Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-15/16

(15)

ஏற்றமாதிபன் வேகமாகத் தவிழ்ந்து மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்ற நேரம், அவனுடைய இடது புஜத்துக்குச் சற்றுக் கீழே பெரும் வலி எடுக்க, பற்களைக் கடித்தவாறு வலித்த இடத்தைத் தொட்டுப் பார்த்தான்; சூடான ரத்தம் ஊறிச் சட்டை நனைந்திருந்தது. குனிந்து பார்க்க இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.

“XXXX…” என்று முனங்கியவன், காயத்தின் வலியும், அதன் மீது சிந்திய இரத்தத்தையும் வைத்து, காயத்தின் ஆழம் எத்தகையது என்பதை உணர்ந்து கொண்டான் ஏற்றமாதிபன்.

நல்லவேளை, அவன் சரிந்தது. இல்லை என்றால் தோட்டா நேராக இதயத்தைத் துளைத்திருக்கும். விதரணையைக் காப்பாற்ற அவன் உடல் சரிந்த கோணத்தால், தோட்டா மேல்கையின் சதையைக் கிழித்துக்கொண்டு சென்றிருக்கிறது.

தோளை அசைக்க முடியாதபடி வலி நரம்புகளைச் சுண்டி இழுத்தது. ஆனால் அப்படியே ஒரே இடத்தில் இருக்க முடியாது. அவன் பதுங்கியிருக்கும் இருப்பிடத்தை ஸ்னைப்பர் கணிப்பதற்குள் அவன் தனது நிலையை மாற்றியாக வேண்டும்.

பற்களை இறுகக் கடித்து வலியைக் கட்டுப்படுத்தியவன், அடுத்த விநாடி மரத்தின் மறைவிலிருந்து மின்னலாய் வெளியே பாய்ந்து, துப்பாக்கிக் குண்டு வந்த திசையை நோக்கி, குறுக்கும் நெடுக்குமாய்  ஓடத் தொடங்கினான். அவன் ஓடத் தொடங்கிய நேரம், அவனுடைய கன்னததின் ஓரமாக  துப்பாக்கிக் குண்டு ஒன்று சீறிக்கொண்டு வந்தது. அப்போதுதான் அந்த இடத்தில் கால்வைத்து மறு கோணத்திற்குப் பாய்ந்திருந்தான் ஏற்றமாதிபன்.

இடையில் தடங்கலாய் இருந்த செடி கொடிகளை ஒரே பாய்ச்சலாகக் கடந்தவன், பூந்தோட்ட எல்லையைத் தாண்டி வெட்டவெளியில் குறுக்கும் நெடுக்குமாக   ஓடத் தொடங்கினான். அவசரத்திற்கு மறைந்து நிற்க மரமேதுமில்லை. இன்னும் இருநூறு மீட்டர் கடந்துவிட்டால், மரத்தில் இருக்கும் ஸ்னைப்பரைப் பிடித்து விடலாம். அதை மனதில் நிறுத்தியவனுக்கு வலியும் இயலாமையும் ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டது.

இன்னும் நூற்றி ஐம்பது மீட்டர்… நூறு மீட்டர்… என மனதிற்குள் கணக்கிட்டவாறு ஓடியவன், நூறு மீட்டர் கடந்ததுமே, லேசர் ஒளி வந்த இடத்தை நோக்கித் தன் துப்பாக்கியைக் குறிவைத்து ஒரே பாய்ச்சலில் இரண்டடி உயரத்திற்கு எம்பியவன், அதே வேகத்தில் துப்பாக்கியை நீட்டி விசையை அழுத்தினான்.

மரத்தில் ஸ்னைப்பருடன் தயாராக நின்றிருந்தவன், ஆதிபனின் இந்தக் கடும் வேகத்தைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காயம் பட்டவன் சோர்ந்திருப்பான், சுலபமாகத் தன் துப்பாக்கிக்கு இரையாக்கிவிடலாம் என்று கனவு கண்டிருந்தான் போல. அதற்கு எதிர்மாறாகப் புயலென அவன் சீறி வரவும், ஒரு கணம் என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை. அதுவும் அவன் ஒரே நேர்க்கோட்டில் ஓடாமல் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து வந்ததால், அவனைக் குறிவைக்க முடியாமல் அந்த ஸ்னைப்பர் திணறித்தான் போனான்.

“XXXX XXXXX!” என்று வாய்க்குள் கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு, ஸ்னைப்பர் ஒரு புள்ளியைக் கணக்கிட்டு ஆதிபனை மீண்டும் சுட்டான். ஆனால் அவனுக்கு ஆயுள் அதிகம் போல, அந்தத் தோட்டா அவன் மேல் படாமல் வீணாகி எங்கோ சென்று பாய்ந்தது. ஸ்னைப்பர் அடுத்த முறை குறிவைப்பதற்குள் ஆதிபன் இருநூறு மீட்டர் எல்லையையும் தாண்டியிருந்தான்.

இனியும் தாமதித்தால் பிடிபட்டுவிடுவோம் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்னைப்பர், துப்பாக்கியைக் கையோடு எடுத்துக்கொள்ள நேரமில்லாமல் மரத்திலிருந்து கீழே குதிக்கத் தயாரான வேளையில், கண்ணிமைப் பொழுதில் அவன் மரத்திலிருந்து இறங்க முயல்வதைக் கண்டுகொண்ட ஏற்றமாதிபன், ஒரே பாய்ச்சலில் அவனை நோக்கி மூன்று முறை குண்டுகளைக் கக்கிவிட்டுத் தரையில் விழுந்து,  ஷோல்டர் ரோல் அடித்து எழுந்து அவனரருகே வருவதற்குள், ஆதிபனால் துப்பப்பட்ட மூன்று குண்டுகளையும் இடது மார்பு, வலது மார்பு மற்றும் கழுத்திலுமாக வாங்கிக்கொண்டு, மரத்திலிருந்து தரையில் தொப்பென்று விழுந்தான் அந்த ஸ்னைப்பர்.

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, தரையில் கிடந்தவனை நெருங்கிய ஏற்றமாதிபன், தன் தொடைகளில் கரங்களைப் பதித்தவாறு சற்று நேரம் குனிந்து தன்னை அசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றான். அதீத இரத்தப்போக்காலும் ஓடிவந்த வேகத்தாலும் அவனது காய்ந்த தொண்டை தண்ணீர் கேட்டது. வறண்ட உதடுகளை நாவால் ஈரப்படுத்தியவன், உமிழ்நீரைக் கூட்டி வறண்ட தொண்டையை நனைத்தவாறு குப்புறக் கிடந்தவனைச் சற்று நேரம் பார்த்தான். பின்னர் ஆழ மூச்செடுத்து நிமிர்ந்தவன், முகம் தெரியாமல் கிடந்தவனை நெருங்கிக் காலால் புரட்டிப் பார்த்தான்.

அவன் கறுப்பினத்தைச் சேர்ந்தவன்; இதுவரை பார்த்திராத முகம்.

அவனருகே சோர்வோடு மண்டியிட்டு அமர்ந்தவன், அவனது உடலைச் சோதித்து ஏதேனும் ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்த்தான். அவனது பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தபோது, காரின் சாவியும் பணப்பையும் தட்டுப்பட்டன.

உடனே அவற்றை வெளியே இழுத்தவன், காரின் சாவியைப் பார்த்தான். அது ஒரு ஃபோர்டு (Ford) காரின் சாவி. அதை ஓரமாகப் போட்டவன் பணப்பையைத் திறந்து பார்த்தான். அவனுடைய ஓட்டுநர் உரிமம் இருந்தது; அவன் கனடியன்தான்! பணத்துக்காக கொலை செய்பவன் போல.

உள்ளே கட்டுக் கட்டாகப் பணம் இருந்தது. சோர்வோடு அந்தப் பணப்பையை அவன் நெஞ்சின் மீதே எறிந்துவிட்டு, தரையில் தொப்பென்று அமர்ந்தான். அந்த நேரம், பின்னால் யாரோ ஓடிவரும் அரவம் கேட்க, சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

வருண்தான் வேகமாக ஓடி வந்திருந்தான். வந்தவனிடம்,

“விதரணை, அம்மா, அப்பா, விதுரன்… எல்லோரும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?” என்று அவன் கேட்க,

“ம்… விதுரன் உன் காயத்தைக் கண்டதும் மயங்கிவிட்டான். அவனை அறையில் படுக்கவைத்திருப்பார்கள். உன் மனைவிதான், மைக்கலோடும், ஜாஸ்மினோடும் உள்ளே போக மறுத்தாள். எப்படியோ இழுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்துவிட்டுத்தான் உன்னைத் தேடி ஓடிவந்தேன்…” என்ற வருண், குனிந்து தரையில் கிடந்தவனைப் பார்த்தான். அவன் கிடந்த நிலையே சொன்னது உயிரில்லை என்று. பின்னே சரியாக இடது மார்பில் இதயத்தைத் துளைத்தும், மூச்சுக்குழாயைத் துளைத்தும் குண்டுகள் பாய்ந்திருந்ததே.

ஏற்றமாதிபனோ, வலியில் முகம் சுருங்க, “xxxx” திட்டியவாறே தன் கைத்துப்பாக்கியைப் பேன்ட்டின் பின்புறம் செருகியவாறு,

“அவனைப் பரிசோதித்துப் பயனில்லை… அவன் செத்துப் போனான்,” என்றான் சோர்வோடு.

திரும்பி ஆதிபனைப் பார்த்து முறைத்த வருண்,

“ஏன்டா… ஒரு பத்து சென்டிமீட்டர் தள்ளிச் சுட்டிருக்கக் கூடாதா? இவனை உயிருடன் பிடித்திருந்தால் ஏதாவது தகவல் கிடைத்திருக்குமே!” என்று கேட்டவாறு குனிந்து, அவன் நெஞ்சிலிருந்த பணப்பையை எடுத்துத் திறந்து பார்த்தான் வருண்.

“ப்ச்… அப்படித்தான் சுட்டேன். ஆனால் குறி கொஞ்சம் தவறிவிட்டது…” என்று ஆதிபன் சொல்ல, தன் கவனத்தை நண்பனிடம் திருப்பி முறைத்துப் பார்த்தான் வருண்.

“என்னது…? குறி தப்பிவிட்டதா? சரியாக இதயத்தின் மையத்தில் சுட்டிருக்கிறாய்; மூச்சுக்குழாயிலும் ஓட்டை போட்டிருக்கிறாய். இதில் வேறு குறி தப்பிவிட்டதாக்கும்? ஏன்டா… வாயில் நன்றாக வரப்போகிறது…” என்று வருண் சலித்துக் கொள்ள, இவனோ மெல்லிய சிரிப்போடு வலித்த இடத்தைக் கரத்தால் அழுத்திக்கொண்டான்.

“ப்ச்.. இவனைப் பிடித்து எந்தப் பயனுமில்லை வருண்… ஏனென்றால் இவனை அனுப்பியது ‘கிகான்டி’,” என்றான் ஏற்றமாதிபன் வலியில் பற்களைக் கடித்தவாறு.

“அது எப்படி அத்தனை உறுதியாகச் சொல்கிறாய்? இவன் கனடியன் என்று ஓட்டுநர் உரிமம் சொல்லுகிறதே?” வருண் வியப்புடன் கேட்க,

“ம்… உறுதிதான். ஏனென்றால் இவன் கொல்ல வந்தது என்னை! ஓட்டுநர் உரிமம் இவன் கனடியன் என்று சொன்னாலும், இவன் கிகான்டியின் ஆள் என்பது உறுதி,” என்று சொன்ன ஆதிபன், இரத்தம் படிந்த தன் கரத்தைத் தூக்கிப் பார்த்துவிட்டுத் தன் டீஷர்ட் கழற்ற முயன்றான்.

“ஓ… அப்போ நாங்கள் ஊகித்தது போலத்தான் நடந்திருக்கிறது…” என்ற வருண், இறந்தவனை அப்படியே விட்டுவிட்டு ஆதிபனை நெருங்கினான்.

“ம்…” என்ற ஆதிபன் ஷேர்ட்டைக் கழட்ட முயன்றவாறே, “நிச்சயமாக இவனுக்கும் ஜெனரிஸ் பார்மாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதைக் காட்டுது…” என்று சொல்ல, வருணும், அவனுடைய டீஷேர்ட்டைக் கழட்ட உதவி செய்தவாறே,

“நீ சொல்வதும் சரிதான் ஆதிபா… உன்னைச் சுட வந்தவன் கூட ஒரு கனடியன்! இவனுக்கும் ஜெனரிஸ் பார்மாவுக்கும் இடையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும்..” சொன்னவாறே, தன் நண்பனின் கையில் இருந்த காயத்தைக் கண்டு வருந்தினான் வருண்.

“டேய்… காயம் பெரிதாகத் தெரிகிறதே? குண்டு சதையைக் கிழித்துக்கொண்டு போயிருக்கிறது…” என்று கவலையோடு சொல்ல,

“ம்… எப்படியும் தையல் போட வேண்டும்…” என்று சோர்வாகச் சொன்னவன் தன் டீஷர்ட்டை வருணிடம் நீட்ட, அவன் அதை வாங்கி ஏற்றமாதிபனின் கையில் வைத்துப் பலமாக ஒரு கட்டுப் போட்டான். வலியில் ஆழ மூச்செடுத்தவாறு பற்களைக் கடித்தான் ஏற்றமாதிபன்.

“சாரிடா… ரொம்ப வலிக்குதா?” அக்கறையாக வருண் கேட்க,

“சீ… சீ.. அப்படியே ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல குளிருது…” என்று ஆதிபன் நக்கலடிக்க, அதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக்கொண்டான் வருண்.

“ம்கும்… இந்த வாய் பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லை! ஏன், நாங்கள் வரும் வரைக்கும் உனக்குக் காத்திருக்க முடியாதா…? குறைந்தபட்சம் இவனை உயிரோடாவது பிடித்திருப்போம்…” என்று வருண் சொன்னவாறு நண்பனைத் தாங்கி எழுப்பிவிட, அவனோ,

“அது சரி… பாய்ந்து வரும் குண்டுக்கு, ‘வருவது ஆதிபனில்லை வருண்…’ என்று தெரிந்திருக்கும் பார்… போவியா…” என்றவன், மரத்தின் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்னைப்பர் ரைபிளைக் காட்டி,

“வருண், அந்த ஸ்னைப்பரை டிஸ்-அசெம்பிள் செய்ய வேண்டும். இவனுடைய கைப்பேசியைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்… இவன் உடலை எங்காவது அப்புறப்படுத்த வேண்டும்,” என்று ஆதிபன் உத்தரவிடத் தன் நண்பனை எரிச்சலோடு பார்த்தான் வருண்.

“ஹலோ… எங்களுக்கும் இதெல்லாம் தெரியும்! முதலில் வீட்டுக்கு வா, காயத்தைப் பார்க்க வேண்டும். மற்றதை நம் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள்,” என்ற வருண், ஆதிபனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டின் உள்ளே அனைவரும் முகம் வெளுக்க ஆதிபனுக்காகக் காத்திருந்தார்கள். அவன் வருணின் கைப்பிடியில் உள்ளே வருவதைக் கண்ட விதரணைக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. தன்னை மறந்து அவனை நோக்கிப் பாய முயல, உடனு அவளுக்குக் குறுக்காக வந்து நின்றாள்… ஜாஸ்மின்.

(16)

ஆதிபன் அங்கிருந்து சென்ற பத்தாவது நிமிடம், சீறிப் பாய்ந்து வந்த வண்டியிலிருந்து முதலில் இறங்கியது ஜாஸ்மின்தான். அவளுடன் இரண்டு ஆண்கள் கையில் துப்பாக்கிகளுடன் இறங்கினார்கள். அவர்கள் நால்வரையும் மிகுந்த பாதுகாப்புடன் வீட்டிற்குள் அழைத்து வந்திருக்க, இதில் விதுரன் மயங்கிவிட, மைக்கேல் அவனை லாவகமாக ஏந்திக் கொண்டு உள்ளே வந்திருந்தான்.

ஏற்றமாதிபன் வராமல் உள்ளே வரமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்தவளைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்துவிட்டிருந்தாள் ஜாஸ்மின்.

அதுவரை ஏற்றமாதிபனுக்கு என்னானதோ, ஏதானதோ என்கிற பதட்டத்திலும், வேதனையிலும் தனக்குள் உழன்றுகொண்டிருநத்வளுக்கு முதலில் ஜாஸ்மினை இனம் காண முடியவில்லை. வீற்டிற்குள் வந்ததும், மதிவதனி தன் மகனை நினைத்துத் துடிக்கத்தான்,

“ஆதிபனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், அவன் திறமையான வீரன். அவனுக்குத் தன்னைக் காத்துக் கொள்ளத் தெரியும்,” என்று மதிவதனியை ஜாஸ்மின் ஆறுதல் படுத்தும்போதுதான், விதரணை அவளைச் சரியாக ஏறிட்டுப் பார்த்தாள்.

முதலில் குழப்பம், பின் அதிர்ச்சி, அதன்பின் பொறாமையும் எரிச்சலுமாக மாற… ஜாஸ்மின் லாவகமாக மதிவதனியின் கரத்தைப் பற்றி,

“அம்மா… பிளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ப்…” என்று அவரைத் தேற்றிக் கொண்டிருந்தாள். ஏற்றமாதிபன் பெற்றவர்களை அம்மா அப்பா என்று சொல்வதால், அவனுடைய வேற்று இனத்து நண்பர்களும் அம்மா அப்பா என்றுதான் அவர்களை அழைப்பார்கள்.

விதரணையோ ஜாஸ்மினையே பார்ப்பதை விடவேயில்லை. அந்த நேரம் ஏற்றமாதிபன் கூட காணாமல் போயிருந்தான்.

‘இவள் எங்கிருந்து திடீரென்று முளைத்தாள்? என் ஏற்றனை என்னிடமிருந்து பிரிக்க முயன்றவள் அல்லவா இவள்? மீண்டும் என் வாழ்க்கையில் வந்துவிட்டாளா?’ – ஏக்கமும் பரிதவிப்புமாக நின்றிருந்த விதரணைக்கு ஜாஸ்மினைப் பார்க்கவே பிடிக்கவில்லை. நெஞ்சம் அடைத்துக் கொண்டு வந்தது. புத்தி மரத்துப் போனது போலத் தோன்றியது. மீண்டும் பழைய நினைவுகள் அவளை ஆக்கிரமிக்க, சூடான மூச்சுக்காற்று வேகமாக வெளி வந்தது.

எத்தனை நேரம் சிலையாக ஜாஸ்மினையே முறைத்துக் கொண்டிருந்தாளோ, வாசலில் அரவம் கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்க்க, வருணின் தோளைப் பற்றிக் கொண்டு வெற்று மேலுடன், கையில் புஜத்தின் அருகே, அணிந்திருந்த டீஷேர்ட்டை இறுகக் கட்டியவாறு இரத்தக் கரைகளுடன் ஆதிபன் உள்ளே வந்துகொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் ஜாஸ்மினை மறந்தவளாக அவனை நோக்கிப் பாய முயன்ற நேரம், இப்போதும் குறுக்கே வந்து நின்றாள் அந்த ஜாஸ்மின்!

அவளைப் பார்த்து முறைத்தவள்.

“என்… ஏற்றன்… அவருக்கு… காயம்…” அழுகையும் தவிப்புமாக அவள் சொல்ல,

“அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் விதரணை… தயவு செய்து அமைதியாக இருங்கள்…” தன் அழுத்தம் நிறைந்த குரலில் கட்டளையாகச் சொல்லிவிட்டு ஏற்றமாதிபனை நோக்கித் திரும்பினாள் ஜாஸ்மின்.

“ஆதிபன்… ஆர் யு ஓகே?!” பதற்றம் அதிகமின்றிக் கேட்டவாறு, மறுபக்கமாக அவனைக் பற்றிக்கொண்டு இருக்கையில் அமரவைத்தாள் ஜாஸ்மின்.

மதிவதனியோ பதறித் துடித்துக் கொண்டிருந்தார். வித்யாதரோ தன் மகனின் நிலை கண்டு பேச்சே அற்றவராய், இரத்தம் தோய்ந்த அவன் உடலையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“கண்ணா… என்னப்பா இது…” என்று மதிவதனி விசும்ப,

“அம்மா… பிளீஸ்… எனக்கொன்றுமில்லை. குண்டு சதையை உரசிக்கொண்டு சென்றிருக்கிறது, அவ்வளவுதான்…” என்று அவர்களைத் தேற்றிய ஆதிபன், அதீத களைப்பில் தலையைப் பின்னால் சரித்து விழிகளை மூட, அவனுடைய பலவீனமே அங்கிருந்தவர்களின் வேதனையை அதிகரிக்கப் போதுமானதாக இருந்தது.

அந்த நேரம் மைக்கேலைப் பார்த்த ஜாஸ்மின்,

“மைக்… முதலுதவிப் பெட்டியை எடுத்து வா… இவன் காயத்தைப் பார்த்தால் தையல் தேவைப்படும் போல இருக்கிறது!” என்று அனுப்பிவிட்டு உரிமையுள்ளவள் போல அவனது கட்டை அவிழ்க்கத் தொடங்க, அதைக் கண்ட விதரணைக்கு மூச்சே நின்றுவிடும் உணர்வு.

இப்போது பொறாமை காணாமல் போயிருக்க, தன்னவனின் அந்தக் கோலம் கண்டு உடல் நடுங்கியது. அதுவும் அவன் உடலில் கொட்டும் உதிரம் கண்டு விதுரன் போலவே ‘பேனிக் அட்டாக்’ வந்து மயங்கிவிடுவோமோ என்கிற கிலி ஆட்டிப்படைக்க, பிடிமானமில்லாமல் சுவரில் உடலைச் சாய்த்தவாறு, காயம்பட்டும் கம்பீரம் இம்மியும் குறையாமல் அமர்ந்திருந்த ஆதிபனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களோ கலங்கிக்கொண்டு வந்தது.

அதுவும் அவனுடைய இரத்த வாடை… அது அவள் நாசியைத் தாக்க, இன்னும் உடல் நடுங்கியது. பளிர் பளிர் என்று பெற்றவர்களின் நினைவு அவளைச் செயலிழக்கச் செய்தது.

அவளுக்கு ஜாஸ்மின் தன்னவனைத் தொட்டுக்கொண்டிருப்பதோ, அவனுக்கு மிக நெருக்கமாக இருப்பதோ எதுவுமே அந்த நொடி உறுத்தவில்லை. அவளுடைய ஆதிபனுக்குக் காயம்… அது மட்டும்தான் அவளைக் கொன்று புதைத்துக் கொண்டிருந்தது. கண்கள் கலங்க, முகம் வெளுக்க அங்கே நடப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனை விட்டு நீங்கிச் செல்லத் தோன்றவில்லை.

ஜாஸ்மின் பக்குவமாகக் கட்டை அவிழ்க்கத் தொடங்க, ஏற்றமாதிபன் எதேச்சையாக விதரணையைப் பார்த்தான். அவளோ மயங்கி விழும் நிலையில் தள்ளாடிக்கொண்டிருப்பதைக் கண்டு, சட்டென்று ஜாஸ்மினின் கரத்தைத் தடுத்துவிட்டு,  தாயை நிமிர்ந்து பார்த்தான். அவரும் கண்ணீர் சொரிந்தவாறுதான் மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அம்மா… விதரணையை உள்ளே அழைத்துப் போங்கள்…” என்று அவன் உத்தரவாகச் சொல்ல, மதிவதனி மறுக்கவில்லை. அவருக்கும் மகனின் இந்த நிலையைப் பார்க்க முடியாமல் துடித்துக்கொண்டுதானே இருந்தார். இதில் விதரணையும் மாற்றக்குறையாமல் உள்ளூறத் துடித்துக்கொண்டுதானே இருப்பாள். வேகமாக விதரணையை நெருங்கியவர்,

“நீ வாம்மா… உள்ளே போகலாம்…” என்று அவள் கரம் பற்ற, விதரணையோ மறுப்பாகத் தலையசைத்தாள்.

“இல்லை… நான் இங்கேயே இருக்கிறேன்…” என்றவாறு ஆதிபனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இதயம் நின்றுவிடும் போலத் துடித்தது. தன் தந்தைக்கும் தாய்க்கும் நேர்ந்தது போல இவனுக்கும் ஆகிவிடுமோ என்கிற எண்ணமே அவள் உயிரையே உலைவைக்கப் போதுமானதாக இருந்தது.

“விதரணை… உன்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. தயவு செய்து அறைக்குப் போ!” என்று அவன் கட்டளையாகச் சொல்ல, அவளோ தலையை மறுப்பாக அசைத்தவாற, இரத்தம் வடியும் அவன் உடலையே பார்த்தவாறு மரம் போல நின்றாள்.

“அம்மா… அவளை அழைத்துப் போங்களேன்!” என்று ஆதிபன் இயலாமையிலும், பொறுமை இழந்தவனாகவும் சொல்லிப் பார்த்தான். அதற்கு விதரணை கேட்கவேண்டுமே. அப்பொதும் மறுப்பாகத் தலையசைத்து,

“இல்லை… நான் போக மாட்டேன்…” உறுதியாகச் சொன்னவாறு பிடிவாதமாக அங்கேயே நின்றிருக்க,

“ப்ச்… ஆதிபன்… முதலில் உன் காயத்தைப் பார்க்க வேண்டும். இரத்தம் கொட்டியே சாகப் போகிறாயா?” என்று கோபமாக ஜாஸ்மின் கேட்க, மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்,  அவன் கட்டை அவிழ்த்து எடுக்க, அதுவரை அடங்கியிருந்த இரத்தம் மீண்டும் கொடகொட என்று கொட்டி அவன் அமர்ந்திருந்த மென்னிருகையையும், அவனையும் நனைக்கத் தொடங்கியது.

அதுவும் உருண்டு திரண்டு கிடந்த அவனது மேல்த் தசையிலிருந்து வடிந்த இரத்தம் அவனது விரிந்த இடதுபக் மார்பின் ஓரமாக வடித்து இடையில் விழுந்து  ஊர்ந்து வடிவதைக் கண்ட விதரணைக்கு இப்போது தலை சுற்றிக்கொண்டு.

எவ்வளவு இரத்தம்! இப்படித்தானே அவளுடைய தாய் தந்தைக்கும் இரத்தம் கொட்டியது? அப்படியென்றால் இவனும் என்னை விட்டுப் போய்விடுவானா? அப்படியொன்று இவனுக்கு நடந்துவிட்டால், அவள் நிலை என்ன? நினைத்தவளுக்கு அதற்கு மேல் எதுவும் நினைவில் இல்லை. அந்தக் காட்சியைக் காணும் சக்தியில்லாதவளுக்குக் கண் முன்னே ஒரு கரிய திரை சூழ, அப்படியே கால்கள் மடங்கித் தரையில் சரிந்தாள்.

அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள். ஆனால், ஏற்றமாதிபனோ, அடுத்த நொடி ஜாஸ்மினையை உதறிவிட்டு விதரணையை நோக்கிப் பாய்ந்து தரையில் சரிந்தவளை இருகரங்களாலும் தூக்கித் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான். அந்தக் கணம் அவன் வலி காணாமல் போயிருக்க இதயம்தான் பெரும் வலியில் அவதிப்பட்டது. நிச்சயமாக அவளால் தாங்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். அதனால்தான் உள்ளே போகுமாறும் சொன்னான். ஆனால் பிடிவாதத்துக்குப் பிறந்த பிடிவாதக்காரி. எங்கே கேட்டாள்.

“டேய்… ஆதிபா… என்ன செய்கிறாய்?” என்று மதிவதனி பதற,

“அவளை மைக்கேல் உள்ளே கொண்டு போவான் ஆதிபன்… முதலில் அவளைக் கீழே இறக்கு!” என்று ஜாஸ்மின் கிட்டத்தட்டக் கத்த, ஆதிபனோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல், இரத்தம் தோளில் இருந்து வழிவதைக் கூடக் கருத்தில் எடுக்காமல், தன்னவளை ஏந்தியபடி படிகளில் ஏறியவன், தன் படுக்கையறைக்குள் நுழைந்து அவளை, மெதுவாகப் படுக்கையில் கிடத்த, மதிவதனியோ உயிரைக் கையில் பிடித்தவாறு தன் மகனின் பின்னால் ஓடிவந்து நின்றிருந்தார்.

அவருக்குத் தன் மகனைக் கவனிப்பதா, மயங்கி விழுந்த விதரணையைக் கவனிப்பதா, ஏற்கெனவே அதிர்ச்சியில் உறைந்து போய் தன்னிலை கெட்டிருக்கும் விதுரனைக் கவனிப்பதா, இல்லை அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கும் தன்னையும், தன் கணவனையும் கவனிப்பதா என்றே தெரியவில்லை. அதுவும், தரையில் சிந்தியிருந்த தன் மகனின் உதிரம் கண்டு மேலும் துடித்துத்தான் போனார்.

“ஆதிபா… இப்படி உதிரம் கொட்டுதே கண்ணா…” அவர் துடிக்க, தாயை நிமிர்ந்து பார்த்தவன்,

“அம்மா… பிளீஸ்… நீங்கள் வேறு நேரம் காலமில்லாமல் என் எரிச்சலைக் கிளப்பாதீர்கள். இங்கேயே இருந்து விதரணையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்றவன் மறு கணம் கீழே வந்தான். அங்கே வருணையும் மைக்கேலையும் காணவில்லை.

“வருணும் மைக்கேலும் எங்கே?” அவன் கேட்க…

“அவர்கள் அந்த ஸ்னைப்பரை அப்புறப்படுத்தச் சென்றுவிட்டார்கள்!” என்ற ஜாஸ்மின், கோபத்தோடு ஆதிபனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நீ என்ன முட்டாளா? இவ்வளவு ரத்தம் கொட்டுகிறது, உன் பாட்டுக்கு உன் மனைவியைத் தூக்கிக் கொண்டு செல்கிறாயே? பார்… எவ்வளவு உதிரம் வீணாகியிருக்கிறது என்று!” என அவள் சீறலாகப் கேட்க,

“ப்ச்… நன்றாக சாப்பிட்டதால் உற்பத்தியாகும் இரத்தம்தானே. எதற்கு இப்படி பதறுகிறாய்…? முதலில் சிகிச்சையைப் பார் ஜாஸ்மின்!” என்றான் பொறுமையிழந்து.

அவனை முறைத்தவாறே காயத்தைச் சுத்தப்படுத்திய ஜாஸ்மின், காரிலிருந்து எடுத்து வந்த முதலுதவிப் பெட்டியிலிருந்து தையல் போடுவதற்கான உபகரணங்களை எடுத்தாள்.

“ஆதிபன்… காயம் பெரிதாக இருக்கிறதே… பேசாமல் மருத்துவமனைக்குப் போய் வரலாமா?” என்றாள் மெல்லிய பயத்தோடு.

நிமிர்ந்து அவளை முறைத்த ஏற்றமாதிபன்,

“எதற்கு? இன்னும் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கவா? காயம் எப்படி வந்தது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏற்கெனவே தற்காலிக ஓய்வுக்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறேன். இது வேறு தெரிந்தால் விசாரணை அது இது என்று என்னை ஒருவழி செய்துவிடுவார்கள்… இதில் நீ வேறு!” என எரிச்சலுடன் சொல்ல, ஜாஸ்மின் அவனது காயத்தைச் சிறு கலக்கத்துடன் பார்த்தாள்.

“கடவுளுக்கு நன்றி… இன்னும் கொஞ்சம் கீழே இறங்கியிருந்தால், நீ இப்போது பரலோகத்திற்குப் போயிருப்பாய்! அதுவும் திருமணமான அன்றே…” ஜாஸ்மின் சொல்ல, ஆதிபன் மெல்லியதாகச் சிரித்தான்.

“அதற்கு என் மனைவிக்கு… அதாவது அவளுக்கு இருக்கும் அந்த மிசோஃபோனியாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவள் மட்டும் தக்க தருணத்தில் எச்சரிக்கவில்லை என்றால், இன்று…” என்று கூறி விழிகளை மேலே காட்டிச் சிரிக்க, அவனை முறைத்தாள் ஜாஸ்மின். மீண்டும் காயத்தைத் துடைத்துவிட்டு,

“காயம் கொஞ்சம் ஆழமானதுதான். குறைந்தது எட்டுத் தையல்களாவது போட வேண்டியிருக்கும் ஆதிபன். லோக்கல் அனஸ்தீசியா என்னிடமில்லை… அதிகம் வலிக்கும்… உன்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா?” என்று கவலையோடு கேட்டாள்.

ஆதிபனோ அலட்சியமாக ஒரு புன்னகையை உதிர்த்தான்.

“இதைவிடப் பெரிய காயங்களையெல்லாம் பார்த்தவன் நான். இதற்கெல்லாம் பயப்படுவேனா? நீ தைக்க ஆரம்பி…” என்று சொல்லிவிட்டு, முழங்காலில் கரங்களைப் பதித்துக் காயத்தை ஜாஸ்மினுக்குக் காட்டியவாறு இருக்க, ஜாஸ்மின் அவனது தோளில் ஊசியைச் செலுத்தத் தொடங்கியவாறு,

“சொல்ல மறந்துவிட்டேன்… இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..” என்றாள் அவனைப் பார்த்து புன்னகையுடன்.

அதைக் கேட்டு சிரித்தவன்,

“நன்றி ஜாஸ்மின்… யார்… வருண் உளறினானா?” என்று கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தவள்,

“ம்… ஆனாலும் மிகவும் எளிமையாகப் பணம் அதிகம் செலவழிக்காமல் உன் திருமணத்தை முடித்துக் கொண்டாய் அல்லவா… உன் அப்பா இத்தனை கோடிப் பணம் சம்பாதித்து வைத்தும் அதைச் செலவு செய்யாமல் இருக்கிறாயே…” என்று கிண்டலாகச் சொன்னவாறு ஒவ்வொரு தையலாகப் போட, தன் தோழியைப் பார்த்து முறைத்தவன்,

“ஏய்… நான் திருமணம் முடித்ததைச் சொன்ன வருண், அதன் பின்னணியைச் சொல்லவில்லையா?” என்றான் எரிச்சலுடன். அவனுக்குத் தன் கை வேறு சுர் சுர் என்று வலித்ததே.

“ம்… சொன்னான் சொன்னான்…” என்றவள் அவனை அழுத்தமாகப் பார்த்து, “ஏன்டா… வருணை அழைத்த நீ என்னையும் மைக்கையும் அழைப்பதற்கு என்ன… நாங்கள் உனக்கு உதவி செய்ய மாட்டோமா?” ஒரு தோழியாய் அக்கறையோடு கேட்க, மறுத்தவன்,

“இல்லை ஜாஸ்… என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையில் உங்கள் இருவரையும் இழுக்க நான் விரும்பவில்லை. எங்காவது பிழைத்து விட்டால் உங்கள் இருவரின் எதிர்காலமும் நாசமாகிவிடும். இப்போது கூட வேறு வழியில்லாமல்தான் உங்களை வரவழைத்தேன்…” அவன் சொல்ல, ஜாஸ்மின் நிதானமாகத் தையலிட்டு முடித்தாள். கடைசியாகக் காயத்தின் மீது பஞ்சு வைத்துப் பக்குவமாகப் பிளாஸ்டர் ஒட்டிக் கட்டுப் போட்டாள்.

“இரண்டு நாட்களுக்கு இதில் ஈரம் பட விடாதே ஆதிபன்…” என்றவாறு, இரத்தம் தோய்ந்த பஞ்சுகளையும் கழற்றிப் போட்ட அவனது சட்டையையும் ஒரு பையில் போட்டுக் கட்டினாள். “இதை முற்றாக எரிக்க வேண்டும், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றவள், அந்தப் பெட்டியிலிருந்த ஆன்டிபயாடிக்கை எடுத்து,

“ஏழு நாட்களுக்கு இந்த மாத்திரைகளைத் தவறாமல் எடு…” என்று கூறிவிட்டு, எதையோ யோசித்தவளாக நின்றாள் ஜாஸ்மின். பின் திரும்பி அவனைப் பார்த்து,

“ஐந்து வருடங்களுக்கு முன்பு, அந்த உணவு விடுதியில் உன்னைப் பார்க்க வந்தது உன் மனைவிதானே?” எனச் சந்தேகமாகக் கேட்க, வலித்த காயத்தின் மீது மறுகரத்தை வைத்து அழுத்திக் கொடுத்தவன், “உன் ஞாபக சக்தியில் தீயை வைக்க…” என்றான் முணுமுணுப்பாக.

“ஏய்… கேட்கிறேனே… இவளை விரட்டத்தானே அன்று என்னை வரச்சொன்னாய்?” ஜாஸ்மின் துருவிக் கேட்க, அவளைப் பார்த்து முறைத்தவன்,

“நீ கிளம்பு ஜாஸ்மின்… நேரம் போகிறது. எனக்கும் உறக்கம் வருகிறது,” என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமல்.

அதைக் கண்டு கிண்டலாகச் சிரித்தவள், “ஆனாலும் நீ ரொம்பவே பாவம்டா… விரட்டிய பெண்ணையே திருமணம் முடித்திருக்கிறாய்… இதில் திருமணமான முதல் இரவைக் கூடக் கொண்டாட முடியாத நிலை!…” என்றவள் அவன் வலது தோளில் பலமாக ஒரு அடி கொடுத்து, “கையை அதிகம் ஆட்டி வைக்காதே, அப்புறம் தையல் பிரிந்தால் நான் பொறுப்பல்ல. பிறகு நீ மருத்துவமனைக்குத்தான் ஓட வேண்டும்…” என அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வருணும் மைக்கேலும் வந்திருந்தார்கள்.

“எல்லாம் ஓகேவா டா..?” என்று ஏற்றமாதிபன் கேட்க, கட்டைவிரலைத் தூக்கிக் காட்டியவன், “பக்கா… அவனை வண்டியில் ஏற்றிச் சென்று, ஆழமான ஏரிக்குள் தள்ளியாகிவிட்டது…” என்றான் திருப்தியாக.

அடுத்து அனைவரும் இவனிடமும், அங்கே கலக்கத்துடன் நின்றிருந்த வித்யாதரிடமும் விடைபெற்றுச் சென்றுவிட, ஆதிபன் சோர்வோடு தன் தந்தையைப் பார்த்தான்.

“அப்பா… நான் போய் கொஞ்சம் உறங்கப் போகிறேன். உடல் மிகவும் களைப்பாக இருக்கிறது… எதுவாக இருந்தாலும் நாளை பேசலாம், பிளீஸ்…” என்றவன், ஜாஸ்மின் கொடுத்த ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். அங்கே மதிவதனி அழுது கொண்டிருக்க, “அம்மா…” என்றான் மென்மையாக.

அவர் கண்ணீரைத் துடைத்தவாறு மகனைக் கலக்கமாகப் பார்க்க,

“அம்மா… எனக்கு ஒன்றுமில்லை. நான் மிக நன்றாக இருக்கிறேன், தயவுசெய்து கலங்காதீர்கள்…” என்று தாயைத் தேற்றி அனுப்பிவிட்டு, விதரணையைப் பார்த்தான்.

விதரணை இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள். அவளை ஏந்தி வந்ததில், அவனது உடலிலிருந்த ரத்தம் அவளது உடையிலும் படுக்கையிலும் சிந்தியிருந்தது. இதில் அவன் வெற்று மேனி முழுவதும் ரத்தம் அப்பியிருந்தது; பேன்டிலும் இரத்தக் கறைகள். வலது கரத்தால் தன் இடுப்புக்குப் பின்னால் இருந்த துப்பாக்கியை எடுத்து மேசையில் வைத்தவன், பேன்ட் பெல்ட்டையும் கழட்டி ஓரமாகப் போட்டுவிட்டு, துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்.

நிதானமாகச் ஷவரின் கீழ் நின்று உடலில் படிந்திருந்த ரத்தக் கறைகளைக் கழுவினான். ரத்தம் முழுவதுமாகக் கழுவப்பட்டதும், தன் மேனியைத் துடைத்துவிட்டு, ‘சுருக்’ என்று குத்திய காயத்தின் ஈரத்தைத் துடைக்கும் தாளால் மென்மையாக ஒற்றி எடுத்தான். பின் இடையில் துண்டைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தவன், அலமாரியிலிருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து அங்கிருந்த மேசையில் வைத்து ஒற்றைக் கையால் திறந்தான்.

தேவையான உபகரணங்கள் இருக்க, அதிலிருந்து பிளாஸ்டர் ஒன்றை எடுத்து காயத்தின் மேல் ஒட்ட முயன்றான். ஆனால், ஒற்றைக் கரத்தால் சரியாக ஒட்ட வைப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. இரண்டு முறை அவன் முயற்சிக்கும் போது, சட்டென்று ஒரு கரம், அவனிடமிருந்த பிளாஸ்டரை வாங்கியது. திரும்பிப் பார்த்தால் தந்தை வித்யாதர் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார்.

“அப்பா…” அவன் அழைக்க, அவரோ தன் மகனைத் திருப்பிவிட்டு எதுவும் சொல்லாமல், இன்னும் ஈரமாக இருந்த காயத்தை கை துடைக்கும் தாளினால் ஒற்றி எடுத்து, முதலுதவிப் பெட்டியிலிருந்த ஆன்டிசெப்டிக் கிரீமை எடுத்துக் காயத்தின் மீது மென்மையாகப் பூசி மருந்திட்டுப் பின் பக்குவமாகக் கட்டுப் போட்டுவிட்டு, வலிக்காமல் அவன் தோளின் மீது வலது கையை வைத்து அழுத்திக் கொடுக்க, திரும்பித் தந்தையைப் பார்த்தான் ஏற்றமாதிபன். அவரின் கலங்கிய முகத்தைக் கண்டதும் இவன் உள்ளம் கனிந்து போயிற்று.

“அப்பா… நீங்கள் தூங்கவில்லையா?” என்று இவன் சங்கடத்துடன் கேட்க, வித்யாதர் அவன் கன்னத்தை மெதுவாகத் தட்டிக் கொடுத்தார்.

“ஒன்றுமில்லைடா… உறங்கப் போவதற்கு முன்பாக உன்னைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்…” என்றவர் கலக்கத்தோடு தன் மகனைப் பார்த்து, “ரொம்ப வலிக்கிறதா?” என்றார் அடைபட்ட குரலில். உருகிப்போனான் ஏற்றமாதிபன்.

வித்யாதர் எப்போதும் கொஞ்சம் அவன் விஷயத்தில் கண்டிப்பானவர்தான். ஒற்றைப் பிள்ளை வழிதவறிவிடக் கூடாது என்கிற ஒரு சாதாரண தந்தையின் எண்ணத்தில் அவன் கூட எப்போதும் கொஞ்சம் இறுக்கமாகத்தான் நின்று கொள்வார். ஆனால் அவன் வளர்ந்த பிறகு, அவன் ஆசைக்கு முட்டுக் கொடுக்காமல் வழிவிட்டு நின்றவரும் கூட. இதில் இப்படியெல்லாம் நெருக்கமாக நின்று பேசியதெல்லாம் அவர்களுக்கிடையில் பெரிதாக நடந்ததில்லை. மகனைத் திட்டுவது கொஞ்சுவது, செல்லம் கொடுப்பதெல்லாம் மதிவதனிதான். அதற்காகத் தந்தைக்கான பாசம் இல்லை என்று சொல்லிவிட முடியாதுதானே.

இப்போது மகனுக்கு அடிபட்டதைக் கண்கூடாகக் கண்டவருக்குத் தாளமுடியவில்லை. உறக்கம் வர மறுத்தது. தூக்கமாத்திரை எடுத்தால்தான் உறக்கம் வரும் என்கிற நிலை. அதுதான், படுக்க முதல் மகனைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருந்தார் வித்யாதர். வந்தால் மகன் காயத்திற்கு மருந்து போடச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தான். அவன் மேல் கரத்திலிருந்த காயத்தைக் கண்டவருக்குத் தாளவில்லை. இன்னும் கொஞ்சம் விலகியிருந்தால் என்னாகியிருக்கும்? தவித்தவராகத் தன் மகனை நெருங்கியிருந்தார் வித்யாதர்.

தன் மகனை கருணையோடும், கலக்கத்தோடும் பார்த்தவர், “உன்னைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன் மகன். மாத்திரை எடுத்தாயா?” அவர் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தவன்,

“இன்னும் இல்லை… இனித்தான்” என்றான்.

“சரி… மாத்திரையைப் போட்டு நன்றாகத் தூங்கு. ஏதாவது தேவை என்றால் உடனே கூப்பிடு, வந்துவிடுவேன்,” என்று கூறிவிட்டுக் கசங்கிய முகத்தை மகனுக்குக் காட்டாமல் வெளியேற முயல,

“அப்பா…” என்றான் ஏற்றமாதிபன் மென்மையாக. அவர் நடை தடைப்பட நின்று திரும்பிப் பார்த்தார்.

அவரைப் பார்த்து ஒரு அழகான புன்னகையைச் சிந்தியவன்,

“எனக்கு ஒன்றுமில்லைப்பா. எனக்கு எதுவும் ஆகாது, ஐ பிராமிஸ் யூ…” என்றதும், அதைக் கேட்டதும் வித்யாதரின் முகம் சட்டென்று மலர்ந்தது. கூடவே கண்களில் பூத்திருந்த கண்ணீர் சட்டென்று பொங்கிப் போக,

“அது போதும்டா எங்களுக்கு…” என்று கூறிவிட்டு, தன் மகனை விழிகள் நிறையப் பார்த்தபடி அவர் வெளியேற, தந்தையின் அன்பை நினைத்து மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தினான் ஆதிபன்.

தந்தை பெரிதாகப் பேசமாட்டார் என்றாலும், தன் மீது அவர் எப்போதும் மிகக் கவனமாக இருப்பார் என்பது அவனுக்குத் தெரிந்ததே. வாரத்தில் ஒரு முறையாவது அவன் தாயுடன் பேசிவிட வேண்டும்; தவறும் பட்சத்தில், வித்யாதரே அவனுக்குக் குறுஞ்செய்தியாக ‘என்ன நடக்கிறது?’ என்று கேட்டு அனுப்பிவிடுவார். அந்த இரண்டு வார்த்தைகளைக் கண்டதுமே தாயை அழைத்துப் பேசிவிடுவான் ஆதிபன். அதிக உரையாடல்கள் இல்லாவிட்டாலும், இருவருக்குமான மௌனமான அந்த அன்பு நிறையவே பேசிவிடும்.

தன் தந்தையை மனதிற்குள் நிறைவாக உணர்ந்தவனாக, ஆன்டிபயாட்டிக் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை விழுங்கிவிட்டு, தளர்வான பைஜாமா ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வந்தவன், நேராகச் சென்று விதுரனின் அறையைத் திறந்து பார்த்தான். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். திருப்தி கொண்டவனாக மீண்டும் அறைக்கு வந்தவன், அந்த ஸ்னைப்பர் பற்றிய விபரங்களைத் தேடலாமா என்று நினைத்தான். உடனே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான். அவன் இப்போது மிகவும் களத்துப்போயிருக்கிறான். கொஞ்சமாவது ஓய்வு தேவை. இல்லை என்றால் பைத்தியக்காரத்தனமாக புத்தி யோசிக்கும்.

சோர்வோடு படுக்கையருகே வந்தான். விதரணை விழிகள் மூடிக் கிடந்தாள். அவளைக் கண்டதும் அவனுக்குத் தன் நிலையை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. இந்த ஒரு மாதத்தில் அவன் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள்! இன்று காலைதான் திருமணம் நடந்தது… இப்போது மனைவி மயங்கிக் கிடக்கிறாள், கணவன் காயம்பட்டுக் கிடக்கிறான். இது எங்காவது நடக்குமா என்ன?

மெதுவாகப் படுக்கையில் சாய்ந்தவன், தன் மனைவியைத் தலை திருப்பிப் பார்த்தான். விழிகளை மூடி, மயக்கத்தைத் தழுவிய ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் விதரணை. அவளை நினைத்ததும் அவன் நெஞ்சம் தவிக்கவே செய்தது. இந்த ஒரு மாதத்தில் அவள் அனுபவித்த வலிகள் மிக அதிகம். அவள் தம்பிக்கும் அதே நிலைதான். இந்த அதிர்ச்சிகள் அவர்களின் வாழ்விலிருந்து அத்தனை சுலபமாக நீங்கிவிடாது. இதற்கு நிறைய மனப்பயிற்சியும், அன்பும், தைரியமும் தேவை. அவற்றை அவர்களுக்குள் வளர்க்க, இன்னும் நிறையவே பாடுபட வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு முதலில், இந்தப் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டு அதை வேரோடு களைந்தால் மட்டும்தான் அது சாத்தியம் என்பதைப் புரிந்துகொண்டவனாக, வலதுபக்கமாகத் திரும்பி அவளைப் பார்த்தவாறு படுத்தான்.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத முகம். என்ன நினைத்தானோ சட்டென்று எழுந்து வலது கையின் துணையோடு படுக்கையில் சாய்வாகப் படுத்தவன், மல்லாக்காகப் படுத்துக் கிடந்தவளின் கூந்தலை வருடிக் கொடுத்தான். இது என்ன மாயம், இதுவரை சுள் சுள் தெறித்த வலியைக் காணோம். அதுவும் கரம் சுயாதீனமாக அசைகிறதே. அட, காயம் பட்டது கூட அவனுக்கு மறந்து போன விந்தையை என்னவென்று சொல்வது?

சற்று நேரம் அவள் தலைமுடியை வருடிக் கொடுத்தவனின் கரம் இப்போது கீழிறங்கியது. பட்டுக் கன்னத்தைச் சுட்டுவிரலால் மென்மையாகத் தடவிக்கொடுத்தான். என்ன நினைத்தானோ, செல்லமாய் அந்தக் கன்னத்தைக் கிள்ளியவனின் உதட்டில் இனம் புரியாத புன்னகை அரும்பியது.

அப்படியே தன்னை மறந்து விரல்களை அசைத்து அவளுடைய மூக்கை நோக்கி எடுத்து வந்தவன், அதையும் பிடித்து லேசாக ஆட்டினான். விரல்களைக் கீழே கொண்டு வந்து அவள் உதடுகளை வருட, ஆதிபனின் மேல் பற்கள் தன் கீழ் உதட்டை மென்மையாகக் கடிக்க, அவனது விரல்களோ அவளது செழித்த இதழ்களைக் காதலாய் வருடி விடுவித்தன.

அடுத்து நாடியை நோக்கி விரல்களை இறக்கியவன், வலிக்காமல் கிள்ளி எடுத்தான். கூடவே அவனது பெருவிரல் நாடியின் தோலைக் கீழிறக்க, அவளுடைய கீழ் இதழ் சற்றுப் பிளந்து அந்த அழகிய பல்வரிசையைக் காட்ட, அதை ரசித்துப் பார்த்தான் ஆதிபன். இப்போது அவனுடைய கரம் கழுத்தில் படிந்தது. அந்த நிலையிலும் தன் மணிக்கட்டால் அவள் கழுத்தைத் தொட்டுப் பார்த்தான்; காய்ச்சல் போன்ற சூடு எதுவும் இல்லை.

இன்னும் கரத்தைக் கீழிறக்க, அவளது பெண்மேனி அவன் விரல்களில் பட்டு அவன் உடலைச் சிலிர்க்கச் செய்தது. அந்த உணர்வில் கிறங்கியவனின் கரத்தில் தட்டுப்பட்டது அவள் mார்பில் இருந்த அந்தக் காயம். காயம் ஆறிவிட்டிருந்தாலும், அதன் தழும்பின் வடு இன்னும் பச்சையாக அவன் விரல்களில் தட்டுப்பட அதை உணர்ந்ததும் ஆதிபனின் முகம் வேதனையில் சுருங்கியது; அங்கு மென்மையாக வருடிக் கொடுத்தான்.

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், கரத்தை இன்னும் கீழிறக்கினான். அவளுடைய பட்டு வயிறும் அவனது கரங்களின் வருடலில் குழைந்து போக, ஆதிபனின் விழிகளோ அவளது முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கிடந்தன. ‘இந்தத் திருமணம் ஒரு நல்ல சூழலில் நடந்திருக்கலாம்’ – மனம் ஏங்காமலில்லை. மீண்டும் கரத்தை மேலே கொண்டு வந்தவன், அவளுடைய முகத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினான். அவளோ இங்கு நடப்பது எதையும் உணராமல், அவன் திருப்பிய திசைக்குத் திரும்பினாள்.

குனிந்தவன், பட்டும் படாமலும் அவள் இதழ்களில் முத்தமிட்டு, பின் கன்னத்திலும் தன் முத்திரையைப் பதித்தான்.

“கவலைப்படாதே கண்ணம்மா… எப்போதும் உன் நிழலாய் நான் இருப்பேன்…” என்று ரகசியம் பேசியவன், அந்தத் தங்கத் தேரைக் காதலும் காமமும் கலந்த உணர்வுடன் வருடிக் கொடுத்தவாறே, அன்றைய களைப்பில் உறங்கிப் போனான்.

 

What’s your Reaction?
+1
19
+1
2
+1
3
+1
1
+1
3
+1
0
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-23

(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…

16 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-22

(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-21

(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…

6 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-20

(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-19

(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-18

(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…

2 weeks ago