அவன் கரங்களில் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட கொடியென அவள் மயங்கிச் சரிய… அதைக் கண்டு பதறிப்போன அபிநயா, மதிவதனி, வித்யாதர் என அனைவரும் ஒருசேர அவனை நோக்கி ஓடிவர, சட்டென்று தன் ஒற்றைக் கரத்தின் பலத்தால் அவளைத் தாங்கிக் கொண்டவன், தன் மறுகரத்தை உயர்த்தி நெருங்கி வந்தவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, அடுத்த நொடி, உணர்வற்றுக் கிடந்தவளைப் பூமாலையெனத் தன் கரங்களில் அள்ளி ஏந்திக்கொண்டான்.
அவன் ஏந்திய வேகம் சரியில்லை போல, அவளுடைய உடல் தளர்ச்சியினால் சற்று வழுக்குவது போலத் தோன்ற… மென்மையாக அவளை எத்தித் தூக்கித் தன் கரங்களுக்குள் சரியாகத் தாங்கிக்கொண்டவனாக, சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்து மென் புன்னகை ஒன்றைச் சிந்தி,
“இவளுக்கு ஒன்றுமில்லை. அதீத மன அழுத்தத்தின் விளைவு… இப்படி அடிக்கடி மயங்கிவிழுவது நடப்பதுதான்… நான் பார்த்துக் கொள்கிறேன்… கவலைப்படாதீர்கள்,” என்றவன், திரும்பி விதுரனைப் பார்த்துவிட்டு, “இவனைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்… பயந்து போயிருக்கிறான். இவளை அறையில் படுக்க வைத்துவிட்டு வருகிறேன்…” என்று கூறிவிட்டு, ஓர் அரிய பொக்கிஷத்தைப் பாதுகாத்து எடுத்துச் செல்வது போல அவளைத் தன் மார்போடு அணைத்துத் தாங்கியவாறு மாடியேறிச் சென்றான் ஏற்றமாதிபன்.
மேலே ஒரு அறையின் கதவு ஏற்கனவே திறந்திருக்க, அந்த அறைக்குள் அவளை ஏந்திச் சென்றவன், மெதுவாக அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு, ஏந்தி வந்ததில் சற்றுக் கசங்கிப்போய், வயிற்றின் மேல் ஏறிவிட்ட அவளது டீஷர்ட்டை இழுத்துச் சரியாக்கியவன், காலடியில் கிடந்த போர்வையை எடுத்து அவள் தோள் வரை மென்மையாகப் போர்த்திவிட்டான்.
அவளைப் போர்த்திவிட்ட பின்னும் அவனது கைகள் உடனடியாக அவளை விட்டு விலக மனமில்லாமல் தவித்தன. எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத அவள் முகம் இன்று பொலிவிழந்து, வாடிக்கிடப்பதைப் பார்த்தவனுக்கு நெஞ்சமெல்லாம் அடைத்துக்கொண்டு வந்தது.
எத்தனை கடிய சூழ்நிலைகளையும் சாதாரணமாகக் கையாள்பவன், எதற்குமே சளைக்காதவன், தளராதவன், இரும்பு மனிதனாய் எந்த செயற்திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்பவன்… ஆனால் இன்று ஒரு பெண்ணின் முன்பாகத் தன் நிலை இழந்து, நெஞ்சம் துடிக்க நிற்கிறான் என்றால் இதை என்னவென்று சொல்வது? அவள் என்றால் அவனுள் அனைத்தும் உருகிப் போகிறதே! என்ன செய்வது?
நெஞ்சம் நிறைந்த வலியோடு குனிந்து, அவளது நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் தன் பெருவிரலால் மென்மையாகத் துடைத்து விட்டவன், முகத்தில் சிதறிப் படர்ந்திருந்த மயிரிழைகளை மெதுவாக ஒதுக்கி, காதுப்புறம் செருகிவிட்டவாறு அவளுக்கு மிக அருகே படுக்கையில் அமர்ந்து, சற்று நேரம் இமைக்காமல் அவளையே பார்த்தவாறு இருந்தான்.
மயக்கத்திலும் அவளது புருவங்கள் லேசாக நெளிந்து முடிச்சிட்டிருக்க, தன் பெருவிரலால் அந்த முடிச்சை நீவி இல்லாது செய்ய முயன்றான். அந்த நேரம், அவளுடைய வில் போன்ற பட்டு இமைகள் அவன் விரல்களில் உரச… தன்னை மறந்து விரல் நுனிகளால் அந்த இமைகளை வருடிக் கொடுத்தான். பின் பெருவிரலால் அதன் நீள அகலத்தை வருடி அளக்க, அவனையும் மீறி உடல் சிலிர்த்துப் போனது.
எத்தனை மென்மையான, பட்டுப்போன்ற இமைகள்! அதுவும் அடர்த்தியாய் வில் போன்று… தன்னை மறந்து அந்த இமைகளில் இலயித்தவனின் விழிகள் இப்போது கொஞ்சம் கீழே இறங்கின. மூடியிருந்த நீண்ட விழிகளும், கூரிய நாசியும், சிவந்த இதழ்களும் அவன் பார்வையில் சிக்கிக்கொள்ள… அந்த நெகிழ்வான நேரத்திலும் உமிழ்நீர் கூட்டி விழுங்கினான் ஏற்றமாதிபன்.
அன்று விரித்த விழிகளில் ஆச்சரியமும், ஆசையும் பொங்க அவனைப் பார்த்ததும், பின் அதே விழிகளில் காதல் பொங்கி வழிய அவனிடம் யாசகம் கேட்டதும், அதே விழிகளில் வலியைத் தேக்கி அவனைக் கலங்க வைத்ததும், பின்னர் கோபத்தையும் வெறுப்பையும் தேக்கி அவனைச் சுட்டதும் நினைவுக்கு வர… நெஞ்சில் யாரோ பாறாங்கல்லை வைத்தது போன்ற பாரம் அவனுக்கு!
அந்தக் கணமே, அவளின் மனதை வதைக்கும் வலிகள் அனைத்தையும் மொத்தமாகத் தான் வாங்கிவிட மாட்டோமா என்கிற வேதனை அவனை வாட்டியது. மெதுவாகத் தன் கரத்தைக் கீழே இறக்கியவன், உலகிலேயே கிடைக்காத அரிய மலரைத் தீண்டுவது போல அவளுடைய கன்னத்தில் தன் கரத்தைப் பொத்தினான். அந்தக் கன்னத்தின் மென்மையில் தன்னை மறந்தவன், பட்டும் படாமலும் பெருவிரலால் வருடிக் கொடுக்க… அவளோ அதைக்கூட உணராமல் அசைவற்றுப் படுத்துக் கிடந்தாள்.
“ஏண்டி… ஏன் இப்படி உன்னையே வருத்திக்கொள்கிறாய்? நீ இப்படி உன்னிலை இழந்து வாடிக்கிடப்பதைப் பார்க்கும்போது என்னால் தாள முடியவில்லையே… நான் என்ன செய்யட்டும்? தயவுசெய்து எனக்காகவாவது உன்னைத் தேற்றிக்கொள்… தேறி வா… நிமிர்ந்து நில்! இல்லையென்றால் உன்னை இப்படிப் பார்த்து என் நெஞ்சே உடைந்துவிடும் போலப் பயமாக இருக்கிறது விதரணை…” என்று மென்குரலில் உருகியவன், அவளுடைய தலைமுடியை மென்மையாக வருடிக் கொடுத்தான். அவனது விழிகளோ அவளிடமிருந்து இம்மியும் விலகவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அவள் அழகு, இப்போதும் அவனை மதிமயக்கத்தான் செய்திருந்தது.
இப்போது தன் கரத்தை நீக்கியவன், அவளுடைய கரமொன்றைப் பற்றித் தூக்கினான். அதில் ஊசிகளால் குத்திய அடையாளங்களும், கன்றிப்போன தழும்புகளும் அப்பட்டமாகத் தெரிய… அவனுடைய முகம் இறுகிப்போனது. தன்னை மறந்து குனிந்து அந்தக் காயங்களில் தன் உதடுகளைப் பதித்து ஈர முத்தமிட்டவன், மெதுவாக விலகி அந்த இடத்தை இரண்டு பெருவிரல்களாலும் மேலும் கீழும் வருடிக் கொடுத்தவன், பின் அவள் கரத்தின் விரல்களை விரித்து, அவளது உள்ளங்கையை மென்மையாக வருடிக் கொடுத்தவாறே,
“நீ எதற்காக உன் வீட்டிற்குப் போக ஆசைப்படுகிறாய் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. உன்னைப் பெற்றவர்களை யார் கொன்றிருப்பார்கள் என்று அறிய ஆசைப்படுகிறாய். ஆனால், அது அத்தனை சுலபமில்லை கண்ணம்மா… அது சின்ன வலை என்றால் பயப்படமாட்டேன். ஆனால், இது பெரிய சிலந்தி வலையாகத் தோன்றுகிறது; உயிரையே கொல்லும் புதைகுழி போலத் தெரிகிறது. அந்தப் பயங்கர நரகத்திற்குள் நீ விழுந்தால் நான் என்ன செய்வேன்…? அதை என்னிடமே விட்டுவிடு… நான் பார்த்துக்கொள்கிறேன். எனக்கு வேண்டியதெல்லாம் உன் பாதுகாப்பும் ஆரோக்கியமும்தான். இனியும் என்னால் உன்னைக் கொடிய விதிக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது. இந்த ஜென்மத்திற்கு நான் பட்ட வலிகள் போதும்… இனியும் பட என் இதயத்தில் தெம்பில்லை…”
என்று சொன்னவன், அவளுடைய உள்ளங்கைகளில் தன் கரத்தைச் செலுத்தி அழுத்தமாகப் பற்றி, அவள் மேல் கரத்தில் தன் உதடுகளைப் பொருத்தியவாறு அமைதியாக அமர்ந்திருந்தான். அந்த நேரம் பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்க, மெதுவாக அவள் கரத்தைத் தன் உதட்டிலிருந்து பிரிக்க மனமில்லாமலேயே நீக்கிவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
அபிநயாதான் நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் வலி நிறைந்த புன்னகை ஒன்றைச் சிந்தியவன், “வாமா…” என்றவாறு மெதுவாக விதரணையின் கரத்தைப் படுக்கையில் வைத்துவிட்டு எழுந்துகொண்டான்.
“இவளைப் பார்த்துக்கொள்… தனியே விடாதே” என்றவன் அங்கிருந்து விலகிச் செல்ல முயல… சட்டென்று அவன் கரத்தைப் பற்றினாள் அபிநயா.
அவன் திரும்பிப் பார்க்க…
“அண்ணா… இப்போதாவது உங்கள் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லலாமே…” என்றாள் மென்மையாக.
அதைக் கேட்டு மென்புன்னகை ஒன்றைச் சிந்தியவன்,
“இப்போது சொன்னால் அதைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் அவள் இருக்கமாட்டாள். அவள் மனதில் இப்போது அழுத்தமாகப் பதிந்திருப்பது அவள் பெற்றோரின் மரணம். இந்த நிலையில் எதைச் சொன்னாலும் அவளால் உள்வாங்கிக்கொள்ள முடியாது. முதலில் அவள் சரியாகட்டும்… அதற்குப் பிறகு பார்க்கலாம்…” என்று சொன்னவன், மீண்டும் திரும்பி விதரணையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு விதுரனைத் தேடிச் சென்றான்.
விதுரன் கீழறையில், தொலைக்காட்சியில் ஏதோ சிறுவர்களுக்கான படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் கொஞ்சமும் கவனமில்லாமல் திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுடைய நிலையும் மனதைப் பிசைய… மெதுவாக அவனை நெருங்கியவன் அவனருகே அமர்ந்துகொள்ள, அதுகூட உறைக்காமல் அப்படியே நிலை மாறாமல் இருந்தான் விதுரன். பின் அவனுடைய தோளில் மென்மையாகத் தன் கரத்தைப் பதிக்க… இயந்திர மனிதன் போல உணர்ச்சியற்று அவனைத் திரும்பிப் பார்த்தான் விதுரன்.
அவனைக் கண்டதும் ஏற்றமாதிபன் மென்புன்னகை ஒன்றைச் சிந்த, விதுரனுக்கோ புன்னகைக்கத் தோன்றவில்லை. மீண்டும் திரும்பித் திரையைப் பார்க்க… ‘இது சரிவராது’ என்று நினைத்தவனாக, இப்போது ஒரு காலை மடித்து மென்னிருக்கையில் வைத்தவாறு விதுரனை நெருங்கி அமர்ந்தான் ஏற்றமாதிபன்.
“உனக்கு கார்ட்டூன் நிறையப் பிடிக்குமோ?” அவன் கேட்க… அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. சில விநாடிகள் அவன் பதிலுக்குக் காத்திருப்பது போல அமைதியாக இருந்தவன், அடுத்து,
“ஏன் விதுரா… உனக்கு வீடியோ கேம் பிடிக்குமா?” என்றான். அதற்கும் பதிலில்லை. இப்போது எட்டி அவன் கரத்தைப் பற்ற… நினைவு கலைந்து திரும்பிப் பார்த்தான் விதுரன்.
“நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்டேன்…” என்றான் மெல்லிய அழுத்தமான குரலில்.
சற்றுக் குழம்பியவன்,
“எ… என்ன கேட்டீர்கள்?” என்று தயக்கமாகக் கேட்டான் விதுரன்.
“உனக்கு வீடியோ கேம் பிடிக்குமா என்று கேட்டேன்…” என்று ஏற்றமாதிபன் மீண்டும் கேட்க, அதற்குப் பதில் சொல்லாமல் ‘ஆம்’ என்று மட்டும் தலையை ஆட்டினான்.
“ம்… எனக்கும் பிடிக்கும்… உனக்கு ஒன்று தெரியுமா… அம்மாவுக்குத் தெரியாமல் சின்ன வயதில் திருட்டுத்தனமாக விளையாடியிருக்கிறேன்…” அவன் சொல்ல, இப்போது விதுரனின் முகத்தின் இறுக்கம் சற்று வடிந்தது போலத் தோன்றியது.
“நா… நானும்… அம்மாவுக்குத் தெரியாமல்… தி.. திருட்டுத் தனமாக விளையாடுவேன்…” சொன்னவனின் முகத்தில்தான் எத்தனை வலி. முகம் கசங்கிப்போக, அவசரமாக அந்தப் பேச்சை மாற்றம் விதமாக,
“சரி… உனக்கு என்ன கேம் பிடிக்கும்?” என்றான் அடுத்து.
அதற்கு என்ன பதில் சொல்வது என்பது போலப் புருவங்களைச் சுருக்கிச் சற்று நேரம் யோசித்தான். பின் குழப்பமாக ஏற்றமாதிபனைப் பார்த்து,
“வீடியோ கேம்…! என்ன கேம் பிடிக்கும்? நினைவில்லையே… என்ன கேம் எனக்குப் பிடிக்கும்?” என்று அவனிடமே கேட்டான்.
விதுரன் தன் இயல்பான நிலையில் இல்லை என்று அவனுக்குத் தெரியும்தான். ஆனால் அவனை வெளியே கொண்டுவந்தால்தானே அவனைப் பேசவைக்க முடியும்.
சற்று நேரம் அமைதி காத்தவன், பின் என்ன நினைத்தானோ, தானியக்கியை எடுத்துத் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, விதுரனை இன்னும் நெருங்கி அமர்ந்து, அவன் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி முழுதாகத் திரும்ப வைக்க, விதுரனும் மறுப்பேதும் சொல்லாமல் அவனை நோக்கித் திரும்பி அமர்ந்தான். இருந்தாலும், அவனது பார்வை மாடியில்தான் இருந்தது. அங்கேதானே அவன் அக்கா இருக்கிறாள்! அதை உணர்ந்தவனாக, அவன் கரங்களைப் பற்றி அழுத்திக் கொடுத்தவன்,
“உன் அக்கா நன்றாக இருக்கிறாள்… முதலில் என்னைப் பார் விதுரா…” என்றான் அழுத்தமாக.
மறுக்கவில்லை விதுரன். அவன் நிமிர்ந்து பார்க்க, இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. ஆதிபனின் அந்த கூரிய விழிகளில் எதைக் கண்டானோ, விதுரன் இமைக்காமல் அவன் முகத்தையே பார்த்திருக்க… ஏற்றமாதிபனும் மிக அழுத்தமாக அவனையே பார்த்தவாறு,
“உனக்கு உன் அப்பா அம்மாவைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டுமா?” என்றான் கூர்மையாகக் கூடவே நிதானமாக.
ஏற்றமாதிபன் இப்படிக் கேட்ட மறுகணமே விதுரனின் விழிகள் சுருங்கி விரிந்தன. அந்த விழிகளுக்கு அப்பால் ஒரு பிரளயமே நடப்பது போலத் தோன்றியது. விதுரனுக்கு அவனுடைய தாயின் மரணத்தைக் கண்ட அந்த நொடியே, அவன் புத்தியில் கரிய போர்வை ஒன்று போர்த்தப்பட்டது போல அனைத்தும் இருட்டடித்துப் போயிருந்தது. செல்லப்போனால் தந்தையின் இறப்புக் கூட அவனுக்குப் பெரிய அதிர்ச்சியாகத் தெரியவில்லை. அதை அதிர்ச்சியாக ஏற்றுக்கொள்வதற்கும் மூளை சரியாக வேலை செய்ய வேண்டுமே!
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகக் காலம் அவனை ஒடுக்க முயல, அவனது மூளையோ அந்தத் தாக்குதலை ஒரு அதிர்வுதாங்கியாகச் (Shock Absorber) செயற்பட்டு அவனைப் பாதுகாத்துக் கொண்டது. இப்போது ஏற்றமாதிபன் நேரடியாக இப்படிக் கேட்டதும், கொஞ்சமே கொஞ்சமாக அவனுடைய மரத்த தன்மை விடுபட, நம்ப முடியாமல் அவனைப் பார்த்தான் விதுரன்.
“சொல்லு விதுரா… உனக்குப் பழிவாங்க வேண்டுமா?” என்று மீண்டும் கேட்க… சுளீர் என்று தாயின் கழுத்து அறுபடுவதும், தெறித்த இரத்தம் அவன் முகத்தில் சிந்துவதும் போலத் தோன்ற சட்டென்று தன் தலையைத் திருப்பிக்கொண்டான் விதுரண்.
சொற்ப விநாடிகள் அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு தாயின் மரணம் நினைவுக்கு வரத் தொண்டைக்குழி அடைத்தது. மீண்டும் மீண்டும் அந்தக் கொடிய நினைவு அவனைக் கொல்ல இப்போது அவனிடமிருந்து சீற்ற மூச்சு வெளிப்பட்டது. மெதுவாகத் திரும்பி ஏற்றமாதிபதனை வெறித்துப் பார்த்தவன்,
“முடியுமா?” என்றான் தன்னையும் மறந்து.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனம் திறக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட ஏற்றமாதிபன்,
“என்னால் நிச்சயமாக முடியும்… ஆனால்… அதற்கு நீ உதவ வேண்டும்…” என்றான் அழுத்தமாக.
இப்போது விதுரனின் விழிகளில் கண்ணீர் பொங்கியது.
“நான்… நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குத்தான் எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறதே…” என்றான் கலங்கிய குரலில்.
“ஹே… ஹே… இட்ஸ் ஓகே… அவசரப்படாதே. நிதானமாக யோசித்து என்ன நடந்தது என்பதை மட்டும் எனக்குச் சொல் போதும்… உன்னால் முடியுமா?” என்றான் மென்மையாக.
விதுரனோ என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பினான். அவனுடைய புத்தியில் ஏதேதோ போராட்டம் நடந்துகொண்டிருக்க, அவனால் எப்படித்தான் தெளிவாகச் சொல்ல முடியும்?
“அது… எனக்கு… எனக்கு ஒன்றும் நினைவுக்கு வரவில்லையே…” அவன் கலங்க…
அவன் கரங்களை அழுத்திக் கொடுத்தவன்,
“கொஞ்சம் யோசித்துப் பார் விதுரா… நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது என்ன நடந்தது? என்ன உணர்ந்தாய்?” என்று மென்மையாகக் கேட்க… விதுரனின் விழிகளோ அங்கும் இங்கும் அலைக்கழிந்தன.
அவன் தடிமாறுவதைக் கண்டவன்,
“விதுரா… எதிரிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், என்ன நடந்தது என்பதை நான் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு உன் உதவி நிச்சயமாகத் தேவை. கொஞ்சம் முயற்சி செய்து பார்… விழிகளை மூடி இரண்டு நிமிடம் ஆழமாக மூச்செடு… உன் புத்தியையும் மூளையையும் ஒருநிலைப்படுத்தி யோசித்துப் பார். நிச்சயமாக உன்னால் முடியும்…” என்று சொல்ல… தடுமாறிய விதுரன் அவன் சொல்வது போலவே விழிகளை மென்மையாக மூடிக்கொண்டான்.
மூடிக்கொண்ட விழிகளிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வடிய, அதைக் கண்ட ஆதிபனின் கைமுஷ்டிகள் இறுகின. ‘யாருடையதோ ஒருவரின் பசிக்காக, பாவம் இவர்கள் அல்லவா அவதிப்படுகிறார்கள்!’ என்று வேதனையோடு அவன் நினைத்திருக்கையில், இங்கே விழிகளை மூடிய விதுரனின் மனதிலோ நடந்த சம்பவங்கள் கொஞ்சமாய் ஓடத் தொடங்கின.
விழிகளை மூடிய விதுரன், தன் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பதை ஆழமாக யோசிக்க முயன்றான். முயன்றவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் வெற்றியும் கிடைக்க, வாய் திறந்தான் விதுரன்.
“பேசாமல் நாங்கள் அவர்களின் காரிலேயே வந்திருக்கலாம். உனக்கு அதிகம்தான் பிடிவாதம் அக்கா…” என்று தம்பி திட்டிக்கொண்டு முன்னால் நடக்க, விதரணையோ பதில் சொல்லாமல் முகம் இறுக நடந்து கொண்டிருந்தாள்.
தன் சகோதரியின் முக இறுக்கத்தைக் கண்டு வியந்த விதுரன்,
“அக்கா… உனக்கு என்னதான் ஆயிற்று? ஏன் ஒரு மாதிரி வருகிறாய்?” என்று கேட்க… எரிச்சலோடு தம்பியைப் பார்த்தவள்,
“கொஞ்சம் பேசாமல்தான் வாவேன் விதுரா…” என்கிற சலிப்புடன் முன்னேற… விதுரனோ சகோதரிக்குப் பழிப்புக்காட்டிவிட்டு பின்னே செல்ல, எதுவோ உந்த திரும்பிப் பார்த்தான் விதுரன்.
கரிய நிறக் கடிலாக் வண்டி அவர்களுக்கு பதினைந்தடிக்கும் அப்பால் ஊர்ந்து வருவதைக் கண்டு, பயந்தவனாக,
“அக்கா… நம்மை ஒரு வண்டி பின்தெடர்ந்து வருகிறது பாரேன்…” என்றான் விதுரன் சிறு பயத்தோடு. விதரணையோ திரும்பி தன் தம்பியைப் பார்த்துவிட்டுப் பின்னால் திரும்பிப் பார்க்க அப்படி எந்த வண்டியும் பின்னால் தொடர்வது போலத் தெரியவில்லை அவளுக்கு.
“மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிறது போல இந்த இரவில் உனக்கு பார்ப்பது எல்லாமே பயமாகத் தெரிகிறது. சத்தம் போடாமல் வாடா…” எரிச்சலுடன் தம்பியிடம் சொல்லிவிட்டு மேலும் முன்னேற, அப்போதுதான் குறிப்பிட்ட தூரம் வந்ததும் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டிருப்பதை விதுரன் கவனித்தான்.
“அக்கா… இங்க பாரேன்! தெரு விளக்குகள் அணைஞ்சிருக்கு. அதுவும் எங்கள் வீடு வரைக்கும்தான் அணைந்திருக்கு…” என்று இளையவன் வியந்து சொல்ல… விதரணையோ அதைக் கொஞ்சமும் கருத்தில் கொள்ளவில்லை. அவள் மனதுதான் ஏற்றமாதிபனின் நினைவில் கொதித்துக் கொண்டிருந்ததே!
இருவரும் வீட்டை நெருங்கியதும்தான் விதரணைக்குச் சுரணை வந்தது. வீடு மிக அமைதியாக இருந்தது. வீட்டின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. என்னாச்சு? அவர்கள் வராமல் தாய் நிச்சயமாக விளக்குகளை அணைக்க மாட்டாரே! இது என்ன புதிதாக? அப்போதே விதரணையின் புத்தியில் அந்தச் சந்தேக விதை விழவே செய்தது. ஆனாலும் அதை ஓரம் தள்ளிவிட்டுக் கதவைத் திறந்தாள். இருவரும் உள்ளே நுழைந்ததுதான் தெரியும்… மறுகணம் விழித்தபோது ஒரு இருக்கையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்தார்கள். சொல்லிக் கொண்டு வந்தவனுக்கு அந்த நான்கு கொடியவர்களின் உருவமும் நினைவலைகளில் உதிக்கத் தொடங்க விதுரனின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது. கரங்களோ சில்லிட்டன. விழிகளை அழுந்த மூடியவனின் முகம் வெளுறிப்போனது. மனக்கண்ணில் நடந்தவை ஒவ்வொன்றாகத் திரைப்படமாய் விரிந்தன.
“டேய்… விடுடா என்னை… ஆஆஆ…” “டேய்… என் மகளை விடுடா… பிளீஸ் விடு… ஐயோ… நான் என்ன செய்வேன்…” “இதோ பார்… உனக்கு உன் மகள் முழுசாக வேண்டும் என்றால், நான் கேட்பதைக் கொடுத்துவிடு… இல்லை…” “நான் கேட்டால் நிச்சயமாகச் சம்மதிப்பார்… பிளீஸ்… ஒரு வாய்ப்புக் கொடு… நான் பேசுகிறேன்…” “அம்மா… போதும் அழுவதை நிறுத்துங்கள். இது அழும் நேரமில்லை. இது நம்முடைய உயிர் பிரச்சினை… கொஞ்சம் ஒத்துழையுங்கள்… பிளீஸ்…” “அ… அவர்கள் கேட்பதை இப்போது கொடுத்தால், அடுத்த விநாடியே நம்மைக் கொன்றுவிடுவார்கள்மா…”
ஏதேதோ உரையாடல்கள்! திடீரென்று தாயின் கழுத்தை அறுக்கும் காட்சி நினைவுக்கு வந்ததும் துடித்துப் பதைத்து மூடிய இமைகளைத் திறந்தான் விதுரன். அவன் உடலோ வியர்வையில் நனைந்திருந்தது; முகமோ வெளிறியது; விழிகளோ சிவந்து கண்ணீரைச் சிந்தின. பயமும் பதற்றமும் துடிப்புமாக நிமிர்ந்து ஏற்றமாதிபனைப் பார்த்த விதுரனுக்கு, பேச்சுக்குப் பதில் அழுகைதான் வந்தது.
“அ… அம்மா… அவர்கள்… அவர்கள் என் அம்மாவை… என் அம்மாவைக் கொன்றுவிட்டார்கள்…” என்றவன், கதறி, விம்மியழுது துடிக்க… ஏற்றமாதிபன் சட்டென்று அவனை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.
“ஓ… விதுரா… ஒன்றுமில்லைடா… உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்… ஷ்… ஷ்…” என்று அவன் தேற்ற… அந்த நேரம் விதுரனின் அழுகைச் சத்தம் கேட்டு மதிவதனி உள்ளேயிருந்து ஓடிவந்தார்.
பதற்றத்தோடு அவர்களை நெருங்க முயன்றவரை, விழிகளாலேயே தடுத்து நிறுத்தினான் ஏற்றமாதிபன். விதுரனை அணைத்திருந்த கரத்தைச் சற்று விலக்கி, இரண்டு விரல்களை மட்டும் நீட்டி அவர்களை உள்ளே போகுமாறு கட்டளையிடுவது போல அசைத்துக் காட்ட… மதிவதனியோ கரங்களைப் பிசைந்தவாறு விதுரனைப் பரிதாபமாகப் பார்த்தார். பின் நிமிர்ந்து தன் மகனைப் பார்க்க, அவரைத் தீர்க்கமாகப் பார்த்தான் ஏற்றமாதிபன். அந்த விழிகளில் தெரிந்த கடுமையும் கட்டளையும் அதற்கு மேல் அவரை அங்கே நிற்க விடாமல் உள்ளே துரத்திவிட, இவர்களைத் திரும்பிப் பார்த்தவாறே உள்ளே சென்றார் மதிவதனி.
அவர் சென்றதும், தன் மார்பில் விழுந்து அழுதவனைத் தட்டிக் கொடுத்தவன்,
“இட்ஸ் ஓகே படி… இட்ஸ் ஓகே…” என்று சீரான, அதே நேரம் அழுத்தமான குரலில் சொன்னவன், சற்றுப் பொறுத்து, மென்மையாக அவனைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்தான். அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் கரங்களால் அழுத்தித் துடைத்துவிட்டான்.
“உன்னால் சொல்ல முடிந்தால் சொல்லு விதுரா. இல்லையென்றால் வேண்டாம்…” என்றான் மென்மையாக.
“நீ… நீங்கள்… அவ… அவர்களைப் பிடித்து… பிடித்துவிடுவீர்கள் தானே?” விம்மலுக்கு இடையே அவன் கேட்க… அவன் கரத்தைப் பற்றி அந்தக் கரத்தின் மீது தன் உள்ளங்கையை அழுத்திக் பதித்தவன்,
“நிச்சயமாக! பிடிப்பது மட்டுமில்லை… அவர்களுக்குரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பேன். இது சத்தியம்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“அவர்கள் ஏன் என் அம்மாவைக் கொன்றார்கள்?” என்றான் குழப்பமாக.
இப்போது அவனுடைய தோள்களில் தன் கரங்களைப் பதித்து அழுத்திக் கொடுத்தவன், “அதை நீதான் சொல்ல வேண்டும் விதுரா… நீ சொல்வதை வைத்துத்தான் இதற்குக் காரணமானவர்களை என்னால் நெருங்க முடியும். அன்று என்ன நடந்தது?” என்றான் மீண்டும்.
இப்போது விதுரனின் மனதில் ஒரு தெளிவு வந்திருந்தது போலத் தெரிந்தது.
“அவர்கள்… அவர்கள் என் அப்பாவிடம் எதுவோ கேட்டார்கள் அண்ணா…” என்றான் குழப்பமாக.
அதைக் கேட்டதும் பரபரப்பான ஏற்றமாதிபன், “என்ன கேட்டார்கள்?” என்றான் அடுத்து.
“அது… அவர்கள் என்ன கேட்டார்கள் என்று சரியாகத் தெரியவில்லையே… ஆனால்… எதையோ கொடுக்கும்படி கேட்டார்கள்..” என்றவன், தன் நினைவுக்கு வந்ததை அப்படியே அவனிடம் ஒப்புவிக்க… அங்கே விதரணைக்கு நடந்ததை விதுரன் வாயிலாகக் கேட்ட ஏற்றமாதிபனின் இரத்தம் கொதிநிலையை அடைந்திருந்தது. பற்களைக் கடித்து நறநறத்தவன், அமைதியாக விதுரன் சொல்வதைக் கேட்கத் தொடங்கினான்.
கடைசியாக,
“அ… அவர்கள் கேட்பதை இப்போது கொடுத்தால் அடுத்த விநாடியே நம்மைக் கொன்றுவிடுவார்கள்மா… அதுமட்டுமில்லை… என்னால் அதைச் செய்யவும் முடியாது…” என்று அப்பா மறுத்துவிட்டார். அதற்குப் பிறகுதான் அம்மாவை.. என் அம்மாவை…” அவன் மீண்டும் முகம் கசங்கி அழ… சட்டென்று அவன் தோள்களை அழுத்திக் கொடுத்தான் ஏற்றமாதிபன். அவனுக்கு விதுரனின் வலியை விட, உண்மையைக் கண்டுபிடிக்கும் வேகம்தான் இப்போது அதிகமாக இருந்தது.
“சரிடா… உன் அப்பா என்ன மறைத்தார் என்று உனக்குத் தெரியுமா? இல்லை ஏதாவது ஊகம் இருக்கா? இதோ பார் விதுரா, நீ சொல்வதை வைத்துத்தான் குற்றவாளியைப் பிடிக்க முடியுமா இல்லையா என்பதே எனக்குத் தெரியும். கொஞ்சம் யோசித்துச் சொல்லு?” என்றான் ஏற்றமாதிபன் பரபரப்பாக.
ஆனால் பாவம், விதுரனுக்கு என்ன நடந்தது என்று எப்படித் தெரியும்? தந்தைக்கு இப்படி ஒரு சிக்கல் இருப்பதே அன்றுதானே அவனுக்குத் தெரியும்! இதில் தந்தை எதை மறைத்து வைத்திருந்தார் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? அவனுக்குத் தெரிந்தது எல்லாம் கனிவான, அன்பான, அதட்டிக் கூடப் பேசத் தெரியாத தந்தைதான். அவரிடம் அப்படி என்ன இருந்துவிடப் போகிறது?
ஏற்றமாதிபன் அப்படிக் கேட்டதும்,
“இ.. இல்லையே… அன்று அந்த இராட்சதர்கள் வரும் வரை அப்பா ஒரு சிக்கலில் இருக்கிறார் என்பதே எங்களுக்குத் தெரியாதே. அப்பா எதுவும் எங்களிடம் சொல்லவில்லை… ஆனால் நிச்சயமாக அப்பாவிடம் என்னவோ இருக்கிறது… அதை அவர் கொடுக்க மறுத்தார்… அது மட்டும்தான் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது…” விசும்பியவாறு அவன் சொல்ல… மெதுவாக அவனைத் தட்டிக் கொடுத்தான் ஏற்றமாதிபன்.
அவனுடைய மூளையோ பலவிதமாகப் பல திசைகளிலும் அசைந்து வேலை செய்தது. அந்த இக்கட்டான சூழலில், தன் குடும்பமே ஆபத்தில் இருக்கிறது என்கிற போது கூட, உண்மையைச் சொல்லாமல் ஏதோ ஒரு ரகசியத்தை அவர் மறைத்து வைத்திருக்கிறார் என்றால், அந்த ரகசியம் எத்தனை ஆபத்தானதாக இருந்திருக்க வேண்டும்?
ஏதேதோ யோசித்தவன் விதுரனைப் பார்த்தான்; அவன் இன்னும் அழுதுகொண்டிருந்தான். ஒரு பெருமூச்சோடு மீண்டும் தொலைக்காட்சியை அவனுக்காக உயிர்ப்பித்துவிட்டு எழ…
“ஆதிபன் அண்ணா…” என்றான் விதுரன் கலக்கமாக.
நின்று அவன் திரும்பிப் பார்க்க… “என் அம்மாவையும் அப்பாவையும் கொன்றவர்களைப் பிடித்துவிடுவீர்கள் தானே…?” என்றான் நம்பிக்கையை விழிகளில் தேக்கி.
அதைக் கேட்டு சிரித்தவன்,
“அவர்களை ஏற்கெனவே கொன்றாகிவிட்டது விதுரா…” ஏற்றமாதிபன் திருப்தியாகச் சொல்ல… ஒரு விநாடி விதுரனின் விழிகள் மின்னி மறைந்தது. நம்ப முடியாமல் அவனைப் பார்த்தவன்,
“எ… எப்போது?” என்றான் குழப்பமான பார்வையோடு.
இப்போது அவனை நெருங்கி அவன் தோளை அழுத்திக் கொடுத்து,
“அன்றே….” என்றான் அழுத்தமாக. அதைக் கேட்டதும் விதுரனின் முகத்தில் பளிச்சென்று புன்னகை மலர்ந்தது.
“எ… எனக்கு நினைவில்லையே…” என்றவனுக்கு, அந்தக் காட்சியைப் பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. அதைக் கண்டு மேலும் புன்னகைத்தவன், சுருக்கமாக நடந்ததைச் சொல்லிவிட்டு,
“கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்க வரலாம் விதுரா… காத்திரு…” அவன் சொல்ல, சட்டென்று அவன் கரத்தைப் பற்றிய விதுரன்,
“ரொம்ப நன்றி அண்ணா அவர்களைக் கொன்றதற்கு… அவர்களை என் கையால் கொல்லவில்லையே என்று இப்போது வருத்தமாக இருக்கிறது…” என்றவன், அடுது்து ஏற்றமாதிபனை ஒருவித வெறியோடு பார்த்தான்.
“அவர்களுக்குப் பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா?” அவன் கேட்க, சற்று அமைதி காத்தவன், பின் ஆம் என்று தலையை அசைக்க, அதைக் கேட்டதும், தன் பிடியை இறுக்கி,
“அவர்களை… அவர்களை என் கையால் கொல்லலாமா?” என்றான் விதுரன் கடும் சீற்றத்தோடு.
அதைக் கேட்டவனுக்கு ஒரு விநாடி தூக்கிவாரிப் போட்டது. இந்த இளம் வயதில் இத்தகைய பழி உணர்ச்சி ஆபத்தாயிற்றே! மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தியவன், அவன் கரத்தை விடுவித்துவிட்டு அவன் தோளில் தட்டி அழுத்திக் கொடுத்து,
“நீ வாழ வேண்டும் விதுரா… நிறைய சாதிக்க வேண்டும். அதுதான் உன்னைப் பெற்றவர்களுக்கு நீ செய்யும் காணிக்கை. அவர்களை என்னிடம் விடு… நான் பார்த்துக் கொள்கிறேன். நிச்சயமாக அவர்களுக்கான தண்டனையை வாங்கிக் கொடுப்பது என்னோட பொறுப்பு. இது சத்தியம்…” என்றவன், அவன் தலையை வருடிக் கொடுத்துவிட்டு விலகிச் செல்ல, விதுரனோ மீண்டும், நெஞ்சம் நிறைந்த வலியோடு, தொலைக்காட்சியைக் கருத்தில் எடுக்காமல் பார்க்கத் தொடங்கினான்.
(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…
(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…
(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…
(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…
(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…
(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…