Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-19

(19)

மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தது. விழிகளைச் சுருக்கிச் சுற்றும் முற்றும் பார்த்தவன், மார்பில் ஓர் இதமான கனம் தெரியக் குனிந்து பார்த்தான். அவனவள் குழந்தையாய் அவன் இடது மார்பில் ஒரு கரம் பதித்து, வலது மார்பில் கன்னம் பதிய, இதழ்கள் சற்றுப் பிளந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் அழகிய வதனத்தைத் தலைமுடிக்கற்றைகள் மறைத்திருக்க, அவள் மூச்சுவிடும் போதெல்லாம் அவை காற்றில் மெல்லப் பறந்து மூக்கையும் உதட்டையும் வருடிச் சென்று மீண்டும் அவளிடமே தஞ்சம் புக, அதைக் கண்டு மென்புன்னகை பூத்தவன், அவள் முகத்தை முழுதாகப் பார்க்கும் ஆசையில் அந்த முடிக்கற்றைகளை விலக்கத் தன் இடது கரத்தைத் தூக்கினான்.

“சுளீர்!” என்று மின்னலென ஏறிய வலியில், சத்தமிடாமல் பற்களைக் கடித்து, ‘ஷ்…’ என்றவனுக்கு அப்போதுதான் தோளில் ஏற்பட்ட துப்பாக்கிக் காயம் நினைவுக்கு வந்தது. முகம் சுருங்க, பற்கள் ஒன்றோடு ஒன்று கடிபட இடக்கரத்தைக் கீழே இறக்கி அவள் இடை சுற்றிப் போட்டவன், இப்போது வலது கரத்தை உயர்த்தி, அவள் முகத்தில் படர்ந்திருந்த மயிர்க்கற்றையை ஒதுக்கிவிட்டான். சற்று நேரம் தன்னை மறந்து அவன் மார்பில் ஆழ்ந்து உறங்கும் அந்த அழகுப் பதுமையை விழிகளால் இரசித்தான்.

ஒரு மாதத்திற்கு முன்புவரை, இதோ இப்படி அவளை மடியில் தாங்கி ஒரு பொழுதைக் கடத்துவோம் என்று நினைத்திருப்பானா என்ன? முக மலர்ச்சியோடு அவளை இறுக அணைக்க முயன்றவன், சட்டென்று அமைதியானான். அவன் அணைக்கப் போய், அவள் உறக்கம் கலைந்துவிட்டால்? அதுவும் அவள் எழுந்ததும் எப்படி எதிர்வினையாற்றுவாள் என்று தெரியாது. முன்தினம் கண்ட கனவின் அழுத்தத்தில், ஒரு வித அழுத்தமான மனநிலையில் இருந்தவள், இப்போது உறக்கம் கலைந்து எழுந்ததும் அதே மனநிலை இருக்கும் என்று சொல்ல முடியாதே. இப்போது அவள் ஒரு கண்ணாடிப் பாத்திரம். மிக அவதானமாகத்தான் அவளைக் கையாளவேண்டும்.

எண்ணியவனாக அலுங்காமலம் குலுங்காமல், குழந்தையாய் உறங்கியவளைத் தன் கரங்களில் ஏந்தியவாறு மெதுவாக எழுந்தவன் மணிமண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.

சூரியன் இன்னும் முழுதாக உதிக்காததால் வெக்கை அவ்வளவாக இல்லை; இருப்பினும் வியர்வை அரும்பவே செய்தது. அவள் நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை பூத்து வழிவதைக் கண்டவன், உதடுகளைக் குவித்து கழுத்து வளைவில் ஊதியவாறு, அவளைச் சிறு குலுக்கலும் இன்றி மென்மையாகச் சுமந்துகொண்டு வீட்டிற்கு வந்தான்.

உள்ளே இருந்த சென்ட்ரல் ஏசியின் துனையில் மென் குளிர் அவர்களை அணைத்துக் கொள்ள, முன்னேறி நடக்கத் தொடங்கினான் ஏற்றமாதிபன்.

வீட்டில் இன்னும் யாரும் விழித்திருக்கவில்லை. சத்தமின்றிப் படிகளில் ஏறியவன், அறைக்குவந்து அவளை மெதுவாகப் படுக்கையில் கிடத்திவிட்டுத் தளர்வான நடையுடன் கழிவறைக்குச் சென்றான். காயத்தின் மேலிருந்த கட்டை அவிழ்க்க நிறையவே இரத்தம் பட்டிருந்தது அவிழ்த்த கட்டில். அதைக் குப்பையில் எறிந்துவிட்டு, குளிர் நீரின் கீழ் நின்று உடல் சூடு தணியக் குளித்தான்.

குளித்து முடித்து இடையில் ஒரு பெரிய துண்டினைச் சுற்றிக்கொண்டு, மற்றொரு துண்டால் தலையைத் துவட்டியபடி வெளியே வர, விதரணை எழுந்து அமர்ந்திருந்தாள்.

அதைக் கண்டு வியந்தவன்,

“ஹே… ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டாய்? இன்னும் சற்று நேரம் தூங்கலாமே…” அவன் மென்மையாகக் கேட்டவாறு ஆர்ம்கட் பெனியன் ஒன்றை எடுத்து இடது கையை பெரிதாக அசைக்காமல் அணிந்துகொள்ள,   கட்டில் சட்டத்தில் தலை சாய்ந்து கொண்டவள், இன்னும் விலகாத தூக்கத்தோடும் சோர்வோடும் மல்லுக்கட்டியவாறு அவனை ஏறிட்டு,

“நீங்கள்தான் பக்கத்தில் இல்லையே… அதான் தூக்கமும் உங்களைப் போலவே பாதியில் விட்டுச் சென்றுவிட்டது!” என்றாள் கால்களை மடித்து அதன் இடையில் கரங்களைக் கோர்த்துச் செருகியவாறு.

அப்படியென்றால் முன்தினம் நடந்ததை நினைத்து அவள் குழம்பவில்லை. தவிக்கவில்லை. நிம்மதி கொண்டவனாக அவளை முறைத்தவன்,

“உன் கூடவே எப்போதும் இருக்க முடியுமா? எனக்கும் வேலைகள் இருக்கிறதுமா…” என்றவாறு அலமாரியைத் திறந்து ஆடையைத் தேர்வு செய்யத் தொடங்க, அப்போதுதான் விதரணையின் பார்வை அவன் தோளில் இருந்த காயத்தின் மேல் விழுந்தது.

‘ஐயோ… இதை எப்படி மறந்தேன்?’ எனப் பதறியவள்,

“ஏற்றன்!” என்றவாறு மின்னல் வேகத்தில் அவனை நோக்கிப் பாய்ந்தாள் விதரணை. அவனோ இடது கையைத் தூக்க இயலாமல் வலது கையால் கறுப்புப் பேண்ட்டையும், சட்டையையும் எடுத்துக்கொண்டிருந்தான். அவள் வந்த வேகத்தைக் கண்டு ‘என்ன?’ என்பது போலத் திரும்பிப் பார்க்க, அவளோ அவன் தோளில் இருந்த காயத்தைப் பார்த்து விழிகளில் கண்ணீர் மல்க, தன் மென்விரல்களால் தையலிட்ட காயத்தை வருடிக்கொடுத்தவளுக்கு இதயமே வாயில் வந்து துடிப்பது போலத் தோன்றியது. அந்தத் துப்பாக்கிக் குண்டு சற்று விலகி இதயத்தைத் துளைக்க எத்தனை நேரம் எடுத்திருக்கும்? அப்படி ஏதாவது நடந்திருந்தால்? அந்த எண்ணம் அவளைக் கொல்ல,

“ஐயோ… இத்தனை பெரிய காயமா?” என்றாள் கலங்கிய குரலில்.

அவனுக்கு ஏதாவது காயம் வலி என்றால் தாங்குவான். ஆனால் உயிர்வரை ஊடுருவியவள் கலங்கினால் அவனால் எப்படித் தாங்க முடியும். தன் கையிலிருந்த துணிகளை அப்படியே போட்டுவிட்டுச் சட்டென்று அவளது தோள்களைப் பற்றியவன்,

“ஹே… நீ நினைப்பது போல இது ஒன்றும் பெரிய காயமில்லை,” அவன் முடிக்கவில்லை,  அவளோ சட்டென்று அவனை இறுக அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்தவளுக்குப் பேச்சே வரவில்லை.

“எல்லாம் என்னால்தானே…” என்று விசும்பியவளின் கண்ணீர் அவனுடைய மார்பை நனைக்க, உருகிப்போனான் அந்த ஆண்மகன்.

அவளைத் தேற்றும் விதமாகத் தானும் அணைத்துக்கொண்டவன், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைடா… இதற்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, என்னை நம்பு!” என்று அவன் சொல்ல, ஒட்டு மொத்த வலியையும் விழிகளில் தேக்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள் விதரணை.

“நீங்கள் சொல்வதை உடனே நம்புவதற்கு நான் ஒன்றும் குழந்தையில்லை ஏற்றன். எனக்கும் ஒன்றுடன் ஒன்றைக்கூட்டத் தெரியும். என்னைப் பாதுகாப்பதால்தான் உங்களுக்கு இந்த நிலை…” என்றவள், அவசரமாக அவனை விட்டு விலகித் தன் கண்ணீரைத் துடைத்தவாறு, பரபரப்போடு,

“வேண்டுமானால் நான் என் வீட்டிற்கே போய்விடட்டுமா? அவர்களுக்கு நான்தானே வேண்டும்…” என்றாள் பிரச்சினைக்கு அதுதான் முடிவு என்பது போல. அதைக் கேட்டவனின் முகம் சட்டென்று கடுமையாக மாறிப் போனது. இவள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவனுடைய உயிரைக் காக்க, அத்தனை சுலபமாக அவள் உயிரைப் பணையம் வைத்துவிடுவான் என்று நினைத்தாளா? தணியாத சீற்றத்தோடு அவளை ஏறிட்டவன், சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்க முயன்று தோற்றவாறு, வலது கரத்தை அலுமாரியின் தட்டொன்றில் வைத்து சாய்ந்து நின்றவாறு,

“ம்… இது நல்ல யோசனைதான்! நீ தனியாகப் போய் நில், அவர்கள் உன்னைக் கடத்திச் செல்வார்கள். பிறகு உன் அப்பாவிடம் இருக்கும் அந்த ஆவணம் எங்கே என்று கேட்பார்கள். அதற்கு அம்மையார் என்ன பதில் சொல்வீர்களாம்?” என்று அவன் கிண்டலாகக் கேட்க, அவளோ திருதிருவென விழித்தாள்.

“அதுதான் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாதே…”

“நிச்சயமாக! உனக்குத் தெரியாது என்று சொன்னதும் அவர்கள் அப்படியே நம்பி, உன்னைத் பத்திரமாகத் திரும்பக் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்… அப்படித்தானே?” என்று அவன் கேட்க, அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றாள் அவள். அதுதானே, சும்மா விட்டுவிடுவார்களா என்ன? எற்கெனவே என்ன நடக்கும் என்று அனுபவத்தின் வாயிலாக அறிந்தவளுக்கு, அதற்கு மேலும் என்ன நடக்கும் என்று தெரியாதா. ஆனால், அவளுக்கு ஒன்று என்றால் தாங்க முடிகிறது. அவனுக்கு ஒன்று என்றால் உயிரே உறைந்து போகிறதே. என்ன செய்வாள்.

இப்போது அவளை வெளிப்படையாக முறைத்தவன், பின் தனக்கு வேண்டிய ஆடைகளை எடுத்தவாறே,

“சில நேரங்களில் நீ உன்னைப் புத்திசாலி என்று நினைத்துக் கொள்கிறாய். ஆனால், ஆளும் வளரவில்லை, புத்தியும் வளரவில்லை என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்…” அவன் கேலியாகச் சொல்ல, அதுவரையிருந்த வலி காணாமல் போக அவனை அண்ணாந்து பார்த்து முறைத்தாள் விதரணை. அதைக் கண்டவனுக்கு உள்ளூறச் சிரிப்பதான் பொங்கியது. அவனையே அண்ணாந்து பார்க்கிறாள். இதில் அவள் வளர்ந்துவிட்டாளாம். உதட்டின் ஓரம் துடித்த சிரிப்போடு அவளைப் பார்க்க, அவளோ,

“நான்… நான் வளரவில்லையா? நான் ஒன்றும் அவ்வளவு குள்ளமில்லை! ஐந்தடி மூன்றங்குலம் தெரியுமா?” என்று அவள் சண்டைக்கு வர, புருவங்களை உயர்த்தி கூரிய விழிகளை விரித்து,

“நிஜமாகவா?” என்றான் கிண்டலாக.

அவளோ அவனை முறைக்க, என்ன நினைத்தானோ,  சட்டென்று கண்ணிமைக்கும் நொடியில், அவள் கழுத்தில் முன்தினம் கட்டித் தொங்க விட்ட தாலிக்கொடியைக் கழற்றியிருந்தான் ஏற்றமாதிபன்.

அதிர்ந்து போனாள் விதரணை. நேற்றுதான் அது அவள் கழுத்தில் ஏறியது. அதற்குள் அதைக் கழட்டிவிட்டானே… பதறியவளாக,

“என்ன முட்டாள்தனம் இது… கொடுங்கள் அதை…” என்றவள், அதைப் பறிக்க முயல்கையில், தன் கரத்தை உயர்த்தித் தாலியை அந்தரத்தில் தொங்கவிட்டவன், “சரி… இதை என்னிடமிருந்து வாங்கிக் கொள், நீ உயரமானவள் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்!” என்றான்.

பனைமரம் போல வளர்ந்திருந்த அவனையும், அவன் கரத்திலிருந்த தன் தாலியையும் மாறி மாறிப் பார்த்தாள் விதரணை. அது ஒன்றும் சங்கிலியில்லை தொங்குவதற்கு. அது கொடி. அதுவும் அவன் அணிவித்த புதிய கொடி; அதன் வளைவு மாறாமல் வட்டமாக இருக்க, நடுவில் இரண்டு காசுகளின் நடுவே அம்மன் தாலி ஊசலாடிக்கொண்டிருந்தது.

கோபத்தோடு அவனைப் பார்த்தவளிடம், அவன் குறும்புப் புன்னகையோடு ‘எடு’ என்பது போல விழிகளால் சைகை செய்ய, கோபம் மாறாமல் அதை வாங்க முயன்றாள். அந்தோ பரிதாபம். அவளது கரமோ அவனுடைய முழங்கை வரைதான் நீண்டது. அதைக் கண்டு குலுங்கி நகைத்தவன், “நீதான் உயரமான ஆளாச்சே… வாங்கு!” என்று அவளை உசுப்ப, மீண்டும் மீண்டும் துள்ளி வாங்க முயன்றும் அவளுக்கு எட்டவில்லை. சட்டென்று அவனை நெருங்கி, ஒரு கையால் அவன் இடுப்பைச் சுற்றிப் பிடித்து, அவன் காலின் மேல் தன் காலை வைத்து, அவன் மேனியில் தன் உடல் அழுத்தி, எக்கி, வாங்குவதற்கு முயன்று பார்த்தாள். அப்படியும் இம்மியளவும் எட்டவில்லை.

வேறு வழி தெரியாமல் அவனை விட்டு விலகிச் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு ஸ்டூல் கண்ணில் பட, அதைத் தள்ளிக்கொண்டு வர முயன்றாள். சட்டென்று அங்கிருந்து விலகி நின்றவன்,

“ம்கூம்… இது ஏமாற்று வேலை! எந்த உதவியும் இல்லாமல் நீயாகவே வாங்க வேண்டும்…” என்று சொல்ல, இடையில் கை வைத்து அவனை முறைத்தாள்.

“ஏற்றன்… பிளீஸ்… கொடுங்களேன்!” என்று கையை நீட்ட, அவன் உதடுகளைச் சுழித்து,

“முடியாது! நீதானே சொன்னாய் நீ உயரமென்று… எடுத்துக் கொள்!” என்றான் குமிழ் சிரிப்போடு

அவனைப் பார்த்த விதரணைக்குக் கோபம் தலைக்கேறியது.

“நீங்கள் இத்தனை உயரமாகப் பனைமரம் போல வளர்ந்திருந்தால் அதற்கு நான் என்ன செய்வது? இதில் என்னைக் குள்ளம் என்று கிண்டல் வேறு! மரியாதையாக என் தாலியைக் கொடுங்கள்…” எனச் சண்டைக்குப் போனாள்.

“நீ குள்ளம் என்று ஒத்துக்கொள்… கொடுத்துவிடுகிறேன்!” என்றான் கிண்டலாக. இப்போது அவனைத் தலை சரித்துப் பார்த்தவள், ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் மெதுவாக அவனை நோக்கி நெருங்கி வந்தாள்.

அவனோ குமிழ்சிரிப்பு மாறாமல் அவளையே பார்த்தவாறு நின்றிருக்க, இவளோ உதடுகளைச் சுருக்கிக்கொண்டு இன்னும் அவனுக்கு அருகில் வர, அவனோ சுவாரசியத்துடன் இமைக்காமல் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் நெருங்க நெருங்க அவனது பார்வையும் அவளையே மொய்த்துக்கொண்டிருந்தது.

அவன் தேகத்தோடு தன் தேகம் முட்டும் அளவுக்கு மிக நெருக்கத்தில் வந்து நின்றவள்,

“இப்போது… என் தாலியைக் கொடுக்கப் போகிறீர்களா இல்லையா?” என்று இறுதியாகக் கேட்பது போலக் கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. ஆனால், அவனது விழிகள்தான் அவள் கேள்விக்கு சவாலாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தன.

“சோ.. நீங்களாகக் கொடுக்க மாட்டீர்கள்…” அவள் இறுதியாகக் கேட்பது போலக் கேட்க அவனோ உதடுகளைப் பிதுக்கி, மாட்டேன் என்று மறுப்பாகத் தலையசைத்தான்.

“சரி… இதற்கு மேல் எது நடந்தாலும் அதற்கு இந்த ‘கம்பனி’ பொறுப்பேற்காதுப்பா!” என்றவள், கண்ணிமைக்கும் நொடியில் அவன் இடையைச் சுற்றியிருந்த துவாயில் கை வைத்து முடிச்சை அவிழ்க்க, அதிர்ந்து போனான் ஏற்றமாதிபன்.

பதற்றத்துடன் குனிந்து பார்க்க அவள் அவிழ்த்த துவாய் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னிடம் விட்டு நழுவுவதைக் கண்டு பதறியவனாகத்  தன் இடது கரத்தால் துண்டின் முடிச்சைப் பிடிக்க முயல, காயம் கொடுத்த வலியில் முகம் சுருங்கிப்போனது அவனுக்கு. தன்னை அறியாமல் வலது கரத்தைக் கீழே இழுத்து வர, அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய விதரணை, சட்டென்று அவன் கையின் அடியில் தன் தலையை நுழைத்து, அவன் கரத்தைத் தன்னை நோக்கி இழுத்து, அவன் கையில் இருந்த தாலியைத் தன் கழுத்தில் வாங்கிக்கொண்டாள்.

இது அனைத்தும் ஒரு விநாடிக்குள் நடந்து முடிந்தது! மானமா, பிடிவாதமா என்று பார்த்தால் மானம்தானே முக்கியம்?

“இராட்சசி!” என்று முனங்கியவன், துண்டு முழுதாகக் கழன்று விழுவதற்குள் அவள் கழுத்தில் தாலியைப் போட்டுவிட்டு, மறு கரத்தால் துண்டினை அழுந்தப் பற்றிக்கொண்டவாறு அவளை முறைக்க, அதைக் கண்டதும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னை மறந்து கலகலவென்று சிரிக்கத் தொடங்கிவிட்டாள் விதரணை. கண்களில் கண்ணீர் வருமளவுக்குச் சிரித்தவளைப் பார்த்து முறைத்தவாறு, அவளுக்கு முதுகைக் காட்டி நின்றவன் சிரமப்பட் இரு கரங்களையும் பயன்படடுத்தி, துவாயை இடையில் இறுக்கமாகக் கட்டிவிட்டுத் திரும்பி அவளைப் பார்க்க அவளோ வயிறு வலிக்க விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

“யு ஆர் சோ டேஞ்சரஸ் பம்கின்!” என்றவன்,  மறு கணமே அவள் சிரிக்கும் அழகைக் கண்டு இதயம் குழைந்து போனான். எத்தனை வலிகளைக் கடந்து வந்த பின் இப்படிச் சிரிக்கிறாள். இந்த சிரிப்பை அவள் முகத்தில் கொண்டுவரத்தானே அவன் இத்தனை முயற்சிகளை எடுக்கிறான். கண்ணிமைக்க மறந்து அவளையே பார்த்திருக்க, அவளோ சிரிப்பினூடே,

“ஜஸ்ட் மிஸ் மிஸ்டர் ஏற்றமாதிபன்! இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால்… ஐயோ… ஷேம் ஷேம் பப்பி ஷேம்!” என்று விழுந்து விழுந்து சிரிக்க, சற்று நேரம் அவளது அந்தச் சிரிப்பில் திளைத்தவன்,

“யு நாட்டி பேபிகேர்ள்…” என்று தலையை வலம் புறமாக அசைத்தவன், அவள் சிரித்த முகத்தைக் கண்ட நிறைவோடு  திரும்பித் தன் ஆடைகளைச் சேகரிக்கத் தொடங்கிய நேரம், அதுவரை கலகலவென்று சிரித்தவளிடமிருந்து திடீரென விசும்பல் சத்தம் எழ, நெஞ்சம் கலங்கியவனாகத் திரும்பிப் பார்த்தான்.

விதரணைதான்! தரையில் மண்டியிட்டு அமர்ந்து, முகத்தை இரு கைகளாலும் மூடியவாறு அழுதுகொண்டிருந்தாள்.

“விதரணை!” பதறியவன் பாய்ந்து சென்று அவளருகே மண்டியிட்டமர, அதுவரை முகத்தை மூடியவாறு அழுதுகொண்டிருந்தவள் அவன் நெருக்கத்தை உணர்ந்து விழிகளைத் திறக்காமலே பாய்ந்து, அவனைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்துக் கதறிவிட்டாள் அவள்.

அவள் சிரித்தபோது கனிந்து உருகிய உள்ளம் அவள் கதறலைத் தாங்க முடியாமல் விம்மி வெடிக்க, அவள் தலையையும் முதுகையும் மாறி மாறி வருடிக் கொடுத்தவாறு,

“ஷ்… எதற்கு இப்போது இந்த அழுகை? என்னைப் பார் கண்ணம்மா… டார்லிங்… பம்கின்… நோ… அழாதேடா… என்னைப் பாரேன்… பேபிகேர்ள்…” அத்தனை செல்லப் பெயர்களையும் சொல்லி அவளைத் தேற்ற முயன்றான். அவளோ பிடிவாதமாக அவன் மார்பில் முகம் புதைத்து எழ, அதற்கு மேல் அவளைத் தேற்றுவதற்கு வார்த்தையின்றி, அவளை அணைத்தவாறு அமைதியாக அமர்ந்திரந்தான் ஏற்றமாதிபன்.

அவனுக்கு அவளுடைய மனநிலை புரிந்தது. தாய் தந்தை இறந்த சோகத்தை மீறித் தான் இவ்வளவு மகிழ்ச்சியாகச் சிரித்ததை அவளால் தாங்க முடியவில்லை. ‘நான் எப்படி இப்போது சிரிக்கலாம்?’ என்கிற குற்ற உணர்ச்சியில் வந்த அழுகை அது என்பதைப் புரிந்துகொண்டவனாக, அவள் முதுகை மென்மையாகத் தட்டிக்கொடுத்தவன், அழுகை ஓய்ந்து அவள் விசும்பத் தொடங்கியபோது, அவளது காதுகளுக்கு அருகில் தன் இதழ்களைக் கொண்டு சென்றான்.

“ஹே… வேண்டும் என்றால் இன்னொரு முறை துவாயை அவிழ்க்கிறாயா?” என்று மெல்ல முணுமுணுத்தான்.

அதைக் கேட்டு அதிர்ந்தவள், அழுகையை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க, “உனக்கு வேண்டும் என்றால் நான் தயார்தான்… அவிழ்க்கிறாயா?” என்று கேட்டான். இப்போது அழுதுகொண்டிருந்த விதரணை அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவள் கன்னத்தில் கண்ணீர் தொடராய் வழிந்தாலும், அவனுடைய பேச்சில் கோபம் கொண்டு அவனைப் பார்க்க, அந்தக் கண்ணீரைப் பெருவிரலால் துடைத்துவிட்டவன்,

“ஹே… நான் சீரியஸாகத்தான் சொல்கிறேன்… நீ அழுவதைப் பார்ப்பதை விட, என் மானத்தைக் கப்பலேற்ற நான் தயார்தான்… வேண்டுமானால் அவிழ்த்துவிடு!” என்றவன், அவளை விட்டுச் சற்று விலகி இரு கரங்களையும் விரித்து, “கமான் பேபி…” என்றான் அவளை உசுப்பேற்றும் விதமாக.

இப்போது அவளே தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவனைக் கொன்றால் என்ன என்பது போலப் பார்க்க, வேண்டும் என்றே அவளைப் பார்த்தவாறு,

“இல்லை… நானே உனக்காகச் செய்யட்டுமா?” என்றவாறு அவன் துண்டின் முடிச்சைப் பற்றப் போக, அதிர்ந்துவிட்டாள் விதரணை. அவசரமாகத் தன் முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டவள்,

“ஐயோ… வேண்டாம் வேண்டாம்!” என்று அலற, அவனோ,

“நோ பேபி… யு ஹாவ் டு… இதோ… நன்றாகப் பார்…” என்று சொன்னவாறே, முகத்தை மூடியிருந்தவளைப் கிண்டலும் புன்னகையுமாகப் பார்த்தபடித் தன் ஆடைகளை ஒற்றைக் கரத்தின் உதவியோடு அணிந்துகொண்டான். பின் தன் இடையிலிருந்த துண்டை அவிழ்த்து அவள் முகத்தில் வீசியடிக்க, அவளுக்கு அழுகை மொத்தமாக மறைந்துபோனது. அவன் நிஜமாகவே துண்டை அவிழ்த்துப் போட்டுவிட்டான் என்று நினைத்து, உடல் சிவக்கப் பதறியவளாக,

“ஐயோ… என்ன செய்கிறீர்கள்? சீ… நான் பார்க்கமாட்டேன்!” என்று சத்தமாக அலற, அவனோ பேண்ட்டின் ஜிப்பைப் போட்டவாறே அவளைக் கிண்டலாகப் பார்த்துச் சிரித்தான்.

“நோ பேபி… இனி நீ சும்மா சும்மா அழுதால் உனக்கு இதுதான் தண்டனை!” என்றவன், மேல் சட்டை அணியாமல் அவளை நோக்கி வந்து அவள் முன்னால் ஒற்றைக்கால் மடித்து அமர, உண்மையாகவே பயந்து போனாள் விதரணை.

“வேண்டாம்… கிட்டே வராதீர்கள்! தள்ளிப் போங்கள்… ஐயோ… கறுமம் கறுமம்… இது என்ன பழக்கம்!” என்று அவள் கோபத்துடன் சொல்ல, சட்டென்று அவள் முகத்தை மூடியிருந்த கரங்களை இழுத்து விலக்க, அவளோ விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள்.

“ஹே… ஓப்பன் யுவர் ஐஸ்…” என்று அவன் மென்மையாகச் சொல்ல, அவளோ மறுப்பாகப் பலமாகத் தலையை அசைத்தாள்.

“ஏய்… என்னைப் பாரடி!” என்று அவன் சற்றே அழுத்தமாகச் சொல்ல, மெதுவாகக் கொஞ்சமாய் விழிகளைத் திறந்து  பார்த்தாள் விதரணை. அப்போதுதான் அவன் கரிய நிறப் பேண்ட்டுடன்,  ஆர்ம் கட் பெனியனுமாக இருப்பது தெரிந்தது.

அப்பாடா… என நிம்மதி கொண்டவள் அவனை எரிச்சலுடன் பார்க்க,

“என்ன… பயந்துவிட்டாயா?” என்றான் கிண்டலாக. அதற்குப் பதிலுக்கு அவன் மார்பில் ஓங்கி ஒரு அடி கொடுத்தவள்,

“பின்னே… பயப்படாமல் என்ன செய்வார்களாம்?” என்றாள் முறைப்பாக.

“நோ பேபி… உன் ஆசை அதுதானே? அதுதான் ஒரு வாய்ப்புக் கொடுக்க நினைத்தேன். நீதான் வேண்டாம் என்று மறுத்துவிட்டாய்!” என்று அவன் சொல்ல, பாய்ந்து அவனை அணைத்து அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் விதரணை. விழிகளை மூடி அவன் மார்பின் சூட்டை முழுவதுமாக உள்வாங்கியவளாக, சற்று நேரம் இருக்க, அவனும் அவளைத் தன் மார்போடு இறுக அணைத்து, அவள் முதுகை வருடிக் கொடுக்க, அவளோ,

“எனக்கு… அம்மா அப்பா மீது பாசம் இருக்கிறது ஏற்றன்…” என்றாள் கலங்கிய குரலில்.

“ஐ நோ பேபி…”

“ஆனால்… அந்த இழப்பை மீறி என்னால் எப்படிச் சிரிக்க முடிந்தது?” என்றவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து, “அது தப்பில்லையா?” என்றாள் கம்மிய குரலில்.

அவளது கலக்கம் கண்டு உருகியவனாக, முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தியவன் அவளது விழிகளை நேராகப் பார்த்தான்.

“வலிக்க வலிக்க அடி வாங்கியவன் சிரிக்கக் கூடாது என்று யார் சொன்னார்கள்? இங்கே பார் விதரணை… மனித மனம் ஒரு தேங்கிய குட்டையல்ல, அதிலேயே உழன்று கொண்டிருக்க. அப்படி ஒரே உணர்ச்சிகளில் தேங்கி நின்றால் மனப்பிறழ்வுதான் ஏற்படும். உணர்ச்சி என்பது ஓடிக்கொண்டிருக்கும் நதி போல. அதில் இன்பம், துன்பம், பயம், சிரிப்பு என எல்லா உணர்ச்சிகளும் கலந்தே இருக்கவேண்டும்… இல்லை என்றால் நாங்கள் மனிதர்களாகப் பிறந்ததுக்கு அர்த்தமேயில்லாமல் போய்விடும்.  இப்போது நீ சிரித்ததற்குக் காரணம் உன் பெற்றோரின் மீதான பாசம் குறைந்துவிட்டதால் அல்லடா; உன் உயிருக்குள்ளே இருக்கும் அந்த வாழ்வதற்கான வேட்கை (Survival instinct) வாய்ப்பை பயன்படுத்தி  உன்னைச் சிரிக்க வைக்கிறது.”

அவன் சொல்லியும் இன்னும் மனம் தெளியாதவளாய்,

“இருந்தாலும் என் மனது ஏற்றுக் கொள்ளுதில்லையே? அவர்களின் இழப்பு என்னை எந்தளவுக்குப் பாதிக்கிறது தெரியுமா? அதையும் தாண்டி நான் சிரிக்கிறேன் என்றால், அவர்களின் இழப்பை நான் மறந்துவிட்டேன் என்றுதானே அர்த்தம்?” எனக் கலங்கிக் கேட்டாள்.

மறுப்பாகத் தலையசைத்தான் ஏற்றமாதிபன்.

“அப்படி இல்லைமா. உளவியல் ரீதியாகப் பார்த்தால், மனிதனால் ஒரே உணர்ச்சியில் நீண்ட நேரம் தேங்கி இருக்க முடியாது தெரியுமா. வெறும் துக்கத்தை மட்டுமே சுமந்து கொண்டிருந்தால் என்னாகும்? அது நாமே நமக்கு கொடுக்கும் தீங்குடா… அதுதான் பெரும் சித்திரவதை… எப்பவும் அழுத்தத்தோடு இருக்கக் கூடாது என்றுதான் இயற்கை இயற்கை நம் மூளைக்கு பல உணர்ச்சிகளைக் கொடுத்திருக்கு…  ஒரு ரப்பர் பேண்டை எவ்வளவு தூரம் இழுக்க முடியுமோ அவ்வளவுதான் இழுக்க முடியும்; அதற்கு மேல் போனால் அது அறுந்துவிடும். நம்முடைய மனசும் அப்படித்தான் விதரணை. ஒரே உணர்ச்சியோடு தொடர்ந்த வாழ்ந்தால் நாம் மிருகங்களாகிப்போவோம். அதிலிருந்து காக்கத்தான், சிரிப்பு மகிழ்ச்சி என்கிற உணர்வு நம்கூடவே இருக்கு.  தொடர்ந்து மனவலியில் இருக்கும் போது விரிக்கவேண்டும்… அதுதான் ஆரோக்கியமானது. அதுதான் உனக்கும் தேவை… இதை நினைத்து நீ குற்ற உணர்ச்சி அடையத் தேவையே இல்லை…” என்று அவளுக்கப் புரியும் வகையில் அவன் மென்மையாகச் சொல்ல, அவளோ மீண்டும் அவன் மார்பில் தன் தலையைச் சாய்த்து,

“ஆனால் ஏனோ குற்ற உணர்ச்சியாகவே இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்யட்டும்?” என்றாள் கலக்கமாக.

“சிரிப்பதே குற்றம் என்று நீ நினைத்தால், அதுவே உன் மனதை இருண்ட அறைக்குள் தள்ளிவிடும் பம்கின். ஒருவரை இழந்து விட்டால், வாழ்நாள் முழுவதும் அவருக்காக அழுதுகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது  அன்பின் வெளிப்பாடல்ல. அது, பைத்தியக்காரத்தனம். அவர்கள் கூட அதை விரும்பமாட்டார்கள். அப்படி எதிர்பார்ப்பது நம்மை நாமே தண்டிப்பதற்குச் சமம். சொல்லப்போனால் யாரும் உண்மையில் இறப்பதில்லை; அவர்களின் நினைவு நம்மோடு இருக்கும் வரை அவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நீ சிரிப்பதைப் பார்த்து அவர்கள் ஆன்மா எத்தனை நிம்மதியடையும் தெரியுமா? நீ சிரிக்கும்போது அவர்களும் உன்னோடு சேர்ந்து சிரிப்பதாக நினைத்துக்கொள். உணர்ச்சிகளை அடக்கி வைக்காதே. அது தவறு. எது வருகிறதோ அதை அப்படியே அனுபவி… அது அழுகையாக இருந்தாலும் சரி, என் துண்டினை அவிழ்க்க முயன்றபோது நீ சிரித்த அந்தச் சிரிப்பாக இருந்தாலும் சரி!” என்று அவன் கிண்டலாக முடித்தபோது, விதரணையின் மனதில் இருந்த அந்தப் பாரம் மெல்லக் கரைந்து செல்வதை அவளால் உணர முடிந்தது.

அதுவரையிருந்த அழுத்தம் காணாமல் போக, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அழுகையினால் சிவந்த அவள் முகத்தையும், கண்ணீர் தடம் கண்ட கன்னத்தையும், சிவந்த மூக்கையும் கண்டு வருந்தியவன், அவள் மூக்கை மென்மையாகத் தட்டிக்கொடுத்து, “புரிந்ததா பம்கின்?” என்றான் இதமாக.

அவளோ தன் விழிகளால் அவன் விழிகளை ஆழமாகப் பார்த்தாள். ‘இவன் மட்டும் தக்க தருணத்தில் என் பக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பேன்? இந்நேரம் நான் காணாமல் போயிருப்பேன். நான் இறந்து ஒரு மாதமாகியிருக்கும். என் தம்பி யாருமற்ற அநாதையாக இருந்திருப்பான்…’ நினைத்தபோதே உடல் உதறியது. அச்சத்தில் முகம் வெளுறியது.

அந்தத் தவிப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஏற்றன்…” என்றாள் தழுதழுப்போடு.

“ம்…”

“கிஸ் மி…” – தற்போது தன்னை ஆட்டிப்படைக்கும் அந்த வலியிலிருந்து தப்புவதற்கான ஒரே மருந்தாக அவனுடைய முத்தம் மட்டும்தான் இருக்க முடியும் என்பதை உணர்ந்தவாறு.

அவன் தயங்கவில்லை. அவள் வலியைத் தன்னால் மட்டும்தான் நீக்க முடியும் என்பதை முற்று முழுதாக உணர்ந்தவனாகக், குனிந்தவன் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் அவள் இதழ்களைத் தன் இதழ்களால் அரவணைத்துக் கொண்டான். அவள் வலி மொத்தத்தையும் அவளிடமிருந்து உறிஞ்சி எடுப்பது போன்ற அந்த நீண்ட முத்தத்தில், அவளும் தன்னையே அவனிடம் மொத்தமாக ஒப்படைத்தாள். மெல்ல மெல்ல அவளுக்குள் ஒரு பேரமைதியும் மனசாந்தியும் நிலவ, அதுவரை இறுகியிருந்த அவள் உடல் மெல்ல மெல்லத் தளரலாயிற்று.

What’s your Reaction?
+1
19
+1
2
+1
8
+1
1
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-23

(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…

16 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-22

(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-21

(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…

6 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-20

(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-18

(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…

2 weeks ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-17

(17) ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விதரணையின் மனத்திரையில், மெல்லிய புன்னகையுடன் வந்து நின்றார் அறிவழகன். அவரைக் கண்டதுமே இத்தனை நாட்களாய் அவளை…

2 weeks ago