவனுடைய பாடிவோஷ் அங்கிருக்க அதையே எடுத்து நன்கு தேய்த்துக் குளித்துவிட்டு வெளியே வர, இப்போது ஓரளவு பரவாயில்லாமல் இருந்தது மதிமைக்கு. அங்கிருந்த துவாய் கொண்டு மேனியை நன்கு அழுந்தத் துடைத்துவிட்டு அவன் கொடுத்த டீஷேர்ட்டை அணிந்து கொள்ள முழங்கால் வரை நீண்டிருந்தது அவனுடைய டீஷேர்ட். என்ன, தோள் வழி வழிந்து சென்றது.

எதுவும் இல்லாததற்கு அது எவ்வளவோ மேல். அணிந்திருந்த டீஷேர்ட்டை சரியாக்கியவாறே, களைந்து போட்ட ஆடைகளைச் சுருட்டிக்கொண்டு வெளியே வர, இப்போதும் அதே இடத்தில்தான் நின்றிருந்தான், ஆதிபன்.

ஈரம் சொட்டச் சொட்ட, அவன் கொடுத்திருந்த டீஷேர்ட் அவளுடைய தேகத்தில் ஒட்டி நிற்க, அதில் சற்றுத் தெரிந்த பெண்மையின் அழகோடு, முழங்காலுக்குக் கீழ் சுண்டினால் சிவக்கும் வெண்மையோடு வந்து நின்றவளைக் கண்ட ஆதிபனுக்கு ஒரு கணம் மூச்சடைக்கத்தான் செய்தது. அவன் ஒன்றும் பெண்மை அறியாதவனும் இல்லை, பெண்களைக் காணாதவனும் அல்ல. ஆனால், மதிமையை அந்த நிலையில் கண்டவனுக்கு, நான்கு வருடமாகத் தொலைந்து போயிருந்த ஆண்மை சட்டென்று விழித்துக்கொண்டது போலத் தோன்றியது.

இப்படி ஒரு பெண்ணை பார்ப்பது தவறு என்று புத்தி சொன்னாலும், கண் முன்னே வரைந்த ஓவியமாக நின்றிருந்தவளின் திரு மேனியிலிருந்து, அவனால் பார்வையை இம்மியும் விலக்க முடிந்திருக்கவில்லை.

ஆனால் அவளோ, தான் நிற்கும் கோலம் அவனைச் சிதைக்கிறது என்பது தெரியாமலே,

“இந்த ஆடைகளைத் துவைக்க வேண்டும். துவையல் அறை எங்கே இருக்கிறது?” என்று கேட்க, அவனோ மொழி புரியாதவன் போல பேந்தப் பேந்த விழித்தான்.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது, அவளையே விறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனைக் குழப்பத்துடன் ஏறிட்டவள்,

“ஆதிபன்…” என்று மென்மையாக அழைக்க, அந்த அழைப்பில் திடுக்கிட்டு விழித்தான் ஆதிபன்.

அவள் அழைத்ததும் ஏனோ அவனுடைய பெயர், முதன் முறையாக அழகாக மாறிய உணர்வோடு அவள் மேனியிலிருந்த விழிகளை விலக்கி, அவள் முகத்தை ஏறிட்டு,

“சாரி… என்ன கேட்டாய்?” என்றான். மீண்டும் தன் ஆடைகளை  அவனை நோக்கிக் காட்டி,

“ஆடைகள் துவைக்கும் இடம்…” என்றதும், இப்போது முழு சுயத்திற்கும் வந்தான், ஆதிபன்.

அப்போது தான் அவளுடைய நெற்றியில் கட்டப் பட்டிருந்த கட்டைக் காணாமல் திகைத்தவன், பின் அவளைக் கோபமாகப் பார்த்து,

“என்ன செய்திருக்கிறாய்? ஏன் நெற்றியில் கட்டிய கட்டை அவிழ்த்தாய்?” என்று கடிந்தவன், அவளுடைய கரத்திலிருந்த ஆடைகளைப் பறித்து ஓரமாக வைத்துவிட்டு, அவளுடைய கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றவன், அவன் படுக்கையில் அமர வைத்துவிட்டு, மீண்டும் குளியலறை சென்றவன். அங்கிருந்த கபோர்டை திறந்து அதற்குள் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து,

“இப்போது குளிக்க என்ன அவசரம்? காயத்திற்குக் கட்டுப்போட்டு, குறைந்தது இருபத்து நான்கு மணிநேரமாவது ஆகவேண்டாமா?” என்று கடிந்தவாறு, முதலுதவிப் பெட்டிக்குள் இருந்த பஞ்சை வெளியே எடுத்து ஈரத்தில் நனைந்திருந்த காயத்தைத் துடைக்கப் போக, அவசரமாக அவனுடைய கரத்தைப் பற்றினாள், மதிமை.

பற்றிய கரத்தை வெறித்தவன், பின் நிமிர்ந்து அவளை அழுத்தமாகப் பார்க்க,

“எனக்கொன்றுமில்லை… காயம் காற்று பட்டாலே சட்டென்று ஆறிவிடும்…” என்று தடுக்க வர, அவளை முறைத்தவன்,

“நீ என்ன சுப்பர் வுமனா? சட்டென்று ஆற?” என்று எரிச்சலுடன் கேட்டவன், அவளுயை கரத்தைத் தட்டி, காயத்தின் மீது தொற்று நீக்கிக் களிம்பைப் பூசிவிட்டு, ஒரு பிளாஸதரை ஒட்டிவிட, மதிமையோ அவரசமாகத் தன் விழிகளை மூடி, அவன் கட்டுவதையே உள் வாங்கி நின்றாள்.

காய்ச்சலால் உடல் நடுங்குவதை விட, அவனுடைய கரங்கள் பட்டுத்தான் இதயம் நடுங்கத் தொடங்கியது. ஏனோ அவன் அருகே நின்றாலே, இதயம் தடுமாறிப் போகிறது. அதற்கான காரணம் என்ன என்று கேட்டால், சத்தியமாக அவளுக்குத் தெரியாது. ஆனால், அவன் பக்கத்தில் நிற்கும் போது மனதிற்கு நன்றாக இருக்கிறது. ஒரு வித பலம் பெருகுவது போல இருக்கிறது.

இப்போது கூட அவனுடைய கரங்கள் அவளுடைய நெற்றியைப் பட்டும் படாமலும் தொடும் போது, உள்ளே தடம் புரளத்தான் செய்கிறது. அதை அடக்கும் வழி தெரியாமல், அவன் கட்டி முடிக்கும்வரை அப்படியே நின்றிருக்க,

“குட்…” என்றவன் எழுந்து, பெட்டியைக் கட்டிலில் ஓரத்தில் வைத்துவிட்டு, அவளுடைய கரத்தைப் பற்ற, மேலும் அவனுடைய தொடு உணர்ச்சியைத் தாங்கும் சக்தியில்லாதவளாக,

“இ… இல்லை… நானே…! நானே எழுந்து கொள்கிறேன்…!” என்று விட்டு எழுந்தவள், அவன் ஓரமாக வைத்த அவளுடைய ஆடைகளை உருட்டி எடுத்து,

“துவையல் இயந்திரம் எங்கே?” என்றாள் அவன் விழிகளைப் பார்க்கும் சக்தியில்லாதவளாக.

அவனுக்கும் அதற்கு மேல் விவாதிக்கும் திறன் இருக்கவில்லை.

அவளை அழைத்துச் சென்று ஆடைகள் துவைக்கும் இயந்திரம் உள்ள அறையைத் திறந்து விட, தன் ஆடைகளை அதில் போட்டு, இயந்திரத்தை உயிர்ப்பித்து விட்டு, அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறைக்கு வர,

தூக்கம் மெதுவாக அவளைத் தழுவத் தயாராகியிருந்தது. உள்ளே சென்ற மருந்து இப்போது வேலை செய்யத் தொடங்கியிருந்தது. கட்டிலை நோக்கிச் சென்றவள், அங்கே இன்னும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் வரோதயனைக் கண்டதும்,

தன் பின்னே வந்து கொண்டிருந்த ஆதிபனை ஏறிட்டு, “வரோ… என் கூடவே படுக்கட்டுமே… ப்ளீஸ்…!” என்றாள் கெஞ்சலாய். ஏனோ ஆதிபனுக்கு அந்த நேரத்தில் அவள் வேண்டுதலை மறுக்க முடியவில்லை. ஒரு கணம் அமைதி காத்தவன்,

“சரி… இன்று மட்டும் அவன் உன் கூட தூங்கட்டும்…” என்று சம்மதித்து விட்டுத் தன் அறைக்கு வந்தவனுக்கு, உள்ளே பலத்த போராட்டம்.

அவள் கேட்டாள் என்பதற்காக ஏன் வரோதயனை அவளிடம் ஒப்படைத்து விட்டு வந்தான். ஒரு வேளை அவள் வரோதயனை என்னிடம் கொடுத்துவிடு என்றால், இவன் கொடுத்து விடுவானா?

“நோ… நோ… வரோதயன் என் மகன். அவனை யாருக்கும் என்னால் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது. நிச்சயம் முடியாது. காட்…!  அவளைப்   பார்த்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் அவளுக்காக மனம் இரங்கத் தொடங்கி விட்டதே. இது நல்லதில்லை. நிச்சயமாக நல்லதில்லை. இந்த இரக்கம், விட்டுக் கொடுப்பு அனைத்தும் அவனே அவனுக்கு வைக்கும் ஆப்பு.

இதுதான் கடைசி. விரைவாக இந்தப் பெண்ணை பாதுகாப்பாக, எங்காவது ஒரு   இடத்திற்கு அனுப்பி விட வேண்டும். அதுதான் அவனுக்கு நல்லது. முடிவு செய்தவனாகப் படுக்கையில் விழுந்தவன், விழிகளை மூட, ஈரம் சொட்டச் சொட்ட, அவனுடைய ஆடையை அணிந்தவாறு அவள்தான் மனதில் வந்து நின்றாள்.

விலுக்கென்று எழுந்தமர்ந்த ஆதிபனுக்கு அதற்கு மேல் தூக்கம் சுத்தமாக வரவில்லை.

What’s your Reaction?
+1
5
+1
7
+1
7
+1
1
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

உயிர் நீ மெய் நான்…! – 17/18

(17) தந்தை கேட்டதற்கமைய, மகனின் படம் ஒன்றை அனுப்பி வைத்த ஆதிபன், கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். ‘ஏனோ தந்தையிடம்…

2 days ago

உயிர் நீ மெய் நான்…! – 16

(16) மதிமையின் இருப்பிடத்திற்கு உள் வண்டி நுழைந்ததும், அதை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வெளியே வந்த ஆதிபன், மதிமை…

4 days ago

உயிர் நீ மெய் நான்…! – 15

(15) மறுநாள் காலை பத்து மணியளவில் விழிகளைத் திறந்த மதிமைக்குக் காய்ச்சல் சிறிது விட்டிருந்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவள்,…

6 days ago

உயிர் நீ மெய் நான்…! – 13

(13) தன் வாகனத்தைக் கன வேகத்தில் முக்கிய பாதையில் ஏற்றிய ஆதிபன், சற்று தூரம் சென்ற பிறகு தான் ஒழுங்காக…

2 weeks ago

உயிர் நீ மெய் நான்…! – 12

(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…

2 weeks ago

உயிர் நீ மெய் நான்…! – 11

(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா...!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன்…

3 weeks ago