மதிமையின் இருப்பிடத்திற்கு உள் வண்டி நுழைந்ததும், அதை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வெளியே வந்த ஆதிபன், மதிமை அடுத்து இறங்குவதற்காகக் காத்திருக்க, மதிமையோ, உறைந்த நிலையில் அந்த கட்டடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
முன்தினம் நடந்த சம்பவம் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வர, இதயம் பயத்தில் தாறுமாறாகக் குதித்தது.
ஆதிபனோ பின் கதவைத் திறந்து, கார்சீட்டில் அமர்ந்திருந்த மகனைக் கரங்களில் எடுத்தவாறு மதிமை இறங்குவதற்காகக் காத்திருக்க, அவள் இறங்குவதற்கான எந்த அறிகுறிகளும் தென்பட வில்லை.
குழம்பியவனாக அவள் பக்கத்துக் கதவைத் திறக்க, மதிமையோ எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். குழந்தையைக் கீழே இறக்கி, ஒற்றைக் கரத்தால் மகனின் கரத்தைப் பற்றியவாறு மறு கரத்தால், அவளுடைய தோளில் பதித்து அழுத்த, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் மதிமை.
“இறங்கவில்லை?” என்றவனிடம், சிரமப்பட்டுத் தன் அச்சத்தை மறைத்து மெல்லிய புன்னகை சிந்தியவள்,
“இ… இதோ…” என்றாளே தவிர, அவள் இறங்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
அப்போதுதான் அவளுடைய அச்சம் அவனுக்குப் புரிந்தது.
“இட்ஸ் ஓக்கே… இது பகல்… யாரும் எதுவும் செய்ய முடியாது. தவிர நேற்றுக் காவல்துறை ஆவன செய்திருக்கும்… கூடவே நான் இருக்கிறேன்… வா…” என்று சமாதானப் படுத்த, ஏனோ அதுவரையிருந்த பயம் சற்று மட்டுப் பட்டது அவளுக்கு.
முன்தினம் அவன்தானே அவளைக் காத்துக் கொண்டான். இப்போதும் காத்துக் கொள்ள மாட்டானா. தைரியம் கொண்டவளாக, வாகனத்தை விட்டு இறங்கியவள், தன்னை மறந்து ஆதிபனின் மறு கரத்தை அழுந்தப் பற்றி, குனிந்து தன் கரத்தைப் பற்றியவளைப் பார்த்தான்.
மதிமையோ, அவனைப் பற்றியிருப்பது பற்றி அக்கறை கொள்ளாது அந்த கட்டடத்தையும், சுத்தவர இருந்த சூழ்நிலையையும்தான், ஒரு வித கிலியோடு பார்த்துக்கொண்டிருந்தாள். விழிகளோ, அந்தக் கயவர்கள் எங்காவது தென்படுகிறார்களா என்று பரிசீலித்தன.
அதை உணர்ந்தவன் போல நடக்கத் தொடங்க மதிமை அவனோடு பசை கொண்டு ஒட்டியது போல, அவனுடைய பலம் பொருந்திய கரங்களை, தன் மார்போடு அணைத்தவாறு நடக்கத் தொடங்கினாள்.
அவளுடைய குடியிருப்பு வந்து சேரும் வரைக்கும் மதிமை அவனுடைய கரத்தை விட்டாளில்லை.
வீட்டைத் திறந்து உள்ளே வந்த பிறகுதான் அவனை விட்டு விலகினாள் மதிமை.
வரோதயனுக்கோ, பழக்கமான தன் வீட்டிற்கு வந்ததும் ஏக மகிழ்ச்சி. தந்தையின் கரத்திலிருந்து இறங்கியவன், சிட்டாக அங்கும் இங்கும் பாய்ந்து செல்ல, உள்ளே செல்ல முயன்றவளின் மேல் கரத்தைச் சட்டென்று பற்றினான், ஆதிபன்.
மெல்லிய அதிர்வுடன் திரும்பிப் பார்க்க, அவளைத் தன்னை நோக்கி இழுத்து, அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து சற்று நேரம் நின்றான். பின் தன் உள்ளங்கைகளால் அவளுடைய முகத்தைப் பற்றிக் கொண்டவன், பெருவிரலால் கன்னக் கதுப்பை மென்மையாக வருடிவிட்டு,
“மதி… என்னோடு இருக்கும் வரைக்கும் உனக்கு எந்த அச்சமும் வேண்டியதில்லை… சரியா?” என்றான் இதமாக. அந்த இதம் அவளுடைய இதயத்தை உருக்கி விட, விழிகளோ அவளைச் சுற்றிய உலகத்தை மறக்கடிக்க கண்ணனின் புல்லாங்குழல் இசையில் மயங்கிப்போன பசுவாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், மதிமை. அவளால் விழிகளைக் கூடச் சிமிட்ட முடியவில்லை. அவனுக்கும் அப்படியே. தன்னை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் அழகிய வதனத்தைக் கண்டவனுக்கு உள்ளே இருந்த பிசாசு அவனை முடுக்கி விட்டு அவளுடைய இதழ் சுவை வேண்டும் என்று சண்டித்தனம் செய்ய.
அந்தப் பிசாசின் கட்டளையை நிறை வேற்றியே ஆகவேண்டும் என்கிற வேட்கையோடு அவளுடைய உதடுகளை நோக்கிக் குனிய,
“அம்மா… அம்மா… என் டோய்ஸ்…” என்று குதூகலத்தோடு ஓடிவந்தான் ஆதிபன்.
இனிய நாதம் அறுபட்ட உணர்வில் முதலில் இருவரும் தவித்து, பின் தாம் நிற்கும் நிலை உணர்ந்து அவசரமாகப் பிரிந்து கொண்டனர்.
சற்று முன் என்ன நடந்தது? இருவருமே குழம்பி நின்றார்கள். ஆதிபனோ பலமாகத் துடித்த இதயத்தின் மீது கரத்தைப் பதித்து யோசிக்க, மதிமையோ இதயத்தோடு சேர்ந்து முறுக்கிக் கொண்ட அடிவயிற்றில் கரத்தைப் பதித்துக் குழம்பி நின்றாள்.
குழந்தைக்குப் பெரியவர்களின் திரிசங்கு நிலை எங்கே தெரியப் போகிறது. தன் தாயை நோக்கிப் பாய்ந்து வந்தவன், மதிமையின் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு,
“மை டொய்ஸ்… மை டொய்ஸ்…” என்றான் குதுகலமாக.
மாயவலை முற்றாக அறுந்து போக, உடனே தன் மகனின் பின்னே செல்ல, ஆதிபனோ குழப்பமும் தவிப்புமாக நெற்றியை அழுந்த வருடிக் கொண்டான்.
அவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? அதுவும் அவள் பக்கத்தில் நின்றால் புத்தி முழுதாகப் பேதலித்துப் போகிறது. அவளைத் தொட்டதும் இளமை பெருக்கெடுத்துப் பாய்கிறது. தொலைந்து போன அந்த விடலைப் பருவம் அவசரமாய் உயிர்த்தெழுந்து அவனைக் கொத்தித் தின்கிறது. குழம்பி நிற்கையில், திடீர் என்று அவனுடைய கைப்பேசி அழைத்தது.
உணர்வுகள் அறுபட்டவனாகத் தன் விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்தவனாகக் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அவனுடைய தந்தை, விக்கிரமசூரியர்தான் எடுத்திருந்தார்.
உடனே அதை உயிர்ப்பித்துக் காதில் பொருத்தி,
“ஏன்பா…? திடீர் என்று கனடா போனாய், என்ன நடக்கிறது, எப்படியிருக்கிறாய் என்று ஒரு வார்த்தை சொல்ல உனக்கு நேரமில்லையா?” என்று தந்தையாய் கண்டிக்க, இவனோ நெற்றியைச் சொரிந்துவிட்டு,
“சாரிபா… நேரம் கிடைக்கவில்லை… கொஞ்சம் வேலை…” என்றான் மென்று முழுங்கி.
இன்னும் அவனுக்கு ஒரு மகன் இருக்கும் செய்தி தந்தைக்குத் தெரியாது. தெரிந்தால் பதறிப் போவார். உன்னை படிக்க அனுப்பினால், இப்படி ஒரு காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாயே என்று அவன் மீது கோபப் படுவார். அவர் வேறு விசித்திராதான் தன் வீட்டு மருமகள் என்கிற கற்பனையைத் தனக்குள் வளர்த்து விட்டிருக்கிறார். இப்போது இதைச் சொன்னால், அதிர்ந்து போவார். அவன் நிலையைச் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்.
அதை விட, மகனை அழைத்துச் சென்று இவன்தான் உங்கள் பேரன் என்று சொன்னால் அவரால் எதுவும் செய்ய முடியாது. தவிர, வரோதயனின் முகத்தைக் கண்டதும், சட்டென்று கோபத்தை மறந்து அவனை அணைத்துக் கொள்வார். அதில் மாற்றுக் கருத்தில்லை.
“என்ன நேரம் கிடைக்கவில்லை…?” என்று மேலும் எகிறியவர்,
“சரி சரி… அதை விடு…! நீ எப்போது ஈழம் வருகிறாய்?” என்றார் பரபரப்புடன். இவனோ சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு,
“இன்னும் வேலை முடியவில்லை அப்பா… முடிந்ததும் வந்துவிடுவேன்…”
“உன் வேலை எப்போது முடிவது நீ எப்போது இங்கே வருவது…? இங்கே என்ன பிரச்சனை போகிறது தெரியுமா?” என்றார் எரிச்சலுடன். இவனோ குழப்பத்துடன்,
“என்னப்பா? அங்கே என்ன பிரச்சனை?”
“இங்கே விசித்திரா தற்கொலைக்கு முயன்று இருக்கிறாள் தெரியுமா?” என்று தந்தை கூற அதிர்ந்து போனான், ஆதிபன்.
“என்னது? என்னப்பா சொல்கிறீர்கள்…? விசித்திரா ஏன் தற்கொலைக்கு முயல வேண்டும்…? அவளுக்குப் பைத்தியமா?” நம்ப மாட்டாதவனாக,
“ஆமாம்.. பைத்தியம்தான்… முட்டாள் பெண்… கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன் என்று ஒரே அடம். தேவநாதன் வேறு பொருத்தமாக ஒரு பையனை அழைத்து வந்து இவனைத்தான் நீ திருமணம் முடிக்கவேண்டும் என்றிருக்கிறான் போல. இந்த மடப் பெண், தூக்க மாத்திரையைச் சாப்பிட்டு விட்டாள். எப்படியோ சிரமப்பட்டு அவளைக் காப்பாற்றிவிட்டார்கள். தேவநாதன் என் காலைப் பிடித்து, உன்னைத் திருமணத்திற்குச் சம்மதிக்கச் சொல்லிக் கெஞ்சுகிறான்.
நான் என்ன சொல்லட்டும்? அதனால் நீ விசித்திராவை திருமணம் முடிப்பாய் என்று வாக்குக் கொடுத்துவிட்டேன். ஆதிபா…! நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது…! இன்னும் ஒரு மாதத்தில் உனக்கும் விசித்திராவுக்கும் திருமணம். நான் முடிவு செய்து விட்டேன்… அதனால், விரைவாக இலங்கை வந்து சேர்!” என்று கட்டளையாகக் கூற, அதிர்ந்து போனான், ஆதிபன்.
“அப்பா… என்ன சொல்கிறீர்கள்? எனக்கும் விசித்திராவுக்கும் திருமணமா? யாரைக் கேட்டு இந்த முடிவுக்கு வந்தீர்கள்?” ஆத்திரத்துடன் இவன் குரலை உயர்த்த, பதிலுக்குக் குரலை உயர்த்திய விக்ரமசூரியர்,
“யாரைக் கேட்க வேண்டும், நான்?” என்றார் பதிலுக்கு.
“யாரைக் கேட்க வேண்டுமா? அப்பா நீங்கள் என்னைக் கேட்டிருக்க வேண்டும். திருமணம் எனக்கு… என் சம்மதம் இதில் முக்கியம்…” பதிலுக்குச் சூடேறியவனாகச் சொல்ல,
“அதுதான் உன்னிடம் பல முறை கேட்டும் நீ கொஞ்சம் கூட மசிவதாக இல்லை. அதுதான் உனக்காக நானே முடிவு செய்தேன். இங்கே விசித்திராவை அந்த நிலையில் கண்டதும் என்னால் தாள முடியவில்லை. உன் மீது எவ்வளவு காதலிருந்தால், இப்படி ஒரு காரியத்தைச் செய்திருப்பாள்! உன் வறட்டுப் பிடிவாதத்தை விட, அவளுடைய உயிர் முக்கியம் என்று எனக்குப் பட்டது. அதுதான் வாக்குக் கொடுத்தேன்…!” என்று விக்ரமசூரியர் கூற, ஆதிபனுக்கு என்ன சொல்வதென்று சுத்தமாகப் புரியவில்லை.
‘அவள் தற்கொலைக்கு முயன்றால், இவனா பலியாடு? அந்த முட்டாளிடம் எத்தனை முறை பிடிக்கவில்லை என்று சொல்லியாயிற்று. கடைசியாக, எனக்குக் காதலி ஒருத்தி இருக்கிறாள் என்றும் சொல்லியிருந்தான். அப்படியிருந்தும் இப்படி ஒரு காரியம் செய்தால், அதற்கு என்ன அர்த்தம்? இப்படி மிரட்டியதும் பணிந்துவிடுவேன் என்று நினைத்தாளா, என்ன? சரி.. அவள்தான் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாள் என்றால், அப்பாவுக்கு எங்கே போனது புத்தி. யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவை எடுத்தார்? வாழப்போவது அவனா, இல்லை அவரா? அவள்தான் அறிவு கெட்டத்தனமாக இப்படி ஒரு காரியம் செய்தாள் என்றால், அதற்குப் பயந்து இவன் தன் தலையைக் கொடுக்க வேண்டுமா?’ பற்றிக் கொண்டு வந்தது ஆதிபனுக்கு. அதை வெளிக்காட்டும் விதமாக,
“அப்பா புரியாமல் பேசாதீர்கள், நான் ஏற்கெனவே விசித்திராவிடம், என் நிலைப் பாட்டை உறுதியாகச் சொல்லிவிட்டேன். பிடிக்காதவனை இழுத்து வந்து கட்டச் சொன்னால், என் வாழ்க்கை மட்டுமில்லை, அவளுடைய வாழ்க்கையும் பாழாய்ப் போகும். அது தெரியாதா உங்களுக்கு?” என்று கேட்க,
“ஏன் பாழாய் போக வேண்டும்? நீங்கள் இருவரும் பன்னிரண்டு வருடங்களாகப் பழகுகிறீர்கள். அவளைப் பற்றி உனக்கும், உன்னைப் பற்றி அவளுக்கும் நன்கு தெரியும். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போனால் வாழ்க்கை எப்படிக் கசக்கும்…? மகிழ்ச்சி என்பது நம் கையில் தான் இருக்கிறதே தவிர, அடுத்தவன் கையில் இல்லை. நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனால்…” கூறிக்கொண்டு வர,
“ஸ்டாப் இட் அப்பா…! ஜெஸ்ட் ஸ்டாப்பிட்…! விட்டுக் கொடுத்துப் போவதா…? ஏன் நான் விட்டுக் கொடுக்க வேண்டும்…? அப்பா விசித்திரா எனக்கு வெறும் தோழி மட்டும்தான். அதைத் தாண்டி வேறு எந்த வகையிலும் சிந்தித்தது கிடையாது. சிந்திக்கவும் முடியாது…! அதைச் சொன்னால், ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்…!” என்று பொறுமை இழந்து தன் குரலைச் சற்று உயர்த்த, சற்று நேரம் அமைதி காத்தார், விக்ரமசூரியர்.
“ஆதி…! உன் அம்மா இறந்த போது, உனக்குப் பதினெட்டு வயது. எனக்கு நாற்பத்தைந்து. உனக்காகவே நான் வேறு திருமணம் எதுவும் செய்யாமல் வாழ்ந்து வருகிறேன். அப்படிப் பட்ட எனக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் இதுதானா? இத்தனை கேட்கிறேன், கொஞ்சம் கூட இறங்கி வரமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்க,
ஆதிபனின் பொறுமை முற்றாகத் தொலைந்தது. பற்களைக் கடித்து நறநறத்தவன்,
“என்னப்பா… எமோஷனல் பிளாக்மெய்லா…? இதற்கெல்லாம் மசிந்துவிடுவேன் என்று நினைத்தீர்களா? அப்படி நினைத்தீர்கள் என்றால், சாரிபா…! இன்னும் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. இதற்கெல்லாம் பயந்து என் வாழ்க்கையைப் பணயம் வைக்க முடியாது…!” என்று அவன் கூற, இப்போது விக்ரமசூரியர் வேறு விதமாகக் கையாள முயன்றார்.
“ஆதிபா… என்னை விடு…! தேவநாதனை யோசித்துப் பார்த்தாயா…? இன்று இந்தத் தொழில் இத்தனை சிறப்பாக வளர அவன்தான் காரணம். அவன் மட்டும் பங்குதாரராகச் சேரவில்லை என்றால், நம் வியாபாரம் இந்தளவுக்கு வளர்ந்திருக்காது. தயவு செய்து…” அவர் முடிக்கவில்லை,
“போதும்பா…! இப்போது என்ன? நம் தொழிலைக் காட்டி மிரட்டுகிறீர்களா…? ஏன்பா…? உங்களுக்கு என் உணர்வுகள் புரியவேயில்லையா…? அதை மதிக்க வேண்டும் என்று தோன்றவேயில்லையா…? அதுவும் விசித்திராவை…” நினைத்தவனுக்கு இங்கே வர முதல் அவனுடைய அலுவலக அறையில் அவள் பேசியது நினைவுக்கு வர, அவனையும் மீறிக் குமட்டியது ஆதிபனுக்கு.
“அப்பா… இப்படி மிரட்டியோ, பயம் காட்டியோ காதலை வரவழைக்க முடியாது. எனக்கு விசித்திராவைப் பிடிக்கவில்லை. அதுவும் அவளுடைய பிடிவாதம் சுத்தமாகப் பிடிக்கவில்லை…” அவன் அழுத்தம் திருத்தமாகக் கூற, இப்போது விக்ரமசூரியர் எகிறினார்.
“ஆதிபா…! நீ என்ன விளக்கம் சொன்னாலும் நான் சமாதானம் அடைய மாட்டேன். இதோ பார் ஆதி…! நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். நீ என் மகன் என்றால், நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும். விசித்திராதான் இந்த வீட்டு மருமகள். நீ அவளை மணக்கச் சம்மதித்துத்தான் ஆகவேண்டும். இதுதான் என் முடிவு..!” கூறிக் கொண்டிருக்கும் போதே, வரோதயன் ஒரு காரைக் கையில் ஏந்தியவாறு…
“ட்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஓடி வர, அவனுக்குப் பின்னால், மதிமை புன்னகையுடன் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். அந்தக் காட்சியைக் கண்ட ஆதிபனுக்கு அதுவரை சுருங்கியிருந்த புருவங்கள் விரிந்தன.
எரிச்சலுடன் கிடந்த விழிகளில் சட்டென்று ஒருவித மலர்ச்சி. அழுத்தமாக மூடியிருந்த உதடுகள் அவசரமாக இளகின. இறுகியிருந்த உடல் தளர்ந்தது.
அதே நேரம், ட்ர்ர்ர் என்கிற ஓசையோடு வந்த குழந்தை, ஆதிபனின் காலோடு முட்டுப்பட, குழந்தை விழுந்து விடுவானோ என்று அவனை அணைத்தாற்போல கரத்தைப் போட, வரோதயனின் பின்னால் ஓடிவந்த மதிமையும் அவனைப் பிடிக்க முயல, அவளுடைய தளிர் கரங்கள் மகனை அணைத்தாற் போலிருந்த ஆதிபனின் முடியடர்ந்த கரத்தை மென்மையாகப் பற்றிக்கொண்டன.
அவளுக்கு எப்படியோ, இவனுக்குத்தான் மின்சாரம் தாக்கியது போலத் தோன்றியது.
மதிமையோ அதிரசமாகக் கரத்தை விலக்கி, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“சாரி…” என்று விட்டு வரோதயனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, கைப்பேசியில் பேசிக் ,கொண்டிருந்தவனுக்குத் தனிமை கொடுத்துவிட்டு விலகிச் செல்ல,
“என்னடா.. நான் பேசிக்கொண்டே இருக்கிறேன் நீ அமைதியாக இருக்கிறாய்? சரி சொல் திருமணத்தை எப்போது வைக்கலாம்?” என்றார் தந்தை தெளிவாக.
அவன் செய்வது சரியா தவறா தெரியவில்லை. ஆனால் இப்போதைக்குத் தந்தையிடமிருந்து தப்ப, தந்தையிடமிருந்து மட்டுமில்லை, விசித்திராவிடம் இருந்தும் தப்ப, இதை விட வேறு வழியில்லை என்பது புரிந்து போக,
“அப்பா ஒருத்தன் எத்தனை முறைதான் திருமணம் செய்ய முடியும்?” என்றான் நிதானமாக.
“இது என்னடா கேள்வி…? ஒருத்தனுக்கு ஒருத்தி…! திருமணம் ஒரு…. மு… றை… ஆதிபன்… நீ இப்போது என்ன கேட்டாய்? அதற்கு என்ன அர்த்தம்…?” என்றவரின் குரலில் ஏக படபடப்பு. அதை உணர்ந்துகொண்டவனின் உதடுகளில் மெல்லிய வெற்றிப் புன்னகை பிறக்க,
“அப்பா… என்னால் விசித்திராவை மட்டுமில்லை…! வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் முடிக்க முடியாது. ஏன் என்றால்…?” என்றவன் முன்னறையில் மகனைத் தூக்கிச் சுழன்று கொண்டிருந்த மதிமையை ஏறிட்டு விட்டு,
“எனக்குத் திருமணம் ஆகி நான்கு வயதைத் தொடப் போகும் ஒரு மகனும் இருக்கிறான்…!” என்று கூற, விக்ரமசூரியருக்குப் பேரதிர்ச்சியில் பேச்சு வராமல் நின்று போனது.
அவரால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ‘எத்தனை முறை கெஞ்சிக் கேட்டிருப்பார் திருமணம் முடிக்கவென்று. ஆனால் திருமணம் என்றாலே காததூரம் மகன் ஓடும்போது திருமணத்தில் அவனுக்கு விருப்பமில்லை என்றுதானே நினைத்தார். அதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறது என்று நினைக்கவே இல்லையே…!’
“ஆதி… நீ… நீ… சொல்வது…” அவருக்கு பேச்சே வரவில்லை.
“நிஜம்பா…! நான் எதற்காக திடீர் என்று கனடா வந்தேன் என்று நினைக்கிறீர்கள். நான் இங்கே படிக்கிற காலத்தில், ஒருத்தியை விரும்பினேன். மனக்கசப்பு ஏற்பட்டதில், அவளை விட்டுப் பிரிந்தும் விட்டேன். இப்போதுதான் தெரிந்தது, அவள் என் குழந்தையைப் பெற்றிருக்கிறாள் என்று…” என்று கூற, தந்தையோ,
“ஆதி… நீ ஒன்றும் குழந்தையில்லை, சொன்னதை உடனே நம்புவதற்கு. அந்தக் குழந்தை உன்னுடைய குழந்தைதான் என்பதற்கு என்ன ஆதாரம்? டி என் ஏ எடுத்துப் பார்த்தாயா…? உன்னிடம் பணம் பிடுங்க, பொய் கூடச் சொல்லலாம்பா…” என்று பரபரப்புடன் கூற, இவனோ, மெல்லியதாக நகைத்து,
“அதெல்லாம் தேவையில்லைபா… ஏன் என்றால், குழந்தை என்னைப் போலவே இருக்கிறான்…” என்றதும், விக்கிரமசூரியருக்கு தலை சுற்றியது.
‘இப்போது தேவநாதனிடம் என்ன சொல்வது. விசித்திரா இதை அறிந்தால், துடித்துப் போவாளே.’
“ஓ… காட்…! அப்படியானால் விசித்திராவின் நிலைமை…?”
“விசித்திராவின் நிலைமையா? அதற்கு நான் எப்படி பொறுப்பாக இருக்க முடியும்? அது அவள் சிக்கல்…! எனக்கு யோசிக்க, செயல்பட ஆயிரம் பிரச்சனைகள் வரிசையாகக் காத்திருக்கிற நேரத்தில் மூன்றாம் மனுஷியைப் பற்றி எனக்கென்ன வந்தது. இந்த நேரத்தில், அவளைப் பற்றிச் சிந்திக்க எனக்கேது நேரம்…? அப்பா என் குழந்தையை அம்போ என்று இங்கே விட முடியாது…! நான் அவனை அங்கே அழைத்து வரப் போகிறேன்…”
“குழந்தை குழந்தை என்கிறாயே…? அவனை பெற்றவள் என்ன செய்கிறாள்? அவளையும் உன்னோடு அழைத்து வரப்போகிறாயா?” என்று சீற்றமாகத் தந்தை கேட்க,
இவனுடைய கவனம், தானாக மதிமையை நோக்கிச் சென்றது. முன்னறையில், குழந்தையை இடையில் தூக்கி வைத்தவாறு, அவனோடு எதை எதையோ பேசிக்கொண்டே பொருட்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தாள். அந்தக் காட்சி, இவன் இதயத்தை வருட,
“அப்பா… அவள் என் குழந்தையின் தாய், அவளை எப்படி அம்போ என்று விட்டுவிட முடியும். என் மனைவி என் கூடத்தானே இருக்க முடியும்…” என்று இலகுவாகவே பெரிய குண்டைத் தூக்கிப் போட,
மதிமையோ, தன்னைப் பற்றி இப்படி ஒரு புரளி அரங்கேறிக் கொண்டிருப்பது தெரியாமலே, வரோதயன் கேட்கிற கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிந்தாள்.
“நிஜமாகவே உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா ஆதிபா…? அதுவும் நானில்லாமல்… ஒரு வேளை இந்தத் திருமணத்திலிருந்து தப்ப பொய் சொல்கிறாயா?” என்று தந்தை அதிர,
“சாரிபா…! எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் குழந்தைக்குத் தாயானவளை மணக்காது போனால், அது என் மகனுக்கும், என் காதலிக்கும் இழுக்காகி விடாதா…? தவிர என் குழந்தை தந்தை பெயர் தெரியாமல் இருப்பதை எப்படி அனுமதிப்பேன். இலங்கை வந்ததும் சொல்லலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் அதற்கிடையில் சொல்ல வேண்டியதாயிற்று. சாரிபா…! உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலை. இந்த செய்தியை, தயவு செய்து விசித்திராவிடமும், தேவநாதன் அங்கிளிடமும், சொல்லி விடுங்கள். முடிந்தால் விசித்திராவுக்கு நல்ல பையனாகப் பார்த்துத் திருமணத்தைச் செய்து வைக்கச் சொல்லுங்கள்…! என் தலையை உருட்டாதீர்கள்…!” என்றுவிட்டுக் கைப்பேசியை அணைக்க முயல,
“டேய்..! டேய்…! உன் குழந்தையின் படத்தையாவது எனக்கு அனுப்பிவிடு..!” என்று அவசரமாகச் சொன்ன விக்ரமசூரியரின் குரலில், அதுவரையிருந்த கோபம் போய், தன் பேரனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவலே மிதமிஞ்சித் தெரிய, அதை உணர்ந்துகொண்டவனுக்கு உதடுகளில் அழகிய வெற்றிப் புன்னகை ஒன்று மலர்ந்தது.
(17) தந்தை கேட்டதற்கமைய, மகனின் படம் ஒன்றை அனுப்பி வைத்த ஆதிபன், கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். ‘ஏனோ தந்தையிடம்…
(15) மறுநாள் காலை பத்து மணியளவில் விழிகளைத் திறந்த மதிமைக்குக் காய்ச்சல் சிறிது விட்டிருந்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவள்,…
(14) திடீர் என்று யாரோ உலுப்புவது போலத் தோன்ற சடார் என்று தன் விழிகளைத் திறந்தான், ஆதிபன். ஒரு கணம்…
(13) தன் வாகனத்தைக் கன வேகத்தில் முக்கிய பாதையில் ஏற்றிய ஆதிபன், சற்று தூரம் சென்ற பிறகு தான் ஒழுங்காக…
(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…
(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா...!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன்…