Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-3/4

(3)

“வாட்?” என்று கிட்டத்தட்ட சத்தமாகக் கத்திவிட்டான் வருண்.

“ஆனால் எப்படி…? நான்தான் விசாரித்தேனே… நான் விசாரித்த வரைக்கும் அந்த ஜெனரிஸ் பயோ-பார்மா நிறுவனத்தில் எந்தத் தவறும் நடந்தது போலத் தெரியவில்லையே ஆதிபா..” வருண் குழப்பத்துடன் சொல்ல,

“நீ எதையோ எங்கோ தவறவிட்டிருக்கிறாய்…” என்றான் ஏற்றமாதிபன் அழுத்தமாக.

“அப்படியென்றால், நீ சந்தேகப்பட்டது போல விதரணையின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் தவறுதலாக நுழையவில்லை; தெரிந்தேதான் நுழைந்திருக்கிறார்கள். அந்த நிறுவனத்திற்கும் விதரணையின் தந்தைக்கும் இடையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது,” என்று வருண் படபடப்புடன் கூற…

“எக்ஸாக்ட்லி…” என்றான் ஏற்றமாதிபன். “நான் போனபோதே அந்த வீடு முற்றிலும் கலைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஏற்கனவே அந்த வீட்டில் எதையோ தேடியிருக்கிறார்கள். ஆக, அறிவழகன் அங்கிள் எதையோ எங்கோ மறைத்து வைத்திருக்கிறார். அது என்ன என்பதைத்தான் முதலில் நாம் கண்டுபிடிக்க வேண்டும்… அறிவழகன் அங்கிள் அந்த நிறுவனத்தின் மருந்துப் பரிசோதகராக  இருந்தவர். அங்கே ஏதோ ஒரு பெரிய தில்லுமுல்லு நடந்திருப்பதை அவர் கண்டுபிடித்திருக்க வேண்டும். அது நிறுவனத்திற்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த ஆவணம் அல்லது அவர் கண்டுபிடித்த ஏதோ ஒன்று, இந்த நிறுவனத்தைத் தரைமட்டம் ஆக்கும் அளவுக்குப் பயங்கரமானதாக இருக்க வேண்டும்; அல்லது சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்க வேண்டும்…” அவன் சொல்ல…

“அது சரிடா… இங்கே சர்வதேசக் குற்றவாளிகளுக்கு என்ன வேலை?” என்றான் வருண் குழப்பமாக.

“சர்வதேச அளவில் இந்த மருந்து மாஃபியா நடைபெறுகிறது போல. உண்மை தெரிந்தால் அந்த நாடுகளுக்கும் சிக்கல் வரலாம்…   சர்வதேசக் குற்றவாளிகள் உள்ளே வந்திருக்கிறார்கள் என்றால், இதன் பின்னணி இன்னும் அபாயகரமானதாக இருக்க வேண்டும். என் ஊகம் சரியென்றால், அறிவழகன் அங்கிளிடம் இருக்கும் ஆவணத்தால் அந்த ஜெனரிஸ் நிறுவனத்திற்கு ஆபத்து இருக்கிற அதேநேரம், அந்த ஆவணம் வேறு யாரோ ஒருவருக்கும் தேவைப்படுகிறது… அதனால்தான் அதை விதரணையின் வீட்டில் தீவிரமாகத் தேடியிருக்கிறார்கள்” என்று தன் யூகத்தைச் சொல்ல…

“நீ சொல்வதும் சரிதான் ஆதிபா… ஒரு வேளை இதற்குப் பின்னால் சீனா இருக்கலாம்…” என்றான் யோசனையோடு.

“இருக்கலாம்… இல்லாமலும் இருக்கலாம்…” என்று அவன் சொல்ல…

“ஆதிபா… இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. நீ விதரணையிடம் பேசிப் பார். நிச்சயமாக அவளுக்கு ஏதாவது தெரிந்திருக்கும். அதை வைத்தே உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்துவிடலாம்,” என்றான் வருண் உறுதியாக.

“ம்… ஆனால் இப்போதில்லை வருண். ஏற்கனவே பெற்றவர்களை இழந்த துக்கத்தில் அவள் உடைந்து போயிருக்கிறாள். அவளுக்குச் சற்று அவகாசம் கொடுக்கலாம். முதலில் அவளை மருத்துவமனை விடுவிக்கட்டும்..” என்று அவன் சொல்ல… வருணும் அதை ஏற்றுத் தன் கைப்பேசியை அணைத்தான்.

மேலும் இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. இந்த இரண்டு வாரங்களில் காவல்துறை விதரணையிடம் விசாரணை என்ற பெயரில் இரண்டு முறை வந்து சென்றது. முன்னால் இருந்தது போலத் தீவிரமாக இல்லையென்றாலும், பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் அவள்.

இதற்கிடையில், விதரணை வீட்டில் இறந்து கிடந்தவர்களைப் பற்றிய விசாரணையில் இறங்கிய காவல்துறைக்கு எதையுமே உருப்படியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடி எது நுனி எது என்று தெரியாமல் என்னவென்று கண்டுபிடிப்பது? இதில் எதிரிகள் வந்த வண்டியைக் கண்டுபிடித்து அதைப்பற்றி விசாரித்தால், அது திருட்டு வண்டி என்று தெரியவந்தது. அந்த வாகனத்தின் உரிமையாளரை விசாரித்தால், அவர் ஏற்கனவே வண்டி தொலைந்து போனதாகவும், அதை காவல்துறைக்கு அறிவித்துவிட்டதாகவும் சொல்ல… அதைக் கேட்ட காவல்துறைக்கு முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்ட உணர்வு!

போதாதற்கு இறந்தவர்களிடம் எந்த அடையாள அட்டைகளும் கிடைக்கவில்லை. அவர்கள் இறந்தபின் ‘காணவில்லை’ என்று எந்தப் புகாரும் வரவில்லை. இதில் அவர்களின் உருவ அடையாளங்களை வைத்து யார் என்று கண்டுபிடிக்க முயன்றபோது, அவர்கள் கனடியர்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. அமெரிக்கா அல்லது மெக்சிகோவிலிருந்து கனடா எல்லைப் பாதுகாப்பு முகமையின் (CBSA) கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வந்திருக்கலாம். இதில் அவர்கள் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்தால் ஓரளவு தகவல்கள் கிடைக்கும் என்கிற நிலையில், திருடப்பட்ட வாகனம் எங்கேயெல்லாம் சென்றிருக்கிறது என்பதை அதன் ஜிபிஎஸ் (GPS) தரவுகள் மூலம் ஆராயத் தொடங்கியது காவல்துறை. இப்போது காவல்துறை அதில்தான் தங்கள் கவனத்தைச் செலுத்தியிருந்தது. எப்படியும் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க இரண்டு மூன்று மாதங்களாவது எடுக்கும்.

ஆனால், ஏற்றமாதிபன் ஏற்கனவே ஒரு முக்கியமான புள்ளியைப் பிடித்துவிட்டான் என்பது அவர்களுக்குத் தெரியாது; இவன் அதைச் சொல்லவும் இல்லை. சொன்னால், “இந்தக் கேசில் தலையிட நீ யார்?” என்கிற கேள்வி வரும். ஏற்கனவே விடுப்பில் இருப்பவன் எப்படிக் குற்றவாளிகளைக் கையாள முடியும் என்கிற கேள்வி அடுத்து எழும்பும். இதையெல்லாம் தாண்டி, “இது எங்கள் வழக்கு, நாங்களே பார்த்துக்கொள்கிறோம்,” என்று அவனைத் ‘டம்மி’ போல ஓரங்கட்டி வைத்துவிடுவார்கள்.

அதைவிட முக்கியமாக, ‘ஜெனரிஸ் பயோ-பார்மா’ போன்ற ஒரு மாபெரும் சர்வதேச நிறுவனத்தின் கரங்கள் காவல்துறைக்குள்ளும் நீட்டியிருக்க வாய்ப்புண்டு. அரசியல் வட்டத்திலும் எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்றும் தெரியவில்லை. இத்தனை சர்வதேசக் குற்றவாளிகள் இவ்வளவு சுலபமாகக் கனடாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றால், அரசியல் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை! நிச்சயமாக இந்த பார்மாவில் ஏதோ ஒரு மிகப்பெரிய திருகுதாளம் நடக்கிறது. இல்லையென்றால், சாதாரண மெக்சிகோ அடியாட்களும், சீனாவிலிருந்து வந்த சர்வதேசக் குற்றவாளிகளும் இதற்குள் இறங்கத் தேவையே இல்லை.

ஆக அவர்கள் சிக்கியிருப்பது ஒரு சிலந்தி வலைக்குள். இதில் சிறு தவறு நடந்தாலும் போதும், அவனுடைய உயிருக்கும் விதரணையின் உயிருக்கும் ஆபத்து நேரலாம். அவனுக்குத் தன் உயிரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால், அவனது கவனத்தையும் மீறி விதரணைக்கு ஏதாவது நடந்துவிட்டால்…? ம்கூம்.. அதைக் கற்பனையில் கூட அவனால் நினைக்க முடியவில்லை! எக்காரணம் கொண்டும் இந்த ரகசியம் இப்போது வெளியே கசிந்துவிடக் கூடாது.  இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பது அவனுடைய பொறுப்பு. ஜெனரிஸ் பயோ-பார்மாவில் ஏதாவது குற்றம் இருக்கும் பட்சத்தில், அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் தார்மீகக் கடமை அவனுக்கும் இருக்கிறது. அதனால்தான் ஒன்டாரியோ காவல்துறையிடம் இதுபற்றி வாயே திறக்கவில்லை.

வருணும், சீனாவிலிருந்து வந்த சர்வதேசக் குற்றவாளியின் கைப்பேசியை ஊடுருவித் தகவல்களைச் சேகரிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான்.  தற்போதைக்குக் கிடைத்திருக்கும் ஆதாரமே இந்தக் கைப்பேசிகள்தான். இதுவும் இல்லையென்றால், திரும்ப ஆரம்பநிலையில் இருந்து தேட வேண்டும்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வெளிக்காற்றைச் சுவாசிக்கிறாள் விதரணை. ஆனால், அந்த இதமான காற்று அவளைக் கொஞ்சம் கூடத் தன்நிலைக்கு இட்டுவரவில்லை என்பதுதான் வேதனையே. மருத்துவமனையில் வலிக்காகப் போடப்பட்ட மருந்தின் உதவியோடு உறங்கி எழுந்தவளுக்கு, அந்த மருந்து மனதின் வலியையும் ஓரளவு உணரவிடாமல் செய்திருந்தது. ஆனால், இப்போது கடந்த ஐந்து நாட்களாக வலி நிவாரணி கொடுப்பதைக் கொஞ்சமாகக் குறைத்து முழுதாக நிறுத்தியிருந்த நிலையில், அவள் உடல் வலியை விட மனவலிதான் அவளை மூச்சு முட்ட வைத்திருந்தது.

தாய், தந்தை இறந்த நினைவு மட்டும் அவள் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்திருந்த நிலையில், அவர்களைத் தொலைத்த வலியை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது கொடுக்கும் வலியே அவளைக் கொன்று புதைத்தது. எதையும் யோசிக் முடியவில்லை, செயலாற்ற முடியவில்லை. புத்தி மனது அனைத்தும் மரத்துப்போன நிலைதனர் அவளுக்கு. அதே மரத்த நிலையில் அவள் அமர்ந்திருக்க, வண்டியின் கதவை மெதுவாகத் திறந்தான் ஏற்றமாதிபன்.

சத்தத்தில் திரும்பிப் பார்த்தவளுக்கு, கதவு திறந்திருப்பதைக் கண்டு தன்னிச்சையாகவே ஒரு கரத்தை மட்டும் உபயோகித்து வண்டிக்குள் அமர்ந்தவள், இருக்கைப்பட்டியைப் போட முயல, இடது நெஞ்சு பயங்கரமாக வலித்தது. அதைக் கண்டுகொண்டவன், குனிந்து  இருக்கைப் பட்டியை மென்மையாக இழுத்துப் போட இருவரின் முகமும் ஒன்றை ஒன்று உரசும் நிலையில் நெருங்கியிருந்தது.

தான் ஆசைப்பட்டவன் இத்தனை நெருக்கத்தில் இருக்கிறான் என்கிற உணர்வு கூட இல்லாமல், தன் முகத்திற்கு மிக நெருக்கத்திலிருந்த அவனுடை முகத்தை உணர்ச்சியற்ற வெறித்துப் பார்த்தாள் விதரணை. முன்பு அவன் நெருக்கத்திற்காக ஏங்கியிருக்கிறாள்; அவனைப் பார்க்கவே தவமிருந்தாள். அவன் காற்றுப் பட்டாலே மயிர்க்கால்கள் சிலிர்த்து எழும்பியிருக்கின்றன. அவன் பெயரைக் காதின் வழி கேட்டாலே இதயம் சிலிர்த்துப் போகும். எத்தனை முறை அபிநயாவின் வாயால் அவனைப் பற்றி கேட்டு அறிந்து, மனதால் தழுவி மகிழ்ந்திருக்கிறாள்! இவ்வளவு ஏன், அவன் தனக்கு இல்லை என்று தெரிந்த பின்பும் கூட அவன் மீது கொண்ட காதல் கொஞ்சம் கூடக் குறையவில்லையே! காலம் போக அது ஆறிய வடுவாக மாறிவிடும் என்று நினைத்திருக்க, ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் அவன் நினைவுதானே அவளை வதைத்தது!

இந்த ஐந்து வருடத்தில் அவனை இம்மியும் அவள் மறந்ததில்லை. ஆனால் இப்போது…? இப்போது ஏன் எதுவுமே தோன்ற மாட்டேன் என்கிறது? உள்ளே வெறுமையாக இருக்கிறதே! அங்கே தாயையும் தந்தையையும் தவிர வேறு எதுவும் நினைவில் வரமாட்டேன் என்கிறதே! என்ன செய்வாள்? இதோ, இப்போது கூட இருக்கைப் பட்டியை இழுக்கும்போது அவனது விரல்கள் அவளது கையைத் தற்செயலாகத் தீண்டத்தான் செய்தன. ஆனால், உள்ளே ஒன்றும் செய்யவில்லை; அவள் அதை உணரக் கூட இல்லை.

ஆனால், ஏற்றமாதிபன்தான் அந்த மெல்லிய தீண்டலிலும் நெக்குருகிப்போனான். அந்த மென்தோலை அவன் விரல்கள் பட்டும் படாமலும் தீண்ட, அவன் ஆண்மை சிலிர்த்துக்கொண்டது மட்டுமில்லை, அந்த மென்னுடலின் அரவணைப்புக்காகவும் அவன் ஏங்கினான் என்று சொன்னால் அது மிகையில்லை. காதல்தான் எத்தனை விசித்திரமானது! வேண்டும் என்கிறது; வேண்டாம் என்கிறது. அருகே நின்றால் ‘தூரப் போ’ என்று சொன்ன அதே காதல், இப்போது அவளை விட்டுப் பிரிய முடியாமல் சண்டித்தனம் செய்கிறது.

ஒருவித ஏக்கத்தோடு இருக்கைப் பட்டியைப் பூட்டிவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான். எப்போதும் துள்ளித் துடிக்கும் மீன் விழிகளில் தெரிந்த வெறுமையும், வெளிறிப்போன முகமும், உடலில் சக்தியே இல்லை என்பது போலச் சோர்ந்திருந்த அவள் நிலையும் அவன் நெஞ்சைப் பிசைய… ஆயிரமாவது தடவையாக அன்று அவளை அழைத்து வந்து உள்ளே விட்டிருக்க வேண்டுமோ என்று நினைத்து மனதிற்குள் நொந்துகொண்டான்.

குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட வேண்டும் என்று எழுந்த உந்துதலைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன், மென்மையாகத் தன் உள்ளங்கையை அவள் கன்னத்தில் வைக்க… அப்போதும் வெறுமையாகத்தான் அவனைப் பார்த்தாள் விதரணை. அந்த விழிகளில் தெரிந்த வெறுமையில் உள்ளம் நொருங்கியவனாக,

“எல்லாம் சரியாகிவிடும் கண்ணம்மா…” என்றான் மென்மையாக.

அதைக் கேட்டவளின் விழிகளின் கருமணிகள் அவன் விழிகளை ஊடுருவிப் பார்த்து,

“என் அம்மாவும் அப்பாவும் உயிரோடு வந்துவிடுவார்களா?” என்றாள் திக்கித் திணறி.

அதற்கு என்ன பதிலைச் சொல்வான்? அழுந்த மூடிய உதடுகளோடு தன் கரத்தை விலக்கிக்கொள்ள… இப்போது விரக்திப் புன்னகை ஒன்று மலர்ந்தது அவளுடைய உதடுகளில். பதில் சொல்லாது மெதுவாக அவளை விட்டு விலகி, கதவைச் சாற்றிவிட்டு ஓட்டுநர் இடத்தில் வந்து அமர்ந்து வண்டியைக் கிளப்ப… வாகனத்தின் கண்ணாடி வழியாகத் தெரிந்த வெளிச்சம் அவளது வெளிறிப்போன முகத்தில் விழுந்தது.

எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் அந்த இதழ்கள் இன்று இறுக்கமாக மூடிக்கொண்டிருந்தன. அவளுடைய அந்த ஒவ்வாத அமைதி பெரும் பாரமாக அந்த வாகனத்திற்குள் மட்டுமில்லை, ஆதிபனின் மனதிலும் நிறைந்திருக்க, அதை எப்படிக் கலைப்பது என்று தெரியாமல் அவன் தவித்துப் போனான். கலைக்கும் அமைதியா அவளுடையது? என்னதான் செய்தாலும் அவள் மனதில் எழுந்த வலியை அடக்கும் சக்தி அந்தக் கடவுளுக்கே இருக்காதே!

‘நான் இருக்கிறேன்டி உனக்கு… என்னை இறுகக் கெட்டியாகப் பிடித்துக்கொள்… உன் உயிராய், உறவாய், உலகாய், உறுதுணையாய் நான் இருக்கிறேன்…’ என்று சொல்லி அவளைத் தன் உயிரோடு கலக்கும் வெறி வந்தது. அப்படியே அவளை ஆட்கொண்டு ‘உன் அனைத்தும் நான்தான்’ என்று சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால், எப்படித்தான் சொல்வான்? அவன் சொன்னாலும் அதை அவள் புரிந்துகொள்வாளா என்ன? மனதிற்குள் நினைத்துக் கலங்கியவன், ஒரு பெருமூச்சோடு, வண்டியை உயிர்ப்பித்து வீடு நொக்கி விட்டான்.

(4)

ஏற்றமாதிபனின் வாகனம் காற்றைக் கிழித்துக்கொண்டு வேக வீதியில் பயணித்து, எங்கோ ஒரு திசையில் திரும்பி, மிகப் பிரம்மாண்டமான வீட்டிற்கு முன்பாக வந்து நின்றது. தான் எங்கே வந்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்த விதரணையைத் திரும்பிப் பார்த்த ஏற்றமாதிபன், வண்டியிலிருந்து வெளியேறி, அதைச் சுற்றி அவள் பக்கமாக வந்து கதவைத் திறந்தான். அதை உணர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் விதரணை.

“வீடு வந்துவிட்டது, இறங்கு விதரணை…” அவன் மென்மையாகச் சொல்ல… மெதுவாக வண்டியை விட்டு இறங்க முயன்றாள் விதரணை. அவனோ அவளுடைய கரங்களைப் பற்றி எழுப்ப முயல,

“இ… இல்லை… நானே… என் பாட்டில் எழுந்து கொள்வேன்…” என்று ஒட்டாத மென்குரலில் சொல்ல… இளம்புன்னகை ஒன்றைச் சிந்தியவன்,

“ம்… நீ உன் பாட்டில் எழுவாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போதில்லை…” என்றவன், பிடிவாதமாக அவள் கரத்தை விடாமல், அவளுடைய தோளைச் சுற்றிக் கரத்தைப் போட்டு எழ வைத்தவன், கரத்தை விலக்காமலே அவளைத் தன்னோடு இறுக்கியவாறு நடக்க முயல, அப்போதுதான் விதரணை தன் சுற்றுச்சூழலைக் கவனித்தாள்.

“இது… இது எங்கள் வீடில்லை…” என்றாள் திக்கித் திணறி. அவனோ அவளை நடக்க வைக்க முயன்றவாறே,

“ம்… இது உன் வீடில்லை. எங்கள் வீடு…” என்றான் மென்புன்னகையோடு.

நடக்க மறுத்தவளைத் தன்னோடு இழுத்துக்கொண்டு அவன் முன்னேற… அவன் சொன்ன ‘எங்கள்’ என்ற வார்த்தையின் அர்த்தம், அப்போதிருந்த மனநிலையில் அவளுக்குச் சரியாகப் புரியவில்லை. ‘இவன் தன் வீட்டிற்கு எதற்காக அழைத்து வந்தான்?’ என்கிற கேள்வியோடு நிமிர்ந்து அந்த வீட்டைப் பார்த்தாள். அவளுடைய வீட்டை விட நான்கு மடங்கு பெரியதாக இருந்தது அது. ஆனால், அது அவளது மனதைத் தொடவில்லை. என்னதான் பெரிய மாடமாளிகையாக இருந்தாலும், அவளுடைய சொந்த வீடு போல வருமா? அங்கேதானே அவள் தாயும் தந்தையும் வாழ்ந்தார்கள்; அவர்களின் ஆத்மா அங்கேதானே சுற்றித் திரியும்! அவளுடைய மகிழ்ச்சி, துக்கம், தவிப்பு எல்லாவற்றையுமே அந்த வீட்டின் ஒவ்வொரு சுவரும் சொல்லுமே!

கண்களில் கண்ணீர் மீண்டும் முட்ட, தன் மறுப்பை, இறுக்கமாக நிலத்தில் ஊன்றிய கால்களின் வழியாகக் காட்டி, நிமிர்ந்து ஏற்றமாதிபனைப் பார்த்தாள்.

“நான் என் வீட்டிற்குப் போக வேண்டும்… என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள்…” என்றாள் இறுக்கமான, பிடிவாதமான குரலில்.

அதைக் கேட்டு மெல்லியதாகக் கோபம் வந்தாலும், அவளுடைய நிலையைத் புரிந்த கொண்டவனாகப் பெருமூச்சொன்றை எடுத்துவிட்டவன்,

“உன்னால் இப்போதைக்கு அங்கே போக முடியாது விதரணை. அது குற்றம் நடந்த இடம். இப்போது அது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தவிர, உனக்கு அங்கே பாதுகாப்பும் இல்லை. கொஞ்ச நாளைக்கு நீ இங்கேதான் இருந்தாக வேண்டும்…” என்று அவன் உறுதியாகச் சொல்ல… வேகமாக மறுத்தாள் விதரணை.

“இல்லை… நான்… நான் என் வீட்டில்தான் இருப்பேன். என்னை விடுங்கள். நான் அங்கேதான் போக வேண்டும்…” என்று அவள் வேகமாகத் திரும்பியவள், அதீத பலவீனத்தால் தள்ளாட… மறுகணம் அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான் ஏற்றமாதிபன்.

அவளோ கோபத்தோடு அவன் கரங்களிலிருந்து திமிறியவாறு,

“நான் இங்கே வரமாட்டேன். என்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்… அங்கேதான் அம்மா, அப்பா இருப்பார்கள்.. என்னை விடுங்கள்…” என்று திமிற, அவனோ அவளுடைய அந்தத் திமிறலை இம்மிகூட மதிப்பதாக இல்லை. அவளைத் தன் உடலோடு இறுக்கியவாறு வேக நடையோடு வீட்டிற்குள் நுழைய… அவளோ உடல் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல்,

“நான் வீட்டிற்குப் போக வேண்டும். என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள்…” என்றவளுக்குத் தன் உடல் வலியிலும் இயலாமையிலும் கோபம் வர, கண்களில் கண்ணீர் பொங்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அவன்தான் விடாக்கண்டனாயிற்றே.

“போகலாம் விதரணை… ஆனால் நிச்சயமாக இப்போதல்ல…” என்றவன், மனதிற்குள், ‘என் மனைவியான பின்பு’ என்று நினைத்தவாறு அவளை அழுத்தமாகப் பார்த்து, “முதலில் உன் உடல் தேற வேண்டும். மனதும் ஒருநிலைப் படவேண்டும்… புத்தி சரியாக வேலை செய்யவேண்டும்… இது எல்லாம் நடந்த பிறகுதான் உன் வீட்டிற்குப் போகமுடியும். அதுவரை நீ எங்களோடுதான்… என்பாதுகாப்பில்தான் இருக்கவேண்டும்” உறுதியாக, அதே நேரம் அழுத்தமாக சொன்னவன், அவளை ஏந்திக்கொண்டு நிதானமாக வீட்டிற்குள் நுழைய, விதரணையோ தன்னை விடுவிக்க முயன்ற தோற்றுச் சோர்வுற்ற நேரம்,

“அக்கா…” என்று வந்த அந்த இளம் குரலின் அழைப்பில், தன் மறுப்பை மறந்து சட்டென்று திரும்பிப் பார்த்தாள் விதரணை.

அங்கே கதவின் ஓரம், கன்னத்தில் கண்ணீர் கொட்ட ஏக்கத்துடன் நின்றிருந்த அந்தச் சிறுவனைக் கண்டு குழம்பிப் போனாள் விதரணை. முதலில் குழம்பிய விழிகள், பின் அதிர்ந்து, விறைத்து, கலங்கித் தவித்து, கடைசியில் அந்தச் சிறுவனிடம் நிலைத்துப் போக… அவனிடமிருந்து தன்னை விடுவிக்கக் கெஞ்சிய உதடுகளோ பேச்சைத் தொலைத்து, ‘விதுரா…’ என்று முனங்கின. அவளால் தன் கண்முன்னே இருந்த சிறுவன் விதுரன் என்றே நம்ப முடியவில்லை!

தாயின் கையால் சளைக்காது வாங்கிச் சாப்பிட்டு, குண்டு குண்டாய் இருந்த தம்பி எங்கே போனான்? எப்போதும் துருதுருவென்று அவளோடு சண்டைக்கு வரும் அவள் அன்புத் தம்பிக்கு என்னாயிற்று? வார்த்தைக்கு வார்த்தை போட்டி போடும் அவளுடைய உயிர்த் தம்பிக்கு என்னானது? ஐயோ… இது நிஜமாகவே என் தம்பிதானா? உடல் இளைத்து, கன்னங்கள் ஒடுங்கி, கண்களில் மட்டும் உயிர்ப்பைத் தேக்கி… இல்லை இது அவள் தம்பியே இல்லை… மூன்று வாரங்களுக்கு முன்பு கடைசியாக அவனைப் பார்த்தபோது கூட, ஓரளவு நன்றாகத்தானே இருந்தான்… என்ன இப்படி மெலிந்து போயிருக்கிறான்? அவளால் தன் தம்பியின் உருவத்தைக் கண்டு தாளவே முடியவில்லை…! அதுவும், அவளைக் கண்ட மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் நடுங்கிக்கொண்டிருந்த இளவலைக் கண்டு துடித்துத்தான் போனாள் அந்தக் காரிகை.

பதறி அவன் கரத்திலிருந்து விலக முயன்றவளை அதிகம் வதைக்காமல் நிலத்தில் விட, தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தன் தம்பியை நோக்கிப் பாய,  அதே நேரம் விதுரனும் தன் சகோதரியை நோக்கிப் பாய்ந்து வர, இடையில் மோதிக்கொண்ட இருவரும் ஒருவரையொருவர் அணைத்தவாறு அழுது கரைந்துவிட்டார்கள்.

“அக்கா… அக்கா… அக்கா…”

“விதுரா… என் தங்கமே… விதுரா… என் செல்லமே…” என்று அவளும், ஒருவருக்குள் ஒருவர் புதைந்துவிடுவது போன்ற இறுகிய அணைப்பில் குலுங்கி அழ… சற்று நேரம் இருவரையும் அழவிட்டு, மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு பார்த்தபடியே நின்றிருந்தான் ஏற்றமாதிபன்.

ஏனோ இருவரையும் சென்று பிரிக்க அவனுக்கு மனம் வரவில்லை. அழட்டும்; அழ அழ அவர்களின் உள்ளத்தில் அழுத்தியிருந்த பாரம் தணியும், அது அவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் என்று நினைத்தவாறு நின்றிருக்க, சத்தம் கேட்டு உள்ளே இருந்து வெளியே ஓடிவந்தாள் அபிநயா. ஒரே உதிரத்தில் பிறந்தவர்கள் இருவரும் நெஞ்சம் வெடிக்க அழுவதைக் கண்டு பதறியவளாக அவர்களை நோக்கி வர… சட்டென்று தன் கரத்தை நீட்டி இடைமறித்துத் தடுத்தான் ஏற்றமாதிபன்.

அபிநயா அவனைக் பார்க்க… விழிகளை மூடித் திறந்து, “அப்படியே விடு” என்று விழி ஜாடையால் கூற, அதற்கு மேல் அவர்களை நெருங்காமல் அங்கேயே நின்றுகொண்டாள். ஆனாலும் இருவரும் அழுவதைக் கண்டு அவளுக்கும் கண்ணீர் கன்னத்தில் வழியவே செய்தது.

ஐந்து நிமிடங்கள் இருவரையும் அழவிட்டவன், இப்போது மெதுவாக அவர்களை நெருங்கினான். விதரணையின் முதுகுப்புறமாக வந்த ஏற்றமாதிபன், பட்டும் படாமலும் அவளுடைய தோள்களில் தன் கரத்தைப் பதிக்க… அவனுடைய தொடுகையில் சுயம் வந்தவளாகத் தன் தோளுக்கும் மேலாக வளர்ந்துவிட்டிருந்த தம்பியை விட்டு விலக முயன்றாள் விதரணை.

ஆனால் அவனோ தன் சகோதரியை இன்னும் இறுக அணைத்தவாறு அவள் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கிடக்க… அவன் முதுகைத் தட்டிக்கொடுத்துத் தேற்றியவளுக்கு, தன் வலியை விடத் தம்பியின் வலியைப் போக்க வேண்டிய அவசியம் புரிந்தது.

“ஷ்… விதுரா… தேற்றிக்கொள் டா… என் கண்ணன்ல…” என்றவள் அவன் முதுகை வருடிக் கொடுக்க… இப்போது உதவிக்கு வந்தாள் அபிநயா.

“விதுரா… என்னடா நீ, எத்தனை தைரியமானவன்! நீ அக்காவுக்குத் தைரியம் சொல்வதை விடுத்து இப்படி அழுகிறாயே.. ம்…” என்று தட்டிக்கொடுத்தவாறு, விதரணையிடமிருந்து விதுரனைப் பிரித்துத் தன் கரத்தின் வளைவில் வைத்துக்கொள்ளத், தன் தோழியைக் கண்டதும் மீண்டும் கண்கள் கலங்கத் தொடங்கினாள் விதரணை.

அதைக் கண்ட அபிநயா, விதுரனின் அணைப்பை விடாமலே, மறுகரத்தால் தோழியின் கரத்தைத் தன் கரத்தில் எடுத்து அழுத்திக் கொடுத்து,

“வெல்கம் பேக் விது…” என்றாள் கனிவும் மென்மையுமாக.

அதைக் கேட்டதும் விதரணையின் முகத்தில் விரக்திப் புன்னகைதான் மலர்ந்தது. அவள் திரும்பி வராமலே இருந்திருக்கலாம்; அவள் பெற்றவர்களோடு இவளும் போய் சேர்ந்திருக்கலாம், இத்தனை வலி வேதனையை அவள் அனுபவிக்கத் தேவையிருந்திருக்காது என்று மனதிற்குள் நினைக்கும் போதே,  மதிவதனியும் வித்யாதரும் அவர்களிடம் வந்துவிட்டிருந்தனர்.

மதிவதனி விதரணையைக் கண்டதும் விரைந்து வந்து, அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொள்ள… மீண்டும் கண்கலங்கினாள் விதரணை.

“சரி… சரிடா தங்கம்… அழாதே…” என்று தேற்றியவாறு விதரணையை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார் மதிவதனி.

வீட்டிற்குள் இருந்த பிரமாண்டமும், அதிநவீன வசதிகளும், பணத்தைக் கொட்டிச் செலவழித்த நூதன அலங்காரங்களும் எதுவுமே விதரணையைக் கவரவில்லை. மனம் முழுக்கக் காயப்பட்டுச் சிறகொடிந்த பறவை போல நொந்து கிடந்தவளுக்கு, இது எதுவுமே அவள் நிலையை மாற்றவுமில்லை, தேற்றவுமில்லை. வந்தவளை அங்கிருந்த மென்னிருக்கையில் இருத்திவிட்டு மதிவதனி அபிநயாவை அர்த்தமாக ஏறிட… தலையசைத்துவிட்டு விதுரனை விட்டு விலகிச் சமையலறைக்குள் ஓடினாள் அபிநயா.

அதே நேரம் மதிவதனி விதரணையின் தலையைத் தன் தோளில் தாங்கி, அவளைத் தட்டியும் வருடியும் கொடுத்துக்கொண்டிருக்க, வித்யாதரோ விதுரனைத் தன் கையணைப்பில் வைத்தவாறு அவனைத் தேற்றிக்கொண்டிருந்தார்.

சற்று நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. அந்த நேரம் அபிநயா விதரணைக்கு மாம்பழச் சாறு எடுத்து வர… அதைத் தன் கையில் வாங்கிய மதிவதனி, அதை விதரணையை நோக்கி நீட்டியவாறு,

“அழக்கூடாதுடா… முதலில் இதைக் குடி…” என்றார் இதமாக.

விதரணையோ மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு, மதிவதனியைப் பரிதாபமாகப் பார்த்து,

“எ… எனக்கு வீட்டிற்குப் போக வேண்டும்…” என்றாள் உதடுகளும் உடலும் நடுங்க. அதைக் கண்ட மதிவதனிக்கே கண்கள் கலங்கிவிட்டன.

“சரிடா… போகலாம்… அதற்கு முதல் இதைக் குடி…” என்று சொன்னவாறு அவளுடைய உதட்டை நோக்கி எடுத்து வர… அழுகையுடன் அவரைப் பார்த்தவள்,

“எனக்கு வேண்டாம்… நான் வீட்டுக்குப் போக வேண்டும்…” என்றாள் திரும்பவும்.

“புரிகிறது கண்ணம்மா.. ஆனால் பார்… இப்போது யாரும் அங்கு போக முடியாதுடா. அது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு உள்ளே விடுவார்களா என்று தெரியாதே…” அவர் சொல்ல… சட்டென்று அவரை உதறிவிட்டு எழுந்து நின்றாள் விதரணை.

“அவர்கள் யார் என்னைத் தடுக்க? அது என் வீடு. என் அம்மாவும் அப்பாவும் வாழ்ந்த வீடு. நான் அங்கே போக வேண்டும்…” ஆத்திரமாகச் சொன்னவள், திரும்பி விதுரனைப் பார்த்து, “நீ வா விதுரா… நாம் நம்முடைய வீட்டிற்குப் போகலாம்,” என்றவாறு வேக நடையோடு வாசலை நோக்கி நடக்க… வாசலுக்குக் குறுக்காக வந்து நின்றான் ஏற்றமாதிபன்.

“விதரணை… எதற்கு இத்தனை பிடிவாதம்? எல்லாம் சரியானதும் உன்னை அங்கே அழைத்துப் போகிறேன்.. புரிந்து கொள்…” என்று ஏற்றமாதிபன் அவளுக்குப் புரிய வைக்க முயல… அவளோ நிமிர்ந்து அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.

ஒருவேளை ஏற்றமாதிபன் அவள் காதலனாக இருந்திருந்தால், அவன் வீட்டில் தங்க அவள் தயங்கியிருக்க மாட்டாளோ என்னவோ! ஆனால் அவன் அந்நியனாயிற்றே! அவளை வேண்டாம் என்று மறுத்து விலகியவன்; ஒரேயடியாக அவளைத் தலைமுழுகியவன்; அவள் காதலைத் துச்சமாக மதித்து ஒதுக்கியவன். அப்படியிருக்கும்போது அவனுடைய வீட்டில் அவள் எப்படித் தங்குவாள்? அது அவளால் முடியும் காரியமா? அத்தகைய அவல நிலைக்கு அவள் இன்னும் வரவில்லையே!

விரக்தியாகப் புன்னகைத்தவள்,

“என்னை அழைத்துச் செல்ல நீங்கள் யார் ஏற்றமாதிபன்?” என்றாள் அவன் விழிகளையே வெறித்துப் பார்த்தவாறு. பின் என்ன நினைத்தாளோ, தலையை உலுப்பிவிட்டு, “நீங்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறீர்கள். இக்கட்டான நிலையில் பக்கபலமாக இருந்திருக்கிறீர்கள். என் தம்பியை உங்கள் கூடவே வைத்திருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் என் தம்பி அநாதையாகியிருப்பான்… இதற்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. ஆனால் பாருங்கள்… உங்கள் தயவில் நான் இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை ஏற்றன்.. நிச்சயமாக இல்லை…” என்று அந்த நிலையிலும் அழுத்தமாகச் சொன்னவள், விதுரனைப் பார்த்து, “நீ வா தம்பி… நம் வீட்டுக்குப் போகலாம்…” என்று சொன்னவாறு வேகமாக அவனை நெருங்கி, அவன் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியேற முயன்றாள்.

அவள் விதுரனைப் பற்றி இழுத்தபோது, அவன் அக்காவுடன் ஓரடி எடுத்து வைத்தாலும், அவனது கண்கள் தவிப்போடும் கலக்கத்தோடும், ஏற்றமாதிபனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தன. அந்தப் பார்வை, இந்தச் சில நாட்களில் ஆதிபன் அவனுக்கு எந்தளவு பாதுகாப்பாக இருந்திருக்கிறான் என்பதை விதரணைக்குச் சொல்லாமல் சொல்ல, அவளுடைய நடையும் ஒரு கணம் தடைப்படவே செய்தது.

என்னதான் சொன்னாலும், இந்த விஷயத்தில் ஏற்றமாதிபன் இல்லாமல் போயிருந்தால், விதுரனின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை அவளால் அந்த நிலையிலும் ஊகிக்கவே முடிந்தது. நிச்சயமாக அநாதையாக எங்கு போவது என்ன செய்வது என்று தெரியாமல் அலமலந்து போயிருப்பான். நிர்க்கதியாகத் தனித்து நின்றிருப்பான். இந்தக் காலத்தில், பொறுப்பேற்க யார்தான் வருவார்கள்? அவன் என்பதால்தானே விதுரன் மிகுந்த பாதுகாப்பாக இருந்தான். அதை நினைத்து நெஞ்சத்தின் நடுவே நன்றிப்பெருக்கு பொங்கியெழவே செய்தது. அதயும் தாண்டி வீட்டிற்குப் போகும் வேகம் அவளை உந்தித் தள்ள, தடைப்பட்ட நடை, மீண்டும் முன்னேறத் தொடங்க,  இப்போது ஏற்றமாதிபனின் கரம் அவளுடைய மறுகரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டது.

அவளது கரத்தைப் பற்றிய அவனது விரல்களில் தெரிந்த இறுக்கமும் அழுத்தமும், அவளைத் தடுத்து நிறுத்துவதை விட, அவள் மீண்டும் பெரிய ஆபத்தில் விழுந்துவிடக் கூடாது என்கிற அவனுடைய பாதுகாப்பு உணர்வை அப்பட்டமாகப் புரிய வைக்க… அவனை நிமிர்ந்து பார்த்தாள் விதரணை. அவனுடைய முகத்தில் இப்போது கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவசரமாகத் தன் கரத்தை விடுவிக்க முயல, அவனோ தன் பிடியை இன்னும் இறுக்கியவாறு,

“விதரணை… நீ இருக்கும் நிலையில் உன்னால் தனியே எங்கேயும் போக முடியாது. உனக்கு உதவி தேவை. அதுமட்டுமில்லை, பாதுகாப்பும் வேண்டும்… நீ இங்கே இருப்பதுதான் உனக்கு நல்லது, புரிந்து கொள்…” என்று அவன் சொல்ல… அவளோ விரக்தியாக அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“பாதுகாப்பு…? யாருக்கு வேண்டும் உங்கள் பாதுகாப்பு? உயிரோடு இருக்க ஆசைப்படுபவனுக்குத்தான் பாதுகாப்பு வேண்டும். எனக்கோ தம்பிக்கோ தேவையில்லை…” சொன்னவாறே பிடிவாதமாக அங்கிருந்து நடக்க முயலும் போதே, உடலில் அவளையும் மீறிய பலவீனம் அவளை ஆட்கொள்ளத் தொடங்கியது.

அதை ஏற்றமாதிபன் உணர்ந்துகொண்டான் போல!

“விதரணை… தேவையற்றுப் பிடிவாதம் பிடிக்காதே. நீ எதையுமே உணரும் நிலையிலோ, புரியும் தன்மையோடோ இல்லை. நீ மிகவும் பலவீனமாக இருக்கிறாய். அதுவும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாய்… இதனால் உன் புத்தி சரியானதை யோசிக்காது. புரிந்து கொள்.. இங்கே பார் விதரணை, நீ உன்னை மட்டும் ஆபத்துக்குள் தள்ளவில்லை; உன்கூடச் சேர்ந்து உன் தம்பியையும் தள்ளப் பார்க்கிறாய்… அது உனக்குப் புரிகிறதா இல்லையா…?” என்று அவன் அழுத்தமாகக் கேட்க… அங்கிருந்து போனால் போதும் என்பது போலத் தன் கரத்தை விடுவிக்க முயன்றுகொண்டிருந்தவள், அவன் சொன்னதைக் கேட்டதும் சட்டென்று தன் முயற்சியை விடுத்து விறுக்கென்று நிமிர்ந்து ஏற்றமாதிபனைப் பார்த்தாள்.

‘அதுதானே… அவளுடைய கோபத்திற்காக அவள் தன் தம்பியைப் பலிகடாவாக்கப் போகிறாளா? இது என்ன நியாயம்? அதுவும் அவனிருக்கும் இந்த நிலையில் அவனுடைய உணர்வுகளோடு விளையாடுவது சரியா?’ இப்போது கலக்கத்தோடு திரும்பி விதுரனைப் பார்த்தாள். ஒரு பொம்மை போல என்ன செய்வது என்று தெரியாமல் அவள் இழுப்பிற்கு இழுபட்டவாறு நின்றிருந்தான் அவன். பழைய விதுரனாக இருந்திருந்தால் இப்படியா இருந்திருப்பான்? எத்தனை கிண்டல், எத்தனை எள்ளல், எத்தனை கோபம்… மொத்தமாக அவள் காலை வாரிவிட்டிருப்பானே! இப்போது முடக்கப்பட்ட இரும்பு மனிதன் போல அல்லவா அவளைப் பார்த்தவாறு நிற்கிறான்!

மீண்டும் கண்களில் அருவியாய்க் கண்ணீர் பொங்கத் தொடங்கியது. மெதுவாக விதுரனிடமிருந்து தன் கரத்தை நீக்கிக்கொண்டவள், தன் தம்பியைச் சற்று நேரம் பரிதாபமாகப் பார்த்தாள். அவளுக்கும் அடுத்து என்னசெய்வது என்கிற புரியாத குழப்பம் ஆட்டிப்படைக்கவே செய்தது. அவளால்தான் எதையும் தெளிவாக யோசிக்கவோ செயற்படுத்தவோ முடியவில்லையே… இந்த நிலையில் தன் தம்பியை அவளால் பார்த்துக்கொள்ள முடியுமா? அவளுடைய பிடிவாதத்தால் தன் தம்பியை எதற்குப் புதைகுழிக்குள் தள்ள வேண்டும்?

விதுரனின் ஒடுங்கிய தோள்களும், பயம் படிந்த விழிகளும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத அவன் தடுமாற்றமும் குழப்பமும், அவளுடைய தன்மானத்தை ஒரு விநாடி நொறுக்கிப்போட்டது என்றுதான் சொல்லவேண்டும். ‘எனக்குத்தான் உயிரின் மீது ஆசையில்லை; எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கிறேன். ஆனால், என்னுடைய தம்பி…? அவனுக்காக அந்த முடிவை எடுக்க நான் யார்? அவனுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கிறது; அவன் வாழவேண்டாமா? என்னுடைய பிடிவாதத்தால் அவனுக்கு ஏதாவது நடந்துவிட்டால்?’ நினைக்கும் போதே அவளுடைய உடல் தூக்கிப்போட்டது. ‘என்னுடையசுயகௌரவத்துக்காக அவன் வாழ்க்கையை அடமானம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இல்லை.. அவனாவது சந்தோஷமாக, நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்…’ என்று முடிவு செய்தவளாக, அழுந்தப் பற்றியிருந்த தன் தம்பியின் கரத்தை மெதுவாக விட்டாள் விதரணை. கண்களோ தடையின்றிக் கண்ணீரைச் சிந்திக்கொண்டிருக்க, திரும்பித் தன் தம்பியை நெருங்க, அப்போதுதான் தன் மறு கரம் ஏற்றமாதிபனின் பிடியிலிருப்பது புரிந்தது.

மெதுவாகத் தன் கரத்தைத் திருப்பி அவன் கையிலிருந்து தன் கரத்தை விடுவித்தவள், விதுரனை நெருங்கி, அவன் முகத்தைத் தன் உள்ளங்கைகளால் பற்றி, ஆசைதீரத் தன் தம்பியைப் பார்த்தாள். அவன் நெற்றியில் மென்மையாக உதடுகளைப் பதித்து விடுவித்தவள், மெதுவாக அவனை விட்டு விலகித்  திரும்பித் தயக்கத்தோடு மதிவதனியைப் பார்த்தாள்.

“ஆ… ஆன்டி… இவனை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கொள்வீர்களா…? எ.. எல்லாப் பிரச்சனையும் தீர்ந்ததும் இவனை அழைத்துச் செல்கிறேன்… ப்ளீஸ்…” என்று அவள் கெஞ்சலாகக் கேட்க… உருகிப்போனார் மதிவதனி.

“என்னம்மா நீ… இதெல்லாமா நீ என்னிடம் கேட்க வேண்டும்? அவனை மட்டுமில்லை, உன்னையும் சேர்த்து நான் பார்த்துக்கொள்வேன்டா…” அவர் மென்மையாகச் சொல்ல… மறுப்பாகத் தலையசைத்தாள் விதரணை.

“இ… இல்லை… வேண்டாம்… நான்… நானே என்னைப் பார்த்துக் கொள்வேன்…”  அதற்கு மேல் பேச்சு வராமல் தடைப்பட, அவசரமாகத் திரும்பியவள், ஏற்றமாதிபனை நிமிர்ந்து பார்த்தாள். அவனோ இறுகிய முகத்தோடு, அழுந்த மூடிய உதடுகளோடு அவளைத்தான் வெறித்துக்கொண்டிருந்தான். அந்த முகமே சொன்னது, அவன் பிடிவாதத்தையும், கோபத்தையும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் அவளில்லையே.

அவளுக்கு வீட்டிற்குப் போக வேண்டும். அங்கே தன் தாய் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுக்க வேண்டும்; உறங்க வேண்டும். “இது எல்லாம் கனவுடா பயப்படாதே,” என்று அம்மாவும் அப்பாவும் சொல்ல வேண்டும். அதுதான் இப்போது அவளுடைய மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அதுமட்டுமில்லை, அவளுடைய தாய் தந்தையின் இறப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆம், கண்டுபிடித்தே ஆக வேண்டும்!

கடந்த ஒரு வாரமாக அவள் மனத்தை ஆக்கிரமித்திருந்தது இதுதான். முன்பு என்ன நடந்தது என்பதை யோசிக்கும்போது கரிய நிழல்தான் நினைவில் வரும். நாட்கள் போகப் போகத் தாய் தந்தையின் இறப்பு மனதில் தோன்றி அவள் புத்தியைப் பேதலிக்க வைத்திருந்தது. இப்போது சில நாட்களாக அவளால் கொஞ்சம் சுயாதீனமாக யோசிக்க முடிந்தது. பெரிதாக எதுவும் நினைவு வரவில்லை என்றாலும், தாய் தந்தையின் மரணத்தை ஒருவித இறுகிய நிலையில் அவளால் நினைத்துப் பார்க்க முடிந்தது. ஒரு கரிய உருவம் அவர்களின் கழுத்தை அறுப்பது வரை அவளால் நினைக்க முடிந்தது. இதில் யாரும் இல்லாத நேரத்தில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்து, இரத்த அழுத்தத்தை எகிறச் செய்து தோற்றுப் போனதுதான் மிச்சம்.

கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை சரியான போதும், மந்தமாய் வராமல் போன சம்பவங்களை அவள் மீட்டெடுக்க எவ்வளவோ முயன்றாள். ஆனால், புத்திதான் அதை இரைமீட்டு, நடந்த சம்பவம் அனைத்தையும் அவளுக்கு முழுமையாகக் காட்சிப்படுத்த மறுத்தது. மங்கலாகத் தெரிந்த அந்த உருவங்கள் அவள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்துவிட்டுத் தப்பிச் சென்றன. ஒருவேளை அவளுடைய வீட்டின் வாசலில் கால் வைத்தால், மந்தமாகக் கிடக்கும் உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் உயிர் வந்துவிடாதா? அந்த எண்ணம்தான் அவளுக்கு!

புத்திக்குள் சிதறலாய் மின்னத் தயங்கும் அந்தக் கொடிய நினைவுகள் உருப்பெற்று அவளுக்கு உண்மையைக் காட்டிக் கொடுக்காதா? அதனால்தான் அவளை மருத்துவமனை விடுவித்ததும், வீட்டிற்குப் போகிறோம் என்கிற நிம்மதியில் மறுக்காமல் ஏற்றமாதிபனோடு கிளம்பியிருந்தாள்.

ஆனால் அவனோ அவளை அவனுடைய வீட்டிற்கு அல்லவா அழைத்து வந்திருக்கிறான்! சும்மாவே சிந்திக்க மறுக்கும் புத்தி, இங்கே இருந்தால் எப்படி நடந்ததை முழுமையாக மீட்டெடுக்கும்? இல்லை, அவள் போயே ஆக வேண்டும். தன் தந்தையையும் தாயையும் கொன்றவர்களைக் கண்டுபிடித்து அவள் கையால் கொல்ல வேண்டும். அது சாத்தியமா இல்லையா என்பதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. பழிக்குப் பழி என்கிற எண்ணம்தான் அவளிடம் மேலோங்கி நின்றிருந்தது. ஆனால், அந்தக் கொடியவர்களின் விரல் நகத்தைக் கூட அவளால் தொட முடியாது என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லையே!

அவளும்தான் என்ன செய்வாள்? குழம்பிய மனதோடும் புத்தியோடும் போராடிக் கிடப்பவளுக்கு நிதர்சனம் எப்படிப் புரியும்? ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்பது போல, எப்படியாவது தன் நினைவுகளை மீட்டெடுத்துவிட வேண்டும் என்கிற வேகத்தோடு, வேகமாக நடந்தவளுக்கு, ஒரு அளவுக்கு மேல் முன்னேற முடிந்திருக்கவில்லை.

காரணம், மலைப்பாம்பென ஏற்றமாதிபனின் வலிய கரம் இவள் இடையைச் சுற்றி வளைத்து, பட்டுப் போன்ற வயிற்றில் ஆக்ரோஷமாகப் பதிந்து இழுத்து, தன் கதகதப்பான வெம்மையான தேகத்தோடு மோதவைத்து, பாதுகாப்பு அரணாய் அவள் பின்னுடலோடு மோதச் செய்து இறுகப் பிடித்திருந்தது.

ஏற்றமாதிபனிடம் இத்தனை வேகத்தை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

முதலில் அதற்கான காரணம் புரியாமல் குழம்பியவள், பின் தன் வயிற்றில் அவன் கரம் அழுத்தமாகப் பதியவும்தான், அவன் தன்னைப் பற்றி இழுத்ததே புத்திக்கு உறைத்தது. கோபமும் அழுகையுமாக அவன் முடிகள் அடர்ந்த பலம் பொருந்திய கரத்தை விலக்கமுயன்றாள் அந்தப் பேதை. அந்தோ பரிதாபம்; விலக்கும் வகையிலா அவன் பற்றியிருந்தான்? அவன் கரத்தின் மீது தன் கையைப் பதித்தவளுக்கு, அக்கரத்தை இம்மி கூட அசைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவள் வயிற்றைச் சுற்றி அழுத்தியிருந்தான் அவன்.

எரிச்சலும் கோபமுமாக அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்குத் திக்கென்றானது.

அவளை விட ஓரடிக்கும் மேலான உயரத்தில், கோழிக் குஞ்சென ஒடுங்கி நின்றவளைத் தன் பெரிய சிறகுக்குள் அடைகாக்கும் கோல்டன் ஈகிள் போல அவளைக் குனிந்து பார்த்தவாறு நின்றிருந்தான் அவன். அதுவும் அவனுடைய விழிகளில் கோபம் அப்பட்டமாகத் தெரிய, அந்தக் கோப விழிகளை ஏனோ அவளால் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. அவசரமாகத் தன் விழிகளை விலக்கியவள், அவனிடமிருந்து விடுபட முயன்று தோற்றவளாக,

“வி.. விடுங்கள் என்னை…” என்றாள் சீற்றமும் தவிப்புமாக. அவனோ அவளையே அழுத்தமாகப் பார்த்தவாறு அப்படியே நின்றிருக்க, இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்து,

“தயவு செய்து என்னை விடுங்களேன் ஏற்றன்…” என்றாள் இதற்கு மேல் போராடும் சக்தியில்லாதவளாக. அவனோ மறுப்பாகத் தலையை அசைத்து மட்டுமல்லாமல், தன்  கரத்தின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்க, மேலும் அவன் உடலோடு நசிபட்டாள் விதரணை.

அவனின் இறுகிய பிடி அவளை நிலைகுழையச் செய்ததோ,

“எ.. என்னை விடுங்கள் ஏற்றன்.. நான் போக வேண்டும்… நான் வீட்டிற்குப் போக வேண்டும்…” என்றவள் இப்போது ஆவேசம் வந்தது போலத் திமிறியவள், அவன் இறுகிய பிடியை அடித்துக் கிள்ளித் தள்ளிவிட முயன்று தோற்றுக் கடைசியில்,

“என்னை விடுங்கள்… நான் அம்மா அப்பாவிடம் போகவேண்டும்…” என்று முனங்கியவாறே  அதற்கு மேலும் போராடத் தெம்பில்லாதவளாய்க் கால்கள் துவள, அப்படியே அவன் கரங்களில் மயங்கிச் சரிய… அதை எதிர்பார்த்தவன் போல, அவளைத் தன் உடலோடு இறுக அணைத்துத் தாங்கிக் கொண்டான் ஏற்றமாதிபன்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
5
+1
1
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-1

(1) துப்பாக்கி வெடித்த சத்தம் குடோனின் கூரையை அதிரவைக்க, சென்-வாங்கின் உயிர் பிரிந்த அதே விநாடியில் ஏற்றமாதிபனின் உடல் எதிர்வினையாற்றியது.…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 28

(28) மேலும் இரு நாட்கள் கழிய திரும்ப விதுரனைப் பார்க்கவேண்டும் என்று தொடங்கி விட்டாள் விதரணை. அதைக் கேட்டவனின் முகம்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 27

(27)   இதோ மூன்று வாரங்கள் கடந்திருந்தன. காயங்கள் ஆறியிருக்க, கட்டுகள் அவிழ்க்கப் பட்டிருந்தன. சத்திரசிகிச்சையால் வெளியேறும் இரத்தம் வடிந்து…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 26

(26)   “ஹே... எழுந்துவிட்டாயா?” என்று ஆங்கிலத்தில் குதூகலமாகக் கேட்டவாறு அவளை நோக்கி விரைந்து வந்த விக்டோரியா, அவசரமாக அவளுடைய…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 25

(25)   மூன்று நாட்கள் கடந்திருந்தன. அவளுக்குப் பொருத்தியிருந்த பெரிய பிராணவாயு குழாயை நீக்கிவிட்டு, மூக்கில் மட்டும் பிராணவாயு போகும்…

2 weeks ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 24

(24)   முதலில் ஊபரை அழைத்து விதரணையின் வீட்டிற்குத்தான் சென்றிருந்தான். அங்கே இன்னும் காவலர்கள் யார் யாரையோ அழைத்து விசாரணை…

2 weeks ago