Sat. Apr 4th, 2026

வெந்தும் தணியுமோ காதல் – 5/6

5

இதோ ஆதியதுலனின் வரவிற்காக வீடு அல்லோல கல்லோலப் பட்டது. தேவையில்லாதவை என்று ஒரு காலத்தில் ஆசையாக வாங்கிய பொருட்கள் அனைத்தும் எறியப்பட்டன. பொட்டுக்கும் இல்லாது தூசிகள் துடைக்கப்பட்டன.

நேயநறுமைதான், தாயின் இந்த அடாவடியில் நொந்து நூடுல்சாகிப் போனாள். எங்கிருந்தோ ஒருத்தன் வருகிறான் என்பதற்காக, அவர்களை அல்லவா அன்னை படாதபாடு படுத்துகிறாள்.

அவளுடைய அறையைச் சுத்தமாக்க முயன்ற அம்பிகாவுக்குத்தான் வியர்த்து விறுவிறுத்துப் போனது. ஏன்டா அவளுடைய அறையைக் கொடுப்பதற்கு முடிவுசெய்தோம் என்று நினைத்து நொந்தே போனார். அந்தளவுக்குக் குப்பைகளாகப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தாள் பெரியவள். இதில் தூசு கூட ஆங்காங்கே அள்ளிக் கொட்டிக் கிடந்தது.

“எப்படி இந்த அறையில் ஒழுங்கா மூச்செடுத்துப் படுத்தாய். கடவுளே… இதில் உனக்கு மூச்சிழுப்பு வேறு இருக்கிறது… கொஞ்சமாவது பொறுப்பாக நடந்துகொள்ள மாட்டாயா? எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், அறையைச் சுத்தம் செய் என்று. கேட்டாயா?” தாய் திட்டத் திட்ட,

“இதனால்தான் என் அறையைக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னேன். யாராவது கேட்டீர்களா?” நகத்திற்கு வர்ணம் தீட்டியவாறு முன்னறையில் இருந்து குரல் கொடுக்க, அறையிலிருந்து எட்டிப் பார்த்துத் தன் மகளை முறைத்தார் அம்பிகா.

அவளோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல தன் காரியத்தில் சிரத்தையாக இருக்கத் தலையில் அடித்துக் கொண்டார் அம்பிகா.

“எல்லாம் உங்கள் அப்பாவைச் சொல்ல வேண்டும். செல்லம் கொடுக்கலாம் தப்பில்லை. ஆனால் குட்டிச் சுவராகப் போகும் அளவுக்குச் செல்லம் கொடுக்கக் கூடாது. நாளைக்கு திருமணமாகி ஒரு வீட்டில் எப்படிக் குப்பை கொட்டப் போகிறாய்?” தாய் திட்ட, அவளோ தலையை மட்டும் நிமிர்த்தி தாயைப் பார்த்துவிட்டு,

“ஏன்… கட்டிக்கொள்ளப் போகும் அடிமை இதை யெல்லாம் செய்யாதா?” என்றாள் அலட்சியமாக.

“செய்வான் செய்வான்… நீ வாங்கிப் போடும் குப்பைகளை அள்ளிப் போடத்தானே உன்னைத் திருமணம் செய்யப்போகிறான்…” எரிச்சலுடன் முனங்கியவாறே, அனைத்தையும் சுத்தப்படுத்தி, நிமிர்வதற்குள் அம்பிகா ஒரு வழியாகிவிட்டார்.

கொஞ்சமாய் உழைத்த காசை முழுசாய் தேவையற்ற பொருட்களில் விரயமாக்கி விட்டாள் என்கிற ஆதங்கமும் கோபமும் மூட்டை மூட்டையாக இருந்த குப்பைப் பைகளைப் பார்த்தபோது வந்தது. காலணிகள் மட்டும் இருபது சோடிகள். தொப்பி எண்ணுக்கணக்கில்லை. சட்டைகள், சொல்லி வேலையில்லை. தலைக்குக் கட்டும் ‘ஹெயர் பான்ட்’ கிலோக் கணக்கு. பேசாமல் நேரிழையை இவள் அறைக்கு அனுப்பிவிட்டு அவள் அறையை ஆதிக்குக் கொடுத்திருக்கலாம். என்ன செய்வது, இந்த அறைதான் சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருந்தது. கழிவறையும் பக்கத்தில். ஆதியதுலனுக்கும் அது வசதியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் சுத்தப்படுத்துவதே இமயமலையை பிரட்டி எடுப்பது போல இருக்கும் என்று யோசிக்கவில்லை.

இவளுக்கோ தாய் திட்டத் திட்ட அந்த வீட்டிற்கு வர இருக்கும் விருந்தினன் மேல்தான் கோபம் வந்தது. அவனை யார் இங்கே வரச்சொன்னா? அவனால்தானே வீடு சுத்தமாக்கவேண்டியிருக்கிறது. அவனால்தானே அம்மா திட்டுகிறார்கள். சே… எங்கேயோ இருந்து எங்கள் நிம்மதியைக் கெடுக்க என்று ஒருத்தன் வருகிறானே. இவன் கனவில் பேய் வர, பூதம் வர, தூக்கமே இல்லாமல் பிடரியில் கால் பட ஓடவேண்டும்… என்று சபித்தவாறு தன் கை வண்ணத்தில் மின்னும் நகங்களைச் சரிபார்த்தாள்.

அன்றுதான் ஆதியதுலன் கனடா வருவதாக இருந்தது. விமானம் மதியம் இரண்டு மணிக்குத் தான் தரையிறங்கும் என்பதால், தேவசகாயமும், அம்பிகாவும் பரபரப்புடன் அவனை அழைத்து வருவதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார்கள்.

இங்கே நேயநறுமையோ தன் அறையைத் தான் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். படு சுத்தமாக இருந்தது அறை. எப்போதாவது அம்பிகா பொறுக்க முடியாமல் அவளுடைய அறையை சுத்தம் செய்துவிட்டு அதற்கென்று அர்ச்சனையாகக் காதில் இரத்தம் வர வைத்துவிட்டுச் செல்வார். இவளும் எருமையின் மீது மழை கொட்டிய கணக்காக, அவர் திட்டைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் சுத்தமான அறையில் துள்ளிக் குதிப்பாள். அந்த சுத்தமெல்லாம் மிஞ்சி மிஞ்சிப் பேனால் ஒரு கிழமைக்குத்தான் தாக்குப் பிடிக்கும். அதற்குப் பிறகு பழைய குருடி கதவைத் திறவடிதான். கடைசியாக அம்பிகா பொறுமையிழந்து அவளுடைய அறைக்குள் வருவதையே குறைத்துக் கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பளிச்சிட்ட அறையைக் கண்டதும் ஏக்கம் வந்தது.

ம்… அந்த சுத்தமான அறையில் தங்க அவளுக்கு கொடுத்து வைக்கவில்லையே. கொஞ்ச நாட்களுக்கு என்றாலும் கூட அந்த அறை அவளுடையது அல்ல. ஏனோ அந்த அறையை விட்டுக் கொடுக்க மனம் தயங்கியது.

“ஷ்… அக்கா… என்ன இது… வெறும் அறை… இதற்குப் போய் இப்படிக் கவலைப்படுகிறீரே?” தங்கை கண்டிக்க, அவளைக் கோபமாகப் பார்த்தாள் நேயநறுமை.

“வெறும் அறைக்குக் கவலைப்படுகிறேனா…? இந்த அறைதான் என்னுடைய உலகமே. தவிர எனக்கு உரிமையான எதையும் அத்தனை சுலபத்தில் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று உமக்குத் தெரியும் தானே…”

“கமான் அக்கா…! ஆதி நிரந்தரமாகவா இங்கே தங்கப் போகிறார்? கொஞ்ச நாட்களுக்குத்தானே…?” என்றாள் இளையவள் கனிவுடன்.

“ஆதியா…? என்னடி…? பெயரை இந்தளவு சுருக்கி கூறும் அளவுக்கு அத்தனை நெருக்கமோ?” உதடுகளைச் சுளுக்கினாள் பெரியவள்.

“என்ன பொறாமையா?” கிண்டலாக இளையவள் கேட்க முறைத்தாள் நேயநறுமை.

“என்னது…? நான் பொறாமைப்படுகிறேன்…? அதுவும் அந்தாளுடைய பெயரைச் சுருக்கிச் சொல்வதால்…? என்ன கிண்டலா?” எரிச்சலுடன் கேட்க, சிரித்தாள் இளையவள்.

“ப்ச்… அவர் நீர் நினைப்பது போல இல்லைக்கா. மிக மிக நல்ல மாதிரி. பேசப் பழக எல்லாம் அருமையாக இருப்பார். நீர்தான், அவரின் பெயரை கேட்டாலே ஓட்டம் எடுக்கிறீர் உமக்கு ஒன்று தெரியுமா? சில நேரம் ஆதியோடு இரவு பன்னிரண்டு மணி வரை இணையத்தில் அரட்டை அடிப்பேன். ஒரு போதும் அவர் இரட்டை அர்த்தத்தில் என் கூடப் பேசியதில்லை. அதிகமான உரையாடல்கள் பாடம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். இல்லை என்றால், ஆவணப்படங்கள் சார்ந்த உரையாடலாக இருக்கும். என்னையும் அத்தகைய படங்களைப் பார் என்று ஊக்குவிப்பார். சில வேளைகளில், நான் கூட ரசித்துப் பார்த்த காதல் படங்கள் பற்றிப் பேச முயன்றால் கூட, அந்தப் பேச்சை உடனே முறித்து, இந்த வயசில் உனக்கு எதற்கு இத்தகைய திரைப்படங்கள்? மரியாதையாக உன் வயதுக்குத் தகுந்த படங்களைப் பார் என்று திட்டுவார்… எப்போதுமே அவர் கூடப் பேசுகிற போது மனதில் எந்த விதமான சஞ்சலமும் தயக்கமும் வந்ததில்லை தெரியுமா. நெருங்கிய ஒரு நண்பரோடு, பக்கத்தில் இருந்து எப்போதும் நம்மை பாதுகாக்கும் அன்பான உறவோடு பேசும் உணர்வுதான் எழும். நீர் பழகிப் பார்த்திருந்தால் நான் சொல்வது புரியும். ஆனால் நீர்தான் அவரின் பெயரைக் கேட்டாலே ஓட்டம் எடுக்கிறீரே… நம்பும்கா… அவர் கூடப் பேசிப் பாரும். அப்போதுதான் நான் என்ன சொல்கிறேன் என்று உமக்குத் தெரியும்…”

“ஐயோ சாமி… எனக்கு ஒன்றுமே புரிய வேண்டாம்… இந்த விசரனால்தான், அம்மா எங்களைத் திட்டுவார்கள். அதை நினைத்தாலே கோபம் சுர் என்று ஏறுகிறது…” மூத்தவள் கோபமாய் அழகிய உதடுகளைச் சுழிக்க,

“நீர்தான் இப்படிச் சொல்கிறீர். ஆனால் ஆதிக்கு உம் மீது நிறைய அன்பு இருக்கிறது. எப்போது அவர் கூடப் பேசினாலும் அதிகமாக உம்மைப் பற்றித்தான் கேட்பார். நீர் என்ன செய்கிறீர் ஏது செய்கிறீர், என்று அக்கறையாக அறிந்து கொள்வார். நான் செய்வதையெல்லாம் கேட்டுச் சிரிப்பார்…” என்று தங்கை அடுக்க, அவளை அலட்சியமாகப் பார்த்தாள் பெரியவள்.

“ம்கும்… அவர் என்னைப் பற்றி அறிந்துகொள்ளவில்லை என்றுதான் நான் கவலைப்படுகிறேனாக்கும்? போவியா…” என்றவள் மீண்டும் தன் அறையைப் பார்த்துப் பெருமூச்சொன்றை விட்டாள். அதைக் கண்ட நேரிழைக்கு மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது.

அவளுக்குக் கூடப் பிறந்தவளைப் பற்றித் தெரியாதா? சுலபத்தில் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவள். ஒன்று பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான். அதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது. அதே நேரம், ஒன்றின் மீது ஆசை வைத்துவிட்டால், பிடிவாதமாக இருந்து அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வாள். அப்படிப் பட்ட குணாதிசயம் உள்ள ஒருத்தி. சுலபத்தில் மாறிவிடுவாளா என்ன? சிரமம்தான்.

“நீர் மாறுவீர் அக்கா. நீர் மாறாவிட்டாலும், ஆதியதுலனின் நடந்து கொள்ளும் முறை உம்மை நிச்சயமாக மாற்றும். அவர் மீது பைத்தியம் கொள்ளச் செய்யும்…” இளையவள் உறுதியாகச் சொல்ல, அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தவள்,

“என்னைப் பற்றித் தெரிந்தும் இப்படிப் பேசுகிறாயே நேருமாமா…?” என்றாள் கிண்டலாக. அதைக் கேட்டுத் தோள்களைக் குலுக்கிய நேரிழை,

“உண்மைதான்…! உமக்குத்தான் பிடித்த முயலுக்கு மூன்று காலாயிற்றே. நான் சொல்வதை நம்ப மாட்டீர்தான். ஆனால் வீடு தேடி வரும் நபரை மரியாதைக் குறைவாக நடத்துவது நம் பழக்கம் இல்லையே… பிளீஸ்… எக்காரணம் கொண்டும் அவர் மனதை நோகடிப்பது போலப் பேசிவிடாதீர்… ஏன் என்றால் அவர் தனக்கான சுயமரியாதையை மிகவும் எதிர்பார்ப்பார். அதை யாராவது சீண்டினால், வேறு மாதிரி நடந்துகொள்வார். தயவு செய்து அம்மா அப்பாவுக்காக…” கெஞ்சலாகக் கேட்ட தங்கையைக் கோபமாகப் பார்த்தாள் நேயநறுமை.

“ப்ச்… யாரோ ஒருத்தனுக்காக என் பழக்க வழக்கத்தையும், குணாதிசயத்தையும் மாற்ற முடியாது… சாரி…” என்றாள் கறாராக.

“யாரோ எவனோ என்று ஏன் நினைக்கிறீர்? நம்முடைய குடும்பத்தில் ஒருவன் என்று நினையுமேன்… எப்படியாக இருந்தாலும் நம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அவர்கள் நிறைய உதவி செய்தி இருக்கிறார்கள். அதற்காகவாவது நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டுமே…”

“அடப் போடி…! வந்துவிட்டாள் புத்தபிரான் எனக்குப் போதிக்க… எதற்கெடுத்தாலும் இதையே சொல்லுங்கள்… இதோ பார் நேருமாமா, அந்த ஆளுக்காக எல்லாம் என்னால் என்னை மாற்ற முடியாது. வேண்டும் என்றால் ஒன்று செய்கிறேன். அந்தாள் பக்கமே இல்லாமல் தள்ளி நிற்கிறேன். ஆனால் ஒன்று, அவராக என் வழியில் குறுக்கிட்டால், அதன் பிறகு நானும் சும்மா இருக்க மாட்டேன்… சொல்லிவிட்டேன்…” சொல்ல அதுவரை தம் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியே விட்டாள் நேயநறுமை.

நேயநறுமை சொன்ன சொல் காப்பாற்றுவாள். அந்த நிம்மதியோடு, ஆதியதுலனின் வரவுக்காகக் காத்திருக்க, கதவின் பக்கமாக ஓசை கேட்டது. முகத்தில் மகிழ்ச்சி பொங்க,

“வந்துவிட்டார்கள்…” சொன்ன நேரிழை, நேயநறுமையின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு, ஆர்வத்தோடு கதவை நோக்கிச் சென்றாள்.

அவர்கள் திறந்து உள்ளே வரும் வரைக்கும் காத்திருக்கப் பொறுமையின்றி, விரைந்து சென்று கதவின் லாக்கை விடுவித்து திறக்க, புன்னகையுடன் முன்னால் நின்றிருந்தார் தேவசகாயம். அவர் உள்ளே வரத் தொடர்ந்து அம்பிகாவும் உள்ளே வர, நேரிழையோ ஆவலோடு ஆதியதுலன் எங்கே என்று பார்த்தாள்.

கூடவே அவள் பின்னால் நின்றிருந்த நேய நறுமையும், அலட்சியமாக வெளியே பார்த்தாலும் அவளையும் மீறி உள்ளத்தின் ஒரு மூலையில், சிலிர்ப்புத் தோன்ற, மயிர்க்கால்கள் எழுந்து நிற்க வாசலை நோக்கினாள்.

கூடவே உடலும் குளிர்ந்து போக, குழப்பத்தோடு குளிர்ந்த கரங்களைத் தேய்த்து விட்டவளுக்கு, தான் ஏன் ஒரு மாதிரி உணர்கிறோம் என்று சுத்தமாகப் புரியவில்லை.

அந்தக் குழப்பத்தோடே, வாசலை ஏறிட்டுப் பார்க்க, அங்கே வந்துகொண்டிருந்தவனைக் கண்டதும், சுருங்கியிருந்த விழிகள், சட்டென்று மொட்டவிழ்ந்த மலராக மெல்ல மெல்ல விரிந்துக் கடைசியில் வியப்பில் பெரிதாக மலர்ந்து போயின.

6

முதலில் தங்கையின் பின்னால் நின்று அலட்சியமாகத்தான் வந்தவனைப் பார்த்தாள். ஆனால், பார்த்தவளுக்குத் தன் விழிகளை அத்தனை சுலபத்தில் விலக்க முடிந்திருக்கவில்லை.

ஈழத்திலிருந்து வருபவன்தானே, கொஞ்சம் கரிய தேகத்தோடு, காய்ந்து போன கருவாடாக, மெலிந்த உருவத்தோடு, நராங்கலாகச் சுமார்மூஞ்சிக் குமாரு போல வருவான் என்று நினைத்திருக்க, அவளுடைய அலட்சியக் கற்பனையைப் பொய்யாக்கியவாறு அத்தனை கம்பீரமாக, உதட்டோரத்தில் மெல்லிய புன்னகையுடன் கிரேக்கச் சிலையென ஆணழகனுக்குரிய அத்தனை அம்சங்களுடன் கண் முன்னால் நின்றிருந்தான் அவன்.

அவளை விட உயரமாக, மிக மிக உயரமாக இருந்தான். அவனை அண்ணாந்து பார்த்தவளின் தலையோ அவனுடைய மார்புக் குழியளவில்தான் இருந்தது. ஐயோ இந்த அம்மா என்னை ஏன் இத்தனை குள்ளமாகப் பெற்றார்கள்? பெற்றதுதான் பெற்றார்கள் ஆறு அடிக்குப் பெற்றிருக்கலாமே. வெறும் ஐந்தடி நான்கங்குல உயரம், அவனுடைய ஆறடி நான்கு அங்குல உயரத்திற்கு எப்படிப் போதும்? அந்த நிலையிலும் அவளுடைய உள்ளுணர்வு ஏக்கத்தோடு குறைபடாமலில்லை.

பொது நிறத்திற்கும் சற்று குறைந்த நிறம்தான். ஆனால் அவனுடைய அந்த உயரத்திற்கு அந்த நிறம் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தது. அதுவும் அவன் அணிந்திருந்த கழுத்தை மூடிய வெண்ணிற கம்பளியாடை அவன் உடலோடு சிக்கெனப் பொருந்தி, அவனுடைய உருண்டு திரண்ட திமிறும் உடலை அப்பட்டமாக எடுத்துக் காட்டிக் கொண்டு இருந்தது. இதில் அவன் அணிந்து வந்த தடித்த மேலாடையைக் கழற்றி, மடித்திருந்த ஒற்றைக் கரத்தில் போட்டிருந்தான். அதனால் அந்தக் கையின் திரட்சி இன்னும் ஒரு படி மேலாகத் தெரிய, அங்கே பதிந்த அவளுடைய விழிகளோ அங்கிருந்து விலக மறுத்தன. அகன்ற தோள்களும், இரு சிகரங்களைப் பொருத்தி வைத்துவிட்ட இருதலைப் புஜங்களும், ஒட்டிய ஆடையை மீறித் தெரிந்த இறுகிய ஆறடுக்கு வயிறும் என்று, அவனுடைய அந்த உருவம், எந்தக் கன்னியையும் சுலபமாகவே அவன் பக்கம் இழுத்து விடும். அப்படியிருக்கையில், இரசனை கொண்ட நேயநறுமையை, அந்த ஆணழகனின் உருவம் கவர்ந்திழுக்காமல் விட்டுவிடுமா என்ன?

இது போதாதென்று அடர்ந்த கரிய சுருள் மயிர்க் கற்றைகள், சற்றுக் கலைந்து அவனுடைய பரந்த நெற்றியை மறைத்திருக்க, அதற்குக் கீழே அடர்ந்து தடித்த நீண்ட இமைகளும், அதற்குத் தோதாய் மாறன் விட்ட அம்பாய் துளைத்தெடுக்கும் காந்த விழிகளும், அந்த விழிகளில் தெரிந்த கூர்மையும், போர்வீரனின் கரத்தில் உள்ள ஈட்டியாய் நிமிர்ந்து நின்ற கூரிய நாசியும், கச்சிதமாக நறுக்கிவிடப்பட்ட மீசை தாடியும், அதற்கு மத்தியில் சிகரட்டைக் கண்டறியாத தெளிந்த உதடுகளும் என்று மொத்தமாய் அவளைச் சுருட்டி எடுக்கத் தயாராக நின்றிருந்தான் அந்தக் காளை.

‘ஐயோ இவன் ஏன் இப்படி இருக்கிறான்?’ தன்னிலை கெட்டு அவனையே வெறித்தவாறிருக்க, ஆட அசைய மறந்து நிற்கும் தன் சகோதரியைக் கண்டு வியந்த நேரிழை, அவளைச் சுயத்துக்கு வரவழைக்கும் நோக்கோடு தமக்கையின் தோளில் இடிக்க, அதுவரை எங்கோ ஒரு உலகத்தில் சஞ்சரித்திருந்தவள் திடுக்கிட்டுப் பூலோகத்தில் வந்து விழுந்தாள்.

அப்போதுதான் அவனைத் தான் வைத்த விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதே அவளுக்குப் புரிந்தது. அசடு வழிந்தவள்,

“ஹா… ஹாய்…” என்றாள் சிரமப்பட்டுத் தன் குரலில் வழியும் அசடை மறைக்க முயன்றவாறு.

அவனோ, அவள் தன்னை ஆவென்று வெறித்துப் பார்த்ததைக் கண்டு கொண்டான் போல. தன் ஒற்றைப் புருவத்தை ஒரு விநாடி மேலேற்றிப் பின் இறக்கி,

“ஹாய்…” என்றான் பதிலுக்கு மென் புன்னகையுடன்.

அடி ஆத்தி, இது நிஜமாகவே இவனுடைய குரல்தானா? எத்தனை கம்பீரமாக, அழுத்தமாக, ஆளுமையாக, முக்கியமாக ஆண்மை ததும்பும் குரலாய் காதில் ஒலிக்கிறது! ஒரு வேளை எனக்கு மட்டும்தான் இப்படி ஒலிக்கிறதா என்ன? குழம்பியவளுக்கு இன்னும் இதயம் அவள் நிலைக்கு வரவில்லை.

‘அடச்சே! முன்னாடியே இவன் நிழற்படத்தைப் பார்த்திருந்தால் இப்படிக் காணாததைக் கண்டது போல ஆவென்று வாய் பிளந்திருக்க மாட்டேனே. அவனைப் பிடிக்காத ஒரே காரணத்திற்காக, மூன்று குரங்குகள் போல, அவன் சார்ந்த விடயங்களைப் பார்ப்பதையும், கேட்பதையும், பேசுவதையும் தவிர்த்துவிட்டு இப்போது கண்முன்னே கண்டதும், காணாததைக் கண்டது போல மலைத்து நிற்கிறேன். இது மட்டும் நேரிழைக்குத் தெரிந்தால், கிண்டலடித்தே கொன்றுவிடுவாள்.

தவித்திருக்க, அவளுடைய காதோரம் குனிந்த நேரிழை,

“என்ன… அப்படி அவரை வைத்த விழி எடுக்காமல் பார்க்கிறீர்? என் ஆள் செமையாக இருக்கிறார் தானே…?” சத்தம் வெளிவராமல், சகோதரிக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுக்க, அவளுடைய ‘என் ஆள்’ என்கிற சொல்லில் திடுக்கிட்டவள், திரும்பித் தன் தங்கையைப் பார்த்து முறைத்தாள்.

“உன் ஆளா?” என்றாள் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில். அந்தக் குரலில் நிச்சயமாக எரிச்சல் இருந்தது.

“ம்… என் ஆள்…” என்றாள் இவள் குறும்பாக. தங்கையைக் கோபமாக முறைத்துவிட்டு,

“என்ன, கிரஷ்ஷா…?” என்றாள் உள்ளே எழுந்த ஒரு வித பொறாமையில். அதைக் கேட்டு அழகாகச் சிரித்தவள்,

“மேபி… கம்பீரமாகத் திரைப்பட நடிகர் போல இருக்கிறார். புத்திசாலியாக வேறு பேசுகிறார். நிறையப் படித்திருக்கிறார். ஒரு பெண்ணுக்கு இதை விட என்ன வேண்டும்?” இளையவள் சிலாகித்துக் கூற.

“நேரு… இப்போதே அம்மாவிடம் சொல்லவா?” என்றாள் எரிச்சலுடன்.

“ஐயோ…! சும்மா உல்லுலாயிக்கு அக்கா… நாங்கள் நல்ல நண்பர்கள். அதைத்தாண்டி எதுவும் இல்லை…” என்று சொன்னாலும், அவளுடைய விழிகளும் அந்தப் புதியவனை ஆசையோடு பார்க்கவே செய்தன.

அந்த விழிகளில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு கொண்ட நேயநறுமைக்கு உள்ளே எதுவோ எரிந்தது. அவள் இவனைச் சிலாகித்துப் பேசினால், நான் ஏன் எரிச்சல் படுகிறேன். ஒரு விநாடி குழம்பியவள், மீண்டும் தன் கவனத்தை அந்த உயர்ந்தவனிடம் செலுத்தினாள். அவனோ விழிகளில் சிரிப்பு மின்ன இன்னும் இவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அந்தப் பார்வையின் வீரியத்தில், தடுமாறியவள், அதற்கு மேல் அவனை ஏறிடும் சக்தியில்லாமல், வாழ்க்கையில் முதன் முறையாகத் தலையைக் குனிய, அதைக் கண்டு தன் வரிசைப் பற்கள் தெரிய அழகாகப் புன்னகைத்தான் ஆதியதுலன். பின் திரும்பி நேரிழையைப் பார்த்து, ஜாக்கட் ஏந்தாத கரத்தை விரித்து,

“ஹே… ஏஞ்சல்… ஹவ் ஆர் யு…” என்றான் அன்போடு. அதைக் கண்டு முகம் மலர்ந்தவள், அவன் விரித்த கரத்திற்குள் புகுந்து அவனைப் பக்கவாட்டாக அணைத்து விடுவித்து,

“ம்…! எனக்கென்ன நீங்கள் வருகிறீர்கள் என்கிற மகிழ்ச்சியில், துள்ளித் திரிகிறேன்…” என்றாள் குதுகலமாக.

அவர்களின் அந்த நெருக்கத்தைக் கண்ட நேயநறுமைக்கு உள்ளே எதுவோ தவித்தது. அவளையும் மீறிக் கோபம் பொங்கி வந்தது. அது என்ன ஏஞ்சல் என்பது? அவளுக்கென்று பெயர் இல்லையா என்ன? இது என்ன? அவன் கரத்தை நீட்டியதும் கொஞ்சம் கூடத் தயங்காமல், ஓடிப்போய் அவனுடைய கரத்திற்குள் புகுந்து கொண்டாள்? இது என்ன பழக்கம்? அம்மா இப்படியா சொல்லிக் கொடுத்தார்கள்’ அவளையும் மீறி மனது புகைந்தது.

இங்கே, நட்பு வட்டத்தில் எப்போதும் ஆண் பெண் என்கிற பேதம் இருந்ததில்லை. இப்படியான மெல்லிய அணைப்பு, தொடுகை எல்லாம் சர்வ சாதாரணம்தான். ஆனால் பழமையில் ஊறிப்போன அம்பிகா, எந்த நட்பாக இருந்தாலும், ஆண் என்றால், ஒரு அடி தள்ளி நின்றுதான் நட்பைப் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்று சிறு வயதிலிருந்தே போதித்து வளர்த்ததால், எந்த உயிர் நட்பாக இருந்தாலும், நேரிழை ஒரு அடி தள்ளித்தான் நிற்பாள். ஆண் நண்பர்களைத் தொட்டுப் பேசி அவளுக்குத் தெரியாது. ஆனால் நேயநறுமைதான் வேறு இரகமாயிற்றே. தாயுடைய அந்தப் போதனை எதுவும் இவளுடைய தலைக்குள் ஏறியதில்லை. தன் தோழர்களின் பிறந்த நாட்களுக்கு, நல்ல நாள் பெரு நாளுக்கெல்லாம், அவர்களை அன்பாய் அணைத்து வாழ்த்துச் சொல்வாள். காரணம், இவளுக்கு ஆண் பெண் பேதம் எதுவும் தெரியாது. ஆணின் உடற்கூறு வேறு, பெண்ணின் உடற்கூறு வேறு என்றெல்லாம் அவள் புத்திக்கு உறைத்தது இல்லை. நீயும் மனுஷன், நானும் மனுஷன். நட்பாக இருக்கிறோமா வா. இதுதான் நேயநறுமை. ஆனால் முதன் முறையாக, அவன் ஆண். இவள் பெண் என்கிற பேதம் இதயத்தில் வித்தாய் விழ, நேரிழை அவனை அணைத்தபோது ஒருவித ஒவ்வாமை, அல்லது பொருத்தமின்மை அவளை வதைத்தது. கூடவே அவர்களின் நெருக்கத்தைக் கண்டு, உள்ளம் தவிக்கவும் செய்தது.

‘எந்த ஆணையும் தொட்டறியாத தங்கை, இவனைத் தொட்டுப் பேசுகிறாள் என்றால், இருவருக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பா? இல்லை அதையும் தாண்டி வேறு ஏதுமா?’.

‘சீ.. சீ.. இருக்காது. அவள்தான் சொன்னாளே இருவருக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பென்று. என்னிடம் பொய் சொல்லவேண்டிய அவசியம் அவளுக்கு என்ன வந்தது?’ தன்னையே சமாதானம் செய்தவளுக்கு, ஆதியதுலன் நேரிழையிடம் அக்கறையாகப் பேசுவதும், அதற்கு அவள் புன்னகையுடன் பதில் சொல்வதையும் கண்டு உள்ளே எதுவோ கிடந்து முறுக்கிக் கொண்டது.

‘ஏன் நேரிழை பேசுவது போல என்னால் அவன் கூட இத்தனை சகஜமாகப் பேச முடியவில்லை? ஏன் அவனுடைய முகத்தைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை? எதுவோ என்னைத் தடுக்கிறதே! என்ன அது? இது என்ன புது வித அனுபவம்? ஏன் என்னுடைய இதயம் இப்படிப் படபடக்கிறது? துடிக்கிறது? எனக்கு என்னதான் ஆயிற்று? ஆயிரம் கேள்விகள் மனதில் அவளைக் குடைந்தெடுக்க, அவனோ நேரிழையிடம் பேசிவிட்டு, அவளை விடுவித்து, மீண்டும் இவள் பக்கமாகத் தன் கவனத்தைத் திருப்பினான்.

அவனுடைய கூரிய விழிகள், அவளைத் தலை முதல் பாதம் வரை அளவிட்டன. அதைக் கண்டவளுக்கு இதயம் படபடத்தது.

‘ஐயோ… நன்றாக இருக்கிறோமா? காலையில் கூட கண்களுக்கு மை போதாமல் இருந்தது போலத் தோன்றியதே… பிடிக்காத ஒருத்தன் வருகிறான் என்று, அலட்சியமாகத் தயாரானது தவறாகப் போயிற்று. மேலாடையின் கழுத்துப் பக்கம் இன்னும் கொஞ்சம் கீழிறங்கியிருக்கலாமோ? இடைப் பகுதி அவனுக்கு விருந்தாகத் தெரிகிறதா? இன்று லெகின்ஸ் போட்டிருக்கலாம். போட்டிருந்தால் கால்கள் இன்னும்

கவர்ச்சியாகத் தெரிந்திருக்கும்…’ அந்த ஒரு கணத்தில் மனது அவனைக் கவராமல் விட்டு விடுவோமோ என்கிற தவிப்பில் படபடக்க, அவனோ இறுதியாக அவளுடைய விழிகளில் தன் விழிகளை நிலைக்கச் செய்தான்.

“ஹாய்… நீ எப்படி இருக்கிறாய்?” அவன் மென்மையாகக் கேட்க, அவனுடய அந்தக் குரல் கொடுத்த மென் ஒலியில் ஒரு கணம் சிலிர்த்து அடங்கினாள் நேயநறுமை.

அத்தனை மயிர்க் கால்களும் எழுந்து நிற்க, அதுவரை மந்தமாகிக் கிடந்த உயிரணுக்கள் அனைத்தும், உயிர் பெற்று நாலாபக்கமும் சிதறியோட, இரத்தோட்டமோ அதற்கேற்ப உடல் முழுக்க வேகமாகப் பயணிக்க, அதன் தாக்கத்தில் அடி வயிற்றில் இன்பமாய் ஒரு வலி தோன்ற, அதன் விளைவாய், அவளுடைய வெண்ணிற முகம் சிவந்து போக, மூச்சுக் காற்றோ சூடாக வெளிப் பட, அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்த நேரம், அவள் பின் மண்டையில் பலமாக ஒரு கொட்டு விழுந்தது.

அதுவரையிருந்த மாய வலை சட்டென்று அறுந்து போகக் கொட்டு விழுந்ததால் வலித்த மண்டையைத் தடவிக் கொடுத்தவாறு திரும்பிப் பார்த்தாள்.

தாய்தான் இவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். தாய்க்கு இதே வேலையாகப் போயிற்று. இவளை வைத்துச் செய்யாவிட்டால் தூக்கம் கூட வராது போல. முகம் சுருங்கியவள்,

“மா… வலிக்கிறதுமா…! இப்போது எதுக்குமா என்னைக் கொட்டினீர்கள்?” சிணுங்கியவளுக்குத் தாய் மீது கோபம் வந்தது.

கண் முன்னாடி அழகான, கம்பீரமான ஆண் நிற்கிறான். அவனுக்கு முன்பாக, இப்படித் தலையில் கொட்டி மானத்தை வாங்கி விட்டார்களே. ஐயோ, அவளைப் பற்றி அவன் என்ன நினைப்பான்? அவமானத்தில் முகம் சிவந்து போனது அவளுக்கு.

ஆனால் அம்பிகாவுக்கு அது எதுவும் உறைக்க வில்லை. பதிலுக்கு மகள்களை முறைத்தவாறு.

“ஏன் கொட்டினேனா? வீட்டுக்கு வந்த பிள்ளையை வா என்று ஒரு வார்த்தை சொல்லாமல் வாசலில் நிற்கவைத்து, கபடி ஆடிக்கொண்டிருக்கிறாயே..? உன்னை என்னதான் செய்வது?” அன்னை முறைக்க, அப்போதுதான் அவனை உள்ளே விடாமல் வாசலை மறைத்தாற்போல நிற்பதே நேயநறுமைக்கு உறைத்தது.

“ஊப்ஸ்… ஹீ… ஹீ… சாரி…” சங்கடமாக நெளிந்தவள், பின் தங்கையைப் பார்த்து முறைத்து, ‘நீயாவது சொல்லியிருக்கலாம் அல்லவா?’ என்பது போலப் பார்த்துவிட்டு வழிவிட்டு விலகிக் கொள்ள,

“நோ வொரிஸ்…” என்றவாறு பெட்டியோடு உள்ளே வந்தான்.

வந்தவன் கொஞ்சம் களைத்துப் போயிருந்தான் போல, அவளைக் கடந்த போது தாக்கிய அவன் தேகத்தின் சூடும், கூடவே வியர்வையின் வாசனையும் அதனோடு இணைந்த ஆண்மையைத் தூக்கிக் காட்டும் வாசனைத் திரவியத்தின் மணமும், அவளை ஒரு கணம் திணறடிக்க, தன்னை மறந்து விழிகளை மூடித் தன்னை உராய்ந்து செல்லும் அவன் விட்டுச் சென்ற வாசனையை ஆழ மூச்செடுத்து உள்ளே நிரப்ப முயன்றாள்.

அந்த ஆண்மையின் வாசனையை நுகர்ந்தவளுக்குள் பெண்மை சட்டென்று பூத்துக் குலுங்கியது. அடிவயிற்றிலும் மார்புக் கூட்டிலும் புதுவிதமான பிரளயம். அது இதம் பரப்பி அவள் புத்தியில் அடிக்க, உட்சுரப்பிகள் தன் இஷ்டத்திற்குத் தாறுமாறாக உடல் முழுக்கப் பரவத் தொடங்கியது. அதில் தன்நிலை கெட்டுப் போனாள் அந்தப் பேதையவள். என்ன இது விந்தை? யாருக்காவது பிரளயத்தைப் பிடிக்குமா என்ன? ஆனால் இவளுக்குப் பிடித்துக் கொண்டதே?

தன்னை மறந்து இலயித்திருக்க, அவளை நெருங்கிய நேரிழை, அவளுடைய தோளைத் தன் தோளால் இடித்து,

“என்னக்கா…? நம்மாளை சைட் அடிக்கிங்கா…? அடியும் அடியும்… எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை…” என்றாள் கிண்டலாக. அதைக் கேட்டு அதிர்ந்தவள்,

“சைட் அடிக்கிறேனா…? சீ… சீ… என்ன உளறல் இது?” விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலக் கூற, பெரியவளின் தோளில் தன் முழங்கையை வைத்து அதில் தன் தலையைத் தாங்கியவாறு, ஓய்வாக நீள் இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியதுலனைப் பார்த்து இரசித்தவாறே,

“ஆள் செமையாக இருக்கிறார் தானே…?” என்றாள் நேரிழை, இரசனையும் குறும்புமாய்.

அதைக் கேட்டதும் சட்டென்று கோபம் வந்தது நேயநறுமைக்கு. தன் தங்கையைப் பார்த்து முறைத்தவள், தன் தோளில் அழுத்திக் கிடந்த அவளுடைய கரத்தை ஒரு தட்டில் தள்ளி விட்டு,

“உம்முடைய இரசனை ஏன் இப்படி இருக்கிறது. அப்படி ஆஹா ஓஹோ என்று வாய் பிளக்கும் அளவுக்கு இல்லை…” என்றாள் அலட்சியமாக. அதைக் கேட்டதும் வாயைப் பிளந்தாள் நேரிழை.

“என்னது…? ஆதி பார்க்க நன்றாக இல்லையா…? அக்கா எனக்கு என்னவோ உம்முடைய கண்ணில் பிரச்சனை என்று தோன்றுகிறது. ஒரு வாட்டி கண் வைத்தியரிடம் போய் காட்டும்…” என்றவள், உள்ளங்கைகளை இடது மார்பின் மீது அழுத்தி வைத்து,

“ம்… எத்தனை அழகாகக் கம்பீரமாக, கொள்ளை கொள்ளும் அழகில் இருக்கிறார். இணையத்தில் அவரைப் பார்த்ததை விட, நேரில் பார்க்கும் போது டக்கராக இருக்கிறார்…” சொன்னவளை நிமிர்ந்து கொல்லும் வெறியுடன் முறைத்தாள் நேயநறுமை.

இவள் எப்படி அவனை அக்குவேறு ஆணி வேறாக இரசிக்கலாம். அது தப்பாயிற்றே. ம்கூம் அந்த இரசனையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். அவசரமாகப் புத்தி சொல்ல,

“உம்முடைய இரசனை இந்தளவு கேவலமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை… அப்படி எல்லாம் வாய் பிளக்கும் அளவுக்கு ஒன்றும் நன்றாக இல்லை… பார்க்க ஓரளவுக்கு சுமாராக, சாதாரண ஆம்பளை போலத்தான் இருக்கிறார். மற்றும்படி, நீ வானளவாகப் புகழ்ந்த அளவுக்கு எந்த ‘டாஷூம்’ இல்லை…” என்று அலட்சியமாகச் சொன்னவள், மீண்டும் அவனைப் பார்க்கும் வேகத்தில் திரும்ப, அங்கே மிக அருகில், சுவர் ஓரமாகச் சாய்ந்தவாறு நின்றிருந்த ஆதியாதுலனைக் கண்டு அதிர்ந்து போனாள் நேயநறுமை.

இவன் எப்போது இங்கே வந்தான்? இதுவரை அந்த நீளிருக்கையில் அல்லவா அமர்ந்திருந்தான்? பதட்டத்தோடு திரும்பி அவன் அமர்ந்திருந்த இடத்தைப் பார்க்க, அது வெறுமையாக இருந்தது.

ஐயோ இவன் வருவது கூடத் தெரியாமல், தங்கையிடம் எதை எதையோ உளறிக்கொண்டு இருந்தோமே… இவன் கேட்டிருப்பானா? சீ… சீ… இருக்காது. நாங்கள் மெதுவாகத்தான் பேசினோம். கேட்டிருக்க வாய்ப்பில்லை… நம்பிக்கையோடு அவனைப் பார்க்க, அவனுடைய முகம் இறுகிப் போயிருந்தது.

ஆஹா…! கேட்டுவிட்டான் போலவே…? இப்போது என்ன செய்வது? தவித்தவள், மறு கணம் நிமிர்ந்தாள்.

கேட்டால் என்ன? தலையைப் பிடுங்கி விடுவானா என்ன?’ அலட்சியமாக நினைக்கும் போதே நேரிழையோ, சங்கடத்தோடு உமிழ்நீரைக் கூட்டி விழுங்கியவாறு தன் முன்னால் நின்றிருந்த ஆதியதலனை அசட்டுப் புன்னகையுடன் பார்த்தாள்.

“ஆ… ஆதி… அது வந்து…. நாங்கள்… சும்மா…” என்றாள் பெரும் தடுமாற்றமாக.

நேரிழை தடுமாறுவதைக் கண்டு பளிச்சென்று சிரித்தவன்,

“ஹே… ரிலாக்ஸ்… நீங்கள் பேசிய எதுவும் நான் கேட்கவில்லை, போதுமா… முக்கியமாக, உன்னுடைய இரசனையைப் பற்றி உன் அக்கா சொன்னதைச் சத்தியமாகக் கேட்கவில்லை, நம்பு…” என்றவனை இரு பெண்களும் அதிர்ச்சியுடன் பார்க்க, அவனோ வாசலில் ஒரு ஓரமாகப் போட்டு இருந்த தன் கைப்பையை எடுத்துக்கொண்டு, மீண்டும் முன்னறைக்குச் செல்ல, இரு பெண்களும் மலங்க மலங்க விழித்தவாறு ஒருத்தரை ஒருத்தர் பார்த்தனர்..

“ஐயையோ….! நாங்கள் பேசியது அவருக்குக் கேட்டுவிட்டது…?” நேரிழை தயக்கத்தோடு சொல்ல, சுயத்திற்கு வந்த நேயநறுமை, சற்று முன் தோன்றிய சங்கடத்தை, அலட்சியமாக உதறித் தள்ளிவிட்டு,

“ப்ச்… கேட்டால் எனக்கென்ன? நான் பொய்யா சொன்னேன்? என் கண்களுக்கு அவர் அத்தனை அழகாகத் தெரியவில்லை. அந்தக் கூரிய நாசி, அழுத்தமான உதடுகள், காந்தமாய் கவர்ந்திழுக்கும் விழிகள், வாய் திறக்கும் போது வெண்ணிறத்தில் வரிசையாய் அடுக்கப்பட்ட பற்கள்… இறுகித் திரண்ட உடல் தசைகள்… இது எதுவும் அந்தளவுக்குக் கவர்வது போல இல்லையே. தனக்குள் முனங்கிக் கொள்ள, உண்மையை மட்டும் பேசும் மனதோ, அவளைக் கேலியுடன் பார்த்துச் சிரித்தது.

‘நிஜமாகவே கவரவில்லையா என்ன? அவன் பக்கம் ஈர்க்கப்படாமலா அவனையே வைத்த விழி எடுக்காமல் பார்க்கிறாய். நேரிழை இரசிப்பதை வெறுக்கிறாய்?’ அவளிடமே கேட்க, சற்றுத் தடுமாறினாள் நேயநறுமை.

அதே நேரம், தேவசகாயத்தோடு எதனையோ பேசிவிட்டுத் திரும்பிய ஆதியதுலன், சங்கடத்தோடு நின்றிருந்த பெண்களைக் கண்டு, கிண்டலாகச் சிரித்தவன், நேரிழையைப் பார்த்து,

“என்ன மாடம்? இணையத்தில் வளவளவென்று ஓயாமல் பேசுவீர்கள். இங்கே அக்காவின் பின்னால் மறைந்து நிற்கிறீர்கள். என் கூடப் பேசக்கூடாது என்று ஏதாவது கட்டளையிட்டிருக்கிறாளா உன் அக்கா…?” என்றான் நகைப்போடு. அதைக் கேட்ட நேயநறுமை கோபத்தோடு அவனைப் பார்த்து முறைத்தாள்.

அதுவரை நேயநறுமையோடு ஒட்டி நின்ற நேரிழை, அவளை விட்டு விலகி முன்னால் வந்து,

“அக்கா எல்லாம் தடைவிதிக்கவில்லை ஆதி. எல்லாம் உங்கள் அன்பு அத்தை விதித்த தடை…” என்றதும் அம்பிகா குழப்பமாக இளைய மகளைப் பார்த்தார்.

“என்னடி சொல்கிறாய்? நான் என்ன தடை விதித்தேன்?” என்றார் குழப்பமாக. அதைக் கேட்டு சிரித்தவள், ஆதியதுலனைப் பார்த்து,

“அது வந்து… வீட்டிற்கு விருந்தினர்கள் யாராவது வந்தால் அதிகம் பேசக் கூடாது. இருக்கிற இடம் தெரியாமல், நல்ல பிள்ளைகளாக இருந்து விட்டுப் போய்விட வேண்டும். நான்கு பேர் பேசும் போது அம்பிகாவின் வளர்ப்பு போல வருமா என்று வாய் பிளந்து நிற்கவேண்டும்… என்று எழுதாத சட்டமே போட்டிருக்கிறார்கள். அதுதான் அந்த நல்ல பிள்ளை என்கிற பட்டத்தைத் தக்க வைக்க, அமைதியாக இருக்கிறோம்… இல்லை என்றால், தும்புத்தடி பிய்ந்து போகுமே” அப்பாவியாகச் சொல்வது போலச் சொல்லி, தாயைக் கோர்த்துவிட, அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தான் ஆதியதுலன்.

“வீட்டுக்கு வீடு வாசல்படி… நான் சிறுவனாக இருந்த போது என் அம்மா இப்படித்தான் சொல்வார்கள்…” சொன்னவனின் முகம் சட்டென்ற வாடிப் போனது. தாயின் நினைவு போல. அதை உணர்ந்த அம்பிகா, உடனே பேச்சை மாற்றும் விதமாக,

“ப்ச்… பின்னே என்ன ஆதி… யார் வந்தாலும், வளவள என்று பேசியே கழுத்தறுப்பார்கள். வீட்டிற்கு வந்தவர்கள் விட்டால் போதும் என்று ஓடி விடுவார்களோ என்கிற பயத்தில்தான் அப்படிச் சொல்லி வைப்பது..” என்றார் போட்டுக் கொடுத்த மகளைக் கோபமாகப் பார்த்தவாறு. ஆதியதுலனும் அதைக் கேட்டு வலி மறந்து,

“அது விருந்தினர்கள் வந்தால்தானே. நான் தான் விருந்தினன் அல்லவே… நானும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தன்தான்… அதனால் தயக்கமின்றி என்கூடப் பேசலாம்…” அவன் சொல்ல, துள்ளிக் கொண்டு தந்தையின் அருகே வந்தாள் நேரிழை.

“அவ்வளவுதானே. நீங்களே சொல்லிவிட்டீர்கள். இனி அம்பிகா மாடத்தால் எந்தத் தடாவும் போட முடியாது…” என்று கூறியவாறு தந்தையின் அருகே அமர்ந்து அவர் மீது சாய்ந்த கொள்ள. அதைத் தொடர்ந்து ஏதேதோ பேச்சுகள் ஆரம்பமாயின.

நேயநறுமைதான், ஏதோ தனித்து விடப்பட்டது போன்ற உணர்வில், அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளவும் முடியாமல், ஒன்றவும் முடியாமல், அங்கே இருக்கவும் முடியாமல், இல்லாமல் செல்லவும் பிடிக்காமல், சுவரோரமாக சாய்ந்தவாறு நின்றிருந்தாள்.

சற்று நேரத்தின் பின், நெட்டி முடித்த ஆதியதுலன், தேவசகாயத்தைப் பார்த்து,

“மாமா… கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. உறங்கி ஓய்வெடுத்தால்தான், என்னால் தெளிவாக எதையும் சிந்திக்க முடியும்…” என்றான் சற்றுத் தயக்கமாக.

“சாரிப்பா… இருபத்திரண்டு மணிநேரப் பயணம். களைத்திருப்பாய் தவிர நேர வேறுபாடு வேறு உன்னைக் களைப்படையச் செய்யும். அதை யோசிக்காமல், பேசிக்கொண்டிருக்கிறோம். அதற்கு முதல், ஏதாவது தேநீர் குடிக்கிறாயா? இல்லை எளிமையான சாப்பாடு…”

“ஐயோ… வேண்டாம் மாமா…! சுத்தமாகப் பசியில்லை… இப்போதைக்கு வேண்டியது நல்ல ஓய்வுதான்…” என்றதும்,

“சரிப்பா… வா…” என்றவர் எழ, அவனும் எழுந்து தன் பெட்டியைப் பற்ற முயல, நேரிழை அவனுக்கு உதவியாகப் பெட்டியை தன் கரத்தில் எடுத்துக் கொண்டாள்.

முகம் கனிய நன்றி சொன்னவன்,

“ஹே… எனக்குக் களைப்பாகத்தான் இருக்கிறதே தவிர, சோர்ந்து விடவில்லை. விடு நானே எடுத்து வருகிறேன்…” கரத்தை நீட்டி நாகரிகமாக மறுக்க,

“இருக்கட்டும் ஆதி…! எங்கள் வீட்டிற்கு முதன் முறையாக வந்திருக்கிறீர்கள். எங்கள் விருந்தோம்பலில் நீங்கள் குறை காணக் கூடாதுதானே. அது தான்…” அவள் கிண்டலாகச் சொல்ல, சிரித்தவன், எட்டி அவள் தலை முடியைக் கலைத்து விட்டு விலக, நேரிழையோ கோபமாகக் கலைந்த முடியைச் சரியாக்கியவாறு,

“டோன்ட் டச் மை ஹெயர்…” என்றாள் சிணுங்கலாக. அதைக் கேட்டு நகைத்தவன், திரும்பவும் அவளுடைய தலைமுடியைக் களைத்துவிட,

“ர்ர்ர்… ஆதி… திஸ் இஸ் டூ மச்…” என்றவாறு அவனோடு சண்டைக்குப் போக, இந்தக் காட்சியை நம்ப முடியாமல் பார்த்தாள் நேயநறுமை.

பொதுவாக நேரிழை ஒரு இடத்திலிருந்தால் அவள் இருப்பது தெரியாது. இவள்தான் வழ வழ கொழ கொழ என்று பேசும் இரகம். தாய் கூட கொஞ்சம் பேச்சை நிறுத்தேன்டி… காது ஙொய் என்கிறது என்பார்கள். ஆனால் இப்போது அனைத்தும் மாறியல்லவா நடக்கிறது. அதுவும் நேரிழைக்கு யாராவது தலைமுடியைத் தொட்டால் பிடிக்காது. தொட்டால் கலைந்துவிடும் என்று நம்புவாள். அது தெரிந்தே அவளுடைய தலை முடியை அவன் கலைத்து விளையாடுகிறான் என்றால், இருவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தின் அளவு எத்தகையது? கலக்கத்துடன் நினைத்தவளின் நடு மண்டையில் அவளுடைய மனசாட்சி பெரிதாக ஒரு கொட்டு வைத்தது.

ஏய் உனக்குத்தான் அவனைப் பிடிக்காதே. அவன் பெயரைச் சொன்னாலே காதுகளைப் பொத்திக் கொண்டு ஓடுவாய். அப்படி இருக்கிற போது, நேரிழைக்கும், அவனுக்கும் இடையில் நெருக்கம் இருந்தால்தான் என்ன இல்லாமல் போனால்தான் என்ன? உனக்கு என்ன வந்தது? மனசாட்சி கேட்கத் தடுமாறினாள் நேயநறுமை.

‘அது… அது… அப்படியெல்லாம் இல்லை. அவன் ஒரு ஆண். எப்படி, என் தங்கையைத் தொட்டு தலை முடியைக் கலைக்கலாம்? அது தப்பில்லையா…” முனங்கினாலும் உண்மை பேசும் மனசாட்சி அவளைக் கிண்டலாகப் பார்த்தது.

பல்கலைக் கழகத்தில் உனக்கும் நிறைய நண்பர்கள் உண்டு. ஆண் பெண் என்று பாரபட்சம் இன்றிப் பழகுவாய். அடிப்பது, துரத்துவது, முடியைப் பற்றி இழுப்பது என்று அத்தனை கோமாளித் தனங்களும் செய்வாய். அப்போதில்லாத ஆண் பெண் பேதம் இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது. உனக்கு ஒரு நியாயம், அவளுக்கு ஒரு நியாயமா? மனசாட்சி அவளைக் கேட்க, குழம்பிப் போனாள் நேயநறுமை.

நான் ஏன் ஒரு மாதிரி உணர்கிறேன்? நேரிழை அவனோடு பேசினால் நான் ஏன் தவிக்கிறேன்? அதுவும் அவனைப் பார்த்து அரைமணி நேரம் கூட இல்லை. அதற்குள் ஒருவித உரிமை தோன்றுகிறதே? அதற்கு என்ன காரணம்? அடக் கடவுளே…! இது வரை இப்படி நான் உணர்ந்ததில்லையே? எனக்கு என்னதான் ஆயிற்று?” தடுமாறி நின்றவள், நேரிழையின் அறைக்குள் சென்று படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.

காரணம் தெரியவில்லை, ஏதோ உயிருக்கும் மேலான ஒன்று கைநழுவிப் போவது போன்ற உணர்வில் தவித்து நின்றாள் அவள்.

 

What’s your Reaction?
+1
12
+1
2
+1
3
+1
2
+1
1
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!