Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-17

(17)

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விதரணையின் மனத்திரையில், மெல்லிய புன்னகையுடன் வந்து நின்றார் அறிவழகன். அவரைக் கண்டதுமே இத்தனை நாட்களாய் அவளை வதைத்த வலியும், ஏக்கமும், தவிப்பும் கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போயின. முகம் மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் மலர்ந்து போக,

“அப்பா.. நீ.. நீங்களா? ஐயோ… நீங்கள் இறந்துவிட்டதாக நினைத்தேனே!” என்றவாறு ஓடிச் சென்று தன் தந்தையை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவரும் தன் மகளை ஆசையோடு அணைத்து விடுவித்து,

“இறந்துவிட்டேனா? யார் சொன்னார்கள்? நானும் அம்மாவும் இப்போதும் உன் பக்கத்தில்தானே இருக்கிறோம்!” என்று கனிவாகச் சொல்ல, அதைக் கேட்டுத் தேம்பி அழுதுவிட்டாள் விதரணை.

“நீங்கள் உயிரோடு இருப்பது கூடத் தெரியாமல்… நான் என்னவோ நினைத்து… அப்பா… நிஜமாகவே நீங்கள் என் பக்கத்தில்தான் இருக்கிறீர்களா?” என ஏக்கமும் வலியுமாகக் கேட்க, “ஆமாம்டா.. இங்கே பார்.. உன் பக்கத்தில்தான் இருக்கிறேன்!” என்று தந்தை சொல்ல, மீண்டும் அவரை இறுக அணைத்துக் கொண்டாள். அப்போதுதான் தன் தந்தையின் தலையில் தூசி படிந்திருப்பதை கவனித்தாள்.

அவரை விட்டு விலகியவள், “என்னப்பா.. தலையில் தூசி?” என வியந்து கேட்க, “அதுவா… நிலவறையில் கொஞ்சம் வேலை இருந்ததுடா… அதான்…” என்று அவர் சொல்ல, விதரணை சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“அப்பா… நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்… அம்மா எங்கே?” என்று அவள் வினவ,

“முன்னறையில்தான் இருப்பாள்டா…” என அறிவழகன் புன்னகையுடன் சொன்னார்.

சட்டென்று முன்னறை கண்முன் விரிந்தது. அங்கே அவள் தந்தையும் தாயும் இருக்கையில் கட்டப்பட்டிருந்த கோர நிலையைக் கண்டு அலற முயன்றாள். மறுகணம், கத்தி ஒன்று தாயின் கழுத்தைக் கீற, ரத்தம் பீறிடத் தன் கண்முன்னே அவர்கள் மடிவதைக் கண்டவளுக்கு ஒட்டுமொத்த ஆன்மாவும் சுக்கல் நூறாகச் சிதறியது. கனவென்றும் நனவென்றும் பிரித்துப் பார்க்க முடியாத அந்தப் பயங்கரத்தில் (Trauma), உறக்கத்திலேயே அவள் உடல் வில்லாக வளைந்து பதறித் துடிக்கத் தொடங்கியது.

“நோ… அம்மா… அப்பா… அப்பா… இங்கே பாருங்கள்… அப்பா… விதுரன்… அம்மா…!” என்று பாய்ந்து தாயையும் தந்தையையும் காக்கப் போராடிய அவள் வேகத்திற்குக் காலம் ஈடுகொடுக்க மறுத்தது. யாரோ அவள் உடலை வலிக்கத் தீண்டுவது போலத் தோன்றியது.

“விடுடா… நான் அப்பாவிடம் போக வேண்டும்… அம்மாவிடம் போக வேண்டும்… விடு!” என அவள் கதற, அவளை அணைத்தவாறே உறங்கிக் கொண்டிருந்த ஆதிபனுக்குக் காதருகே மரண ஓலம் கேட்க, சிரமப்பட்டு விழிகளைத் திறக்க முயன்றான்; ஆனால் சோர்வினால் இமைகள் கனத்து மறுத்தன.

மீண்டும், “அம்மா… அப்பா… விதுரா… அப்பா… என்னிடம் வாருங்கள்… ஏற்றன்… அம்மா… அப்பா… காப்பாற்றுங்கள்!” என அவள் உடல் வெட்டித் துடிக்க, அந்த அலறலில் உறக்கம் கலைந்து திடுக்கிட்டு விழித்தான் ஆதிபன்.

அருகே தெரிந்த துடிப்பில் திரும்பிப் பார்த்தவன், அங்கே விதரணை வியர்வையில் குளித்தவாறு முகம் கசங்க, உடல் உதற எதையோ உளறிக்கொண்டிருந்தாள். பதறி எழுந்தவன், அவளை நெருங்கி அவள் கன்னத்தைத் தட்டிப்பார்த்தான்.

“விதரணை… விதரணை…!” என்று அவளைத் தட்டி எழுப்ப முயன்றான். அவளோ அது கூட உறைக்காமல் உடல் வில்லாகத் தூக்கிப் போட,

“அம்மா…. அப்பா… என்னைப் பாருங்கள்..!” என்று கதறினாள். பதறிப்போனவன் சட்டென்று அவளை இழுத்துத் தன் மார்பில் போட்டு இறுக அணைத்துக்கொண்டான்.

தோளில் போடப்பட்டிருந்த தையல்கள் பச்சை இரணமாக வலித்து நரம்புகளைச் சுண்டி இழுத்தது. ஆனாலும் அதைக் கவனிக்கும் நிலையில் ஆதிபன் இருக்கவில்லை. அவனுடைய உயிரானவள் அங்கே பித்தெடுத்தவள் போலத் துடிக்கிறாளே! தன் ஆதிபனின் அணைப்பில்தான் இருக்கிறோம் என்பது கூடப் புரியாமல் அவள் துடிக்க, அவளுடைய முதுகைத் தட்டியும் வருடியும் ஆசுவாசப்படுத்த முயன்றான். அவள் உறக்கத்திலிருந்து விடுபட முடியாமல் முனங்குவதும், மெல்லிய சத்தமிட்டு அழுவதும், அலறுவதுமாக இருக்கவே, அவளைத் தன்னிடமிருந்து மெல்ல விலக்கி, அவளுடைய கன்னத்தில் மென்மையாகத் தட்டி,

“ஷ்.. பேபி.. ஒன்றுமில்லை கண்ணம்மா… நான் இருக்கிறேன்… இங்கே பார்… பம்கின்… என்னைப் பார்… பயப்படாதே!” என்று அதட்டலான குரலில் அவளை நனவுலகிற்கு இழுக்க முயன்றான்.

ஆனால் விதரணையோ இன்னும் தன் வீட்டின் ரத்த வெள்ளத்திற்குள்ளேயே நின்றிருந்தாள். தன்னை யாரோ அசையவிடாமல் பற்றியிருப்பதாக நினைத்தவள், அந்தப் பிடியிலிருந்து விடுபடத் திமிறினாள். அவளது அடியும் உதையும் ஆதிபனின் மார்பையும் முதுகையும் பதம் பார்த்தன.

“பேபிகேர்ள்… விதரணை… விழித்துக் கொள்! நீ காண்பது கனவு, விழித்துக் கொள்!” என்று அவன் சத்தமாக அவளுடைய காதில் சொல்லிப் புரிய வைக்க முயன்றான்.

ஆனால் ஆழ் மனதில் நீங்காத வடுவாகிப்போன சம்பவம் கனவாகிப்போன நிலையில், அவளால் அதிலிருந்து வெளி வரவே முடியவில்லை. இப்போது ஆதிபன் ரத்த வெள்ளத்தில் அவளது கண்முன்னால் உயிர் விடுவது போலக் காட்சி விரிய,

“நோ… ஏற்றன்… என்… ஏற்றன்..! யாராவது அவரைக் காப்பாற்றுங்கள்… அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாதே! டேய் விடுடா… என் ஏற்றனை நான் காப்பாற்ற வேண்டும்… விடு என்னை!” என்று வெறிகொண்டு திமிற, அவனோ அவளைத் தன் வெற்று மார்பில் அமுக்கி, அசையவிடாமல் சிறைப்பிடித்தவன்,

“விதரணை.. எனக்கு ஒன்றுமில்லை.. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.. இங்கே பார்!” என்று அவள் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்த முயன்றான். அவளோ தன் ஆற்றாமையில் பெரும் குரலெடுத்து அலற முயன்றாள்.

அவள் அலறினால் அந்தச் சத்தம் வெளியே கேட்கும்; ஏற்கனவே உறக்கமின்றிப் பதறிக்கொண்டிருக்கும் பெற்றவர்களை அது இன்னும் அச்சுறுத்தும் என்பதை உணர்ந்து, அவளது கூச்சலைத் தடுக்கத் தன் கரத்தால் அவள் வாயைப் பொத்தினான். ஆனால், அந்தக் கயவன்தான் தன் வாயைப் பொத்துகிறான் என்று நினைத்தவள், ஆதிபனின் கரத்தைப் பல்லால் பலமாகக் கடிக்க, பற்களைக் கடித்து அவள் கொடுக்கும் வலியையும் தாங்கிக்கொண்டான் ஏற்றமாதிபன். அவளது பற்கள் சதையைத் துளைத்து ரத்தத்தைக் கசியச் செய்த போதிலும், அவன் கரத்தை எடுக்கவில்லை. அந்த ஆவேசமான கடியிலேயே அவளது வேகம் சற்று மட்டுப்பட, மெதுவாகத் தன் பற்களைத் தளர்த்தினாள் விதரணை. அவள் வாய் மெதுவாக இளகவும், தன் கரத்தை வெளியே எடுத்தவன் கரத்தைத் தூக்கிப் பார்த்தான். நான்கு பற்கள் ஆழமாகப் படிந்து இரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது. அவசரமாக அந்தக் கசிவைத் தன் பைஜாமாவில் தேய்த்துத் துடைத்து விட்டு, அதே கரத்தால் அவளது முகத்தில் இருந்த வியர்வையை மென்மையாக வருடித் துடைத்துவிட்டான்.

“இட்ஸ் ஓகே பேபி… இட்ஸ் ஓகே. இட்ஸ் எ டிரீம்… காம் யுவர்செல்ஃப்…” என்று மென்மையாகச் சொன்னவாறு, அவளைத் தன் தன் மார்போடு அழுத்தி, பின்னந்தலையை வருடிக் கொடுத்தான்.

முடியடர்ந்த அவனது இறுகிய மார்பில் முகம் அழுந்திக் கிடந்தவளுக்கு, அவனது துடிக்கும் இதயம் அவளைத் தட்டி எழுப்ப முயன்றதாலோ அல்லது கரகரத்த அவனது மார்பு முடி கன்னத்தை உரசியதாலோ, கொஞ்சம் கொஞ்சமாக விழிகளைத் திறக்க முயன்றாள்.

இருட்டடித்திருந்த உலகம் மெல்ல மெல்ல மங்கலான வெளிச்சத்திற்கு வரத் தொடங்க, அவளுடைய பார்வையில் வரிவடிவமாக விழுந்தான், அவளவன். அவனைக் கண்டதும் முதலில் குழம்பி, தவித்து, துடித்து, பின் முழுதாய் உணர்வு பெற்று விழிகளை விரித்துப் பார்த்தவளுக்கு உதடுகள் நடுங்கத் தொடங்கின.

‘இவன்… இவன்தானே கடைசியாக அவள் கண்முன்னே செத்துப் போனான்? ஆனால் இப்போது உயிரோடு இருக்கிறானே? இது எப்படிச் சாத்தியம்? பச்சையாய், இரணமாய் செத்துப் போனவன் கண்முன்னே இருக்கிறான் என்றால்…?’ அவள் உயிரோடு இருப்பது போலக் கனவு காண்கிறாளா என்ன? நோ… ஏற்கெனவே பெற்றவர்களை இழந்து விட்டாள். இதில் அவனையும் இழப்பதென்றால்… நினைக்கும் போதே உடல் தூக்கிப் போட்டது. அவன் இல்லை என்றால் அவள் வெறும் பிணமல்லவா.

“ஏற்றன்…” என்று அரைவாசிக்குத் திறந்த விழிகளுடன் முழுதாக விழிக்காத நிலையிலும் துடித்தவள், நடுங்கித் தடுமாறியபடி கரங்களை உயர்த்தி அவன் முகத்தைப் பற்றி வருடியவாறு குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவள் செயலைக் கண்டு உருகியவனாக,

“கண்ணம்மா… இங்கே பார்… நீ கண்டது கனவு… உனக்குப் புரிகிறதா? வெறும் கனவு!” என்றவன் தன் உதட்டினருகே நகர்ந்த அவள் கரத்தைப் பற்றி உள்ளங்கையில் ஆழமாக உதடுகளைப் பதித்து முதம்தமிட்டு விலக்க,  மறு கணம் அவனை உதறிவிட்டு  அவன் முன்னே முழங்காலிட்டு அமர்ந்து, அவனுடைய முகத்தைப் பற்றித் தன் மார்பில் புதைத்துத் தன்னோடு காற்றுப் புகாத வகையில், இறுக அணைத்துக்கொண்டாள் விதரணை. யாரிடமோ இருந்து அவனைக் காப்பது போல, அவனது கழுத்தை ஒரு கரத்தால் வளைத்துப் பிடித்து, மறு கரத்தால் அவன் முதுகை அழுந்தப் பற்றி அவனைத் தனக்குள் புதைப்பது போல இறுக்கிக் கொண்டவள் அங்கும் இங்கும் பார்த்தாள்.

ஆதிபனுக்கோ அவளுடைய செயலில் ஒரு அதிர்வு ஏற்பட்டாலும், அவளுடைய மனநிலையைப் புரிந்தவனாக அவளை வாரி அணைத்தான். அவள் மார்பில் மென்மையாக முகம் புதைத்தவாறே அவள் இடை சுற்றித் தன் கரங்களைப் போட்டுத் தன்னோடு நெரித்தவன், அவள் நடுமார்பில் உதடுகளைக் குவித்து முதமிட்டு,

“ஷ்… பேபி… ஐ ஆம் ஓகேடா… ஐ ஆம் ஓகே…” என்று அவள் புத்திக்குத் தன்னை உணரவைக்க முயன்றான்.

ஆனால் அவள் கேட்கும் நிலையிலா இருந்தாள்? ஏதோ இராட்சதனிடமிருந்து பராந்தைக் காக்கும் கோழிக்குஞ்சு போல அவனை ஒரு வித வெறியோடு  இன்னும் இறுக அணைத்தவாறு, பயமும் பதட்டமுமாக அங்கும் இங்கும் பார்த்தாள்.

கண்ணுக்கு எதிரிகள் என்று யாரும் தெரியவில்லை. ஆனாலும் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை. தாய் தந்தையின் மரணத்தில் பாதி செத்துப்போனாள். அவனுக்கு ஒன்றென்றால் முழுதாக செத்துப் போவாள்… நோ… இவன் என்னவன். யாருக்காகவம் இவனைத் தொலைக்க மாட்டேன்… இவனை யார் தொடுவதாக இருந்தாலும் என்னைத் தாண்டித்தான் தொட முடியும்… மனதிற்குள் உருப்போட்டவாறு, காற்றில் படபடக்கும் இலை போல நடுங்கியவாறு அவனை இறுகு அணைத்தவாறு நின்றிருக்க, அவளுடைய அந்த ஆக்ரோஷமாக அணைப்பில் புதைந்திருந்த ஏற்றமாதிபனுக்குத்தான் மூச்சு முட்டியது. மெதுவாகத் தலையை விலக்க முயன்றும் அவள் விடவில்லை. மீண்டும் அவன் தலையைப் பற்றித் தன் மார்பில் புதைத்துக் கொண்டவள், தலையைச் சுற்றிக் கரங்களைப் போட்டு இறுக அணைத்தவாறு அங்கும் இங்கும் பார்த்தாள். யாருமில்லை என்றதும் அவன் தலையில் தன் முகத்தைப் புதைத்து,

“ஒ… ஒன்றுமில்லை… நான்… நான் இருக்கிறேன்… உங்களுக்கு ஒன்றுமாகாது…” தவித்த குரலில் அவள் உளற ஏற்றமாதிபனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும்,  மறு பக்கம் அவள் அச்சம் கண்டு வருந்தவே செய்தான்.

இப்போது அவள் இடையைச் சுற்றியிருந்த கரத்தை விலக்கியவன் அவள் முதுகை மெதுவாக வருடிக் கொடுத்து,

“எனக்கு ஒன்றுமில்லைடி… நான் நன்றாகத்தான் இருக்கிறேன்… நம்புடா…” அவன் பல முறை சொன்ன பிறகுதான் அவளுக்கும் சுரணை கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது.

தான் கண்டது கனவுதான் என்பதும், தன்னவன் தன் கையணைப்பில் உயிரோடு இருக்கிாறன் என்பதையும்,  புத்தி உணர்ந்துகொண்ட விநாடி, அவளுடைய இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்தது.  கூடவே தேகம் உதறியது.

ஒரு பயங்கரச் சம்பவத்தைக் கண்டதும் தேகம் நடுங்குவது போல அவளது உடல் நடுங்குவதை உணர்ந்தவன், அவளிடமிருந்து தன் முகத்தை விடுவிக்க முயன்றான்.

ஆனால் அவளோ இன்னும் அவனைத் தன் மார்பில் அழுத்தி, தன் முகத்தை அவன் தலையில் பதித்து,

“பிளீஸ்… நீங்களும்… நீங்களும் என்னைத் தவிக்க விட்டுப் போய்விடாதீர்கள் ஏற்றன். அதற்கு மேல் என்னால்… என்னால் உயிரோடு இருக்கவே முடியாது…” என்று விம்ம, சட்டென்று அவள் மார்பிலிருந்து தன் முகத்தை விலக்கியவன், அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்தி,

“இல்லைடா… இல்லை… எப்போதுமே உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இது சத்தியம்!” என்றதும் அவன் மார்பில் அமர்ந்தவாறே அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் விதரணை.

கொஞ்ச நேரம் எப்படித் துடித்துப் போனாள். நினைத்தவளுக்கு தாள முடியவில்லை. அழுகை வந்தது. கொஞ்சம் விசும்பினாள். பின் அவனை விடுவித்து அவன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

அவனை முதன்முறையாகக் கண்டதும் அவன் மீது கொண்ட ஈர்ப்பும், அந்த ஈர்ப்பே காதலாக மாறிய விந்தையும், அந்தக் காதலை அவனிடம் எதிர்பார்த்ததும், அவன் மறுத்ததும் என அனைத்தும் நினைவுக்கு வந்தன. கூடவே அந்த ஜாஸ்மினும்.

அந்த ஜாஸ்மின்! அவள்தானே அங்கே வந்து அவளையும் மற்றவர்களையும் காப்பாற்றினாள்? அவள்தானே இவளைப் பத்திரமாகத் தன் கையணைப்புக்குள் வைத்தவாறு வீட்டிற்குள் அழைத்து வந்தாள்? தன்னவனுக்குக் காயம் பட்டதைக் கண்டு துடித்தவளை,

“அவனுக்கு ஒன்றுமாகாது… அவனைப் பற்றிக் கவலைப்படாதே…” என்று தேற்றியதும் அவள்தானே. அதுமட்டுமா, இன்னொன்றும் சொன்னாளே…

“உன்னுடைய ஏற்றமாதிபனைக் கொல்ல யாராலும் முடியாது. பயப்படாதே… அவன் இதற்காகவே பயிற்சி எடுத்தவன்…” என்றாளே!

‘உன்னுடைய ஏற்றமாதிபன்… உன்னுடைய ஏற்றமாதிபன்.’ அப்படியென்றால், நான் ஏற்றமாதிபனைக் காதலிப்பது அவளுக்குத் தெரியுமா? அதுமட்டுமில்லையே, ஏற்றமாதிபன் எனக்குச் சொந்தமானவன் என்று அவளுக்குத் தெரிந்ததால்தானே ‘உன்னுடைய ஏற்றமாதிபன்’ என்று அவள் சொல்லியிருப்பாள்? இத்தனைக்கும் அவனுடைய காதலிக்கு அப்படிச் சொல்ல எப்படி முடிந்தது?

குழப்பமாக நிமிர்ந்து ஏற்றமாதிபனைப் பார்த்தாள் விதரணை.

அப்போதுதான் அவனது விழிகளில் தெரிந்த கனிவும், கருணையும், அதையும் தாண்டிய ஒளியாய்த் தெரிந்த காதலும் அவளுடைய பார்வையில் பட்டன. ‘இத்தனை நாட்களும் இதை ஏன் கவனிக்கத் தவறினேன்?’ என்று நினைத்தவளாய், மருத்துவமனையில் அவள் அருகிலேயே இமைகூட விலகாமல் இருந்தானே; அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை என்றால் எதற்காக அத்தனை மெனக்கடல்? யாரையாவது காவலுக்குப் போட்டுவிட்டு அவன் சென்றிருக்கலாமே! அதுமட்டுமா, அவள் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படியாகத் தெரிந்திருக்கின்றன. அன்று கூட அவளைக் காக்கத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்தான்; அன்பு இல்லாதவன் இத்தகைய காரியங்களைச் செய்வானா? நேற்றுக் கூட ‘உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொன்னால் நம்புவாயா’ என்று கூடக் கேட்டானே. இவள் இல்லை என்று வேறு மறுத்தாளே. அது மட்டுமா?

மரணப் படுக்கையில் அவள் கிடந்தபோது, ஆழ்மனதின் ஏதோ ஒரு மூலையில் மங்கலாய்ப் பதிவான அவனது வார்த்தைகள் இப்போது அவள் காதுகளில் மீண்டும் ஒலித்தன.

“என் வாழ்க்கையில் இந்த அளவு பயப்படுவேன், பதறுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை பம்கின்… நீ… நீ இல்லை என்றால் எனக்கு எதுவுமே இல்லை என்று அந்த நொடியே புரியவைத்துவிட்டாய் தெரியுமா… என் உயிரடி நீ… என் உலகமும் நீ… என் மொத்தமும் நீதான்டி… கடவுளே… விதரணை… எப்படிச் சொல்வேன் உனக்கு… உன்னை அந்த நிலையில் வைத்துப் பார்த்தபோது என் உயிரே ஆடிப்போனது என்று சொன்னால் நீ நம்புவாயா?”

அவன்தான் சொன்னானா என்று தெரியவில்லை; ஆனால் அந்தக் குரல், அது சொன்ன விதம், அதிலிருந்த வலி… அது… அவனுடையதுதான்… நிச்சயமாக அவனுடையதுதான். ம் அவன் சொன்னவை அனைத்தையும் கேட்டுப் பத்திரமாக உள்ளே புதைத்து வைத்திருந்த ஆழ்மனது, மொட்டவிழ்ந்த மணம் பரப்பி நிஜத்தை அவளுக்கு உரக்கச் சொல்ல, அதுவரை கலங்கிய அவள் முகம் மெல்ல மெல்லத் தெளிந்தது.

அந்த அதிர்வோடு அவனுடைய விழிகளைப் பார்க்க முயன்றாள்.  அந்த மங்கிய இருட்டில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. சட்டென்று அவனை விட்டு விலகியவள், ஓடிப்போய் மேசை விளக்கைப் போட்டுவிட்டு மீண்டும் அவனை நோக்கி விரைந்து வந்தவள், படுக்கையிலேறி முழங்கால் மடித்து அமர்ந்து அவன் விழிகளை மாறி மாறிப் பார்த்தாள்.  அவனோ அவள் செய்வதைத்தான் குழப்பமாகப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

இன்னும் அவள் கனவுலகத்திலிருந்து முழுதாக மீளவில்லை; அந்த பாதிப்பு இன்னும் தளர்ந்த அவள் உடலில் தெரியத்தான் செய்தது. இருப்பினும், அதையும் தாண்டி, தன்னவனின் நிஜ முகத்தைப் பார்க்கும் வெறி அவளுக்கு.

அவனோ தயங்காமல் அவள் விழிகளைப் பார்த்தாலும், அதில் குழப்பமும் கேள்வியுமே தொக்கி நின்றன. அவளோ தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டவளாக, விழிகளை விரித்து உதட்டில் புன்னகை தேக்கி,

“நீங்கள்… நீங்கள் உண்மையாகவே என்னைக் காதலிக்கிறீர்கள்!” என்றாள் தெளிவாக, அழுத்தமாக அதே நேரம் உறுதியாக.

அதைக் கேட்டதும் ஆதிபனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. ஒற்றைப் புருவம் ‘இது என்ன கேள்வி?’ என்பது போல மேலேறி இறக்கினாலும், பதில் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான்.

“யெஸ்… யு லவ் மி… ஆனால்… எ… எப்போதிலிருந்து என்னைக் காதலிக்கிறீர்கள்?” – அடுத்த கேள்வி அவளிடமிருந்து வந்தது. அப்போதும் அவன் மௌனம் கலைக்கவில்லை.

“அந்த ஜாஸ்மின்… உங்களை ‘உன்னுடைய ஏற்றமாதிபன்’ என்றாள். அப்படியென்றால் உங்களுக்கு என் மீது காதல் இருப்பது அவளுக்குத் தெரியும், அப்படித்தானே?” அவள் கேட்க, இப்போது ஆச்சரியத்தோடு அவளை ஏறிட்டான் ஆதிபன். ‘இவள் இந்த அளவு புத்திசாலியாக இல்லாமல் இருந்திருக்கலாம்’ என்று நினைத்தவனின் உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது.

அந்தப் புன்னகையைக் கண்டதுமே அதிலிருந்த மென்மையும் குறும்பும் அவளது சந்தேகத்தை உறுதிப்படுத்த, அதுவரை கொஞ்சமே கொஞ்சமாய் இருந்த சந்தேகமும் துணிகொண்டு துடைத்தாற்போல மாயமாகிப் போக, ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் சேர,

“ம… மருத்துவமனையில்… நான் மயங்கியிருந்த போது நீங்கள் பேசினீர்கள். என்னை மணப்பதாகச் சொன்னீர்கள். என் மீது உயிரையே வைத்திருப்பது போல ஏதோ பேசினீர்கள்…” என்று பரபரப்புடன் சொன்னவள், தன் தலையில் இரு முறை தட்டி அவன் சொன்னதை இரைமீட்க முயன்றாள். சரியாக எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அந்தக் குரல் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றது. உடனே விழிகளைத் திறந்து அவனபை் பார்த்தவள், தன் நடுங்கும் சுட்டுவிரலைக் காதருகே காட்டி, “இப்போதும் அது என் காதில் கேட்கிறது!” என்றாள் குரல் கமற.

“யெஸ்… யெஸ்… யு லவ் மீ…!” என்று ஆனந்தக் கண்ணீருடன் கிறீச்சிட்டவள், ஒரு குழந்தையைப் போல அவனை இன்னும் நெருங்கி வந்தாள்.

“எப்போதிலிருந்து… எப்போதிலிருந்து என்னைக் காதலிக்கிறீர்கள்?” – என்ற கேட்டபோது அந்த உலகமே அவள் வசமான உணர்வு. அவள் ஏற்றமாதிபன் அவளைக் காதலிக்கிறான். இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும்… அத்தனை நாட்களும் பட்ட வலி கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போக, மகிழ்ச்சியோ நெஞ்சத்தில் பொங்கி வழிந்தது.

யாருக்காவது மகிழ்ச்சியில் உயிர் பிரியும் பயம் தோன்றுமா. அந்தக் கணம் அவளுக்குத் தோன்றியது. ஏற்றமாதிபனின் காதலைப் பெற்றுவிட்ட அந்த மகிழ்ச்சியில் இதயம் பலமகத் துடித்தது. அதன் வேகம் கண்டு அவளே பயந்துதான் போனாள். உடல் எல்லாம் சிலிர்த்தது. அழுகை வருகிறது. அதையும் தாண்டி அகமும் புறமும் மகிழ்ச்சியில் சிரித்தது. அதுவரையும் அழுகைக் கண்ணீரைக் கண்ட அவள் கன்னங்கள், இப்போது ஆனந்தக் கண்ணீரைக் காண, அதை அவசரமாகப் புறங்கையால் துடைத்து விட்டவள்,

“சொல்லுங்கள்… எப்… எப்போதிலிருந்து…” என்றாள் அறிந்தே ஆகவேண்டும் என்கிற வெறியில்.

ஆனால் அவனோ, பரவசமும் அழுகையுமாகக் கேட்டவளின் சிவந்த நாசியைச் சுட்டுவிரலால் மென்மையாகத் தட்டி, சுவரிலிருந்து கடிகாரத்தை விழிகளால் காட்டி,

“இப்போது நேரத்தைப் பார்த்தாயா பேபிகேர்ள்? மணி ஒன்று… இப்போது கேட்கும் கேள்வியா இது? முதலில் படுத்துத் தூங்கு… பிறகு பேசலாம்,” என்று அவன் மென்மையாகச் சொல்ல, அவளோ சட்டென்று அவனது வலது கரத்தைப் பற்றித் தன் மார்போடு அணைத்துக் கொண்டு,

“பிளீஸ்… பிளீஸ் உண்மையைச் சொல்லுங்கள்… இல்லையென்றால் எனக்கு உறக்கமே வராது…” என்றவள் பதட்டத்தோடு அவன் கரத்தை விலக்கி, அவனுடைய உள்ளங்கையை விரித்துத் தன் இடது மார்பில் அழுத்தி,

“பாருங்கள்… என் இதயம் துடிப்பதை… நீங்கள் உண்மை சொல்லவில்லை என்றால் அது நின்றுவிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. சொல்லுங்களேன்.. பிளீஸ்…” கெஞ்சலும் அழுகையுமாக அவள் சொல்ல,  அதற்கு மேல் தாள முடியாதவனாக அவளை இழுத்துத் தன் மார்பில் போட்டு இறுக அணைத்துக்கொண்டான் ஏற்றமாதிபன்.

“ஷ்… பேபி… டோன்ட் கிரை… சொல் என்றால் சொல்லிவிட்டுப் போகிறேன். அதற்கு எதற்கு அழுகிறாய்?” என்றவன், அவளுடைய தலையில் தன் அழுத்தமான இதழ்களைப் பதித்து, ஆழமான முத்தம் ஒன்றை வைத்தான். பின் மெதுவாக அவளைத் தன்னிடமிருந்து விலக்க முயல, அவளோ அவன் கழுத்தைச் சுறற்றிக் கரங்களைப் போட்டு அவனை விட்டு விலக மறுத்தவளாக,

“சொல்லுங்கள்…” என்றாள் பிடிவாதமாக. அவளுடைய அந்த செயலில் சிரித்தவனாக, புறங்கை விரல்களால் அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தவாறு அவளைப் பார்த்தவன், பின் அவள் விழிகளைச் செழிக்கும் காதலோடு பார்த்தான். பின் பட்டும் படாமலும் அவள் விழிகளின் ஓரத்தை வருடிக் கொடுத்து,

“பதினாறு வயதைக் கூடத் தொடாத அந்த அழகிய குழந்தை, அபிநயாவின் பிறந்தநாளின் போது, தன் கடல் போன்ற பெரிய விழிகளை விரித்து என்னை ஆர்வமாகப் பார்த்த அந்த நொடியில்… என் இதயத்தில் ஒரு சலனம்!” – அவன் சொல்லி முடிக்கவும், விதரணை அதிர்ந்து போய் எழுந்து அமர்ந்தாள்.

நம்ப முடியாமல் அவனைப் பார்த்து, “அப்பவேவா…?” என்றாள் வியப்புடன்.

அதைக் கேட்டுச் சிரித்தவன், மெதுவாக அவளைப் படுக்கையில் கிடத்தி, தானும் அவள் பக்கமாகச் சாய்ந்து படுத்தான். அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, “ம்… அப்பவே! ஆனால் நீதான் குழந்தையாயிற்றே… அதனால் காதல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால்… உன் அழகு என்னை அபகரிக்கிறது நிஜம்…” என்று அவன் சொல்ல, அவளோ அவனை முறைத்தாள்.

“நான் ஒன்றும் குழந்தையில்லை. அப்போது எனக்குப் பதினாறு வயது!” என அவள் வாதிட, அவளைச் செல்லமாக முறைத்த ஆதிபன், “பதினாறு வயது தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன உனக்கு!” என்றான்.

அவன் துல்லியமாகச் சொன்னதும் கொஞ்சம் அசடு வழிந்தவள்,

“அது… வருஷப்படி பார்த்தால் எனக்குப் பதினாறுதான்…” என்று அவள் முறுக்கிக் கொள்ள, ஏற்றமாதிபனின் புன்னகை மேலும் விரிந்தது. அவள் கூந்தலை வருடிக் கொடுத்தவாறே ஆசையோடு அவள் முகத்தை ஏறிட்டான்.

“நீ என் மனதில் ஒரு சலனத்தை விதைத்தது நிஜம். ஆனால் ஒரு குழந்தைத்தனமான ஈர்ப்பை நம்பி நான் எப்படி உனக்கு வாக்கு கொடுக்க முடியும்? சொல்லப்போனால் எனக்கும் உன் மீது ஈர்ப்பு இருந்ததே தவிர, அது என்னவிதமான உணர்வு என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. அதனால்தான், ‘நீ நல்ல நிலைக்கு வந்த பிறகும் இந்த ஏற்றமாதிபன் உன் நினைவில் இருந்தால் பார்க்கலாம்’ என்று உன்னை அனுப்பி வைத்தேன்… ஆனால்…”

என்றவன் தயங்கிவிட்டு, அப்படியே படுக்கையில் மல்லாக்க விழுந்தான். அவளோ சட்டென்று எழுந்து சப்பணமிட்டு அமர்ந்து, அவனை ஆவலாகப் பார்க்க, காயம் படாத கரத்தைத் தலைக்குப் பின்பாக வைத்தவாறு, பழைய நினைவில் சற்று நேரம் தடுமாறினான். பின் அவளைப் பார்த்து,

“என்னால் உன்னை மறக்க முடியவில்லை விதரணை. நீ குழந்தை என்று தெரிந்தும் என்னால் உன்னை மறக்க முடியவில்லை. உன்னை மறந்தே ஆகவேண்டும் என்று எவ்வளவொ முயன்றேன். ப்ச்… தினம் தினம் அந்த விரிந்த கண்களும், ஆசையோடு என்னைப் பார்த்த அந்த முகமும்தான் நினைவுக்கு வந்து இம்சித்துக்கொண்டே இருந்தன. அபி வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவளறியாத வகையில் உன்னைப் பற்றி விசாரிப்பேன். அவள் அனைத்தையும் எனக்குச் சொல்வாள்…” அவன் சொல்லச் சொல்ல வியந்துபோனாள் விதரணை.

“நிஜமாகவே விசாரிப்பீர்களா?” என அவள் வினவ, லேசாகச் சிரித்தவன்,

“பின்னே, உனக்கு மிசோஃபோனியா இருப்பது எனக்கு எப்படித் தெரியும் என்று நினைத்தாய்?” எனக் கேட்டான்.

“ஓ…” என்றவள், பின் அவனைச் சோகமாகப் பார்த்து,

“பிறகு ஏன் என்னைக் காதலிக்க மறுத்தீர்கள்? அந்த ஜாஸ்மினைத் திருமணம் செய்யப்போவதாக ஏன் சொன்னீர்கள்?” என்றாள் வேதனையோடு.

அதைக் கேட்டுச் சற்று அமைதி காத்தவன், “நீ அபியின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் என்னைப் பற்றி விசாரிப்பதாக அபி என்னிடம் சொன்னாள். அப்போதே உனக்கு என் மீதிருக்கும் அந்த ஈர்ப்பு கொஞ்சமும் குறையவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அதே நேரம் நானும் உன்னைப் பற்றித் துருவித் துருவி விசாரிப்பதால், அபிநயாவுக்குச் சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது. நேரடியாகவே என்னிடம் இதைப் பற்றிக் கேட்டாள். முதலில் மறுத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் மறைக்க முடியவில்லை. உன் மீதிருந்த என் விருப்பத்தைச் சொன்னேன். ஆனால் அது காதல்தானா என்று எனக்கும் அப்போது உறுதியாகத் தெரியவில்லை…”

ஆதிபன் சொல்லச் சொல்ல அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், உதடுகளைச் சுருக்கி,

“எனக்கு அது காதல் என்பது நிச்சயம்! உங்களை முதன்முறையாக எப்போது கண்டேனோ, அப்போதே தோன்றிய அந்த ஆர்வம், ஆசை எல்லாமே காலம் போகப் போக பல மடங்கு உயர்ந்ததே தவிர, குறையவே இல்லை தெரியுமா?” என்றாள் பெருமையாக.

அவள் சொன்னதைக் கேட்டுப் பற்கள் தெரிய சிரித்தவன், அதுவரை தலைக்குப் பின்னால் வைத்திருந்த தன் வலது கரத்தை எடுத்து, அவள் மூக்கை வலிக்காமல் கிள்ளிவிட்டு,

“ம்… எனக்குத் தெரியும்… ஆனால்…” என்று இழுத்தான். ஒரு பெருமூச்சை வெளியிட்டவனின் முகம் இப்போது இறுகி வதங்கிப் போயிற்று. விழிகளில் வலியைத் தேக்கி விதரணையை ஏறிட்டவன்,

“எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது விதரணை. உன் மீதிருந்த விருப்பம் மெல்ல மெல்ல நிறம் மாறி, அது அழகான காதலாகப் பூக்கத் தொடங்கிய நேரம் அது. அப்போது கியூபெக்கில் தீவிரவாதிகளைப் பிடிக்க எங்கள் குழு சென்றிருந்தது. அந்த மோதலில் எனக்குக் காயம் ஏற்பட்டது… கூடவே என் நண்பன் ஒருவன் இறந்து போனான்…”

வலியோடு சொன்னவன், சட்டென்று எழுந்து அவளுக்கு முதுகு காட்டிப் படுக்கையில் அமர்ந்து கொண்டான் ஏற்றமாதிபன். தான் அனுபவிக்கும் அந்த வேதனையை அவள் பார்க்கக் கூடாது என்று அவன் நினைப்பது அவளுக்குப் புரிந்தாலும், அவன் உணர்ந்த வலியைத் தன் வலியாய் உணர்ந்தவளாக நகர்ந்து அவனை நெருங்கி அமர்ந்து அவனது கரத்தை அழுத்திக் கொடுத்தாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் சொல்ல முடியாத வலி தெரிய,

“ஏற்றன்…” என்றாள் மென்மையாக. அவனோ உமிழ்நீர் கூட்டி விழங்கிவிட்டு,

“அவனுடைய மரண வீட்டிற்கும் போயிருந்தேன். அங்கே அவன் மனைவி…” என்றவன், தன் மேல் பற்களால் கீழ் உதட்டை அழுந்தக் கடித்து விடுவித்து, “திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை கண்ணம்மா… இத்தனைக்கும் எட்டு மாதக் கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள். அவள் அழுத அழுகை… அந்த நொடி, அந்தப் பெண்ணின் இடத்தில் நீயும், சவப்பெட்டிக்குள் நானும் இருப்பதாகவே எனக்குத் தோன்றிவிட்டது…” அவன் முடிக்கவில்லை, பாய்ந்து முழங்காலிட்டு அமர்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள் விதரணை.

அன்று அவனது மறுப்புக்கான காரணம் இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து போக, துடித்துப் போனாள் விதரணை. எங்கே அந்தப் பெண்ணைப் போலத் தனக்கும் நேர்ந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் அவன் தன்னை மறுத்திருக்கிறான் என்பதை உணர்ந்த அந்த நொடி, விதரணைக்கு அவன் மீதான காதலின் அளவு சுனாமியாகப் பொங்கிப் பெருகத் தொடங்கியது.

“இந்த உலகத்தில் நான் அதிகம் நேசிப்பது மூன்று விஷயங்களைத்தான் விதரணை. ஒன்று என்னைப் பெற்றவர்கள், அடுத்து நீ… இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது என் தொழில். என் தொழிலில் எனக்கு எப்போதும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி எனக்கு நடந்துவிட்டால் உன் நிலை?? நீயும் அந்த பெண் போலதானே கதறி அழுவாய்… துடிப்பாய்?  என்னைக் காதலித்தால், என்னை மணந்து கொண்டால், உன் வாழ்க்கை பாழாகிவிடுமோ என்று பயந்தேன். நான் சாவதைப் பற்றி எனக்கு அச்சமில்லை; ஆனால், உன்னைத் தனியே விட்டுப் போய்விட்டால்? அந்தப் பயத்தில்தான் உன் மீது இருக்கும் காதலை உன்னிடமிருந்து மறைக்கத் துனிந்தேன்.

“உனக்குப் பதினெட்டு வயது ஆனபோதும் உன் காதல் அப்படியே இருப்பதைக் கண்டு என்ன செய்வது என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நீ என்னை வெறுக்க வேண்டும் என்றால், நான் இன்னொருத்தியைக் காதலிப்பதாக நீ நம்பவேண்டும். என் நிலை புரிந்து அபியும் உதவிக்கு வந்தாள். நான் உன்னை விடுத்து வேறு ஒருத்தியை விரும்புவது தெரிந்தால், முற்று முழுதாக என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டு, நீ ஒரு புதிய வாழ்க்கையைத் தேடிப் போய்விடுவாய் என்று தான் நினைத்தேன். ஆனால் நீ…!” கேட்டவன் திரும்பித் தன்னவளைப் பார்த்தான்.

“சொல்லியும் புத்தி வரவில்லை என்றால், செயலில் காட்ட வேண்டியதுதான் என்று ஜாஸ்மினை வரவழைத்தேன். நீயும் கோபப்பட்டாய், விலகிப் போனாய். அதன்பின் உனக்கான ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துச் சந்தோஷமாக இருப்பாய் என்றுதான் கருதினேன். ஆனால் நீயோ, யாரையும் உன் அருகில் கூட வரவிடவில்லை…”

“என்னதான் உன்னைத் திருமணம் செய்வதில்லை என்று நான் முடிவெடுத்திருந்தாலும், பாழாய்ப்போன என் மனது உனக்காக ஏங்குவதை என்னால் தடுக்க முடியவில்லை. உனக்கே தெரியாமல் அடிக்கடி உன்னைப் பார்த்துவிட்டுச் செல்வேன்; உன்னைப் பற்றி விசாரிப்பேன். உன் உடல்நலம், நீ என்ன செய்கிறாய், புதிதாக யாரையேனும் நண்பர்களாக்கி இருக்கிறாயா, யாராவது காதலன் இருக்கிறானா என்று அக்குவேறு ஆணிவேறாக விசாரிப்பேன். யாராவது ஒரு ஆண் உன்னை நெருங்குவது தெரிந்தாலே அவனைப் பற்றி முழுமையாக விசாரித்துவிடுவேன். அவன் சரியில்லை என்று நான் எச்சரிக்க வரும் முன்பே நீயே அவனை விட்டு விலகிச் சென்றுவிடுவாய். உன் காதல் சும்மா போகிற போக்கில் வந்தது அல்ல என்பதைப் பிறகுதான் நான் முழுதாகப் புரிந்துகொண்டேன். அதற்காக உன் வாழ்க்கையை நரகத்திற்குள் தள்ளவும் நான் விரும்பவில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் நீ மாறிவிடுவாய் என்றுதான் காத்திருந்தேன்… ஆனால் என் நினைப்பை முழுவதுமாகப் பொய்யாக்விட்டாய்…” அவன் வலியோடு சொல்ல, திரண்டு உருண்ட அவனது கரங்களைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டு அணைத்தவாறே

“ம்… உங்களைத் தவிர வேறு எந்த ஆணையும் என்னால் நெருங்க விட முடியவில்லையே, நான் என்ன செய்யட்டும்? உங்களை நெருங்கினாலே உங்களிடமிருந்து ஒரு வாசனை வீசும் தெரியுமா?” என்றவள், தன் நாசியை அவன் புஜத்தில் அழுத்தி ஆழ மூச்செடுத்து, அந்த ஆண் வாசனையைத் தன் நுரையீரலில் நிரப்பிக் கொள்ள, ஏற்றமாதிபனோ அவளை வியந்து பார்த்தான்.

அவனுக்கும் அப்படித்தானே! அவளுக்கே உரித்தான அந்த வாசனையை இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவனால் சட்டென்று கண்டுபிடித்துவிட முடியுமே! இது என்ன விந்தை என்று அவன் வியந்து கொண்டிருக்க, அவளது விரல்களோ அவனது திரண்ட புஜத்தின் தசைகளை ரசனையுடன் அழுத்தியவாறு இரசனையுடன் முகம் சிவக்க,

“அந்த வாசனை என் அடிவயிற்றைச் சுண்டியிழுக்கும் ஏற்றன்… அப்படியே இதயம் நோக்கிப் பயணித்து அதன் துடிப்பின் வேகத்தை அதிரச் செய்யும். தேகமே சிலிர்த்துப் போகும்… அதுவும் உங்கள் பார்வை என் மீது பட்டால் பெண்மை கிறங்கிப் போகும்; உங்கள் மூச்சுக்காற்று என் மீது பட்டாலே போதை உட்கொண்டது போல மதி மயங்கும்…” அவள் தன் போக்கில் காதலைக் கொட்டித் தீர்க்க, அவனோ தன் தோளில் சாய்ந்திருந்தவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவளுக்கு இத்தனை காதலா தன் மீது? தன் ஆணின் தேக வாசனையை உணர்ந்து அதில் மதிமயங்கும் இந்தக் காதலை என்னவென்று சொல்ல!

“விதரணை…” என்று அவன் அழைக்க, அந்த அழைப்பிலேயே சொக்கிப் போய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் விதரணை. அந்த விழிகளில் தெரிந்த தீராத காதலைக் கண்டு அவன் மெய்யுருகித்தான் போனான்.

“விதுமா… உன் நன்மைக்காகத்தான் உன்னை விலக்கி வைக்க முடிவு செய்தேன். ஆனால், உன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றதும் சத்தியமாகச் சொல்கிறேன்… உன்னை விட என் தொழில் கூட எனக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விட்டது தெரியுமா?” என்று சொன்னவன், இப்போது அவளை நோக்கித் திரும்பி அவள் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தினான்.

அவள் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து, “பேபி கேர்ள்… என் உணர்வுப்பூர்வமாக, உயிர் துடிக்க, இதயத்தின் ஆழத்திலிருந்து உனக்குச் சொல்கிறேன்… ஐ லவ் யூ பேபி… ஐ லவ் யூ சோ மச்!” என்றான்.

ஆதிபன் சொல்லச் சொல்ல, கண்களில் நிறைந்த கண்ணீரோடு அவனையே மெய்மறந்து பார்த்தாள் விதரணை. இதற்காக… இந்த ஒரு சொல்லுக்காக அவள் எத்தனை வருடங்கள் தவமிருந்தாள்! தன் கன்னத்திலிருந்த அவனது உள்ளங்கையைப் பற்றி, அதில் தன் இதழ்களைப் பொருத்தினாள். அவள் கண்ணீரும் உருண்டு அவன் உள்ளங்கையில் சிலிர்ப்பாய் முத்தமிட, அந்த ஆண்மகனின் உடல் ஒரு கணம் சிலிர்த்துத்தான் போனது.

What’s your Reaction?
+1
29
+1
5
+1
2
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-23

(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…

16 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-22

(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-21

(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…

6 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-20

(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-19

(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-18

(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…

2 weeks ago