மறுநாள் காலை பத்து மணியளவில் விழிகளைத் திறந்த மதிமைக்குக் காய்ச்சல் சிறிது விட்டிருந்தது.
மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவள், புதிய சூழ்நிலையால் அதிர்ந்தவளாய் சடார் என்று எழுந்தமர, அவள் அணிந்திருந்த டீஷேர்ட் தோள் பக்கமாக வழிந்து சென்றது. இந்த டீ-ஷேர்ட்… குழம்பியவளுக்கு, மெல்ல மெல்ல முன்தினம் நடந்தது நினைவுக்கு வந்தது. அந்தக் கயவர்கள் துரத்தியது, ஆதிபன் வந்து காப்பாற்றியது. காவல்துறை, மருத்துவமனை…
அந்த நினைவுகளின் தாக்கத்திலிருந்து விடுபட முயன்றவளாக, முகத்தைக் கரங்களால் மூடி சற்று நேரம் அப்படியே அமர்ந்திருக்க, அவளுடைய அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தன் கரங்களை இறக்கியவள், அவசரமாக ஆடைகளைச் சரிப்படுத்தி விட்டுப் போர்வையால் கால்களை மறைத்தவாறு,
“யெஸ்…” என்று முனங்கலாய் குரல் கொடுக்கக் கதவு திறந்தது. ஆதிபன்தான், கரத்தில் காப்பிக் குவளையோடு நின்றிருந்தான்.
அவசரமாக அவளை மேலும் கீழும் ஏறிட்டுத் திருப்திப் பட்டுக் கொண்டவனாக,
“இப்போது எப்படியிருக்கிறது?” என்றவாறு அவளை நோக்கிச் செல்ல,
“இப்போது… பரவாயில்லை…” என்றாள் மெல்லிய புன்னகையுடன். ஏனோ அந்தப் புன்னகையில் இவனுடைய இதயம் தடதடக்க,
“காய்ச்சல் இன்னும் இருக்கிறதா? இல்லை…” என்று கேட்டவாறு அவளுடைய நெற்றியில் கரம் வைக்கப் போக, பதட்டத்தோடு தன் தலையைப் பின்னால் இழுத்தவள்,
“இல்லை… எனக்கொன்றுமில்லை. காய்ச்சல் இல்லை…” என்றாள் அவசரமாக. அவள் நெற்றி வரை எடுத்துச் சென்ற கரத்தை இறக்காமலே அவளை ஒரு மாதிரி பார்த்தவன், பின் தன் கரத்தை இழுத்து எடுத்து,
“குட்…” என்று விட்டு, மறுகரத்திலிருந்த காப்பியை அவளை நோக்கி நீட்டி,
“காப்பி… குடி… கொஞ்சம் தெம்பு வரும்… குடித்துவிட்டு தயாரானாய் என்றால், நீ வசித்த இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வேன்… இனி அங்கே இருக்க முடியாது என்பது உறுதி. அங்கே சென்று முக்கிய பொருட்களை எடுத்து வரவேண்டும் இல்லையா? முக்கியமாக உன்னுடைய ஆடைகள்…” என்று கூற, உடனே போர்வையை விலக்கிவிட்டுக் கட்டிலை விட்டு இறங்கத் தொடங்கியவளின் தந்தக் கால்களைக் கண்ட ஆதிபனுக்கு, மீண்டும் மனது தடுமாறத் தொடங்கியது.
முன்னிரவுதான் சபதம் எடுத்தான், தப்பாக எதையும் பார்ப்பதில்லை என்று, ஆனால் பாழாய் போன மனது எங்கே கேட்கிறது? சிரமப்பட்டுத் தன் விழிகளை ஒரு கட்டுக்குக் கொண்டு வந்தவன், அவசரமாக அவளிடம் காப்பிக் குவளையை நீட்ட, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள், மதிமை. காப்பியை ஒரு இழுவை இழுத்து விட்டு, மீண்டும் மேசையில் வைத்தவள், தயக்கத்தோடு அவனைப் பார்த்து,
“என்… என் ஆடைகள்…?” என்றவள், அவனை விட்டு விலகி, துவைக்கும் இயந்திரம் உள்ள அறையை நோக்கிச் சென்றாள். முன்தினம் துவைக்கப் போட்டவள், காயப் போடவில்லை. ஆடைகளைக் காய வைக்கும் இயந்திரத்தில் போட்டு விட்டுக் குளித்து வருவதற்குள், அவை காய்ந்திருக்கும்.
அந்த எண்ணத்தோடு துவைக்கும் இயந்திரத்தை திறக்க, அங்கே அவளுடைய ஆடைகள் இருக்கவில்லை.
இங்கே தானே போட்டாள். திரும்பிக் காயவைக்கும் இயந்திரத்தின் கதவைத் திறக்க, அங்கேயும் ஆடைகள் எதுவுமில்லை. அவளுடைய ஆடைகளுக்கு என்னானது? குழப்பத்தோடு நிமிர்ந்தவள் திரும்ப,
அவளுக்கு மிக நெருக்கமாக நின்றிருந்தான் ஆதிபன்.
எதேச்சையாக இரண்டடி பின்னால் வைத்த அவள், அவனை ஒரு மாதிரி பார்க்க, அவனோ அவளுக்கு முன்பாக, ஒரு பையை நீட்டினான். இவள் என்ன என்பது போல ஏறிட,
“சாரி…! உன் ஆடைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேன். அவை உனக்குத் தேவையற்ற கசப்பான நினைவுகளைத்தான் கொடுக்கும். இந்தா… இது உனக்குத்தான் வாங்கியது. அணிந்து கொள்…!” என்று நீட்ட, ஒரு கணம் தயங்கியவள், பின் வாங்கிக் கொண்டாள்.
அவளுக்கும் வேறு வழியில்லையே. அவள் அணிந்திருக்கும் அவனுடைய டீஷேர்ட்டோடு வெளியே போகவும் முடியாது. மறுத்தும் பயனில்லை என்பது புரிய, வாங்கிக் கொண்டவள், முன்தினம் சென்ற அவனுடைய அறைக்குச் சென்று குளியலறை நுழைந்து சுத்தமாகி, அவன் கொடுத்த பையைத் திறக்க, மிகச் சரியான அளவில் பான்டும், கம்பளியாலான மேலாடையும் கூடவே உள்ளாடைகளும் இருந்தன.
ஏனோ, முகம் சிவந்து போனது மதிமைக்கு. அவளுடைய அளவு எப்படித் தெரியும் என்று யோசிக்கப் பிரமாதமான மூளை ஒன்றும் தேவையில்லை. துவைத்த ஆடைகளை எடுத்துப் பார்த்தாலே அளவு தெரிந்திருக்கும். அவளுடைய ஆடைகளை அவன் கரங்களில் எடுத்து எறிந்தான் என்பதையே அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில், அதே அளவில் வாங்கி வந்தான் என்பதை நினைக்கும்போதே, பெரும் கூச்சமாக இருந்தது மதிமைக்கு.
ஆனாலும் அவளுடைய நன்மை கருதி, அவளுக்காகப் பார்த்து செயற்பட்டிருக்கிறான் என்கிற நன்றி உணர்வும் எழவே செய்தது.
சங்கடம் மாறாமலே அணிந்து கொண்டவள் வெளியே வந்தபோது, அவனை எதிர்கொள்ள முடியாது தவித்தாள் மதிமை.
சிவந்த முகமும், சங்கடத்தில் குனிந்த தலையுமாக நின்றிருந்தவளை ஏறிட்டவன்,
“ஹே… இஸ் எவ்ரிதிங் ஓக்கே…?” என்றான் கேள்வியாக. அப்போதும் அவனைப் பார்க்காமல், ஆம் என்று தலையை அசைத்தவள், இன்னும் தலை நிமிராமல்,
“ந… நன்றி…” என்றாள் திக்கித் திணறி.
“நன்றியா…? எதற்கு? இந்த ஆடைகளை வாங்கியதற்கா… அப்படியானால், சபேசனின் வருங்கால மனைவிக்குத்தான் நீ நன்றி சொல்ல வேண்டும். அவர்கள்தான் அதிகாலையே இங்கே வந்து, உன் ஆடைகளின் அளவறிந்து வாங்கி வந்து கொடுத்தார்கள்…” என்றதும் பளிச்சென்று மலர்ந்தது முகம்.
நிம்மதியுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “சபேசனின் வருங்கால மனைவியா…” என்று கேட்க,
அப்போதுதான் சபேசனை அவளுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.
“சாரி… உனக்கு அவனைப் பற்றித் தெரியாது இல்லையா…? சபேசன் என் நண்பன்… நாங்கள் இருவரும் இங்கே ஒன்றாகப் படித்தவர்கள். இந்த வீடும் அவனுடையது தான். அன்று வரோதயனை அழைத்து வந்தானே…! அவன் தான் சபேசன். அவனுடைய வருங்கால மனைவிதான், சிந்துஜா…!” என்றதும்,
“ஓ..” என்று உதடுகளைக் குவித்தவள், பின் அங்கும் இங்கும் பார்த்து,
“அவர் எங்கே…?” என்றாள் ஆவலாய்.
“தன் வேலை விடையமாக அதிகாலையே புறப்பட்டு போய்விட்டான். நீயும் தயாரானால்… உன் இருப்பிடத்திற்குப் போய், அத்தியாவசிய பொருட்களை எடுத்து வந்துவிடலாம்….” என்றதும் சரிதான் என்று நிமிர்ந்தவளுக்கு, வீட்டுத் திறப்பு பான்ட் பாக்கட்டிற்குள் இருப்பது நினைவுக்கு வந்தது.
“வீட்டுத் திறப்பு பான்ட் பாக்கட்டிற்குள்…” இவள் பரபரப்போடு சொல்லியவாறு குப்பைத் தொட்டியைத் தேடிப் போக முயல, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றினான் ஆதிபன்.
இவள் அதிர்வோடு நிமிர்ந்து பார்க்க,
“இரு…” என்று விட்டு உள்ளே சென்றவன், திரும்பி வந்து, அவளுடைய கரத்தைப் பற்றி உள்ளங்கையில் திறப்பையும் ஒரு சில சில்லறைகளையும் வைத்தவாறு,
“எறியும் போது, இவற்றை எடுத்து வைத்து விட்டுத்தான் எறிந்தேன்…” என்று சொல்ல, மதிமை, வெண்ணிறக் கரங்களின் மீது பொத்தினாற்போல படிந்திருந்த அந்த மாநிறக் கரங்களை ஒரு வித தடுமாற்றத்தோடு பார்த்தாள்.
எப்போதும் போல அவன் கரம் பட்டதும் இதயம் படபடத்தது. உள்ளே உருத்தெரியாத புதுவித உணர்வு ஆட்கொண்டது. ஆனால் அவனோ, மெதுவாகத் தன் கரத்தை விலக்கியவாறு,
“உன் பொருட்களை எடுத்த பின்பு, நீ தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதனால் கொஞ்சம் விரைவாகத் தயாராகு…” என்று கூற, இப்போது குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள் மதிமை.
“தங்குவதற்கான ஏற்பாடா?” அவனிடமே கேட்க,
“பின்னே… நீ இங்கேயே தங்கிவிட முடியுமா… இப்போது நீ இருக்கும் இடத்திலும் நீ தங்க முடியாது. அதனால் உனக்கொரு நல்ல இடம் பாதுகாப்பான இடம் பார்க்க வேண்டுமில்லையா. என் மகனை மிக நன்றாக வளர்த்திருக்கிறாய். அதற்காகப் பணமும் வாங்க மறுத்துவிட்டாய். குறைந்தது இதையாவது நான் செய்யவேண்டாமா…?” என்றதும், இவளுடைய முகம் பெரும் ஏமாற்றத்தில் கூம்பிப் போனது.
இன்னும் அவளைத் தள்ளித்தான் வைக்க நினைக்கிறான். நன்றிக்கடன் அது இது என்று வரோதயனோடு வாழ்ந்த அற்புதமான காலத்தை அந்நியப்படுத்த நினைக்கிறான். நினைக்கும் போதே பெரும் ஏமாற்றம் எழுந்தது மதிமைக்கு.
அதுவும், அவன் போகும் வரை வரோதயனோடு இருக்கலாம் என்று தானே சொன்னான். திடீர் என்று அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டானே. ஏன்? பெரும் ஏமாற்றம் பேரலையாக எழுந்தது மதிமைக்கு.
கண்களில் கண்ணீர் கோர்க்க தவிப்புடன் நின்றிருந்தவளின் செவிகளில் விழுந்தது, “அம்மா…” என்னும் பட்டுக் குரல்.
அதுவரையிருந்த வலி மறைந்தவளாகப் பரவசத்துடன் திரும்பிப் பார்க்க, சோர்ந்த தோற்றமாக இருந்தாலும், விழிகள் பளிச்சிட நின்று இருந்தான், வரோதயன்.
அவனைக் கண்டதும் நெஞ்சு முட்ட எழுந்த பாசத்தோடு, பாய்ந்தவள், குழந்தையை வாரி அணைக்க, குழந்தையும் அன்னையை இறுக அணைத்தவாறு, அவளுடைய தோள்களில் தன் முகத்தைப் புதைத்து விம்மத் தொடங்க, இவளும் சேர்ந்து குழந்தையோடு அழத் தொடங்கினாள்.
“எப்படிக் கண்ணா இருக்கிறாய்?” என்று வரோதயனின் முதுகைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப் படுத்த, இந்தக் காட்சியைப் பார்த்த ஆதிபனுக்கு, ஏனோ விழிகளைத் திருப்ப முடியவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்திருந்த விதமே சொன்னது, அவர்களின் பிணைப்பின் ஆழம். ஏனோ அந்த இருவரோடு அவனும் ஒருவனாகக் கலந்துவிடவேண்டும் என்கிற ஏக்கம் சடுதியாகப் பிறக்க, திடுக்கிட்டான் ஆதிபன்.
‘அவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? முட்டாள்தனமாக யோசிக்கிறான். அவனும் அவர்கள் கூட ஒருவனாகவா? நடக்கும் காரியமா இது? சே… போகிறது பார் புத்தி…!’ என்று தன்னையே திட்டியவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது.
விரைவாக, மிக விரைவாக அவளை இங்கிருந்து அனுப்பி விடவேண்டும் என்று. ஆரம்பத்தில் ஒரு மாதம் அவளைக் கூடவே வைத்திருப்பது என்றுதான் நினைத்தான். ஆனால் தாய் மகன் பாசம் அந்த எண்ணத்தை மாற்ற வைத்தது. இன்னும் தொடர்ந்து அவள் வரோதயன் கூட இருந்தால், அவனுடைய மகனுக்கு தந்தை மூன்றாம் பட்சமாகிவிடும். அவனைக் கண்டு கொள்ள மாட்டான். மதிமையைச் சுற்றித்தான் அவனுடைய உலகம் விரியும். அதன் பின் ஊருக்கு அழைத்துப் போவது இயலாத காரியமாகிவிடும். அதை விட, போக முதலே மகனின் மனதில் முதலிடம் பெற்று விடவேண்டும். வரோதயன் அவனுடைய குழந்தை. அவனுக்கு மட்டும் உரித்தான குழந்தை. யாருக்காகவும் அதை விட்டுக் கொடுக்க முடியாது. புதிதாக எழுந்த பொறாமையும், தன்னது என்கிற உணர்ச்சியும் அவளை அங்கிருந்து விலக்கவேண்டும் என்று எச்சரித்தது.
கூடவே அவளைக் கண்டதும் உள்ளே ஊறும் ஒரு வித உணர்ச்சியும் அவனுக்குப் பிடிக்கவில்லை.
முடிவு செய்தவனாக, “சரி சரி… நேரம் போகிறது… கிளம்புங்கள்.” என்றவன் இரண்டெட்டில் மதிமையின் அணைப்பில் சிக்கியிருந்த தன் மகனைத் தன் கரங்களுக்கு இழுத்து எடுத்துக் கொள்ள, குழந்தையோ, தந்தையின் பிடியிலிருந்து நெளிந்தவாறு, மதிமையிடம் போக முயன்றது.
உள்ளே பெரும் ஏமாற்றம் எழுந்தாலும், ‘இவன் என் மகன்’ என்பதை அறிவிக்கும் முகமாக தன் மகனை இறுக மார்போடு அணைத்துக் கொண்டவன், மதிமையை ஏறிட்டு,
“மேசையில் பான் டோஸ்ட் பண்ணி எடுத்து வைத்திருக்கிறேன். சாப்பிடு. இவனுக்கு உடை மாற்றி விட்டு வருகிறேன்…” என்று உத்தரவு போலக் கூறிவிட்டு, மகனை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான், ஆதிபன். இல்லை இல்லை தப்பித்து ஓடினான்.
மதிமைதான் பரிதாபமாகச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘கொஞ்ச நேரம், குழந்தையை அரவணைக்க வாய்ப்புக் கொடுத்தால்தான் என்ன?’ மனம் ஏக்கத்துடன் அலை பாய்ந்தது.
தன் அறைக்குள் வந்த ஆதிபன் அறையை அடித்துச் சாத்திவிட்டு, அவன் இறுகிய அணைப்பில் நெளிந்து கொண்டிருந்த மகனை விலக்க, மகனோ கண்களில் கண்ணீர் முட்ட,
“அம்மா…!” என்றது. ஏனோ ஆத்திரம் பிறந்தது ஆதிபனுக்கு.
‘தந்தை அவன், அவனை விடுத்து வளர்த்தவளைத் தேடுகிறானே. கடந்த ஐந்து நாட்களாக அவன் படும் பாடு அவனுக்குத்தான் தெரியும். என்னதான் மகனை வசியப்படுத்த முயன்றும், அவன் முயற்சிகள் எல்லாம், விழலுக்கு இறைத்த நீராகப் பயனற்றல்லவா போய்விட்டது. அவனைக் கொஞ்சம் கூட மகன் தேடுகிறான் இல்லையே.’
சிறுபிள்ளைத் தனமான பொறாமையும் எரிச்சலும், அவனை ஆட்கொள்ள, பிடிவாதமாகத் தன் மகனை இறுக்கி அணைத்து விடுவித்தவன், குழந்தையைக் கட்டிலில் நிறுத்திவிட்டு,
“லிசின் சன்… யு ஆர் மைன்.. டு யு அன்டர்ஸ்டான்ட்… யு ஆர் மைன்…! நான்தான் உனக்குத் தந்தை. அவள் உன் அம்மா இல்லை. புரிந்ததா?” என்று தன்னை மீறிச் சீற, குழந்தையோ பேந்தப் பேந்த விழித்தது. ஆனாலும் சிவந்த செழித்த உதடுகள், அவனுடைய கோபத்தைக் கண்டு நடுங்கிப் பிதுங்கின. கண்களில் கண்ணீர் நிறையவே முட்டிக்கொள்ள,
“அம்மா…” என்றான் குழந்தை. அவன் என்னதான் புரிய வைக்க முயன்றாலும், குழந்தைக்குப் புரியப் போவதில்லை என்று தெரிந்தது. பெரும் ஏமாற்றம் எழ, அழுத குழந்தையை மெதுவாக இழுத்து அணைத்துக் கொண்டவன்,
“ஷ்… பேபி… டோன்ட் க்ரை…” என்றான் மென்மையாக. பின் மகனை விடுவித்து விட்டு,
“சரி… உன் அம்மா… ம்கும்… நீ நல்ல பிள்ளையாகத் தயாரானால், நீயும், நானும், அந்தப் பெண்ணும் வெளியே போகலாம்… சரியா…” என்றதும் விழிகள் மின்னத் தந்தையைப் பார்த்தான் வரோதயன்.
“எங்கேப்பா…?” சட்டென்று அழுகை மறந்து கேட்டது, குழந்தை. அதை உணர்ந்தவனாகப் பளிச்சென்று சிரித்த ஆதிபன்,
“சொல்கிறேன்…!” என்று விட்டு விரைந்து சென்று குழந்தைக்கான ஆடைகளை எடுத்துக் கொண்டு, மகனை நெருங்கி,
“வா…” என்றான். உடனே அவன் கரத்திலிருந்த சட்டையை வாங்கக் கையை நீட்டியவாறு,
“அம்மாவிடம் போகிறேன்…” என்றான் குழந்தை மழலையாய். உடனே சுர்ர் என்று வந்தது இவனுக்கு. ஆனாலும் அடக்கியவனாக,
“நீ நல்ல பிள்ளையாக என்னிடம் சட்டை மாற்றினால்தான், நாம் எங்கே போகிறோம் என்று உன்னிடம் சொல்வேன்… இல்லை என்றால் சொல்ல மாட்டேன்…!” இவனும் குழந்தையாக மாறி பிகு செய்ய, உடனே குழந்தை ஆடை மாற்றத் தயாராக நின்றது.
மல்யுத்த வீரனை அடித்து வீழ்த்திய பெருமிதத்துடன், மகனுக்கு ஆடை மாற்றி முடிக்க,
“எங்கே போகிறோம்?” என்றான் வரோதயன், ஞாபகமாய்
“வெளியே… உனக்குப் பிடித்த இடங்களுக்கு…” என்றவனை ஆவலாகப் பார்த்து,
“அதுதான் எங்கேப்பா…?”
‘அதுதானே… எங்கே?’ தலையைச் சொரிந்தவன், பளிச் என்று முகம் மலர,
“கடைக்குப் போகலாம். நிறைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கலாம்…” என்று உற்சாகமாகச் சொல்ல, உடனே,
“அம்மா வருவார்களா?” என்றான் ஆவலாக.
மீண்டும் அம்மாவா. உள்ளே புசுபுசு என்று எதுவோ எழுந்தது. அதை மென்று விழுங்கியவன்,
“ஆமாம்… அவர்களும்தான்…” என்றதும் படுக்கையை விட்டுத் துள்ளி இறங்கிய வரோதயன் ஓடிச் சென்று சிரமப்பட்டு எக்கிக் கதவின் குமிழைத் திறந்து மதிமையை நோக்கி ஓட, கதவு சத்தம் கேட்டதும், திரும்பிய மதிமை, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஓடிவந்த மகனைக் கண்டதும், சூரியனைக் கண்ட தாமரையாக முகம் மலர்ந்த போனாள்.
ஓடி வந்த மகனை அணைத்துத் தூக்கி இடையில் வைத்தவாறு அவனுடைய உச்சந் தலையில் அழுத்தமாக முத்தம் வைக்க, வரோதயனோ, அன்னையின் கழுத்தைக் கரங்களால் அணைத்தவாறு,
“அம்மா வெளியே போகிறோம்…” என்றான் குதுகலமாக. மலர்ந்து சிரித்தவள், குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு,
“ஆமாம்டா, என் வரோக்குட்டி…” என்றவாறு அவனை அங்கிருந்த மேசையில் நிற்கவைத்துச் சரியாகப் போடப்படாத ஆடைகளைச் சரியாக்க, இதைப் பார்த்தவாறே வெளியே வந்த ஆதிபனின் முகம், சற்று கறுத்துத்தான் போனது.
‘அவளோடு சேரும் அளவுக்கு மகன் அவனோடு சேர மறுக்கிறானே. எல்லாம் அந்த அணுரேகாவால் வந்தது. ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், இன்று இவனுக்கு இந்த நிலை வந்திருக்காது.’ எரிச்சலுடன் அவர்களை நெருங்கியவன்,
“சாப்பிட்டாயா?” என்றான் காட்டமாக. திடீர் என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கேட்டவனை, ஏறிட்டவள்,
“இல்லை… இன்னும் இல்லை…” என்றாள் வரோதயனிடமிருந்து தன் விழிகளை விலக்காமல்.
“சாப்பிடச் சொன்னேன்…” என்றான் சுள் என்று. அப்போதுதான் அவனுடைய குரலில் தெரிந்த கடுமையைக் கண்டு கொண்டவள், குழப்பத்துடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.
சுருங்கியிருந்த விழிகள். புருவத்தில் தெரிந்த சுளிப்பு. தடித்த உதடுகள். அவன் கோபமாக இருக்கிறான் என்பதைப் பறை சாற்ற, என்ன தவறு செய்தோம் என்று ஒரு கணம் குழம்பினாள். சாப்பிடாது இருப்பது ஒரு குற்றமா?
“இதோ… இப்போதே சாப்பிடுகிறேன்…” என்றவள் குழந்தையை விடாமல் தூக்கியவாறு சாப்பாட்டு மேசையிலிருந்த ஒரு இருக்கையை இழுத்து அதில் அமர்ந்து கொண்டே, மகனை ஒற்றைத் தொடையில் அமர்த்த சமத்தாக அமர்ந்து கொண்டான் வரோதயன்.
மகன் விழாமல் அவனுடைய, வயிற்றைச் சுற்றிக் கரங்களைப் போட்டுத் தன்னோடு அணைத்தவாறே பிரட்டுக்கு பட்டர், ஜாம் பூசி அதை இரண்டு துண்டாக வெட்டி ஒன்றை வரோதயனின் கரத்தில் கொடுக்க, குழந்தை மறுக்காமல் அதை வாங்கிக் கொண்டது.
அதைக் கண்ட ஆதிபனின் விழிகள் ஆச்சரியத்தில் மலர்ந்தன.
முன்தினம் காய்ச்சலில் அனத்தியவன் இவன்தானா என்கிற சந்தேகமே எழுந்தது.
மதிமையைக் கண்டதும், எப்படி மாறிவிட்டான். வியக்காமல் இருக்க முடியவில்லை.
இரண்டு வாய் வைத்த பின்புதான், ஆதிபன் அங்கேயே நிற்பது உறைக்க, சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்த மதிமை,
“நீங்கள் சாப்பிடவில்லை?” என்றாள்.
“ப… பசிக்கவில்லை…” என்றவன் சட்டென்று திரும்பித் தன் அறைக்குச் செல்ல, மதிமையோ அவன் கோபம் புரியாமல், தன் மகனிடம் கவனம் செலுத்தத் தொடங்கினான்.
(17) தந்தை கேட்டதற்கமைய, மகனின் படம் ஒன்றை அனுப்பி வைத்த ஆதிபன், கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். ‘ஏனோ தந்தையிடம்…
(16) மதிமையின் இருப்பிடத்திற்கு உள் வண்டி நுழைந்ததும், அதை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வெளியே வந்த ஆதிபன், மதிமை…
(14) திடீர் என்று யாரோ உலுப்புவது போலத் தோன்ற சடார் என்று தன் விழிகளைத் திறந்தான், ஆதிபன். ஒரு கணம்…
(13) தன் வாகனத்தைக் கன வேகத்தில் முக்கிய பாதையில் ஏற்றிய ஆதிபன், சற்று தூரம் சென்ற பிறகு தான் ஒழுங்காக…
(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின்…
(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா...!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன்…