துப்பாக்கி வெடித்த சத்தம் குடோனின் கூரையை அதிரவைக்க, சென்-வாங்கின் உயிர் பிரிந்த அதே விநாடியில் ஏற்றமாதிபனின் உடல் எதிர்வினையாற்றியது. கண்ணிமைக்கும் நொடியில் திரும்பியவன் தன் கரத்தை வருணை நோக்கி நீட்டியவாறு வாசலை நோக்கிப் பாய… அந்த நொடியே ஆதிபன் எதைக் கேட்கிறான் என்பதைச் சொல்லாமலேயே புரிந்துகொண்ட வருண், ஒரு நொடியும் தாமதிக்காமல் தன் இடையிலிருந்த துப்பாக்கியை உருவி, அவன் பிடிப்பதற்கு ஏதுவாகக் காற்றில் சுழலவிட்டு ஆதிபனை நோக்கி எறிந்தான்.
ஓடும் வேகத்திலேயே சற்று மேலாகச் சுழன்று வந்த துப்பாக்கியை, வேகப் பாய்ச்சலோடு காற்றில் மிதந்து பற்றிக்கொண்டவன், கையோடு துப்பாக்கியின் சேஃப்ட்டி லாக்கை விடுவித்தவாறு தன் வேகத்தைக் கொஞ்சம் கூடக் குறைக்காமல், குடோனின் உடைந்த சுவர்ப் பகுதியிலிருந்து வேட்டையாடும் சிறுத்தை போல வெளியே பாய்ந்தான். மாலை நேரத்தைத் தொடுவதாலும், அது காட்டுப் பகுதி என்பதாலும் சூரியனின் ஒளி பெரிதாக விழாத நிலையில் இருட்டடித்துக் கிடந்த காட்டிற்குள், மின்னல் எனக் குண்டு வந்த தெற்குத் திசையை நோக்கி காற்றைக் கிழித்தவாறு பாய்ந்தான்.
அவன் நினைத்தது சரியே! சுமார் நூறு மீட்டர் தொலைவில் இருந்த ஒரு முதிர்ந்த மரத்தின் அடர்ந்த கிளைகளிலிருந்து ஒரு உருவம் கீழே குதிக்க முயல்வதை அவனுடைய கூர்மையான விழிகள் கண்டுகொள்ள, இன்னும் தன் வேகத்தைக் கூட்டினான் ஏற்றமாதிபன்.
அதே நேரம், மரத்திலிருந்து கீழே இறங்க முயன்றவன், ஏற்றமாதிபனிடம் அத்தகைய வேகத்தை எதிர்பார்க்கவில்லை போல, ஒரு விநாடி தடுமாறியவன், மறு கணம், தன் கையிலிருந்த துப்பாக்கியை கண்ணிமைக்கும் நொடியில் பையில் திணித்துவிட்டு, மரத்திலிருந்து குதித்து இறங்கி, அடுத்த கணம் காற்றைக் கிழித்தவாறு பாய… ஏற்றமாதிபனும் அதைக் கண்டு, பாய்ந்த வாக்கிலேயே துப்பாக்கியைக் குறிவைத்துச் சுட, அவன் நல்ல நேரம், அவனை ஒரு மரம் தடுத்து நிறுத்திக் காப்பாற்றியிருந்தது.
“ஷிட்…” வாய்க்குள் முனங்கியவன், மீண்டும் தன் வேகத்தைக் கூட்டி ஓடினான்.
இருவருக்குமான இடைவெளி சற்று அதிகரிக்க, நின்றவன், துப்பாக்கியைச் சரியாகப் பிடித்தவாறு, “ஓடாதே… நில்…!” என்றான் கர்ஜனையாக. ஆனால், அவனோ இன்னும் தன் வேகத்தைக் கூட்ட… மறுகணம் ஆதிபன் குண்டைத் துப்பத் தயாராக, அடர்ந்த மரங்களுக்கு இடையே ஓடியவனைக் குறிவைப்பது ஒன்றும் அத்தனை சுலபமில்லையே. முயன்றவன் முடியாமல் போக, மீண்டும் எதிரியை நோக்கி மின்னல் வேகம் எடுத்தான் ஏற்றமாதிபன்.
இருவரின் காலடிகளும் தரையில் இருந்த காய்ந்த சருகுகளின் மீது பட்டு ‘தொப் தொப்’ என்கிற ஓசையுடன் நகர்ந்து செல்ல… ஏற்றமாதிபனோ அடிக்கடி கண்களை விட்டு மறையும் எதிரியை விழிகளின் குறி தப்பாமல் பின்தொடர்ந்து ஓடினான்.
இதில் எதிரி வேறு சாகசங்கள் பல செய்துதான் பாய்ந்து ஓடினான். குரங்கு கூட அத்தனை வேகத்தல் மரங்களைத் தாவி ஓடியிருக்குமா என்பது சந்தேகம்தான். நிச்சயமாக அவன் பாய்ந்தோடும் பயிற்சியைப் பெற்றிருக்கவேண்டும். இல்லை என்றால் அடர்ந்த இந்த மரங்களுக்கு மத்தியில் இத்தனை இலாவகமாக ஓட முடியாது. ஏற்றமாதிபனுக்கே தண்ணி காட்டும் அளவுக்கு ஓடினான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ஏற்றமாதிபனுக்கு அவனைச் சுட்டுக் கொல்வதில் ஒன்றும் சிரமமில்லைதான். ஒரே ஒரு தோட்டா, அவன் கதை முடிந்தது. ஆனால் அவனுக்கு எதிரி உயிரோடு அல்லவா வேண்டும். இதில் காலின் கீழே சுடுவதற்கு ஏதுவாகக் குறிவைக்க முடியவில்லை. தவிர எக்குத் தப்பாக எங்காவது சுட்டுவிட்டால்… அதனால், அவனைச் சுடத் தூண்ய புத்திய அடக்கியவாறு இன்னும் வேகம் கூட்ட இருபது நிமிட வேக ஓட்டத்தின் பின், ஒரு சரிவான பள்ளத்தில் அந்த உருவம் இறங்க முயன்றபோது, ஏற்றமாதிபன், சட்டென்று நிலைகொண்டு, ஓடி வந்ததில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, துப்பாக்கியை உயர்த்திக் குறி பார்த்து விசையை அழுத்தினான்.
‘டமார்’ என்ற சத்தத்துடன் வெளிவந்த குண்டு, சரியாக அந்த உருவத்தின் வலது காலின் கெண்டைச் சதையைத் துளைத்துச் செல்ல, அந்த எதிரியோ குண்டு பட்ட வேகத்தில் நிலைதடுமாறி, அந்தச் சரிவில் உருண்டு விழுந்தான்.
விழுந்தவனை நோக்கி மின்னல் வேகத்தில் ஏற்றமாதிபன் இறங்கி ஓட… அவனுடைய வேகத்தைக் கண்டுதான் பிடிபடப் போகிறோம் என்பதை உணர்ந்த அந்த எதிரி, ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. கழுத்தில் தொங்கிய கருகுமணி மாலைக்கு நடுவில் இருந்த திரவம் அடங்கிய சயனட் குப்பியை எடுத்து வாயில் கடிக்க, ஏற்றமாதிபன் அவனை நெருங்குவதற்குள் நுரைதப்பி உயிரை விட்டிருந்தான் அவன்.
இதை ஏற்றமாதிபன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை! அவன் அடுத்து என்ன செய்யப்போகிறான் என்பதை அவன் ஊகித்து நெருங்குவதற்குள், அவன் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
அவனை வேகமாக நெருங்கிய ஏற்றமாதிபனுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. இத்தனை வேகமாக அவனைப் பிடிக்க முயன்றும் பயனில்லாமல் போய்விட்டதே! எரிச்சலோடு முணுமுணுத்தவன், தரையில் நிறம்தப்பிக் கிடந்தவனை நோக்கி வந்தான். உடல் முழுவதும் கறுத்த ஆடை, முகம் தெரியாதவாறு இறுக்கமான கறுப்பு முகமூடி, சயனைட் கடிப்பதற்காக வாய்க்குக் கீழ் இறங்கியிருந்தது.
“சே!” என்று ஆத்திரத்தோடு பற்களைக் கடித்துச் சொன்னவன், ஓடிவந்ததில் பூத்த வியர்வையை தன் மேல் கரத்தால் துடைத்துவிட்டு, அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து சற்று விலகியிருந்த அவனுடைய கறுப்பு முகமூடியை விலக்கிப் பார்த்தான். இதுவரை பார்த்திராத சீன முகம். அடுத்து அவனுடைய வலது கரத்தைத் தூக்கி, கரத்தை மறைத்திருந்த ஆடையை விலக்கி மணிக்கட்டைப் பார்த்தான். அவன் சந்தேகம் சரி என்பது போல, அவன் ‘லாவோ-ஹு’ குழுவைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது.
அவன் கரத்தை அப்படியே விட்டவன், கரங்களால் அவன் உடலைத் தட்டியும் அழுத்தியும் சோதனையிட்டுப் பார்த்தான். அவனது கறுத்த ஜாக்கெட்டின் உட்புறப் பையில் கடினமான ஏதோ ஒன்று தட்டுப்பட, கையை நுழைத்து அதை எடுத்துப் பார்த்தான். நவீன ரகக் கைப்பேசி.
தொடர்ந்து வேறு ஏதாவது சிக்குமா என்று பார்த்தான்; இல்லை. அவன் தோளில் தொங்கிய பையை இழுத்து எடுத்தவன் அதைத் திறந்து கவிழ்த்துப் பார்த்தான். சென்-வாங்கைக் கொன்ற துப்பாக்கி VSS Vintorez உதிரிப்பாகங்களாகக் கீழே கொட்டியிருந்தன. கூடவே சூயிங்கம், ஒருசில பேனாக்கள், கொஞ்சம் சில்லறை, ஒரு கட்டுப் பணம், கையோடு சீன தேசத்துக் கடவுச்சீட்டு.
அந்தக் கடவுச்சீட்டை விரித்துப் பார்த்தான். ‘ஷான்-மாவோ, வயது இருபத்தெட்டு’ என்று அவனுடைய விபரங்கள் அதில் இருந்தன. அந்த நேரம் அவனுக்குப் பின்னால் வேகமாக ஒரு உருவம் வருவது தெரிய… பெருமூச்சோடு கையிலிருந்த கடவுச்சீட்டை அவன் உடம்பின் மீதே விட்டெறிந்தான் ஏற்றமாதிபன். வேறு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். ஒருசில இரசீதுகள் என்று தேவையற்ற குப்பைகள்தான் இருந்தன. நிச்சயமாக அவை அவனுக்கு உதவப்போவதில்லை. சலிப்போடு அவன் எழ,
“என்னாச்சு ஆதிபா… ஏதாவது கிடைத்ததா?” பரபரப்புடன் கேட்டவாறு பின்னால் வந்து நின்றான் வருண்.
அவனைத் திரும்பிப் பார்த்த ஏற்றமாதிபன் உதட்டைப் பிதுக்கிவிட்டு, தன் கையிலிருந்த கைப்பேசியைத் தூக்கிக் காட்டினான்.
“இந்தக் கைப்பேசி மட்டும்தான் கிடைத்தது வருண்,” என்று அவன் சொல்ல… அதைத் தன் கரத்தில் வாங்கியவாறு,
“அந்தக் கடவுச்சீட்டில் நமக்குத் தேவையானது இருக்காதா?” என்றான் வருண், எதிரியின் மார்பில் விழுந்திருந்த கடவுச்சீட்டைச் சுட்டிக்காட்டி.
“பயனிருக்காது. இவனும் சீனாவிலிருந்துதான் வந்திருப்பான். சென்-வாங் புதிது என்பதால், அவன் ஏதாவது சொதப்பிவிடுவானோ என்கிற ஐயத்தில் இவனை அவன் பின்னே அனுப்பியிருக்கிறார்கள்… அதனால் இவன் தன் உண்மைப் பெயரைச் சொல்லி கனடாவிற்குள் வந்திருக்கமாட்டான். இவனைப் பற்றி ஆராய்வது தேவையில்லாத நேர விரயம். நமக்குக் கையில் கிடைத்திருக்கிற ஆதாரம் இந்தக் கைப்பேசிதான்…” என்றான் தன் கையிலிருந்த துப்பாக்கியின் சேஃப்ட்டி லாக்கைப் போட்டவாறு.
வருணோ தன் கரத்திலிருந்த கைப்பேசியை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு புருவங்கள் சுருங்க,
“இதுவும் எந்தளவுக்கு உதவும் என்று தெரியவில்லையே…” என்றவன், அதன் மென்பொருள் கட்டமைப்பைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு,
“ஆதிபா… இதில் ‘பிசிக்கல்’ சிம் கார்டு போடும் வசதி கூட இல்லையே? ஒருவேளை இது ‘சாட்டிலைட்’ இணைப்பா?” என்று சந்தேகத்துடன் கேட்க… ஏற்றமாதிபன் அவனிடமிருந்து அந்தக் கைப்பேசியை வாங்கி, அதன் வடிவமைப்பை ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தான்.
“ஷிட்!” என்றான் எரிச்சலும் கோபமுமாக. அதைக் கண்டதுமே வருணுக்குப் புரிந்துபோனது, அந்தக் கைப்பேசியை ஊடுருவுவது இயலாத காரியம் என்று.
“என்னடா? நிழல் உலகக் குற்றவாளிகள் பயன்படுத்தும் ‘கோஸ்ட் போனா’?” என்று கேட்க… ‘ஆம்’ என்றவாறு விழிகளை அழுந்த மூடித் திறந்தான் ஏற்றமாதிபன்.
இப்போது வருணின் முகத்திலும் நிழல் படர்ந்தது.
“அப்புறம் எப்படித்தான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது? இந்தக் கைப்பேசியில் சாதாரணத் தொலைபேசிகளில் இருப்பது போல IMEI எண் இருக்காது. உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஹேக்கர்களால் கூட இதில் ஊடுருவி, உள்ளே இருக்கும் விபரங்களைப் பார்க்க முடியாதவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்,” என்று சோர்வுடன் சொல்ல… பெருமூச்சோடு ஆமோதித்தான் ஏற்றமாதிபன்.
“இதிலுள்ள ‘கிரிப்டோகிராஃபிக்’ பாதுகாப்பு வளையத்தை உடைப்பது சாதாரண காரியமில்லை. இதில் நாம் ஒருமுறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டாலோ, அல்லது கணினியுடன் இணைத்து வலுக்கட்டாயமாகத் தரவுகளை எடுக்க முயன்றாலோ, அடுத்த விநாடியே இதிலுள்ள தகவல்கள் அனைத்தும் தானாகவே அழிந்துவிடும்,” என்றான் நெற்றியை நீவியவாறு.
“இந்தக் கைப்பேசிகளைச் சாதாரண மக்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். ஒரு நாட்டின் புலனாய்வுத் துறையில் இருப்பவர்கள், உயர்மட்டப் பாதுகாப்பில் உள்ளவர்கள், இராணுவம், உளவு நிறுவனங்கள், தூதரகம் – இவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய கைப்பேசிகளை வைத்திருக்க அனுமதி உண்டு. இது தவிர நிழல் உலகக் குற்றவாளிகள், கடத்தல் தொழில் செய்பவர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ரகசியமாக வைத்திருக்கலாம்,” என்ற வருண் சொல்ல, ஆம் என்று தலையை ஆட்டியவன், தன் கரத்திலிருந்த கைப்பேசியை பேண்ட் பாக்கெட்டில் போட்டபடி,
“சென்-வாங்கின் கைப்பேசி எங்கே?” என்றான்.
உடனே அதையும் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான் வருண்.
அதையும் கவனமாகப் பரிசோதித்த ஏற்றமாதிபன்,
“வருண்… இந்தக் கைப்பேசிகளை நம்மால் அணைக்க முடியாது. அணைந்திருப்பது போலத் தோன்றினாலும், உள்ளே அது சமிக்ஞைகளைச் செயற்கைக்கோளுக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கும். அதை வைத்தே இதன் இருப்பிடத்தை எதிரிகள் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால் உடனே இவற்றின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். இல்லையென்றால் இவர்களைத் தேடி இன்னும் பலர் வருவார்கள். அது நமக்குத்தான் ஆபத்து” என்று ஏற்றமாதிபன் சொல்ல… இருவரும் வண்டியை நோக்கி விரைந்தனர்.
வண்டியை நெருங்கியதும் டிரங்க்கைத் திறந்த வருண், அங்கிருந்த ஒரு ஸ்க்ரூ டிரைவர் பெட்டியை வண்டியின் முன்புறத்தில் வைக்க, இருவருமாக ஸ்குரூ டிரைவரின் உதவியோடு கைப்பேசியைத் திறந்து அதிலிருந்த பட்டரியின் இணைப்பைத் துண்டித்தனர்.
நிம்மதியோடு, கைப்பேசியை வருணிடம் நீட்டி,
“வருண்… எங்களுக்கு நேரமில்லை… இத்தனைக்கும் இந்த கைப்பேசி எங்கே இருக்கிறது என்கிற தகவல், எதிரிகளுக்கு போயிருக்கும். அவர்கள் எந்த நேரமும் இங்கே வரலாம். தாமதிக்க நேரமில்லை… புறப்படு… அப்புறம்… வருண்… இதிலிருக்கும் தகவல்களைக் கண்டுபிடிப்பது உன் பொறுப்பு… எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும்,” என்றான் அழுத்தமாக.
அவன் கரத்திலிருந்த கைப்பேசியைப் பெற்றுக் கொண்ட வருண்,
“டேய்… அது அத்தனை சுலபமில்லை என்பது உனக்கே தெரியும். சிறிய தவறு நடந்தாலும் போதும், இதிலிருக்கும் முழுத் தகவல்களும் அழிந்துவிடும். இதில் ஊடுருவத் தேவையான ப்ளூடூத், கேமரா, மைக்ரோஃபோன் என எதுவுமே வன்பொருள் (Hardware) ரீதியாக இருக்காது. கணினியுடன் இணைத்துத் தரவுகளைத் திருட முடியாதபடி இதன் யுஎஸ்பி போர்ட்கள் தரவுப் பரிமாற்றத்திற்கு அனுமதிக்காது; போதாதற்கு இதில் தேவையற்ற செயலிகள் (Apps) எதுவும் இருக்காது என்பதால் ‘மால்வேர்’ (Malware) நுழையவும் வழியில்லை. அப்படி இருக்கும்போது இதை எப்படித்தான் ஊடுருவிக் கண்டுபிடிக்க முடியும்??” என்று சலித்துக் கொள்ள, ஆம் என்பது போலத் தலையை அசைத்தவன்,
“சிரமம்தான்… ஆனாலும் வழியில்லாமல் போகாது. தற்போது இருக்கும் ஒரே வழி ‘வன்பொருள் இடைமறிப்பு’ (Hardware Interception / Chip-off) மட்டும்தான். கைபேசி செயல்படும் நிலையில் இருக்கும்போதே அதன் உட்புறச் சிப்களை மிகக் கவனமாகப் பிரித்தெடுத்து, மற்றொரு கணினியுடன் இணைத்துத் தரவுகளைப் படிக்க முயல வேண்டும். ஆனால், சின்னத் தவறு நடந்தாலும் இதுவும் வீணாகிவிடும்,” என்றவன், தன் நண்பனைப் பார்த்து, “பார்க்கலாம் வருண்… ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்கள் பிடிபடத்தானே வேண்டும். இந்த வழி சரிவரவில்லையென்றால் வேறு வழியில் பார்க்கலாம்.. சரி.. எதற்கும் டெக்னிக்கல் இன்வெஸ்டிகேஷன் டீமிடம் தனிப்பட்ட முறையில் பேசிப் பார்…” என்று விடைபெற்று மருத்துவமனை நோக்கிச் சென்றான்.
வருணோ நம்பிக்கையில்லாமல் தன் குழுவைச் சேர்ந்த ஹேக்கரின் இருப்பிடம் நோக்கித் தன் வண்டியைச் செலுத்தினான்.
அதே நேரம் இங்கே மருத்துவமனையில், ஏற்றமாதிபன் தலையாட்டிவிட்டுச் சென்ற அந்த ஜப்பான் நாட்டு மனிதரான யூட்டோ, சற்று நேரம் நாளிதழைப் படித்துவிட்டுப் போர் அடித்தது போல அதை மடித்து ஒரு பக்கமாக வைத்தார். பின் காலுக்கு மேல் காலைப் போட்டுத் தலைக்குப் பின்னால் கைகளைக் கட்டியவாறு இருக்கையில் சாய்ந்தமர்ந்தவாறு விழிகளை மூடிக்கொண்டார். அவர் விழிகளை மூடியது போல இருந்தாலும், கொஞ்சமாகத் திறந்திருந்த விழிகள் விதரணையின் அறையைத்தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.
அரை மணி நேரம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் போனது. திடீரென்று விதரணையின் அறைப் பக்கமாக நெடுநெடுவென உயர்ந்த ஒரு ஆண்மகன், முகத்தை மறைத்த மாஸ்க் அணிந்தவாறு, கறுத்த ஜீன்ஸ் சட்டையோடு யாரையோ தேடிக்கொண்டு அங்கும் இங்குமாக அலைந்தான். பின் அங்கே வந்த செவிலியரிடம் எதையோ பேசினான். அவர் விதரணையின் அறையைக் காட்ட அவன் தலையாட்டிவிட்டு, மீண்டும் ஒருமுறை எதையோ தேடினான். அவன் விழிகளில் ஓருமாக அமர்ந்திருந்த யூட்டோ விழுந்தார்ததான். ஆனால் அவர் அமர்ந்திருந்த விதமும், அவருடைய வயோதிபமும் பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்க வைத்தது.
‘பாவம், யாரையோ தேடி வந்திருக்கிறான் போல’ என்று மனதிற்குள் எண்ணியவர், மீண்டும் விதரணையின் அறையிலேயே தன் கவனத்தை வைத்திருந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் இன்னொருத்தன் வேகநடையோடு விதரணையின் அறைக்கு முன்பாக வந்து நின்றான். அவனுடைய பார்வை சுற்றிலும் எதையோ தேடியது. அவனுடைய கவனம் தூங்குவது போலக் கிடந்த இவரிடமும் வர, எந்த அசைவும் இல்லாமல் சிலை போல அப்படியே அமர்ந்திருந்தார் அவர்.
மீண்டும் ஒரு விநாடி சுற்றிலும் பார்த்துவிட்டுச் சட்டென்று விதரணையின் அறைக்குள் அவன் நுழைய, இதை எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்த யூட்டோ, மெதுவாக எழுந்தார்.
நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் கால்கள் சற்று மரத்துப் போயிருக்க கால்களை உதறியவாறு மெதுவாக விதரணையின் அறைக்குள் பூனைப்பாதம் வைத்து நுழைந்தார். அங்கே ஏற்கனவே நுழைந்திருந்தவன் திரைக்குப் பின்னால் விதரணையின் அருகே நின்றவாறு ஒரு கையில் மருந்துக் குப்பியை ஏந்தி, மறு கையால் அந்தக் குப்பிக்குள் ஊசியை நுழைத்துக் கொண்டிருந்தான்.
அதைக் கண்ட யூட்டோ கொஞ்சம் கூடப் பதற்றமடையவில்லை. நிதானமாக அந்த அறைக் கதவை மூடியவர், பின் முதுகுக்குப் பின்னால் கரங்களைக் கட்டியவாறு அவனை நோக்கி வந்து, அவன் என்ன செய்கிறான் என்று தலையைச் சரித்துப் பார்க்க, இவனோ பின்னால் நிழல் அசைய நிமிர்ந்து பார்த்தான். சத்தியமாகத் தன்னை விடக் குள்ளமாய் ஜப்பானிய முகத்தோடு ஒருத்தனை அவன் எதிர்பார்க்கவில்லை போல. அதிர்ந்து நிற்க யூட்டோவோ குழந்தைச் சிரிப்பொன்றை உதிர்த்த அவனைப் பார்த்து என்ன செய்கிறாய் என்பது போலப் பார்த்தார்.
மறு கணம் குப்பியில் ஏறியிருந்த ஊசியை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு யூட்டோவைத் தாக்க வர, அவரோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், எந்த விதமான ஒலியையும் எழுப்பாமல், லாவகமாக விலகியவாறே தன்னைத் தாக்க வந்தவன் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயன்றார்.
அவன் அவரை விட நல்ல உயரமாக இருந்தான். நிறத்தைப் பார்த்தால் மெக்சிகன் போலத் தெரிந்தது. கண்களில் கறுத்த நிறக் கண்ணாடி இருந்ததால் கண்களைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. யூட்டோவின் புருவங்கள் யோசனையில் சுருங்க, அவனோ மீண்டும் யூட்டோவை தாக்க வர, இப்போதும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் நகர்ந்தவர், திரும்பி விதரணையைப் பார்த்தார். விதரணை இன்னும் உறக்கத்தில்தான் இருந்தாள். திருப்தி கொண்டவராகத் திரும்பி தன்னைத் தாக்க முயன்றவனை ஏறிட்டுப் பார்த்தார் யூட்டோ.
இன்னும் அவர் பின்னால் கட்டியிருந்த கரத்தை விலக்கவுமில்லை, அவர் முகத்தில் இம்மி கூடப் பதற்றம் தெரியவில்லை. அவருடைய அந்த நிலைதான் எதிரியின் வயிற்றைக் கலக்கப் போதுமானதாக இருந்தது. அவனுடைய தாக்குதலில் அவர் ஆடை கூடச் சிக்கவில்லை. இதில் முகத்தில் அச்சமோ பயமோ எந்த உணர்வும் இல்லை. மாறாக மெல்லிய புன்னதைான் தெரிகிறது. இதற்கு மேல் நின்றால், ஆபத்தாகிவிடும் என்று நினைத்தவனாக அவன் தப்பி ஓட முயல, மறு கணம் யூட்டோ தன் வலது காலைத் தூக்கி ஓங்கி அவன் இடது காலை மிதித்துவிட்டு, அவன் தடுமாறிய நேரம் அவன் காலைத் தட்டிவிட, இதை எதிர்பாராதவன், அதிர்ந்து பின்புறமாகச் சரியத் தொடங்க, அவன் சரிய இருந்த இடம், மருந்துபகரனங்கள் வைக்கப்பட்டிருந்த மேசை என்பதால், சட்டென்ற அவன் மேல் சட்டையைப் பற்றி இழுத்துத் தள்ளிவிட, அவனோ இழுபட்ட சருகாக நகர்ந்து விதரணையின் மீது குப்புற விழப் போனான்.
அதைக் கண்டு பதறிய யூட்டோ துள்ளி ஓடிவந்து அவன் சட்டையின் பின்புறத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்துப் பின்னால் வைளத்து, மறு கையால் அவன் வாயை மூடிப் “ஷ்…” என்று சத்தம் வராமல் எச்சரித்தார். அவரை விட ஒன்றரை மடங்கு பெரிதாக இருந்தவனோ, யூட்டோவின் அந்த இறுகிய பிடியிலிருந்து இம்மியும் விலக முடியாதவனாகத் தடுமாறி நின்றான்.
அந்த நேரம் விதரணையிடம் மெல்லிய அசைவு தெரிய, அவரிடமிருந்து சத்தம் எழுப்பாமல் தன்னை விடுவிக்கப் போராடியவனை இழுத்துச் சென்று திரைக்குப் பின்னால் இருந்த சுவற்றில் மோதவைத்துவிட்டு, அவனுடைய வாயை அழுந்தத் தன் கரத்தால் மூடிவிட்டுத் திரையின் இடுக்கே விதரணையை ஏறிட, அவளோ கொஞ்சம் அசைந்துவிட்டு மீண்டும் உறங்கிப் போக, நிம்மதி கொண்டவராக அந்தக் கொலையாளியை முறைத்தார். அவனோ கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் வாயை மூடியிருந்த யூட்டோவின் விரல்களை ‘நறுக்’கென்று கடித்துவிட, துடித்துப்போனார் யூட்டோ. கடித்த இடத்தில் பல்தடம் பட்டு இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.
அதில் கத்தவும் முடியாமல், கதறவும் முடியாமல் கரத்தைச் சற்று இளக்கி வாயைத் திறந்து காற்றை மட்டும் வெளியேற்றிக் கத்த, அவனோ அவருடைய இளகிய தன்மைபை் பயன்படுத்தி, அவரை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு வெளியே பாய்ந்து ஓடினான். தள்ளப்பட்ட யூட்டோ அங்கிருந்த மேசையில் விழுந்து அதன் மீதிருந்த மருத்துவப் பொருட்கள் சிதறிப் பெரிய சத்தத்தை எழுப்புவதற்கு முன்பாக, சமயோசித புத்தியாகச் சுழன்று, ‘பாலே’ டான்ஸ் ஆடும் தேர்ந்த கலைஞன் போல இரண்டு கரங்களையும் விரித்து, ஒரு கால் நிலத்திலும் மறு கால் காற்றிலும் மிதக்கத் தன்னைச் சமன் செய்து, மயிரிழையில் மேசையில் விழுந்து பாரிய சத்தம் எழுப்பாமல் தப்பித்துக் கொண்டார்.
அந்த நிலையிலிருந்து கொஞ்சமும் மாறாமல் திரும்பி விதரணையைப் பார்க்க, அவளோ இன்னும் நல்ல உறக்கத்தில் இருக்க, ஒரு பெருமூச்சொன்றை எடுத்து விட்டவர், எச்சில் கூட்டி விழுங்கியவாறு நேராக நிமிர்ந்து நின்றார். மறு கணம் அறையை விட்டு வெளியேறியவர், அந்த எதிரி எந்தப் பக்கம் போயிருப்பான் என்று தேடினார். இத்தனைக்கும் அவன் எங்கேயாவது பாய்ந்து குதித்துச் சென்றிருப்பான் என்பது உறுதி. இதில் அவனைத் தேடப் போய் விதரணையைத் தனியே விட முடியாது என்பதால், நெற்றியில் பூத்த வியர்வையை அழுந்தத் துடைத்துவிட்டு விதரணையின் படுக்கையை நெருங்கினார்.
உணவு வைக்கும் மேசையில் வைத்திருந்த அந்த மருந்துக் குப்பியை எடுத்து உற்றுப் பார்த்தார். அதில் ஊசி இணைக்கப்பட்டிருந்தது. அந்த ஊசியைத் தனியே கழற்றி அதை ஊசிகள் போடும் பெட்டியில் எறிந்துவிட்டு, அந்த மருந்துக் குப்பியைத் தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். இப்போது வெளியே போகாமல் அங்கிருந்த இருக்கையில் இரண்டு கரங்களையும் தொடையில் மடித்து வைத்தவாறு, ஒரு பாறையைப் போன்ற உறுதியோடு கம்பீரமாக நெஞ்சு நிமிர அமர்ந்து கொண்டார் அவர்.
மேலும் இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். மருத்துவமனைக்கு வந்த ஏற்றமாதிபன் முதலில் தேடியது அந்த வயது போன மனிதரைத்தான். அவன் சென்றபோது அவர் இருந்த இடம் இப்போது வெறுமையாக இருக்க, அவரை விழிகளால் தேடினான். அவரைக் காணவில்லை என்றதும் ஒருவித பயத்தோடும், பதற்றத்தோடும் விதரணையின் அறைக்குள் நுழைய, அங்கே ஓரமாக ஒரு கதிரையில் தன் நிலை மாறாமல் அமர்ந்திருந்தார் யூட்டோ.
அவரைக் கண்டதும் நிம்மதி கொண்டவனாக,
“மாஸ்டர்…” என்று அவன் அழைக்க, நிதானமாக அவனை நிமிர்ந்து பார்த்தவர், தன் உதட்டில் சுட்டுவிரலை வைத்துத் திரும்பி விதரணையைப் பார்த்தார். பின் எழுந்து விழிகளாலேயே அவனைத் தன் பின்னே வருமாறு பணிந்துவிட்டு, முதுகுக்குப் பின்னால் கரங்களைக் கட்டியவாறு வெளியேற, திரும்பி விதரணையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர் பின்னே சென்றார் ஏற்றமாதிபன்.
யாருமில்லாத இடத்தை நெருங்கியதும், திரும்பி ஏற்றமாதிபனைப் பார்த்தார் யூட்டோ. “என்னாச்சு…?” அவர் ஆங்கிலத்தில் கேட்க, அவன் சுருக்கமாக நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்டவரின் முகத்தில் மெல்லிய வருத்தம் தெரிந்தது.
“ஆதிபன், இந்தப் பெண்ணும் ஆபத்தில் இருக்கிறாள்…” என்று அவர் சொல்ல, ஏற்றமாதிபன் பதில் சொல்லாமல் அவரைக் கூர்மையாகப் பார்த்தான். அவனுக்கும் அந்தச் சந்தேகம் இருந்ததால்தானே, அவரைக் காவலுக்கு விட்டுச் சென்றான்.
அவரோ தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து அந்தச் சிறிய குப்பியை நீட்ட, அதை வாங்கிக் கொண்டவன், அதைத் தூக்கிப் பார்த்தான். பார்த்தவனின் விழிகளில் ஒரு மின்னல் வெட்டியது. பின் அந்தக் குப்பியை பான்டில் போட்டுவிட்டு யூட்டோவை ஏறிட,
“நீ சந்தேகப்பட்டது போலத்தான் நடந்தது ஆதிபன்…” என்றவர் நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, “எனக்கு என்னவோ இவள்தான் அடுத்த குறி என்று தோன்றுகிறது,” என்றார் நிதானமாக.
“நான் எதிர்பார்த்தேன். நான் இல்லாத நேரத்தில் இவளுக்கு ஆபத்து வரலாம் என்று என் உள்ளுணர்வு சொன்னது. அதனால்தான் உங்களை இங்கே வரவழைத்தேன். உங்கள் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் மாஸ்டர் யூட்டோ…” என்றவன், சட்டென்று ஜப்பானிய முறைப்படி மரியாதையுடன் இடுப்பைச் சற்றே முன்னோக்கி வளைத்துத் தலைகுனிந்து நிற்க, புன்னகைத்த யூட்டோ,
“நீ எனக்குக் கிடைத்த அற்புதமான மாணவன் ஆதிபன். உனக்கு உதவியதில் எனக்கு மகிழ்ச்சிதான். சரி, நான் கிளம்புகிறேன். ஏதாவது உதவி தேவை என்றால் என்னை அழை… உனக்கு உதவக் காத்திருக்கிறேன்,” என்றவர் அவனிடமிருந்து விடைபெற்றுச் செல்ல, ஏற்றமாதிபனும், அவர் செல்லும் வரை அமைதியாக இருந்துவிட்டு, கைப்பேசியை எடுத்து உடனே வருணை அழைத்தான்.
“சொல்லுடா ஆதிபா. அங்கே எல்லாம் நன்றாகத்தானே போகிறது?” அவன் கேட்க,
“வருண்… முக்கியமான ஒரு முடிச்சு அவிழ்ந்துவிட்டது,” என்றான் ஏற்றமாதிபன் மெல்லிய புன்னகையுடன்.
“என்னடா சொல்கிறாய்?” வருண் வியந்து கேட்க, ஏற்றமாதிபன் நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு,
“அவன் ஒரு மருந்துக் குப்பியை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறான். அந்த மருந்துக் குப்பியில் ஒட்டப்பட்டிருந்த லேபலில் என்ன இருந்தது தெரியுமா?” என்று கேட்க வருண் பரபரப்பானவனாக,
“என்னடா இருந்துச்சு?” என்றான் அறியும் ஆவலில். ஏற்றமாதிபன் பான்ட் பாக்கட்டிலிருந்த அந்த குப்பியை எடுத்து அதன் லேபலைப் பார்த்தவாறே,
ஜெனரிஸ் பயோ-பார்மா,” என்றான் நிதானமாக.
(3) “வாட்?” என்று கிட்டத்தட்ட சத்தமாகக் கத்திவிட்டான் வருண். “ஆனால் எப்படி...? நான்தான் விசாரித்தேனே... நான் விசாரித்த வரைக்கும் அந்த…
(28) மேலும் இரு நாட்கள் கழிய திரும்ப விதுரனைப் பார்க்கவேண்டும் என்று தொடங்கி விட்டாள் விதரணை. அதைக் கேட்டவனின் முகம்…
(27) இதோ மூன்று வாரங்கள் கடந்திருந்தன. காயங்கள் ஆறியிருக்க, கட்டுகள் அவிழ்க்கப் பட்டிருந்தன. சத்திரசிகிச்சையால் வெளியேறும் இரத்தம் வடிந்து…
(26) “ஹே... எழுந்துவிட்டாயா?” என்று ஆங்கிலத்தில் குதூகலமாகக் கேட்டவாறு அவளை நோக்கி விரைந்து வந்த விக்டோரியா, அவசரமாக அவளுடைய…
(25) மூன்று நாட்கள் கடந்திருந்தன. அவளுக்குப் பொருத்தியிருந்த பெரிய பிராணவாயு குழாயை நீக்கிவிட்டு, மூக்கில் மட்டும் பிராணவாயு போகும்…
(24) முதலில் ஊபரை அழைத்து விதரணையின் வீட்டிற்குத்தான் சென்றிருந்தான். அங்கே இன்னும் காவலர்கள் யார் யாரையோ அழைத்து விசாரணை…