Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-23

(23)

தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள். அடுத்த நொடி, அவள் முகத்திலும் வர்ணிக்க முடியாத அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. முகம் வெளுத்துப் போனது; தேகமே நடுங்கியது.

அதிர்ச்சியுடன் அவள் ஏற்றமாதிபனைப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் தன் கவனத்தை அந்தக் கோப்பில் செலுத்தினான்.

அந்தக் கோப்பு அறிவழகனின் கையெழுத்துப் பிரதிகளில் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, நம்ப முடியாத அதிர்ச்சியூட்டும் பல ரகசியங்களைத் தாங்கி நின்றிருந்தது. அதுவும் உலகையே உலுக்கிய எப்ஸ்டின் (Epstein) வழக்கை விடவும் பல மடங்கு கொடுமையான ஒரு நிழலுலக மாஃபியாவின் வண்டவாளங்கள் அனைத்தும் அதில் ஆதாரங்களோடு ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.

முதல் பிரிவு: ஜெனரிஸ் பயோ-பார்மா (Generis Bio-Pharma) நிறுவனம் தயாரிக்கும் மாத்திரைகளில் ஒன்று ‘எஸ்ட்ராபிரைம்’. மிகச் சிறு வயதிலேயே, குறிப்பாக ஏழு வயதிலிருந்து பத்து, பன்னிரண்டு வயது வரையான குழந்தைகள் முன்கூட்டியே பருவமெய்துவதற்காக, அரசின் அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாகத் தயாரிக்கும் மாத்திரை அது. அந்த மாத்திரைகள் மிக ஆபத்தான ஹார்மோன் மாத்திரைகள். அவை எப்படியெல்லாம் தயாரிக்கப்படுகின்றன என்கிற செய்முறை விளக்கங்களும், அதன் மூலக்கூறு வாய்ப்பாடுகளும் துல்லியமாக எழுதப்பட்டிருந்தன.

அடுத்து இரண்டாம் பிரிவைப் படித்த ஏற்றமாதிபனின் இரத்த நாளங்கள் அனைத்துமே கொதித்துப் போயின. இது மனித சமூகத்தின் உச்சக்கட்ட வக்கிரமாக அவன் கண்களுக்குத் தெரிய, பற்களை அழுந்தக் கடித்துத் தன் கோபத்தை அடக்க முயன்றான். அந்த ஆபத்தான மாத்திரையின் பெயர்: ‘நிம்போஃபென்’.

மருத்துவ உலகையே அதிர வைக்கும் வகையில், முற்றிலும் சட்டவிரோதமான முறையில் உருவாக்கப்பட்ட அந்த மாத்திரை என்ன செய்யும் என்கிற விளக்கத்தைப் பார்த்தவனுக்குக் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. அது சிறு குழந்தைகளின் மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தைச் செயற்கையாகத் தூண்டி, அவர்களின் இயல்பான மனநிலையை அடியோடு சிதைப்பதோடு, அதீத காம உணர்வையும் தூண்டும். இதன் முக்கிய நோக்கமே, பருவமடைந்த அந்தச் சிறு குழந்தைகளின் உடலில் ‘டோபமைன்’ (Dopamine) மற்றும் ‘செரோடோனின்’ (Serotonin) சுரப்பிகளை உச்சக்கட்ட அளவில் சுரக்கச் செய்து, அவர்களின் காம உணர்ச்சியை அதீதமாகத் தூண்டுவதுதான்.

இந்த மாத்திரையை உட்கொள்ளும் சிறு குழந்தைகள், தங்களுக்கு என்ன நடக்கிறது என்று சிந்திக்கும் திறனையே இழந்துவிடுவார்கள். இதனால், பெரியவர்களின் வக்கிரமான துஷ்பிரயோகங்களுக்கு அவர்களால் எளிதாகப் பலியாக நேரிடும். ஆண், பெண் பேதமின்றி பிஞ்சுச் சிறுவர்களைச் சீரழிக்கும் இந்தக் கொடூரத்தைப் படித்ததுமே அவனுடைய உள்ளே எரிமலையாகக் கோபம் கொதித்தெழுந்தது. சே… என்ன விதமான மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்?

அதே கோபத்தோடு, மூன்றாம் பகுதியைப் படிக்கத் தொடங்கினான் ஏற்றமாதிபன்.

மூன்றாம் பிரிவு: இந்தச் சட்டவிரோத மாத்திரைகள் உலக அளவில் எங்கெங்கெல்லாம் விநியோகிக்கப்படுகின்றன, எந்தெந்த ரகசிய ஏஜென்சிகள் மூலமாக இவை கடத்தப்படுகின்றன என்கிற விநியோகச் சங்கிலியின் (Supply Chain) முழு விபரங்களும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.

முழுவதையும் வாசித்த ஏற்றமாதிபனுக்குச் சற்று நேரம் பேச்சே வரவில்லை. நினைக்கும் போதே அவனுக்குத் தலைசுற்றிக்கொண்டு வந்தது. அதனோடு இணைக்கப்பட்டிருந்த அறிவழகன் உயர் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்திற்கு எழுதிய கடிதத்தைத் திறந்து பார்த்தான் ஏற்றமாதிபன். அதை வாசித்தவனின் விழிகளில் பெருத்த வலி நிலவியது.

அனுப்புநர்: அறிவழகன்,

மருந்துப் பரிசோதகர், ஜெனரிஸ் பயோ-பார்மா.

(தற்போதைய முகவரி தேச நலன் மற்றும் குடும்ப பாதுகாப்பு கருதி மறைக்கப்பட்டுள்ளது)

பெறுநர்:  உயர் புலனாய்வுப் பிரிவு, தலைமையகம்.

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா, பொருள்: ‘ஜெனரிஸ் பயோ-பார்மா‘ நிறுவனத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சர்வதேசப் பாலியல் சுரண்டல் மருந்துச் சதி மற்றும் ஆதாரங்களை ஒப்படைத்தல் – அவசர நடவடிக்கை கோரி.

வணக்கம். நான் ‘ஜெனரிஸ் பயோ-பார்மா‘ நிறுவனத்தில் மருந்துப் பரிசோதகராகப் பணிபுரிந்து வருகிறேன். எங்களின் பொதுவான மருந்துத் தயாரிப்புப் பட்டியலுக்கு அப்பாற்பட்டு, சில குறிப்பிட்ட மாத்திரைகள் ரகசியமான முறையில் தீவிரக் கண்காணிப்புடன் தயாரிக்கப்படுவதை கடந்த சில வாரங்களாக நான் கவனித்து வந்தேன். ஒரு சாதாரண குடிமகனாகவும், மருந்துத் துறையில் இருக்கும் ஒருவனாகவும் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், அந்த மாத்திரைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்தில் தனிப்பட்ட முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தினேன்.

அந்தப் பரிசோதனை முடிவுகள் எனக்கு மீளா அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. எங்கள் நிறுவனத்தில் ‘எஸ்ட்ராபிரைம்‘ (Estraprime) மற்றும் ‘நிம்போஃபென்‘ (Nymbophen) என்கிற இரண்டு ஆபத்தான மாத்திரைகள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படுவதை ஆய்வின் மூலம் கண்டுகொண்டேன். ‘எஸ்ட்ராபிரைம்‘ என்பது குழந்தைகள் மிக விரைவாகப் பருவமெய்துவதற்குக் காரணமான ஹார்மோன் ஊக்கிகளையும், ‘நிம்போஃபென்‘ என்பது குழந்தைகளின் பாலியல் உணர்வைச் செயற்கையாகத் தூண்டும் நச்சு இரசாயனங்களையும் கொண்டவையாகும். அது சார்ந்த ஆய்வறிக்கையை ஆதாரத்தோடு இக்கடிதத்தோடு இணைத்துள்ளேன்.

மனிதர்களின் மிருகத்தனமான காம இச்சைக்குப் பலியாகக் குழந்தைகளை உபயோகிப்பதற்காகவே, இந்த இரண்டு மாத்திரைகளும் திட்டமிட்டுத் தயாரிக்கப்படுகின்றன என்ற உண்மையை நான் உறுதி செய்துகொண்டேன். மேலும் இந்த மாத்திரைகளை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு முப்பது வயதைத் தொட முதலே, இயற்கையாகத் தோன்றும் பாலியல் இச்சைகள் முற்றுமுழுதாகத் நின்றுபோவதோடு, சொற்பகாலத்தில், உயிரைக் கொல்லும் நோய்கள் ஏற்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதையும் அறிந்தகொண்டேன்.  இத்தகைய உணர்ச்சிகள்  பிஞ்சு உள்ளங்களையும் எதிர்காலத் தலைமுறையையும் நரகத்திற்குள் தள்ளும் இத்தகைய மருந்துகள் யாருக்குப் போகின்றன என்பதை அறிய நான் தீவிரமாகத் துப்பறியத் தொடங்கினேன்.

அதிகாரிகளின் கணினிகளில் இருந்த ரகசியத் தரவுகள் மற்றும் நிறுவனத்தின் நிலவறையில் (Secret Basement) நான் கண்டறிந்த ஆவணங்களின் வழியே இந்த மாத்திரைகளின் விநியோகச் சங்கிலியை  நான் கண்டறிந்துவிட்டேன். இந்த மருந்துகள் அனைத்தும் போலி ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் பெயர்களில், சர்வதேச அளவில் இயங்கி வரும் மிக ஆபத்தான ‘குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் மாஃபியா‘ கும்பலுக்குச் (International Child Exploitation Syndicate) சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இதை உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க எனக்கு உடன்பாடில்லை; ஏனெனில், இந்தச் சதிவலையின் வேர்கள் மிக ஆழமாகப் பரவியுள்ளன. எனவேதான், நாட்டின் மிக உயரிய, நேர்மையான இந்த புலனாய்வுத் துறையை நான் நம்பி அணுகுகிறேன்.

இந்த விபரங்களை நான் திரட்டியதை எங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் மோப்பம் பிடித்துவிட்டதால், கடந்த சில நாட்களாக நான் பின்தொடரப்படுகிறேன். எந்தக் கணமும் என் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் உயிரோடு இருக்கிறேனோ இல்லையோ, இந்த அறிவியல் ஆதாரங்களின் மூலம் அந்தக் குழந்தைகள் கடத்தல் கும்பல் அழிக்கப்பட்டு, அப்பாவிப் பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே என் ஒரே நோக்கம்.

தயவுசெய்து காலம் தாழ்த்தாமல், இந்த ஆவணங்களின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொண்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, இதற்கு மூலகாரணமானவனைக் கண்டறிந்து தகுந்த தண்டனை கொடுக்கவேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எப்ஸ்டின் கோப்புகளில் (Epstein Files) இருந்ததைப் போல, உலக அரங்கில் நல்லவர்கள் போல வேடமிட்டுத் திரியும் பல வி.ஐ.பி-களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன். அவர்களையும் இனம் கண்டு இந்த உலகத்தின் முன்னால் குற்றவாளிகளாக அடையாளம் காட்ட வேண்டும்.

நம்பிக்கையுடன்,

 இந்த நாட்டின் உண்மைக் குடிமகன்,

அறிவழகன்.

அதைப் படித்ததும், அந்த மனிதன் இந்த உலகத்திற்குச் செய்திருக்கும் தியாகத்தைக் கண்டு உருகிப்போனான் ஏற்றமாதிபன்.

இந்தக் கோப்பு மட்டும் வெளியில் தெரிந்தால், தங்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்கிற பயம் ஒருபுறம்; மறுபுறம், இந்தக் குற்றத்தில் யாராவது அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களின் அரசியல் வாழ்க்கையைச் சீரழிக்கவும், அவர்களை மிரட்டிப் பணம் சம்பாதிக்கலாம் என்கிற நோக்கத்திலும், மேலும் மருத்துவ ஆய்வின் ரகசியங்களைக் கைப்பற்றினால் தாங்களே அந்த மாத்திரைகளை உற்பத்தி செய்து பல பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கலாம் என்கிற பேராசையிலும்தான், உலகளாவிய டிரையாட் கும்பல் முதல் அமெரிக்க பாதாளக் குழுக்கள் வரை அறிவழகனைச் சுற்றி வந்திருக்கிறார்கள். விதரணை அவர் மகள் என்பதால், அவளுக்கும் இது தெரிந்திருக்குமோ என்கிற எண்ணத்தில் அவளைக் கடத்தவும் முயன்றிருக்கிறார்கள்.

தங்கள் கண் முன்னால் விரிந்து கிடந்த அந்தக் கொடூரமான உண்மைகளைக் கண்டு விதரணையின் தேகம் பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது.

“இ… இப்படிப்பட்ட ஒரு மிருகத்தனமான உலகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஏற்றன்?” என்று அவள் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்க, அவனது கைகள் விரிந்திருந்த அந்தக் கோப்பை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டன. அவனது கண்களில் இப்போது அந்தச் சர்வதேச மாஃபியாவை அடியோடு ஒழித்துக் கட்டும் ஆவேசம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

“கடவுளே… என்னால் நம்பவே முடியவில்லையே… நினைக்கும் போதே… சே… இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்றுகூடத் தெரியவில்லையே…. அதை எப்படிக் கண்டுபிடிப்பது?” விதரணை யோசனையுடன் கேட்க, அவளது தோள்களைப் பற்றித் தேற்றினான் ஏற்றமாதிபன்.

“அது கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை சிரமமில்லை விதரணை… அதற்குத்தான் விநியோகச் சங்கிலி விபரங்கள் இருக்கிறதே. இதை வைத்தே குற்றவாளிகளைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்…” என்றான் ஏற்றமாதிபன் கூர்மையாக.

“அது சுலபமா…? முதலில் இத்தனைக்கும் மூலகாரணம் யார் என்று கண்டுபிடிக்கவேண்டும் ஏற்றன்… கண்டுபிடித்து அவனை…?” விதரணை பற்களைக் கடிக்க,

“கவலையே படாதே… இன்னும் ஒரு மாத அவகாசம் கொடு… மொத்தக் கும்பலையும் கண்டுபிடிக்கிறேன்…” என்று அவன் உறுதியுடன் சொன்னான்.

“அதுதான் எப்படி?” என்றாள் விதரணை குழப்பமாக. அதைக் கேட்டு லேசாகப் புன்னகைத்தவன்,

உன் அப்பா கொடுத்த விநியோகச் சங்கிலியை அடிப்படையாகக் கொண்டு, என் உயர்மட்டப் புலனாய்வுத் துறையின் உதவியோடு ‘ஃபாரன்சிக் தணிக்கை’ (Forensic Auditing) செய்து பார்த்தால் போதும் விதரணை… இந்த மாத்திரைகளை ஐந்து டாலருக்கோ பத்து டாலருக்கோ வாங்கியிருக்க மாட்டார்கள்; குறைந்தது பில்லியன் டாலருக்குக் கறுப்புப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருப்பார்கள். அந்தப் பெரிய தொகையின் பணப் பரிமாற்றத்தை (Money Trail) வைத்தே சுலபமாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடலாம்… இது தவிர அவர்களைக் கண்டுபிடிக்க இன்னும் நிறையத் தொழில்நுட்ப வழிகள் உண்டு விதரணை… அதைப் பற்றிக் கவலைப்படாதே. இத்தனை நாளும் காரணம் என்ன என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். இப்போதுதான் ஆணிவேரே தெரிகிறதே… நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்று சொன்னவனுக்கு, அந்த நிலையிலும் அறிவழகனை நினைத்துப் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்தக் கோப்பு எதிரிகளின் கையில் சிக்கினால் என்னாகும் என்று புரிந்துதான், தன் குடும்பம் அழிந்தாலும் பரவாயில்லை, உலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்; அதைக் காப்பாற்றவும் முயன்றிருக்கிறார்.  அதை அனுப்புவதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

ஏற்றமாதிபன் நினைக்கும் போதே, விதரணையும் தன் தந்தையைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வை அந்தக் கோப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்த தன் தந்தையின் கையெழுத்துகளின் மீது அழுகையும் பெருமையுமாகப் படிந்தது.

அதுவும் அவர் எழுதிய கடிதத்தைப் படித்ததும் அவள் இதயத்தில் உதிரமே கசிந்தது.

“என் அப்பா… எத்தனை பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்… அவருக்கு நான் மகளாகப் பிறந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ஏற்றன்… அன்று அந்தக் கொடியவர்கள் என்னைச் சீரழிக்கக் கூட முயன்றார்கள். ஆனால் என் அப்பா வாயே திறக்கவில்லை.”

அவள் சொல்ல, அவளை இழுத்துத் தன் கைவளைவில் அணைத்து அவள் தலையில் அழுத்தமாக முத்தமொன்றை வைத்து விலகியவன்,

“உண்மைதான் பேபி… உலகத்தில் உள்ள குழந்தைகளைக் காக்க, ஒரு தனி மனிதனாக நின்று  எதிர்த்திருக்கிறார் பார். அவருடைய தைரியத்தை நினைத்து நிச்சயமாக நான் பெருமை கொள்கிறேன். இதைக் கண்டுபிடித்தால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்து என்று தெரிந்தும், அந்தப் பிஞ்சு உயிர்களைின் எதிர்காலத்திற்காக, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகத் தன் வாழ்க்கையையே பணையம் வைத்திருக்கிறார். இந்த உண்மைகளை அவர் மட்டும் இந்த ஆவணத்தில் வெளிக்கொண்டு வராமல் இருந்திருந்தால், இனிவரும் காலங்களில் பிஞ்சுக் குழந்தைகளின் நிலை என்னாகியிருக்கும்?”

அவன் சொல்லச் சொல்ல, அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரில் இப்போது சோகத்தை விடத் தன் தந்தையைப் பற்றிய பெருமிதம்தான் அதிகமாகத் தெரிந்தது.

“அப்பா உண்மையைச் சொல்லியிருந்தால், நமக்கு இந்த நிலை வந்திருக்காதே என்று அப்பாவைத் திட்டியிருக்கிறேன். மனதிற்குள் வருந்தியிருக்கிறேன். ஆனால் இப்போது…!” என்று கலங்கியவள், மறு கணம் முகம் இறுக, உடல் விறைக்க,

“அவர்களை… சும்மா விடக் கூடாது ஏற்றன். இந்த உலகத்தின் முன்பாக அவர்களின் தோலை உரிக்க வேண்டும்…” என்றாள் கடும் ஆத்திரத்தோடு. அதைக் கேட்ட ஏற்றமாதிபனின் உடலும் இறுகியது. முகம் இறுக, விழிகள் கோபத்தில் சிவக்க, சீற்ற மூச்சோடு அவளைப் பார்த்தவன்,   அவள் தலையை வருடிக் கொடுத்தவாறு,

“நான்தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேனே… அழாதே… உன் அப்பாவின் மரணத்திற்கு, யார் காணமாக இருந்தாலும் அவர்கள் பதில் சொல்லியே ஆகவோண்டும். அதுவரை  நான் ஓயப்போவதில்லை… நம்பு…” அவன் அழுத்தமாகச் சொல்ல, தன்னவனை அணைத்தவாறே இருந்தாள் விதரணை.

அந்த நேரம் அவனுடைய கைப்பேசி சத்தமிட, அது எங்கே என்று அவன் தேட, விதரணையோ தன்னவனை விட்டுச் சற்று விலகி, அவனுடைய உடலைத் தாண்டி நகர்ந்து பக்கத்திலிருந்த மேசையிலிருந்து கைப்பேசியை எடுக்க, இவனோ அவள் மேனியின் உரசலில் அந்த நிலையிலும் தன்நிலை கெட்டுத்தான் போனான். ஒரு வித மயக்கத்தில் தன்னுடல் மோதிக் கைப்பேசியை எடுப்பவளைக் கண்டு, விழிகள் மின்னப் பார்த்திருக்க, விதரணையோ, தன் கணவனை இக்கட்டான நிலையில் தள்ளியிருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.

‘வருண்’ என்று திரையில் பெயர் வர, திரும்பித் தன் கணவனைப் பார்த்தாள் விதரணை.

அவனோ இமைக்காமல் அவளையே பார்த்திருக்க, அந்தப் பார்வையில் என்ன கண்டாளோ, விழிகளை விரித்து இமைகளை மேலேற்றி ‘என்ன?’ என்பது போல அவனைப் பார்த்தாள். அவனோ அவளுடைய அந்தச் செயலில் மயங்கியவனாக,

“கிஸ் மீ பேபி…” என்றான் ஆசையும் காதலுமாக. அதைக் கேட்டு இளம் புன்னகை சிந்தியவள், அவன் நெற்றியில் தன் உதட்டைப் பதிக்க, உதட்டைச் சுழித்தவன்,

“அங்கேயில்லை…” என்றான் குழந்தை போல.

“அங்கே இல்லை என்றால் எங்கே?” அவள் புரியாமல் கேட்க, அவளை முறைத்தவன், “இந்த முகத்தில் நெற்றி மட்டும்தானா இருக்கிறது?” என்றான் கோபமாக. அதைக் கேட்டுச் சிரித்தவளின் முகத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகான குறும்பு தலைதூக்கியது.

“ம்… இல்லைதான்… கன்னம் இருக்கிறதே…” என்றவள் தன் உதடுகளைத் திறந்து, பற்கள் பட அவன் கன்னத்தைக் கடித்து, எச்சில் பட முத்தமிட்டு விலகினாள். அவளுடைய அந்தச் செயலில் உருகிப் பொனான் ஏற்றமாதிபன். உடல்வலியாவது மண்ணாங்கட்டியாவது. உடல் சிலிர்த்துப் போக,

“ம்… கொஞ்சம் கீழே முத்தமிட்டால்தான் என்னவாம்?” என்றான் குறையாக, ‘இதற்கும் கீழேயா… கொடுத்திட்டால் போச்சு’ என்பது போல அவன் நாடியில் தாடிக்கு மத்தியில் முத்தமிட்டாள்.

“ஏய்… கன்னத்துக்கும் நாடிக்கும் இடையில ஒரு இடம் இருக்கே…” அவன் சிணுங்க, அந்த கட்டுக்கடங்காத காளை சிணுங்குவது கூட ஒருவிதக் கவிதையாகத்தான் தெரிந்தது அவளுக்கு. குறும்போடு அவன் மடியில் அமர்ந்தவள், அவன் கழுத்தைச் சுற்றிக் கரத்தைப் போட்டு,

“கன்னத்திற்கும் நாடிக்கும் இடையில் இருப்பது உங்கள் மூக்குதானே… சரி…” என்றவள், அவன் மூக்கு நுனியைக் கடித்து அங்கும் முத்தமிட்டாள். சொக்கினான் ஆணவன்

“ம்… இன்னும் கொஞ்சம் கீழே வா பம்கின்…” அவன் முனக, இப்போது அவளுடைய உதட்டில் சிரிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆசையோடு அவன் இதழ்களைப் பார்த்தவள், தன் பெருவிரலால் அவன் தடித்த உதடுகளைக் கோடாக வருடிக் கொடுக்க, ஏற்றமாதிபனின் விழிகள் தானாக மூடிக்கொண்டன.

“பிளீஸ்… கிஸ் மீ பேபி…” அவன் கெஞ்சலாகக் கேட்க, அதற்கு மேல் எப்படி மறுப்பாள்?

ஒரு வித ஆவேசத்தோடு அவனுடைய உதடுகளை நோக்கி அவள் பயணப்பட்ட நேரம், அடித்து ஓய்ந்த கைப்பேசி இப்போது திரும்பவும் கதறியது.

அந்த இன்பம் தடைப்பட்ட ஆத்திரத்தில் விழிகளைத் திறந்தவன், “எந்த நாய் இப்போது அழைப்பது?” என்றான் பொறுமையிழந்து.

“ம்… உங்கள் நண்பர் வருண்தான் அழைக்கிறார்” என்றதும் பற்களைக் கடித்தவன், பூஜைவேளைக் கரடி என்று கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தவாறு தன்னவளிடமிருந்து கைப்பேசியைப் பறித்து அழைப்பை ஏற்க, விதரணையோ அவன் மடியிலிருந்து இறங்க முயன்றாள்.

ஆனால் அவனோ அவள் இடுப்பைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து, மார்பில் விழவைத்து, கரங்களால் அவள் முன் தேகத்தைக் காதலும் காமமும் கலந்து வருடியவாறே, “என்னடா…” என்றான் தன் நண்பனிடம் சலிப்பாக.

“டேய்… ஆதிபா, குட் நியூஸ்! அந்தக் கைப்பேசியை ஊடுருவிவிட்டோம். அதிலிருந்த அத்தனை தரவுகளும் தரவிறக்கம் செய்யப்பட்டு விட்டன. இப்போதே எடுத்து வருகிறேன். இப்போது எங்கே இருக்கிறாய்?” வருண் ஆவலாகக் கேட்க,

“ம்கும்… இப்போதுதான் நீ ஊடுருவிக் கண்டுபிடித்தாயாக்கும்? ரொம்ப முக்கியம்! அனைத்தையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வா…” என்று ஏற்றமாதிபன் சொல்ல, குழம்பினான் வருண்.

“டேய் எத்தனை முக்கியமான விஷயம் சொல்கிறேன். நீ என்னவென்றால் மருத்துவமனைக்க வரச் சொல்கிறாய்…” என்ற வருணுக்கு அப்போதுதான் மருத்துவமணை என்பதே புத்தியில் உறைத்தது.

“டேய், மருத்துவமனையா… யாருக்கு என்னாச்சு… உனக்கு ஒன்றுமில்லையே…?” உண்மையான நண்பனாகப் பதற,

“டேய்… டேய்… அதிகம் பதறாதே. யாருக்கும் எதுவுமில்லை.. நீ முதலில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வா. பிறகு சொல்கிறேன்…” என்றுவிட்டுக் கையோடு, எந்த மருத்துவமனை என்பதை அவனுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டுக் கைப்பேசியை ஓரமாகப் போட்டான். பிறகு தன் மடியில் கிடந்தவளை இறுக்கி, “விட்டதை முடித்துவிட்டுப் போ…” என்றான் ஏற்றமாதிபன் பிடிவாதமாக. .

“என்னத்தை விட்டேன் முடிக்க?” அவள் தன் உதடுகளைச் சுழிக்க, சுழித்த உதடுகளைத் தன் சுட்டுவிரலாலும் பெருவிரலாலும் லேசாக அழுத்திப் பற்றி இழுத்து,

“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி எங்கெங்கோ எச்சில் படுத்தினாய்; முக்கிய இடத்தில் எச்சில் படுத்த மறந்துவிட்டாயே… கொடுடி…” என்று அவன் தன் உதட்டையும் குவித்தான்.

அவனுடைய அந்தச் செய்கையில் பற்கள் தெரியச் சிரித்தவள்,

“உங்களுக்கு உதடுகள் என்று ஒன்று இருக்கா என்ன? காணோம்… தாடியும் மீசையும்தான் அடர்ந்து கிடக்கு. இதில் உதட்டை எங்கே தேடுவதாம்…” அவள் கேட்க, அவசரமாக டிரிப் ஏறாத கரத்தால் தாடியையும் மீசயையும் நீவி உதட்டுக்கு வழிசமைத்துக் கொடுத்தவன்,

“இப்ப கொடுடி பேபிகேர்ள்..” என்றான் ஆசையாக.

இவளோ அவன் முகத்தையே சற்று நேரம் ஆவலாகப் பார்த்துவிட்டு,

“கண்ணா… அந்த இருபத்து நாலு வயது ஏற்றமாதிபனைப் பார்க்க ஆசையாக இருக்கிறது…” என்றாள் ஏக்கமாக.

அதைக் கேட்டு வியந்தவன்,

“அதற்கு நான் என்ன செய்யமுடியும்?” கேட்க,

அவன் தாடியைப் புறங்கையால் வருடிக் கொடுத்து,

“மீசை தாடியை முழுசா நீக்கிவிட்டு, அந்த சிவந்த தடித்த இறுகிய உதடுகள் மட்டும் அழகாய் பளிச் என்று தெரிவது போலப் பார்க்கவேண்டும்…” என்றாள் ஆவலாக. அதைக் கேட்டு உதடுகளைச் சுழித்தவன்,

“ஐயே… பார்க்க நன்றாக இருக்காதுடி… குழந்தை போல, சின்னப் பையன் போலத் தெரிவேன்  பேபி…” என்றான் மறுப்பாக.

அதைக் கேட்டு கோபமாக முறைத்தவள்,

“ம்.. ஒரு வாட்டி அப்படிப் பார்க்கவேண்டும். பிளீஸ்… அந்த தாடி மீசை இல்லாத இடத்தில் என் உதடுகளால் கோலம் போடவேண்டும்… பிளீஸ்…” அவள் கெஞ்ச, சட்டென்று அவன் விழிகள் பளிச்சிட்டன.

“அவ்வளவுதானே… வீட்டுக்கு போனதும் முதல் வேலை தாடிமீசையை எடுப்பதுதான். ஓகேவா… இப்போதைக்கு சும்மா ஒன்று கொடேன்… பிளீஸ்…” கெஞ்ச அதற்கு மேல் எப்படி மறுப்பாள்.  ஆசையுடனே அவன் உதடுகளை நோக்கிச் செல்ல, இப்போது அவனுடைய அறைக் கதவு பலமாகத் தட்டப்பட்டது. அது தட்டப்படும் சத்தத்தில் இருந்த அழுத்தத்தை உணர்ந்த ஏற்றமாதிபனின் உடல் சட்டென்று இறுகியது.

திரும்பித் தன் அறைக் கதவைப் பார்த்தவன், பின் விதரணையை ஏறிட்டுப் பார்த்து, பக்கத்தில் கிடந்த அந்தக் கோப்பை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“பேபி… கழிவறைக்குள் சென்று இதில் உள்ள அனைத்தையும் உன் கைபேசியில் நகல் எடுத்துக் கொள்… யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அழைக்கும் வரை வெளியே வராதே, புரிந்ததா?” அவன் சொல்ல, அதுவரை இருந்த காதலும் ஆசையும் கண்ணிமைக்கும் நொடியில் மறைந்து போயின.

விதரணை குழப்பத்துடன் அவனைப் பார்த்துவிட்டு, “யா… யார் அவர்கள்? நோ… உங்களைத் தனியாக விட்டுவிட்டு நான் போக மாட்டேன்…” என்று மறுப்பாகத் தலையசைக்க, பொறுமையிழந்து அவளைப் பார்த்து முறைத்தான் ஏற்றமாதிபன். சற்று முன் அவளிடம் முத்தம் வேண்டி நின்ற அந்த ஆசை நாயகன் அவன்தானா என்கிற சந்தேகமே வந்துவிட்டது அவளுக்கு. கொஞ்ச நேரத்திற்கு முன்பு எப்படிக் குழைந்து உருகி நின்றான்! இப்போது அதற்கு எதிர்மாறாகக் கடுமையாக இருக்கிறானே என்று நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.

“சொல்வதைக் கேள் விதரணை. போ… போய் நகல் எடு…” அவன் கிட்டத்தட்ட சீற, அதற்கு மேல் மறுக்க முடியாமல், அவன் கொடுத்த கோப்பை வாங்கிக்கொண்டு கழிவறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள் விதரணை.

அவள் உள்ளே செல்லவும் இவன் வாசலைப் பார்த்து, “யெஸ், கம் இன்…” என்றான்.

கதவு மெதுவாகத் திறக்க, அதிலிருந்து உள்ளே வந்தார் அவர்.

What’s your Reaction?
+1
13
+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-22

(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-21

(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…

6 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-20

(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-19

(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-18

(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…

2 weeks ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-17

(17) ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விதரணையின் மனத்திரையில், மெல்லிய புன்னகையுடன் வந்து நின்றார் அறிவழகன். அவரைக் கண்டதுமே இத்தனை நாட்களாய் அவளை…

2 weeks ago