Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-14

(14)

விதரணை விழித்தபோது மாலை ஐந்து மணியையும் கடந்திருந்தது. எழுந்தவளுக்கு மனமும் உடலும் அடித்துப் போட்டது போல இருக்க, சோர்வோடு எழுந்தவளைக் கண்டு விரைந்து வந்தான் ஏற்றமாதிபன்.

அவனைக் கண்டதும் அவள் முகத்தில் ஒருவிதக் கசப்பு; கூடவே கலக்கமும் தவிப்பும். அதைக் கண்ட ஏற்றமாதிபன், அவளை நெருங்காமல் ஓரடி தள்ளி நின்றவாறே, “இப்போது எப்படி இருக்கிறது?” என்றான் மென்மையாக. அவளோ பதில் சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருக்க, அவளையே சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

“விதரணை…” என்றான் பட்டு போன்ற மென்குரலில். அந்தக் குரல் அவளை என்ன செய்ததோ, மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“உண்மையாகவே வருந்துகிறேன்… தயவு செய்து மன்னித்துவிடு” என்றான் அவள் விழிகளை நேராகப் பார்த்தவாறு.

இப்படி இளகி மன்னிப்புக் கேட்பவனிடம் எப்படி முகத்தைத் திருப்ப முடியும்? மீண்டும் விழிகளைத் தாழ்த்தியவள், அவன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகத் தலையசைக்க, இப்போது அவன் அவளை ஓரடி நெருங்கினான். அவளோ பதற்றத்தோடு இரண்டடி தள்ளி நிற்க, ஏற்றமாதிபனின் முகம் ஒரு கணம் கசங்கிப் போனது. ஆனாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு,

“சரி… வெளியே வருகிறாயா? கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடந்துவிட்டு வரலாம்?” என்று அழைக்க, அவளோ மறுப்பாகத் தலையசைத்துவிட்டுப் படுக்கையில் ‘தொப்பென்று’ அமர்ந்தாள். அமர்ந்த வேகத்தில் மார்பு வலித்தது போல, “ஷ்..” என்றவாறு மார்பை அழுத்திக் கொண்டவள், அவன் தன்னையே பார்ப்பது தெரிந்து சட்டென்று கரத்தை விலக்கினாள். அப்போதுதான் தன் ஆடை மாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தாள் விதரணை.

சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தவள்,

“என் ஆடை… யார் மாற்றினார்கள்?” எனக் கேட்க, இப்போது ஏற்றமாதிபனின் உதட்டில் கிண்டல் புன்னகை ஒன்று மலர்ந்தது.

“யார் மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறாய்?” அவன் கேட்க, அவனை முறைத்தவள்,

“எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு? என்ன தைரியமிருந்தால் என் ஆடையை நீங்கள்…?” என விதரணை சீறத் தொடங்க, இப்போது மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளைத் தலைசரித்துப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

அவளோ அவனை முறைக்க, “

உன்னுடைய ஆடையை மாற்றத் துணிச்சலோ, தைரியமோ தேவையில்லை விதரணை… இரண்டு கரங்கள் இருந்தால் போதும்!” என்று கிண்டலாகச் சொன்னவன், இப்போது அவள் முகம் நோக்கிக் குனிந்து,

“நீ மருத்துவமனையில் இருந்தபோது, செவிலியருக்கு உதவியாக உன் ஆடைகளை நான்தான் பலமுறை மாற்றியிருக்கிறேன். இவ்வளவு ஏன், உன் காயங்களுக்குக் கட்டுப்போடுவதற்குக் கூட உதவியிருக்கிறேன்…” அவன் சொல்ல, அவளுடைய முகமோ சிவந்து கன்றிப் போனது.

எதையோ சொல்வதற்கு அவள் வாய் எடுக்க, மார்பில் கட்டியிருந்த கரத்தை விலக்கி அவளுடைய உதட்டில் வலது சுட்டுவிரலை வைத்தான் ஆதிபன். அவளோ வியந்து பார்க்க,

“ஷ்… உன்னை அப்படிப் பார்க்க எனக்கு மட்டும்தான் உரிமையிருக்கிறது விதரணை… அந்த உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? நீ என் காதலியாக இருந்தபோதே பார்க்கும் அதிகாரம் இருக்கிறது என்றால், இப்போது நீ என் மனைவி… நான் உன் ஆடைகளை மாற்றாமல் வேறு யார் மாற்றுவார்கள்?” அவன் கேட்க, விதரணையின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தன.

“எ… என்ன சொல்கிறீர்கள்? நான் உங்கள் காதலியா? நீங்கள் எப்போது…?” அவள் அதிர்ச்சியும் கோபமுமாகக் கேட்க, அப்போதுதான் ஏற்றமாதிபனுக்கும் தான் வாய்விட்டது புரிந்தது.

“நான் சொல்ல வந்தது…. அது வந்து… நீ என்னைக் காதலித்ததைச் சொன்னேன்..” என்று அவன் சமாளிக்க, அவளோ மறுப்பாக எதையோ சொல்ல வந்த நேரம் அவர்களின் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

உடனே பேச்சை நிறுத்திய விதரணை, அவனை முறைத்தவாறே கதவைப் பார்த்தாள். ஏற்றமாதிபனோ மனதிற்குள் கதவைத் தட்டிய நபருக்கு நன்றி சொன்னவாறே சென்று கதவைத் திறந்தான். அங்கே மதிவதனிதான் நின்றிருந்தார். விதரணை எழுந்துவிட்டதைக் கண்டதும், முகம் மலர,

“எழுந்துவிட்டாயா… நாங்கள் எல்லோரும் தோட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம்… நீயும் எங்களுடன் வரலாமே…” என அன்பாக அழைக்க, விதரணை திரும்பி ஏற்றமாதிபனைப் பார்த்தாள்.

அவனோ உதடுகளைப் பிதுக்கி அவளைப் பார்க்க, அவள் மதிவதனியை நோக்கி,

“இ… இல்லை… ஆன்டி நான்…” எனத் தயங்கினாள்.

“ஆன்டியா… ம்கூம்… மாமி என்று கூப்பிடு, இல்லையென்றால் அத்தை என்று அழை. அது என்ன ஆன்டி? தமிழில் ‘ண’கரத்தை மாற்றினால் ‘ஆண்டி’ என்று வரும். அதன் பொருள் தெரியுமா? துறவி அல்லது ஒன்றுமில்லாதவன். என்னைப் பார்த்தால் ஒன்றுமில்லாதவள் போலவா தெரிகிறது? அழகாகத் தமிழில் மாமி, அத்தை என்று அழைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்… நாம் இருப்பது கனடாவாக இருந்தாலும் தமிழர்கள்தானே!” என்று அழுத்தமாகச் சொன்னவர், “சரி… சரி… வா, எவ்வளவு நேரம்தான் இந்த அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாய்? கொஞ்சம் காற்றாட நிற்கலாம். உன் தம்பியும் எங்களோடுதான் இருக்கிறான்…” என்றார்.

விதுரனும் அங்கிருப்பது தெரிந்ததும் அவளால் மறுக்க முடியவில்லை. உடனே அவரோடு புறப்படத் தயாரானவளை,

“அம்மா… ஒரு நிமிடம்…” என்று தடுத்த ஏற்றமாதிபன், நகர்ந்து சென்று ஒரு சால்வையை எடுத்து வந்து, விதரணையின் பின்னால் நின்றவாறே அவளது தோளைச் சுற்றிப் போட, விதரணை தலை திருப்பி அவனை அண்ணாந்து பார்த்தாள்.

அவனோ எந்த உணர்வையும் காட்டாமல்,

“வேலையாட்கள் இருப்பார்கள்…” என்றான் மென்மையாக. விதரணை அணிந்திருந்தது  தளர்வான டீஷேர்ட். கழுத்துப்பகுதி இறங்கியிருந்ததோடு, கைகளைத் தூக்கும்போது உடல் தெரியக்கூடும். அது மட்டுமில்லை அவண் அணிந்திருந்த உள்ளாடையின் கைப் பக்கம் வெளியே தெரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில்  பொதுவெளியில் அப்படியே சென்று அமர்வது ஏற்புடையதல்ல.

அதனால் ஏற்றமாதிபன் சால்வையை போர்த்திவிட்டதும், மறுக்காமல்  நன்றியோடு சால்வையைத் தன்னோடு இறுகப் பிடித்துக்கொள்ளும் போதே, செக்குமாடாக மனம் தாயிடம் சென்றது. அவரும் இப்படித்தானே, ஆடைகளை கவனமாக அணியவில்லை என்றால் திட்டுவரார்கள்.

மீண்டும் கலங்க முற்பட, மதிவதனி அவள் கையைப் பற்றி வெளியே இழுத்து வந்தார்.

அன்றுதான் திருமணம் நடந்தது என்பதற்கு சான்றாக, அவர்கள் மாற்றிய மாலை சுவரில் தொங்கிக் கொண்டிருக்க, ஏனோ நெஞ்சில் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது. இன்னும் அவளுக்குத் திருமணம் நடந்தது என்பதை நம்பவே முடியவில்லை. கனவு போல இருந்தது அவளுக்கு. இந்த ஒரு மாதத்தில் அவளுடைய வாழ்க்கையில்தான் எத்தனை மாற்றம். எதிர்பாராத, விரும்பத்தகாத மாற்றங்கள். உமிழ்நீரோடு வலியையும் சேர்த்து விழுங்கியவள், மதிவதனியோடு மேலும் நடக்கத் தொடங்க, இங்கே விதரணை வெளியேறியதும்,   காந்தம் இழுத்த இரும்பாக அவர்கள் பின்னால் செல்ல முயன்றவனின் கால்கள் சட்டென்று நின்றன.

உள்ளுணர்வு எதையோ எச்சரிக்க, ஒரு விநாடி யோசித்தவன், நேராகத் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து, புத்தக அலமாரிக்குப் பக்கத்திலிருந்த ரகசிய அறையை திறந்தான். அங்கே ஐந்தாறு பலவகைத் துப்பாக்கிகள் பளபளவெனக் கன்னிப் பெண்களாய் படுத்துக் கிடக்க அவற்றைக் கண்டதும் காதலியைக் கண்ட காதலன் போல அவன் விழிகள் மலர்ச்சியில் விரிந்தன. அங்கிருந்தவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டவைதான். எற்றமாதிபனுக்கு துப்பாக்கிகள் என்றால் அலாதிப் பிரியம். அவனுக்குத் தெரியாத இரகத் துப்பாக்கிகளே கிடையாது. அவன் காவல்துறையில் சேர்ந்ததற்கு, அதுவும் ஆர்சிஎம்பியில் சிறப்புப் பிரிவில் சேர்ந்ததற்கு துப்பாக்கிகள் மீதிருந்த மோகமும் ஒரு காரணம்தான். அவற்றைப் பார்க்கும் போதே உள்ளே இனம்புரியாத மகிழ்ச்சி எழும். அது மட்டும் கரத்திலிருந்தால் போதும். துப்பாக்கி சும்மா விளையாடும். தான் பெற்ற குழந்தையைப் பராமரிப்பது போல, ஒவ்வொரு மாதமும் அவற்றை எடுத்துத் துப்புரவு செய்வான். இப்போது அதே ஆர்வத்துடன் ஒரு Glock 19-ஐ எடுத்து, ஆர்வத்தோடு வருடிக் கொடுத்தவன்,

“ஹாய் பேபி… என்னுடன் வருகிறாயா? ” என்று முணுமுணுத்தபடி, அதில் குண்டுகள் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க அதன் உருளையைச் சரிபார்த்தான். அது நிறைமாதக் கர்ப்பிணியாகத் தயாராக இருக்க, திருப்தியுடன் அதைப் பான்டின் பின்புறம் சொருகி, அணிந்திருந்த டீஷேர்ட்டால் மறைத்துக்கொண்டு தோட்டத்தை நோக்கிச் சென்றான்.

அந்தப் பரந்தவெளித் தோட்டத்தின் மத்தியில் இரும்பினாலான மேசையும், இருக்கைகளும் இருக்க, அதில் அமர்ந்திருந்த வித்யாதர் விதுரனோடு ஏதோ சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். விதரணையோ சால்வையைத் தன்னோடு இறுக்கி அணைத்தபடி எதிலும் பிடிப்பில்லாமல் அங்கிருந்த மலர்களைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“விதுமா… இந்த குக்கியைச் சாப்பிடுடா.. மதியமும் ஒழுங்காகச் சாப்பிடவில்லை…” என அக்கறையாக நீட்ட, அவளோ,

“வேண்டாம் ஆன்டி..” எனத் தொடங்கி, அவர் முகம் போன போக்கைப் பார்த்ததும், “வேண்டாம் அத்தை… பசிக்கவில்லை…” என்றாள் தயக்கமாக.

அதைக் கேட்டு கோபமான மதிவதனி,

“நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? அன்று அபியுடைய நிச்சயதார்த்தத்தில்    பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்! உடலில் அசைக்குக் கிள்ளக் கூடச் சதையில்லை… சத்தம் போடாமல் சாப்பிடு…” என அதட்டியவாறு ஒரு குக்கியை அவள் கையில் திணிக்க, விதரணையோ அதை என்ன செய்வதென்று தெரியாமல்  தன் தம்பியைப் பார்த்தாள். அவனும் கையில் இருந்த குக்கியை உண்ணாமல் வித்தியாதர் பேசுவதில் கவனம் செலுத்த முயன்றுகொண்டிருந்தான்.

அவனுடைய அந்த நிலை கண்டு விதரணையின் விழிகளில் கண்ணீர் முட்டவே செய்தது. முன்பு என்றால் இப்படியா ஏனோ தானோ என்று குக்கியைக் கையில் வைத்துக்கொண்டிருப்பான். சாப்பாட்டில் வெட்கமே பார்க்கமாட்டானே. எடுத்து சாப்பிடு என்று சொல்வதற்குள் முழுவதையும் வாய்க்குள் திணித்திருப்பான். ஆனால் இப்போது…?

தன் தம்பியின் நிலை கண்டு கண்கள் கலங்க நின்றிருந்தவளைக்  கண்டுகொண்ட வித்யாதர் தன் மனைவியிடம் விழிகளால் சைகை காட்ட, உடனே குனிந்து பார்த்தார் மதிவதனி.

விதரணையின் நிலையைப் புரிந்து கொண்டவராக,

“விதுமா…” என்று எதுவோ சொல்ல வர, அதற்குள் ஆதிபன் விதரணைக்கு அருகிலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான். அவன் அந்த இருக்கையில் அமர்ந்ததும் அங்கிருந்த அனைவருக்குமே அந்த இடம் கம்பீரமாக மாறிப்போன உணர்வு.

ஏற்றமாதிபன் பக்கத்திலமர்ந்ததும், அவசரமாகத் தன் கண்ணீரை விழுங்கிக் கொண்டவள், மீண்டும் அங்கே அழகாக பராமரிக்கப்பட்டிருந்த மலர் தோட்டத்தை ஏறிட, ஆதிபன் ஒரு விநாடி விதரணையை அழுத்தமாகப் பார்த்துவிட்டுத் தாயை ஏறிட்டு என்ன என்பது போல விழிகளால் கேட்டான். அவரோ உதடுகளைப் பிதுக்க,

“அம்மா… எனக்கும் தேநீர் கொடுங்கள்…” என்றவாறு விதரணையின் இருக்கைக்குப் பின்னால் தன் ஒற்றைக் கரத்தைப் போட்டவாறு,  விதரணைக்குப் முன்பிருந்த குக்கியை அவள் கரங்களை முட்டியவாறே எட்டி எடுக்க, ஏனொ அவனுடைய அந்த செயலில் விதரணையின் இதயம்தான் படபடத்தது.

அவன் சரிந்து எட்டி எடுத்தபோது அவனுடைய திண்ணிய மார்பு விதரணையின் மேல்கரத்தில் சற்று அழுத்தமாக உரச, அவனுடைய உடல் சூடும், அவன் கடிய மார்பின் தீண்டலும் விதரணைக்கு ஒரு கணம் அனைத்தையும் மறக்கச் செய்து தடுமாறவே வைத்தது.

அவனுடைய ஒற்றைத் தீண்டல் போதுமே அவளை மொத்தமாய் தொலையச் செய்ய! தவித்தவளாய், அவன் மார்பில் முட்டிய கரத்தை இழுத்து எடுக்க முயல, ஏற்றமாதிபன் அவளைத் தன் கீழ்க்கண்ணால் பார்த்தான்.

அவளோ அவனைப் பார்ப்பதையே தவிர்ப்பவளாக எங்கோ விழிகளைத் திருப்ப, ஏற்றமாதிபனின் உதட்டில் மெல்லிய குறும்புப் புன்னகை ஒன்று மலர்ந்தது.

எட்டி எடுத்த குக்கியை வாய்க்குள் திணித்தவாறு, அவளுக்கு முன்பாக இருந்த தேநீரைக் காட்டி,

“விதரணை… தேநீர் குடிக்கவில்லையா? ஆறப்போகிறது..” என்றவன், அதைத் தானே எடுத்துப் பருகத் தொடங்க, திரும்பி அவனைப் பார்த்தாள் விதரணை. மதிவதனியோ,

“டேய், அது விதுவுடையது… அதை ஏன் நீ எடுத்தாய்?” என்றார் மெல்லிய கண்டிப்புடன்.

“தேநீர் கொடுத்தால் அதை ஆற முதல் குடிக்கவேண்டும். அதை விடுத்து குடிக்காமல் காவல் காத்தால் என்ன செய்வது?” கேட்டவன், அவளைப் பார்த்தவாறே கரத்தலிருந்த தேநீரை உறிஞ்சிக் குடிக்க, விதரணையோ இப்போது அப்பட்டமான எரிச்சலோடு ஏற்றமாதிபனைப் பார்த்தாள்.

விதரணைக்கு இப்படி உறிஞ்சிக் குடித்தால் பிடிக்காது என்று ஏற்றமாதிபனுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனாலேயே வேண்டும் என்று அவன் சத்தமாகக் குடிக்க, அதுவரை இருந்த தவிப்பு மறைந்து உள்ளே இனம் புரியாத எரிச்சலும் கோபமும் வர, கைமுஷ்டிகளை இறுகியவாறு அவனை முறைத்துப் பார்த்தாள் விதரணை. அவனோ கிண்டலாக அவளைப் பார்த்தவாறே வேண்டும் என்று சத்தமாகக் குடித்துவிட்டு,

“என்னாச்சு விதரணை…. ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்… இஸ் எவ்ரிதிங் ஓக்கே…” என்று கிண்டலாகக் கேட்க, அவளோ பதில் சொல்லாமல் சட்டென்று தன் தலையைத் திருப்பிக் கொள்ள, திரும்பவும் வேண்டும் என்றே அவன் உறிஞ்சிக் குடிக்க, அப்போதுதான் விதரணைக்கு அது புரிந்தது.

அவளுக்கு இத்தகைய சத்தங்கள் பிடிக்காது என்று இவனுக்கு எப்படித் தெரியும்? இப்போது நம்ப முடியாமல் சட்டென்று அவனைத் திரும்பிப் பார்க்க அவனோ மீண்டும் வேண்டும் என்றே உறிஞ்சிக் குடிக்க,

“உ… உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள் தடுமாற்றமாக. அவனோ புரியாதவன் போலப் பார்த்து,

“என்ன தெரியும்?” என்றான்.

“அது… எனக்கு… மிசோஃபோனியா இருக்கிறது என்று?” அவள் கேட்க இப்போது உதடுகள் பிளந்து சிரித்தான் ஏற்றமாதிபன். அந்த சிரிப்பில் மீண்டும் உள்ளே நெக்குருகித்தான் போனாள் விதரணை. அவனுடைய அந்த சிரிப்பை நம்பமுடியாமல் அவள் பார்த்திருக்க,

“டேய்… நீ அவளை முழுப்பெயர் சொல்லியா அழைக்கிறாய்? அவளுக்கு நீ செல்லப்பெயர் எதுவும் வைக்கவில்லையா?” என்று மிக முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டார். .

“செல்லப்பெயரா? விதரணை என்ற பெயரே நன்றாகத்தானே இருக்கிறது. விவேகம், திறமை கொண்டவள் என்று பொருள். ஒரு விஷயத்தின் ஆழம் வரை சென்று உண்மையை ஆராயும் தெளிவான அறிவு அல்லது பகுத்தறிவு கொண்டவள் என்பதைக் குறிக்கும் பெயர். இதை ஏன் சுருக்க வேண்டும்?” அவன் கேட்க, விதரணை வியப்புடன் அவனைப் பார்த்தாள். இவனுக்கு இதெல்லாம் தெரியுமா?

மதிவதனியும் வியந்து, “டேய்… இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்க, அவனோ மென் புன்னகையுடன்,

“இப்போது எதற்கு இந்த ஆராய்ச்சி?  தேநீர் கொடுங்கள்..” எனப் பேச்சை மாற்ற, தன் மகனை முறைத்த மதிவதனி,

“இப்பதானே விதுவுடைய தேநீரை நீ எடுத்துக் குடித்தாய்…?” என்றார் கோபமாக.

“அதுதான் சொன்னேன், விதரணையின் தேநீரை அவளுக்கே கொடுங்கள் என்று சொன்னேன்…” சொல்ல, அப்போதுதான் விதரணைக்கு வார்த்த தேநீரை அவளிடம் கொடுக்காமல் தன் கையில் வைத்திருப்பது புரிந்தது மதிவதனிக்கு. அசடு வழிந்தவராக, தேநீர் குவளையை அவளுக்கு முன்பாக வைத்தவாறு,

“இவனுடைய பெயரின் பொருள் உனக்குத் தெரியுமா விதரணை?” என்றார் ஆவலாக. விதரணை தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவன் மீது ஈர்ப்பு வந்த அன்றே அவன் பெயருக்கான அர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டாளே.

ஏற்றம் என்றால் உயர்வு, மேன்மை, வளர்ச்சி; ஆதிபன் என்றால் தலைவன், ஆளுபவன். ஏற்றமாதிபன் என்றால் மேன்மைகளுக்குத் தலைவன். உயர்வுக்குத் தலைவன். வளர்ச்சியின் நாயகன் இப்படி நிறையவே அடுக்கிக்கொண்டு போகலாமே. மனதிற்குள் நினைத்தாலும் பதில் சொல்லாமல் அமைதி காக்க, ஆதிபன் அவளை ஆவலுடன் பார்த்தான்.

“உன்னைத்தான் அம்மா கேட்கிறார்கள் விதரணை… என் பெயரின் பொருள் உனக்குத் தெரியுமா?” விழிகளில் ஆர்வம் தேக்கி அவன் கேட்க, அவளோ தெரியாது என்பது போலத் தலையசைக்க, அவனுடைய முகத்தில் இனம்புரியாத உணர்ச்சி சட்டென்று தோன்றி மறைந்தது. அது கோபமா, ஏமாற்றமா, எரிச்சலா என்னவென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவளுடைய அந்தப் பதில் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது  மட்டும் நிஜம்.

‘அன்று தன் மீது காதல் என்று சொன்னவளுக்கு, தன் பெயரின் அர்த்தம் கூடத் தெரியவில்லையா?’ என்கிற எரிச்சலுடன் தன் கையிலிருந்த தேநீர் கோப்பையிலிருந்த தேநீரை முழுவதுமாக அருந்திவிட்டு, கப்பை அவன் மேசையில் வைத்த நேரம், விதரணை தன் இடது காதைத் தோளில் உரசியவாறு ‘ப்ச்’ என்றாள் சலிப்போடு. அதைக் கண்டவன்,

“அதுதான் தேநீர் குடித்து முடித்துவிட்டேனே. இன்னும் ஏன் காதைத் தேய்க்கிறாய்?” அவன் எரிச்சலுடன் கேட்க, அவளோ, ஒரு வித ஒவ்வாமையோடு அவனைப் பார்த்து,

“இது நீங்கள் தேநீர் குடித்த சத்தமில்லை… ஷ்…” என்று மீண்டும் காதைப் பொத்தியவள், அப்பட்டமான எரிச்சலோடு, “சொல்லத் தெரியவில்லை… ஏதோ உலோகம் உரசுவது போலக் கேட்கிறது. யாரோ கத்தியால் இரும்பைச் சுரண்டுவது போல…!” என்றவாறு தன் இடது காதை இடது கரத்தால் பொத்திக்கொண்டு, தன் முன்னாலிருந்த தேநீர் குவலையை எடுத்தவாறு,

“அபி எங்கே அத்தை… ஆனந்தன் ஆங்கிள், யாதவி ஆன்டி யாரையும் காணோம்…” கேட்கும் போதே மீண்டும் அந்த இரும்பு உரசும் சத்தம்.

“ஷ்…” மீண்டும் எரிச்சலோடு இடது காதின் மீது சுட்டுவிரலை நுழைத்து சத்தத்தைத் தடுக்க முயன்றவள், மதிவதனி சொல்வதைக் கேட்கத் தொடங்க,

“அவர்கள் அப்போதே கிளம்பிவிட்டார்கள்டா… இன்று மாலையே அவர்கள் அமரிக்கா போகிறார்கள்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஏற்றமாதிபனின் பார்வை விதரணையை அழுத்தமாக ஏறிட்டது.

அவள் முகம் அடிக்கடி அசௌகரியத்தில் சுருங்குவதைக் கண்டு ஆதிபன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்னால், அவனது தந்தை தனது இரசனைக்காக அமைத்திருந்த பிரம்மாண்டமான அரைவட்ட எஃகு அலங்காரச் சுவர் பளபளத்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டதுமே அவனுக்கு உண்மை புரிந்தது.

இயற்பியலின்படி, இத்தகைய வளைந்த பரப்புகள் மிகத் தூரத்திலிருந்து வரும் ஒலிக் கற்றைகளைச் சேகரித்து ஒரு குறிப்பிட்ட மையப்புள்ளியில் குவிக்கும் தன்மை கொண்டவை. அங்கே அமர்ந்திருப்பவர்களுக்கு, பல நூறு மீட்டர்களுக்கு அப்பால் நடக்கும் மிக மெல்லிய சத்தம் கூட காதுக்கு அருகில் கேட்பது போல ஒலிக்கும். இந்த அறிவியலைத்தான் உளவுத்துறை மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகளில் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவு ஏன், இரண்டாம் உலகப் போரின்போது, ரேடார் (Radar) கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இத்தகைய அறிவியலைத்தானே பயன்படுத்தினார்கள்.  விதரணை வேறு, சரியாக அந்த மையப்புள்ளியில்தான் அமர்ந்திருந்தாள்!

தொலைவில் எழும் ஏதோ ஒரு மெல்லிய சத்தம்தான் அவளைத் தொந்தரவு செய்கிறது என்பதை உணர்ந்த ஆதிபன், தன் பார்வையால் தோட்டத்தின் எல்லையை அலசிப் பார்த்தான். காற்றில் மரங்கள் அசைவது மட்டும்தான் தெரிந்தது.

திரும்பி விதரணையைப் பார்த்தவன்,

“உனக்கு மிசோஃபோனியா இருப்பதால் சிறிய சத்தமும் பெரிய சத்தமாகக் கேட்டு,  எரிச்சலைக் கொடுக்கும். நீ வேறு அந்த எஃகுச் சுவருக்கு நேரே அமர்ந்திருப்பதால், ஒலியெல்லாம் அங்கே குவிந்து உன் காதில் பலமாகக் கேட்கிறது… வேண்டுமானால் ஒன்று செய்… நீ இங்கே வந்து உட்கார்… நான் உன்னிடத்தில் அமர்கிறேன்” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,  400 மீட்டர்களுக்கு அப்பால் அடர்ந்து பரந்த ஒரு ஓக் மரம் காற்றில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தது. அதன் மத்தியில், ஒருத்தன் வாகாகக் குப்பிறப் படுத்திருந்தான். அவன் கையில் முறைத்தவாறு எங்கோ ஒரு திசையைக் குறிவைத்திருந்தது அந்த ஸ்னைப்பர்.

அவனுடைய ஒற்றைப் பார்வை அந்த ஸ்னைப்பரின் லென்சில் கவனமாகப் பதிந்திருக்க, கரமோ, வைக்கும் குறி தவறக் கூடாது என்பதற்காக, லென்சின் திருகாணியைத் திருகிக்கொண்டிருந்தது. அப்போது அவனுக்கு அருகில் இருந்த இரும்புப் பெட்டியின் ஓரத்தில் ஒரு மரக்கிளை உரச… அந்த மெல்லிய உலோகச் சத்தம் காற்றில் மிதந்து வந்து, அந்த எஃகுச் சுவரில் மோதி, சிதறாமல் அப்படியே விதரணையின் காதில் வந்து விழுந்தது.

ஏற்கனவே ஆதிபன் தேநீர் குடித்தபோது எழுந்த ‘உறிஞ்சும்’ சத்தத்தால் கடுப்பில் இருந்தவளுக்கு, எங்கிருந்தோ வந்த இந்த உரசும் சத்தம் வேறு அவளது பொறுமையைச் சோதித்தது. சும்மாவே மனநிலை சரியில்லாமல் இருந்தவளுக்கு, இத்தகைய குறுக்கீடுகள் இன்னும் எரிச்சலைத்தானே ஏற்படுத்தும்!

“நான் விதுரன் பக்கம் அமர்கிறேனே…” என்று ஏற்றமாதிபனிடம் சொன்னவள், எழ முயன்ற நேரம், அவளுக்கு அசௌகரியம் கொடுக்கும் அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தன்னிச்சையாக அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்த ஆதிபனின் விழிகளில், சட்டென்று ஒரு சிவந்த நிற வெளிச்சம் பட்டு மறைய, மங்கலான அந்த மாலை வேளையில் அந்தச் சிவந்த ஒளி தெளிவாகத் தெரிந்து மறைய… அடுத்த நொடி ஆதிபனின் உடல் விறைத்துப் போனது!

கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கவிருப்பதை ஊகித்தவன்,

“எவ்ரிவன், டிராப் டு த கிரவுண்ட் நவ்!” என்று கத்தியவன், அடுத்த நொடியே விதரணையை இழுத்துக் கொண்டு தரையில் சரிய முயன்ற நேரத்தில், சற்றுத் தொலைவில் ‘டப்’ பென்ற மெல்லிய வெடிச்சத்தம் கேட்டது.

அந்தச் சத்தம் கேட்ட மாத்திரத்தில், விதரணையை இழுத்துத் தரையில் வீழ்த்தி, அவள் மீது தன் முழு உடலையும் போட்டு அவளைத் தன் உடலால் மூடி மறைத்த அந்தத் தருணத்தில் அவனது புஜத்தில் ஏற்பட்ட ‘சுளீர்’ என்கிற பெரும் வலி, அவனைச் சற்று நிலைகுலையச் செய்திருந்தது!

அந்த வலியே சொல்லிவிட்டுது கையில் குண்டு பாய்ந்திருக்கிறது என்பதை. பற்களைக் கடித்துத் தன் வலியைப் பொறுத்துக்கொண்டவன், தன் மார்புக்குள் கோழிக்குஞ்சாய் ஒடுங்கிக் கிடந்தவளை உணர்ந்து குனிந்து பார்த்தான். அவளோ ஒன்றும் புரியாமல் அவனுக்குள் பாதுகாப்பாய் சிக்கியவாறு மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஒன்றுமில்லையே…” என்றான் பதற்றமாக. அவளோ அச்சமும் பயமுமாக மறுப்பாகத் தலையை அசைத்து,

“எ… எனக்கு ஒன்றுமில்லை…” என்றாள் சிரமப்பட்டு.

நிம்மதி கொண்டவனுக்கு அப்போதுதான் பெற்றோரின் நினைவே வந்தது. எழாமலே திரும்பிப் பார்த்தான். வித்யாதரன், அவன் கத்திய கத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் விதுரனை இழுத்துக்கொண்டு தரையில் விழுந்து கிடக்க, மதிவதனியொ ஒன்றும் புரியாமல் குழம்பிய நிலையில் திரையில் கிடந்தவர்களை மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

“அம்மா… தரையில் படுங்கள்!” என்று கத்தியவன், அவன் இன்னும் தன்நிலை வராமல் குழம்பியிருப்பதைக் கண்டு, விதரணையை விட்டுச் சற்று விலகித் தாயின் கரத்தைப் பற்றி ஒரே இழுவையாக இழுக்க, அதை எதிர்பாராத மதிவதனி முழங்கால் அடிபடத் தரையில் தொப்பென்று குப்பிற விழுந்த நேரம், மீண்டும் ‘டப்’ என்று இன்னொரு சத்தம் தொலைவில் கேட்டது.

சட்டென்று விதரணைக்கு அருகே தலையைக் குணிந்து பதுங்கிக் கொள்வதற்குள் அவனுடைய தலைக்கு மேலே இருந்த இரும்புக் கதிரையின் மேற்புறத்தில் ஒரு தோட்டா பொறியைக் கக்கியவாறு தொட்டுச் சென்றது.

அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரிந்தது.

மதிவதனியோ,

“ஐயையோ… கடவுளே…!” என்று பதறியவாறு அழத் தொடங்க, தாயைச் சற்றுக் கோபத்தோடு பார்த்த ஆதிபன், “ஈழத்தில் யுத்தத்தில் சிக்கிய நீங்கள் இதற்கே ‘ஐயோ’ என்கலாமா அம்மா?” என்று கேட்டவாறே, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைபேசியை எடுத்து வருணை அழைத்தான்.

“என்னடா… சொல்லு…” வருணின் குரல் கேட்டதும்,

“ஐ நீட் ஹெல்ப்…” என்று மட்டும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தவன், விதரணையை விட்டு விலகி கண்ணிமைக்கும் நொடியில் பின்னால் சொருகியிருந்த துப்பாக்கியை இழுத்து எடுக்க, மேசையின் கீழ் சுருண்டு கிடந்த விதுரன், ஏற்றமாதிபனையும், அவன் கையிலிருந்த  துப்பாக்கியையும், மாறி மாறி பார்த்தாள். அவன் முகமோ வெளுறிப் போனது.

ஒரு நொடியில் விதுரனின் பயத்தைக் கண்டுகொண்ட ஏற்றமாதிபன், அவனைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிவிட்டு,

“எல்லோரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள், சரியா…?” என்றுவிட்டு எழ முயன்ற அடுத்த நொடி, மீண்டும் ‘டப்’ என்கிற சத்தம். இம்முறை துப்பாக்கிக் குண்டு அவனது தலைமுடியை உரசிக்கொண்டு சென்றிருந்தது.

“XXXX…” என்று வாய்க்குள் முனகியவாறு மீண்டும் தரையில் சரிந்தவனுக்கு, அந்த ஸ்னைப்பரின் இலக்குத் தான் மட்டும்தான் என்பதை அந்தக் கணமே தெரிந்து கொண்டான். தான் இங்கே இருந்தால் குடும்பத்தினருக்கும் ஆபத்து என்பதைப் புரிந்து கொண்டவனாக, நால்வரையும் பார்த்து,

“அசையாமல் இங்கேயே இருங்கள்..!” என்று கட்டளையாகச் சொன்னவன், மறு கணம் தரையில் முதலை போல் ஊர்ந்து சென்று, அங்கிருந்த தடித்த மரமொன்றின் பின்னால் மறைந்து கொண்டான்.

அதே நேரம், மல்லாக்காகப் படுத்திருந்த விதரணை மெதுவாக எழ முயல, சட்டென்று அவள் மார்பைப் பற்றித் தரையில் சாய்த்த மதிவதனி, அச்சத்தோடு அவளைப் பார்த்து,

“அப்படியே படுத்துக் கிட விது… இப்போதைக்கு இந்த மேசைதான் நமக்கு பாதுகாப்பு…” என்றார் கலக்கத்தோடு. அதே நேரம் விதுரனோ, சகோதரியின் தோளிலிருந்து தரையில் விழுந்திருந்த வெண்ணிறச் சால்வையில் சிந்தியிருந்த இரத்தத்தைக் கண்டதும் அவன் முகம் வெளுறிப் போனது.

கண்ணிமைக்கும் நொடியில் தாயின் மரணம் நினைவுக்கு வர, அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. உடல் நடுங்கியது. நடுங்கும் கரங்களால் அவளுக்கு அருகே விழுந்திருந்த சால்வையைச் சுட்டிக்காட்டியவன், அதற்கு மேல் பேச முடியாமல் விழிகள் சொருக, தனக்குப் பின்னால் நின்றிருந்த வித்யாதரின் மீது சாய, அவன் கனம் உணர்ந்து சட்டென்று அவனைத் தாங்கிக் கொண்ட வித்யாதரும், விதுரன் காட்டிய இடத்தைப் பார்த்தார். அங்கே சால்வையில் சிந்திய ரத்தத்தைக் கண்டு அவரும் அதிர்ந்துதான் போனார்.

விதரணைக்குக் காயம் பட்டுவிட்டதோ என்று பதறியவராய்,

“மதி… விதரணைக்கு எங்காவது அடிபட்டிருக்கிறதா பார்…” என்றார் கலக்கமும் பதட்டமுமாக. அவர் சொன்னதும், உடனே விதரணையின் அருகே வந்த மதிவதனி அவள் உடலைப் பார்த்தார். அவள் அணிந்திருந்த பாகிபான்ட் ஷேர்ட்டிலும் ஒரு சில ரத்தத் துளிகள் தெறித்திருந்தன. விதரணையும் அவர்கள் ஏன் தன்னை அப்படிப் பார்க்கிறார்கள் என்று குழம்பியவளாகத் அவர்கள் பார்த்த இடத்தை இவளும் பார்த்தாள். அங்கே அவளுடைய வெண்ணிறச் சால்வையில் ஊற்றிக்கிடந்த ரத்தத்தைக் கண்டு அதிர்ச்சியானவளாக மெதுவாக எழுந்தமர்ந்து அதை எடுத்துப் பார்த்தாள்.

சற்று முன் ஆதிபன் அவளை இழுத்துக்கொண்டு தரை சாய்ந்தது நினைவுக்கு வந்தது. அப்போது அவன் முகம் வலியில் கொஞ்சமாய் சுருங்கி விரிந்ததும் இப்போது நிழலாடியது. உடனே அவளுக்குப் புரிந்து போனது, அந்த இரத்தம் ஆதிபனுடையது என்று! சட்டென்று திரும்பி அவன் ஊர்ந்துசென்ற திசையில், அழகாய் வெட்டப்பட்ட புல்தரையைப் பார்த்தாள். அவள் சந்தேகப்பட்டது சரிதான். அவன் ஊர்ந்து சென்ற பாதையில் சிந்தியிருந்த ரத்தத்தைக் கண்டு அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது.

“ஏ.. ஏற்றன்..” தன்னை மறந்து முனங்கியவள், மறு கணம் ஏற்றமாதிபன் சென்ற திசைக்குப் பாய்வதற்காக எழ முயன்றாள். ஆனால் மதிவதனி, சட்டென்று  அவள் கரத்தைப் பற்றித் தன்னோடு இழுத்துக்கொண்டார்.

“ஐயோ… அத்தை…! ஏற்றனுக்கு… அவருக்கு… அவருக்குக் காயம் பட்டிருக்கு! இது அவருடைய இரத்தம்… புல்தரையில் நிறைய இரத்தம் சிந்தியிருக்கு…” துடித்தவள் அவன் சென்ற திசைக்கு ஓடமுயன்றாள். அவளை அழுத்தமாகப் பற்றிக்கொண்ட மதிவதனி,

“அவனுக்கு அவனைப் பார்த்துக் கொள்ளத் தெரியும் விதரணை. அவன் சொன்னதைக் கேட்டாய் அல்லவா? எங்களை அசைய வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான்… அவனுக்கு ஒன்றுமாகாது… தயவு செய்து முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே… பிளீஸ்…” என்று கெஞ்ச இவளோ அவன் மீதிருந்த கோபமும் வெறுப்பும் மறந்தவளாக,

“இல்ல… அவருக்கு.. ஏற்றனுக்கு…” என்று பரிதவித்தவளாக மதிவதனியிடமிருந்து தன் கரத்த விடுவிக்க முயன்ற நேரம், பெரும் சீற்றத்தோடு ஒரு வாகனம் அவர்களின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றிருக்க, அதிலிருந்து மூவர் இவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள்.

What’s your Reaction?
+1
18
+1
0
+1
2
+1
0
+1
5
+1
3
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-23

(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…

16 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-22

(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-21

(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…

6 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-20

(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-19

(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-18

(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…

2 weeks ago